enna samaiyal

என்ன சமையல்?

மீராவின் அப்பா உலர்ந்த திராட்சை வாங்கி வர கடைக்குச் சென்று திரும்பும் முன், அவர் சமைத்திருந்த பாயசம் காணாமல் போய்விட்டது. அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் அதைக் குடித்து முடித்தது யார்?

- Suresh Balachandar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மீராவால் சும்மா இருக்க முடியவில்லை. சமையலறையிலிருந்து வந்த பாயாசத்தின் வாசனை பசியைக் கிளப்பியது. இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட அவளுக்கு மிகவும் பிடித்தது, பாயாசம்தான்!

கிட்டத்தட்ட அது தயாராகி முடியும் நேரத்தில்தான் அவள் அப்பா, அதில் சேர்க்க காய்ந்த திராட்சை இல்லை என்பதைக் கவனித்தார்.

“நான் கடைக்குப்போய் உலர்ந்த திராட்சை வாங்கி வருகிறேன். அதற்குள் பாயாசத்தைக் குடித்து விடாதே, பொறு!” என்று அப்பா மீராவிடம் சொல்லிச் சென்றார்.

“சரி அப்பா!” என்றாள் மீரா.

ஆனால் அப்பா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஒரு சொட்டு பாயாசம் கூட பாத்திரத்தில் மிச்சம் இல்லை.

“மீரா!’’ என்று கத்தினார் அப்பா. ‘‘நீ பாயாசத்தை குடித்தாயா?’’ என்று கேட்டார்.

“இல்லையே அப்பா, நான் குடிக்கவில்லை” என்றாள் மீரா. “அப்டியென்றால் யார் குடித்தார்கள்?” என்று கேட்டார் அப்பா. “சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நீங்கள் சென்ற பிறகு கிக்கூ பாயசத்தைக் குடிக்கப் போனாள். நான் அவளைத் தடுத்தேன். அதனால் அவளுக்கு ஒரே வருத்தம்.”

“அதன்பின், அவள் வீட்டுக்கு வெளியே ஓடி, சாலையின் நடுவே ஓட ஆரம்பித்தாள்!

ஒரு ஆட்டோ ரிக்‌ஷா கிறீச்சிட்டு நின்றது.ஆட்டோக்காரர்,  “ஏய்!” என்று கத்தினார்.

அந்த ஆட்டோவுக்குப் பின்னால் ஒரு ஸ்கூட்டர் கிறீச்சிட்டு நின்றது. ஒரு மிதிவண்டிக்காரர் சட்டென பிரேக் பிடித்து நின்றார். லாரி ஒன்று ஹாரன் அடித்தது.

ஓட்டுநர்கள் அனைவரும் ஒருசேர “ஏய்!”  என்று கத்தினார்கள்.”

“மிரண்டு போன கிக்கூ மீண்டும் ஓட ஆரம்பித்தாள். நானும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினேன்.

அப்படியே காய்கறிச் சந்தைக்குப் போய்விட்டோம். முதலில், என்னால் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.”

“பின்னர், அவள் வாய் நிறைய பசலைக் கீரையை கவ்விக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன்.காய்கறிக் கடைக்காரர் ’ச்சூ ச்சூ!’ என்று கத்தி கிக்கூவை விரட்டினார்.”

“பயந்து போன கிக்கூ மீண்டும் ஓட ஆரம்பித்தாள். என்னால் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.’’

‘‘அப்போது ’அய்யோ! இந்த ஆடு என் பூவையெல்லாம் சாப்பிடுகிறதே’ என்று யாரோ கூக்குரலிடுவது கேட்டது.

கிக்கூ மிரண்டு போய் தெருப்பக்கம் ஓடி வந்தாள்.’’

‘‘நான் ’கிக்கூ!’ என்று கூப்பிட்டேன். என் கைகளுக்குள் ஓடி வந்து ஒட்டிக்கொண்ட அவளை கட்டிப்பிடித்துக் கொண்டேன். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று மீரா தன் கதையை சொல்லி முடித்தாள்.

அப்பா பலமாகச் சிரிக்க ஆரம்பித்தார். “என் செல்லக்குட்டி, மீரா! நீ இப்போது எதற்காக இத்தனை கதைகளைச் சமைக்கிறாய்?” என்றார்.

மீரா அதற்கு “ஆங்! கதையா? இல்லையே, அப்பா!” என்றாள்.

“சரி! நீ கிக்கூவிடமிருந்து பாயசத்தைக் காப்பாற்றியிருந்தால், அதைக் குடித்தது யார்?’’

என்று கேட்டார் அப்பா.

மீரா அதைப்பற்றி இதுவரை யோசிக்கவே  இல்லை. அவள் புருவங்கள் உயர்ந்தன.

தலையைச் சொறிந்தபடியே, “தெரியவில்லையே!” என்றாள்.

அப்போது சட்டென்று சன்னலில் இருந்து குதித்தோடும் குரங்கின் வால் நுனியை இருவரும் பார்த்தார்கள்.

இப்போது அப்பாவின் புருவங்கள் உயர்ந்தன.

“அப்பா! நாம் மறுபடியும் பாயாசம் செய்யலாமா?” என்று மீரா கேட்டாள்.

அப்பாவும் சிரித்தபடியே ”செய்யலாமே! இன்னும் நிறைய பாயாசம் சமைக்கலாம், வா!” என்றார்.