என் எண்ணங்கள் எங்கே செல்கின்றன?
அவை தொப்-தொப் என்று நடக்குமா? இல்லை, டக்-டக் என்று நடக்குமா?
மின்விசிறியோடு சேர்ந்து சுற்றிச்சுற்றி, சுற்றிச்சுற்றி அவை ம-மய-மயக்கமடையுமா?
காகித விமானத்தில் ஏறி, மேகங்களோடு விளையாடப் போகுமா?
வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு, ராசுவைப் போன்றே அவையும் நாள் முழுக்க தூங்குமா?
அம்மாவின் பையில் ஒளிந்துகொண்டு, இரகசியமாக அவரோடு வேலைக்குப் போகுமா?
வீட்டிற்குள் பூனைநடை போட்டு தீனி தேடுமா?
அப்பா அவற்றை மண்ணுக்குள் நட்டுவைத்தால், தக்காளிச்செடியாக வளருமா?
நட்சத்திரங்கள் வானில் எட்டிபார்க்கும் போது அவை மின்னுமா?
கொஞ்சம் பொறுங்கள், என் எண்ணங்களைக் காணவில்லை!
இருட்டுக்கு பயந்து அவை கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டனவா?
“தைரியமாக இரு! ஒன்றுமில்லை, கொஞ்சம் இருட்டாக இருக்கிறது அவ்வளவுதான்” என்று எண்ணிக்கொள்கிறேன். நான் தூங்கப் போகிறேன். அவையும் வெளியே வந்து என் தலைக்குள் சுருண்டு படுத்துக் கொண்டன.
என்னோடு என் எண்ணங்களும் சேர்ந்து ‘கொர்ர்...’ என்று குறட்டை விட்டு தூங்குகின்றன.