வாரம் ஒருமுறை, நானி* பூங்காவுக்குச் செல்வார். இன்று வெங்கியும் அவருடன் செல்ல விரும்பினான்.
“நான் மெதுவாக நடப்பேன். அங்கு செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்வேன்” என்றார் நானி. “பரவாயில்லை” என்றான் வெங்கி. ஆகவே நானியும் தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு சாலையைக் கடக்கத் தயாரானார். “அய்யோ, நானி! பூங்கா அந்தப் பக்கம் இருக்கிறது” என்றான் வெங்கி.
*நானி என்றால் பாட்டி.
“நாம் இப்படியே போகலாம்; புதையலின் பாதை வழியாகப் போகலாம்” என்றார் நானி.
புதையலின் பாதையா? இந்தக் கடைத்தெருவுக்கு என்ன ஒரு அற்புதமான பெயர்!
இங்கேயிருக்கும் கடைகள் எல்லாவிதமான பொருட்களையும் விற்கின்றன!
நானி வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி முடித்த பிறகு, வெங்கி அங்கேயிருக்கும் வாசல் ஒன்றைக் காட்டி, “குறுக்கு வழியில் போகலாமா நானி? பூங்காவுக்கு சட்டென்று போய்விடலாம்” என்றான்.
“இல்லை. நாம் அழகின் பாதை வழியாகப் போகலாம்” என்றார் நானி.
அழகின் பாதையில் பலரும் அற்புதமான ‘கொத்தீ*’க்களைத் தைத்துக்கொண்டிருந்தனர்.
ஒரு பெண், நானிக்கு கொத்தீ ஒன்றைக் கொடுத்தார். அதில் நானிக்குப் பிடித்த புடவையின் ஒரு துண்டும், அம்மாவுடைய குர்தாவின் துண்டுகளும் இருப்பதைப் பார்த்தான் வெங்கி.
“இப்போது நாம் பூங்காவுக்குப் போகலாமா?” என்று கேட்டான் வெங்கி.
*கொத்தீ என்பது மென்மையான பழைய பருத்திப் புடவைகள் போன்ற பழைய துணிகளைப் பயன்படுத்தி கையால் தைக்கப்படும் ஒரு பாரம்பரியக் கம்பளி போன்ற போர்வையாகும்.
“போகலாம். நாம் மகிழ்ச்சியின் பாதை வழியே போகலாம்” என்றார் நானி.
“வா, வா!” என்று நானி மென்மையாக கூப்பிட்டதும் அங்கங்கே இருந்து பூனைகளும் நாய்களும் துள்ளிக்குதித்து வருவதைப் பார்த்துச் சிரித்தான் வெங்கி.
நானி கடைத்தெருவில் வாங்கி வந்த பாலை ஊற்றினார். அவை அதைக் குடித்து முடித்து பாத்திரத்தை நக்கிச் சுத்தம் செய்வதை இருவரும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
மகிழ்ச்சியின் பாதையை விட்டுப்போக வெங்கிக்கு சிறிதும் விருப்பமில்லை. ஆனால் அவர்கள் பூங்காவுக்குப் போக வேண்டும் என்பதை நானி நினைவூட்டினார்.
அதன் பிறகு, நானியும் வெங்கியும் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தின் பின்புறமிருந்த பாதையில் சென்றனர்.
அங்கே சிறுவர்கள் நொண்டி, ஏழு கல், கோ-கோ விளையாடிக் கொண்டிருந்தனர்.
“இதுதான் இரைச்சலின் பாதையா?” என்று வெங்கி கேட்டான்.
“இல்லை, இது குறும்பின் பாதை. இது உன்னையும் உன் நண்பர்களையும் நினைவுபடுத்துகிறது!” என்று சிரித்தார் நானி.
“இந்த நகரத்தில் இருக்கும் எல்லாப் பாதைகளுக்கும் பெயர் வைத்துவிட்டீர்களா?” என்று வெங்கி கேட்டான்.
“எல்லாவற்றுக்கும் அல்ல. எனக்கு முக்கியமான பாதைகளுக்கெல்லாம் பெயர் வைத்திருக்கிறேன்!” என்று புன்னகைத்தார் நானி.
“பூங்கா இப்போது அதிகத் தொலைவில் இல்லை. ஆனால், அங்கே போவதற்கு முன்னால் நீ சிறிது பொறுமையாக இருக்க வேண்டும் வெங்கி. எனக்கு வழியில் நட்பின் பாதையில் சிறிது வேலை இருக்கிறது.”
நட்பின் பாதையில் நானி தன்னுடைய நெருங்கிய தோழியைச் சந்தித்தார்.
சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்து இப்போது முதியவர்களாகிவிட்டார்கள்.
அவர்கள் தங்களுக்குள் குசுகுசுப்பாக பேசிச் சிரித்துக் கொண்டனர்.
நானி தன் தோழியைக் கட்டியணைத்து, “நேரம் ஆகிவிட்டது, நாங்கள் கனவின் பாதை வழியாகப் போகப் போகிறோம்” என்றார்.
கனவின் பாதையில் வெங்கியின் பள்ளி நூலகத்தில் இருந்த புத்தகங்களை விட அதிகமான புத்தகங்கள் இருந்தன!
புத்தகக்கடைக்காரர் பழைய புத்தகங்களைக் குறைந்த விலையில் விற்றார். படித்து முடித்த பழைய புத்தகங்களைத் திரும்ப வாங்கிக்கொண்டார்.
நானி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, “போகலாம் வா! நாம் பூங்காவை நெருங்கி வந்துவிட்டோம்” என்றார்.
இப்போது அவர்கள் மாயாஜாலத்தின் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.
வெங்கி, நிழல் தரும் பெரிய மரங்களை அண்ணாந்து பார்த்து குளிர்ந்த காற்றை உணர்ந்தான். செம்மயிற்கொன்றை, சரக்கொன்றை, மற்றும் மகிழம்பூ மரங்களை நானி அவனுக்குக் காட்டினார்.
சாலையில் பூக்கள் மாயாஜால விரிப்பைப் போலக் கிடந்தன.
கடைசியாக அவர்கள் பூங்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பிவந்து வெகு நேரமாகிவிட்டது. வெங்கி சுற்றிலும் பார்த்தவாறே, தான் அன்று காலையில் இருந்து பார்த்த மனிதர்களைப் பற்றியும் இடங்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்தான்.
“உங்களுடைய பாதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன நானி. அடுத்த வாரமும் நான் உங்களுடன் வரலாமா?”