என் பெயர் இயாத்.
தினந்தோறும் காலையில் பறவைகளின் இன்னிசையைக் கேட்க தாத்தா என்னை பால்கனிக்கு அழைத்துச் செல்வார்.
வானத்தில் எப்பொழுதும் ஏராளமான புறாக்கள் இருக்கும்.
புறாக்கள் செய்திகளைக் கொண்டு செல்லும், நம் முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் என்று சொல்வார் தாத்தா.
சில புறாக்கள் தாத்தாவுடைய தாடியைப் போல, வெள்ளை நிறம் கொண்டவை.
நான் மெதுவாக பாடுவதைக் கேட்டால், புறாக்களும் கூவென்று ஒலி எழுப்பும்.
நான் ரொம்ப பக்கத்தில் சென்றால், அவை கூட்டமாகப் பறந்து விடும்.
அவை தங்கள் சிறகுகளை வேகமாக அடிப்பதால், சில இறகுகள் பிய்ந்து விழும்.
புறாக்கள் வானத்தில் குட்டிக்கரணம் அடிக்கும்.
அப்படியென்றால் அவை மகிழ்ச்சியாக இருப்பதாக அர்த்தமா?
எனக்கும் குட்டிக்கரணம்
அடிக்க ஆசையாக உள்ளது.
பால்கனி முழுவதும் அவை ஆய் போய் வைக்கின்றன.
அதனால் தான் தாத்தாவிற்கு புறாக்கள் மீது எரிச்சல்.
ஆனால் புறாக்கள் போவதை நான் விரும்பவில்லை.
ஒரு புறாவை மட்டும் நான் வைத்துக் கொள்ளலாமா என்று தாத்தாவிடம் கேட்டேன்.
“நாம் அவற்றை வற்புறுத்தித் தங்க வைக்க முடியாது. பறவைகள் எங்கு வேண்டுமானாலும் விருப்பம் போல பறந்து செல்பவை” என்றார் தாத்தா.
“என்னால் ஏன் பறக்க முடியாது?” என்று தாத்தாவிடம் கேட்டேன்.
“நம் எல்லோருக்கும் சிறப்பான சக்திகள் உண்டு” என்றார்.
“புறாக்களால் பறக்க முடியும், மற்றும் நம் கண்ணுக்குத் தெரியாத நிறங்களும் அவற்றுக்குத் தெரியும்.”
“எனக்கு ஏதாவது தனிச்சிறப்புடைய சக்தி இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“ஆம். ஒரு நாள் நீயே அதை தெரிந்து கொள்வாய்”
என்றார் தாத்தா.
“அதை நான் சீக்கிரம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றேன்.
“நானும்தான்” என்றார் தாத்தா.
உங்களுக்குத் தெரியுமா?
வரலாற்று ரீதியாக, முக்கியமான செய்தி ஓலைகளை வழங்குவதற்காக புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. ஏனென்றால் அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவான இடத்திலிருந்தும் கூட தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளன.
மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளில் ஒன்று ‘செர் அமி’ என்ற புறாவாகும். தான் காயமடைந்த போதிலும் தன்னிடம் ஒப்படைத்த செய்தி ஓலையை சேர்ப்பித்து, முதல் உலகப் போரில் 200 பேரைக் காப்பாற்றியது அந்தப் புறா. இந்த சேவைக்காக பிரெஞ்சு இராணுவத்தில் இருந்து ஒரு வீரப்பதக்கம் அந்தப் புறாவிற்கு வழங்கப்பட்டது.
புறாக்களைப் பற்றிய ஒரு குறிப்பு: புறாக்களுக்கு உணவளிக்காதீர்கள். அவற்றால் சுயமாக சமாளிக்க முடியும்! இயாதின் தாத்தா சொல்வது போல், கூண்டுகளில் பறவைகளை அடைக்காதீர்கள். அவை சுதந்திரமாக வானத்தில் பறக்கப் பிறந்தவை.