gappoovin nadanam

கப்பூவின் நடனம்

‘1 அ’ வகுப்பிலுள்ள அனைவருக்கும் கப்பூவால் ஆட முடியாதெனத் தெரியும். மற்ற மாணவர்கள் இடது கையைத் தூக்கினால், அவள் வலது கையைத் தூக்குகிறாள்! கோமல் மிஸ்ஸால் கப்பூவை நடனமாட வைக்க முடியுமா? நடனத்தின் களிப்பையும், எதிர்ப்பதங்களையும் குறித்த ஒரு கதை.

- Thilagavathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கோமல் மிஸ், ’1 அ’ வகுப்புக்கு புதன்கிழமை நடக்கவுள்ள வகுப்பு நாடகத்துக்கான நடன அசைவுகளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

தக்க திமி தை! “அனைவரும் இடது கையைத் தூக்குங்கள்!”

அடடா! கப்பூ தனது வலது கையைத் தூக்குகிறாள். கப்பூவால் ஆட முடியாது!

டகடக பாப் பாப் பூம்! “அறையைச் சுற்றி வேகமாக ஓடி வாருங்கள்.”

அடடா! கப்பூ மிகவும் மெதுவாகச் செல்கிறாள். கப்பூவால் ஆட முடியாது!

தக்க-தினா-தின் தக்! “அனைவரும் உயரக் குதியுங்கள்!”

அடடா! கப்பூ கீழே உட்கார்கிறாள். கப்பூவால் ஆட முடியாது!

தூபீ தூப் தித்லி தின் தின்! “அனைவரும் வலது காலை உள்ளே வையுங்கள்.’’

அடடா! கப்பூ தனது வலது காலை வெளியே நீட்டுகிறாள். கப்பூவால் ஆட முடியாது!

அனைவரும் கப்பூ தப்புத்தப்பாகச் செய்வதைச் சுட்டிக்காட்டி சிரித்தனர். ஆனால் கோமல் மிஸ்ஸுக்கு இதை எப்படிக் கையாள வேண்டுமெனத் தெரியும். அவர் வகுப்பில் உள்ள அனைவரிடமும், “கப்பூ செய்வது போல் செய்யுங்கள்!” என்றார்.

தக்க திமி தை! சில கைகள் தாழ, சில கைகள் உயர்கின்றன.

டகடக பாப் பாப் பூம்! அறையைச் சுற்றி வேகமாகவும் மெதுவாகவும் ஓடி. தக்க-தின-தின் தக்!

உட்கார்கிறீர்களா குதிக்கிறீர்களா என்பது முக்கியமில்லை!

டொப் டொப் தக்க தின் தின்! எல்லோரோடும் சேர்ந்து செய்யுங்கள், அவ்வளவுதான்!

கப்பூவால் ஆட முடியும்! உங்களாலும்தான்!