ghum ghum mudhalaiyin saagasac saathanai

கும்-கும் முதலையின் சாகசச் சாதனை

கும்-கும் முதன்முதலாக நீந்தப்போகிறாள். திடீரென்று, அவளுடைய குடும்பத்தினரைக் காணவில்லை. அதன்பிறகு என்ன ஆயிற்று? கும்-கும் தன் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தாளா? இதைத் தெரிந்துகொள்ள நீங்களும் அவளோடு கங்கையில் நீந்திவாருங்கள், வழியில் பல உயிரினங்களைத் தெரிந்துகொள்ளுங்கள், அவர்களோடு நண்பர்களாகுங்கள்.

- Suresh Balachandar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கும்-கும் மிக ஆர்வத்தோடு இருந்தாள். முதன்முதலாக நீந்தப் போகிறோம் என்ற நினைப்பே அவளுக்குப் பூரிப்பைத் தந்தது. "பர்ர்ர்ர்ரப், க்ர்ர்ரம்ப்!" என்று, அவளுடைய குடும்பத்தினரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

கும்-கும் தண்ணீரில் குதித்தாள். அவளின் மூக்கோடு சேர்ந்த நீளமான வாய் தண்ணீரில் "தட்" எனப் பட்டது. "வூஷ்ஷ்ஷ்ஷ்!" ஆற்றின் தண்ணீர் அவள் விழுந்ததால் விலகி மீண்டும் அவள் மேலேயே தெறித்தது. அவள் தனது காலை அடித்து, வாலை அசைத்து முன்னே சென்றாள். "அப்பா, பாருங்கள்! நான் நீந்துகிறேன். பாருங்கள்..."

"...அப்பா!"

முன்னும் பின்னும் பார்த்தாள் கும்-கும். யாருமில்லை! "அப்பா?" வலப்பக்கமும் இடப்பக்கமும் மாறி மாறிப் பார்த்தாள். அங்கே அவள் மட்டுமே இருந்தாள். அவளது குடும்பத்தினர் அவளை விட்டுவிட்டு நீந்திச் சென்றிருந்தனர்.

அவள் தன்னைக் கடந்து மிதந்து செல்லும் ஒரு நீர்நாயைப் பார்த்தாள். "நீர்நாய் அவர்களே, என் குடும்பத்தைப் பார்த்தீர்களா?" என்று கேட்டாள் கும்-கும்."இல்லையே! ஆனால், நான் நிறைய நட்சத்திரங்களைப் பார்த்தேன். அவற்றை உனக்கு காட்டட்டுமா?” என்றது நீர்நாய்.

"இப்போது வேண்டாம்! இன்னொரு நாள் பார்க்கலாம், நன்றி!" என்றாள் கும்-கும்.

அப்போது "பர்ர்ர்ரோஃப்ட்! ர்ர்ர்ரப்!" என்றொரு சத்தம் கேட்டது.

ஆஹா! அது அவள் குடும்பத்தினர்தான்! கும்-கும் மகிழ்ச்சியுடன் வேகமாக நீந்தி முன்னால் சென்றாள்.

திடீரென்று அவள் முன்னால் ஒரு டால்ஃபின் எம்பிக் குதித்தது. "டால்ஃபின் அவர்களே, என் குடும்பத்தினரைப் பார்த்தீர்களா?" என்று கேட்டாள் கும்-கும்."இல்லையே! ஆனால், மிகச் சுவையான மீன்கள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஒரு மீன் சாப்பிடலாம் வருகிறாயா?”என்று கேட்டது டால்ஃபின்.

"இப்போது வேண்டாம்! இன்னொரு நாள் பார்க்கலாம், நன்றி!" என்றாள் கும்-கும்.

அப்போது "ட்ர்ருஃப்! க்ர்ர்ர்ரஃப்!" என்றொரு சத்தம் கேட்டது.

ஆஹா! அது அவள் குடும்பத்தினர்தான்! கும்-கும் மகிழ்ச்சியுடன் வேகமாக நீந்தி முன்னால் சென்றாள்.

அங்கு ஒரு நத்தை பாறையில் படுத்திருந்தது. "நத்தை அக்கா! என் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவுவாயா?" என்று கேட்டாள் கும்-கும்."இல்லையே! ஆனால், நீ உட்கார ஒரு நல்ல தட்டையான பாறையை வேண்டுமானால் கண்டுபிடிக்க உதவுகிறேன்!" என்றது நத்தை."இப்போது வேண்டாம்! இன்னொரு நாள் பார்க்கலாம், நன்றி!" என்றாள் கும்-கும்.

அப்போது "பப்ட்ப்ட்ர்ர்ர்! ஃப்ஃப்ரார்ர்ஃப்ட்!"  என்றொரு சத்தம் கேட்டது.ஆஹா! அது அவள் குடும்பத்தினர்தான்! கும்-கும் மகிழ்ச்சியுடன் வேகமாக நீந்தி முன்னால் சென்றாள்.

அப்போது கும்-கும் ஒரு வயதான கரியல் முதலையைப் பார்த்தாள். அவரைச் சுற்றி கும்-கும்மைப் போன்ற பல சிறிய முதலைகளும் நீந்திக் கொண்டிருந்தன. "தாத்தா! என் குடும்பத்தினரைப் பார்த்தீர்களா?" என்று கேட்டாள்.

"உன் பெயர் கும்-கும்தானே?" என்று அந்த வயதான முதலை கேட்டார்."ஆமாம், நான்தான் கும்-கும்!" என்றாள்."அப்படியானால், நான் உன் குடும்பத்தினரைப் பார்த்தேன். அவர்கள் உன்னைத்தான் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதோ, அங்கே, நதியின் கீழ்ப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சத்தம் உனக்குக் கேட்கிறதா?" என்றார் அவர்.

கும்-கும் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டாள். மற்ற முதலைக் குட்டிகளும் கவனித்தன.அப்போது "பர்ர்ர்ரோஃப்ட்! , கும், கும், கூம், க்ர்ர்ரப்ப்" என்றொரு சத்தம் கேட்டது.ஆம் அது அவள் குடும்பத்தினர்தான். அவர்கள் அருகில்தான் இருக்கிறார்கள்! கும்-கும் சிரித்துக்கொண்டே அந்த சத்தம் வந்த இடம் நோக்கி நீந்திச் சென்றாள்.

சீக்கிரமே ஒரு மணற்கரையை அடைந்தாள் கும்-கும். தன் கால்களை மெதுவாக நகர்த்தி, ஊர்ந்து கரை ஏறினாள். நீந்தி நீந்தி அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள்.

அப்போது "கும்-கும்" என்றொரு குரல் கேட்டது.

"அப்பா?"

ஒரு பெரிய கரிய உருவம் அவளை நோக்கி வந்தது."அப்பா!" அப்பா குனிந்து அவளைப் பாசமாகத் தட்டிக்கொடுத்தார்."வா, வா! கும்-கும்! எங்கே போய்விட்டாய்?" என்றார் அப்பா."நான் ஓர் அருமையான சாகசப் பயணம் போயிருந்தேன். நாளைக்கும் போக விரும்புகிறேன்" என்றாள் கும்-கும்

கும்-கும், தன் பெரிய ஆரவாரமிக்க குடும்பத்துடன் கங்கை ஆற்றங்கரையில் வாழும் கரியல்(Gharial) எனப்படும் ஒருவகையான முதலை ஆவாள். தினமும் ஆற்றில் நீந்தி, மதிய உணவுக்கு மீனையோ, புழு, பூச்சிகளையோ பிடித்துத் தின்பாள். தினப்படி நீச்சலின்போது டால்ஃபின், நீர்நாய், நத்தை, நீர்ப் பறவைகள், படகில் அமர்ந்துவரும் மீனவர்கள், எருமைகள், பாம்புகள், இப்படி இன்னும் பலவிதமான உயிரினங்களைச் சந்திக்கிறாள்.

இந்தப் பக்கத்திலும் அடுத்த பக்கத்திலும் கும்-கும்மின் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.