goodnight tinku

குட்நைட், டிங்கு!

மங்குவின் பண்ணையில் இருக்கும் சின்ன நாய்க்குட்டி டிங்குவுக்கு தூக்கமே வரவில்லை. இரவு நேரத்தில் வெளியே செல்லும் அவன், பல சுவாரசியமான விலங்குகளை சந்திக்கிறான்.

- Priya Muthukumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அது ஒரு பிரகாசமான நிலா வெளிச்சம் நிறைந்த இரவு. விவசாயி மங்குவின் பண்ணையில் எல்லா விலங்குகளும் தூங்கிக்கொண்டிருந்தன.

டிங்குவைத் தவிர!

“எனக்குத் தூக்கம் வரவில்லை, அம்மா” என்று முணுமுணுத்தான் டிங்கு. ஆனால் அது அம்மாவின் காதில் விழவில்லை. அவர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவன் வலது பக்கம் திரும்பினான், பின்னர் இடது பக்கம் திரும்பினான். குப்புறப் படுத்தான், பின்னர் புரண்டு மல்லாக்கப் படுத்தான். ஆனால், அவனால் தூங்க முடியவில்லை!

அதனால், அந்த இரவு நேரத்தில் என்னென்ன கண்டுபிடிக்க முடியும் என்று தேடி கிளம்பினான் டிங்கு. மேலே வானத்தில், உருண்டையான வெள்ளை நிலா தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்தான். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ‘இரவு நேரம் அழகானது’ என நினைத்தான்.

வெகு தூரத்தில் ஒரு மரத்தின் மேல், சில சிறிய வெளிச்சங்கள் இருந்தன. அதிலிருந்து ஒரு வெளிச்சப் புள்ளி பறந்து கீழே வந்தது! “நான் ஒரு மின்மினிப்பூச்சி” என்று சொன்னது அந்த வெளிச்சப் புள்ளி. “நான் இருட்டில் ஒளி வீசுவேன்!” “நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா?” என்று கேட்டான் டிங்கு. “ஓ, இருப்பேனே!” என்றது மின்மினிப்பூச்சி.

ஏதோவொன்று பறந்து சென்று மரத்தின்மேல் தலைகீழாகத் தொங்கியது.

“பறவையே உன் பெயர் என்ன?” என்று கேட்டான் டிங்கு.

“நான், பறவையல்ல ஒரு வவ்வால். என்னால் இரவில் பார்க்க முடியும்!” என்று சொன்னது அந்த வவ்வால்.

“நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா?” என்று கேட்டான் டிங்கு.

“ஓ, இருப்பேனே!” என்றது வவ்வால்.

செடிகளுக்கிடையில் சில இலைகள் அசைந்தன. யாரோ அங்கு ஒளிந்திருந்தனர்! “யார் நீ?” என்று கேட்டான் டிங்கு. “நான் ஒரு குள்ள நரி” என்றது அந்த நரி. “நான் இரவு நேரங்களில் உலா வருவேன்.” “நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா?” என்று கேட்டான் டிங்கு. “ஓ, இருப்பேனே!” என்றது நரி.

ஒரு மரத்திலிருந்து இரு மினுமினுக்கும் கண்கள் அவனைப்பார்த்தன. “யார் நீ?” என்று கேட்டான் டிங்கு. “நான் ஒரு ஆந்தை” என்றது ஆந்தை. “இரவில் நான் உணவுக்காக வேட்டையாடுவேன்.” “நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா?” என்று டிங்கு கேட்டான். “ஓ, இருப்பேனே!” என்று ஆந்தை சொன்னது.

“சீர்ர்ர்ர்ர்ர்ப்! சீர்ர்ர்ர்ர்ப்!” “யாரது?” என்று டிங்கு கேட்டான். “நான் ஒரு சுவர்க் கோழி” என்றது சுவர்க் கோழி. “இருட்டாக இருக்கும் போது நான் கிரீச்சிடுவேன்.” “நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா?” என்று டிங்கு கேட்டான். “ஓ, இருப்பேனே!” என்றது சுவர்க் கோழி.

டிங்குவும் அவனது நண்பர்களும் குதித்து, உருண்டு விளையாடிய பின்னர் கொட்டாவி விட்டான் அவன். “எனக்குத் தூக்கம் வருகிறது. நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்” என்றான் டிங்கு. பல புதிய நண்பர்கள் கிடைத்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். நெருக்கமாக அம்மாவிடம் ஒண்டிக்கொண்டு அவன் சொன்னான், “இரவு நேரம் தனிமையானதல்ல, அம்மா. இரவு அருமையான உயிரினங்கள் நிறைந்தது.” “ஆமாம்!” என்று பதிலளித்தார் அம்மா. “உன்னுடைய புதிய நண்பர்கள் எல்லோரும் காட்டு நாய்களைப் போலவே இரவில் நடமாடுபவர்கள்.”

“இவை சாப்பிடுவதும், விளையாடுவதும், வேலை செய்வதும் இரவு நேரங்களில்தான். இவைகள் பகல் நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ளும். தூக்கம் நாளை உன்னுடைய பகல் நேர நண்பர்களோடு விளையாட உனக்கு சக்தி தரும்.” அவனை இறுக்கி அணைத்தப்படி “குட்நைட், என் செல்லமே!” என்று சொன்னார்.

ஒளிமிக்க வட்டமான நிலா இரவு முழுதும் பிரகாசித்துத் தன்னுடைய அமைதியான வெளிச்சத்தை சுற்றிப் பரப்பிக் கொண்டிருந்தது.இரவு முழுதும் டிங்குவும் தூங்கினான்!