நீலக் கடலின் ஆழத்தில் கோபியும் டுப்பியும் வசித்து வந்தனர்.
இருவரும் தோற்றத்தில் வெவ்வேறாக இருந்தாலும்,
அவர்கள் சிறந்த நண்பர்கள்!
கோபி ஏழு துடுப்புகள் கொண்ட, ஆனால் கால்கள் அற்ற ஒரு மீன். அவன் கண்கள் கூர்மையான பார்வை கொண்டவை.
டுப்பி பல கால்கள் கொண்ட ஒரு துப்பாக்கி இறால். அவளுக்குச் சத்தமிடும்
கொடுக்குகள் இருந்தன. ஆனால் அவளால் சரியாகப் பார்க்க முடியாது.
டக்! டக்! டக்கட்டி டக்களை! அய்யோ! என்ன ஒரு ரகளை!
டுப்பியின் கொடுக்குகள் போடும் சத்தம், கடலில் வாழும் எல்லா உயிரினங்களையும் பயமுறுத்தி விரட்டி விடும்.
டுப்பியின் பார்வைக் குறைவால் அந்த இருட்டான கடலில் அடிக்கடி
தொலைந்து போவாள்
டக்! டக்! டக்கட்டி டக்களை! அய்யோ! என்ன ஒரு ரகளை!
கவலைப் படாதீர்கள்! அவளை வீட்டிற்குக் கூட்டிச் செல்ல, அவளுடைய உயிர்த்தோழன் கோபி எப்போதும் அருகிலேயே இருப்பான்.
டுப்பி, சொகுசான தனது வளைவீட்டை கோபியுடன் பகிர்ந்து வசித்து வந்தாள். வளைக்குள் மணலேதும் விழுந்து விட்டால், தன் கொடுக்குகளால் சுரண்டி
வெளியே தள்ளி விடுவாள்.
டக்! டக்! டக்கட்டி டக்களை! அய்யோ! என்ன ஒரு ரகளை!
அவர்கள் வீடு எப்போதுமே சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
ஒரு நாள் கோபி தனியாக நீந்தச் சென்றான்.
‘‘அப்பாடா! இப்போது இந்த ‘டக்கட்டி டக்களை, ரகளை’ எல்லாம் இல்லை’’ என்றான்.
‘எனக்கு இவ்வளவு இரைச்சலான உயிர்த்தோழி கட்டாயம் தேவையா?’ என்று யோசித்தான்.
திடீரென்று தன் முன் ஒளிரும் இரண்டு கண்களைப் பார்த்தான்.
அது பசியோடு இருந்த ஒரு பெரிய கொடுவாய் மீன்!
‘‘ கோபி பஜ்ஜி சாப்பிடற நேரம் வந்தாச்சு!"
என்று சொல்லிக் கொண்டே கொடுவாய் மீன் அருகில் வந்தது.
பயத்தில் நடுங்கியபடியே கோபி கண்களை
மூடிக்கொண்டான்.
டக்! டக்!
டக்கட்டி டக்களை!
அய்யோ! என்ன ஒரு ரகளை!
‘‘ஆ! அது என்ன, ஒரு பயங்கரமான சத்தம்?’’
என்றது கொடுவாய் மீன்.
அது டுப்பியின் சத்தம்!
டக்! டக்! டக்கட்டி டக்களை!
அய்யோ! என்ன ஒரு ரகளை!
கொடுவாய் மீனால் அந்த
சத்தத்தைத் தாங்க முடியவில்லை.
அது வெகு தூரம் நீந்திப் போய்விட்டது.
‘‘ அம்மாடி!" கோபி டுப்பியை அணைத்துக் கொண்டான்.
இப்படி ஒரு இரைச்சலிடும் உயிர்த்தோழி இல்லாவிட்டால் அவன் என்ன செய்திருப்பான்?
இணைகளைக் கண்டுபிடியுங்கள்
நண்பர்கள் ஒன்றாகவே இருந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். கோபி மீனும் டுப்பி இறாலும் சமுத்திரத்தின் பிரபலமான உயிர் நண்பர்கள். இந்த விலங்குகளின் பட்டியலில் உள்ள பிற உயிர் நண்பர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!
1. உண்ணி கொக்கு
2. தேனீ
3. மாடு
4. சாமியார் நண்டு
5. புள்ளி மான்
6. மந்தி
7. நத்தை
8. நாரை
இந்த நண்பர்களைச் சந்திக்கலாம், வாருங்கள்!
நாரைகளும் தேனீக்களும்
நாரை, தனது கூரிய அலகால் இறந்த மிருகங்களைப் பிய்த்துத் தின்னும். சில சமயங்களில் தேனீக்கள் கூடவே வந்து அந்த இறைச்சியை தங்கள் முட்டைகளை இடுவதற்கான கூடுகளாக உபயோகித்துக் கொள்ளும்.
மாடுகளும் உண்ணி கொக்குகளும்
மாடு வயல்வெளியில் நடக்கும் போது, புல்லில் உள்ள பூச்சிகள் மேலழும்பிக் காற்றில் பறக்கும். உண்ணி கொக்கு மாட்டைப் பின்தொடர்ந்து வந்து அந்தப் பூச்சிகளைச் சாப்பிடும்.
நத்தைகளும் சாமியார் நண்டுகளும்
நத்தைகள் விட்டுச் சென்றிருக்கும் ஓடுகளில் சாமியார் நண்டுகள் வசிக்கும்.
மந்திகளும் புள்ளி மான்களும்
புள்ளி மான்கள், அபாயத்தை உணரும் போது, தங்கள் குளம்புகளை தரையில் அடித்து ஒலியெழுப்பி மந்திகளை எச்சரிக்கும். உடனே மந்திக்கூட்டம் பாதுகாப்பான மர உச்சிகளுக்கு தொற்றி ஏறிச் சென்று விடும். அதற்குக் கைமாறாக, மந்திகள், புள்ளிமான்களின் உணவான தளிர் இலைகளை பறித்துக் கீழே போடும்.