gulliyin saaman petti

குல்லியின் சாமான் பெட்டி

ஒரு சிறிய பழுப்புப் பெட்டியில் பொத்தான், சாவி போன்ற பல சாமான்களைச் சேகரித்து வைப்பது குல்லியின் வழக்கம். ஆனால், அவற்றை வைத்து என்ன செய்வான்? நீங்களே பாருங்கள்! பிறகு நீங்களும் அப்படி ஒரு அருமையான பெட்டியை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்!

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒருநாள் காலை, "என்ன ஆச்சு, தாத்தா! செய்தித்தாள் படிக்கவில்லையா?" என்று கேட்டான் குல்லி.

”வாசிக்க உதவும் கண்ணாடி உடைஞ்சு போச்சு! அது இல்லாம என்னால ஒண்ணுமே படிக்க முடியாது" என்றார் தாத்தா.

”கவலைப்படாதீங்க, தாத்தா. என் சாமான் பெட்டியைக் கொண்டுவருகிறேன்."

குல்லி வேகமாக ஓடிப்போய் தன் சிறிய பழுப்புப் பெட்டியைக் கொண்டுவந்தான்.

க்ளிங்க், க்ளாங்க்! தடாம்-டும்! குல்லி கண்டுபிடித்தது என்ன?

ஒரு மினுமினுக்கும் பூதக்கண்ணாடி!

அதன் வழியாகப் பார்த்தால் எல்லாம் பெரிதாகவும் தெளிவாகவும் தெரியும்.

"நன்றி, குல்லி! இது அருமையா இருக்கு. இப்போ ஒவ்வொரு வரியையும் படிக்க முடியுது" என்றார் தாத்தா.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, "என்ன ஆச்சு, மங்கள் சித்தப்பா?" என்று குல்லி கேட்டான்.

"இந்த பையில் இருக்கும் எண்ணையை ஊற்ற வேண்டும். ஆனால், இந்த போத்தலின் கழுத்து மிகவும் சிறியதாக உள்ளது. நான் கண்டிப்பாக சமையலறையில் களேபரம் செய்துவிடுவேன்" என்றார் மங்கள் சித்தப்பா.

"கவலைப்படாதீங்க! சீக்கிரமாக உங்களுக்கு ஒண்ணு கண்டுபிடிச்சுக் கொடுக்கறேன்" என்றான் குல்லி.

க்ளிங்க், க்ளாங்க்! தடாம்-டும்! இந்த முறை குல்லி கண்டுபிடித்தது என்ன?

ஒரு பெரிய, பரந்த வாய் உடைய புனல்! அதில், மேலே எதையும் ஊற்றலாம் அழகாக, கீழே வந்திடும் சொட்டு சொட்டாக!

"மங்கள் சித்தப்பா, இதைப் பயன்படுத்துங்கள். சமையலறை சுத்தமாகவும் இருக்கும். சமைப்பதும் ஜாலியாக இருக்கும்."

"உன்னுடைய உதவிக்கு நன்றி, குல்லி!"

"என்ன தேடறீங்க பாட்டி?" என்றான் குல்லி."தாத்தாவின் குரங்குத் தொப்பியைத் தைத்துக்கொண்டிருந்தேன். என் மடியிலிருந்து ஊசி எங்கோ விழுந்து விட்டது!" என்றார் பாட்டி.

”நீங்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருங்கள். நான் போய் என் சின்ன பழுப்புப் பெட்டியிலிருந்து ஏதாவது தேடி எடுத்து வருகிறேன்!" என்றான் குல்லி.

க்ளிங்க், க்ளாங்க்! தடாம்-டும்! இந்த முறை குல்லி கண்டுபிடித்தது என்ன?

ஒரு காந்தம்! அனைத்து சிறிய உலோகப் பொருட்களும் அதில் வந்து ஒட்டிக்கொள்ளும்!"காந்தத்தால் அலசுகிறேன் தரையை, ஊசி கிடைத்திடும் விரைவாய்!"

"உங்கள் ஊசி ஒட்டிக்கொண்டது பாருங்கள், பாட்டி. நீண்ட நாட்களுக்கு முன் காணாமல் போன உலோகப் பொருட்களும் கூட கிடைத்துவிட்டன!"

”நன்றி குல்லி! நீ கெட்டிக்காரன்தான். உன் சிறிய பழுப்புப் பெட்டி மிகவும் அருமையானது" என்றார் பாட்டி.