guruvum peechuvum

குர்ரூவும் பீச்சுவும்

குர்ரூவுக்கும் பீச்சுவுக்கும் விளையாட இடமே கிடைக்கவில்லை! அவர்களது நகரத்தில் விளையாடப் புதிய இடங்களைத் தேடிப் போகும் அவர்களின் பயணத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ள வாருங்கள்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குர்ரூவுக்கும் அவன் நாய்க்குட்டி பீச்சுவுக்கும் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

அவர்கள் பந்து விளையாடுவார்கள். அருகருகே ஒன்றாக ஓடுவார்கள்.

குர்ரூவும் பீச்சுவும் அவர்களது அறைக்கு விளையாடச் சென்றனர்.

“பீச்சு! வீட்டுக்குள்ளே எல்லாவற்றையும் கலைத்துப் போடாதே!

குர்ரூ! நீ அவனை வெளியில் கூட்டிக்கொண்டு போ!’’

என்று மிகக் கோபமாக அம்மா திட்டினார்.

குர்ரூவும் பீச்சுவும் வெளியே விளையாடச் சென்றனர்.

“குர்ரூ! நீங்கள் இருவரும் எவ்வளவு சத்தம் போடுகிறீர்கள்? உஷ்...”

என்று மிக எரிச்சலுடன் மனோகர் மாமா கத்தினார்.

குர்ரூவும் பீச்சுவும் பூங்காவுக்கு விளையாடச் சென்றனர்.

“குர்ரூ! இங்கே பீச்சுவுக்கு அனுமதி கிடையாது. உடனே கிளம்புங்கள்! சூ...”

என்று மிகக் கடுப்புடன் மதுசூதன் அஜோபா கண்டித்தார்.

“நாம் எங்கேதான் விளையாடுவது பீச்சு?” கடலையே வெறித்துப்

பார்த்துக்கொண்டு சோகமாக சொன்னான் குர்ரூ.

“ஆஹா! நாம் எங்கே போகலாம் என்று எனக்குத் தெரிந்துவிட்டது!”

ஆம்! குர்ரூவும் பீச்சுவும் கடற்கரைக்கு விளையாடச் சென்றனர். இருவரும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு முகத்தில் அடிக்கும் காற்றை மகிழ்ச்சியாக ரசித்தனர்.

“பீச்சு! அப்படிச் செய்யாதே” என்று யாரும் சொல்லவில்லை.

“குர்ரூ, பீச்சுவை வேறு எங்கேயாவது கூட்டிக்கொண்டு போ” என்று யாரும் சொல்லவில்லை.

“இந்தா, பிடி! பீச்சு!” என்று குர்ரூ தங்கள் சிவப்புப் பந்தைத் தூக்கி எறிய,

பந்து கடலை நோக்கி உருண்டு ஓடுகிறது.

பீச்சு அதைத் துரத்திக்கொண்டு நேராக தண்ணீருக்குள் ஓடுகிறான்.

“வேண்டாம் பீச்சு! அங்கே போகாதே! திரும்பி வா!” என்று குர்ரூ கூச்சலிட்டான்.

ஆனால் பீச்சுவின் முடி அடர்ந்த தலை நீரில் மறையத் தொடங்கியிருந்தது.

குர்ரூ அழத் தொடங்கினான்.

பீச்சுவுடனான ஞாபகங்கள் ஒவ்வொன்றாக அவன் கண்முன் தோன்றி மறைந்தன.

பீச்சு வாயில் பந்தைக் கவ்வியபடி பெருமையாக நீரில் நீந்தி அவனருகே வந்தான். “பௌ பௌ!”

“பீச்சு, உன்னால் நீந்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லையே,”என்று  மகிழ்ந்தான்   குர்ரூ.

“பௌ பௌ!” தனக்கு நீந்தத் தெரியும் என்பது தனக்கு எப்போதோ தெரியும் என்பது போலக் கத்தினான் பீச்சு.

குர்ரூவும் பீச்சுவும் இப்போது தினமும் கடற்கரைக்குச் செல்கின்றனர்.

பந்து விளையாடுறார்கள். அருகருகே ஒன்றாக ஓடுகிறார்கள்.

ஒருவரின் மேல் ஒருவர் நீரைத் தெளித்துக்கொண்டும், குதித்தும்,

அலைகளுக்கு நடுவேயும் விளையாடுகிறார்கள்.