gyalmo pani malaigalin arasi

க்யால்மோ, பனி மலைகளின் அரசி

கொய்னாவும், அவளது தோழி லோப்சாங்கும் பனிச்சிறுத்தையைக் காண ஸ்பித்தி பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றார்கள். க்யால்மோ எனும் பெண் பனிச்சிறுத்தை அவர்கள் இருவரையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களால் அந்த பனிமலைகளின் அரசியான க்யால்மோவை பார்க்க முடிந்ததா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்...

- Panchapakesan Jeganathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பனி படர்ந்து இருக்கும் இமய மலை மேலே ரொம்ப குளிரா இருக்கும். மரங்கள் கூட அங்க வளராது அவ்வளவு குளிரடிக்கும். ஆனால், அங்க கூட சில உயிரினங்கள் இருக்கும். அதுல ஒண்ணுதான் அழகான பனிச்சிறுத்தை. அழகா இருந்தாலும் அதை அவ்வளவு எளிதா பார்க்க முடியாது.

கொய்னா அவளோட இருகண்நோக்கி (பைனாகுலர்) வழியா பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீர்னு கத்தி சொன்னா…

அங்க பாரு பனிச் சிறுத்தை! உனக்கு தெரியுதா? “அங்க பாரு….தெரியுதா?”

பக்கத்துல இருந்த அவளோட தோழி லோப்சாங் கொஞ்சம் அமைதியாகவே சொன்னா…

“அது ஒரு பாறை!” என்று.

அவங்க இருந்தது ஸ்பித்தி பள்ளத்தாக்கில். பனிச்சிறுத்தைகளை எல்லா இடங்களிலும் பார்க்க முடியாது. ஸ்பித்தி பள்ளத்தாக்கு மாதிரி உலகின் குளிரான ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் அவை வாழ்கின்றன. அங்கே அப்போது குளிர் -20° செல்சியஸ்தான் அதனால கொய்னாவும் லோப்சாங்கும் தப்பிச்சாங்க. ஏன்னா குளிர் காலத்துல அங்க குளிர் -40° செல்சியஸ்ஸுக்கு கீழ் போகும்.

இவங்க இரண்டு பேரும் நடந்து வரும்போது க்யால்மோ என்கிற பனிச்சிறுத்தை ஒரு மலை முகட்டுமேலே படுத்திருந்தாள். சோம்பலாக கண்களைத் திறந்து பார்த்து அவங்க இருவரும் தட்டுத் தடுமாறி மலை மேலே ஏறி வருவதைப் பார்த்தாள். பனிச்சிறுத்தைக்கும் அதைப் பார்க்க வந்த சிறுமிகளுக்கும் இடையில ஒரு ஆழமான பள்ளம் இருந்தது. அவர்கள் இருவரும் குளிர் தாங்காமல் அவர்கள் கைகள் இரண்டையும் தேய்த்துக்கொண்டே மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்து க்யால்மோ தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்,”அவர்கள் உடம்பை சுற்றி இவ்வளவு முடி இருந்தும் இன்னும் குளிரால் நடுங்குகிறார்களே”. அவளது உடலின் மேல் இருந்த அடர்ந்த ஆனால் மென்மையான உரோமங்களும் நீண்ட வாலும் ஒரு போர்வை போல அவளை குளிரில் இருந்து காத்தது. அவளது நீண்ட புசுபுசுவென்றிருந்த வாலை சுழற்றி உடலின் மேல் கதகதப்பிற்காக போட்டுக்கொண்டு அந்த சிறுமிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொய்னாவும் அவளது தோழியும் எதிரே இருந்த புல்வெளியில் பரல் (Bharal) எனும் காட்டு ஆட்டின் மந்தையைக் கண்டார்கள். “ஒருவேளை இந்த பரல்களையே நாம் பார்த்துக்கிட்டே இருந்தால் இதை சாப்பிட பனிச்சிறுத்தை வந்தாலும் வரும்” என லோப்சாங் சொன்னாள். பனிச்சிறுத்தை ஒரு ஊனுண்ணி. அது பனி மலைகளின் மேல் தென்படும் பரல், ஐபெக்ஸ், அர்காலி போன்ற காட்டு ஆடு வகைகளை வேட்டையாடி உண்ணும்.

“ஆனால் இந்த ஆடுகளை எல்லாம் அந்த பனிச்சிறுத்தையால் அவ்வளவு எளிதாக பிடிக்கமுடியாது” என்றாள் கொய்னா.

இதைக் கேட்ட க்யால்மோ, “அட என்ன இப்படிச் சொல்லிட்டாங்க? என்னால் ஒரு பரல் ஆட்டை மிக எளிதாகப் பிடிக்கமுடியுமே!”

உடனே போய் ஒரு பரலை பிடித்து அவளோட வேட்டைத் திறமையை காட்டனும்னு தோன்றினாலும் பசி இல்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டாள். முந்தின நாள்தான் ஒரு குட்டி பரலை வேட்டையாடியது நினைவுக்கு வந்தது. அந்த குட்டியை பார்த்த உடனே அதைத் தான் பிடிக்கவேண்டும் என முடிவு செய்தாள். மந்தையில் இருந்ததிலேயே அது தான் உருவில் சிறியதாகவும், மந்தையை விட்டு கொஞ்சம் தூரமாகவும் மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு குட்டி பரல் அப்படி செய்யலாமா? தப்பில்லையா? அதைப் பார்த்த உடனே அமைதியாக அந்த மந்தையில் உள்ள பரல்களுக்குத் தெரியாமல் மறைந்தும், தன்னுடைய வாசனையை நுகராமல் இருக்க பதுங்கிப் பதுங்கியும் முன்னேறினாள்.

மெதுவாக...

மெதுவாக...

மெதுவாகச் சென்று ஒரே பாய்ச்சலில் தாவிய போது அந்த குட்டி பரல் தலையைச் தூக்கிப் பார்த்தது. உடனே தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது...

வேட்டையும் ஆரம்பித்தது....

பனியையும், தூசியையும் கிளப்பிக்கொண்டு செங்குத்தான மலை மேலே அவை இரண்டும் ஓடின. அந்த பரல் சட்டென்று திரும்பி ஒரு பாறையின் மேல் குதித்து எதிர்த் திசையில் ஓடத் தொடங்கியது. ஆனால் க்யால்மோ விடவில்லை. அது போன போக்கிலேயே தன்னோட நீண்ட வாலை சுழற்றிக் கொண்டே வேகமாகப் பின் தொடர்ந்து விரட்டினாள். அப்படி ஓடும் போது தடுமாறாமல் இருக்க அவளுடைய நீண்ட வால் தான் உதவும். துரத்திக்கொண்டே சற்று அருகில் சென்றவுடன் அந்த பரலின் காலைத் தட்டிவிட்டு விழவைத்து அதன் மேலே பாய்ந்தாள்.

அது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம் தான். நினைக்கும் போதே க்யால்மோவின் இதயம் படபடத்தது.

“விரட்டிப் படிப்பதில் உள்ள சுகமே தனிதான்!” என நினைத்துக் கொண்டாள்.

பரலுக்கும் மற்ற காட்டு ஆடுகளுக்கும் பனிச்சிறுத்தையை பார்க்க ஆர்வமில்லாமல் போகலாம். ஆனால் கொய்னா அதைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்தாள். குளிரில் நடுங்கிக் கொண்டே மிகவும் நிதானமாக மலை உச்சிகளையும், பாறை முகடுகளையும் இருகண்நோக்கியை வைத்து உற்று நோக்கினாள். ஒரு இடத்தில் வால் ஆடுவது போல் இருந்தது.

“ஏய் லோப்சாங், அங்கே அங்கெ பார்! அது வாலை ஆட்டுகிறது!”

“இல்லை, அதுவும் ஒரு பாறை தான்!”

“எங்கே பார்க்கிறீர்கள்? நான் இந்தப் பக்கம் இருக்கிறேன், திரும்புங்கள் கொஞ்சம்!” என்றாள் க்யால்மோ சிரித்துக் கொண்டே. அவள் இருக்கும் திசையில் பார்த்தால் அவர்களால் அவளைப் பார்க்கமுடியாது.

“நான் யாரு? உருமறைதோற்றத்தின் தலைவி!

நீங்களும், காட்டு ஆடுகளும் அவ்வளவு எளிதில் நான் இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. நான் நினைத்தால் மட்டுமே உங்களால் என்னைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு நான் இருக்கும் இடத்துடன் ஒன்றிப் போய் இருப்பேன் நான். க்யால்மோ அதாவது பனி மலைக்கெல்லாம் அரசின்னு எனக்கு சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள்?”

பனிச்சிறுத்தையை ஏன் அனைவரும் சுலபமாகப் பார்க்கமுடியாத பூனை வகை, பனிமலைகளின் மாயாவி, கற்பனையான ஒரு உயிரினம் என்றெல்லாம் சொல்கிறார்கள என கொய்னா இப்போது உணர்ந்தாள். பல மணி நேரம் தேடியும் பாறைகளும், பனிக்கட்டிகளையும் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. பனிமலைகளின் அரசியைப் பார்க்காமலேயே குளிரில் நடுங்கிக் கொண்டே திரும்பிச் சென்றாள்.

க்யால்மோவோ மனதில் பரல்களை நினைத்துக் கொண்டே அந்தச் சிறுமிகள் திரும்பிச் செல்வதைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

பரல் Bharal (Pseudois nayaur): இவை ஆங்கிலத்தில் Blue sheep என்றும் அறியப்படுகின்றன. ஆனால் இவை ஆடோ அல்லது செம்மறியாடோ அல்ல. ஒரு வகையான காட்டில் (அதாவது பனி படர்ந்த மலையுச்சிப் பகுதிகளில்) தென்படும் கால்நடை. இமயமலைப் பகுதிகளிலும், மங்கோலியாவிலும் இவை தென்படுகின்றன. இவை பனிச்சிறுத்தைகளின் முக்கிய இரை உணவு .

ஆசிய ஐபெக்ஸ் Asiatic Ibex (Capra sibirica): பனிச்சிறுத்தைகள் பரவியுள்ள பகுதிகள் எல்லாம் தென்படும் ஒரு வகை காட்டு ஆடு. பொதுவாக மலையுச்சிப் பகுதிகளில் 2000 – 5000 மீட்டர் உயரங்களில் தென்படும். மங்கோலியாவில் இவை கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரங்களில் கூட தென்படும்.

அர்காலி Argali (Ovis ammon): உலகில் உள்ள காட்டு ஆடுகளிலேயே மிகவும் பெரியவை. ஆண் அர்காலிகளுக்கு நீண்ட பின்னோக்கி வளைந்த கொம்பு இருக்கும். இக்கொம்பு சுமார் 6 அடி வரையிலும் நீண்டிருக்கும். இவை கூட்டம் கூட்டமாகத் திரியும். சில வேளையில் ஒரு மந்தையில் 200 - 300 அர்காலி ஆடுகள் இருக்கும்.