சிறுவன் விஷ்ணு கனவு காண்பவன். அவனுக்குப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். பயணம் செய்வதும் பிடிக்கும். ஆனால் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வாடகை மகிழ்வுந்து நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் காத்திருக்க அறவே பிடிக்காது. பயணித்தல் எப்போதும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாக அவனுக்குத் தோன்றியது.
“ஒரு மாயக் கம்பளம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நான் அலாவுதினைப் போல ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குக் கண்ணிமைக்கும் பொழுதில் செல்லலாம்” என்று நினைத்தான்.
மக்கள் முதன் முதலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எப்படிச் சென்றார்கள்? அவர்கள் நடந்து சென்றனர்.
பின்னர், விலங்குகளைப் பழக்கியதும் கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் யானைகளில் ஏறிச் சென்றார்கள். பல நூற்றாண்டுகள் கழிந்தன. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மாட்டு வண்டிகள் மற்றும் இதர ஊர்திகள் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றன.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நீராவி இயந்திரம் முழுமையாக்கப்பட்டு, ரயில் வண்டிகள் உருவாக்கப்பட்டன. அடுத்து மோட்டார் கார் புழக்கத்திற்கு வந்தது. மக்கள் எங்கு வேண்டுமானாலும் விரைவாகப் பயணம் செய்தனர்.
உள் எரி இயந்திரங்கள்(internal combustion engines) கார்களை ஓட வைத்தன. ரைட் சகோதரர்கள் இந்த இயந்திரத்தில் விமானங்களைப் பறக்க வைக்க ஏதுவாகும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்தனர். பின்னர், பொறியியலாளர்கள் மேலும் சில மேம்பாடுகளைச் செய்தனர். மனிதர்கள், விண்வெளிக்கும் சந்திரனுக்கும் பறந்து செல்ல ராக்கெட்டுகளை வடிவமைத்தனர்.
“ஆனால் நாம் ஏன் இன்னும் அலாவுதினின் மாயக்கம்பளத்தை விட மெதுவாக இருக்கிறோம்?” என்று விஷ்ணு ஆச்சரியப்பட்டான்.
இந்தக் கேள்வியை அவன் தன் தாயிடம் கேட்டான். தனது தந்தையிடம் கேட்டான். அவனது பள்ளி ஆசிரியரிடமும் கேட்டான். ஆனால் யாராலும் அவன் கேள்விக்குத் திருப்தியான பதிலைச் சொல்ல முடியவில்லை.
“நாம் முன்பை விட இப்போது வேகமாகச் செல்கிறோம். சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குள், ரயில்வண்டிகளிலோ அல்லது சாலை வழியாகவோ செல்ல முடிகிறது. விமானத்தில் பயணம் செய்தால் 40 நிமிடங்களே போதும். டெல்லியிலிருந்து வாஷிங்டனுக்கு 16 மணி நேரத்திலேயே பறந்து செல்லமுடியும்! ஜப்பானிய புல்லட் ரயில்வண்டிகள் சில மணி நேரத்திற்குள் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு மக்களை அழைத்துச் செல்கின்றன. விஷ்ணு... உனக்கு இன்னும் எவ்வளவு வேகமாகச் செல்லவேண்டும்?” என்று அவனது தந்தை கேட்டார்.
40 நிமிடங்களில் எத்தனை தூரம் செல்லலாம்?
4 கி.மீ.
40 கி.மீ.
60 கி.மீ.
600 கி.மீ.
“இவர்கள் யாருக்கும் புரியவில்லையே!” என்று விஷ்ணு நினைத்தான். ஒவ்வொரு பயணத்தின் போதும், கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் ஒரு மாயசக்தி தன்னிடம் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டான். தன் உயிர் நண்பன் ராகுலிடம் இதைப் பற்றிப் புலம்பினான்.
ஒருநாள், விஷ்ணு படித்த செய்தித்தாளின் தலைப்பு அவனது சின்ன உலகத்தை உலுக்கும்படி இருந்தது. அது 'ஹைப்பர்லூப்: நவீன யுக மாயக்கம்பளம்' என்பதாகும்.
அவன் உடனே தன் நண்பனின் வீட்டுக்கு ஓடிச் சென்றான். “ராகுல்! ஹைப்பர்லூப் வரப்போகிறது! எந்தவொரு ரயில்வண்டியையும் விமானத்தையையும் விட இது படுவேகமாகச் செல்லும்’’ என்றான்.“அது என்ன?” என்று அங்கு வந்த ராகுலின் தங்கை அனுராதா கேட்டாள்.
“ஹைப்பர்லூப்! இது அதிவேகமான ஒரு போக்குவரத்துச் சாதனம். நான் பத்திரிக்கையில் இதைப் பற்றி இப்போதுதான் படித்தேன். இது மிகப்பெரிய, நீண்ட வெற்றிடக்குழாய் வழியே, சிறு சிறு கூடுகள் அல்லது பெட்டிகளில் மக்களை ஏற்றிச் செல்லும் ஒரு சாதனம். இந்தக் குழாய்கள் தூண்களின் மீதோ அல்லது பூமிக்கு அடியிலோ அமைக்கக்கப்படும்’’ என்றான் விஷ்ணு.
ஹைப்பர்லூப்பைப் பற்றி ராகுலுக்கும் அனுராதாவுக்கும் அதிக விவரங்களைச் சொல்லச் சொல்ல, விஷ்ணுவுக்கு ஆர்வம் அதிகரித்தது.
“இதில், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தின் வேகத்தில் செல்ல முடியும். அதாவது, 40 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில்! இது ஒரு சிறந்த செய்தி அல்லவா? பேருந்திலோ,ரயில் வண்டியிலோ செல்வதானால் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும்’’ என்றான் விஷ்ணு.
அனுராதாவுக்கு ஏராளமான கேள்விகள் இருந்தன. ‘‘இது எப்படி நகரும்? பாதுகாப்பானதாக இருக்குமா?’’ என்று அவள் கேட்டாள்.
“குழாய்களின் உள்ளே கூடுகள் எழும்பிய வண்ணம் வழுக்கிக் கொண்டு செல்வதைப் போல் இருக்கும். இது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை இப்போது கூறுவது கடினம்,” என்றான் விஷ்ணு.
“அவை ‘புல்லட் இரயில்’களை விட வேகமாக இருக்கும்!” என்றான் ராகுல். “உண்மையாகவா?” என்று அனுராதா கேட்டாள்.
“ஒலியின் வேகத்தில் செல்ல முயற்சிப்பதுதான் திட்டம். அதாவது, ஒரு மணி நேரத்தில்1,235 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும்!” என்றான் விஷ்ணு. “ஆனால் எப்படி?” ராகுல் திகைப்புடன் கேட்டான்.
“வேகத்தைக் குறைக்கக்கூடிய காற்றின் எதிர்ப்போ அல்லது உராய்வோ வெற்றிடத்தில் இல்லாததால் இந்தக் கூடுகள் குழாய்க்குள்ளே சீறிப்பாய முடியும். சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சில நிமிடங்களில் பாய்ந்து செல்வதைக் கற்பனை செய்து பாருங்களேன்!
அது எத்தனை அற்புதம்!” என்றான் விஷ்ணு. இந்த எண்ணம் கொடுத்த சிலிர்ப்பில், அவர்கள் சிரித்தார்கள்.
“ஆனால் நாளை நான் பெங்களூருக்குப் பேருந்தில்தான் போயாக வேண்டும்!” என விஷ்ணு சலித்துக் கொண்டான். அன்று இரவு, விஷ்ணு, ஹைப்பர்லூப்பில் பயணம் செய்வது போல கனவு கண்டான்!
ஹைப்பர்லூப் - ஒரு கற்பனை போக்குவரத்துச் சாதனம்
ஹைப்பர்லூப் எதிர்காலத்திற்கான ஒரு போக்குவரத்துச் சாதனம். இதன் குழாய்களின் கூரைகளின் மேல் சூரிய மின்கலத்தகடுகள் பொருத்தப்பட்டு, சுகாதாரமானதாகவும், சுயசக்தியைப் பெறுவதாகவும் இருப்பதால் இது சுற்றுச்சூழலுடன் இசைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதால், ஹைப்பர்லூப் போன்றபோக்குவரத்து அமைப்பை உருவாக்க ஆகும் செலவைப் பற்றிசரியாக யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், உலகம் பெரும் கண்டுபிடிப்புகளைப் பார்த்திருப்பதற்குக் காரணம் மனிதர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகளே!
விஷ்ணு நிறைய கனவு காண்கிறான். நீங்கள் எதைப் பற்றி கனவு காண்கிறீர்கள்?