காட்பாடி என்ற சிறிய ஊரிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஸ்ரீ வசித்து வந்தாள். அவள் அம்மா ஒரு நகைக்கடையில் பணிபுரிகிறார். அப்பா டாக்சி ஓட்டுகிறார்.
ஸ்ரீ கணிணி கற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அதனால், வீட்டிலிருக்கும் கணிணியை அவள் பயன்படுத்தும்போது அவர்கள் மகிழ்ந்தனர்.
ஸ்ரீயும் அதற்கான நேரத்தை எப்படியாவது ஒதுக்கிக் கொள்வாள். மின்னஞ்சல் அனுப்புவது, பள்ளி வேலைகளுக்குத் தேவையான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற பல வேலைகளுக்கு அவள் கணினியைப் பயன்படுத்துவாள்.
ஸ்ரீயின் அப்பாவின் அக்காவும் அவர்களோடு வசித்துவந்தார். அவரை எல்லோரும் அக்கா என்றுதான் கூப்பிடுவார்கள். பெரும்பாலும், தனக்கு விருப்பமான பழைய திரைப்படங்களை ஒளிபரப்பும் அந்தத் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்தபடியே தூங்குவது அவர் வழக்கம். அவர் ஸ்ரீக்கு சுடச்சுட, காரமான நூடுல்ஸ் நிரப்பிய தோசைகளைச் செய்து கொடுப்பார். அதைச் சாப்பிட்ட பின் ஸ்ரீ விளையாட விரும்புவாள். ஆனால், அவளுடைய விளையாட்டுகள் அக்கா விரும்புவதைப் போன்ற கற்களாலும் கிளிஞ்சல்களாலும் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுகள் அல்ல. ஸ்ரீ கணிணியில் விளையாடவே விரும்பினாள்.
கணிணியில் விளையாட்டுகள் மட்டுமல்ல, ஃப்ரெண்ட்ஸ்நெட்டும் இருந்தது. ஸ்ரீ அதில் இரண்டு மாதங்களுக்கு முன், அவளுடைய பதிமூன்றாம் பிறந்தநாளின்போது சேர்ந்திருந்தாள். சிற்றுண்டிக்கும் தேநீருக்கும் பிறகு அவள் பள்ளி நண்பர்களுடன் ஃப்ரெண்ட்ஸ்நெட்டில் உரையாடுவாள்.
பள்ளிப் பேருந்திலிருந்து விடைபெற்ற பிறகு தாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பகிர்ந்து கொள்வது அவர்கள் வழக்கம். ஸ்ரீ தனக்கு அதிக சர்க்கரை போட்ட தேநீர் கிடைத்தது என்று சொன்னாள்.
ஒரு தோழி “அது உனக்கு தினமும்தான் கிடைக்கிறது” என்றாள்.
ஸ்ரீ அதற்கு “எனக்கு ஆட்டுக்கறி சுவை சேர்த்த நூடுல்ஸும் தோசையும் கிடைத்தன” என்றாள். மற்றொரு நண்பன் “நீ சாப்பிடுவதைத் தவிர வேறு ஏதும் செய்வதுண்டா” என்று கேலி செய்தான்.
ஸ்ரீக்கு கோபமாக வந்தது. அவர்களை நட்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் என்று முடிவு செய்தாள். அதன்பின், அவர்களுடன் பேச முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினாள்.
ஆனால், அவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதற்கு முன், அவளுக்கு ஒரு புதியநட்புக் கோரிக்கை வந்திருந்தது. அது சைத்ரா என்ற பெண்ணிடமிருந்து வந்திருந்தது. அவள் மிகவும் அழகாக, ஒரு திரைப்பட நடிகையைப் போல இருந்தாள்.
உங்களுக்கு சைத்ரா-இடமிருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது
ஏற்க
நிராகரி
ஸ்ரீ ஏற்க என்ற பொத்தானை அழுத்தினாள். ஒரே சொடுக்கில், அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
“உனக்கு நண்பர்கள் அதிகமா?” என்று சைத்ரா கேட்டாள்.
“இல்லை! நான் என்னுடைய சில நண்பர்களை இன்றுதான் இழந்துவிட்டேன்” என்று சோகமான எமோஜியுடன் ஸ்ரீ பதிலளித்தாள். “அதனால் என்ன? எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எந்த மாதிரியான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உனக்கு இப்போது நான் இருக்கிறேனே!”
ஸ்ரீக்கு அந்த வார்த்தைகள் பிடித்திருந்தன.
“நீ எந்தப் பள்ளிக்குச் செல்கிறாய்?” என்று ஸ்ரீ கேட்டாள்.
“உன்னுடைய பள்ளிக்கு அருகில்தான்” என்றாள் சைத்ரா.
“நான் எந்தப் பள்ளிக்குச் செல்கிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்” என்று ஆச்சரியப்பட்டாள் ஸ்ரீ.
“ஏனென்றால் அது என் பள்ளிக்கு அருகில் இருக்கிறது.”
“நல்லது. அப்படியானால் நாம் இருவரும் சந்திக்கலாம்.”
“ஆம்! நாம் இருவரும் எப்போதும் நல்ல நண்பர்களாக இருப்போம். வருகிறேன்!” என்று சைத்ரா வெளியேறினாள்.
அடுத்த நாள் காலை, ஸ்ரீ அவளுடைய பள்ளிக்கு அருகில் வேறு ஏதும் பள்ளி இருக்கிறதா என்று பார்த்தாள். ஆனால் அப்படி ஏதும் அங்கே இல்லை.
அங்கு வேறு பள்ளிகள் எதுவும் அருகில் இல்லை என்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.
ஆனால் சைத்ரா அவளுடைய மற்ற நண்பர்களை விட நல்லமுறையில் நடந்து கொண்டாள். அவள் ஸ்ரீக்கு மட்டுமே நெருங்கிய தோழி; வேறு யாருக்கும் தோழி இல்லை.
இன்று அவள் சூடான நூடுல்ஸைத் தொடவில்லை. அது அவளுக்கு விருப்பமான சில்லி சிக்கன் சுவையோடு இருந்தபோதிலும்கூட.
அதைக் கவனித்த அக்காவுக்கு வியப்பாக இருந்தது. “உனக்கு உடம்பு சரியில்லையா?”
“பள்ளியில் நிறைய வேலை இருந்தது” என்று பொய் சொன்னாள் ஸ்ரீ.
“அப்படியானால் போய் வீட்டுப்பாடத்தைச் செய். நானும் போய் கொஞ்சம் தூங்குகிறேன்” என்றார். ஆனால் ஸ்ரீ வீட்டுப்பாடத்தைச் செய்யவில்லை. மாறாக, அவள் கணிணியை இயக்கினாள். இணையத்தில் நுழைந்து அவளுடைய புதுத்தோழியின் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.
விரைவில் சைத்ராவிடமிருந்து அவளுக்கு ஒரு செய்தி வந்தது.
“ஹலோ, தோழி. நலமா?”“நலம், நான் இன்று டிஃபன் சாப்பிடவில்லை” என்றாள் ஸ்ரீ. “ஏன்?” என்று சைத்ரா கேட்டாள்.
“ஏனென்றால் நான் உன்னுடன் பேசவேண்டும். எனவே தேநீரை விரைவாகக் குடித்துவிட்டேன்” என்றாள் ஸ்ரீ.
“ஆஹா! உன்னுடைய செல்ஃபி ஒன்றை எனக்கு அனுப்புகிறாயா? உன்னுடைய அலைபேசி எண்ணையும் கொடு, நான் உன்னை அழைக்கிறேன்” என்றாள் சைத்ரா.
“என்னுடைய அலைபேசியில் புகைப்படம் எடுக்க முடியாதே” என்று ஸ்ரீ வருத்தப்பட்டாள்.
சைத்ரா தன்னுடைய பழைய கேமரா ஃபோனை ஸ்ரீக்கு கொடுப்பதாகச் சொன்னாள். “ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளையே நாம் சந்திக்கலாம். அப்போது உன்னை நான் படம் எடுக்கிறேன். உனக்கு என்னுடைய பழைய அலைபேசியையும் தருகிறேன்.”
ஸ்ரீ புகைப்படம் எடுக்க முடிகிற அலைபேசி வேண்டுமென நீண்ட நாட்களாக ஆசை கொண்டிருந்தாள். “நாம் எங்கு சந்திக்கலாம்?” என்று கேட்டாள் அவள்.
“தொடர்வண்டி நிலையத்துக்கு வந்துவிடு” என்றாள் சைத்ரா. “எத்தனை மணிக்கு” என்று கேட்டாள் ஸ்ரீ. “பெங்களூர் வண்டி அங்கு வரும்போது” என்று முடிவாகச் சொன்னாள் சைத்ரா.
அப்போது அவளுடைய அறையை சுத்தம் செய்வதற்காக அக்கா அங்கே வந்தார்.
“ஸ்ரீ, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“எனக்கு ஒரு புதிய தோழி கிடைத்திருக்கிறாள், அக்கா!” அக்கா திரையில் இருந்த சைத்ராவின் படத்தை எட்டிப் பார்த்தாள்.
“ஆனால் இது எனக்குப் பிடித்த திரைப்பட நடிகை மது அல்லவா? மது உன்னுடைய தோழியா?”
“ஆமாம், ஆனால் அவளுடைய பெயர் சைத்ரா.”
அக்கா சிரித்தபடியே தலையை ஆட்டி மறுத்தார். “இது மது. நான் அவளுடைய படங்கள் அத்தனையும் பார்த்திருக்கிறேன். அவளுக்கு இப்போது மிகவும் வயதாகி இருக்கும்.” “அவளுக்கும் என்னுடைய வயதுதான்!” என்றாள் ஸ்ரீ.
“இல்லவேயில்லை, அவளுக்கு என்னுடைய வயது இருக்கும். இந்தப் படம் அவளுடைய முதல் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது. அப்போது அவள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்” என்றார் அக்கா.
ஸ்ரீக்கு அக்காவின் மீது கோபம் வந்தது. அதன்பின் யோசிக்க ஆரம்பித்தாள்.
சைத்ரா யாரோ ஒரு திரைப்பட நடிகையின் படத்தைப் பயன்படுத்துகிறாளா?
அடுத்த நாள், “உனக்கு எத்தனை வயது?” என்று தட்டச்சு செய்து கேட்டாள் ஸ்ரீ.
“நான்தான் சொன்னேனே, எனக்குப் பதிமூன்று வயது, உன்னுடைய வயதேதான்” என்று பதில் சொன்னாள் சைத்ரா.
ஸ்ரீ அதற்கு, “நல்லது. சிறந்த நண்பர்கள் ஒரே வயதுடையவர்களாகத்தான் இருப்பார்கள்” என்று பதிலளித்தாள்.
“ஹே, உன்னுடைய படத்தில் உள்ள தோடுகள் அழகாக இருக்கின்றன!”
“நன்றி, அவற்றை நானே செய்தேன்.”
“ஆஹா, நாளை நாம் சந்திக்கும்போது அவற்றை அணிந்து வா!”
“சரி. ஆனால் நீ தனியாக வரவேண்டும்” என்றாள் சைத்ரா.
“ஏன்?” என்று கேட்டாள் ஸ்ரீ. “ஏனென்றால் நானும் தனியாக வருகிறேன். நம்முடைய ரகசிய சந்திப்பிற்கு!”
ஸ்ரீ ‘சரி’ என்று தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள். அதன்பின் அவளுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.
“சைத்ரா, நான் என்னுடைய பள்ளிக்கு அருகில் வேறு பள்ளி எதையும் பார்க்கவில்லை” என்றாள். ஆனால், அதற்குள் சைத்ரா இணைப்பிலிருந்து வெளியேறியிருந்தாள்.
அவளுடைய புதிய தோழியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறதே? ஒருவேளை அவள் பொய் சொல்கிறாளோ?
ஸ்ரீக்கு குழப்பமாக இருந்தது. அவளால் வீட்டுப்பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
“அக்கா?” என்று கூப்பிட்டாள்.
“சொல்லு, செல்லம்” என்றார் அக்கா. “உனக்கு என்ன கவலை?”
ஸ்ரீ உண்மையைச் சொல்லத் தீர்மானித்து அவளுடைய பொய் சொல்லும் புதிய தோழியைப் பற்றி அக்காவிடம் சொன்னாள்.
“அக்கா, நான் இப்போது என்ன செய்யட்டும்?”
அடுத்த நாள், ஸ்ரீயும் அக்காவும் பெங்களூர் விரைவு வண்டி வருவதற்கு முன்பாகவே காட்பாடி சந்திப்புக்கு வந்துவிட்டனர். அந்தப் புதிய தோழி நேர்மையானவளா இல்லையா என்று கண்டுபிடிக்க ரகசியத் திட்டமொன்றையும் அவர்கள் வைத்திருந்தனர். “நான் போய் நிலைய மேலாளரைப் பார்த்து அவரால் நமக்கு உதவ முடியுமா என்று கேட்கிறேன்” என்றார் அக்கா.
அப்போது பெங்களூர் வண்டி நிலையத்திற்குள் நுழைந்தது. ஸ்ரீ சுற்றும் முற்றும் பார்த்தாள். சைத்ரா அவளை நிலையத்தின் உள்ளே நிற்கச் சொல்லியிருந்தாளா அல்லது வெளியிலா? அவளுக்கு ஞாபகம் வரவில்லை.
அக்கா எங்கே போனார்?
அவரை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
பல பயணிகள் வண்டியிலிருந்து வெளியே வந்தனர். ஆனால் யாரும் சைத்ராவைப் போல இல்லை.
ஸ்ரீயின் அப்பா வயதுடைய ஒருவர் அவள் அருகே வந்தார்.
“ஹலோ ஸ்ரீ!” என்று புன்னகைத்தார் அவர். ஸ்ரீ அதிர்ச்சியடைந்தாள். அவளுக்கு அவரை யாரென்றே தெரியவில்லை.
“உன்னைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி!” என்றார் அவர்.
“நீ…நீங்கள் யார்? நீங்கள் சை…சைத்ரா இல்லையே!” என்று திணறினாள் ஸ்ரீ.
“இல்லைதான் ஸ்ரீ. ஆனால் எனக்கு உன் நண்பனாக இருக்க ஆசை! எனக்கு இளம் பெண்களுடன் நட்பு கொள்வது பிடிக்கும்” என்றார் சைத்ரா-இல்லாத-அவர்.
“ஆஆஆஆ!” கூச்சலிட்டாள் ஸ்ரீ. அடுத்த விநாடியில் அக்கா அவள் அருகில் இருந்தார். பக்கத்தில் நிலைய மேலாளரும் இருந்தார்.
அவர்களைக் கண்டு சைத்ரா என்று பொய் சொன்னவர் அதிர்ச்சியடைந்தார். ஸ்ரீ இரண்டு பெரியவர்களைக் கூட்டிக்கொண்டு வருவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அக்கா தனது கைப்பையால் அவரை அடித்தார்.
அதன் பின், “என் மருமகளிடம் நெருங்க உனக்கு என்ன தைரியம்” என்று கூச்சலிட்டார்.
“ஓ!” என்று அழுதார் அந்த நபர்.
அப்போது அந்த ரயில் நகரத் தொடங்கியது. அவர் ரயில் பெட்டி ஒன்றின் கதவை நோக்கி ஓடினார். நிலைய மேலாளர் அவரைப் பிடிக்க ஓடினார். ஆனால் அவர், கூட்டமான அந்த ரயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார்.
அவர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்குச் சென்றனர். “நீங்கள் இருவரும் துணிச்சலானவர்கள்!” என்றார் ஒரு பெண் காவலர். “இந்த ஏமாற்றுக்காரரைப் பற்றி புகார் அளித்ததற்கு நன்றி! இந்தச் சுவரொட்டியை உங்கள் பள்ளி விளம்பரப் பலகையில் ஒட்டுகிறாயா? உங்கள் பள்ளியில் இணையப் பாதுகாப்பு தொடர்பான வகுப்பு ஒன்றை விரைவில் நடத்துகிறோம்.” இணையக் குற்றவியல் நிபுணர் ஒருவர் ஸ்ரீயின் கணிணியை வந்து பார்ப்பார் என்றும் அவர் கூறினார்.
அடுத்த நாள், ஒரு இணையக் குற்றவியல் அதிகாரி ஸ்ரீயின் கணிணியை ஆராய்ந்தார். சில மணி நேரங்களுக்குள் சைத்ரா என்று நடித்த மனிதரைக் காவலர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
அவரை பெங்களூருவில் இருந்த அவர் அலுவலகத்தில் கைது செய்தனர். சமூக ஊடகங்கள் மூலம் பல இளம் பெண்களிடம் அவர் நட்புக் கொள்ள முயன்றதைக் கண்டறிந்தனர்!
தன் பள்ளி நண்பர்களை மட்டுமே நட்பு வட்டத்தில் சேர்ப்பது என்று ஸ்ரீ தீர்மானித்தாள். அவளுடைய இணைய ‘தோழி’ உடனான திகிலூட்டும் அனுபவங்களை தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள அவள் மிக்க ஆர்வமாக இருந்தாள்.
இணையத்தின் பயன்கள் மிக அதிகம். அது ஒரு சிறந்த தொழில்நுட்பம். ஆனால், அது தவறாகப் பயன்படுத்தப்படும்போது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது.
இணையத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். உங்களுடைய பெயர், முகவரி, பள்ளியின் பெயர், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை அறிமுகமில்லாதவர்களிடம் தெரிவிக்காதீர்கள்.
இணையத்தில் கவனமாக இருங்கள்! இந்தியாவில் குழந்தைகளின் உதவிக்காக அழைக்கவேண்டிய தொலைபேசி எண் 1098.
உங்கள் பெற்றோர்களிடமோ பாதுகாவலரிடமோ கேட்காமல் உங்களுடைய புகைப்படத்தை இணையத்தில் யாருக்கும் அனுப்பாதீர்கள்.
உங்களை சங்கடப்படுத்தும் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள்.
உங்கள் பெற்றோர்களிடமோ பாதுகாவலரிடமோ சொல்லாமல் இணையத்தின் மூலம் மட்டுமே அறிமுகமான ஒருவரைச் சந்திக்க ஒப்புக்கொள்ள வேண்டாம். இணையத்தில் சந்திப்பவரை நேரில் பார்க்கும்போது அவர் உண்மையில் வேறொருவராக இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்.