inaiyatthil tholaindha kunaal

இணையத்தில் தொலைந்த குணால்

குணால் இணையத்தில் தொலைந்து விடுகிறான். இணையத்தின் வழியாக ஒரு அறிவியல் புனைவுப் பயணம் செய்து, அவன் எப்படி வீட்டுக்கு வழி கண்டுபிடிக்கிறான் என்று பார்ப்போம், வாருங்கள்.

- Subhashini Annamalai

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குணாலுக்கு இணையம் என்றால் ரொம்பப் பிடிக்கும். காணொளிகள் பார்ப்பதற்காக அடிக்கடி தன் அம்மாவின் கைபேசியைக் கேட்பான்.

“ரொம்ப நேரம் அதையே பார்த்துக் கொண்டிருக்காதே! அப்புறம் உன்னை உள்ளே இழுத்துக்கொண்டு விடும்!” என்று அம்மா எச்சரித்தார்.

முதலில் குணால் கார்ட்டூன் நிஞ்சாக்களைப் பற்றிய ஒரு காணொளியைப் பார்த்தான். அடுத்து, ஒரு எரிமலை பொங்குவதைப் பார்த்தான். அதன் பிறகு, ஒரு குழந்தை நாயுடன் விளையாடுவதைப் பார்த்தான். இப்படி ஒவ்வொன்றாகப் பார்க்கப் பார்க்க அவனுடைய முகம் கைப்பேசியின் திரைக்கு மிக அருகே சென்று கொண்டே இருந்தது.

திடீரென்று, குணால் சிறு சிறு துண்டுகளாகி—ஷ்ஷ்ஷூஊஊப்ப்ப் — இணையத்துக்குள்ளே இழுக்கப்பட்டான்!

“நான் எங்கே இருக்கிறேன்?” குணால் ஒரு வினோதமான ரயில் நிலையத்தின் நடைமேடையில் வந்து இறங்கினான். அங்கே சுரங்கப்பாதைகளின் வழியாக ரயில்கள் வேகவேகமாகப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. அவன் தலைக்கு மேலே ஒரு அறிவிப்பு தோன்றியது. அதில் முதன்மைத் திசைவி என்றிருந்தது.

முதன்மைத் திசைவி

“நான் எப்படி இங்கே வந்தேன்? எப்படி என் வீட்டுக்கு வழி கண்டுபிடிப்பேன்?” என்று குணால் யோசித்தான். அப்போது, நடைமேடையில் ஒரு பெண் நிற்பதைப் பார்த்தான். அவர் மும்முரமாக ரயில் போக்குவரத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்தார். “அக்கா! இந்த ரயில்கள் எல்லாம் எங்கே போகின்றன?” என்று குணால் அவரிடம் கேட்டான்.

நடைமேடையில் இருந்த பெண் “இந்த ரயில்கள் எல்லாம் இணையத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தரவுகளை எடுத்துச் செல்கின்றன” என்றார். பரபரப்புக்கு இடையே, “நான் பரப்புதல் கட்டுப்பாட்டு நெறிமுறை(Transmission Control Protocol). நீ என்னை டிசிபி என்று கூப்பிடலாம்” என்றார்.

டிசிபியின் கைகள் ஒரு பெரிய திரையில் இருந்தவற்றை வேகவேகமாக நகர்த்துவதை ஆச்சரியமாகப் பார்த்தான் குணால். “அட! நீங்கள் என்ன செய்கிறீர்கள் டிசிபி அக்கா?” என்று கேட்டான். “வேறென்ன! தரவுகளை இணையத்தின் வழியாக ஒவ்வொரு திசைக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். எல்லாமே வேக வேக வேகமாகப் போகவேண்டும்!” ரயில்கள் தரவுகளைச் சுமந்தபடி எல்லாத் திசைகளிலும் சர்சர் என்று விரைந்துகொண்டு இருந்தன.

“இணையத்தில் உள்ள எல்லா கைபேசிகளும் கணினிகளும் இணைக்கப்பட்டுள்ளனவா?” என்று கேட்டான் குணால். அவன் மனதில் ஒரு திட்டம் உருவாகிக்கொண்டிருந்தது.

“ஆமாம், இணையத்தில் உள்ள எல்லா கருவிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்க வழிகள் எல்லாம் உண்மையில் வயர்கள், கம்பிவடங்கள், ரேடியோ அலைகள் மற்றும் விண்வெளியிலுள்ள செயற்கைக்கோள்கள்தான்” என்றார் டிசிபி.

“டிசிபி அக்கா, இணையத்தில் உள்ள எல்லாக் கருவிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்றால், என்னுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்ல உங்களால் உதவ முடியுமா?” “நிச்சயமாக!” என்ற டிசிபி, குணாலை மேலும் கீழும் பார்த்தார். “சரி, உன்னை பொட்டல நிலைமாற்றல் மூலம் அனுப்பலாம். முதலில் உன்னை சில ஆயிரம் துண்டுகளாகப் பிரித்துக்கொள்வோம். பிறகு ஒவ்வொரு துண்டையும் வேறு வேறு பாதைகள் வழியாக அனுப்புவோம். கடைசியில் எல்லாத் துண்டுகளையும் ஒன்றாக சேர்த்து உன்னை மீண்டும் உருவாக்கிக்கொள்ளலாம்.”

“வேண்டாம், வேண்டாம்! வேறு... வேறு வழி எதுவும் இல்லையா?” குணால் பதட்டத்துடன் கேட்டான்.

“ஹ்ம்ம்ம், சுற்று நிலைமாற்றல் வழியாக உன்னை முழுதாக அனுப்பலாம். ஆனால் நிறைய நேரம் ஆகும். உனக்கு வேண்டுமென்றால் அப்படியே செய்யலாம். உன் அம்மாவிடம் உங்கள் முகவரியைக் கேட்கலாம்” என்றார் டிசிபி.

“எங்கள் முகவரி எனக்கே தெரியுமே!” என்று குணால் குழம்பினான். “உங்கள் வீட்டு முகவரி இல்லை. உங்கள் இணைய முகவரி” என்ற டிசிபி, ஒரு அரட்டைச் சாளரத்தைத் திறந்து குணாலின் அம்மாவிடம் நடந்ததை கடகடவென விளக்கினார். “எங்கள் கணினியில் kunalbabypictures.com என்ற இணையதளத்தை ஹோஸ்ட் செய்திருக்கிறோம். அதைக் கண்டுபிடிக்க முடியுமா?” என்றார் அம்மா.

“நாம் உன் அம்மாவின் கணினியை இணைய நெறிமுறையை(Internet Protocol) பயன்படுத்திக் கண்டுபிடிக்கலாம். இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட எண் இருக்கும். அதன் பெயர்தான் இணைய நெறிமுறை முகவரி” என்றார் டிசிபி. அட்டையில் ‘DNS’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு பெரிய புத்தகத்தைத் திறந்தார் டிசிபி. “இந்தப் புத்தகத்தில் இணையத்தில் உள்ள எல்லா தளங்களின் இணைய நெறிமுறை முகவரியும் இருக்கும்” என்றார். அதில் கவனமாகத் தேடத் தொடங்கி... “இதோ கண்டுபிடித்துவிட்டேன்!” என்றார்.

“சரி, இங்கே வா. வழியில் வேறு யாரும் உன்னை பிடித்துவிடாமல் இருக்க உன்னை குறியீட்டு மறையாக்கம்(Encrypt) செய்ய வேண்டும்” என்று டிசிபி சொன்னார். அவர் குணாலிடம் மூக்கும் மீசையும் இணைக்கப்பட்டிருந்த ஒரு வினோதமான கண்ணாடியையும் ஒரு தொப்பியையும் கொடுத்தார். “கண்டிப்பாக நீ அதிக பாதுகாப்புடன் அனுப்பப்பட வேண்டிய ஒரு தரவுதான்!” என்றார் அவர். “போய்வருகிறேன், டிசிபி அக்கா!” என்றான் குணால் உற்சாகமாக.

குணால் மிக வேகமாகப் போய்க்கொண்டு இருந்தான். அவன் கைகளும் கால்களும் சிலிர்த்துக் கொண்டன. பாப்! அவன் வீட்டிற்குள் வந்து இறங்கிவிட்டான்.

“என் செல்லமே, வந்துவிட்டாயா. அடுத்தமுறை, புத்தகங்களைப் படித்து இணையத்தைப் பற்றி தெரிந்துகொள். இப்படி அதில் தொலைந்துபோகாதே!” என்றார் அம்மா.

குணாலுக்கு இணையம் ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால், வீட்டில் இருப்பது அதைவிட ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது.

இணையம் என்றால் என்ன?

ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பலவிதமான கணினிகள், அலைபேசிகள் மற்றும் கைக்கணினிகளின் கூட்டிணைப்புதான் இணையம். இது உலகம் முழுவதும் படர்ந்திருக்கும் மிக விரைவான ஓர் அமைப்பு. செப்புக்கம்பிகள், ஒளிநார் இழைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்கள் வழியாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குத் தரவுகளை அனுப்ப இணையம் உதவுகிறது. இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கருவிக்கும் ஒரு தனிப்பட்ட எண் இருக்கும். அதன் பெயர், இணைய நெறிமுறை முகவரி(IP Address).

தரவுகள் எவ்வாறு பயணம் செய்கின்றன?

இணையத்தின் வழியே அனுப்பப்படும் சில தரவுகள்: மின்னஞ்சல்கள், வலைப்பக்கங்கள், காணொளிகள், இணைய அரட்டைகள் மற்றும் புகைப்படங்கள்.

பரப்புதல் கட்டுப்பாட்டு நெறிமுறை என்பது கணினிகள் தரவுகளை பொட்டலங்கள் எனப்படும் பல துண்டுகளாகப் பிரித்து அனுப்புவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளின் தொகுப்பு. அந்தப் பொட்டலங்கள் பின்னர் மீண்டும் ஒன்று சேர்க்கப்படுகின்றன(சரியான வரிசையில்தான்!). இந்த தரவுப் பரிமாற்ற முறையை பொட்டல நிலைமாற்றல்(Pocket Switching) என்கிறோம்.

சுற்று நிலைமாற்றலில்(Circuit Switching) முழு தரவும் ஒரே வழியில் அனுப்பப்படும்.  இது பொட்டல நிலைமாற்றலைவிட திறன் குறைந்த வழிமுறை.