ஆஹா! இந்த இனிய இனிய சுவைமணம் எங்கிருந்து வருகிறது?
இங்கே, இந்தப் பூக்களில் இருந்து வருவது 'கம கம' நறுமணம்!
உவ்வே! இங்கே சாணத்தின் நாற்றம் அதிகமாக இருக்கிறது!
சீச்சீ! என் அழுக்குக் காலுறையில் இருந்து வியர்வையின் கெட்ட நெடி அடிக்கிறது!
ம்ம்ம்! இது லுச்சிபூரி, கிழங்கிலிருந்து வரும் சூடான மசாலாவின் மணம்!
இதோ! அந்தப் புதிய பலகாரக் கடையிலிருந்து இனிய வாசனை வருகிறது!
இந்த இனிய இனிய சுவைமணம் அந்தக் கடையில் தயாராகும் மிகவும் இனிப்பான குலோப் ஜாமூனின் வாசனையாக்கும்!
என் இளம் நண்பர்களே! நமது மூக்கில் வாசனையை முகர்ந்து அறியும் உணர்வு நரம்புகள் உள்ளன. இவை நல்ல வாசனைக்கும் கெட்ட வாசனைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர உதவுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
வாசனையைப் பொருத்து ஒரு பொருளின் சுவையையும் கூட ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.
மேலும், அந்த வாசனை அருகில் இருந்து வருகிறதா அல்லது தொலைவில் இருந்து வருகிறதா என்றும் அறிய முடியும்.
மனிதர்களைக் காட்டிலும் பிராணிகளுக்கு முகரும் திறன் அதிகம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே!
கொசுக்கள் நம் இரத்தத்தின் வாசனையை முகர்ந்து நம்மைக் கண்டுபிடித்துக் கடிக்கின்றன.
இனிப்பான திண்பண்டம் சிறிதே சிந்தினாலும், உடனே எறும்புகள் வரிசையாய் வந்து விடுவதைப் பார்க்கிறோம் அல்லவா? அது எப்படி? அவற்றின் வாசனை முகரும் திறன் வாயிலாகத்தான்!
நாய்களின் சிறந்த மோப்பசக்தி அனைவரும் அறிந்ததே. திருடன் எந்த சந்து பொந்தில் ஒளிந்திருந்தாலும் நாய் கண்டுபிடித்து விடும். இந்த அற்புதத் திறனால் தான் நாய்களை ஆயுத தளவாடங்கள் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கப் பெரிதளவில் பயன்படுத்துகிறார்கள்.
நீ உன் நண்பர்களோடு பூங்காவில் உலாவும் போது நன்றாக மூச்சை இழுத்து ஆழமாக சுவாசித்து ரசிப்பதும், குப்பைத்தொட்டியின் அருகே வரும் போது முகத்தை சுளித்து, மூக்கை அழுத்தி மூடிக் கொள்வதும் ஏன்?
காரணம், நம்மிடம் உள்ள பிரமாதமான முகரும் சக்தியால்தான் என்பது உனக்கும் தெரியும் அல்லவா?