inkoo mendru urinji vizhungukiraal

இன்கூ மென்று, உறிஞ்சி, விழுங்குகிறாள்

பறக்கும் உணவு, தவழும் உணவு, குதிக்கும் உணவு என எந்த உணவாக இருந்தாலும் இன்கூவுக்கு பிரச்சினையே இல்லை. காட்டில் இருக்கும் மற்ற உயிரினங்களைச் சந்திக்கும் இன்கூவின் சாப்பாட்டு சாகசத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்!

- Jeny Dolly

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இன்கூ மர இடுக்கிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். பெரிய இருவாச்சியான அவள் பிறந்து ஒரு வாரமே ஆகியிருந்தது.வூஷ்! வூஷ்! அப்பா மெல்ல வந்து மரத்தின் மீது அமர்ந்தார்.

“இதெல்லாம் நான் விளையாடவா?” என்று கேட்டாள் இன்கூ.“இல்ல. இது அத்திப் பழம். சாப்பிடு” என்றார் அப்பா. ம்ம்ம், ம்ம்ம், நம்ம்ம், நம்ம்ம். “எவ்வளவு பெரிய, சாறுள்ள பழம்! உள்ளே மொறு மொறு குளவிகளோட” என்றாள் இன்கூ.

“அப்பா அலகுல வாலு முளைச்சிருக்கு!” என்றாள் இன்கூ. ஆ!“கத்தாத இன்கூ குட்டி! அது வெறும் பல்லிதான்” என்றார் அம்மா.கசக், கசக்! “ஓ! செதில் செதிலா இருக்கு!”

“என் சாப்பாட்டுக்கு ரெக்கை இருக்கு!” என்று சிரித்தாள் இன்கூ.“வவ்வால்தான் எனக்கும் பிடிச்ச சாப்பாடு” என்றார் அம்மா.கபுக், கபுக். “சவசவன்னு இருக்கு! உள்ள நல்லா கொழகொழன்னு இருக்கு.”

பெரிய புசுபுசு உயிரினம் ஒன்றைப் பார்த்து “ஆஆஆஆ!” என்று வாயைப் பிளந்தாள் இன்கூ. “இதோ பாரு! அணில்” என்று சிரித்தார் அப்பா. சொய்ங், அணில் வாய்க்குள் சறுக்கிச் சென்றது. “கூசுது!”

“இது பாக்க கொஞ்சம் நம்மள மாதிரி இருக்கு” என்று கிசுகிசுத்தாள் இன்கூ. “ஆமா, இது ஒரு குட்டிப் பறவை. இது பேரு புல்புல்.” அபுக், அபுக். “அவ்ளோதான்ன்ன்!” ஏஏஏஏவ்வ்வ்!

“எத்தனை கை, எத்தனை கால்!” என்று கத்தினாள் இன்கூ.“இதுதான் தேள். மரத்தில அடிச்சு மெதுவாக்கி சாப்பிடு” என்றார் அம்மா. டம்! டிஷ்! டொம்! “ஓ! ஐயோ. இன்னும் எவ்ளோ கூர்மையா இருக்கு!”

“இவை என்ன, நீளமான பல்லிகளா?” என்று கேட்டாள் இன்கூ. “இல்ல. இவை பாம்புகள். உறிஞ்சி சாப்பிடு பாப்போம்!” என்று முகம் நிறைய சிரிப்போடு சொன்னார் அம்மா. ஊஷ், ஊஊஷ், ஊஊஊஷ். பாம்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போயின. “எவ்ளோ ஜாலி! பாம்புதான் எனக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடுன்னு நினைக்கிறேன்.”

சீக்கிரமே பெரிதாக, வலிமையாக வளர்ந்த இன்கூ தன் கூட்டைவிட்டு பறந்து சென்றாள். ஒவ்வொரு கிளையாக குதித்துக் குதித்து, தாவித் தாவிச் சென்றாள்.காட்டைக் கண்டறிந்து தன் உணவைத் தானே தேடிக்கொள்ள உற்சாகத்துடன் இருந்தாள்.

பளபளப்பான பெர்ரிகள். வழவழப்பான தவளைகள். குதிக்கும் வெட்டுக்கிளிகள். இன்னைக்கு இன்கூ எதைக் கண்டுபிடிக்கப் போறா?

பெரிய இருவாச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பெரிய இருவாச்சிதான் இந்தியாவில் இருக்கும் பறவை வகைகளிலேயே மிகப் பெரியது. வளர்ந்த இருவாச்சிகள் மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை இருக்கும் – ஏறக்குறைய உங்கள் உயரம்! இன்கூவின் பெற்றோர் பெருத்த, திடமான மரத்தில், ஒரு பெரிய பொந்தைக் கண்டுபிடித்தார்கள். அம்மா அதனுள் நுழைந்து, தன் இறகுகளை உதிர்த்தார். ஏனென்றால் அவர் அந்தக் கூட்டிலிருந்து நான்கு மாதங்களுக்கு வெளியேறப் போவதில்லை. அம்மாவும், அப்பாவும் சின்ன இடுக்கை மட்டும் விட்டுவிட்டு வாயிலை அடைத்தனர். இங்குதான் இன்கூ முட்டையிலிருந்து வெளியே வந்தாள். இந்தக் கூட்டிற்குள்ளேயே ஏறக்குறைய 10-12 வாரங்கள் இருந்தாள், கொஞ்சம் பெரியவளாகும் வரை. கூடுகட்டும் காலத்தில் அப்பா இருவாச்சிகள் ஓய்வின்றி இருப்பார்கள். ஏனென்றால், அம்மா இருவாச்சிகளால் கூட்டிலிருந்து வெளியேற முடியாது. அப்பா இருவாச்சிகள்தான் வெகு தூரம் சென்று, சுவைமிக்க, சத்தான, வகை வகையான உணவுகளை குஞ்சுக்கும், அம்மாவுக்கும் கொண்டு வருவர். ஏனெனில் அம்மாவும், குஞ்சும் எப்போதும் பசியோடிருப்பார்கள்.