நான் பாட்டியைக் கேட்டேன், "இந்த லட்டுக்களை சாப்பிடலாமா?" "இப்பொழுது சாப்பிடக் கூடாது, கண்ணா, நாளைக்கு சாப்பிடலாம்." ஆனால் நான் நாளை வரை காத்திருக்க விரும்பவில்லை.
நான் தாத்தாவைக் கேட்டேன்,
"என் நண்பர்களுடன் விளையாட வெளியே போகட்டுமா?"
"இப்பொழுது போகக் கூடாது, கண்ணா! தூங்கி எழுந்த பின் போகலாம்." ஆனால் நான் தூங்கி எழும் வரை காத்திருக்க விரும்பவில்லை.
நான் அம்மாவைக் கேட்டேன், "இந்த புதிய ஆடைகளை போட்டுக் கொள்ளவா?"
"இப்பொழுது போடக் கூடாது, கண்ணா! வெளியே போகும்போது." ஆனால் நான் வெளியே போகும்வரை காத்திருக்க விரும்பவில்லை.
நான் அப்பாவைக் கேட்டேன், "இந்த அழகான பெட்டியைத் திறக்கலாமா?"
"இப்பொழுது பிரிக்கக் கூடாது, இப்பொழுது பிரிக்கக் கூடாது. பொறுமையாகக் காத்திரு." ஆனால் நான் இன்னும் காத்திருக்க விரும்பவில்லை.
பெரியவர்கள் ஏன் எப்போதும் ‘இப்பொழுது கூடாது, இப்பொழுது கூடாது’ என்று சொல்கிறார்கள்?
அந்த இரவு, நான் கோபமாகத் தூங்கச் சென்றேன்.
அடுத்த நாள், நான் சீக்கிரமாக எழுந்து
சமையல் அறைக்கு சென்றேன். "இப்பொழுது நீ லட்டு சாப்பிடலாம்" என்றார் பாட்டி.
"இப்பொழுது நாம் கிரிக்கெட்
விளையாடலாம்" என்றார் தாத்தா.
"இப்பொழுது நீ இந்தப் புதிய ஆடைகளை போட்டுக் கொள்ளலாம்" என்றார் அம்மா.
"இப்பொழுது நீ இந்தப் பெட்டியைத்
திறக்கலாம்" என்றார் அப்பா.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்!" என்றனர் எல்லோரும்.