iruppathileye sirantha pommai veedu

இருப்பதிலேயே சிறந்த பொம்மை வீடு

மூசிக்கு தன் பொம்மைகளை வைத்து வீடு கட்டப் பிடிக்கும். ஆனால் அவற்றை விட்டுவிட்டு உகோகோ வீட்டுக்குப் போகும்போது, சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றி சில ஆச்சரியங்களைத் தெரிந்துகொள்கிறான். தன்னைப் பற்றியும்தான்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மூசிக்கு கட்டுவதும், பொருட்களை உருவாக்குவதும் பிடிக்கும். இருப்பதிலேயே சிறந்த ஒரு வீட்டைக் கட்டவேண்டுமென கனவு காண்கிறான்.

ஒருமுறை, தன் பொம்மைகளுக்காக ஒரு வீடு கட்டினான்.

ஆனால், அது இருப்பதிலேயே சிறந்ததாக இருக்கவில்லை.

நேற்று, தன் விலங்கு நண்பர்களுக்காக ஒரு பாலம் கட்டினான்.

அது நன்றாகத்தான் இருந்தது.

ஆனால், இருப்பதிலேயே சிறந்ததெல்லாம் இல்லை...

இன்று மூசி உகோகோவைப் பார்க்கப் போகிறான்.

அவன் சோகமாக இருக்கிறான்.

அவனுடைய பொம்மைகள் இல்லாமல், எப்படி இருப்பதிலேயே சிறந்த வீட்டை அவனால் கட்ட முடியும்?

பேருந்து நிலையத்தில் மூசிக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

அவன் சிகப்புப் பொருட்களையும் நீலப் பொருட்களையும் பார்க்கிறான்.

பெரிய பொருட்கள், குட்டி பொருட்களைப் பார்க்கிறான்.

இருப்பதிலேயே சிறந்ததைக் கட்ட மூசிக்கு ஒரு புதிய யோசனை கிடைத்தது.

உகோகோ வீட்டுக்குப் போகும் வழியில், மூசி பல பொருட்களை சேகரித்தான்.

நீளமானவை, சிறியவை.

உருண்டையானவை, சதுரமானவை.

ஆற்றங்கரையில், மூசிக்கு இன்னும் பல பொருட்கள் கிடைத்தன.

மென்மையானவை, கூரானவை.

பச்சையானவை, பழுப்பானவை.

”மூசி! நாம ஒருவழியா உகோகோ வீட்டுக்கு வந்துட்டோம்.”

உகோகோ பசியோடு வந்திருக்கும் இருவருக்கும் கேக் தயாரிக்கிறார்...

மூசி கட்டத் தொடங்குகிறான்.

இதோ பாருங்க உகோகோ, உங்களுக்காக ஒரு புது வீடு!

உகோகோ, உகோகோ! இந்த உலகம் முழுக்க பொம்மைகளா இருக்கு. பாருங்க, அதை வைச்சு நான் என்ன கட்டியிருக்கேன்னு!

என்றான் மூசி.