எல்லா குழந்தைகளும் வளர்ந்தபின் “இதுவாகுவேன், அதுவாகுவேன்” என்று பல திட்டங்களை வைத்திருப்பார்கள். ஆனால் ஜுனைத் அப்படி அல்ல. அவன் ஏற்கனவே உலகின் மிகச்சிறந்த ஹீரோவாக இருந்தான். பெரும்பாலான சூப்பர் ஹீரோக்களுக்கு தங்கள் ஜட்டியை எங்கே போட வேண்டும் என்று தெரியாது. ஆனால் ஜட்டியை எங்கே போட்டால் நன்றாக இருக்குமென நம் ஜுனைதுக்குத் தெரியும்.
அப்படிப் போட்டால் கிடைப்பவை: 1) ஒரு சூப்பரான ஆடை 2) யாருக்கும் தெரியாத மாறுவேடம் 3) அருமையான சூப்பர் ஹீரோ பெயர்: ஜட்டித் தலையன்
ஜட்டியை தலையில் போடவேண்டும்.
அருமையான ஜட்டிகளுடன் அபாரமான வாய்ப்புகளும் வருகின்றன. பாட்டிக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களைப் போல, ஜுனைத் எப்பொழுதும் ஒரே ஜட்டியையே அணிவதில்லை. ஒவ்வொரு சாகசத்துக்கும் பொருத்தமான ஜட்டிகள் வைத்திருக்கிறான் அவன்.
வீட்டில் எல்லோரும் தூங்கும்போது ஜுனைத் ரகசியமாக அடுப்படிக்குப் போகவேண்டுமென்றால், அதற்கு எந்த ஜட்டி வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். கருப்பு ஜட்டித்தலையன் ஒரு நிஞ்சா. அவன் நடுராத்திரியில் சாக்லேட் லட்டுகள் தின்பான்.
ஜுனைதுக்கு காய்கறிகள் பிடிக்காது. ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவருக்கும் காய்கறிகள் பிடிக்கும். அப்பாவுடன் சந்தைக்குப் போகும்பொழுது அவன் ஒரு மிக முக்கியமான முடிவை எடுக்கவேண்டும். ஜுனைத் தினமும் ஒரு காய்கறியாவது சாப்பிட்டே ஆக வேண்டும். அது எந்தக் காய் என்று ஜட்டித்தலையன் தேர்ந்தெடுப்பான்.
ஜுனைதிற்கு கேரட் சாப்பிடத் தோன்றும்போது சிகப்பு ஜட்டித்தலையன் சந்தைக்குப் போவான்.
ஊதா ஜட்டித்தலையன் கத்தரிக்காய் மட்டுமே சாப்பிடுவான்.
ஆரஞ்சு ஜட்டித்தலையனுக்கு பூசணிக்காய் மீது பிரியம் அதிகம்.
ஆனால் வெள்ளை ஜட்டித்தலையன் மட்டும் சந்தைக்குப் போகவே மாட்டான்!
ஏனென்றால் காலிபிளவர்கள், ஜட்டித்தலையனின் சக்தியை அழிப்பதற்கு அவனுடைய எதிரிகள் பயன்படுத்தும் தீயசக்தி நிறைந்த குட்டி மரங்கள்.
ஜுனைதிடம், அவனது பள்ளி சீருடைக்குப் பொருத்தமாக, ஒரு அருமையான மஞ்சள் கட்டம் போட்ட அரக்கு ஜட்டி இருந்தது. ஆனால் ஜட்டித்தலையனுக்குத் துணையாக வர யாரும் தயாராக இல்லை! ஜுனைதின் பள்ளித்தோழர்கள் எல்லாம் பாட்டியின் ”தினமும்-ஒரே-கலர்-ஜட்டி” சூப்பர்ஹீரோக்களைப் போல அலுப்பூட்டுபவர்கள் என்று நினைக்கிறார் அப்பா. ஆனால், ஒருநாள் உலகின் மிகச்சிறந்த இன்னொரு சூப்பர்ஹீரோ ஜட்டித்தலையனுக்குத் துணையாகக் கிடைப்பார்கள் என்று அம்மாவுக்குத் தெரியும்.
சில நேரம் ஏதாவதொரு உயிரினத்தைத் துணையாக வைத்துக் கொள்ளலாம் என்று ஜுனைத் யோசிப்பான். சாம்பல் நிற ஜட்டித்தலையன் பக்கத்து வீட்டுப் பூனையுடன் பேசிப் பார்த்தான்.
ஆனால் அந்தப் பூனைக்கு வேறு திட்டங்கள் இருந்தன.
ஜுனைதின் அம்மாவுடன் பயணிப்பது அதைவிட ஆபத்தானது. ரயிலில் இருக்கும் பெண்களுக்கு அவன் கன்னத்தைக் கிள்ளுவது ரொம்பப் பிடிக்கும். அதனால் நீல ஜட்டித்தலையன் சன்னலுக்கு அருகில் அமர்ந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து கொள்வான்.
பூங்காவில் ஜுனைத் ஒரு ஆராய்ச்சியாளன் ஆகிவிடுவான். பெரியவர்களின் நடவடிக்கைகளை ஆராய்வான். வண்ணப்பூக்களால் மூடியிருக்கும் புதரோடு புதராகக் காட்சியளிப்பான். ஆனால், இன்று பூங்காவில் மிக வினோதமாக இருந்தது பெரியவர்கள் அல்ல.
(ஒருவழியாக) ஜட்டித்தலையன் உலகத்தைக் காப்பாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டதா? “உங்களால் என்னிடமிருந்து தப்பிக்கவே முடியாது. ஹாஹாஹா!”
அந்த வில்லத்தனமான சிரிப்பு சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினான் ஜட்டித்தலையன்.
உதவி!
உதவி!
அந்தச் சத்தம் கார்ட்போர்ட்-போர்வைக் கோட்டையிலிருந்து வந்தது.
“உங்களைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை!”
ஜட்டிதலையன் தவழ்ந்து கோட்டைக்குள் நுழைந்தான். “அவர்களைப் போக விடு!” என்றான்.
கோட்டைக்குள் ஒரு சிறுமி இருந்தாள். தான் சிறை வைத்தவர்களைப் பார்த்தபடி உயரத்தில் இருந்தாள். “யார் நீ?” என்று அவள் கேட்டாள்.
“நான் ஜட்டித்தலையன், உலகின் மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ. நீ யார்?” என்றான்.
“நான் ராணி கம்பளி, போர்வைகள் ராஜ்ஜியத்தின் அரசி. அண்ட சராசரத்திலேயே மிக பயங்கரமான சூப்பர் வில்லி” என்றாள்.
“நான் உங்களை விடுவிக்கிறேன்” என்று ராணியின் கைதிகளிடம் ஜட்டித்தலையன் சொன்னான்.
“இல்லை, நீங்கள் எங்கேயும் போகப் போவதில்லை“ என்று ராணி கம்பளி மறுத்தாள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே ஒரு வழிதான் உள்ளது.
ஜட்டித்தலையன் ஒரு மரக்கிளையை எடுத்துகொண்டான். ராணியை நோக்கி அந்த மர வாளோடு ஓடினான். “ஆ ஆ ஆ ஆ ஆ!”
ராணி, தன்னுடைய சூப்பர் போர்வையைக் கொண்டு அவனைத் தடுக்கி விழ வைத்தாள். “ஹாஹாஹா!”
ஜட்டித்தலையன் கீழே விழுந்துவிட்டான். ஆனாலும் தோற்கவில்லை. தன்னுடைய கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தினான்.
அவன் ஜட்டி ஏவுகணையை ஏவினான். அதுதான் தப்பாகிவிட்டது. ராணி கம்பளி, அதை கிரீடமாக போட்டுக்கொண்டு அவன் சக்திகளை எல்லாம் திருடிவிட்டாள்.
தன் சூப்பர் போர்வையை வீசி, ஜட்டித்தலையனைப் பிடித்து அவன் மேல் உட்கார்ந்துகொண்டாள். இப்போது ஜட்டித்தலையனும் கைதியாகி விட்டான்!
“காவ்யா! நேரமாச்சு, வீட்டுக்குப் போகலாம்,வா!” என்று வெளியிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“இந்தச் சண்டையில் நீ ஜெயித்திருக்கலாம், ராணி கம்பளி. ஆனால், போரில் நான்தான் ஜெயிப்பேன்” என்றான் ஜட்டித்தலையன். “நாளை என் கோட்டையில் இன்னும் நிறைய பேரை அடைத்து வைப்பேன்” என்றாள் ராணி கம்பளி. “நான் அவர்கள் எல்லோரையும் விடுவிப்பேன்.” “நான் உன்னை மறுபடியும் தோற்கடிப்பேன்!” “அடுத்தமுறை யார் ஜெயிக்கிறார்கள், பார்க்கலாம்” என்றான் ஜட்டித்தலையன். “பார்க்கலாம். இதே நேரம், இதே இடம்!” என்று அறிவித்தாள் ராணி கம்பளி.
வீட்டுக்குப் போகும் வழியில் ஜுனைத் சிரித்துக்கொண்டான். துணைக்கு இன்னொரு சூப்பர் ஹீரோ இருந்திருந்தால் ஜாலியாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அண்டசராசரத்தின் மிகச்சிறந்த சூப்பர் வில்லி இருக்கும் அளவு ஜாலியாக இருந்திருக்காதே!