jor mazhe vaa vaa

ஜோர் மழை வா, வா!

அப்பா ஆபீஸுக்குப் போகும்போது ஒரு நாள் மழை வந்தது. பாட்டி மழைக்கு ஒரு பாட்டுப் பாடினாள். என்ன பாட்டு அது? கதையைப் படியுங்கள். நீங்களும் பாடுங்கள்!

- Ranjani Narayanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது என்னுடைய அப்பா.

அப்பா எப்பவும் நன்றாக உடை உடுத்திக் கொள்வார். கண்ணாடி அணிந்திருப்பார். பான்ட், சட்டை போட்டிருப்பார். சட்டையின் மேல் ஸ்வெட்டர் போட்டுக் கொள்வது அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும். அப்போ அப்பா  இன்னும் அழகாக இருப்பார்!.

ஒருநாள் அப்பா ஆபீஸ் கிளம்பும் போது மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. நல்ல மழை. எங்களுக்கு ரொம்பவும் குஷியாகி விட்டது.

அப்பா தினமும் மோட்டார் சைக்கிளில் தான் அலுவலகம் செல்லுவார். மழையில்  அப்பாவால் எப்படி மோட்டார் சைக்கிளில் செல்ல முடியும்?

குடையை எடுத்துக்கொண்டு பேருந்துவில் போகலாம் என்று நினைத்தார் அப்பா. ஆனால் எத்தனை தேடினாலும் வீட்டில் குடை கிடைக்கவில்லை!

என் அக்கா வீட்டை விட்டு வெளியே வந்து மழையில் விளையாட ஆரம்பித்தாள்.

மழையில் ஒரு தவளை குதித்து குதித்து விளையாடியதைப் பார்த்த என் தம்பியும் வீட்டிற்கு வெளியே வந்து மழையில் விளையாட ஆரம்பித்தான். அவன் பின்னால் பாருங்கள் ஒரு நத்தை! அதன் முதுகில் அழகான அதன் வீடு!

அப்பாவிற்கு எப்படி ஆபீஸ் போவது என்று புரியவில்லை. கோபம் கோபமாக வந்தது.  பாவம் அப்பா!

எனக்கு என் அக்காவும், என் தம்பியும் மழையில் விளையாடுவதைப் பார்த்து ரொம்பவும் சிரிப்பு சிரிப்பாக வந்தது!

அம்மாவும் "என்ன, இப்படி மழை பெய்கிறது?" என்று சொல்லிக்கொண்டே மழை பெய்வதை வேடிக்கைப் பார்த்தாள்!

தாத்தா புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

வெளியே மழையில் அக்காவும், தம்பியும் விளையாடுவதைப் பார்த்து சிரித்தார்!

பாட்டி குட்டிப் பாப்பாவை எடுத்துக் கொண்டு வந்தாள். "குட்டி! மழை  பாரு மழை....!" என்று பாப்பாவுக்கு மழையைக்  காண்பித்துக் கொண்டே பாட்டி பாடினாள்:

"ஜோர் மழை வா, வா!

கொட்டைப்பாக்கு நறுக்கித் தரேன்!

கோவில் மண்ணை சலிச்சுத் தரேன்!

ஜோர் மழை வா! வா!"

கொஞ்ச நேரத்தில் மழை நின்று சூரியன் வெளியே வந்தது!  அப்பாவின் முகத்தில் சிரிப்பு வந்தது!

அப்பா ஆபீஸுக்குக் கிளம்பிவிட்டார்!

மழை போயி வெய்யில் வந்தது டும் டும் டும்!