காட்டைப் பார்க்கவேண்டும் என்று துல்சா ஆசைப்பட்டாள். வகுப்பில், புலிகளைப் பற்றிய சில கதைகளை அவளுடைய ஆசிரியர் வாசித்துக் காட்டுவார். துல்சாவுக்கு காடுகளைப் பற்றியும் மிருகங்களைப் பற்றியும் கேட்பதென்றால் மிகவும் பிடிக்கும்.
ஒரு நாள் துல்சாவின் ஆசை நிஜமானது!
ஆம்! துல்சாவையும் அவளுடைய நண்பர்களையும் கரெ சாச்சா என்ற ஒரு மூத்த வனத்துறை அதிகாரி, கன்ஹா புலிகள் காப்பகத்திற்கு வரச்சொல்லி அழைத்தார். அதைக் கேட்டதும், அவர்களால் பல் தெரிய சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் ஒருநாள் பகல் மற்றும் ஒரு இரவு முழுவதும் அந்தக் காட்டிலேயே இருக்கலாம்.
பள்ளியிலிருந்து நான்கு மணிநேர பயணத்திற்குப் பிறகு அவர்களுடைய பேருந்து காட்டை அடைந்தது. துல்சா பேருந்திலிருந்து இறங்கினாள். ஒரு வலுவான கரம் அவளுடைய கையைப் பற்றிக் குலுக்கியது; அவளுடைய தலைமுடியைச் செல்லமாகக் கலைத்துவிட்டது.
கரெ சாச்சாவின் கரம்தான் அது. “கன்ஹாவுக்கு நல்வரவு!” என்றார்.
துல்சாவும் அவளுடைய தோழிகளான ராணி, மித்து மற்றும் தீப்தி ஆகிய நால்வரும் ஒன்றாகவே இருந்தார்கள். “நன்றாக முகர்ந்து பாருங்கள். மரங்கள் மற்றும் இலைகளின் வாசனை அடிக்கிறது” என்றாள் மித்து.
“காற்று மிகவும் சுத்தமாக இருக்கிறது. யாரோ அதை சோப்புப் போட்டுத் துவைத்தது போல!” என்றாள் ராணி.
சூரியன் மறையப்போகும் நேரம். கரெ சாச்சாவும் மற்ற அதிகாரிகளும், மறுநாள் அவர்கள் பார்க்கப் போகும் காட்டைப்பற்றிச் சொன்னார்கள். பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகளின் குரல்களை ஒலிக்கவிட்டு அடையாளம் காண உதவினார்கள்.
“பியான்! பியான்!”“அட, மயில்!”
“ஔ! ஔ!” “எனக்குத் தெரியும், இது குரைக்கும் மான்!”
“க்கீ! க்கீ!” “இது கிரிக்கெட் பூச்சிகளின் ஒலி.”
மறுநாள், துல்சா அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டாள். ப்ர்ர்ர்...! என்னவொரு குளிர்! துல்சாவும் அவளுடைய தோழிகளும் கதகதப்பான உடைகளை அணிந்துகொண்டார்கள். ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏறினார்கள். “நம்மைச் சுற்றிலும் இங்கே உயரமான புற்கள் வளர்ந்திருக்கிறன. அவற்றை பனிப்போர்வை மூடியிருக்கிறது” என்றார் அவர்களின் வழிகாட்டியான ரண்வீர் மாமா.
துல்சா தன் வாயில் குளிர்ச்சியான, தூய்மையான காற்றை உணர்ந்தாள். அது புதினா இலையைப் போன்ற சுவையோடு இருந்தது.
“உஷ்ஷ்ஷ்! நம் வண்டிக்குப் பக்கத்தில் இரண்டு குள்ளநரிகள் உள்ளன” என்று கிசுகிசுத்தார் ரண்வீர் மாமா. எல்லோரும் காதுகளைத் தீட்டி கவனமாகக் கேட்டார்கள். உயரமான புற்கள் சலசலக்கும் ஓசை கேட்டது. அந்தக் குள்ளநரிகள் அடர்ந்த காட்டுக்குள் மெதுவாக ஓடும்போது அவற்றின் கால்களின் கீழே காய்ந்த இலைகள் சரசரவென நொறுங்கின.
ரண்வீர் மாமா மீண்டும் கிசுகிசுப்பாக, “சாலையின் இடதுபக்கம் ஒரு பெரிய கடமான் நிற்கிறது. பழுப்புநிறத்தில் இருக்கும் இந்த மானின் தலையில் பெரிய தண்டுகளைப் போன்ற பெரிய கொம்புகள் இருக்கின்றன” என்றார். உடனே, எல்லாருடைய கவனமும் இடதுபக்கம் சென்றது.
“ஹாங்க்! ஹாங்க்!” அந்தக் கடமான் இப்போது ஓடிவிட்டது. “இந்த மானின் குரல் மிகப்பெரிய ஒலிப்பானைப் போல் கேட்கிறது!” என்றாள் துல்சா. எல்லாரும் சிரித்தார்கள்.
பேருந்து அங்கிருந்து நகரத் தொடங்கியது. சிறிது நேரத்தில், காற்றில் குளிர் அதிகரித்தது. “நாம் இப்போது ஒரு நதியின் அருகில் இருக்கிறோம்” என்றார் ரண்வீர் மாமா. துல்சாவிற்கு நீர் சலசலத்து ஓடும் ஓசை கேட்டது. அருகிலிருந்த மரங்களிலிருந்து பல பறவைகள் சத்தமெழுப்பிக் கொண்டிருந்தன.
ட்வீஈ! ட்வீஈ! “இது சீழ்க்கை ஒலி!” என்றாள் ரஷ்மி.
“ஆமாம் ரஷ்மி, இது பூங்குருவியின் அழைப்பு” என்றார் ரண்வீர் மாமா. கீச்! கீச்! “நீங்கள் கேட்கும் இந்தக் கீச்சிடும் ஒலி, காட்டுச் சிலம்பன் அழைக்கும் ஒலி.”
சில மென்மையான இலைகள் மேலிருந்து விழுந்தன. குரங்குக் குட்டிகள் இலைகளைப் பறித்துப் போடுகின்றன!துல்சா தன் மீது விழுந்த ஓர் இலையை எடுத்தாள். அது அந்தக் காட்டைப் போலவே புத்தம்புதிதாகவும் தூய்மையாகவும் மணம் வீசியது.
பேருந்து மலைமேல் ஏறத் தொடங்கியது.
“இந்தக் கொடியைப் பிடித்துப்பாருங்கள். ஒரு வலுவான கயிற்றைப்போல இருக்கிறதல்லவா? இதன் இலைகளோ பஞ்சுபோல் மென்மையாக உள்ளன” என்றார் ரண்வீர் மாமா. அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் கொடியைப் பிடித்து உணர்ந்தார்கள்.
“இதன் பெயர் காட்டுச்சீரக வள்ளி. இதன் இலைகளைக்கொண்டு சிறிய கிண்ணங்களைச் செய்வார்கள்” என்று விளக்கினார் ரண்வீர் மாமா.
“பியான்! பியான்!” “உங்கள் வலதுபக்கம் ஒரு மயில் வந்திருக்கிறது,” என்று உற்சாகத்தோடு சொன்னார் ரண்வீர் மாமா.
“அந்த மயில் நடனமாடுகிறானா?” என்று கேட்டாள் துல்சா.
“ஆமாம்! இந்தக் குளிர்கால சூரிய ஒளியில் மயிலின் தோகை மினுமினுக்கிறது. அது ரத்தினங்களைப் போல பளபளக்கிறது” என்றார் ரண்வீர் மாமா.
“அழகோ அழகு!” என்றாள் துல்சா.
இப்போது எல்லோருக்கும் பசியாக இருந்தது. வனமுகாமில் காலை உணவு உண்பதற்காக இறங்கினார்கள். அப்போது, அங்கே வந்த கரெ சாச்சா, ஒரு ஆச்சரியமான தகவலைச் சொன்னார். “நம்முடைய முகாமிலிருந்து சில யானைகள் இங்கே வந்திருக்கின்றன. நீங்கள் அவர்களை மெதுவாகத் தொட்டால் ஒன்றும் செய்ய மாட்டார்கள்” என்றார். சிறுமிகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். சீக்கிரமே தாரா என்ற யானையின் அருகே துல்சா அழைத்துச் செல்லப்பட்டாள்.
வழிகாட்டி துல்சாவின் கையை எடுத்து தாராவின் குத்தும் மயிர் இருந்த வயிற்றின் மீது வைத்தார். தொம்! தாராவின் கால் நகரும் ஒலியை துல்சா கேட்டாள். அவளால் தன் கைகளின் கீழிருந்த வலுவான தசைகளை உணர முடிந்தது. தாரா மெதுவாகப் பிளிறிக்கொண்டே தும்பிக்கையை துல்சாவின் கையில் வைத்து, உணவுக்காகத் தேடினாள். ஈரமான தும்பிக்கையை உணர்ந்த துல்சாவால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
திரும்பிச் செல்லும் நேரம் வந்துவிட்டது. வழியில், ஒரு காட்டெருமை இருப்பதைத் தெரிவித்தார் ரண்வீர் மாமா. “அது புல்லை மென்று கொண்டிருக்கிறது. அதன் உடல் கருப்பாக இருக்கிறது. ஆனால் காலின் கீழ்ப்பகுதி மட்டும் வெள்ளையாக இருக்கிறது. அநேகமாக அது காலுறை அணிந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று வேடிக்கையாகச் சொன்னார் ரன்வீர் மாமா. உடனே, எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். காலுறை அணிந்த காட்டெருமை? ஹாஹாஹா!
திடீரென்று, ஒரு அழுத்தமான பெரிய ஒலிகாற்றைப் பிளந்தது.
ஆஹூன்! மீண்டும் அதே ஒலி கேட்டது.
“புலி மிகத் தூரத்தில் உள்ளது. ஆனால், அது உங்களைப் பார்த்துவிட்டது போலும்! அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக இப்படி உறுமுகிறது” என்று விளக்கினார் ரண்வீர் மாமா.
மகிழ்ச்சி மனம் நிறைக்க, துல்சாவும் அவளது நண்பர்களும் அந்தக் காட்டைவிட்டு வெளியே வந்தனர். காட்டை உணர்ந்து அனுபவிக்க பல வழிகள் இருக்கின்றன! கன்ஹா புலிகள் காப்பகத்திற்கு விரைவிலேயே அவர்கள் மீண்டும் வர ஆசைப்பட்டனர்.
இது ஓர் உண்மைக்கதை!
ஜனவரி 2017ல், ‘லாஸ்ட் வைல்டெர்னெஸ்’ அறக்கட்டளையும் கன்ஹா வனத்துறையும் இணைந்து, ஜபல்பூரில் இருக்கும் 'அனன்யா மானவ் சாய் சமிதியை’ச் சேர்ந்த 23 பார்வையற்ற மாணவர்களுக்கு ஒரு சிறப்பு முகாமை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதில் அவர்கள் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் தங்களுடைய பிற அற்புதமான புலன்களைப் பயன்படுத்தி காட்டை உணர்ந்து அனுபவித்தனர்.
‘லாஸ்ட் வைல்டெர்னெஸ் அறக்கட்டளை’யானது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு வனவாழ்க்கை மற்றும் உயிரியல் வேறுபாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பை உணர வைப்பதற்காகவும் பணியாற்றிவருகிறது.
மேலும் விவரங்களை இந்த இணையத்தளத்தில் காணலாம். www.thelastwilderness.org