காளி வீரபத்திரன், மீன்பிடிக்கும் கிராமமான கோவளத்தின் நாயகன். அவர் ஒரு நடிகர் அல்ல.அவர் வில்லன்களை எதிர்த்து போராடியவரும் அல்ல. அவர், நடனமாட கற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் நாயகன் ஆனார்.
அது 2000–ம் ஆண்டு, காளிக்கு எட்டு வயது. பல சிறுவர்களைப் போலவே, அவனும் பள்ளிக்குச் சென்றான், அவனது நண்பர்களுடன் விளையாடினான், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தான்.
ஆனால் பல சிறுவர்களைப் போலன்றி காளி, நடனமும் ஆடினான். தொலைக்காட்சியில் பத்மினி நடனமாடுவதைப் பார்க்க காளிக்கு மிகவும் பிடிக்கும்.
பத்மினி ஒரு பிரபல நடிகை மற்றும் ஒரு அற்புதமான நடனக்கலைஞர். காளி, கால்களில் சலங்கை கட்டிக்கொள்வது போல பாவனை செய்து கொண்டு பத்மினியைப் போலவே பரத நாட்டியம் ஆடுவான்!
தரி தன ஜொனு திமி தக தரி கிட தக ததிங்கிணத்தோம், ததிங்கிணத்தோம், ததிங்கிணத்தோம்,
காளியின் நடனத் திறைமையைப் பார்த்த அவனுடைய ஆசிரியர்கள் அவனைப் பள்ளி கலைநிகழ்ச்சிகளில் நடனமாடச் சொல்வார்கள். விரைவில், அவன் அந்த சிறிய மீன்பிடி கிராமத்தில் ஒரு பரதநாட்டியக் கலைஞனாக புகழ்பெற்றான். ஒரு நாள், சென்னையில் ஒரு மருத்துவமனையை நிர்வகிக்கும் சாரா சந்தா என்பவர் காளி மேடையில்நடனமாடுவதைப் பார்த்தார்.
தையும் ததத் தையும் தாதையும் தத்த தையும் தா
அவர் அந்த சிறுவனின் திறமையைக் கண்டு ஆச்சரியப்பட்டார், சுயமாகக் கற்றுக்கொண்டு ஆடும் அவனது வளர்ச்சிஅவர் மனதைத் தொட்டது
அன்று காளியின் நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிறகு, “பரதநாட்டியம் கற்றுக் கொள்ள விரும்புகிறாயா?” என்று அவனைக் கேட்டார் சாரா. காளி முதலில் சிரித்தான். நடனம் கற்கவா? தலித் சமூகத்தினருக்கு நடனம் கற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. அதிலும் பரத நாட்டியத்தைக் கற்று அதில் தேர்ச்சி பெறுவதா? காளியின் குடும்பத்தில், நடன வகுப்புகளுக்குக் செலவிட போதுமான பணம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அதிலும், ஆண்கள் நடனமாடுவதைத் தொழிலாகக் கொண்டிருப்பதை யாரும் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறார்களா, என்ன? ஆனால் சாரா இதில் தீவிரமாக இருந்தார்.
“காளி! நீ சரியான நாட்டியப் பள்ளியில் பரதநாட்டியம் படிக்க வேண்டும். அதற்கான பள்ளிக் கட்டணத்தை நான் கட்டுகிறேன்.” என்று அவர் கூறினார்.
நாட்டின் சிறந்த நடனப்பள்ளிகளில் ஒன்றான கலாக்ஷேத்ராவை காளி பார்ப்பதற்கு சாரா ஏற்பாடு செய்தார். அது சென்னையில், மரங்கள் நிறைந்த ஒரு அழகான இடமாகும்.
புகழ்பெற்ற பாரதநாட்டியக் கலைஞரும் கலாஷேத்ராவின் அன்றைய தலைவருமான லீலா சாம்சன் காளியை நடனமாடிக் காண்பிக்கச் சொன்னார்.
காளி தனது கால்சராயின் மேல் ஒரு புடவையை தாறுமாறாகச் சுற்றிக்கொண்டு ஒரு திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடினான்.
ஒரு சாஸ்திரீய நாட்டியக் கலைஞர் ஆகும் சாத்தியம் அவரிடம் இருப்பதாக ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஆனால் காளிக்கு தான் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று தானாக முடிவு செய்யத் தெரியவில்லை. ஒரு நடிகர், ஒரு கலெக்டர், ஒரு ஆசிரியர், ஒரு பயோடெக்னாலஜிஸ்ட் அல்லது ஒரு நடனக்கலைஞர்? அவனது நண்பர்களோ, குடும்பத்தினரோ முடிவு எடுக்க உதவும் நிலையில் இல்லை.
“நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி பணம் சம்பாதித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா, என்ன? இது நேரத்தை வீணாக்கும் வேலை!” என்று காளியின் மாமா உறுமினார்.
“பெண்கள்தான் நடனமாடுவார்கள்! நீ பெண்போல மாறிவிடுவாய்”, என்று அவனது நண்பர்கள் அவனை கேலி செய்தார்கள்.
காளியின் மனம் எதை விரும்புகிறது என்று அவரது அம்மா கேட்டார். “நீ நடனம் ஆட விரும்புகிறாயா? உனக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறதா? இதைத்தான் எப்போதும் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?”
“ஆமாம்! எனக்கு மிகவும் பிடித்தது நடனம்தான் அம்மா, அதுதான் எல்லாமே எனக்கு!” என்று அவன் பதிலளித்தான்.
“உனக்கு இது மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தால் யார் சொல்வதையும் கேட்காதே. நடனம் கற்றுக் கொள்” என்றார். வழக்கம் போல, அம்மாவிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது.
எனவே, பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்த பிறகு காளி தக்ஷிணசித்ராவில் மூன்று வகை கிராமிய நடனங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.
ஒயிலாட்டம்.திம்தநகடி நக தன தினா திம்தநகடி நக தன தினா
தப்பாட்டம்.தக் குக்கு தக் குக்குடு த குக்குக்கு தாத தக் குக்கு தக் குக்குடு த குக்குக்கு தாத
கரகாட்டம்.தத்த டகுனா, டகுனா தத்த டகுனா, டகுனா
அடுத்த மாதம், காளி கலாக்ஷேத்ராவில் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். பள்ளியில் முதல் சில நாட்கள் அச்சத்தோடும் அமைதியாகவும் கழிந்ததன. அதிகமாகப் பயிற்சி செய்தபோது, அவன் கால்கள் வலித்தன. அவன் அம்மாவிடம் அழுவான். அப்போது அம்மா, “நீ எருமைகளை மேய்க்க விரும்புகிறாயா? ” என்று கடுமையாகக் கேட்பார். “இல்லை!” “அப்படியானால் திரும்பிப்போய், செய்வதைச் சிறப்பாகச் செய்” என்பார் அம்மா.
காளி இந்தப் புதிய உலகத்தோடு அனுசரித்துக் கொள்ளத் தொடங்கினான். நண்பர்களை உருவாக்கிக் கொண்டான். அவனுடைய வகுப்புத் தோழர்களில் தமிழ் தெரியாதவர்களோடு பேச மொழி ஒரு பிரச்சினையாக இருக்கும் போது காளி நடன முத்திரைகளைப் பயன்படுத்திப் பேசுவான். “விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றாயா?” “நீ சாப்பிட்டாயா?”
கலாக்ஷேத்ராவில், அவன் திறமை வாய்ந்த நடனக் கலைஞன் ஆனான். அவன் ஒல்லியாகவும், திடகாத்திரமாகவும் மற்றும் சக்தி மிகுந்தவனாகவும் ஆனான்.
அவனால் பல மணிநேரங்கள் ஆட முடிந்தது. கர்நாடக இசையையும் அவன் கற்றுக்கொண்டான். நாட்டின் மற்றும் உலகின் பலபாகங்களிலிருந்து கற்க வந்த மாணவர்கள் பலரை நண்பர்களாக்கிக் கொண்டான்.
அவர்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையும் பகிர்ந்து கொண்டார்கள்!
காளிக்கு இந்தியா முழுவதிலிருந்தும் மற்றும் உலகெங்கிலும் இருந்து நிகழ்ச்சிகள் நடத்த அழைப்புகள் வந்தன! அவன் பேருந்து, ரயில் வண்டி மற்றும் விமானத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்தான். “ஒரு பஸ்ஸில் கூட உன்னால் வாந்தி எடுக்காமல் உட்கார முடியாது என்பது நினைவிலிருக்கிறதா?” என்று அவனது சகோதரிகள் அவனைக் கிண்டல் செய்தார்கள். காளி சிரித்துக் கொள்வான்.
அது உண்மைதான். ஒரு குழந்தையாக இருந்த போது, அவன் பேருந்துப் பயணங்களின் போதெல்லாம் ஒரு எலுமிச்சம்பழமும் ஒரு பிளாஸ்டிக் பையும் எடுத்துச் செல்வான். ஆண்டுகள் கடக்க, காளி அவரது நடனத்திற்காக விருதுகளை வென்றார்.
கோவளத்தில் கூத்தம்பலம் என்னும் நடனக்கல்லூரியை அவர் தொடங்கினார்.
இப்போது, காளி மற்றொரு நிகழ்ச்சிக்குத் தயாராகிறார். அவர் கவனத்துடன் அலங்காரம் செய்துகொள்கிறார். தனது நாட்டிய ஆடைகளை இலகுவாக அணிந்துகொள்கிறார். வெல்வெட் திரை மேலே செல்கிறது. காளி நடனமாடத் தொடங்குகிறார்.
நடனக்கலைஞர் காளி
தனது 25-ம் வயதிலேயே காளி வீரபத்திரன் தான், சாஸ்திரீய பரதநாட்டியம் மற்றும் மூன்று பழங்கால தமிழ் நாட்டுப்புற நடன வடிவங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒரே ஆண் நடனக்கலைஞராக இருப்பவர் என்பது, “பீப்பிள்ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா”வின்(PARI) கருத்து.
காளி, தனது தந்தையை இளம் வயதிலேயே இழந்தார். அவரது தாயார் எல்லமல்லி வீரபத்திரன், ஒரு கட்டுமானத் தொழிலாளி. இவர் காளியையும் அவரது பல உடன்பிறப்புகளையும் வளர்ப்பதற்கு இருமடங்கு கடினமாக உழைத்தவர்.
சென்னையில் கிரெமல்டஸ் மருத்துவமனையின் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருந்த சாரா சந்தா இந்தியாவின் முதன்மையான நடனக் கல்லூரியான கலாக்ஷேத்ராவில் காளி நடனம் கற்றுக் கொள்வதற்கு உதவினார்.
தக்ஷிணசித்ராவில் அவர் கண்ணன் குமாரிடமும் கற்றார்.
அவர் நடனத்துக்காக மியூசிக் அகாடமியின் ‘ஸ்பிரிட் ஆஃப் யூத்’ விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார். ’பீப்பிள்ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா’வின்(PARI) ஒரு ஆவணப்படத்தில் காளி இடம்பெற்றுள்ளார்.
பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இண்டியா(PARI)
பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இண்டியா, உலகின் மிகவும் சிக்கலான கிராமப்புற பகுதிகளின் நிதர்சனத்தை கூறும் ஒரு வாழ்க்கைப் பத்திரிகை மற்றும் அவைகளின் காப்பகமும் ஆகும். இதன் நிறுவனர், ஆசிரியர் பி. சாய்நாத் மற்றும் அவரது குழுவினர், மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் மாபெரும் படையோடு 700 க்கும் மேற்பட்ட மொழிகளில் 833 மில்லியன் மக்களின் கதைகளை ஆவணப்படுத்தும் பணியை ஏற்று அதை செய்து முடிக்கும் நம்பிக்கைக் கொண்டவர்கள். தி பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இண்டியா, எதிர்காலத்திற்கான பாடநூல்களையும் எழுதுகிறது. அவை பல கதைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களாக www.ruralindiaonline.org. என்னும் இணையதளத்தில் கிடைக்கின்றன.