லக்ஷ்மி தூக்கிக்கொண்டு வந்த பைகளின் கனத்தால், அவளது உள்ளங்கை கன்றிப் போயிருந்தது. ஒரு பையில் அரைக்கிலோ உருளைக்கிழங்கும் மற்றொன்றில் அரைக்கிலோ தக்காளியும் ஒரு கீற்று பூசணிக்காயும் இருந்தன.
வீடு இன்னும் அரைக் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சற்றே இளைப்பாற அவள் பைகளை ஒரு கடையின் முன் வைத்தாள்.
அப்போது ஒரு பலூன்காரர், “பலூன்... வண்ணவண்ண... பலூன்...” என்று கூவி விற்றபடி சென்றார்.
அத்தனை பலூன்களையும் அவர் எவ்வளவு சுலபமாக எடுத்துச் செல்கிறார் என்று அவள் வியந்தாள். ‘அவள் பைகளும் காற்றால் மட்டுமே நிரம்பியிருந்தால்!’
காற்றுக்கும் எடை இருப்பதாக அம்மு டீச்சர் கூறிய அன்றைய பிற்பகல் விஞ்ஞான வகுப்பை லக்ஷ்மி நினைவு கூர்ந்தாள். “ஒரு *கனமீட்டர் காற்றின் எடை 1.2 கிலோ” என்று அவர் கூறியிருந்தார்.
ஒரு கனமீட்டர் என்பது 100 செ.மீ. x 100 செ.மீ. x 100 செ.மீ. அளவு கொண்ட ஒரு கன சதுரத்தின் கொள்ளளவு ஆகும்.
அவளுக்கு, அது நிறைய எடை இருக்கும் போலத் தோன்றியது. அது ஏறக்குறைய அவளது இரண்டு பைகளின் அளவு கனமாகும். காற்றுக்கு எடை இருந்தால், அவளால் அதை உணர முடியாதா என்ன?
வீட்டுக்குத் திரும்பி வந்தபின், லக்ஷ்மி அதைக் கண்டுபிடிக்க முடிவு செய்தாள். அவளுடைய தங்கை கௌரி இதற்கு உதவுவாள். சமையலறைக் கழுவுதொட்டியின் அருகிலிருந்த ஒரு புதிய துடைப்பத்திலிருந்து பன்னிரண்டு குச்சிகளை லக்ஷ்மி உருவி எடுத்தாள்.
பின்னர் ஒரு அளவுகோலைப் பயன்படுத்தி, குச்சிகள் ஒவ்வொன்றும் 100 செ.மீ. நீளம் இருக்கும்படி வெட்டினாள். பிறகு அவைகளை ஒரு கனசதுர வடிவில் இருக்குமாறு ஒட்டினாள். பின்னர், லக்ஷ்மியும் கௌரியும் அந்தக் கனசதுர சட்டத்தின் அனைத்து பக்கங்களிலும் பழைய செய்தித்தாள்களை ஒட்டி மூடி அதை ஒரு பெட்டி போல செய்தார்கள்.
‘இப்பொழுது 1.2 கிலோ எடையுள்ள காற்று இதற்குள் இருக்கும்!’ என்று லக்ஷ்மி நினைத்தாள். பின்னர் கீழே படுத்துக்கொண்டு தன் மீது அந்தப் பெட்டியை வைத்து அதன் எடையை உணரமுடிகிறதா என்று சோதித்தாள். அவளால் எடையை அறவே உணர முடியவில்லை! ஆனால், கௌரி அவள் மார்பின் மீது காய்கறிப் பைகளை வைத்தபோது, அவை தன் மேல் அழுத்துவதை லக்ஷ்மி உணர்ந்தாள்.
அடுத்து, லக்ஷ்மி ஒரு பலூனை ஊதி அதைக் கீழே போட்டாள். காற்றுக்கு எடை இருந்தால், காற்று நிரம்பிய பலூன் வெற்று பலூனை விட வேகமாகக் கீழே விழவேண்டும் அல்லவா? ஆனால் பலூன் அப்படி விழவில்லை. அதற்குப் பதிலாக அது காற்றில் மிதந்து பறந்து போனது. லக்ஷ்மி அதன் பின்னால் ஓடினாள்.
அவள் அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையத்துக்கு பலூனை எடுத்துச் சென்றாள். கௌரிக்கு தடுப்பூசி போடும்போது, மருத்துவரின் அறையில் இருந்த எடைகாட்டும் இயந்திரத்தின் மீது லக்ஷ்மி ஏறி நின்று எடையைப் பார்த்தாள். அவளது எடை 19 கிலோ இருந்தது. பின்னர், அவள் பலூனை கவனமாக அதில் வைத்துப் பார்த்தாள். எடைகாட்டும் இயந்திரத்தின் முள் சிறிதளவும் கூட நகரவில்லை!
அடுத்த நாள் வகுப்பில், “காற்றுக்கு எடை இல்லை, மிஸ்! நம்மால் அதன் எடையை உணர முடியாது” என்று லக்ஷ்மி ஆசிரியையிடம் சொன்னாள்.
“காற்று நகரும் போது அதை உங்களால் உணரமுடியும்” என்ற ஆசிரியை லக்ஷ்மியின் முன் நெற்றியில் இருந்த முடியை ஊதி அசையவைத்தார். காற்றில் அசையும் இலைகளையும் சூரியனை மறைத்துக் கொண்டிருந்த சாம்பல் மேகங்களையும் சுட்டிக்காட்டினார். “காற்று, பொருட்களை நகர்த்தும்!” என்றார் அவர்.
“காற்றின் எடையை உணர்வதைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்” என்று அறிவித்தார் அம்மு டீச்சர். அவர் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி, ஒரு மாணவனிடம் கொடுத்து, “ஷ்யாம், நீ போய் மூன்று பொட்டலங்கள் தடிமனான பலூன்கள் வாங்கி வரமுடியுமா?’’ என்று அவனை அனுப்பினார். பின்னர், ‘‘மாணவர்களே! வாருங்கள், நமது சோதனைக்கு இந்த இடத்தை ஆயத்தம் செய்வோம்” என்றார்.
நாற்காலிகள் மற்றும் மேசைகளை ஒரு மூலைக்கு நகர்த்தி அறை நடுவில் தேவையான இடத்தை மாணவர்கள் உருவாக்கி்னார்கள். அம்மு டீச்சர் ஒரு கனசதுர அட்டைப்பெட்டியைத் தேடி எடுத்தார். அப்பெட்டியின் பக்கங்களை அளந்து விட்டு, “இந்தப் பெட்டியின் கொள்ளளவு சுமார் ஒரு கனமீட்டர் இருக்கிறது. நாம் பலூன்களை ஊதி இதனுள் நிரப்புவோம்!’’ என்றார்.
மாணவர்கள் அரை மணி நேரத்துக்கு முக்கியும் முனகியும், கன்னங்கள் உப்ப பலூன்களை ஊதி அவற்றின் வாய்களை முறுக்கிக் கட்டினார்கள்.
சில பலூன்கள் தப்பித்து மிதந்தபடி தூரமாகச் சென்றுவிட்டன.
சில பலூன்கள் மெதுவாகக் காற்றை இழந்தன.
பட்! சில பலூன்கள் வெடித்தன.
அம்மு டீச்சர் பெட்டியின் அருகில் நின்று கொண்டு, மாணவர்கள் ஊதிய பலூன்களால் பெட்டியை நிரப்புவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
பெட்டி முழுவதுமாக நிரம்பியவுடன், அவர் எல்லா பலூன்களையும் சேர்த்து ஒரு நூலால் கட்டி அதை ஒரு பெரிய பந்தாக்கினார். மாணவர்கள் அதைச் சுமந்துகொண்டு எடை பார்க்கும் இயந்திரம் இருந்த தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றனர்.
லக்ஷ்மி எடை இயந்திரத்தின் மீது ஏறி நின்றாள்- அவள் இப்போதும் 19 கிலோ எடையே இருந்தாள். இப்போது அம்மு டீச்சர் அவள் கையில் அந்தப் பெரிய பலூன் பந்தைக் கொடுத்தார். அதைப் பிடித்துக் கொண்டு நிற்பதற்கு, அவள் தள்ளாடிக்கொண்டிருந்த போது மற்ற மாணவர்கள் கீழே எடை இயந்திரம் காட்டும் எண்ணை மிகவும் உன்னிப்பாகப் பார்த்தார்கள். எடை காட்டும் முள் நகர்ந்ததா, என்ன? ஆம்! அது இப்போது 19 கிலோ குறியைத் தாண்டி சற்றே நகர்ந்திருந்தது. *காற்றின் எடை இடத்திற்கு இடம் சிறிதளவு மாறுபடலாம். பலூனின் ரப்பருக்கும் சிறிது எடை உண்டு.அந்த முள் ஏன் சிறிதளவே நகர்ந்ததென்று நினைக்கிறீர்கள்? வெளியிலிருக்கும் காற்று பலூனைத் தள்ளுவதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று நினைக்கிறீர்களா? யோசித்துப் பாருங்கள்…
அம்மு டீச்சர் ஒரு ஊசியால் பலூன்களில் ஐந்தைக் குத்தி வெடிக்கச் செய்தார். லக்ஷ்மி முதலில் திடுக்கிட்டாள்; ஆனால், உடனே சிரிக்க ஆரம்பித்தாள். அம்மு டீச்சர் மற்ற பலூன்களையும் வெடிக்கச் செய்தார். மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். இப்போது எடைகாட்டி முள் சற்றே பின்னால் நகர்ந்திருந்தது.
லக்ஷ்மிக்கு மிக்க மகிழ்ச்சி! காற்றுக்கு எடை உண்டு என்பது இன்றைய வகுப்பில் நிரூபிக்கப்பட்டுவிட்டது! பள்ளி மணி அடிப்பதற்கு முன், அவளுக்கு இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருந்தது. “காற்றுக்கு எடை இருக்கிறது என்றால், பலூன்கள் காற்றால்நிரம்பி இருக்கும்போது அவை ஏன் மிதக்கின்றன? வெடித்ததும் ஏன் கீழே விழுகின்றன?”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உலகின் அனைத்துக் கடற்கரைகளிலும் உள்ள மணல்துகள்களின் மொத்த எண்ணிக்கையை விட, நம்மைச் சுற்றிலும் உள்ள காற்றுமூலக்கூறுகளின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தத் துகள்கள் பல, நம் மீது மோதி நம்மை எதிர்புறமாகத் தள்ளுகின்றன.
இந்தக் காற்றுமூலக்கூறுகளின் எடையை நாம் ஏன் ஒருபோதும் உணர்வதில்லை? நாம் பிறந்ததிலிருந்தே, நம் உடல் தன்மீதான காற்றுமூலக்கூறுகளின் அழுத்தத்தை சமாளிக்கப் பழகியுள்ளது. எலும்புகள், தசைகள், நீர் மற்றும் நிறைய காற்று இவற்றாலான நமது உடல், தேவையான அழுத்தத்தை காற்றின் மூலக்கூறுகளுக்கு எதிராக, வெளிமுகமாக உருவாக்குகிறது. அதனால் தான், நம்மைச் சுற்றியுள்ள காற்றின் எடையை நாம் உணர்வதில்லை. சுற்றியுள்ள காற்றின் அழுத்தம் மாறுபடும்போது மட்டுமே நம்மால் உணரமுடிகிறது. எடுத்துக்காட்டாக, நாம் விமானத்தில் பயணம் செய்யும்போதோ, அல்லது ஒரு உயரமான மலைப்பகுதியில் இருக்கும்போதோ இதை உணர்கிறோம்.
காற்றோடு விளையாட வாருங்கள்! ஒரு காலியான தண்ணீர்க் குப்பி, அல்லது மெல்லிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வேறு ஏதாவது ஒரு குப்பியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூடியில் ஒரு துளையைப் போட்டு, ஒரு உறிஞ்சுகுழாயை அதில் நுழைத்த பின்னர் சுற்றிலும் செயற்கைக் களிமண்ணால் அதை மூடவும். அல்லது பாட்டிலின் வாயை செயற்கைக் களிமண்ணால் மூடிய பின்னர் அதில் ஒரு உறிஞ்சுகுழாயை சொருகவும். இப்போது உறிஞ்சுகுழாய் வழியாகக் காற்றை உறிஞ்சுங்கள். பாட்டில் உருக்குலைகிறது. ஏன்? வெளியில் உள்ள காற்று அதை எதிர்த்துத் தள்ளுகிறது; அதற்கு சமமாக எதிர்த்துத் தள்ள பாட்டிலின் உள்ளே போதிய காற்று இல்லை.
பாட்டிலின் வெளியேயும் மற்றும் உள்ளேயும் காற்று இருக்கும்போது, பாட்டிலின் வடிவம் மாறாமல் இருக்கும்.
ஒரு உறிஞ்சுகுழாயை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விரலால் அதன் ஒரு பக்கத்தை மூடி, மறு பக்கத்தில் இருந்து காற்றை உறிஞ்சுங்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது?
ஏன் உறிஞ்சுகுழாய் வடிவை இழக்கிறது என்றுபுரிந்து கொள்ள முடிகிறதா?