“இருட்டில் வெளியில் போகாதீர்கள்.
கடற்கரையில் ஏதோ வினோதமான விஷயங்கள் இருக்கின்றன” என்று தாத்தா எச்சரித்தார்.
வருண் அண்ணா, யாஷிகா, ஹரி, நான் நால்வரும் தாத்தா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தோம். “கடற்கரையில் இருப்பவை என்னவென்று ஊகிக்க முடியுமா?” என்று விளையாடினோம்.
நான், “அவை, அலையாத்தித் தாவரங்களாக இருக்கலாம்.
வேர்கள் ஆகாயத்தை நோக்கி வளர்ந்துள்ள அதிசயத் தாவரங்கள்!” என்றேன்.
“அவை மணற்கோட்டைகள் என்று நினைக்கிறேன். குட்டி நண்டுகளுக்கான மணற்கோட்டை நகரம் போலத் தெரியுது" என்றார் வருண் அண்ணா.
“கடற்கரைகள், கடல் மீன்களின் கழிவுகளால் உருவானவைதானே? அவை, பெரிய பெரிய மீன்கள் வெளியேற்றிய கழிவுகள் போலத் தோன்றுகின்றன” என்றாள் யாஷிகா.
“ஒரு வேளை, கடல் வாழ் அரக்கர்களாகக்கூட இருக்கலாம். அழகான முழு நிலவை ரசிக்க வந்திருக்கலாம்” என்றான் ஹரி.
நான் தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டேன். தொடர்ந்து யாஷிகா, வருண் அண்ணா, ஹரி மூவரும் கொட்டாவி விட்டார்கள்.
“நல்லிரவு” என்று கடற்கரை வினோதங்களிடம் சொல்லிவிட்டுத் தூங்கச் சென்றோம்.
அதிகாலை, வெற்றி பெற்றது யாரென பார்க்கப் போனோம்.
யாருமே வெற்றி பெறவில்லை.
அவை, கடற்கரையில் குவியல் குவியலாகக் கொட்டிக்கிடந்த குப்பைகள். நகரிலிருந்து எங்களைப் பின்தொடர்ந்து வந்தவை.
மீண்டும் எங்களைப் பின்தொடரும் என்று நம்புகிறோம்.