"அதோ அங்கே வருகிறாள்" கல்லு வீதி முனையைச் சுட்டிக்காட்டினான்.
"ஏன் இன்று இத்தனை தாமதம்? பள்ளியில் ஏதோ நடந்திருக்க வேண்டும்" கல்லுவின் தம்பி ஷப்பு கவலையுடன் சொன்னான்.
அவர்கள் இருவரும் பள்ளியிலிருந்து முன்னதாகவே வந்துவிட்டார்கள். ஆனால் சகோதரி முனியா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எனவே மதிய உணவு தாமதமாகியது. முனியா தன்னுடைய புத்தகப்பையை இழுத்துக் கொண்டு மிக மெதுவாக நடந்து அருகில் வந்ததும், அவளது சிவந்த கன்னமும், கோபம் கொப்பளிக்கும் கண்களும் அவர்களுக்குத் தெரிந்தது.
"ஓ! அவளுக்கு எதைப்பற்றியோ கோபம்" கல்லு மிக மெதுவாக முணுமுணுத்தான். பின்னர் தன் தம்பி ஷப்பு பக்கமாக திரும்பி, அவனை உற்று நோக்கி, "நீ ஏதாவது அவளிடம் சொன்னாயா?" என்று கேட்டான்.
"இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை,
நீ ஏதாவது சொன்னாயா?" என்று ஷப்பு கேட்டான்.
ஷப்புவின் கண்கள் பயத்தில் படபடத்தன.
"இல்லவே இல்லை. உனக்கென்ன பைத்தியமா?"
கஜூரியா கிராமத்தில் அனைவருக்கும் முன்னியின் கோபத்தைப் பற்றித் தெரியும். அத்தனை பிரபலம் அது! சாதாரணமாக கோபம் வராது. ஆனால் வந்துவிட்டாலோ அவ்வளவுதான். எல்லோருக்குமே இது விரைவில் புரிந்துவிட்டது.
கல்லுவை பொறுத்தவரை முனியாவுக்குக் கோபம் வந்தால், தெரு நாய்கள் மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும், காக்கைகள் பறந்து அடுத்த கிராமத்துக்குப் போய்விடும் என்று சொல்வான். இன்றைக்கு அவளுடைய பளபளக்கும் கண்களைப் பார்த்ததும், அவளுக்கு கோபமூட்டும் விஷயம் ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான்.
அவள் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, கல்லுவும், ஷப்புவும் அவளை மிக மிக கவனமாக பார்த்தார்கள்.
"அந்த அழுக்கு கயிற்றுக் கட்டில் மேல உட்கார்ந்திருக்கிற அந்த அறிவுகெட்ட ஆளு என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மனசுல?"
"யாரு" கல்லு மெதுவாக கேட்டான்.
"உனக்கு அதெல்லாம் புரியாது ஏனென்றால் நீயும் ஒரு முட்டாள்."
" சரி! சரி!" என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு கல்லு அவளை பின் தொடர்ந்தான். முனியா இப்படி கோபத்துடன் இருக்கும்போது யாரும் அவளுடன் விவாதம் செய்வதில்லை. ஒருசமயம் அவளது தாய் சமைக்க சொன்னதால், முனியாவுக்கு கோபம் வந்தபோது கல்லு, நிலைமையை சமாளிக்க ஏதோ தமாஷாகச் சொல்ல, அவனை அடித்ததோடு கடிக்கவும் முயன்றாள். நல்லவேளையாக வாயில்
சிக்கியது அவனது குர்த்தாவின் பகுதி மட்டுமே. கடித்து இழுத்ததில் ஒரு துண்டு துணி அவள் வாயோடு வந்துவிட்டது.
கல்லு தன் நண்பன் தாமுவிடம் "அவள் மட்டும் கடித்து, அதனால் ரத்தம் வந்திருந்தால், நாய்க்கடிக்குப் போடும் ஊசியைப் போட வேண்டியிருந்திருக்கும்" என்று சொன்னான். முனியாவுக்கு அவன் சொன்னது தெரிந்தபோது மீண்டும் கடிப்பதாக பயமுறுத்தினாள்.பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லு,
கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருந்த முட்டாள் யாரென்று யோசிக்கத் தொடங்கினான். இந்த கிராமத்தில் தற்கொலைக்கு சமமான காரியமான, முனியாவை கோபமூட்டுவதைச் செய்தது யார்?
முனியாவின் வயிற்றில் சில பரோட்டா துண்டுகளும், கொஞ்சம் காய்களும் உணவாக இறங்கிய பின் விஷயம் வெளியே வந்தது.
பரோட்டாவை மென்றபடி, "ஒருநாள் தோட்டக்கார மங்கு பொத்தி பொத்தி பாதுகாக்கும் மரத்தின் மேல் இடி விழப்போகிறது. கொஞ்சம் பொறுத்துப்பார். நான் இன்று சாபம் கொடுத்துவிட்டேன்" என்றாள்.
"ஆஹா!" என்று கல்லுவும், ஷப்புவும் ஒரே சமயத்தில்
சொன்னார்கள். அவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. "திரும்பவும் மாங்காய் திருடினாயா?"
"ஒரே ஒரு மாங்காய். கெஞ்சி கேட்டேன். அதுவும் இத்துனூண்டு மாங்காய். ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா?" முனியா சொன்னாள்.
"நீயே வந்து அம்பியா பூதத்திடம் கேட்டு வாங்கிக் கொள்" என்று கல்லுவும் ஷப்புவும் இணைந்து ஒரே குரலில் சொன்னார்கள்.
அந்த மாவட்டத்திலேயே தோட்டக்கார மங்குவின் பழத்தோட்டத்தில் ஓரமாக இருக்கும் மாமரத்தில்தான் மிகவும் இனிப்பான சாறு மிகுந்த மாம்பழங்கள் கிடைக்கும் என்பது கஜூரியாவில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு கோடைகாலத்திலும் இளம் பச்சையும், மஞ்சளும் கலந்த தசேரி மாம்பழங்கள் கிளைகளில் நிறைய காய்த்து தொங்கிக் கொண்டிருக்கும். அதன் அற்புதமான வாசனையை வெகு தொலைவிலிருந்தே நுகர முடியும். பிரச்னை என்னவென்றால் மங்கு யாரையும் தன் மரத்திற்கு அருகில் நெருங்க விடமாட்டான். ஒரே ஒரு துண்டு மாம்பழத்தை சுவைக்க நினைத்தாலும் நிச்சயம் அது சாத்தியமில்லை.
நாள் முழுவதும் மாமரத்தின் நிழலில் அவன் தன் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, ஹுக்கா புகைத்துக் கொண்டிருப்பான். மோசமான விஷயம் என்ன என்றால், குழந்தைகள் அவ்வழியே வந்தால், நரைத்த மீசைக்குப் பின்னால் ஒரு குரூரப் புன்னகையோடு, "என் மாம்பழத்தை யாராலும் திருட முடியாது. பகலில் நான் காவலிருக்கிறேன்."
"இரவு முழுவதும் மாமரத்து பேயான அம்பியா பூதத்திடம் அந்த வேலையை விட்டு விடுகிறேன்" என்பான்.
பல வருடங்களாக அந்த பூதம் காக்கும் மரத்திலிருந்து ஒரு மாம்பழத்தையாவது சுவைக்க வேண்டுமென்று குழந்தைகள் கனவு கண்டார்கள். ஆனால் மாம்பழம் திருடும் எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.
அம்பியா பூதத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லை. தோட்டக்கார மங்கு குழந்தைகளைப் பற்றி கச்சிதமாக தெரிந்து வைத்திருந்தான். யார் பழத் தோட்டத்தினுள் நுழைந்தாலும், அடர்ந்த இலைகள் நிறைந்த மரத்தின் நிழலில் நரைத்த மீசைக்குப் பின்னே ஒரு குரூரமான சிரிப்புடன் மங்கு காத்திருப்பான்.
இந்தமுறை தோட்டக்கார மங்கு ஒரு தவறு செய்துவிட்டான். அவன் முனியா மற்றும் அவளது குழுவிடம் சவால் விட்டதுதான் அந்த தவறு. அந்த குழுவில் கல்லு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அவனது நண்பன் தாமுவும் இருக்கிறார்கள். கல்லுவின் தங்கை முனியாவும், தாமுவின் தங்கை சரூவும் எட்டாம் வகுப்பு. எல்லோரையும் விட சிறியவன் ஷப்பு ஏழாம் வகுப்பு.
பள்ளி பதிவேட்டில் கல்லுவின் பெயர் கல்லன், தாமுவின் பெயர் தாமோதர், முனியாவின் பெயர் முனீரா, சரஸ்வதியின் சுருக்கம் சரூ மற்றும் ஷப்பு என்பது ஷப்பீர். ஆனால் பலசமயம் ஆசிரியருக்கே அவர்களின் உண்மை பெயர் நினைவிற்கு வராது.
அவர்கள் அந்த பூத மரத்திலிருந்து, தாமு அதனை அப்படித்தான் அழைப்பான், மாம்பழம் பறிப்பதில் உறுதியாக இருந்தார்கள். அம்பியா பூதம் தாக்கினால் என்ன செய்வது என்பது மட்டும் கவலையைத் தந்தது. தோட்டக்கார மங்கு அவர்களை வம்புக்கு இழுத்து அவமானம் செய்ததை அவர்கள் இதுவரை பொறுத்து கொண்டிருந்து விட்டார்கள். இந்த கோடையில் அம்பியா பூதத்தை தோற்கடிப்பதில் உறுதியாக இருந்தார்கள். சரூ
சொன்னபடி மாம்பழத் திருட்டில் மன்னர்கள் என்ற அவர்களின் புகழுக்கு இது சவால் விடுவதாக இருந்தது.
அம்பியா பூதம் அடர்ந்த இலைகள் உள்ள கிளைகளின் நடுவில் இருக்கிறது என்று தோட்டக்கார மங்கு சொல்வான் .
நாள் முழுவதும் அவன் மாமரத்தின் நிழலில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கும்போது அம்பியா பூதம் கண்ணுக்கு மறைவாக மரத்தில் தூங்கிக் கொண்டிருக்குமாம். ஆனால் இரவில் அது கிளைக்கு கிளை தாவி வாயை கொப்பளிப்பது போல பயங்கரமான சத்தத்தோடு மாங்காய்களை எண்ணுமாம்.
ஒரு காய் குறைந்தாலும் அதற்கு கோபம் வந்துவிடுமாம். பழம் திருடும் யாராவது அது பிடித்துவிட்டாலோ அவர்கள் மீது வளையம் வளையமாக விஷப்புகையை கக்கி திருடுபவரை மூச்சுத் திணற வைத்து கொன்றுவிடுமாம்.
அம்பியா பூதத்தை எதிர்த்து யாராலும் ஜெயிக்க முடியாது என்று மங்கு சொல்வான். அவர்கள் எத்தனை தைரியசாலியாக இருந்தாலும் சரி, எத்தனை முட்டாளாக இருந்தாலும் சரி. இரவில் யாராலும் ஒரு மாம்பழத்தைக் கூட திருட முடியாது என்று அவனுக்கு தெரியும். அதனால் அவன் கவலைப் படாமல் இரவில் தூங்குவான்.
அன்றுமாலை கோவிலுக்கு பின்னால் இருந்த சிதைந்த தூண்கள் தாங்கிக் கொண்டிருந்த கட்டிடத்தின் ஒரு அறையில் நண்பர் குழு சேர்ந்தது. ஒரு காலத்தில் அந்த அறை கிராம மக்கள் மாலை வேளையில் கூடி ஊர் விஷயங்களைப் பேசும் ஒரு பொது இடமாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ எல்லோரும் தர்மபாலின் டீக்கடையில் உட்கார்ந்து சூடான சமோசாவோ, பக்கோடாவோ சாப்பிட்டபடி சின்ன கோப்பையிலிருந்து டீயை உறிஞ்சியபடி ஊர்வம்பு பேசுகிறார்கள். எனவே கல்லுவும் அவன் நண்பர்களும் அந்த அறையை ஆக்ரமித்துக் கொண்டார்கள். சரூவும், ஷப்புவும் வினோதமான படங்களை சுவரில் கிறுக்கியிருந்தார்கள்.
தங்கள் முன்னே இருப்பது ஒரு பெரிய சவால் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இதுவரை அவர்கள் முயன்ற மாம்பழம் திருடும் திட்டங்களிலேயே இதுதான் மிகக் கடினமானது. அதோடு எதிரி மிக பலசாலி என்றும் புரிந்திருந்தது. தோட்டக்கார மங்குவோடு அம்பியா பூதத்தையும் ஏமாற்ற வேண்டும் என்பது சாதாரணமான வேலையில்லை. எனவே அவர்கள் மிக கவனமாக திட்டமிட்டார்கள்.
"பூதங்களுக்கு நிலவு ஒளியில் வெளியே வருவது பிடிக்காது என்று நான் படித்திருக்கிறேன். நாளை பவுர்ணமி. நம் திட்டத்திற்கு ஏற்ற நாள்" என்றான் கல்லு.
தாமுவோ, "நான் கொஞ்சம் பூண்டு எடுத்துவருகிறேன். தசேரி மாம்பழங்களின் அற்புதமான வாசனைக்கு பழக்கமான பூதத்திற்கு பூண்டு வாசனை பூண்டோடு பிடிக்காது" என்றான்.
"பூதத்தை சமாளிக்க நிச்சயம் சில பிரார்த்தனைகள் இருக்கும். மோத்தி பாட்டிக்கு அது தெரிந்திருக்கலாம். நான் கேட்டுப் பார்க்கிறேன்" என்றாள் சரூ.
மோத்தி பாட்டி தாமு மற்றும் சரூவின் பாட்டி. இருமல் மற்றும் வயிற்றுவலிக்கு கரும்பழுப்பு நிறத்தில் சகிக்க முடியாத சுவையோடு இருக்கும் கஷாயம் செய்வதுதான் அவரது வேலை. எனவே யாருக்காவது பூதம் ஓட்டும் மந்திரம் தெரிந்திருக்கும் என்றால், அது பாட்டியாகத்தான் இருக்கும்.
"நான் என் அதிர்ஷ்ட கோலிகளை எடுத்து வரட்டுமா? அவை எனக்கு கணித பரீட்சையில் உதவின" கொஞ்சம் பயம் கலந்த குரலில் ஷப்பு சொன்னான்.
முனியாவோ "பூண்டு? கோலி?... ஹா... நான் என்னுடைய பெரிய தடியை எடுத்து வருவேன்" என்றாள் உறுதியான குரலில்.
"குச்சியா? அது எதற்கு?" எல்லோரும் சேர்ந்து கேட்டார்கள்.
"பவுர்ணமியோ, பிரார்த்தனைகளோ, கோலியோ, பூண்டோ உதவவில்லை என்றால் இந்த பெரிய தடியை வைத்து பூதத்தை அடித்து நொறுக்குவேன்" என்றாள் முனியா, கண்களில் தைரியம் பளிச்சிட்டது.
"முட்டாள்தனமாக பேசாதே! பூதம் என்பது ஒரு புகை மேகம் போல. கூர்மையான பல்லோடும், மிக கூர்மையான நகங்களோடும் இருக்கும். அதை அடிக்க முடியாது" என்று சொல்லி சிரித்தான் கல்லு. முனியா அவன் சொன்னதை அலட்சியப்படுத்திவிட்டு, இரண்டு பின்னல்களும் ஆட அங்கிருந்து வெளியேறினாள்.
நண்பர்கள் குழு அவரவர்கள் வீட்டில் அனைவரும் தூங்கும்வரை காத்திருந்து, படுக்கையிலிருந்து மெதுவாக நழுவி சத்தம் செய்யாமல் பழத்தோட்டத்தை நோக்கி சென்றது.
கல்லு வானத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த பவுர்ணமி நிலவைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான். தாமுவின் சட்டையில் கைப்பிடி அளவு பூண்டு.
பலதடவை உபயோகப்படுத்தி பலனைக் கொடுத்ததாகப் மோத்தி பாட்டி சொல்லி விட்டு கொடுத்த பூதத்திற்கு எதிரான மந்திரங்களை சரூ மனதில் உரு போட்டுக் கொண்டு வந்தாள். ஷப்புவோ அவனது அதிர்ஷ்ட கோலிகளை கொண்டு வர மறந்துவிட்டான். அதனால் பயத்துடன் இருந்தான். அம்பியா பூதத்தைப் பார்த்தால் உடனே ஓடுவதுதான் அவனது திட்டம்.
முனியாவின் கையில் அவள் ஆடுகளை மேய்க்கப் போகும்போது வைத்திருக்கும் நீண்ட தடி இருந்தது. ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டு அந்த தடியை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். பழத்தோட்டத்தின் உள்ளே வேகமாக சென்ற அவர்கள்,
கால்வாய்க்கு எதிரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தோட்டக்கார மங்குவின் பக்கமும் கவனத்தை வைத்திருந்தார்கள். அவன் வீடு இருட்டாக இருந்தது. தோட்டக்கார மங்கு தூங்குவதை அது தெளிவாக்கியது. அவர்கள் இதயம் படபடக்க, பூத மரத்தை நோக்கி ஊர்ந்து சென்றார்கள்.
அருகே செல்ல செல்ல சத்தம் ஏதேனும் கேட்கிறதா என்று கூர்ந்து கவனித்தார்கள். வெள்ளி நிலவின் ஒளி பழத்தோட்டத்தை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. சில இடங்களில் மர நிழல்கள் தரையில் கருமையாகத் தெரிந்தன.
ஒரே நிசப்தம். அவர்கள் தலைக்கு மேல் வட்டமிட்ட கொசுக்களின் ரீங்காரத்தைத் தவிர ஒரு பறவையின் ஒலியோ, வௌவால் எதுவும் பறக்கும் சத்தமோ கேட்க வில்லை.அந்த ஆழ்ந்த அமைதியே அவர்களுக்கு பயத்தைத் தந்தது.
எங்கே அம்பியா பூதம்?
மரத்தில் பழங்களை ஒன்று... இரண்டு...மூன்று என்று அது எண்ணுவதாக தெரியவில்லையே. அப்படி இருந்தால் கிளைக்குக் கிளை தாவும் சத்தமும், எண்களை முணுமுணுக்கும் சத்தமும் கேட்டிருக்குமே!
அவர்களில் கல்லுதான் மரம் ஏறுவதில் வல்லவன். அதுவும் மாமரம் அவனுக்கு மிகவும் சுலபம்.மரத்தின் மீது ஏறி கீழாக இருக்கும் கிளைகளில் இருந்து சில பழங்களை விரைவாகப் பறித்து, கீழே நிற்கும் முனியா மற்றும் தாமுவின் பக்கம் போட்டுவிட்டு அம்பியா பூதம் கண்டுபிடிக்கும் முன் மரத்திலிருந்து இறங்கி ஓடிவிடுவதுதான் அவனது திட்டம். சரூ தோட்டத்தின் வாசலில் காவலாக நின்றாள். தோட்டக்கார மங்கு வீட்டைவிட்டு வெளியே வந்தால் அதை விசில் மூலம் தெரிவிப்பது அவளது வேலை. ஷப்பு அவள் பின்னால், பூதத்தைக் கண்டால் ஓடிவிடத் தயாராக நடுங்கும் கால்களுடன் சும்மா நின்றிருந்தான்.
கீழே இருந்த கிளைகளை பிடித்துக் கொண்டே மாம்பழங்கள் காய்த்து தொங்கும் கிளையின் மேல் விரைவாக ஏறினான்.
ஒரு மாம்பழத்தைப் பறிப்பதற்காக கையை நீட்டியபோது ஒரு மெல்லிய வினோதமான இருமல் சத்தம் மேலிருந்து கேட்டது. மெல்லிய குரல் ஒன்று
"யார் அங்கே? யாரது? யாரது?" என்று சொல்வது கேட்டது. கல்லு உறைந்து போனான். கீழே தாமு கவனமாக தன் பையில் கையைவிட்டு பூண்டை எடுத்து, அதனை காற்றில் அங்குமிங்கும் அசைத்தான்.
"கல்லு நீ உயிரோடு இருக்கிறாயா?" தாமுவின் குரல் நடுக்கத்துடன் கேட்டது.
"நான் உன்னை பிடித்துக் கொள்வேன்" அம்பியா பூதம் சீறும் குரலில் சொன்னது. முனியா கைத்தடியை உறுதியாக பிடித்துக்கொண்டு மேலே இருந்த கிளைகளை நோக்கி "ஏன் திரும்ப திரும்ப சொல்கிறாய்? அம்பியா பூதமே, நாங்கள் செவிடில்லை" என்றாள்.
ஆச்சரியமான வகையில் அம்பியா பூதத்திடமிருந்து அதற்கு பதில் ஏதுமில்லை. பின்னர் கிளைகள் முறியும் சத்தத்துடன் பயங்கரமான சாம்பல் வெள்ளைநிற பொருள் ஒன்று மரத்திலிருந்து வேகமாக நழுவி கீழே விழுந்தது. "உன்னை சாப்பிடுவேன்! உன்னை சாப்பிடுவேன்" என்று முணுமுணுக்கும் குரலில் சொன்னது.
"ஓடுங்கள்!" தாமு கத்தினான். ஷப்புவும், சரூவும் பழத்தோட்டத்தை விட்டு வெகு வேகமாக வீட்டை நோக்கி ஓடினார்கள். தாமுவும் பின் தொடர முயன்றான். ஆனால் அவன் திரும்பும் போது தரையில் இருந்த ஒரு குழியில் கால் சிக்கிக் கொண்டதால், கை கால் பரப்பிக் கொண்டு விழுந்தான். பேச்சு மூச்சின்றி கிடந்தான்.
கல்லு மரத்திலிருந்து எத்தனை வேகமாக முடியுமோ அத்தனை வேகமாக கீழே இறங்கி, குதித்து மரத்தின் அடியில் ஒரு மேட்டில் விழுந்தான். தன் செருப்பையும் தவற விட்டுவிட்டான். அம்பியா பூதத்தின் குரூரமான நிழல் அருகில் வர வர கல்லுவும் தாமுவும் உடனடியாக எழுந்து ஓட ஆரம்பித்தார்கள்.
"முனியா ஓடு!" என்று தாமு கத்தினான்.
அந்த கருமையான பயமுறுத்தும் நிழல் சீறலோடு, வாய் கொப்பளிக்கும் ஓசையோடு, ஒருவித முனகலுடன் அருகில் நெருங்கியது. முனியா பல்லைக் கடித்துக் கொண்டு, கையிலிருந்த தடியால் ஓங்கி அம்பியா பூதத்தை ‘தபக்’ என்ற ஒலியுடன் அடித்தாள். ‘படக்’ என்று இன்னொரு அடி.
திகைத்துப் போன அம்பியா "ஆ..ஊஃப்" என்றது.
கல்லுவும், தாமுவும் தோட்டத்தை பாதி கடந்திருந்தார்கள். சட்டென்று சத்தம் கேட்டு வியப்போடு நின்றார்கள். யாரது? அம்பியா பூதமா ஊஃப் என்றது?
முனியா மீண்டும் அம்பியா பூதத்தை அடித்தாள்.
"காப்பாத்துங்க!" என்றது குரல். அது தோட்டக்கார மங்குவினுடையது! மரத்திலிருந்து பயத்துடன் விரைவாக இறங்கி, மேலே போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, "என்னை அடிக்காதே முனியா! ரொம்ப வலிக்குது" என்றான்.
"யார் இந்த பூதம்?" கேலியாக கேட்ட முனியா மங்குவை சுற்றி தடியை ஆட்டியபடி நடனமாடினாள்.
"சரி! சரி! நீ ஜெயிச்சுட்ட. கொஞ்சம் மாம்பழம் பறிச்சுக்கோ" என்றான் மங்கு.
"கொஞ்சம் மாம்பழம் பறிச்சுக்கோ, கொஞ்சம் மாம்பழம்
பறிச்சுக்கோ" முனியா சிரித்தபடி அவனைப் போலவே சொன்னாள்.
கல்லுவும், தாமுவும் அவளைப் போலவே சொன்னார்கள். பிறகு மரத்தின் மீது ஏறினார்கள்.
"சரூவும், ஷப்புவும் ஓடிவிட்டார்கள் அல்லவா?" என்று கேட்டாள் முனியா.
"இந்த தமாஷைப் பார்க்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை பாவம்" என்றாள் அவள்.