"இதைப்போய் ஏன் குடுத்துட்டாங்க?" கல்பனா ஆச்சரியமாகக் கேட்டாள்.
தான் வேலைசெய்யும் இடத்திலிருந்து அம்மா கொண்டு வந்ததை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் கல்பனா.
அந்த மிதிவண்டி புதியது போலவே இருந்தது!
அம்மா சாதாரணமாக, "அவங்க வேற வாங்கிட்டாங்க" என்றாள்.
கல்பனா மிதிவண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.
டமாஆஆஆஆஆஆல்!
கீழே விழுந்தாள். பிரபு சிரித்தான்.
"உன்னால ரெண்டு சக்கரத்தில சமநிலைப்படுத்த முடியல! முதல்ல நீ மிதிவண்டி ஓட்டக் கத்துக்கணும்," என்றான்.
"நீ எனக்கு கத்துக்குடேன்!" அவனிடம் கெஞ்சினாள் கல்பனா.
ஆகவே இருவரும் தினமும் மாலை பள்ளி முடிந்த பின் பங்களா சாலைக்குச் சென்றனர்.
அங்கே அவ்வளவாக வாகனப் போக்குவரத்து இருக்காது. பெரிய நாய்கள் காவல் காக்கும் பெரிய வீடுகள் மட்டும்தான்.
இவர்கள் குடியிருக்கும் பகுதியிலுள்ள எல்லாச் சிறுவர்களும் அங்குதான் விளையாடச் செல்வார்கள்.
முதல் நாள் பயிற்சி தொடங்கும்வரை கல்பனாவால் காத்திருக்கவே முடியவில்லை.
ஆனால்...
டமாஆஆஆஆஆஆல்!
கல்பனா கீழே விழுந்தாள்.
அவளது கால் முட்டி எரிந்தது. அழக்கூடாது என்று நினைத்தாள்.
ஆனால் அழுதுவிட்டாள்; விம்மி விம்மி அழுதாள்.
கல்பனாவின் காதுகள் சிவந்தன. மற்ற சிறுவர்கள் சிரிப்பது அவளுக்குக் கேட்டது.
மிதிவண்டியை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடினாள்.
நண்பர்களுடன் மட்டைப்பந்து ஆடி முடித்த பின்னர், சூரியன் மறைந்த பின்னர், அப்பா வாகனப் பட்டறையிலிருந்து திரும்பிய பின்னர், பிரபு அதை ஓட்டிக்கொண்டு வருவான். அவனுக்குதான் ஓட்டத்தெரியுமே.
"பாவாடை எப்படி கிழிஞ்சது?" கல்பனாவைப் பார்த்ததும் அம்மா கேட்டாள்.
"மிதிவண்டிலேந்து விழுந்துட்டேன்" என்றாள் கல்பனா. அம்மா பெருமூச்சு விட்டாள்.
இன்று கல்பனா மிதிவண்டி பழகத் தொடங்கி ஏழாவது நாள்.
இன்னமும் அவளால் ஓட்ட முடியவில்லை. என்ன சொன்னான் அந்த பிரபு?
அவள் மிதிவண்டியை விட ரொம்பக் குள்ளமாம்!
அவனுக்கு என்ன தெரியும்?
இரவு, அம்மாவிடம் ஒரு கோப்பை நிறைய பால் கேட்டாள் கல்பனா.
அவளது ஆசிரியை, பால் குடித்தால் சிறுவர்கள் உயரமாக வளரலாம் என்று சொல்லியிருந்தார்.
ஏற்கனவே இரண்டாம் வகுப்பு 'பி' பிரிவில் அவள்தான் இரண்டாவது உயரமான பெண்!
அவள் வீனஸ் வில்லியம்ஸ் போல ஆக ஆசைப்பட்டாள்.
கல்பனாவிற்கு டென்னிஸ் விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பிரபு ஒரு முறை வீனஸின் படத்தைக் காண்பித்திருக்கிறான்.
"எவ்வளவு பலசாலியா இருக்காங்க!" என்று கல்பனா வியந்தாள்.
கல்பனா அவ்வளவு பலசாலியாக ஆனால், அவளை யாருமே தொந்தரவு செய்யமாட்டார்கள். கல்பனா தூங்கும் முன் பிரார்த்தனை செய்தாள். இதற்கு முன் அவள் இப்படிச் செய்ததில்லை.
அடுத்த நாள் மாலை, நிச்சயம் மிதிவண்டியை ஓட்டிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தாள் கல்பனா.
அவளுக்கு மிகவும் ராசியான சிகப்பு நிற கிளிப் கூட தலையில் அணிந்திருந்தாள்.
"கொஞ்சம் தள்ளி விட்டுட்டு என்னை ஓட்ட விடு," என்றாள் பிரபுவிடம். அவனும் அப்படியே செய்தான்.
கண்ணை மூடிக்கொண்டு மிதிகட்டையைத் தேடினாள். அவள் காதுகளில் காற்று இறைய, மிதிவண்டி சாலையின் மீது தள்ளாட…
டமாஆஆஆஆஆஆல்!
கல்பனா விழுந்தாள். மறுபடியும்.
இம்முறை வலித்த வலியில் அவளுக்கு மூச்சுத் திணறியது.
யாருமே சிரிக்கவில்லை. எப்போதும் பிறரை எரிச்சலூட்டும் மணிகண்டன்கூட சிரிக்கவில்லை!
மருத்துவர், அவள் பள்ளித் தலைமை ஆசிரியரைப் போலவே மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். அவள் கால் பலமாக சிராய்த்திருப்பதாக அவர் கூறினார்.
"காயம் ஆறும் வரை கவனமாக் இருக்கணும்" என்றார். அம்மாவிடம் நீளமான ஒரு மருந்துச்சீட்டைக் கொடுத்தார்.
"காயம் ஆறும் வரை மிதிவண்டி ஓட்டக்கூடாது!" என்று அம்மா சொல்ல, கல்பனா தலையசைத்தாள்.
"கவலைப்படாத, நீ இப்பவும் மிதிவண்டியில உட்காரலாம்," என்றான் பிரபு.
'எப்படி?" கண்கள் விரியக் கேட்டாள் கல்பனா.
அப்பா அவளிடம் மிதிவண்டியைக் காண்பித்தார். அதில் புதிதாக ஒரு பின்னிருக்கை பொருத்தப்பட்டிருந்தது.
"நீ மருத்துவரிடம் போயிருந்தப்போ பொருத்திட்டோம்" இளித்தான் பிரபு.
"நானே அதை சீக்கிரம் ஓட்டப்போறேன் பாரு" என்றாள்.
"ஆமாம், நீ கண்டிப்பா ஓட்டப்போற" என்றான் பிரபு.
கல்பனா மிதிவண்டியிலிருந்து விழுந்துவிட்டாள், அதனால் என்ன?
ஏன் எல்லோரும் உங்களை, ஜெயிக்காவிட்டாலும் முயன்று கொண்டே இருக்கச் சொல்கின்றனர்?
முயற்சி செய்யும்போது நீங்களே எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விசயங்களை அது உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். கல்பனா முதல் நாளே மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தால் அவள் எவ்வளவு மன உறுதி படைத்தவள் என்று அவளுக்கே தெரிந்திருக்காது. அவள் குடும்பத்தினரும் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள்.
எதிர்காலத்தில் ஒரு நாள் கல்பனா பல கோப்பைகள் பால் குடித்து, உயரமாக வளர்ந்து, பலசாலியான பிறகு, மிதிவண்டியிலிருந்து விழுந்த இந்த நாளைப் பற்றி அவள் யோசித்துப் பார்க்கக்கூடும். கடினமான ஒரு தேர்வின்போதோ அல்லது மலையேறும்போதோ இது நடக்கக்கூடும். இனிப்பு ரொட்டி சுடும்போதோ அல்லது புலியைப் படம் பிடிக்கும்போதோ இது நடக்கக்கூடும். அப்போது, அவள் மிதிவண்டி பழகும்போது கற்ற பாடம் அவளை விடாமுயற்சியுடன் இருக்கத் தூண்டக்கூடும்.