சைஃபர் ஜியாவிடம் ‘Enter’ எனக் கூறினால் அதனை அவளால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவ்வார்த்தையின் பொருள் அவளது மூளையில் பதிந்துள்ளது.
சைஃபர் கணினியில் ‘Enter’ விசையை அழுத்தினால் கணினியும் அதனைப் புரிந்துகொள்கிறது.
ஏனெனில் அவ்வார்த்தையின் பொருள் அதன் மூளையில் சேமிக்கப்பட்டுள்ளது.
‘Enter’ எனும் கட்டளை கணினியின் மூளையில் இருமையில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இருமை(பைனரி) என்பது நாம் கணினிகளுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் மொழியாகும்.
நீங்கள் இருமையில் எழுதப்பட்ட சொற்றொடர்கள் அல்லது கட்டளைகளைக் கண்டால் குழப்பம்தான் அடைவீர்கள்.
ஏனெனில், அவை 1 மற்றும் 0 என்னும் இரண்டு இலக்கங்களால் மட்டுமே ஆனவை.
ஒவ்வொரு ‘1’உம் ஒவ்வொரு ‘0’வும் முக்கியமானவை. ஒவ்வொரு ‘1’உம் ஒவ்வொரு ‘0’வும் கணினிக்கு முக்கியமான தகவலைத் தருகின்றன.
கணினிகள் லட்சக்கணக்கான மின்னணுச் சுற்றுகளால் ஆனவை. அவை மின்சாரத்தைக் கடத்தவோ தடுக்கவோ செய்கின்றன.
மின்சாரம் பாயும் நிலையை ‘ON’ என்கிறோம். அது ‘1’ எனக் குறிக்கப்படுகிறது. மின்சாரம் பாயாத நிலையை ‘OFF’ என்கிறோம். அது ‘0’ எனக் குறிக்கப்படுகிறது.
அதன் காரணமாகத்தான் இந்த மொழியை பைனரி(Binary) என அழைக்கிறோம். பினி எனும் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து இவ்வார்த்தை தோன்றியது. ‘இரண்டு இணைந்து’ என்று அதற்குப் பொருள்.
இம்மொழியில் இரண்டு எழுத்துகள் மட்டுமே உண்டு. அவ்வெழுத்துகளை ‘பிட்’ என அழைக்கிறோம். எட்டு பிட்டுகள் சேர்ந்தால் அது ஒரு ‘பைட்’.
‘1’ மற்றும் ‘0’ ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்தி நாம் கணினியுடன் நிறைய உரையாட முடியும்.
‘அ’ என்னும் எழுத்து 101110000101 என்று சேமிக்கப்பட்டிருக்கும். ‘க’ எனும் எழுத்து 101110010101 என சேமிக்கப்பட்டிருக்கும்.
‘வணக்கம்’ எனும் வார்த்தை 101110110101 101110100011 101110010101 101111001101 101110010101 101110101110 101111001101 என்பதாக சேமிக்கப்பட்டிருக்கும். ‘Enter’ என்பதும் கூட ‘1’ மற்றும் ‘0’களால் ஆன சரமாகவே(String) சேமிக்கப்பட்டிருக்கும்.
‘Enter’ என்பது ஒரு கட்டளை.
இதை உங்களிடம் சொன்னால், உள்ளே நுழைவதா வேண்டாமா என்று நீங்கள் யோசித்து முடிவெடுக்கக் கூடும். இதையே கணினியிடம் கூறினால், அது அக்கட்டளையைப் பின்பற்றும்.
கணினியில் படங்கள் கூட ‘1’ மற்றும் ‘0’ஆகவே பதியப்பட்டிருக்கின்றன. ஒரு படம் நுண்ணிய நிறப் புள்ளிகளால் ஆனது. அந்த நிறப்புள்ளியை ‘பிக்சல்’ என்கிறோம்.
ஒவ்வொரு பிக்சலும் ‘1’ மற்றும் ‘0’களால் ஆன ஒரு தனிச் சரமாகக் குறிப்பிடப்படும்.
அவை ஒரு புள்ளியில் இளஞ்சிவப்பு நிறம் எந்த அளவுக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதையோ நீலப்பகுதி எந்த அளவுக்கு மங்கலாக இருக்க வேண்டும் என்பதையோ கணினிக்கு தெரிவிக்கின்றன.
இசை கூட இருமையில்தான் சேமிக்கப்படுகிறது.
எந்தவொரு இசைக்கருவியின் இசைக்குறிப்பும் அதற்குரிய அதிர்வெண் எனும் எண்ணால் குறிக்கப்படுகிறது. அது 1 மற்றும் 0 ஆக மாற்றப்படுகிறது.
இருமையைப் பொறுத்தவரை, 1 இல்லையெனில் அது ‘0’தான். 0 இல்லையெனில் அது ‘1’தான்.
இருமை என்பது இயந்திரங்களுக்குத்தான். நீங்கள் இயந்திரங்கள் இல்லையே!
எனவே, எதிலாவது நீங்கள் நம்பர் ஒன் இல்லை என்பதனால் பூஜ்ஜியம் ஆகிவிட மாட்டீர்கள். நீங்கள் ஒன்றில் சிறப்பாக இல்லை என்பதற்காக, அதில் மோசமாக இருப்பதாக அர்த்தமில்லை.
அவ்வகையில் மனிதர்கள் நாம் அதிர்ஷ்டசாலிகள். இடைப்பட்ட எந்த ஒரு நிலையிலும் நம்மால் இருக்கமுடியும்!
3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சீனப் புத்தகமான யீ-ஜிங் அல்லது மாற்றங்களின் புத்தகம் என்னும் நூலின் வரைபடங்கள் வெறும் இரண்டு குறியீடுகளை மட்டுமே கொண்டவை. ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மானிய கணிதவியலாளரும் தத்துவவாதியுமான லைப்னிட்ஸ், புதிய பைனரி கணக்கீட்டை உருவாக்குவதற்கு இந்நூல் ஊக்கமாக அமைந்தது.
பொது ஆண்டுக்கு முன்னான இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரசாஸ்திரா என்னும் நூலில் இந்திய கணிதவியலாளர் பிங்கலாவும் இரண்டு குறியீடுகளை பயன்படுத்தியுள்ளார். தனது செய்யுள்களில் குறுகிய அசைகளை ‘லகு’(மெல்லிய) எனவும் நீண்ட அசைகளை ‘குரு’(கனமான) எனவும் குறிப்பிடுகிறார்.