kannaadiyila yaaru

கண்ணாடியில யாரு?

கண்ணாடியில் யார்? மானசா எப்படியாவது போராடி அதைக் கண்டுபிடிக்கத்தான் போகிறாள்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மா புதிய கண்ணாடி வாங்கியிருந்தார். குளியலறையில் ஏற்கனவே இருக்கும் சின்ன கண்ணாடியில் பார்க்குமளவு மானசா உயரமில்லை. இது பெரியது. இது அம்மா அளவு உயரம். அவர் அதன் முன் நின்றால், அதற்குள்ளிருந்து இன்னொரு அம்மா அவரைப் பார்த்தார்.“அது யாரு?” என்று கத்தினாள் மானசா.

”நீயே வந்து பாரு, மானசா” என்றார் அம்மா. மானசா ஒரு பிஸ்கட்டைக் கொறித்தபடியே அம்மாவுக்கு முன்னால் போய் நின்றாள்.

கண்ணாடியில் இன்னொரு மானசா வாயைத் திறந்து மூடினாள்.

மானசா வீட்டைச் சுற்றி ஓடிப்போய், கண்ணாடி இருந்த சுவரின் பின்பக்கம் பார்த்தாள். அதைத் தட்டினாள். டொம்! அங்கே வேறு மானசாக்கள் இல்லை.

“ஹாய் மானசா” என்றபடி டைட்டஸ் தன் வீட்டிலிருந்து ஓடிவந்தான்.

டைட்டஸுடன் மானசா மறுபடி கண்ணாடியிடம் வந்தாள். இப்போது அவளுக்குக் கோபம்.

கண்ணாடியைத் தூக்கி அதன் பின்னால் பார்த்தாள். அங்கே வெறும் மரம்தான் இருந்தது. யாரும் ஒளிந்திருக்கவில்லை.

கண்ணாடியைச் சுற்றி வந்து எட்டிப் பார்த்தாள். அது அவளை அப்போது பார்க்காமல் இருக்கலாம் அல்லவா.

இல்லை. கண்ணாடி மானசாவும் திருட்டுத் தனமாக எட்டிப் பார்த்தாள்.

மானசா கண்ணாடி மானசாவை நோக்கி ஓடிச்சென்று காலைத் தூக்கினாள்.”ஹை யாஆ!”

கண்ணாடி மானசாவும்அதையே செய்தாள்.அவள் பயப்படுவதுபோலத் தெரியவில்லை.“எனக்கு அவளைப்பிடிக்கல” என்றான்டைட்டஸ்.

மானசா ஒரு கிரிக்கெட் பேட்டை சுழற்றினாள். அது அவள் கையிலிருந்து நழுவி கண்ணாடி மானசாவின் முகத்தில் விழுந்தது. க்ராக்.கர்ர்ர்! கிளிங்! டமால்!கண்ணாடித் துண்டுகள் எல்லாப் பக்கமும் சிதறி மின்னின. டைட்டஸ் அழத் தொடங்கினான்.

”மானசா! நகராதீங்க. கண்ணாடியத் தொடாதீங்க. கையக் கிழிச்சிரும்!” என்றபடி அம்மா ஓடிவந்தார். மானசாவையும் டைட்டஸையும் தூக்கிக்கொண்டு, உடைந்த கண்ணாடியிடம் இருந்து வேறு இடத்துக்குக் கொண்டுபோனார். பின் கவனமாக அவற்றைப் பெருக்கி எடுத்தார்.

”எனக்கு கோவமா வந்துச்சு” என்று இரவு, மானசா அம்மாவிடம் சொன்னாள். “கண்ணாடி மானசா எங்கிருந்து வந்தான்னு எனக்குத் தெரியல!”அம்மா ஒரு கண்ணாடி வரைந்தார். “பார்த்தியா! இது வெறும் கண்ணாடி, பின்னாடி இருக்க இந்த பளபளப்பான பூச்சு தெரியுதா? அதுதான் உன்ன நோக்கி ஒளியத் திருப்பி அனுப்புது! சொய்ங்!”“நீ கண்ணாடி முன்ன நின்னா கண்ணாடி உன்ன சொய்ங்குன்னு படமா திருப்பிக் காட்டும்.”

பளபள பூச்சு

ஒளி

மானசா

கண்ணாடி

மானசா படத்தைப் பார்த்தாள். மானசா உள்ளே, மானசா வெளியே. “பந்து மாதிரி! சொய்ங்!” என்றாள்.”ஆமா” அம்மா தலையாட்டினார். “நீ கண்ணாடிகிட்ட உன் முகத்தைக் காட்டினா அது அதையே திருப்பிக் காட்டும்.”“ஆனா சத்தம் கிடையாது. கண்ணாடி மானசா பேசலை.”“சத்தம் கிடையாது. இந்த பளபள பூச்சு ஒளிய மட்டும்தான்திருப்பி அனுப்பும், சத்தம், சுவை, வாசனை கிடையாது.”

”அப்பா இருட்டானா கண்ணாடி மானசா இருக்கமாட்டாளா?” என்று கேட்டாள் மானசா.”கண்ணாடிக்கும் உன்ன மாதிரியே ஒளி இருந்தாதான் பார்க்கமுடியும்” என்றார் அம்மா.மானசாவுக்கு மகிழ்ச்சி. “ஆஹா! அதானா கண்ணாடி மானசா. ஒளி திருப்பி வர்றது.””ம்ம்ம்ம்” என்றபடி அம்மா தூங்கிப் போனார்.