kannaal enna kaanalaam

கண்ணால் என்ன காணலாம்

ஆய்வுக்கூடத்துக்குச் செல்லும் சந்தா, டிங்க்கு, மோட்டு அங்கே வெவ்வேறு லென்ஸ்கள் வழியாகப் பார்க்கிறார்கள். அருகிலுள்ள மிகமிகச் சிறிய பொருட்களையும் மிகத் தொலைவிலுள்ள விண்மீன்களையும் காண்கிறார்கள். பல்வேறு லென்ஸ்கள் வழியாகப் பார்த்து, அவை எப்படி வேலை செய்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கோடை விடுமுறைக்காக பள்ளி மூடப்பட்டிருந்தது. சந்தா, டிங்க்கு, மோட்டு மூவரும் பொழுதைக் கழிக்க புதுப்புதுத் திட்டங்கள் தீட்டினர்.

சில நாட்களில் வீட்டருகிலுள்ள மலையில் ஏறினார்கள். மற்ற நாட்களில், வீட்டின் பின்னாலிருக்கும் குகையில் ஒளிந்து விளையாடினார்கள். அன்று, விண்மீன் நோக்குவதுதான் அவர்களது திட்டம்.

அதற்கு முன்பாக, அவர்கள் சந்தாவின் அம்மா, அப்பா நடத்திவரும் ஆய்வுக்கூடத்துக்குச் சென்றனர். சந்தாவின் பெற்றோர் விவசாய விஞ்ஞானிகள். அந்த ஆய்வுக்கூடத்திலுள்ள மற்றொரு விஞ்ஞானியான சர்மா மாமா அவர்களை உள்ளே விட்டார்.

“மோட்டு! தயவுசெய்து பூனையைப் போல அமைதியாக இரு, என்ன” என்றாள் சந்தா.

டிங்க்கு பார்வையைச் சுற்றுமுற்றும் சுழலவிட்டான்.

பெரிய பெரிய புத்தகங்கள், நெல் நாற்றுகள், ஆய்வுக்கூடக் கருவிகள்!

சந்தா ஒரு பூதக்கண்ணாடியைக் கண்டாள். அதை எடுத்து டிங்க்குவிடம் கொடுத்தாள். அதன் வழியாக பார்த்த அவன் கண்கள் பெரியதாக விரிந்தன.

“அடேயப்பா! மோட்டுவின் மூக்கு எப்படி ஐந்து மடங்கு பெரியதாகத் தெரிகிறது?” என்று கேட்டான் டிங்க்கு.

“பூதக்கண்ணாடியில் சக்திவாய்ந்த லென்ஸ் உள்ளது. அது சிறிய பொருட்களைப் பெரியதாகக் காட்டி, அவற்றை நாம் தெளிவாகப் பார்க்க உதவுகிறது” என்று விளக்கினாள் சந்தா.

“அப்படியென்றால், நான் பூதக்கண்ணாடியின் மூலம் அனைத்துவகையான சிறிய பொருட்களையும் பார்க்க முடியுமா? எறும்பு, சர்க்கரைத்துகள், என் பற்களில் வசிப்பதாக அம்மா சொல்லும் கிருமிகளைக்கூட பார்க்க முடியுமா?” என்று கேட்டான் டிங்க்கு.

“எறும்புகள், சர்க்கரைத்துகள் மற்றும் நீ சாப்பிடும்பொழுது கீழே சிந்தும் சீரக மிட்டாய்கள் எல்லாவற்றையும் கண்டிப்பாகப் பார்க்க முடியும். ஆனால், கிருமிகளைப் பார்க்க இன்னும் சக்திவாய்ந்த, நுண்ணோக்கி என்னும் கருவி தேவைப்படும்” என்றாள் சந்தா.

“நுண் என்றால் மிகமிகச் சிறியது. அப்படியானால், அந்தக் கருவி மிகமிகச் சிறிய பொருட்களை மிகமிகப் பெரியதாகக் காட்டுமா?” என்று கேட்டான் டிங்க்கு. “ஆமாம்! அம்மா எப்போதும் நுண்ணோக்கியோடுதான் வேலை செய்துகொண்டிருப்பார். வா, காட்டுகிறேன்.”

டிங்க்குவுக்கு நுண்ணோக்கியைப் பார்க்கும் ஆவல் கூடியது. பூதக்கண்ணாடியில் ஒரே ஒரு லென்ஸ் மட்டுமே உள்ளது. ஆனால், பொருட்களை மிகப் பெரிதாகக் காட்ட நுண்ணோக்கியில் பல லென்ஸ்கள் உள்ளன!

“இதைப் பயன்படுத்தி நமது தலைமுடி எவற்றால் ஆனது, இலைகள் எவற்றால் ஆனது என்றும், நமது இரத்தத்தில் என்னென்ன உள்ளன என்பதையும்கூட நம்மால் பார்க்கமுடியும். இரத்தப் பரிசோதனைக்கு சிறிது இரத்தத்தை ஒரு பரிசோதனைக்கூடத்தில் கொடுக்கிறோம். அதை ஒரு நோயியல் வல்லுநர் நுண்ணோக்கி வழியாக ஆராய்ந்து பரிசோதனை செய்வார். நமது நோய்க்குக் காரணமான பேக்டீரியா அல்லது வைரஸ் எது என்பதைக் கண்டறிந்து நமக்குத் தெரிவிப்பார்” என்றாள் சந்தா.

“அக்கா! ஒரு சிறிய பொருளைப் பெரியதாகக் காண பூதக்கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். அதைவிட மிகமிகச் சிறியதை பெரிதாகப் பார்ப்பதற்கு நுண்நோக்கி. சரிதானே? ஆனால், மிகவும் தொலைவில், குட்டியாகத் தெரிபவற்றைப் பார்ப்பதற்கு நாம் எதைப் பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டான் டிங்க்கு.

“அதற்கு பைனாகுலர் அல்லது தொலைநோக்கியைப் பயன்படுத்த வேண்டும்” என்றாள் சந்தா.

“சலீம் மாமா பறவைகளைப் பார்க்கப் போகும்போது பைனாகுலரைத்தானே பயன்படுத்துகிறார்?” என்றான் டிங்க்கு.

“ஆமாம்! அவர் பைனாகுலரைத்தான் பயன்படுத்துகிறார். ஏனெனில், அவர் பறவைகளுக்கு அருகில் சென்று அவற்றைத் தொல்லை செய்ய விரும்புவதில்லை. என்னிடம் அப்பாவின் பழைய பைனாகுலர் இருக்கிறது. அது என்ன காட்டுகிறதென்று பார்க்கலாம், வா!" என்றாள் சந்தா.

“எல்லாம் ஒரே நீலமாகத் தெரிகிறது!” என்றான் டிங்க்கு.

சந்தா சிரித்தாள். “நீ வானத்தைப் பார்க்கிறாய்! கொஞ்சம் கொஞ்சமாக உன்னுடைய கையை இறக்கு. மெதூஊஊவாக...”

“அட, ஒரு பறவை எதையோ கொத்திக்கொண்டிருக்கிறது! ஆனால், நான் கையைக் கொஞ்சம் அசைத்தாலும் அது மறைந்துவிடுகிறது”

“ஏனென்றால், பைனாகுலரின் லென்ஸ்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. நீ கையைக் கொஞ்சம் அசைத்தாலும் பைனாகுலர் காட்டும் காட்சி சுத்தமாக மாறிவிடும்” என்று விளக்கினாள் சந்தா.

அன்று இரவு சந்தாவும் டிங்க்குவும் விண்மீன் நோக்குவதற்காக ஆய்வுக்கூடத்துக்குத் திரும்பினார்கள்.

“விஞ்ஞானிகள் அருகிலுள்ள ஒரு கோளரங்கத்திலிருந்து ஒரு தொலைநோக்கியை ஏற்பாடு செய்துள்ளனர். அதை நான் உனக்குக் காட்டுகிறேன்” என்று சந்தா டிங்க்குவிடம் கூறினாள்.

மொட்டை மாடியில், தொலைநோக்கியில் தன் கண்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்த டிங்க்கு, “சனி கோள் நம் பாடப் புத்தகங்களில் வரையப்பட்டுள்ளதைப் போலவே தெரிகிறது. ஒரு ஆற்றல் மிக்க தொலைநோக்கியின் உதவியின்றி அதை இப்படிப் பார்க்கவே முடியாது” என்றான்.

“ஆமாம், சில தொலைநோக்கிகள் நமது வீட்டின் அளவு பெரியவை. மிகமிகத் தொலைவிலுள்ள விண்மீன் மண்டலத்தையும் காண்பிக்கக் கூடிய ஆற்றலுள்ளவை” என்றாள் சந்தா.

ஏராளமான விண்மீன்கள் சிதறிக் கிடக்கும் வானத்தை பார்த்துக்கொண்டே டிங்க்கு கேட்டான், “அக்கா, வேற்றுக்கிரக மனிதர்களும் அவர்களது தொலைநோக்கி வழியாக நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நீ நினைக்கிறாயா?” சந்தா தொலைநோக்கியைக் கைப்பற்றி வேற்றுக்கிரக மனிதர்களைத் தேடத் தொடங்கினாள்!

என்ன பார்க்கிறாய்?

சிறிய பொருட்களைத் தெளிவாகக் காண பூதக்கண்ணாடிகளும் நுண்ணோக்கிகளும் உதவுகின்றன. பைனாகுலர் மற்றும் தொலைநோக்கிகள் மிகத் தொலைவில் உள்ளவற்றைப் பார்க்க உதவுகின்றன. இவை அனைத்திலுமே ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட லென்ஸ்கள் இருக்கின்றன.

லென்ஸ் என்பது ஒரு கண்ணாடித்துண்டு அல்லது ஒளி ஊடுருவக்கூடிய ஏதேனும் ஒரு பொருளின் துண்டு. அது ஒரு புறத்தில் அல்லது இருபுறங்களிலும் குழிந்தோ குவிந்தோ இருக்கும். ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது. ஒளி நம் கண்களை வந்தடையும் முன் இந்த லென்ஸ்கள் அதை தக்கபடி வளைத்து, நாம் அவற்றின் வழியாகப் பார்க்கும் பொருட்களை பெரியதாகவோ சிறியதாகவோ தெரியுமாறு செய்கின்றன.