Karippu Manikal

கரிப்பு மணிகள்

1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள உப்பள தொழிலாளர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர்.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் "நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர் வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு. நீர், காற்று, வெளிச்சம் போன்று இது இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கும் விலையின்றிக் கிடைக்க வேண்டும் என்று காந்தியடிகள் உப்பை முன்னிட்டு நாட்டு விடுதலைக்கான அறப்போரைத் துவக்கினார். நீங்கள் உப்பளங்களைச் சென்று பார்த்தும் ஓர் நாவல் புனைய வேண்டும்" என்று கூறினார். நான் ஒரு நாவலை எழுதி முடிக்கு முன் அநேகமாக இவ்விதமான தூண்டல்களுக்கான வாக்குகள் அடுத்த முயற்சியைத் துவக்க என் செவிகளில் விழுந்துவிடும். இம்முறை இது வெறும் வாக்கு என்று கூடச் சொல்ல மாட்டேன். மிகவும் அழுத்தமாகவே பதிந்து விட்டது. எனவே, 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை முடித்த கையுடன் நான் தூத்துக்குடிக்குப் பயணமானேன். தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன்.

இதற்கு முன் நான் உப்பளங்களைக் கண்டிருந்திருக்கிறேன். வறச்சியான காற்றும் சூரியனின் வெம்மையும் இசைந்தே உப்புத் தொழிலை வளமாக்குகிறதென்ற உண்மையைப் உப்புப் பாத்திகளில் கரிப்பு மணிகள் கலகலக்கும் விந்தையில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வியப்புக்கப்பால் உப்புப் பாத்திகளில் உழைக்கும் தொழிலாளரைப் பற்றி எண்ணும் கருத்து அப்போது எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் அந்த மனிதர்களைத் தேடிக் கொண்டு உப்பளங்களுக்குச் சென்றேன்.

உப்புக் காலம் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த புரட்டாசிக் கடைசியின் அந்த நாட்களிலேயே, உப்பளத்தின் அந்தப் பொசுக்கும் வெம்மையில் என்னால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க இயலவில்லை. கண்களுக்கெட்டிய தொலைவுக்குப் பசுமையற்ற - உயிர்ப்பின் வண்ணங்களற்ற வெண்மை பூத்துக் கிடந்தது. வெண்மையாகப் பனி பூத்துக் கிடந்திருக்கும் மலைக்காட்சிகள் எனது நினைவுக்கு வந்தாலும் எரிக்கும் கதிரவனின் வெம்மை அந்த நினைப்பை உடனே அகற்றிவிட்டது. அங்கே காலையிலிருந்து மாலை வரையிலும், கந்தலும் கண் பீளையுமாக, உப்புப் பெட்டி சுமந்து அம்பாரம் குவிக்கும் சிறுவர் சிறுமியரையும், பெண்களையும், பாத்திகளின் உப்பின் மேல் நின்று அதை வாரும் ஆண்களையும் கண்டேன். அப்போது எங்கோ ஃபிஜித் தீவினில் கரும்புத் தோட்டத் தொழிலாளர் நிலையை நினைந்துருகித் தன் கண்ணீரையும் பாக்களாக இசைத்த பாரதியின் வரிகள் என்னுள் மின்னின. அந்நியன் நாட்டை ஆளும் நாட்களல்ல இது. நாள்தோறும் எங்கெங்கெல்லாமோ பல மூலைகளிலும் மக்கள் உரிமைகளும், நியாயமான சலுகைகளும், நியாயமல்லாத சலுகைகளும் கோரிக் கிளர்ச்சிகள் செய்வதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்துவதும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாடிக் கட்டிடங்களில் குளிர்ச்சியான இதம் செய்யும் அறையில் அமர்ந்து கோப்புக் காகிதங்களில் கையெழுத்துச் செய்யும் அலுவலகக்காரர்கள், மருத்துவ வசதிகளும், ஏனைய பிற சலுகைகளுமே மாதத்தில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பெறுகின்றனர். சுதந்தர இந்தியாவில் மக்கட் குலத்துக்கு இன்றியமையாததோர் பொருளை உற்பத்திச் செய்வதற்கு உழைக்கும் மக்கள், உயிர் வாழ இன்றியமையாத நல்ல குடிநீருக்கும் திண்டாடும் நிலையில் தவிப்பதைக் கண்ட போது எனக்கும் குற்ற உணர்வு முள்ளாய்க் குத்தியது. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் சுட்டெரிக்கும் வெய்யிலில் பணியெடுக்கும் இம்மக்களுக்கு, வாராந்திர ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளும் கூடக் கூலியுடன் கிடையாது. கிடைக்கும் கூலியோ உணவுப் பண்டங்களும், எரிபொருளும் உச்சியிலேறி விற்கும் இந்த நாட்களில், இம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையானதும் ஆனால் உண்மையானதுமான தென்னவென்றால், உப்பளத் தொழிலாளி, இருபத்தைந்து ஆண்டுகள் பணியெடுத்திருந்தாலும், தனது வேலைக்கான நிச்சயமற்ற நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறான் என்பதேயாகும். ஒரு சாதாரண குடிமகனுக்கு, ஒரு சுதந்திர நாட்டில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய எந்த வசதியையும் உப்பளத் தொழிலாளி பெற்றிருக்கவில்லை. வீட்டு வசதி, தொழிற்களத்தில் எரிக்கும் உப்புச் சூட்டிலும் கூடத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஓய்வுக்கான விடுப்பு நாட்கள், முதுமைக்கால காப்பீட்டுப் பொருள் வசதி, குழந்தைகள் கல்வி, உப்புத் தொழில் இல்லாத நாட்களில் வாழ்க்கைக்கான உபரித் தொழில் ஊதிய வசதிகள் எதுவுமே உப்பளத் தொழிலாளிக்கு இல்லை என்பது இந்த நாட்டில் நாகரிகமடைந்தவராகக் கருதும் ஒவ்வொருவரும் நினைத்து வெட்கப்படவேண்டிய உண்மையாக நிலவுகிறது.

உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல் நலத்துக்கு ஊறு செய்கிறது. கை கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின்றன. கண்களைக் கூசச் செய்யும் வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது. பெண்களோ அவர்களுடைய உடலமைப்பு இயல்புக்கேற்ற வேறு பல உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். தூத்துக்குடி வட்டகையில் உப்பள நாட்கூலி பல தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஆண்களுக்கு ரூ. 6-75, பெண்களுக்கு ரூ. 4-40 சிறுவர் சிறுமியருக்கு ரூ. 3-00 அல்லது 2-50 என்று பொதுவாக நிர்ணயித்திருக்கின்றனர். (அரசு நிர்ணய கூலி இதைவிடக் குறைவு என்று கேள்விப்பட்டேன்) ஆனால் இந்த நிர்ணயக் கூலி பெரும்பாலான தொழிலாளருக்கு முழுதாய் கிடைப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர், கங்காணி அல்லது 'காண்ட்ராக்ட்' எனப்படும் இடை மனிதர் வாயிலாகவே ஊதியம் பெறுகின்றனர். பதிவு பெற்ற தொழிலாளிகள், அளநிர்வாகத்தினரிடம் நேரடி ஊதியம் பெறுபவர் மிகக் குறைவானவர்கள் தாம். அநேகமாக எல்லாத் தொழிலாளரும் இடை மனிதன் வாயிலாகவே நிர்வாகத்தினரிடம் தொடர்பு பெறுகின்றனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி நேரம் சென்று அளத்துக்குப் போய்விட்டால் அன்று கூலி இல்லாமல் திரும்பி வருவதும் கூட வியப்பில்லையாம்! குழந்தைகள் ஆண்டைக் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டின் எதிர்காலம் மழலைச் செல்வங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்ற நோக்கில் பல முனைகளிலும் திட்டங்களும் பாதுகாப்புப் பணிகளும் துவங்கப் பெறுகின்றன. அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் வறியவர்களாகவே நாட்டு மக்கள் பெரும்பாலானவர் நிலைமை இருக்கும் போது சிறுவர் உழைப்பாளிகளாக்கப் படுவதைத் தடைசெய்வது சாத்தியமில்லை. உழைப்பாளிச் சிறுவருக்கு சத்துணவு மற்றும் கல்வி வசதிகளும் அளித்து உதவத் திட்டங்கள் பற்றி ஆராயப்படுகின்றன. இந்நோக்கில் சிறார், எந்தெந்தக் காலங்களில் உழைப்பாளிகளாகக் கூலி பெறுகின்றனர் என்ற விவரங்கள் இந்நாட்களில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் உப்பளத்தில் கருகும் குழந்தைகளைப் பற்றி யாரும் குறிப்பிட்டிராதது குறையாக இருக்கிறது. இந்நிலை வெளி உலகம் அறியாமல், கேட்பாருமற்று, உரைப்பாருமற்று அவலமாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. இச்சிறாருக்கு தனிப்பட்ட முறையில், அந்தத் தொழிற்களத்தில் அவர் ஈடாக்கும் உழைப்புக்குகந்த முறையில் உணவுப்பொருள், மருத்துவ வசதி (மற்றும் கல்வி)யும் அளிக்க வழி செய்யப்படல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நான் நெஞ்சம் கனக்க, உப்பளத் தொழிலாளரிடையே உலவிய போது, நண்பர் 'சிட்டி' அவர்கள் வாக்கை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.

இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக் கொறிக்கும் சிறு தீனிகளாகிவிடக் கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப் போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறது.

இம்முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வமும் ஆவலுமாக உதவிய நண்பர்கள் பலருக்கும் நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். தூத்துக்குடி என்றாலே, நண்பர் திரு. ஆ.சிவசுப்பிரமணியனின் இல்லமே நினைவில் நிற்கிறது. வ.உ.சி. கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவருடைய நட்பு, இலக்கிய வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்று மகிழ்கிறேன். எந்த நேரத்திலும் சென்று உதவி வேண்டி அவரை அசௌகரியத்துக்குள்ளாக்கும் உரிமையை அவர் மனமுவந்து எனக்கு அளித்திருக்கிறார். இவரது இல்லம் என்றால், குடும்பம் மட்டுமல்ல. இக்குடும்பத்தில் பல மாணவர்கள் பேராசிரியர்கள் ஆகியோரும் இணைந்தவர்கள். அவர்களில் நானும் ஒருவராகி விட்டதால், உப்பளத்து வெயிலில் நான் காய்ந்த போதும், தொழிலாளர் குடியிருப்புகளில் நான் சுற்றித் திரிந்த போதும், நான் தனியாகவே செல்ல நேர்ந்ததில்லை. மாணவமணிகளான இளைஞர்கள் திரு. எட்வின் சாமுவேல், சிகாமணி ஆகியோர் நான் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட பலரைச் சந்தித்துச் செய்தி சேகரிக்க உதவியதை எந்நாளும் மறப்பதற்கில்லை.

உப்பளத் தொழிலாளரில் எனக்குச் செய்தி கூறியவர் மிகப் பலர். வேலை முடித்து வந்து இரவு பத்து மணியானாலும் தங்கள் உடல் அயர்வைப் பொருட்டாக்காமல் எனது கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து என்னைச் சந்தித்த தோழர்கள் திருவாளர் மாரிமுத்து, முனியாண்டி, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோருக்கு நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன்.

எப்போதும் போல் எனது எழுத்துக்களை நல்ல முறையில் வெளியிட்டு எனக்கு ஊக்கமளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இதை நூல் வடிவில் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் நன்றி கூறி தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் எனக்கு ஆதரவு நல்கும் வாசகப் பெருமக்களின் முன் இதை வைக்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்.

அத்தியாயம் - 1

உத்திராயனத்துச் சூரியன் உச்சிக்கு நகர்ந்து செங்கதிர்க் குடை பிடிக்கிறான். தெற்குச் சீமையின் கடற்கரையோரங்களில் விரிந்து பரந்து கிடக்கும் உப்பளங்களில் இன்னோர் புத்தாண்டு துவக்கமாகி விட்டது. இட்ட தெய்வங்களின் மேலாடை களைந்து பரிமளதைலம் பூசி நீராட்டுவது போல் மண் அன்னையின் 'அட்டு' நீக்கி, பதமான களியும் மணலும் விரவி, நீரைக்கூட்டி, 'செய் நேர்த்தி' செய்யும் கோலங்கள் கடற்கரை நெடுகிலும் ஏக்கர் ஏக்கராக விரிந்த உப்பளங்களில் காட்சிகளாக விரிகின்றன.

'தைச்சீர்' கழித்து, பொன்னின் கதிர்களறுத்துக் களத்து மேடுகளில் நெல்மணிகளை உழவர் பெருமக்கள் குவிக்கும் அக்காலத்தில், ஆற்றோரத்து விளைநிலங்களில் மண் அன்னை பிள்ளை பெற்ற தாயாக மகிழ்ந்து காட்சியளிக்கிறாள். மீண்டும் மீண்டும் பசுமையில் பூரித்துக் கொழித்து இயற்கையில் மலரும் அன்னையாக உலகை உய்விப்பாள்.

ஆனால், இந்தக் கடற்கரையோரங்களில், பூமித் தாயின் பசுமையை அழித்து, உலகெங்கும், உயிர்க்குலமனைத்துக்கும் சாரமளிக்கும் கரிப்பு மணிகளை விளைவிக்கச் செய்நேர்த்தி செய்கிறார்கள். வானின்று பொழியும் காருக்குப் போட்டியாக, பூமிப்பெண்ணை என்னாலும் தாயாக்க இயலும் என்று கடலோன் பூமிப்பெண்ணின் உதரத்தில் தங்கி அவளை அன்னையாக்குகிறான். நல்லார் பொல்லாரென்ற சூதறியாத வானவனோ எல்லோருக்கும் பொதுவாக காய்ந்து, மண்ணை வெய்துயிர்க்கச் செய்கிறான். அவன் கொடையில் கரிப்பு மணிகள் கண் மலர்கின்றன.

விரிந்து பரந்த பாத்திகளுக்குச் செய்நேர்த்தி செய்யும் கால்கள் அனைத்தும் மனிதக் கால்கள். நீரும் களியும் மணலும் குழம்பிக் குழம்பி மனித ஆற்றலின் வெம்மைகளும் மண்ணின் உட்சூடும் கொதித்து ஆவியாகிப் போகும் 'செய்நத்து' கருவைக்காட்டு உப்பளத்திலும் நடக்கிறது. அந்தப் பாதங்கள் கறுத்துக் கன்றிப் புண்பட்டுத் தேய்ந்தாலும் இன்னும் ஆற்றலைக் கக்கும் இயக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

"செறுக்கி மவளுவ... அழுந்த மெறியுங்க...! சாமியாரே? ஆவட்டும்!..."

கங்காணியின் விரட்டல் கசையடிபோல் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த அதட்டல்கள் அவ்வப் போது விழுந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அங்கே பாத்தி மிதித்துப் பண்பாடு செய்யும் மேனிகள் இரத்தமும் சதையும் துடிப்பும் துள்ளலுமாக இல்லை. அமாவாசைக் கடலைப் போன்று ஆற்றலை அவர்களால் கொட்ட முடியாது. இறைத்து இறைத்து ஊற்றுக் கண் வற்றிய கிணறு. மேல் மழையோ அற்பம். சுரண்டினால் சிறிது நீர் பொசிந்து வரும். பிறகு நின்று போகும். மீண்டும் வெட்டினால் சுருசுருவென்று நீர் ஊறி வரும். அந்தப் பாத்தியில் எட்டுப் பேர் மிதிக்கிறார்கள்.

மருதாம்பா, மாரி, இசக்கி மூவரும் இளமையில் ஆளுகைக்கப்பால் அநுபவப் பாதையில் தேய்ந்து மெலிந்தவர்கள். இசககியின் மகளான பன்னிரண்டு பிராயத்தி முத்தம்மா, மாரியின் மகள் லெச்சுமி, பையன் கந்தவேலு கைக்குழந்தையை நிழலில் போட்டுவிட்டு, மூன்று பிராயத்து முதற் குழந்தையைக் காவலுக்கு வைத்து விட்டு அடிக்கொரு முறை அழுகையொலி கேட்கிறதா என்று பார்த்துக் கொண்டே மிதிக்கும் ருக்குமணி, ஆகியோரைத் தவிர ஒரே முதிய ஆண் மகனான அங்கே 'செய்நத்து'ச் செய்பவன், 'சாமியார்' என்றழைக்கப் பெறும் கண்ணுசாமிதான். அவன் மருதாம்பாளின் புருஷன்.

"ஏத்தா! இது ரிக்காடு டான்சில்ல குதிக்குறாளுவ... மெதிச்சுத் துவயிங்க! விருசா ஆவட்டும்! சாமியாரே, ஒமக்கு இது சரியல்ல. நீரு வாரும். 'சிப்சம்' எடுத்துப் போட..." என்று கங்காணி அவனை நிறுத்தித் தோளைப் பற்றி அழைத்துச் செல்கிறான்.

உட்சூடும் வெளிச்சூடும் சங்கமித்துக் கால்களில் நெருப்பைக் கக்குகின்றன. நெருப்புப் பந்தத்தில் நெருப்பு வளையத்தில்... அவர்கள் நடக்கிறார்கள். நடப்பு இல்லை... மிதித்தல். பையன் வாளியில் நீரெடுத்து அவ்வப்போது மண்ணில் விசிறிக் கொட்டுகிறான். அந்த நீர், அவர்கள் காலடிகளில் பாயும் போதே ஆவியாகிவிட, தேய்ந்து வெண் குறுத்தாகிவிட்ட அவர்கள் அடிகளில் கொப்புளத்தைத் தோற்றுவிக்கும் கொதிப்பைக் கக்குகிறது. அழுத்தமும் சூடும் மண்ணை மெத்து மெத்தென்று வெண்ணையாக குழைத்த பிறகு கெட்டித்து இறுகச் செய்யும் நிணமும் சதையும், பூவின் மென்மையுமான பெண்மையின் துடிப்புக்களும் இறுகிக் கெட்டித்துக் காய்ந்து போகும் இந்தச் 'செய்நேர்த்தி' தை, மாசி முழுதும் கூட நீண்டு போகும்.

மருதாம்பா, சற்றே தலைதூக்கி, கங்காணி, தன் புருஷனை அழைத்துச் செல்வதைப் பார்க்கிறாள். சென்ற ஆண்டு வரையிலும் சாதாரணத் தொழிலாளியாக இருந்த சுப்பன் இப்போது கங்காணியாகி விரட்டுகிறான். மிஞ்சினால் முப்பது வயசிருக்கும். கணக்கப் பிள்ளைக்கு அவ்வப்போது கையும் மனமும் நிறையக் காணிக்கை வைத்திருப்பான். கங்காணியாகி விட்டான். செய்நேர்த்திக் காலத்தில் நிர்ணயக் கூலி முழுவதையும் கொடுக்க மாட்டார்கள். உப்பெடுக்கத் தொடங்கி விட்டாலும் அந்த அளத்தின் இருநூறு ஏக்கரிலும் பண்பாட்டு வேலை முடியவில்லை என்று கூலியைக் குறைத்தே கொடுப்பார்கள். ஆணுடைய நிர்ணயக் கூலி பெண்ணுடைய கூலியை விட அதிகம் என்பதால், தன் புருஷனை ஜிப்சம் சுமக்கத் தள்ளிப் போகிறான் என்றுணர்ந்து மருதாம்பா சில நிமிடங்கள் செயலற்று நிற்கிறாள். கண்ணுசாமிக்குத் துல்லியமான கண் பார்வை போய் எத்தனையோ நாட்களாகி விட்டன. அவர்களைப் போன்ற உப்பளத் தொழிலாளிகள் யாருக்குமே தெளிவான கண்பார்வை கிடையாதுதான் என்றாலும் கண்ணுசாமிக்குக் கண்களில் நீர் வடிந்து நீர் வடிந்து, சென்ற ஆண்டிலிருந்து, கலத்திலிட்ட சோறு கூடத் தெரியாதபடி ஒளி மங்கிவிட்டது.

"நீரு பெட்டக்கண்ண வச்சிட்டு வார்பலவைப் புடிச்சித் தொழில் செய்ய ஏலாது. 'மெக்கிட்டு'க் கூலியா (மெக்கிட்டு - அன்றன்று சிறு கூலிக்குச் செய்யும் துண்டு வேலை) செய்நத்துக்கு இருந்துபோம்... அதும் கூட கணக்கவுள்ள கண்டாச் சண்டை போடுவா. ஆச்சி அளுகாண்டு எடுக்கே..." என்று வேலைக்குச் சேர்க்கும் போதே நிபந்தனை போட்டான் கங்காணி.

பெண்களுக்கு நான்கு ரூபாய் கூலி கொடுப்பான். அவர்களுடைய நிர்ணயக் கூலி நாலு ரூபாயும் நாற்பது பைசாவுமாகும். ஆண்களுக்கு நிர்ணயக் கூலி ஆறு ரூவாயும் சொச்சமுமாகும். ஆனால் செய்நேர்த்திக் காலத்தில் முழுக்கூலியைக் கண்களால் பார்க்க இயலாது. நான்கு ரூபாய் கொடுப்பான் முன்பெல்லாம். செய்நேர்த்திப் பணிக்கு ஆண்களை மட்டுமே எடுப்பார்கள். பெண்கள் வரப்பில் குவிந்த உப்பைத் தட்டுமேட்டில் கொண்டு சேர்க்கும் பணியைத்தான் பெரும்பாலும் செய்வார்கள். இந்நாட்களிலோ, ஆடவருக்கு அதிகக்கூலி என்பதால், பெண்களையும், இரண்டு ரூபாய்க் கூலிக்கு வரும் சிறுவர் சிறுமிகளையும் 'பாத்தி மிதிக்க'ச் செய்கிறார்கள். மிதித்து மிதித்து மண்ணைப் பண்படுத்த வேண்டும். காலால் அழுத்தினால் அடிபதியலாகாது. இவ்வாறு பண்படுத்தும் பாத்திகளே உப்பை விளைவிக்கும் 'பெண்' பாத்திகள். ஆண்டுதோறும் தவறாமல் இந்தப் பெண் பாத்திகளுக்குக் குறையாமல் சீரெடுக்க வேண்டும். இந்தப் பாத்திகளில் விளையும் உப்பு வெள்ளை வெளேரென்று, தும்பைப்பூ வண்ணத்தில் கற்கண்டைப் போல் தோன்றும். அவ்வளவும் தூத்துக்குடித் துறையிலிருந்து ஏற்றுமதியாகும் 'கல்கத்தா' உப்பு.

இந்த அளவில் கடலிலிருந்து நேராக நீரைக் கொண்டு வருவதில்லை. கிணறுகள் தோண்டி, அதிலிருந்து நீரை இறைவை இயந்திரத்தால் தெப்பம் என்று சொல்லப்பெறும் முதல் பாத்திகளில் பாய்ச்சுகிறார்கள். இப்பாத்திகளில் நீரின் அடர்த்தி கூடியதும், முதல் கசடுகளான சேரு, கீழே படிந்து விடும். இவ்வாறு ஆண்டு முழுவதும் படிந்த சேறு தான் இறுகிக் காய்ந்து நட்சத்திரச் சில்கள் பதித்தாற் போன்று ஜிப்சம் எனப் பெறும் கூட்டுப் பொருளாகிறது. இதைப் பெயர்த்தெடுக்கத்தான் கங்காணி, கண்ணுசாமியைத் தள்ளிச் செல்கிறான்.

"லே செவந்தகனி, சாமியாருக்கும் 'சிப்சம்' பேத்துக் குடு... இங்கிட்டு நின்னு திருப்பிப் போடுவாரு..."

"செவந்தகனியா?" என்று திருப்பிக் கேட்கும் கண்ணுசாமி எங்கோ ஓர் மூலையில் நோக்குகிறான்.

"ஆமா, நாதா, மெக்கிட்டா, காண்டிராக்டா மாமா?"

"மெக்கிட்டுன்னுதா சொன்னா. எனக்கு என்ன எளவு தெரியிது?..."

சிவந்தகனி மருதாம்பாளுக்குத் தம்பி முறையாகக் கூடியவன். அவன் ஒரு பாளத்தை வெட்டி, கண்ணுசாமியின் கைகளில் வைக்கிறான். கண்ணுக்கு எல்லாம் மொத்தையாக இருக்கிறது. போகும் தடம் தெளிவாகத் தெரியாமல் எங்கே கொண்டு எப்படிப் போடுவான்? கண்களிலிருந்து இனி வடிவதற்கு நீருமில்லை. 'பல் முளைத்துப்' போன அந்தப்பாளம் கைகளைக் குத்தி அவனை வளையச் செய்கிறது. தடம் தெரியாமல் அதையும் போட்டுக் கொண்டு விழுகிறான்.

"...கீள வுழுந்திட்டாரே... அவரால் ஆவாது. பாவம்..." சிவந்தகனி அவரைத் தட்டித் தூக்குகிறான். "ஏதும் அடிபட்டிச்சா மாமா? பாவம், உம்மால இனி அளத்து வேல செய்ய முடியுமா?..."

அவன் தூக்கிய பாளம் நொறுங்கி மண்ணும் சில்லுமாகக் கண்களில் விழுப்புழுதி பரவுகிறது. உச்சியில் வழுக்கை, காதோரங்களில் வெண்மையும் கருமையுமாகப் பிரிபிரியாக முடிக்கற்றை; சென்ற ஆண்டின் இறுதியிலிருந்தே வேலைக்குப் பாதி நாள் வர முடியாமல் ஆசுபத்திரிக்கும் சென்று வந்தான். கண் பார்வை மீளுமென்ற நம்பிக்கை இல்லை. அதற்குப் பிறகு தான் அவன் முகச்சவரம் செய்து கொள்ளவில்லை. பார்வை போனாலும் வயிற்றுப் பசி குறைகிறதா?

"சாமியாரே! உன்னால எதும் ஆவாது! இது வரய்க்கும் செஞ்சதுக்கு ரெண்டு ரூவாக்கூலி தாரேன்... அம்புட்டுத்தா..." என்று கங்காணிச் சுப்பன் கோடு கிழித்து விடுகிறான்.

ரெண்டு ரூபா... மருதாம்பாளுக்கு நான்கு ரூபாய் வரும். வீட்டில் நான்கு குழந்தைகள்... மழைக்காலம் முழுவதும் வேலை கிடையாது. அப்போது வாங்கித் தின்ற கடன், வீட்டு வாடகை, பழைய கடன், புதிய கடன், அரிசி, விறகு, செலவு சாமான்களின் விலைகள்...

மண்ணிலே விழுந்தவனால் எழுந்திருக்க இயலாத பாரங்கள் அழுத்துகின்றன. பகல் நேர உணவுக்கு மணி அடிக்கிறது.

மருதாம்பா வந்து அவன் கையைப் பற்றி அழைக்கிறாள்.

"வுழுந்திட்டயளா, சிவந்தகனி சொன்னா. செவனேன்னு பாத்தி மிதிச்சிய. வேலையில்லேன்னா... போறா, நீரு வாரும்."

உணர்ச்சிகள் களரியாக மோதுகின்றன. வாலிபம் கிளர்ந்த காலத்தில் அவன் துறைமுகத்தில் தொழிலாளியாக இருந்தான். முட்டையும், கறியும் தின்று வளர்த்த உடலில் நிமிர்ந்த ஆணவத் திமிர் இன்று கரைந்து, குத்துப்பட்டு வீழுந்து விட்டாலும், அந்தப் பழைய வடிவத்தை இன்னமும் நினைப்பூட்டும் உடலியல்பு மாறிவிடவில்லை. கருமை பாய்ந்து தடித்த நெற்றியும், நரம்புகள் புடைத்துத் தசைகள் 'முறுகத்' தெரியும் தோள்களும் கால்களும் தளர்ச்சியைக் காட்டவில்லை. மருதாம்பா அவன் கையைப் பற்றியிருக்கிறாள். அவள் கையிலும் நரம்புகள் புடைக்க, எலும்பு முட்டியிருக்கிறது. அந்தக் கை, ஒரு காலத்தில் எப்படி இருக்கும்?

மடையோரம் செழித்து வளர்ந்த தாழையின் நடுவே பூத்த குலைபோல் இருப்பாள். அவளைக் கட்டியவன் ஒரு கிழவன், ஈர்க்குச்சி போல் கையும் காலுமாக ஒரு சீக்காளி. பட்டாணி வறுக்கும் கடையில் வேலை செய்த அவன் கையில் கிடைத்ததைக் குடித்து விட்டும் வருவான். முதல் தாரத்துக்கு மூன்று வளர்ந்த பிள்ளைகள்.

மருதாம்பா துறைமுகத்தில் மூட்டை சுமக்க வந்த காலத்தில் அந்தக் கங்காணிக்கு இரையாகு முன் இவன் பார்வையில் உருகிப் போனாள். இவனுக்கும் அப்போது கல்யாணமாயிருந்தது. ஒரு மகளும் மகனுமாகக் குழந்தைகளும் இருந்தார்கள். ஆனால் கட்டியவள் ஒரு முசுடு. இவனுக்கு ஈடு கொடுக்கத் திராணியில்லாதவள். எனவே இவளை அவன் சேர்த்துக் கொண்டான். துறைமுகத்துத் தொழிலை விட்டு அந்நாளில் இவன் உப்பளத் தொழிலுக்குக் காண்டிராக்டாக வந்தான். கையில் காசு குலுங்கியது. ஆனால் இளமையும் எழிலும் நிறைந்த பெண்பிள்ளைக்குப் புருஷன் உடன் இருந்தாலே, தொழிற்களங்களில் அவர்கள் வரப்போரத்து மலர்களாகக் கருதப்படுவார்கள். கண்ணுசாமி அவளுக்குப் புருசனுமில்லை. எனவே இவள் நிமித்தமாக அந்தக் கணக்கப்பிள்ளைச் சுடலைமாடனிடம் மோத வேண்டியிருந்தது. அவன் சாய்கால் உள்ளவன். இவன் மீது கொலைக்குற்றம் சுமத்திச் சிறைக்கும் அனுப்பி வைத்தான். சிறையில் மூன்றாண்டுகள் கழித்துவிட்டுத் திரும்பி இவன் வந்த போது, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட்டாள்.

மருதாம்பாதான் இவனைக் கண்டு வீட்டுக்கழைத்துச் சென்றாள். அவள் கிழவனை விட்டு வந்து விட்டாள். அந்தக் கணக்கப்பிள்ளை அளத்திலும் வேலை செய்யவில்லை. இருவரும் அந்நாளிலிருந்து சேர்ந்து வாழ்கிறார்கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமாகக் குழந்தைகள் குடும்பம். 'தாலிக்கெட்டை'ப் பற்றிக் கவலைப் படாமல் வளர்ந்திருந்தாலும், தொழில் இத்தனை ஆண்டுகளில் அவர்களுடைய வண்மையைக் கூட்டியிருக்கவில்லை. உப்பளத் தொழில் அத்தகையதுதான். எப்போதேனும் அந்த மணற்கரையில் பெய்யும் மழையைப் போன்ற அந்த அற்பக் கூலியினால் அவர்கள் பசித்தீயை முற்றிலும் அவித்து வறட்சியைத் தீர்க்க முடிவதில்லை.

வழுக்கு மரமாகத் தெரிந்த வாழ்க்கையில் அவர்களால் ஏறவே முடியவில்லை. மருதாம்பா சட்டுவமாகத் தேய்ந்து போனாள். ஒவ்வொரு மழைக்காலமும் சோதனைக்காலம். இடையில் பத்துப் பதினைந்து நாட்கள் எங்கேனும் கூலி வேலை கிடைத்தாலே பெரிது. அந்தக் கண்டம் தப்பி, புத்தாண்டன்று பாத்திப் பண்பாட்டுக்குத் தொழிலாளர் வரும்போது, அவர்களது அவல நிலையை உப்பளத்து முதலாளிமார் முற்றிலும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றால் தவறில்லை. ஐந்து ரூபாய் கூலி பேசிவிட்டு மூன்று ரூபாய் கொடுத்தாலும் மீறிச் சென்றுவிட இயலாமல் அவர்கள் பொருளாதார நிலை குழிபறித்து வைத்திருக்கிறது.

பன ஓலை கொண்டு வேயப்பெற்ற அந்தக் கொட்டகையில் உள்ளே சந்து சந்தாக வெய்யில் விழுந்து அவர்கள் உணவு கொள்வதைப் பார்க்கிறது. "மேல வெயில்... தள்ளி ஒக்காரும்" என்று மருதாம்பா அவனை நகரச் செய்கிறாள். பிறகு உணவுப் பாத்திரத்தைத் திறந்து, ஒரு வெங்காயத் துண்டையும் பச்சை மிளகாய்த் துண்டையும் கேழ்வரகுக் களியின் உருண்டையையும் அவன் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.

நசுக்கப் பெறும் உணர்வுகள் அலையலையாக உந்த உள்ளத்து விம்மல் வெளிப்படுகிறது. "நீ தேடிச் சோறு போட ஒக்காந்திட்டேன் பாத்தியா?" என்று விம்முகிறான்.

"பேசாதிரிம்..." என்று இரகசியக் குரலில் கடிந்து கொள்கிறாள் மருதாம்பா.

அங்கே வேலை செய்யும் அனைவருக்குமாக ஒரு பானை தண்ணீர்தான் குடிப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.

"ஏத்தா மொவத்தத் தொழில கழுவிக்கிறதுக்கென்ன..." என்று சிவந்தகனி யாரையோ சண்டை போடுகிறான்.

"நானென்ன சொம்பு தண்ணீயா எடுத்த? ஒரு கிளாசு, ஓங்காருவாரு தூள் பறக்கு..."

"இந்த அளத்துல தாவில! முன்ன பளஞ்சிபுர அளத்துல குடிக்க ஒரு சின்ன பக்கெட்டி தண்ணிதா வரும். அம்புட்டுப் பேரும் அத்தத்தா குடிக்கணும். ஒரு செறட்ட நீரு கெடய்க்காது செல நா. சித்திரக் கோடையில கெடந்து எரியுவம்..." என்று ஒரு கிழவி திருப்திப்படுகிறாள்.

கும்பியின் எரிச்சலைச் சோறு சற்றே தணித்தாலும், தண்ணீர்த் தாகம்...!

"எல்லாம் குடிச்சிப் போடாதிய" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் தங்கள் தூக்குப் பாத்திரங்களில் சிறிது நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். சிவந்தகனிதான் பங்கீடு செய்கிறான். "ந்திரீ... ஊத்து..." என்று கிழவி குழிந்த மூடியை மீண்டும் நீட்டுகையில் அவன் கண்டிப்பாக மறுக்கிறான். "ருக்மணி, புள்ளக்கிப் பாலு கொடுக்கா அவக்கு வேணும்" என்று பானையின் அடியில் ஒரு தம்ளர் தானிருக்கிறதென்று காட்டுகிறான்.

வெற்றிலைச் சாரும் புகையிலையும் போடுகிறவர்களும், பீடி கொளுத்தி வைப்பவர்களும், ஏதேனும் கட்டை தேடித் தலைக்கு வைத்துக் கொண்டு தலையைச் சாய்ப்பவர்களுமாக, சோற்றுக்கடை முடிகிறது.

"ஏத்தா, கங்காணிய பெரியாசுபத்திரில கொண்டு காட்டல?..." என்று மருதாம்பாளிடம் லெட்சுமி கேட்கிறாள். கண்ணுசாமி கங்காணி இல்லைதான். ஆனால் லெட்சுமிக்கு எல்லா ஆடவர்களும் கங்காணி என்றே நினைப்பு.

"பெரியாசுவத்திரில தா டாக்டர் பாத்து ஆபிரசன் பண்ணமின்னா; ஆபுரசன் பண்ணா சுத்தமா கண்ணு தெரியாம போயிடுமிண்ணு சொல்றாவ. இப்ப சோலியெடுக்க முடியாம இல்ல கடையில போயி சாமானம் வாங்கிட்டு வருவா. எங்க வளவில் அவிய பாட்டுக்கு நடந்திட்டுத் தா போவா, இந்த உப்பளத்துச் சூடு தா அக்கினியாட்டமா கண்ணுக்கு ஆவுறதில்லே..." என்று கூறுகிறாள் மருதாம்பா.

மீண்டும் மருதாம்பா பாத்தி மிதிக்கச் சென்று, மலை வாயில் கதிரவன் சாயும் வரையிலும் அவள் வேலை செய்யும் வரையிலும் கண்ணுசாமி அந்தக் கொட்டடியில் பிரும்மமாக உட்கார்ந்திருக்கிறான். ஐந்தரை மணியோடு பாத்தி மிதிப்பு ஓய்கிறது.

"வாரும் போவலாம்...!"

அவர்கள் குடியிருக்கும் இடம் இரண்டு மைல் தொலைவு இருக்கிறது. எல்லோரும் கைகளில் தூக்குப் பாத்திரங்களுடன் நடக்கின்றனர். சிறுவர்கள் ஓடுகின்றனர். பனை மரங்களினூடே செங்கதிரோன் இறுதியாகப் பிரியா விடை பெறும் ஒளியைப் பாய்ச்சுகிறான். நெருங்கி வரும் மருதாம்பா, அவன் செவிகளில் மட்டும் விழும்படியாகக் கேட்கிறாள்.

"ஏன் சவங்கிப் போயிட்டிய...?"

"சவங்காம என்ன செய்ய? ரெண்டு ரூவாக் கூலிக்குக் கூட ஏலாமப் போயிட்டனில்லா..."

அவனுடைய கை, வார் பலகைக் கம்பைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துக் கடினமாகி விட்ட கை, அவள் மணிக்கட்டைப் பற்றி அந்த எலும்பு முழியை அழுத்துகிறது.

"...நா... நாத்திக்கிழம போயி அந்த வுள்ளயக் கூட்டிட்டு வார..."

"எந்த வுள்ள?"

"அதா, ஒங்க வுள்ள பொன்னாச்சி பயலும் வரட்டும். ரெண்டோட ரெண்டா இருக்கட்டும். போன வருச மானோம்புக்குப் போனப்பவே செவந்தகனி பொஞ்சாதி சொன்னா. அவியளுக்கும் அஞ்சாறு வுள்ள; தம்பாட்டளத்துல (* தம்பாட்டளம் - தன் பட்டாளம் - சிறு அளவில் தாமாகவே உப்பு உற்பத்தி செய்யும் சிறு தொழில் அளம்) ஒண்ணும் கண்டு முதலாவுறதில்ல. நெதவும் அடியும் மிதியுந்தான்னா. இங்கு நாம கூட்டி வச்சிக்குவம். நாம குடிக்கிற கஞ்சிய அதுங்கக்கும் ஊத்துவம்னு தோணிட்டே இருக்கி. என்னாந்தாலும் அவிய ஆத்தா அநுபவிக்கிற சொத்து, நா அவகரிச்சிற்ற..."

இருளில் ஒலிக்கும் மந்திரச் சொற்களைப் போல அவன் செவிகளில் விழுகின்றன. அவன் ஆதரிக்கும் நெடு மரம், காய்ந்து பட்டுப்போகும் நிலையிலிருக்கிறான். தாயற்ற அந்தக் குழந்தைகளையும் கூட்டி வருவதாக அவள் சொல்கிறாள்.

இது...

அவன் மௌனமாக நடக்கிறான்.

அத்தியாயம் - 2

மருதாம்பா வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விட மாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நோயும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்ட போதும் அவள் விம்மி எழவுமில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவுமில்லை. வாழ்க்கை என்பதே பசியோடும், வேற அடிப்படைத் தேவைகளோடும், உடலுழைப்போடும் ஏற்படும் இடைவிடாத போராட்டம், அதற்காகவே தான் மனித பந்தங்கள்; பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையிலேயே கிளைக்கும் நெருக்கடிகளும் வாய்ப்புகளும் தான் அவளைப் போன்றோருக்கு வாழ்க்கையின் போக்கையே அமைக்கின்றன என்று தெரிந்தவள் அவள்.

தெப்பத்தில் ஒதுக்கப்பெறும் கடல் நீரைப் போல் அவர்கள் தங்கள் உடலுழைப்பை யாருக்காகவோ குவிக்கின்றனர். கடல் நீர் தனது சாரத்தைப் பாத்திகளில் மணிகளாக ஈந்துவிட்டு நஞ்சோடையாக (நஞ்சோடை - உப்பை வாரிய பின் எஞ்சிய நீர் வெளிச்செல்லும் ஓடை) வெளியேறும் போது யாரோ அதைக் கவனிக்கிறார்கள்! எங்கேனும் தறிகெட்டு ஓடி மணலோடையில் போய்ச் சேரும். அல்லது எங்கேனும் காட்டிலே போய்த் தேங்கி முடியும். அவர்களுடைய உரமும் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சியிலேயே பாத்திக் காடுகளிலும், தட்டு மேடுகளிலும் உருகிக் கரைகின்றன. பின்னர் யாருக்கும் எதற்கும் பயன்படாத நஞ்சோடை நீர் போல் ஒதுக்கப்படுகின்றனர். கண்ணுசாமியினால் அந்தக் குடும்பத்தைத் தாங்கும் முயற்சியில் இனி எதுவும் செய்ய முடியாது. மருதாம்பா அந்த ஞாயிற்றுக்கிழமையிலேயே அவனுடைய மகனையும் மகளையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை என்று நிச்சயம் செய்துவிட்டாள்.

பெரியகடை வீதியில் மிட்டாய்க் கடையில் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் சேவும் வாங்கிக் கொள்கிறாள். பொரிகடலை, பழம் எல்லாவற்றையும் ஒரு பைக்குள் வைத்துக் கொண்டு சிவந்தகனியுடன் திருச்செந்தூர் பஸ் போகும் மூலையில் வந்து நிற்கிறாள். சிவந்தகனியின் மனைவி தாய்வீட்டில் பிள்ளை பெற்றிருக்கிறாள். அவளுக்குச் சிறுகாயல்தான் ஊர். அதனால் தான் அவனுடன் கிளம்பி இருக்கிறாள். மச்சான் என்று கண்ணுசாமி மனைவியின் தமையனாரைக் கொண்டாடியதில்லை என்றாலும் அவர் மீது அவனுக்குப் பெருமதிப்பு உண்டு. அவர் வழியே தனி. கொஞ்சம் படிப்பு, உலக அநுபவம், அரசியலில் ஈடுபாடு எல்லாம் உடையவர். அவரும் சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அது மிகவும் கௌரவத்தைக் கொடுக்கக் கூடியதோர் அனுபவமாக அவர் பெருமையைக் கூட்டியிருக்கிறது.

மருதாம்பா, அவரைக் கண்ணுசாமி சிறைக்குச் சென்ற காலத்தில் அவர் வந்த போது பார்த்திருக்கிறாள். முதல் மனைவி செவந்தியை அவர் தான் வந்து கூட்டிச் சென்றார். செவந்தியை அவருக்குத் தங்கை என்றே மதிப்பிட முடியாது. மகள் என்று சொல்லலாம். அந்நாளிலே முடி நரைத்துச் சுருக்கங்கள் விழுந்து ஐம்பது வயசு மதிக்கத் தோற்றமளித்தார். செவந்தி இறந்து போன போது நல்லகண்ணு சிறையில் தான் இருந்தான். அப்போது சிவந்தகனி அங்கு பெண் கட்டியிருக்கவில்லை. வெகுநாட்கள் சென்ற பின்னரே அந்தச் செய்தி தெரிய வந்தது. பிறகு ஒரு நாள் அவர் பொன்னாச்சியையும் பையனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருப்பிடம் தேடி வந்ததாக அவளுக்குச் சேதிதான் தெரிந்தது. அந்நாள் புருஷன் பெண்சாதி இருவரும் இரவில் இரட்டை கூலி வருகிறதென்று உப்பு வாரச் சென்றிருந்தனர். பொன்னாச்சி வயசுக்கு வந்து நீராட்டு விழா எதுவும் கொண்டாடிக் கடிதம் வரவில்லை. ஆனால் சிவந்தகனியின் பெண்சாதி மாரியம்மா பெண் வயசுக்கு வந்துவிட்ட விவரம் தெரிவித்திருக்கிறாள்.

மணப்பாடு செல்லும் பஸ் வருகிறது. அது பதினைந்து நிமிடங்களில் அவர்களைக் கொண்டு வந்து மாதாகோயிலின் முன் இறக்கி விடுகிறது. பரதவர் குடியிருக்கும் ஊர் அது. ஞாயிற்றுக்கிழமையாதலால் மாதாகோயிலில் பூசை நடந்து கொண்டிருக்கிறது. வெயில் சுள்ளென்று விழுகிறது. பஸ் நிறுத்தத்தில், மொந்தன் பழக்குலை, கடலை மிட்டாய், பீடிக்கட்டு, சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட கடை ஒன்றும், புரூ காப்பி பொம்மை ஒட்டியதோர் விளம்பரத்துடன் சாக்குப்படுதா தொங்கும் டீக்கடை ஒன்றும் இருக்கின்றன. மண்ணில், உச்சி எண்ணெய் பளபளக்கச் சிறுவர் சிலர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அரையில் மட்டும் ஒரு சேலைத் துண்டைச் சுற்றிக் கொண்டு வெற்றுடம்புடன் கூடிய ஒரு சிறுமி தன் இளம் இடுப்பில் மார்புக் கூடு பின்னித் தெரியும் ஒரு பிஞ்சுக் குழந்தையைச் சுமந்தவளாக பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர்களை வேடிக்கைப் பார்க்கிறாள். மாதா கோயிலைச் சுற்றியிருந்த தெருக்கள் பரதவர் குடியிருப்பு என்று துலங்குகிறது. வெயிலில் கிடக்கும் வலைகளும், கருவாட்டு மீன்களைக் காவல் காத்தபடி குந்தியிருந்து பேசும் பெண்களும் அவர்கள் செல்லுவதைப் பார்க்கின்றனர்.

பரதவர் குடியிருப்பைக் கடந்தால் பசுஞ்சோலைகளாகத் தென்னை, முருங்கை, ஆமணக்கு என்று மரங்களும் இடையே காரைக்கட்டு வீடுகளும் வருகின்றன. தென்னங்கிடுகுகளால் ஆன வேலிகளும், நித்திய மல்லிகைப் பூங்கொடியும் மஞ்சள் குங்கும வாயில் நிலைகளும் அந்த வீடுகளுக்குரியவர்கள் பொருளாதார நிலையில் சற்றே மேம்பட்டவர்கள் என்று உணர்த்துகின்றன. மாகாளியம்மன் கோயில் அங்கே நிலை பெற்றிருக்கிறது.

அப்பால் பன ஓலைக் கூரை வீடுகள் தெரிகின்றன. சுரைக்கொடி படர்ந்த கூரைகள், மண் சுவர்கள், குலுகுலுவென்று மணலில் விளையாடும் குழந்தைக் கூட்டம், கோழிகள்... மண்ணில் நிழல் கண்ட இடங்களில் குந்தி ஈருருவிக் கொண்டோ வம்பளந்து கொண்டோ இருக்கும் பெண்கள்...

"அதா ஒரு புள்ள ஒரல்ல குத்திக்கிட்டிருக்குப் பாரு. அந்த வூடுதா. எனக்கு இன்னும் மேக்கே ஒரு கல்லுப் போல போவணும். நா அஞ்சு மணி பஸ்ஸுக்குச் சரியா வாரேன். நீ கடத்தெருவில் வந்து நில்லு..." என்று கூறி சிவந்தகனி அவளைப் பையும் கையுமாக அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான்.

உரலில் கம்பு 'துவைத்து'க் கொண்டிருக்கும் பொன்னாச்சி தங்களை நோக்கி வரும் பெண்பிள்ளை யாரோ என்று கூர்ந்து நோக்குகிறாள். அவளுடைய மாமி அப்போது அடுத்த வீட்டுக்காரியுடன் அவள் இறைத்த தீனியை அயல் வீட்டுக் கோழி வந்து பொறுக்கித் தின்று விடுவது கண்டு இரைந்து கொண்டிருக்கிறாள்.

"சவங்க... இங்கெ வந்து அம்புட்டியும் தின்னு தீக்கு. அவவ கோளிய அடுத்தூட்டுக்கு வெரட்டிக் கொளுக்கவய்க்கிறாளுவ..." என்று மாமி இரைகையில், எட்டு வயசுள்ள குமரவேலு சிரித்துக் கொண்டு, "யம்மா, அந்தக் கறுப்பு கோளிய நாம ஒரு நா விருந்து வச்சிடுவம்..." என்று கூறுகிறான்.

"வாப்பீங்கலே! முளியத் தோண்டிப் போடுவ!" என்று அடுத்த வீட்டுச் சாக்குப்படுதாவுக்குள்ளிருந்து ஆக்ரோஷமான குரலுடன், அந்த வீட்டுக்குரியவள் வெளிப்படுகிறாள்.

இருபுறங்களிலும் நெருப்புப் பொறிகள் சீறும் நேரத்தில் மருதாம்பா போய்ச் சேருகிறாள்.

பொன்னாச்சியை மருதாம்பா பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்கிறாள். மாநிறம் தான். அப்பனைப் போல் அகன்ற நெற்றி. வட்டமான கண்கள், முடி சுருண்டு அலையலையாக இருக்கிறது.

குமரவேலு திரும்பிப் பார்க்கிறான். மூலையில் ஏழாங்காயாடிக் கொண்டிருக்கும் வள்ளியும் குஞ்சரியும் எழுந்து வந்து பார்க்கின்றனர். மாமியும் உற்றுப் பார்த்து, தன் கட்டைக் குரலால், "யாரு?" என்று கேட்டு விழிகளை உயர்த்துகிறாள்.

மருதாம்பா இடுப்பிலிருந்த பையைக் கீழே இறக்குகையில் அதில் பழமும் பனையோலைப் பெட்டியும் இருப்பது தெரிகின்றன. புன்னகை இதழ்களில் மலருகின்றன.

"மயினி, என்னத் தெரியலியா? இது பொன்னாச்சிதான? நா, சின்னாச்சிதா வந்திருக்கிற. அவிய ஒடம்பு வாசியில்லாம இருக்காவ. சோலியெடுக்கவும் முடியல. நெதமும் பிள்ளையளப் பார்க்கணும் கூட்டிட்டு வா, கூட்டிட்டு வாண்டு சொல்லிட்டே இருக்காவ..."

மாமி முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயமாகப் பார்க்கிறாள். அந்தத் தெருவே இந்த அதிசயத்தைக் கண்டு மலைக்கிறது.

"ஆரு?... இவதா செவந்திக்குச் சக்களத்தியா?" என்று ஈருருவிக் கொண்டிருந்த கிழவி வந்து அவளை உற்றுப் பார்க்கிறாள்.

"அப்பெ வந்திருக்கிறானோ?"

"இல்ல..." என்று மருதாம்பா தலையசைக்கிறாள்.

மாமி சிதம்பர வடிவு கோழியைக் கூடையைப் போட்டு மூடிவிட்டு "உள்ளே வாரும்" என்றழைத்துச் செல்கிறாள். தட்டி கட்டிய திண்ணையை அடுத்த உள் வீட்டில் கம்போ கேழ்வரகோ புடைத்த தவிடு பரந்திருக்கிறது.

துணிகள், அழுக்காகத் தொங்கும் கொடி. சுவரிலும் கிறுக்கல்களும் சுண்ணாம்புத் தீற்றலும் சிவந்தச் சாந்துக் கையின் தீற்றலும் நிறைந்திருக்கின்றன. ஐந்து வயசு மதிக்கக் கூடிய பையன் ஒருவன் காகிதத்தைச் சுருட்டி சோப்பைக் கரைத்துப் பின் தாழ்வரையில் ஏதோ முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

சிதம்பர வடிவு ஓடிப்போய் அவன் முதுகில் இரண்டு வைக்கிறாள். அவன் கையிலிருந்து ஒரு நீல சோப்புத் துண்டை மீட்கிறாள்.

"கரியாப் போற பய, சோப்பைக் கரைக்கிறதே வேல!" என்று பின்னும் ஓர் அறை வைக்க, அவன் வாயைப் பிளந்து கொண்டு இயன்ற மட்டும் குரலெடுக்கிறான்.

"இங்க வால..." என்று மருதாம்பா அழைப்பது கண்டு அவன் திறந்த வாயை மூடியும் மூடாமலும் திகைத்தவாறே அவளுடைய கையிலிருக்கும் பழத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறான். மிட்டாய்ப் பெட்டி, கடலை எல்லாம் வெளியாகின்றன.

"பொன்னாச்சி மாமா ஊரில இல்ல. திர்நேலி போயிருக்கா. மாப்ளக்கி என்ன ஒடம்பு?"

"போன வருஷம் நீர்க்கோவ வந்து காலு நீட்ட முடியாம இருந்தாவ. அப்பமே பாதி நா சோலி எடுக்க முடியாமதா இருந்தாவ. பொறவு என்னேய? ரொம்பவும் மனத்தாவப் படுறாவ. நா எந்த மொவத்த வச்சிட்டுப் போவமின்னு. நாம போவம்னாலும் கேக்கல. அல்ல நீரு செவந்தனியக் கூட்டிட்டுப் போய் வாரும்னாலும் எப்பிடிப் போவமின்னு தாவப்படுறாவ. பிள்ளியளப் பாக்கணுமின்னும் மனசு அடிக்கி. அந்த பிள்ளியளுக்கும் அப்பச்சி வந்து பாத்தாரா கொண்டாராண்டு மனசில இருக்காதா? நேத்து நா சோலியெடுத்திட்டு வாரயில, பிள்ளயளப் பாக்கணுமின்னு கெடந்து கரயிறா. நாயித்துக்கெளம, கூட்டிட்டு வாரமின்னு வந்தே..."

பொன்னாச்சியின் உள்ளம் பௌர்ணமைக் கடலாக எழும்புகிறது. மாமி என்ன சொல்வாளோ என்று பார்க்கிறாள்.

"ஒங்க மக்கள நீங்க கூட்டிட்டுப் போகத்தா வந்திருக்கிய. ஆனா, அவிய ஊருல இல்லாதப்ப கூட்டிட்டுப் போறதுன்னா எப்பிடின்னு பாக்கேன்..."

மருதாம்பா உள்ளே வந்த குமரவேலு, வள்ளி, குஞ்சரி எல்லோருக்கும் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயையும் சேவையும் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பெட்டியை அப்படியே சாமி கையில் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி உரலில் துவைத்துக் கொண்டிருந்த கம்புக் குருணையை வட்டச்சுளகில் வாரிக் கொண்டு வந்து வைக்கிறாள். உள்ளே தாழ்வரை அடுப்பில் பானையில் நீர் கொதிக்கிறது.

மாமி பொன்னாச்சியை அழைத்து, "கடையிலே போயி கருப்பட்டியும் காப்பித் தூளும் வாங்கிட்டு வா, அப்பச்சி வந்ததும் காசு தாரன்னு சொல்லு" என்று அனுப்புகிறாள்.

பதினெட்டைக் கடந்துவிட்ட பொன்னாச்சிக்குச் சிறு குழந்தையாகி விட்டாற் போலிருக்கிறது. மாமி ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து பொழுது போகும் வரையிலும் அவளுக்கும் தம்பிக்கும் அவர்களைத் தவிர யாருமில்லை என்று குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறாள். தங்கள் குடும்பத்துக்கே வருவாய் போதாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நாத்தி மக்கள் இருவருக்கும் சோறோ, கஞ்சியோ பங்கு வைக்க வேண்டியிருக்கிறது; அவர்களை வைத்துக் கொண்டிருப்பது தேவையில்லாதது என்பது அவள் கருத்து.

பொன்னாச்சி எத்தனை நாட்கள் பட்டினியுடன் கண்ணீர் வடித்திருக்கிறாள்! மாகாளியம்மனை அவள் வேண்டாத நாளில்லை. வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வருவதும், குத்துவதும், தீட்டுவதும், பெருக்குவதும், மெழுகுவதும், ஆக்குவதும், கழுவுவதும் அவள்தான். மாமி யாரையேனும் எப்போதும் ஏசிக் கொண்டிருப்பாள். நிரந்தரமாக அதற்கு உரியவர்கள் காலஞ்சென்ற நாத்தி, அவள் கண்காணாக் கணவன், பாரமாகிவிட்ட மக்கள், பிறகு, பிறரிடம் நிரந்தரக் கூலிக்குப் போகமாட்டேன் என்று தன் பட்டாளத்தைக் கட்டிக் கொண்டு மூட்டை உப்பு முக்கால் ரூபாய்க்கேனும் போகுமோ என்று அவதியுறும் அசட்டுப் புருசனை ஏசுவாள். மாமாவுக்குத் திருச்செந்தூர் வேலனிடம் அளப்பரிய பக்தி உண்டு. எனவே ஐந்து மக்களுக்கும் அவன் பெயரையே வைத்திருக்கிறார். பெரியவன் சக்திவேல் திருநெல்வேலியில், கல்லூரியில் இரண்டாண்டுகளாகப் படிக்கிறான். இரண்டாவது குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது. அடுத்து வள்ளி; அவளுக்குப் பன்னிரண்டு வயசாகிறது. இன்னும் வயசுக்கு வரவில்லை. பிறகு குஞ்சரி, குமரவேல், அடுத்தவன், ஞானவேல் கடைக்குட்டி. மாமி தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அவனைப் பெற்றதும் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்து கொண்டு விட்டாள். அதனால் உடலுழைக்கக் கூடாது என்ற கருத்தில் வீட்டுப் பணிகள் ஏதும் செய்ய மாட்டாள்.

கடைவாயிலில் மூன்றாம் வீட்டு இசக்கி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

"ஆரு வந்திருக்கிறாவ?" என்று விசாரிக்கிறான்.

"என்னக்க சின்னாச்சி. அப்பச்சி ரெண்டாந்தாரம் கெட்டல? அவ, என்னையும் தம்பியையும் கூட்டியாரச் சொல்லி அனுப்பியிருக்கா." பொன்னாச்சிக்கு முகத்தில் பெருமை பொங்குகிறது.

"நீங்க போகப் போறியளா? தூத்துக்குடிக்கா?"

ஒரு புதுமையுமில்லாத இந்தக் கிராமத்தை விட்டு நீங்கள் தூத்துக்குடிப் பட்டணத்துக்குப் போகப் போகிறீர்களா என்ற வியப்பில் இசக்கி கண்களை அகல விரிக்கிறாள்.

"பொறவு இங்க இனி என்ன சோலி? அப்பச்சிக்கு ஒடம்பு முடியலியா, அப்ப நாம போயிப் பாக்கண்டா?"

"மாமி அனுப்பிச்சிக் குடுப்பாவளா?"

"குடுக்காம? குடுத்துத்தானே ஆவணும். நாங்க போயிடுவோம். பச்சையப்பய எங்கேன்னு தெரியல. எங்க போனா? நீ பாத்தியா?"

"அதா, அந்தால ஜேம்சு கூடப் போனா..."

'பரவப் பிள்ளியகூடப் போய்த் தொலையிறா. குடியப் பழகிக் குடுத்திடுவா. போட்டும் தூத்துக்குடிக்குப் போயிட்டா அங்ஙன இந்தச் சல்லிய மெல்லாம் இல்ல...' என்று எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் காபித்தூளும் கருப்பட்டியும் மாமி கூறியபடி கடனுக்குக் கேட்கிறாள்.

கடைக்காரன் கடனுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. அவள் நேராக முன்சீஃப் ஐயா வீட்டுச் சந்து வழிச் சென்று பின் முற்றத்தில் வந்து நிற்கிறாள்.

"ஆச்சி...?" என்று அவள் குரல் கொடுக்கையில் சந்து வழியாக உப்புப் பெட்டியும் கையுமாக வரும் தங்கபாண்டி "ஆரு? பொன்னாச்சியா...?" என்று கண்களை அகல விரிக்கிறான். அவள் தள்ளி நிற்கிறாள்.

"ஆச்சி இல்லையே? ஆறுமுவனேரி போயிருக்காவ. காலமே சொல்லிட்டுப் போனாவ..." என்று கொட்டிலில் உள்ள திண்ணையில் உப்புப் பெட்டியை அவள் வைக்கிறாள்.

"ஆச்சிக்கு இப்ப என்ன...?"

ஒரு விஷமச் சிரிப்பை நெளிய விட்டவாறு அவளை ஏற இறங்க அவன் பார்க்கிறான்.

வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் தங்க பாண்டி தன் பட்டாளத்து உப்பை எல்லாம் சேகரித்துக் கொண்டு சென்று மூட்டைக்காரர்களுக்கு விற்பான். உள்ளூரிலும் சிறு வியாபாரம் செய்வான்.

பொன்னாச்சிக்கு அவனிடம் சொல்லவும் விருப்பமில்லை. சொல்லாமல் வெறுங்கையுடன் திரும்பவும் மனமில்லை.

"மாமா திர்நேலி போயிருக்கியா, வீட்ட சின்னாச்சி வந்திருக்காவ. மாமி மாமா வந்ததும் தரதாச் சொல்லி கடயில கருப்பட்டியும் காபித்தூளும் வாங்கியாரச் சொன்னா. அரருவாத் துட்டு வேணும்..."

தங்கபாண்டி ஒரு உல்லாசப் பார்வையுடன் தனது இடுப்பிலிருந்து ஒரு ரூபாய்த் தாளை எடுத்து அவள் விரலைத் தீண்டியபடி வைக்கிறான்.

அந்தத் துட்டனை எரித்து விடுபவள் போல பார்த்து விட்டு, கையை உதறினாற் போல் நோட்டை எடுத்துக் கொண்டு அவள் கடைக்கு விரைந்து வருகிறாள். அவன் அவளைக் காணும் போதெல்லாம் இப்படித்தான் சாடைகள் சைகைகள் செய்கிறான். சவம், இனி அவள் தான் இந்த ஊரில் இருக்கப் போவதில்லையே!

அவள் காபித் தூளும் கருப்பட்டியுமாக வீட்டை நெருங்குகையில், மாமி வந்தவளிடம் ஒரு பாட்டம் 'ஆவலாதி' பாடிக் கொண்டிருக்கிறாள்.

"அன்னாடக் கஞ்சிக்கே வாரதில்லே. போன வருசம் பாதி நாளும் ஏலேலோ கெளங்குதா அவிச்சிக் கஞ்சி குடிச்சோம். மாசம் ரெண்டு நட கெணறு செப்பம் செய்யாம ஏலாது."

"லாரி வரப்பாதையில்லேண்ணா உப்புக்கு ஏது வெல? ஓடைக்கு மறுகரயில லாரி வரும். வண்டிக்கார உப்பள்ளிட்டுப் போயி அவங்கிட்ட விக்கியா. நமக்குக் குடுப்பது மூடைக்கி முக்கா ரூவாதா. மூடை மூணுக்கு வித்தாலும், அஞ்சுக்கு வித்தாலும் முக்கா ரூவாக்கி மேல நமக்கு ஒண்ணுமில்ல. நூறு நூறான சங்கத்து ஏக்கரில் இவியளப் போல நம்பாட்டளமிண்ணு இந்தத் தொழிலக் கட்டிட்டுருப்பவ ஆருமில்ல. அவயவிய கன்டிராட்டு, அது இதுண்ணு, அங்கங்க பொழக்கப் போயிட்டாவ. இவிய என்னியோ கெனா கண்டிட்டு ஆனவாடும்படுறா. கண்டவனயும் கூட்டிட்டு வந்து பிளசர் வச்சடிச்சி அம்புட்டு ரூவாயும் செலவு பண்ணதுதா மிச்சம். எங்க ஆம்பிளக்கி ஒரு சூதுவாது தெரியாது." மாமி மூச்சுவிடாமல் பொரிந்து தள்ளுகிறாள்.

பொன்னாச்சி கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு இறுத்துக் கருப்பட்டியும் சேர்த்து 'கிளாசில்' ஊற்றிக் கொண்டு வருகிறாள்.

"கையோடு கூட்டிட்டு வந்திடுண்ணுதா அனுப்பிச்சிருக்காவ. தலைப் பொண்ணு இத, இவளாட்டம இருக்கும். 'பாஞ்சாலி'ன்னு பேரு. தண்ணி தூக்கியாரும்; வீட்டுக்கார ஆச்சிக்கு ஒத்தாசையா எனுமேஞ் செய்யும். சோறோ கஞ்சியோ போட்டு அவியளே வச்சிருக்காவ. ஒரு பையன் பள்ளிக்கொடம் போறா. பொன்னாச்சி தம்பிய எங்க காணம்? பச்சமுத்துன்னு பேரில்ல?"

"ஆமா எங்க பெரிய பையனுக்கும் அவனுக்கும் ஒரு வருசம் அஞ்சு மாதந்தா வித்தியாசம். இந்த மாதா கோயில் ஸ்கூல்ல படிச்சிட்டு திருச்செந்தூர் போயிப் படிச்சு பத்து பாசாயி, இப்ப காலேஜில படிய்க்கியா. இந்தப் பயலையும் படிபடின்னுதா முட்டிட்டாவ. படிப்பு ஏறலியே? பரவப் பயலுவளோடு கடக்கரயில் திரியுவா, இத வராம் பாரும்!"

பையன் பொன்னாச்சியைப் போல் அப்பன் சாயலாக இல்லை. சிவப்பாக, கழுத்து மட்டும் உயர்ந்து, கிள்ளி எடுக்கச் சதையில்லாமல், பின்னிய மார்க்கூடுடன் விளங்குகிறான். பதினைந்து பதினாறு வயதுப் பையனாகவே மதிக்க இயலாது. குச்சிகுச்சியான முடி. அரையில் ஒரு கறுப்பு அரைச்சராய் மட்டுமே போட்டிருக்கிறான். மேனியில் ஒன்றுமில்லை.

மாமி அவன் கையில் ஒரு பழத்தையும் சிறிது மிட்டாயையும் எடுத்துக் கொடுக்கிறாள். "ஒங்க சின்னாச்சிலே, அப்பச்சி ஒன்னயும் அக்காளையும் தூத்தூடிக்கிக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காராம்...!" என்று தெரிவிக்கிறாள்.

பையன் எதுவுமே பேசாமல் மிட்டாயையும் பழத்தையும் அவசரமாக விழுங்குகிறான்.

"மீன் பரவப் பயலுவளோடு சேந்திட்டுப் போறானா? குடிக்கக் கத்துக்கிடுவானோண்ணு பயமாயிருக்கி. இங்ஙன அம்புட்டு ஆளுவளும் அதே. எங்க ஆம்பிள அந்த நாள்ள கள்ளுக்கடைக்குத் தீவச்சு செயிலுக்கும் போனாவ. இவனப் பத்தி எனக்கு இதே கவல. ஊரா புள்ள, நாம நாளக்கு ஆரும் என்னமேஞ் சொல்லுதாப்பல வச்சுக்கலாமா?"

"பின்ன இல்லியா மயினி? நீரு எம்புட்டு நா வச்சி சோறு போட்டாலும், அவ அப்பன் எம்புள்ளியண்டு தானே உருகா?"

மாமன் இல்லை என்பது வெறும் சாக்குதான் மாமிக்கு. அவர்களை அனுப்பிவிடுவதுதான் குறி என்று பொன்னாச்சி உணர்ந்து கொள்ளுகிறாள். சின்னாச்சியும அவர்களை அழைத்து போய்விட வேண்டும் என்ற தீவிரத்துடன் வந்திருப்பது கண்டு மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

மாமிதான் வந்தவளிடம் எப்படி நடக்கிறாள்! உண்மையில் மாமன் திடீரென்று எதிர்பாராமல் புறப்பட்டு வந்து விட்டால் அவர்கள் பயணத்தை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார். உண்மையில் வேலு தைப் பொங்கல் கழித்துத்தான் கல்லூரி விடுதிக்குச் சென்றிருந்தான். திடீரென்று முதல் நாள் கல்லூரியில் ஏதோ பையன்களிடையே சண்டை. வகுப்புக்கள் நடக்கவில்லை. போலீசு வந்ததென்று முன்சீஃப் வீட்டுக்குத் தெரிந்த ஆசிரியர் செய்தி அனுப்பி இருக்கிறார். உடனே மாமா ஓடியிருக்கிறார். மாமியிடம் வேலுவைக் குறித்து அவர் கத்த, மாமி அழ, இங்கும் ஓரே கலவரமாக இருந்தது. பணம் கூட யாரிடமோ கடன் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்.

"ஏலே, முடியில கொஞ்சம் எண்ணெய் தொட்டா என்ன?" என்று மாமி கரிசனத்துடன் கேட்டு, எண்ணெய் புரட்டச் சொல்கிறாள். பெட்டியிலிருக்கும் நல்ல சராயையும், சட்டையையும் எடுத்துக் கொடுத்து அவனை அணியச் சொல்கிறாள்.

"இவன் போயிட்டா எனக்குக் கையொடிஞ்ச மாருதியாயிரும். நா பெத்த பயலுவவுட இவம் மேலதா எனக்கு உசுரு. துலாவில பாத்திக்குத் தண்ணி எறய்ப்பா. எங்க ஆம்பிள அங்ஙன இங்ஙன போயிட்டேயிருப்பா. சுசய்ட்டின்னும் சங்கம்னும் அவியளுக்கு சோலி. உப்பு எறங்கியிருக்கு மாமின்னு வந்து சொல்லுவா. நானும் அவனுமே வாரி வய்ப்பம். ஒரு நா இரு பரவங்களோடு வள்ளத்திலேறிப் போயிருக்கா. நா காணாம தவிச்சிப் போனே. பொன்னாச்சியும் அப்படித்தே. அவ முடி சீவிச் சட போடலீன்னா எனக்கு ஒறக்கம் புடிக்காது..." என்றெல்லாம் மாமி அருமை பெருமைகளை வாரி விடுகிறாள்.

குத்தியக் கம்பைப் போட்டுக் கிண்டி இறக்கிவிட்டு, மாமி மீன் கண்டம் வாங்கி வந்து குழம்பு வைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இது கனவா, நினைவா என்று புரியவில்லை. எல்லாம் சுரவேகத்தில் நடப்பது போலிருக்கிறது. என்றாலும் அன்பான மாமனுக்குத் தெரியாமல் சொல்லாமல் இத்தனை நாள் வளர்ந்த இடத்தை விட்டுப் போகலாமா?

"மாமா என்னமே நெனச்சுக்க மாட்டாவளா..."

"என்னேய பின்னே? அப்பச்சி ஒடம்பு சொகமில்லாம, கூட்டிட்டு வாரும்னு அனுப்பிச்சிக் கொடுத்திருக்கயில நாமும் போகண்டாமா? மாமா வந்தாச் சொல்ற. வந்து பாக்கச் சொல்றே. அவியவிய சொத்த அவியவிய கிட்ட ஒப்படய்க்கிறதுதான மொறை?"

இந்த நியாய வார்த்தைகளுக்கு மேல் பேச்சுக்கு இடமேது?

பொன்னாச்சியுடன் தானும் புறப்பட வேண்டும் என்று ஞானம் அழுகுறான். குஞ்சரி அவளுக்கு அம்மா வைத்துப் பின்னியிருக்கும் ரோஸ் நாடாவையும், அவள் உடுத்தியிருக்கும் ரோஸ் சேலையையும் தொட்டுப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

பொன்னாச்சி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்கிறாள். தெருவே அவர்களை வழியனுப்புகிறது. முன்சீஃப் வீட்டு ஆச்சி இல்லை. கோயில்காரர் வீடு, கொல்லாசாரி வீட்டு ஆச்சி எல்லோரிடமும் பொன்னாச்சி சுருக்கமாக விடை பெற்றுக் கொள்கிறாள்.

மாகாளி அம்மன் கோயிலில் கும்பிட்டு வேண்டிக் கொள்கிறாள். மாலை வெயில் மஞ்சள் முலாம் பூசத் தொடங்குகிறது. சிவந்தகனி பஸ் நிறுத்தத்தில் ஏற்கெனவே வந்து நிற்கிறான். பொன்னாச்சியை அவன் வியப்புடன் பார்த்த வண்ணம், "இதுதா மவளா?" என்று கேட்கிறான்.

"ஆமா, அது பய்யன்..."

மருதாம்பா சொல்லி முடிக்கு முன் பஸ் ஒன்று வருகிறது. இசக்கி இப்போதும் இடுப்பில் தங்கச்சியுடன் நிற்கிறது. "பொன்னாச்சி அக்கா, தூத்தூடிக்கா போற?" என்று விழிகள் விரிய அவள் கேட்கையிலேயே அவர்கள் வண்டிக்குள் ஏறிக் கொள்கின்றனர். பொன்னாச்சி நின்ற வண்ணம் அவளுக்குக் கையை அசைக்கிறாள்.

பஸ் கிளம்பி விடுகிறது.

அத்தியாயம் - 3

முன்பு மருதாம்பாள் பஸ் ஏறிய இடத்திலேயே இறங்கி விடுகிறாள். அப்போது முகங்கள் தெளிவாகத் தெரியாமல் மங்கும் நேரம். அவர்கள் லாரிகளும் பஸ்களும் போகும் கடைத் தெருவைத் தாண்டி நடக்கின்றனர். அவர்கள் ஊர் மாதா கோயிலை விடப் பெரிதாக ஒரு மாதாகோயில் உச்சியில் விளக்கொளிரத் தெரிகிறது.

மருதாம்பா கடையில் பொட்டுக் கடலையும் மொந்தன் பழமும் வாங்கிக் கொள்கிறாள். அந்தத் தெருக்களைத் தாண்டி, மணலும் முட்செடிகளுமான பரப்பைக் கடந்து, வேறு தெருக்கள் வழியே நடக்கின்றனர். ஒழுங்கில்லாத வீடுகள். சில வீடுகள் மஞ்சள் வண்ணச் சுவர்களும், மூங்கில் பிளாச்சு 'கேட்டு' மாகப் புதியவை என்று பறை சாற்றுகின்றன. இடை இடையே சாக்கடை, குப்பை மேடு, கடை, ஓட்டுவில்லை வீடுகள், தென்னங்கிடுகுகளான தடுப்புக்கள், இடைவிடாது எதிரே குறுக்கிடும் சைக்கிள் ஒலிகள் ஆகிய காட்சிகளை வியப்புடன் பார்த்துக் கொண்டு அவர்கள் நடக்கின்றனர்.

பொன்னாச்சி தனது இரண்டொரு துணிகளையும் தம்பியின் சராயையும் ஒரு கித்தான், பைக்குள் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சிறுமியாகத் தாயுடன் தூத்துக்குடியில் வாழ்ந்த காலத்து வீட்டை நினைவுக்குக் கொண்டு வர முயலுகிறாள். அதை கோல்டன்புரம் என்று சொல்வார்கள். எதிரே முட்செடிக் காடாக இருக்கும். அவள் வீட்டு வாயிலில் தம்பியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் அம்மா தண்ணீர் கொண்டு வரப் போவாள். லாரி வாசலில் வரும். லாரியில் இருந்து தலையில் துவாலை கட்டிக் கொண்டு ஒருவர் வந்து உள்ளேயிருந்து மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துப் போவார். அவர் அப்பச்சி. அவரிடம் அவளுக்கு மிகவும் பயம். அவருடைய கண்கள் சிவப்பாக இருக்கும். பெரிய மீசை வைத்திருப்பார். கட்டம் போட்ட லுங்கி உடுத்தியிருப்பார். அம்மாவை அடிப்பார். அவளையும் கூட அவர் அடித்து வெளியே தள்ளினார். ஒரு நாள் இரவு, அந்த முட்செடியிலிருந்து தலைவிருச்சிப் பிசாசு ஒன்று துரத்தி வருவது போல் அவள் பயந்து போய் அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

அந்த அப்பச்சி... அவரை அவள் பார்க்கப் போகிறாள். அவர் உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறார்.

"சவத்துமாடன். அவனொரு மாப்பிள்ளை, இந்த வீட்டுக்கு!" என்று மாமியின் நாவில் அடிக்கடி வசைக்கு ஆளாகும் அப்பச்சியை அவள் பார்க்கப் போகிறாள். "அவ தளுக்கும், மினுக்கும் கண்டிராக்டானாலும், கணக்கவுள்ளயானாலும், சீலயவுக்குறவ..." என்ற ஏச்சுக்காளாகும் பெண் பிள்ளையான சின்னாச்சி இன்று மாமியிடம் மரியாதைக்குரியவளாக வந்து கூட்டிப் போகிறாள்.

அவள் உண்மையில் அப்படித் தளுக்கு மினுக்காகவேயில்லை. முடியை எண்ணெய் தொட்டுக் கோதிச் செருகியிருக்கிறாள். புதுமை மங்கிய நீலச்சேலை, வெண்மையாகத் தான் பிறப்பெடுத்திருந்தேன் என்று சொல்லும் ரவிக்கை. முகத்தில் எலும்பு முட்டிக் கண்கள் குழியில் இடுக்கிக் கிடக்கின்றன. எப்படியிருந்தாலும் இடைவிடாத மாமியின் இடிச்சொற்களிலிருந்து அவர்களை விடுவிடுத்திருக்கிறாள் அவள்.

அவர்கள் வீடு வெளியிலிருந்து பார்க்கக் காரைக்கட்டுச் சுற்றுச் சுவரும் வாயிலுமாக இருக்கிறது. வாயிலுள் நுழைந்து எதிரே தெரியும் வீட்டைச் சுற்றி அவர்கள் செல்கின்றனர். அந்த முற்றத்தில் ஒரு முட்டைச் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிள்ளை கல்லுரலில் உளுந்து ஆட்டிக் கொண்டிருக்கிறாள். திண்ணை போன்ற மேட்டில் ஒரு ஆண் காலோடு தலை போர்த்த வண்ணம் உட்கார்ந்து இருமிக் கொண்டிருக்கிறான். அங்கேயே சில குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். வரிசையாக உள்ள வாயில் கதவுகளில் ஒன்று பூட்டிக் கிடக்கிறது. நேர் எதிரே உள்ள மூன்றாவது வாயிலை நோக்கி மருதாம்பா வருகிறாள்.

"அப்ப நா வாரனக்கா!" என்று கூறியவனாகச் சிவந்தகனி அங்கேயே விடைபெற்றுத் திரும்பிப் போகிறான்.

திண்ணையில் இங்கேயும் காலோடு தலை போர்த்து உருவம் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

சின்னம்மா வெறுமே சாத்தியிருக்கும் வாயிற்கதவைத் திறந்து சிம்னி விளக்கைத் தேடி ஏற்ற ஐந்து நிமிடங்களாகின்றன.

"பிள்ளிய வந்திருக்காவ, ஏதே... ஒங்கப்பச்சி கும்பிடுக..."

பொன்னாச்சி, அந்தச் சிம்னி விளக்கொளியில் தந்தையைப் பார்த்துக் குழம்பியவளாக நிற்கிறாள். தாடியும், நார் பறந்தாற் போன்ற முடியுமாக, அழுக்குத் துணியால் மேலும் கீழும் போர்த்திக் கொண்டு கும்பலாக அமர்ந்திருக்கும் இவரா அப்பச்சி...?

கால்களைத் தொட்டுப் பணிவுடன் கும்பிடுகிறாள். பச்சையையும் கும்பிடச் சொல்கிறாள்.

"எங்க இந்தப் பிள்ளயவ? ஏட்டி, பாஞ்சாலி? சரசி? பானையில பொட்டுத் தண்ணி இல்ல. குடி தண்ணியுமில்ல, கொடத்துல. ஏலே நல்லகண்ணு? அக்காளெங்கேலே?"

ஆடிக் கொண்டிருந்த பையன் வருகிறான். "பாஞ்சாலி ஆச்சிகூட சினிமாவுக்குப் போயிட்டு வந்தா. எனக்கு மிட்டாய் வாங்கித் தாரன்னியே?..." என்று அவள் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.

"தம்பியக் கூப்பிடு; இதப்பாரு பொன்னாச்சிக்கா, இது அண்ணெ..." என்று கூறிப் பொட்டுக் கடலையும் பழமும் கொடுக்கிறாள். அப்போது சரசி பிரிந்த தலையும் கிழிந்த பாவாடையுமாக வெளியிலிருந்து ஓடி வருகிறாள்.

"பாஞ்சாலி வந்தா கூப்பிடுடீ? பொட்டுத் தண்ணியில்ல. கேணிலேந்து ஒரு நடை தண்ணி கொண்டாரச் சொல்லுடி?..." கயிற்றையும் வாளியையும், பானையையும் பாஞ்சாலி வந்து தூக்கிக் கொண்டு சென்றதும் உள்ளே விளக்குடன் நுழைகிறாள் மருதாம்பா. சற்றைக்கெல்லாம் திடுக்கிட்டவளாக அவள், "ஏளா, உள்ளாற யாரு வந்தது? நா நேத்துதான் வெறவு வாங்கிப் போட்டுப் போன? ஒத்தக் குச்சியக் கூடக் காணம்?" என்று கூக்குரலிடுகிறாள். ஆனால் அந்த ஓலம் எந்த எதிரொலியையும் கிளப்பவில்லை. கொடக் கொடக்கென்று உளுந்துதான் மசிந்து கொண்டிருக்கிறது. பாறையில் முட்டி மோதி எதிரொலிக்கும் கடலலை போல் அவள் மீண்டும் மீண்டும் ஓலமிடுவாள். அப்பன் எதுவுமே பேசவில்லை. மருதாம்பா சரசியின் முதுகிலும் நல்லகண்ணுவின் முதுகிலும் ஆளுக்கு இரண்டடி வைக்கிறாள்.

"கதவைப் பூட்டிட்டுப் போன்னு சொன்னேனில்ல? மூதி தெருவுல ஆடப் போயிடறா! தொறந்த வீடுன்னா எந்த நாயும், களுதையும் எச்சிப் பொறுக்க வரும்... சவங்க..." என்று வசை பாடத் தொடங்குகிறாள்.

அவளுடைய சந்தேகத்துக்கு, அயல் பக்கத்துக்காரிகள் ஆளாகிறார்கள். அவள் சாடைமாடையாகச் சொன்ன பிறகும் மாவாட்டுபவள் சும்மா இருப்பாளா? மாவை வழித்து விட்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறாள். பொன்னாச்சி இத்தகைய விறகுச் சண்டைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போனவள். ஒளிமயமான கனவுகளைச் சரேலென்று மேகங்கள் மூடினாற் போல் ஒரு சோர்வு ஆட்கொள்ளுகிறது. அவளுடைய அப்பச்சியை இவ்வாறு செயலிழந்த துணிச் சுருளாக அவள் கற்பனை செய்திருக்கவில்லை.

இரவு மருதாம்பா ஏதும் சமைக்கவில்லை. விறகு பறி போய்விட்டது. ஆற்றாமையில் திண்ணையிலிருந்த புருசனையும், பொறுப்பில்லாத குழந்தைகளையும் திட்டி ஓயவில்லை. மழை அடித்து ஓய்ந்தாலும் நினைத்து நினைத்துச் சாரல் அடிக்கக் காற்று வீசுவதைப் போல் கிளம்புகிறது.

முன் வாசலுக்கு நேராக உள்ள வீட்டிலிருந்து ரேடியோப் பாட்டு ஒலிக்கிறது. பச்சை அந்தப் பக்கம் செல்கிறான். இந்த முற்றத்தின் பக்கமாக உள்ள 'சன்னலின் அருகே நின்று அங்கே பார்க்கிறான். ஒரு ஆச்சி, டிரான்ஸிஸ்டர் பெட்டியைத் திருகி, பாட்டு வைக்கிறாள். அவனைக் கண்டதும், "இப்படி வாலே, ஒம்பேரென்ன?" என்று அவள் அழைக்கிறாள்.

பச்சை நாணிக் கோணிக் கொண்டு உள்ளே செல்கிறான். அந்த முன்னறையில் ஒரு பனநார்க்கட்டிலில் ஆச்சி அமர்ந்திருக்கிறாள். அங்கே இன்னொரு பெரிய பெஞ்சி இருக்கிறது. ஒரு புறம் சுவரில் புத்தகங்கள் நோட்டுக்கள் தெரியும் ஷெல்ஃப்; அதன் மேல், சுவரில் உயரே ஒரு படம் இருக்கிறது. படத்தில் இளையவனாக, அரும்பு மீசையும் நேர்ப் பார்வையுமாக ஒரு பிள்ளை விளங்குகிறான். அந்தப் படத்துக்கு மஞ்சளும் நீலமும் கலந்த பட்டு நூல் மாலை போட்டிருக்கிறார்கள்.

பச்சை அந்தப் படத்தையே பார்க்கையில், ஆச்சி அவனிடம் "படிக்கிறியாலே?" என்று கேட்கிறாள். ரேடியோவில் பாட்டு இல்லை. பேச்சு வருகிறது. அதை அணைத்துவிட்டு, ஒரு காகிதப்பையில் இருந்து வேர்க்கடலையை எடுத்து உரித்துத் தின்கிறாள்.

அவனிடமும் இரண்டு கடலையைப் போட்டவாறே மீண்டும், "படிக்கிறியாலே? கேட்டதும் வதில் சொல்லு?" என்று கேட்கிறாள்.

"படிச்சேன், இப்ப நிறுத்திட்டே..."

"ஏ...? சோலிக்குப் போறியா?"

"மாமன் அளத்துல சோலி எடுப்பே. தம்பாட்டளம்."

"எம்புட்டு?"

"ரெண்டேக்கரு..."

அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். "அக்காளும் சோலிக்குப் போகுமா?"

"இல்லே... வீட்டுவேல எல்லாம் செய்யும். எப்பன்னாலும், உப்பு வாரிப் போட வரும்."

"இங்கேயே இருக்கப் போறியளா?"

பையன் தெரியாது என்று தலையசைக்கிறான்.

இதற்குள் அடுத்த வீட்டுக்காரி பெருங்குரலெடுத்து ஏசுவது செவியில் விழுகிறது. பையன் முற்றத்துக்கு வருகிறான். பொன்னாச்சியும் அங்கு நிற்கிறாள். பாஞ்சாலி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு வாயிற்படியிலேயே நிற்கிறாள். குஞ்சுகளைப் பின் தள்ளிவிட்டு இரண்டு பெட்டைகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போல் இருவரும் வாய்ச் சண்டை போடுகின்றனர்.

ஒருவழியாக ஓய்ந்து எல்லோரும் முடங்குகின்றனர். குழந்தைகள் எல்லோரும் பொட்டுக்கடலை, பழத்துடன் உறங்கிவிட்டனர். உள்ளே சின்னம்மாவும் படுத்து உறங்கிவிட்டாள்.

பொன்னாச்சிக்கு உறக்கம் வரவில்லை. அன்று பகலே அவள் சரியாக உணவு கொள்ளவில்லை. பசி, குடைகிறது. அவளுக்குப் பல நாட்களில் இப்படித்தான் ஏதேனும் தின்ன வேண்டும் போல் பசி கிண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் படுத்து உறங்க முயலுகிறாள்.

பொழுது விடிந்தால் அடுப்புக்கு வைக்க ஒரு குச்சி இல்லை. மருதாம்பாவுக்கு சோறு எதுவும் பொங்க நேரமில்லை. பொன்னாச்சியை எழுப்பி, "ஏத்தா ஒங்கையில் இருக்கிற துட்டுல ரெண்டு வெறவும் அரிசியும் வாங்கி ஒல போட்டு பொங்கிக்கோ. நா அளத்துக்கு போவணும். கங்காணியிட்டக் கேட்டு எதினாச்சிம் துட்டு வாங்கி வார. நேராச்சி இப்ப" என்று கிளம்ப ஆயத்தமாகிறாள். பொன்னாச்சி திகைத்து விழிக்கிறாள்.

மாமி, மூன்று ரூபாய் கோயில்காரர் வீட்டிலிருந்து கடன் வாங்கி வந்து அவளுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறாள். சின்னம்மாவின் சொரூபம் வெளியாகிறது!

இந்தப் புதிய இடத்தில் அவள் எங்கிருந்து விறகு வாங்குவாள்?

"அரிசி...?"

"பாஞ்சாலி வரும். அவ வாங்கிக் குடுப்பா. தம்பி இருக்கானே? பின்னால கிணறு காட்டிக் குடுக்கும். ஒண்ணே முக்கா ரூவாக்கு அரிசி வாங்கிப் பொங்கு. இந்தப் பிள்ளங்களுக்கும் போடு. நா வார. ஒரு சுடு தண்ணி வைக்கக் கூட லாவன்னா இல்லை..." பொன்னாச்சி மலைத்து நிற்கையிலேயே கூரையில் செருகியிருக்கும் பன ஓலையைக் கையிலெடுத்து காலுக்கு ஒரு மிதியடி பின்னக் கிழித்தவாறு நடந்து செல்கிறாள். திகைப்பிலிருந்து விடுபட, பொன்னாச்சிக்கு வெகு நேரமாகிறது. அந்த வீட்டுக்காரி இட்டிலிக் கடை போடுபவ போலிருக்கிறது. விடியலிலேயே எங்கிருந்தோ நீர் கொண்டு வருகிறாள். அவள் புருசன் இருமிக் கொண்டே இருக்கிறான். வள்ளியோடொத்த மகளை எழுப்பி அமர்த்தி உரலில் அரைக்க பணிக்கிறாள். இன்னொரு வீட்டுக் கதவு பூட்டுத் திறந்து உட்பக்கம் சாத்தியிருக்கிறது. அதற்குரியவரை அவள் இன்னும் பார்க்கவில்லை.

அவள் செய்வதறியாமல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கையில் வீட்டுக்கார ஆச்சி, பல்லைச் சாம்பலால் துலக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். நல்ல உயரம்; பறங்கிப் பழமாய்ச் சிவப்பு. தீர்க்கமான மூக்கும் கண்களுமாக ஒரு காலத்தில் நல்ல அழகாக இருந்திருப்பாள். எள்ளும் அரிசியுமாய்ப் போன கூந்தலை அள்ளிச் செருகியிருக்கிறாள். வளர்த்த காதுகளில் பொன்னகையில்லை. மேல் காதில் மட்டும் வாளியும் முருகும் இருக்கின்றன. நெற்றியில் நீளமாகப் பச்சைக்கோடு, துலங்குகிறது. இடது புறங்கையில் கோலமும், இன்னும் ஏதோ பச்சைக் குத்தும் தெரிகின்றன. மினுமினுக்கும் ஆரஞ்சு வண்ணச் சேலையும் வெண்மையான ரவிக்கையும் அணிந்திருக்கும் அவள் பொன்னாச்சியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.

குண்டு முகத்தில் கண்களால் அவளை வியப்புடன் பொன்னாச்சியும் பார்க்கிறாள். முதல் நாளிரவே பாவாடை, ரோஸ் சேலை, ஜாக்கெட் செட்டைப் பத்திரமாக அவிழ்த்து வைத்து விட்டுப் பழைய சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். அந்த ஒரு செட் ஆடைகளே அவளுக்குப் புதுமையாக, முழுதாக இருக்கின்றன. அவளுக்கு மூன்றாண்டுகளுக்கு முன் மங்கல நீராட்டுக்கென்று மாமன் வாங்கித் தந்த சேலை அது. திருச்செந்தூர்க் கடையில் எழுபது ரூபாய்க்கு வாங்கி வந்தார்.

பிறகு, ஒரே ஒரு பழைய பாவாடையும் பாடியும் தான் உள்ளாடைகள்! சாதாரண நாட்களில் அவள் முழுச் சேலையை முரட்டுச் சேலையைத் தான் பின் கொசுவம் வைத்து உடுத்துவது வழக்கம். மூக்குத் துளைகளில் ஈர்க்குகளும், காதுத் துளைகளில் சன்னமாகச் சீவிய நெட்டியும் தான் அணிகள், அவளுக்குக் கைகளில் முழியே கிடையாது. போட்டிருக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் இரண்டும் மொழு மொழுத்த கைகளில் பதிந்து இருக்கின்றன.

"சின்னாச்சி அளத்துக்குப் போயிட்டாளா?" என்று விசாரிக்கிறாள்.

"ஆமா..."

"தண்ணிகிண்ணி வச்சாளா? சோறாக்கினாளா? ராவுல வறவக் காணமின்னு சொக்குவும் அவளும் சண்ட போட்டாவளே?"

பொன்னாச்சிக்குத் திகில் பிடித்துக் கொள்கிறது. வாயைக் கிளறி வம்புக் கிழுக்கிறாளா? இவளிடம் எப்படிப் பேசுவது? ஊரிலும் இவ்வாறு வாயைக் கிளறுபவர்கள் உண்டு. அவள் ஏதேனும் பேசிவிட்டால் மாமி நார் நாராகக் கிழித்தெறிந்து விடுவாள்.

எனவே மௌனமாக நிற்கிறாள்.

"ஏட்டி பாஞ்சாலி! ரெண்டு வெறவு கொண்டு ஒங்கக்காளுக்குக் குடு! அடுப்புப் பத்தவய்க்கட்டும்!" என்றவள் குரலை மிக மிகத் தாழ்த்தி, "ஒங்கப்ப எடுத்துக் குடுத்து அதுக்கு வார காசுக்கு என்னமேந் தின்னிடுவா. குடிய்க்கவுஞ் செய்வா. இது ஒள்ளதுதே!..." என்று தெரிவிக்கிறாள். பாஞ்சாலி இரண்டு விறகை எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் வைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு நா எழவில்லை.

"ஏட்டி, அரிசி இல்லேன்னா, மூலக்கடையிலே வாங்கிக் குடு!" என்றும் உத்தரவிடுகிறாள். "பய ஒந் தம்பியா? சோலிக்குப் போவானா?"

"போவணும்..."

"சின்னாச்சி கங்காணியிடம் சொல்றன்னிச்சா?"

"ஒண்ணுஞ் சொல்லல. அவுசரமாப் போயிட்டாவ..."

"ஆமா காலமே அதிகப்படி எதுவானாலும் அட்டுச் சொமக்கக் கூலி கெடய்க்குமேண்ணு போயிருப்பா! அவாத என்னவே? ஒன்னப்பச்சிக்குக் கண்ணு சுத்தமாத் தெரியல. அன்னிக்கு அளத்துல சோலியெடுக்கையில் கீழவுழுந்திட்டாராம். பொறவுதா ஒங்களக் கூட்டி வாரமின்னு போனா..."

மருமம் துலங்கிவிட்டது. ஆனால் என்னம்மா வேலை பற்றி எதுவும் சொல்லவில்லையே?

"தம்பிக்குன்னாலும் எதானும் கூலி வேலை கெடச்சாத் தேவலை..."

பொன்னாச்சியின் கண்கள் ஒளிருக்கின்றன. 'ஒங்களால முடியுமா...' என்று கேட்கும் ஆவல் அது.

"ஆமா. பய இல்லாட்டி இங்ஙன கவுமுத்து புளியமுத்து ஆடப் போயிருவா! கெட்ட சகவாசமெல்லாஞ் சேர்ந்திடும்..." என்றவள் பாஞ்சாலியைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி மூலையில் வாய் கொப்ளிக்கிறாள். காரிக் காரி உமிழ்கிறாள்.

"நீங்க ஏதானும் சோலி வாங்கிக் குடுத்தா, ரொம்ப தயவா இருக்கும், ஆச்சி. சின்னம்மாவுக்கு நாங்க பாரமா இருக்கண்டா..." ஆச்சி சேலை முன்றானையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.

"சோலி இப்ப கெடக்காம இல்ல. 'பனஞ்சோல' அளத்துலியே சொல்லி வாங்கித்தார. அறவக் கொட்டடியிலோ, எங்கோ தம்பிக்கும், ஒனக்கும் கூட கெடய்க்கும். பனஞ்சோல அளத்துல வேல கெடக்கிறது செரமம்! அங்க கங்காணி மொறயில்ல. கண்ட்ராக்டு, ஒங்க சின்னாச்சி, அப்பன் சோலியெடுத்த அளம் சின்னது. கங்காணிமாரு கெடுபிடி ரொம்ப இருக்கும், நிர்ணயக் கூலின்னு சொல்லுவா. ஆனா கங்காணி வாரத்துக்கு ஒரு ரூபா புடிச்சிட்டுத்தா குடுப்பா. பொறவு அட்வான்சு, போனசு ஒண்ணு கெடையாது. அப்புசி மழை விழுந்திட்டா வேலயுமில்ல. வேல நேரம்னு கண்டிப்புக் கெடையாது. ஏ குடிக்கத் தண்ணி கூடக் கெடையாது. பனஞ்சோல அளம் அப்பிடில்ல, பெரீ...சு. மூவாயிரம் ஏக்கர். வேலக்கி எடுக்கையில அட்வான்சு குடுப்பா. பொறவு தீவாளி சமயத்தில நிக்றகப்ப சேலயொண்ணு போனசாத் தருவா. ஒரு கலியாணம் காச்சின்னா, அளத்துல சோலியெடுக்குற புள்ளக்கி இருநூத்தம்பது ரூபா குடுக்கா..."

பொன்னாச்சிக்குக் கேட்க கேட்க உள்ளம் துள்ளுகிறது. இருளாகக் கவிந்திருக்கும் எதிர்கால வாழ்வில் ஒளியிழைகளை அல்லவோ ஆச்சி காட்டுகிறாள்?

"ஆச்சி! ஒங்கக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அந்த அளத்துல எனக்கும் தம்பிக்கும் வேல வாங்கித் தாரும். நாங்க எங்க மாமன் அளத்துல வாருபலவை போட்டு உப்பு வாருறதுதா, என்ன வேலன்னாலும் முசிக்காம செய்யிவம்..."

ஆச்சி கண்களை இடுக்கிக் கொண்டு சிறிது நேரம் யோசனை செய்கிறாள். பிறகு நீண்டதோர் சுவாசத்தை வெளியாக்குகிறாள்.

"இங்கெல்லாம் 'லோக்கல்' உப்பில்ல, கல்கத்தா அளம். வரி உப்பு வாருவாக. அதெல்லாம் ஆம்பிளதா வாருபலகை போடுவா."

"பொம்பிளக்கிப் பண்பாட்டு சோலியும், பொட்டி செமக்கிற சோலியுந்தா, என்னைப் போல பொண்டுவ, ராவுல உப்பு அறவக் கொட்டடியிலும் வேலக்கிப் போவாக. நாளொண்ணுக்கு எனக்கு நாலு நாலரை வரை வரும். தம்பிக்கு ரெண்டரை மூனு வரும். இப்ப ரேட் ஒசத்தியிருக்காண்ணு சொன்னா..."

பொன்னாச்சிக்கு அந்தக் கணத்திலேயே பனஞ்சோலை அளத்துக்குப் பறந்து போய்விட வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாளைக்கு அவளுக்கும் தம்பிக்குமாக ஆறு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, மாசத்தில் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வரும். மாமாவின் அளத்தில் மொத்தமாகக் கூட அவ்வளவு தேறாது. மாமிக்கு அவளை எங்கேனும் அளத்தில் வேலைக்கு சேர்க்கலாம் என்ற யோசனை இருந்தாலும் கூட மாமா அதற்கு இடம் கொடுத்ததில்லை. அங்கிருந்து ராமக்காவும் கமலமும் கண்ணாடிக்காரர் அளத்துக்குப் போவார்கள். அவர்களுடன் அனுப்பி வைக்கலாம் என்று மாமி கருத்து தெரிவித்ததுண்டு. ஆனால் மாமா மிகவும் கண்டிப்பானவர். அவள் இங்கே வந்து அளத்தில் வேலை செய்கிறாள் என்று தெரிந்தால் கூடப் புறப்பட்டு வந்து கூட்டிப் போனாலும் ஆச்சரியமில்லை.

ஆனால்... மாசத்தில் நூற்றைம்பது வருமானம்! பொழுது விடிந்து நிதமும் கம்புக்கும் கேழ்வரகுக்கும் அரிசிக்கும் மிளகாய்க்கும் பீராயப் போகவேண்டாம். கடன் சொல்லிக் கடையில் சாமான் வாங்க வேண்டாம். தீபாவளிக்குப் புதிய சேலை போனஸ்... பிறகு கல்யாணம். அவளுடைய கண்களில் நீர்துளித்து விடுகிறது.

கல்யாணம் என்ற ஒன்றைப் பற்றி நினைக்கக் கூட முடியாத நிலை. அளத்தில் வேலை செய்கையில் அங்கேயே சோலி எடுக்கும் ஒரு ஆம்பிள்ளையைக் கட்டினால் இரண்டு பேருக்கும் பணம் கிடைக்குமோ?...

நினைக்கும் போது நெஞ்சு குழையும் நாணம் மேலிட்டு முகம் சிவக்கிறது.

பாஞ்சாலியும் பச்சையும் சென்று அரிசியும் மிளகாய் புளியும் வாங்கி வருகின்றனர்.

அப்பன் எழுந்து மெள்ளப் பின்புறத்துக்கு நடக்கிறார்.

அவள் கையைப் பற்றிக் கொள்ளச் செல்கிறாள்.

"எனக்குப் பழக்கம் தாவுள்ள, நீ போ! வெறவு செவத்தாச்சி குடுத்திச்சா?"

"ஆமா"

"அந்தாச்சி ரொம்ப தங்கமானவுக. முந்நூறு ரூவா கடனிருக்கு அவியக்கிட்ட. எப்படிக் குடுக்கப் போறம்...!" என்று பெருமூச்சு விட்டவாறே நடந்து செல்கிறான். சரசி அப்பனின் கைக்குச்சியை எடுத்துக் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி வறுமை அறியாதவளல்ல. ஆனால், இங்கு அடிப்பும் கூட இடிந்திருக்கிறது. நீர்ப்பானையும் கூடக் கழுத்தில் ஓட்டையாக இருக்கிறது. துணியைச் சுருட்டி அடைத்திருக்கிறார்கள். பித்தளை என்பது மாதிரிக்குக் கூடக் கிடையாது. அலுமினியம் குண்டான் ஒன்றைத் தவிர உருப்படியாக அப்பச்சியும் சின்னம்மாவும் சாப்பாடு கொண்டு செல்லும் அலுமினியம் தூக்குப் பாத்திரங்கள் தாம் இருக்கின்றன. தண்ணீர் குடிக்கக் கூடப் பித்தளையிலோ வெள்ளோட்டிலோ ஒரு கிளாசு இல்லை. பிளாஸ்டிக் தம்ளர்கள் இரண்டுதாம் அழுக்கேறிக் கிடக்கின்றன. வாளியும் ஒழுகுகிறது. துணிக்கந்தையால் அடைத்திருக்கிறார்கள். அவர்கள் வதியும் அறையும், சமையல் செய்யும் பின் தாழ்வரையும் ஓட்டுக் கட்டிடங்களானாலும் மிகப் பழைய நாளையக் கட்டிடமாக, பந்தல் போல் வெளிச்சத்தை ஒழுக விடுகிறது.

பொன்னாச்சி வீட்டை ஒட்டடை தட்டிப் பெருக்கி, மண்குழைத்துப் பூசி அடுப்பைச் சீராக்குகிறாள். ஒரு சோறு பொங்கி, குழம்பு வைத்து, குழந்தைகளுக்கும் அப்பனுக்கும் போடுகிறாள். பிறகு நல்லக்கண்ணு, மருது, சரசி எல்லோருக்கும் எண்ணெய் தொட்டு முடி சீவி, அழுக்குத் துணிகளை நீர் கொண்டு வந்து கசக்கிப் போடுகிறாள். தம்பி சிவத்தாச்சியிடம் சிநேகம் பிடித்து விட்டான். அவனை எங்கோ கூட்டிச் சென்று பன ஓலை வாங்கி வருகிறாள் ஆச்சி.

அவளுக்குப் பெட்டி முடையத் தெரியும் போலிருக்கிறது. நாரைக் கிழிப்பதைப் பொன்னாச்சி வேடிக்கை பார்க்கிறாள்.

அப்போது "ஆச்சி இருக்காவளா?" என்ற குரலொளி கேட்கிறது.

கரேலென்று குண்டாக, காதில் வயிரக்கடுக்கன்கள் மின்ன, மேலே வெள்ளைவெளேரென்று சட்டையும் உருமாலும் அணிந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். தலை முன்புறம் வழுக்கையாகி, காதோரங்களில் வெண்மையாக நரைத்திருக்கிறது.

வாயிற்படிக்கு நேராக முற்றத்தில் பொன்னாச்சி தான் நிற்கிறாள். அவளைப் பார்த்துத்தான் அவர் கேட்டிருக்கிறார். அவள் சரேலென்று விலகிக் கொள்கிறாள். ஆள் ஒருவன் ஒரு சாக்கை (பத்துப்படி அரிசியோ தானியமோ இருக்கும் என்று தோன்றுகிறது) கொண்டு வந்து முன்புறம் இறக்குகிறான்.

"ஆரு இவிய? புதுசா இருக்கு?" என்று கேட்டாவாறு அவர் மெத்தை நாற்காலியில் அமர்ந்து ஆச்சி கொடுக்கும் விசிறியால் விசிறிக் கொள்கிறார்.

"கண்ணுசாமி இல்ல அவன் பிள்ளியதா. ஊரிலேந்து நேத்து கூட்டியாந்தா. அவனுக்குத்தா கண்ணு தெரியல. சோலியுமில்லே..."

"அப்பிடியா?"

"ஆமா நா நெனச்சிட்ட நாச்சப்பங்கிட்டியோ, ஆறுமுவங்கிட்டியோ கூலி எழுதிக்கிடச் சொல்லணுமின்னு. நீரே வந்தீரு..."

"முத்தன் அரிசி குத்தி வந்திருக்குன்னா. அன்னியே நீ சொன்னியே, சம்பா அரிசி வேணுமின்னு, சரி எடுத்திட்டு வருவமின்னு வந்த. அளத்துக் கோயில்ல கிருத்திக பூசைக்கு இன்னக்கிப் பெரியவிய போவணுமின்னா. அதும் சொல்லிட்டு இப்பிடி வந்தே. கோயில்ல முன் மண்டபம் கட்டிய பெறவு நீ பார்க்கலியே? பெரிய மண்டபம் ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, வள்ளி கல்யாண சித்திரமெழுதியிருக்கா. அளத்துக்காரவா ஒரு கலியாணம் காச்சின்னு திருச்செந்தூர் போகண்டா..."

அவள் எங்கோ பார்த்துக் கொண்டு ஓலை கிழிக்கிறாள்.

"தா பாஞ்சாலி? செம்பில நல்ல தண்ணி கொண்டா?"

அவள் தண்ணீர் கொண்டு வந்ததும் வாயிலிருக்கும் சக்கைகளை முற்றத்து மூலையில் சுவரில் வாரியடிக்கத் துப்புகிறார். பிறகு தண்ணீரால் வாயை அலசிக் கழுவிக் கொப்பளிக்கிறார் - மீண்டும் போய் உட்காருகிறார்.

"பெரியவிய ஒடம்பு ரொம்பத் தளந்து போச்சி. ஆரு வந்து கலியாணம் காச்சின்னாலும், சாவு செலவுண்ணாலும் கோயில் காரியம்னாலும் ஏன்னு கேக்குறதேயில்ல. பத்து இருவது தூக்கிக் கொடுக்கா. நேத்து கேட்டாவ. 'செந்திலாண்டவங் கோயிலுக்கு மண்டபம் கட்டிய பெறகு செங்கமலம் வந்தாளா'ண்ணு. வரலான்னா ஏன் கூட்டி வந்து காட்டலேம்பாக, அதான் சொல்லிட்டுப் போலாமின்னு வந்தே. நாளக்கிக் கிருத்திகைப் பூசை. அதோடு பால் குளத்தாச்சி இறந்துபோன நாளு. அம்மங் கோயிலிலும் பூசயுண்டு, காரு அனுப்பிச்சிக் குடுக்கவா?"

"நா ஒரு கோயிலுக்கும் வரல. இவளுக்கு அளத்துல ஒரு கூலி போட்டுக் கொடுக்கணும்..."

"அதுக்கென்ன? நாச்சப்பங்கிட்டச் சொல்லிவிட்டுப் போற. காலம அளத்துக்குப் போனா எடுத்துக்கறா. பொறவு எப்ப வார, நீ?"

"எனக்குச் சாமியே இல்ல. என் சாமி செத்துப் போச்சு. எனக்குக் கோயிலுமில்லே..."

"அது சரி, சாமி செத்துப் போச்சுண்ணா மறுபேச்சு என்ன இருக்கு...?"

பொன்னாச்சி சன்னலில் தெரியாத வண்ணம் பின்னே முற்றத்தில்தான் நிற்கிறாள். அவர் எழுந்து போகிறார். வாயிலில் ரிக்ஷா அதுகாறும் நின்றிருப்பதை அறிவித்துக் கொண்டு அது திரும்பிப் போகிறது.

"ஏட்டி, பாஞ்சாலி? ஒங்கக்காளக் கூப்பிடுடீ?"

அவள் அழைக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. பொன்னாச்சியே உள்ளே செல்கிறாள்.

"ஒனக்கு அதிட்டந்தா. இவ பழைய கணக்கவுள்ள. கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பில வந்தா. நாளக்கு சின்னாச்சிய பொழுதோடு கூட்டிட்டுப் போயி, அட்வான்ச வாங்கிக்கிங்க... இருவத்தஞ்சும் இருவத்தஞ்சும் அம்பது ரூவா கொடுப்பா..."

பொன்னாச்சிக்கு அந்த அம்மைக்கு எப்படி நன்றி கூறுவதென்று புரியவில்லை. அந்தக் கணக்கப்பிள்ளை இவளுக்கு உறவு போலும்!

மலர்க்குவியல் பூரித்தாற் போல் முகம் உவகையால் பொங்குகிறது.

வாயில் திண்ணையில் சாய்ந்திருக்கும் தந்தையைத் தொட்டு, "அப்பாச்சி, அந்த ஆச்சி எனக்கும் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலக்கிச் சொல்லிருக்கா. நாளக்கிச் சின்னாச்சியக் கூட்டிட்டுப் போயி அட்வான்சு வாங்கிக்குமின்னு சொல்றாவ. அம்பது ரூவா குடுப்பாவளாம்..." என்று பூரிக்கிறாள்.

அப்பச்சியின் கண்டத்திலிருந்து கொப்புளம் உடைந்தாற் போல் விம்மல் ஒலிக்கிறது. அவள் தலையைக் காய்த்துப் போன கையால் தடவுகிறார். பேச்சு எழவில்லை.

அவள் மாகாளியம்மனை நினைத்துக் கொள்கிறாள்; திருச்செந்தூர் ஆண்டவனை நினைக்கிறாள். "மாமன் வந்து சண்டையொன்றும் போட்டுவிடக் கூடாதே..." என்ற நினைப்பும் ஓடி மறைகிறது. முதல் கூலியில் ஒவ்வொரு ரூவாய் எடுத்து வைக்க வேண்டும்.

சின்னம்மா வீடு திரும்பும் போது நன்றாக இருட்டி விடுகிறது. ஒரு பெட்டியில் அரிசியும், விறகுக் கட்டுமாக அவள் வருகிறாள்.

கண்கள் ஆழத்தில் இருக்கின்றன. சுமையை இறக்கி விட்டு நீர் வாங்கிக் குடிக்கிறாள்.

"எனக்குந் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலைக்குச் சொல்லியிருக்கா அத்தாச்சி. நாளாக்கிக் கூட்டிப் போகச் சொன்னாவ. அட்வான்ஸ் தருவாகளாம்?"

"ஆரு வந்திருந்தா?"

"ஒரு கரத்த ஆளு. கடுக்கன் போட்டிருந்தா..."

"சரித்தா முத்திருளாண்டி..."

"அந்த அளம் நீங்க போற தாவுலதா இருக்கா சின்னம்மா?"

"இல்ல அன்னிக்கு பஸ்ஸில வந்தமில்ல? அங்கிட்டுப் போயி வடக்க திரும்பணும். அந்த அளத்துக்கு செவந்தியாபுரம், சோலக்குளம் ஆளுவதா நெரயப் போவா. இங்கேந்து ஆருபோறான்னு பார்க்கணும்..."

வாழ்க்கை வண்ணமயமான கனவுகளுடன் பொன்னாச்சியை அழைப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கனவுகளுடன் உறங்கிப் போகிறாள்.

அத்தியாயம் - 4

சேல் பட்டு அழிந்தது செந்தூர்
வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடி
யார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என்
தலை மேல் அயன் கையெழுத்தே...

கையிரண்டையும் தலைமேல் உயர்த்திக் குவித்துச் செந்தூர் முருகன் சந்நிதியில் மனங்குழைய நிற்கிறார் அருணாசலம். திருநெல்வேலி சென்று வருவதென்றால் வரும் போது அலைவாயில் மூழ்கி, முருகனைத் தரிசித்து அவன் காலடியில் மனச்சுமையை இறக்கி ஆறுதல் தேடுவதென்றும் அவருக்குப் பொருள்.

தூத்துக்குடி சென்று திருநெல்வேலிக்குச் செல்வதை விட, திருச்செந்தூர் முருகனைக் கண்டு செல்வதென்றால் ஓர் ஆறுதல். வயது வந்த பிள்ளை, கல்வி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தானும் முன்னுக்கு வந்து நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் ஓர் ரேகையளவும் இல்லாமல் அற்ப காரணங்களுக்காக அடிதடியிலா இறங்குவான்? கல்லூரி விடுதியில் இரண்டு கோஷ்டிகள் ஒருவருக்கொருவர் சண்டை, அதுவும் சாதிச் சண்டை. விடுதி அறையில் சக்திவேல் ஒரு அரசியல் தலைவரின் பெயரை எழுதி வைத்தானாம். இன்னொரு மாணவன் அதை அழித்துவிட்டு வேறொரு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினானாம். இவர் ஒரு ஜாதி, அவர் ஒரு ஜாதி. ஆக நெருப்புப் பொறி பறந்து அடிதடியில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

"முருகா! நீ என்றைக்கு இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறாய்!"

குடும்பம் அவற்றின் நிமித்தமான எண்ணற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் சுழற்றி அவன் காலடியில் வைத்து விட்டுச் சிறிது நேரம் மெய்மறந்து நின்று ஆறுதல் கொள்கிறார். பன்னீர் இலைப் பிரசாதமும் குங்குமமும் வாங்கிக் கொண்டு வெளியே வருகிறார்.

மரத்தடியில் நின்று ஈரவேட்டியை உயர்த்திப் பிடிக்கிறார்.

கிழக்கே தகத்தகாயமாகத் தங்கக் கதிரவன் அலை வாயில் பட்டாடை விரிக்கிறான். எத்தனை நாட்கள் பார்த்திருந்தாலும் அலுக்காத காட்சி. சில நாட்களில் மனம் குழம்பி ஆற்றாமையில் அல்லலுறும் போது, பஸ்ஸுக்குக் கொடுக்கக் காசில்லாமல் பொடி நடையாக நடந்தே அலைவாய் முருகனைக் காண வந்திருக்கிறார். அந்தக் கடலில் மேனியை நனைத்து, உள்ளத்தை அவன் கோலத்தில் நனைத்துக் கொண்டால் அந்தச் சுகமே தனி.

எத்தனை ஆண்டுகளாகவோ அலைவாய் முருகனைக் காண வருகிறார். இப்போது, எத்தனை மண்டபங்கள், எத்தனை கூட்டங்கள்! பயணிகளை ஏற்றி வரும் 'டூரிஸ்ட்' பஸ்கள் கார்கள் என்று சந்நிதி முழுவதும் கும்பல். பயணியர் விடுதிகள் வேறு மாடி மாடியாக எழும்பியிருக்கின்றன. ஆனால்...

முருகனைச் சுற்றி வேடக்காரர்கள் மலிந்து கிடக்கின்றனர். எங்கு பார்த்தாலும் எச்சில் துப்புபவனும், இயற்கைக் கடன் கழிப்பவனும், அங்கேயே இட்லி வாங்கித் தின்பவனும், படுத்துக் கிடந்து பிச்சை வாங்கும் கபடப் பண்டாரமும், தங்கள் செல்வ நிலையைத் தம்பட்ட மடித்துக் கொண்டு முருக பக்தியென்று கள்ளக் கண்ணீர் விடும் போலிகளும் அலைவாய் முருகனைச் சூழ்ந்திருக்கின்றனர். இதுதான் இன்றைய உலகின் ஓர் மாதிரித் துண்டு! வேட்டியை ஆட்டிக் காய வைத்து உடுத்திக் கொண்டு, சட்டையை அணிந்து கொள்கிறார் அருணாசலம். முதல் நாளிரவே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வயிற்றைக் கிண்டுகிறது.

நீண்ட சந்நிதித் தெருக் கொட்டகை வழியே நடந்து வருகையில் மண்டபத்தில் உள்ள ஐயர் கடையில் ஏறி அமர்ந்து கொள்கிறார். மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு காலைத் தினசரியைப் பார்க்கிறார். ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து ஆச்சி அவரை மகனைப் பார்த்து வர விரட்டினாள். இன்னும் ஒரு ரூபாய் எழுபத்தைந்து பைசா மீதி இருக்கிறது. பஸ்ஸுக்குக் கொடுத்து, நான்கு இட்லியும் காப்பியும் சாப்பிட முடியும்.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நயினார் பிள்ளை வருகிறான். "என்ன அண்ணாச்சி? எப்ப வந்திய?" என்று கேட்டுக் கொண்டு அமருகிறான்.

நயினார் பிள்ளை அந்தக் காலத்தில் திருச்செந்தூர் வட்டக் காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களில் அரும்பாடுபட்டுப் பெயரும் புகழும் பெற்றவன். கள்ளுக்கடை மறியலுக்கு அவரும் அவனும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். 'ஸால்ட் இன்ஸ்பெக்டர்' லோன் கொலைச் சதியில் சிறைக்குச் சென்று வந்தவன். இந்நாள் மண்டபத்தில் ஒருபுறம் தையற்கடை வைத்திருக்கிறான். பெண்கள் உடைகள் தைக்கிறான். அரசியலுக்கே வருவதில்லை. அவன் மட்டுமில்லை. அந்நாட்களில் ஆர்வமும் உண்மையுமாக நாட்டு விடுதலையையும் நல்வளர்ச்சியையும் நம்பிப் பாடுபட்ட தொண்டர்கள் எல்லோருமே இப்படித்தான் விலகி விட்டார்கள்.

"எங்க இப்படி வந்திய? தொழில் நிலம் எப்படி இருக்கு?"

"எப்படி இருக்கு? ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நேத்துக்கூட டி.ஆர்.ஓ.வைப் பார்க்கணுனும்தா தங்கி இருந்தேன். அமைச்சர் வந்திருக்கிறார்ன்னாவ. பெடிசன் எதுவும் தயார்ப் பண்ணிட்டுப் போகல. ஒண்ணும் வாவன்னா இல்ல நயினாரு. அந்தக் காலத்துல ஒரு முடிவெடுத்தா எப்படி எல்லாரும் ஒத்துக் கிளர்ச்சியோ, எதுவோ பண்ணினம்? அவனுக்கு அப்பவும் பெண்சாதி பிள்ளிய இல்லாமலா இருந்தாவ? இல்லாட்டா வெள்ளக்காரனை வெரட்டிருக்க முடியுமா? இப்ப ரொம்ப சுயநலமாப் போச்சு. அவனவன் தன் மட்டுக்கு நல்லா வந்திடணும், பணம் சம்பாதிக்கணும்னு எதுவும் செய்யிறான். 1947ல் இந்திய சர்க்கார் உப்பு வரி வாணான்னு சட்டம் போட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் இருந்தவன், இல்லாதவன் எல்லோருமா ஒத்துமையாக் கூடித்தான், தூத்துக்குடி சப்கலெக்டரிடம் மகஜர் கொடுத்தோம். எங்களுக்கு நிலம் பட்டா போட்டுத் தரணும்னு. அப்போதும் கூட்டுறவுச் சங்கமாவது இன்னொண்ணாவதுன்னு பணபலமுள்ளவன் எதிர்த்துத்தா மறிச்சான். அப்படியும் இருநூற்றைம்பது பேர் ஒத்துமையாக்கூடி இருந்ததால், இருநூறு ஏக்ராவுக்கு மேல் ஒதுக்கினாங்க, தன்பட்டாளம் செய்யுங்கள்னு. அப்போது புறம்போக்கு நிலம் குறிச்சுக் காட்டினோம், ஒதுக்கினாங்க. அப்போது இந்த ஓடை நடுவில் வந்து மறிக்கும், ஓடைக்கப்பால் ஆளையே விழுங்கும் தனி முதலாளியின் அளம் ஆயிரக்கணக்கான ஏக்கராகும்னு ஒரு நினைப்புமில்ல. கடோசில என்ன ஆச்சு? இருபது வருசமாகப் போவுது. ஓடை குறுக்கிடுவதால் பாதை இல்லை. லாரி வந்து உப்பெடுக்க முடியாது. அதனால, நாம அயனான உப்பு வாரினாலும் மூடை எட்டணாக்கும் முக்கா ரூபாய்க்கும் சீரழியிது. வண்டிக்காரன் ஓடையில் இறங்கி வந்து முக்கால் ரூபாய் மூடைன்னு இங்கே உப்பெடுத்து அந்தால மூணு ரூபாய்க்கு விக்கிறான். அதனால, இந்தத் தம்பாட்டளத்தில் ஒண்ணும் முன்னுக்கு வர முடியாதுன்னு அவனவன் நிலத்தைச் சும்மா போட்டு வச்சிருக்கான். முன்ன, இருபதம்ச திட்ட காலத்துல, இதுக்கு எப்படியானும் வழி பிறக்குமின்னு நம்பி, பாலத்துக்குத் திட்டமெல்லாம் போட்டு, பணம் செலவு பண்ணி எல்லாம் எழுதி எடுத்திட்டு நாங்க கலக்டரப் பார்த்தோம். அப்ப இதான் கேட்டாரு. இருநூறு ஏக்கராவில் பத்து ஏகரா கூட நீங்க அளம் போடலியே? இது என்ன கூட்டுறவுன்னாரு. நிலம் வச்சிருக்கிறவ அங்கங்க பிழைக்கப் போயிட்டான். அன்னிக்குக் காந்தி எதுக்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனாரு? ஒரு ஏழை, தன் கஞ்சிக்குப் போடும் உப்புக்கு வரி கொடுக்க வேண்டாம் என்பது மட்டுமல்ல, சொந்தமா பாடுபட்டு தன் நிலத்தில் விளைவெடுக்கணும். அவனுடைய தேவைக்கு அவன் சம்பாதிக்க முடியும்னு சொன்ன அந்த அடிப்படையில் தான் தன்பட்டாளம்னு லட்சியம் வச்சோம். இப்ப... ஆயிரக்கணக்கானத் தனிப்பட்ட முதலாளிகள் தன் பட்டாளம் பெருக்கியிருக்கா? குடும்பம் குடும்பமா அங்கே கொத்தடிமை செய்யப் போவுறாங்க. பொம்பிளப் பிள்ளைக, தாழக் குறுத்துப் போல, இம்மாட்டுப் பொடியலுவ, எல்லாரையும் கங்காணிய கண்ட்ராக்டுக, கூட்டிட்டுப் போறாவ. இதுக்கா சொதந்தரம் வாங்கினம்?..."

அருணாசலத்துக்குப் பழைய நண்பர் கிடைத்து விட்டால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விடுவார். வைத்த இட்டிலியை இன்னமும் தொடவில்லை.

"இப்பக் காலம் அந்தக் காலம் இல்ல அண்ணாச்சி. எல்லாம் யாபாரம் தானிப்ப. தாய் மகன் தொடர்பு, புருசன் மனைவி பிரியம் எல்லாமே இது செஞ்சா இதுக்குப் பர்த்தியா என்ன கிடைக்கும்னு ஆயிப்போச்சு. அந்தக் காலத்துல கதர்ச்சட்டை போட்டவங்களைப் போலீசு மகன் தேடிட்டுப் போவான். அவனுடைய தாயார், தலைமறைவுக்காரங்களைத் தானே ஒளிச்சு வச்சுச் சாப்பாடு போடுவா. இப்ப நினைச்சிப் பார்க்க முடியுமா? அது வேற காலம்; இது வேற... அதைச் சொன்னாக் கூட இப்ப ஆருக்கும் புரியாது."

நயினார் பிள்ளை சொல்வது உண்மைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. அவருக்கு இரண்டு பெண்கள் தாம். படிக்கப் போட்டு ஒருத்தி டீச்சராக இருந்தாள். இரண்டு பேரையும் கட்டிக் கொடுத்து விட்டார். பெண் குழந்தைகள் தேவலை என்று தோன்றுகிறது.

எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு திருச்செந்தூரிலிருந்து இருபது நிமிடம் கூடப் பிடிக்கவில்லை. ஊர் வந்துவிட்டது. மாதா கோயிலின் முன் கொண்டு வந்து இறக்கிவிட்டான். வள்ளி பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண் பையன், படிப்பதைக் காட்டிலும் ஊர் திரிவதில்தான் குறிப்பாக இருக்கிறான். குமரனைக் காணோம்.

"ஏட்டி, குமரன் பள்ளிக்கூடம் வரல?"

"அவன் அம்மாளிடம் துட்டு வேணும்னு அழுது பெரண்டிட்டிருக்கா" என்று செய்தி தெரிவிக்கிறாள். அன்றாடம் ஐந்து பைசா வைத்தாலே பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். பள்ளிக்கூடம் செல்வதற்காக ஊக்கக் காசாக ஆச்சி கொடுத்துப் பழக்கி, அது இல்லாமல் போகமாட்டேன் என்று விழுந்து புரளுகிறான்.

வீட்டு வாசலில் மனைவி குந்தியிருந்து ஈருருவிக் கொண்டிருக்கிறாள். அவரைக் கண்டதுமே எழுந்து "வேலுவைக் கூட்டி வரல...?" என்று கேட்டுக் கொண்டு உள்ளே பின் தொடருகிறாள். அவர் பதில் ஏதும் கூறாமல் சட்டையை எடுத்து ஆணியில் மாட்டுகிறார். ஞானம் படுத்தபடியே எதற்கோ கோபித்துக் கொண்டிருக்கிறான்.

"பையனுக்கு... ஒண்ணில்லையே?"

"கல்லுக்குண்டாட்டம் இருக்கா? அவனுக்கென்ன, கொளுப்புதா அதிகமாயிருக்கு. எனக்கு இவம் படிச்சி உருப்படுவான்னு தோணல."

"நீரு ஏம் எறிஞ்சு விழுறீம்? போலீசுச் சவங்க எதுக்காக நாம பெத்த புள்ளயப் போட்டு அடிக்கணும்? அவனுவ கொட்டடில அடிபடவா நாம பெத்து விட்டிருக்கம்?"

"மூடு ஓ ஊத்தவாய. போலீசுக்காரன ஏன் சொல்லுற? திமிரெடுத்துப் போயி இவனுவ திரியிறானுவ. படிக்கப் போனவன் படிப்பில் இல்ல கவனம் செலுத்தணும்? ரூமுக்குப் பேர் வைக்கிறானாம்? மானக்கேடு... சரி, இப்ப என் கோவத்தை நீ கிளப்பாத. சடையன் வந்தானா? பொன்னாச்சி எங்க? பச்சைய இளந்தண்ணி குத்திவைக்கச் சொன்னே, எங்கே வாரப் போயிருக்கானா? தங்கபாண்டி வண்டி கொண்டாந்தாலும் வருவான்..."

"அல்லாம் குத்திக்கெடக்கு. வண்டியும் மோட்டாரும் வந்து உம்ம உப்ப வாரிட்டுப் போப்போரா! ஏங்கெடந்து கனாக்காணுதீம்!" என்று நொடித்துவிட்டு ஆச்சி உள்ளே செல்கிறாள்.

திடீரென்று நினைவுக்கு வந்தவராக அவர் கத்துகிறார்.

"அந்தக் குமரன் பயல ரெண்டு உதை கொடுத்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக் கூடாது? இந்தப் பய ஏன் இன்னும் எந்திரிக்காம படுத்திருக்கிறான்? லே, எந்திரிந்து காலம பல்விளக்கி, சாமி கும்பிடணும்னு உனக்கு எத்தினி தடவ சொல்லியிருக்கேன்? எந்திரிலே?"

"அப்பா, பொன்னாச்சியும் பச்சையும் ஊருக்குப் போயிட்டாவ" என்று ஞானம் ஆர்வத்துடன் எழுந்து அறிவிக்கிறான் பதிலுக்கு.

அவர் விழித்துப் பார்க்கிறார்.

"என்னலே உளறுறே?"

"நெசமாலும், அவிய வந்து அளச்சிட்டுப் போயிட்டா தூத்தூடிக்கு!" அவருக்கு எதுவும் புரியவில்லை. "என்ன சொல்றா இவ?"

சிதம்பர வடிவு அவரை நிமிர்ந்து பார்க்காமலே சுளகில் எதையோ எடுத்துக் கொழிக்கிறாள்.

அவர் வந்து பின்புறமாக அவள் முடியைப் பற்றுகிறார்.

"பிள்ளையளை எங்கே அனுப்பிச்ச...?"

"ஐயோ... முடிய வுடும்?" என்று அவள் கூந்தலைப் பற்றிக் கொள்கிறாள். "போறம் போறம்னு சொல்லுறவள நா புடிச்சா வச்சுக்க முடியும்? அவ சின்னாச்சியாமே, அந்த சக்களத்தி வந்தா. வந்து கொமஞ்சா, மாமா ஊரில் இல்ல, பொறவு என்ன வந்து ஏசுவாண்ணு சொன்னா அவ கேக்கா இல்ல. நீரு என்னைப் போட்டுக் காச்சுவீம்!" என்று முன்றானையை முகத்தில் தேய்த்துக் கொண்டு மூக்கை சிந்துகிறாள். "அவ... சின்னச்சியிட்ட என்ன சொன்னா தெரியுமா? சோறுண்டு ரெண்டு நாளாச்சுண்ணா. நா அப்படிப் பாவியா? ரெண்டு நாளா முக்காத் துட்டு கெடயாது. இவ போவேண்ணு குதிய்க்கா. கோயில்காரரு வீட்டேந்து மூணு ரூவா அவளே வாங்கிட்டு வந்து போயிட்டா, தம்பியயும் கூட்டிட்டு. நா பட்டினி கெடக்கே. எம்புள்ளய பட்டினி கெடக்கு; வராத விருந்துக்கு இருந்த அரிசிய வடிச்சிப் போட்ட. கடயில கடன் சொல்லி அவதா காப்பித்தூளும் கருப்பட்டியும் வாங்கியாந்தா!"

அவருக்கு இதில் ஏதோ சூது இருக்கிறதென்று புலனாகிறது.

"இத்தனை நாளா இல்லாத சின்னாத்தா ஒறவு எப்படி முளைச்சிருக்குன்னு ஒனக்கு அறிவு வேண்டாம்? அளத்தில பாத்திமெதிக்க ஆள் கேட்டிருப்பா. அந்தக் காலத்துல தேயிலைத் தோட்டத்திலே மலங்காட்டில சாவுறதுக்கு எப்படி ஆள் பிடிப்பாளாம் தெரியுமா? தேனும் பாலும் வழியிம்... காக்காய ஓட்டத்தா ஆளும்பானாம்?" என்று அவர் இரைகிறார்.

"நானென்ன கண்டே! நீரு எங்கிட்டச் சலம்பாதீம்!" என்று கூறிய அவள் கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு சுளகில் கொழித்த அரிசிக் குருணையுடன் அடுப்படிக்குச் செல்கிறாள்.

தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டுமானால் கையில் பணமில்லை. அன்று காலையில் தொழி திறந்து பாத்திக்கு நீர் பாய்ச்ச்யிருந்தார். உப்பு குருணைச் சோறாக இறங்கியதும் இளந்தண்ணீர் பாய்ச்சும்படி பச்சையிடம் கூறிச் சென்றிருந்தார். உப்பு வாருவதற்கு இறங்கியிருக்கும்.

செந்தூர் முருகனை வாய்விட்டுக் கூவி அழைத்தவராக அவர் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நடக்கிறார்.

வெகுநாட்கள் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தாயார் மருமகளைப் பார்க்காமலே போகிறேனே என்று கண்களை மூடினாள். சிதம்பரவடிவு உறவு பெண்தான். செவந்திக்குக் கட்டி வைத்த மறுவருடத்திலேயே இவளை மகனுக்குக் கட்டி வைத்தார் தந்தை.

புருசன் சரியில்லாமல் செவந்தி அண்ணன் வீட்டுக்கு வந்தாலும் சோற்றுக்குப் பாரமாக இருக்கவில்லை. இட்லிக் கடை போட்டாள். பரவர் வீடுகள் எல்லாம் அவளுக்கு வாடிக்கை. பெட்டி முடைவாள், வலை கூடப் பின்னக் கற்றாள். சுறுசுறுப்பும் கருத்தும் உடைய அவள் கையில் எப்போதும் காசு இருக்கும். அட்டியலும் கை வளையலும் மகளுக்கென்று வைத்திருந்தாள். புருஷன் குடித்துவிட்டு வந்து நகையைக் கேட்டான் என்றுதானே அவள் புருசனையே வேண்டாம் என்று விலக்கி விட்டு வந்தாள்?

உழைப்பின் காரணமோ, அவருடைய போதாத காலமோ, அவளுக்கு நீர் வியாதி வந்தது. இரண்டு மாதம் படுக்கையில் கிடந்து விட்டுக் கண்ணை மூடிவிட்டாள். தன் பாட்டளத்தில் முழுக்கஞ்சி கூடக் குடிக்க முடியவில்லை. 'கூட்டுறவு உப்புத் தொழிலாளர், உற்பத்தி விற்பனைச் சங்கம்' என்ற ஒன்றை உருவாக்கவே பங்குகள் சேர்க்க வேண்டியிருந்தது. இப்போதும் அவர் பேரில் முக்கால் ஏக்கர், செவந்தி பேரிலும் அவள் மகன் பச்சை பேரிலும் என்று மூன்று பங்கு... இரண்டே கால் ஏக்கரில் அவர் உப்பு விளைவிக்கிறார்; அவளுடைய நகைகளை எல்லாம் விற்றுவிட வேண்டியதாகி விட்டது. சக்திவேலுவுக்கு அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கிறதென்றாலும், அவன் செலவு அவர் கையை அதிகமாகவே கடிக்கிறது. தன்பட்டாளம் கூட்டுறவில் நல்வளர்ச்சி பெற்றுப் பொருளாதார அளவில் அவர்கள் முன்னுக்கு வருவதைப் பற்றி அவர் இன்னும் கனவு காண்கிறார். பொன்னாச்சியை நல்ல பையனாக, உழைப்பாளியாக குடிக்காத, பிறன் மனை நோக்காத ஒரு மாப்பிள்ளைக்குக் கட்டி, இந்த அளத்தில் பாடுபடுபவனாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தார். பெண்கள் நான்கு சுவர்களைத் தாண்டி, பாத்திக் காட்டில் இன்னொருவன் அடிமையாக வேலைக்குச் செல்வதனால் ஏற்படும் கேடுகளை அவர் அறிந்தவர். அதனால் தான் இந்தச் சமுதாய அமைப்பில், பெண்களைத் தங்கள் இல்லம் தாண்டிப் பாதுகாப்பில்லாத வேலைக்கு அனுப்புவதைக் காட்டிலும் கிடைக்கும் கால் வயிற்றுக் கஞ்சியே மேல் என்று நிச்சயமாக நம்பியிருந்தார்.

ஓடையில் நீரேற்றம் தெரிகிறது. ஒதுக்கி விட்டிருக்கும் மீன்பிடி வள்ளங்கள் ஒன்றும் இல்லை. இறால் பிடிப்பதற்கென்று குத்தகை பேசி ஏழாயிரம், எட்டாயிரம் கடன் பெற்று தூத்துக்குடியில் இருந்து 'ரெடிமேட் வள்ளங்'களை நிறைய வாங்கி விட்டிருக்கின்றனர். தாமிரபரணித்தாய், கடலரசனைத் தழுவப் பல கைகளாகப் பிரிந்து கொண்டு ஆவலோடு வரும் இடம் அது. ஒவ்வொரு ஓடையும் ஒரு கையில் விரல்களைப் போல் தெரிகிறது. முட்புதர்களும் தாழைகளுமாக நிறைந்த, அந்த இடத்தில் சங்கமுகேசுவரர் கோயில் இருக்கிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை என்றால் காட்டுப்பாதையில் நடந்து வந்து நீராடி ஈசுவரனைத் தரிசனம் செய்பவர்கள் உண்டு. கோயிலுக்கு மேற்கே மூங்கில் துறை ஊரில் இருந்து வந்து குருக்கள் பூசை செய்வார்.

பாலத்தை மேற்கே ஓடை பிரியுமுன் போட்டு விட்டால், லாரி வரும் சாலை வந்து விட்டால், அந்த அளங்கள் வளமையை வாரிக் கொடுக்குமே?

ஆனால் பாலம் கட்டும் யோசனை, திட்டம் எல்லாம் தயாராக்கிக் கொடுத்த பின் ஓடையின் பரதவர் வள்ளங்கள் நிறுத்துவதற்குத் தடங்கலாகுமென்றும், அவர்கள் பாயை விரித்துக் கொண்டு பாலத்தடியில் செல்ல முடியாதென்றும் பாலம் கட்டக் கூடாதென்றும் மனுக் கொடுத்திருக்கிறார்களாம்.

அந்தச் செய்தியே கனவுப் பூங்காவில் வீழ்ந்த இடிபோல் தோன்றியது. இங்கு... பொன்னாச்சியையும் மகனையும் சின்னாத்தா கூட்டிப் போயிருக்கிறாள்!

இத்தனை நாளாக இல்லாத கரிசனமா, வாஞ்சையா? எது?

அளத்தில் உப்பு கண்ணாடி மணிகளாக, பரல்களாக இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரமான ஏக்கர் நிலங்களில் ஆட்களை விரட்டி செய்நேர்த்தி செய்தவர்களுக்குக் கூட இவ்வளவு நேர்த்தியாக உப்பு இறங்கியிருக்காது. மூட்டை ஐந்து ரூபாய்க்குத் தாராளமாகப் போகும் இது... இதை தங்கபாண்டி, வண்டியை ஓடையில் இறக்கிக் கொண்டு போவான். அவருக்கு எப்போதும் முடை. அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது. அவனிடம் உப்பு கண்டு முதலாகு முன்பே கடன் வாங்கி விடுகிறார். இப்போது அவன் வந்தால், உப்பை வாரிவிடலாம். பணம் இருபது ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்...

சட்டையைக் கழற்றி வைத்து விட்டு அங்கு பன ஓலையினால் வேயப்பெற்றிருக்கும் சிறு அறைக் கதவைத் திறந்து வாருபலகை, வாளி ஆகியவற்றை எடுக்கிறார். பாத்தியின் கீழிறங்கி, சலசலவென்று கலகலத்துச் சிரிக்கும் மணிகளை வார் பலகையில் கூட்டி ஒதுக்குகிறார்.

தொலைவில் தங்கபாண்டியின் வண்டிச் சத்தம் கட கடவென்று கேட்கிறது.

அத்தியாயம் - 5

கிழக்கே கடலின் அடிவரையிலிருந்து பொங்கி வரும் விண்மணி கண்களைக் குத்தும் கதிர்களைப் பரப்புகிறான். வாயிலில் பெரிய வளைவில் 'பனஞ்சோலை ஸால்ட் வொர்க்ஸ்' என்ற எழுத்துக்கள் தெரியும் கதவுகள் அகன்று திறந்திருக்கின்றன.

தலைக்கொட்டை எனப்படும் பனஓலையால் பின்னிய சும்மாட்டுச் சாதனமும், அலுமினியத் தூக்கு மதிய உணவும் கைகொண்டு ரப்பர் செருப்பும் ஓலைச் செருப்புமாக உப்பளத்துத் தொழிலாளர் அந்த வாயிலுள் நுழைந்து செல்கின்றனர். சிறுவர் சிறுமியர் கந்தலும் கண் பீளையுமாக மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகும் மாட்டுக் கும்பலை ஒத்து உள்ளே விரைகின்றனர். முடியில் விளக்கெண்ணெய் பளபளக்க, அன்றைப் பொழுதுக்குப் புதுமையுடன் காணப்படும் இளைஞரும் அந்தக் கும்பலில் இருக்கின்றனர். முக்காலும் பாத்திகளில் 'செய்நேர்த்தி' முடிந்து தெப்பத்தில் கட்டிய நீரைப் பாத்திகளுக்குப் பாயத் திறந்து விட்டு விட்டார்கள். உப்பை வாரிக் குவிக்கத் துவங்கிவிட்டனர். பொன்னாச்சியும் தம்பியும் வேலைக்குச் சேர்ந்து மூன்று சம்பளங்கள் வாங்கி விட்டனர். இத்தனை நாட்களில் பாத்திப் பண்பாட்டிலேயே மிதித்து அவளுடைய மென்மையான பாதங்கள் கன்றிக் கறுத்துக் கீறல்கள் விழுந்து விட்டன.

உப்பளத்து வேலையில் 'சமுசாரி வேலை' என்று சொல்லப் பெறும் பசிய வயல் வரப்புகளில் வேலை செய்வது போல் குளிர்ச்சியைக் காண இயலாது. இங்கு உயிரற்ற வறட்சியில், பண்புள்ளவர் செவிகளும் நாவும் கூசும் சொற்களைக் 'கண்ட்ராக்ட்' நாச்சியப்பன் உதிர்த்த போது முதலில் அவள் மருண்டு தான் போனாள். அவர்கள் பண்பற்ற வசைச் சொற்களைத் தவிர்த்து மரியாதையாகப் பேசியே அறியார் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாள்.

எல்லை தெரியாமல் விரிந்து பரந்து கிடந்த பாத்திகளைக் கண்டு இன்னமும் அவளுக்கு மலைப்பு அடங்கவில்லை. மாமனின் தன் பட்டாளத்தில் வேட்டி காயப் போட்டாற் போல், பாய் விரித்தாற் போல் பாத்திகளில் உப்பு இறங்கியிருக்கும். இங்கோ... வானக் கடலைப் போல் ஓர் வெண் கடலல்லவா இறங்கியிருக்கிறது! தெப்பங்களே (தெப்பம் - கடல் நீரை முதன் முதலாகச் சேமிக்கும் பாத்தி) ஆத்தூர் ஏரி போல் விரிந்து கிடக்கின்றன!

வேலை செய்யும் ஆட்களோ, பலவிதங்கள். அவளைப் போல் நாச்சியப்பன் கண்டிராக்டின் கீழ் வேலை செய்யும் பெண்கள் பலர் இருக்கின்றனர். வரப்பில் குவியும் உப்பை வழித்துப் பெட்டி பெட்டியாகத் தட்டு மேட்டில் அம்பாரம் குவிக்கும் பணிதான் அவர்களுக்கு.

உப்பைக் கொத்துப் பலகை போட்டு உடைப்பவர்களில் சில பெண்களும், வாருபலகை கொண்டு உப்பை வாரி வரப்பில் ஒதுக்கும் ஆண்களும் கங்காணிகளின் கீழ் வேலை செய்கின்றனர். ஒரு கங்காணியின் ஆதிக்கத்தில் ஐந்து பேருக்கு மேலில்லை. இவர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு பணி செய்யும் தொழிலாளர்களும் உண்டு. தம்பி பச்சைமுத்துவுக்கு அறவைக் கொட்டடியில் வேலை கொடுத்திருக்கின்றனர். உப்பை, அறைவை ஆலைகள் இரவோடிரவாக மாவாக்கிக் குவிக்கின்றன. அந்தத் தூளைப் பெட்டி பெட்டியாகச் சுமந்து கொட்டடிக்குள் குவிக்கும் பணியில்தான் எத்தனை சிறுவர் சிறுமியர்! பச்சைக்குப் பதினாறு வயதாகிவிட்டது என்று அவள் கூறியும் நாச்சியப்பன் நம்பவில்லை. அவனுக்கு நான்கு ரூபாய் கூலி இல்லை. அறைவைக் கொட்டடியில் இரண்டரை ரூபாய்தான் கூலி கிடைக்கிறது. அட்வான்சு பெற்றதுமே சின்னம்மா அவனுக்கும் அவளுக்கும் காலில் போட்டுக் கொள்ள ரப்பர் செருப்பு வாங்கித் தந்தாள். அவள் அளத்தில் பெட்டி சுமக்கையில் எல்லோரையும் போல் ரப்பர் செருப்பைக் கழற்றி விட்டு, பனஓலையில் பின்னி இரண்டு கயிறுகள் கோத்த மிதியடிகளை அணிகிறாள். அதுவே ஒரு நாளைக்கு ஒரு சோடி போதவில்லை. சனிக்கிழமை மாலையில் கூலி கொடுக்கிறார்கள். தலைப்புரட்ட எண்ணெய், அரசி, புளி, மிளகாய் எல்லாம் தட்டில்லாமல் வாங்க முடிகிறது. சென்ற வாரம் சின்னம்மா அவளுக்குப் புதிய ரவிக்கை ஒன்றும், தம்பிக்குத் துண்டு ஒன்றும் எடுத்து வந்தாள். பருப்பு நிறையப் போட்டு வெங்காயம் உரித்துப் போட்டுக் குழம்பு வைத்துத் திருப்தியாக உண்டார்கள். அடுத்த சனிக்கிழமைக்குக் கறி எடுத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்று ஆசையை அப்பன் வெளியிட்டார். பசி... பசி அவிய இந்த உப்புக்கசத்தில் எரிய வேண்டும்.

நாச்சியப்பன் பேரேட்டைப் பார்த்துத் தன் கீழுள்ளவர் பேர்களைப் படிக்கிறான். மாரியம்மாலே மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு அசிங்கமான வசையைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அல்லி... அவள் பிள்ளையையும் தூக்கி வருகிறாள். கொட்டடியில் விட்டு விட்டு உப்புச் சுமக்க வேண்டும். அன்னக்கிளி... அன்னக்கிளி சூலி.

பொன்னாச்சியைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் நாச்சியப்பன். அவன் பார்வையில் அவள் துடித்துப் போகிறாள். அங்கு வேலை செய்யும் பெண்களில் யாரும் பொன்னாச்சியைப் போல் சூதறியாத பருவத்தினரில்லை. இந்த ஒரு மாச காலத்தில் அவன் அவளைப் பார்க்கும் பார்வை மட்டுமே ஆகாததாக இல்லை. போகும் போதும் வரும்போதும் கழுத்தில் தொடுவதும், கையைத் தீண்ட முயல்வதும், இன்னும் அருவருப்பான சைகைகள் செய்வதுமாக இருக்கிறான். பேரியாச்சி என்ற கிழவி ஒருத்தி, கொத்து பலகை போடுவாள். "புதுசா தளதளப்பா இருக்கா. ஏட்டி, ஒம்பாடு சோக்குதா. சோலிக்கீலியெல்லா சொம்மா போக்குக் காட்டத்தா..." என்று கேலி செய்தாள். பொன்னாச்சிக்கு நாராசமாக இருந்தது. "ஆச்சி, நீங்க பெரியவிய பேசற பேச்சா இது?..." என்றாள் கோபமாக.

பேரேட்டில் பெயர் படிக்கும் போதே அவன் பொன்னாச்சியை அன்று கூட்டத்திலிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்து விடுகிறான்.

"ஏவுள்ள! நீ அவளுவ கூட உப்பள்ளப் போகண்டா. இப்பிடி வா சொல்லுற..."

பொன்னாச்சி தன் விழிகள் நிலைக்க, நகராமல் நிற்கிறாள். மற்றவர்கள் எண்பத்தேழாம் நம்பர் பாத்தியில் குவித்த உப்பை வாரிக் கொட்ட நடக்கின்றனர். மாசாணம் கொட்டடியில் ஒரு புறமுள்ள கிடங்கறையில் சென்று பெட்டிகள், மண்வெட்டி முதலியவற்றை எடுத்து வருகிறான்.

"அங்கிட்டு வாடி, விருந்துக் கொட்டடியப் பெருக்கித் துப்புரவு பண்ணு. சாமானமிருக்கி, தேச்சுக் கழுவ..." என்று அவளைக் கையைப் பற்றி இழுக்கிறான்.

அவன் கையை வெடுக்கென்று உதறிக் கொள்கிறாள். மற்றவர் யாரும் காணாதது போல் செல்கின்றனர்.

விருந்துக் கொட்டடி என்ற கட்டிடம் மிகத் தொலைவில் இருக்கிறது. அதன் வாயிலில் கார் வந்து நிற்கக் கண்டிருக்கிறாள். அங்கு முதலாளிமார் வருவார்கள். அதன் ஓர் புறம் அலுவலகமும் இருக்கிறது. அங்கிருந்துதான் கணக்கப்பிள்ளை சம்பளத்தைப் பெற்று வந்து 'கண்ட்ராக்டி'டமோ, கங்காணியிடமோ கொடுப்பார்.

பொன்னாச்சி விரிந்து கிடக்கும் அந்தப் பாத்திக் காட்டில் அவளை அவன் அழைத்துச் செல்வதை யாரேனும் நிமிர்ந்து பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே அச்சம் நடுங்கச் செல்கிறாள். ஆட்கள் ஒவ்வொருவராக இப்போதுதான் வருகிறார்கள். விருந்து கொட்டடி என்பது கொட்டடியில்லை. அது பங்களா போலவே இருக்கிறது. கீழே நடக்கக் கூசும் பளிங்குத் தரையில் அடிவைக்கவே மெத்தென்ற விரிப்பு- பூப்போட்ட திரைகள்; மெத்தென்ற உட்காரும் ஆசனங்கள். அவள் தயங்கியவளாக வெளிவராந்தாவில் நிற்கிறாள்.

"ஏட்டி, நிக்கிற? இங்ஙன உள்ள வா! சாமானங் கெடக்கு. தேச்சுக் கழுவு, இங்க பெருக்கி, பதவிசாத் துடச்சி வையி! முதலாளி வராக...!" என்று சொல்லிவிட்டு கட்டிடத்தைச் சுற்றி உள்ளே அழைத்துச் செல்கிறான். பின் தாழ்வாரத்தில் குழாயடியில் வெள்ளி போன்ற சாப்பாட்டு அடுக்கு கூசா, தம்ளர்கள், தட்டு ஆகியவை கிடக்கின்றன. சோப்புத் தூளை எடுத்துப் போடுகிறான். அவள் துலங்க அமருகிறாள்.

நெஞ்சில் சுருக்சுருக்கென்று, மணலில் கத்தி தீட்டுவது போன்றதோர் அச்சம் குலைக்கிறது. இது வெறும் பாத்திரம் துலக்க அல்ல. "முருவா... முருவா" என்று உள்ளம் ஓலமிடுகிறது.

சாமான் துலக்கும் போது, அங்கிருந்து ஓடி விடப் பின் கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்கிறாள். பின் கதவு கம்பி வலைகளால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. ஆனால், பூட்டப் படாமல் திறந்து தானிருக்கிறது. அவள் வெகுவிரைவில் பாத்திரங்களைத் துலக்கிக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறாள். அச்சத்தில் நா உலர்ந்து போனாலும், குழாயில் கொட்டுவது நல்ல நீர் தானா என்று பார்க்கக் கூடத் தெம்பு இல்லை. அந்தத் தாழ்வரையின் ஓர் ஓரத்தில் வேண்டாத சாமான்கள் போடும் ஓர் அறை இருக்கிறது. பெயின்ட் தகரங்கள், கொத்து வேலைக்கான தட்டுமுட்டுக்கள், நார்ப் பெட்டிகள், உடைந்து போனதோர் நாற்காலி ஆகியவை இடம் கொண்ட அந்த அறையில் அவன் ஏதோ பார்ப்பவனாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். "இங்க வாட்டி, வாரியல் இருக்கு பாரு. சுத்தமா இந்த ரூம்பைத் தட்டிப் பெருக்கு!"

அவள் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாகப் பதுங்கி, தோளைப் போர்த்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.

வாரியல் அவிழ்ந்து கொட்டிக் கிடக்கிறது. அவள் அதைத் திரட்டிக் கட்டும் போது அவன் அவள் மீது விழுந்து மாராப்புச் சேலையைத் தள்ளி விடுகிறான்.

அவள் பலம் கொண்ட மட்டும் அவன் கையைக் கிள்ளித் தள்ளுகிறாள், "என்னிய விடு...! என்னிய விடுரா. சவத்து மாடா? சவம்..."

காலை நீட்டி அவனை உதைக்கப் பார்க்கிறாள்.

வெளியே யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது.

அவனுக்கு ஆத்திரம். அவளைச் சுவரில் வைத்து மோதுகிறான்.

"ஒன்ன வழிக்குக் கொண்டார எனக்குத் தெரியும்டீ...?" என்ற மாதிரியில் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீசையைத் திருகிக் கொள்கிறான். அதைப் போன்றதோர் அருவருப்பான எதையும் அதற்கு முன் அவள் மனம் உணர்ந்திருக்கவில்லை. அவள் விர்ரென்று திறந்த ஒற்றைக் கதவு வழியாகக் குழாயடியில் வந்து நிற்கிறாள்.

"மூளி... ஒனக்கு அம்புட்டிருக்கா? செறுக்கி மவ... ஒந்திமிரு பதங்கொலைய நீயே வந்து விழுவ. பத்தினித்தனமா காட்டுறே?..."

வெளியே கார் வந்து நின்றிருக்கிறது. முதலாளிமார்... யாரோ வந்திருக்க வேண்டும். அவன் நாய் வாலைக்குழைத்துக் கொண்டு ஓடுவதைப் போல் ஓடுகிறான். பொன்னாச்சி பின் கதவைத் திறந்து கொண்டு ஓட்டமாக ஓடி வருகிறாள். தான் ஒரு கசத்தில் வந்து மாட்டிக் கொண்டது புரிகிறது.

அவள் தப்பிவிடலாம். இந்த அளத்துச் சோலிக்கு முழுக்குப் போட்டுவிட்டு நின்றுவிடலாம். ஆனால், அட்வான்ஸ் இருபத்தைந்து ரூபாயை எப்படித் திருப்பிக் கொடுப்பார்கள்?

கண்களில் நீர் கரிப்பாய் சுரந்து கரகரவென்று கன்னங்களில் இறங்குகிறது. 'ஐட்ராவை' ('ஐட்ரா' - ஹைட்ரா மீட்டர் எனப்படும், நீரின் அடர்த்தியைச் சோதித்தறியும் கருவி) மூங்கிற்குழாய் நீரில் விட்டு டிகிரி பார்த்துவிட்டு அதை மீண்டும் 'போணி'க்குள் போட்டுக் கொண்டு நிமிர்ந்த ராமசாமி, இவள் கண்ணீர் வடிய தன்னந்தனியாக ஓடுவதைப் பார்க்கிறான்.

"ஏவுள்ள... ஏ அளுதிட்டுப் போற?... ஏ...?"

அவனுடைய வினா அப்போது மனதை இதமாக வந்து தொடுகிறது என்றாலும் அவன் யாரோ? அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும்? அவனைச் சற்றே நிமிர்ந்து பார்த்தாலும் மறுமொழி கூறவில்லை.

எண்பத்தேழாம் நம்பர் பாத்தி வரப்பில் நின்று மாசாணம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு சேர்ந்த உப்பை வாளியினால் வாரிப் பெட்டிகளில் நிரப்புகிறான். அடுத்த பாத்தி ஒன்றில் பேரியாச்சி நீண்ட பிடியுள்ள கொத்துப் பலகையில் நீரில் பாளமாகக் கட்டியிருக்கும் உப்பைச் சலங்கைகளாக உடைக்கிறாள். மாசாணம் அவள் மகன் தான். கல்யாணம் கட்டி, மருமகளும் வேலை செய்கிறாளாம். ஆனால், இந்த அளமில்லை. அவர்கள் குடியிருக்கும் செவந்தியாபுரம் அளத்திலேயே வேலை செய்கிறாளாம்.

முகத்தைத் துடைத்துக் கொண்டு பெட்டியில்லாமல் வந்து நிற்கும் அவளை மற்ற பெண்கள் பார்க்கின்றனர். அவளைக் குரோதப் பார்வை கொண்டு நோக்கும் வடிவாம்பா "குடுத்து வச்சவிய நிக்கிறாவ. ஏட்டி எங்கட்டி பாத்து வாயப் பொளக்குறே? ஓ மாப்பிளயா அவுத்திட்டுக் கெடக்கா?" என்று இன்னொருத்தியைக் கடிவது போல் ஏசுகிறாள். இங்கே பெண்களும் கூட எவ்வளவு கேவலமாக ஏசுகிறார்கள். மாமி ஏசுவாள்; அல் அயல் சண்டை போட்டுப் பார்க்காதவளல்ல அவள். ஆனால் இந்தப் பாத்திக் காட்டில், உப்புக் கசத்தில் புழுத்த நாயும் குறுக்கே செல்லாத வசைகள்!

நரநரவென்று உப்பு கால் சதைகளின் மென்மையை வருடி இது வேறோர் வாழ்வு என்று அறிவுறுத்துகிறது. பசுமையற்ற அந்த உப்பு வெளியிலே, மென்மையின் உயிர்த்துடிப்புக்களுக்கு இடமே கிடையாது. ஏரிபோல் விரிந்திருக்கும் தெப்பங்களில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கபடமான கொக்குகளைத் தவிர ஒரு புழு பூச்சி கிடையாது. இங்கே வந்து தங்கினாலும் இந்த உப்பு அவற்றைத் தன் மயமாக்கி விடும்.

பொன்னாச்சி பெட்டியை எடுத்து வந்து உப்புச் சுமக்கிறாள்.

சுட்டெரிக்கும் கதிரவன் உச்சிக்கு ஏறி, பாத்திகளில் நீரை உறிஞ்சுகிறான். அந்த நீர் உனக்கு மட்டும் உரிமையில்லை என்றுரைத்துக் கொண்டு வறண்ட காற்று, குருதியை உழைப்பாக்கும் நெஞ்சங்களையும் உலரச் செய்கிறது. பெட்டி - உப்பு - நடை - சுமை - தட்டு மேடு - அம்பாரம்... இவற்றுக்கு மேல் சிந்தையின்றி, மனிதத் துளிகள் இயந்திரமாகி விடும் இயக்கம். இங்கு சிரிப்பும் களிப்பும் தோய்ந்த பேச்சு உயிர்க்காது.

பொன்னாச்சிக்குக் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விடாய் விசுவரூபம் எடுக்கிறது. விருந்து கொட்டாயில் கொட்டிய குழாயை நினைத்துக் கொள்கிறாள். பகலுணவுக்கு மணியடிப்பார்கள்.

சோற்றுக் கொட்டுக்குப் போய் நீரருந்தலாம்? அங்கும் குழாயுண்டு. ஆனால் அந்த மாசாணம் அதைக் குத்தகை எடுத்திருக்கிறான்; இலகுவில் விடமாட்டான். உணவு நேரத்தை விட்டால் நீரருந்த முடியாது.

'கண்ட்ராக்டு' நாச்சியப்பன் குடைபிடித்துக் கொண்டு தட்டு மேட்டில் வந்து நிற்கிறான். பொன்னாச்சி அவன் நிற்கும் பக்கம் உப்பைக் கொட்ட அஞ்சி அம்பாரத்தின் இன்னோர் பக்கம் கொட்டி விட்டுத் திரும்புகிறாள். அம்பாரம் குவிக்கும் ஆண்டியை, செருப்பின் அடியில் உப்பு தெரிய நின்று அவன் விரட்டுகிறான்.

நாச்சியப்பன் பின்னர் அவளைச் சீண்டவே குடையும் கையுமாக வரப்பில் இறங்கி வருகிறான். இரு கைகளையும் தூக்கி உப்புப் பெட்டியை அவள் சுமந்து வருகையில் அவன் எதிர்ப்பட்டு, வேலையை விரைவாக்க முடுக்கும் பாவனையில் கைவிரலை அவள் விளாவில் நுழைத்து சீண்டி விட்டுப் போகிறான். அந்த உப்பை அவன் மீது கொட்டி அவனை மிதிக்க வேண்டும் என்ற ஓர் ஆத்திரம் பற்றி எரிகிறது பொன்னாச்சிக்கு.

ஆனால், ஏலாமை கண்களில் நீரைப் பெருக்கி, பாத்தி காடுகளும் உப்புக் குவையும் வெறும் வெண்மைப் பாயல்களாகக் கரையப் பார்வையை மறைக்கிறது.

சிறுவயசில் அவள் தாயுடன் குளத்துக்குக் குளிக்கச் செல்வாள். அந்நாட்களில் குளத்தில் நடுவில் மலர்ந்திருக்கும் அல்லிப் பூக்களைப் பறிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அம்மா அவளைக் கீழே இறங்க விட மாட்டாள். கணுக்கால் நீருள்ள படியிலேயே அமர்த்திக் குளிப்பாட்டித் துடைத்துக் கரைக்கு அனுப்பி விடுவாள். "இன்னும் இன்னும்..." என்று ஆழத்தில் இறங்க வேண்டும் என்று அவள் கத்துவாள்.

"ஆளண்டி, அறிவு கெட்டவளே, போனா ஒளையிலே மாட்ட்க்கிட்டு முடிஞ்சி போவ!" என்பாள்.

ஆனால் அவளுக்கு அப்போது அது உறைத்ததில்லை. அந்நாள் மற்றவர் நீந்திச் சென்று மலர் பறித்து வருவது அவளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். பின்னர், அவள் தாய் இறந்து போன பிறகு ஒருநாள், அவள் பூப்பறிப்பதற்காக இருகைகளையும் நீரின் மேல் அகலப் பாய்ச்சிக் கொண்டு ஆழத்தில் இறங்கினாள்.

சேற்றில் கால் புதைந்து விட்டது. தூக்க முடியவில்லை. கைகளை அடித்துக் கொண்டு அவள் தத்தளிக்கையில் பனையேறி வீராசாமி குதித்து அவளை இழுத்துக் கரை சேர்த்தான். "ஏவுள்ள, நீச்சம் தெரியாம கசத்துல எறங்கே?" என்று கடிந்தான்.

இப்போது அது நினைவுக்கு வருகிறது.

பகல் நேர உணவுக்கான ஓய்வு நேரம் முக்கால் மணி.

தம்பி பச்சைக்கும் அப்போது ஓய்வு நேரம் தான். இருவருக்கும் தனித்தனித் தூக்குகள் வாங்கவில்லை. தம்பி, கண் இமைகளில், காதோரங்களில் பொடி உப்பு தெரிய, ஓடி வருகிறான். உப்பின் நெடியில் கண்கள் கரிக்க, கன்னங்களில் நீர் ஒழுகிக் காய்ந்து கோடாகி இருக்கிறது. "மொவத்த நல்ல தண்ணில கழுவிட்டு வாரதில்ல... மேலெல்லாம் உப்பு. இத்தத் தட்டிக்க வாணாம்?" என்று அவன் மீது கையால் தட்டுகிறாள்.

படிக்க வேண்டும் என்று பள்ளிக்குச் சேர்ந்தால் ஓடி ஓடி வந்து விடுவான். காலையில் மாமி சக்திவேலுவுக்கு மட்டும் வெளியிலிருந்தேனும் இட்டிலியோ ஆப்பமோ வாங்கித் தின்னக் காசு கொடுப்பாள். அவளுடைய தாய் இருந்த வரையிலும் அதே வீட்டில் தனியடுப்பு வைத்து இட்டிலிக் கடை போட்டாள். அப்படி வயிற்றுக்கு உண்ட பழக்கத்தில், காலையில் வெறுந் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பள்ளிக்கூடம் போகாமல் ஓடி ஓடி வந்து அக்காளிடம் "பசிக்குதக்கா" என்பான். பிறகு அவன் படிக்காமல் பரவப் பிள்ளைகளுடன் கடலுக்குப் போவது, அல்லது வேறு வேலை செய்வதென்று தாவி, படிப்பதை விட்டு விட்டான்.

தூக்குப் பாத்திரத்தைத் திறந்து நீர்ச் சோற்றையும் துவையலையும் அவனுக்குக் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.

"அக்கா, அங்ஙன ஒரு டைவர் இருக்கா, கடலுக்குள்ளேந்து மிசின் தண்ணியக் குழாயில கொண்டிட்டு வாரதில்ல? அந்த டைவர் தா கடலுக்கடில இருந்து பைப்பெலா முடுக்கித் தரா. பெரிய... பைப். நாம் போயிப் பார்த்தே. கடலுக்கடில ஆளத்தில போயி மீன்குட்டி மாதிரி நீச்சலடிச்சிட்டே பைப் மாட்டுறா..."

பொன்னாச்சிக்கு அவன் பேசுவது எதுவும் செவிகளில் உறைக்கவில்லை.

"ஆனாக்கா... அந்தாளு, எப்பமும் கள்ளு குடிச்சிருக்கா, இல்லாட்ட தண்ணிக்குள்ள கெடக்க முடியுமா? போலீசொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலாளியே பர்மிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பாவளாம்!"

பொன்னாச்சிக்கு அது ரசிக்கவில்லை.

"நீ ஒருத்தரிட்டவும் போகண்டா, பேசண்டா, ஒஞ்சோலியுண்டு, நீயுண்டுன்னு வா..." என்று அறிவுரை கூறுகிறாள்.

வயசாகியும் கபடம் தெரியாமல், வளர்ந்தும் வளர்ச்சி பெறாத பிள்ளை. இவனுக்கு அவளைத் தவிர வேறு யாரும் ஆதரவில்லை.

ஆனால்... அந்தக் கண்டிராக்டிடமிருந்து அவள் எப்படித் தப்புவாள்?

இந்தத் தம்பிக்கு அவளுக்கேற்பட்டிருக்கும் சோதனை யூகிக்கத் திறணுண்டோ?...

"ஏக்கா, நீ சோறுண்ணாம எனக்கே எல்லா வச்சித்தார..."

"இல்ல ராசா..." என்பவளுக்குக் குரல் தழுதழுக்கிறது. "இந்த உப்புக் காட்டில் இப்பிடிச் சீரளியிறமேன்னு நினைச்சே..." என்று கண்களைத் துடைத்துக் கொள்கையில் அங்கே புளித்த வாடை சுவாசத்தை வளைத்துக் கொள்கிறது. யாருடைய சோறு இப்படிப் புளித்திருக்கிறது" என்று கேட்பது போல் திரும்பிப் பார்க்கிறாள்.

கொட்டடியில் கூட்டம் நிறைந்திருக்கிறது. யார் யாரோ ஆணும் பெண்ணுமாகத் தொழிலாளிகள். 'ஐட்ராவை' வைத்துக் கொண்டு டிகிரி பார்க்கும் அந்த இளைஞன், அவளை 'ஏன் அழுகிறாய்' என்று கேட்டவன், கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறான்.

"ஆகா... சோறு மணக்கு... எனக்குஞ் சோறு வையிடீ ராசாத்தி..." என்று ஒருவன் வந்து குந்துகிறான். இடையில் அவனிடமிருந்துதான் புளித்த கள்ளின் நெடி வருகிறது. கறுத்து நனைந்த சல்லடத்தைத் தவிர அவனது கறுத்த மேனியில் துணியில்லை. திரண்ட தோள்கள்; எண்ணெயும் நீரும் கோத்த முடி; சிவந்த கண்கள்...

"அக்கா, நாஞ் சொன்னேனில்ல, இவெதா... அந்த டைவரு."

அவன் நெருக்கிக் கொண்டு அவள் சோற்றுக் கையை பற்றும் போது அவள் தூக்குப் பாத்திரத்துடன் எழுந்து திமிரப் பார்க்கிறாள்.

அப்போது கால் கழுவிக் கொண்டிருக்கும் அந்த 'ஐட்ரா' இளைஞன் பாய்ந்து வந்து அவனை இழுத்து ஓர் உதை விடுகிறான்.

"ராஸ்கோர்ல்... பொண்டுவ கிட்ட வம்பு பண்ணு... ஒன்ன எலும்ப நொறுக்கிப் போடுவ..."

அவன் வாய் குழற அழுகுரலில் கத்துகிறான்.

"குடிகாரப் பய..."

"நீ சோறுண்ணும்மா.. இனி அவெ வரமாட்டா இந்தப் பக்கம்..."

பொன்னாச்சி விழிகள் பூச்சொரிய அவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள்.

'அந்தக் கண்ட்ராக்டர் காலமாடனுக்கும் இப்படி ஒரு பூசை போடுவாரோ இவர்?'...

பசுமையற்ற கரிப்பு வெளியில் ஓர் நன்னீரூற்றின் குளிர்மை இழையோடி வந்து படிவதாகத் தெம்பு கொள்கிறாள் அவள்.

அத்தியாயம் - 6

அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடியவில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை இன்னும் நிகழ்த்தவில்லை. நான்கு மூலைகள் கொண்ட சிறு சதுரமேடு போல் கட்டப் பெற்றிருக்கும் பூடத்துக்கு வெள்ளையடித்து அழகு செய்வது கண்டு பேரியாச்சி, "பூடத்துக்குப் பூசை போடுறாக போல இருக்கு..." என்று ஆறுதல் கொள்கிறாள்.

அவர்களுக்கெல்லாம் இனி முழுக்கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பொன்னாச்சிக்கு அதைப் பற்றிய ஆர்வமும் ஆவலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவளும், பச்சையும் 'கண்ட்ராக்ட்' கூலிகள். அவர்களுக்கு நாச்சியப்பன் மனமுவந்து கொடுப்பது தான் கூலி. பொது நிர்ணயக் கூலி முறையில் அவர்கள் அளத்தில் பணியெடுக்கவில்லை.

பூடத்தின் முன் வாழையிலை விரித்து, உப்பை அள்ளி வைத்து, கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறான் பிச்சைக்கனி. அந்த முதலுப்பு, முதலாளிகள் வீட்டுக்குப் போகும் உப்பு. விளைச்சலைப் பற்றியோ, இலாப நட்டங்களைப் பற்றியோ நினைக்க அவர்களுக்கு உரிமையுமில்லை ஒன்றுமில்லை.

காலையில் எங்கோ ஆலைச்சங்கு ஒலிப்பதைக் கணக்கு வைத்துக் கொண்டு எழுந்து, சின்னம்மாவும், அவளும், தம்பியும், அலுமினியம் தூக்குப் பாத்திரங்களில் பழைய சோற்றையோ, களியையோ எடுத்து வைத்துக் கொண்டு அதையே கொஞ்சம் கூழாகக் கரைத்துக் காலை நேரத்துக்கு அருந்தி விட்டு, பாத்திக் காட்டில் நடப்பதற்கான பன ஓலை மிதியடிகளைக் கோத்து வாங்கிக் கொண்டே நடப்பார்கள். அந்த மிதியடிகள் ஒரு நாளைக்கு ஒரு சோடி போதாமல் பகலுடன் கிழிந்து விடுகின்றன. நறநறவென்று தெரியும் உப்புக்கு ரப்பர் செருப்பு ஈடு கொடுக்காது. வெட்ட வெளியில் பெண்களான அவர்களுக்கு இயற்கைக் கடன் கழிக்க ஓர் மறைவிட வசதிகூடக் கிடையாது. சூலியான அன்னக்கிளி தவித்துப் போகிறாள். எங்கோ கடற்புரத்தை நாடி அவர்கள் நாலைந்து பேராக நடக்கின்றனர்.

"ஆச்சி, அடிவயிறு கல்லா நோவு..." என்று கிழவியான பேரியாச்சியிடம் அன்னக்கிளி கரைகிறாள். அவள் கண்கள் குழியில் எங்கோ கிடக்கின்றன. கன்னத்தெலும்புகள் முட்டியிருக்கின்றன. நான்கு குழந்தைகள் பெற்றிருக்கிறாள். இது ஐந்தாவது பிள்ளைப்பேறு. புருசன் ஐந்தாறு மாசங்களுக்கு முன் இவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அவளைப் பற்றி 'ஒரு மாதிரி'யானவளென்று அழகம்மா, பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறாள்.

"ஏட்டி. நீர்க்கோவயின்னா, பெருஞ்சீரவம் வெந்தியம் ரெண்டயும் வெடிக்கவுட்டுக் கிழாயம் வச்சிக் கருப்பட்டியப் போட்டுக் குடிக்கிறதில்ல? நாலு புள்ள பெத்தவதானே?" என்று பேரியாச்சி இரைந்து பேசுகிறாள்.

பொன்னாச்சிக்கும் கூடச் சில நாட்களில் இட்டுப் போகிறது. கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்து பார்வையை மறைக்கிறது. அதைத் துடைக்கக் கூட முடியாமல் இயந்திரம் போல் வரப்புக்கும் தட்டு மேட்டுக்குமாக உப்புப் பெட்டி சுமக்கிறாள்.

அப்பனைக் காணும் போது அவளுக்கு இப்போதெல்லாம் கசிவு தோன்றுவதேயில்லை. அவர் அவள் புறப்படும் போதெல்லாம் படுத்திருக்கிறார். மாலை நேரங்களில் எங்கோ தேநீர்க் கடையில் அரசியல் பேசிவிட்டு சுடுசோறு தின்பதற்கு வந்து விடுகிறார்.

அன்று பெட்டியைத் தலையில் வைத்து அவள் நடக்கையிலே மாமனின் நினைவே தோன்றுகிறது. "பெண் குழந்தைங்க புறா போல, நம்ம வீட்டு பாதுகாப்பை விட்டு வெளியே அனுப்பக் கூடாது..." என்று வாய்க்கு வாய் பேசுவார். மாமா எத்தனையோ நாட்கள் தூத்துக்குடிக்கு வருபவர் தாம். கயிறு வாங்கணும், இரும்பாணி வாங்கணும், தாசில்தாரைப் பார்க்கணும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பஸ் ஏறுவாரே, அவர் வரக்கூடாதா!

"அப்பனைப் பார்த்தாச்சில்ல? கிளம்பு?" என்று சொல்ல மாட்டாரா? சின்னம்மாவின் மக்கள் அவளிடம் ஒட்டவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கும் நெருங்கி உறவாட நேரம் இருக்கிறதா?

வள்ளிக்கும் குஞ்சரிக்கும் அவள் தான் சடை பின்ன வேண்டும். ஓடைக் கரையிலிருந்து மாமா, தாழம்பூக் குலை கொண்டு வருவார். அவ கத்தி கத்தியாக வெட்டித் தைத்து விடுவாள். ஞானம் அவள் தட்டினால்தான் உறங்குவாள். வேலு முன்பு வந்திருந்த போது கூட அவனுக்குப் புத்தகமெல்லாம் தட்டி வைத்தாள். அவனுடைய சட்டையையும் சராயையும் குளத்தில் சோப்புப் போட்டு அலசிக் கொண்டு வந்து, மூங்கில் கழியை நுழைத்துக் காயப் போடுவாள்.

"பொன்னம்மா தோச்சா பொட்டியே போடவாணாம்!" என்பான். அவன் பொன்னம்மா என்று தான் அவளைக் கூப்பிடுவான்.

அவன் பரீட்சைக்குப் படிப்பதற்கு அவளைத் தான் தேநீர் போட்டுத்தரச் சொல்லுவான்.

அந்த மாமன் வீட்டை விட்டு அவள் அவர் இல்லாத போது வந்திருக்கலாமா?

பகலில் உணவு கொள்ளும் நேரத்தில், ராமசாமி என்ற அந்த ஐட்ரா பார்க்கும் ஆள் அவளைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் உணவு கொள்கிறான்.

அவன் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவனுடைய பார்வை, "பயப்படாதே, நான் இருக்கிறேன்" என்று சொல்வது போல இருக்கும்.

அவன் தண்ணீர்க் குழாயில் நீரருந்துகையில் பச்சையிடம், "தண்ணி குடிச்சிக்கோ?" என்று குழாயை ஒப்படைப்பது வழக்கமாகிறது.

"அவரு மாசச் சம்பளக்காரரா அக்கா! மொதலாளிக்கு வேண்டியவியளா!" என்று பச்சை பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறான்.

அதனால் தான் மற்றவர் யாரும் சகஜமாக அந்த ஆளிடம் பேசிப் பழகுவதில்லையோ?

"ஒனக்கு ஆரு சொன்னா?"

"அந்த 'டைவர்' சொன்னா! அந்தாளோட அப்பச்சி முன்ன பெரிய முதலாளியக் கொலை செய்யறதுக்கு இருந்தான்னு போலீசு கண்டுபிடிச்சி செயிலுக்குக் கொண்டு போயிட்டாவளாம். அப்ப இவிய ஆத்தா அளுதிச்சாம். மொதலாளி எரங்கி இவரை வேலைக்கு வச்சாளாம். அப்பா இப்ப செத்துப் போச்சாம். இப்பம் மாசச் சம்பளமாம் அதாம் பவுருன்னு கருவிட்டுப் போறா அந்த டைவரு..."

"நீ அந்தக் குடிகாரச் சவத்துங்கூடப் பேசாதே..." என்று அவள் பச்சையை எச்சரித்து வைக்கிறாள்.

அந்தச் சனிக்கிழமை மாலையில் சின்னம்மா கூலி வாங்கி வருகையில் கருவாடு வாங்கி வந்திருக்கிறாள்.

சுடுசோறு வடித்து நிமுர்த்து முன் பச்சை சில நாட்களில் படுத்துவிடுகிறான். அவசரமாக வடித்து எடுத்து, ஒரு துவையலை அரைத்து அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் பொன்னாச்சி சோறு போடுகிறாள்.

"கருவாடா? வறக்கலியா?" என்று நா ருசிக்க உண்ணும் ஆவலில் அப்பன் கேட்கிறார். சின்னம்மா பட்டென்று பதில் கொடுக்கிறாள்.

"தலைப்புரட்ட, காலுக்குக் குழச்சிப் போட எண்ணெயில்ல. எண்ண என்ன வெல தெரியுமா?"

அப்பச்சி பேசவில்லை. தட்டில் கைகழுவிவிட்டு, நகர்ந்து கொள்கிறார். தம்பி வாசல் திண்ணைக்குப் போய்ச் சுருண்டு கொள்கிறான். சரசுவும் நல்லகண்ணுவும் வாசலுக்கு ஓடி ஆச்சி வீட்டில் ரேடியோப் பெட்டி பாடுவதைக் கேட்கப் போகின்றனர்.

சின்னாச்சியும் அவளும் சோறு வைத்துக் கொண்டு அமருகின்றனர். கருவாடு நன்றாக இல்லை. வீச்சம் குடலைப் புரட்டுகிறது. முகம் முகத்துக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க மட்டுமே அன்ன ஆகாரம் கொடுக்கும் கூலியைப் போன்று ஓர் சிம்னி விளக்கு. அந்த மஞ்சள் ஒளியில் விவரம் காண முடியாது. ஒரு குழம்பு வைத்துச் சுவை காணக்கூட முடிவதில்லை. மாமன் வீட்டிலும் வறுமை தான் என்றாலும், நிதமும் இந்த வேகாச் சோறு இல்லை. இந்த நூல் பிடித்த வரைகள் அங்கு இல்லை. இந்த ஒளியில் முகம் சுளித்தாலும் கண்டு கொள்ள முடியாது. அது அவசியமும் இல்லை. அவர்கள் உழைப்பின் பயனான உணவைக் கொண்டு பசி எரிச்சலைப் புதைக்கின்றனர்.

பொன்னாச்சிக்கும் தம்பிக்கும் அந்தச் சனிக்கிழமையில் கூலி போடவில்லை. ஞாயிறன்று காலையில் தம்பியைக் கூட்டிச் சென்று அளத்தில் ஆபீசில் போய் வாங்கிக் கொள்ள வேண்டும். "நேரமாகி விட்டது. நாளைக்கு வா!" என்று கண்ட்ராக்ட் கூறினான். எல்லோரும் வருவார்கள் என்றாலும் அவளுக்கு நெஞ்சம் அச்சத்தினால் கட்டிக் கிடக்கிறது. அதை நினைத்தால் சோறும் இறங்கவில்லை.

"சின்னாச்சி... எனக்கு இந்தப் பனஞ்சோலை அளம் ரொம்பப் பயமா இருக்கி..."

மன ஆற்றாமையின் சுமைகளில் மோதுண்டு சொற்கள் மெல்லப் பிரிகின்றன. சின்னம்மாவோ, முத்துக் கொறிக்கவில்லை. பீடி புகைக்கும் அப்பன், உணர்ச்சியை விழுங்கிக் கொள்வது போல் "அஹம்" என்று கனைக்கிறார்.

"ஒங்க கங்காணியிட்டச் சொல்லி, எனக்கும் ஒங்க கூட அளத்துல வேல வாங்கித் தாரும் சின்னாச்சி. ஒங்க கூட இருந்தா பயமில்லாத பதனமாயிருக்கும்."

இதற்குமேல் தனது சங்கடத்தைச் சூசகமாக உணர்த்த முடியாதென்று அவள் நினைக்கிறாள். இதற்கும் சின்னாச்சி எதிரொலி எழுப்பவில்லை.

அப்பன் பீடிக்காரல் பாய்ந்தாற் போன்று கனைத்து, தொண்டையைச் செருமிக் கொள்கிறார். மெள்ள எழுந்து சென்று வெளியே காரித் துப்புகிறார். பிறகு வந்து உட்காருகிறார். இத்தனை நேரமும் சின்னம்மா வாய் திறக்கவில்லை.

பொன்னாச்சி, "அந்தக் கண்டிராக்டு, மோசமா நடக்கா. நாளக்கி ஆபீசில போயிக் கூலி வாங்கிக்கணுமா" என்று சங்கடத்தை வெளியிடுகிறாள்.

"ஆரு, நாச்சப்பனா? சவத்துப்பய, அவன் முழியப் புடுங்கித் தேரில போடணும். அந்தப்பய, ஒரு நேரக் கஞ்சிக்கு வக்கில்லாம இருந்தவ, பொண்டுவள கணக்கபிள்ளமாருக்குக் கூட்டிக் குடுத்துக் கொடுத்துத் திரியிறான். ஒம்மேல மட்டும் அவெ கய்ய வய்க்கட்டும்..."

அவர் முடிக்கவில்லை, பூமி பிளந்து குருதி கொப்புளித்தாற் போன்று சின்னம்மாவின் குரல் ஆங்காரமாக வருகிறது.

"ஆமா! என்னேயிவீரு! முன்னபின்னக் கண்ட்ராக்டு கங்காணிச் சவங்க செய்யாததியா செய்யிறா அவெ? நீரு என்னேஞ்சீரு? சீலயப் புடிச்சிளுத்துப் பதங்கொலய வய்க்கிறது கொஞ்சமா? வயித்துப் பசின்னு நாலு செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா. இதுங்க சீரளிக்கிறதுதா...?"

தோலை நீக்கிச் சீழும் இரத்தமும் குழம்பும் புண்ணை வெளிக்காட்டினாற் போன்று பொன்னாச்சி விக்கித்துப் போகிறாள். மருதாம்பாளின் முகத்தில் மஞ்சள் ஒளி நிழலாடுவது தெரிகிறது; கண்கள் பளபளக்கின்றன.

"ஏம் பேசாம இருக்கீரு? ஏ?... ஏ?..."

சோற்றுக்கையுடன் அவள் எழுந்து வெறி பிடித்தாற் போன்று அவர் மேலே போட்டிருக்கும் துணியுடன் கழுத்தைப் பற்றுகிறாள்.

குரூரம் கெக்கலி கொட்ட அவள் பொங்கெழுச்சி கண்டு அப்பன் அதிர்ச்சியுற்று ஆவியாகப் போகிறார். அவள் கையைப் பிடித்துக் கொண்டு, "வாணா... வாணா மருதாம்பா, என்னிய விட்டிரு..." என்று கெஞ்சும் குரல் அழுகையாகத் தழுதழுக்கிறது.

"இருட்டில் வந்து தட்டுமேட்டுல லாரின்னு கொரல் குடுப்பா. உள்ளாற வந்து சீலயப் புடிச்சி இளுத்திட்டுப் போவா. புருசனாம் புருசன், அவ ஒடம்பில ரத்தமா ஓடிச்சி? இவ சீலயப்புடிச்சி இளுத்திட்டுப் போவையில பாத்திட்டு ஒக்காந்திருப்பா, காலம் வந்ததும் கட்டயெடுத்திட்டு அடிச்சுக் கொல்லுவான், பாவி, ஊரம்புட்டும் பாத்திட்டிருக்கும் - நாசகாரக்கும்பல்..."

பொன்னாச்சிக்கு அந்தச் சிற்றம்மையைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

இந்த அப்பனைக் கூட அவ்வளவுக்கு யாரும் தூற்றியதில்லை; ஏசியதில்லை. ஆனால் கண்ணால் பார்த்திராத இந்தச் சின்னம்மாவை எவ்வளவுக்கு யார் யாரோ ஏசியிருக்கின்றனர்! அப்பனின் குரல் அழுகையிழைபோல் இருட்டு குகையில் ஒன்றி மறைகையில் சின்னம்மா குரல் உடைய விம்முகிறாள்.

இந்தச் சின்னம்மாவும் ஒரு காலத்தில் பொன்னாச்சியைப் போல் உதயத்தில் இதழ் விரிக்கும் மலராக எதிர்காலக் கனவுகள் கண்டவளாக இருந்திருப்பாளோ? வயிற்றுப் பசியுடன் போட்டி போட இயலாத கனவுகள் அவளையும் வருத்தி குலைத்திருக்கும். அவளை ஓர் ஏலாத குடும்பக்காரன் கலியாணம் என்று வளைத்துக் கொண்டிருக்கிறான்.

பிறகு... பிறகு... இந்த அப்பன்...

இவருக்கா அவள் இரக்கப்பட்டாள்?

சின்னம்மா இப்போது எதற்கு விம்மி அழுகிறாள்? தன்னுடைய சுகந்த மணங்களெல்லாம் சேற்றுக் குட்டையிலும் தெருப் புழுதியிலும் சிந்திவிட்டதென்று அழுகிறாளோ?

பொன்னாச்சிக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. சோறு இறங்கவில்லை. வேலியும் காவலும் இல்லாமல், உயிர்ப்பும் மென்மையும் வறண்டு போகும் உப்புக் காட்டில் தன்னைப் போல் நலம் குலைய நிற்கும் ஒவ்வொரு பெண்ணையுமே நினைத்துச் சின்னாச்சி அழுவதாகத் தோன்றுகிறது.

அன்றிரவு பொன்னாச்சிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மாமன் வரமாட்டாரா, திரும்பிப் போய்விட அழைக்க மாட்டாரா என்று கூட நினைத்தாளே. அந்த நினைப்பு உகந்ததாக இல்லை. இங்கே இந்தக் களத்தில், கங்காணிகளும் கணக்கப்பிள்ளைகளும், 'கண்ட்ராக்ட்'களும் நச்சரவுகளாய் ஊரும் களத்தில், காவலில்லாத பூச்சிகளாய் அவர்கள் இருக்கிறார்களே. அது தொடர்ந்து கொண்டே இருக்குமா?... இதைத் தட்டிக் கேட்க ஆளில்லாமலே இருந்து விடலாமா?

'தட்டிக் கேட்க' என்று தோன்றுகையில் ராமசாமி, அந்த 'ஐட்ரா' ஆள், முதலாளிக்கு வேண்டிய ஆள் என்று தம்பி சொன்ன அந்த... அவர் முகம் நினைவுக்கு வருகிறது. அதிக உயரமுமில்லை; பருமனுமில்லை. வெள்ளைச் சட்டையும் வெளுத்த முண்டாசும் அரும்பு மீசையும் குளிர்ந்த விழிகளுமாக அந்த ஆள்... "தண்ணீர் குடிச்சீட்டீங்களா?" என்று கேட்கும் ஆள்... அவளுடைய சங்கடங்களைப் புரிந்து கொண்டு விலக்கிய ஒரே ஆள்...

அவரும் அந்தப் பாத்திக் காட்டில் தான் இருக்கிறார். உப்புக் கடலினால் கரிப்பு மணிகள் மட்டுமே விளையவில்லை. நல்முத்து கூட விளைகிறது. ஆனால் அது அருமையானது. அதனால் விலைமதிப்பற்றது.

மறுநாட் காலையில் சின்னம்மா, பச்சையையும் அப்பனையும் அனுப்பி அவளுடைய கூலியைப் பெற்றுவர செய்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் நல்ல தண்ணீர்க்குளம் தேடிச் சென்று துணி துவைத்து வருகிறார்கள். அன்றுதான் மாசத்துக்கொரு முறையான எண்ணெய்த் தலை முழுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கோதிக் கொண்டு அவள் சன்னலின் அருகே நிற்கையில் ஓலை கிழித்துக் கொண்டிருக்கும் வீட்டுக்கார ஆச்சி,

"ஏட்டி? கூலி போடலியா நேத்து?" என்று வினவுகிறாள்.

"இல்ல. அப்பச்சியும் பச்சையும் போயிருக்கா?"

"அதாங் கேட்டே. காலையில் சின்னாச்சி வாடவையும் சீட்டுப் பணமும் குடுத்திடுவா. காணமேன்னு கேட்டே..."

பொன்னாச்சிக்கு அவள் வாடகைப் பணத்தை நினைவு படுத்தும் மாதிரியில் கோபம் வருகிறது. என்றாலும் எதுவும் பேசவில்லை. இவளுடைய ஒரே பையனும் மூன்று வருஷங்களுக்கு முன் இறந்து போனானாம். வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைக் கண்டிப்பாக வாங்கி விடுகிறாள்.

அவளிடம் உப்பளத் தொழிலாளரின் பாத்திரங்கள், நீர் குடிக்கும் லோட்டாவிலிருந்து சருவம் வரை அடகு பிடிக்கப் பட்டவை கிடக்கின்றனவாம். அந்த முன்னறைக்கு நேராக உள்ள அறையில் இரும்பு அலமாரியும் கட்டிலும், சாமான்களும் நிறைந்திருப்பதை பாஞ்சாலி அவளிடம் சொல்லி வியந்தாள். ரோசத்துடன் சின்னம்மாவிடம் அப்பனும் பச்சையும் கூலி பெற்று வந்த உடனேயே அவள் கடனுக்காக பணத்தையும், வாடகையையும் கொடுத்து விட வேண்டும் என்று கூறுகிறாள்.

"இப்ப வேணா... அடுத்த கூலிக்குக் குடுக்கலாம். அடுப்புக்கு வய்க்கப் பானை ஒண்ணு வாங்கணும். அவிய ஒண்ணுஞ் சொல்லமாட்டா."

"எங்கிட்டக் கேட்டா; ஏங்குடுக்கலன்னு..."

"பானை வாங்கணுமின்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டா. மேலுக்கு அப்படி வெட்டித் தெறிச்சாப்பல பேசினாலும் கெரு ஒண்ணுங் கிடையாது. பாவம் ஒரே பய... அவன் போயிட்டா... அதுலேந்து ஆச்சி முன்னப் போலவே இல்ல..."

"ஆச்சி புருசன் எங்கேயிருக்கா?"

"புருசனொன்னுமில்ல. அந்தக் காலத்துல அளத்துல சோலி எடுக்கறப்ப அந்தக் கணக்கவுள்ள வாரானே, அவங் கொலச்சி பெரி முதலாளி, இப்ப கெழமா படுத்த படுக்கையாயிருக்காண்ணு சொல்லிக்கிடுவா. அவனுக்குக் கூட்டி வச்சிட்டா. அவெ அந்த காலத்துல பொம்பிளன்னா பேயா அலையுறவ. ஆனா, இந்தாச்சி ஒரு கௌரவப் பட்டாப்பலவே வீட்டோடு இருந்திட்டா. பொட்டி கிட்டி மொடயும். இந்த வளவெல்லாம் அந்தக் காலத்துல அந்தக் கணக்கவுள்ள வகையா வந்ததுதா. ஒரு பையன் இருந்தா, நல்ல வாளிப்பா... அதா போட்டோ வச்சிருக்கே, வாசல்ல, அதுதா. படிச்சிட்டிருந்தா காலேசில. பொக்குனு போயிட்டா..."

'எனக்குச் சாமில்ல. எஞ்சாமி செத்துப் போயிட்டா'ன்னு அவள் கூறிய சொற்கள் பொன்னாச்சிக்கு நினைவில் மின்னுகின்றன.

"வயசுப்புள்ள எப்படிப் போயிட்டா? காருல கீருல அடிபட்டுப் போயிட்டானா?"

"என்னென்னவோ சொல்லிக்கிறாவ. நமக்கு என்னம்மா தெரியும்? அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப்பத்துல எப்படி இருந்தாவளோ அப்பிடியே இருப்பா. கெளவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா. அவியளுக்கு அளத்துல செவந்தியாவரம் பக்கம் பிரிச்சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக் காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால் ரூவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங் கூட இப்படி அச்சா மொதலாளியப் போல இருக்க மாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும்? நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப் பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட்டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்ட வந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரணுமில்ல? பத்து லட்சம் பங்கில்லேன்னாலும் ஒரு லட்சம் வரணுமில்லன்னானாம். வக்கீலக் கண்டு பேசுவன்னானாம். பொறவு என்ன நடந்ததுன்னு தெரியாது... வக்கில் புரத்துல அம்மன் கொடை வரும். அன்னிக்குத்தா தேரியில இந்தப்பய அந்தால வுழுந்து கெடந்தா. நீல டௌசரு. சரட்டு எல்லாம் அந்தால இருக்கு... ஆச்சி கூத்துப் பாக்க ஒக்காந்திருக்கா. சேதி சொன்னாவ. போலீசெல்லாம் வந்தது. என்னமோ தண்ணியக் குடிச்சிட்டா. அதுதாண்ணு சொல்லி மறச்சிட்டாவ..."

பொன்னாச்சி திடுக்கிட்டுத் திகைத்து சொல்லெழும்பாமல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பு திகுதிகுவென்று எரிகிறது; பானைச்சோறு பொங்குகிறது. சின்னம்மா ஒரு சுள்ளியை இழுத்து நீரைத் தெளித்துச் சிறிது அணைக்கிறாள்.

"அப்படியா...? அப்படிக் கூடச் செய்வாங்களா சின்னம்மா? அப்ப அந்த அளத்து மொதலாளிக்குப் பன்னண்டு லச்சமா இருக்கு..."

"நமக்கு என்னாத்தா தெரியிது. நாம லச்சத்தைக் கண்டமா, மிச்சத்தைக் கண்டமா. சொல்லிக்குவாக. உப்புத் தொழில்ல ஒரம் போடணுமா, களை எடுக்கணுமா, பூச்சி புடிச்சிடுமேன்னு பயமா? மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ்சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் தூத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார். பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளு வந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும்? சிப்சம், (சிப்சம் - ஜிப்சம் எனப்பெறும் கூட்டுப் பொருள் சிமிட்டி உற்பத்திக்கு இன்றியமையாதது) மாங்கு (மாங்கு - மண்ணும் கசடும் கலந்த உப்பு) எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போவுது. நாம சொமை சொமக்கிறோம்... வேறென்ன தெரியுது?..."

பொன்னாச்சி சிலையாக இருக்கிறாள்.

அத்தியாயம் - 7

அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும்.

அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய கன்னத்து எலும்புகள் முட்ட, கண் விழிகள் சதையில் ஒட்டாமல் தெரிய, வயிறு குவிந்து இருக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் குனிந்து 'மாங்கு' எனப்படும் அந்தக் கசடை வாளியில் வாரிப் பெட்டியில் போடுகிறாள்.

குனிந்து நிமிர்ந்து அதை அவளால் செய்ய இயலவில்லை.

"நானே பெட்டியில எடுத்துப் போடுறேன் அக்கா..." என்று பொன்னாச்சி அவள் வேலையை இலகுவாக்க முற்படுகிறாள்.

அன்னக்கிளி தலையில் பெட்டியைச் சுமந்து கொண்டு ஒரு நடை கொண்டு போய் கொட்டு முன் பொன்னாச்சி இரண்டு முறைகள் பெட்டியை நிரப்பிக் காலி செய்து விடுகிறாள்.

வெயில் உச்சிக்கு ஏறிக் காய்கிறது. அன்னக்கிளிக்கு மூச்சு வாங்குகிறது. நஞ்சோடையின் அருகே கூடையுடன் கீழே உட்கார்ந்து விடுகிறாள்.

"ஏனக்கா?... உடம்புக்கு என்னேனுமா?..."

"இல்லே... எனக்கு தாவமாயிருக்கு. தண்ணி... தண்ணி வேணும்..." என்று மூச்சிரைக்க அவள் சாடை காட்டுகிறாள். பொன்னாச்சிக்கு அவளைக் காணவே நடுக்கமாக இருக்கிறது.

தனது பெட்டியை வைத்துவிட்டுத் தொலைவில் இருக்கும் கொட்டடிக்கு ஓடுகிறாள். கொட்டடியில் இப்போது குழாயில் தண்ணீர் விடுவார்களா? அவள் ஓடி வருவதை நாச்சப்பன் பார்த்து விடுகிறான்.

"செறுக்கிவுள்ள. ஏண்டி ஓடியார? வேலயப் போட்டுட்டு..." என்று நாக்கூசும் சொற்களால் வசைபாடுகிறான்.

"தண்ணி வேணும்... தாவத்துக்குத் தண்ணி. அன்னக்கிளி அக்கா தண்ணி கேக்கா."

"அதுக்கு, அவ என்ன ராணிமவ ராணியா? ஒன்ன அனுப்பிச்சி வய்க்கா?... கண்ட களுதங்களுக்கும் படுக்க விரிச்சிட்டு வயித்தச் சாச்சிட்டு வாரா! ஒருநாக் கூட ஒளுங்கா வேல செய்றதில்ல!..."

வசைகள் உதிருகின்றன. ஆனால் 'ஐட்ரா' ராமசாமி அங்கு கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உப்பு வாருகிறான். அவன் அவள் நீர் வேண்டி வந்ததறிந்து வாரு பலகையைப் போட்டுவிட்டு எங்கிருந்தோ தண்ணீர் கொண்டு வருகிறான்.

"ஆருக்குத் தண்ணி வேணும்?"

"குடுங்க. பிள்ளத்தாச்சி... அன்னக்கிளியக்கா, மயக்கமா உக்காந்திட்டா..."

வாளியும் குவளையுமாக அவனும் அவளுடன் செல்கிறான்.

அன்னக்கிளி கவிழ்ந்தாற் போல் உட்கார்ந்தபடியே முதுகு சரியக் கிடக்கிறாள். முட்டியை ஊன்றினாற் போல் மடித்துக் கொண்டு குப்புற வீழ்ந்து கிடக்கிறாள்.

"முருகா... முருகா!" என்று அவள் மனசுக்குள் கூவிக் கொள்கிறாள்.

கீழே அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் தூக்கி, "இத தண்ணி, அன்னக்கிளியக்கா?... தண்ணி கேட்டியே?" என்று அவள் தலையைத் தூக்குகிறாள். முகத்தில் வியர்வைப் பெருகுகிறது. கைகள் இரண்டையும் வயிற்றில் கோத்தாற் போல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றே நகருகையில், கீழே உப்பு மிதிலாடும் மண்ணில் அவளது நிணநீர்... கறுப்புச் சீலைத் துண்டை நனைத்துக் கொண்டு...

அவளுக்கு நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது.

பேரியாச்சி இருக்குமிடம் தேடி ஓடிப் போகிறாள்.

"ஆச்சி...! ஆச்சி? அங்க வந்து பாரும்... அன்னக்கிளி அக்கா... உதரமாச் சரியிது..."

கிழவி கொத்து பலகையைப் போட்டுவிட்டு விரைகிறாள். இன்னும் வேறு சில பெண்களும் ஆண்களும் திரும்பிப் பார்த்து வருகின்றனர்.

"இவளுவ வெக்கங்கெட்ட வேசிக. வகுத்துப்புள்ள கீளவுளற வரயிலும் ஏன் சோலிக்கு வரணம்?"

"மாசமாவலன்னான்னாலும் மானக்கேடில்ல? வூட்ட கெடந்தா என்ன?"

"நாலு புள்ளிய, இவ என்னேய்வா? இருந்தாலும் தயிரியம், அளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா?"

ராமசாமி சற்று எரிச்சலுடன், "ஏன் தலைக்கித்தலை பேசுறிய? பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்டடிக்குத் தூக்கிட்டுப் போகலாம் வாங்க!" என்று அங்கு வேடிக்கை பார்க்க நிற்கும் வார்முதல் கங்காணி செல்வராசை அழைக்கிறான்.

"ஏலே, நீ புள்ளப் பேறு பார்க்க வாரே! போலே! பொண்டுவ இளுத் தெரிவாளுவ. இந்தச் சிறுக்கியளுக்கு நெஞ்சுத் தகிரியம். மொதலாளி காருல ஆசுபத்திரிக்கிக் கூட்டிப் போவார்னு கூட வுழுவாளுவ."

ராமசாமி அந்த செல்வராசை ஒரு மோது மோதித் தள்ளுகிறான்.

"ஒரு ஆத்தா வயித்துல பொறக்கல நீ? அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு? உசுருக்கு அவ மன்னாடுதா... இவெ பேசுதா!"

அவன் சந்தனசாமியைக் கூட்டிச் சென்று அலுவலகக் கொட்டடியில் கிடக்கும் ஒரு பெஞ்சியை எடுத்து வருகிறான். தலையில் சுற்றிய துண்டை எடுத்துப் போடுகிறான்.

இன்னும் அதைப் பின்பற்றிப் பல தலை துணிகள் விழுகின்றன.

கொட்டடியில் பேரியாச்சியும், அழகுவும், வடிவாம்பாவும் அவளைச் சுற்றி இருக்கின்றனர்.

நாச்சப்பன் எல்லா வசைகளையும் பொல பொலத்துத் தீர்த்துவிட்டான். அன்று திட்டமிட்டபடி வேலை நடக்கவில்லை.

பகலுணவுக்கு அவர்கள் திரும்பும் நேரத்தில் கொட்டடியிலிருந்து பச்சைச் சிசுவின் குரல் கேட்கிறது. அந்தக் கரிப்பு வெளியில் உயிர்த்துவத்தை எதிரொலித்துக் கொண்டு அதன் முதல் அழுகையின் ஒலி கேட்கிறது. "பொட்டவுள்ள!" என்று அழகுதான் முதலில் அறிவிக்கிறாள். பொன்னாச்சி கொட்டகை ஓரத்தில் எட்டித்தான் நின்று அதைக் கேட்கிறாள்.

"பொட்டவுள்ள... பொட்டவுள்ள..."

யாரோ அறைந்து அறைந்து கூறுவது போல் பொன்னாச்சியின் நெஞ்சில் அந்த ஒலி மோதி எதிரொலிக்கிறது.

"பொட்டவுள்ளயா?..." என்று, ஏதோ உச்சக்கட்டத்தை எதிர்ப்பார்த்திருந்தாற் போல் நின்றவர் சப்பிட்டவராகச் சாப்பாட்டுத் தூக்குடன் செல்கின்றனர்.

ராமசாமி தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கோ வெளியே சென்று, தேநீரோ காப்பியோ வாங்கி வருகிறான். பிறகு உப்பு எடுத்துச் செல்ல வந்த லாரியிலோ, எதிலோ பிள்ளை பெற்றவளைத் தூக்கிவிட்டு, ஆசுபத்திரிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறான். கங்காணி செல்வராசுவுக்கு ஒரே ஆத்திரம்.

செல்வராசுவும் படிக்கத் தெரிந்தவன். டிகிரி பார்க்கும் வேலைக்காரனுக்கு மாசம் சம்பளம். டிகிரி பார்த்து தொழி திறந்து மூடி வேலை செய்வது, உப்பு வாருவதை விடக் கொஞ்சம் 'கௌரவ' வேலை என்று நினைப்பு. சட்டை போட்டுக் கொண்டு 'ஐட்ரா மீட்டரும்' அளவைக் குழாயுமாகத் தான் வளைய வரவேண்டும் என்று அந்தப் பணிக்காக கணக்கப்பிள்ளை தங்கராசுவை எப்படி நைச்சியம் செய்யப் பார்த்தான்! ஒவ்வொரு வாரமும் சம்பளத்தில் பத்து ரூபாய் பிடித்துக் கொள்ளச் சம்மதித்தான். பஸ்தர் மிட்டாயும், ஆரஞ்சியும் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் வைத்தான். கடைசியில் 'ஐட்ரா' வேலை அந்தப் பயலுக்கு ஆகிவிட்டது. அந்தப் பயல், அறைவைக் கொட்டடியில் உப்பு பொடி சுமக்க வேலைக்கு வந்து சேர்ந்தவன் தான். அரசியல் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறான்.

"கணக்கவுள்ள, என்ன இப்படி ஏமாத்திட்டீரே..." என்றான் மனத்தாங்கலுடன்.

"அந்தாளு பெரிய இடத்து சிவாரிசு. நா பொறவு என்ன சேய?" என்றான் கணக்கப்பிள்ளை.

இதற்குப் பிறகு அட்டி கிடையாது.

செல்வராசு இப்போது ஆத்திரத்துடன் பொன்னாச்சியின் செவிகளில் விழும்படி, "...இவனுக்கு அந்தப் பொம்பிள வாய்ப்பு..." என்று கூறித் தனது அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறான். அன்று நாச்சப்பன் 'அத்தனை மாங்கை'யும் வழித்துப் போட்ட பின்னரே அவர்கள் வேலை முடிந்து போகலாம் என்று கட்டளை இடுகிறான். அவர்கள் வேலை முடிக்கும் போது மணி ஏழாகி விடுகிறது.

தம்பி, பாவம் அவனுக்குப் பசி எடுக்கும்; தூக்கம் வந்து விடும்.

அவன் அக்காளுக்காகக் காத்திருக்கையில் ராமசாமி அவனிடம், "நீங்க எங்கேந்து வாரிய?" என்று விசாரிக்கிறான்.

"தூத்தூடி... ஆரோக்கியமாதா கோயில்ல அதுக்குப் பின்னால போவணும்..."

"ஒங்க கூட ஆரும் வாரதில்ல?"

"இல்ல..."

"அப்பச்சி, அம்மா இருக்காவ?"

"அப்பச்சிக்குக் கண் தெரியாது. அம்மா செத்துப் போச்சு. சின்னாச்சி அளத்து சோலி பாக்குது..." என்று பச்சை விவரங்கள் தெரிவிக்கிறான்.

பொன்னாச்சி வந்த பிறகு அவனும் அவர்களுடன் பாலம் வரையிலும் சைக்கிளுடன் நடந்து வருகிறான். செவந்தியாபுரத்தில் தான் இருப்பதாகவும், தெரிக்காட்டைத் தாண்டும் வரையிலும் உடன் வருவதாகவும் கூறி வருகிறான். அங்கு ஒரு கடையில் அவர்களுக்குத் தேநீர் வாங்கித் தருகிறான். பொன்னாச்சிக்கு முதலில் தயக்கமாக இருக்கிறது. யாரும் எதுவும் பேசுவார்களோ என்று அஞ்சுகிறாள். அவளையும் இணைத்துச் செல்வராசு பேசிய சொற்கள் மென்சதையில் உப்பாய் வருடுகின்றன.

"வாங்கிக்கம்மா, ஏ, பயமாயிருக்கா? தம்பி, நீ சொல்லு, ஒன் அக்காளுக்கு! நா ஒண்ணுஞ் செஞ்சிர மாட்டே..."

அவள் பிறகு தேநீரை வாங்கி அருந்துகிறாள். தனது ஆயுளில் அத்தகைய இனிமையை அநுபவித்ததில்லை என்று தோன்றுகிறது.

அவள் வீட்டுப்படி ஏறியதும் மாமன் வந்திருக்கும் குரல் கேட்கிறது.

"இப்பதா வாரீங்களா? இந்நேரமா ஆவுது? எட்டடிக்கப் போவுது?"

"இன்னைக்கு அளத்துள ஒரு பொம்பிள, புள்ள பெத்திட்டா" என்று செய்தியவிழ்க்கிறான் பச்சை.

"அப்புறம்?..." என்று மாமா வியந்து பார்க்கிறார்.

"எல்லாரும் வேலையவுட்டுப் போட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிட்டா. கண்டிராக்ட் வரப்பு உப்பு தட்டு மேட்டுக்குப் போவாம வுட மாட்டேனிட்டா" என்று கூறும் பொன்னாச்சிக்கு சட்டென்று நினைவு வருபவளாக, "நீங்க எப்ப வந்திய மாமா, மாமி, பிள்ளையள்ளாம் சொவமா? ஞானத்தைதன்னாலும் கூட்டி வரப்படாதா?" என்று வினவுகிறாள்.

அவள் பரபரப்பாகப் பேசியே கேட்டிராத மாமாவுக்கு அவள் முற்றிலும் மாறிப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.

"நானிங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தேன். யாரும் இல்ல. பெறகு வீட்டுக்கார ஆச்சி சொன்னாவ, நீங்க வர ஆறு மணியாவுன்னு. ஒங்க மாமி சொன்னா, அவப்பச்சிக்கு ஒடம்பு சரியில்லன்னு கூட்டிப் போனான்னா. சரி, ஒடம்பு நல்லானதும் வந்திடுவீங்கன்னு இருந்தேன். பிறகு இன்னிக்கு இங்க வர சோலி இருந்தது. சுசய்ட்டி விசயமா வந்தா நீங்க வேலய்க்கிப் போயிருக்கிய..." பொன்னாச்சிக்குத் தான் குற்றவாளியாக நிற்பதாகத் தோன்றுகிறது.

"நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் மாமா. இங்க சின்னம்மாக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தினி காலந்தா ஒருத்தருக்குப் பாரமா இருக்க? பொறவு இந்த வீட்டுக்கார ஆச்சிதா பனஞ்சோல அளத்துல அட்வான்சு, போனசு எல்லாம் கெடய்க்கும்னு வேலைக்கு சேத்து விட்டா..."

"அட... பொன்னாச்சியா இம்புட்டுப் பேச்சுப் பேசுறா?" என்று அவர் கேட்பது உண்மையில் பாராட்டா, அல்லது இடக்கா என்று புரியவில்லை.

"இப்படியேதான் ஆள ஏமாத்தறானுவ. ஏத்தா ஆடு நனயிதுண்ணு ஓநாய் அழுமா? அட்வான்சாம், அட்வான்ஸ்? படிக்கிற பருவத்துப் பிள்ளைய எல்லாம் ஆசைக்காட்டி மடக்கிப் போட்டு உப்புச் செமக்க வைக்கிறானுவ. காது குத்து, கண்ணாலம் காச்சி, மொதலாளி பணம் கொடுப்பான்னு கங்காணிய குழையடிப்பானுவ. இந்தத் தொழிலாளி யாரானும் முன்னுக்கு வந்த கதை எங்கயானும் உண்டா? செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு ஏக்கருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஓடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்ரா. குத்தாலத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு பங்களா... பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்காவுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில இருக்கிவ தொழிலையெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப்புத் தொழிலாளி நீரு - நீருன்னுதா வெச்சுக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு தான் பதம்? கண்ணு வெள்ளப்பட வழிஞ்சி ஒண்ணில்லாம உக்காந்திருக்கீரு..."

மாமாவுக்கு ஆவேசம் வந்துவிட்டதென்று பொன்னாச்சி நினைக்கிறாள். அவர் பேசத் தொடங்கினால் இப்படித்தான் பேசிக் கொண்டே போவார். ஆனால் வீட்டில் மட்டும் அவர் பேச்சு எடுபடாது.

"சொம்மா கெடந்து சலம்பாதீம், மொதலாளி தொழிலாளிண்டு. அவிய மொதலாளியா இருந்து இத்தினி பேருக்கும் கூலி கொடுத்துத்தா காக்கஞ்சிக்கின்னாலும் அடுப்பு புகையிது. ஒங்களுக்குள்ள ஒத்துமயில்லாதப்ப அதப் பேசி என்ன பிரேசனம்? சங்கக்கார அத்தினி பேரும் அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா? மூடமுக்கா ரூவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோகம் செய்யிறா" என்று மடக்கி விடுவாள். அவரால் மறு பேச்சுப் பேச முடியாது.

மருதாம்பா கருப்பட்டிக் காப்பியை இறுத்து, வட்டக் கொப்பில் (வட்டக் கொப்பி - டவரா தம்ளர்) ஊற்றி மாமனுக்குக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தப் பளபளக்கும் 'வட்டக் கொப்பி' வகையறா பெரியாச்சியிடமிருந்து பாஞ்சாலி கேட்டு வாங்கி வந்ததென்று பிறகுதான் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உறைக்கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து மேல் கழுவிக் கொண்டு மசாலை அரைத்துக் கொடுக்கிறாள் பொன்னாச்சி.

மாமா இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார். காப்பி குடித்தாகிவிட்டது.

"அளத்துல ஒருத்தி பிள்ள பெறுறவரய்க்கும் ஏன் வேல செய்யிதா? கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறாவளா? இவங்களுக்கு அதனாலே கொறஞ்சிடுமா? உப்பு நட்டம் வந்தா மீனுல லாபம் வரும். மிசின் போட்டு வாங்கிவிட்டிருக்கா. மீனுல நட்டம் வந்தா காடுகரை வச்சிருக்கா. காபித் தோட்டம் வாங்கறா. பணம் பணத்தோட சேரச் சேர சுயநலம் அதிகமாகி மனிசாபிமானம் போயிடும் போல இருக்கு. ஒரு கூலின்னு நிர்ணயம் செஞ்சா, எல்லா அளக்காரனும் அதெக் குடுக்கிறாவளா? எடயில கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கள சப்ள பண்ணுறாப்பல தொலாளிங்களை வளச்சிட்டுப் பணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன். இதுக்குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா?" சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு "அதுக்கு என்னேயலாம்? கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேக்கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்ணு கெடயாது. மே நாளு, சுதந்தர நாளு லீவு கூடக் கெடயாது. அதுக்கு இது தாவிலயில்ல?" என்று கேட்கிறாள்.

"நீங்க எந்த அளம்?"

"கருவேலக் காட்டு அளம். திருச்செந்தூர் ரோடில பக்கந்தா. பாலெந்திரும்பினா வந்துடும்; இங்கதா அஞ்சு வருசமா வேல. இவியளும் செய்நத்துக்கு வந்தா. இப்பவும் லேசா தொழி (தொழி - தெப்பம் - கசடு தங்கும் முதல் பாத்தி) வார கொள்ள ரெண்டில ஒண்ணில குடுப்பா. வாருபலவை போட்டிட்டு தானிருந்தாவ. கங்காணி ஒருத்தர்னு இல்லாம மாறிட்டே இருப்பம். கால் கொப்புளம் வந்து ஒரு நா, ரெண்டு நான்னா போகாம இருந்தா ஒண்ணில்ல. போன வருசம் இந்தப் புள்ளக்கி பேதி காய்ச்சல் வந்து பத்து நா சோலிக்குப் போகல. கங்காணி ஒரு ரூவாக் கூலிக் குறச்சிட்டுக் குடுத்தா ஒரு நாளக்கி... என்ன சொல்றியே?"

"என்னத்த சொல்றது? முதலாளியளுக்கு தொழிலாளிய ஒத்துமையில்லாம இருக்கிறதேதா லாபம். யூனியன் தலைவர்னு யாரானும் செல்வாக்கா தலையெடுத்திட்டா, அவனை ஒடனே வாய்க்கரிசி போட்டு, அவம் பக்கம் இழுத்திடறா. சொல்லி பிரேசனமில்ல?"

சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பி விடுகிறார்.

"ரா இருந்துட்டுக் காலமே போவலாமே?" என்று அப்பச்சி மரியாதையாகக் கூறுகிறார்.

"இல்ல ஒரு ஆளப் பாக்கணம், ஒம்பது மணிக்குதான் வீட்டுக்கு வருவான்னா. நா வாரே... பொன்னாச்சிப் பதனமா இருந்துக்க. எல்லா இருக்காவ, இருக்கிறம்ன்னாலும் அவவ தன்னத்தானே பேணிக்கணும். தயிரியமாயிருந்துக்க. பிறகு முருகன் இருக்கிறான்!" என்று அறிவுரை கூறிக் கொண்டு நடக்கிறார்.

பச்சை அதற்குள் படுத்துவிட்டான். அவனை எழுப்பி வருகிறாள் பொன்னாச்சி.

"லே தம்பி. ஒளுங்கா பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்க; வேண்டாத சகவாசத்துக்குப் போகாத, வாரன் மாப்பிள! வரேம்மா...!"

அவர் படியிறங்கிச் செல்லும் வரையிலும் பொன்னாச்சி உடன் வந்து திரும்புகிறாள்.

அத்தியாயம் - 8

ராமசாமி வேலை முடிந்ததும் நேராகக் குடிசைக்குத் திரும்பமாட்டான். தலைத்துணியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு படிப்பகத்துக்குச் செல்வான். கந்தசாமியின் தேநீர்க்கடையில் தொழிலாளரைச் சந்தித்து நிலவரம் பேசுவான். ஒரு சராசரி உப்பளத் தொழிலாளியில் இருந்து அவன் மாறுபட்டவன்.

அவன் துவக்கப்பள்ளிக் கல்வி முடித்து ஆறாவதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் தந்தையின் ஆதரவு குடும்பத்துக்கு இல்லாததாயிற்று. அவனுடைய தந்தை சாத்தப்பனுக்கு அவனுடைய அம்மாளுக்கே படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அளத்தில் வார்முதல் தொழிலாளியாக இருந்த அவர் தொழிலாளிகளைக் கூட்டிச் சங்கம் சேர்த்து, உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னின்று உழைத்தவர். அந்நாளில் தொழிலாளர் தலைவராக இருந்த அங்கமுத்துவை அவர்களுடைய குடிசையில் அடிக்கடி பார்க்கலாம். சிவப்பு வண்ணத்தில் அச்சிட்ட துண்டு நோட்டீசுகளைச் சிதற விட்டுக் கொண்டு அவன் தந்தை சைக்கிளில் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். எழுத்துக் கூட்டி அதைப் படிக்க முனைந்திருக்கிறான்.

"தொழிலாளத் தோழர்களே, எழுச்சி பெறுங்கள்" என்ற வாசகங்கள் அன்றே அவனுக்குப் பாடமானவை. பிறகு தந்தையை ஒரு நாள் போலீசு பிடித்துச் சென்றதும், தங்கச்சியையும் அவனையும் அல் அயலில் விட்டு விட்டு அவன் அம்மா, கருப்பிணியாக இருந்த அம்மா, தூத்துக்குடிக்கும் வக்கீல் வீட்டுக்கும் அலைந்ததும் அவனுக்கு இன்னமும் மறக்கவில்லை. தங்கச்சி காய்ச்சல் வந்து இறந்து போயிற்று. அம்மா பிள்ளை பெற்று வெகுநாட்கள் படுக்கையிலிருந்தாள். பிறந்த குழந்தையும் இறந்து போயிற்று. சண்முகம் கங்காணி, அவனை அறைவைக் கொட்டடியில் ஒன்றே கால் ரூபாய் கூலிக்கு உப்புப்பொடி சுமக்கக் கொண்டு விட்டார். அந்தக் காலத்தில் அவர்கள் வீட்டுக்கு அவரைத் தவிர வேறு யாரும் வரமாட்டார்கள். பிறகு மூன்று வருடங்கள் சென்ற பிறகு ஒரு நாள் ராமசாமி தலைக்கொட்டையும் தானுமாகக் காலையில் வேலைக்குக் கிளம்புகையில் தாடி மீசையுடன் ஒரு ஆள் அவர்கள் வீடு தேடி வந்ததைக் கண்டான். அவர் அவனைச் சிறிது உற்றுப் பார்த்து விட்டுக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார்.

அவனது நினைவில் இப்போதும் அவருடைய காய்த்துச் செதில் செதிலாகப் போயிருந்த உள்ளங்கை உறுத்திக் கொண்டிருக்கிறது.

அவரை அப்பா என்றே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அங்கமுத்துவுடன் வீட்டுக்குள் அப்பா எவ்வளவோ பேசி அவன் கேட்டிருக்கிறான். ஞாயிற்றுக் கிழமையானால் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளியாகத் தேடிச் செல்வார்கள். அவர் ஓய்ந்திருந்தே அவன் அதற்கு முன் கண்டிருக்கவில்லை. ஆனால், சிறையில் இருந்து வந்த பின் அவர் பேசியதாகவே அவனுக்கு நினைவில்லை. முழங்காலைக் கட்டிக் கொண்டு குடிசைக்குள் உட்கார்ந்திருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, காலையில் அவர் படுத்த இடம் காலியாக இருந்தது. அக்கம் பக்கமெல்லாம் தேடினார்கள்.

சண்முகக் கங்காணி தான் அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆதரவாக இருந்த ஒரே மனிதர். தானுண்டு, தன் தொழிலுண்டு என்று இருப்பவர். அவன் தாயிடம், "தங்கச்சி, ஊர்க்குருவி பருந்தாவ எலுமா? நாம் ஊர்க் குருவியாலப் பெறந்திருக்கம். இப்படிக் குழந்தைகளையும் குடும்பத்தையும் வச்சிட்டு அவன் இந்த வம்புக்கெல்லாம் போலாமா?" என்பார். அப்பன் அந்த நல்ல நாட்களில் அவரைக் கண்டாலே ஏசுவாராம்.

"தொட நடுங்கிய. ஒங்களாலதா ஒத்துமையும் விழிப்புணர்ச்சியும் இல்லாத போகுது" என்பாராம். ஆனால் சண்முகக் கங்காணி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர் தாம் தேடினார்.

அம்மா திருச்செந்தூர்ப் பக்கம் சோசியரிடம் போய்க் குறி கேட்டு வந்தாள். அவனையும் உடன் அழைத்துச் சென்றாள்.

கறுத்த முடித் தலையில் எண்ணெய் பளபளக்க குங்குமப் பொட்டும் கழுத்தில் பல வகை மணி மாலைகளுமாக அமர்ந்திருந்த சோதிடர், சோழிகளை வைத்துப் பார்த்து அப்பன் இன்னும் மூன்றே நாட்களில் திரும்பி விடுவார் என்றார். 'ஒரு பெண் பிள்ளை மயக்கு; அவள் சூதுதான். வடக்கே போயிருக்கிறார். வந்தாக வேண்டும்' என்று புருவங்களை நெறித்து, உதடுகளைக் குவித்து விவரங்கள் மொழிந்தார்.

அம்மா யாரோ பெண் பிள்ளையை நினைத்துக் கைகளை நெறித்துச் சாபமிட்டாள். திரும்பி வரும் போது... பச்சையம்மன் கோயில் நவராத்திரிச் சீர் பொங்கல் வைக்கப் பெண்களெல்லாரும் கூடியிருந்தார்கள். பாட்டுப் போட்டிருந்தார்கள். ராமசாமிக்கு அப்போதெல்லாம் சினிமாப் பாட்டென்றால் உயிர். அம்மா, கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்தி வைத்தாள். விழுந்து விழுந்து கும்பிட்டாள். நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

காலையில் அவன் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சண்முகக் கங்காணியும் கணக்கப் பிள்ளையும் அவர்கள் குடிசைக்கு வரக் கண்டான். அம்மா பரபரத்துக் குடிசைக்குள்ளிருந்து வெளி வந்து பார்த்தாள்.

"மக்கா...!" என்ற கங்காணி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கடற்கரையில் அப்பச்சியின் உடல் ஒதுக்கப்பட்டிருந்தது. மீன்கள் கண்களைக் கொத்தியிருந்தன.

அவர் இறந்தபோது அவர்களுடன் இருந்து உண்மையாகக் கண்ணீர் வடித்தவர் சண்முகக் கங்காணி தாம்.

அப்பா திரும்பி வந்த பின் நன்றாக உடல் தேறிப் பழைய வலிமைகளைப் பெற்றிராது போனாலும், அன்பும் அரவணைப்புமாகச் சில நாட்களேனும் அவர் இருந்திருந்தால் அவருடைய இழப்பை ராமசாமியும் தாயும் அதிகமாக உணர்ந்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் அவர் திரும்பியதும், இறந்து போனதும் கனவில் நிகழ்ந்த சம்பவங்களாக நினைவில் ஆழமாகப் பதியாமல் போய்விட்டது. ராமசாமியின் வாழ்க்கையை அந்த நிகழ்ச்சி அப்போது பாதிக்கவில்லை.

சண்முகக் கங்காணிக்கு நீர்க்கோவை, வாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது. அவருடைய தம்பி மகன் ஒருவன் தூத்துக்குடிச் சந்தையில் கடை வைத்திருக்கிறான். அவனிடம் சென்று தங்கி வைத்தியம் செய்து கொள்ளப் போய்விட்டார். சண்முகக் கங்காணிக்கு மனைவி இல்லை. இரண்டே புதல்வியர்; அவர்களைக் கட்டிக் கொடுத்து அவர்கள் பாறை உடைத்து சல்லி எடுக்கும் குத்தகை வேலை செய்யும் கணவர்களுடன் வடக்கே சென்று விட்டனர். ஆனால், கங்காணி அளத்தை விட்டுச் செல்லு முன் அவனை உப்பு அறவைக் கொட்டடியிலிருந்து வெளியே உப்பு வாரும் பணிக்கு அமர்த்திச் சென்றார்.

"ஏலே, நீயுண்டு ஒஞ்சோலியுண்டுண்ணு நடந்துக்க. வேற எந்த சாரிப்பும் வேண்டா. ஒன்னப்ப வம்புதும்பு செய்யப் போயித்தா இந்த மட்டும் வந்ததெல்லா..." என்று அறிவுரை செய்து விட்டுப் போனார். அப்போது அவனுடைய இளம் மனதில், வாலிபம் கிளர்த்த முரட்டுத்தனம் முத்திரை பதிக்கவில்லை. வெளியாரின் பேச்சும் நடப்பும், தந்தை ஏதோ பயங்கரமான குற்றத்தைச் செய்ததால் சிறைக்குச் செல்ல வேண்டி வந்ததென்றும், அவரே தாம் தவறுக்கு வருந்தி, தனது ஆயுளை முடித்துக் கொண்டார் என்றும் அவன் கருதுமளவுக்கு அநுதாப ஈரமில்லாமலிருந்தன. தந்தை செய்த பயங்கரக் குற்றம் என்னவென்பதை அவன் வாலிபனாக வளர்ந்து வர, உப்பளத்தில் பெறும் அனுபவங்கள், வேலைச்சூழல் இவற்றின் வாயிலாகவே உணர்ந்து கொண்டிருக்கிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் அவன் அளத்தில் பணியெடுத்த பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு ஆள் அவனைப் பார்த்து விட்டுச் சட்டென்று இறங்கினார்.

"நீ... யாருலே, பாத்தாப்பல இருக்கு?"

அவன் கூச்சத்துடன் அவரைப் பார்த்தான். கையில் தங்கப்பட்டை கடிகாரம் கட்டி இருந்தார். வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு, நடுத்தர வயசுக்காரராக இருந்தார்.

"...நீங்க யாரு...?"

"எம்பேரு தெரியுதா? தனபாண்டியன்னு..."

அவன் கேட்டிருக்கிறான். தொழிலாளர் சங்கத்தின் ஒரு தலைவராக அவருடைய பெயர் பிரபலமாகி கொண்டிருந்தது. ஒரு வேளை அப்பச்சியைத் தெரிந்திருக்குமோ?...

"நான் சாத்தப்பன் மகன்..."

"அதா, ஒங்கப்பா முகம் அப்படியே இருக்கு. வீட்டில அம்மா சுகமா? தங்கச்சியக் கட்டிக் குடுத்தாச்சா..."

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. "தங்கச்சி இல்ல... எறந்து போச்சு..."

"அடாடா..." என்றவர், அவன் தகப்பனார் தொழிலாளர் சங்கம் தழைக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தார். உண்மையில் செல்வாக்குடன் அவர் தொழிலாளரை ஒன்று சேர்த்ததே முதலாளிக்குப் பிடிக்காமல், அவர் மீது சதிக்குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளினார்கள். இப்போது, உப்பளத் தொழிலாளரை மீண்டும் ஒன்று சேர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல சங்கத்தை அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்.

வாயிலில் சைக்கிளை வைத்துவிட்டுக் குனிந்து அவரும் குடிசைக்குள் வந்தார்.

"அம்மா! ஒங்களப் பாக்க ஒராள் வந்திருக்கு!"

அம்மா சிறு சிம்னி விளக்கைப் பொருத்தினாள்.

"அண்ணி, எப்படிப் போயிட்டிய? என்ன ஞாபகம் இருக்கா?..." என்று நெகிழ்ந்த குரலில் வினவினார்.

அம்மா சங்கடத்துடன், "இல்லாம என்ன..." என்று திடீர்த் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை முன்றானையால் துடைத்துக் கொண்டாள்.

"தனபாண்டியம்மா. அவரு பெரிய தலைவர், எவ்வளவு பாடுபட்டார்? இந்தத் தொழிலாளிகள் ஒண்ணு சேரணும், அவர்களை அழுத்தும் முதலாளித்துவத்தைத் தட்டிக் கேட்க ஒரு நாக்கு வேணும்னு அவர் பாடுபட்டு உயிரையே பணயம் வச்சிட்டா. அண்ணி, நா இன்னிக்கு உயிரோட உங்க முன்ன வந்து நின்னு பேசுறேன்னா, அது அன்னிக்கு நீங்க காட்டின கருணையாலதான். போலீசு என்னைக் கண்ணி வச்சுத் தேடினப்ப, அடுப்பு வச்ச எடத்துல பலகை போட்டு துணியப் போட்டு என்னப் படுக்கச் சொல்லி அண்ணனும் நீங்களும் எடங்கொடுத்தீங்க, ஒங்க சோறும் உப்பும் தின்னு மூணு நாள் இருந்தேன். அதெல்லாம் எப்படி மறக்கும்?" என்று கண்ணீர் வடித்தார்.

அம்மா எங்கோ முகட்டைப் பார்த்தாள். "எனக்கு ரொம்ப விசனமான விசயம், சாத்தப்பன் தற்கொலை செஞ்சிட்டான், புத்திசாதினமில்லைன்னு சொல்லிக்கிறான்களே, இதுதான் புரியல. இதில ஏதோ மருமம் இருக்குன்னு படுது. நீங்க அன்னிக்கு என்ன நடந்ததுன்னு வெவரமாச் சொல்லணும். சும்மா விடக் கூடாது இதை..." என்றார் தனபாண்டியன்.

கடந்த ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது இதை இவர் ஆராய வந்திருப்பதன் நோக்கம் என்ன என்று ராமசாமி முதலில் திகைத்தான்.

"தொழிற்சங்கத்தை இப்ப பலப்படுத்தணும். இப்ப உப்பளத் தொழில் மின்னவிடவும் கஷ்டம். இந்தப் பனஞ்சோலை அளம் எவ்வளவு பெரிசாப் போச்சு? முன்ன அந்தக் காலத்துல துலாவச்சு அடிச்சா, அஞ்சு பாத்தி ஆறு பாத்தி ஒரு மனுஷன் வாருவான். இப்ப, மிசின் தண்ணியை எரச்சுக் கொடுத்து, அதே ஒரு ஆள் முப்பத்தஞ்சி பாத்தி வாருறான். கூலி அந்த அளவுக்கு உசந்திருக்கா?" என்று கெட்டித்துப் போன உப்பை உதைத்து உலுக்குவது போல் கேட்டார்.

கலகலவென்று அது குறைபாடுகளாக அப்போதுதான் ராமசாமிக்கு உறைத்தது.

அம்மா எதுவும் பேசாமலே நின்றிருந்தாள். பிறகு நாத்தழுதழுக்க, "ஒங்கள நான் ரொம்பவும் கேட்டுக்கறேன். பையன் ஏதோ வேலய்க்கிப் போயிட்டிருக்கா. அவனுக்கு ஒரு கல்யாணம் கட்டி குழந்தை குட்டி பிறந்து விளங்கணும். மொதலாளி மாரெல்லாம் முன்னப்போல இல்ல. இப்பல்லாம் அவிய காரில் வருவா; போவா. தொழில்காரங்க ஆம்பளயா, பொம்பளயான்னு கூடப் பாக்கிறவங்க இல்ல. போன வருசம் முச்சூடும் மழ இல்ல. உப்புக்கும் வெல இல்லதா. ஆனா இங்க தட்டில்லாம கூலி கொடுத்தாவ; வூடு மோடு போடணுன்னாலும் ஏதோ கல்யாணச் செலவுன்னாலும் பணம் குடுப்பா. ஒங்க கிட்டச் சொல்ற, ராமசாமிக்கு மாசச் சம்பளமாவே ஆக்கி வச்சிடறேன்னு கங்காணியாரே அப்பவே சொல்லிருக்கா..." என்றாள்.

அவர் சிறிது நேரம் வாயடைத்துப் போனாற் போல நின்றார்.

"நீங்க ரொம்பப் பயப்படுறிய. இதெல்லாம் சூழ்ச்சி. நியாயத்தை ஒருத்தன் கேட்கத் தலையெடுத்தால் அவனை மடக்கி விடுவார்கள். சாத்தப்பன் தற்கொலை செய்து கொண்டார் என்பது வெறும் கதை. அவரை அறிந்தவர் யாரும் நம்ப முடியாது. அவர் இறந்த பிறகு அந்தப் பொம்புள வந்தாளா?"

அம்மா தலையை வேகமாக ஆட்டினாள். "அவ வெவரமே பொறவு எவரும் பேசியதில்ல. ஆருக்கும் ஏதும் தெரியாது. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. ஏதோ கேட்பார் பேச்சக் கேட்டு முதலாளிக்குத் துரோவம் செய்திட்டமேன்னு ஏக்கம் புடிச்சே பிரும்மமாப் போயி தன்னையே முடிச்சிட்டாவ. இதுக்கு ஆரை நோவ?... நீங்க எதுவும் பேசி இப்ப இந்தப் பையனுக்குத் தீம்பா எதுவும் வரவச்சிடாதீக... ஒங்களக் கும்புட்டுக்கிறேன்..."

அம்மா அன்று இவர் காலில் வீழ்ந்துதான் கும்பிடவில்லை.

தனபாண்டியன் அன்று அதற்கு மேல் பேசவில்லை.

ஆனால் அவர் சென்ற பின் அம்மா அவனிடம், "மக்கா, தெளிஞ்சு கெடக்கிற மனசை அவெ குட்டத் தண்ணியாக்கிடுவா. இப்பிடித்தே காயிதமும் அதும் இதும் கொண்டுப் போவாக, ராவோட ராவா மீட்டங்கி பேசும்பாவ, அங்கமுத்துன்ற அந்தாளு கூடதா இவ வருவா. இவயெல்லாம் வாரதுக்கு முன்ன, உங்கய்யா, அவர் சோலியுண்டு அவருண்டுண்ணுதா இருந்தா. இவல்லாம் விடமாட்டா. சொதந்தரம் வந்து ஆருக்கென்ன? முதலாளியளுக்குத்தா சொதந்தரம்பா... கடோசில என்ன ஆச்சி? இவியளத் தூண்டிட்டு உள்ள போக வச்சிட்டு, அவனுவ தப்பிட்டாக மக்கா. நீ இவியக் கூடச் சிநேகம் ஒண்ணும் வச்சுக்காத, வேண்டாம்."

எலும்புகள் முட்ட, எண்ணெய்ப் பசைகன்றிச் சுக்காயி வறண்ட தோலில் கீறல்களுடன் அம்மா கெஞ்சிய போது ராமசாமி குழைந்து போனான். கடலலை மோத வருவது போலும், அவன் விவரமறியாக் குழந்தையாக எதிரிட நிற்பது போலும் அவள் அஞ்சி அவனைப் பற்றிக் கொள்ளப் பார்த்தாள்.

ராமசாமி அப்போது கேட்டான்.

"அந்தப் பொம்பிளன்னாரே அவரு. அது ஆரு அம்மா?" அம்மா அவனைத் திரும்பிப் பாராமலே பதிலளித்தாள். "அவ ஆரோ. நமக்கும் அவளுக்கும் ஒரு தொடிசுமில்ல. நீயாரும் பேசறதக் கேக்கண்டா. நமக்கு உள்ளது போதும். நல்ல பெண்ணா ஒனக்குக் கட்டி வய்க்கணும்..."

அம்மா அப்படித் தீர்த்துவிட்டாலும் அவனால் ஒதுங்கி விடுபட்டு விட முடியவில்லை. உப்பைக் கக்கி விட்டு வரும் நஞ்சோடை நீரும் கரிப்பாகத்தானே இருக்கிறது?

ராமசாமியிடம் சாடைமாடையாக அக்கமும் பக்கமும், தொழில் செய்யும் இடங்களிலும் 'அந்தப் பொம்பிளை'யைப் பற்றிச் செவிகளில் போடத்தான் செய்தார்கள். 'அந்தப் பொம்பிளை', அவனுடைய தந்தையின் கையைப் பற்றி மனைவியாக வந்தவள். மிக அழகா இருப்பாள்.

அப்போது பெரிய முதலாளி சிறு வயசுக்காரர்... அவ்வளவு தான். அப்பாவின் முகத்தில் பிறகு அவள் விழிக்கவில்லை...

ராமசாமி படிப்பகத்தில் வந்து பத்திரிகைத்தாளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். படித்தது எதுவுமே மண்டையில் ஏறவில்லை.

பொன்னாச்சியின் முகமே வந்து கவிகிறது. அன்று தம்பி உடம்பு சரியில்லை என்று வேலைக்கு வரவில்லை. அவள் மட்டும் காத்திருந்தாள்.

அவளைத் தனியே கண்டதும் விழிகள் கலங்கித் துளிகள் உதிர்ந்தன. அவன் பதைத்துப் போனான்.

"ஏவுள்ள? என்ன?"

அவள் முந்தானையால் துடைத்துக் கொண்டு விம்மினாள்.

"அந்தக் கண்ட்ராக்டுச் சவம் என்னியக் கெருவச்சிட்டே இருக்கா. எனக்கு பயமாயிருக்கு... இன்னிக்கி..."

"இன்னிக்கு...?"

அவனுக்கு நெஞ்சு துடிக்க மறந்து போயிற்று.

"அவனைக் காலத் தூக்கி ஒதச்சிட்ட, 'விரிசாப் போடி'ன்னு தொட்டுத் தொட்டுக் கிள்ளினா; பொக்குனு ஆத்திரத்தோட ஒதச்சிட்ட. ஆரும் பாக்கல. ஆனா என்னேய்வானோன்னு பயமாயிருக்கு..."

அவன் விழிகளைக் கொட்ட மறந்து போய் நின்றான்.

"ஏத்தா? ஒம்பேரென்னன்னு சொன்ன?"

அவளை வெட்கம் கவிந்து கொள்கிறது.

"என்ன சேஞ்ச?... சொல்லே..."

அவள் கதகதத்த பட்டுத்துண்டுக்குள் புதைந்தாற் போல் நிலத்தைப் பார்க்கிறாள்.

"ஒம் வாயால சொல்லுவுள்ள, காலத்தூக்கி அவன ஒதச்சே... சரிதானா? கால்ல ஓலச்செருப்புப் போட்டிருந்தல்ல?"

"ம்..." என்று தலையை ஆட்டுகிறாள் பொன்னாச்சி. "அது நா ஒதச்சப்ப அவமேல பட்டு கீளவுழுந்திற்று..."

"எங்காது குளுந்திருக்கு. எப்பிடி ஒதச்சன்னு காட்டுவியா பொன்னாச்சி...?"

அழுகை போய்ச் சிரிப்பு வருகிறது.

அது மலர்ப்பாதம். எலும்பு முண்டி நரம்பெடுத்து முழித்துப் பார்க்காத பாதம். உப்பு அவள் பாதங்களில் படிந்து மென்மையைக் குத்திக் கிளறினாலும், அவள் உயிர்த்துவமுள்ள மனிதப் பெண். உப்பு அவளைப் புழுவாக்க, முதுகெலும்பைத் தின்றுவிடவில்லை. அவள் வீறு கொண்டு ஒரு அசுரனை உதைத்தாள்!

அந்தக் காலைப் பற்றி முத்தமிட வேண்டும் போலிருந்தது ராமசாமிக்கு.

"அவெ கருவச்சிருக்க மாட்டா? அவெ அக்குரமத்துக்கு நா எடங்குடுக்கலன்னுதா ரொம்ப வருமங்காட்டறா..."

"அது சரி, நீ ஒதச்ச பெறவு அவ என்ன சேஞ்சா? மீசல மண்ணத் தட்டிட்டுப் போனானா?" என்று அவன் சிரித்தான்.

"நீங்க சிரிக்கிறிய, இவெ இப்படியிருக்காண்ணு, மொதலாளிக்குத் தெரியுமா! அவியக்கிட்ட சொன்னா என்ன?"

"பொன்னாச்சி, இப்பிடி அக்குருமமுன்னு மொதல்ல கொரல் குடுக்கறதே நீதான்! எல்லாரும் இவனுவ என்ன சேஞ்சாலும் எதுக்கத் தெரியாம அடங்கிப் போவா. பவருள்ளவ சேட்ட சேஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பொண்டுவளத்தா இதுவரய்க்கும் நா கேள்விப் பட்டிருக்கே, பாத்துமிருக்கே. நீ... நீதா தயிரியமா எடுத்து சொல்ற. ஏ அழுற? சிரிக்கணும், நா ரொம்ப சந்தோசப் படுற, ஒனக்கு ஒண்ணும் வராது... நமக்கெல்லா நல்ல காலம் வரப்போவுது. அதுக்கித்தான் ஒனக்கு அந்தத் தைரியம் வந்திருக்கு..."

"அப்ப நா பயப்படாண்டாம்..."

"நிச்சயமா. நா இருக்க வுள்ள. ஒங்கிட்டச் சொல்ற, எனக்கு வீட்டுக்குப் போனாக்கூட ஒன் ஞாபகமாகவே இருக்கு. இத்தே பெரிய அளத்துல, நீ இருக்கிற பக்கமே நா சுத்திவாரன்னு கூட அவங்கண்டிட்ருப்பா. நீ பயப்படாதே நானிருக்க... எப்பவும்..."

ராமசாமி இந்த உரையாடலை நூறு முறைகள் உயிர்ப்பித்துப் பார்த்து மகிழ்ந்திருப்பான். இன்னும் அலுக்கவில்லை. சினிமாக் காட்சிகளுக்கு அவன் எப்போதேனும் செல்வதுண்டு. கதாநாயகியை வில்லன் துரத்தி இம்சை செய்வான். சரேலென்று கதாநாயகன் குதிரை மீதேறித் தாவி வந்து அவன் முன் குதிப்பான்; உறைவாளை உருவி, அந்தக் கொடியவனுடன் கத்திச் சண்டை செய்வான். அவன் தலை உருளும். கதாநாயகி ஆனந்த மிகுதியால் கதாநாயகனின் அருகில் வந்து மலர்ச் செண்டென அவன் மார்பில் முகம் பதிப்பாள்... ராமசாமி தானே அந்தக் கதாநாயகனாக மாறிப் போகிறான். நாச்சப்பனின் தலை உருண்டு கிடக்கிறது. பொன்னாச்சி... பொன்னாச்சி...

யாரோ அவன் கையிலிருக்கும் பத்திரிகையை உருவவே அவன் திடுக்கிட்டு நிமிருகிறான்.

தனக்குள்ளே நாணியவனாக, பிறகு சமாளித்துக் கொள்கிறான்.

அத்தியாயம் - 9

அன்று சனிக்கிழமை, கூலி நாள். கிழிந்து பிளந்துவிட்ட, பனஓலை மிதியடியைத் தூக்கி எறிந்துவிட்டு நஞ்சோடை நீரில் கால்களைக் கழுவிக் கொண்டு ரப்பர் செருப்பை மாட்டுக் கொண்டு பொன்னாச்சி கூலிக்கு நிற்கிறாள். அன்று தம்பி பச்சை வேலைக்கு வரவில்லை. அவனுக்கு காலில், கையில், வாயில் புண், காய்ச்சல் வேறு கதகதப்பாக இருந்தது. அழகு, வடிவாம்பா, மாரியம்மா, எல்லோரும் நிற்கின்றனர். ராமசாமியை அன்று சாப்பாட்டு நேரத்துக்கு மேல் காணவில்லை. தம்பிக்குக் காய்ச்சல், வாயில் புண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தாள். கூலி கொடுக்க நேரமாகிவிட்டால் தேரிகடந்து தனியாகப் போக வேண்டி வருமோ என்றஞ்சியே அவனை எதிர்நோக்கியிருந்தாள். சாப்பாட்டு நேரத்தில் அவன் நல்ல தண்ணியில் கால் கழுவிவிட்டு, மருதமுத்துக் கங்காணியுடன் பேசிக் கொண்டே போனான். அவளைப் பார்க்கவில்லை. இப்போதும் அவள் 'கண்ட்ராக்ட்' நாச்சப்பன் கூலி கொண்டு வருவதை மட்டுமின்றி ராமசாமியும் எந்தப் பக்கமிருந்தேனும் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாச்சியப்பன் கூலியைக் கொண்டு வருகிறான், இருபத்து நான்கு ரூபாய் அவளுக்கு வரவேண்டும், இரண்டு நாட்கள் அதிகப்படியே வேலை செய்திருக்கிறாள். ஆனால் ஆறு ரூபாயைப் பிடித்துக் கொண்டு பதினெட்டு ரூபாய் கொடுக்கிறான். எண்ணி எண்ணிப் பார்க்கிறாள். மாரியம்மாளுக்கு, அழகாம்பாளுக்கு, முனுசாமிக்கு, மாயாண்டிக்கு, யாருக்கும் குறைக்கவில்லை. அவளைப் போல்தான் அவர்களும் வேலை செய்தார்கள்.

நாச்சப்பன் கூலியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

"அண்ணாச்சி? எங்கூலியை ஏன் கொறச்சிட்டாங்க?"

"ஏங்கொறச்சிட்டா?..." அவன் சிரித்துவிட்டுச் செல்கிறான்.

"மாரியக்கா? கண்ட்ராக்ட்டு எங்கூலிய ஏங் கொறச்சிட்டா?"

அவளுக்கு அழுகையே வந்து விடும் போலிருக்கிறது.

"ஆறு ரூவாய ஏங்கொறச்சிட்டா?..."

"நீ கண்ட்ராக்கிட்ட அகராதியாய்ப் பேசியிருப்பே. அதனாத்தா, வாயத்துறக்கக் கூடாது..." என்று பரிதாபக் குரலில் கூறிவிட்டு அழகாம்பா விரைந்து செல்கிறாள்.

பொன்னாச்சிக்கு உலகம் கண்முன் இருண்டு வருகிறது.

"அது அவனுவ வழக்கம் புள்ள. இதுன்னாலும் குடுத்தானில்ல, போ..." என்று சந்தன நாடான் கிழவன் கண்களைச் சரித்துக் கொண்டு பெட்டி சீர் செய்த கூலியை எண்ணிக் கொண்டு செல்கிறான்.

ஒவ்வொருவராக எல்லோரும் பெரிய வாயிலைத் தாண்டிச் செல்கின்றனர்.

அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள். முகம் தெரியாத இருள் சூழ்கிறது, அம்பாரமான உப்புக் குவைகள் - விறிச்சிட்டு விட்ட பாத்திக் காடுகள். மயான அமைதி நிலவும் அச்சம் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.

ராமசாமி... அவன்... அவன் எங்கே போய்விட்டான்?

நீ பயப்படாதே, எப்போதும் காவலாக இருப்பேன் என்று சொன்னானே? கருமை, உலகைத் தன் துகிலால் இழுத்து மூட விரைந்து வந்துவிட்டது. அப்பனிடம் சொல்லித்தான் கேட்கச் சொல்ல வேண்டும் நாளை...

அப்பச்சியை வரச் சொல்ல வேண்டும்.

அவள் சாலையில் விரைந்து செல்கிறாள். யார் யாரோ உருவங்கள் செல்வதை அவள் பார்க்கிறாள். நடுச்சாலையில் விளக்கொளியைப் பாய்ச்சிக் கொண்டு பஸ் ஒன்று செல்கிறது.

முன்னே யார் யாரோ அளத்துக்காரர் செல்கின்றனர்.

பயமில்லை. ஓட்டமும் நடையுமாக அவள் விரைகையில் முன்னே செல்லும் உருவங்களில் யாரேனும் ராமசாமியாக இருக்கலாகாதா என்ற ஆசை அடித்துக் கொள்கிறது.

சாலையில் சைக்கிள்கள் போகும் போது சட்டென்று அதிலிருந்து அவன் இறங்கி அவளைக் கண்டு கொண்டு வரமாட்டானா என்று பார்க்கிறாள்.

யாருமில்லை. ராமசாமி வரவில்லை. பாலம்... பாலம் வந்ததும் அவள் குறுக்கே தேரிக்குள் திரும்ப வேண்டும். அங்கும் யார் யாரோ மக்கள் செல்கின்றனர். "முருகா... முருகா..." என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பொன்னாச்சி தேரிக்குள் நடக்கிறாள்.

பேச்சுக் குரல்கள் தேய்ந்தாற் போல் விழுகின்றன.

அவளுடன் வேலை செய்யும் பெண்கள் பத்துப் பதினைந்து பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி கூடக் கூலிக் குறைப்பைக் கருதி அனுதாபமாக அந்தக் கண்ட்ராக்டிடம் கேட்கலாம் என்று வரவில்லையே?

"நீ தணிச்சு ஒரு வழி போகணுமே" என்றும் ஒருத்தியும் வாய்ச் சொல்லுக்கும் கூட கூறவில்லையே? இந்த உப்பு சூட்டில் முள்ளுச் செடிகள் கூடக் கரிந்து விடுகின்றன. ஊரில் மாமி ஏசுவாள் என்றாலும் அடிக்கொருமுறை பொன்னாச்சியை யாரேனும் கூப்பிடுவார்கள். மனித நேயங்களனைத்தும் உப்புச் சூட்டில் வறண்டு போய் விடுமோ?

ராமசாமி 'சங்கம் கூட வேண்டும், எல்லோரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்' என்று ஒருநாள் சொன்னான். இப்போது அவனே அவளுக்கு உதவ வேண்டிய சமயத்தில் போய்விட்டான்.

செம்மணல் பரந்த மேடாகத் தெரியும் தேரி இப்போதும் இனம் புரியாமலிருக்கிறது. குடல் குலுங்க அவள் இருட்டில் ஓடுகிறாள். யார் யாரோ ஆண் குரல்கள் கேட்கின்றன.

'தேரியில் வைத்துக் கொலை செய்து விட்டார்கள்' என்ற சொற்றொடர் உட் திரையில் மின்ன 'முருகா, முருகா' என்று நா உச்சரிக்க அவள் ஓடுகிறாள். அப்போது அவளைத் தொடர்ந்து இன்னும் யாரோ ஓடி வரும் அடிச்சத்தம் கேட்கிறது... ஒரு வேளை ராமசாமியோ?

"ஏவுள்ள ஓடாத... ஓடாதவுள்ள?"

ராமசாமியின் குரல்தானோ?

அவள் மூச்சிறைக்க நிற்கிறாள். அவள் நின்றதும் விரைந்து வந்தவன் அலைபோல் பாய்ந்து அவளை நெருங்கி அணைக்கிறான். முத்தமிடுகிறான். புளித்த கள்ளின் வாடை...

"ஐயோ... ஐயோ, விடுரா, சவமே..."

அவள் திமிருகிறாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளக் கைகளைக் கால்களை உதைத்துக் கொள்கிறாள், அவனைப் பிறாண்டுகிறாள்.

ஆனால் அவன் வெறி கொண்ட பேயாக இருக்கிறான்.

தேரி... தேரிக்காடு... நெஞ்சு உலர்ந்து போகிறது.

பூதமாகத் தலைவிரிச்சிப் பனமரங்கள்... இருள் இரத்தச் சுவடுகளையும் துல்லியமாகத் துடைக்கத் துணை செய்கின்றது. போதாதற்கு அப்படி ஒன்றும் இங்கு நடக்கவில்லை என்று கோடானு கோடித் தாரகைகள் கண் சிமிட்டுகின்றன.

அவள் தேரியின் மண்ணில் கிடக்கிறாள். அந்த அலுமினியம் தூக்குப் பாத்திரத்தின் நினைவு சட்டென்று வருகிறது. அதற்குள் கூலிப்பணம் இருக்குமே!

"இத இருக்குவுள்ள...!" என்று அவன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருட்டில் முகம் தெரியவில்லை.

கொலைகள் நடந்த இடத்தில் ஆவிகள் உலவும். இவன் ஆவியோ, 'பொட்டவுள்ள... பொட்டவுள்ள...' என்ற குரல் பயங்கரமான பொருளை உணர்த்தச் செவிகளில் டங்டங்கென்று அதிரடி போல் ஒலிக்கிறது. அவளுக்குக் குபீரென்று அழுகை வருகிறது. உட்கார்ந்து இதயம் வெடிக்க அழுகிறாள்.

அவன் போகவில்லை.

"ஏவுள்ள அழுவுற? கூலி கொறச்சிட்டான்னு சொன்னேயில்ல? நா அஞ்சு ரூவா தாரன் ஒனக்கு!"

"சீ மிருவமே! என்னக் கொன்னு போட்டுறதுதானே?" மீண்டும் அவள் அழுகையொலி அங்கு எதிரொலிக்கிறது. "இப்படிப் பண்ணிப்போட்டியே? நா எப்பிடி எல்லார் மூஞ்சிலியும் முழிப்பே?"

"த, இப்ப என்ன வந்திற்று? நா ஒன்னக் கல்யாணங் கட்டுற, சீல, தாலி வாங்கித்தார? இந்த மொத்த ஊரிலும் தண்ணிக்குள்ள கெடந்து மிசின் மாட்டுற தொளில் ஆருக்கும் வராது. மொதலாளி பெசலா எனக்குண்டு குடிய்க்க நெதம் ரெண்டு ரூவா தருவா... அழுவாத...?"

இதுதான் விதியா? இந்தக் குடிகாரனை அவள் கல்யாணம் கட்டுவாளா? மாமி, சின்னாச்சி, அப்பன்... பச்சை... "ஐயோ, அவுரு... எப்பேர்க் கொத்த மனிசரு?"

பொங்கிப் பொங்கி அழுகை வருகிறது.

"தே அழுவாதவுள்ள..."

அவன் குரலில் ஆணவமோ, ஆத்திரமோ இல்லை. தாய்க்குத் தெரியாமல் கள் குடித்து விட்டு வரும் பிள்ளை, "தெரியாம செஞ்சிட்டேன்" என்று தண்டனையை ஏற்க நிற்பவன் போல் கெஞ்சுகிறான்.

"அநியாயமா இப்பிடிச் செஞ்சிட்டியே, பாவி, நா ஒன்னயா கலியாணம் கெட்டிக்கணும்? தூ!..."

"பின்ன வாணாமுன்னா வாணா..."

உடலும் மனமும் பற்றி எரிகிறது. அவனை என்ன செய்யலாம்? அப்போது அடித்துக் கால் கையை வெட்டிப் போடலாமா? அப்போது அவள் எரிச்சல் ஆறுமா?... ஐயோ...! என்று அவள் துடிக்கிறாள்.

"என்னியக் கொன்னு போட்டுட்டுப் போ. சவமே ஏன் நிக்கே?"

"ஐயோ... கொல எல்லாம் செய்யமாட்டே. இப்ப என்ன வந்திற்று? எல்லாப் பொம்பிளக்கும் எல்லா ஆம்பிளய்க்கும் உள்ளதுதே. எந்திரிச்சி, சீலயல போட்டுக்க. கண்ணத் தொடச்சிட்டுவா. கிளப்பில தோசையும் குருமாவும் வாங்கித் தாரன்; சாப்பிட்டுக்க. அளத்துல லாரி வந்திச்சி, நேரமாச்சுன்னு சொன்னா ஆருங்கேக்க மாட்டா. ஒங்க வீட்டில நா கொண்டு வுடுறே..."

அவன் அவள் சீலையை எடுத்து மேலே போடுகிறான். கைபிடித்து எழுப்புகிறான்.

"ந்நா நாச்சியப்ப கண்ட்ராக்ட், கங்காணி ஆறுமுகம் கணக்கவுள்ள பிச்ச... அல்லாரும் பொறத்தியான் பெஞ்சாதியளைக் கை தொடும் கழுவேறியா. நா அப்படிப் பாவம் செய்ய மாட்ட, சாமி அப்பேர்க் கொத்தவங் கண்ண அவிச்சிப் போடும். நான் கண்ணாலங்கெட்டாத பொண்ணாத்தாந் தொடுவ..."

அவனுடைய சீல நெறியைச் செவியேற்கையில் அந்த நிலையிலும் அவளுக்கு சிரிப்பு வரும் போலிருக்கிறது.

"நீ கலியாணம் கெட்டலியா?"

"அக்கா மவளக் கெட்டின, அதுவுள்ள பெத்த ஆசிபத்திரில செத்துப் போச்சி. இப்ப ஒன்னக் கட்டிக்கற, என்ன கட்டிக்கிறியா பொன்னாச்சி?"

"நீ என்னக் கட்டிக்கிறேன்னு கவுறு போட்டா, நாங் கடல்ல வுழுந்து முடிஞ்சி போவ..."

"ஐயோ அப்ப வாணா, நீ என்னக் கட்டிக் காட்டி வாணா! நீ ராமசாமியக் கட்டிக்க..."

அந்தப் பெயரைக் கேட்கையிலே மீண்டும் துயரம் வெடித்து வருகிறது. இது தெரிந்தால் அவர் என்ன சொல்வார்? காவலிருக்கேன்னு சொல்லிக் கைவிட்டு விட்டீரே!

"நீ அழுவாத பொன்னாச்சி. நா தெரியாம செஞ்சிட்டா. வா. ஒனக்கு அஞ்சு ரூவா இல்லாட்டி பத்து ரூவா தாரவா..."

அவன் கையை உதறிக் கொண்டு அவள் எழுந்து சீலையை இறுக்கிக் கொள்கிறாள். அலுமினியம் தூக்கை வாங்கிக் கொண்டு அவள் நடக்கிறாள். தொய்யும் கால்களை உறுதியாகப் பதித்து நடக்கிறாள். கரிப்புத் தண்ணீர் உதடுகளை நனைக்க அவள் நடக்கிறாள்.

தேரி கடந்த பின் தெருவோரம் ஒரு நைட் கிளப்பில் எண்ணெயில் வட்ட வட்டமாக பூரி காய்கிறது. ஆட்கள் அங்கே உட்கார்ந்து தீனி தின்கின்றனர்; நின்று காபியோ தேநீரோ பருகுகின்றனர்.

"பூரி தின்னுக்கறியா? நெல்லாருக்கும்..."

"சீ!" என்று காரித் துப்புகிறாள், விளக்கொளியில் அவன் முகத்தைக் கண்டதும்.

"ந்தாப்பா, ஒரு பாவசம் குடு..." பளிச்சென்ற ஒளியில் அவள் நிமிர்ந்து பார்க்கக் கூசி நிற்கிறாள். ஒரு பையன் கிளாசில் 'பாவசம்' கொண்டு வந்து தருகிறான்.

"குடு... வாங்கிக்க..." பாசிப் பருப்பும் வெல்லமும் சேர்ந்த, 'பாயசம்'. அவள் கடையின் பின்பக்கம் இருளில் திரும்பி அந்தப் பாயசத்தை அருந்துகிறாள். பிறகு கொஞ்சம் நீர் குவளையில் வாங்கி முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். எரியும் தீயை அந்தப் பாயசம் இதமாய் அணைத்தாற் போல் தோன்றுகிறது.

"நீ வீட்டுப் பக்கம் வராண்டா. போயிடு. நாளக்கி எங்கனாலும் ஆரானும் பொம்பிள கடல்ல, கெணத்துல விழுந்திட்டான்னு செவில வுழுந்தா போயிப்பாரு."

அவள் ஆத்திரத்துடன் நடக்கிறாள்.

அவன் கோயில் வரையிலும் அவள் செல்வதைக் கேளாமலே தொடர்ந்து வருகிறான். பிறகு அவள் வெருட்டியதால் செல்கிறான். சின்னம்மா, குழந்தைகள் எல்லோரும் வாயிலில் நிற்கின்றனர்.

"ஏட்டி" என்று சின்னம்மா கேட்கும் வரையிலும் அவள் காத்திருக்கவில்லை. தூக்குப் பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு உள்ளே சென்று வாளியும் கயிறுமாகக் கிணற்றடிக்கு விரைகிறாள். கிணற்று நீரைச் சுறண்டி இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். கோடைக்கால கிணறு மணலும் சேர்ந்து வருகிறது.

தனது கருமையை அந்த மணலோடு சேர்த்துத் தேய்த்துக் கழுவுவது போல் தண்ணீரை இரைத்து ஊற்றிக் கொண்டு, சேலையைப் பிழிந்து கொண்டு வருகிறாள். தலை சொட்டச் சொட்ட, முடியை விரித்துப் போட்டுக் கொண்டு அவள் வருவதைக் கண்ட சின்னம்மா,

"ஏட்டி, கூலிக்கு நேராச்சின்னா நாளக்கிப் போயிக் காலயில வாங்கிவாரம், செவந்தனியப் போச்சொல்லுற. நீ இருட்டி இந்நேரங்களிச்சி தேரி கடந்து வார. ஒங்க மாம மாமியெல்லா, பெரியதனக்காரா. நீ லச்சயில்லாம நடக்கே. ஒரு சூடு விழுந்தா சின்னாச்சி மண்டய உருட்டுவா..."

சேலையைப் பிழிந்து கட்டிவிட்டு விரிந்த கூந்தலுடன் அவள் ஆணி அடித்த நிலையில் நிற்கிறாள். சின்னம்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பாம்பாக உருப்பெற்று அவள் மீது ஊர்வதாகப் படுகிறது.

"அம்மா, பசிக்கி... சோறு போடம்மா... சோறு..." பிள்ளைகள் தட்டை வைத்துக் கொண்டு ஓசை செய்கின்றனர். சின்னம்மா பொங்கும் குழம்பைக் கரண்டியால் கிளறிவிட்டு அடுப்பைத் தணிக்கிறாள்.

"வந்திட்டாளா அவ?" என்று அப்பனின் குரல் கேட்கிறது.

"...கூலி போடுற அன்னிக்கு நேரமாவும். நீ பொழுதோட வூடுவர வேண்டியதுதானே? எம்பிட்டுக் கூலி குடுத்தா...?"

"இருவத்து நாலுக்கு இருவத்து மூணு இருக்கு. ஒரு ரூவாக்கு வாங்கித் தின்னட்டும், புள்ளயளுக்கு ஒரு காரூவாப் பட்டாணிக் கடல வாங்கிச்சி வராண்டா?..."

பொன்னாச்சிக்கு வடிக்கக் கண்ணீரில்லை.

"ஏட்டி, மொவத்துல கைய வச்சிட்டிருக்கே... அல்லாரையும் கூட்டிச் சோறு வையி..."

அவள் பேசவில்லை. சோறென்றதும் எல்லோரும் வந்து உட்கார வேண்டும். ஒரு நாட்பொழுதின் மகத்தான நேரம் அது. பொழுது விடிவதும் பொழுது போவதும் இந்த 'மகத்தான' நேரத்துக்குத்தான். சோறு; அரிசிச் சோறு. மீன் கண்டமிட்ட குழம்பு. நல்லகண்ணு மூக்கை உறிஞ்சி நெட்டை விட்டுக் கொண்டு உண்ணுகிறான். தம்பி... தம்பி எங்கே?

சின்னம்மா காலுக்கு மஞ்சள் தூளையும் விளக்கெண்ணெயும் குழைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள். "அந்தப் பய மத்தியானங் கூட இப்பிடித்தா படுத்திருந்தா. எளுப்பி காப்பித் தண்ணி வச்சிக் குடுக்கச் சொன்னே பாஞ்சாலிய..." என்று அப்பன் கூறுகிறார்.

அவள் துணுக்குற்ற நெஞ்சுடன் வாயில் திண்ணைக்கு வந்து அவனை எழுப்புகிறாள். சுருண்டு கிடக்கிறான்.

"தம்பி... தம்பி... லே பச்ச, சோறு தின்ன வால...?"

மூச்சு வேகமாக வருவது போலிருக்கிறது. "சோறு... வாணா. சோறு வாணா..." என்று முனகிவிட்டுத் திரும்பிப் படுக்கிறான்.

"விறிஞ்சோறில்லே. மீன் கொளம்பு வச்சிருக்கு. ஒரு வாத் தின்னிட்டுப் படுத்துக்க..."

சோறு வேண்டாம் என்று அவன் எந்த நேரத்திலும் கூற மாட்டானே?

அவள் அவன் உடம்பில் கை வைத்துப் பார்க்கிறாள். சூடு காய்கிறது. மீன் குழம்பு வைத்து அரிசிச் சோறு பொங்கிய நாளில் உடம்பு காய்வது எத்தனை துரதிஷ்டம்?

"ஒடம்பு சுடுது, சின்னம்மா அவனுக்கு!"

"சூடு... உப்புச் சூடுதே. கண் பொங்கியிருக்கு, நாயித்துக் கெளமயில எண்ணெ வச்சிக் குளிலேன்னே, அப்பச்சியோட சந்தக்கிப் போறன்னு ஆடிட்டிருந்தா. சொன்ன பேச்சிக் கேக்கணும்..." என்று சின்னம்மா குற்றம் சாட்டுகிறாள்.

அவனை மெள்ள எழுப்பி பொன்னாச்சி தட்டின் முன் கொண்டு வந்து உட்கார்த்துகிறாள். இரண்டு வாய் கொறித்து விட்டு மீண்டும் திண்ணைப் பாயில் முடங்கிக் கொள்கிறான்.

காலையில் சின்னம்மாவின் கண்களில் முதலில் பொன்னாச்சி வரிகம்பில் உலர்த்தியிருக்கும் ரவிக்கை தான் படுகிறது. கைப்புறமும் முதுகுப்புறமும் தாறுமாறாகக் குத்தினாற் போல் கிழிந்திருக்கிறது.

"ஏட்டி ஜாக்கெட் கிளிஞ்சிரிச்சா? கொம்பு மாட்டிச்சா? எங்க கிளிச்சிட்ட? பதனமா அவுத்துக் கசக்குறதில்ல?"

"அது கிளியல... கிளிஞ்சி போச்சி..." என்று ஏதேதோ சொற்கள் மோதியடித்துக் கொண்டு வர உதடுகள் துடிக்கின்றன. கண்களில் முட்டிக் குளம் வெட்டுகிறது.

தூக்கி வாரிப் போட்டாற் போல் மருதாம்பா நிற்கிறாள். எழும்பும் நா அடங்கிப் போகிறது. கண்கள் அவள் மீது பொருளார்ந்து நிலைக்கின்றன.

அத்தியாயம் - 10

நார்ப் பெட்டியும் கையுமாக பொன்னாச்சி, பாஞ்சாலி, சரசி, நல்லக்கண்ணு நால்வரும் சந்தைக்கு நடக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைச் செலவு சாமான் வாங்க அவர்கள் வந்திருக்கையில் அப்பன் பச்சையை வைத்தியரிடம் அழைத்து சென்றிருக்கிறார்.

"என்ன புள்ள மார்க்கட்டா?" என்ற குரல் கேட்டுச் சிலிர்த்துக் கொண்டு அவள் திரும்பிப் பார்க்கிறாள்.

சைக்கிளில் ராமசாமி! தலையில் சுற்றிய துண்டை மீறி முடிக்கற்றை வழிய, ஒரு நீல சட்டையும் அணிந்து ராமசாமி நிற்கிறான். அவன் கண்கள் சிவந்திருக்கின்றன. இரவு தூக்கமில்லை என்று அவன் முகம் பறையடிக்கிறது.

பொன்னாச்சிக்கு முகம் மலர்ந்தாலும் ஒரு கணத்தில் ஊசி பட்டாற் போல் குவிந்து விடுகிறது. பதிலேதும் பேசாமல் அவள் திரும்பி நடக்கிறாள். 'இந்த ஆளை இப்ப யார் வரச் சொன்னது?" என்ற கோபம் அவளுள் துருத்திக் கொண்டு எழும்புகிறது.

சந்தைக் கும்பலில் அவள் புகுந்து நடக்கிறாள்.

அவன் அவளுடைய புள்ளிச் சேலையைக் குறியாக்கிக் கொண்டு அதே சைக்கிளுடன் தொடர்ந்து செல்கிறான். பக்கத்தில் இடிப்பது போல நெருங்கி, "ஏத்தா கோவமா?" என்று யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில் வினவுகிறான்.

கொட்டைப் புளி சவளம் சவளமாகத் தட்டில் மலர்ந்திருக்கிறது.

"எப்படிக் குடுக்கிறிய?"

"மூணு ரூவா."

"அம்புட்டுப் புளியுமா? என்னாயா, வெல சொல்லிக் குடு?" என்று அங்கிருந்து ராமசாமி 'ஆசியம்' பேசுகிறான்.

அவளுக்கு ஓர் புறம் இனிக்கிறது; ஓர் புறம்... ஓர் புறம்.

ஐயோ! இவர் ஏன் நேற்று வரவில்லை?

பொன்னாச்சி புளியைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். பிறகு புளி நன்றாக இல்லை என்று தீர்மானித்தாற் போன்று விடுவிடென்று மிளகாய்க் கடைக்குச் செல்கிறாள். கடைக்காரனான முதியவன், "ஏத்தே! வெல கேட்டுட்டுப் போறியே, ரெண்டே முக்கால் எடுத்துக்க! புளி ஒருக்கொட்ட சொத்த ஒண்ணு கிடையாது!"

அவள் செவிகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. மிளகாய்க் கடையையும் தாண்டிப் போகிறாள்; சரசி, "அக்கா வளவி, வளவி வாங்கணும் அக்கா!" என்று கூவுகிறாள்.

"வளவிக் கடை கோடியில இருக்கு. அங்க வா போவலாம்!" என்று பாஞ்சாலி ஓடுகிறாள். சரசியும் ஓடுகிறது.

"ஏவுட்டி, ஏனிப்படி ஓடுறிய? வளவி கடாசில தா" என்று தடுத்து நிறுத்தப் பார்க்கிறாள். நல்லகண்ணுவோ, சீனி மிட்டாய்க்காக மெல்லிய குரலில் இராகம் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் இன்னும் தோளோடு உராயும் அண்மையில் வந்து அரிசிக் கடையில் நிற்கிறான்.

"இப்ப ஏன் பின்னாடியே வாரிய? தொணயிருப்பேன்னு சொல்லிட்டு வராம இருந்துட்டிய. பாவி குடிச்சிட்டு வந்து... தேரிக்காட்டுல கொலச்சிட்டுப் போயிட்டா. இனி யாரும் யார் பின்னயும் வராண்டா..."

அந்த மெல்லிய குரலில் வந்த சொற்கள் சந்தை இரைச்சலின் எல்லா ஒலிகளோடும் கலந்துதான் அவன் செவிகளில் புகுகின்றன. ஆனால் அது எல்லா இரைச்சலுக்கும் மேலான பேரிரைச்சலாக அவனது செவிப்பறைகளைத் தாக்கி அவனை அதிரச் செய்கிறது.

அவன்... அவன் மேட்டுக்குடி அளத்தில் சுமை தூக்குகையில் கையில் முதுகெலும்பு அழுந்த நொடித்து விழுந்து ஒருவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்ததைக் கேட்டு மாலையில் விரைந்து சென்று விட்டான். இருபது ஆண்டுகளாக அங்கே வேலை செய்யும் அந்த மனிதன் அளத் தொழிலாளி அல்ல என்று விசாரணையில் கூறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு அவன் அங்கு சென்றான். தனபாண்டியன், அங்குசாமி போன்ற பல தொழிலாளர் சங்கத் தலைவர்களைப் பார்த்து விவரங்களை சொல்வதற்காகவே சென்றிருந்தான். இப்போதும் அதற்காகவே அவன் தனபாண்டியன் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

"இனி யாரும் பின்ன வராண்ட. வரத் தேவையில்ல. தேவையில்ல..." என்றல்லவா சொன்னாள்!

அவன் அதிர்ச்சியினின்றும் விடுபடுமுன் அவள் அந்தப் பக்கத்தைக் கடந்து வேறு பக்கம் சென்று விடுகிறாள்.

சந்தை இரைச்சல்... வாங்குபவர் யார், விற்பவர் யார் என்று புரிந்து கொள்ள முடியாத இரைச்சல். சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர், கிராமம், பட்டினம், நாய், மாடு, சகதி, அழுகல், ஈக்கள் யாருமே எதுவுமே அவன் கண்களிலும் கருத்திலும் நிலைக்கவில்லை.

பாவி குடிச்சிட்டு வந்து... பாவி குடிச்சிட்டு வந்து... நாச்சப்பனா?

நரம்புகள் புடைக்கின்றன.

"உங்கள் உழைப்பை எல்லாம் அந்தக் காரில் வரும் முதலாளிக்குக் கொடுக்கிறீர்கள். பிள்ளை பெறுவரையிலும் உழைக்கிறீர்கள்" என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் விழிக்கவே அஞ்சும் இந்தப் பெண்கள்...

முதல் நாள் அந்தப் பெண்ணிடம் அந்தக் கணக்குப் பிள்ளை - மாண்டு மடிந்தவனின் மனைவியிடம், அம் முதலாளித் தெய்வத்தின் பூசாரியான கணக்கப்பிள்ளை, 'இறந்த என் புருசன் அந்த அளத்தில் வேலை செய்யும் தொழிலாளியல்ல' என்று எழுதிக் கொடுத்து அதன் கீழ் அவளைக் கையெழுத்துப் போடச் செய்திருக்கிறான். அதற்குக் கூலி அவனது ஈமச் செலவுக்கான நூறு ரூபாய். அவன் அளத்தொழிலாளியானால் நட்ட ஈடு என்று தொழிற்சங்கக் காரர்கள் தூண்டி விடுவார்கள் என்று முன்னெச்சரிக்கையாகக் கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

"மக்கா*, (மக்கா - பையா) ஊருல ஒன்னொன்னு பேசிக்கிறாவ... நீ எதுக்கும் போவாண்டா. அளத்துல டிகிரி வேலை, மாசச் சம்பளம் எல்லாமிருக்கு. இங்க வூடுமிருக்கு, நீ ஆரு சோலிக்கும் போவண்டா. என் ராசா" என்று பேதமையுடன் கெஞ்சும் தாயை நினைத்து இரங்குகிறான். தான் சந்தைக்கு எதற்கு வந்தானென்று புரியாமல் சுற்றி வருகிறான். நினைக்கவே நெஞ்சு பொறுக்கவில்லை. வெய்யோன் என்னாச்சி தானென்று தனது வெங்கிரணங்களால் தென்பட்ட இடங்களில் எல்லாம் ஈரத்தை உறிஞ்சுகிறான். சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் குழுமுபவர்கள் முக்காலும் உப்பளத் தொழிலாளர் தாம். இவர்கள் சூரியன் மேற்கே சாய்ந்தால் வெளிக் கிளம்பமாட்டார்கள். ஆணானாலும் பெண்ணானாலும் நேர்ப்பார்வை பார்க்க மாட்டார்கள். கீழ்ப்பார்வை, அல்லது சரித்துக் கொண்டு பார்க்கும் கோணல் பார்வையால் தான் உலகைக் காண வேண்டும். முடியில் உப்புக் காரம் ஏறி ஏறிக் கருமையும் கனமும் தேய்ந்து நைந்து விட, முப்பது முப்பத்தைந்துப் பருவத்திலேயே முடி பதம் பண்ணிய தேங்காய்ப் பஞ்சு போலாகி விடுகிறது.

பஸ் நிறுத்தத்தில் ஒரு கங்காணியும் ஏழெட்டுத் தொழிலாளரும் நிற்கின்றனர். வாய் திறக்காமல் பெண்கள் நடைபாதையில் குந்திக் கிடக்கின்றனர். புருசன் வீடு, குழந்தைகள் என்ற மென்மையான தொடர்புகளை எல்லாம் துண்டித்துக் கொண்டு இந்த நடைபாதையில் சுருண்டு கிடக்கின்றனர். எப்போது சாப்பாடோ, குளியலோ, தூக்கமோ? லாரிக்காகக் காத்திருப்பார்கள். லாரி எப்போது வந்தாலும் சுறுசுறுப்புடன் சென்று பசி எரிச்சலானாலும் உழைக்க வேண்டும். அப்போது காசு கிடைக்கும். காசைக் கண்டபின் அந்தத் துண்டிக்கப்பட்ட பாச இழைகள் உயிர்ப்புடன் இயங்கத் தொடங்கும்.

"புள்ளக்கிக் காயலாவாயிருக்கு கொஞ்ச நேரம் முன்ன போகணும்" என்றால் நடக்குமா? இல்லை என்றால் வேலை இல்லை. கெஞ்சலுக்கெல்லாம் இங்கே இளகும் நெஞ்சங்கள் கிடையாது.

"பாத்திக் காட்டில் ஆம்பிளயக் காட்டிலும் கால் தேய நீங்கள் பெட்டி சுமக்கிறிய. ஆனா ஒங்களுக்கு ஆம்பிளக் கூலி கிடையாது. நினைச்சிப் பாருங்க. ஒங்களுக்கு எத்தனை கஷ்டமிருக்கு? நீங்கள்லாம் கூடிச் சங்கத்திலே ஒரு குரலா முடிவெடுத்து ஏன் எதிர்க்கக் கூடாது!" என்று அவன் அன்னக்கிளி, பேரியாச்சி எல்லோரிடமும் வாசலில் குந்தியிருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேசுவான்.

சங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே மருண்டு போவார்கள்.

"சங்கமின்னு காரூவா பிரிச்சிட்டுப் பிரிச்சிட்டுப் போவா. அதொண்ணும் வராது. சங்கந்தா ஒப்பனக் கொன்னிச்சி..." என்று பேரியாச்சி அவன் தாய்க்கு ஒத்துப்பாடுவாள்.

"சங்கம் சேந்து போராடினால், சம கூலி மட்டுமில்லை, பேறு கால வசதி, ஆசுபத்திரி மருத்துவ வசதி, பிள்ளைப் பால், படிக்க வசதி, நல்ல சாப்பாடு, ஓய்வு காலப் பென்சன், குடியிருக்க வசதியான வீடு, சம்பளத்துடன் லீவு..." என்று அவன் அடுக்கினால் அவர்கள் சிரிப்பார்கள். "வெடலப் புள்ள அகராதியாப் பேசுதா..." என்பார்கள்.

பேரியாச்சிக்குக் காலில் ரணம் காய்ந்த நாளேயில்லை.

"ஆச்சி, செருப்புப் போட்டுக்கிட்டு பாத்தில நின்று கொத்திவிட்டா என்ன?" என்று அவன் அவள் வாயைக் கிளறுவான்.

"சீதேவிய, சீதேவிய செருப்புப் போட்டு மிதிக்கவா?" என்பாள்.

"அப்ப மண்ணுகூடச் சீதேவி தா. அதுலதா வுழறோம், எச்சித் துப்பறோம், அசிங்கம் பண்றோம். அதெல்லாம் செய்யக் கூடாதா?"

"போலே... கச்சி பேசாம போ!" என்பாள்.

பொன்னாச்சி... பொன்னாச்சி! நீ வித்தியாசமான பெண் என்று அவன் நினைத்திருந்தானே?...உன்னை... அந்தப் பேய்... நாச்சப்பன்.

நெற்றியிலிருந்து வேர்த்து வடிகிறது. தந்தியாபீசு முனையில் சுப்பையா அவனைத் தடுத்தாட் கொள்கிறான்.

"ராமசாமி, ஒன்னத் தேடிட்டுத் தாம்பா வந்தே. சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்ம வீட்டில கூடுறோம். தெரியுமில்ல?"

"அது சரி பொண்டுவள்ளாம் வாராவளா கூட்டத்துக்கு?"

சுப்பையா விழித்துப் பார்க்கிறான்.

"பொண்டுவளா? எதுக்கு?"

"எதுக்குன்னா, பேசத்தான்! அவங்க பிரச்சினையும் இருக்கு பாரு?"

"அது சரிதா... அவளுவ வந்து என்ன பேசுவா? ஞாயித்துக்கிளம, தண்ணி தவிசு கொண்டார, துணி துவைக்க, புள்ள குளிப்பாட்ட, எண்ண தேச்சி முழுவ இதுக்கே நேரம் பத்தாதே? அதுமிதும் போச்சின்னா பாதி பேரு சினிமாக் கொட்டாயிக்குப் போயிடுவா? பொண்டுவள்ளாம் வரமாட்டா..."

"இல்ல அண்ணாச்சி, நாம என்ன செஞ்சாலும் பொண்டுவளச் சேக்கலேன்னா புண்ணியமில்ல. நாம கண்ணுக்கு பாதுகாப்பு வேணும், மேஜோடு குடுக்கணும், ஒரு நா வாரத்தில் சம்பளத்து லீவு, பிறகு ஒன்பது நாள் விசேச லீவு, போனசு, வருசம் முச்சூடும் தொழில் பாதுகாப்பு, இதெல்லாம் கேட்டா மட்டும் பத்தாது. பாத்திக் காட்டில் வேலை செய்யும் தாய்மார், தங்கச்சிய, இன்னிக்கு எந்தவிதமான பத்திரமும் இல்லாம இருக்காங்க. புருசமாரா இருக்கிறவங்களும் அவங்களுக்குப் பாதுகாப்பா இல்ல. அண்ணன் தம்பியும் பாதுகாப்பு இல்ல. கோழிக்குஞ்சைக் கூடத் தாய்க்கோழி சிறகை விரிச்சி மூடிப் பருந்திட்ட இருந்து காப்பாத்துது. நம்ம மனுச இனத்தில் நம்ம பொண்டுவ, கழுகும் பருந்துமாக இருக்கும் மனிசங்ககிட்ட தப்ப முடியாம தவிக்கிறாங்க. இதுக்கு நாம வழி செய்யண்டாமா? நமக்கு மானம் இருக்கா? நீங்க சொல்லுங்க அண்ணாச்சி, நாம தமிளன் மானம், இந்தியன் மானம்னு அளவாப் பேசுதோம்! பொண்டுவளக் கூட்டாம சங்கக் கூட்டமில்ல... அவங்களைக் கூப்பிடணும், அவங்களுக்கு நாமதா தயிரியம் சொல்லணும்..."

இந்தப் புதிய வேகத்தின் ஊற்றுக் கண் எப்போது பிறந்ததென்று புரியாமலே சுப்பையா பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ராமசாமி வெறும் பேச்சாகப் பேசவில்லை.

அவனுடைய மூலாதாரத்திலிருந்து புறப்பட்டதோர் எழுச்சியாகவே அந்தக் குரல் ஒலிக்கிறது.

அத்தியாயம் - 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சரேலென்று, "அப்பச்சி! தங்கபாண்டி வண்டி கொண்டாரா?" என்று கூவுகிறான். தங்கபாண்டி வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால் அப்பச்சியிடம் காசு புரளும் என்று அவனுக்குத் தெரியும்.

டகடக வென்று ஓசை கேட்கிறது. பசுமஞ்சளாய்க் குழியில் தேங்கியிருக்கும் நஞ்சோடை நீரில் சக்கரம் இறங்க, அவன் மாடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறான்.

கன்னங்கரேலென்ற வெற்று மேனியில் வேர்வை வழிகிறது. குட்டையாக இருந்தாலும் களையான முகம், சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து சொந்த வண்டி மாடு வாங்கிவிட்டான். துரும்பைப் பல்லில் கடித்துக் கொண்டு, "எத்தினி மூடையிருக்கு மாமா?" என்று கேட்கிறான்.

"நீ வெல சொல்லுலே?"

"என்ன மாமா, புதுசா வெல கேக்குறிய?...ஆச்சி! மூடை போடலாமா?"

இவன் சாக்குகளைக் கீழே போடுகிறான்.

அருணாசலம் பாத்தியை விட்டு மேலே வந்து அவன் உப்பில் கைவைக்காத வண்ணம் மறிக்கிறார்.

"லே, வெல முடிவு செய்யாம உப்புல கைவைக்காத!" அவன் பளீரென்று பற்கள் தெரியக் கலகலவென்று சிரிக்கிறான்.

"சரி மாமா, வெல சொல்லும். உமக்கு இல்லாத வெலயா? நீரு கேக்றதக் குடுத்தாப் போச்சி?"

"ஏலே சக்கரயாப் பேசிட்டாப்பல ஆச்சா? ஓட தாண்டிட்டா அத லாரி நிக்கிது. நீ அவுங்க மூடைக்கு, என்ன வாங்குவியோ, அதல அரை ரூவா கொறச்சிக்க..."

"சரி மாமா, ஒம்ம பொன்னான கையால போடும்..." அவன் சாக்கை விரித்துப் பிடிக்கிறான்.

"ஏன்லே, நான் சொல்லிட்டே இருக்கிறே, நீ சிரிக்கிறே?"

"என்ன மாமா, நீங்க எவ்வளவு வேணுமின்னு சொல்லுங்க. மூடைக்கு அஞ்சு ரூவா தார..."

"இந்தப் பேச்செல்லாம் வேண்டா. மூடை ரெண்டரை ரூவா, காசைக் கீழ வச்சிட்டு மூடை போட்டுக்க..."

தங்கபாண்டி "சரி மூடை ரெண்டரை" என்று மடியைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு எடுக்கிறான்.

"வச்சிக்கும் அடுவான்ஸ்..."

பன்னிரண்டு மூடைகள் இருக்கின்றன. அவனே மூட்டையினைப் பற்றி ஏற்றுகிறான். வண்டி கடகடவென்று ஆடிச் சரிந்து கொண்டு மெல்லப் பாதையில் செல்கிறது.

ஒவ்வொரு முறையும் இதுபோல்தான் அவரும் பேசுவார். அவனும் நைச்சியமாக விட்டுக் கொடுக்காமலே இழுத்தடிப்பான்.

பத்து ரூபாய் வந்த மாதிரி மீதிப்பணம் வராது.

அவரும் கேட்டுக் கேட்டு அதிகப்படியே வாங்கிக் கொண்டு உப்புக்கு வகை வைப்பார்!

அவர் ஆச்சி மண் குடத்தில் வைத்திருக்கும் நல்ல நீரைச் சரித்துக் குடிக்கிறார்.

"என்ன இப்பப் போய் தண்ணி குடிக்கிறிய? சோறு கொண்டாந்திருக்கேனே வேணாவா?"

"தண்ணி குடிக்கிறதுக்கு கூட ஏன் காருவாரு?"

"ஏலே, வால..." என்று குமரனையும் அழைத்துக் கொண்டு ஆச்சி சாப்பாட்டுக்குத் தயாராகிறாள்.

சிறு பன ஓலைச் சார்பில் அவர்கள் அமருகின்றனர். மூடி வைத்திருக்கும் களியையும் துவையலையும் வாழையிலைச் சருகில் எடுத்து வைக்கிறாள்.

"முனிசீப்பு வீட்டில் ஆச்சி நெல்லு வேவிக்கணுமின்னாவ, நாளக்கி வாரமின்ன..."

அவர் களியை எடுத்து முகர்ந்து பார்க்கிறார். "தண்ணி நல்லாக் காஞ்சுப் போட்டுக் கிண்டலியா? வேத்துப் போச்சு. சளிச்ச வாடை வருது."

"வீட்ட ஒரு தண்ணிகாச்ச நாதியில்ல. பொன்னாச்சிய நா அனுப்பிச்சே குடுத்திருக்க மாட்டே. புருசன் இப்ப சாவக்கெடக்கான்னு பொய் சொல்லி, அளத்துக்கு விட்டுச் சம்பாதிக்கக் கூட்டி போயிருக்கா..."

அவருக்குக் கோபம் வருகிறது.

"பேச்சை ஏன் மாத்துறே? களி வாயில வைக்க வழங்கல? நீ ஒரு சோறு ஒழுங்காக ஆக்குறதில்ல. பேச்சு... பேச்சுதா!"

"நா கேட்டதுக்குப் பதிலே சொல்ல மாட்டிய! தூத்தூடிக்குப் போய் வந்திய. எம்புட்டுச் செல்வாச்சி... எதானாலும் இப்ப அந்தத் துட்டை எங்கிட்டக் குடுத்திடணும். வள்ளிப் பொண்ணுக்கு ஸ்கூலுக்குப் போட்டுப் போக வெள்ள சட்ட இல்லேங்கா..."

அவர் பேசவில்லை. பொன்னாச்சி வீட்டை விட்டுச் சென்ற பிறகு சோறும் கூட அவருக்கு வகையாகக் கிடைக்கவில்லை. அவளும் தம்பியும் அவருக்குப் பாரமாகவா இருந்தார்கள். பச்சை நாள் முழுதும் துலாவில் நீரிறைத்துப் பாய்ச்சுவான். பொரிகடலை வாங்கிக் கொள்ள என்று பத்து பைசா துட்டு கொடுத்தால் வாயெல்லாம் பல்லாக நிற்பான். இரண்டு பேரும் அன்று யாருக்கோ உப்புச் சுமந்து கொட்டி விட்டு வருவதை அவர் பார்த்து விட்டு வந்திருக்கிறார். அவளை இங்கு மறுபடியும் வேலை செய்யக் கூட்டி வரக்கூடாது. ஆனால், அவளுக்குக் கல்யாணம் என்று ஒரு வளமையைச் செய்ய அழைத்து வர வேண்டும். கல்யாணம் என்ற நினைவுடன் தங்கபாண்டியின் முகம் தான் உடனே தோன்றுகிறது. அவர் கண்முன் முன்னுக்கு வந்திருக்கிறான். அப்பன் அம்மை யாருமில்லை. ஒரே ஒரு அண்ணன் இருக்கிறான். அவனும் உப்பு வாணிபம் தான் செய்கிறான். இந்தப் பையனுக்கும் பொன்னாச்சியின் மீது ஆசை இருக்கிறது. அவளுக்கென்ற துண்டு முக்கால் ஏக்கரை ஒதுக்கினால் பாடுபட்டுக் கொள்வார்கள். செவந்திப் பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை அவர் பத்திரமாக வைத்திருக்கிறார். ஒரு சேலை துணி வாங்கி, செந்தூர் முருகன் சந்நிதியில் அவளை மணமுடித்துக் கொடுத்து விட வேண்டும்.

"...."

"என்ன, நாங்கேக்கேன். பேசாம இருக்கிய... எனக்கு வீட்டில எண்ணெயில்ல, புளி இல்ல..." என்று மனைவி கை கழுவி விட்டு அவர் மடியைப் பிடித்துப் பார்க்கிறாள்.

அவர் இடது கையால் அழுந்திப் பிடித்துக் கொண்டு அவளை அண்ட விடாமல் ஒதுக்குகிறார்.

"கவுறு வாங்கணும். கிணறு வாராம அடுத்த உப்பு எடுக்கறதுக்கில்ல. நீ வம்பு பண்ணாத இப்ப!"

"இந்த மாசம் எனக்கு இருவது ரூபா குடுத்திருக்கிய. நா என்னேய! இப்ப அந்தக் காச எனக்குத் தரணும்..."

"மாத்தித்தாரன்..."

"அப்பச்சி, எனக்குக் காசு வேணும்..." என்று குமரன் முன்னேற்பாடாகக் கேட்டு வைத்திருக்கிறான்.

"எங்கிட்டதா ஒங்க காருவாரெல்லா. பொன்னாச்சியையும் பயலையும் கூட்டிட்டு வாரன்னு போனிய, உப்பளத்து வேலைக்கிப் போறான்னு சொல்லிட்டு வந்திருக்கிய. இங்க பக்கத்துல புள்ளயோடு புள்ளயா வேலக்கிப் போவட்டும்னு நாஞ்சொன்னா இடிக்க வந்திய. அதுக்குத்தா நாலு காசு கையிலிருக்கும். ஒரு சீல ஜாக்கெட் என்னேனும் எடுக்கலான்னு சொன்ன. அப்ப ஏங்கிட்டப் பேசுனதொண்ணு. இப்ப ஊருல என்ன சொல்றா? அந்த வுள்ளக்கி சோறு கூடப் போடல, அப்பங்கிட்ட வெரட்டிட்டான்னு சொல்றா! என் தலயெளுத்து..."

மூசு மூசென்று அழத் தொடங்கியவளாக அவள் பானையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்க்க நடக்கிறாள்.

அவருக்கு இது பலவீனப் பகுதி. உண்மையில் அன்று அவர்களை அழைத்து வரவேண்டும் என்று தான் சென்றார். ஆனால், பொன்னாச்சி அங்கிருந்து வரவேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இங்கே மனைவி அவளை எப்போதும் பிடுங்கிக் கொண்டிருந்தாள். தன் கண் முன் இன்னொரு பாத்திக் காட்டுக்கு அவளை அனுப்ப அவர் மனம் துணியவில்லை. பிறகு அந்தக் காசும் அவள் கையில் தங்காது. இப்போது... எங்கேனும் வட்டிக் கடனேனும் வாங்கி தங்கபாண்டிக்கு அவளை மண முடித்து விட வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும் பத்து ரூபாய் நோட்டை மாற்றி வந்து அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுக்கிறார். குஞ்சரி கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறது. உள்ளே வந்து சட்டையை ஆணியில் இருந்து எடுக்கையில் கீழே கட்டம் போட்ட தொங்குபை வீற்றிருக்கிறது. "வேலு வந்திருக்கிறானா? - எப்ப வந்தா?"

"அண்ணன் வந்திட்டா அப்பவே..."

"பரீட்சை நல்லா எழுதியிருக்கிறனாமா? எங்க போயிட்டாரு துரை?" எதுவும் பதில் வரவில்லை.

அவருக்குக் கோபமாக வருகிறது; பெரிய துரை போல் செருப்பு, சட்டை! அவன் முடியும், காலில் போட்டுக் கொள்ளும் யானைக் குழாயும்!

தீர்வையை நினைவுறுத்தி வந்த கடிதத்தை அன்று பெட்டிக்குள் வைத்துவிட்டுப் போனார். மேலே பலகையில் இருந்து அதை அவர் எடுக்கிறார். பழைய தகரப் பெட்டி, அதில்தான் அவருடைய கூட்டுறவுச் சங்கக் காகிதங்கள், பத்திரம், வேலுவின் கல்லூரிப் படிப்பு உதவிச் சம்பளக் காகிதங்கள் எல்லாம் இருக்கின்றன.

அதைத் திறக்கும் போதெல்லாம் ஒரு கோடித் துணியில் முடிப்புக் கட்டி வைத்திருக்கும் செவந்திப் பெண்ணின் அரைப் பவுன் தாலியைப் பார்க்காமலிருக்க மாட்டார். இன்னும் பழக்கத்தில் அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கையில் பகீரென்றது. துணி அவிழ்ந்து கிடக்கிறது. அது... அது எங்கும் இல்லை. அவர் உதடுகள் துடிக்கின்றன. நெற்றி நரம்புகள் புடைக்கின்றன.

"ஏளா?... பொட்டிய ஆரு திறந்தது? பொட்டிய ஆரு திறந்ததுன்னே?..."

அவர் குரலில் கனல் கொப்புளித்துச் சீறுகிறது. அந்தச் சீறலுக்கு எதிரொலி இல்லை. இது அவர் சீற்றத்தை இன்னும் வீச்சாகக் கக்குகிறது. "இது ஆரு வேல? ஆரு பொட்டிய திறந்திய?"

பின்னே வந்து பானை கழுவும் மனைவியின் முடியைப் பற்றுகிறார்.

"விடும்..! ஏனிப்பக் கூப்பாடு போடுறிய? முடியப் புடிக்கிறிய?" அவளுக்கும் நெற்றிக்கண் இருக்கிறதென்று காட்டுகிறாள்.

"ஒமக்குக் கண்ணுமண்ணு தெரியாது! பொட்டிய நாந்தா தொறந்தே! என்ன பண்ணச் சொல்றிய?"

அவருக்கு உதடுகள் துடிக்கின்றன. என்ன செய்வதென்று தெரியத்தானில்லை.

"மூதி, எந்தங்கச்சி பிள்ளைய வெரட்டி அடிச்சது நீதா. அவ... அவ நகை நட்டெல்லாம் வித்துப்போட்டே, ஒரு அரைப் பவுன் சொத்து, அதை வச்சிருந்தே, மங்கிலியம். அதை எங்கே கொண்டு போட்டிய அம்மையும் மவனுமா?"

"எங்கும் கொண்டுப் போடல. நீரு பாட்டுல காத்துட்டு இல்லாம பொறப்பட்டுப் போட்டிய. அவ இந்தச்சணம் சின்னாச்சியோட போவேன்னு குதிக்கா. முக்காத்துட்டு இல்ல. கடன் வாங்கற பக்கமெல்லாம் கடன். முன்சீப் வீட்டு ஆச்சியும் இல்ல. இப்ப வாணாட்டி, மாமா வரட்டும்னா கேட்டாளா? அவளேதா, எங்கம்மா சொத்துதான, கோயில்காரர் வீட்ட வச்சி இருவத்தஞ்சு ரூவா வாங்கித்தாரும்னா. வாங்கினே. என்ன வேணா அடிச்சிக் கொல்லும்!"

அருணாசலம் தன் தலையில் அறைந்து கொண்டு வெளியே வருகிறார்.

அத்தியாயம் - 12

செவந்தியாபுரம் தொழிலாளர் குடிகள், முப்பதாண்டுகளுக்கு முன்னர், 'பனஞ்சோலை அளம்' என்று இந்நாள் திக்கெட்டுமாக விரிந்து கரிப்பு மணிகளை விளைவிக்கும் சாம்ராஜ்யமாவதற்கு முன்பே உருவானவை. பெரிய முதலாளி வாலிபமாக இருந்த காலத்தில் சிறு அளக்காரராக அங்கு தொழில் செய்யப் புகுந்த போது, முதன் முதலில் குடிசை கட்டிக் கொண்டு அங்கு குடியேறிய சின்னானின் குடும்பமும், அவனை ஒட்டிக் கொண்டு அங்கு பிழைக்க வந்தவர்களும் தான் அந்தக் குடிசைகளுக்கு இன்றும் உரியவர்களாக இருக்கின்றனர். கிணற்றிலிருந்து மனிதன் நீரிறைத்த நாள் போய் இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் உப்பளங்கள் பெருக, மலைமலையாக வெண்ணிறக் குவைகள் கடற்கரைகளை அலங்கரிக்கலாயின. பெரிய முதலாளியின் கடைசி மகன், மருத்துவம் படிக்கையில் லில்லியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பிறகு தான் துரை அளம் என்ற சிறு துண்டு தனியாகப் பிரிந்து, ஏஜெண்ட் காத்தமுத்துவின் ஆளுகைக்குள் வந்தது. டாக்டர் முதலாளிக்கு இந்த அளத்தைப் பற்றி லட்சியம் ஏதும் கிடையாது. நூறு ஏக்கர் பரப்பில் வேலை செய்யும் ஐம்பது தொழிலாளிகளுக்கும் மாசம் சம்பளம் என்று அறுபது ரூபாயும், நாளொன்றுக்கு அரை கிலோ அரிசியும் வழங்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். தட்டுமேட்டில் உப்புக்குவைகளுக்குப் போட்ட கீற்றுக்கள் இவர்களுடைய குடில்களுக்குச் செப்பனிடக் கிடைக்கும். சீக்கு, பிள்ளைப் பேறென்றால் துரையின் ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை கிடைக்கும். சொல்லப் போனால் டாக்டர் முதலாளி இந்தப் பக்கமே வந்ததில்லை. ஏஜண்ட் காத்தமுத்துவின் அதிகாரத்தில் தான் அங்கே நிர்வாகம் நடந்தது. துரையின் மாமியார் டெய்சி அம்மாள் அங்கு மாதம் ஓர் முறை சாமியாரைக் கூட்டிக் கொண்டு வருவாள். ஜபக்கூடம் ஒன்று மூலையில் உருவாக்குவதற்கான திட்டம் போட்டிருந்தார்கள்.

ராமசாமி அந்தநாள் தந்தை அங்கே வேலை செய்ய வந்த காலத்திலிருந்து இருந்த குடிசையில்தான் தாயுடன் வசிக்கிறான். அன்னக்கிளி, மாரியம்மா, மாசாணம் ஆகியோரும் அளம் பிரிந்த பின் அங்கே வேலை செய்யப் போனாலும் இந்தக் குடிசைகளிலிருந்தே செல்கின்றனர். ராமசாமி தொழிலாளரிடையே புதிய விழிப்பைக் கொண்டு வர சங்கம் இயக்கம் என்று ஈடுபடுவதைக் காத்தமுத்து அறிந்தான். அவன் தந்தையின் வரலாறு எல்லோருக்கும் தெரியும்.

அந்த ஞாயிற்றுக் கிழமை அவன் காலையில் கிளம்பு முன் ஏஜண்டின் நீலக்கார் உள்ளே வருவதைப் பார்க்கிறான். சற்றைக்கெல்லாம் முனியண்ணன் மகன் ஓடிவந்து, "அண்ணாச்சி, ஒங்களை ஏஜண்ட் ஐயா கூப்பிடுதாவ...!" என்று அறிவிக்கிறான். ஏஜண்ட் காத்தமுத்து ஒரு மாமிச பர்வதம் போல் உப்பியிருக்கிறான். பெரிய புஸ்தி மீசை கன்னங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தங்கப் பட்டை கடியாரம்; விரல்களில் பெரிய பெரிய மோதிரங்கள்...

"கூப்பிட்டீங்களா, சார்?"

"ஆமாலே. ஒன்னப் பார்க்கவே முடியறதில்ல. வூட்டக் காலி பண்ணணும், அந்த எடம் வேண்டியிருக்கு. டாக்டரம்மா போன மாசமே சொன்னாவ..."

ராமசாமி திகைத்துப் போகிறான்.

"எல்லாரும் காலி பண்ணணுமா?"

"ஜபக்கூடம் கட்டணுமின்னு பிளான் போட்டிருக்காவ. நீ இந்த அளத்துக்காரனில்ல. இந்த அளத்துக்காரவுக கொஞ்சந்தா, வேற எடம் ஒதுக்குவாக. ஏதோ அந்த நாள்ளேந்து இருந்திய, ஒண்ணும் சொல்லாம இருந்தம்... இப்ப எடம் தேவைப்படுது."

"இப்ப திடீர்னு காலி பண்ணனுன்னா எங்கே போவ? எடம் பார்க்கணுமில்ல? கொஞ்சம் டயம் குடுங்க..."

"ஒன்ன ஆளக்காணவே முடியல. சங்கம் அது இதுண்ணு போயிடற, மின்ன சொல்லலன்னா ஏந் தப்பா? ஒரு வாரம் டயம் தார. காலி பண்ணிப்போடு!"

ஏஜண்ட் கூறி ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. அவன் வேறு இடம் பார்க்க முனையவில்லை. தொழிற் சங்க ஈடுபாடு அதிகமாக, பல பிரச்னைகளிலும் தலைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பகல் நேரங்களில் பொன்னாச்சியையும் தம்பியையும் பார்க்கும் போது மனசு துடிக்கும். மாலையில் அவர்கள் வீடு திரும்புவதையும் அவனால் கண்காணிக்காமல் இருக்க முடியவில்லை. நாச்சப்பனைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளத்தில் வெறுப்பு குமைய மீசை துடிக்கும்.

உப்பளத்து ஈரங்களை வற்றச் செய்யும் காற்று அந்த மக்களின் செவிகளிலும் சில பல சொற்களைப் பரப்புகின்றன.

பனஞ்சோலை அளமும், துரை அளமும் ஒவ்வோர் வகையில் அந்தச் சொற்களை, செய்திகளை உள்ளே அநுமதிக்காத கற்கோட்டைகளாக இருக்கலாம். அந்தக் கற்கோட்டைகள், பஞ்சைத் தொழிலாளரின் அத்தியாவசியத் தேவைகளையும், இவர்களுடைய அட்வான்சு, சீலை போனசு, என்பன போன்ற வண்மைப் பூச்சையும் குழைத்துக் கட்டியவை. இந்தச் சாந்துதான் இங்கே பலமாக நிற்கிறது.

ஏனைய அளங்களில் வறுமைத் தேவையுடன் கூலிக்காக என்ற வெறும் நீரைச் சேர்த்து எழுப்பும் மதில்கள் இடைவிடாத அரிப்புக்கு இடம் கொடுக்கின்றன. அவ்வப்போது வேலை நிறுத்தம், தடியடி பூசல் அங்கெல்லாம் நிகழ்ந்தாலும் இங்கு அவை எட்டிப் பார்ப்பதில்லை. நிர்ணயக்கூலி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமில்லை என்றாலும் ஓரளவு அங்கெல்லாம் நிர்ணயக்கூலி நடைமுறைக்கு வந்திருக்கிறது. இங்கோ முதலாளி கணக்கில் நாள் கணக்கு நிர்ணயக்கூலி, மாசச் சம்பளம் என்று பெறுபவர் சொற்பமானவர். பெரும்பாலான தொழிலாளர், காண்ட்ராக்ட் என்ற முறையில் நிர்ணயக் கூலிக்கும் குறைவான கூலிக்கு அடிமைப்படுத்தப் பெற்றிருக்கின்றனர்.

"பனஞ்சோலை அளத் தொழிலாளரே! ஒன்று சேருங்கள்! எட்டுமணி நேர வேலைக்கேற்ற ஊதியம்... பதிவு பெறும் உரிமை, வாராந்திர ஓய்வு நாளைய ஊதியம் - இவை அனைத்தும் உங்கள் உரிமை! தாய்மார்களே! உங்கள் சக்தியைச் சிதற விடாதீர்கள்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி..." என்பன போன்ற வாசகங்கள் அச்சிடப் பெற்ற துண்டுப் பிரசுரங்கள் எங்கிருந்து பிறந்தது எப்படி வந்ததென்று புலப்படாமல் தொழிலாளரின் உள்ளுணர்வைச் சீண்டி விடுகின்றன.

ஒவ்வொரு அளத்திலும் துடிக்கும் இளம் ரத்தத்துக்குரியவர்களைக் கண்டு பிடித்துத் துணைவர்களாக்கிக் கொள்ள ராமசாமி முயன்று கொண்டிருக்கிறான். பனஞ்சோலை அளத்துக் கற்கோட்டையைத் தகர்த்துவிட அவர்கள் திடங்கொண்டு உழைக்கின்றனர்.

அந்நாள், சனிக்கிழமை, ராமசாமி பதினெட்டாம் நம்பர் பாத்தியை 'டிகிரி' பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது விரைவாகக் கணக்கப்பிள்ளை தங்கராசு வருகிறான். அவன் வகையில்தான் ராமசாமிக்குச் சம்பளம். "ஏலே, ராமசாமி!... மொதலாளி ஒன்னக் கூப்பிடுறா..."

ராமசாமி நிமிர்ந்து பார்க்கிறான். விழிகள் ஒரு கேள்விக் குறியாக நிலைக்கின்றன. முதலாளி அவனைக் கூப்பிடுகிறாரா? எதற்கு? முதலாளிகள் எப்போதும் தொழிலாளியை நேராகப் பார்த்து எதுவும் பேசமாட்டார்களே?

அந்நாள் சண்முகக் கங்காணி ராமசாமியைச் சிறு பையனாக உப்புக் கொட்டடியில் வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கையில் அளத்தில் இவ்வளவு சாலைகளும், கட்டிடங்களும் கிடையாது. அவன் வேலைக்குச் சேர்ந்து பல நாட்கள் சென்ற பின் ஒரு நாள் அறவைக் கொட்டடி வாயிலில் ஒரு பெரிய மனிதர் சந்தனப் பொட்டும் குங்குமமுமாக வந்து பலர் சூழ நின்றிருந்தார். அவனைக் கங்காணி கூட்டிச் சென்று அவர் முன் நிறுத்தினார்.

"இவனா?..." என்று கேட்பது போல் அவர் கண்கள் அவன் மீது பதிந்தன.

"என்ன கூலி குடுக்கிறிய?" என்று வினவினார்.

"ஒண்ணே கா ரூவாதா..." என்று கங்காணி அறிவித்தார்.

"தொழி வெட்டிக்குடுக்க காவாய் கசடு எடுக்கன்னு போட்டுக்க. ரெண்டு ரூபாய் குடு..." என்றார்.

அப்போதுதான் அவர் பெரிய முதலாளி என்றறிந்தான். அந்நாளில் தனக்கு மட்டும் அந்தப் பெரியவரின் ஆதரவு கிடைத்திருக்கிறதென்று அவன் மகிழ்ச்சி கொண்டான். மற்றவர்களிடையே கர்வமாக நடந்தான். தொழியில் அவ்வப்போது நீர் பாய மடை திறந்து விடுவது அடைப்பது, அலுவலகத்தில் எப்போதேனும் யாரேனும் வந்தால் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் சோடா வாங்கி வருவது போன்ற வேலைகளுக்கு அவன் உயர்ந்தான். 'ஐட்ரா' பிடிக்க அவன் உயர்ந்த போது கூட முதலாளியைப் பார்க்கவில்லை. முதலாளிக்கு வயதாகி விட்டது. அவர் படுக்கையில் விழுந்து விட்டார். அளத்துக்குள் அவர்கள் எழுப்பியிருக்கும் கோயிலில் எப்போதேனும் சிறப்பு நாள் வரும் போது அவர் வருவார். கைலாகு கொடுத்து அழைத்து வந்து அவரைச் சந்நிதியில் அமர்த்துவார்கள். பெரிய முதலாளியின் தொடர்பு அவ்வளவே.

ஆனால் அவருடைய வாரிசான மக்களில் ஒருவன் தான் இந்த அளத்தை நிர்வாகம் செய்கிறான். அவன் தான் இங்கே அதிகமாக வந்து தங்கி மேற்பார்வை செய்கிறான். முதலாளியின் மற்ற மைந்தர்களுக்கும் இவனுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. இவன் மற்ற செல்வர் மக்களைப் போல் தோற்றத்தில் ஆடம்பரம் காட்டமாட்டான். கைகளில் மோதிரங்கள், தங்கச்சங்கிலி, உயர்ந்த உடை, செண்ட் மணம், நாகரிகப் பெண்கள் என்ற இசைவுகளை இவன் காரை ஓட்டிக் கொண்டு வரும்போதோ, ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வரும் போதோ காண இயலாது. சாதாரணமாக ஒரு சராயும் சட்டையும் அணிந்திருப்பான். தலைமுடி சீராக வெட்டி, அரும்பு மீசையுடன் காட்சியளிப்பான்.

அவனுடைய வண்டி உள்ளே நுழையும் போதோ, அவனிடம் மற்றவர் பேசும் போதோதான் அவனை முதலாளி என்று கண்டு கொள்ள வேண்டும். அவன் தோற்றத்துக்கு எளியவனாக இருந்த போதிலும், அவனை எப்போதும் யாரும் அணுகிவிட இயலாது. கண்ட்ராக்ட், அல்லது கணக்குப் பிள்ளை மூலமாகத்தான் எதையும் கூற முடியும். அந்த முதலாளி தன்னை எதற்குக் கூப்பிடுகிறார் என்று அவன் ஐயுறுகிறான். காருக்கே மரியாதை காட்டுபவர்களும், அவர் வங்கி அதிகாரிகளை உப்புக் குவைகளின் பக்கம் அழைத்து வருகையில் கூனிக் குழைந்து குறுகுபவர்களும் நிறைந்த அந்தக் களத்தில் இவன் 'அவனும் மனிதன் தானே' என்று அலட்சியமாகச் சென்றிருக்கிறான். உப்புக் குவைகள் - அவர்கள் உழைப்பு. அவற்றை வங்கியில் அடமானம் வைத்து இவர்களுக்குக் கூலி கொடுக்கிறான். 'இவனுக்கா நஷ்டம்' என்று குமுறுவான்.

அவனை இப்போது அந்த முதலாளி எதற்கு அழைக்கிறார்?

விருந்துக் கொட்டகை முன்னறையில் அவர் உட்கார்ந்திருக்கிறார். அருகில் நாச்சப்பன் நிற்கிறான். முழுகாள் சோலையும் மூலையில் நிற்கிறான். அந்த நேரத்திலும் அவன் 'தண்ணீர்' போட்டிருக்கிறான். வாடை வீசுகிறது. தங்கராசு அங்கே வந்து ஒதுங்கி நிற்கிறான்.

ராமசாமி அங்கே நின்று என்ன என்பதைப் போல நோக்குகிறான். கும்பிட்டு நிற்கவில்லை.

"நீதான் ஹைட்ரா பாக்குறவனா?"

ஆமாம் என்று அவன் தலையசைக்கிறான்.

"பேரு?"

இதுகூடத் தெரியாமலா கூப்பிட்டனுப்பினான்?

"ராமசாமி..."

"நீ எங்க வீடு வச்சிருக்கே?"

இதற்கு அவன் பதில் கூறுமுன் தங்கராசு முந்திக் கொள்கிறான்.

"அங்க, தொரை அளத்துலேந்து வாரான், சொன்னேனே?"

"ஓ, மறந்து போனேன். உனக்கு மிசின் வேல தெரியின்னாங்க. பம்ப்செட்டு பாப்பியல்ல?"

"பாக்கறது தான்..."

"இங்கேயே கோயில் பக்கம் வீடு வச்சிட்டு இருந்திடு. காந்திநாதன் மிசின் பாக்கறான். அவனுக்கு ஒத்தாசையா நீயும் பம்ப்செட்டுகளைப் பார்த்து எண்ணெய் போடுவது போல வேலை செய்யிறே. இல்ல?"

அவன் எதுவும் பேசாமல் தலையாட்டுகிறான்.

"நீ இப்ப மாசச் சம்பளம் எவ்வளவு வாங்கறே?"

"நூத்து முப்பத்தஞ்சு... இப்ப ஒரு மாசம் நூத்தம்பது குடுத்தா..."

"சரி உனக்கு இருநூறாச் சம்பளம் உசத்தியிருக்கு. சம்மதம் தானே?"

ராமசாமிக்குச் சில கணங்கள் பேச்சு வரவில்லை.

இந்த முதலாளி சும்மாக் கிடப்பவனை வலிய அழைத்து, உனக்கு இங்கேயே வீடு வைத்துக் கொள், சம்பளம் ஐம்பது ரூபாய் போல் அதிகம் தருவதாக எதற்குச் சொல்கிறார்? தூண்டிலில் இருக்கும் புழுவை இழுக்க வரும் மீன் கூட அவ்வளவு எளிதில் பாய்ந்து விடாது. இது எதற்காக? இப்படி ஐம்பது ரூபாயை வீசி எறிந்து விட அவர்கள் முட்டாள்களில்லை. மனிதாபிமான ஈரமில்லாமல் அளத்துக்காரர்களிடம் வேலையை வாங்குகிறார்கள். பத்து பைசா அதிகம் கொடுத்து விட மாட்டார்கள். அதுவும் இந்த முதலாளி சீமைக்கெல்லாம் சென்று படித்தவர்.

"ராத்திரியும் பொறுப்பாக வேலை பார்க்கணுமா?" என்று ராமசாமி ஒரு கேள்வியைப் போடுகிறான்.

"அப்படியெல்லாமில்லை. ஏற்கெனவே சில பேருக்குக் கோயிலுக்குப் பக்கத்தில் வீடு வைத்துக் கொள்ளலாமின்னு சொல்லியிருக்கிறேன். நீயும் இங்கேயே இருந்தால் சவுகரியமா இருக்கலாம்னு சொன்னேன்..."

"ரொம்ப சந்தோசம். எனக்கு மட்டும் இதெல்லாம் குடுக்கிறீங்க. சொல்லப் போனா எனக்கு ரொம்பக் கஷ்டமில்ல. என்னக் காட்டிலும் கஷ்டப்படுறவங்கதா அதிகம். கண்ட்ராக்ட் கூலிங்க அஞ்சாறு கல்லுக்கப்பால இருந்து வரா. இத, நாச்சியப்பன் கூலிக்காரங்க தூத்துக்குடி டவுனுக்குள்ளாறேலேந்து வராவ. அவியளவிட எனக்கு என்ன கஷ்டம்?"

"கண்ட்ராக்ட்காரங்க சமாசாரம் வேற, அதப்பத்தி நீ ஏன் பேசறே? மாசச் சம்பளம் வாங்குறவங்களுக்குச் சில சலுகை கொடுக்கலான்னு தீர்மானிச்சிருக்கிறேன். அதில நீயும் வாரே, அதான் கூப்பிட்டுச் சொன்னேன்..."

"இப்ப எங்களக்கூட அங்க காலி பண்ணிச் சொல்லியிருக்கா. ஏஜண்டு, ஜபக்கூடம் எடுக்கப் போறாங்க, அந்த எடத்தில, காலி பண்ணணும்னு சொல்லி மாசமாகப் போவுது. நா மட்டுமில்ல, இங்க அளத்துல புள்ள பெத்துதே ஒரு பொம்பிள, அவ கூடத்தா, நாலு புள்ளங்களியும் வச்சிட்டு எங்க போவா? எல்லாம் அங்கேந்து இவுக வந்துதா வேலை செய்யிறாவ, அவியளுக்கும் இங்கே குடிச போட எடம் தாரியளா?"

முதலாளி தங்கராசுவைப் பார்க்கிறார்.

"அந்தாளு கண்ட்ராட்டு கூலியில்ல...?"

"கண்ட்ராட்டு... ஏனவிய கண்ட்ராட்டா இருக்கணும்? வருச வருசமா உதிரத்தைக் கொடுத்து உழய்க்கிறாங்க. கண்ட்ராட்டுனு வைக்கிறது சரியா?"

"ஏலே, இது என்னன்னு நினைச்ச? மொதலாளியிட்டப் பேசுதே. மரியாதி தவற வேணாம்?" என்று நாச்சப்பன் எச்சரிக்கிறான்.

ராமசாமி அவனை எரித்து விடுபவன் போல் பார்க்கிறான்.

"நானும் முதலாளியும் பேசுகிறோம். எனக்குத் தெரியும். நீ ஏண்டா நடுவே வார, நாயே!"

நாச்சப்பன் எதிரொலி காட்டிருந்தால் ராமசாமி ஒரு வேளை கோபம் தணிந்தவனாகி இருக்கலாம். அவன் வாய் திறக்கவில்லை. மௌனம் அங்கே திரை விரிக்கிறது. ஒவ்வொரு விநாடியும் கனத்தைச் சுமந்து கொண்டு நகர இயலாமல் தவிக்கிறது. ராமசாமியின் குமுறல் படாரென்று வெடிக்கிறது.

"பாத்திக் காட்டுக்கு வர பொம்பிளயை மானம் குலைக்கும்... பன்னிப் பயல்...! ஒன் ஒடம்புல ரத்தமா ஓடுது? சாக்கடையில்ல ஓடுது? பொண்ணுவளத் தொட்டுக் குலைக்கும் ஒங்கையை ஒருநாள் நான் வெட்டிப் போடுவே!... முதலாளி! இவனை, இந்த நாய்ப்பயலை, இந்த அளத்தை விட்டு நீங்களே விரட்டலேன்னா ஒங்க பேரு கெட்டுப் போகும். இவனை நீங்க வெரட்டலே, இல்ல இங்க நடக்கிற அக்கிரமத்தைத் தடுக்கலேன்னா, நானே இந்தப் பயலை வெளியே தள்ளுவ ஒருநா."

முதலாளி புன்னகை மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாச்சப்பன், தங்கராசு இருவருடைய முகங்களிலும் ஈயாடவில்லை. சோலையும் கூட எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பட்டாசு படபடவென்று வெடித்துவிட்டுத் தாற்காலிகமாகச் சிறிது ஓய்ந்தாற் போல் ஓர் அமைதி படிகிறது. சட்டென்று ராமசாமிக்குத் தான் அவமானத்துக்குள்ளாகி விட்டாற் போன்று ஓர் உணர்வு குறுக்குகிறது.

முதலாளியானவன் ஒரு கைப்படுக்கையில் இன்னொரு கையை நிறுத்தி அதில் முகத்தை வைத்துக் கொண்டு அவனது கோபத்தை ரசிக்கும் பாவனையில் அமர்ந்திருக்கிறான்.

"இவ்வளவுதானா, இன்னும் இருக்கிறதா?" என்ற பாவம் விழிகளில் விளங்குகிறது.

"ஏம்ப்பா, இந்த அளத்தில் சோலை ஒருவன் தான் பட்டப் பகலில் குடிச்சிட்டு வருவான்னு நினைச்சிருந்தேன், இந்தாளும் சோலையைப் போல்னு தெரியிது. இவன இப்ப நீ கூட்டி வந்ததே சரியில்ல. சரி... நீ போப்பா... போ!"

முதலாளி போகச் சொல்லி சாடை காட்டுகிறான்.

அவன் இதழ்கள் துடிக்கின்றன.

"ஸார், நான் நீங்க அவமானப்படுத்துவதற்குப் பொறுக்கிறேன். நான் குடிக்கிறவனில்லை. நான் ஒண்ணுக்கொண்ணு பேசல. என் புத்தி நல்லாகத்தானிருக்கு. நீங்க நாயமா, இங்க நடக்கிற அக்கிரமங்கள விசாரிக்கணும்னு நான் சொல்றேன். இங்கே பொண்டுவ, வாயில்லாப் பூச்சிகளாச் சீரளியிறா. இவனுக்கு எணங்கலேன்னா அவிய கூலியில மண்ணடிக்கிறா, நீங்க இங்க வேல செய்யிற பொம்பிளகளைக் கூட்டி விசாரிக்கணும்..." என்று அவன் உள்ளார்ந்து வரும் தாபத்துடன் கோருகிறான்.

"சரிப்பா. நான் பேசுறேன். நீ இப்ப போ..." என்று முதலாளி மீண்டும் அந்தப் பழைய பாவம் மாறாமலே கையைக் காட்டுவது ராமசாமிக்குப் பொறுக்கக் கூடியதாகத் தானில்லை.

"ஸார், இது ரொம்ப முட்டிப் போன வெவகாரம். நீங்கல்லாம் ரொம்பம் படிச்சவிய. நான் தொழிலாள் தா. ஆனாலும் எந்த அக்குரமும்..." அவனை மேல பேசவிடாமல் முதலாளி, "நான் கவனிக்கிறேன். போன்னு சொல்லிட்டேனில்ல போ. இப்ப உன் வேலையைப் பாரு?" என்று ஆணையிடுகிறார்.

தோல்வி, அவமான உணர்வு நெஞ்சில் கடல் போல் பொங்கிச் சுருண்டு எழும்புகிறது. அவனால் விழுங்கிக் கொள்ள இயலவில்லை.

"ஸார், தொழிலாளிகளை அவமானம் செய்யக் கூடாது ஸார். பொம்பிளயானாலும், ஆரானாலும்..."

முதலாளியின் கோபம் அதிகமாகிவிட்டது. "ஏம்ப்பா, உன்னைப் போன்னு ஒருதரம் சொன்னேன், ரெண்டு தரம் சொன்னேன். சும்மா இங்கே வந்து வம்பு பண்ணாதே, குடிச்சிட்டு வந்து!"

"ஸார், மரியாதையாப் பேசுங்க! குடிச்சிட்டு நான் வரல. அப்பேர்க்கொத்த ஆளு நானில்ல. நீங்க கூப்பிட்டனுப்பினீங்க. நான் வந்தேன். நீங்க மொதலாளியா யிருக்கலாம், நான் தொழில் செய்பவனாக இருக்கலாம். ஆனால் நானும் மனிசன்..."

சோலை அவன் மீது பாய்ந்து அவனை வெளியே கொண்டு செல்லக் கைவைக்கிறான். ஆனால் ராமசாமியே அவன் கையை அநாயாசமாகத் தள்ளிவிட்டு வெளியேறுகிறான். உச்சி வெய்யில் ஏறும் நேரம். ஆனியானாலும் ஆடியானாலும் இங்கு மேக மூட்டமே வராது.

அவன் முதலாளியுடன் மோதிக் கொள்ள வேண்டும் என்றோ, நாச்சப்பனுடன் மோதிக் கொள்ள வேண்டுமென்றோ கருதிச் செல்லவில்லை. ஆனால் பொன்னாச்சியின் வாயிலிருந்து அவன் அச்சொற்களைக் கேள்வியுற்ற நாளிலிருந்து குமுறிக் கொண்டிருந்த கொதிப்பு அச்சூழலில் வெடித்துவிட்டது.

இனி... இனி...?

அத்தியாயம் - 13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை - ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் தோல்வி அவமான உணர்வுடன் வெளிவரவில்லை. ஒரு எரிமலை வெடிக்கப் போகிறதென்ற உணர்வுடன் அவன் பொன்னாச்சியைக் கூடப் பார்க்கக் காத்திராமல் வெளிவந்தான். நேராகத் தொழிற்சங்கத் தலைவர் தனபாண்டியனைக் காண வீட்டுக்கு விரைகிறான்.

ஒரு காலத்தில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உப்புத் தொழிலாளருக்கென்று பட்டா செய்து கொடுத்த மனைகள் கொண்ட தெரு அது. இந்நாள் அந்த மனையில் உப்பளத் தொழிலாளி ஒருவனும் கட்டிடம் எடுத்துக் கொண்டு வாழவில்லை. புதிய துறைமுகத்தில் அலுவலக வேலை செய்பவனும், கல்லூரியில் பணியாற்றுபவரும் வாடகைக்கு இருக்கும் வகையில் கண்ட்ராக்ட், வியாபாரம் என்று பொருளீட்டும் வர்க்கத்தார் அங்கே மனைகளை வாங்கி வீடுகள் கட்டியிருக்கின்றனர். பச்சையும் நீலமும் பாங்காப் பூசப்பெற்ற சிறு இல்லங்கள் அழகுற விளங்குகின்றன. 'கமான்' வளைவுகளில் வண்ணப் பூச்செடிகளும், பசுமையான குரோட்டன்சுகளும் வளர்க்கப்பெற்ற வீடுகளும் இருக்கின்றன. நல்ல வெய்யில் நேரம். இந்த நேரத்தில் அவன் சைக்கிள் சக்கரம் மணலில் புதைய அந்த வீட்டின் முன் வந்து சுற்றுக் கதவைத் திறக்கிறான்.

தனபாண்டியன் உப்பளத் தொழிற்சங்கத் தலைவராக வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அந்த வீடே அறிவிப்பதாக அவனுக்கு அப்போதுதான் சுருக்கென்று தைக்கிறது. அவன் இத்தனை நாட்களில் அவர் வீட்டுக்கு வந்திராமலில்லை. இருட்டில், மாலை நேரங்களில் அவசரமாக வந்து செல்வான். நான்கு வருடங்களுக்கு முன் இந்த வீடு எப்படி இருந்ததென்று அவன் அறிந்திருக்கிறான். ஓலைக்குச்சு ஒன்று உள்ளே தள்ளி இருந்தது. அப்போது அந்தத் தெருவும் இவ்வளவுக்கு வண்மை பெற்றிருக்கவில்லை. முன்புறம் தூண்கள் அலங்காரமாக விளங்கும் வராந்தா, மொசைக் தளம், வராந்தாவில் மேற்சுவரில் வரிசையாக அரசியல் தலைவர்களின் படங்கள் விளங்குகின்றன. காமராசர், காந்தியடிகள், நேரு, இந்திரா, அண்ணாதுரை ஆகிய எல்லாத் தலைவர்களின் படங்களும் விளங்குகின்றன. உட்புகும் வாயிலில் ஒரு வண்ணப் பூந்திரை தொங்குகிறது. வராந்தாவில் நான்கு கூடை நாற்காலிகள் இருக்கின்றன.

அவன் சிறிது குழப்பத்துடன், "சார்...!" என்று கூப்பிடுகிறான். உள்ளிருந்து தொப்பி போல் முடிவிழும் தலையும், பெரிய பெரிய வில்லைகளாக, தங்க பிரேம், மூக்குக் கண்ணாடியும் கட்டம் போட்ட சட்டையுமாக ஒரு இளைஞன் வருகிறான்.

"அப்பா... அப்பா இருக்காரா? உப்பளத் தொழிலாளி ராமசாமி, பனஞ்சோலை அளம்..." என்று பரபரப்புடன் கூறும் அவனை அவன் அலட்சியமாக நோக்கிவிட்டு, "அப்பா இல்லையே?..." என்று மறுமொழி கொடுக்கிறான். "அப்பாவை இப்பல்லாம் வீட்டில் பார்க்க முடியாது. சாயங்காலம் எட்டு மணிக்கு வந்தீங்கன்னா இருப்பார்."

"ஊரில தான இருக்காரு?"

"தெரியாது, திருச்செந்தூர் போறதாகச் சொன்னாங்க. நீங்க சாயங்காலம் வாங்க!"

ராமசாமி வெளியில் திரும்பப் போகிறான். சண்முகக் கங்காணியிடம் கூறலாமா என்று நினைக்கிறான். தனக்கு வேலை போனதை இழப்பாகக் கருதி எவரிடமும் புலம்பி முறையிட அவனுக்கு அப்போது பிடிக்கவில்லை. எனவே பொறுத்திருந்து மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியனைத் தேடி வருகிறான். அந்த நேரத்தில் வீட்டுச் சுற்றுக்குள் யார் யாரெல்லாமோ தலைவருக்காகக் காத்து நிற்கின்றனர். நீலச்சட்டை போட்ட இளைஞன் ஒருவன் ஒரு நரை முடிக்காரரிடம், "அஞ்சு மணிக்கி வாங்கன்னாரு. இந்நேரமாச்சு, காணம்" என்று கூறிக் கொண்டிருந்தான்.

ராமசாமி அருகில் சென்று, "நீங்க எந்த அளக்காரரு?" என்று விசாரிக்கிறான்.

இளைஞன் குனிந்து பிடரியைச் சொறிந்து கொள்கிறான்.

"பீங்கான் கம்பெனி..."

"உப்பளக்காரரில்லையா?"

"இல்...ல."

"அதுக்கும் இவருதாந் தலைவரா?"

"ஆமா..."

"தொழிலாளர் தகராறா?"

"தகராறுதா. அதில்லாம இங்க ஏன் வாரம்?..." என்று நரைத் தலை கேட்கிறான்.

சற்றைக்கெல்லாம் தலைவர் சைகிளில் வருகிறார். சைகிளைப் பாங்காக நிறுத்துமுன் ஒரு ஆள் வந்து வாங்கித் தள்ளிக் கொண்டு செல்கிறான். புதிய குஞ்சங்கள் கறுப்பும் சிவப்புமாக அலங்கரிக்கும் ஆசனமும் பளபளக்கும் மின் விளக்குமாக அந்தச் சைகிள் அலங்கரிக்கப் பெற்ற புதுமணப் பெண் போல் நிற்கிறது. அவன் தனது துருப்பிடித்த பழைய சைகிளைப் பார்த்துக் கொள்கிறான். சைகிள் வைத்துக் கொண்டு, படிப்பகத்தில் சென்று பத்திரிகை படிக்கும் வித்தியாசமான உப்பளத் தொழிலாளியாக இருந்த ராமசாமி... அவனுக்கு இப்போதும் ஒரு குறைவும் வந்து விடவில்லை என்று நினைத்துக் கொள்கிறான். தலைவர் நீலச் சட்டைக்கார இளைஞனிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் ராமசாமி வராந்தாவில் ஏறி நின்று வணக்கம் தெரிவிக்கிறான்.

"என்ன ராமசாமி? ஆளையே காணம்? அம்மா சொகமா...?" என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு நிற்காமல் மேல் வேட்டி விசிற, திரையைத் தள்ளிக் கொண்டு அவர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் நுழைந்ததும் அந்த ஆட்களும் தொடர்ந்து செல்கின்றனர்.

ராமசாமி சற்றே பிரமித்தாற் போல் நிற்கிறான். வராந்தாவில் அழகிய இளஞ்சிவப்புக் கூடு போட்ட விளக்கு ஒளியைச் சிந்துகிறது.

அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது அவன் உள்ளே செல்வது பண்பல்ல என்று நிற்கிறான். பணம் பிரித்துச் செலவு செய்து, துண்டுக் கடிதாசிகள் அச்சிட்டு அவன் பரப்பிய போது அந்தத் தலைவரிடம் கேட்க, காட்ட... வந்திருக்கிறான். அது படிப்பகச் சந்திப்புத்தான்.

வீட்டுக்கு வந்தாலும் முன்புற முற்றத்துக்கப்பால் வராந்தாவைக் கடந்து அவன் சென்றவனல்ல.

தனது ஆவேசக் கொந்தளிப்பு ஏமாற்றமாகிய சிறு பாறையில் பட்டு உடைந்து சக்தி இழந்து போனாற் போல் தோன்றுகிறது. எச்சிலை விழுங்கிக் கொள்கிறான்.

தலைவருக்கு இந்தச் செய்தி தெரிய வேண்டியதுதான் தாமதம்; உடனே ஆயிரம் பதினாயிரம் உப்பளத் தொழிலாளரை அவர் ஒன்று சேர்த்து விடுவார். மிகப் பெரியதோர் பிரளயத்துக்குக் கருவானதோர் எழுச்சியை அந்த முதலாளிகளும் கணக்கப்பிள்ளைகளும் எதிர்நோக்கிச் சமாளிக்க வேண்டும் என்றதோர் உறுதி, கொடிக் கம்பமாய் அவனுள் எழும்பியிருந்தது. அந்தக் கொடிக் கம்பத்தில் தலைவர் போராட்டக் கொடியை ஏற்றி விடுவார் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால்... ஆனால்...

என்ன ஆயிற்று?

ஒரு நிமிடம் ஒரு யுகமாகப் போகிறது.

அவர்கள் பேசிவிட்டு, பேசிக் கொண்டு வெளியே வருகின்றனர். தனபாண்டியனும் வருகிறார். அவர்கள் சென்ற பிறகு தான் ராமசாமியின் மீது அவர் பார்வை விழுகிறது.

"ஏம்ப்பா, ராமசாமி, வெளியே நிக்கே?... ஆளவே காணம் ரொம்ப நாளா! நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன, சுப்பையா வீட்டில் பேசக் கூப்பிட்டா! நா வரதுக்கில்லாம போச்சி..."

"சொல்றதுக் கொண்ணுமில்ல, அண்ணாச்சி. சீட்டக் கிழிச்சிட்டாங்க!" ராமசாமிக்குக் குரல் படீரென்று உடைந்தாற் போல் வருகிறது.

கண்கள் நிலைக்க அவர் வியப்பை வெளியாக்குகிறார்.

"என்ன! சீட்டைக் கிழிச்சிட்டாங்களா? ஒனக்கா?"

"ஆமாம். நாயம் கேட்டே. ஒண்ணில்ல அண்ணாச்சி, அந்தத் தடியன் நாச்சப்பன், கணக்கப்புள்ள, இவனுவ பண்ணுற அக்குரவம் ஒண்ணா, ரெண்டா? தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும்? நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல? அளத்தில் இரண்டு மாசமுன்ன ஒரு பொண்ணு புள்ள பெத்திட்டா. அவ உப்புச் சேத்து மண்ணுல விழுந்து கெடக்கா. இவனுவ ஏசுறானுவ. அவளுக்கு ஒரு ஒதவி, ஒத்தாசை செய்யணுமின்னு தொழிலாளிக்குத் தொழிலாளியே ஈரமில்லாம பயந்து சாவுறா. நான் அப்பவே ஒரு முடிவெடுக்கணுமின்னு வச்சிட்டே..."

அவனுக்கு எதை முன்பு சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று நிதானம் புரியவில்லை. மோதியடித்துக் கொண்டு சொற்கள் வருகின்றன.

"நீ சொல்ல வந்த விசயத்தச் சொல்லு ராமசாமி, சீட்ட கிளிக்க இப்ப என்ன வந்தது? அதில்ல முக்கியம்? நீ மாசச் சம்பளக்காரனாச்சே?"

"ஒண்ணில்ல அண்ணாச்சி, ரொம்ப நாளாவே அந்த நாச்சப்பனுக்கு எம்மேல காட்டம். அளத்துல ஒரு பொண்ண வளச்சிட்டுக் கேடு செய்யப் பாத்தா. அது கொஞ்சம் ஒசந்த பண்புள்ள பொண்ணு. இவெ அல்டாப்புக்கு மசியல. நாவேற கண்காணிச்சிட்டே இருந்தே. அவனுக்கு அது புடிக்கல. சங்கம், தொழிலாளர் ஒத்துமைன்னு பேசுறேன்னு துரை ஏஜண்டுக்கும் கோபம். வீட்டக் காலி பண்ணுன்னா. அது ஒரு மாசமாவுது, பெறகு, நேத்துக் காலம முதலாளி என்னைக் கூப்பிடுறான்னு கணக்கப்புள்ள வந்தா. நா மொதலாளி முகத்தயே பார்க்குறதில்ல..."

"ராமசாமி, உனக்குச் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லத் தெரியல. ஒன்ன வேலய விட்டு ஏன் நிப்பாட்டினாங்கறதச் சுருக்கமாச் சொல்லு. நான் ஏழரை மணிக்கு ஆத்தூரில் ஒரு மீட்டிங்குக்குப் போவணும்" என்று தலைவர் கடியாரத்தைப் பார்க்கிறார்.

"சுருக்கந்தா. முதலாளி கூப்பிட்டனுப்பினா. நாச்சப்பன் இருந்தான். சோலைப் பயல் வேற குடிச்சுப் போட்டு நின்னான். திட்டமிட்டு எல்லாம் செய்தாப்பல என்ன அவமானம் செய்யவே, எனக்குக் கோவம் வந்திரிச்சி. பொண்டுவகிட்ட அவன் நடக்கிறதச் சொன்னே. ஒண்ணு உளுமாந்திரம் இல்லாம இவனுவ எனக்கு அம்பது ரூவா சம்பளத்த எதுக்கு ஒசத்தறாங்க."

"சம்பளம் ஒசத்தினாங்களா?"

"ஆமா அண்ணாச்சி. ஒனக்கு சம்பளம் அம்பது ரூபா ஒசத்தியிருக்கே, இந்த வளவில இருந்துக்கன்னா. இந்த எரையை வச்சு எதுக்கோ என்னை இழுக்கறாங்கன்னு தோணிச்சு. நா அப்ப நாயம் கேட்டே." அவர் முகத்தைச் சுளிக்கிறார்.

"ஏம்பா, சம்பளம் அதிகம் கொடுக்கிறோமின்னா தூண்டில் இரைன்னு சொல்லுற? குடுக்காட்ட எதுவுமில்லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல? சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே. வார்முதல் பண்ணுறவ, பெட்டி சுமக்கிறவன், அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல. அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத் தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியதுதானே?"

ராமசாமி குழம்பிப் போகிறான். பதில் வரவில்லை.

"எப்போதும் வருமம் வச்சிட்டே எதையும் கண்ணோட்டமிட்டுப் பயனில்லை தம்பி. சரி, பிறகு என்ன நடந்தது? உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா?"

"அப்படி எதுவும் சொல்லல. இது சூழ்ச்சின்னு மனசுக்குப் பட்டிச்சி. நான் கண்ட்ராக்ட் அக்குரமம் பண்ணுறதச் சொன்னே. முதலாளி நான் குடிச்சிருக்கேன்னு ஏசுனா. சோலைப் பயல் என்னை வெளியே தள்ள வந்தான். உண்மையைச் சொன்னதுக்கு இந்தக் கூலி அண்ணாச்சி. அவமானம் பண்ணினா, கூப்பிட்டனுப்பி. நீங்க சொல்லுங்க நாயம்..."

ராமசாமிக்குக் குரல் தழுதழுத்து விடுகிறது.

"ஏன்ல பொம்பிள போல அழுவுற? உன்னைப் போல ரெண்டுங் கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய. தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும்? கூப்பிட்டனுப்பினா, வீட்டக் காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா, கூலி அதிகமாக குடுத்தா, இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி? அவங்க காங்கரீட்டுக் கோட்டை. பத்து நூறு ஆனை பலம் கூட இடிக்க முடியாது. அப்படி இருக்க, பேசத் தெரியாதவன்லாம் போயி என்னேனும் சொல்லிடறிய. இப்பப்பாரு, ஒரு பயல், அமைச்சர் கலந்துக்கற கூட்டத்தில போயி ஏறுமாறாப் பேசிட்டா. ஊழல் மலிஞ்சிருக்கு, இவன் லஞ்சம் கேட்டான்; அவன் வாங்கிட்டான்னு எடுத்து விட்டிருக்கா. இந்தப் பயல்களுக்கு மரியாதையாப் பேசத் தெரியலன்னு அரசுச் சார்புப் பத்திரிக்கை பத்தி பத்தியா திட்டறா. நாம் போயி மன்னிப்புக் கேக்கணும். முதலாளிமாருங்ககிட்ட அவனுவ வாழப்பழத்தில ஊசிவய்க்கிறாப்பல நாமும் பேசணும், அது ஒரு கலை. சரி... இப்ப மணி ஏழாச்சி, நான் போவணும், நீ நாளக்கி வந்து என்னப் பாரு. நான் அவங்களை நல்லவிதமா காண்டாக்ட் சேஞ்சி, உனக்கு ஏதும் ஏற்பாடு செய்யிறேன். திரும்ப வேலைக்கு எடுத்துப்பாக..."

தலைவர் முடித்து விடுகிறார்.

ராமசாமிக்கு உருப்புரியாத உணர்வுகள் வந்து குழம்பி அவனைப் பந்தாடுகின்றன.

இவன் தலைவனாக வேண்டுமென்பதற்காக அவன் எத்தனை பேரிடம் பேசி ஒன்று கூட்டினான்?

தலைவர்... தலைவர்... பெரிய வீடு கட்டி விட்டான். பளிங்குத் தரை, திரை, சோபா... அது இது என்று மேலேறிப் போகிறான். சே!

மண்ணை வாரி எறிய வேண்டும் போலிருக்கிறது.

அவன் மீண்டும் துப்பிய எச்சிலை விழுங்குவது போல அங்கு வேலை செய்ய அவர் எடுத்துச் சொல்வாராம்?

சைகிளைத் தள்ளிக் கொண்டு அவன் தெருவில் திரும்பி வரும்போது தெரு இருட்டாக இருக்கிறது. ஆனால் அங்கே வீடுகளிலிருந்து வெளிச்சம் வழிகிறது.

இந்த அநியாயத்தைக் காரணமாக்கி ஓர் போராட்டத்துக்கு வழி வகுக்க வேண்டுமென்றல்லவோ கொதித்து வந்தான்? என்ன மோசமான தலைவர்!

ஒரு குறியில்லாமல் அவன் நடந்து செல்கிறான். விரிந்து கிடக்கும் முட்செடிப் புதரைத் தாண்டி மணல் தேரியில் தெருக்கள் கூரையும் சார்ப்புமாக இடிந்து, சுவரும் ஓட்டைப் பந்தலுமாக, வேலிப்படலும் மண் முற்றமுமாகத் தொழிலாளர் வீடுகள். நிலவு மஞ்சளாக வந்து குலுகுலுவென்று முற்றங்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்கிறது. தெருவோரம் கிழவர் ஒருவர் பனஓலை சுமந்து செல்கிறார். நடையிலிருந்தே அவனைக் கண்டு கொள்கிறார். கண்களைச் சரித்துக் கொண்டு கேட்கிறார்.

"ஐட்ரா தம்பியா?"

"ஆமா தாத்தா. இங்கியா ஒங்க வீடு?"

"ஆமா. அதா கடாசில. இப்பத்தா வார, ஓலை வாங்கிட்டு... எங்க ஓல கெடக்கிது? ரெண்டு ரூவாக்கி வாங்கின மூங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. 'பெரணி நாரு'* (* பெரணிநார் - வெளிப்புறத்தில் பனமட்டையில் கிழித்த நார் - உறுதியானது), 'ஈரக்கிளி'* (* ஈரக்கிளி - பிரம்பு) எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக்கிறாப்பலியா இருக்கு? காயித பாட்டரிக்காரன் அள்ளிட்டுப் போறா. ஒரு சுசய்ட்டின்னு வச்சா, அந்த மொதலாளிய நாலாள விட்டுப் பிரிச்சிவிட்டிடறா..."

ராமசாமி எதுவும் பேசாமல் நிற்கிறான். எந்தத் திசையை நோக்கினாலும் இப்படி மனித சமுதாயமே ஆள் பவர், அழுந்தப் பெற்றோர் என்று இரண்டு பட்டுக் கிடக்குமோ?

"சுசய்ட்டிய ஏன் தாத்தா பிரிக்கணும்."

"ஏன் பிரிக்கணும்? நாம 'சேர்' கட்டி சங்கம் சேந்து சாமான் வாங்கிப் போட்டு பொட்டி முடஞ்சு வித்து லாவம் காணுவமின்னா, தனி முதலாளிய வியாபாரம் எப்படியாவும்? நாலாளுக்குக் காசு அதிகம் குடுத்துத் தன் வசம் இழுத்துக்கிட்டான். சங்கம் பிரிஞ்சு போச்சு தம்பி. நீ பெரியவங்க கிட்டல்லாம் பேசுறவ, தொடர்பிருக்கின்னு சொல்லிக்கிறா. இந்தத் தொழில் எங்க வயித்துக்கு அரைக்கஞ்சி வார்க்கும் தொழில். பனஓலை, நாரு, மூங்கில் எல்லாம் நியாய விலைக்கு எங்களுக்குக் கிடைக்கிறாப்பல பண்ணினீன்னா கையெடுத்துக் கும்பிடுவம். ஓட்டுக் கேக்க எப்பமோ கச்சி கச்சியா கொடி போட்டிட்டு வாராவ. ஓட்டப் போடுங்க. ஒங்கக்கு எல்லாஞ் சேஞ்சு தாரமின்னுதாவ. எதும் சரிவாரதில்லை. எங்க ஒழப்ப, அரை வெலய்க்கிப் போடுதோம் பசிக் கொடுமையில..."

இங்கெல்லாம் ராமசாமி தொழிற்சங்கக் காசு பிரிக்க வந்ததுண்டு. அந்த தொழிற்சங்கக் காசு - கட்டிட வாடகை, இரண்டொரு பேப்பர் வாங்கும் செலவு இவற்றுக்குக் கட்டி வருவது கூட கஷ்டம். தொழிற்சங்கத்துச் செயலாளன் பேச்சிமுத்து இங்குதான் இருந்தான். அவன் இந்தத் தொழிலையே விட்டுச் சென்று எங்கோ வியாபாரம் செய்கிறானாம்...

"என்ன தம்பி... பேசாம இருக்கியே? எங்க தொழில்ல பாஞ்சாலி கஷ்டப்படுது. அரைக்கஞ்சிக்கு முடியாம, பிள்ளியள உப்பு அறைவைக்கு அனுப்புறம். மாசி பங்குனிக் காலத்துல எங்க பொம்பிளக பண்பாட்டு வேலைக்குப் போயி ரெண்டு மூணு கொண்டாருவா, இப்ப அதுவுமில்ல..."

ராமசாமியைக் கிழவர் எல்லாச் சக்திகளையும் உள்ளடக்கிக் கொண்ட தூணாகக் கருதி முறையிடுகிறார். அவனோ எரிச்சலை விழுங்கிக் கொள்கிறான்.

"தாத்தா, உங்களுக்குள் ஒத்துமை இல்லாம கூட்டுறவு சங்கத்தையே உடய்க்கிறீங்க. பொறவு வெளியாளைக் கூப்பிடுறிய. ஒரு தொழிலாளி சங்கம்னா அந்தத் தொழிலாளிதாந் தலையா நிக்கணும். வெளியே இருக்கறவனைக் கூப்பிட்டா, அவன் ஒங்க தலையை மிதிச்சிட்டு ஏணி ஏறுவா. பொறவு அவனும் மொதலாளிமாரும் ஒண்ணு."

"அது சரித்தா? ஆனா இந்தக் கூறுகெட்ட தொழிலாளிகளுக்கு அதிகாரத்துல இருக்கிறவன்கிட்ட பேச என்ன வக்கிருக்கு? அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது? அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டியிருக்கு? அவன்னா போறா வாரா, எழுத்தெழுத பேச கொள்ள..."

அதுவும் நியாயம்.

படிப்பு இருக்கிறதா? இருந்தாலும் அறிவுக் கண்களனைத்தும் உப்பு உறிஞ்சிப் பீளை படரச் செய்து விடுகிறது.

அப்போது அவனை இனம்கண்டு கொண்டு ஏழெட்டு இளைஞர்கள் வந்து சூழ்கின்றனர். "வணக்கம் அண்ணாச்சி. பணம் பிரிக்க வந்திருக்கம். அம்மன் கொடை, தாராளமாப் போடணும்..." முகமே தெரியவில்லை. குரல்கள் தாம் இசக்கிமுத்து, பரிமளம், கிருட்டினன் என்று அறிவிக்கின்றன.

"வயிறு கூழுக்கழுகிறது. அம்மனாவது, கொடையாவது?" என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் 'தப்பு தப்பு' என்று அபராதம் வேண்டுகிறான். "வெடலப் பிள்ளைய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசிப் படி அஞ்சு ரூவான்னு விக்கி. ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது, ஆத்தா கருணைதான?" ராமசாமிக்கு எரிச்சல் இன்னும் கிளர்ந்து மண்டுகிறது.

அரைக்கஞ்சி அவள் கருணை; பட்டினி அவள் கருணை; அறியாமை, மௌட்டீகம் அவள் கருணை. அடுத்தவனை நம்பி, அவன் அமுக்கிட்டு மேலேறுறதும் நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டுச் சாவுறதும் கூட அவ கருணை தா. செய்...!

அவன் சைக்கிளைத் தள்ளி ஏறி மிதித்துக் கொண்டு போகிறான்.

அத்தியாயம் - 14

ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மை சூட்டில் சில்லென்று பன்னீர்த்துளிகள் போல் அவர்கள் அனுபவிக்கும் 'கொடை' நாட்கள். 'பனஞ்சோலை' அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது. 'கண்ட்ராக்ட்' தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து ரூபாய் 'போனஸ்' எனப்படும் சம்பளம் உண்டு.

பொன்னாச்சிக்கு வேலைக்குச் சேருகையில் செங்கமலத்தாச்சி 'போனஸ்' என்ற சொல்லை உதிர்த்ததும் தான் ஆவலோடு அதை நினைத்து மகிழ்ந்ததும் நினைவிருக்கிறது. ஆனால் அவள் 'கண்டிராக்ட்' கூலியாதலால் அந்தச் சலுகை கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

மருதாம்பாளின் அளத்தில் விடுப்பும் கிடையாது; உபரிப் பணமும் கிடையாது. அவள் வழக்கம் போல் வேலைக்குப் போய்விட்டாள்.

அறைவைக் கொட்டடிச் சிறுவர்களுக்கு ஐந்தைந்து ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பச்சைக்கு மிகவும் மகிழ்ச்சி.

அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள தொழிலாளர் தெருவிலுள்ள முத்தாலம்மன் கொடை அந்தப் பக்கத்தில் பிரசித்தம். அந்தக் குடியிருப்பின் வீடுகள், பொருளாதார நிலையில் அடிமட்டத்திலுள்ள மக்கள் உப்பு மணற்காட்டில் வாழுவதற்கான நிழலிடங்கள் என்பதைச் சொல்லாமல் விள்ளும் திறனுடையவை. ஆனால் வேப்ப மரத்தினடியில் சதுரக் கட்டிடமாக விளங்கும் முத்தாலம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கும் செய்நேர்த்திகள் நடந்தேறும். இந்த ஆண்டும் கோயிலின் சுவர்களில் பச்சை வண்ணமும், சிவப்பு வண்ணமும், மஞ்சள், நீல வண்ணங்களும் கொண்டு பிச்சைக்கனி தன் கை வண்ணத்தைச் சித்திரம் தீட்டிக் காட்டியிருக்கிறான். அம்மன் கொடைக்கு, எப்படியேனும் காசு பிரித்து விடுவார்கள். தொழிலாளிகள் அதை மட்டும் கொடுக்கத் தவற மாட்டார்கள்.

இந்த நாட்களில் பெண்கள் சீவிச் சிங்காரித்துக் கொண்டு மஞ்சளும் பசுமையுமாக மணலில் பாடிக் களிப்பார்கள். பொரி கடலை, சிறு தீனிகள் காணும் மகிழ்ச்சியில் பிள்ளைகள் கொண்டாட்டமாக மகிழ்வார்கள்.

பெட்ரோமாக்ஸ், மைக்செட்டு என்று சுற்றுப்புறம் விழாக்கோலத்தில் முழுகிப் போகும். தோரணங்கள் கட்டப்பெற்ற பந்தலின் பக்கங்களில் பொங்கல் அடுப்புக்களில் மஞ்சளும் குங்குமமுமாகப் பானை ஏறும். கிடாவெட்டு, கோழிக்காவு என்று சக்திக்கேற்ப பிரார்த்தனைகளை நிறைவேற்ற அந்த எளிய மக்கள் கூடுவார்கள். சந்தனமும் மல்லிகையும் அரளியும் அம்மன் சந்நிதியில் கலகலக்கும். வேலையும் கூலியும் உண்டு என்றாலும் இந்தக் கொடை நாளில் அளத்துக்குச் செல்லாமல் 'விழா மகிழ்ச்சிக்கு' வரும் ஆண்கள் அதிகமானவர் உண்டு. ஏனெனில் இந்த நாட்களில் 'தாகந் தீர்த்துக்' கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். அதுவே விழா.

பொன்னாச்சியின் அப்பன் முதல்நாள் மாலையே பச்சையைக் கூட்டிச் சென்றுவிட்டான். டீக்கடைக்காரருக்கு நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதில் அவனுக்குக் கையில் 'துட்டு'க் கிடைக்குமாம். சின்னம்மா அன்று காலையில் வேலைக்குச் செல்லுமுன் அவள், ஏமாற்றமும் நிராசையுமாக, 'மொதல்ல சொன்னா போனசு உண்டுன்னு. இப்ப ஒண்ணில்ல... எனக்கும் ஒங்கபக்கமே சோலி இருந்தாப் பாரும்..." என்று கூற வந்தவள் நாவைக் கடித்துக் கொண்டாள்.

'அட்வான்ஸ்' பெற்ற தொகை, துருப்பிடித்த ஆணியாகக் கூர்முனையைப் பதித்து வைத்திருக்கிறதே? அதை உருவித் தள்ளினாலல்லவோ சிக்கல் விடும்?

ராமசாமியை அவள் ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. ஆனால் சோலை எப்போதும் போல குடித்துவிட்டுத் திரிகிறான். நாச்சப்பனோ சிறிதும் அச்சமின்றிச் சொற்களைக் கொட்டுகிறான். அழகு மட்டும் சாடையாக முதல் நாள் தான் அவன் வேலையை விட்டு நின்றுவிட்டதாகக் கூறினான். அவளுக்கு ஆதாரமே போய்விட்டாற் போல் ஓய்ந்து போனாள். எப்போதேனும் வாயைப் பிடுங்கும் பேரியாச்சி கூட முத்துக் கொறிக்கவில்லை.

அவனில்லாமல், அந்த அளத்தின் ஈரமற்ற தனிமையில் எவ்வாறு மடை தாண்டப் போகிறாள்? அவள் சந்தையில் வைத்து 'அதைச்' சொல்லிவிட்ட பிறகே அவன் பழைய ஆளாக இல்லை. அவளே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாளோ? அவனது முக மலர்ச்சிச் சூரியனில் அவள் ஊசியைக் குத்தி இருளச் செய்து விட்டாள்...

உள்ளம் தன்னைத் தானே பிடுங்கிக் கொண்டு ரணகளரியாகிறது. இந்த ஆடி மாசத்தில் எல்லா ஊர்களிலும் அம்மன் கொடை வரும். அவர்கள் ஊரில் கூடக் 'கொடை' சித்திரையில் அமர்க்களப்படும். "ஊர்க்காரனுவளுக்குத் தண்ணி போட்டு ஆடுறதுக்குக் கொடை!" என்பார் மாமா. "சாமி பேரைச் சொல்லிக் கடனை உடனை வாங்கிக் குடிச்சித் தொலைக்கறானுவ" என்பார்.

பாஞ்சாலி, சரசி எல்லோரும் பிற்பகலே விழாவுக்குப் போய்விட்டார்கள். சின்னம்மாவும் இல்லை. சொக்குவும் வேறெங்கோ கடை போட போய் விட்டாள். வளைவே அமைதி படிந்து மௌனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. பொன்னாச்சி சேலைக் கிழிசல் ஒன்றைத் தைத்துக் கொண்டிருக்கிறாள்.

நைந்த குரல் ஒன்று ஆதாரமற்ற மெல்லிழையாய் அலைந்து கொண்டு அவள் செவிகளில் விழுகிறது.

"தும்பப்பூ வேட்டியுடுத்து..." என்ற குரல் ஒப்பாரி, செங்கமலத்தாச்சியின் குரல் தான்.

பொன்னாச்சி திடுக்கிட்டாற் போல் கூர்ந்து செவிமடுக்கிறாள். அவள் மிடுக்காகப் பேசியே இதுவரை கேட்டிருக்கிறாள். யாரும், எதுவும் பொருட்டில்லை என்ற அலட்சியப் பாவத்தையே அவள் முகத்தில், பேச்சில், பொன்னாச்சி கண்டிருக்கிறாள். வந்த புதிதில் அவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள் என்று பொன்னாச்சி மதித்திருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அது மெய்யில்லை என்று தூக்கியெறிந்து பேசுவதை அறிந்து கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு கருவக்காரி - ஆணவம் கொண்டவள் - 'பவுர்' உள்ளவள். மகன் செத்தது கூடத் தெய்வம் தந்த கூலி என்ற பொருள்பட, சொக்குவும் மற்றவர்களும் கருத்துரைத்து அவள் மறைவாகக் கேட்டிருக்கிறாள். ஆனால் முகத்துக்கு முன் எல்லோரும் அந்த ராணிக்குக் குழைவார்கள்.

அவள் நீட்டி நீட்டி ஒப்பாரி வைக்கிறாள்? அவளுக்குச் சொந்த பந்தம் என்று யாரேனும் இறந்து போய்ச் செய்தி வந்திருக்கிறதா என்ன?

ஊசி நூலை வைத்துவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு பொன்னாச்சி முற்றத்துக்கு வருகிறாள். சன்னல் வழியாக அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.

செங்கமலத்தாச்சி சிவப்பு, அல்லது கறுப்புச் சேலை தான் முக்காலும் உடுத்தி அவள் பார்த்திருக்கிறாள். அன்று கறுப்புச் சேலை உடுத்தியிருக்கிறாள். பாம்படக் காது தொங்க, அள்ளி முடிந்த கூந்தலின் பிசிறுகள் தொங்க, ஆச்சி சோகக் குடம் உடையப் புலம்புகிறாள்.

"பறக்கும் பறவைகளே... பாதை போகும் மானுடரே...!
இறப்போர்க்கு உயிர் கொடுக்கும் எம்மவனைக் கண்டதுண்டோ..?
ஒ... ஒ... ஒ...
பாவி பயல் பாம்பனாறு பாவோட்டம் இல்லையா
பாய் போட்டா மல்லாந்தா படுத்தாப்பல ஒறங்கிட்டா...!"

கடைசியில் அடிவயிற்றை அள்ளிக் கொண்டு வரும் சோகம் ஆதாரமற்ற பெருவெளியின் இழையாக உயர்ந்து அலைந்து பாய்கிறது. பொன்னாச்சியை அந்தச் சோக அலைகள் தொட்டசைத்து நெஞ்சுருகச் செய்கின்றன.

"சிவத்தாச்சி" என்று ஊரும் உலகமும் குறிப்பிடும் இந்தப் பெண் பிள்ளைக்கு மற்றவர்களோடு என்ன தொடர்பு? இங்கே வந்து குந்தி வெற்றிலை போடும் முத்திருளாண்டி, பிச்சைக்கனி ஆகியோருக்கும் இவளுக்கும் என்ன உறவு? ஆச்சி ஊர்க்காரர் செம்பையும் பித்தளையையும் வாங்கி வைத்துக் கொண்டு வட்டி வாங்கி யாருக்காகத் தொழில் செய்கிறாள்? யாருக்காகப் பெட்டி முடைகிறாள்.

"பாய் போட்டா மல்லாந்தா...
படுத்தாப்பல ஒறங்கிட்டா...
படுத்தாப்பல ஒறங்கிட்டானே...!"

ஆச்சி புலம்பிப் புலம்பிக் கைகளை விரித்து விரித்து அந்தப் படத்தைப் பார்த்துக் கண்ணீர் பெருக ஓவென்று அழுகிறாள். பொன்னாச்சிக்கு நெஞ்சு குழைய, நா ஒட்டிக் கொள்கிறது. அவள் வாயில் வழியே உள்ளே செல்கிறாள்.

"போயிட்டானே... போயிட்டா..."

நெஞ்சம் துடிக்க, சோக அலைகள் புகைந்து புகைந்து எழும்புகின்றன. பொன்னாச்சி அவள் கவனத்தைக் கவரும் வண்ணம் முன்னே போய் நிற்கிறாள். அவள் கைகளைப் பற்றி கொள்கிறாள்.

"வாணாச்சி... அழுவாதிய... வாணா..."

"இன்னைக்கித்தா அவெ போனா. நாலு வருசமாச்சி. அம்மன் கொடை, மைக்கு செட்டுக் கொண்டாரணுமின்னு போனா... வாரவேயில்ல..."

"ஆசைக்கிளி வளர்த்தே... அக்கரயா நாய் வளர்த்தே..." உள்ளம் குலுங்கக் குரல் சோகச் சுவர்களை உடைத்துக் கொண்டு முடிவில்லாமல் பரவுகிறது.

பொன்னாச்சிக்கு நா எழவில்லை. மேலே படம் இருக்கிறது. பால் வடியும் குழந்தை முகம். வளைத்து வாரிய கிராப்பு. பட்டுக் குஞ்ச மாலையணிந்து பார்க்க வருபவர்களை எல்லாம் பார்க்கும் முகம்.

"பாவம்... ஒடம்பு சொகமில்லாம இருந்துதா ஆச்சி?"

"ஒண்ணில, பூமலந்தாப்பல என்னய்யா கெடந்தா, தேரி மண்ணில. காத்துக் கருப்பு எப்பிடி அடிச்சிச்சோ. என்னய்யா, ஈயக்கூட நசுக்கமாட்டா..."

கண்ணீர் முத்துக்கள் கன்னங்களை, சதையின் பற்று விட்டுச் சுருங்கிய தோலில் இறங்கிக் கீழே சிதறுகின்றன.

அங்குள்ள கடிகாரம், அவன் கல்லூரி வாழ்வின் படங்கள், அவன் புத்தக 'ஷெல்ஃப்' மேசை விளக்கு, இப்போது 'ரிப்பேராகி' விட்ட அந்த 'டிரான்சிஸ்டர்' எல்லாமே அந்தச் சோகத்தின் மௌனக் கூட்டாளிகளாக விளங்குகின்றன. அந்த மௌனப் போர்வையை விலக்க மனமில்லாமலே அவள் நிற்கிறாள். எத்தனை நேரமாயிற்றென்று தெரியவில்லை. சிறையை விட்டு வெளி வரவும் இயலாமல் உள்ளிருக்கவும் இயலாமல் அவள் குழம்பித் தவிக்கையில் வாயிலில் நிழல் தட்டுகிறது. அடியோசை கேட்கிறது.

"யாரு?"

அவள் வெளியே எட்டிப் பார்க்கிறாள்.

நெஞ்சம் குபீரெனப் பால் சொரியப் பூரிக்கிறது.

"நீங்க இங்கத்தா இருக்கிறியளா?"

"ஆமா..." என்ற பொன்னாச்சி அவனை நோக்கும் விழிகளில் மத்தாப்பு ஒளி சிந்த நிற்கிறாள். பிறகு சட்டென்று தன்னுணர்வுக் கிறங்கி, உள்ளே திரும்பி, "ஆச்சி, ஆரோ வந்திருக்காவ!" என்று அறிவிக்கிறாள்.

ஆச்சியும் கட்டிலிலிருந்து திரும்பி வாயிற்படியில் அவன் நிற்பதைப் பார்க்கிறாள்.

"யாருல...? வா... வந்து உட்காரு? யாரத் தேடி வந்தேல...?" என்ற சொற்களால் அவனை வரவேற்பவள் அவனை விழிகளைச் சுருக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறாள்.

அவன் புன்னகையுடன் மீண்டும், "நீங்க இங்கத்தா இருக்கியளா?" என்று கேட்டுக் கொண்டு சிவத்தாச்சி காட்டிய பெஞ்சியில் அமர்ந்து கொள்கிறான்.

"யாரு? என்னியா கேக்கே? நா எம்புட்டு நாளாவோ இங்கத்தா இருக்கே. நீ எந்தப் பக்கம்...?"

"செவந்தியாபுரம்... சாத்தப்பன்னு இருந்தாவளே தொழில் சங்கக்காரரு, கேள்விப்பட்டிருக்கியளா? அவரு மகன்... ராமசாமி..."

மந்திரச் சொல்லால் கட்டுண்டாற் போல் செங்கமலம் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். மௌனம் மீண்டும் தன் கனத்த திரையைப் போட்டு விடுகிறது.

பொன்னாச்சியோ கரை கட்டிய மேடெல்லாம் கரையத் தத்தளிக்கிறாள். இவர் எதற்கு வந்திருக்கிறார்...? அவளைத் தேடித்தான் வந்திருக்கிறார். கோபமில்லை, கோபமேயில்லை...

அவள் வீட்டுக்குத் திரும்பப் பரபரத்து முயலுகையில் ஆச்சியின் குரல் அவளை இழுக்கிறது.

"ஏட்டி? எங்கே ஓடுத? ந்தா, மூலக்கடயில போயி பத்து காசி பாக்கு வெத்தில, பொவயில, ரெண்டு வாளப்பளம் வாங்கிட்டு வா!" என்று இடுப்பில் எந்நேரமும் செருகியிருக்கும் பையை எடுத்து, ஒரு ரூபாய்த்தாளை அவளிடம் கொடுக்கிறாள்.

அது அவளை விரட்டுவதற்காகச் செய்யும் தந்திரமா, அல்லது மீண்டும் வரவழைப்பதற்கான சாக்கா என்று புரியவில்லை.

பொன்னாச்சி உளம் துளும்பத் தெருவிலிறங்கி நடக்கிறாள்.

"சாத்தப்ப மவனா நீயி? பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளக்காரனா?"

"தெரிஞ்சு வச்சிருக்கீங்களே?" என்று அவன் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு மாறாமலே, "ஆனா இப்ப இல்ல. சீட்டக் கிளிச்சிட்டாங்க!" என்று நிறுத்துகிறான்.

அவள் திடுக்கிடவில்லை. அதை அவள் செவிகளில் ஏற்றதாகவே தெரியவில்லை.

"ஒன்னாத்தா சவுரியமாயிருக்கா?"

"இருக்கு, வீட்டக்காலி பண்ணிப் போடுன்னாவ முன்னயே. இப்ப வேலயுமில்ல, இனி வேற எந்தத் தாவலன்னாலும் சோலி பாக்கணும். வீடும் இங்க எங்கனாலும் கிடக்கிமான்னும் வந்தே..."

"பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளம் வாங்கினேன்னே, என்ன தவராறு? அன்னன்னு கூலின்னாதா தவராறு வரும்..."

"நீங்க நெனைக்கிறாப்பல இல்ல ஆச்சி. இந்த உப்பளத் தொழிலாளிய, தங்க நிலைமை சீராகணும், மின்னேறணும்னுற விழிப்பு உணர்ச்சியே இல்லாம இருக்காவ. அதுவும், பொண்டுவள..."

அவன் குரல் கம்மிப் போகிறது.

"இப்பதா முதலாளி சீமைக்கெல்லாம் போயி வந்து தொழிலை விருத்திக்குக் கொண்டு வந்திருக்கா, 'நாகரிகமா நடக்கா'ன்னல்லாம் சொல்லிக்கிறாவ. பனஞ்சோல அளத்துல ரோடு கொட்டடி போட்டு கோயில் எல்லாம் கட்டியிருக்காவன்னு சொன்னா... நாம் பாத்தனா கொண்டனா? கேள்விதா..."

அவளுடைய கண்கள் சூனியத்தில் நிலைக்கின்றன.

"அதென்னமோ நெசந்தா. மொதலாளிய ரொம்ப விருத்திக்கு வந்திட்டாவ. மிசின் எல்லாஞ் செயிது. ஆனால் தொழிலாளி மிசினுக்குப் போட்டியா உப்பு வாருறா... அது இருக்கட்டும். கணக்கபிள்ள, கங்காணினு இருக்கிறவ ஆருதா பொம்பிளய கவுரமா நடத்தறா? இவனுவ வாயில செறுக்கிவுள்ளன்னுதா வரும். அம்மன் கொடையின்னுறா; ஆதிபராசத்தின்றா, அளத்துக்கு வர பொண்டுவள அக்கா தங்கச்சி, ஆத்தா போல நெனக்கணும்னு அறிவு இல்ல. வயித்துக் கொடுமை, பொஞ்சாதி புருசனும் வேல செஞ்சாக் கூட அவன் கண்ணுமுன்ன இவனுவ நாக்கில நரம்பில்லாம பேசுதா. எனக்கு ஏன் வேல போச்சி? இந்த அக்கிரமத்தைக் கேட்டேன். சீட்டைக் கிளிச்சிட்டாங்க. முதலாளிய ஆயிரம் பேராயில்ல. ஆனா, உப்பளத் தொழிலாளிய ஆயிரமாயிரமா இருக்கம். முதலாளிகளுக்கு சக்திய நாம தான் கொடுக்கிறம். இது புரியலியே யாருக்கும்? நாம எதுனாலும் போய்ச் சொன்னா 'போலே' இந்த அரவயித்துக் கஞ்சியும் கிடைக்காம போயிரும். ஏதும் சொல்லிக் குலைக்காதே'ன்னு அஞ்சிச் சாவுறா..."

"மெய்தா. கங்காணி கணக்கப்பிள்ளையாவணும்னு நினைக்கா. கணக்கப்பிள்ளை முதலாளிக்கு ஏஜண்டு. துட்டுக் குடுத்தா சொந்த பந்தத்தையே கொலை செய்யத் துணியிறா. முள்ளுக்குள்ள சிக்கிட்டா வெளியே வார முடியறதில்ல. முள்ளுக் கிழிஞ்சாலும், ரத்தம் வந்தாலும் பூவுண்ணு நினைச்சிட்டிருக்கணும்..."

பொன்னாச்சி வெற்றிலை பழங்களுடன் வருகிறாள்.

கட்டிலுக்கடியில ஓரத்தில் ஒரு பனையோலைத் தட்டு, மாங்காய்த் தட்டி இருக்கிறது. அதை எடுத்து அதில் வெற்றிலை பாக்கு பழத்தை அவள் வைக்கிறாள்.

"ஏட்டி, உள்ளாற போயி அடுப்பில ரெண்டு செத்த போட்டு காபித் தண்ணி வையி. தாவரத்தில் காபித் தூளிருக்கி, பானையில கருப்பட்டி இருக்கி, கிளாசில இறுத்துக் கொண்டா!" என்று ஏவுகிறாள்.

"பழம் எடுத்துக்கலே..." என்று ஆச்சி தட்டை அவனுக்கு நகர்த்துகிறாள்.

பொன்னாச்சி ஆகாயத்தில் பறக்கிறாள். இவர் இவளுக்குச் சொந்தமா? சிநேகமா? செவத்தாச்சி முட்களின் நடுவேயுள்ள இனிப்புக் கனியோ? இந்த ஆச்சியும் சின்னம்மாவைப் போல்... அவளைப் போல்... ராமசாமியைக் கண்டதும் உள்ளம் ஏன் இப்படிக் குதிக்கிறது? தேவதேவியர் பூச்சொரிவது போல் ஒரு குளிர்மை; அப்பனும் குழந்தைகளும் விழாவுக்குச் சென்ற பிறகு, சின்னம்மா வேலையை விட்டு இன்னும் வராமலிருக்கும் இந்த நேரம்...

"இந்த வுள்ள ஒங்க உறமுறையா?"

பழத்தை உரித்து தின்று கொண்டு அவன் கேட்கிறான்.

"இல்ல... ஆமா. எல்லா ஒறமுறதா. எல்லா ஒறமுற இல்லதா. இந்த வளவில இருக்கா. ஆத்தா செத்துப் போயிட்டா. அப்பன் அவ இருக்கறப்பவே இன்னொருத்தியத் தொடிசி வச்சிட்டா. அவதா சின்னாத்தா. பொம்பிளக்கு ஒருமுறை எது, எது ஒருமுற இல்ல? அம்மயப்பன் அண்ணந் தம்பி பெறந்த எடம் எதும் ஒருமுற இல்லாம போயிடுது. கலியாணமுன்னு ஒருத்தன் வந்திட்டா பெறந்த இடம் நீ யாரோ நானாரோ! இந்தப் பாத்திக் காட்டு வேக்காட்டில பொம்பிளக்கி மனிச ஒறவு ஏது? எங்கியோ வாரா, யாருக்கோ பெத்து யாருக்கோ கொடுக்கா... ம், அது கெடக்கட்டும்ல, ஒனக்குக் கலியாணம் காச்சி ஆயிருக்கா?"

அவன் பிரமித்துப் போனாற் போல் உட்கார்ந்திருக்கிறான்.

"ஏன்ல...? கலியாணம் கட்டியிருக்கியா?"

"இல்ல..."

"ஏ? ஒரு தங்கச்சி இருந்து அதும் செத்திட்டுன்னு சொன்னாவ. பொறவு ஓ ஆத்தாக்குத்தா ஆரிருக்கா! காலத்துல ஒரு கலியாணம் கெட்டண்டாமா?"

அப்போது பொன்னாச்சி வட்டக் கொப்பியில் கருப்பட்டிக் காபி எடுத்து வருகிறாள்.

செங்கமலம் அதை வாங்கி அவன் முன் வைக்கிறாள்.

"குடிச்சிக்கவே..."

அவன் அதைப் பருகுகையில் பொன்னாச்சி வாயிற்படிக்கருகில் நின்று அவனைப் பார்க்கிறாள். மாலை குறுகும் அந்த நேரத்தில் அவளை மின்னற்கொடியே தழுவியிருப்பது போல் தோன்றுகிறது.

"வெத்தில போடுவியால?"

"போடுறதில்ல..."

"உங்கய்யா வெத்தில இல்லாம ஒரு நேரம் இருக்கமாட்டா..." அவள் காம்பைக் கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு உதிர்க்கும் அந்தச் சொற்களில்... போகிற போக்கில் மருமங்கள் பற்களைத் திறந்து உட்புறம் காட்டினாற் போல் அவன் குலுங்கிக் கொள்கிறான். அவன் ஏதும் வாய் திறக்கு முன் பேச்சு மாறி விடுகிறது.

"இப்ப வூட்டுக்குத்தாம் போறியா? கொடைக்கிப் போவலியா?"

"நம்ம கொட இப்ப பெரிசாயிருக்கு. மூணாந்தெருவில ஏதோ வூடிருக்குன்னாவ. வித்துமூடைத் தரகனார் வெள்ளச்சாமியிருக்காரில்ல? அவெ சொன்னா. இப்படீ வாரப்ப, இந்தத் தெருவளவுல இந்தப் புள்ள இருக்கறதாச் சொன்ன நெனப்பு வந்தது. நொழஞ்ச..."

"ஒங்கக்கு ரொம்ப சிநேவம் போலிருக்கு..."

அவன் மனம் மலர்ந்து சிரிப்பு பொங்குகிறது.

"அப்படியெல்லாம் இல்லாச்சி. அவ என்னியோன்னு நினச்சிப் போடாதிய ஆச்சி? நாச்சப்ப கண்ட்ராக்டுகிட்ட செருப்புக்காலத் தூக்கி உதச்ச ஒரே பொம்பிள! இம்பட்டும் தெரிஞ்ச பெறகு ஒங்ககிட்ட சொல்றதுக்கென்ன? இவளுக்காவத்தா நா சண்ட போட்ட அவங்கூட. மொதலாளி எதிரில மோதிட்ட..."

"அப்ப, இவளுக்காவ மொதலாளிகிட்ட மோதிட்டேன்னா, சிநேகம் ரொம்பத்தா? கெட்டிச்சிப் போடு. அவக்கும் யாருமில்ல. அப்பன் சுகமில்ல. கண்ணுவெளங்கல. சம்பாதனை இல்ல, ஆனா நப்பாசை போகல. பொட்டக்கண்ண வச்சிட்டு இப்ப கொடை பாக்கவா போயிருக்கா? குடிக்கத்தா போயிருக்கா. அவ பொம்பிள, ஆறு மணிக்கு மேல அரவமில்லுல சோலி எடுத்தா ரெட்டிப்புக் கூலி வருமேன்னு போயிருக்கா. பத்துக்கோ பதினொண்ணுக்கோ செத்துச் சுண்ணாம்பா வருவா. கலியாணத்தை முடிச்சி வய்க்கலாம்ல..."

பொன்னாச்சிக்கு அன்றிரவு அப்பன் குடிபோதையுடன் வந்ததோ, சின்னம்மா வந்து கத்தியதோ நடந்ததாகவே நினைவில்லை. அவள் மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள்.

அத்தியாயம் - 15

பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது.

"கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப் பாரும்! எந்திரிம்..."

பொன்னாச்சிக்குக் கருக்கரிவாள் பாய்ந்தாற் போல் தூக்கி வாரிப் போடுகிறது.

ஐயோ... பச்சை... பச்சையா? பச்சை வரல...? அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். பாஞ்சாலி, சரசு, நல்லகண்ணு, மருது எல்லோரும் இருக்கின்றனர். பச்சைதானில்லை.

"பச்சை எங்க சின்னம்மா?..."

"எங்கயா? அதா குந்தியிருக்காளே, அப்பங்கிட்டக் கேளு! அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா! தண்ணி கொண்டாரானாம் டீக்க்டய்க்கு! பொட்டக்கண்ண வச்சிட்டுத் தடவுறிய. சாமி கூலி குடுத்தது பத்தாது? அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு. நாயித்துக் கெளம அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா!... போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்?..."

உரலில் அரைத்துக் கொண்டிருக்கும் சொக்குவுக்கும் கை ஓட்டம் நின்று போகிறது. அவள் புருசன் எழுந்து நின்று இந்தச் சண்டையை ரசிக்கிறான்.

பாஞ்சாலி வாளியும் கயிறுமாகத் தண்ணீருக்குப் போகிறாள்.

நேத்துக் காலம அப்பன் செல்வதற்கு முன்பே பச்சை ஓடிவிட்டான். அவனைப் போலீசில் கொண்டு போனதால் தான் அவன் வரவில்லை. இப்படியும் ஒரு அப்பன் பழக்குவானா?

"சின்னம்மா, ஒங்கக்கு இப்படிச் சந்தேகம் வந்தப்பவே ஏன் சொல்லாம இருந்திட்டிய? அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே?..." என்று ஆற்றாமையுடன் பொன்னாச்சி வருந்துகிறாள்.

"பொறவு சின்னாச்சி அடிச்சித் தெரத்திட்டான்னு ஊர் ஏசும். நாங்கண்டனா இவெக்குப் பட்டும் புத்தி வரலன்னு?"

"அவன் போலீசுக்கொண்ணும் போயிருக்க மாட்டா. டீக்கடைச் சம்முகம் நல்ல தண்ணி கொண்டாரச் சொன்னா. நீ ஏன் சொம்மா எதயானும் நினச்சிட்டுக் கூப்பாடு போடுத?"

சின்னம்மா அவன் முகத்தில் இடிக்கிறாள்.

"நீரு பேசாதீம்...! எனக்கு அக்கினிக் காளவாயாட்டு இருக்கு. இப்ப போயி அந்தச் சம்முகத்தக் கேப்பீரோ மம்முவத்தைக் கேப்பீரோ! பிள்ள போலீசில அடிபடுறானான்னு பாத்து ஒம்ம தலைய அடவு வச்சானும் கூட்டிட்டு வாரும்! இல்லாட்டி இங்ஙன கொலவுழுகும்!" என்று அனல் கக்குகிறாள்.

அந்தக் கடை, உப்பளத்துத் தொழிலாளர் குடியிருப்புக்களோடு ஒட்டாமல், ஆனால் பாலைவனத்திடையே ஓர் அருநீர்ச்சுனை போல் பாத்திக் காடுகளிலிருந்து வருபவர் விரும்பினால் நா நனைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்ததைப் பொன்னாச்சி அறிவாள். முன்பு ஒருநாள் ராமசாமி அங்குதான் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவர்களுக்கு. அங்கு இந்தத் 'தண்ணி'யும் கிடைக்குமோ?

இவர்கள் குடியிருப்பின் பின் பக்கம் முட்செடிக் காடுகளின் வழியாகச் சென்றால் குறுக்காகச் சாலையை அடையலாமென்று பாஞ்சாலி சொல்வாள். ஆனால் அவர்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றதில்லை. அப்பன் கழி ஊன்றிக் கொண்டு அங்குதான் இயற்கைக் கடன் கழிக்கச் செல்வான்.

இப்போது அந்தக் கழியை எடுத்துக் கொடுத்து சின்னம்மா அப்பனை விரட்டுகிறாள்.

பொன்னாச்சிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

சென்ற வருஷங்களில் போலீசின் கொடுமைகளை எல்லாம் பற்றிப் பேப்பரில் எழுதியிருந்ததென்று பேசிக் கொண்டார்கள். போலீசில் அடித்துக் கொன்றே இழுத்து விடுவார்களாம். மாமி அதனால் தான் கல்லூரியில் போலீசென்றதும் மாமாவிடம் எப்படியேனும் கடன்பட்டுப் போய்ப் பிள்ளையைக் கூட்டி வரச் சொன்னாள். தம்பியைப் போலீசு அடிப்பார்களோ? 'நகக்கண்களில் ஊசியேற்றல், முதுகின் மேலேறித் துவைத்தல்...'

இதெல்லாம் நினைவுக்கு வருகையில் இரத்தம் ஆவியாகிப் போனாற் போல அவள் தொய்ந்து போகிறாள்.

சின்னம்மா அப்பனை விரட்டிய பிறகு அவளிடம், "நீ இன்னக்கி வேலய்க்கிப் போகண்டா. பிள்ளையல்லாம் பதனமாப் பாத்துக்க. நான் துட்டுத் தந்திட்டுப் போற; சாங்காலமா நல்லக்கண்ணுவக் கூட்டிட்டுப் போயி வெறவு வாங்கி வந்து வையி. இப்ப ரெண்டு சுள்ளி கெடக்கு. இருக்கிற அரிசியப் பொங்கி அதுங்களுக்குப் போடு" என்று கூறி விட்டுப் போகிறாள்.

பொன்னாச்சிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. முன் வீட்டில் கதவு திறக்கவில்லை.

சின்னம்மா அலுமினியம் தூக்குடன் வேலைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டே அவள் வாயிலில் நிற்கிறாள்... பாவம், இரவு பகலாகக் கூலிக்கு உடல் வஞ்சனையின்றி உழைக்கிறாள். இந்தக் குடிகார அப்பனுக்கு இவ்வளவு உண்மையாக உழைத்துத் தேய்ந்து போகிறாள். அழுக்குப் பனியனும் கிழிந்த கால்சராயுமாகத் தெருவில் காணும் உருவங்களில் அவள் கண்கள் பதிந்து மீள்கின்றன. யார் யாரோ தொழிலாளர் வேலைக்குச் செல்கின்றனர். சாக்கடையோரம் நாய்கள், பன்றிகள், கோழிகள் எல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகவே அலைகின்றன. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெள்ளை வேட்டியும் சட்டையும் துண்டும் திருநீறும் குங்குமப் பொட்டுமாக வெள்ளைச்சாமித் தரகனார் போகிறார். அவர் வீடு இன்னோர் முனையில் இருக்கிறது. கோபியடித்த பெரிய வீடு. மாமனுக்குக் கூட அவரைத் தெரியும். அவருக்கு ஊரில் ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சொஸைட்டிக்குத் தீர்வை கொடுக்க அழுகிறான் என்று மாமா ஏசுவார். அவரிடம் போய்ச் சொல்லலாமா? என்ன சொல்வது?

சைகிள் விர்ரென்று போய் விட்டது.

"ஏட்டி, காலம வாசல்ல வந்து நிக்கே? சோலி யொண்ணுமில்ல?" என்று செங்கமலத்தாச்சி கட்டிச் சாம்பலும் கையுமாகப் பல் விளக்க வந்து நிற்கிறாள்.

"இல்லாச்சி. தம்பிய... தம்பியப் போலீசில புடிச்சிட்டுப் போயிட்டான்னு சொல்றாவ. அவ நேத்து காலம போனவ..."

"அதுக்கென்ன... டீ?"

இந்தக் கேள்வி அவளைச் சுருட்டிப் போடுகிறது. "இதென்ன புதுக் கதையா? இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொரு வழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு?"

"நா ஏந்தா ஊரவிட்டு வந்தனோன்னு இருக்கு, ஆச்சி, தம்பிக்கு ஒண்ணுந் தெரியாது..."

"வந்தாச்சி; இப்ப பொலம்பி என்ன பிரேசனம்?"

கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுகின்றன பொன்னாச்சியின் கன்னங்களில்.

"நா யாரிட்டப் போயிச் சொல்லுவ? சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா!"

"பொறவு நீ ஏ அழுது மாயுறே? அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும்! நீ உள்ள போயி சோலியப் பாருடீ!" என்று ஆச்சி அதட்டுகிறாள்.

மனிதர்கள் நிறைந்த காட்டில் இருந்தாலும் பாலை வனத்தில் நிற்பது போல் இருக்கிறது. அந்தத் தம்பி ஒரு நேரம் சோறில்லை என்றாலும் சவங்கிக் குழைந்து போவான். நினைவு தெரிந்த நாளிலிருந்து நோஞ்சானாக அவனை அவள் இடுப்பில் கூடச் சுமந்திருக்கிறாள். மாமி ஏசி அடித்து விரட்டினாலும் மாமிக்குத் தெரியாமல் குளக்கரைக்குச் சென்று அழும் அவனை 'அழுவாத தம்பி' என்று தேற்றியிருக்கிறாள். முனிசீஃப் வீட்டில் எந்தத் தின்பண்டம் கொடுத்தாலும் மறக்காமல் தம்பிக்கு இலையில் சுற்றிக் கொண்டு வந்து மாமியறியாமல் கொடுப்பாள்.

அவனைப் போலீஸ் அடிக்கையில் 'அக்கா, அக்கா' என்று கத்துவானோ?...

வாசலை விட்டுக் கொல்லைப்புறம் சென்று நிற்கிறாள். பாஞ்சாலி ஆச்சி வீட்டுப் பானையைக் கழுவுகிறாள். பாலையில் பிசாசுகள் போல் நிற்கும் தலை விரிச்சிச் செடிகளிடையே அப்பனின் உருவம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவனைக் காணவில்லை. வெயில் ஏறுகிறது. மருது அவள் சேலையைப் பிடித்திழுத்துப் "பசிக்கிதக்கா" என்று ராகம் வைக்கிறான். நல்லகண்ணு சந்தடி சாக்கில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவான்.

பானையில் சிறிது நீர்ச்சோறு இருக்கிறது. உப்பைப் போட்டு அதைக் கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள்.

முதல் நாள் விழாவில் வாங்கிய ஊதலைப் பிசிறடிக்க ஊதிக் கொண்டு மருது வாசலுக்குப் போகிறது. நல்லகண்ணுவைப் புத்தகம் பலகை தேடிக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்புகிறாள்.

சரசி பின்னலை அவிழ்த்துக் கொண்டு வாங்கியிருக்கும் புதிய பட்டுப்பூவை அணிந்து கொள்ள, "அக்கா சடை போடுறியா?" என்று கேட்கிறது.

"நீ வேலக்கிப் போவலியாக்கா?... எனக்கு ரெட்ட சடை போடறியா?" என்று பானையைக் கழுவிக் கொண்டு பாஞ்சாலி கேட்கிறது.

சரசியின் கூந்தலை வாரிப் பின்னல் போடுகையில் பாஞ்சாலி நாடாவுடன் வந்து உட்கார்ந்திருக்கிறது.

"பச்சை ஒங்க கூட வரலியா டீ...?"

"ஊஹும், அண்ணனக் காங்கலக்கா. அப்பச்சி கூட எங்களைப் பந்தல்ல குந்த வச்சிட்டுத் தேடிட்டுப் போனா. நாங்க கூத்துப் பாத்திட்டிருந்தம். இவங்கல்லாம் அங்கியே தூங்கிப் போயிட்டாவ. செவந்தனி மாமா மாமி வந்து "ஒங்காத்தா வந்திட்டா. வாங்க போவலான்னு" எளுப்பிட்டு வந்தா, அப்பதா அப்பச்சியப் பாத்த அம்மா ஏசுனா. போலீசு வந்து 'சரக்கு'க் கொண்டு வந்தவுகளப் புடிச்சிட்டுப் போயிட்டா. முன்ன கூட, அந்தா மாரியம்மா - பெரியாச்சி வீட்டுக்கு வருமே, அவ பய்யன் சுப்பிரமணியக் கூட போலீசல புடிச்சிட்டுப் போயிட்டாவ. பொறவு, அவ இருநூறு ரூவா, வச்சிட்டு வாங்கிட்டுப் போனா. மூக்கவேயில்ல. இப்ப சுப்பிரமணி இங்கல்ல. ஆர்பர்ல வேல செய்யப் போயிட்டா?" என்று அவளுக்கு தெரிந்த விவரத்தை எடுத்துரைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இருட்டுகையில் ஒளிக்கதிர் ஊசிகள் போல் ஏதேதோ யோசனைகள் தோன்றுகின்றன.

இருநூறு ரூபாய் யார், எங்கே எப்படிக் கொடுப்பார்கள்! அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள்? கையில் விறகுக்காகச் சின்னம்மா தந்த இரண்டு ரூபாய் இருக்கிறது.

அத்துடன் ஓடிப்போய் பஸ் ஏறி, மாமனிடம் சென்று கூறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாமனுக்குப் பெரிய கைகளைத் தெரியும். முனிசீஃப் ஐயா நல்லவர்.

இங்கே அப்பச்சியின் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. சின்னம்மா பாவம். அவள் என்ன செய்வாள்.

பிறகு... பாத்திக்காட்டு வேலைக்கு, அவளுடைய ஒரே ஆதரவான ஆளும் இல்லையென்றான பின் எப்படிப் போவாள்?

எனவே மாமன் வூட்டுக்குத் திரும்புவதுதான் சரி... அங்கே... அங்கே தான் இருக்கவேண்டும்.

பொன்னாச்சி மாமனிடம் சென்று கூறிவிடுவதென்று நிச்சயம் செய்து கொள்கிறாள்.

ஆனால் அதைச் சின்னம்மாவிடமோ, பெரியாச்சியிடமோ வெளியிடத் துணிவு இல்லை.

நிழல் குறுக வானவன் உச்சிக்கு வந்து ஆளுகை செய்கிறான்.

அப்பன் வரவில்லை. பொன்னாச்சி வேலைகளை முடித்து விட்டு முற்றத்துக்கு வருகிறாள். சொக்கு வீட்டில் புருசன் மட்டும் படுத்திருக்கிறான். வேறு அரவமில்லை. பாஞ்சாலி இரட்டைச் சடை குலுங்க, சரசியுடன் புளிய விதை கெந்தி ஆடிக் கொண்டிருக்கிறது.

"பாஞ்சாலி, வீட்டைப் பூட்டிட்டுப் போற. துறக்குச்சி வச்சுக்க. சின்னாச்சி வெறவு வாங்கியாரச் சொல்லிச்சி. பதனமாப் பாத்துக்க? மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா?"

அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அவள் விடுவிடென்று ஓட்டமும் நடையுமாக வருகிறாள். தெருக் கடந்து திரும்பி இன்னும் வீதிகளைக் கடக்கிறாள். கடைகளும் வியாபாரச் சந்தடிகளும் நெருங்கும் இடங்கள் வருகின்றன.

புரும்புரும் என்று தெருவை அடைத்துக் கொண்டு திரும்ப முனகும் லாரிகள், மணியடித்துச் செல்லும் ரிக்ஷாக்கள், சாக்கடை ஓரத்துத் தேநீர் கடைகளில் கறுத்த பனியனும், பளபளக்கும் கிராப்புமாகத் தென்படும் சுறுசுறுப்பான ஊழியர்கள், வடையைக் கடித்துக் கொண்டு கிளாசில் தேநீரைச் சுழற்றி ஆற்றிக் கொண்டு உதட்டில் வைத்து அருந்தும் தொழிலாளர், லாரியாட்கள், சிவந்த கண்கள், கொடுவாள் மீசைகள், கைலிகள், அழுக்குப் பனியன்கள் என்று அவளது பார்வை துழாவுகிறது. தம்பி இங்கெல்லாம் இல்லை.

அவன் இந்நேரம் வீடு திரும்பாமல் இருப்பானா? அவன் போலீசுக் கொட்டடியில் அடிபடுகிறான். இருநூறு ரூபாய் செலவு செய்தால் அவனை விடுவித்து வந்து விடலாம்.

மாமனைத் தேடிச் சென்று அங்கே அல்லிக்குளம் - பசுமை... மாமி ஏசினாலும் உறைக்காது... இருநூறு ரூபாய்... அம்மா...!

"ஏத்தா? எதிரே லாரி தெரியாம ஓடுற?"

அவளை அந்த முடுக்குச் சந்தில் ஒருவன் கையைப் பற்றி இழுக்கிறான். அவள் கையை உதறிக் கொண்டு ஒதுங்குகிறாள்.

சாக்கடை ஓரமாக, மூடப்பெற்றதோர் கடைப்படிகளில் ஒரு கூட்டம் இருக்கிறது. சில பெண்கள், சில ஆண்கள் - குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கையில் கடியாரமும் சற்று மிடுக்குமாக விளங்குகிறான்.

ஒரு பெண் அவனிடம் அழுது முறையிட்டுக் கெஞ்சுகிறாள். முடியை அள்ளிச் செருகிக் கொண்டு, தேய்ந்த கன்னங்களும் குச்சிக் கைகளுமாகக் காட்சி அளிக்கிறாள்.

"ஆசுபத்திரில புருசங் கெடக்கா, புள்ளய அஞ்சும் நாலுமா - நா மூணு நாளாச்சி அவியளுக்குச் சோறு போட்டு, ராவும் பவலுமா ஓடி வந்த. நாலு ரூவாக் கூலி குறைச்சிருக்கிய. நா என்ன சேவ... இது நாயமா கங்காணி?..." அவள் முறையீட்டை அவன் கேட்க விரும்பவில்லை. மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு ஆண் பிள்ளைகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. குந்தியிருக்கும் பெண்களில் மூதாட்டி இருக்கிறாள்; சிறு வயசுக்காரியும் இருக்கிறாள்...

"ராவும் பவலுமா ஓடி வந்த. மூணு நாளாச்சி புள்ளயக் கவனிச்சி சோறு வச்சி..."

இவர்கள் 'வித்து முடை'க்காரர்கள் என்று பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உப்பு அம்பாரங்களை மூட்டைகளில் நிரப்பிக் கரைக்கும் தொழிலாளிகள், பக்கத்து வீட்டிலிருக்கும் பவுனுவைப் போன்ற தொழிலாளிகள். கங்காணி அவள் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது "லாரி வந்திருக்கு!" என்று குரல் கொடுத்தால் அப்படியே விட்டு விட்டு ஓடவேண்டும்.

இவளும் அப்படித்தான் ஓடி வந்திருக்கிறாள். ஆனாலும் கூலி குறைப்புச் செய்திருக்கிறான். இவளுக்கு மட்டும் தானா? ஏன் குறைத்தாள்? அவள்...

அவளுடைய ஓலம் அந்தச் சந்திப் பேரிரைச்சலின் இடையே பொன்னாச்சிக்குத் தெளிவாகக் காதில் விளுகிறது. ஆனால் அந்தக் கங்காணி செவியில் போட்டுக் கொள்ளவில்லை. லாரி திரும்பியதும் படியை விட்டிறங்கி அவன் நடந்து போகிறான். அவளும் ஓலமிட்டுக் கொண்டு சில அடிகள் தொடருகிறாள். மற்றவர்கள் தங்கள் தங்கள் கூலிகளைப் பார்த்த வண்ணம் அவர்கள் போக்கில் செல்கின்றனர்.

டீக்கடை இயக்கம், போக்குவரத்துச் சந்தடிகள் ஏதும் குறையவில்லை. அவள், அந்தப் பெண், நான்கு ரூபாய், குறைக்கப்பட்டு விட்டதை எண்ணி விம்மி வெடிக்க அழுது கொண்டே சிறிது நேரம் நிற்கிறாள்.

அன்றொரு நாள் தான் நின்ற நினைவு பொன்னாச்சிக்கு வருகிறது. இப்படி எத்தனையோ பெண்கள் - தொழிற்களத்தில் தேய்ந்து, குடும்பத்துக்கும் ஈடுகொடுக்கும் பெண்கள் - மஞ்சளையும் கிரசினையும் குழைத்துப் புண்ணில் எரிய எரியத் தடவிக் கொண்டு அந்த எரிச்சலிலேயே உறங்கி மீண்டும் புண் வலுக்கப் பணியெடுக்க வரும் பெண்கள் - அங்கிருந்த ஆண்கள் யாரும் கங்காணியை எதிர்க்கவில்லை. பொன்னாச்சிக்கு அங்கு வந்த வழி மறந்து போனாற் போல நிற்கிறாள். மாமன் வீட்டுக்குப் போவது 'துரோகச் செயல்' என்று தோன்றுகிறது. அவள் போகவில்லை. வீடு திரும்பும் போது அவள் ஒரு சுமை விறகு தூக்கிச் செல்கிறாள்.

அத்தியாயம் - 16

அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக்காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஓடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்க மாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில் தான் கோயிலுக்கு நடந்து வரவேண்டும். அவரைப் போன்ற பக்தர்களும், பரதேசிப் பண்டாரங்களும் அக்கம் பக்கங்களிலிருந்து அந்நாளில் அங்கு வருவார்கள்.

கோயங்காடு கதிரேசம் பிள்ளை, சண்முகபுரம் வீராசாமி நாடார் ஆகியோர் அந்தப் பக்கம் நிலச் சொந்தக்காரர்கள். பாலம் வந்து சாலையுடன் தொடர்பு ஏற்பட்டால் அவர்களுடைய நிலத்துக்குக் கிராக்கி ஏறும். அந்தக் குடும்பத்தினரும் சங்கமுக ஓடையில் முழுகி ஈசுவரரை தரிசிக்க வருவார்கள். முன்பெல்லாம் குடும்பத்துடன் அதிகாலையில் அங்கு வந்துவிடுவார்கள். சிவந்திப் பெண் சுருசுருவென்று அங்கே பெட்டி நிறைய இட்டிலியுடன், இலைக்கட்டுமாகக் கடை போட்டுவிடுவாள். அவளைப் போன்ற சுறுசுறுப்பு யாருக்கும் கிடையாது. வழிபாட்டுக்கு வந்தவர் அனைவரும் இட்டிலி வாங்கித் தின்று வயிறு குளிரத்தான் திரும்புவார்கள்.

கைலாசக் குருக்கள் அதிகாலையில் வந்து, சிவனாருக்கு அபிடேகம் செய்து வில்வமும் அரளியும் கொய்து வந்து பூசை செய்திருக்கிறார். கூட்டமே இல்லை. பத்துப்பேர் கூட நீராடுவதற்கும் சுவாமி தரிசனத்துக்கும் வரவில்லை. காரும் பஸ்ஸும் எங்கெங்கோ கடற்கரைகளுக்கு மக்களைக் கூட்டிச் செல்கையில் இந்த மூலைக்கு நடந்து யார் வருவார்கள்!

அவர் நீராடி, ஈசனை வழிபடுகிறார். ஒவ்வொரு ஆண்டிலும் "கூட்டுறவு உப்புத் தொழிலாளிகள் உற்பத்தி, விற்பனைச் சங்கம் நல்லபடியாகச் செயல்பட, அடுத்த ஆண்டுக்குள் பாலம் வந்து விட வேண்டும் எம்பெருமானே!" என்று நினைத்து வேண்டிக் கொள்வார்.

பையன் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளுமே நிறைவேறும் என்ற தைரியம் ஆட்டம் கண்டுவிட்டாற் போலிருக்கிறது. ஆனால், மனிதன் நம்பிக்கை இழக்கக் கூடாது.

இப்போது நீராடிக் கும்பிட்டுத் திருநீற்றுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு அருணாசலம் திரும்புகிறார். பசி எரிச்சல் கிளர்ந்து வருகிறது. வீட்டில் அவள் ஒரு வேலை ஒழுங்காகச் செய்வதில்லை. வாயைத் திறந்தால் குதர்க்கமும் சண்டையும் மிஞ்சுகின்றன. பொன்னாச்சியும் அந்தப் பையனும் சென்ற பின்னர் இங்கே இன்னமும் தரித்திரம் தான் கூடியிருக்கின்றன. இரண்டு பேர் குறைந்ததால் வளமை மிஞ்சிவிடவில்லை. துண்டை உடுத்துக் கொண்டு ஈரவேட்டியை விரித்துப் பிடித்தவராய் அவர் அளத்துக்கு நடக்கிறார். வானம் பளிச்சென்று நீலமாக இல்லை. ஆடி அமாவாசைக்குச் சிறிது மூட்டம் போட்டாற் போல் தானிருக்கும்.

பாத்தியில் மேல் தண்ணி திறந்துவிட வேண்டுமென்ற நினைப்புடன் அவர் ஓடைக்காலில் இறங்கிக் கடந்து மேலேறுகிறார். வெள்ளைத் துணிகளைக் காயப் போட்டாற் போன்று அவரது அளம்தான் முழுதுமாக உப்பளமாக இருக்கிறது. வரப்பிலேறிப் பாத்திகளைப் பார்த்துக் கொண்டு வருபவர் ஒரு பாத்தியில் வந்ததும் திகைக்கிறார். உப்பு குருணைச் சோறாகப் பூக்கவில்லை. பருமனாக இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கோடைக்கால மழை மணிகள் போல் இறங்கி இருக்கின்றன. இவ்வாறு உப்புப் பூத்தால் மழை வருவதற்குக் கட்டியம் என்பார்கள். மழை ஆடியிலேயே விழுந்து விடுமோ? மழை மணி கண்டால் உப்பு விலை ஏறும். ஆனால் மழை பிறந்து விட்டால் உப்புக் காலம் போய் விடுமே?

அப்போது சடையாண்டி, கிணறு செப்பம் செய்பவன் மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வருகிறான்.

"கும்பிடறே மொதலாளி..."

"ஆடி மாசம், மழை மணி எறங்கியிருக்குப் பாரு சடையா!"

"இது ஒண்ணில்ல மொதலாளி. காத்து சூள்ச்சி. கர்போட்டாந்தா; மளை வராது... தூத்தூடி முத்தாலம்மன் கொடைக்கிப் போயிருந்தே மொதலாளி, பிள்ளயப் பாத்தே, போலீசில இட்டுப் போயிட்டாவ...?"

திடுக்கிட்டாற் போல் அருணாசலம் அவனைக் கூர்ந்து நோக்குகிறார். பிள்ளை... ஆரு... வேலுவா? அவ எங்கே தூத்துக்குடிக்குப் போனான்?

"....."

"ஆரு? வேலுவா?"

"நம்ம புள்ள இல்ல மொதலாளி, செவந்தியாச்சி மவெ, பச்சை. சாராயம் கொண்டிட்டுப் போனான்னு வளச்சிட்டுப் போனாவ. ராவுல திருவிழாக் கும்பல்ல, ஆட்டக்கார, மேளக்காரனெல்லாம் வந்து ஜேன்னு இருக்கையில இவனமட்டும் தலையில செமந்திட்டு வாரயில கண்டிட்டா. இவெக்கு ஓடி ஒளியத் தெரியல. தகரத்தில 'சரக்கு' இருக்கு. போலீசின்னு தெரியாம கும்பலோடு கும்பலா வந்திருக்கா. முதுகில் குத்தித் தள்ளிட்டுப் போயிட்டாவ..."

"அட... பாவி? எத்தினி நாளாச்சி? அவப்பன் சின்னாத்தா எல்லாம் கொடக்கி வந்திருந்தாவளா?"

"நா கண்டுக்கல மொதலாளி. பையனிங்க தண்ணி இறைக்குமில்ல? பாத்த மொகமாயிருக்கேன்னு கவனிச்சே. நம்ம புள்ள பச்சை; போன வெள்ளிக் கிளமதா..."

மாமன் மழை மணியை மறந்து போகிறார். மேல் தண்ணீர் பாய்ச்சலையும் மறக்கிறார். விருவிரென்று வீட்டைப் பார்க்க நடக்கிறார்.

நீராடியவுடன் கிளர்ந்த பசி எரிச்சலுடன் பல்வேறு உணர்வுகளும் குலுங்குகின்றன. இப்படி எத்தனையோ பசி எரிச்சல்கள் கிளர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்று திரண்டு விட்டால் பத்து நூறு அணுகுண்டுகளுக்குச் சமமாகும் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆனால் ஒன்று திரளும் நிலையில் இல்லாததால் மத்தாப்புப் புகையாக மட்டுமே ஆங்காங்கு கரிந்து போகிறது. பசி எரிச்சலுக்குப் பீடி, புகையிலை, டீத்தண்ணி என்று மாற்றுத் தேடிக் கொள்கின்றனர். பசியை ஆரோக்கிய ரீதியில் போக்கத் தேவையான உணவு, இரத்தத்தில் கலந்து உயிரூட்டும் தெம்புக்கான அன்னசாரம் போதிய அளவு கிடைப்பதேயில்லை.

வீட்டில் ஆச்சி இல்லை. முன்சீஃப் வீட்டுக்குப் போயிருக்கிறாளாம். அவளிடம் பணம் இருக்கும். அவர் ஈர வேட்டியைக் கொடியில் போட்டு விட்டு வேறு வேட்டி உடுக்கிறார். அமாவாசை, ஆச்சியை ஏதேனும் சில்லறைக் காரியங்களுக்குக் கூப்பிட்டனுப்பி இருப்பார்கள். அவள் குளத்தில் குளித்து விட்டுதான், இனி வீட்டுக்கு வந்து பொங்குவாள். ஒரு மணியாகும். குழந்தைகளுக்கு ஏதேனும் பத்து பைசா துட்டுக் கொடுத்திருப்பாள்.

அவர் சட்டையைப் போட்டுக் கொண்டு முன்சீஃப் வீட்டுக்குச் செல்கிறார். ஆச்சி உள் திண்ணை மெழுகிக் கொண்டிருக்கிறாள். இவரைப் பார்த்ததும் அருகில் வருகிறாள்.

"சர்ட்டு மாட்டிட்டு எங்க கிளம்பிட்டிய? அமாசி, கோயிலுக்குப் போய் வாரன்னு போனிய?..."

"ஆமா. ஒரு அஞ்சு ரூவா குடு வடிவு. அவசரம், காலேஜில என்னமோ அடிதடியாம். ஒம் மவன் செலம்பம் ஆடுறானாம்..." அவள் மருண்டு திகைக்கிறாள்.

"ஆரு சொன்னது? ஆளு வந்ததா?"

"ஆமா... அங்கக் கோனார் பய... ஒனக்குத் தெரியாது. அவஞ் சொன்னா. சங்கமுகேசுவரக் கோயிலுக்கு வந்திருந்தா?" இதுதான் மந்திரம்.

'பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்' என்று மனசோடு சமாதானம் சொல்லிக் கொள்கிறார். அவள் உள்ளே செல்கிறாள். அவர் வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு வந்து நிற்கிறார்.

சற்றைக்கெல்லாம் ஐந்து ஒற்றை ரூபாய்த் தாளாகக் கொண்டு வருகிறாள்... "புள்ளயக் கூட்டிட்டு வந்திடுங்க..." என்று கவலை கனக்கக் கூறிவிட்டுச் செல்கிறாள்.

மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாய்ப்பாசம் குருட்டுப் பாசம். ஆனானப்பட்ட நாடாளும் அரசிகளே தாய்ப் பாசத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். முன்பே முன்சீஃப் வீட்டு ஆச்சி, "உதவாக்கரைப் பையனைப் படிக்கப் போட்டு ஏண்டி செலவு செய்யிறே..." என்று கேட்டாளாம். இவளுக்கு ரோசமாகிவிட்டது. அதனால் பிள்ளையைப் பற்றி ஆச்சியிடம் எதையும் கூறியிருக்க மாட்டாள்.

அவர் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு சென்று இறங்குகையில் மணி ஒன்று. ஓட்டலில் ஒரு தட்டு புளிச்சோற்றை வாங்கி உண்டு நீரைக் குடிக்கிறார். அவர்கள் வீட்டைத் தேடி நடக்கிறார்.

பகல் நேரத்தில் அப்பன் குந்தியிருப்பான். அவன் கெட்டது போதாதென்று பையனைத் திருட்டுச் சாராயத் தொழிலுக்கு விட்ட கயவாளி! அவன் முகத்தில் அறைந்து பையனுக்கு வழி கேட்க வேண்டும்.

அவர் வீட்டு வாயிலில் நுழைகையில் அந்த வளைவே அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது. அக்கம் பக்கக் கதவுகள் சாத்தியிருக்கின்றன. இவர்கள் வீட்டில் யாருமே இல்லை. பூட்டு ஒன்று தொங்குகிறது.

ஒருகால் இங்கிருந்து வாடகை கொடுக்கவில்லை என்று காலி செய்யச் சொல்லி விட்டார்களா?

அவர் அந்தப் பெரிய வீட்டின் முன் வாயிலில் வந்து நிற்கிறார்.

"வீட்ட ஆருமில்லியா?" என்று குரல் கொடுக்கிறார்.

செங்கமலம் உள்ளிருந்து தலை நீட்டுகிறாள்.

"ஆரு!"

"கண்ணுசாமி வீட்டில ஆருமில்ல?"

"அல்லாம் வேலைக்கிப் போயிருக்காவ, சாயங்காலம் வந்தியன்னா பார்க்கலாம். ஏட்டி சரசி? ஆருன்னு சாரிச்சிக்க, போ!"

சரசி, பத்து வயசிருக்கும் ஒரு பெண், பித்தானில்லாத கவுனுடன் வாசலுக்கு வருகிறது.

"ஆரு... பொன்னாச்சி, அவங்கப்பச்சி கூடவா வேலைக்குப் போயிருக்கா?"

"ஆமா. அல்லாம் போயிருக்காவ."

"பையன் பச்சை?"

"அவனும் போயிருக்கா!"

"எந்தப் பக்கம்?"

அப்போது செங்கமலம், "யாருடீ அது..." என்று கேட்டவளாக வெளியே வருகிறாள்.

"ஆரு...? வாங்க, பொன்னாச்சி மாமனா? உள்ளாற வாங்க வந்து இருங்க..." என்று வரவேற்று பெஞ்சியைக் காட்டுகிறாள்.

"ஆமா... இந்தப் பக்கம் வந்தேன் பாத்துட்டுப் போவலாமின்னு. காலமே மோடமாயிருந்திச்சி, இப்ப என்ன வெயில்!" என்று வழுக்கை விழுந்த தலையைத் துண்டினால் ஒத்திக் கொள்கிறார். ஆச்சி அவிழ்ந்த கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு அவளுடைய சிம்மாசனமாகிய நார்க் கட்டிலில் அமருகிறாள்.

"எல்லாரும் சவுரியந்தானா? கண்ணுசாமி ஒடம்பு முடியலன்னா, எந்தப் பக்கம் வேலைக்குப் போறா?"

"அடி சரசி? செம்பில் தாவத்துக்கு நல்ல தண்ணி பானையிலேந்து எடுத்திட்டு வா... ட்டீ!" என்று ஏவிவிட்டு ஆச்சி நிதானமாக அவரது விசாரணைக்குப் பதிலளிக்கிறாள்.

"ஒடம்பு முடியலன்னுதா ஊருக்குப் போய் அந்தப் பிள்ளகளைக் கூட்டி வந்தா. கடன் தலைக்கி மேல ஏறிடிச்சி. அந்தப் பயல போலீசு புடிச்சிப் போயிட்டாவ. இந்த ஊரு உலவத்துல இல்லாததா? போலீசுத் தடியனுவளுக்கு இதொரு பணம் பறிக்கிற சோலி. பொறவு வாக்கரிசி போட்டுக் கூட்டிட்டு வந்தாவ. நேத்துத்தா காலையில கூட்டிட்டு வந்தா. சோலிக்குப் போவல. இன்னிக்குப் போயிருக்கா. கண்ணு தெரியலன்னா எதானும் சுமடு எடுக்கலாமில்லையான்னு அவனும் போயிருக்கா. ஏங்கிட்ட ஒரு புள்ள, இவளுக்குப் பெரியவ இருந்தா. அவளையும் பொன்னாச்சிக் கூடக் கூட்டி அனுப்பியிருக்கே, பொறவென்ன? எட்டு பேர் கும்பி நனையணுமில்ல? முன்னமே இல்லாத காலத்துல வாங்கித் தின்ன கடன். சீக்கு இப்ப இந்த புள்ளய மூட்டுவார கடன், எல்லா அஞ்சு நூறுக்கு மேல போயிட்டுது, அந்தப் பொம்பிள என்னேயுவா."

"மூட்டுட்டு வந்திட்டாவளா?... நா விசயம் கேள்விப்பட்டுதா சாரிச்சிப் போவலான்னு வந்தே. அவன் குடிக்கிறானா?"

"ஆரு, உங்க தங்கச்சி மாப்பிளயவா கேக்குறிய? உமக்குத் தெரியாதா? தொட்டிப் பழக்கம் சுடுகாடு மட்டுமில்ல?"

அவருக்கு நெஞ்சு காய்கிறது. சரசி கொண்டு வரும் செம்பு நீரை அருந்துகிறார். எதிரே, மாலை சாத்திய, பால் வடியும் முகம் அவர் கண்களையும் கருத்தையும் இழுக்கிறது. தண்ணீரருந்தியதில் ஆசுவாசமாக இருக்கிறது. அப்பாடா, அவர்களே மீட்டு விட்டார்கள். நல்லவேளை - மனச்சான்றின் ஒரு நரநரப்பில் புறப்பட்டு வந்து விட்டாரே ஒழிய, பணத்துக்கு என்ன செய்வதென்ற பதைபதைப்பு இல்லாமலில்லை. சின்னம்மா உண்மையில் மிக நல்லவளாகவே இருக்க வேண்டும்.

"பொன்னாச்சி வேலைக்குப் போயிட்டிருக்காளா?"

"போறா... நீ வந்திருக்கிய. உம்மகிட்ட ஒரு சேதி சொல்லிப் போடணும். அந்த வுள்ளக்கி ஒரு கலியாணம் கூட்டி வச்சிடுங்க... ஏன்னா, திருட்டுக் கையிங்க காவலிருந்தாலே நீளும்... ஒரு பையனிருக்கா. நெல்ல மாதிரி குடிகிடி ஒண்ணுங் கெடையாது. அவெ இட்டமாவும் இருக்கா. ஏதோ ரெண்டொரு ஏனம், சீல தாலின்னு வாங்கி சுவம் முடிச்சி வச்சயன்னா எக்குதப்பா எதும் நடந்து போயிராது..."

பகிரங்கமா புருசனை விட்டு ஓடிவந்து முறையில்லாத வாழ்வு நடத்திய அந்தப் பெண் பிள்ளையின் வீட்டுப்படி ஏறவே அவருக்கு முதலில் கூச்சமாக இருந்தது. தண்ணீரும் குடித்தார். அவள் தட்டில் வெற்றிலை பாக்கு எடுத்து வைத்திருக்கிறாள். வெற்றிலையும் போடலாமோ?...

அவளைப் பற்றி அவர் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார். நேராக இன்று தான் பார்க்கிறார். உண்மையில் அவளுக்கு இராணிக்குரிய கம்பீரம் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. நீர் அதிகமாகிவிட்டதனால் தளர்ந்து போன பணியாரமாவு போல் கழுத்துச் சதை தொய்ந்தாலும், முகத்தில் சுருக்கங்கள் கீறிட்டாலும், அவளிடம் களையும் கம்பீரமும் குறையவில்லை.

"பையன் ஆரு?"

"முன்ன தொழிற்சங்கம் வச்சி, ஸ்ட்ரைக் பண்ணச் சொல்லி தடியும், கம்புமா அளத்துக் கூலிகளைப் பயமுறுத்தி நிக்க வச்சாரே, சாத்தப்ப - அந்த வருசங்கூடப் பெரிய புயலடிச்சி ராமேஸ்வரம் கரையே முழுகிப் போச்சே?"

"ஏந் தெரியாது? சாத்தப்பனத் தெரியாத ஆருண்டு? சொதந்தரத்துக்கு முன்ன நாங்க ஒரு கச்சியிலிருந்தவங்களாச்சே? ஸால்ட் இன்ஸ்பெக்டர் லோன் கொலை கேசில் சிக்கினவங்கூட தலமறவாயிருக்கயில, இவ வீட்டதா ஒளிச்சி வச்சிருந்தா. பொறவு..." ஏதோ நினைவு வந்தாற் போல் தூக்கி வாரிப் போட்டாற் போல் மௌனமாகிறார்.

அவளுடைய பார்வை உயரே எங்கோ நிலைக்கின்றன.

"அவிய மவந்தா - ராமசாமின்னு பேரு. பனஞ்சோலை அளத்துல மாசச் சம்பளமாயிருந்தா. இப்ப வேற பக்கம் சோலிக்குப் போறதாச் சொன்னா..."

"படிச்சிருக்கிறானா?"

"அத விசாரிக்கல. ஆனா படிச்சவங்களுக்கு மேல படிச்ச பயலாத்தாந் தெரியிறா. நாஞ் சொன்னன்னு காட்டிக்காதீய. அவனாத்தா என்ன சொல்லுவான்னு தெரியாது. ஆனா பயனுக்கு இந்த புள்ளகிட்ட இட்டமாயிருக்கு. இவளுக்கும் இட்டந்தா. ஏதோ முன்ன பின்ன பாத்து ஏற்பாடு செஞ்சி கெட்டிப் போடணும்..."

முன்ன பின்ன... முன்ன பின்ன என்ன இருக்கிறது?

ராட்டினம் போட்டு இரைக்கும் உப்பு நீர்க் கிணறும் கூட மூடிப் போகிறது. அவ்வப்போது தோண்ட வேண்டியிருக்கிறது. ஆனால் உப்பை நம்பிக் கஞ்சி குடிக்கும் தொழிலாளியின் வறுமைக் குழி மூடப்படுவதே இல்லை!

அருணாசலம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு இறங்கி நடக்கிறார்.

அத்தியாயம் - 17

தட்டு வண்டியில், தகரப் பெட்டி, கரியேறிய சருவம், சுளகு, நார்ப்பெட்டி, சில பழுப்பு தாள் புத்தகங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், பாய், சாக்கு, ஒரு பனநார்க் கட்டில், எல்லாச் சாமான்களுடனும் ராமசாமியின் தாய் பாக்கியத்தாச்சி அமர்ந்திருக்கிறாள். ராமசாமியே வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான். வண்டி மூன்றாந் தெருவினூடே செல்கிறது. ஞாயிற்றுக் கிழமை காலை நேரம்; சிறுமியர் தலையில் எண்ணெய் வழிய மண்ணில் குந்திப் புளிய விதையாடுகின்றனர். கிழவிகள் நீர் வடியும் கண்களைச் சரித்துக் கொண்டு ஆங்காங்கு புகையிலையின் சுகத்தில் ஆழ்ந்தவராகக் குந்திக் கிடக்கின்றனர். பூவரச மரம் ஒன்று நிழல் தரும் கிளைகளால் அவர்களுக்கு ஆதரவு காட்டுகிறது. அதனடியில் இளந் தாயார் சிலர் மடியில் குழந்தைகளுடன் சாவகாசமாக வம்பளந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வீட்டில் ஒருத்தி குழந்தை குளிப்பாட்டுகிறாள்; புருசன் நீரூற்றுகிறான். இன்னொரு வீட்டில் அவள் அம்மியில் அரைக்க, அவன் கூரை செப்பம் செய்கிறான். இன்னோர் வேப்பமரம். அதன் அடி முண்டு அமர்ந்து சில ஆண்கள் ஏதோ பேசுகின்றனர். ஒரு பெண் பன ஓலை சீவிக் கொண்டு யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறாள்.

"பனஞ்சோலை அளத்துல மாசச்சம்பளம் பார்த்த பைய, போன்னிட்டாவ; ஆத்தாளும் மவனும் இங்க வாரா...!"

"மின்ன சங்கக்காசு பிரிச்சிட்டுப் போவ வருவானே, நோட்டீசு கொண்டு குடுக்கல? தொழிலாளியல்லாம் ஒண்ணு சேரணுமின்னு சேப்பு நோட்டிசு குடுத்தான். அளத்துல சீட்டக் கிளிச்சிட்டாவ!"

"பனஞ்சோல அளத்துல அதெல்லாம் பேசப்படாது. ஊரே கெடந்து வேலக்கிப் போவாம நின்னாக்கூட, பனஞ்சோல அளத்துள மூச்சுப்பரியக்கூடாது. அங்கதா போனசு, கண்ணாடி, செருப்பு, அல்லாம் குடுக்கறாவளே?... மானோம்புன்னா புள்ளயளுக்குப் பத்து ரூவா காசு குடுப்பா?"

நாலைந்து பெண்கள் இவ்வாறு பேசுவது அவன் செவிகளில் விழுகிறது. வண்டியிலிருந்து கீழே குதித்து நடந்து வருகிறான்.

மரத்தடியில் குந்தியிருந்தவர்களிலிருந்து ஒருவன் எழுந்து அந்தப் பெண்களிடம் சென்று ராமசாமியின் காது கேட்கப் பேசுகிறான்.

"ஏ, பொண்டுவளா? இளவட்டம் வாரான்னு பல்ல இளிச்சிட்டுப் போயி நிக்காதிய! அவன் நோட்டீசு குடுத்தாலும் வாங்காதிய! பனஞ்சோல அளத்துல சின்ன முதலாளிய எதித்துப் பேசி மூக்கு உடபட்டு இங்க வந்திருக்கா. ஒங்க சோலியுண்டு, நீங்க உண்டுன்னிரிம்! பொறவு நாம குடிக்கிற கஞ்சில மண்வுழும்..." என்று எச்சரிக்கிறான். ராமசாமிக்கு இது புதிய அநுபவமல்ல. இருட்டுக்குள் இருப்பவன் இருட்டே பாதுகாப்பு என்று வெளிச்சத்துக்கு அஞ்சுகிறான்.

உப்பின் வெண்மையைப் பார்த்துக் கூசி வெளிச்சமே இல்லாத உலகுக்குள் அழுந்திவிட்டார்கள்.

'வித்து மூடை'க் கங்காணி ஆறுமுகத்துக்குச் சொந்தமான வீடு அது. மண் பரிந்து, கூரை பந்தலாக நிற்கும் அந்த வீட்டுக்கு அவன் பத்து ரூபாய் 'அட்வான்சு' கொடுத்திருக்கிறான். தனது சைக்கிளை அடகாக வைத்துவிட்டு அவன் இந்தச் சரிவைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆறுமுகத்தின் கூலியாட்களில் ஒருவனாகவே அவனும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறான். உப்பளத்தில் லாரி வந்து நிற்கும் பொது, பெண்கள் சாக்கை விரித்து உப்பை நிரப்ப இவர்கள் மூட்டைகளைத் தைத்து, லாரியில் அடுக்க வேண்டும்.

வீட்டின் முன் சாமான்களை இறக்கிவிட்டு, மாட்டை அவிழ்த்துக் கட்டுகிறான். வண்டிச் சொந்தக்காரன் வந்ததும் அவனுக்குப் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்.

இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு பக்கம் இருந்த வீட்டைத் துறந்து அவனுடைய தாய் இங்கே புதிய இடத்துக்கு வந்திருக்கிறாள். அன்னக்கிளி, அழகம்மை, பேரியாச்சி என்ற தொடர்புகளையெல்லாம் விட்டுவிட்டு வேறு புதிய பழக்கங்களைக் காண இந்தக் குடியிருப்புக்கு நகர்ப்புறத்துக்கு வந்திருக்கின்றனர் அவர்கள்.

தாய் கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தட்டிப் பெருக்குகையில் அவன் கயிற்றையும் வாளியையும் எடுத்துக் கொண்டு தெருக் கோடியில் இருக்கும் உறைக்கிணற்றுக்கு வருகிறான்.

கிணற்றில் வனப்பும் வாளிப்புமாக ஒருத்தி நீரிறைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றுத் தள்ளி ஒரு ஆண் குளித்துக் கொண்டிருக்கிறான்.

"தண்ணி நல்லாயிருக்குமா?" என்று ராமசாமி கேட்கிறான். அவள் ஒரு மயக்குச் சிரிப்பை நெளிய விடுகிறாள். "வாரும் மாப்பிள? புதிசா வந்திருக்கியளா?... தண்ணி ரெண்டு டிகிரிதா...!"

"சருவத்தை இப்படி வையும்..." என்று இழுத்து நீரை ஊற்றுகிறாள். ராமசாமி வாயில் விட்டுப் பார்த்துக் கரிப்பை உடனே துப்புகிறான்.

"எப்பிடி இருக்கு?..." அவள் சிரிக்கிறாள்.

"அண்ணாச்சி இதுல குளிக்கிறாரேன்னு பார்த்தே!"

"பின்னென்ன சேய? வண்டித் தண்ணி அடிப்பா. அம்பது கொடம் இருக்கும். இந்தத் தாவுல எம்பது வூடு இருக்கு. அடிபிடின்னு மோதிக்கவா. அதும் இப்ப சுத்தமா பத்து நாளாச்சி! முனிசிபாலிடிக்காரனயே காணும்!" என்று குளித்துக் கொண்டிருப்பவன் தெரிவிக்கிறான்.

"ஆமா, இந்த ஆம்புளிய ஆரு போயிப் பாக்கா, கேக்கா? பொம்பிளயளுக்கு என்ன தெரியுது...?"

"குடிக்க நீரு?"

"இதா போவாங்க இன்னிக்கு. மேக்கே போனா கோயில் கேணி. தண்ணி பஷ்டாயிருக்கும். நாலு கல் போனா வண்ணாந்துறை இருக்கு, துணி தப்பி அலசிட்டு வரலாம்..."

"வோட்டு வாங்கிட்டுப் போவ அல்லாம் வருவா, பொறவு ஒருத்தரும் கண்டுக்கறதில்ல. தலைவர் வூடு கட்டுறாருன்னு கச்சிக்காரங்கிட்ட ஆளுக்கு ஒரு ரூவா பிரிச்சானுவ..." என்று அந்தப் பெண் வயிற்றெரிச்சலை எடுத்துரைக்கிறாள்.

"நீ சும்மாருவுள்ள. இப்ப இவெ வந்திருக்கா. நாம போயித் தண்ணி வேணுன்னு அந்த ஆள 'கேரோ' செய்யிவம்!" என்று அவன் உடலைத் துடைத்துக் கொண்டு கூறுகிறான்.

"கிளிச்சிய. நீரு அந்தத் 'தண்ணி'யப் போட்டுட்டு ஆடுவிய!" என்று கூறிவிட்டு அவள் ஆத்திரமாகச் செல்கிறாள்.

அந்தக் கூட்டு வீட்டை விட்டு இங்கே விடுதலை பெற்று வந்தாற் போல் ராமசாமி உணருகிறான். பொன்னாச்சியை விரைவில் மணந்து கொண்டு இங்கே கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைக்கையில் ஆனந்தமாக இருக்கிறது.

தாய் புதிய வீட்டில் கல்லைக் கட்டிச் சோறு பொங்குகிறாள். மாலையில் அவன் சீவிச் சிங்காரித்துக் கொண்டு சண்முகக் கங்காணியைப் பார்க்கக் கிளம்புகிறான்.

தொழிலாளர் குடியிருப்புகளைத் தாண்டித் தேரியில் நடக்கிறான். ஞாயிறன்றும் வேலைக்குச் சென்ற சில தொழிலாளர் திரும்பி வருகின்றனர். பல பல உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர் அனைவரும் சாலையிலிருந்து மணலில் கால் புதைய அந்தக் காட்டில் திரும்பித்தான் நடந்து செல்ல வேண்டும்.

பொன்னாச்சியும் இப்படித்தான் வரவேண்டும்... ஆனால் முன் போல் குறித்த நேரத்தில் வேலைக்குச் சென்று வந்து குறித்த இடத்தில் அவனால் அவளைச் சந்திக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வேலைக்குப் போக வேண்டியிருக்கும்.

லாரி எப்போது வரும் என்பதைச் சொல்ல முடியாது. எழுபத்தைந்து கிலோ மூட்டைகளைச் சுமந்து லாரியில் அடுக்க வேண்டும்... மாசம் இருநூறு ரூபாய் தருவதாக அவர்கள் அவனை வளைக்கப் பார்த்தார்கள். அவனுடைய எதிர்ப்பாற்றலில் அவர்களுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது. அதுவே அவனுக்கு வெற்றி.

பனஞ்சோலை அளத்திலிருந்து அவனுக்குத் தெரிந்த முகங்கள் வருவதைப் பார்க்கிறான்.

கைக்குழந்தையுடன் நஞ்சாயி... பண்டாரம் பிள்ளை...

"என்ன அண்ணாச்சி? இங்க நிக்கிறிய?" என்று அவள் விசாரிக்கிறாள்.

"ஆமாம், இந்த வளவுக்கு வந்திட்டே. ஞாயித்துக்கிழம வேலையா?"

"ஆமா, கொடயின்னு ஆறு நா நின்னிட்டம். இப்ப சோலியிருக்குன்னா கங்காணி, பொறவு என்னேய?..."

"என்னவோ கேளுவிப் பட்டம்? நெசமா அளத்துல இப்ப சோலியெடுக்கல...?"

"இல்ல அண்ணாச்சி. மீனுக்கு எரை வைக்கிறாப்பல கூட்டு இருநூறு ரூவா சம்பளமின்னா. எனக்குச் சம்சயம் தட்டிச்சி, என்ன வெலக்கி வாங்க முடியாது... இல்ல?" என்று ராமசாமி சிரிக்கிறான்.

அவர்கள் பிரமித்துப் போய் நிற்கின்றனர்.

"பொன்னாச்சி சோலிக்கு வருதா?..." என்று கேட்டு அவர்களைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகிறான்.

"வருது, அதுந் தங்கச்சியும் கூட அறவை மில்லுக்கு இன்னிக்கு வந்திருக்கு. பாவம், அந்தப் பயலப் போலீசு வளச்சிட்டாப்பல. எரநூறு ரூவா அவுராதம் கட்டி, தலவருதா மூட்டுக் கொண்டார ஒத்தாச பண்ணினாராம். வட்டுக் கடன் வாங்கிக் குடுத்திட்டு, இப்ப அக்கா தங்கச்சி, தம்பி அல்லாம் ஞாயித்துக் கிளமயும் வேலக்கி வந்திட்டுப் போறா!"

அவர்கள் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள். பொன்னாச்சி வேலை முடிந்து போய்விட்டாளா? அவனுக்கு ஏமாற்றமாக இருக்கிறது.

அவளை அந்த வழியில் செல்லும் போது மறுநாள் அவனால் காண முடியுமோ என்னவோ?

அவளுக்காக அவன் தன் வேலை, வீடு போன்ற வசதிகளைத் துறக்கவில்லை என்று கொண்டாலும், அவளுக்காக, அவளை முன்னிட்டுத்தான் மொத்தப் பேருடைய துன்பங்களையும் பகிர்ந்து கொள்வதாக நினைத்து மகிழ்ச்சி கொள்கிறான். அந்த மகிழ்ச்சியில் அப்போதே மணமேடை கூட்டியாகி விட்டாற் போலிருக்கிறது.

சண்முகக் கங்காணியிடம் கூறித் தூது போகச் சொல்லலாம். ஆனால் அவனுடைய ஆத்தா அளத்தில் சோலிக்குப் போகும் பெண் என்றால் நிச்சயமாக ஒப்பமாட்டாள். வட்டுக் கடனகளைத் தீர்க்கப் பொன்னாச்சி சோலிக்குப் போகிறாள். மேலும், அந்தப் பெண்பிள்ளை... அவளைப் பற்றி ஆத்தா அறிந்தால்...

அவளுடைய நேயமும் அன்புமான அந்த உரையாடல் அவனுக்கு எப்போது நினைத்தாலும் உள்ளத்தைப் பரவசமாக்குகிறது. அவனுடைய ஏதேதோ இலட்சியங்களுக்கெல்லாம் அவள் உருக்கொடுக்க வந்து வாழ்வில் குறுக்கிட்டதாக நினைக்கிறான். அதற்காக ஆத்தாவை விரோதித்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

மணலில் கால்கள் புதைய அவன் சாலையை நோக்கி நடக்கிறான். தொலைவில், பொட்டலில் அழகிய சில வீடுகள் எழும்பியிருக்கின்றன. தூத்துக்குடி நகரிய எல்லைகள் அகன்று அகன்று போகின்றன.

மாலை குறுகி மஞ்சளில்லாமலே கருமை அவசரமாக வருகிறது. அவன் உள்ளம் துடிக்க மறந்து போகிறது.

அங்கே வருபவர்கள்... பொன்னாச்சி, இன்னும் சில சிறு பெண்கள், பையன் பச்சை, ஒரு கிழவி...

பொன்னாச்சி, அவள் தான்! அதே நடை...!

அவன் வழி மறிக்கச் சித்தமாகிறான். முகம் புரியாமல் படரும் இருள் திரையில் அவன் அவர்களள முன்னே செல்ல விட்டுப் பின்னே சேர்ந்து கொள்கிறான். தம்பி, தங்கச்சிகள், கிழவி...

சரிதான்! ஒரு கற்கோட்டை அரண் எழுப்பியிருக்கிறாள்! அவன் உள்ளூரச் சிரித்துக் கொள்கிறான். உல்லாசமாக ஒரு பாட்டை எடுத்து விடுகிறான்.

"வேலை செய்யும் பாத்திக்காடு
விளையாடும் தட்டு மேடு!
கூலிவாங்கும் கிட்டங்கி
கூட்டம் போடும் சாயாக்கடை...
கூட்டம் போடும் சாயாக்கடை..."

பச்சைப்பயல் குபீரென்று சிரிக்கிறான்.

"ஏலே, என்ன சிரிப்பு" என்று பொன்னாச்சி அதட்டுகிறாள். அவள் முகம் தெரியாது போனால் என்ன? அந்தக் குரலில் அமுதமல்லவோ பொங்குகிறது!

மீண்டும் பாட்டு தொடருகிறது.

"போன நல்ல வருசத்தில
ஏக்கம் புடிச்சிப் போனனடி..."

"சீச்சீ! இந்தாளு ரொம்ப மோசம்" என்று பொன்னாச்சி மனசுக்குள் சொற்களைக் கோத்து விசிறிக் கொண்டு நடையில் வேகம் கூட்டுவது போல் பாசாங்கு செய்கிறாள். அதற்குள் பச்சை அவனை யாரென்று கண்டு கொண்டு விட்டான்.

"அக்கா? ராமசாமி அண்ணெ!"

"தொணக்கி வாரியளா?" என்று பொன்னாச்சி கேட்கையில் உல்லாசம் களிநடம் புரிகிறது.

"இதெல்லாம் ஆரு?"

"இது என் தங்கச்சி பாஞ்சாலி, இவ தங்கம், அவ டெயிசி..."

"எல்லா நாச்சப்ப வகையா?"

"இன்னிக்கு எல்லாம் அறவை மில்லுல தா..."

"சவாசு. ஒராள எடுத்துட்டு ரெண்டாளுக்கு வேலை குடுக்கா! வட்டிக்கடன் எந்தப் பக்கம் வாங்கினிய?"

"ஆரிட்டயோ வாங்குறம். தலைவர் வாங்கிட்டாரு. போலீசுக்குப் பாதி, அவியளுக்குப் பாதின்னு செவந்தனி மாமன் சொல்லுறா."

"மன்னாப்பு; அவிய தலவரில்ல."

"பின்ன ஆரு தலவரு?"

"தலயா எல்லா இருந்தாலும் புண்ணியமில்லை. வெறுங்கையுமாயிருந்தாலும் புண்ணியமில்ல. வட்டுக் கடன் செவத்தாச்சி குடுத்திச்சாக்கும்!"

"செவத்தாச்சியிட்டவும் அம்புட்டுக்குப் பணமில்ல. அடவுல கெடந்த சோடுதவலயக் கடயில போட்டுப் பொரட்டிக் குடுத்திச்சி. பாஞ்சாலிக்கு அடுவான்ஸ் குடுத்தா. எல்லாந்தா..."

"....."

"அப்பச்சி என்ன பண்ணுறா?"

"அவியளும் பொட்டி செமக்க்ப் போறா. கங்காணி நூறு பொட்டி செமந்தா நாலு ரூவா தருவா..."

பொருளாதார நிலையை இவ்வாறு கண்டறிந்த பின் அவன் மனம் 'சீலை, தாலி, ரெண்டேனம்' வாங்கிக் கல்யாணம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கிறது.

"அடுத்த நாயித்துக்கிழமை நா அங்க வாரேன். ஒங்க மாமா வந்திருந்தாரா?"

பொன்னாச்சி புரிந்து கொண்டு மறுமொழி கூறுகிறாள்.

"மாமா வந்து செவத்தாச்சியப் பார்த்தாராம். நாங்க ஆரும் அவிய வந்தப்ப வீட்டில இல்ல. ஆச்சியே எல்லாம் சொல்லிவிட்டாவளாம்."

"ஆகா..." என்ற ஒலி அவனையுமறியாமல் அவன் கண்டத்திலிருந்து பிரிகிறது. பிறகு பேச்சுத் தொடரவில்லை. அவன் அவர்கள் பின்னே கந்தசாமியின் சாயாக் கடை வரையிலும் செல்கிறான்.

பிறகு அவர்கள் திரும்பி நெடுந்தொலை சென்று மறையும் வரையிலும் அங்கேயே நிற்கிறான். ஒரு 'சாயா' கேட்டுக் கொண்டு பெஞ்சியில் அமருகிறான். அப்போது ஆறுமுகமும் அங்கு வந்து சேருகிறான்.

"நீ இங்கத்தா இருக்கியா? லாரி ஏழரைக்கு வரும். நீ பாலத்தடியில வந்திரு!" என்று கூறிவிட்டுப் போகிறான்.

அன்று முதல் முதன் முதலாக ஆறுமுகக் கங்காணியுடன் மூட்டைத் தொழில் செய்ய வந்து நிற்கிறான் ராமசாமி. பாலத்தின் பக்கம் 'செந்திலாண்டவன்' என்ற பெயரைக் காட்டிக் கொண்டு லாரி உறுமிக் கொண்டு வந்து நிற்கிறது. ஆண்களும் பெண்களும் அந்தத் தொட்டியில் ஏறிக் கொள்கின்றனர். மண்வெட்டி, கூடை, சாக்கு, கோணி தைக்கும் ஊசிகள், சணல் கண்டு எல்லாம் இடம் பெறுகின்றன.

நிலவு மூளியாகக் கிழக்கே உதித்து ஏறுகிறது. ஓட்டுபவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் தரகனார் கையைக் காட்ட அளத்துக்குள் வண்டி செல்கிறது. "சுனா மானா அளம்" என்று யாரோ செய்தி அறிவிக்கின்றனர்.

அளத்துக்குள் நல்ல பாதை இல்லை. பள்ளத்திலும் மேட்டிலும் சக்கரங்கள் மாறி உருளுகையில் குடல் வாய்க்கு வந்து பாதாளத்தில் குதிப்பது போலிருக்கிறது. ராமசாமி இத்தகைய லாரி சவாரிக்குப் பழக்கப்பட்டவனல்ல. அவனருகில் ஒரு பெண்பிள்ளை அவன் மீது வேண்டுமென்று விழுவது போல் தோன்றுகிறது. விலகிப் போகிறான். அம்பாரம் பத்தெட்டில் இருக்கிறது. நிலவு ஏறியிருப்பதால் வெளிச்சத்துக்கு விளக்கொன்றும் தேவையாக இல்லை. தொலைவில் அறவைக் கொட்டடியில் விளக்கொளி தெரிகிறது.

கங்காணி நிறுவைக் கொக்கியைத் தொங்கவிடுகிறான். திமுதிமுவென்று ஆண்களும் பெண்களுமாக மலையைப் புன்னி எடுத்து வாய் பிளக்கும் சாக்குகளில் கொட்டுகின்றனர். தரகனும் அளத்துக் கணக்கப்பிள்ளையும் பேசிக் கொண்டு நிற்கின்றனர்.

சரேலென்று கங்காணியிடம் வந்து மூட்டைகளை முக்காலாக்கி மடித்துத் தூக்கச் சொல்கிறான் தரகன். நெருப்புக் குச்சியைக் கிழித்து ஆறுமுகம் பார்க்கிறான்.

50 கிலோ...

சின்னமுத்து இன்னும் ஒரு பெட்டி உப்பை மூட்டையை விரித்துக் கொட்டுகிறான். சரசரவென்று கைகளைக் குத்தும் பருமணிகள்.

"வாணாம், கொட்டாதிய!" என்று தரகன் குரல் கொடுக்கிறான்.

"ஏன்?..." எல்லோருடைய குரலும் ஒன்றாக உயருகிறது.

"அம்பது கிலோ மூடைதா!"

"அப்ப கூலி அதேதான?"

"அதெப்படி அம்பது எழுபத்தஞ்சும் ஒண்ணாவும்? அம்பதுன்னா தூக்கிப் போடுறதுக்கு அடுக்கறதுக்கு சல்லிசாவும்... விரிசா வேல முடியும்..." என்று வித்தாரம் பேசுகிறான் தரகன்.

"மூடை எல்லாம் ஒண்ணுதான? கூலி அதே பத்தொம்பது பைசாதான?" என்று சின்னமுத்து கேட்கிறான்.

"அதெப்படியாவும்? அம்பது கிலோ மூட்டைக்கு ஒம்பது பைசா கூலி, மூடை நிறையக் காணுமில்ல?"

இரவின் அமைதியில் கடல் நீரில் தோய்ந்து வரும் குளிர்காற்று உடலுக்குச் சுகமாக இல்லை. அது குளிர் திரியாகப் பாய்ந்து உடலைக் குலுக்கிக் கொள்ளச் செய்கிறது. ராமசாமி குரலெழுப்புகிறான்.

"ஏன்வே, பச்சைப் புள்ளியளா நாங்க, விளையாடுறீம்? நூத்தம்பது கிலோ ரெண்டு மூடை முப்பத்தெட்டுப் பைசா. அம்பது கிலோ மூடை மூண்டுக்கு இருவத்தேழு பைசா! ஒங்க திரியாவரமெல்லாம் இங்க செல்லாது. கொரச்ச துட்டுக்கு அதிக மூடை...! இந்தாங்க? ஆரும் உப்பத் தொடாதிய? போட்டா இத்தினி நாளும் வழக்கத்துல இருக்கிறாப்பல எழுவத்தஞ்சி கிலோ, பத்தொம்பது பைசா இல்லேண்ணா..."

"இல்லேன்னா தொடாதிய, போங்க! இப்ப நேத்து முந்தா நா இதோ அம்பது கிலோ மூடை பத்து லாரி அடிச்ச. ஆளா இல்ல?" என்று தரகன் வீராப்புப் பேசுகிறான்.

ஆறுமுகமோ சங்கடத்துடன், "ராமசாமி, தவறாறு பண்ணாதப்பா, இப்ப இப்பிடித்தா அம்பது கிலோன்னு மூடை போடுறா. இதா வழக்கமாப் போச்சு!" என்று அவனைச் சமாதானம் செய்கிறான்.

கங்காணிக்கும் கூலி குறையுமே!

"அண்ணாச்சி, வந்தது வரட்டும். இன்னிக்குப் போராடத்தாம் போறம். இது ரொம்ப ஏமாத்து. அப்ப மூடைக்குப் பதிமூணு காசு குடுக்கட்டும்?"

"....."

"அட்வான்ஸ் வாங்கிட்டு உப்பத் தொட மாட்டமுன்னா? எவுள்ளியளா? சாக்கப் புடிச்சி உப்பைக் கொட்டுங்க! நேத்து முந்தாநா அம்பதுக்கு நீங்க துட்டு வாங்கல? இந்தப் பய பனஞ்சோல அளத்துல தவராறு பண்ணிட்டு இங்க வந்திருக்கா. இவனைச் சேத்ததே தப்பும். ஆவட்டும்!"

தரகன் குரல் ஓங்குகிறது. கங்காணியும் சேர்ந்து கொள்கிறான்.

"அளத்துல லாரி வந்து நிக்கிது; இப்ப என்ன தவராறு? அம்பதுன்னா அம்பதுதான்..."

"இது அநியாயம். ஏமாத்தல்..."

"ராமசாமி மொத நாளே நீ மொறச்சா போச்சு! ஒனக்கு தா நட்டம்."

"அண்ணாச்சி, ஒங்கக்கே இது நாயமாத் தோணுதா? நாம ஒத்துமையா இருந்துதா இவனுவ அக்கிரமத்த முறிக்கணும். எழுபத்தஞ்சு கிலோ மூடை தானே வழக்கம், முறை? இது அநியாயக் கூலிக் குறைப்பு இல்லையா?" என்று ராமசாமி பொங்குகிறான்.

"இப்ப இதுதா நடைமுறை. இப்ப வேலை தொடங்கல, நான் வேற நடவடிக்கை எடுப்பேன்..." கணக்கப்பிள்ளையின் காதைக் கடிக்கிறான் தரகன்.

கங்காணி ராமசாமியிடம் வந்து சங்கடத்தை எடுத்துரைக்கிறான்.

"வளஞ்சுதாங் குடுக்கணும், என்னேய பின்ன? வீணா தவறாறு பண்றது தா மிஞ்சும். அவ இப்ப போன் பேசுவா, போலீசக் கூப்பிடுவா, தரகன் கணக்கப்பிள்ள எல்லாம் பெரியவிய பக்கம். மொதலாளிய கூட்டாயிடுவா. நமக்குத்தா கஷ்டம். ஒன்னக் கெஞ்சுத..."

வேறு வழியில்லை. எழுபத்தைந்து கிலோ மூட்டையைத் தைக்க இடுப்பொடியாது. ஐம்பது கிலோ மூட்டை தைக்க இடுப்பொடிகிறது.

"உலகத் தொழிலாளரே, ஒன்று படுங்கள்... ஒன்று... ஒன்று படுங்கள்..."

அது நடக்குமோ?

ராமசாமி குத்துப்பட்ட மென்மையான உணர்வுகளைக் கடித்துக் குதறித் தொண்டைக் குழிக்குக் கீழ் தள்ளுவது போல் விழுங்கிக் கொள்கிறான்.

மேலே வெண்துகில் வீசி மூளிச் சந்திரிகையை மறைக்கிறது வானம்.

வெண்மைக் குவியல்களை மனிதக் கூறுகள் தமது மூச்சுக் காற்றைப் பிழிந்து சாக்குப் பைகளில் நிரப்பி வண்டியில் ஏற்றுகின்றன.

அத்தியாயம் - 18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் கீதமிசைக்கின்றன. அவற்றுக்குச் சோற்றுக் கவலை, தொழிற் கவலை, கல்யாணக் கவலை, பிள்ளை குட்டிக் கவலை எதுவுமே இல்லை. அந்தந்த நேரத்து இயற்கை உந்துதலுக்கேற்ப வாழ்கின்றன. ஒரு பறவை பட்டினி கிடந்து செத்ததாகத் தெரியவில்லை. மனிதன் அறிவு பெற்றிருக்கிறான். ஒருவன் மற்றவனை அமுக்கி வாழ்வதே அறிவு பெற்றதன் பயனாக இருக்கிறது. இந்த இடைவிடாத போராட்டம் தான் எல்லா நிலைகளிலும் என்று நினைத்துக் கொண்டு அருணாசலம் நடக்கிறார்.

அவர் சற்று முன் தான் தூத்துக்குடியிலிருந்து வரும் முதல் காலை பஸ்ஸில் வந்து இறங்கினார். நேராக வீட்டுக்குள் செல்லாமல் அளத்துக்கு நடக்கிறார். முதல்நாள் மாலையில் சென்றிருந்தவர், இரவே திரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தில் உட்கார்ந்து விட்டார். பொழுது சென்றது தெரியவில்லை. பொன்னாச்சிக்காக அந்தப் பையனைக் கண்டு வரத்தான் அவர் சென்றிருந்தார். அவன் வீட்டுப் பக்கமே மண் திடலில் எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கங்காணிமார், பெண்கள், கூலிக்காரர்கள் எல்லோருமே இருந்தார்கள். தொழிற்சங்கத்துத் தன்பாண்டியனும் இருந்தான்.

"தொழிலாளிகளை ஒண்ணு சேக்கறதுன்னா 'மம்முட்டி, கடப்பாரை, தடி இதுங்களை வச்சிட்டு வேலைக்கிப் போனா கை வேறு கால் வேறக்கிடுவம்'னு பயமுறுத்தித்தான் ஆகணும்னா, அந்த அடிப்படையே சரியில்லை" என்று பேசிக் கொண்டிருந்த இளைஞன் தான் ராமசாமி என்று தெரிந்து கொண்ட போது மனதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

"தொழிலாளிகள் தங்கள் நிலைமைகளள உணர்ந்து ஒண்ணு சேரணும்!" என்றூ அவன் கூறிய போது ஒருவன் நையாண்டி செய்தான்.

"கொக்கு தலையில் வெண்ணெய வச்சுப் பிடிக்கிற கதை தா அது. இப்ப தொழிலாளியெல்லாம் உணராமயா இருக்காவ? உணந்துதா அணு அணுவாச் செத்திட்டிருக்கம்!"

"அது சரி, இங்கே ஒரு பேச்சுக்குச் சொல்லுற குடி தண்ணி இங்கே இல்ல. எத்தினி காலமாவோ எல்லாப் பொண்டுவளும் பாத்திக் காட்டுல உழச்சிட்டு வந்து மைல் கணக்கா தவ தண்ணிக்கும் நடக்கா. இது ஒரு மனு எளுதிச் சம்பந்தப்பட்டவங்க கிட்டக் குடுக்கணுமின்னோ எல்லோரும் சேந்து கூட்டாக் கூச்சல் போட்டுக் கேட்கணுமின்னோ ஆரு வழி செஞ்சிருக்கா? நமக்குப் பிரச்சினை ஒண்ணா, ரெண்டா? வெளி உலகமெல்லாம் திட்டம் அது இதுன்னு எத்தினியோ வருது. எது வந்தாலும் நம்ம வாய்க்கும் எட்டுறதில்ல. இந்தப் பிள்ளங்களுக்குப் படிக்கணுமின்னாலும் வசதியில்ல. நானும் ஒண்ணேகா ரூவாக் கூலிக்கு உப்புக் கொட்டடிக்குத் தாம் போன. அதே படிக்க வசதி இருந்தா வேற விதமா முன்னுக்கு வந்திருக்கலாம். நம்ம உலகம் உப்பு உப்புன்னு முடிஞ்சி போவு. கரிப்பிலியே இந்தத் தொழிலாளி அழுந்திப் போறா. இதுக்கு ஒரு நல்ல காலம் வரணுமின்னா நாம முன்னேறணும்னு நினைச்சு ஒண்ணு சேந்துதா ஆகணும்..."

அந்தச் சொற்கள் அவரது உள்ளத்தில் இன்னமும் எதிரொலிக்கின்றன. பொன்னாச்சியை அவனுக்குத்தான் கட்டவேண்டுமென்று அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தாயை அவரால் முதல் நாள் பார்த்துப் பேச முடியவில்லை. பையனை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசினார்.

தங்கபாண்டி ஓடை கடந்து வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு அவர் நிற்கிறார்.

"நேத்து நீரு எங்க போயிருந்தீரு மாமா?" என்று கேட்ட வண்ணம் அவன் வண்டியை விட்டிறங்கி வருகிறான்.

"நேத்து நீ உப்பெடுக்க வந்தியா?"

"நா வரல மாமா. தீர்வ கட்டலன்னு முனுசீப்பு ஆளுவ உப்பள்ள வாராவன்னாவ. ஆச்சி புருவருத்திட்டிருந்தா..."

அவர் திடுக்கிட்டுப் போகிறார். அவர் வீட்டில் ஆச்சியைப் பார்க்கவில்லை. சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அறைச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

அவர் உடனே பரபரப்பாக அளத்தை நோக்கி விரைகிறார்.

முனிசீப்பு அவ்வளவுக்குக் கடுமை காட்டி விடுவாரோ?

யாரும் வந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்... அவர் வரப்பில் வாரி ஒதுக்கிய உப்பு அப்படியே தானிருக்கிறது. தீர்வை கட்டவில்லை. இரண்டாண்டுத் தீர்வை பாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லை. வரும் ஆண்டுடன் குத்தகையும் புதுப்பிக்க வேண்டும். இருநூறு ஏக்கர் கூட்டுறவு உற்பத்தி நிலம் என்று பேர் வைத்துக் கொண்டு பத்து ஏக்கர் கூட உற்பத்தி செய்யவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்து விடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த அச்சம் வேறு ஒரு புறம் அவருள் கருமையைத் தோற்றுவிக்காமல் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல், அப்படியெல்லாம் நடக்காது என்ற ஓர் தைரியம் அவருக்கு எப்போதும் இருக்கிறது.

தங்கபாண்டியிடம் கோபம் வருகிறது.

"ஏன்ல பொய் சொன்ன?"

"நா ஆச்சி சொன்னதைக் கேட்டுச் சொன்ன, அப்ப இன்னிக்கு வாராவளா இருக்கும்..."

"அவெ உப்ப அள்ளி ஒனக்குக் கொள்ள வெலக்கிக் குடுப்பான்னுதான் சிரிக்கே?"

முன் மண்டையில் முத்தாக வேர்வை அரும்புகிறது அவருக்கு.

"கோவிச்சுக்காதிய மாமா. வண்டி கொண்டாரட்டுமா உப்பள்ளிப் போகட்டுமா?"

"எலே... இங்கி வாலே... ஒங்கிட்ட ஒரு ஒதவி வேணும்."

அருணாசலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன் மண்டையைத் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.

"சொல்லு மாமா!"

"ஒரு அந்நூறு ரூவா வேணும்ல. வட்டுக் கடனாக் குடுத்தாலும் சரி..."

அவனுடைய கண்களில் ஒளிக்கதிர்கள் மின்னுகின்றன.

"இப்ப மொடயா மாமா? வட்டுக் கடன் வாங்கித் தீர்வை கட்டவா போறிய?"

"வேற மொடயும் இருக்குலே. ஒங்கிட்ட இருக்குமா?"

"அண்ணாச்சிட்டத்தா கேக்கணும். எப்படியும் இந்தப் புரட்டாசிக்குள்ள மழக் காலம் வருமுன்ன கலியாணம் கெட்டி வய்க்கணும்னு மயினியும் சொல்லிட்டிருக்கா. பொண்ணு ரெண்டு மூனு பாத்து வச்சிருக்கா, ஆனா எனக்குப் பிடித்தமில்ல..."

"புடிச்ச பொண்ணாப் பாத்துக் கெட்டு, ஒனக்குப் பொண்ணா இல்ல?"

"ஒங்கிட்டச் சொல்றதுக்கென்ன மாமா? பொன்னாச்சிப் புள்ளயத்தா மனசில இட்டமாயிருக்கு..."

"ஒங்கிட்டப் பணம் இருந்தாக் குடு. இல்லேன்னா வேற தாவுலன்னாலும் ஏற்பாடு பண்ணித்தாலே. ஊரூரு பஸ் சார்ச்சி குடுத்திட்டுப் போயி அவனவங்கிட்டத் தீர்வை பிரிக்க வேண்டியிருக்கு. ஒரு பய கண்ணுல அம்புடறதில்ல. வேலை செய்யிறா, நல்ல துணி போடுறா, பொஞ்சாதிப் புள்ளய கூட்டிட்டுச் சினிமாவுக்குப் போறா. இதுக்குத் தீர்வை ரெண்டு ரூபா குடுக்கணும்னா இப்ப கையில பைசா இல்லைன்றா, இது கூட்டுறவா? கமிட்டிக்கார, பேர் போட்டுக்கதா கமிட்டிக்காரன்னு நினய்க்கா..." என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார் அருணாசலம்.

"பாக்கேன் மாமா, எங்கிட்ட இருந்தா அட்டியில்ல. ஒங்கக்குக் குடுக்க என்ன மாமா? ஆனா வட்டிதா முக்கா வட்டி ஆவுமேன்னு பாக்கேன். தவற தாவுல தா வாங்கணும்..."

"வட்டிக்குச் சோம்பினா முடியுமா? தொழிலாளி நிலைமை வட்டிக்கு வாங்கறாப்பலதான இருக்கு? வங்கில கடன் கொடுக்காங்க. தொழிலாளிய நம்பி எவன் ஷூர்ட்டி போடுறா?"

அருணாசலம் அவனுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு தான் அவனுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் நடிக்கிறார். அவனை ஏமாற்றுவதற்குக் கஷ்டமாகத் தானிருக்கிறது.

ஆனால் பொன்னாச்சி ராமசாமிக்கே உரியவள் என்று அவர் தீர்மானித்து விட்டார். தங்கபாண்டியனைப் போல் பலரைக் காண முடியும். அவன் துட்டுச் சேர்ப்பான். பெண்ணைக் கட்டுவான். நகை நட்டுப் போட்டு இரண்டு நாள் கொஞ்சி விட்டு மூன்றாம் நாள் அடித்து அதிகாரம் செய்வான். குடிப்பான், நகையை வாங்கி அடகு வைப்பான். இங்கே பாலம் வந்தால் இவன் தொழில் படுத்துவிடும். ('பாலமாவது வருவதாவது' என்று அவரைப் போன்றவர்கள் அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்கலாகாது!)

ஆனால் ராமசாமியோ, ஆயிரத்தில் ஒரு பையன். மாசச் சம்பளம், அவனுக்கென்று அவர்கள் காட்டிய 'தயாளம்' எல்லாவற்றையும் பொது இலட்சியத்துக்காக உதறி விட்டு வந்திருக்கிறான். தலைவன் என்று சொல்லிக் கொண்டு வரும் ஆட்களிடம் இல்லாத நேர்மை இவனுக்கு இருக்கிறது. அவன் தலைவனாக வருவான். அவனுக்குப் பெண்ணைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வது அவருக்குப் பலம். பொன்னாச்சி அவனிடம் இட்டமாக இருக்கிறாள். அவன் தான் சிறந்தவன். அதற்காக இவனை ஏமாற்றலாம்...

"ஏல... ஆச்சியிட்ட மூச்சி விட்டிராத... பத்திரம்!" என்று எச்சரித்து வைக்கிறார்.

அவன் சிரித்துக் கொள்கிறான். "பொன்னாச்சிய எப்ப மாமா கூட்டிட்டு வாரிய? மானோம்புக்குக் கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள?"

"கூட்டிட்டு வாரணுந்தா. ஒனக்குத் தெரியாதா தங்கபாண்டி. வந்தா ஒரு சீலை எடுத்து நல்லது பொல்லாது செய்யணும். இங்க என்ன இருக்கு? இந்தப் பய்யன் படிச்சு முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும் போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு பிள்ளையோடு போக வேண்டியது தான?..."

"...அது சரி. பொன்னாச்சி எங்கிட்டச் சொல்லிட்டுத் தா பஸ் ஏறிப் போச்சு..."

அவன் மீசையைத் திருகிக் கொண்டு சிரித்துக் கொள்கிறான்.

"அப்பிடியா?" என்று அவர் வியந்தாற் போல் கேட்கிறார்.

"ஆமா... பணம் எப்ப வேண்டும் மாமா?"

"நாளைய கொண்டாந்தாலும் சரி, நா நோட்டு எழுதிக் குடுக்கே."

"அதுக்கென்ன மாமா, ஒங்க பணம் எங்க போவு?"

அவன் ஆசை நம்பிக்கையுடன் வண்டிக்குச் சென்று ஏறிக் கொண்டு போகிறான்.

ஐநூறு ரூபாய் கைக்கு வந்ததும், அந்தத் தாலியை மூட்டு விட வேண்டும். ஒரு சேலை, இரண்டொரு பண்டங்கள், வேட்டி எல்லாம் வாங்கி, திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கல்யாணம்... கல்யாணம். அவர் தொழியைத் திறந்து விட்டு, கிணற்றில் நீரிறைக்கத் தொடங்குகிறார்.

ஆச்சி குளிக்க அவ்வளவு காலையில் சென்றிருக்க மாட்டாள். முன்சீஃப் வீட்டுக்குச் சென்றிருப்பாளோ?

பசி கிண்டுகிறது.

குழந்தைகள் அவர் வந்துவிட்டதைச் சொல்லியிருப்பார்கள். உப்பை வாரிப் போட வேண்டும். அவள் வருவாளோ? சற்றே ஆசுவாசமாகச் சார்ப்பு நிழலில் அமர்ந்து கொள்கிறார். அவள் தலையில் வட்டி, இடுப்பில் மண்குடம் சகிதமாக வருவது தெரிகிறது. சோறு கொண்டு வந்திருப்பாள்...

அவள் அருகே வந்ததும் நல்ல நீர்க் குடத்தை வாங்கி வைக்கிறார். தலைச்சுமையையும் இறக்கியதும் அவள் சேலை மடிப்பிலிருந்து ஒரு பழுப்பு நிறக் கடித உறையை எடுத்து அவரிடம் கொடுக்கிறாள். 'துணைச் செயலாளர்' கூட்டுறவு உப்புத் தொழிலாளர் உற்பத்தி விற்பனைச் சங்கம் என்று போட்டு மேலிடத்திலிருந்து வந்திருக்கும் கடிதம்.

"தீர்வை கட்டச் சொல்லி வந்திருக்கிற நோட்டீசுதான? இத மூட்ட கட்டிக்கிட்டு வந்தியாக்கும்!"

"எனக்கு என்னெளவு தெரியும்? வள்ளிப் பொண்ணை வுட்டுப் படிக்கச் சொன்ன. நேத்து முன்சீஃப் வீட்டு ஆச்சி சொன்னாவ. லீசைக் கான்சல் பண்ணிடுவாகன்னு. என்னவோ பாட்டரி வர போவுதா? அவிய பாலங்கீலம் போட்டுக்குவாகளாம்! என்ன எளுதியிருக்குன்னு எனக்கென்ன எளவு தெரியும்?"

அவருக்குக் கை நடுங்குகிறது. கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. "கண்ணாடி கொண்டாந்தியா?"

"கொண்டாந்திருக்கே!" என்று பனநார்ப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறாள்.

அவர் கைகளைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பிரிக்கிறார். அருணாசலத்துக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் கூட்டுறவுச் சங்க கடிதங்கள் தமிழில் வருகின்றன. அவர்களுடைய நிலக் குத்தகை இருபது ஆண்டுகள் முடிந்து விடுவதாலும், மூன்று தீர்வைகள் கட்டியிராததாலும், நிலக் குத்தகை இனி புதுப்பிக்கப்படுவதற்கில்லை என்றும் கடிதம் தெரிவிக்கிறது.

முன்பே அந்த அதிகாரி "இருநூறு ஏகராவில் பத்தே ஏகராக்கூட நீங்கள் உப்பு விளைவிக்கவில்லை. இது எப்படிக் கூட்டுறவுச் சங்கம் நன்றாக நடப்பதாகக் கொள்ள முடியும்?" என்று கேட்டார்.

நிலம் பட்டா செய்யும் போது எல்லோரும் வந்தார்கள். இப்போது...

அவருடைய கண்களிலிருந்து கரிப்பு மணிகள் உதிருகின்றன.

அத்தியாயம் - 19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலைவு நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்புமாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது. முட்செடிகள் முன்போல் தலைவிரிச்சிப் பிசாசுகளாகத் தோன்றவில்லை. 'என்னம்மா?' என்று கண்சிமிட்டி இரகசியம் பேசுகின்றன. யார் வந்தாலும் எதிர்த்து விட முடியும் என்று தோன்றுகிறது. இந்தத் தெம்புக்கு என்ன காரணம்?

புரட்டாசியில் நவராத்திரி விழா - எங்கு பார்த்தாலும் அம்மன் கொலுவிருக்கையும், பூசையும் பொங்கலும் அமர்க்களப்படும். அதற்கு முன்னர் மாளய அமாவாசையில் மழை மணி விழும் என்பார்கள். ஆனாலும் முக்காலும் விழாது. வேலை நீடிக்கும். மாமன் வந்து போயிருக்கிறார். பனஞ்சோலை அளத்தில் ஒரு ஆண்டு முழுதும் மழைக்காலம் வரையில் வேலை செய்தால் ஒரு சேலை எடுத்துக் கொடுப்பார்கள். கல்யாணமென்றாலும் பணம் இருநூற்றைம்பது கொடுப்பார்கள். மாமனுக்குக் கஷ்டம் அதிகமிருக்காது... பிறகு...

சாயாககடைப் பக்கம் ராமசாமி நின்று ஒரு சிரிப்பைச் சிந்துகிறான். அவனருகில் இன்னும் பல இளைஞர்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

"ஏதும் விசேசமா?" என்று அவன் கேட்கும் போது அவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். அவளுக்கு ஏதோ மணமேடையில் மற்றவர் கேலி செய்வது போல நாணம் கவிகிறது.

பாஞ்சாலி வெடுக்கென்று, "இன்னிக்கு இனிஸ்பெட்டர் வந்தாவ, எங்கள எல்லாம் கொட்டடிலிலேந்து அந்தால பம்ப் கொட்டடி தாண்டி கோயில் செவர் மறப்புல ஒக்காத்தி வச்சிட்டா..." என்று சேதி தெரிவிக்கிறாள்.

"யாரு இனிஸ்பெட்டரு? போலீசா வந்திச்சி?" என்று அங்கு எட்டிப் பார்க்கும் ஒருவன் விசாரிக்கிறான்.

"அட, இல்லப்பா, 'லேபர் இனிஸ்பெட்டர்' வந்திருப்பா. பிள்ளங்களை ஒளிச்சி வைப்பா!" என்று ராமசாமி விளக்கம் கூறுகிறான்.

"என்னக் கங்காணி அடிச்சிட்டார்; தொழியத் தொறந்துவுடுன்னு அவியதா சொன்னா. பொறவு ஏண்டா தொறந்தேன்னு அடிச்சா. வேற தொழியல்ல தொறக்கச் சொன்னேங்கா. மூக்குலேந்து ரத்தம் வந்திச்சி" என்று பச்சை செய்தி தெரிவிக்கிறான்.

"இருக்கட்டும். எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும். நாமல்லாம் கோரிக்கை குடுப்பம். ஞாயிற்றுக்கிழமை வாரம்..."

பொன்னாச்சிக்குப் பூமியில் கால் பாவி நடப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் அவர்கள் நுழைகையில் அவர்கள் வீட்டு முற்றத்தில் இருள் பரவும் அந்த நேரத்தில் யாரோ கையில் பையுடன் நிற்கிறான். அரையில் பூப்போட்ட கைலியும், மேனியில் ஒட்டாத பாம்புத் தோல் போல் படம் போட்ட சட்டையும் அணிந்து கையில் கடியாரம் கட்டிக் கொண்டிருக்கிறான். மோதிரம் விரலில் பளபளக்கிறது. முடியில் வாசனை எண்ணெய் தொட்டு சீவியிருக்கிறான். அருகில் வரும் போதுதான் திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். சிரித்துக் கொண்டு அவளிடம் பையை அவன் நீட்டுகிறான்.

தங்கபாண்டி... தங்கபாண்டி எதற்கு வந்திருக்கிறான்? அவள் பையை வாங்கிக் கொள்ளாமல் தயங்கி நிற்கிறாள். அப்போது சரசி ஓடி வந்து, "அக்கா, மாமா ஊரிலேந்து இவ ஒன்னப் பாக்க வந்திருக்கா..." என்று செய்தி அவிழ்க்கிறாள்.

"சின்னம்மா வரல சோலி முடிஞ்சி?"

"நல்ல தண்ணிக்குப் போயிருக்கா..."

"வாங்கிக்க பொன்னாச்சி! மாமா தா என்ன அனுப்பினா."

"மாமா சொகந்தானா? மாமி புள்ளிய எல்லாமும் எப்படியிருக்கா? போன வாரந்தா மாமா வந்திட்டுப் போனா..."

"சொகந்தா. ஆனா... மாமாவுக்கு வாயுக்குத்து மூச்சுக் குத்து வந்து படுத்திருக்காவ, அதா என்ன அனுப்பிச்சாவ. கூட்டிட்டுவான்னு சொன்னாவ..."

"ஒம்ம அனுப்பிச்சாவளா?"

அவள் கேட்டுக் கொண்டு அவனைச் சட்டை செய்யாமல் உள்ளே சென்று தாழிட்ட கதவைத் திறக்கிறாள்.

பச்சையிடம் அவன் பையைக் கொடுக்கிறான்.

"என்ன அது?"

"ஒண்ணில்ல பொண்ணாச்சி... கொஞ்சம் சேவும் மிட்டாயும் வாங்கியாந்த. பொறவு கட்டிக்கப் போற பொண்ண வெறுங்கையோட பாக்க வருவனா?" அவன் சிரிப்பு - வெண்மையான பற்கள் இருட்டில் கள்ளமில்லாததாகப் பளிச்சிடுகிறது. ஒரு கணம் அவள் குலுங்குகிறாள்.

"மாமன் இந்த அப்பியியிலியே கலியாணத்த முடிச்சிடலாண்ணு சொன்னாவ. அத அங்க பாத்திக் காட்டு அனுப்பியிருக்கிறாவ. திரிச்சிக் கூட்டியாந்துடணும், ஒடம்பு முடியாம போச்சின்னாவ. தீர்வ கட்டல. முன்சீஃபு ஆளுவள வுட்டு உப்ப வாரிட்டுப் போயிட்டா. பொறவு நாந்தா அஞ்சு நூறு கடங்குடுத்த. தூத்தூடி போயி அத்தக் கூட்டிட்டு வந்திருன்னாவ..."

இவனும் குடித்திருப்பானோ என்ற ஐயம் கொண்டு அவள் பார்க்கிறாள். நிச்சயமாக மாமா இப்படிச் சொல்லி இவனுடன் புறப்பட்டு வர அனுப்பி இருக்க மாட்டார்! வேலுவை அனுப்பினாலும் அனுப்பியிருப்பார்! வேலு கால் பரீட்சை முடிந்து ஊர் திரும்பியிருப்பானோ?

"எப்படின்னாலும் நானிப்ப உம்மகூடப் புறப்பட்டு வரதுக்கில்ல. மாமாவுக்கு ஒடம்பு முடியலின்னா சங்கட்டமாத்தானிருக்கு. இன்னிக்கி விசாளன். வெள்ளி போவ நாயித்துக்கிளம நா வார, இல்லாட்டி பச்சைய அனுப்புறமின்னு சொல்லும்..."

அவன் மேல் பேச்சுப் பேசுவதற்கே இடமில்லாமல் அவள் உள்ளே சென்று விடுகிறாள்.

தங்கபாண்டி பையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து அகலுகிறான்.

மாளய அமாவாசையன்று மழை மணி விழும் என்று எதிர்பார்ப்புடன் உப்பளத்தில் கெடுபிடியாக வேலைகள் நடக்கும். மழை மணி விழுந்துவிட்டால் உப்புக்காலம் தூத்துக்குடியில் ஓய்ந்துவிடும் என்று தீர்த்து விடுவதற்கில்லை. பருவ மழை நாகப்பட்டணம், பாண்டிச்சேரி, கேரளத்துக்கரை என்று எங்கு அடித்துக் கொட்டினாலும், புயல் சுழன்று அடித்தாலும் தூத்துக்குடி உப்புக்குப் பெருஞ்சேதம் விளைவிக்க உடனே வந்து விடாது. உப்புக்காலம் தீபாவளியையும் தாண்டி நீடிப்பதுண்டு. ஆனால், மழை மணி விழுந்தால் உப்பு விலை ஏறும். தொழிலாளருக்கு வேலை கடுமையாகும். மழை அவர்களுக்குச் செழிப்புக்கும் வண்மைக்கும் பயன்படாததாகத் தொழிலை முடக்கி, முதலாளிகளுக்கு லாபத்தைக் கொண்டு வரும். அந்த லாபம் தொழிலாளருக்கு உபரியாக வண்மை கூட்டாது. எனவே அந்தக் காலங்களில் மிகத் தீவிரமாக உப்பை வாரித் தட்டு மேடுகளில் சேர்ப்பதும், மழையில் கரையாமல் ஓலைத் தடுப்புப் போடுவதும், அல்லது விரைவாக விற்று மூட்டைகளாக்கி விலை ஏற்ற காலத்தில் அம்பாரங்களைக் கரைப்பதுமாகப் பணிகள் நெருக்கும்.

இந்தக் காலத்தில் தொழிலாளர் அனைவரும் திரண்டு மேலிடத்துக்குத் தங்கள் கோரிக்கைகளை வைத்தால்? முக்கியமாகப் பனஞ்சோலை அளத்திலும் தொழிலாளர் ஒன்று பட வேண்டும்!

'ஞாயிற்றுக்கிழமை வாரன்' என்ற சொல் பொன்னாச்சியின் செவிகளில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. சின்னம்மா, அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் உப்பு அறைவை ஆலையில் அதிகப்படி வேலை என்று மூன்று மணிக்கே எழுந்து போகிறாள். சரசிக்கு சங்கமலத்தாச்சியின் வீட்டில் படுக்கை. அதிகாலையிலேயே பொன்னாச்சி எழுந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து நிரப்பி, வீடு பெருக்கி, பாண்டம் கழுவித் துப்புரவு வேலைகளில் ஈடுபடுகிறாள். அப்பன் எழுந்து பின்புறம் செல்கிறார்.

செங்கமலத்தாச்சி வழக்கம் போல் வாயிற்படியில் அமர்ந்து சாம்பற் கட்டியை வைத்துப் பல் துலக்குகையில், ராமசாமி, பழனிவேலு, மரியானந்தம், மாசாணம் எல்லோரும் வருகின்றனர்.

"ஒங்களப் பாத்துப் போகத்தா வந்திருக்கம் ஆச்சி..." என்று ராமசாமி புன்னகை செய்கிறான்.

"எல, பொய் சொல்லாத! பொய் சொன்னா அரக் கஞ்சியும் கெடக்காது!"

அவன் கலகலவென்று சிரிக்கிறான். கண்கள் சிவந்து இருக்கின்றன. முடிசீவி, புதுமையாக அவன் தோற்றமளித்தாலும் தூங்கியிராத அயர்வு அவன் முகத்தில் தெரிகிறது.

"சத்தியமா ஆச்சி, ஒங்களத்தா பார்க்க வந்தது. இங்க, தொழிலாளர் பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்னு ஒங்களத்தா கேக்க வந்தே..."

"பொண்டுவள ஒண்ணு சேக்கறதா? ஆதி நாள்ளேந்து அது முடியாத காரியமின்னு தீந்து போயிருக்கே. ஒனக்குத் தெரியாதால?" என்று கேட்டுவிட்டு ஆச்சியே பதிலையும் கூறிக் கொள்கிறாள்.

"ஆனா ஒனக்கெப்படித் தெரியும்? ஒங்கப்பச்சிக்கு ஆத்தா முதல்லியே செத்திட்டா. அவியளோட பொறந்தவெல்லாம் ஸ்லோன்ல கெடக்கா. மாமி நாத்தி மயினி சண்டை, சக்களத்தி சண்ட ஒண்ணும் பாத்திருக்க மாட்ட. பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்ற; அது ஆவாத காரியமல்ல!"

"ஏட்டி சரசி! ரூம்ப பெருக்கிப் போடுறீ?" ஆச்சி மகிழ்ச்சியான நிலையில் தானிருக்கிறாள் என்று ராமசாமி புரிந்து கொள்கிறான்.

சரசி பரபரவென்று முன்னறையைப் பெருக்கித் தள்ளுகிறாள். பாதி முடைந்த ஓலைப் பெட்டியை நகர்த்தி வைத்துப் பெஞ்சியைத் துப்புரவாக்குகிறாள்.

"வாங்க, உள்ள வந்து இரிங்க..."

செம்பு நீரெடுத்துப் பின்புறம் சென்று வாய் கொப்புளித்து விட்டு சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

நெற்றியில் நீண்ட பச்சக்கோடு. இடது புறங்கையில் ஒரு யாகசாலைக் கோலம். கைத்தண்டின் உட்புறம் மூன்றெழுத்துக்கள் தெரிவதை ராமசாமி கவனிக்கத் தவறவில்லை. அது முத்திருளாண்டியின் பெயரல்ல. அவர்கள் பெஞ்சியில் அமர்ந்து கொள்கின்றனர்.

"ஏட்டி, ஒரு ஏனத்தை எடுத்திட்டுப் போயி இட்டிலி வாங்கிட்டு வா. சாம்பாருக்கு தூக்குக் கொண்டு போ!" மீண்டும் உள்ளே சென்று மெதுவான குரலில் சரசிக்குக் கட்டளை இடுவது அவர்கள் செவிகளில் விழுகிறது.

சரசி சொக்குவின் வீட்டுப்படியில் பெரிய போகணியை வைத்துக் கொண்டு நிற்கும் போதுதான் திண்ணை மெழுகும் பொன்னாச்சி பார்க்கிறாள். போகணியைக் கொண்டு வந்திருக்கிறாள் இட்டிலிக்கு?

"ஆரு வந்திருக்கிறது டீ? ஆரு?"

"அவியதா, ஆரெல்லாமோ வந்திருக்கிறாவ...!"

பொன்னாச்சி முற்றத்துக்குப் பத்து வயசுச் சிறுமியாக ஓடி வந்து, சன்னல் வழியாகப் பார்க்கிறாள். அவன் குரல் கேட்கிறது.

"ஆச்சி, ஏனிப்படி செரமப்படுறிய? நாங்க டீ குடிச்சிட்டுத்தா வாரம்!"

"அது தெரியும்ல!..." என்று இலைக்கிழிசல்களில் இட்லியும் சட்னியும் எடுத்து வைக்கிறாள்.

"போயி ஆறுமுவத்தின் கடையில், நல்ல டீயா, நாலு டீ, ரொம்பச் சக்கரை போட்டுக் கொண்டாரச் சொல்லிட்டு வா!" என்று விரட்டுகிறாள்.

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். எல்லோரும் வீச்சும் விறைப்புமாக வளர்ந்திருக்கும் வாலிபப் பிள்ளைகள். ஊட்டமும் செழுமையுமில்லாமல் இல்லாமையும் சிறுமையும் நெருக்கினாலும் வாலிபம் கிளர்ந்தெழும் பிள்ளைகள். அவர்கள் அங்கே சாப்பிடுவதைப் படத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் அவனுக்கு நான்கு இட்டிலியும் சொக்கு கொண்டு வந்து வைத்து விடுவாள். அதைக் கண்ட பிறகுதான் அவன் எழுந்து முகம் கழுவிக் கொள்வான். அந்தப் பெஞ்சியில் தான் அவன் படுத்திருப்பான்; உட்கார்ந்து பேசுவான், படிப்பான். அவன் போன பிறகு அவள் இட்லி தின்பதையே விட்டுவிட்டாள். பையன் தேநீர் கொண்டு வருகிறான். அதை அவளே அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்.

"நீங்க ஒண்ணும் எடுத்துக்கலியே ஆச்சி?"

"நா சாயா குடிக்கமாட்டே. இதா கருப்பட்டி போட்டு நீரு கொதிக்கவச்சி ரெண்டு காப்பித்தூளப் போட்டு எறக்கி வச்சிடுவ. அதுதா. வெத்தில பொவயில. நா இட்டிலி டீத்தண்ணி ரெண்டும்..." தொண்டை கம்மிப் போகிறது. எழுந்து வெளியே செல்கிறாள்.

"ஏட்டி? பொன்னாச்சி? இங்ஙன வாட்டீ! மாப்பிள வந்திட்டான்னு ஒளிஞ்சிக்கிற?... சின்னாச்சி என் சேறா?"

"அப்பச்சியக் கூப்பிடுடீ!"

"சின்னம்மா வெள்ளெனவே அறவ மில்லுக்குப் போயிருக்காவ, இத வந்திருவா. அப்பச்சி பல்லு வெளிக்கிட்டிருக்காவ..."

"அவியல்லாம் தொழில் சம்பந்தமா பேச வந்திருக்கா... ஒரு விடிவு காலம் வராண்டாமா? பொண்டுவதா கூடிச் சேரணுமின்னு வந்திருக்கா. பாஞ்சாலியவுட்டு இந்த வளவில இருக்கிற அளத்துப் பொண்டுவ, வித்து மூடக்காரவுக எல்லாரையும் கூட்டிட்டு வாரச் சொல்லு? செவந்தகனி மாதா கோவிலுக்குப் போறவுல இசக்கிமுத்து, ஜீனத்து வாராளே, அவ அண்ண, எல்லாரிட்டயும் ஆச்சி கூட்டியாரச் சொன்னான்னு சொல்லு..."

சற்றைக்கெல்லாம் அங்கே திமுதிமுவென்று கூட்டம் கூடி விடுகிறது. முற்றத்தில் வந்து ஆங்காங்கு குந்துகின்றனர்.

"மூடை அம்பது கிலோன்னு போட்டுக் கூலியைக் குறைச்சிட்டாங்க. ஒம்பது பைசான்னு, அதைச் சொல்லணும்?" என்று இசக்கிமுத்து நினைவுபடுத்துகிறான்.

"இப்ப நாம முக்கியமா இதுவரய்க்கும் சேராத ஆளுகளைச் சேர்க்கிறதா பார்க்கணும். பனஞ்சோல அளத்துத் தொழிலாளியளை இதுவரைக்கும் ஒரு வேல நிறுத்தத்திலும் ஆரும் ஈடுபடுத்தல; நாம வேற பக்கம் அடிபிடின்னு நின்னு போராடி பத்துப் பத்துப் பைசாவா கூலி கூட்டிட்டு வந்திருக்கம். அங்கேயும் அது போல இருக்கிற அளங்கள்ள தா தொழிலாளிய ஏமாத்தப்படுறாங்க. பச்சப் புள்ளியள ரெண்டு ரூவாக் கூலி மூணு ரூவாக் கூலின்னு ஆச காட்டி அதுங்களுக்கு எதிர்காலம் இல்லாம அடிக்கியா. அவியளுக்குப் படிப்பு, அறிவு விருத்திக்குத் தொழில் பயிற்சி எதுக்கும் வாய்ப்பு இல்ல. இந்தத் தடவை நம்ம உப்புத் தொழிலாளிய, ஆலைத் தொழில் சட்டத்துக்குக் கொண்டு வாரணும். நம் ஒவ்வொருத்தரும் பதிவு பெற்ற தொழிலாளின்னு மாறணும் முப்பது வருசம் வேலை செஞ்சாலும் நம்ம பேரு அவங்க பேரேட்டில் இல்ல. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. முக்கியமா இதுக்கெல்லாம் போராடணும்..."

ராமசாமி சொல்லிக் கொண்டே போகிறான்.

"பொண்டுவல்லாம் எதெது சொல்லணுமோ சொல்லுங்கட்டீ!" என்ற செங்கமலத்தாச்சி, உள்ளே சென்று அந்த செல்ஃபில் வரிசை குலையாமல் வைத்திருக்கும் நோட்டுப் புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவிப் புரட்டிப் பார்க்கிறாள். அதில் அவன் பெயர் மட்டும் தான் எழுதி இருக்கிறான். உள்ளே தாளெல்லாம் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுரைக்கின்றன. அவனுடைய பேனா.. பேனா. பேனா மாதிரி பென்சில்...

தூசி தட்டி வைக்கும் பொருள்கள். அதை எடுத்துக் கீறிப் பார்க்கிறாள். பிறகு அவற்றைக் கொண்டு வருகிறாள்.

"எல்லாம் கேட்டு ஒளுங்கா வரிசையா எளுதிக்கிங்க!"

"மரியானந்தம் அண்ணாச்சி காயிதமும் பேனாவும் கொண்டு வந்திருக்கானே? அதுக்குத்தானே அவெ வந்தது?"

இருந்தாலும் ஆச்சி கொடுத்த நோட்டை வாங்கிக் கொள்கிறான் ராமசாமி. அதில் ஒவ்வொரு கோரிக்கையையும் கேட்டு அவன் எழுதிக் கொள்கிறான்.

நண்பகல் கடந்து வெயில் இறங்கும் வரையிலும் அவர்கள் பொழுது போவது தெரியாமல் பேசுகின்றனர். பிறகு ஒவ்வொருவராகக் கலைந்து போகின்றனர்.

பொன்னாச்சி உள்ளே சோறு வடிப்பதும், வெளியே வந்து பேச்சைக் கேட்பதுமாக அலைபாய்கிறாள். எல்லோரும் கலைந்த பின்னரே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலிதான் கவலையுடன் கேட்கிறது, "அக்கா, அம்மா ஏ இன்னும் வரல? அறவை மில்லுக்குப் போயிட்டுக் காலம வந்திடுமே? ஏ வரல..."

அடிமண் ஈரமாகக் கை வைத்ததும் பொல பொலவென்று சரிந்தாற் போல் ஓர் உணர்வு குழிபறிக்கிறது.

'சின்னம்மா பொழுது சுவருக்கு மேல் ஏறியும் ஏன் வரவில்லை?'

"அப்பச்சி? சின்னம்மா வரயில்லை...? பச்சயப் போயிப் பாக்கச் சொல்லலாமா? செவந்தகனி மாமனக் கூப்பிடுடீ..."

அவள் வாசலுக்கு வருகிறாள். செங்கமலத்தாச்சி வாயிற் படியில் நிற்கிறாள். சைக்கிளை வைத்துக் கொண்டு ஒரு ஆள் அங்கு ராமசாமியிடம் ஏதோ கூறிக் கொண்டிருக்கிறான்.

அவன் முகம் கறுக்க அவர்களை நாடி வருகிறான்.

"பேச்சியம்மன் அளத்துல காலம ஆரோ லாரி அறபட்டுப் பொம்பிள கெடந்தாளாம். ஆசுபத்திரில போட்டிருக்காம். இவ விசாரிச்சிட்டு வந்திருக்கா... சின்னாச்சி கருவேலக் காட்டு அளமில்ல?"

"ஐயோ...!" என்று ஒலி பீறிட்டு வருகிறது.

"சின்னம்மா... சின்னம்மா அங்கதா அதியப்படி வேலன்னு போனாவ... சின்னம்மா..."

பாஞ்சாலியும் சரசியும் அக்காவின், அழுகையொலி கேட்டு விம்மி அழத் தொடங்குகின்றனர். கண்ணுசாமியோ இடி விழுந்தாற் போல் உட்கார்ந்து விட்டான்.

சோறு வடித்து, தட்டு போட்டிருக்கிறாள். சாப்பிட உட்காரவில்லை. எல்லோரையும் பெரியாசுபத்திரிக்கு அழைத்துச் செல்கிறான் ராமசாமி.

அத்தியாயம் - 20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கிலிருந்து தான் எடுத்து வருகின்றனர். மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமையுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடி - அது சிதைந்து கூழாகி உருப்புரியாமல்... லாரியில் முகம் நசுங்கி விட்டதா?

பொன்னாச்சி லாரியில் அடிபட்ட உடம்பை அதுவரையிலும் பார்த்ததில்லை.

"ஐயோ, சின்னம்மா!" அவள் துயரம் பொங்கி வரக் கதறி அழுவதைக் கண்டு குழந்தைகள் எல்லோரும் கதறுகின்றனர்.

"இது லாரி மோதலல்ல. அறவை மில்லுல அடிபட்டு விழுந்திருக்கா. வெளிலே பாதையில அடிபட்டு விழுந்தான்னு சொல்றாவ. பொய்யி. அறவை மில்லுல மிசின் பில்ட்டில மாட்டியிருக்கும். அதா விசாரணை எல்லா அதுக்குள்ள ஆயிரிச்சி. ஞாயிற்றுக்கிழமையாதலால் அதிக ஆட்கள் நடமாட்டமுமில்லை. கொண்டு வந்து வெளியே போட்டு லாரியில் அடிபட்டிருக்கிறாள் என்று சொல்லியிருப்பார்கள்" என்று ராமசாமியும் தனபாண்டியனும் பேசிக் கொள்கின்றனர்.

வாயைத் திறந்து பேசமாட்டாள். பேசினால் அது சாட்டையடி போல் இருக்கும். அந்தச் சின்னம்மா உப்பளத்துக்கே இரையாகி விட்டாள்.

"சின்னம்மா! வெடிஞ்சதும் வந்துடுவேன்னு ரெண்டு ரூவாக் காசுக்காவ ஒழக்கப் போயி இப்படிக் கிடக்கிறயளே?..." என்று உள்ளம் புலம்பியழுகிறது. அவள் தாய் இறந்து போனபோது கூட அவள் இத்துணைத் துயரம் அனுபவிக்கவில்லை. தன் மீது வானமே இடிந்து கவிந்தாற் போன்று ஓர் சோகத்துள் அவள் அழுந்திப் போகிறாள்.

அவள் தன்னையும் தம்பியையும் அழைக்க வந்ததும் திரும்ப நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறியதுமான காட்சிகள் படலங்களாகச் சுருள் வீழ்கின்றன. அப்பனுக்கு உடம்பு சரியில்லை என்று அவளைக் கூட்டி வந்தவள் போய் விட்டாள். "அய்ந்நூறு ரூபா கடன்... கடனிருக்கு..." என்று சோற்றுப் பருக்கைகளை அளைந்து கொண்டு பிரமை பிடித்து உட்கார்ந்து விடும் சின்னம்மா... அவள் போய் விட்டாள். அவள் யாரோ? தான் யாரோ? சின்னம்மா எங்கோ பிறந்து எங்கோ எப்படியோ வளர்ந்து, யாருக்கோ மாலையிட்டு யாருடனோ, எப்படியோ வாழ்ந்து மக்களைப் பெற்று, இந்த உப்புக் காட்டில் உடலைத் தேய்த்து...

"சின்னம்மா!..." என்று கதறிக் கொண்டு உடலின் மீது விழுந்து அழுகிறாள் பொன்னாச்சி.

ராமசாமி அவளைக் கனிவுடன் தொட்டுத் தூக்குகிறான். "அழுவாத புள்ள. நீயே அளுதா மத்த புள்ளயெல்லாம் என்ன செய்யும்? அப்பச்சிக்கு ஆரு தேறுதல் சொல்லுவா...?"

அப்போது கங்காணியும் இன்னொரு ஆளும் அங்கு வந்து தனபாண்டியனை அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் பேசி விட்டு அவர் ராமசாமியிடம் வந்து விவரம் தெரிவிக்கிறார்.

"நூறு ரூபாய் செலவுக்குத் தந்திருக்கா. 'வட்டிக்கடன் ஓடிப் போச்சு, வேல அதிகப்படி நாஞ் செய்யிறேன் கங்காணி'ன்னு கெஞ்சிக் கேட்டா. எரக்கப்பட்டுக் குடுக்கப் போயி அறவை மில்லில மிசின் பெல்ட்டில மாட்டிக் கிட்டிச்சி. மொதலாளிக்கு மனசுக்கு ரொம்பச் சங்கட்டமாப் போச்சி. கூட இன்னுமொரு பொம்பிளயும் ஆம்பிளயாளும் இருந்திருக்காவ. ஓடி வந்து எடுக்குமுன்ன தல மாட்டிக்கிச்சு. வேணும்னு ஆரும் செய்யறதில்ல. எல்லாருக்கும் இது கஷ்டந்தா. மொதலாளி வீட்டில இன்னிக்குக் கலியாணப் பேச்சுப் பேச வராக. சொன்ன ஒடன ஸ்கூட்டர் எடுத்திட்டு ஓடியாந்தா. பொறவு போலீசெல்லாம் வ்ந்து எழுதிட்டுப் போயிட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டாந்தா. ஆரயும் குத்தம் சொல்றதுக்கில்ல. அந்தப் பொம்பிள தூக்கக் கலக்கத்தில தெரியாம... விழுந்திட்டா...ன்னு சொல்றானுவ. என்ன பண்ணலாம்?"

முப்பது ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை செய்த தொழிலாளிக்கே எந்த ஈட்டுத் தொகையும் கிடைப்பதில்லையே?

சின்னம்மாளை மண்ணில் புதைத்து விட்டு அவர்கள் வீடு திரும்புகையில் இரவு மணி ஒன்பதடித்து விடுகிறது. ராமசாமி அன்று வீட்டுப் பக்கமே செல்லவில்லை. அப்பனின் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. அழக்கூட தெரியாத சிலையாகிவிட்டார். சிவந்தகனிதான் அவரை முழுகச் செய்து கொண்டு வந்து உட்கார்த்தினான் திண்ணையில்.

சிவந்தகனியின் மனைவி சோறாக்கி வந்து அவர்களுக்கெல்லாம் போட்டாள்.

ராமசாமியும் படுக்கவில்லை.

செங்கமலத்தாச்சியும் உட்கார்ந்திருக்கிறாள்.

"என்ன விட்டுப் போட்டுப் போயிட்டா... நா என்ன பண்ணுவே..." என்று கண் தெரியாமல் விம்மும் அப்பனைப் பார்த்தாலே பொன்னாச்சிக்கு அழுகை வெடிக்கிறது.

"ஏட்டி அழுவுற? அழுதா என்ன ஆகும்? அவ போயிட்டா மவராசி. அந்தப் பய காட்டில மடிஞ்சி கெடந்தப்ப ராப்பவலா எம்பக்கத்துல ஒக்காந்து கெடந்தா. வேலய்க்கிப் போவல. நா ஒரு மாசம் இப்படியே ஒக்காந்து கெடப்பே. படுக்க மனமிராது - அளத்துலேந்து வந்து ஒக்காந்து தேத்துவா. ஒங்கக்கு ஆறுதல் சொல்ற துக்கமில்லதா ஆனா, இப்பிடியே இருந்திட்டா எப்பிடி? இந்த ஒலகத்தில நினச்சிப்பாத்தா நமக்கெல்லாம் சொகமேது துக்கமேது? ஒரு ஆம்பிளக்கின்னு அடிமப்பட்டுப் புள்ள குட்டியப் பெற்றது சொகமின்னா அதுல இன்னொரு பக்கம் எம்புட்டு நோவும் நொம்பரமும் இருக்கி! பொம்பிளக்கி சுகமும் துக்கந்தாம்பா. அதெல்லாம் இன்னிக்கு நினைச்சிப் பாக்கே. சுகம் எது துக்கம் எது? சுகப்பட்டவ நீண்டு நிக்கிறதுமில்ல, துக்கப்பட்டவன் மாஞ்சு போயிடறதுமில்ல. சினிமா பாக்கப் போறான், இப்பல்லா. அதுல சுகம் துக்கம் பாட்டு ஆட்டம் அழுகை எல்லாம் வருது. கடோசில ஒரு முடிப்பப் போட்டு மணியடிச்சிடறாங்க. எந்திரிச்சி வரோம்... அப்பிடித்தா..."

பொன்னாச்சி கண்ணீர் காய்ந்து கோடாக, அசையாமல் உட்கார்ந்து இருக்கிறாள். அவள் கூந்தல் தோள்களில் வழிந்து தொங்குகிறது. மங்கலான நிலவொளி தவிர வேறு விளக்கு அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.

"நேத்து இந்நேரம் கூட உசிரோட இருந்தா. இப்பிடிப் போயிடுவான்னு கொஞ்சங் கூட நினப்பு இல்ல..." என்று நினைவு கொள்ளும் போது சோகம் தாளாமல் குழி பறிக்கிறது.

"அவளுக்கு ஆட்டம் முடிஞ்சி மணி அடிச்சிட்டா ஆண்டவ. இல்லாட்ட எதுக்கு இந்தக் கூலிக்கிப் போறா?... பொம்பிளயாப் பொறக்கறதே பாவந்தா. கல்லுல நீதா போயி இடிச்சிக்கிற, முள்ளுல நீதா கால வச்சிக் குத்திக்கிற. ஆனால் கல்லு இடிச்சிச்சி, முள்ளு குத்திச்சின்னுதா ஒலவம் பேசும். ஏன்னா, கல்லும் முள்ளும் எதித்திட்டு வராது. பாத்திக்காட்டுல இளவயிசா ஒரு புள்ள வந்திட்டா அந்த காலத்துல யாரும் என்னேனும் செய்யலான்னு இருந்தது. பொறவு என்ன? மருதாம்பா கெட்டவ; புருசன் இருக்கையில விட்டு ஓடிட்டா. அவெ மானின்னெல்லாந்தா பேசுவா. அந்த காலத்துல நாத் தெருவுல போனா காறி உமிஞ்சவங்க உண்டு. சண்டையிலே போராடி கெலிச்சி வந்தாலும் அவெம்மேல எதிராளி அம்புப்பட்ட வடு இல்லாம போவாது. அப்பிடி எத்தினியோ வடு; இன்னிக்கு எல்லா வடுவையும் செமந்திட்டு நானிருக்கே. ஆச்சின்னு வாராக. சோத்துக்குத் தட்டில்லாத புழக்கம். சல்லிப் புழக்கம். தொழிலில்லாத காலத்துல அத்தயும் இத்தயும் வச்சு பத்து இருவதுன்னு வாங்கிட்டுப் போறாவ. கூலிக் காசுல அப்பப்ப கடன் கொண்டு வந்து தாராவ. அவ போராடி செயிக்காமயே போயிட்டா..."

ஆச்சி தகரப் பெட்டியைத் திறந்து துணியில் சுற்றிய வெற்றிலையை எடுத்து நீவிவிட்டுக் கிழித்து சுண்ணாம்பு தடவி அரைப்பாக்கையும் அதையும் போட்டுக் கொள்கிறாள்.

ராமசாமி அசையவில்லை. பொன்னாச்சிக்கு அன்று சோலை தன்னைத் துரத்தி வந்தது நினைவில் நெருடுகிறது.

ராமசாமிக்கு அதை அவள் சாடையாகக் கூறினாள். சோலை என்று பெயரும் கூறவில்லை. அவன் அவளிடம் வெறுப்புக் காட்டாமல் இருப்பானோ?

ஆச்சி புகையிலைச் சாற்றை வெளியில் போய் துப்பிவிட்டு வருகிறாள்.

"பொழுது ரெண்டு மணி இருக்கும். வேல வெட்டிக்குப் போவாணாமா? ஒன் ஆத்தாக்குச் சொல்லி அனுப்பினியா ராமசாமி?"

"இல்ல, ஆனால் சொல்லியிருப்பா மாசாணம். கங்காணிட்டியும் சமாளிச்சிக்கும்னு சொன்னே. செத்தப் படுத்து ஒறங்கணும். மூணு நாளா ராவுலதா வேல. ஆனா இப்ப படுத்தாலும் ஒறக்கம் புடிக்குமான்னு தெரியல. ஒரு உப்பளத் தொழிலாளியின் குடும்பம் எப்படி இருக்குங்கறதுக்கு இந்தக் குடும்பமே போதும். முப்பது வருசம் வேல செஞ்சும் ஒரு பிசுக்கும் ஒட்டல. பெரிய போராட்டத்துக்கு நாம கொடி எடுத்துத்தானாகணும். கட்சி கிட்சின்னு ஒண்ணூம் ஒதுங்கக் கூடாது. ஆச்சி நீங்கதா இதுக்கு சப்போர்ட்டா இருக்கணும். ரெண்டு நா வேலயில்லேன்னாக் கூடக் கஞ்சி குடிக்க ஏலாமப் போயிரும். முன்ன இருபத்து மூணு நா ஸ்டைக் பண்ணினாங்க. பனஞ்சோல அளம் இல்ல அப்ப. தாக்குப் புடிக்காம ஆளுவ போயிட்டா. கூலி கொறஞ்சி போச்சி. அப்படி அத்திவாரம் இல்லாத வீடு கட்டக் கூடாது..."

ஆச்சி ஏதும் மறுமொழி கூறவில்லை.

புகையிலைக் காரத்தில் அமிழ்ந்தவளாக மௌனமாக இருக்கிறாள். பிறகு பொன்னாச்சியைக் கிளப்புகிறாள்.

"போட்டி, போயி செத்தப் படுத்து ஒறங்கு. மாமனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கு. வெடிஞ்சி அவிய துட்டிக்கு வருவா. அப்பச்சி என்னேயான்னு பாரு! வெடிஞ்சி மத்தது பேசிக்கலாம்."

பொன்னாச்சி பெருஞ்சோரத்திலிருந்து எழுந்திருக்கிறாள்.

"நீ இந்நேரம் வீட்டுக்குப் போவாட்டி இப்படியே கெடந்து ஒறங்கு. தலையாணி போர்வை தார..." என்று ராமசாமியிடம் கூறுகிறாள்.

"அதெல்லாந் தேவையில்ல ஆச்சி. ஒறக்கம் வந்தா நின்னிட்டே கூட ஒறங்கிடுவ. இப்ப நீரு பாயி தலையாணி தந்தாலும் உறக்கம் வராது போல இருக்கி..."

"போட்டி... போ, ஏ நிக்கிற."

பொன்னாச்சி அங்கிருந்து அகலுகிறாள்.

ராமசாமிக்கு ஒரு தலையணை கொண்டு வந்து ஆச்சி கொடுக்கிறாள்.

"ஆத்தாட்ட இந்தப் புள்ளயப் பத்திச் சொல்லியிருக்கியா?"

அவன் திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்து பார்க்கிறான். உடனே மறுமொழி வரவில்லை. அம்மாவின் நினைப்பு மாறானது. அவள் உப்பளத்தில் வேலை செய்யும் பெண்கள் யாரையும் மருமகளாக்கிக் கொள்ள ஒப்ப மாட்டாள். சண்முகக் கங்காணியின் தங்கச்சி மகள் வாகைக்குளம் ஊரில் இருக்கிறதாம். எட்டுப் பிள்ளைகளுக்கு நடுவே பூத்திருக்கும் அல்லி மலராம்... அவன் செவி கொடுத்துக் கேட்கவில்லை. இதற்காக அவனால் தாயிடம் போராட முடியாது. ஏனெனில் அவனுடைய அன்னையின் உலகம் குறுகிய எல்லைகளுடையது. நிமிர்ந்து பார்க்கும் இயல்பு இல்லாதவள் அவள். அளத்தில் இருநூறு ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு வந்திருப்பதையே அவன் அவளுக்குத் தெரிவிக்கவில்லை. தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்றுதான் கூறியிருக்கிறான். அவள் நாள் முழுவதும் தன்னுடைய உலகத்திலேயே கனவு காண்கிறாள்.

அவள் மௌனம் சாதிப்பதைக் கண்டு ஆச்சி மீண்டும் வினவுகிறாள்.

"ஏன்ல... ஆத்தாட்ட சொல்லலியா?"

"இல்ல. பொறவு சொல்லிக்கலான்னுதா சொல்லல..."

அவனுடைய குரல் அமுங்கும்படி பொன்னாச்சி ஓடி வருகிறாள்.

"ஆச்சி...? அப்பச்சி... அப்பச்சிய வந்து பாருங்க...! முளிச்சாப்பல கட்டயா இருக்காவ... எப்படியோ..."

சாவு வீடென்று கொளுத்தி வைத்திருக்கும் சிறு விளக்குச் சுடர் பெரிதாக்கப் பட்டிருக்கிறது. அவன் விழித்தபடியே கட்டையாகக் கிடக்கிறான்; அசைவேயில்லை.

அந்தப் பெண்பிள்ளை போன பிறகு... அவனுக்கு... எல்லாமே ஓய்ந்து விட்டது.

பொன்னாச்சியின் ஓல ஒலி வளைவில் எல்லோரையும் திடுக்கிட்டெழச் செய்கிறது.

அத்தியாயம் - 21

அப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட்களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மான - அபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான உணர்ச்சிகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. பளிங்குச்சில்லும் மணலும் களியும் கொண்டு மண்ணின் உயிர்க் கண்களைத் துப்புரவாகத் துடைத்த பின்னர், அதில் பசுமையை எதிர்பார்க்க முடியுமா? அந்தப் பாத்தி கரிப்பு மணிகளுக்கே சொந்தமாகி விட்டதால் பசுமை துளிர்க்கும் மென்மையான உணர்ச்சிகளைப் பாராட்டுவதற்கில்லை. பொன்னாச்சியும் பச்சையும் வேலைக்கு வருகின்றனர், ஒரு வாரம் சென்றதும்.

"பாவம், சின்னாத்தா, அப்பன் ரெண்டு பேரும் ஒன்னிச்சிப் போயிட்டா..." என்று பேரியாச்சி இரங்குகிறாள்.

"இந்த வுள்ளியளுக்கு ஆத்தான்னு கொடுப்பினயில்லாமலேயே போயிடிச்சி... அந்தப் பய்யனப் போலீசில புடிச்சிட்டுப் போனப்ப, சின்னாத்தா தா ஆனவாடும்பட்டான்னு சொல்லிச்சி பாவம்..." என்று இறந்தவளின் மேன்மையைக் கூறுகிறாள் அன்னக்கிளி.

"இப்பிடிக்கும் நல்லவிய இருக்காவ. சக்களத்தி வுள்ளியளக் கொல்லுறவியளும் இருக்கிறாவ. ஏதோ ஒலவம்" என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்கையில் கண்ட்ராக்ட் வந்து விட்டார். வாயை மூடிக் கொள்கின்றனர்.

வழக்கம் போல் அவனது அதிகாரம் தூள் பறக்கிறது. அறைவை ஆலையில் எட்டும் பத்துமான குஞ்சுகள் மூன்று ரூபாய்க் கூலிக்குக் கண்ணிதழ்களிலும் செவியோரங்களிலும் மூக்கு நுனிகளிலும் மாவாகப் பொடி அலங்கரிக்கத் தலைக்கொட்டை கட்டிக் கொண்டு பொடி சுமக்கிறார்கள். தட்டு மேட்டில் அம்பாரங்கள் குவிந்து, நண்பகலின் உக்கிரமான ஒளியில் பாலைவன மலைகளைப் போன்றும் கறுப்பும் வெளுப்புமாக ஓடும் குன்றுகளைப் போன்றும் பிரமைகளைத் தோற்றுவிக்கின்றன.

மாளய அமாவாசை நெருங்கி வருகிறது. ராமசாமிக்கு நிற்க நேரமில்லை. கோரிக்கைகளைத் தயாராக்கி விட்டார்கள். அவனுடைய மனக்கண்ணில் எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கக்காரர்களும் சேர்ந்து அவற்றை எல்லா முதலாளிகளுக்கும் கொடுப்பதும், அமாவாசையன்று மழை மணி விழுவதும், பின்னர் தட்டு மேடுகளில் அம்பாரங்கள் வாருவாறின்றிக் கிடப்பதும், நிர்வாகங்கள் இறங்கி வருவதுமான சாத்தியக் கூறுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

பதிவு கூலி - ஓய்வு நாளயச் சம்பளம், மழைக் காலங்களில் மறுவேலை அல்லது அரைச் சம்பளம் - முதுமைக்கால ஊதியம் - மருத்துவ உதவி, பெண்களுக்குச் சமவேலை, சம கூலி நிர்ணயம் - பேறு கால உதவி, ஓய்வு, பிள்ளை காக்கும் பால் வாடிகள், உப்பளப் பாதிப்பினால் வரும் நோய்களுக்குத் தக்க மருத்துவப் பாதுகாப்பு, எல்லாம் கேட்கிறார்கள். கூடுமான வரையிலும் எல்லோரையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவனும் மற்றவர்களும் ஓயாது அலைகிறார்கள். அவனுக்குத் திருமணத்தைப் பற்றிய நினைப்பு இப்போது இல்லை.

அருணாசலத்துக்குக் கால்கை பிடிப்பு மாதிரி வந்து ஒரு வாரம் காய்ச்சலும் நோவுமாகப் படுக்கையில் தள்ளிவிட்டது. மரணச் செய்தி கேள்விப்பட்டு வந்து குழந்தைகளை ஊரில் கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருக்கவும் கூட இயலாமல் படுத்து விட்டார். மாமி தான் வேலுவைக் கூட்டிக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் இருந்து சென்றாள். அவருக்கு இப்போது உடல்நிலை குணமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து உடலைக் காட்டிச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்கு வந்து திரும்புகையில் ஆச்சியைப் பார்க்கப் படி ஏறுகிறார்.

ஊமை வெயிலின் துளிகளை மேல் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.

சரசி பன ஓலை கிழிக்கிறாள். செங்கமலத்தாச்சி ஓலைப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். மூக்குக் கண்ணாடி மூக்கில் தொத்தி இருக்கிறது.

"வாரும், வாரும் - இரியும்? ஆசுபத்திரிக்கு வந்தியளா?"

"ஆமா, எல்லா வேலைக்குப் போயிருக்காவளா?"

"போயிருக்கா. நோட்டீசு குடுத்தா, பொறவு வேலை இருக்காது. மொதலாளிய அம்புட்டெல்லால எறங்கி வருவாகளா? கருக்கல் விடியிதுன்னா லேசா?" என்று கூறிக் கொண்டு பெட்டியை வைத்து விட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள்.

"ஓலை கெடக்கிதா? முன்னல்லாம் ஆடி மாசம் வாங்கி வச்சிப்ப. இப்ப ஒண்ணும் சேயாம இருந்திட்ட, நேத்துப் போயி திரிஞ்சி வாங்கியாந்தே. மழக்காலம் வந்திட்டா கடனுக்கு வருவாக. வேலய விட்டு நின்னாலும் கையில காசுக்கு என்னேயுவா?"

"இப்பத்தான் வாரியளா? சாப்பாடு ஏதும் வக்கச் சொல்லட்டா?"

"எல்லாம் ஆச்சு... காலமேயே வந்திட்ட, வட்டுக் கடன் வாங்கி சுசய்ட்டிக்குத் தீர்வை கட்டிட்டு இப்ப பிரிக்கற. இந்தத் தரகன் பயலுக்குக் காசா இல்ல? பத்து ரூவாக்கி இப்ப வா, அப்ப வான்னுறா. அட, லீசைக் கான்சல் பண்ணிட்டுப் போறா. நீ ஏன் இத்தக் கட்டிட்டு அழுவுறியன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது? நாமெல்லாம் மனுசங்களா இல்லியான்னு இப்ப எனக்கே சந்தேகமாப் போயிட்டு. உங்ககிட்ட உளுமையைச் சொல்லுற..."

ஆச்சி பேசவில்லை. அவருக்கு ஆற்றாமை தாளாமல் வருகிறது.

"அந்தக் காலத்தில என்னென்ன லட்சியம் வச்சிட்டிருந்தம்! காந்தி கனவு கண்ட ராமராச்சியம் வரப்போறதுன்னு நினச்சம். ஒரு மனுசன் குடிக்கற கஞ்சிக்குத் தேவையான உப்பு, அதுதான் சத்தியம்னு ஒரு உத்தமமான போராட்டத்தையே அதுல வச்சி ஆரம்பிச்சாரு. இன்னிக்கு அஞ்சும் குஞ்சுமா உப்புப் பெட்டியில எட்டு மணி கருகிட்டு வருதுவ. இதுவளுக்குக் காந்தின்னா தெரியுமா, தேசம்னா தெரியுமா? பசி தெரியும். இன்னொன்னு சினிமா. இதுக்காவ எதையும் செய்யத் துணியிதுங்க. நாங்கல்லாம் படிக்க வசதியில்லாத காலத்துல பனயேறிப் பிழைக்கிற குடும்பத்துல தாம் பெறந்தம். இன்னிக்கு நினைச்சுப் பாக்கறப்ப அப்ப எங்க லட்சியம் எம்புட்டுக்கு உன்னதமாயிருந்திருக்குன்னு தெரியுது. திருச்செந்தூர் தாலுகா காங்கிரசில் இருந்த இளயவங்க எப்படி இருந்தோம்! அம்புட்டுப் பேரும் ஒரு வாப்புல கள் குடிக்கக் கூடாது, கதர் உடுத்தணும்னு பிரச்சாரம் செய்யிவம். இப்ப என்னடான்னா, காலேஜில படிக்கிற பய, பொண்டுவ பின்னாடி திரியிறா, சீண்டுறா, வெக்கக் கேடு. பாரதியார் அன்னிக்குப் பாடி வச்சாரே, பாஞ்சாலி சபதம், அதப்பத்திச் சொல்லுவாக. அவர் நம்ம தேசத்தையே பாஞ்சாலியா நெனச்சிப் பாடினாருன்னுவாக. 'பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல மீதினிற் பூசி நறு நெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன்...'னு பாஞ்சாலியையா பாடினாரு? இந்தத் தேசம் நெஞ்சுல ஒரமில்லாம அடிபட்டுக் கிடக்கிறது. பொறுக்காம பொங்கி வந்துருக்கு. இன்னிக்கு எனக்கு இந்த உப்புத் தொழிலாளிய எல்லாரும் பாஞ்சாலியளா நிக்கிறாப் போல தோணுது..." தொண்டை கம்மிப் போகிறது.

"சரசி! லோட்டாவில குடிக்கத் தண்ணி கொண்டாம்மா!"

அவர் தண்ணீரருந்துகையில் ஆச்சி மௌனமாக இருக்கிறாள்.

"எனக்குத் தெரிஞ்சு அளக்கூலி நாலணாவிலேந்து நாலு ரூவா வரையிலும் உசந்தும் அரக்கஞ்சியே பிரச்சினையாகத் தானிருக்கு..."

ஆச்சி உடனே கேட்கிறாள்.

"அதுக்காவ எதுவும் நின்னு போயிடுதா? மனுசன் வயசாகாம நிக்கிறானா? புள்ளய பெறக்காம நிக்கிதா? நீங்க காலத்துல எதானும் ஏற்பாடு செஞ்சு பொன்னாச்சிக்கும் ஒரு கலியாணங் கெட்டி வச்சிரணும். நம்ம இல்லாமயும் இருப்பும் அடிபிடியும் எப்பவுமிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு இப்ப ஒம்மத் தவிர ஆருமில்லாம போயிட்டா. கடல்ல அல ஓயுமா? அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தாகிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா?"

"நானும் அன்னிக்குப் போனே. எங்கிட்டயும் அதாஞ் சொன்னா. நா ஒரு இருபத்திரண்டு நா, மாசம் கழியிட்டும்னு தானிருக்கே. அவ அம்மா தாலி இருக்கு. தாலிப் பொன் வாங்கறாப்பல கூடல்ல... இன்னிக்கு நிலைமை இல்ல! ஒரு சீல வேட்டி வாங்கி முடிச்சிடலாம்... பச்சைப் பயல் எப்படி இருக்கா?"

"வேலக்கிப் போறா; சம்பளத்தக் கொண்டு பொன்னாச்சியிட்ட தா கொடுக்கா. இங்ஙனதா எல்லாம் கெடக்கும். சின்னது ரெண்டு மூணு நா ராவெல்லாம் சொல்லத் தெரியாம அளுதிச்சி. வூட்டுக்குப் போகவே பயமாயிருக்கும்பா பாஞ்சாலி; நாங்கூட ராமசாமியக் கலியாணங் கட்டிட்டா இந்த வளவிலியே வந்திருக்கட்டு முங்கே. அவெ ஆத்தா ஒப்புவாளோ என்னமோ?..."

ஆச்சி முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

தூத்துக்குடி ஊர் திருமந்திர நகராம். பனமரங்கள் கூடச் சலசலக்காதாம். ஆனால் உப்பளத்துத் தொழிலாளர் சலசலக்கப் போகிறார்கள். வானிலே மேகமூட்டம் தெரிகிறது. கரிப்பு மணிகளைப் பிரசவிக்கும் அன்னை சோர்ந்து துவண்டாற் போல் கிடக்கிறாள். காலையில் தொழிதிறந்தால் பன்னிரண்டு மணிக்குக் குருணைச் சோறு இறங்கவில்லை. காற்றில் இருக்கும் வறட்சி ஓர் ஈரமணத்தைச் சுமந்து கொண்டு வந்து மெல்ல மேனியை வருடுகிறது. மாளய அமாவாசையன்று மணிகள் விழுமென்று பார்த்திருக்கிறார்கள்; விழவில்லை.

"அடுத்த சம்பளம் இருக்குமோ, இருக்காதோ?" என்ற கேள்வியுடன் பெண்டிர் சாமான் பத்து வரவுக் கடையில் கூடுகின்றனர்.

"இந்த இருவது ரூவாய கணக்கில வச்சிட்டு இருவது கிலோ அரிசி போடும்..." என்று நார்ப்பெட்டியை நீட்டுகிறாள் ஒருத்தி.

"ஏத்தா? எப்பிடி இருக்கி? இன்னும் நிலுவை அறுவது ரூவாயும் சில்வானமும் இருக்கி. அம்பது ரூவான்னாலும் தீத்துட்டா அம்பது ரூவா சாமானம் எடுத்துட்டுப் போ!" என்று கடைக்காரன் மாட்டுகிறான்.

"எத்தினி நாளக்கி மொடங்குவாகளோ?"

"அது எப்பிடித் தெரியும்? ரொம்ப உஜாராத்தா இருக்கா. கங்காணிமாரெல்லாமும் சேர்ந்திருக்காவ, பனஞ்சோலை அளம், தொர அளம் மொத்தமும் சேந்திருக்காவ..."

"ம், இதுபோல எத்தினி பாத்திருப்போம்? பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும், வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்து பைசா ஏத்துவா?" என்பன போன்ற பேச்சுக்கள் எங்கு திரும்பினாலும் செவிகளில் விழுகின்றன.

ராமசாமியின் அன்னை வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வீட்டில் வந்து தங்கி மூன்று நாட்களாகி விட்டன. அவளால் கட்டிக் காக்க இயலாத எல்லைக்கு அவன் போய்விட்டான்.

செவந்தியாபுரத்தில் இருந்த வரையிலும் அவளுக்கு வெளிமனித உறவுகளென்ற உயிர்ச்சூடு இருந்தது. பேரியாச்சி, அன்னக்கிளி எல்லோரும் பேசுவார்கள். அன்னக்கிளி குழந்தையைக் கொண்டு விடுவாள். அவள் ஆடு வளர்த்திருக்கிறாள், கோழி வளர்த்திருக்கிறாள். அவரையோ சுரையோ கொடி வீசிக் கூரையில் பசுமை பாயப் படரப் பாடுபடுவாள். இப்போது மாசச் சம்பளமில்லை. முன்போல் அவன் அவள் கையில் பணம் தருவதில்லை. அரிசி வாங்கிப் போட்டான். நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எதிர் வீட்டிலிருக்கும் மங்காவை மாசம் இரண்டு ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவள் தான் இவளிடம் பல செய்திகளை வந்து சொல்கிறாள்.

"ஒம் பய்ய, அந்தப் பொன்னாச்சியத் தொடுப்பு வச்சிருக்கா. அதா, இப்ப மாலக்காரர் அளத்துல அறவைக் கொட்டடில அடிபட்டுச் செத்தாள ஒரு பொம்பிள...?"

முதியவளுக்குக் காது கேட்காதென்று சத்தம் போட்டுப் பேசுகிறாள் மங்கா.

"பனஞ்சோல அளத்துப் பெரிய முதலாளிக்கு வைப்பா இருந்தாளே ஒரு பொம்பிள? அவ வளவுலதா இந்தப் பொண்ணும் இருக்கு. இந்த மீட்டங்கியெல்லா அங்கதா கூடிப் பேசறாவளாம். அவக்கு ரொம்ப பவுரு..."

இதெல்லாம் அவள் செவிகளில் விழுகிறதோ இல்லையோ என்ற மாதிரியில் மங்கா அவளை உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் ஒரு கடலே கொந்தளிக்கிறது. நினைவலைகள் மோதுகின்றன.

பையன் எந்த வலையில் சென்று விழுந்துவிடக் கூடாது என்று அஞ்சினாளோ அங்கேயே போய் விழுந்து விட்டான். இதற்கு முன் இது போன்று வேலை நிறுத்தம் என்ற ஒலி காற்று வாக்கில் வந்ததுண்டு. ஆனால் பனஞ்சோலை அளத்தை அது தட்டிப் பார்த்ததில்லை. மேலும் ராமசாமி மாசச் சம்பளக்காரன். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்ததில்லை. சோலிக்குச் செல்வான்; வருவான். கால் புண் வ்ந்தாலும் கூடப் பாக்கை உரசி விழுதெடுத்து அப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் இப்போது வீட்டுக்கே பாதி நாட்கள் வருவதில்லை.

"அந்தப் பொம்பிள செத்தால்ல? அதுதா இப்ப நிலம் நட்ட ஈடுன்னு அஞ்சாயிரம் கேக்கச் சொல்லி இந்தப் பொம்பிள தூண்டிக் கொடுக்களாம். அவக்கு ஒரு பய இருந்து செத்திட்டானில்ல. என்ன எளவோ சாராயங் குடிச்சி? அந்த ஆத்திரம். மொதலாளி மார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் தூண்டிக் கொடுக்கா!"

"அந்த சக்காளத்தி வீடு எங்கிட்டிருக்குன்னு தெரியுமாட்டீ?" என்று கேட்கிறாள் முதியவள்.

மங்கா இடி இடி என்று சிரிக்கிறாள்.

"ஐயோ? நீ போகப் போறியா?... வாணாம். ரொம்பது தூரம் போவணுமா. உம்பய்ய ராவுக்கு இன்னிக்கு வருவா. சோறாக்கி வையி!"

மங்கா போகிறாள்.

அந்தத் தாய் பித்துப் பிடித்தாற் போல நிற்கிறாள்.

அத்தியாயம் - 22

ஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்டதால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலைகளைக் கொய்து கொண்டு வருகிறான்.

மஞ்சள் பூச்சு படர்ந்த முகத்தில் திருநீறும் குங்குமமும் துலங்க, மொடமொடவென்று கோடிச் சேலையை உடுத்துக் கொண்டு பொன்னாச்சி சங்கமுகேசுவரர் சந்நிதியில் புது மணப் பெண்ணாக நிற்கிறாள். குஞ்சரியும், வள்ளியும், பாஞ்சாலியும், பச்சையும் அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வருகின்றனர். மூங்கில் துறையிலிருந்து குருக்கள் முன்னதாகவே அதிகாலையில் வந்து ஈசுவரனுக்கு அபிடேகம், ஆராதனை முடிக்கிறார். ஓர் புறம் அடுப்பு மூட்டி பொங்கலும் வைத்திருக்கிறார்.

முதல் நாள் காலையில் வேலுதான் சென்று பொன்னாச்சியையும் குழந்தைகளையும் கூட்டி வந்திருக்கிறான். திருமணம் என்று சொல்லாமலேயே அவர்களை அழைத்து வரச் செய்திருக்கிறார் அவர். ராமசாமி மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியுடனும் வெள்ளைச்சாமியுடனும் வந்தான்.

"அம்மாளைக் கூட்றிட்டு வான்னே?..." என்று மாமன் கேட்ட போது, அவன் சிரித்து மழுப்பி விட்டான். அவன் முரண்பாடாகத் தகராறு செய்வாளென்றும், திருமணம் முடித்துக் கூட்டிக் கொண்டு போனால் போதும் என்றும் மொழிந்தான். காலையில் நேராகக் கோயிலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, அவளுக்கு இருபத்தைந்து ரூபாயில் ஒரு சேலையும் ஏழு ரூபாயில் ஒரு ரவிக்கையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். இரவில் யார் யாரையோ பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதாம். "ஏழு மணிக்கு நாங்கூட்டியார..." என்று தனபாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். சிலுசிலுத்து ஓடும் ஓடையில் மாமன் முழுகி, வேறு வேட்டியணிந்து பட்டையாகத் திருநீறு அணிந்து தட்டத்தில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறார். வெண் சம்பங்கியும் அரளியும் ரோஜாவும் கட்டிய இரண்டு மாலைகள் - வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு பழம், இரண்டு தேங்காய் எல்லாவற்றுடன் அந்தப் புடவை ரவிக்கை, மாப்பிள்ளைக்கு அவர் வாங்கிவைத்த வேட்டி, துண்டு ஆகியவற்றையும் வைக்கிறார். பின்னர், பத்திரமாகக் கொண்டு வந்திருக்கும் அந்த மங்கிலியத்தை புதிய சரட்டில் கோத்து அதன் நடுவே வைக்கிறார். தங்கபாண்டியிடம் வட்டிக் கடன் பெற்று முதல் வேலையாக அதை மீட்டு விட்டார். உப்பின் வெப்பமும் உயிரற்ற வெண்மையும் கவிந்த வாழ்க்கையில் இந்த இளம் பருவம் உப்புக் காட்டில் ஓடி வரும் ஆற்றின் கால்களைப் போன்று குளிர்ச்சி பொருந்தியது. இந்தக் குளிர்ச்சி தரும் இனிமைகளே இவர்கள் வாழ்வில் பசுமைகளாகும். எனவே, கல்யாணத்தை இவர்கள் மிகப் பெரியதாக எதிர் நோக்கியிருக்கும் போராட்டத்துக்கு முன்பே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டார்.

இந்த இனிய சேதி பொன்னாச்சியைப் பூரிப்பிலாழ்த்தியிருக்கிறது. மாமியினால் அதிகாலை நேரத்தினால் நடந்து வர ஏலாது என்று கூறிவிட்டாள். ஆனால் பொன்னாச்சிக்கு அன்போடு முழுக்காட்டி, சடை கோதி, மலர் அலங்காரம் செய்திருக்கிறாள். அவள் மாப்பிள்ளையுடன் வரும் காலை நேரத்தில் இனிப்பும் பாயசமும், புட்டும் சமைத்து வைத்திருப்பாள்.

ஒரு சிறு கைமணியை அடித்து, குருக்கள் பூசைக்கு வானவரையும், தேவதைகளையும் அழைக்கிறார்.

கிழக்கே விண்மணி பொற்சுடராய்ப் பொங்கிச் சிரிக்கிறாள். வசந்தகாலத்து இன்பசாரலின் துளிகள் பசும்புல்லில் வீற்றிருக்கையில் ஒளிக்கதிரின் கால்பட்டுச் சிதறும் வண்ண மாலையாக உலகம் தோன்றுகிறது.

அருகிலுள்ள வேம்பின் உச்சியில் இரு பச்சைக்கிளிகள் கொஞ்சுகின்றன.

"அதா, கிளி! கிளி!..." என்று அந்தக் குழந்தைகள் கவடற்ற ஆனந்தத்தில் மூழ்கிக் கூச்சலிடுகின்றன.

உதயத்தின் செம்மை மாறி, ஒளிக்கற்றைகளில் வெம்மை ஏறுகிறது. மாமன், ஓடைக்கரையினூடே வரும் ஒற்றையடிப் பாதையில் வெண்மையாக ஆள் அசைந்து வருவது தெரிகிறதா என்று முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறார். வேலு அவர்களை எதிர் கொண்டு அழைப்பவனாக பாதி வழிக்கே ஓடிச் சென்று நிற்கப் போகிறான்.

அருணாசலத்துக்கு அடிமனதில் ஓர் அச்சம் உண்டு. ஏனெனில் தங்கபாண்டி அந்தப் பக்கமே நடமாடுபவன். அவன் பொன்னாச்சி தனக்குரியவளென்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனாலேயே அவர் கேட்டவுடன் பணமும் கொடுத்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்தால் ஏதேனும் இடையூறு செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இந்தத் திருமணத்தையே இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் எல்லோரும் திருச்செந்தூர் சென்று மணமுடிப்பதென்றால், செலவு அதிகமாகும். அதற்கேற்ற தாராளம் கூட இப்போது இல்லை.

"நாங்க முன்னாடி மாப்பிள்ளையோடு வந்து காத்திருப்பம். நீங்கதா பொண்ணுக்குச் சிங்காரிச்சிக் கூட்டியார நேரமாவும்" என்று தனபாண்டியன் கூறினாரே? மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை? எட்டு மணிக்கு அவர்கள் மணமுடித்துத் திரும்பி விட வேண்டும் என்றல்லவா திட்டம் போட்டிருக்கின்றனர்!

பொறுமையுடன் உச்சி விளிம்பில் நிற்பதைப் போன்று ஓர் பரபரப்பு அவரை அலைக்க, மேற்கே அவர் விழிகளைப் பதித்திருக்கையில், பின்புறமிருந்து குரல் கேட்கிறது.

"என்ன மாமா? என்ன விசேசம் இன்னிக்கு? கோயில்ல வந்து?... அட... பொன்னாச்சியா?... என்ன இன்னிக்கு?" என்று மண்டபத்தின் பக்கம் தங்கபாண்டியின் குரல் கேட்டு அவர் திடுக்கிட்டவராக வருகிறார். அவர் உமிழ் நீரை விழுங்கிக் கொள்கிறார். "எங்க வந்த நீ?"

"நா கிளித்தட்டு ஓடப்பக்கம் வரயில இங்க ஆளுவ தெரிஞ்சிச்சி, என்ன விசேசம்னு வந்த, அங்ஙன ஆர எதிர்பார்த்திட்டு நிக்கிறிய?"

"ஆரயுமில்ல, சக்திவேலு வந்திருக்கா. அவ பெறந்த நாளு அவாத்தா ஏதோ நேந்துக் கிட்டாப்பல... அவனுக்காவத்தா நிக்கே..."

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? தங்கபாண்டியன் கண்கள் கபடத்தை நிரப்பிக் கொண்டு பொன்னாச்சியின் மீது பதிகின்றன. பிறகு தட்டத்துக்கு மாறுகின்றன.

"கெளவா, பொய்ய ஏஞ் சொல்ற?" என்ற முணமுணப்புடன் அவர் மீது குரோதப் பார்வையை வீசுகிறான்.

"அதுக்கு ரெண்டுமால, புதுச்சீல, வேட்டி... ஒம்ம மவனுக்கு இவளக் கட்டி வைக்கப் போறியளா?"

"தங்கபாண்டீ! வாயத் தொறந்து வார்த்தய அநாவசியமா வுடாத. ஒஞ்சோலியப் பார்த்திட்டுப் போ!"

"என்ன சோலி? என்னவே சோலி? இப்ப ஏன் சோலி இதா. எனக்கு இப்ப பணம் வேணும்? என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும்!"

"சரி, தார. நீ முதல்ல இந்த இடத்தில இப்ப ஏங்கிட்ட வம்புக்கு வராத. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. போல..."

அவர் அழாக் குறையாகக் கெஞ்சுகிறார்.

"அது சரி. எனக்கு இப்ப பணமொட. ஒங்ககிட்டக் கேக்கத்தா வந்த..." என்றவன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக்கென்று குனிந்து தட்டத்தில் வெற்றிலை பூமாலைகளுக்கிடையே புதிய மஞ்சட்சரட்டில் கோத்து வைத்திருந்த மங்கிலியத்தை எடுத்து விடுகிறான்.

அவர் பதறிப் போகிறார். "ஏல, குடுரா அதெ. கொரங்குப் பயலே? அத்த ஏண்டா எடுத்த?" அவன் பின் அவர் ஓடுகிறார்.

"நீரு என்னிய மோசஞ் செய்தீரல்ல? இந்தத் தாலிய இப்ப கெட்டி இவள இழுத்திட்டுப் போவ."

பொன்னாச்சி அஞ்சிச் சந்நிதிச் சுவரோரம் ஒண்டிக் கொள்கிறாள்.

"சங்கமேசுவரா! இதுவும் ஒன்சோதனையா?" என்று கலங்கிய அவர் அவன் கையைப் பற்றி அவன் மடியில் கட்டிக் கொள்ளும் அந்த மங்கிலியத்தைக் கவர முயலுகிறார். ஆனால் அவன் அவரைத் தள்ளிவிட்டு ஓடியே போகிறான்.

பொன்னாச்சி இடி விழுந்த அதிர்ச்சியுடன் மாமனை எழுப்புகிறாள்.

பச்சை சக்திவேலுடன் போய்விட்டானா?

"அவ ஓடிட்டா... ஓடிட்டா!" என்று பாஞ்சாலி கத்துகிறாள்.

"பாவிப் பய, இதுக்கு அநுபவிப்பான். இவனுக்கு மண்ண வெட்டிப் போடுற..." என்று மாமன் குடி முழுகிப் போன ஆத்திரத்தில் கத்துகிறார்.

சக்திவேலும் பச்சையும் வருகின்றனர்.

"எங்கலே போயிட்டிய? அந்த மடப்பய தாலியத் தூக்கிட்டு ஓடிட்டானே? நான் ஒரு மட்டி. தாலிய மடிலல்ல வச்சிருக்கணும்!" என்று புலம்புகிறார்.

"நீங்க கடசீ நேரத்துல எடுத்து வச்சாப் போதுமே? யாரு அந்தப் பய...?" என்று விசாரிக்கிறார் குருக்கள்.

"என் கரும வினை? ஈசுவரன் ரொம்ப சோதிக்கிறார்!"

சக்திவேலுக்கு எதுவும் புரியவில்லை.

"யாரச் சொல்லுறியப்பா? அவங்கல்லாம் அங்க வாராங்க. எதோ பஸ்ஸில் வந்து இறங்கி வராப்பில..."

மாமனின் முகத்தில் ஈயாடவில்லை.

மணாளனை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்பதற்கு மாறாக அதிர்ச்சியுடன் கண்களில் நீர் கசிய, பொன்னாச்சி நிற்பதைக் கண்டு ராமசாமி திடுக்கிடுகிறான்.

"என்ன வுள்ள? என்ன நடந்திச்சி?"

"ஒண்ணில்ல, நீங்கல்லா வரக்காணமின்னுதா, கொஞ்சம் சடைவு..."

சங்கமுகேசுவரனுக்கு முன்பு சாத்திய ரோஜா மாலையைக் குருக்கள் மூலையில் போட்டிருக்கிறார். அதைப் பிரித்து எடுத்து, நூலை தனியே பிரித்து முறுக்கி மஞ்சட் தூளைப் பூசி விரைவில் மாமன் கொண்டு வருகிறார். அதில் பொன்னின் சின்னமில்லை; ராமசாமி ஏதோ நடந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்கிறான். எனினும் கேட்கவில்லை. அந்த மஞ்சட் கயிற்றை அவளுக்குப் பூமாலையுடன் அணிவித்து அவளை உரிமையாக்கிக் கொள்கிறான். குருக்கள் மணியடித்து மணமக்களுக்காக அருச்சனை செய்கிறார். பொங்கல் பிரசாதம் பெற்று மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகையில் அருணாசலத்தின் கண்களிலிருந்து நீரருவி பெருகுகிறது. புட்டும் பயற்றங் கஞ்சியும், பழமும் பப்படமுமாக மாமி அவர்களுக்குக் காலை விருந்தளிக்கிறாள்.

மாமியின் காலைக் கும்பிட்டுப் பணிகையில் புதிய தாலியை எடுத்துக் காட்டவில்லை. முனிசீஃப் வீட்டாச்சியை, இன்னும் தெரிந்தவர்களைக் கும்பிடுமுன் மாகாளியம்மன் கோயிலையும் வலம் வந்து பணிகின்றனர். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி பஸ் ஏறுகின்றனர்.

தெரு முனையில் இவர்கள் வருவதை வாயிலிலிருந்தே சரசி பார்த்து விடுகிறாள். "அக்கா வந்திற்று... அக்கா... அல்லாம் வந்திட்டாவ...!" என்று உள்ளே ஓடுகிறாள். சொக்கு வருகிறாள்; பவுனு வருகிறாள். சொக்குவின் புருசன் கூட எழுந்து நிற்கிறான்.

செங்கமலத்தாச்சி எங்கே?

"ஆச்சியில்ல சரசு?"

"ஆச்சிய, அந்தப் பெரிய கணக்கவுள்ள ரிச்சாவில கூட்டிட்டுப் போனாவ!"

பொன்னாச்சி கேள்விக் குறியுடன் அவள் முகத்தைப் பார்க்கிறாள்.

"பெரி... முதலாளிக்கு ரொம்ப ஒடம்பு சாஸ்தியாயிருக்குன்னு கூட்டிப் போனா. படுத்த படுக்கையா இருக்காவளா..." என்று மெல்லிய குரலில் சாடையாகச் சேதி தெரிவிக்கிறாள் சொக்கு.

பொன்னாச்சி சட்டென்று நினைவு வந்தவளாகச் சொக்குவையும், அவள் புருசனையும் அடி தொட்டுப் பணிகிறாள்.

அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி; பவுனுவும் சொக்குவும் குலவையிட்டு வாழ்த்துகின்றனர். இலைகளில் இட்டிலியுடன் சீனியும் சட்னியும் வைத்து அவளுக்கும் ராமசாமிக்கும் உண்ணக் கொடுக்கிறாள் சொக்கு.

"நாங்க அங்கேயே உண்டாச்சு. இப்ப வாணாம்..." என்றால் அவள் விடுகிறாளா?

"இருக்கட்டும்... உண்டுக்கடீ... உங்கப்பா, ஆயி, சின்னம்மா, ஆருமே பாக்க இல்லாம போயிட்டாவ..." என்று கண் கலங்குகிறாள். சிவந்தகனி பழமும் கலரும் வாங்கிக் கொண்டு ஓடி வருகிறான். சிவந்தகனியின் பெண்சாதி அவள் புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறாள். குழந்தை பழத்துக்குக் கை நீட்டுவதை விலக்கிக் கொண்டு அவளுக்கு இலையில் பழத்தை வைக்கிறாள். சேவு பொட்டலத்தை அவிழ்த்து வைக்கிறாள். "அக்காவுக்கு ரொம்ப ஆசை... கலர் குடிச்சிக்கும் மாப்பிள! பொன்னாச்சி! கலர் குடிச்சிக்க...!" என்று சிவந்தகனி உபசரிக்கிறான்.

"என்னத்துக்கு இப்படிச் செலவு பண்ணுறிய?" என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். "சரசி! கிளாசெடுத்திட்டு வா!"

"இருக்கட்டும். கலியாணம் கட்டி வாரவங்களுக்கி ஒரு விருந்தாக்கிப் போட இல்லாத போயிட்டம். நீங்க ஆருக்கும் குடுக்க வாணா. நா அவியளுக்கு வேற வாங்கிக் குடுப்ப..."

இந்த அன்புப் பொழிவில் திளைத்த பின் ராமசாமி அவளைத் தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறான். மாலை மயங்கும் அந்த நேரத்தில் வீடு திரும்பும் அனைவரும் அந்த மணமக்களைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கூந்தலில் தாழையும் மருவும் மணக்க, தன் மகனுடன் வந்து அடி தொட்டுப் பணியும் பெண்ணைக் கண்டு தாய் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. பிறகு அவன் முகத்தை அவள் கை தடவுகிறது.

"ஏ ராசா...!..."

கண்களில் ஒளி துளும்புகிறது.

"அம்மா, இவ தா ஒம் மருமவ... பொன்னாச்சி."

தாய் அவளுடைய கழுத்திலுள்ள மஞ்சட் சரட்டைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். வெறும் மஞ்சள் சரடு. ஒரு குன்றிமணி பொன்னில்லை.

"இம்புட்டு நா வேல செஞ்சே! அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா? ஒரு மிஞ்சி தங்கமில்ல."

"அம்மா இவ பேரே பொன்னாச்சிதா! அம்புட்டும் தங்கம்!" அவனுடைய நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு ரசிக்கத்தானில்லை. பொன்னாசிக்கோ, பாயசத் துரும்பாய் நினைவுப் பிசிறுகள் நெஞ்சில் தைக்கின்றன.

இரவு, பாய் தலையணையை உள்ளே வைத்துவிட்டு, தாய், தனது துணி விரிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறாள். அந்தச் சோபன இரவில், பொன்னாச்சி கண்ணீர் தோய்ந்த பனி மலர் போல் விலகி நின்று அவனைப் பணிகிறாள்.

"என்னவுள்ள இது?"

"நீங்க பொறவு மனக்கிலேசப் படக்கூடாது. தாலியத் தங்கபாண்டி எடுத்திட்டுப் போனா. ஒங்கக்குத் தெரியும். அவெ தாலியத்தா கொண்டு போனா. என் ராச நா எப்படிச் சொல்லுவே ஒங்ககிட்ட."

ராமசாமிக்கு இதையெல்லாம் கேட்கப் பொறுமையில்லை.

"நீ ஒண்ணுஞ் சொல்லாண்டா. சொல்லவுடமாட்ட..."

அவள் கை அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவன் திகைத்துப் போகிறான்.

"நா அன்னியே ஒங்ககிட்டச் சொன்ன; அந்தக் கிழக்கில உதிப்பவஞ் சாட்சியா என் அந்தராத்மாவுல துளி அழுக்கு கெடயாது. ஆனா, பாத்திக்கட்டுச் சேறு எம்மேல பட்டிரிச்சு!..."

"அட, சே, இந்த நேரத்துல இத்தையெல்லாஞ் சொல்லிட்டு? அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே?"

"நாச்சப்ப இல்ல. அவனை நா சமாளிச்சிட்ட. அந்தச் சோலப் பய குடிச்சிட்டு தேரிக் காட்டு இருட்டில.." அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள்.

ஒரு கணம் பருக்கைக் கல் குத்திவிட்டாற் போன்று ராமசாமி திடுக்கிட்டுப் போகிறான். ஆனால் மறுகணம் அவன் வென்று விடுகிறான்.

பொன்னாச்சியின் கண்ணீர் கரிப்பில் உதடுகள் அழுந்துகின்றன.

"நீ பொன்னு... தங்கம். எந்தச் சேறும் ஒம் மேல ஒட்டாது. நீ தங்கம்..."

அந்தக் கரிப்பு ஈரேழு உலகங்களிலும் கிடைக்காத இனிமையாக இருக்கிறது.

அத்தியாயம் - 23

செங்கமலத்தாச்சி நிறையப் பன ஓலை சேகரித்து முன்னறை முழுவதும் அடைத்து இருக்கிறாள்.

சரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற் போல் தோன்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. "ஆச்சி! அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா? ஆரு வாங்குவா?" அந்தச் சிறுமியை ஆச்சி உறுத்துப் பார்க்கிறாள்.

பதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்து விட்டேன் என்று பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாளே? அட... இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் போகலியே? உப்பளத்து வேலை ஓய்ந்து விட்டால் ஓலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி? ஆனால் அளத்து வேலை அப்படி ஓய்ந்து விடுமா?... ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா?...

"பொன்னாச்சி என்னேயா ட்டீ?"

கத்தியை எடுத்து ஓலையை வாகாக்கிக் கொண்டு ஆச்சி கேட்கிறாள்.

"கூட்டிட்டு வாரட்டுமா ஆச்சி?"

"கூப்பிடு...!"

சற்றைக்கெல்லாம் புதிய தாலி துலங்க, பளிச்சென்று முகத்தில் திருநீறும் குங்குமமுமாக, ஈரக்கூந்தல் முடிப்புடன் அவள் வருகிறாள்.

"சாமான மெல்லாம் வாங்கியிருக்கா... ட்டீ?"

அவள் தயங்கி நிற்கிறாள்.

"நாளக்கிலேந்து வேலயில்ல. தெரியுமில்ல?"

"தெரியும் ஆச்சி?"

"ராமசாமி ஆத்தாள இங்க கூட்டியாரன்னு சொன்னானா? அங்க வேற எதுக்கு வாடவை?"

"வார முன்னா..."

"சரி, பச்சையைக் கூட்டிட்டுப் போயி, அரிசியும் வெறவும் வாங்கி வச்சிக்க. பொறவு எப்பிடி இருக்குமோ?..."

அவள் தன் சுருக்குப் பையைத் திறந்து ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுக்கிறாள்.

இந்த ஆச்சி பத்துக் காசுக்கு ஒவ்வொரு சமயம் கணக்குப் பார்ப்பாள். செம்போ லோட்டாவோ கொண்டு வந்து வைத்து விட்டு முடைக்குப் பணம் பெற்றுச் செல்லும் கூலிக்காரரிடம் வட்டி முனை முறியாமல் வாங்கி விடுவாள். ஆச்சி இப்போது கொஞ்ச நாட்களாகப் பைசா கணக்கை விட்டு விட்டு இப்படி வந்தவருக்கெல்லாம் செலவழிக்கிறாள்.

பச்சையையும் பாஞ்சாலியையும் சாமானுக்கு அனுப்பிவிட்டு அவள் அடுப்பை மூட்டிப் பானையைக் கழுவி உலை போடுகிறாள். பொழுது உச்சிக்கு ஏறுகிறது. அவள் அரிசியைக் கழுவுகையில் "இங்க இருந்துக்க!" என்ற குரல் கேட்டு வெளியே வருகிறாள்.

மகன் தாயைக் கொண்டு வந்து அமர்த்துகிறான்.

வெள்ளம் தலைக்கு மேல் செல்வது போலும், தான் ஓட்டைப் படகில் தொத்திக் கொண்டிருப்பது போலும் பீதி நிறைந்த முகத்துடன் அந்த அம்மை அவளைப் பார்க்கிறாள்.

சில தட்டுமுட்டுக்கள், துணி மூட்டை, சைக்கிளில் வைத்துக் கட்டி வந்திருக்கிறான். முற்றத்தில் மரியானந்தம் சைக்கிளுடன் நிற்கிறான்.

"ஆச்சி...? நீங்க சொன்னாப்பில செஞ்சிட்ட..."

"பேச்சு வார்த்தை என்ன ஆச்சி?"

"தனபாண்டியன், அகுஸ்தின், செல்லையா எல்லா கட்சிக்காரரும் பேசுறாவ. பனஞ்சோல அளத்துள நடக்காதுன்னு சொல்றா. ஆச்சி, நாங் கேள்விப்பட்டது நிசமா?"

"என்ன கேள்விப்பட்ட?"

"ஒங்களப் பெரி கணக்கவுள்ள வந்து கூட்டிட்டுப் போனாவளாம். ஏ அவியள்ளாம் தூண்டிக் குடுக்கேன்னு கேட்டாவளாம்..."

"கேட்டாக. நா ஆரு அவியளத் தூண்டிக் குடுக்க? கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதிகமா புகையிதுன்னே... 'என்னடி அதிக்கிரமா பேசுத? மரியாதிய நடக்க'ண்ணா. நீ முதல்ல மரியாதிய நடண்ணே..."

"பெரிய முதலாளிட்டியா?"

ஆச்சி தலைநிமிராமல் "ஆமாம்" என்று தலையாட்டுகிறாள். "ஒடனே இந்த ஆண்டி என்னக் கூட்டிட்டு வெளீ ரூம்புல வந்து பயமுறுத்தினா. 'நீ என்ன நினைச்சிட்டு அவியள இப்பிடிப் பேசின? அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந்தன்மையாக் கூட்டு விட்டா, நீ மட்டு மரியாதியில்லாம நடக்கே! அவவ நிலமய நினைச்சிப் பேசணும்'ன்னா. 'எனக்குத் தெரியும். என்னேவிய? போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான?'ன்ன. எனக்கு இனி என்ன பயமிருக்கி?"

"'நீ அநாசியமாப் பேசுத. ஒனக்கு வூடு பணம் ஒதுக்கியிருக்கு. இப்ப வேணுன்னாலும் ஆயிரம் ஒதுக்கிறமுன்னா முதலாளி. பேசாம வாங்கிட்டு ஒதுங்கிப் போ. இந்தத் தலத்தெறிப்பு பயகளைச் சேத்துட்டு வம்புல எறங்காத, ஆமாம்...'ன்னு பயங்காட்டினா."

"எனக்குப் பணம் வாணா. ஒங்க அந்தூராத்துமாவத் தொட்டுப் பாத்துப் பேசும். ஒங்கக்கு உப்பச் சுரண்டிக் குடுக்க ஒழக்கிற பொண்டுவளையும் ஆம்பிளகளையும் புள்ளகளயும் நீங்க குளிரும்படி வச்சிருக்கல. ஒங்ககிட்ட பணமிருக்கி, அந்த வலத்துல போலிசைக் கையில போட்டுக்குவிய, ஏ, சாமியையே கையில போட்டுக்குவிய; ஆனா நீங்க பண்ண பாவம் ஒங்கள சும்மா விட்டிராது'ன்னு சொல்லிவிட்டு மடமடன்னு எறங்கி வந்திட்ட..."

ராமசாமி வியப்பினால் சிலையாகி நிற்கிறான். அவன் கண்களில் முத்தொளி மின்னுகிறது.

"ஆச்சி! ஒங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்பக் கடமப் பட்டிருக்கிறம். ஒங்க 'சப்போட்டு'தா எங்களுக்கு இப்ப தயிரியத்தையே குடுத்திருக்கு. என்ன வந்தாலும் ரெண்டில ஒண்ணுன்னு துணிஞ்சி நிக்கோம்..."

பொன்னாச்சி முற்றத்தில் நின்று சன்னல் வழியாக அவன் அவளைக் கூப்பிடுவதைப் பார்க்கிறாள். அவர்கள் சென்ற பின்னர், ஒரு கலியாண வீட்டின் பரபரப்போடு அவள் வீட்டுப் பணிகளில் இறங்குகிறாள். சோற்றை வடித்து முதலில் அவன் அன்னைக்கு வட்டிக்கிறாள்.

"கஞ்சியில் உப்பு போட்டுக் கொண்டாட்டி. இப்ப அது போதும்..." என்று கூறுகிறாள் முதியவள்.

பச்சை விறகு வாங்கி வருகிறான். பாஞ்சாலி பெட்டியில் சுமந்து வந்த அரிசியை அந்த அம்மை கொட்டிப் புடைத்துச் சீராக எடுத்து வைக்கிறாள். குழந்தைகள் அனைவரையும் குளிக்கச் செய்து துணி கசக்கி, சோறு போட்டுக் கடையெல்லாம் ஓய்ந்த போது வெயில் சுவரின் மேல் ஓடி விட்டது.

ராமசாமி வருகிறானோ என்று அவள் வாயிலில் எட்டி எட்டிப் பார்க்கிறாள்.

திமுதிமுவென்று சிவந்தகனியும் இன்னும் நாலைந்து பேரும் சில தடிகளை மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு வந்து நுழைகின்றனர்.

"இதெல்லா என்ன?"

ஒருவன் அரிவாள் வைத்திருக்கிறான்.

"யார்ல அது?..." என்று ஆச்சி வெளியே வருகிறாள்.

"நாங்கதா ஆச்சி... இதெல்லா இங்க வச்சிருக்கம்..."

"ராமசாமி வரானா?"

"இல்ல. ஆனா நாளேலேந்து வேலக்கி போவ இல்ல... மொத்த அளக்காரரும் வந்தது வரதுன்னிருக்கம். இதபாறம், பனஞ்சோல அளத்து டைவர் சோலை தெரியுமில்ல?"

பொன்னாச்சி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். ஆம். சோலை தான்! "பொன்னாச்சி! சொவமா? நானும் சேந்திருக்க. பனஞ்சோல அளத்துல எல்லாத் தொழிலாளியளும் சேர்ந்திருக்கா!"

"உசிரைக் குடுத்திட்டு நீருல முழுகிக் குழாமாட்டுவே. நாளக்கு, ஆறு ரூவா கூலின்னு சொல்லிட்டு ரெண்டு ரூவாக் கணக்கு சரக்குக்குன்னு புடிச்சிக்கிடுவா கணக்கவுள்ள. எனக்கு சொதந்தர நா, மே தினத்துக்குக் கூட லீவுள்ள. இதெல்லா ராமசாமி சொன்ன பொறவுதா தெரிஞ்சிச்சி. என்ன எம்புட்டு நாளா ஏமாத்திட்டிருக்காவ!"

பொன்னாச்சி சிலையாகிறாள்.

"அருவால்லாங் கொண்டிட்டு வந்தியளா? அல்லாம் இங்ஙனமும் இருக்கட்டும்! என்னக் கேக்காம ஆரும் தொடாதிய! பொறவு, வம்பு தும்பு ஒங்களால வந்ததுன்னா, அம்புட்டும் வீணாயிரும். அளத்து வாசல்ல நின்று ஆரும் சோலிக்குப் போவாம பாத்துக்கும்..."

ஒரு கட்டுக்குள் சீராக அடக்கி வைப்பது எவ்வளவு பெரிய செயல்? மாலை தேய்ந்து இருள் பரவுகிறது. மீண்டுமொரு முறை சோறுண்ண நேரம் வந்துவிட்டது. சுற்றிச் சுற்றி வந்த சிறுவர்களும் பச்சையும் திண்ணையில் படுத்ததும் உறங்கிப் போகின்றனர். கிழவி படியிலேயே உட்கார்ந்திருக்கிறாள்.

பொன்னாச்சிக்கு மனம் அலைபாய்கிறது.

"ஏட்டி? நீ சோறு தின்னிட்டுக் கதவைப் போட்டுட்டுப் படுடீ! அவெ வருவா, நாலிடம் போவா - வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா? பணம் பிரிப்பா... போ! வந்தா கதவத் தட்டுவா, நா இங்ஙனதான இருக்க. ஒறங்க மாட்ட..."

பொன்னாச்சிக்குப் படுத்தால் உறக்கம் பிடித்தால் தானே?

வெகு நேரம் அதையும் இதையும் எண்ணி மனம் அலைபாய்கிறது. பிறகு எழுந்து சென்று பானைச் சோற்றில் நீரூற்றி வைக்கிறாள்.

"ஆச்சி, உள்ள வந்து ஒறங்குறியளா?"

அந்தத் தாய் மறுத்து வாயிற்படியிலேயே சுருண்டு கொள்கிறாள். முற்றத்தில் நின்று வானைப் பார்க்கையில், அங்கு கோடி கோடியாகச் சுடர்கள் இரைந்து கிடக்கின்றன.

மணி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. சொக்கு புருசன் எழுந்து உட்கார்ந்து இருமுகிறான். அவள் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள்.

உறக்கம் வந்தது தெரியவில்லை. தங்கபாண்டி மஞ்சள் மஞ்சளாகப் பழக்குலையும் கையில் பிடித்து வருவது போல் ஒரு கனவு. சின்னம்மா பழத்தைப் பிய்த்துச் சிரித்துக் கொண்டு அப்பச்சியிடம் கொடுக்கிறாள். நிசம் போலிருக்கிறது. சட்டென்று விழித்துக் கொள்கிறாள். எங்கோ கோழி கூவுகிறது. ஆளரவம் கேட்பது போலிருக்கிறது. அவள் கதவைத் திறக்கிறாள். இரண்டு வலிய கரங்கள் அவளை வளைக்கின்றன. "வுடும்... வுடும்... ஆச்சி, புள்ளயள்ளாம் முழிச்சிடுவாக..." என்று கிசுகிசுக்கிறாள் அவள்.

அவள் கதவை மெல்லத் தாழிடுகிறாள்.

அத்தியாயம் - 24

திங்கட்கிழமை காலையில் சாரி சாரியாக உப்பளக்காரர் தெருக்களில் செல்லவில்லை. கையில் அலுமினியத் தூக்குப் பாத்திரமும், பொங்கிப் பீளை சார்ந்த கண்களும் தலைக் கொட்டைச் சுருட்டுமாகப் பெண்களும் சிறுவர் சிறுமியரும், அடிமிதித்துச் சாலையின் பொடி யெழுப்பவில்லை. கோல்டன் புரம், கிரசன்ட் நகர், ஆகிய எல்லாத் தொழிலாளர் குடியிருப்புக்களிலும் ஆண்களும் பெண்களும் வீடுகளில் கூடி நின்று வானில் மேகங்கள் கூடுவதைப் பார்த்துப் பேசுகின்றனர். சிறுவர் சிறுமியர் வேலையில்லை என்று தெருக்களில் விளையாடுகின்றனர்.

அருணாசலம் முதல் பஸ்ஸுக்கே வந்து இறங்குகிறார்.

"வாரும்!" என்று செங்கமலத்தாச்சி வரவேற்கிறாள்.

"வழியெல்லாம் போலீசப் பாத்த. என்னமோ காதுல விழுந்திச்சி. ஆரோ தலைவரைப் போலீசி பிடிச்சில உள்ள கொண்டிட்டுப் போயிட்டான்னா. ராமசாமி வந்தானா?"

"விடியக்காலம வந்திற்றுப் போனா பாத்த..."

பொன்னாச்சி முற்றம் பெருக்குபவள், பேச்சுக் குரல் கேட்டு ஓடி வருகிறாள்.

"என்ன சொல்றிய மாமா? போலீசுல ஆரப் புடிச்சிட்டுப் போனாவ?"

"பொன்னாச்சியா? எப்பிடிம்மா இருக்கே? ஒம்மாமியா எங்கேருக்கா?"

"இங்கதா. அவிய காலப் புடிச்சிட்டுப் போவாதேன்னு அழுதாவ. என்னயும் ஏசிட்டிருக்கி... மாமா. ஆரப் போலீசில புடிச்சிப் போனா?"

"தெரியலம்மா, சொல்லிக்கிட்டா பஸ்ஸில. இது வழக்கம் தான? நா இங்க வருமுன்ன மூணா நெம்பர், நாலா நெம்பர் தெரு வழியாத்தா வர்றே. எந்த அளத்துககாரரும் வேலய்க்குப் போவல. இன்னிக்கு மானம் கறுத்திருக்கு. இப்ப மழை வந்தா, வாரின உப்பக் காவந்து பண்ணல, முடை போடலன்னா நட்டமாயிடும். மொதலாளி மாரு எறங்கி வருவா. ஒரே வழி தா. ஆனா, கூலிய வாணா பத்து பைசா ஏத்துவானே ஒழிய, ஒரு தொழிலாளிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய சலுகை, வசதியெல்லாம் குடுப்பானா? இத்தனை நாளக்கி லீவுன்னு பட்டியல் போட்டு இனிஸிபெக்டரிட்டக் காட்டுவானுவ. ஆனா சொதந்தர நாளுக்கும் மே நாளுக்கும் கூட சில அளங்களில் லீவு கிடையாது கூலியோட. இத்தினி நா ருசி கண்டவுக இப்ப திடீர்னு எல்லாம் விட்டுக் கொடுப்பாகளா? எத்தினி நா குஞ்சும் குழந்தையுமா பட்டினி கிடப்பாக?"

செங்கமலத்தாச்சி பேசவேயில்லை.

மாமன் முன்பு இவ்வாறு வேலை நிறுத்தம் செய்த கதைகளைப் பற்றி பேசுகிறார்.

லாரி அளத்துக்குள்ளார வரக்கூடாது. தொழிலாளிகளே சுமந்து வந்து ஏற்ற வேண்டும். அதனால் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்று வாதிட்ட தொழிலாளர் தலைவனை எப்படிக் கொன்று விட்டார்கள் என்று விவரம் கூறுகிறார்.

திடீரென்று செங்கமலத்தாச்சி பட்டாசு சீறுவது போல வெடிக்கிறாள்.

"ஒமக்கு அறிவிருக்காவே?"

அந்தக் குரலில் அவர் நடுங்கிப் போகிறார்.

"கொல்லுற கதையப் போயி இப்ப சொல்லுறீம்! நாயமா இருக்கற எதையும் வேரோட கெல்லிற ஏலாது தெரிஞ்சிக்கும்! ஒரு புல்லுக்கூட எடுக்க எடுக்க முளைக்கிது. அந்தவுள்ள கண்ணுல வுசுர வச்சிட்டுப் பாத்திட்டிருக்கி, ஒமக்கு வயசானதுக்கு தயிரியம் சொல்லணும்னு தெரியாண்ட?"

மாமன் பாவம், உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறார். "தப்புத்தான், தப்புத்தான். என்னமோ சொல்ல வந்து நெதானமில்லாம பேசிட்ட, மன்னிச்சிக்கும்..."

ஓடி வந்த ஆறு அணை கண்டு முட்டினாற் போன்று திகைத்துப் போகிறார்.

"பேசத்தான் தெரியும். பேசிட்டே இருப்பிய; எல்லாம் பேசுறான். படிச்சிவ, படியாதவ, தெரிஞ்சவ, தெரியாதவ, ஆம்புள, பொம்புள அல்லாம் பேசுறாவ. சினிமால, ரேடியோல தெருவில, கடயில பேச்சு பேசிய ஏமாத்துரானுவ; பேசியே ஏமாந்தும் போறம். செத்துப் போனவப் பத்தி இப்ப என்ன பேச்சு? இருக்கிறவகளப் பத்தி இல்ல இப்ப நினப்பு?"

'செவத்தாச்சி' என்று குறிப்பிடும் செங்கமலமா? புருசனை விட்ட, தரங்கெட்டுப் போன, மகனைப் பறிகொடுத்த ஒரு பெண் பிள்ளையா?

"நாயம் அம்மா. ஒங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாமப் போச்சி, மன்னிச்சிக்கும்..." என்று நெஞ்சம் தழுதழுக்க அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

"என்ன ஏங் கும்பிடுறிய? இரியும். பொன்னாச்சி, பானையவச்சி கொஞ்சம் கூடவே போட்டு வடிச்சி வையி. ஒரு குளம்பும் காச்சி வையி. ஆரும் பசி பட்டினின்னு வருவா..." என்று கட்டளை இடுகிறாள்.

பகல் தேய்ந்து மாலையாகிறது. மாமன் சாப்பிட்டு விட்டு வெளியே செல்கிறார். வளைவே கொல்லென்று கிடக்கிறது. ஆச்சி பெட்டி முடைகிறாள். சொக்கு மாவாட்டுகிறாள். பொன்னாச்சி தண்ணீரெடுத்து விட்டு வேலை முடித்து விட்டாள். வெளிக்கு இயங்கிக் கொண்டிருந்தாலும் உள்ளத்தில் கருக்கரிவாளின் கூர்முனை ஊசலாடுவது போல் ஓர் அச்சம் நிலைகுலைக்கிறது. வேலை முடக்கம் ஒரு நாள் இரண்டு நாளுடன் முடியுமா?

"அக்கா!... அக்கா!" என்று பச்சை ஓடி வருகிறான்.

"எல்லோரும் ஊர்கோலம் போறாக! வாங்க... எல்லாரும் அங்க நின்னு பாக்கறாங்க...!"

நல்லகண்ணு, சொக்குவின் பையன், மருது, பாஞ்சாலி, சரசி எல்லோரும் தெருவில் ஓடுகின்றனர். அவளும் கூட ஆவலுடன் தொழிமுனைக்குச் செல்கிறாள். அவளுடைய நாயகன் செல்வதைப் பார்க்கத்தான்!

"உப்பளத் தொழிலாளர் சங்கம் வாழ்க! எங்களுக்கு நியாயம் வேண்டும்! எங்களை ஆளைச் சட்டத்துக்கு உட்பட்ட பதிவுத் தொழிலாளியாக்குங்கள்! நீதி கொல்லாதீர்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலை சமக்கூலி..."

கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்து செவிகளில் அலை அலையாக விழுகின்றன.

பச்சை, பாஞ்சாலி நல்லகண்ணு எல்லோரும் புரியாமலே 'ஜே' கோஷம் போடுகின்றனர். ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் முன்னேறி வருகிறது. காவல்துறையினர் முனையில் ஆங்காங்கு முதுகில் எதையோ சுமந்து கொண்டு நிற்பதை பொன்னாச்சி பார்க்கிறாள். கடலாய் அந்தக் கூட்டம் தெருவை நெருக்கியடித்துக் கொண்டு வருகிறது. அந்தப் பெருங்களத்தில் பூத்த பல வண்ண மலர்கள் போல் வண்ணக் கொடிகள்... மிகுதியும் செவ்வண்ணக் கோலங்கள்...

கூட்டம் தெருவைக் கடக்குமுன் என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை. கோஷ அலைகள் சிதறுகின்றன. கற்கள் பாய்கின்றன. பச்சையின் நெற்றியில் ஒரு கூறிய கல் பாய்ந்து குருதிப் பொட்டிடுகிறது.

"எலே, பச்சை, வால... எல்லாம் வாங்க... வீட்டுக்குப் போவலாம்!" என்று பொன்னாச்சி கத்துகையில் காவல் துறையினர் கண்ணீர்க் குண்டுகள் வெடிக்கின்றனர். பீதியில் நடுநடுங்கிக் கூட்டம் சிதறுகிறது. பொன்னாச்சிக்கு கண்ணீர்க் குண்டைப் பற்றித் தெரியாது. கண்ணில் எரிய எரிய நீராய் வர, குழந்தைகளை அதட்டி இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வருகிறாள்.

"குண்டு போடுறாவ!"

"ஏலே, வால, போலீசு புடிச்சு அடிப்பாவ!" என்று தாய்மார் விவரம் அறியாத பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர்.

"அக்கா, மாமா கொடி புடிச்சிட்டுப் போனாவ, பாத்தியாக்கா...?" தன் கணவனைத் தான் மாமா என்று கூறுகிறான் என்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

"நிசமாலுமா! எனக்கு ஆரும் ஏதும் புரியல!" என்று கூறியவண்ணம் அவன் காயத்தில் அவள் மஞ்சளும் சுண்ணாம்பும் குழைத்து வைக்கிறாள். எரிச்சலுடன் பொருட்படுத்தாத கிளர்ச்சி அவனுக்கு.

"குண்டு வெடிச்சாங்களே, அது ஆரையும் சாவடிக்காதாம்! ஆனா கண்ணுல தண்ணியாக் கொட்டுது... எனக்குக் கூட அவிய கூடப் போவணும்னு ஆச, ஏக்கா இழுத்திட்டு வந்திட்ட?"

"வாணா வாணா, நீ போனா இந்தப் பொடியெல்லாம் போவும்..."

இந்த அமர்க்களங்கள் எதுவுமே தன் செவிகளில் விழாத மாதிரியில் ஆச்சி கருமமே கண்ணாகப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள்.

நாட்கள் நகருகின்றன.

மாமனுக்கு இங்கு நிலைக்கவும் பொருந்தவில்லை. ஊரிலும் இருப்பாக இல்லை. தங்கபாண்டியிடம் சண்டை போட்டுத் தாலியைத் திரும்பப் பெறுகிறார். வாரி வைத்த உப்பை அவன் வண்டியிலேற்றிச் செல்கிறான்.

ராமசாமி எப்போதோ இருட்டில் கள்வனைப் போல் வருகிறான். அவசரமாகச் சோறுண்கிறான். "வட்டுக்காரர் அளத்துல ஒரு பயல உள்ளவுடுறதில்லன்னு மாமுண்டி நிக்கியா. பனஞ்சோல அளத்துல சோல தொழியத் தெறிந்து உப்பெல்லாம் கலாமுலான்னு ஆக்கிட்டானாம். பய போலீசு காவலுக்கு மீறி கடல்ல முக்குளிச்சிட்டே போயி மிசினத் தவராறு பண்ணிட்டேன்னா... வேலக்கிப் போவ பயந்திட்டே அல்லாம் நின்னிடுவாங்க. ஆனா, வெளியாளவுட்டா, தொலஞ்சம். அதுதா கட்டுக் கோப்பா இருக்கணும். இப்ப அந்தக் கட்சி இந்தக் கட்சி இல்ல. எல்லாரும் ஒரு கட்சி. நமக்கு ஒரு மனிசன்னு வேண்டிய தேவைகளுக்கு உரிமை வேணும்..."

கை கழுவ அவள் நீரெடுத்துக் கொடுக்கையில் சரட்டில் பொற்சின்னம் குலுங்குவதைப் பார்த்து விடுகிறான்.

"மாமா கொண்டாந்தா..."

இளமையின் தாபங்கள் கட்டவிழ்கின்றன.

"தயிரியமா இருவுள்ள; நம்ம பக்கம் நியாயம் இருக்கு. நா வார..." கதவைத் திறந்து அவனை வெளியே செல்ல விடுவது மிகக் கடினமாக இருக்கிறது.

எண்ணெய் விளக்கில் திரி மட்டுமே எரியத் தொடங்கும் நிலை. ஆச்சி வீட்டு முற்றத்தில் கடனுக்குப் பெண்கள் வந்து மொய்க்கின்றனர். ஆச்சி உள்ளே சென்று பெட்டியைத் திறந்து ஐந்து, பத்து என்று எடுத்துக் கொடுக்கிறாள்.

பச்சையின் நெற்றியில் அன்று கல்பட்ட காயம் வீங்கிச் சீழ்கோத்துக் கொள்கிறது. ஓலைப் பெட்டிகளைச் சந்தையில் கொண்டு போட்டுவிட்டு வந்து நெற்றியைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறான்.

ஆச்சி ஒரு ரூபாயை அவனிடம் எடுத்துக் கொடுத்து, "பெரியாசுபத்திரில போயி எதானும் மருந்து போட்டுட்டு வாலே?" என்று அனுப்புகிறாள்.

அன்று காலையில் வான் இருள மழை மணிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொட்பொட்டென்று குதிக்கின்றன. பிறகு களிப்பும் கும்மாளமுமாகக் கதிரவனுடன் விளையாடிக் கொண்டு காய்ந்த மண் வெய்துயிர்க்கப் படபடவென்று பொழிகிறது. தட்டுமேட்டு அம்பாரங்களை இப்போது எந்தக் குஞ்சும் வந்து தொடலாகாது. வங்கிக்கு ஈடுகட்டிய குவைகள் கரைந்து விடக்கூடும். அவற்றை விற்று மூடைகளாக்க ஒரு ஈ காக்கை போகக் கூடாது.

தங்கள் போராட்டம் வெற்றிப் பாதையில் செல்லும் எக்களிப்புடன் அவர்கள் பசியையும் மறந்து களிக்கின்றனர்.

சிவந்தகனி அன்று மாலை நான்கு மணியளவில் மூச்சிரைக்க ஓடி வருகிறான்.

"பனஞ்சோல அளத்துல புது ஆள் கொண்டு லாரியோட உள்ளார போனாவளாம். ஒம்மாப்பிள, இன்னும் மொத்த பேரும் குறுக்க விழுந்து மரிச்சாவளாம். அடிதடியாம். மாப்பிளயைப் புடிச்சிட்டுப் போயிட்டாவளாம்...!"

அவனுக்கு மூச்சிறைக்கிறது.

அப்போது செங்கமலத்தாச்சி பூமி வெடித்துக் கிளம்பும் கொழுந்து போல் வெளியே வருகிறாள்.

"என்னலே?"

"பனஞ்சோல அளத்துல, லாரியோட ஆள் கொண்டு வந்திருக்கானுவ..."

அவள் முடி பிரிந்து விழுகிறது. "லாரியோட, ஆள் கொண்டு வாராகளாமா?..."

ஒரு கணம் அவள் சக்தியைத் திரட்டிக் கொள்வது போல் நிச்சலனமாக நிற்கிறாள். மறுகணம் இடுப்பிலிருக்கும் சாவியைக் கையில் எடுக்கிறாள்.

"ஏட்டி, பொன்னாச்சி? ந்தா... சாவியப் புடிடீ...! எல்லாம் பதனமாப் பாத்துக்க!" என்று முற்றத்தில் போட்டிருக்கும் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே பாய்கிறாள்.

கண்மூடிக் கண் திறக்கும் வேகத்தில் நடக்கிறது. சாவியைப் பொன்னாச்சி பெற்றுக் கொண்டு நிமிர்வதற்குள் அவள் ஓடி விட்டாள்.

ராமசாமியின் அன்னை, என்ன நடக்கிறதென்று புரியாமலே ஓர் தனி உலகத்திலிருந்து யாரையோ வசை பாடத் தொடங்குகிறாள். ஆனால் அவள் அந்தத் தெருவில் நீண்ட கழியுடன் ஓடும் காட்சி, வறண்ட பொட்டலில் தீக்கொழுந்து போல் ஓர் மாங்கன்று துளிர்ந்தாற் போன்று அந்நியமாகத் தெரிகிறது. அவள் ஓடும் போது அள்ளிச் செருகிய முடி அவிழ்ந்து பறக்கிறது. தெருவில் சாதாரணமாகச் செல்லும் சைகிள்காரர், குடும்பக்காரர், கடைக்காரர் எல்லோரும் சட்டென்று திரும்பி நிதானித்துப் பார்க்கு முன் அவள் தெருத் திரும்பி விடுகிறாள்.

குப்பை மேடும் முட்செடிகளுமான இடத்தின் ஒற்றையடிப் பாதையில் அவள் புகுந்து விரைகிறாள். ஆங்காங்கு மண்ணில் ஓரமாக விளையாடும் சிறுவர் சிறுமியர் அவளை நின்று பார்க்கின்றனர்.

"ஐயா! எல்லாம் வாரும்! எல்லாம் வாருங்க! பனஞ்சோல அளத்துல ஆளுவளக் கொண்டிட்டு வாராவளாம்! வாங்க! அளத்துக்காரவுக வாங்க!"

அவள் உப்புத் தொழிலாளருக்குக் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறாள். ஒரு தீப்பந்தம் புயற்காற்றுச் சூறாவளியில் பறந்து செல்வது போல் மணல் தேரியில் கம்பும் கையுமாக ஓடுகிறாள்.

"அளத்துப் பொண்டுவள்ளம் வாங்க! வாங்கட்டீ!" டீக்கடைப் பக்கம் சில இளைஞர் நிற்கின்றனர். ஒருவன் கையில் 'டிரான்சிஸ்டர்' வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கோ நடக்கும் பாரதி விழா நிகழ்ச்சிகளை அது அஞ்சல் செய்து கொண்டிருக்கிறது. மாமா அருணாசலமும் அங்கேதான் உட்கார்ந்து இருக்கிறார்.

"அளத்துக்காரவுக வாரும்! அக்கிரமத்தத் தட்டிக் கேக்க வாரும்!"

சிவப்புச் சேலையும் கம்புமாக யார் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்?

அந்தக் கூட்டம் தேரிக் காட்டில் அவளைத் தொடர, விரைந்து செல்கிறது. மணலில் கால் புதைய அவள் முன்னே ஓட்டமும் நடையுமாக போகிறாள்...

"ஆளுவளைக் கொண்டிட்டா வாரிய? வந்தது, வாரது ரெண்டில ஒண்ணு. பொறுத்திருக்கும் பூமி தேவியும் வெடிச்சிடுவால...! நாசகாலம் ஒங்கக்கா, எங்கக்கான்னு பாத்திடுவம்! நா கற்பு பெசகிட்டேன்னு சாபம் போட்டு மவன விட்டு ஆத்தாள வெட்டச் சொன்னா. அந்த ஆத்தாதா ஆங்காரத் தெய்வமானா, ஆங்காரத் தெய்வம்! எலே வாங்க! பனஞ்சோல அளத்துல ஆளெடுக்கிறாவளாம்! தடுக்க வாங்க!... வாங்க..."

அந்த ஒலியைக் காற்று மணல் வெளியெங்கும் பரப்புகிறது. அருணாசலம் அங்கேயே நிற்கிறார். உடல் புல்லரிக்கிறது.

பாண்டியன் அவையில் நியாயம் கேட்கச் சென்ற கண்ணகியோ? பாரதியின் பாஞ்சாலி இவள் தானோ? இந்த அம்மை, இவள் யார்? ஆண்டாண்டு காலமாக வெறும் பாவைகளாக, பூச்சிகளாக அழுந்தி இயலாமையின் சின்னங்களாக இருந்த சக்தியின் ஆவேச எழுச்சியோ?

"ஏய்? யாருலே? அளத்துல தொழிலாளியளுக்கு எதிரா ஆள கொண்டு வாராகளாம்! வாங்கலே, வந்து தடுப்போம் வாங்க?"

மாமனின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வரும் ஒலி பாறையின் இடையே பீச்சும் ஊற்றுப் போல் ஒலிக்கிறது.

பனமரங்களும், முட்புதர்களும் நிறைந்த பரந்த மணற் காட்டில் அந்தக் கூட்டம் விரைந்து செல்கிறது.