karuppatti chocolate

கருப்பட்டி சாக்லேட்

கருப்பட்டியை எப்படி செய்கிறார்கள் என்று மஞ்சுவுடன் சேர்ந்து நாமும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

- Meenakshi Veeraragavaprabu

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மஞ்சுவுக்கு அவளோட தோழி மான்யா வீட்டிற்கு சென்று விளையாட எப்பவுமே ஆசை. அதற்கு மான்யாவோட அன்பான மனசு, அவளோட குட்டி தங்கச்சியின் அழகான சிரிப்பு இப்படி பல காரணங்கள் இருக்கு.  அங்கே விளையாட மான்யாவோட தோழி மஞ்சு மட்டுமல்ல இன்னும் நிறைய நண்பர்கள் வருவார்கள்.

ஓடி ஆடி விளையாடி தாகமா இருக்கும்போது தண்ணீர் குடிக்க சமையலறையில் ஒரு மண் பானை வைத்திருப்பார்கள். மான்யாவோட அம்மா அதில் உள்ள தண்ணீரில் சிறிது வெட்டிவேரும் போட்டிருப்பார். அதனால் தண்ணீர் குளிர்ச்சியாகவும் நல்ல மணமாகவும் இருக்கும்.

அந்த பானையிலிருந்து தண்ணீர் மொண்டு குடிப்பதும் எல்லா குழந்தைகளுக்கும் பிடித்த ஒன்று. அப்போ மான்யாவோட அப்பா ஆளுக்கு ஒரு சின்ன கருப்பட்டி துண்டு சாப்பிட கொடுப்பார். அதுக்கு மஞ்சு வைத்த பெயர் கருப்பட்டி சாக்லேட்.

“கருப்பட்டி சாக்லேட்.. கருப்பட்டி சாக்லேட்.. யாருக்கு வேணும்?” அதை ஆனந்தமாய் சாப்பிட்டபடியே மஞ்சு, “இந்த கருப்பட்டி சாக்லேட் ரொம்ப சுவையா இருக்கே.. இதை எப்படி செஞ்சாங்க?” என்று மான்யாவோட அப்பாவிடம் கேட்கிறாள்.

அதற்கு அவங்க அப்பா சொல்றாரு..

“இந்த கருப்பட்டியை பனை வெல்லம் என்றும் சொல்வார்கள். முதலில் பனை மரத்தில் ஏறி பனை பாளையை லேசாக கீறிவிட்டால் அதிலிருந்து பால் சொட்டும். அதனை சேகரிக்க ஒரு சிறிய மண் சட்டியை அந்த பாளைக்கு அடியிலேயே கயிறை வைத்து இறுக்க கட்டி விடுவார்கள்.

பாளை: பனை மரத்திலுள்ள நுங்கின் தண்டு பகுதி.

இப்படி கட்டப்பட்ட மண் சட்டிகளில் சிறிதளவு சுண்ணாம்பை பூசி வைப்பார்கள். அது அந்த பாலை புளிக்க செய்யாமலிருப்பதற்காகத் தான். இப்படி நிறைய பனை மரங்களில் கட்டி வைத்த பானைகளில் சேகரித்த பாலை ஒரு பெரிய சட்டியில் போட்டு நன்றாக காய்ச்சி, வடிகட்டி, அதனை சிறு சிறு அச்சுகளில் ஊற்றி விடுவார்கள். பின்னர் அவை நன்கு வெய்யிலில் காய்ந்து கடினமானதும் அச்சுகளிலிருந்து நமக்கு தேவையான கருப்பட்டியை எடுத்துவிடலாம்.

பனை பாளையிலிருந்து எடுத்த பாலை அப்படியே பருகினால் அதுதான் பதநீர். இந்த பதநீர், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது. இந்த சுவையான மற்றும் குளிர்ச்சியான பதநீரை பருகுவதால் உடல் சோர்வை நீக்கலாம்.

இப்படி செய்யப்பட்ட பனை வெல்லத்தை தான் நாம் இப்பொழுது சிறு சிறு துண்டுகளாக சாப்பிடுறோம். இதை சுக்கு, மல்லி சேர்த்து கொதிக்க விட்ட நீரில் கலந்து செய்தால் அதுவே சுக்கு மல்லி காபி."

“ஆஹா, இந்த கருப்பட்டி சாக்லேட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா??” வியப்புடன் கேட்டாள் மான்யா.

உடனே மான்யாவும் மஞ்சுவும் சுக்கு மல்லி காபி செய்ய தயாராகி விட்டார்கள்.