kasturba

கஸ்தூர்பா

கஸ்தூர்பா காந்தி ஒன்றும் சாதாரண பெண் இல்லை. தனித்துவமும், துணிவும் மன உறுதியும் கொண்ட பெண். நாட்டிற்காக நிறைய தியாகங்களை செய்தவர். நம் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் தோழியாகவும் துணைவியாகவும் இருந்தார். காந்திஜியின் வாழ்க்கை வரலாறு எழுதிய லூயி பிஷ்ஷர் அவரைப் பற்றி எழுதினார், "தன் தனித்தன்மையையும் காப்பாற்றிக்கொண்டு அதேசமயம் மகாத்மவின் நிழலாகவும் இருந்து வந்ததனால், அவள் ஓர் அதிசயப் பெண்ணாகி விட்டாள்". உலகத் தலைவர்களில் முக்கியமான ஒருவருடன் தோளோடு தோள் கொடுத்து நடந்த இந்த அற்புதமான பெண்ணைப் பற்றி படியுங்கள்.

- Kishore Mahadevan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காந்தியின் பல புகைப்படங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். சிறிய உருவம். காதி சேலையில் தன் தலையை மறைத்திருப்பார். அமைதியான பெண். ஆனால் அவர் முகத்தை மறக்க முடியாது என்று நண்பர்கள் கூறுவர்.

அவர் தான் மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூர்பா.

கஸ்தூர்பா ஒரு தாயாக, மனைவியாக, பாட்டியாக, தோழியாக, சுதந்திர போராளியாக வாழ்ந்தவர். கல்வியறிவு இல்லாவிட்டாலும் கஸ்தூர்பா தன் எளிமையாலும் கருணையாலும் அனைவரையும் கவர்ந்தவர்.

ஆங்கிலேயர்கள் அவரை 'மேடம் காந்தி' என்று அழைத்தார்கள். இந்தியர்கள் அவரை 'பா' என்று அழைத்தார்கள். 'பா' என்றால் அம்மா. காந்தியும் கஸ்தூர்பாவை 'பா' என்றே அழைத்தார்.

சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், எதிர்ப்பு அணிவகுப்புகள் என்று காந்தியின் சுதந்திர போராட்ட வாழ்க்கை பரபரப்பாக இருந்தது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் கஸ்தூர்பா அமைதியின் உருவமாகவும், காந்தியின் உலகின் மையமாகவும் இருந்தாள். கஸ்தூர்பாவின் ஆதரவு இல்லாவிட்டால் காந்திஜி இவ்வளவு சாதித்திருக்க முடியாது.

கஸ்தூர்பா தனித்துவம் வாய்ந்த பெண். மன உறுதியும் துணிச்சலும் கொண்ட நடைமுறைவாதி. காந்திஜியைப் போலவே, அவரும் நாட்டிற்காக பல தியாகங்களை செய்தவர். ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியாக அவர் பல எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார். காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தை நடத்தி, பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களை அங்கே உபசரித்தவர். பல இளைய, மூத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தோழியாக இருந்தவர்.

காந்தியை மக்கள் 'பாபு' (தந்தை) என்று அழைத்தது போல, கஸ்தூர்பா அனைவருக்கும் 'பா' (தாய்) ஆனார்.

சபர்மதி ஆசிரமத்தில்

சபர்மதி ஆசிரமத்தில் கஸ்தூர்பாவும் காந்திஜியும் எப்போதும் 'வானர சேனா' (குரங்குப்படை) என்று அழைக்கப்படும் குழந்தைகள் பட்டாளத்தால் சூழ்ந்திருப்பர். காந்திஜி அவர்களுக்கு காய்கறி வளர்த்தல், மாடு பராமரித்தல், ஆடு பராமரித்தல், சர்காவில் நூல் சுழற்றல் போன்ற வேலைகளை கற்றுக்கொடுத்தார். ஒரு நாள் யார் அதிக நூல் சுழற்ற முடியும் என்று ஒரு போட்டி நடத்தப்பட்டது. கஸ்தூர்பாவும் காந்திஜியும் தங்கள் பேத்தி ஒருவரிடம் தோற்றுப் போனார்கள்!

காந்திஜி கஸ்தூர்பாவைக் கண்டு பயந்தார். தன்னைப் போல, குழந்தைகளும் கஸ்தூர்பா சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்று காந்தி சொன்னார். ஒரு நாள், மதிய உணவுக்குப் பிறகு, கஸ்தூர்பா தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சில விருந்தினர்கள் வந்தார்கள். காந்திஜி அவர்களுக்கு மத்திய உணவு கொடுக்க விரும்பினார். ஆனால் கஸ்தூர்பாவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனவே அவர் குழந்தைகளிடம் உணவு சமைக்கச் சொன்னார். கஸ்தூர்பா எழுந்திருக்காமல் இருக்கவேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார். ஆனால் ஒரு சிறுவன் ஒரு பெரிய பித்தளை தட்டைக் கீழே போட்டபோது திட்டம் தோல்வி அடைந்தது !

சத்தம் கேட்ட கஸ்தூர்பா எழுந்துவிட்டார். தன்னை முன்னரே என் எழுப்பவில்லை என்று கோபம் கொண்டார். கஸ்தூர்பாவின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று காந்தி நினைத்தார். ஆனால் கஸ்தூர்பா காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திற்குள் நுழைந்து அனைவருக்கும் முன்னால் அவரை திட்டினார்!

குழந்தை மணமகள்

கஸ்தூர்பாய் மஹன்ஜி 1869 ஏப்ரல் 11 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். தந்தை கோகுல்தாஸ் மஹன்ஜி. தாய் வேராஜ் குன்வர் பா. அவருடைய தந்தை பெரிய தொழிலதிபர், கஸ்தூர்பா வசதியான வீட்டில் வளர்ந்தார். மற்றபடி அவருடைய குழந்தைப் பருவம் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. கரம்சந்த் காந்தி என்பவர் கோகுல்தாசின் நண்பர். கோகுலதாசும் கரம்சந்தும் கஸ்தூர்பாவை கரம்சந்தின் மகன் மோகன்தாஸ் காந்திக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அப்போது மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் வயது ஏழு. மோகன்தாஸ் 1869 அக்டோபர் 2-ம் தேதி பிறந்தார். கஸ்தூர்பாவை விட ஆறு மாதம் இளையவர். இந்த விஷயத்தை கஸ்தூர்பா காந்தியிடம் தன் வாழ்நாள் முழுவதும் நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.

1882-ல் மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் திருமணம் ஆனபோது அவர்களுக்கு 13 வயது. திருமணம் முடிந்து காந்தியின் வீட்டுக்கு வந்தார் கஸ்தூர்பா. அப்போது கரம்சந்த் போர்பந்தரின் திவானாக இருந்தார். திவான் என்றால் பிரதம மந்திரி. பணக்கார கூட்டுக்குடும்பம். கரம்சந்தின் மனைவி பெயர் புத்லிபாய். கடவுள் நம்பிக்கையும், எல்லோரிடம் அன்பும் நிறைந்தவர். தன் இளைய மகன் மோகன்தாஸ் மீது பேரன்பு கொண்டவர்.

மோகன்தாஸ் பள்ளிக்குச் சென்றார், ஆனால் அந்த காலத்தில் பல பெண்கள் பள்ளிக்கு செல்லவில்லை. கஸ்தூர்பாவால் எழுத, படிக்க முடியவில்லை. அவருக்கும் ஆர்வம் இல்லை. மோகன்தாசின் முயற்சியால் கஸ்தூர்பா குஜராத்தி கற்றார், ஆனால் ஆங்கிலம் கற்க மறுத்துவிட்டார். எழுபது வயது கடந்தும் காந்தி கஸ்தூர்பாவுக்கு புவியியல் சொல்லிக்கொடுக்க முயன்றார். ஆனால் கஸ்தூர்பா அதற்கு ஒன்றும் செவி சாய்க்கவில்லை.

பின்னாளில் மோகன்தாஸ் மகாத்மா காந்தியாக சுதந்திர போராட்டத்தின் தலைவர் ஆனார். ஆனால் 13 வயதில் அவர் ஒன்றும் தைரியசாலி இல்லை.

காந்தி எல்லாவற்றுக்கும் பயந்தவராக இருந்தார். இருட்டில் தூங்குவதற்கும், பாம்புகளுக்கும் பேய்களுக்கும் பயந்தார். இதற்கு நேர் எதிராக, கஸ்தூர்பா எதற்கும் பயப்படவில்லை. தன்னை பயமுறுத்த முயன்ற கணவரிடம் கூட அவள் பயப்படவில்லை. கஸ்தூர்பா தன் அனுமதியோடு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று மோகன்தாஸ் கட்டளை இட்டார். ஆனால் கஸ்தூர்பா அதை புறக்கணித்து தான் விரும்பியபடி நடந்துகொண்டார்.

கஸ்தூர்பா வாழ்நாள் முழுவதும் தன் கண்டிப்பான கணவருக்கு ஆதரவாக இருந்தார். காந்தி தன்னிடம் சமரசம் செய்த பிறகே அவர் சொன்னதை கேட்பார். கஸ்தூர்பாவின் துணிவு தான் காந்தியின் சத்தியாகிரகத்தின் முதல் பாடமாக அமைந்தது என்று அவர் ஒப்புக்கொண்டார். சத்தியாக்கிரகம் என்பது உண்மை மற்றும் விடுதலைக்கான போராட்டம். அந்த விடுதலை வன்முறை இன்றி கிடைக்க வேண்டும். அதுவே அகிம்சை. சத்தியாகிரகமும் அகிம்சையும் நம் விடுதலைப் போராட்டத்தின் இரண்டு தூண்கள். கஸ்தூர்பாவுடன் வாழ்ந்த வாழ்க்கையே தனக்கு அகிம்சையை சொல்லித் தந்தது என்று காந்தி கூறினார்.

1886 ஆம் ஆண்டில், பதினேழு வயதான கஸ்தூர்பாவுக்கு மகனாக ஹரிலால் பிறந்தார். கூடிய விரைவில், மோகன்தாஸ் சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியா திரும்பினார். அவர் திரும்பி வந்த 1892 ஆம் ஆண்டில் இரண்டாவது மகன் மணிலால் ராஜ்கோட்டில் பிறந்தார். வழக்கறிஞரான காந்தியின் தொழிலில் சரியான முன்னேற்றம் இருக்கவில்லை. அவர் இன்னும் வெட்கம் கொண்டவராக இருந்தார். பேசும்போது பதட்டப்பட்டார். அடிக்கடி குரலை இழந்தார். அதிர்ஷ்டவசமாக 1893 ஆம் ஆண்டில், அவருக்கு தென்னாப்பிரிக்காவில் வேலை கிடைத்தது. மீண்டும் தனது குடும்பத்தை விட்டு, அவர் டர்பன் நகருக்கு புறப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் தனது குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்தார். இருபத்தேழு வயதான கஸ்தூர்பா, தன் இரண்டு மகன்களோடு தென்னாப்பிரிக்கா செல்ல பம்பாயில் கப்பல் ஏறினார். விரைவில் இந்தியா திரும்புவார் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் நாடு திரும்புவதற்கு பதினெட்டு ஆண்டுகள் ஆகின. தென்னாப்பிரிக்காவில் வாழந்த ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும், போராட்டமும் தியாகமும் நிறைந்த காலம். இந்த அனுபவம் கஸ்தூர்பாவை சுதந்திர போராளியாக மாற உதவியது.

உணவும் உண்ணாவிரதமும்

காந்திஜி தான் உண்ணும் உணவின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தனது உணவைப் பரிசோதித்துக்கொண்டே இருந்தார். சைவ உணவு உண்பவர் என்பதால், வழக்கமாக சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு மற்றும் பழங்களை சாப்பிட்டார்.

ஒரு நாள் பருப்பு வகைகளை மட்டும் உண்ணும் காந்தி மறுநாள் எண்ணெய் இல்லாத ரொட்டியும், அதோடு வேப்பிலையும் பூண்டும் கலந்த ஒரு சுவையற்ற சட்னியும் சமைக்குமாறு கேட்பார். சபர்மதி ஆசிரமத்தின் சமையலறையை மேற்பார்வையிட்ட கஸ்தூர்பாவுக்கு இது ஒரு பெரிய தலைவலியாக அமைந்தது.

ஒரு முறை காந்தி சமைக்காத உணவை மட்டுமே சாப்பிட முடிவு செய்தார். மக்கள் சமையலறையில் நீண்ட நேரம் வேலை செய்ததால் இப்படி ஒரு முயற்சியை எடுத்தார். வெறும் பச்சைக் காய்கறிகளும் பழங்களும் சாப்பிட்டார். வேர்க்கடலையும் தேனும் கலந்த திராட்சை, கோதுமை முளைகள், கீரை போன்றவற்றை காந்தியும் தொண்டர்களும் சாப்பிட்டார்கள். எலுமிச்சை சாறும் இளநீரும் குடித்தார்கள். இந்த உணவையெல்லாம் பாவம் கஸ்தூர்பா தயாரித்தார். சில நாட்களுக்கு பிறகு காந்தியின் உடல் பலவீனம் ஆனது. அப்போது இந்த பரிசோதனை முயற்சி மீண்டும் கைவிடப்பட்டது. கஸ்தூர்பாவுக்கும் இந்தப் பணியிலிருந்து விடுதலை கிடைத்தது.

காந்திஜி உண்ணாவிரதம் இருக்கும்போது கஸ்தூர்பா மிகவும் கவலைப்பட்டார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அடிக்கடி கெஞ்சினார். பசும்பால் குடிக்க மாட்டார் என்று காந்தி முடிவு செய்தார். ஒரு நாள் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டபோது, அவர் பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். பலமுறை கெஞ்சியும் அவர் மறுத்துவிட்டார். கடைசியாக கஸ்தூர்பா சொன்னதைக் கேட்டு ஆட்டுப்பால் குடித்தார்..

காந்திஜி தனது உணவில் உப்பு எடுப்பதை கைவிட்டார். எனவே அவர் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார். உப்பெடுக்க அவர் தண்டிக்குச் சென்றபோது, கஸ்தூர்பா புன்னகைத்திருக்க வேண்டும் !

கஸ்தூர்பா தனது கணவரின் உணவு முறைகளை புறக்கணித்தார். தேநீர் அல்லது காபி குடிப்பதை காந்தி ஏற்கவில்லை, ஆனால் கஸ்தூர்பா இரண்டையும் குடித்தார். காந்திஜி ஒருமுறை சொன்னார், “காபி-தேனீர் குடிப்பதை நான் ஏற்காவிட்டாலும், பா அவற்றை குடிக்கிறாள். பா-வுக்கு காபி அல்லது தேநீர் வேண்டும் என்றால், நான் அவளுக்காக அன்போடு செய்து கொடுப்பேன்"

அந்நிய உலகம்

டர்பன், தென்னாப்பிரிக்கா. குடும்பத்தின் அரவணைப்பில் வளர்ந்த கஸ்தூர்பாவுக்கு தென்னாப்பிரிக்கா அந்நியமாக நாடாக இருந்திருக்கும். தென்னாப்பிரிக்க சமூகம் ஆழமாக பிளவுபட்டு இருந்தது. அந்நாட்டை ஆட்சி செய்த வெள்ளையர்கள், அதன் குடிமக்களாகிய ஆப்பிரிக்கர்களையும், அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்யச் சென்ற இந்தியர்களையும் அடிமைகளாக நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்கா வெள்ளையர்களின் ஆதிக்க நாடாக இருந்தது. ஆபிரிக்கர்களும் இந்தியர்களும் ஏதாவது ஒரு சிறிய வழக்கில் சிக்கினால், அவர்கள் எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டார்கள். நிறவெறி சட்டத்தின் காரணமாக ஆப்பிரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் அந்நாட்டில் சுதந்திரமாக நடமாடவோ, சொந்தமாக வீடு வாங்கவோ உரிமை இருக்கவில்லை. ஹோட்டல், கடைகள், மருத்துவமனைகள் போன்ற பல இடங்களுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி இல்லை. தனி குழாய்களிலிருந்து நீர் குடிக்க வேண்டியிருந்தது. ஒரு வெள்ளையர் அருகில் நடந்து வந்தால், அவர்கள் நடைபாதையில் இருந்து இறங்க வேண்டியிருந்தது. ஒருமுறை காந்திஜி கூட அவ்வாறு செய்ய மறுத்ததால் தாக்கப்பட்டார்.

காந்திஜி அதிர்ச்சியடைந்தார். அவர் இங்கிலாந்தில் கூட இத்தகைய நிறவெறியை பார்த்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்திய பண்ணைத் தொழிலாளிகளுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. காந்தி அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் போராடினார். அவர்களில் பலரை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதில் வெற்றி பெற்றார். ‘கூலிகள்’ என்று அழைக்கப்பட்ட இந்திய தொழிலாளிகள் மத்தியில் காந்தி பிரபலமடைந்தார். அவர்கள் காந்தியை ‘கூலிகளின் வக்கீல்’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

காந்திஜி தன் குடும்பத்தைப் பார்க்க இந்தியா வந்தார். அப்போது தனது தென்னாப்பிரிக்க அனுபவங்களைப் பற்றி எழுதினார். நிறவெறி சட்டத்தை விமர்சித்து பேசினார். காந்தியின் சொற்பொழிவுகள் தென்னாப்பிரிக்க செய்தித்தாள்களில் வெளியாகின. வெள்ளையர்கள் கோபம் கொண்டனர். அவரை தென்னாப்பிரிக்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். காந்தியை டர்பனில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டனர். அப்போது இந்தியாவிலிருந்து கப்பல் எறி புறப்பட்டுக் கொண்டிருந்த காந்திக்கு இந்த திட்டம் தெரியவில்லை. டர்பனில் கப்பல் வந்தபோது, அதிகாரிகள் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. இந்தியாவில் பிளேக் நோய் இருந்ததாகவும், கப்பலில் உள்ள இந்தியர்களுக்கு அந்நோய் பரவியிருந்ததாக அவர்கள் சந்தேகப்பட்டதாகவும் சாக்கு போக்கு கூறினார்கள்.

பயணிகள் டர்பன் துறைமுகத்திற்கு வெளியே அமர்ந்திருந்தார்கள். இருபத்து மூன்று நாட்களுக்குப் பிறகு தான் அவர்களுக்கு வெளியேற அனுமதி கிடைத்தது. வெளியே வந்தபோது அங்கே வெள்ளையர்களின் பெரும் கூட்டம் காந்திஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தது. அவர்கள் கப்பலில் இருந்து இறங்குவதை வெள்ளையர்கள் விரும்பவில்லை. திரும்ப இந்தியாவுக்குச் செல்லும்படி கூச்சலிட்டனர்.

இந்தக் காட்சியைப் பார்த்த கஸ்தூர்பாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? முதல்முறையாக, அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு அஞ்சினார். அன்று தொடங்கிய அச்சம் அவர் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது.

கப்பலுக்குள் வந்த நண்பர் ஒருவர் அவர்களிடம் இரவு வரை கப்பலிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜி  கோழை போல் நழுவப் போவதில்லை என்று முடிவு எடுத்தார். கஸ்தூர்பாவையும் பிள்ளைகளையும் மற்றவர்களையும் தன நண்பரான பார்சி தொழிலதிபர் ருஸ்டோம்ஜியின் வீட்டிற்கு அனுப்பினார். பின்னர் அவர் கப்பலை விட்டு வெளியேறினார்.

ருஸ்டோம்ஜியின் வீட்டிற்கு நடந்து செல்லலாம் என்று காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு, அடித்து உதைத்தார்கள். காவல்துறை கண்காணிப்பாளரின் மனைவி ஜேன் அலெக்சாண்டர் காப்பாற்றாவிட்டால் காந்திஜி அன்றே இறந்திருப்பார். ஒரு வழியாக காந்திஜி வீட்டிற்கு வந்தார். ஆனால் அவருக்கு பல சவால்கள் வந்தன.

காந்திஜியை அடித்த கும்பல் அவரது வீட்டைச் சுற்றி வளைத்தது. காந்திஜி வெளியே வரவேண்டும் என்று கூச்சலிட்டது. காவலர் உடை அணிந்த ஒருவர் அங்கே நுழைந்து ஒரு வழியாக காந்தியை அந்த இடத்திலிருந்து தப்பிக்க உதவினார். கும்பல் வீட்டுக்குள் சென்றபோது, உள்ளே ருஸ்டோம்ஜி குடும்பதாரும், கஸ்தூர்பாவும் சிறுவர்களும் மட்டும் இருந்தார்கள்.இந்தச் சூழ்நிலையில் இருக்கும் எந்தப் பெண்ணும் உடனடியாக தன் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று நினைத்திருப்பார். கஸ்தூர்பா அப்படி நினைக்கவில்லை !

அதன் பிறகு கஸ்தூர்பாவின் வாழ்க்கை சூழல் முன்னேறியது. காந்திஜி ஒரு பெரிய வழக்கறிஞராக வளர்ந்தார். அவர்கள் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் கஸ்தூர்பா விலையுயர்ந்த எம்பிராய்டரி புடவை அணிந்து, காந்திஜியும் சிறுவர்களும் மேற்கத்திய உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளன.

ஆனால் காந்திஜி தனது வாழ்க்கையில் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருந்தார். மீண்டும் எளிமையாக வாழ விரும்பினார். எனவே அவர்கள் அனைவரும் ஒரு பண்ணைக்கு இடம் பெயர்ந்தார்கள். முதலில் டர்பனுக்கு அருகில் உள்ள பீனிக்ஸ் பண்ணையிலும், பிறகு ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள டால்ஸ்டாய் பண்ணையிலும் வாழ்ந்தனர். காந்தியின் குடுமபத்துடன் வேறு பலரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

அனைத்து வேலைகளையும் உறுப்பினர்கள் செய்யவேண்டும் என்பதே பண்ணையின் விதிமுறையாக இருந்தது. அவர்கள் காய்கறித் தோட்டம் வளர்த்தல், பால் கரத்தல், உணவு சமைத்தல், பண்ணையை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்தார்கள். காந்திஜி அவர்களுக்கு ரொட்டி சுடவும், மர்மலாட் தயாரிக்கவும், தச்சு வேலை செய்யவும், காலணிகள் தயாரிக்கவும் கற்றுக்கொடுத்தார். இவையெல்லாம் சுற்றுச்சூழலை பாதிக்காத வேலைகள் என்றாலும், கடின உடலுழைப்பு தேவைப்பட்டது. பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவர்களை காந்தி வீட்டிலேயே கற்பிக்க முடிவு செய்தார். காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கு இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தைக்கு எதிராக மாறினார் ஹரிலால். விரைவில் அவர் குடும்பத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு திரும்பினார். கடைசி வரை காந்திஜியுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை. இவையெல்லாம் கஸ்தூர்பாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தின. அனைவரும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று காந்திஜி சொன்னபோது அவர் கோபம் கொண்டார். காந்தியோடு சண்டையிட்டு, பின்னர் சமரசம் செய்து கொண்டார். பிற்காலத்தில் காந்திஜி அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோதும் கஸ்தூர்பாவுக்கு இது போன்ற வேலைப்பளு தொடர்ந்தது. கஸ்தூர்பா எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். தன கணவரை விட குறைவான உடைமைகளை கொண்டிருந்தார். உண்மையான சத்தியாக்கிரகி ஆகிவிட்டார்.

அப்போது காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்கு போராடுவதற்காக நடால் இந்திய காங்கிரஸ் கட்சியை தொடங்கியிருந்தார். பல எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. காந்திஜி உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறையில் அவர்கள் பட்டினி கிடந்தனர். சாட்டையடி வாங்கினர். காந்திஜி ஒரு இருண்ட தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். சிறையடைப்பை எதிர்த்து இந்தியாவிலும் இங்கிலாந்திலும் செய்தித்தாள்கலில் செய்தி வந்ததால் போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

கஸ்தூர்பா பண்ணையை தனியாக நிர்வகித்தார். அவருக்கு இப்போது ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் என்ற நான்கு மகன்கள். தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே சட்டபூர்வமானவை என்று ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. கஸ்தூர்பா கோபமடைந்தார். மதச் சடங்குகளின்படி செய்யப்பட தன் திருமணம் சட்டபூர்வமானது அல்ல என்று சொல்ல வெள்ளைக்காரர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? எனவே கஸ்தூர்பாவும் அவருடைய தோழிகளும் இந்தச் சட்டத்தை எதிர்த்து அணிவகுப்பு நடத்தினர்.

இந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள். அவர்களை காவல்துறையினர் அடித்து தாக்கினர். சிலர் இறந்தனர். கஸ்தூர்பாவும் வேறு சில பெண்களும் டிரான்ஸ்வால் மாகாணத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுடன் சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டனர். கஸ்தூர்பா விடுவிக்கப்பட்டபோது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். இந்த சட்டமும் ரத்து செய்யப்பட்டது.

கஸ்தூர்பா ஒரு சுதந்திர போராட்ட வீரராக மாறியிருந்தார். 1915 இல் காந்தி குடும்பம் இந்தியாவுக்கு புறப்பட்டது. அங்கே அவர்களுக்கு புது சவால்களும் மிகப் பெரிய போராட்டமும் காத்திருந்தன.

காந்தியின் வாழ்க்கை முறை

காந்திஜி தனது வாழ்க்கை முறையில் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகள் செய்து வந்ததால், அவரது ஆடைகளிலும் மாற்றங்கள் நடந்தன. காந்தியின் குடும்பப் புகைப்படங்களிலிருந்து இந்த மாற்றங்களை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். லண்டனில் காந்தி ஆடம்பரமான கோட்சூட்டும் தொப்பியும் அணிந்திருந்தார். கஸ்தூர்பாவும் குழந்தைகளும் நீண்ட நடைபயிற்சி செல்ல வேண்டும் என்றும், அவர்கள் மேற்கத்திய உணவு வகைகளான ஓட்மீலும் கோகோவும் சாப்பிட வேண்டும் என்றும், அவர்கள் ஷூ மற்றும் சாக்ஸ் அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினார். துர்நாற்றம் காரணமாக சில நாட்கள் கழித்து, அவர்கள் அனைவரும் சாக்ஸ் அணிய மறுத்துவிட்டார்கள்!

தென்னாப்பிரிக்காவில், ஆரம்பத்தில் காந்தி மேற்கத்திய உடைகளையும் கஸ்தூர்பா பார்சி புடவைகளையும் அணிந்திருந்தார். இந்தியா திரும்பியபோது காந்தியின் உடை வேட்டி, குர்தா, தலையின் மேல் ஒரு பெரிய தலைப்பாகை என்று ஒரு இந்திய விவசாயியின் உடை போல மாறியது. கஸ்தூர்பா எளிய பருத்தி புடவை அணியத் தொடங்கினார்..

கஸ்தூர்பா போன்ற அழகிய இளம்பெண் அழகான உடைகள் மற்றும் நகைகள் அணிவதை கைவிடுவது எளிதல்ல. அதனால்தான் அவர் புகைப்படங்களில் அரிதாகவே புன்னகைக்கிறார்!

இந்தியாவில்

கஸ்தூர்பா இந்தியா திரும்பினார். ஆனால் காந்திஜி சுதந்திர போராட்டத்தில் சேருவதற்காகவே இந்தியாவுக்கு வந்தார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே அவர் மேலும் சவால்களுக்கு தயாராக இருந்தார். காந்தி ​தென்னாப்பிரிக்காவில் செய்த சாதனைகள் இந்தியாவெங்கும் பிரபலம் அடைந்தன. பம்பாயின் (மும்பையின்) துறைமுகத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. காந்தியையும் கஸ்தூர்பாவையும் மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  நிகழ்ச்சியில் கஸ்தூர்பாவை பம்பாயின் மேட்டுக்குடி பெண்கள் சூழ்ந்து கொண்டனர். ஆடம்பர உடை அணிந்த பெண்களுக்கு மத்தியில் எளிய கைத்தறி புடவை அணிந்த கஸ்தூர்பா, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவரின் அருகில் நின்றார்.

காந்திஜி சுமார் இருபது ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தார். காங்கிரஸ் தலைவர் கோபால் கிருஷ்ண கோகலே காந்தியிடம் முதலில் இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரைத்தார். எனவே காந்தி கஸ்தூர்பாவுடன் இந்தியாவெங்கும் ஒரு நீண்ட ரயில் பயணத்தைத் தொடங்கினார். நெரிசலும் அழுக்கும் மிகுந்த மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்தார்கள். இந்த அனுபவம் கஸ்தூர்பாவுக்கு கடினமாக இருந்தது. ஆனால் நாடெங்கும் உள்ள ஏழை மக்களின் அன்பும் ஆதரவும் அவரை ஆச்சரியப்பட   வைத்தது. காந்தியை சந்தித்த மக்கள், அவர் தங்களது பிரச்சனைகளை கேட்பார் என்றும், தங்களுக்காக போராடுவார் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தனர். காந்திஜி மகாத்மா காந்தியாக, ஏழை மக்களின் அன்புக்குரிய 'பாபு' வாக மாறினார். கஸ்தூர்பா 'பா' ஆனார்.

நாடெங்கும் காந்தியைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காத்திருந்தார்கள். அவர்களுக்கு பூக்களும் பழங்களும் வழங்கினார்கள்.

சாந்திநிகேதனில், ரபீந்திரநாத் தாகூர் அவர்களை இசையோடும் நடனத்தோடும் வரவேற்றார்.

அங்குள்ள மாந்தோட்டங்கள் கஸ்தூர்பாவைக் கவர்ந்தன. மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் காட்சி அவருக்கு டால்ஸ்டாய் பண்ணையை நினைவூட்டியிருக்கும்.

காந்திஜி அகமதாபாத்திற்கு அருகே சபர்மதி ஆசிரமத்தைத் தொடங்கினார். கஸ்தூர்பாவும் அங்கேயே வசித்தார். பலர் ஆசிரமத்தில் இணைந்தனர். ஆசிரமத்திற்கு சொந்தமாக பள்ளியும், நூலகமும் இருந்தன. ஆசிரமத்து உறுப்பினர்கள் தோட்டத்திலும், மாட்டு கொட்டகையும் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் பருத்தி நூலை 'சர்கா'க்களில் சுழற்றினர். அந்த நூலைக் கொண்டு நெசவாளர்கள் வேட்டியும் சேலையும் தயாரித்தார்கள்.

ஆசிரமத்தில் கஸ்தூர்பாவும் மற்ற பெண்களும் சமையலறையை நிர்வகித்தனர். காந்திஜி அடிக்கடி வெளியூருக்கு சென்றதால், சபர்மதி அவருக்கு ஓய்வெடுக்கும் இடமாக மாறியது. சுதந்திரப் போராட்ட வேலையால் அவர் சோர்வைடைந்த போது, ​​கஸ்தூர்பா அவருக்கு பராமரிப்பும் ஊக்கமும் தந்தார்.காந்திஜியின் சுயசரிதை எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் லூயி பிஷ்ஷர், சபர்மதியில் கஸ்தூர்பாவைப் பார்த்து, "சாப்பாட்டின்போதும் பிரார்த்தனையின் போதும் அவள் அவருடைய இடத்தோளுக்கு பின்புறம் சிறிது தள்ளி உட்கார்ந்து கொண்டு அன்புகனிய அவருக்கு விசிறிக்கொண்டிருப்பாள். அவள் எப்போதும் அவரையே பார்த்துக்கொண்டிருப்பாள். அவரோ அவளை பார்ப்பது அபூர்வம். ஆயினும், தமக்கு மிக அருகே அவள் இருப்பதை அவர் விரும்பினார். இருவருக்கும் பரிபூரணமான மன ஒற்றுமை இருந்தது புலப்பட்டது”, என்று எழுதினார்.காந்தியின் பல்வேறு விதிகளை கஸ்தூர்பா புறக்கணித்தார். ஆசிரமத்து குழந்தைகள் காரசாரம் இல்லாத சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும் என்று காந்தி விரும்பியபோதும், கஸ்தூர்பா அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மருத்துவத்தைப் பற்றி காந்திக்கு மிகவும் விசித்திரமான கோட்பாடுகள் இருந்தன. நான்கு வயதான தனது பேரன் அருணுக்கு ஒரு முறை காய்ச்சல் வந்தபோது, ஏழு நாட்களுக்கு அவனுக்கு எந்த உணவும் அளிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார். காய்ச்சல் விரைவில் நீங்கியது, ஆனால் சிறுவன் உணவுக்காக அழத் தொடங்கினான். கஸ்தூர்பா காந்தியைப் பார்த்து, "நான் குழந்தையை பட்டினி போட விடமாட்டேன்!" என்று சொல்லி அருணுக்கு ஆரஞ்சு சாறு கொடுத்தார்.

பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி சிறைக்குச் சென்ற அனுபவம் கஸ்தூர்பாவை ஒரு சுதந்திரச் சிந்தனையாளர் ஆக்கியது. ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாததால், தனது மருத்துவர் சுஷிலா நய்யாரை சந்திக்க ரயிலில் பயணம் செய்தார். ரயில் நிலையத்தில், கஸ்தூர்பா தனியாக பயணம் செய்ததைக் கண்ட நய்யார் அதிர்ச்சியடைந்தார். அதற்கு கஸ்தூர்பா சிரித்துக் கொண்டே, “இதில் என்ன பிரச்சனை ? பயணிகளின் பொறுப்பில் என்னை அவர்கள் ரயில் ஏற்றி விட்டார்கள். இப்போது என்னை வரவேற்க நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்” என்று பதிலளித்தார்.

காந்திஜியும் கஸ்தூர்பாவும் பீகாரில் உள்ள சம்பாரனுக்கு ஒன்றாக பயணம் செய்தனர். அங்கே அவுரி பயிரிடும் விவசாயிகள் உரிமையாளர்களான வெள்ளையர்காளால் சுரண்டப்பட்டு வந்தார்கள். எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகம் செய்ய வந்தார் காந்திஜி. பல கிராமங்களுக்குச் சென்று மக்களோடு பேசவேண்டியிருந்ததால் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. கிராமங்களில் வறுமையைக் கண்டு கஸ்தூர்பா அதிர்ச்சியடைந்தாள். கிராமத்துப் பெண்களுடன் உரையாடி, அவர்களிடம் தூய்மை, ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றின் நன்மைகளை எடுத்து விளக்கினார்.கஸ்தூர்பா ஒரு பாரம்பரியப் பெண். இந்து ஆசாரங்களில் நம்பிக்கை கொண்டவர். எனவே அவர் சாதி முறையை நம்பினார். அதே நேரத்தில், காந்திஜி சாதி அமைப்பையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போராடினார். அவை மனிதகுலத்திற்கு எதிரானவை என்று நம்பினார். ஒரு முறை காந்திஜி துதாபாய் என்ற ஹரிஜனையும், அவர் மனைவி தானிபென் மற்றும் மகள் லட்சுமியையும் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்தார். கஸ்தூர்பா, தானிபெனை ஆசிரம சமையலறைக்குள் நுழைய மறுத்துவிட்டார். காந்திஜியின் மருமகன் மகன்லால் உட்பட பலர் ஆசிரமத்திலிருந்து வெளியேறினர். கஸ்தூர்பாவைப் புரியவைக்க காந்திஜிக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. பின்னர் அவர் லட்சுமியை தத்தெடுக்கப் போவதாகக் கூறியபோது கஸ்தூர்பா சம்மதித்தார்.

கஸ்தூர்பாவின் குடும்பம்

காந்திஜி தன் பிள்ளைகளிடம் கண்டிப்பான தந்தையாக இருந்தார். வீட்டிலேயே அவர்களுக்கு கல்வி கற்பித்தார். எளிமையும் ஒழுக்கமும் கொண்ட வாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார். மூத்த மகன் ஹரிலால் இந்த விதிகளை ஏற்க முடியாமல் குடும்பத்திலிருந்து விலகிச் சென்றார். இது கஸ்தூர்பாவுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.ஹரிலாலின் வாழ்க்கை கரடுமுரடானது. அவர் தனது தந்தையை பகிரங்கமாக விமர்சித்தார். கஸ்தூர்பா ஹரிலாலை மீண்டும் குடும்பத்திற்குள் கொண்டுவர முயன்றார். ஹரிலாலின் மனைவி இறந்தபோது, கஸ்தூர்பா ஹரிலாலின் நான்கு குழந்தைகளையும் சபர்மதிக்கு கொண்டு வந்து வளர்த்தார்.

காந்திஜியின் விருப்பப்படி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காந்தியின் பிள்ளைகள் யாரும் அரசியலில் சேரவில்லை.

1930-இன் குளிர்காலத்தில், காந்திஜியும் அவரது ஆதரவாளர்களும் தண்டி யாத்திரைக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது உப்புச் சட்டத்தின் கீழ் எந்த இந்தியருக்கும் உப்பு தயாரிக்கவோ விற்கவோ அனுமதி இருக்கவில்லை. ஆனால் ஏழைகள் உட்பட, அனைத்து இந்தியர்களும் உப்பு வரி செலுத்த வேண்டியிருந்தது. சபர்மதியிலிருந்து தண்டியில் உள்ள கடற்கரைக்கு அணிவகுத்துச் சென்று, உப்பு எடுத்து உப்பு விற்பதே தண்டி யாத்திரையின் நோக்கமாக இருந்தது.

காந்திஜியும் எழுபத்தெட்டு இளைஞர்களும் இருபத்தைந்து நாட்கள் பல கிராமங்கள் வழியாக நடந்து சென்றார்கள். அவர்களைப்போல பலர் இந்தியாவெங்கும் உப்பு தயாரித்தும் விற்றும் உப்புச் சட்டத்தை மீறினார்கள். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் சந்தைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்ட்டன்ன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில் இது ஒரு அமைதியான, ஆனால் புத்திசாலித்தனமான சத்தியாகிரகமாக அமைந்தது.தண்டி யாத்திரை சென்றவர்களை ஆங்கிலேயர் அடிக்கவோ, துப்பாக்கியால் சுடவோ, கைது செய்யவோ முடியும் என்பதால், அவர்கள் உயிருக்கு ஆபத்து இருந்தது. கஸ்தூர்பா இதை நன்றாக அறிந்திருந்தார். எனவே 1930 மார்ச் 12 ஆம் தேதி காலை, அவர்கள் சபர்மதியை விட்டு வெளியேறத் தயாரானபோது, கஸ்தூர்பாவும் அவர்களுடன் செல்ல முடிவுசெய்தார். காந்திஜி அவரைத் தடுத்தார். அனால் கஸ்தூர்பாவைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் காந்திஜியின் அருகில் இருப்பதையே விரும்பினார். அறுபது வயதிலும், கரடுமுரடான கிராமத்துச் சாலைகள் வழியாகச் செல்லவும், போலீஸ் தடியடியை எதிர்கொள்ளவும் அவர் தயங்கவில்லை. தண்டி யாத்திரைக்குப் பிறகு, காந்திஜி சிறை அனுப்பப்பட்டார். கஸ்தூர்பா மருத்துவமனைகளுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்தவர்களை உதவினார்.

1942-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை நிறைவேற்றியது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் அன்றிரவு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். காந்திஜி புனேவுக்கு அருகிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை அடைக்கப்பட்டார். காந்தி அடைக்கப்பட்ட சிறையில் தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று கஸ்தூர்பா கேட்டுக்கொண்டார். அரசு அவரது வேண்டுகோளை மறுத்தது. அரசின் முடிவுக்கு எதிராக மீண்டும் போராடுவேன் என்று கஸ்தூர்பா மிரட்டினார். இறுதியாக வேறு வழியின்றி காந்தி இருக்கும் இடத்திற்கு கஸ்தூர்பாவை அனுப்பினார்கள்.

கஸ்தூர்பாவும் காந்திஜியும் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக சிறைவாசம் இருந்தனர். அவர்களுடன் காந்திஜியின் செயலாளர் மகாதேவ் தேசாயும், சரோஜினி நாயுடுவும் மீரா பென்னும் பிற தலைவர்களும் இருந்தனர். குடும்பத்தைப் பிரிந்தது, குறிப்பாக பேரக்குழந்தைகளிடமிருந்து பிரிந்து வாழ்வது கஸ்துர்பாவை பாதித்தது. ஒருமுறை இதைப் பற்றி காந்திஜியிடம் பேசும்போது “ஏன் நீங்கள் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்கிறீர்கள் ? நம் பரந்த நாட்டில் அனைவருக்கும் இடம் இருக்கிறதே! அதில் ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களாக வாழலாமே !” என்றார்.

அதற்கு காந்திஜி, "சுதந்திர இந்தியாவின்  குடிமக்களாக ஆங்கிலேயர்கள் வாழ நினைத்தால், அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று பதில் கூறினார்.

சிறைவாசத்தின்போது காந்திஜியும் கஸ்தூர்பாவும் தோட்டத்தில் நெடு தூரம் நடந்தார்கள்.  முதிர்ந்த வயதிலும் அவர் கஸ்தூர்பாவுக்கு ஏதோ கற்பித்துக்கொண்டிருந்தார். புவியியல் பாடத்தின்போது உலக நாட்டுத் தலைநகரங்களின் பெயர்களை கற்றுக்கொடுக்க முயன்றார். காஸ்தூர்பாவுக்கு அப்பெயர்கள் நினைவில் நிற்கவில்லை!

ஆகா கான் அரண்மனையில் வாழ்ந்த காலம் காந்திஜிக்கு மிகவும் துயரமானது. முதலில் அவரது தோழர் மகாதேவ் தேசாய் இறந்தார், பின்னர் 1944 இல் கஸ்தூர்பா நுரையீரல் நோயால் பலவீனம் ஆனார். பல வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எந்தப் பயனும் இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, கஸ்தூர்பாவின் பிள்ளைகளுக்கு அவளைப் பார்க்க அனுமதி கிடைத்தது. காந்திஜி கஸ்தூர்பாவின் உடலைப் பராமரிப்பதில் முழு நேரம் செலவழித்தார். அவருக்காக பிரார்த்தனை செய்தார். 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று கஸ்தூர்பா காந்தி காந்திஜியின் மடியில் தலைவைத்து காலமானார். அவர் விருப்பப்படி, காந்திஜி சுழற்றிய நூலில் நெய்யப்பட்ட புடவையில் உடல் தகனம் செய்யப்பட்டது. அறுபத்திரண்டு ஆண்டுகள் ஒன்றாக தன்னோடு வாழ்ந்த கஸ்தூர்பாவின் மரணத்திலிருந்து மீள பல காந்திக்குப் பல நாள் ஆனது. மீரா பென் ஒரு கடிதத்தில் எழுதியது போல, “'பா'-வின் மறைவால் 'பாபு'-வின் ஒரு பகுதி மறைந்தது போல் இருந்தது.” இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்தவர், இந்தியா சுதந்திரம் அடைந்ததை காண முடியாமல் மறைந்தது துரதிர்ஷ்டவசமானது.ஆகா கான் அரண்மனை மைதானத்தில், சுதந்திர போராட்டத் தியாகிகள் இருவருக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. இருவரும் மகாத்மா காந்திக்கு நெருக்கமானவர்கள். ஒருவர் மகாதேவ் தேசாய், மற்றவர் 'பா' என்ற கஸ்தூர்பா காந்தி.