kathavukku pinnaal yaar

கதவுக்குப் பின்னால் யார்?

கதவுக்குப் பின்னால் இருப்பது யார்? அது அம்மாவா, இல்லை பயமுறுத்தும் பயங்கர உருவமா? பிபி, அசீம், ஜூசேர், தெய் தெய் நால்வரும்தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். உள்ளே அனுமதிப்பதற்கு முன்பு, அது சரியான நபர்தானா என்று எப்படி சோதிப்பார்கள்?

- Vishal Raja

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அப்போது கதவுக்கு வெளியே ஒரு குரல் கேட்டது. “தெய் தெய், நான்தான் அம்மா வந்திருக்கிறேன்! உனக்கும் உன் நண்பர்களுக்கும் திண்பண்டங்கள் கொண்டு வந்திருக்கிறேன். கதவைத் திற!”

“இது என் அம்மாவின் குரல் போல் இல்லையே” என்றாள் தெய் தெய். “கதவைத் தட்டும் ரகசியக் குறியீடு என்ன?”

“இந்த ரகசியக் குறியீடு தப்பு. மன்னிக்கவும். உங்களை உள்ளே விட முடியாது!” என்றான் அசீம்.

உர்ர்ர்ர்!

“ஒருநாள் இல்லை ஒருநாள் உள்ளே வரத்தான் போகிறேன்” என்று கதவுக்கு பின்னாலிருந்த பயங்கர உருவம் கத்தியது.

சிறிது நேரம் கழித்து...

“தெய் தெய், உங்கள் ரகசியக் குழுவுக்காக ஒரு புதிய விளையாட்டு வாங்கி வந்திருக்கிறேன்! என்னை உள்ளே விடுங்களேன்!”

“கதவைத் தட்டும் ரகசியக் குறியீடு என்ன?” என்று கேட்டான் ஜூசேர்.

“சரியான ரகசியக் குறியீடு!” என்றாள் பிபி.

“அப்படியா?” பயங்கர உருவம் வாய் பிளந்தது. “ஆமாம், ஆமாம்! சரியென்று எனக்குத் தெரியாதா. இப்போது என்னை உள்ளே விடுங்கள்.”

“சரி! ரகசியக் குழு உறுப்பினர் அட்டையைக் காண்பியுங்கள்!” என்றான் அசீம்.

பயங்கர உருவம் ஒரு அட்டையைக் கதவிடுக்கு வழியாக உள்ளே தள்ளியது.

“மன்னிக்கவும், இது போலி அட்டை!”

அந்த பயங்கர உருவம் கதவை டமடமவென்று அடித்தது. “நான் சீக்கிரமே உள்ளே வருவேன்” என்று இரைந்தது.

சற்று நேரம் கழித்து, மீண்டும் கதவு தட்டப்பட்டது.

“உங்களுக்காக ஒரு நாய்க்குட்டி கொண்டு வந்திருக்கிறேன். கதவைத் திறங்கள், செல்லங்களா!” என்றது பயங்கர உருவம்.

“கதவைத் தட்டும் ரகசியக் குறியீடு என்ன?” என்று கேட்டாள் பிபி.

“சரிதான்” என்றாள் பிபி.

“சரியாகத்தான் இருக்கும். இப்போது என்னை உள்ளே விடுங்கள்!” என்று பயங்கர உருவம் கத்தியது.

“முதலில் ரகசியக் குழு உறுப்பினர் அட்டையைக் காண்பியுங்கள்” என்றான் அசீம்.

பயங்கர உருவம் ஒரு அட்டையைக் கதவிடுக்கு வழியாக உள்ளே தள்ளியது.

“உண்மையான அட்டைதான்” என்றாள் தெய் தெய். “இப்போது கை ரேகையைக் காண்பியுங்கள். ஜன்னல் கண்ணாடியில் கை வையுங்கள்.”

தொம்! ஜன்னல் கண்ணாடியில் நீளமான கூரிய நகங்களோடு முடி அடர்ந்த ஒரு பெரிய கை தெரிந்தது.

“இது அம்மாவின் கை இல்லை. போ போ!” நான்கு குழந்தைகளும் ஒன்றாகச் சொன்னார்கள்.

“அடடடடடடா!” முஷ்டியை மடக்கிக் கொண்டு பயங்கர உருவம் கத்தியது. “இந்தக் கடவுச்சொற்கள் மட்டும் இல்லையென்றால் உங்களையெல்லாம் எப்போதோ அள்ளி விழுங்கியிருப்பேன்!”

சிறிது நேரம் கழித்து, யாரோ கதவைத் தட்டினார்கள்...

சரியான கடவுச்சொல்.

கதவிடுக்கு வழியாக ஒரு காகிதம் உள்ளே வந்தது. ரகசியக் குழுவின் உண்மையான உறுப்பினர் அட்டை.

அடுத்தது – தொம்! ஜன்னல் கண்ணாடியில் ஒரு கைரேகை தெரிந்தது.

“இது அம்மாவின் கையேதான்!”

தெய் தெய் வேகமாக கதவைத் திறந்தாள். தட்டு நிறைய இனிப்புகளை எடுத்துக்கொண்டு அம்மாதான் வந்திருந்தார்.

தெய் தெய், பிபி, ஜூசேர், அசீம் நால்வரும் தங்கள் ரகசியக் கூடத்தை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டார்கள்?

ரகசியக் கூடத்துக்கு வந்திருப்பது அம்மாதானா என்பதை உறுதிசெய்ய தெய் தெய், பிபி, ஜூசேர், அசீம் ஆகியோர் மூன்று வழிமுறைகளை வைத்திருந்தார்கள். ஒருவர் தான் யாரென்று சொல்கிறாரோ, அவரேதானா என்று உறுதிசெய்யும் முறைக்கு உறுதிப்பாடு(authentication) என்று பெயர். பெரும்பாலும் இது பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. தவறான நபர்கள், தங்களுக்கு சொந்தமில்லாத முக்கியமான தகவல்களைக் கைப்பற்றிவிடாமல் இது தடுக்கிறது.

இந்த நான்கு நண்பர்களும், வந்திருப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மூன்று முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுடைய வழிமுறை பல-காரணி உறுதிப்பாடு (Multi-Factor Authentication) எனப்படும்.

இந்த வழிமுறையால் முக்கியமான தகவல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகளில், பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இப்படி மின்னஞ்சல்கள், சமூக ஊடகக் கணக்குகள், வங்கிக் கணக்கு போன்ற பலவற்றையும் பாதுகாக்கலாம். எனவே, பயங்கர உருவம் முதல் இரண்டு நிலைகளை ஏமாற்றித் தாண்டிவிட்டாலும், மூன்றாவது நிலை அதை ரகசியக்கூடத்தில் நுழையாமல் தடுக்கிறது.