kazhivu neer enge pokirathu

கழிவு நீர் எங்கே போகிறது?

நிகிலின் செல்ல எலி நோஸி சாக்கடையில் விழுந்துவிட்டது. அங்கிருக்கும் சீக்கி எலி, நோஸிக்கு ஊர் சுற்றிக் காண்பிக்கிறது.

- Ramki J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நோஸி, நிகிலின் பாக்கெட்டிலிருந்து தவ்வியது...

“நிகில்ல்ல்ல்ல்! உன் எலிய என்கிட்ட வரக்கூடாதுன்னு சொல்லு” என்று அவன் தங்கை கத்தினாள்.

நோஸி பயந்துபோய் கை கழுவும் தொட்டியை நோக்கித் தாவியது. ஆனால் தவறி கழிவறைக்குள் குதித்துவிட்டது.

வூஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!

நோஸி, நிலத்தடியில் ஒரு குழியைச் சென்றடைந்தது. நோஸி இருட்டுக்குப் பழகியதும் அந்த இடத்தில் இன்னொரு எலி இருப்பதைப் பார்த்தது.

“ஹேய்! புது எலி! என் பேரு சீக்கி. உன் பேர் என்ன? சுத்திக் காட்டுறேன் வர்றியா?” என்றது சீக்கி.

“என் பேரு நோ… நோஸி… நான் எங்கே இருக்கேன்?” என்றது நோஸி.

“இதுதான் நிலத்தடி கழிவு நீர்த் தொட்டி. கழிவறை, சமையலறையிலிருந்து வெளியே வரும் குழாய்கள் சாக்கடையில் கலக்கும் இடம்” என்றது சீக்கி.

பச்சக்! நோஸி மீது வெள்ளையாக நுரை வந்து விழுந்தது.

“உன் நல்ல நேரம், அது ஆய் இல்லை. ஹிஹிஹிஹி” என்றபடி சிரித்தது சீக்கி.

சீக்கியும் நோஸியும் ஒரு குழாய் வழியாக ஓடினர். அங்கிருந்து வட்டமான ஒரு பெரிய துளைக்குள் குதித்தார்கள். அதற்குள் பெரிதும் சிறிதுமாக பல குழாய்கள் இருந்தன.

“அந்த சின்னக் குழாய்கள், எல்லா கட்டடங்களிலிருந்தும் கழிவு நீரை இந்தப் பெரிய குழாய்க்கு கொண்டுவந்து சேர்க்குது” என்றது சீக்கி.

“அங்கே பாரு, அதுதான் பாதாள சாக்கடை மூடி” என்றது சீக்கி. நோஸி தலையை மெல்ல உயர்த்திப் பார்த்தது.

“நாம் பாதாளத்துக்கே வந்துவிட்டோமா?” என்றது நோஸி.

“பயப்படாதே! ரோட்டுக்கு கீழேதான் இருக்கிறோம். மனிதர்கள், அந்த மூடியைத் திறந்து சாக்கடையைச் சரிசெய்வார்கள்” என்றது சீக்கி.

இருவரும் சாக்கடை போகும் வழியிலேயே சென்றார்கள்.

“நாத்தம் தாங்கல!” என்றது நோஸி.

“இதெல்லாம் ஆபத்தான வாயுக்கள். அதிகமாக இழுத்து மூச்சுவிடாதே, வா வேகமாகப் போகலாம்” என்றது சீக்கி. இருவரும் வேக வேகமாக அங்கிருந்து ஓடி...

“தொப்…” நோஸி, சாக்கடையின் முடிவிலிருந்த வாய்க்காலில் விழுந்துவிட்டது. சீக்கியும் அதோடு குதித்தது.

கழிவு நீர், ஒரு இரும்புக் கம்பிக் கதவு வழியாகச் சென்றது. அங்கே நாப்கின்கள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் புட்டிகள், ஒரு பெரிய நாற்காலியோடு சேர்ந்து சீக்கியும் நோஸியும் பின் தங்கினார்கள்.

“இங்கே என்னவெல்லாம் வந்துசேரும்னே தெரியாது. ஒரு தடவை பள்ளி மதிப்பெண் அட்டைகளாக இருந்தது” என்றது சீக்கி.

“அப்புறம் என்னாச்சு?” என்று கேட்டது நோஸி.

“இந்தக் கம்பிக் கதவு குப்பையைத் தடுத்து நிறுத்திவிட்டது. பின்னர் அவற்றைச் சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்பி வெச்சாங்க.” குப்பைக் குவியலின் மீதேறிய சீக்கியும் நோஸியும் வாய்க்கால் மதில்மீது அமர்ந்துகொண்டனர்.

சுவற்றில் தேய்த்து சுத்தம் செய்து கொண்டது நோஸி. “எனக்கு உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுதான் பிடிக்கும்” என்றது. “சாக்கடையில கறை நல்லதுன்னு சொல்வோம்” என்ற சீக்கி, “வா… உனக்கொன்னு காட்டுறேன்” என்றது. இருவரும் சுவற்றோரமாக ஓடி ஒரு நீளமான, குறுகிய தொட்டி அருகே வந்தனர். “மிதக்கின்ற கழிவெல்லாம் அடியில் போய் மூழ்குவதைப் பார்த்தாயா? அதுதான் சல்லடைத் தொட்டி.”

சல்லடைத் தொட்டி

நிலத்தடி சேகரிப்புக்குச் செல்கிறது

சீக்கி இன்னொரு தொட்டியைக் காட்டியது. “சல்லடைத் தொட்டியிலிருந்து தப்பித்து வரும் கழிவுகள் இதில் படிந்துவிடும். பின்னர் அதை அகற்றிவிடுவார்கள். இதுதான் வண்டல் படிவுத் தொட்டி.”

“அங்க பாரு! தண்ணீரில் வானவில்!” என்று வியந்தது நோஸி. “ஓ அதுவா! அது மிதக்கும் கிரீஸ்” என்றது சீக்கி.

வண்டல் படிவுத் தொட்டி

வடிகட்டும் தொட்டிக்கு செல்கிறது

சொட்டுநீர் வடிகட்டிக்கு செல்கிறது

சீக்கியும் நோஸியும் சல்லடை மற்றும் வண்டல் படிவுத் தொட்டிகளைக் கடந்து ஓடினர்.

நோஸி ஒரு வட்டத் தொட்டியைக் காட்டியது. “ஏய், அங்க மழை பெய்யுது பாரு!”

“இதுதான் சொட்டுநீர் வடிகட்டி. இது முழுக்க நல்ல பாக்டீரியா இருக்கும். அசுத்த நீர், கூழாங்கற்களின் வழியாகப் போகும்போது, பாக்டீரியாக்கள் அதில் உள்ள அசுத்தங்களைத் தின்று நீரைத் தூய்மையாக்கிவிடும்” என்றது சீக்கி.

சொட்டுநீர் வடிகட்டி

ஆக்சிஜனேற்றத் தொட்டிக்கு செல்கிறது

ஆக்சிஜனேற்றத் தொட்டி

நோஸி இன்னொரு தொட்டியைக் கண்டது.

“இதென்ன மாயாஜால அண்டாவா? முட்டை முட்டையாக வருதே!”.

“இதெல்லாம் ஆக்சிஜன் குமிழிகள். இது ஆக்சிஜனேற்றத் தொட்டி. நல்ல பாக்டீரியா வளர்வதற்காக ஆக்சிஜன், தண்ணீருக்குள் செலுத்தப்படுகிறது.”

படிவுத் தொட்டிக்கு செல்கிறது

ஒருவழியாக கடைசி இரண்டு தொட்டிகளிடம் வந்தார்கள். சீக்கி முதல் தொட்டியைக் காட்டியது. “இதுதான் படிவுத் தொட்டி, இதுவரை தப்பித்த கழிவெல்லாம் இதில் படிந்துவிடும்.”

“இன்னொன்னுல என்ன நடக்கும்?” என்று கேட்டது நோஸி.

படிவுத் தொட்டி

கடலில் வெளியேற்றும் குழாய்

“இந்த வடிகட்டும் தொட்டியில் பரப்பியிருக்கும் நிலக்கரி வழியாக தண்ணீர் செல்லும்போது அதிலுள்ள நாற்றம் அகற்றப்படுகிறது. அங்கிருக்கும் மணல், எஞ்சியிருக்கும் கழிவுகளையும் நீக்கிவிடுகிறது”

வடிகட்டும் தொட்டி

காற்று வெளியேறும் வழி

கடலில் வெளியேற்றும் குழாய்

தொபுக்கடீர்! வடிகட்டும் தொட்டியிலிருந்து தண்ணீர் கடலைச் சென்றடைகிறது. “தண்ணீர் இப்போ சுத்தமாகிவிட்டது போலிருக்கே” என்றது நோஸி. இருவரும் தட்டுத் தடுமாறி ஒருவழியாக பாறைகள் நிறைந்த கடற்கரைக்கு வந்தார்கள்.

இருவரும் மோப்பம் பிடித்தனர்! “எங்கிருந்தோ எனக்கு பேல்பூரி வாசனை வருது” என்றது சீக்கி. “எனக்கு நிகிலோட வாசனை வருது” என்றது நோஸி.