முன்பொரு காலத்தில், ஒரு கழுதைப்புலியும் அண்டங்காக்கையும் சிறந்த நண்பர்களாக இருந்தன. நண்பர்கள் என்ற போதிலும் இந்த விலங்குகள் பல குணாதிசியங்களால் வேறுபட்டு இருந்தன. அண்டங்காக்கையால் பறக்க முடிந்தது, அனால் கழுதைப்புலியால் நடக்க மட்டுமே முடியும்.
ஒரு நாள், கழுதைப்புலி, தனது நண்பரைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள ஆர்வத்துடன், அண்டங்காக்கையிடம், "உன் கழுத்தின் கீழே இருக்கும் அந்த வெள்ளையான விஷயம் என்ன?" என்று கேட்டது, "பல நாட்களாக இதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்."
அதனை கேட்ட அண்டங்காக்கை, "சொல்கிறேன், கேள். இது நான் வழக்கமாக வானத்தில் சாப்பிடும் கொழுப்பு இறைச்சி. பல நாட்களாக இதை சாப்பிட்டு கொண்டிருப்பதால் அது என் கழுத்தில் ஒட்டிக்கொண்டது." என்றது.
கழுதைப்புலிக்கு இறைச்சி மிகவும் பிடிக்கும். இறைச்சியை பற்றி கேட்டதும், கழுதைப்புலிக்கு வாயில் எச்சில் ஊறியது.
பொறாமையுடன் கழுதைப்புலி தானும் அந்த இறைச்சியை உண்ணவேண்டும் என்று ஆசைபட்டது. ஆனால், தன்னால் பறக்க முடியாததால், எப்படி வானத்திற்கு செல்வது?
கழுதைப்புலி அண்டங்காக்கையிடம்,
"நண்பனே, தயவுசெய்து உன்னுடைய இறகுகளை எனக்கு கடன் கொடுப்பாயா? அதனை வைத்து நான் எனக்கு சிறகுகளை செய்து கொள்கிறேன். எனக்கு உன்னைப்போல் பறக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது ," என்று கெஞ்சியது.
இரக்கம் கொண்ட அண்டங்காக்கை தன்னுடைய இறகுகளை கழுதைப்புலியிடம் கொடுத்தது. கழுதைப்புலி அவற்றை ஒன்றாக தைத்து தனக்கு சிறகுகளை செய்து கொண்டது. சிறகுகளை தன் உடம்பில் கட்டிக்கொண்டு பறக்க முயன்றது. அனால், கழுதைப்புலி மிகவும் கனமாக இருந்ததால், கடன் வாங்கிய சில சிறகுகளால் கழுதைப்புலியை சுமக்க முடியவில்லை. அதனால் புதிய திட்டம் தீட்ட தொடங்கியது.
அண்டங்காக்கையிடம், "தயவுசெய்து எனக்கு உதவி செய். நீ வானத்தில் பறக்கும்போது நான் உன் வாலைப்பிடித்துக்கொண்டு உன்னுடன் பறக்கிறேன்," என்று கெஞ்சியது.
கழுதைப்புலியின் ஆர்வத்தை கண்ட அண்டங்காக்கை "சரி, நாளை காலை உன்னை அழைத்துக்கொண்டு பறக்க முயற்சிக்கிறேன்," என்று சொன்னது.
மறுநாள், கழுதைப்புலி அண்டங்காக்கையின் வாலைப்பிடித்துக்கொண்டது; அண்டங்காக்கை வானத்தில் பறந்தது.
அண்டங்காக்கை பறந்து பறந்து களைத்துப் போகும் வரை பறந்தது.
ஆனால் கழுதைப்புலி, “இன்னும் கொஞ்ச தூரம்தான், நண்பரே!” என்றது. அண்டங்காக்கையால் வெள்ளை மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சியை பார்க்க முடிந்தது; கழுதைப்புலிக்கு வாயில் எச்சில் ஊறியது.
அவர்கள் கொழுப்பு நிறைந்த இறைச்சியின் முதல் துண்டை அடைந்ததும், கழுதைப்புலி சிறு அதிர்ச்சி அடைந்தது.
அண்டங்காக்கையின் வால் இறகு ஒன்று கழுதைப்புலியின் கையில் கழன்று விழுந்தது. பின்னர் மற்றொரு இறகு விழுந்தது, பின்னர் மற்ற இறகுகளும் ஒவ்வொன்றாக விழுக ஆரம்பித்தன.
அண்டங்காக்கை மிகவும் இலகுவாக உணர்ந்தது, வாலில் இருந்த வலி போய்க் கொண்டிருந்தது. அண்டங்காக்கை பாடியது: "அண்டங்காக்கையின் இறகுகளே, உங்களை நீங்களே அவிழ்த்து விடுங்கள். அண்டங்காக்கையின் இறகுகளே, உங்களை நீங்களே அவிழ்த்து விடுங்கள்."
பதிலுக்கு, கழுதைப்புலி பாடியது: "அண்டங்காக்கையின் இறகுகளே, அங்கேயே இருங்கள். அண்டங்காக்கையின் இறகுகளே, அங்கேயே இருங்கள்."
இறுதியாக, இறகுகளால் கழுதைப்புலியை இனி பிடித்து கொள்ள முடியவில்லை. கழுதைப்புலி வானத்தின் நடுவில் எங்கேயோ இருந்தது.
கழுதைப்புலி, தான் சாப்பிடும்போது அந்த கொழுத்த இறைச்சி தன்னைப் பிடித்து காப்பாற்றும் என்று நினைத்து அதன் மீது குதித்தது.
ஆனால், ‘இறைச்சி’யைப் பிடித்து உண்ண முயன்றபோது, கழுதைப்புலி உணர்ந்தது - அது கொழுத்த இறைச்சியல்ல, அது ஈரமான மேகம்!
இப்போது கழுதைப்புலி வேகமாக விழுந்து கொண்டிருந்தது. "யாராவது எனக்கு உதவுங்கள்!" என்று கத்தியது. ஆனால், யாருக்கும் அதன் சத்தம் கேட்கவில்லை.
அண்டங்காக்கை மேகத்தில் காணாமல் போனது.
கழுதைப்புலி நிலத்தில் விழுந்து சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது. கால் உடைந்து உடல் முழுவதும் கருமையான தழும்புகளுடன், வலியில் அலறிக்கொண்டு எழுந்தது.
அன்று முதல் இன்று வரை, கழுதைப்புலி நொண்டிக்கொண்டு நடக்கிறது; அதன் உடலில் பல தழும்புகள் உள்ளன. கழுதைப்புலியால் இப்பொழுதும் பறக்க முடியவில்லை. கழுதைப்புலியும் அண்டங்காக்கையும் இனி நண்பர்கள் அல்ல.