kobakkaari akku

கோபக்காரி அக்கு

அக்குவின் ஒரு தினம் மிகவும் மோசமாக செல்கிறது. அது அவளை மிகவும் கோபப்படுத்துகிறது. அக்குவின் கோபம் எப்படி கரைகிறது என்பதை அறிய இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், மேலும் நீங்கள் மிகவும் கோபமாக இருக்கும்போது என்ன செய்வது என்பது பற்றிய யோசனைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

- Alvin Kishore

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பள்ளியின் கடைசி மணி அடித்ததும் குழந்தைகள் அனைவரும்சிரித்து மகிழ்ந்தனர்.

அக்குவைத் தவிர.  அக்கு கோபமாக இருந்தாள்!

அவர்கள் ஒரு வயல் வழியாகச் செல்லும்போது"அக்கு! அக்கு! அழகான சூரியகாந்தியைப் பார்!" என்று அப்பா சொன்னார்.

"ஹ்ம் ! அது மிகவும் மஞ்சளாக இருக்கிறது! அது என் கண்களை காயப்படுத்துகிறது." என்றாள் அக்கு.

"அக்கு! அக்கு! பார்! குரங்குகளையெல்லாம் பார்!'' என்று அப்பா அவர்கள் வீட்டுக் கூரையைக் காட்டி சொன்னார்

"சீ!" என்றாள் அக்கு. "ஷூ! போ! ஷூ!" .

""இதோ, மோர் குடி,'' என்றார் அப்பா. "உன்னை குளிர்விக்கும்."

"ஹ்ம்!" என்றார் அக்கு. "எனக்கு எதுவும் வேண்டாம்!"

"கொஞ்சம் குடித்துப்பார்?" "சரி! சரி!" என்று அக்கு கொஞ்சம் குடித்தாள். அது நன்றாக இருந்தது. அவள் இன்னும் கொஞ்சம் குடித்தாள். மேலும் குடித்தாள். சிறிது நேரத்தில் அவள் கோப்பை காலியானது.

"உனக்கு வடை வேண்டுமா?" என்று அப்பா கேட்டார்.

"வேண்டாம்!" என்றாள் அக்கு.

"ஒரே ஒரு சிறிய கடி?"

"சரி, சரி!" என்று அக்கு சொல்லி கடித்தாள். அது நன்றாக இருந்தது.

அவள் இன்னொரு கடி எடுத்தாள்.

மற்றும் இன்னொன்று.

சிறிது நேரத்தில் தட்டு காலியானது.

“நல்ல பொண்ணு” என்றார் அப்பா. "ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய் என்று இப்போது சொல்லுவாயா?"

"இல்லை!" என்றார் அக்கு.

"நான் செய்த காரியமா?"

"இல்லை!"

"அம்மா செய்த காரியமா?"

"இல்லை!"

"இன்று பள்ளியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா?"

"இருக்கலாம்!"

ஓஹோ.

"அதை வரைந்து காட்டுவாயா?" அப்பா கேட்டார். "இங்கே ஒரு தாள் மற்றும் சில கிரேயான்கள் உள்ளன."

"ம்ம் , சரி!" அக்கு கூறினாள்.

அக்கு ஒரு செங்கலை வரைந்தாள்...

"இன்று காலை என்னை விழ வைத்த முட்டாள் செங்கல் இது" என்றாள் அக்கு.

"நீ சொல்வது சரிதான். அது மிகவும் முட்டாள்தனமான செங்கல்!" என்றார் அப்பா."

மேலும் அக்கு ஒரு பையனை வரைந்தாள்…

"இது பிக்கு, மிகவும் மோசமான பையன்! நான் விழுந்தபோது சிரித்தான்!" என்றாள் அக்கு.

"நீ சொல்வது சரிதான்" என்றார் அப்பா. "அவன் உன்னைப் பார்த்து சிரித்திருக்கக் கூடாது."

மேலும் அக்கு ஒரு இட்லியை வரைந்தாள்...

"இது என் இட்லி," என்றாள் அக்கு." நான் முட்டாள் செங்கலின் மீது தடுமாறியபோது அது என் மதிய உணவுப் பெட்டியிலிருந்து கீழே விழுந்தது!"

மற்றும் அக்கு ஒரு காகத்தை வரைந்தாள்...

"இது என் இட்லியுடன் பறந்து சென்ற மிக மோசமான காகம்" என்றாள் அக்கு.

“காக்கைக்கு ரொம்பப் பசித்திருக்கும்” என்றார் அப்பா.

மேலும் அக்கு தன் ஆசிரியை வரைந்தாள்...

"இவர் என் ஆசிரியை, அமலா மிஸ்,"

என்றாள் அக்கு." நான் கீழே விழுந்தபோது அவர்கள் எனக்கு உதவினார்கள். பிறகு என்னைக் கட்டிப்பிடித்தார்கள்."

"அவர்கள் நல்ல ஆசிரியை," அப்பா கூறினார்.

"அப்போது அவர்கள் என் கன்னங்களைக் கிள்ளினார்கள். என் கன்னங்களை கிள்ளும்போது எனக்குப் பிடிக்கவில்லை."

"ஓஹோ! அது வலித்திருக்க வேண்டும், இல்லையா?"

"கொஞ்சம். ஆனால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன்."

"நல்லது."

"எவ்வளவு நன்றாக வரைந்திருக்கிறாய் என்று பார் அக்கு" என்றார் அப்பா

.

"நீ ஒரு உண்மையான கலைஞர்! அம்மாவுக்கும் ஏதாவது வரைவீயா?"

"சரி" என்று அக்கு மேலும் சிலவற்றை வரைய ஆரம்பித்தாள். "இது ஒரு சிறிய வெள்ளை எலி... மற்றும் இது ஒரு படகு... இது ஒரு தென்னை மரம்...."

"இது ஒரு சூரியகாந்தி ... இது உங்கள் மிதிவண்டி, அப்பா, இது ஒரு நாய் ... இது ஒரு தவளை ..."

சிறிது நேரத்தில், அக்கு, அவளை விழச் செய்த முட்டாள் செங்கல்லைப் பற்றி அனைத்தையும் மறந்துவிட்டாள். அவளைப் பார்த்து சிரித்த கெட்ட பையனை பற்றியும் மறந்தாள். மற்றும் இட்லியை திருடிய காகம் பற்றியும் மறந்தாள்.

மேலும் அக்கு கோபமாக இருப்பதையும் மறந்துவிட்டாள்.

அக்குவைப் போல் நீங்கள் கோபத்தை உணர்ந்தால் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்:

1.சத்தமாக சிரி, கைகளை தூக்கி                                  வைத்துக்கொண்டு குதி!

2.மெதுவாக - மிக, மிக மெதுவாக - மூச்சை உள்ளிழு, மூச்சை வெளியேற்று!

3.கொஞ்சம் தண்ணீர் குடி! அல்லது மோர் குடி ! 4.ஒரு பழம் சாப்பிடு! அல்லது ஒரு வடை!

5.நீ எப்படி உணர்கிறாய் என்பதைப் பற்றி பெரியவர்களிடம் சொல்!

6.நீ எப்படி உணர்கிறாய் என்பதைப் பற்றி எழுது!

7.அதை வரை! வர்ணம் பூசு!

8.களிமண் வைத்து விளையாடு!

9.உன் கோபத்தைப் பற்றி ஒரு பாடலை உருவாக்கு! சத்தமாகப் பாடு!

10.குரங்கு போல் ஆடு!