kodaikala nanbargal

கோடைக்கால நண்பர்கள்

கோடை விடுமுறையே முடியப்போகிறது. நிம்மி அம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை விளையாட நேரமின்றி செய்துகொண்டிருக்கிறாள். இப்போது பக்கத்திலிருக்கும் ராணிக்கு முட்டை எடுத்துச்செல்லும் வேலையும் சேர்ந்திருந்தது. ஒருவேளை இந்த சலிப்பூட்டும் வேலைகூட இந்த நாளைச் சிறப்பாக மாற்றலாம்.

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நிம்மி சன்னலில் இருந்து எட்டிப்பார்த்து பூனைபோல் கத்தினாள். கீழே பூங்காவில் அவள் நண்பர்கள் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவள் முட்டைக்கண்களில் கண்ணீர் தேங்க அம்மாவைப் பார்த்து முனகினாள். அம்மா எதையும் கண்டுகொள்ளவேயில்லை.

மோமோவைத் தூங்கவைத்துக் கொண்டிருந்த அம்மா, “மோமோவின் துணிகள் காய்ந்துவிட்டதா பார் நிம்மி” என்றார்.

“முடியாது” என்று நிம்மி கைகளைக் கட்டிக்கொண்டு மறுத்தாள்.

ஆனால் அம்மா வழக்கம்போல புன்னகையோடு “கொஞ்சம் பார்த்துவிட்டு வாயேன்” என்றார். அது நிம்மியின் மனதைக் கரைத்தது.

நிம்மியின் தம்பி மோமோ பிறந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. பாவம் அம்மா! வீட்டுவேலை செய்வது, அனைவருக்கும் சமையல் செய்வது, மோமோவைப் பார்த்துக்கொள்வது என எல்லா நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கிறார். நிம்மி அவருக்கு உதவியே ஆகவேண்டும்.

இப்போது வீட்டில் பெரிய பெண் அவள்தானே! நிம்மியின் நண்பர்கள் வெளியில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். நிம்மியோ வீட்டில் மாட்டிக்கொண்டிருந்தாள். கோடை விடுமுறையும் முடியப்போகிறது.

“ஆனால் கோடை விடுமுறையே முடியப் போகிறது!” நிம்மி ஆற்றாமையோடு கத்தினாள்.

அது அம்மாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. நிம்மி துணிகளை எடுக்கச் சென்றபோது அம்மா அவளைக் கூப்பிட்டு “நீ திரும்பி வரும்போது உனக்கு இன்னொரு வேலைகூட இருக்கிறது” என்றார்.

நிம்மி பிணங்கியபடி போனாள். மோமோவின் துணிகளை மடிக்கும்போது அவளுக்கு சிரிப்பாக வந்தது. மோமோ மிகவும் குட்டியாகவும், அழகாகவும் இருந்தான்.

அடுத்து அம்மா பன்னிரெண்டு பளபளப்பான முட்டைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து அதை நிம்மியிடம் கொடுத்தார். அதை அவள் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும்.

எதற்கு முட்டை? யாருக்கு? அந்த வேலையை முடித்த பிறகு அவள் விளையாடப் போகலாமா? அம்மா அவளது எல்லாக் கேள்விகளையும் ஒரு சிரிப்பால் துடைத்து ஒதுக்கினார். பின்னர் அவளைக் கதவை நோக்கி நகர்த்தினார்.

நிம்மி கையிலிருக்கும் முட்டைகள் உடைந்துவிடாதவாறு பத்திரமாக எடுத்துக்கொண்டு நடந்தாள். ’ராணியின் கேக் பேக்கரி உங்களை வரவேற்கிறது’ என கையால் செதுக்கப்பட்ட பெயர்பலகை கதவில் இருந்தது.

ஆகா, கேக்! அழைப்புமணியை அழுத்தும்போது நிம்மியின் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது. ஆனால் கேக் யாருக்கு? எல்லாருடைய பிறந்தநாளும் முடிந்துவிட்டிருந்தது, அல்லது வர இன்னமும் நாள் இருந்தது. அப்பா, அம்மாவின் திருமணநாள் கூட இல்லை. பேசாமல் ராணியிடமே கேட்டுவிடலாம்.

ஆனால், நிம்மி எதிர்பார்த்ததுபோல் அந்தக் கதவை ஒரு வயதான நரைத்த முடியுள்ள ராணிப் பாட்டி வந்து திறக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அவள் அம்மா வயதுடைய உயரமான ஒருவர் நின்றிருந்தார். தோள்பட்டை வரை இருந்த அவரது அழகிய கருப்பான முடி அவரை எளிதில் பிடித்துப்போகும்படி செய்தது.

“வா! வா! நான்தான் ஸ்ரீ. உன்னிடம் பன்னிரெண்டு முட்டைகள் இருக்கிறதா?”

“இருக்கிறது. கனமாக இருக்கிறது” என்று சொல்லியபடியே உள்ளே போனாள் நிம்மி.

“சீக்கிரம், உள்ளே கொண்டுவா. என் கேக் கருகுகிறது” என்று சொல்லி குதித்தபடி சமையலறைக்கு ஓடினார்.

நிம்மி அந்த கனமான முட்டைப்பாத்திரத்தை மேசையின் மீது வைத்தாள். தன் செருப்புகளைக் கழட்டி அங்கிருந்த மற்ற காலணிகளின் பக்கத்தில் கவனமாக வைத்தாள். அங்கு ஆண்கள் அணியும் தோல் செருப்புகளும், வண்ணவண்ணமான குதி உயர்ந்த செருப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சமையலறை ஒரே குழப்படியாக கிடந்தது. சமையல் பாத்திரங்களும் பானைகளும் சமையல் மேசை மீது இறைந்து கிடந்தன. பிரட் தூள்களும், கேக் துண்டுகளும், கேக் மாவும் எல்லா இடத்திலும் சிந்தியிருந்தன. கேக் கருகும் வாசனை வேறு வந்துகொண்டிருந்தது.

“ஐயோ! என்ன ஒரு மோசமான நாள்! இங்கே இருந்து எனக்குக் கொஞ்சம் உதவி செய்யமுடியுமா?” என கேக் செய்யும் தட்டை கையில் ஏந்தியபடி ஸ்ரீ கேட்டார்.

அந்த தட்டில் கேக்காக ஆகியிருக்கக்கூடிய ஒரு கருப்புத் துண்டு இருந்தது.

“நானா? எனக்கு கேக் செய்யத் தெரியாதே!” என்றாள் நிம்மி.

“அது ரொம்ப ஈஸிதான். நீ மிகவும் பிடித்த ஒன்றை யோசித்து அதற்கு உருவம் கொடு!”

“எனக்கு கோடை விடுமுறை மிகவும் பிடிக்கும். அது முடியப்போகிறது” என நிம்மி சன்னலைக் காட்டினாள்.

“அதை எப்படி கேக்காக மாற்றமுடியும்?” அப்போது ஸ்ரீயின் கண்கள் மின்னின.

“நீ நேசிக்கும் பொருட்கள் எப்போதும் உன்னை விட்டுப் போகாது. கண்களை மூடிக்கொள். அந்த மணம், அந்த தொடுதல், அந்த வண்ணங்கள், அந்த சுவை என யோசித்துப்பார். இப்படிச் செய்தால் கோடைக்காலம் எப்போதும் உன்னுடனே இருக்கும்” என ஸ்ரீ விவரித்தார்.

“கோடைக்காலம் மாம்பழம், பீச், எலுமிச்சை மற்றும் புல்லின் வாசனையைக் கொண்டிருக்கும். அது நீலம், பச்சை மற்றும் தங்கநிறத்தில் இருக்கும். உங்கள் விரல் நகங்களில் உள்ள வண்ணங்கள் போல” என்று நிம்மி ஸ்ரீயின் விரல்களைக் காட்டினாள். அவரது நகங்கள் கவனமாக வெட்டப்பட்டு வான்நீலம் மற்றும் எலுமிச்சைப்பச்சையில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.

பிறகு அவள் ஸ்ரீயை அழைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள். அங்கிருந்த பெரிய சன்னலைத் திறந்தாள். மென்மையான திரைச்சீலைகளில் கிளைகளும், இலைகளும் தையல்வேலை செய்யப்பட்டிருந்தது. அவை வீசும் காற்றில் அலைந்து இவர்களைத் தொட்டுச் சுழன்று நடனமாடிக் கொண்டிருந்தன. “என்ன ஒரு மகிழ்ச்சியான கோடைக்காலம்” என்றார் ஸ்ரீ.

அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு இதயவடிவ கேக்கைச் செய்திருந்தார்கள்.

அதன்மேல் மின்னும் பச்சையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூர்மையான புற்கள் ஓரத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கேக்கின் மேலே பளிச்சென லில்லி பூக்களும், பெட்டுனியா பூக்களும் மின்னும் பழுப்புநிற இலைகளின் மேலே வைக்கப்பட்டிருந்தன.

ஸ்ரீ கேக்கை ஒரு பெட்டியில் வைத்து கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நிம்மி ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள். “ஸ்ரீ! உங்கள் கதவில் ராணி என எழுதியிருக்கிறதே! யார் அந்த ராணி?”

“நான்தான்” என ஸ்ரீ சிரித்தார்.

“அப்படி என்றால் நீங்கள் பையனா பொண்ணா?” என நிம்மி கேட்டாள்.

“அது அவ்வளவு முக்கியமா, என்ன?” என்றார் ஸ்ரீ.

நிம்மி அதுபற்றி யோசித்துவிட்டு “இல்லை. அது முக்கியமில்லை” என்று கையை நீட்டினாள். “எனக்கு நிறைய கேக் கிடைக்கும்வரை எல்லாமே சரிதான். என்ன இருந்தாலும் நாம் இருவரும் இந்த கோடைக்காலத்தின் நண்பர்கள்.” ஸ்ரீ அவளது கையைக் குலுக்கி சிரித்தார்.

கேக்கை எடுத்துக்கொண்டு நிம்மிக்கு உதவியாக வீட்டுக்கு வந்தார் ஸ்ரீ. இந்த கேக் யாருக்காக இருக்கும் என நிம்மிக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவள் அழைப்புமணியை அழுத்தியதும் கதவு திறந்தது. “என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? பிறக்காத நாள் வாழ்த்துகள்!” என அவளது நண்பர்கள் அவளைச் சுற்றி நின்று கூக்குரலிட்டனர். அந்த கோடைக்கால கேக்கை பெட்டியில் இருந்து எடுத்தாள் நிம்மி. திரும்பி அம்மாவின் கண்களில் தெரியும் அன்பைப் பார்த்தாள். அவரது சிரிப்பு கோடைக்காலச் சூரியனை விடப் பிரகாசமாக இருந்தது.

உண்மையான ராணியின் கடிதம்

நான் ஆண் உடலில் இருந்தாலும் சிறுவயதில் இருந்து என்னைப் பெண்ணாகவே உணர்ந்திருக்கிறேன். என்னுடைய பெண்மை மிகுந்த நடவடிக்கைளால் எனக்குத் தேவையில்லாத கவனம் கிடைத்தது. சிறுவயதிலேயே, இந்த உலகம் எனக்கு எளிமையாக இருக்காது என்பதை உணர்ந்துகொண்டேன். நல்லவேளை, எனக்கு ஒரு பாதுகாப்பான குடும்பம் இருந்தது. நான் பெண்மையோடு இருப்பதற்காகவோ, ஒப்பனை செய்துகொண்டதற்கோ, பெண்களின் உடையை அணிந்ததற்கோ அவர்கள் என்னைத் துன்புறுத்தவில்லை. பள்ளியில் எனது ஆசிரியர்கள் கூட என்னிடம் அன்புடனே இருந்தார்கள். அங்கு, தங்களையும் பெண்ணாக அடையாளப்படுத்தும் நண்பர்களும் எனக்குக் கிடைத்தார்கள். அனைவரையும் உள்ளடக்கிய சூழ்நிலை, பாகுபாடு காட்டுவதிலிருந்தும் கொடுமையிலிருந்தும் விடுதலை என எல்லாமும் என்னைச் சுதந்திரமாகவும், எந்த குற்ற உணர்ச்சியோ அவமானமோ இல்லாமலும் வளர உதவியது.  வளரும்போது திருநர் கதாபாத்திரத்தோடு, எந்த குழந்தைகள் புத்தகத்தையும் நான் பார்த்ததில்லை. இப்போது காலம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு ஓவியராகவும், திரைப்பட இயக்குனராகவும் நான் என்னுடைய வேலைகளின் மூலமாக பால்புதுமையினரின் உலகத்தை வெளிக்கொண்டுவர முயற்சி செய்கிறேன். இந்தப் புத்தகமும் அதே வேலையைச் செய்ய முயற்சிப்பது எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. ’ராணி’ எனும் கதாபாத்திரத்தை எழுத்தாளர் உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். நிம்மியுடனான அவரது உரையாடல்கள் இளம் வாசகர்களுக்கு விளையாட்டாகவும் அதேநேரம் தகவல் நிறைந்ததாகவும் இருக்கிறது.  பிரதிபா ராய், மும்பை, 2018.