சே சே சேவல் கண்களை நன்றாகத் தேய்த்துப் பார்த்தது. அதனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. வானத்திலிருந்து ஒரு பொரித்த முட்டை கீழே வந்துகொண்டிருந்தது. அந்த முட்டைக்கு சிலந்தியைப்போல் நான்கு கால்கள் இருந்தன. அது பச்சைப் புல்லில் அழகாக இறங்கி நின்றது.
“ஆ! இது என்ன கனவா, நனவா!” என்று வியந்தது சே சே. “இது என்ன அதிசயம்!” அந்தப் பொரித்த முட்டைக்குள்ளிருந்து ஒரு புத்திசாலிக் கோழியும், ஒரு அதிபுத்திசாலிக் கோழிக்குஞ்சும் வெளியில் வந்தன.
“என் பேரு கொக்கரக்கோ, இது சிக்கரக்கோ” என்றது புத்திசாலிக் கோழி. “நாங்க வேறொரு விண்மீன் மண்டலத்துல இருந்து வர்றோம். அதோட பேரு, துருவல்! இதோ, இதுதான் எங்க விண்வெளிக் கப்பல் மஞ்சள் கரு!”
சத்தம் கேட்டுச் சே சே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு கோழிகளும் ஆறு கோழிக் குஞ்சுகளும் புதரிலிருந்து வேகமாக ஓடி வந்தன.
“அப்பா, வேற்றுகிரகத்தைச் சேர்ந்தவங்க நம்ம மேல படையெடுக்கறாங்களா?” என்று கேட்டது சிக்கி என்ற கோழிக் குஞ்சு.
“இல்லை, இல்லை!” என்றது சிக்கரக்கோ. “நாங்க பூமியில இருக்கிற கோழிகளைப்பத்தித் தெரிஞ்சுக்கதான் வந்திருக்கோம். நீங்க இங்க ரொம்ப நல்லா வாழறீங்கன்னு கேள்விப்பட்டோம்."
“என்னது? நாங்க நல்லா வாழறோமா?” தன்னுடைய தாடியைத் தேய்த்தபடி கேட்டது சே சே. “எங்களோட வாழ்க்கை ரொம்ப சாதாரணமானதுதான். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நிறைய பூச்சி, புழுக்களை கிளறி எடுக்க ஒரு இடம், முட்டை இடறதுக்கு ஒரு மூலை, மேலே ஏறிக் கூவறதுக்கு ஒரு சுவர். அவ்ளோதான்.”
“அப்படியா? இங்க எதுவுமே சிறப்பா இல்லையா?” என்று கேட்டது கொக்கரக்கோ. அதன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
“அதோ, அந்தப் பெரிய சுவரைத் தாண்டினா சில சிறப்பான விஷயங்கள் இருக்கு” என்ற சே சே தொலைவிலிருந்த ஒரு பெரிய சுவரைச் சுட்டிக்காட்டியது.
“அங்கே ஆயிரக்கணக்கான கோழிங்க இருக்காம், அதுங்க எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா வாழுதுன்னு பல பேர் சொல்லியிருக்காங்க.”
“அப்படியா? எங்களை அங்கே கூட்டிட்டுப் போறீங்களா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டது கொக்கரக்கோ.
“ஓ… நானா…” என்றது சே சே.
“பரவாயில்லை, அவங்களைக் கூட்டிக்கிட்டுப் போ” என்றது ஒரு பெரிய கோழி.
“நானும் வர்றேன்” என்றது சிக்கி.
“அட, இது ரொம்ப ஜாலியான பயணமா இருக்கப்போகுது!” என்று கூவியது சிக்கரக்கோ.
அந்தச் சுவரில் ஏதேனும் ஓட்டை இருக்கிறதா என்று தேடிய சிக்கி ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்துவிட்டது. அவை ஒவ்வொன்றாக அந்த தூசு நிறைந்த ஓட்டையில் நுழைந்து மறுபுறம் சென்றன.
அவற்றின் இறகுகளில் ஒட்டிய தூசியை உதறிவிட்டு நிமிர்ந்து பார்த்தன. அங்கே அவை கண்ட காட்சி...
வரிசையாக பெரிய கூண்டுகள், ஒன்றன்பின் ஒன்றாக பல மைல் தொலைவுக்குப் பரந்து விரிந்திருந்தன. ஆங்காங்கே இருந்த பெரிய தொட்டிகளில் ‘கோழித் தீவனம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
நிலத்தில் இறகுகள் குவிந்து கிடந்தன. அங்கு கோழிகளின் வலுவான மணம் வீசியது. ஆனால்...
அங்கு சத்தமே இல்லை! மிக மகிழ்ச்சியான ஓர் இடமாக அது தோன்றவில்லை!
சீப்... சீப்... ச்ச்ச்ச்சீப்.
அருகிலிருந்த ஒரு பெரிய அறையிலிருந்து அந்த மெலிதான ஒலி கேட்டது. “சின்னக் கோழிக்குஞ்சுகளோட சத்தம் மாதிரி இருக்கு” என்று கிசுகிசுத்தது கொக்கரக்கோ. “இது அவங்களோட விளையாட்டுக் கூடமா இருக்கும்னு நினைக்கறேன்” என்று மென்மையான குரலில் சொன்னது சிக்கரக்கோ.
“வாங்க, எல்லாரும் போய்ப் பார்க்கலாம்!" அவை சத்தமெழுப்பாமல் மெல்ல நடந்து அந்த அறையைச் சுற்றி வந்தன. அங்கு ஒரு மரக் கதவு பாதித் திறந்திருந்தது. அந்தக் கதவின் வழியாக உள்ளே சென்று சுற்றிலும் பார்த்தன. அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது.
அறையின் மூலையிலிருந்து ஒரு சிறு குரல் கேட்டது, “நீங்க எல்லாரும் எங்களைக் காப்பாத்த வந்திருக்கீங்களா?” சிக்கரக்கோ முன்னால் ஓடியது. அதன் கண்கள் வியப்பில் விரிந்தன. “அம்மா, இங்கே வந்து பாருங்க!” என்று கிசுகிசுத்தது அது.
மற்ற மூன்று பறவைகளும் முன்னால் வந்தன.
பத்து சிறு கோழிக்குஞ்சுகள் அச்சத்துடன் ஒரு மூலையில் சேர்ந்து நின்றிருந்தன.
“அட, என் செல்லக் கண்ணுங்களா!” என்றபடி தன்னுடைய மென்மையான இறக்கைகளால் அந்தக் கோழிக் குஞ்சுகளை அணைத்துக்கொண்டது கொக்கரக்கோ. “நீங்க ஏன் இங்கே ஒளிஞ்சிருக்கீங்க?" “உங்களோட அலகுகளை யாரோ வெட்டியிருக்காங்களே, அது ஏன்?" சே சே பலத்த குரலில் கேட்டது.
“இங்க எல்லாக் கோழிக்குஞ்சுகளோட அலகுகளையும் வெட்டிடுவாங்க; அதுக்கப்புறம் எங்களைச் சின்ன கூண்டுல அடைச்சுடுவாங்க” என்று ஒரு கோழிக் குஞ்சு சொன்னது. அதன் பெயர், ரக்கோ. “அப்பதான் அந்தச் சின்ன கூண்டுக்குள்ள நாங்க ஒருத்தரை ஒருத்தர் கொத்தாம இருப்போமாம்.”
“இது தப்பு!” என்று கத்தியது சே சே. “ரொம்பத் தப்பு! இது என்ன இடம்? இதுக்கு என்ன பேரு?” “மகிழ்ச்சியான கோழிப் பண்ணை” என்று சோகமாகச் சொன்னது ரக்கோ.
அப்போது, வெளியிலிருந்து ஒரு குரல் கேட்டது. “அந்தக் கோழிக்குஞ்சு அறையைக் கொஞ்சம் பாருங்க. அங்க ஒரு சேவல் நுழைஞ்சுடுச்சுன்னு நினைக்கறேன்."
“மனுஷங்க!” சட்டென்று எச்சரிக்கையானது சே சே. “அவங்க நம்மைப் பார்க்கறதுக்குள்ள நாம இங்கிருந்து கிளம்பிடணும்.” “அம்மா, நாம இந்தக் கோழிக்குஞ்சுகளை இப்படியே விட்டுட்டுப் போகக்கூடாது” என்று கூவியது சிக்கரக்கோ. “நாம இதுங்களையும் நம்மோட கூட்டிக்கிட்டுதான் போகணும்."
“அப்படியே செய்வோம், மகனே” என்றது கொக்கரக்கோ. மறுகணம் தன்னுடைய கழுத்துக்குப் பின்னாலிருந்து ஒரு மின்னும் கம்பியை வெளியில் எடுத்தது. “நீங்க எல்லாரும் கதவுகிட்ட நில்லுங்க. அந்த மனுஷங்க கதவைத் திறக்கும்போது, நேரா அந்தச் சுவரை நோக்கி ஓடுங்க, ஓட்டை வழியாத் தப்பிச்சுடுங்க."
“ஆனா…” என்று ஏதோ பேச முயன்றது சே சே. “ஆனா, ஆவன்னாவுக்கெல்லாம் இப்ப நேரமில்லை,” என்று உறுதியாகச் சொன்னது கொக்கரக்கோ.
“நான் சொல்றபடி செய்யுங்க. எல்லாரும் நேரா நம்ம விண்வெளிக் கப்பலை நோக்கி ஓடுங்க. நான் பின்னாடியே வர்றேன்."
தப்பிச் செல்லும் கூட்டத்துக்குச் சே சே தலைமை ஏற்றது. சே சே-வும் சிக்கியும் சிக்கரக்கோவும் சேர்ந்து பத்துக் கோழிக்குஞ்சுகளையும் கதவருகில் அழைத்துச் சென்றன. கதவு அகலமாகத் திறந்தது. அங்கு ஒரு பெரிய ஆள் கையில் விளக்குடன் நின்றிருந்தார்.
“என்ன இது? கோழிக்குஞ்சுங்க எங்கே போச்சு? நீ யாரு?” என்று கத்தினார் அவர்.
சே சே-வும் கோழிக்குஞ்சுகளும் அங்கிருந்து ஓடியதும், கொக்கரக்கோ தன்னுடைய சிறப்பு வாளிலிருந்து ஒரு நீல ஒளியை வெளிவிட்டது. அந்த நீல ஒளி, அந்த மனிதருடைய கால்களைச் சுற்றி இறுகப் பிடித்துக்கொண்டது! “ஆ, ஆ! ஆ… ஐய்யோ!” என்று கத்தினார் அந்த மனிதர். கொக்கரக்கோ தன்னுடைய வாளை அணைத்துவிட்டுக் கதவு வழியே ஓடியது. “அம்மா, சீக்கிரம் வாங்க!” என்று ஓட்டையில் இருந்தபடி கத்தியது சிக்கரக்கோ. “இன்னும் நிறைய மனுஷங்க வர்றாங்க!"
கொக்கரக்கோ குனிந்து ஓடும்போது , ஒரு மனிதர் அதன் வால் இறகைப் பிடித்துக்கொண்டார்.
“என்னோட வாலையா இழுக்கறே?” என்று கத்தியபடி திரும்பியது கொக்கரக்கோ, அந்த மனிதரை நன்கு கொத்தியது.
அவை அனைத்தும் விண்வெளிக் கப்பலை நோக்கி ஓடின. அனைத்துக் கோழிக்குஞ்சுகளும் அதில் ஏறிக்கொண்டன. சிக்கரக்கோவும் சிக்கியும் அன்போடு கட்டிக்கொண்டன. பிறகு, சட்டென்று விண்வெளிக் கப்பலில் ஏறியது சிக்கரக்கோ.
“அந்த அப்பாவிக் கோழிக்குஞ்சுகளைக் காப்பாத்தினதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி” என்றது சே சே. “இந்தமாதிரி இன்னும் பல கோழிக்குஞ்சுகளைக் காப்பாத்தணும்னுதான் எனக்கு ஆசை” என்றது கொக்கரக்கோ. “அங்க இருக்கிற கோழிக்குஞ்சுகளுக்கு யாராவது உதவணும். சரி நண்பர்களே, நாம அப்புறமா சந்திப்போம். உங்க இடம்தான் உண்மையிலயே மகிழ்ச்சியான இடம்."
விண்வெளிக் கப்பல் கிளம்பி வானத்தில் விரைந்து சென்றது, மேகங்களைத் தாண்டி, துருவல் என்ற விண்மீன் மண்டலத்துக்கு திரும்பிச் சென்றது. “நாம எங்க போறோம்?” என்று கேட்டது ரக்கோ. “நாம உண்மையாவே தப்பிச்சுட்டோமா?"
“ஆமா, நீங்க உண்மையாவே தப்பிச்சுட்டீங்க” என்றது சிக்கரக்கோ. "நாம எங்க வீட்டுக்குப் போறோம். அது, ‘முட்டை’ங்கற கோள்ல இருக்கு. இனிமே எப்பவும் யாரும் உங்களைத் துன்புறுத்தமாட்டாங்க.”
பூமியின் கோழிக்குஞ்சுகள் ஒரு புதிய வீட்டை நோக்கிப் பறந்தன. பிரபஞ்சம் மகிழ்ச்சியாகக் கூவி அதைக் கொண்டாடியது.
பூமிக் கோழிகள்
ஒரு நல்ல, பெரிய நிலம் இருந்தால், அங்கு கோழிகளையும் சேவல்களையும் நன்கு வளர்க்கலாம்.
ஓடி விளையாடவும் கூவி மகிழவும் அவற்றுக்கு நிறைய இடம் தேவை.
அதேபோல், அவை நிலத்தைக் கிளறிப் புழுக்களைத் தேடும். அதற்கும் நிறைய இடம் தேவை. ம்ம்ம், நல்ல சுவை! தாய்க் கோழிகள் தங்களுடைய கோழிக்குஞ்சுகளை மிகவும் விரும்புகின்றன, அவற்றைப் பாதுகாக்கின்றன. கோழிக்குஞ்சுகள் தாய்க் கோழியின் ஒவ்வொரு குரலையும் கவனிக்கின்றன, தாயின் சொல்லைக் கேட்டு ஒழுங்காக நடக்கின்றன.
நாம் எப்போதும் கோழிகளிடமும் கோழிக்குஞ்சுகளிடமும் அன்பாக நடந்துகொள்ளவேண்டும், அவற்றை எப்போதும் எந்தவிதத்திலும் துன்புறுத்தக்கூடாது.