எங்கள் ஊரின் தென்மேற்கு மூலையில் ஓர் அழகான குளம் இருந்தது. அது பறவைகளுக்கும் பிராணிகளுக்கும் புகலிடமாகத் திகழ்ந்தது. நீர்ப்பறவை, சாம்பல் நாரை இவற்றோடு ஒரு ஜோடிக் கொக்குகளும் அதில் வசித்தன. அவை சுவையான உணவைத் தேடிக் குளத்தின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு பறந்த வண்ணம் இருக்கும்!
மீனை அலகில் கொத்தியபடி பறக்கும் இக்கொக்குகளை நாங்கள் அடிக்கடி பார்த்து இரசிப்போம்!
இரவு தோறும் குளத்தின் நீர் மட்டம் குறைந்து வரும். ஆங்காங்கே சில மண்திட்டுகள் தென்படும். பறவைகள் அவற்றை இரவு நேர வீடுகளாக்கிக் கொள்ளும். இம்மண்திட்டுகள் பறவைகளை பிடித்துத் தின்னும் நரி, காட்டுப்பூனை, கீரி போன்றவை நெருங்க
இயலாமல் காப்பாற்றும் சரணாலயமாய் இருந்தன.
அந்த இரு கொக்குகளும் தினமும்
விடியற்காலையில் குரலெழுப்பும்.
அதைக் கேட்டு ஊரார் விழித்தெழுந்து
தத்தம் அன்றாட வேலைகளைத்
துவங்குவார்கள்.
என்னால் ஒருபோதும் அந்தக் கொக்குகளை அருகில் பார்க்க முடிந்ததில்லை. நாங்கள் அவற்றை நெருங்கிச் செல்கையில் அவை உடனே தங்களுடைய நீண்ட கால்களால் வேகமாக நகர்ந்து விடும்.
அந்தக் கொக்குகளின் பளிச்சென்ற சிவப்பு அலகும், மினுமினுப்பான கழுத்தும் பார்க்கப் பார்க்கச் சொக்க வைக்கும் அழகு! சில சமயம் நாங்கள் அவற்றின் பின்னால் ஓடுவோம். நாங்கள் துரத்தத் துரத்த அந்தக் கொக்குகள் நாங்கள் நெருங்க இயலாத இடத்துக்கு ஓடி விடும்; அல்லது சற்றே மேலாகப் பறந்து வெகு தொலைவுக்குச் சென்று விடும். பலமுறை குளத்தினுள்ளிருந்த மண்மேட்டிற்குச் சென்று உட்கார்ந்து கொள்ளும்.
மழைக்காலம் முடிகிற நேரத்தில் ஒரு நாள், பெரிய கொக்குகளோடு ஒரு குட்டிக் கொக்கும் இருந்ததைப் பார்த்தோம்! நீண்ட கால்களையுடைய பெரிய கொக்குகளின் நடுவே அது பெருமிதத்தோடு நடை பழகியது. அந்தக் குட்டிக்கொக்கு என்னை முழுவதுமாகக் கவர்ந்து விட்டது. நான் அதன் அருகில் செல்ல எவ்வளவோ முயன்றும், விடாமல் பெரிய கொக்குகள் தடுத்து வந்தன.
ஒரு நாள், மதியத்துக்கு மேல் கிராமத்துப் பையன்கள் சிலரோடு, தாமரைப் பூக்களை பறித்து வரக் குளத்துக்குள் போயிருந்தோம்.
இறங்கு வெயில் நேரம். ஆகவே, அங்கே எல்லாம் சலனமின்றி அமைதியாக இருந்தது. விடியலில் வயல் வேலைக்குச் சென்றவர்களும் வீடு திரும்பியிருந்தனர்.
அப்போது, பெரிய கொக்குகள் குட்டிக்கொக்கோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் எதேச்சையாகப் பார்த்தோம். எல்லாரும் அந்தக் குட்டிக்கொக்கைத் துரத்திப் பிடிக்க நினைத்தோம்.
நாங்கள் துரத்தியதும், கொக்குகள் தலை கால் தெரியாமல் ஓடின. அந்தப் பரபரப்பில் குட்டிக்கொக்கு வழி தவறி விட்டது. இனி குட்டிக்கொக்கை சுலபமாகப் பிடித்து விடலாம் என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால் அது எங்களை ஏமாற்றி மறைந்து விட்டது.
அதற்கு இன்னும் பறக்கத் தெரிந்திருக்கவில்லை. என்றாலும் அதன் வேகமான நடைக்கு எங்களால் ஈடு கட்ட முடியவில்லை. அது இடமும், வலமுமாய் மாறி மாறி நடந்ததால் எங்களில் ஒருவராலும் அதைப் பிடிக்க முடியவில்லை.
நாங்கள் எங்கள் நோக்கத்தில் மும்முரமாய் இருந்தோம். ‘ஒரு வேளை நாம் அந்தக் குட்டிக்கொக்கை பிடித்து விட்டாலும், பெற்றோர் இன்றி அது எப்படி வாழும்?’ என்று ஒருவரும் யோசிக்கவில்லை!
எப்படியும் குட்டிக்கொக்கைப் பிடித்து விட வேண்டும் என்ற தீவிரத்துடன் நாங்கள் தினைப்பயிர் வளர்ந்திருந்த வயலுக்குள் ஓடினோம்.
வெயில் மண்டையைப் பிளந்தது. எங்களுக்கு அப்போது வேறு எந்தச் சிந்தனையும் எழவில்லை.திடீரென்று, தினைப்பயிர்களுக்கு நடுவே குட்டிக்கொக்கின் தலை தெரிந்தது. எங்களில் ஒருவன் ஒரு குச்சியை எடுத்து அதனை நோக்கி வீசினான். உடனே அது அடிபட்டுக் கீழே விழுந்து விட்டது.
குட்டிக்கொக்கு கீழே விழுந்ததும், நாங்கள் கலக்கத்தில் உறைந்து விட்டோம். அதன் அருகில் சென்று அதை எழுப்ப முயன்றோம்.
சிறகுகளைக் கோதிக் கொடுத்தான். இன்னொரு பையன் அதன் ஒல்லியான கால்களை நீட்டி விட்டான். ஒருவன் குளத்திலிருந்து கைகளில் நீரைக் கொண்டு வந்து அதன் வாயில் ஊற்றினான்.ஆனால், குட்டிக்கொக்கு எழுந்திருக்கவேயில்லை.
அதன் பெற்றோர் கொக்குகள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டே கவலையுடன் தினை வயல் முழுதும் தேடிக் கொண்டிருந்தன. ஒரு பலனுமில்லை. அவை அவ்வப்போது பயிர்களுக்கு மேலாகப் பறந்து, குரல் கொடுத்துக் கொண்டே தேடின. கவலையோடு தேடிக் கொண்டிருந்த அவற்றின் குரல் தேய்ந்து கொண்டே வந்தது.
நாங்கள் கும்பலாக நாவல் மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தோம். குட்டிக்கொக்கின் மீது தடி வீசியவனைத் திட்டியபடி, பாசத்தில் தவிக்கும் கொக்குப் பெற்றோரின் சோகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில், அவை தங்கள் குட்டியைக் கண்டு பிடித்து விட்டன.
குட்டியைக் கண்டவுடனே அந்த இரு கொக்குகளும் எதிரெதிரே நின்று கொண்டு, குட்டியைப் பாதுகாக்கும் விதமாகத் தங்கள் சிறகுகளை விரித்துக் கொண்டு தங்கள் அலகால் குட்டியை வருடிக் கொடுத்தன. கூடாரம் போல் சிறகுகளைப் பரப்பிக் கொண்டு, வெகு நேரம் வரை அங்கேயே நின்று குட்டிக்கொக்குக்காக அழுதன. அவ்வப்போது வானத்தை நோக்கித் தங்கள் அலகை உயர்த்திச் சோகமாகக் கூக்குரலிட்டன. சிறகுகளை அடித்துக் கொண்டு தனித்தனியாகவும், சேர்ந்தும் அழுதன. அவற்றின் வேதனையைக் கண்டு எங்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
மாலை வரை அந்தக் கொக்குகள் அங்கேயே நின்றிருந்தன.
பிறகு நம்பிக்கை இழந்து திரும்பிச் சென்றன.
எனது இந்தக் குழந்தைப் பருவ நிகழ்வை நான் என்றும் மறக்கவில்லை. எல்லா உயிர்களையும் உரிமையாக்கிக் கொள்ளாமல் நேசிப்பது எப்படி என்பதை அந்தக் கொக்குக் குடும்பம் தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது.