அடைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத - மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால் தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனனவி, பத்து வயதுச் சிறுவன், ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது நாளும் கல்லுடைப்பது என்பது அநியாயம்தான்.
எந்தச் சலுகையும், எந்த வசதியும், தொழிலாலர் நலச் சட்டங்களின் எந்தப் பிரிவும் அணுக முடியாத காட்டுப் பிரதேசம் அது. விடிந்ததிலிருந்து இருட்டுகிற வரை மாதம் முப்பது நாளும் உழைத்துத்தான் ஆகவேண்டும். நாள் ஒன்றிற்குப் பன்னிரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் வியர்வை சிந்தி உழைப்பதைத் தவிர்க்க முடியாது. நேரக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது.
நாட்டில் விலைவாசி எவ்வளவு தான் ஏறினாலும் பணத்தின் மதிப்பு எவ்வளவுதான் குறைந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு வந்ததிலிருந்து அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்தமான மாதச் சம்பளம் ஐம்பது ரூபாயைத் தாண்டியதே இல்லை.
இவர்கள் குடும்பம் மட்டுமில்லை, ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும், பீகாரிலிருந்தும் குடியேறியிருந்த வேறு சில குடும்பங்களும் இப்படித்தான் ஆண்டுக்கணக்கில் கைக்கும் வாய்க்கும் போதாத குறைந்த வருமானத்துக்காக மாண்டு மாண்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தன.
எழுதப் படிக்கத் தெரியாத இந்தக் கைநாட்டுப் பேர்வழிகள் தங்களுக்காகவும், தங்களுடைய வளர்ச்சிகள், மறுவாழ்வுகளுக்காகவும் போடப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் அறிந்திருக்க நியாயமில்லை.
தாங்கள் யாருக்கோ கொத்தடிமைகளாக இருக்கிறோம் என்பது தெரியாமலே கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தார்கள் அவர்கள். ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து அப்படி அடிமைகளாக இருப்பது அவர்களுக்குப் புரிந்ததுமில்லை, உறுத்தியதுமில்லை, உறைத்ததுமில்லை.
அடிமையாயிருக்கிறோம் என்பதே புரியாதவனுக்குச் சுதந்திரமாயிருக்க வேண்டியதன் அவசியமும் புரியாது. அடிமைத்தனத்தின் சிரமங்களும், அவலங்களும் யாருக்குப் புரியுமோ அவர்களுக்குத் தான் சுதந்திரத்தின் சௌகரியங்களும், சுகங்களும் கூடப் புரிய முடியும்.
அடைக்கலத்துக்கு அவன் அடிமையாயிருப்பதும் புரிந்ததில்லை; சுதந்திரமாயிருக்க வேண்டும் என்பதும் தோன்றியதில்லை. சொல்லப்போனால் சுதந்திரமாயிருப்பது என்றால் என்னவென்றே அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அதை எல்லாம் தெரிந்து கொள்கிற அளவுக்கு அகர்வால் அவர்களை அனுமதித்ததே இல்லை.
கல்லுடைக்கிற அந்த மலைச் சரிவிலேயே புறம்போக்கு நிலத்தில் இலவசமாகக் குடிசைகள் போட்டுக் கொள்ள முடிந்திருந்தது. பக்கத்தில் இருந்த மிகப்பெரிய வனாந்தரம் அடுப்பெரிக்க விறகு சுள்ளிகள் பொறுக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது. காய்கறி கீரைகள் பயிரிட்டுக் கொள்ள முடிந்தது.
இவர்கள் உடைத்துக் கொடுக்கும் கருங்கல் ஜல்லியை போபால், இந்தூர், குவாலியர் என்று லாரிகளில் ஏற்றி அனுப்பி காண்ட்ராக்டர் அகர்வால் லட்சாதிபதியாகிக் கொண்டிருந்தான்.
நகரங்களில் காங்கிரீட் கட்டிடங்களும், பல அடுக்கு மாடிகளும், சிமெண்ட் நாகரிகமும் பெருகப் பெருக அகர்வாலின் லாபம் பெருகிக் கொண்டே இருந்தது. ஏறக்குறைய முதல் இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக அகர்வால் அதை வளர்த்திருந்தான்.
தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சிக்குப் பத்து ஜீப்களும் சில லட்ச ரூபாய் நன்கொடையும் தந்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் கவலையில்லாமல் பணம் பண்ணிக் கொள்ள முடியும் என்கிற இரகசியம் அகர்வாலுக்குத் தெரிந்திருந்தது.
அவனிடம் கல்லுடைத்துக் கொண்டிருந்த கொத்தடிமைகளோ, பிறரோ வெகுண்டு எழ முடியாத அளவு பலமும், செல்வாக்கும், ஆள்கட்டும் அகர்வாலுக்கு இருந்தன. அவனிடம் அடிமைப்பட்டுப் பழகியவர்களுக்குச் சுதந்திரமாயிருக்க முயலவேண்டும் என்கிற ஞாபகம் கூட வர முடியாது.
இந்தச் சமயத்தில் அகர்வாலின் துரதிர்ஷ்டமோ அல்லது அடைக்கலம் குடும்பத்தாரின் அதிர்ஷ்டமோ, ஒரு சம்பவம் நேரிட்டது. தமிழ் நாட்டில் சினிமா செல்வாக்குள்ள ஓர் ஆட்சியின் பிடியில் மக்கள் இருந்த காலம் அது.
உருப்படியான பொருளாதாரத் திட்டங்கள் எதுவுமே இல்லாமல் திடீர் ஸ்டண்டுகள் மூலமே வெறும் கவர்ச்சியை நம்பிக் காலந் தள்ளிவந்த அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவர் போபாலுக்கு ஒரு விழாவுக்காக வந்தவர் மலைப் பகுதிகளையும் ஆதிவாசிகளையும் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்.
அந்தச் சமயத்தில் அடைக்கலம் முதலியவர்களின் முதலாளியான அகர்வால் எங்கோ வெளியூர் போயிருந்தான். அடைக்கலம், அவன் மனைவி சூசையம்மாள், மகன் ஆரோக்கியம் - மூவரும் கல்லுடைத்துக் கொண்டிருந்த பகுதியினருகே வந்ததும் முத்தரசு எம்.பி., அவர்கள் தற்செயலாகத் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டு நின்றார்.
கண்காணாத மத்தியப் பிரதேச வனாந்தரத்தில் தமிழ்க் குரல் ஒலிக்கக் கேட்ட வியப்புடன், "அடடே! நீங்கள்ளாம் நம்ப ஊருதானா? தமிழ் நாட்டுலே உங்களுக்கு எந்தப் பக்கம்?" - என்று வினாவினார் எம்.பி.
"சேலத்துப் பக்கம் ஐயா! இங்கே வந்து ரெண்டு மூணு வருசம் ஆவுது..."
"இந்த வேலைக்கா இத்தினி தூரம் தேடி வந்தீங்க...? மூணு பேருக்குமா மாசம் என்ன கெடைக்கும்?"
"வந்தண்ணைக்கிலேருந்து மொத்தமா அம்பது ரூபா தர்ராங்க... அங்கே ஒண்ணுமே கெடைக்காமப் பட்டினி கெடந்தோம். இங்கே இந்த அம்பதாவது கெடைக்குதேன்னு காலந்தள்ள வேண்டியிருக்குங்க..."
"மூணு பேருக்கும் தனித்தனியா அம்பது ரூபாய் தானே?"
"இல்லிங்க... மொத்தமே அம்பது ரூபாய் தான்!"
"எப்படிப் போதும்...?"
"போருமோ போராதோ, அவ்வளவுதாங்க... ஒண்ணும் பேச முடியாது."
"உங்களுக்காகக் கொத்தடிமை ஒழிப்பு - இருபதம்சத் திட்டம் அது-இதுன்னெல்லாம் வந்திருக்கே தெரியுமா?"
"அதெல்லாம் எங்களுக்கொண்ணும் தெரியாதுங்க... தெரிஞ்சாலும் பிரயோசனமில்லீங்க... பாஷை தெரியாத வேத்தூரிலே நாங்க எப்பிடி யாரை எதிர்த்துக்க முடியும்?"
"உங்க முதலாளி பேரு..."
அடைக்கலம் பதில் சொல்லத் தயங்கினான். அவன் முகத்தில் பீதியும் கலவரமும் படர்ந்தன.
"சும்மா சொல்லுப்பா! என்னாலே உனக்கு ஒண்ணும் கெடுதல் வராது..."
மறுபடியும் தயக்கத்துக்குப் பின் அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு தணிந்த குரலில், "அகர்வால் ஐயா தாங்க" - என்று அடைக்கலம் பதில் சொன்னான்.
முத்தரசு அங்கே எதுவும் குறித்துக் கொள்ளவில்லை என்றாலும், இடம், அடைக்கலம் குடும்பத்தினரின் பெயர்கள், அகர்வாலின் பெயர் எல்லாவற்றையும் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பியதும் ஞாபகமாக டைரியில் குறித்துக் கொண்டார்.
அவருடைய அரசியல் மூளையில் ஒரு திட்டம் உதித்திருந்தது. சுயநலமில்லாத எந்தத் திட்டமும் சராசரி இந்திய அரசியல்வாதியின் சிந்தனையில் உதிப்பதில்லை.
மிக விரைவில் பார்லிமெண்ட் தேர்தல் வர இருந்தது. தன்னைப் பற்றித் தொகுதி மக்கள் போதுமான அளவு சலிப்பும் வெறுப்பும் அடைந்துவிட்டார்கள் என்பது முத்தரசுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்கள் நம்பும்படியாக ஏதாவது புதிய ஸ்டண்ட் அடித்துத்தான் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதும் முத்தரசுக்கே தெரிந்திருந்தது. மனத்திற்குள் இது பற்றி ஓர் இரகசியத் திட்டம் போட்டுக் கொண்டார் முத்தரசு.
பார்லிமெண்ட் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல்கள் அறிவிக்கப் படுவதற்கு முன் திடீரென்று எல்லாத் தினசரிகளும், சுதந்திரம் பெற்று முப்பதாண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில் கொத்தடிமை முறை நீடிப்பதைக் கண்டு மனம் நொந்து முத்தரசு குமுறிப் பேசியிருந்த பேச்சைப் பிரசுரித்திருந்தன.
அதற்கு அடுத்த வாரமே வடமாநிலங்களில் தமிழர்கள் கொத்தடிமைகளாக இருப்பதைப் பற்றிய விவரங்களை ஆதாரங்களோடு முத்தரசு வெளியிட்டிருந்தார். தனது உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தாலும் கவலைப்படாமல் துணிந்து சென்று கொத்தடிமைகளை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வந்து உணவும் உதவியும் அளிக்கப் போவதாகச் சவால் விட்டிருந்தார் முத்தரசு. சுவரொட்டிகள், பானர்கள், விளம்பரங்கள் தடபுடல்பட்டன.
தேர்தல் அறிவிக்கப்பட்டு எல்லோரையும் போல் அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். மத்திய மாநிலங்களின் போலீஸ் உதவியுடன் ஒரு பிரஸ் போட்டோகிராபரையும் உடனழைத்துக் கொண்டு போபால் சென்றார். அவர் சென்னையிலிருந்து கிளம்பிய விநாடி முதல் போட்டோகிராபர் அணு அணுவாகப் படம் பிடித்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொத்தடிமைகளை மீட்க முத்தரசு புறப்பட்ட செய்தி, கொத்தடிமை மீட்புப் பயணம் பற்றிய விவரங்கள், மீட்கப் பட்ட கொத்தடிமைகளோடு அவர் தமிழகம் திரும்பும் நாள் எல்லாம் படங்களோடு பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த முயற்சியைப் பற்றிய தகவல் எட்டி அகர்வால் தலைமறைவாகி விட்டான்.
மத்தியபிரதேசக் காட்டில் இரண்டு மாநிலக் காவல் துறையினரின் உதவியோடும் மத்திய காவல்துறையினரின் பாதுகாப்போடும் முத்தரசு அடைக்கல்ம் குடும்பத்தினரை மீட்க முயன்ற போது, "ஐயா! எங்க மேலே நீங்க காட்டற அக்கறைக்கு ரொம்ப நன்றிங்க! ஆனா எங்களை இப்படியே விட்டுடுங்க. ஏதோ எங்களால முடிஞ்சவரை காலந்தள்ளிவிட்டுப் போறோம். உங்களுக்குப் புண்ணியமாப் போவுது. எங்களை இட்டுக்கிட்டுப் போய் நாங்க இதுநாள் வரை இப்படி மோசமா இருந்தோம்னு விளம்பரப் படுத்தறது எங்களுக்கே பிடிக்கலே" என்று கெஞ்சிப் பார்த்தான் அடைக்கலம்.
முத்தரசு விடவில்லை.
"உன்னையும் உன் குடும்பத்தையும் இந்த நரகத்திலிருந்து மீட்காவிட்டால் நான் மனிதனே இல்லை. மாதம் அறுநூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடிந்த உங்களை வெறும் அம்பது ரூபாய்க்கு அடிமைகளா வச்சிருக்கிற அவலத்தை நினைச்சு நாடே வெட்கப்படுது."
எப்படியோ நயமாகவும் பயமாகவும் சொல்லி அடைக்கலம் குடும்பத்தினரை முத்தரசு தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல முடிந்தது.
"பல்லி விழாத பகல் உணவு - பாம்பு கடிக்காதபடி பரிவுடன் மருந்து - தேள் தீண்டாதபடி சிகிச்சை - பல்லைக் காக்க பற்பொடி என்று திட்டம் பல கண்ட செம்மலின் ஆட்சி கொத்தடிமைகளைக் காக்கவும் மீட்கவும் முன் நிற்கும். இது சத்தியம், சாசுவதம். எம் கவர்ச்சித் தலைவர் மீது ஆணை" என்று அழகிய வார்த்தைகளில் முழங்கினார் முத்தரசு.
அடைக்கலம் குடும்பத்தினருக்கு முத்தரசு அபயமளித்து வருவதைப் போல எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிகைகளின் முதற்பக்கத்தை அலங்கரித்தன.
"முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டது. இன்று இந்தியர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கிறார் முத்தரசு..."
என்ற வாக்கியங்களுடன் முத்தரசு படத்தையும், காந்தியடிகள் படத்தையும் அச்சிட்டு வாக்காளர்களை வேண்டுவது போல் பத்திரிகை விளம்பரங்களும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன. முத்தரசு காந்தியடிகளோடு ஒப்பிடப்பட்டார்.
தமிழகத் தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் தான் மீட்டு வந்த கொத்தடிமைகளை அறிமுகப்படுத்தி, "என்னைப் போன்ற பொதுநலத் தொண்டன் இனி இப்படி அவலம் நடைபெற அனுமதிக்க முடியாது. இதற்காகவே என் வாழ்வை அர்ப்பணிக்கப் போகிறேன்" என்று முத்தரசு முழங்கியபோது ஆயிரக்கணக்கான மக்கள் கடலலை போல் கைதட்டி ஆரவாரித்தனர்.
அதே கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் "கொத்தடிமை மீட்ட கோமான்" என்ற பட்டம் முத்தரசுக்கு வழங்கப்பட்டது.
தேர்தல் முடிகிறவரை முத்தரசின் பங்களா அவுட் ஹவுஸில் அடைக்கலம் குடும்பத்தினரைத் தங்க வைத்து உபசரித்தார்கள். பிரச்சாரத்துக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.
தினசரி மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் புறப்படும் போது முத்தரசின் காருக்குப் பின் மற்றொரு ஜீப்பில் அடைக்கல்ம் குடும்பத்தினரும் அழைத்துச் செல்லப்படுவதும், பிரச்சாரத்தின் நடுவே திடீரென்று ஒரு டிராமாவைப் போல் அவர்களை மேடை ஏற்றுவதும் வழக்கமாகி இருந்தது.
இந்தக் கொத்தடிமை மீட்பு விவகாரம் வாக்காளர்களிடையே ஒரு புதுக் கவர்ச்சியை உண்டாக்கியிருப்பது போல் தோன்றியது. முத்தரசுக்குப் பயங்கரமாகக் கூட்டம் கூடியது.
அடைக்கலம் எந்தப் பிரிவைச் சார்ந்திருந்தானோ அந்தப் பிரிவு மக்கள் முத்தரசின் தொகுதியில் கணிசமாக இருந்தனர். அது ஒரு வசதியாகப் போயிற்று.
'வடக்கே கொத்தடிமையாய்ப் போன தமிழனை மீட்ட தனிப்பெருந்தலைவா வருக!' - என்று தொகுதி முழுவதும் முத்தரசை வரவேற்கும் சுவரொட்டிகள் முத்தரசின் செலவில் முத்தரசின் ஆட்களால் அடித்து ஒட்டப்பட்டன. விளம்பரம் வேண்டிய அளவு தாராளமாகச் செய்யப்பட்டது.
தேர்தல் முடிகிற வரை அடைக்கலம் குடும்பத்தினருக்கு ராஜோபசாரம் நடைபெற்றது. காலைச் சிற்றுண்டி, பகலுணவு, மாலைத் தேநீர், இரவு உணவு என்று வாழ்நாளில் கனவு கூடக் கண்டிராத சுகங்களை அந்தக் குடும்பத்தினர் அனுபவித்தனர். தேர்தல் முடிந்த பின்னும் கௌரவமான வேலை வாய்ப்புக் கிட்டும் என நம்பினர்.
தேர்தல் முடிந்தது. முத்தரசு பெருவாரியான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரது கவர்ச்சிக் கட்சியும் வெற்றி பெற்றது. வெற்றி விழா அன்று அடைக்கலம் குடும்பத்தினரின் மேடைத் தோற்றம் முத்தரசுக்கு அவசியமாக இல்லை.
இனி ஐந்து வருடம் கவலையில்லாமல் காலந்தள்ளலாம். முத்தரசு தன்னுடைய கவர்ச்சித் தலைவரை அழைத்து வெற்றி விழாவைக் கொண்டாடினார். வெள்ளம் போல் பெருங்கூட்டம். கொத்தடிமை ஒழிப்பைப் பற்றிப் பேச்சே இல்லை.
"இன்று நான் பெற்றிருக்கும் வெற்றி என் கவர்ச்சித் தலைவர் தந்தது. மக்கள் அவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்" என்று முத்தரசு அதே மேடையில் பேசியதைக் கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து அடைக்கலமே தன் செவிகளால் கேட்டான்.
கூட்டம் முடிந்ததும் கவர்ச்சித் தலைவர் குடித்துவிட்டு மீதம் வைத்த சோடாவைக் கெஞ்சிக் கேட்டுக் குடிப்பதற்குப் போட்டி போட்டு முண்டியடித்து நெருங்கிய பெண்கள் கும்பலைப் பார்த்துவிட்டு வியந்த சூசையம்மாள் அதைத் தன் கணவன் அடைக்கலத்திடம் வந்து சொன்னாள். அடைக்கலம் பதிலுக்கு அவளை நோக்கிக் கேட்டான்:
"நாமதான் ரொம்பக் கேவலமான கொத்தடிமைகளா இருந்தோம்னாங்க. இங்கே வந்து பார்த்தா எச்சில் சோடாவுக்குப் பறக்கற இந்த அப்பாவி ஜனங்க அதைவிடப் பெரிய கொத்தடிமைங்களாவில்ல இருப்பாங்க போலிருக்கு!"
அந்த வெற்றி விழா நடந்த மூன்றாம் நாள் மொத்தமாக நூறு ரூபாய் பணத்தைக் கையில் கொடுத்து, "நீங்க போகலாம். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி" என்று அடைக்கலத்தையும் அவன் குடும்பத்தையும் அவுட் ஹவுசிலிருந்து வெளியேற்றினார் முத்தரசு.
"வேலை எதினாச்சும் பார்த்துக் குடுங்க."
"அரசு ஆவன செய்யும்! கவலைப்படாதே!"
இதற்குப் பின் அவனால் முத்தரசைப் பார்க்கவே முடியவில்லை.
அடைக்கலம் மேலும் மூன்று மாதம் தமிழகத்தில் தங்கி உண்ண உணவின்றி இருக்க இடமின்றி தெருக்களில் குடும்பத்தோடு நாயாக அலைந்தான். எந்த வழியும் புலப்படவில்லை. யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. முத்தரசும் அவனது கவர்ச்சித் தலைவரும் பல் தேய்க்கப் பல்பொடியும், பாம்புக் கடிக்கு மருந்தும் கொடுத்தார்களே ஒழிய வேலையற்றோருக்கு வேலை கொடுக்க எதுவும் செய்யவில்லை. கொடுப்பதாகப் பிரச்சாரம் மட்டுமே நடந்தது.
'இனியும் தொடர்ந்து இங்கேயே இருந்தால் செத்தே போவோம்' என்ற நிலைமை ஆகிவிட்டது. அடைக்கலமும் அவன் குடும்பத்தினரும் ரயிலில் வித்தவுட் ஆக போபால் திரும்பினர்.
மறுபடியும் அகர்வாலிடம் போய் அவன் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சிய போது முதலில் அடி உதை அவமானம் எல்லாம் தான் கிடைத்தன. கடைசியில் போனால் போகிறதென்று மறுபடி கல்லுடைக்கிற வேலையை அவர்களுக்குக் கொடுத்தான் அவன். ஆனால் ஒரு தண்டனையாக இருக்கட்டுமென்று அவர்கள் மூவரும் அடங்கிய குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஐம்பதிலிருந்து நாற்பது ரூபாயாகக் குறைத்துவிட்டான் அகர்வால்.
ஆனாலும், என்ன? குடியிருக்க இடம் கிடைத்தது. அடுப்பெரிக்க விறகு கிடைத்தது. குடிசையைச் சுற்றிக் காய்கறி கீரை பயிரிடத் தடையில்லை. அடைக்கலம் குடும்பத்தினர் மறுபடி 'சுதந்திரமாக' வாழ வழி பிறந்தது. அவர்களைப் பொறுத்தவரை முத்தரசோடு கழித்த சில நாட்களில் மட்டுமே தாங்கள் கொத்தடிமைகளாக இருந்திருப்பதாய் உணர்ந்தனர்.