kumizhigal yen urundayaaga ullana

குமிழிகள் ஏன் உருண்டையாக உள்ளன?

காற்றில் மிதக்கும் குமிழிகளைப் பார்ப்பது வேடிக்கை அல்லவா? மாயாவும் மனுவும் வெவ்வேறு வடிவக் குமிழிகள் உருவாக்க முடியுமா என்று அறிய விரும்புகின்றனர். நீங்களும் குமிழிகள் மற்றும் அவற்றின் வடிவங்கள் பற்றி அறிய வாருங்கள்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இரட்டையர்களான மனுவும் மாயாவும் பள்ளியிலிருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். போக்குவரத்து சமிக்கைக்காகக் காத்திருக்கையில் சாலையில் ஒருவர், குமிழி செய்யும் கருவியை விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். அவர் ஒரு நெகிழிக் கம்பியை ஒரு குப்பியில் முக்கியெடுத்துப் பின்னர் அதனுள் ஊதினார்.

உடனே குமிழிகள் உருவாகி காற்றில் வரிசையாக மிதந்தன.

அவற்றில் சில, வானவில்லின் வண்ணங்களைப் பிரதிபலித்தன.

“பத்து ரூபாய்! பத்து ரூபாய்!” என்று கூவினார் அவர். அதற்குள், போக்குவரத்து சமிக்கை பச்சை நிறத்திற்கு மாறியதால் பேருந்து நகர்ந்து விட்டது.

அன்று இரவுச்சாப்பாட்டின் போது, “அம்மா, நாம் ஒரு குமிழி ஊதும் கருவி வாங்கலாமா?” என்று மனு கேட்டான்.

“நீ அதை வீட்டிலேயே செய்யலாம் மனு. நாளைக்கு நாம் அதைச் செய்யலாமா?” என்றாள் அம்மா.

அன்றிரவு, மனுவும் மாயாவும் கனவில்

குமிழிகளையே கண்டனர்!

அடுத்த நாள் காலை, மாயா ஒரு சிறிய சிவப்பு நிற வாளியில் தண்ணீரோடு கொஞ்சம் ‘ஷாம்பூ’வைக் கலந்தாள். பிறகு, அதைத் தோட்டத்திற்குக் கொண்டு போனாள்.

மனு, அப்பாவின் கைக்கருவிப் பெட்டியில் சில துண்டுக் கம்பிகளைக் கண்டான். ஒரு கம்பியை எடுத்து, அதன் ஒரு நுனியை வளைத்து ஒரு வட்டம் போல் செய்தான்.

பின்னர், அந்தக் கம்பியை எடுத்து, சோப்பு நீரில் முக்கி, வளையத்துக்குள் ஊதினான்.

மேலும் பலமாக ஊதினான். குமிழிகள் வரவே இல்லை.

“இப்படி ஊது”, என்று சொல்லி மாயா, மிகவும் இலேசாக ஊதினாள். குமிழிகள் வந்த பாடில்லை! மனு மீண்டும் முயன்றான்.

“ஹைய்யா!” வரிசையாக வந்து காற்றில் மிதந்த குமிழிகளைக் கண்டு, சந்தோஷத்தில் சப்தமிட்டனர் அவர்கள். குல்ஃபி குமிழிகளைத் துரத்திக் குரைத்தது!

“நான் வேறொரு விதமான குமிழி ஊதும் கம்பி செய்யப் போகிறேன்,” என்றாள் மாயா. அவள் தனது துண்டுக் கம்பியின் முனையை சதுர வடிவமாக வளைத்தாள்.

“இப்போ சின்னச் சின்னப் பெட்டிகள் போல என் குமிழிகள் உண்டாகும், பார்!” என்று குதூகலித்தாள் அவள்.

“அப்படியானால் இன்னும் வெவ்வேறு வடிவங்களைச் செய்யலாம் வா” என்றான் மனு.

மனு, நட்சத்திர வடிவிலும், முக்கோண வடிவிலும் கம்பிகளைத் தயார் செய்தான். வெவ்வேறு வடிவக் குமிழிகளைப் பார்க்க அளவிலா ஆசை அவனுக்கு.

குல்ஃபி குமிழிகளைத் துரத்துவதை, அந்த இரட்டையர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், என்ன விந்தை! எல்லாக் குமிழிகளும் வட்ட வடிவிலேயே இருந்தன!

“அம்மா! நாங்கள் வெவ்வேறு வடிவத்தில் குமிழிகளை ஊத முயன்றாலும் எல்லாம் உருண்டை வடிவிலேயே இருக்கின்றன!” என்று குறைப்பட்டுக் கொண்டாள் மாயா.

“உருண்டை வடிவம் தனிச்சிறப்புக் கொண்டது,” என்றார் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த அண்டை வீட்டு சுக்வீந்தர் அக்கா. அவர் நகரத்தில் உள்ள அறிவியல் கண்காட்சிக்கூடத்தில் பணிபுரிபவர்.

“குமிழிகள் உண்டாகும் பொழுது நாம் அவற்றின் வெளிப்புறப் படலத்துக்குள் காற்றை ஊதுகிறோம்; உருண்டை வடிவம்தான் அதை விரிவடையாமல் பாதுகாக்கிறது. பிற வடிவங்களில் காற்று நிரம்ப நிரம்ப, குமிழிகளின் வெளிப்புறப் படலமும் விரிவடைய வேண்டும். அதைக் குமிழிகள் விரும்புவதில்லை,” என்றார் சுக்வீந்தர் அக்கா.

“குமிழிகள் சோம்பேறிகள்! அவர்களுக்கு விரிவடைவது பிடிக்காது” என்று சொல்லிவிட்டு மாயாவுடன் மேலும் நிறைய குமிழிகள் ஊதப் போய் விட்டான் மனு!

வகுப்பறை செய்முறைகள்

சோப்புக் குமிழிகளை உண்டாக்குவது எப்படி?

ஒரு குவளையில் சிறிது திரவ சோப்பையோ அல்லது சிறிது ‘ஷாம்பூ’வையோ எடுத்துக் கொள்ளவும்; அதனுடன் நீர் சேர்த்துக் கலக்கவும். சோப்பு திரவம் மிகவும் நீர்த்து விடாமல் இருக்க, சிறிது சிறிதாக நீரைச் சேர்ப்பது அவசியம்.

கம்பிகள் ஒவ்வொன்றையும் வெவ்வேறு வடிவங்களில் முறுக்கிக் கொள்ளவும். அவற்றை சோப்பு நீரில் முக்கி எடுக்கவும். கம்பியைத் தூக்கிப் பார்த்து, கம்பிக்கேற்ப வெவ்வேறு வடிவங்களில் சோப்புப் படலம் உருவாகி இருப்பதைக் காணவும் – சதுரம், முக்கோணம் மற்றும் வட்ட வடிவம். படலத்தின் மீது இலேசாக ஊதவும். குமிழிகள் வெளிவரும் போது என்னவாகிறது என்று கவனிக்கவும். முதலில் வேறு வடிவத்தில் குமிழி உருவாகுவது போலத் தோன்றினாலும், அவை எல்லாம் உருண்டை வடிவமே அடைவதைக் காணவும்!

உங்கள் வர்ணப் பெட்டியிலிருந்து, துளி வர்ணத்தை எடுத்து சோப்பு நீரில் கலக்கவும்; பின்னர் குமிழிகளை ஊதவும். அவை என்ன நிறத்தில் இருக்கின்றன?

நீங்கள் பூமியில் இருந்தால், குமிழிகள் நிறமற்றே இருக்கும். புவி ஈர்ப்பின் காரணத்தால் வண்ணம் ஒரு சிறு துளியாக குமிழியின் அடியிலேயே தங்கியிருக்கும்.

பீட்ரூட் போன்ற இயற்கை வர்ணத்தை உபயோகித்தால், வண்ணக் குமிழிகள் தோன்றுமா? பரீட்சித்துப் பார்க்கவும்!

ஒரு ஜப்பானிய விண்வெளி வீரரின் ஏழு வயது மகள், தன் தாயாரிடம் வண்ணக் குமிழிகள் ஊத முடியுமா என்று கேட்டாள். அவள் தாயார், சிவப்பு வண்ணப் பழச்சாறை குமிழி திரவத்தில் கலந்தாள். பிறகு, என்ன நடந்தது? சிவப்பு நிறக் குமிழிகள் மிதந்தன!

இது எப்படி நிகழ்ந்தது? வானவெளியில், ஈர்ப்பு விசை இல்லாததால் வண்ணம் கீழே தங்கவில்லை!

குமிழிகள் ஏன் உடைகின்றன?

குமிழி என்பது இலேசான படலத்துக்குள் சிறிது காற்று அடைபடுவதால் உண்டாகிறது. இப்படலம் மூன்று அடுக்குகளைக் கொண்டது: சோப்பினால் ஆன வெளி அடுக்கு, நீர் நிரம்பிய நடு அடுக்கு மற்றும் சோப்பினால் ஆன உள் அடுக்கு. நடுவிலுள்ள நீர் ஆவியாக மாறும் போது, குமிழி வெடிக்கிறது.