kumizhikku udhavalaama

குமிழிக்கு உதவலாமா

குமிழிக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. அவளது காதுகள் சூடாகிவிட்டன. கன்னங்கள் சிவந்துவிட்டன. அவளால் மறுபடியும் அந்தப் பூங்காவுக்குப் போகமுடியுமா?

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அந்தத் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் சிறிய மேகத்தை உங்களால் பார்க்கமுடிகிறதா? அவள்தான் குமிழி. அவள் ஒளிந்து கொண்டிருக்கிறாள். குமிழியின் முகம் இளஞ்சிவப்பாகி இருந்தது. அவளுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவள் யாரும் பார்க்கமுடியாத இடத்தில் ஒளிந்திருக்க விரும்பினாள். ஏன் தெரியுமா?

மேகப்பூங்காவுக்குச் சென்றிருந்தபோது, குமிழி மிதக்க முயன்றாள். எவ்வளவுதான் முயன்றாலும்- ஊஃப்! அவள் தலைகீழாகிவிடுகிறாள். மற்ற மேகங்கள் எல்லாம் அவளையே பார்ப்பதுபோல் உணர்ந்தாள். அவர்கள் என்னைப் பார்க்கிறார்களா? என்னைப் பார்த்து சிரிக்கிறார்களா?

குமிழி வேகமாகப் பறந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அவளுக்கு பூங்காவில் மிதந்து விளையாட ஆசையாக இருந்தது. ஆனால், இப்போது அதைவிட ஒளிந்திருக்கவே விரும்பினாள்.

“குமிழி! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே அவள் சித்தப்பா பையன் திரளி வந்தான்.

நடந்ததை அவனிடம் சொல்ல அவள் விரும்பவில்லை. ஒருவேளை அவனும் சிரித்துவிட்டால்?

ஆனாலும் குமிழியால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

திரளி சிரித்தான். “முதல் தடவை பூங்காவுக்குச் சென்றபோது என்னாலும் மிதக்க முடியவில்லை. நான் தொங்கிக்கொண்டே இருந்தேன். எல்லாரும் என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது. ஓடி வந்துவிடலாம் என்று நினைத்தேன்.”

குமிழியால் நம்பவே முடியவில்லை. “பிறகு நீ என்ன செய்தாய்?” என்று கேட்டாள்.

“எனக்கு மிதக்க எவ்வளவு ஆசை என்பதை யோசித்தேன். பிறகு என்ன நடந்தது தெரியுமா? கொஞ்ச நேரத்திலேயே நான் மற்றவர்களை எல்லாம் மறந்துவிட்டேன். மகிழ்ச்சியாக மிதந்து கொண்டிருந்தேன். சரி வா, நாம் இருவரும் சேர்ந்து பூங்காவுக்குப் போகலாம்” என்றான் திரளி.

குமிழிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருவேளை எல்லாரும் அவளைப் பார்த்து சிரித்தால்? “நாம் இருவரும் சேர்ந்து மிதக்கலாம், வா. மிதப்பதையும் மகிழ்ச்சியாக இருப்பதையும் மட்டுமே நினை” என்றான் திரளி.

பூங்காவில் நிறைய மேகங்கள் இருந்தனர். ஆனால் திரளி உடன் இருந்ததால், மிதப்பது குமிழிக்கு நன்றாக இருந்தது. அவன் அவளோடு தலைகீழாகவும் மிதந்தான்.

குமிழி மற்ற மேகங்களைப் பற்றி நினைப்பதை எல்லாம் மறந்து விட்டாள். அவள் மிதப்பதையும் மகிழ்ச்சியாக இருப்பதையும் பற்றி மட்டுமே நினைத்தாள். பிறகுதான் அந்த அதிசயம் நடந்தது.

வேறு சில மேகங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களும் தலைகீழாக மிதக்கத் தொடங்கினர். அன்று மதியம் முழுவதும் அவர்கள் அனைவரும் தலைகீழாக மிதந்து திரிந்தனர். குமிழி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவள் செம்மஞ்சள் நிறத்துக்கு மாறினாள். பின்னர் மஞ்சள் நிறத்துக்கு. பின்னர் ஊதா நிறத்துக்கு!