ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலைமகள் இதழ்களில் தொடர்கதையாக வந்த இக்கதையை, நீலகிரி வாழ் மக்களின் வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன்.
பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயற்சி போல் பணத்தைக் குறியாகக் கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேயிலை மணத்தை நுகர்ந்து கொண்டு அந்தக் குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒரு வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்தரிக்க முயன்றிருக்கிறேன். நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.
இப்புதினத்தை, கலைமகள் காரியாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வந்த போது, பேரன்பு கூர்ந்து டாக்டர் மு.வ. அவர்கள் முன்னுரை எழுதிச் சிறப்பித்தார்கள். அச்சிறப்பு, எழுத்துலகில் பேதையாக அடி வைத்திருந்த என்னை, கற்றறிந்த புலவோர் முன் அறிமுகம் செய்து வைக்கும் பெரு வாய்ப்பாக மலர்ந்தது. நான் முன்னும் பின்னும் பல புதினங்களைப் புனைந்தாலும், இந்நூலே வரலாற்றுத்துறை அறிஞர், ஆராய்ச்சியாளர், மாணவர் போன்றவரிடையே என்னை ஓர் இலக்கிய ஆசிரியையாக அறிமுகம் செய்வித்திருக்கிறது. இப்பெருமைக்கும் முன்னோடியாக, இந்நூலை ஆர்வமும் ஆவலுமாக ஒரு திறனாய்வாளரின் கண்கொண்டு நோக்கி, ஆய்வுரை செய்த டாக்டர். திரு.ந. சஞ்சீவி அவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலை நான் எழுதுவதற்காக மேற்கொண்ட அல்லல்கள் பலப்பல. புத்தகத்தைக் கையில் காண்கையில் அவை அனைத்தும் மறந்து போகும் என்றாலும், இக்கதையில் ஒவ்வொரு செய்தியையும் அறிந்து, ஆய்ந்து, புனையும் கதைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்ட நுட்பங்களை வாசகர் உணர்ந்திருப்பாரோ என்று மனம் தவித்ததுண்டு.
நான் எழுதி முடித்து, நூல் வெளியாகி நாலைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நான் கனவிலும் கருதியிராத வகையில் ஒரு பேராசிரியர் இந்நூலைப் படித்து வியந்த ஆய்வுரை படித்தார் என்ற செய்தியைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சி எய்தினேன். நான் எவ்வாறு மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேனோ, அவ்வகையில் ஒவ்வொரு கருத்தையும் பேராசிரியர் சஞ்சீவி அவர்கள் ஆராய்ந்திருக்கக் கண்டேன். ஓர் இலக்கியப் படைப்பாளிக்கு இதை விட என்ன பெரிய பரிசு தேவை?
இந்நூலை இப்போது ஆறாம் பதிப்பாக தாகம் பதிப்பகத்தார் கொண்டு வருகின்றனர். இத்தருணத்தில், இப்பதிப்புக்கு அன்புடன் அனுமதி அளித்த கலைமகள் அதிபருக்கும், இந்நூலுக்குச் சிறப்புகள் சேர்த்த பேராசிரியர் திரு.சஞ்சீவி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வாசகர்கள் வழக்கம் போல் இதையும் ஏற்று மகிழ்விப்பார்கள் என்று நம்புகிறேன். வணக்கம்.
ராஜம் கிருஷ்ணன்.
பிள்ளைக்கனி ஒன்றை ஈன்று, பசுமை, யாவும் உடலில் மின்னும் புதிய தாய்மையின் நிறைவும் பூரிப்பும் விளங்க அமைதியில் ஒன்றியிருக்கும் ஓர் அன்னையைப் போல், அந்த மலைப் பிரதேசம் பிற்பகலின் அந்த மோனத்தில் காட்சியளித்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி மலராடை புனைந்து கொள்ளை அழகின் குவியலாய்த் தோன்றும் அந்த மலைப் பிரதேசத்தில் அந்த நீலம் பூக்கும் பேராண்டு, வசந்தத்தில் எழில் வடிவாகக் குலுங்கி, வானவனின் அன்பைப் பெற்ற மலை மடந்தை, அருள்மாரியில் பசைத்துச் செழித்து அன்னையாக நிற்கும் கார்த்திகை மாசக் கடைசி நாட்கள்.
நீலமலையன்னையின் அருமை பெருமைகள், செல்வங்கள் சொல்லில் அடங்குபவையோ? வெம்மை நீக்கித் தண்மை தரும் தன்மையினாள்; கனிகளும் கிழங்குகளும் தானியங்களும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கித் தரும் வன்மையினாள். சந்தனமும் சாம்பிராணியும் கர்ப்பூரமும் மணம் வீசும் சோலைகளை உடையவள். அவளிடம் தேனுக்குப் பஞ்சமில்லை. அவள் வளம் கொண்டு பாலைப் பொழியும் கால்நடைச் செல்வங்களுக்கும் பஞ்சமில்லை. அண்டி வந்தவரை நிற இன பேதம் பாராட்டாமல், காபியும், தேயிலையுமாகக் குலுங்கிக் கொழித்து, ஆதரித்துச் செல்வர்களாக்கும் தகைமை அவளிடம் உண்டு.
அழகு, எளிமை, ஆற்றல் அனைத்தையும் விளக்கும் இந்த மலையன்னையின் மடியையே தாயகமாகக் கொண்டு வாழும் மக்களுக்கு, அவள் சிறப்புகள் உடலோடும், உயிரோடும் கலந்திருப்பதில் வியப்பு உண்டோ?
கார்த்திகை மாதத்தின் இறுதி நாளின் அந்தப் பிற்பகலில், பசுங்கம்பளத்தை விரித்தாற் போல் பரந்து கிடந்த மலைச்சரிவில் ஜோகி சாய்ந்திருந்தான். அந்தச் சரிவோடு ஒட்டி நீண்டு செல்லும் குன்றில் காணும் குடியிருப்புத்தான் அவனுக்கு உரிய இடம்; அவன் பிறந்த இடம் குடியிருப்பைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மரகதக் குன்றுகள் சூழ தெற்கில் மட்டும் சோலை சூழ்ந்த கானகங்கள் நீண்டு சென்று, வெளி உலகச் சந்தடிகளும் வண்ண வாசனைகளும், போலி மினுக்கல்களும் அவ்விடத்தை எட்டி விடாதபடி, மீண்டும் குன்றுகளைச் சுற்றி வளைத்துக் காத்து வந்தன. முப்புறமும் மரகதக் குன்றுகள் சூழ, நடுவே விளங்கிய அந்தக் குடியிருப்புக்கு, ‘மரகதமலை ஹட்டி’ என்றே பெயர். (ஹட்டி - குடியிருப்பு)
குன்றின் மேல் ஏறி வீடுகளுக்கு அருகில் சென்று நோக்கினால், மேற்கே மடிப்பு மடிப்பாக நீலவானின் வண்ணத்தில் யானை மந்தை போல் குன்றுகளும், அவற்றுக்கெல்லாம் சிகரமாக ‘தேவர் பெட்டா’ என்று அழைக்கப்படும் தேவர் சிகரமும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் திகழும். கீழ்ப்புறமும் பசுங்குன்றுக்கு அப்பால் வளைந்து வரும் கானகங்களும், நடுநடுவே வெள்ளை, சிவப்புப் புள்ளிபோல் குடியிருப்புகள் சிதறிக் கிடக்கும் மேடு பள்ளங்களும் இயற்கையன்னையின் பயங்கரம், கருணை என்னும் இரு தன்மைகளை விளக்குவன போல் தோன்றும்.
கீழ்வானில் மலைக்கு அப்பாலிருந்து ஆதவன் எழும்பித் தேவர் சிகரத்துக்குப் பின் மறையும் வரையிலும் ஜோகிக்கு வெளியிலுள்ள நாட்களில் வீட்டு நிழலில் தங்க விருப்பம் கிடையாது. ஒன்பது வயதுச் சிறுவனாக அவனுடைய உலகம் முழுவதும் விரிந்து பரந்த புற்சரிவுகளும், குன்றின் கீழ் நெளிந்து நெளிந்து பாம்புபோல் செல்லும் அருவியின் கரையும், அந்த ஹட்டியுந்தாம். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவனுடைய நாட்களில் துன்பத்தின் சாயையை அவன் காணவில்லை. அதிருப்தி இருந்தால் அல்லவோ துன்பம் தலைகாட்டும்? ஜோகிக்கு அன்பான அம்மை உண்டு; சீலமே உருவெடுத்த அப்பன் உண்டு; ஒத்த தோழர்கள் உண்டு. கதை சொல்ல ‘ஹெத்தை’ (பாட்டி) உண்டு. பொழுது இன்பமாய் நகர, எருமைகளும் பசுக்களும் மேய்க்கும் பணியும் உண்டு. அவனுக்கு எட்டிய உலகுக்கு அப்பால் ஆசை பரந்து போக, தூண்டும் பொருள் ஏது?
அவனுடைய தோழர்களாக ராமன், பெள்ளி, ரங்கன், கிருஷ்ணன் முதலியோர். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே கீழிறங்கி அருவிக்கு அப்பால் வெகு தூரம் சென்று விட்டனர். ஜோகி அந்த ஓட்ட விளையாட்டில் களைத்துத்தான் சரிவில் சாய்ந்திருந்தான். அவர்கள் ஹட்டியைச் சேர்ந்த எருமைகளும் பசுக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்ற வண்ணம், மண்டிக் கிடக்கும் புல்லை வெடுக்கு வெடுக்கென்று கடித்து இழுக்கும் ஒலி அவன் செவிகளில் விழும்படி, தன் காதைப் புற்பரப்போடு வளைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு ஒரு விளையாட்டு.
ப்டுக் - ப்டுக் - இது சீலிப் பசு. டுப் - டுப் - இது மெதுவான மந்த கதி நீலி எருமையா?
எழுந்து உட்கார்ந்து ஜோகி, தன் அநுமானம் சரியா என்று பார்ப்பவனைப் போல் ஓசை வந்த திசையில் பார்வையைச் செலுத்தினான்.
சீலிப்பசு உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தது. நீலி எருமையைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் காணவில்லை. ராமன் வீட்டு எருமைக்கன்று மணி குலுங்க மேலிருந்து கீழே ஓடியது.
தன் ஊகம் சரியல்ல என்று ஜோகி மறுபடியும் புற்பரப்பில் காதை வளைத்துக் கொண்டு படுத்தான். ப்டுக் ப்டுக்கென்ற ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த ஓசையில் அலுத்து, நீலவானைப் பார்த்துக் கொண்டு திரும்பிப் படுத்தான். கண்களை இடுக்கிக் கொண்டு, நீலவானமும் குனிந்து தன்னையே பார்ப்பது போல் எண்ணியவனாய் நினைத்துப் பார்த்தான்.
அந்த நீலவானில் இருக்கும் சூரியனை நேர்க்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், அந்தச் சூரியன் இல்லாமல் உலகம் இல்லை. அவர்கள் வணங்கும் ஈசனின் உயிர்த் தோற்றம் அந்தச் சூரியன். ஜோகியின் தந்தை லிங்கையர், காலையில் எழுந்ததும் கிழக்கு நோக்கிப் பொங்கி வரும் செங்கதிரோனையே கும்பிடுவார்.
“ஒளிக் கடவுளே, நீ வாழி. மழையைத் தந்து மண்ணைச் செழிக்க வைக்கும் மாவள்ளலே, நீ வாழி. எங்களுக்கு உன் அருளையும் ஆசியையும் நல்குவாய்!” என்று பிரார்த்தனை கூறிக் கொண்டே, எருமைகளையும் கன்றுகளையும் அவர் அவிழ்த்து விடுவார். அவர் வீடு திரும்புகையில், சூரியன் தேவர் சிகரத்துக்கு அப்பால் சென்று விடுவான். அப்போது ஜோகியின் அம்மை மாதி வீட்டில் இருளை நீக்க ஆமணக்கு நெய்யூற்றித் தீபமாடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்திருப்பாள். இரவில் சூரியன் இல்லாத போது, வீட்டில் அவர்களுக்கு அந்தத் தெய்வத்தின் சின்னமாக விளங்குவது அந்த விளக்கு. வீட்டில் அவ்விளக்கு இல்லாவிட்டால், நிலம் விளையாது, மாடு மடி சுரக்காது என்பதையெல்லாம் ஜோகி அறிவான்.
அவனுக்கு இருளென்றால் அச்சம் அதிகம். காடுகளில் வசிக்கும் குறும்பர் இருளில் தான் எவரும் அறியாமல் மந்திர மாயங்கள் செய்வார்கள். நாயாக, நரியாக, பூனையாக அவர்கள் வந்து மாயங்கள், தீமைகள் செய்த கதைகளை, ஜோகி ‘ஹெத்தை’ கூறக் கேட்டிருக்கிறான். அது மட்டுமா? சூரியன் இல்லாத சமயங்களான இரவுகளில் தான் சிறுத்தையும் கரடியும் பன்றியும் உலவுகின்றன. அவர்கள் பயிரைக் கடித்துப் பன்றிகள் பாழ் செய்கின்றன. சூரியன் இருந்தால், அவை வருமோ?
இத்தகைய முடிவில் எண்ணக்கொடி வந்து நின்றதும் ஜோகிக்கு மின்னலென ஒரு கீற்றுப் பளிச்சிட்டது.
வீட்டுக்குள் விளக்கு வைப்பது போல், நீள நெடுக, நிலத்தில், சோலையில், கொட்டிலில், ஆயிரமாயிரம் விளக்குகள் வைத்து விட்டால், மலை முழுவதும் விளக்குகளாகவே நிறைத்து விட்டால்? மரகத மலை முழுவதும், சுற்றிலும் விளக்குகள் போட்டு இருளின்றி அகற்றிவிட்டால், பகல் போல ஆகுமோ? இது போல் நீலவானம் தெரியுமோ?
ஜோகி தன் கண்களை மூடிக் கொண்டான். அவன் கற்பனையில் அவன் உலகமெல்லாம் அகல் விளக்குகளின் ஒளி படர்ந்தது. ஆனால் வான் முழுவதும் அந்த ஒளி படருமோ? எட்டுமோ?
அவன் கற்பனைக்கு அந்தக் காட்சியே எட்டவில்லை. உயர உயரக் கம்பங்கள் நட்டு, விளக்குகளை வைக்கலாம். ஓங்கி வளர்ந்திருக்கும் கானக நெடு மரங்களான கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்களில் விளக்குகள் பொருத்தலாம். பெரிய பெரிய மண் சட்டிகளில் நிறைய எருமை நெய்யோ, ஆமணக்கெண்ணெயோ ஊற்றிப் பெரிய திரிகள் இட்டு மலைகளின் மீதெல்லாம் வைக்கலாம்.
குடங்குடமாய், பானை பானையாய் எண்ணெய் வேண்டும். நெய் வேண்டும். மலை முழுவதும் ஆமணக்குச் செடிகளாக நிறைய வேண்டும். எருமைகள் கூட்டங்கூட்டமாய்ப் பெருக வேண்டும். அத்தனை எருமைகளையும் காக்க எத்தனை வலிமை வேண்டும்!
ஜோகியின் தந்தைக்குக் கைகளில் வலிமை உண்டு. அவர் எருமையின் மடியில் கை வைப்பதுதான் தெரியும்; ‘ஹோணே’ என்ற மூங்கிற் பாற்குழாயில் வெண்ணுரையாய்ப் பால் பொங்கி வரும். பழைய காலத்தில், மாடுகள் கறக்க நிறைய வலிமை வரவேண்டுமென்று வலத்தோள் பட்டையில் இரும்பைப் பழுக்கக் காய்ச்சிச் சூடு போடுவார்கள் என்று ஜோகியின் பாட்டி கதை சொல்லி அவன் கேட்டிருக்கிறான். வலியையும் வேதனையையும் பொறுத்தால் தான் வலிமை பெருகுமாம். ஆயிரமாயிரம் எருமைகளை ஒருவர் கறக்க வேண்டுமென்றால், அத்தனை பேரும் அத்தனை எருமைகளையும் காக்க வலிமை பெற வேண்டும்.
ஜோகியின் கற்பனைகள் இத்தகைய முறையில் படர்ந்து செல்லுகையில் குறுக்கே குறுக்கே சந்தேகங்களும் புகுந்து வெட்டின. அத்தனை எருமைகளும் எங்கே மேயும்? காடுகள் எல்லாம் பசும் புல்வெளிகளாகவும், ஆமணக்குச் செடிகளாகவும் ஆகிவிட்டால், சாமை பயிரிடுவது எங்கே? தானியங்களின்றி எப்படிச் சோறு சமைக்க முடியும்? கிழங்கு போட வேண்டாமா? வெறும் மோசைக் குடித்து விட்டு நாள் முழுவதும் இருக்க முடியுமோ?
நீண்டு கொண்டு போன கற்பனைக் கதிரின் முடிவு, இவ்விதமான நிறைவேறாத கட்டத்தில் வந்து நிற்கவே ஜோகிக்கு ஏமாற்றம் உண்டாயிற்று. யோசனைகளைக் கைவிட்டு அவன் நண்பர்களைத் தேடி ஓடுமுன், அவனுடைய நண்பர்களே ஓடி வந்தார்கள்.
“நான் தான் முதல்” என்று ராமன் ஓடி வந்து, மாடு மேய்க்கும் குச்சியாலேயே ஜோகியைத் தொட்டான். மற்றவர்களும் இரைக்க இரைக்கக் குன்றின் மேல் வந்தனர்.
நண்பர்களைக் கண்டதுமே ஜோகி, “கிருஷ்ணா, சூரியன் இல்லாது போனால் என்ன ஆகும்?” என்றான்.
கிருஷ்ணன் தினமும் எருமைகள் மேய்க்க வரமாட்டான். மரகத மலை ஹட்டியிலேயே செல்வாக்கு மிகுந்த மணியகாரரான கரிய மல்லரின் பெண் வயிற்றுப் பேரன் அவன். ஜோகியை விடக் கொஞ்சம் பெரியவன். அந்த வட்டகைக்கே புதுமையாக, கீழ்மலை மிஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அவன்.
கிருஷ்ணன் சிரித்தான். “சூரியன் இல்லாது போனால் இரவு இருட்டு. இது தெரியாதா?”
“ஒரு நாள் இல்லையென்றால்? சூரியன் ஒரு நாள் வரவே இல்லை என்று வைத்துக் கொள்ளேன்!”
“போர்த்துப் படுத்துக் கொண்டு எழுந்திருக்காமல் தூங்குவோம்” என்றாள் பெள்ளி.
அண்டை வீட்டுக் காகையின் மகன் பெள்ளி. அவனும் ஜோகியோடொத்தவன் தான்.
“எழுந்திருக்காது போனால், எருமை கறப்பது எப்படி? இரவு நிலத்தில் முறைகாவல் காப்பவர் வீடு வருவதெப்படி? சூரியன் இல்லாமற் போனால் ஒன்றுமே நடக்காது. ‘இரிய உடைய ஈசரி’ன் அடையாளம் கண். சூரியன். அவர் கண்ணை மூடிவிட்டால் இருட்டாகவே இருக்கும்” என்றான் லோகி. (இரிய உடைய ஈசர் - பெரியவராக விளங்கும் இறைவன்.)
“ஈசரின் கோயிலிலே எப்பொழுதும் நெய்விளக்கு எரிகிறதே? அவர் கண்ணை மூடவே மாட்டார்” என்றான் கிருஷ்ணன்.
ரங்கன் இடி இடியென்று சிரித்தான். அவன் ஜோகியின் பெரியப்பன் மாதனின் மகன்; அங்கிருந்த எல்லோரையும் விட அவன் கொஞ்சம் பெரியவன். முரட்டுத்தனமான, முற்போக்கான யோசனைகளை அவன் சொல்லுவான்.
“மக்குகளே, இரிய உடைய ஈசர் ஒன்றும் அந்தக் கோயிலில் இல்லை” என்றான்.
“ஐயையோ! அபசாரம்! கோயிலிலே ஈசுவரனார் இல்லை என்கிறானே இவன்?” என்று பெள்ளி கன்னத்தில் போட்டுக் கொண்டான்.
ஜோகி அவன் துணிச்சலைக் கண்டு வாயடைத்து நின்றான்.
“பின்னே ஈசுவரனார் கோயில் எதற்கு இருக்கிற தாம்?” என்றான் கிருஷ்ணன்.
“கல்லு, படம் இரண்டுந்தான் அங்கே இருக்கின்றன” என்றான் ரங்கன் திரும்பவும்.
“உங்கள் வீட்டில் எருமை கறக்காது; பயிர் விளையாது” என்றான் பெள்ளி.
“இரிய உடைய ஈசன் கோயிலிலே இருக்கிறார்; அவர் கண் சூரியன் என்று சொல்லுவது சரியா? சூரியன் கோயிலுக்குள்ளிருந்தா வருகிறான் பின்னே?”
இந்த வாதம் ஏற்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் விளங்குவதாக இல்லை.
தனக்கு எவரும் எதிர் பேசாமல் இருக்கவே வெற்றி கண்ட ஒரு பெருமிதத்தில் ரங்கன், “சூரியன் ஒரு நாள் கூட வராமல் இருக்காது. நாம் தூங்கி எழுந்து வரும் போது மலைகள் எல்லாம் அப்படியே இல்லையா? அருவி இல்லையா? அப்படித்தான் சூரியனும்?” என்றான்.
“மலையெல்லாம் காலையில் எழுந்து மாலையில் அமுங்குகிறதா? ஒரே இடத்தில் இருக்கிறதே? சூரியன் அப்படி இல்லையே? காலையில் அந்த இரட்டை மலைக்கு அப்பாலிருந்து வந்து, பகலெல்லாம் நகர்ந்து, தேவர் பொட்டாவுக்குப் பின்னே போகிறதே!” என்றான் கிருஷ்ணன்.
“அட, இதுதானா பிரமாதம்? சூரியன் வராமற் போனால் இரவில் விளக்கு வைப்பதைப் போல் பெரிய பெரிய விளக்குகளை வைத்துக் கொள்வோம்” என்றான் ரங்கன், பேச்சை வளைத்து.
“அதற்கு எவ்வளவோ நெய் வேண்டுமே!” என்று ஜோகி பிரச்னைக்கு வந்தான்.
“அருவித் தண்ணீரையெல்லாம் எண்ணெயாக்குவோம்” என்றான் கிருஷ்ணன் சட்டென்று.
ஜோகியின் வட்ட கண்கள் விரிந்தன. இந்த யோசனை அவனுக்குத் தோன்றவில்லையே?
“அருவித் தண்ணீரை எண்ணெயாக்க முடியுமோ? போடா முட்டாள்!” என்றான் ரங்கன்.
“சூரியன் வராமல் இருக்குமோ போடா, முட்டாள்!” என்றான் கிருஷ்ணன்.
ரங்கனுக்குக் கிருஷ்ணன் தன்னை எதிர்த்து வந்தது பிடிக்கவில்லை. “டேய் யாரையடா முட்டாளென்கிறாய்? ஒல்லிப் பயலே!” என்று மேல் துணியை வரிந்து கொண்டு சண்டைக்குக் கொடி கட்டினான்.
“முட்டாள், மட்டி!” என்றான் கிருஷ்ணன் பொறுக்காமல்.
ரங்கன் உடனே அவன் மீது பாய்ந்தான். இருவரும் அடித்துக் கொண்டு கட்டிப் புரண்டார்கள்.
இச்சமயத்தில், “ஜோகியண்ணா! ரே ஜோகியண்ணா!” என்ற இளங்குரல் ஒன்று மேலிருந்து ஒலித்தது. அந்தக் குரல்கேட்ட மாத்திரத்தில் கிருஷ்ணன் சட்டையை விடுத்துத் தலைத் துணியை நன்றாகச் சுற்றிக் கொண்டு மேலே ஓடினான். ஜோகி மேலே ஓடிக் கொண்டிருந்தான் முன்பேயே.
ஐந்து பிராயம் மதிக்கத் தகுந்த சிறுமி ஒருத்தி, ஓடி வந்தாள். சிவந்த குண்டு முகம், கருவண்டு விழிகள், சுருட்டையான தலைமுடி, தோள்மீதும் நெற்றி மீதும் புரண்டது. இடுப்பில் வெள்ளை முண்டு உடுத்து, பெரிய மனுஷியைப் போல் மேல் முண்டும் போர்த்திருந்தாள். அவள் கைகளில் பளபளக்கும் புது வெள்ளிக் காப்புக்கள் பெரிய வளையமாகத் துவளத் துவள ஆடிக் கொண்டிருந்தன. அவை அவளுக்கு உரியனவாக இருக்க முடியாது. பெரிய அளவாகத் தோளுக்கு ஏறும் கடகமாக இருந்தன.
“ஜோகியண்ணா தங்கைப் பாப்பா வந்திருக்கிறது. அம்மா, மாமி, அத்தை எல்லாரும் வந்திருக்கிறாங்க. பொரி உருண்டை, கடலை, ஆரஞ்சி எல்லாம் கொண்டு வந்திருக்கிறாங்க. வாங்க, வாங்க” என்று கூறி, அந்த அதிசயத்தைப் பார்க்க அவள் குத்துச் செடியின் பக்கம் நின்று கைகளை ஆட்டி அழைத்தாள். அவள் கைகளை வீசிய வேகத்தில், ஒரு வெள்ளிக் காப்பு நழுவி, குத்துச் செடிகளுக்கிடையில் உருண்டதை, இருந்த இடம் விட்டு நகராமலே குரோதம் பொங்கக் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் சட்டென்று கவனித்தான்.
பெள்ளியும் ராமனுங்கூட ஓட எல்லோருமாக மேலே ஏறி வீட்டுப் பக்கம் சென்று விட்டனர். அவர்கள் தலை மறையும் வரையில் ரங்கன் மட்டும் பார்த்துக் கொண்டே நின்றான், விவரிக்க இயலாத ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும்.
‘சிற்றப்பன் வீட்டுக்குத் தினமும் எவரேனும் வருகிறார்கள். நினைத்த போதெல்லாம் ஜோகி சாப்பாடும் பொரிமாவும் வெல்லமுமாய்க் குதிக்கிறான். ஆனால் நம் வீட்டிலோ?’
ரங்கனுக்குச் சொந்த அம்மை இல்லை. சின்னம்மைக்கும் தந்தைக்கும் எந்நேரமும் சண்டை. சண்டை போடாமல் அவனுடைய சிற்றன்னை ஒரு வேளைச் சோற்றை எடுத்து வைப்பவள் அல்ல. இருக்கும் ஒரே எருமையும் நோஞ்சல்; கன்றும் நோவு கண்டு இறந்து போயிற்று. ஏன்? ஏன் இப்படி?
பாரு, வந்தவள், ஜோகியைத்தான் கூப்பிட்டுக் கொண்டு ஓடினாள். அந்தக் கிருஷ்ணன் பயலுக்குச் சட்டையும் தொப்பியுமாய்ப் பள்ளிக்கூடம் போகும் கர்வம். பெள்ளி பூனைக்கண் மட்டி; கல்லைக் கல் என்று சொன்னால் இரிய உடையார் சாபம் கொடுப்பார் என்றான். சை!
சிறு உள்ளத்தில் பொருமி வந்த அனல் மூச்சுடன் அவன் திரும்பிப் பார்க்கையில், அந்த நோஞ்சல் எருமைதான் வெடுக்கு, வெடுக்கென்று புல்லைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. கிழப்பருவம் கோலமிட்ட, அதைக் கண்டதும் அவனுடைய ஆத்திரத்துக்கு ஓர் இலக்குக் கிடைத்து விட்டது.
கீழிருந்த குச்சியினால் அதன் முதுகில் வீறு வீறென்று ஐந்தாறு அடிகள் வீறினான். அது உருண்டு கொண்டே மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும்படி, கத்திக் கொண்டே சரிந்தது.
ரங்கனின் ஆத்திரம் இன்னும் தீரவில்லை. இடையில் தென்படும் குத்துச் செடிகளை முறித்துப் போட்டுக் கொண்டே மேலேறியவன், காப்புக் கிடந்த செடிப் புதரண்டையில் வந்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அதை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிறகு கீழ் நோக்கி ஓடினான்.
சரிவில் உருண்ட எருமை, மடிந்த காலுடன் நீட்டிக் கொண்டிருந்த பாறை ஒன்றில், முன் இரு கால்கள் முட்ட, பரிதாபமாகக் கத்திக் கொண்டே இருந்தது.
மாடுகள் மேய்வதற்கென்றே ஒதுக்கி விட்டிருந்த அந்தப் பசுங்கன்றோடு தொடர்ந்து சென்ற மேட்டில் முதல் முதலில் தனியாகக் காணப்பெற்ற நீண்ட கொட்டகை, பொதுவான மாட்டுக் கொட்டிலாகும். அப்பால் இரு வரிசையாக உள்ள இருபது வீடுகளும், மரகதமலை ஹட்டியைச் சேர்ந்தவை. தனியாக, மேற்கே சரிவில் காணும் நான்கு வீடுகளும், அந்த ஹட்டியைச் சேர்ந்த ‘தொரியரு’க்கு உரியவை.
சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், மைசூரிலிருந்து பண்டிப்பூர்க் காடுகளின் வழியே நீலகிரி மலையில் வந்து குடியேறியதாகச் சொல்லப்படும் படக மக்கள் சமூகத்திடையே அவரவர் தொழிலுக்குத் தகுந்தபடி சில பிரிவுகள் இருந்தன. ஹரிவர், உடையர், அதிகாரி, கணக்கர், கடக்கர், தொரியர் என்ற பெயரில் முறையே, குருமார்களாகவும், அதிகாரிகளாகவும் கணக்கர்களாகவும் இருந்தனர் என்றும் கூறுவர். தொரியர் என்ற பிரிவினர், மற்ற பிரிவினருக்குப் பணிபுரியும் மக்களாக, ஒவ்வொரு ஹட்டியிலும் குடியிருந்தனர். பணிபுரிபவர் என்ற முறையில் இருந்தாலும், உயர்ந்தவராகக் கருதப்பட்ட மக்களுக்குப் பிள்ளைகள் போன்ற உறவுடையவராகவே தொரியர் கருதப்பட்டு வந்தனர் என்றும் தெரிய வருகிறது.
ஹட்டியின் கீழ்ப்புறம் சிறு வீட்டைப் போலவே தோன்றும் குடில், தெய்வ முன்னோராகிய ‘ஹத்தப்பா’வின் கோயில். கோயிலுக்கு முன் விரிந்திருக்கும் சமவெளியான மைதானமே குடியிருப்பின் பஞ்சாயத்துக் கூடும் பொது இடம். மேற்கு ஓரத்திலிருந்து மலையைச் சுற்றி வளைந்து தெற்கே ஓர் ஒற்றையடிப் பாதை சென்றது. கோயிலுக்குப் பின்புறத்திலிருந்து வரும் பாதை, அந்தப் பாதையில் இணையும். இந்த இணைப்பு இடத்தில் நாலடி உயரமுள்ள மேடை ஒன்று உண்டு. அங்கிருந்து நோக்கினால், கீழேயிருந்து ஊருக்குள் வரும் பாதையில் வருபவர்களைக் காண முடியும். ரங்கனின் தந்தை மாதன், நாளின் பெரும்பாலான பகுதியை, அந்தக் கல்மேடையில் அமர்ந்தே கழித்து விடுவது வழக்கம்.
பாரு, ஜோகி, ராமன், பெள்ளி, கிருஷ்ணன் எல்லோரும், தொரியர் குடியிருப்பைத் தாண்டி, அவசரமாக மேலே குறுக்கே ஏறி, இரைக்க இரைக்க ஓடி வந்தனர். ஜோகியின் வீடு கோயிலைப் பார்த்து இருக்கும் கோடி வீடு. வீட்டு வாசலில் ஹட்டியிலுள்ள பெண்கள் எல்லோருமே கூடியிருந்தனர்.
பாரு, ஜோகிக்கு மாமன் மகள். கிழக்கே அருவிக் கரையோடு காடுகளைத் தாண்டி நடந்தால், ஜோகியின் மாமன் ஊராகிய மணிக்கல் ஹட்டிக்குப் போகலாம். பாருவின் தாய், கீழ்மலையில் தன் அம்மையின் வீட்டில் பிரசவித்து, குழந்தையுடன் அன்று கணவன் வீடு செல்லுகிறாள். வழியிலே நாத்தியின் வீடு வந்து தங்கி, பெரியவளான பாட்டியின் ஆசி பெற்று, மறுநாள் மணிக்கல் ஹட்டி செல்லப் போகிறாள்.
அண்மையில் ஓடுகள் வேய்ந்து காரை பூசிப் புதுப்பித்திருந்த ஜோகியின் வீட்டில், மணியகாரரின் மகள், கிருஷ்ணனின் தாய், சாயும் வெயிலில் நின்றபடியே குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். வெல்லமும் பாலும் ருசித்த குழந்தை நாவைச் சப்புக் கொட்டிக் கொண்டு பல் இல்லாத வாயைக் காட்டி எங்கோ பார்த்துச் சிரித்தது.
“இனிப்புக்கு சப்புக் கொட்டுகிறாள், பார்” என்று அவள் குழந்தையை கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருக்கையில், ஜோகி ஆவலுடன் அந்தப் பெண்டிர் கூட்டத்தில் புகுந்து பாய்ந்து வந்தான்.
“அட! வந்தது யாரென்று தெரிந்து விட்டதா? கண்ணைத் திருப்பிப் பார்த்துச் சிரிக்கிறாள். ஜோகி, பார். உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்!” எல்லாருமே சிரித்தார்கள்.
சிரிப்புக்கும் அவர்கள் கேலிகளுக்கும் ஜோகிக்குப் பொருள் விளங்கவில்லை. அவன் நோக்கமெல்லாம் குழந்தையின் மீதே குவிந்தது. பரபரக்கும் விழிகளால் பார்த்து அதிசயித்தான்.
எத்தனை அழகு, அந்தக் குழந்தை! ரோஜா நிறம்; கறேலென்ற சுருண்ட தலைமயிர், சிறு நெற்றியில் வந்து விழுந்தது. சின்ன மூக்கு; செப்பு வாய்; பிஞ்சுக் கைகள்; குஞ்சுக் கால்கள்.
“எனக்கு - என்னிடம் தரச் சொல்லுங்களம்மா” என்று அவன் இரு கைகளையும் நீட்டிய போது எல்லோரும் சிரித்தார்கள்.
“உனக்குத்தான். உனக்கு இல்லாமலா மாமன் மகள்? இதோ பார்; ஐய! உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்” என்று குழந்தையைத் தாழ்த்தி அவனிடம் காட்டினாள் கிருஷ்ணனின் தாய்.
“இவள் - ரங்கனுக்கு. ஜோகிக்கு பாரு” என்றாள் மாமி அதற்குள்.
இந்தப் பேச்சில் வெட்கமும் நாணமும் பிறக்காத பருவமல்லவா?
“ம்... எனக்குப் பாரு வேண்டாம். இந்தப் பாப்பாத்தான் வேண்டும்” என்று அவன் சிணுங்கினான். மறுபடி சிரிப்பொலி எழும்பியது.
“பார்த்துக் கொள்ளம்மா உன் பையனுக்கு இருப்பதை? நேருக்கு நேர் பாரு வேண்டாமென்று சொல்கிறானே! ஏண்டா, பாருவுக்கு என்ன? வந்ததும் வராததுமாய் உன்னைப் பார்க்கத்தானே ஓடி வந்திருக்கிறாள்? அவள் நன்றாக வேலை செய்வாள்; உனக்கு நல்ல பையனாகப் பெற்றுத் தருவாள்” என்று அவன் தலையில் செல்லமாக இடித்தாள் மாமி.
அவள் பேச்சின் பொருளை உணராத ஜோகி, தனக்கே உரிய வேகத்துடன், “ஹூம், எனக்கு இந்தப் பாப்பாவைத்தான் பிடிக்கிறது” என்றான்.
“ஆயிரம் பொன் தர வேண்டும். ஆமாம்; சும்மாக் கிடைக்காது!” என்றாள் மாமி, கேலியான கொஞ்சலில்.
“தருவேன்” என்று ஜோகி தலையை ஆட்டினான். மீண்டும் ஒரே சிரிப்பு.
“எங்கேயிருந்து ஆயிரம் பொன் தருவாய்? ஆசையைப் பார்!” என்று அதிசயித்தாள் பெள்ளியின் பாட்டி.
“தருவேன்” என்றான் ஜோகி திடமாக.
“ஆயிரம் கறவை எருமையுங் கூட வேண்டும்” என்றாள் மாமி மீண்டும் குமிண் சிரிப்புடன்.
“ஆகா, நீ தேவலையடி! என் பையன் ஏதோ சாது என்றால் நீ மேலே மேலே போகிறாயே! ஆயிரம் கறவை, சீதனமாக இங்கே வர வேண்டுமாம்; என் பையன் சோடையா?” என்று ஜோகியின் தாய் மாதி பாய்ந்தாள்.
“உனக்கு ஏன் அதற்குள் ஆத்திரம்? வேண்டுமானால் உன் பையன் மாமன் காலடியில் பொன்னை வைத்துக் கும்பிட்டு, ‘மாமா உங்கள் பெண்ணைத் தாருங்கள்’ என்று கேட்கிறான்!” என்றாள் மாமி கேலிக் கோபத்தில்.
“அது சரி, அது சரி” என்று பெண்கள் கலகலவென்று சிரித்து ஆமோதிக்கையில், கிருஷ்ணனின் தாய் அவனை உட்காரச் செய்து, மடியில் குழந்தையை விட்டாள்.
மலர் போன்ற குழந்தையை இளங்கால்களில் ஏந்திக் கொண்டு, சாயுஜ்யம் கிடைத்த மகிழ்ச்சியில், ஜோகி இருந்தான். அவன் தாய் மாதிக்கு, ஜோகிக்குப் பிறகு பிறந்த இரு குழந்தைகளும் தக்கவில்லை. ஆகையால், தனக்கு நினைவு தெரிந்து ஜோகி இத்தகைய இன்பத்தை அநுபவித்ததில்லை.
ஜோகி பெரு மகிழ்ச்சியில் எத்தனை நேரம் ஆழ்ந்திருக்க முடியும் என்று எண்ணுபவள் போல் மாமி குழந்தையை அவன் மடியிலிருந்து எடுத்தாள்.
“மாமி, மாமி!” என்று கெஞ்சினான் ஜோகி.
“இதோ பார், உங்கையன் வீடு வந்ததும் பத்து ரூபாய் கேட்டு வாங்கி மாமியிடம் கொடுத்துப் பெண்ணைக் கேள்” என்றாள் பாட்டி சிரித்துக் கொண்டே.
“ஏ மாமி, பத்து ரூபாய் கொடுத்தால் பாப்பாவை இங்கே கொடுப்பீர்களா?”
“அட போடா, அசட்டுப் பயலே!” என்றாள் அம்மை.
“ஏன் அம்மா?”
“பாப்பா இப்போது வரமாட்டாள். பெரியவளாக வளர்ந்ததும், நீ ஐயனைப் போல ஆனதும், பணம் கொடுத்து இங்கே நம் வீட்டுக்கு அழைத்து வருவோம். அப்போது பாப்பா உனக்குச் சோறு வைப்பாள். தண்ணீர் கொண்டு வருவாள். சாமை விதைத்து வீட்டுக்குத் தானியம் கொண்டு வருவாள். இப்போது பாப்பாவால் என்ன முடியும்?” என்று அம்மை விளக்கினாள்.
மாமி குழந்தையைப் பாட்டியிடம் கொடுத்து விட்டு, உள்ளிருந்து ஒரு வட்டத் தட்டு நிறையக் காஞ்சிப் பொரியும் வெல்லப் பாகும் கலந்து செய்த உருண்டைகளைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.
பாருவின் கையில் பொரி உருண்டை கொடுக்கும் போதுதான் அவள் கைகளில் இருந்த வெள்ளிக் காப்பைக் காணாமல் திடுக்கிட்டாள்.
“காப்பெங்கே, பாரு?”
பாரு சுற்று முற்றும் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள்.
“எங்கேடி காப்பு?”
“பெரிசு; பின்னால் கை பெரிசானதும் போட்டுக் கொள்ளலாம் என்றேன்; கேட்டாயா? எங்கேயம்மா விழுந்தது?”
“நீ ஊரிலிருந்து வரும் போது இருந்ததா? அதைப் பார்” என்றாள் பாட்டி.
“அங்கே வரும் போது காப்பு ஆடியதை நான் பார்த்தேன்” என்றான் கிருஷ்ணன்.
“எங்கெல்லாம் ஓடினார்களோ?” என்று தாய் பாருவின் மேல் முண்டை அவிழ்த்து உதறினாள்.
“வாருங்கள், எங்கே போனீர்களென்று காட்டுங்கள்” என்று மாதி முன்னே நடந்தாள்.
“அம்மா, நான் காப்பைத் தேடி எடுத்து வந்தால் மாமி பாப்பாவைத் தருவார்களா?” என்று ஜோகி முகம் ஒளிர ஓடி வந்தான்.
“அசட்டுப் பயலே! என்ன இப்போதே பாப்பா பித்தாயிட்டே?” என்று அம்மை அதட்டினாள்.
கதிரவன் மேல் வானில் சாய்ந்து விட்டான். சில்லென்ற குளிர்காற்று வீசியது. பாரு முன்னே ஓடினாள். மாதியும் குத்துச் செடிகள், புதர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே ஜோகியைப் பின் தொடரச் சென்றாள். எங்கும் புது வெள்ளிக் காப்பு மின்னவில்லை. மாடுகளை எல்லாம் சிறுவர் கொட்டிலுக்கு ஓட்டிச் சென்றனர்.
சட்டென்று நினைவு வந்தவனாய் மாதி கேட்டாள்; “ரங்கன் எங்கே?”
“அதோ! எருமை ஒன்று கால் மடித்து விழுந்து கிடக்கிறதே!”
“ம்... ஙே... ய்...” என்று அதன் ஒலி வேதனையைக் கொண்டு அவர்கள் செவிகளில் புகுந்தது.
ஜோகி வேகமாக இறங்கினான்.
“பெரியப்பன் வீட்டு நோஞ்சல் எருமை பள்ளத்தில் எப்படிச் சரிந்தது?” அதன் முதுகிலே அடிப்பட்டு ரத்தம் கன்றியிருந்த கோடுகள் அவள் கவனத்தைக் கவர்ந்தன. இளம் உள்ளம் மெழுகைப் போல் நெகிழ்ந்தது.
“யார் அடித்து ஓட்டினார்கள்? ரங்கா! ரே ரங்கா!” என்று ஜோகி சுற்றுமுற்றும் பார்த்துக் குரல் கொடுத்தான்.
“எருமை விழுந்து காலொடிந்து போச்சு, ரங்கா?”
எதிர்க்குரல் எழவில்லை. பொரி உருண்டைக் கைபிசுக்குப் பிசுக்கென்று ஒட்டிக் கொள்ள, சிறுவன் எருமையின் உடலைத் தடவினான்.
காப்பை மறந்து நின்ற பாரு, எருமையின் காலுக்குக் கீழ் உறைந்திருந்த குருதியைக் கண்டாள்.
“ஐயோ, ரத்தம்!”
அவள் போட்ட சத்தம் மாதியை அங்கே தள்ளி வந்தது. சற்று எட்ட, குன்றை ஒட்டிய விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் - பெண் அனைவரையும் அவர்களின் சலசலப்பு அங்கே தள்ளி வந்து விட்டது.
ரங்கனின் சின்னம்மையான நஞ்சம்மை. நேர் எதிரே உள்ள மைத்துனன் வீட்டுக் கோலத்தைக் காணச் சகியாமல் அப்போதுதான் களையெடுப்பவள் போல் நிலத்துப் பக்கம் வந்திருந்தாள். கூட்டம் சேர்ந்த இடத்துக்கு வந்து தங்கள் வீட்டு எருமை விழுந்து காலொடித்துக் கொண்டு விட்டதை அறிய அவளுக்கு ஆத்திரம் பீறி வந்தது.
ரங்கனையே நோக்கி அவள் கடுகடுப்புப் பாய்ந்த தென்பதைக் கூற வேண்டுமா?
“ஈசுவரா! எருமைக்குக் காலே ஒடிந்து போச்சே! அந்தச் சோம்பேறிப் பயல் எங்கே போனான்?”
“அதுதான் தெரியவில்லை, பெரியம்மா” என்றான் ஜோகி.
“சேரும் இடத்திலே சேர்ந்து மேடு உயருகிறது. பறிந்த இடத்திலே பின்னும் பள்ளம் பறிகிறது. இருந்த ஓர் எருமையும் போச்சே! வீட்டுத் தலைவன் வேலை வெட்டி செய்யாமல் பொழுது போக்கிரானென்றால், இந்தப் பையனும் உதவாத பயலானானே! ஒருத்தி பாடுபட்டு வீட்டில் சாப்பிட முடியுமா? ஊருக்கெல்லாம் வாழ்வு இருக்கிறது. இந்த நஞ்சம்மைக்குச் சுகமில்லை” என்றெல்லாம் பிரலாபிக்கலானான்.
“அடாடா? இது யார் வேலை? ஏண்டா? முரட்டுப் பயல்களா? எருமையை இப்படியா அடிப்பது?” என்று கேட்ட வண்ணம் ஜோகியின் தந்தை லிங்கையா, எருமையைத் தூக்க முயன்றான்.
“அவன் குடும்பத்துக்கு நஷ்டத்துக்கு மேல் நஷ்டம்” என்று கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லர் முணு முணுத்தார்.
“அருவியிலிருந்து பானையில் தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று லிங்கையா சிறுவர்களை விரட்டி விட்டு, எருமைக்கு வைத்தியம் செய்ய உட்கார்ந்து விட்டான்.
“கொட்டிலுக்கு ஓட்ட முடியாது. இங்கே வைத்துத்தான் பச்சிலை போட்டுக் கட்ட வேண்டும். ரங்கன் எங்கே?”
லிங்கைய்யா நஞ்சம்மையைத் தான் பார்த்தான். தூண்டிக் கொடுக்காமலே பொல பொலக்கும் அவளுக்கு இது போதாதா?
“கஷ்டகாலம், யார் பொறாமைக் கண்ணோ, ஏவலோ? ஒன்றன்பின் ஒன்றாக வருகிறதே” என்று தொடர்ந்து உதவாக்கரை ரங்கனின் அடங்காத்தனம், முரட்டுச் செயல், வேலை செய்ய வணங்காமை, திருட்டுத்தனம், பொய் எல்லாக் குணங்களையும் சொல்லிப் பிரலாபிக்கலானாள்.
“கவலைப்படாதீர்கள். அண்ணி, இன்றிரவு பயிருக்குக் காவல்முறை எனக்கு. பரணிலிருந்து குரல் கொடுக்கிறேன். தொரியமல்லனும் உடன் இருக்கிறான். தீ வளர்த்துக் கொண்டிருந்தால், ஒன்றும் வராது. மெள்ள இரண்டு நாளில் வீட்டுக்கு ஓட்டிப் போவோம். “ஜோகி, கொஞ்சம் புல்லறுத்துப் போட்டுவிட்டு வா!” என்றான் லிங்கையா, அண்ணன் மனைவிக்குத் தேறுதலாக.
நஞ்சம்மை தலைவிதியை நொந்த வண்ணம் வீட்டுக்குச் சென்ற போது, எட்டு வயசுப் பெண் ரங்கி, அழும் குழந்தையை அடித்து அதட்டிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் வேக வைத்திருந்த மொச்சை விதை, நீரின்றித் தீய்ந்தது. அருவி நீர் எடுத்து வந்திருக்கவில்லை.
“எருமையும் போயாச்சு, ஏண்டி சோம்பேறி, தண்ணீருக்குப் போகவில்லை?”
“போகவில்லையம்மா.”
“ஏண்டிப் போகவில்லை?”
“வந்து...”
“வந்து, வராமல்! ஏண்டி நீயும் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய்? தகப்பன் சோம்பேறி, பையன் உதவாக்கரை, நீயும் உருப்படாதே.”
“ஜோகி வீட்டிலே மாமி வந்திருக்கிறாங்கம்மா.”
“அங்கே மாமி வந்தால் உனக்கென்னடி கழுதை? உனக்குப் பையனைக் கூட்டி வந்திருக்கிறாளா? வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்தாயா? துப்புக் கெட்டவளே! எருமை விழுந்து, இருந்ததும் போச்சு; குழந்தைப் பாலுக்கும் வழியில்லை.” பொல பொலத்துக் கொண்டே, அவள் பானையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
சற்றைக்கெல்லாம் அவளுடைய குழந்தைகளின் தந்தை கண்கள் பாழாய் சிவக்க, தள்ளாடும் நடையுடன் வீட்டுப் படியேறி வந்து, முன்புறம் வெளிமனை என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்தான். காப்பைச் செருகிக் கொண்டு அருவிக்கரைப் பக்கம் நடந்து சென்ற ரங்கன் வீடு திரும்பவில்லை.
குழந்தை பிறந்ததிலிருந்து, தானாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலை வரும் வரையிலும், தாயின் அன்பிலும் தகப்பனின் ஆதரவான அரவணைப்பிலும் உரம் பெறுகிறது. அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கையிலேயே நிமிர்ந்து நிற்க முயலுகிறது. அந்த அன்பு வரும் திசை சூன்யமாக இருந்தால், ஏமாறிப் பொலிவு குன்றிக் குழந்தை மந்தமாக ஆகலாம். ரங்கனுக்கோ, அன்பு வர வேண்டிய திசையில் அனல் போன்ற சொற்களைக் கேட்கும் அனுபவமே இருந்தது. அண்டை அயலில் ஒத்தவர்களின் மேன்மைகளைக் கண்டு வேறு மனம் கொந்தளித்தது. ஏமாற்றமும் பொறாமையுமாகச் சேர்ந்தே, ரங்கனின் உள்ளத்தில் எதிர்த்து எழும்பும் அரணாக, தான் எப்படியேனும் எல்லோரையும் விட மேலானவனாக வேண்டும் என்று ஆவேசமாக, பெருந்துணிச்சலாக உருவெடுத்து வந்தன.
அந்த வேகத்தில் தான் அவன் எருமைத் தீனமாகக் குரல் கொடுத்தும் எக்கேடு கெட்டாலென்ன என்று இறங்கி, அருவியைத் தாண்டிக் கிழக்குப் பக்கம் இன்னும் இறங்கிச் சென்று காட்டுக்குள் புகுந்தான்.
திரும்பி மரகதமலைக்கு வராமலே ஓடிவிட்டால் என்ன? மூக்கு மலையில் அவன் அத்தை இருக்கிறாள்; மாமன் ஒருவர் இருக்கிறார்.
இல்லையெனில் ஒத்தைக்குப் போய்விட்டால்?
இடுப்புக் காப்பு இருக்கிறேன் இருக்கிறேன் என்று அவன் இருதயத் துடிப்புடன் ஒத்துப் பாடியது. காப்பை, காசு கடன் கொடுக்கும் லப்பையிடம் விற்றால் ஒரு முழு வெள்ளி ரூபாய் கிடைக்குமே; ஒரு முழு வெள்ளி ரூபாய்!
கீழ் மலைக்கு அப்பால், துரை எஸ்டேட் சமீபம், லப்பையின் காசுக் கடை இருக்கிறதென்பதை ரங்கன் அறிவான்.
ஒத்தைக்குப் போனால் அங்கும் காசுக்கடை இருக்காதா என்ன?
ஒத்தையில், சந்தைக் கடைகளில் சிறு பையன்கள் சாமான் கூடை சுமப்பார்களாம். துரை, துரைசானி மார்கள் காய்கறி வாங்க வருவார்களாம். அவர்கள் இஷ்டப்பட்டால் வெள்ளிக் காசுகளே கொடுப்பார்களாம். இந்த விவரங்களை எல்லாம், மூன்றாம் விட்டுத் தருமன் ரங்கனுக்குக் கூறியிருக்கிறான். தருமன் சில நாட்கள், ஒத்தையில் சாலை வேலை செய்து காசு சேர்த்துக் கொண்டு ஊர் திரும்பியவன். நாளொன்றுக்கு ஆறணாக கூலி வாங்கினானாம். ஹட்டியில் என்ன இருக்கிறது?
இடுப்புக் காப்பு, அடுக்கடுக்கான வெள்ளி நாணயங்களாகவும், தங்க மொகராக்களாகவும் பெருகி வளர்வது போல அவனுடைய ஆசைப் பந்தல் விரிந்து கொண்டே போயிற்று. நடையும் திசை தெரியாத கானகப் பாதையில் எட்டிப் போயிற்று.
வானளாவும் கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்கள் சூழ்ந்து சோலையின் மணம் காற்றோடு சுவாசத்தில் வந்து கலந்தது. ஒத்தைக்குச் செல்லும் வழியைப் பிறர் சொல்ல அவன் அறிந்திருக்கிறானே தவிர, சென்று அறியானே! மரகத மலையிலிருந்து வடகிழக்கில் அடுத்தடுத்துத் தெரியும் மூக்குமலை, மொட்டை மலை, புலிக்குன்று எல்லாவற்றையும் தாண்டி அப்பால் செல்ல வேண்டுமாம்.
ஒத்தை சென்று விட்டால், வெள்ளிக் காசுகளாகச் சேர்த்துக் கொண்டு பெருமிதத்தோடு ஹட்டிக்குத் திரும்பி வருவானே! அவன் குதிரையிலே ஏறி ஸர்ஸ் கோட்டும் தலைப்பாகையுமாக வரும் காட்சியை, ஹட்டியில் உள்ளவர் அனைவரும் யாரோ என்று கண்டு வியந்து பிரமிக்க மாட்டார்களா?
அப்போதே இராஜகுமார நடை போட்டவனுக்கு, கானகத்துச் சூழ்நிலை, தனிமையின் அச்சத்தை நெஞ்சில் கிளர்த்தியது. ‘சோ’ என்று மரக்கிளைகள் உராயும் ஓசை; புதர்களண்டையில் அவன் அடிச்சத்தம் நெருங்குகையில் பறவைக் குஞ்சுகள் எழுப்பும் அச்ச ஒலிகள்; சூழ்ந்து வரும் மங்கல்; பாதை இல்லாத தடம்; இவையெல்லாம் அவன் தைரியத்தை வளைத்துக் கொண்டு பின்வாங்கத் தூண்டின.
மரகத மலையிலிருந்து நோக்கினால் மூக்குமலை மிக அருகில் காண்பது போல் தோன்றுகிறதே! இத்தனை காடுகளைக் கடந்து எப்படிச் செல்வது?
“ரே, ரங்கா? எங்கே வந்தே?”
ஒரு புதரடியில் கள்ளிகள் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்த பெள்ளியின் தமக்கையின் குரல் அவனை அந்தத் திசையில் நோக்கச் செய்தது.
ஹட்டிப் பெண்கள் ஐந்தாறு பேர் அவனை வியப்புடன் நோக்கினர். ரங்கனுக்குத் தன் திருட்டு எண்ணம் அவர்களுக்குத் தெரிந்து விட்டாற் போல் உள்ளூர ஒரு நடுக்கம் உண்டாயிற்று.
“எங்கே வந்தாய்? சுள்ளிக்கா? தவிட்டுப் பழம் முள்ளுப் பழம் தேடி வந்தாயா?”
“இப்போது ஏது தவிட்டுப் பழம்? பூ வந்திருக்கிறது இப்போதுதான்.”
“சின்னம்மா விறகுக்கு வந்தார்களா? கூட வந்தாயா?”
அவன் பேசாமல் நிற்கையிலே ஆளுக்கொரு கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தார்கள்.
இருட்டும் நேரமாகி விட்டது; இனிக் காட்டு வழி தாண்டி, மலைகள் பல ஏறிக் கடந்து வழி தெரியாத ஒத்தைக்குக் கிளம்புவது சரியாகாது.
“விளையாடிக் கொண்டே வழி தெரியாமல் வந்தேன் அக்கா” என்று சொல்லிக் கொண்டே ரங்கன் திரும்பி நடந்தான்.
விறகுச் சுமையுடன் அவர்கள் முன்னே நடக்க, ரங்கன் அவர்களை இலக்கு வைத்துக் கொண்டே பின்னே நடந்தான்.
அருவி கடந்து, மாடுகள் மேயும் கன்றின் பக்கம் ஏறி அவர்கள் ஹட்டிக்குச் செல்கையிலே, ரங்கன் அருவிக் கரையோரம் நடந்து விளைநிலங்களின் பக்கம் ஏறினான். பூமித்தாய்க்கு வண்ண ஆடைகள் அணிவித்தாற் போல் தோன்றும் விளை நிலங்களை அவன் கடந்து வருகையில் இருள் சூழ்ந்து விட்டது.
சோம்பலை உடையவனின் உடைமை நான் என்று ஆங்காங்கே தரிசாகக் கிடக்கும் பூமி உரிமையாளரின் குணத்தைப் பறைசாற்றியது. குத்துச் செடிகளும் களைகளும் தான் தோன்றிகளாய்க் காணும் விளைநிலம், ஆணும் பெண்ணும் ஒத்து வாழாத குடும்பத்துக்குடையது என்பதைத் தெரிவித்தது. ரங்கனுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு சதுரமாக, நீள்பரப்பாக, முக்கோணப் பாத்திகளாக, இது இன்னாருடையது, இன்னாருடையது என்று அவன் பார்த்துக் கொண்டே வந்தான். சாமைப் பயிர் கதிர் விட்டுப் பூமியை நோக்கித் தாழ்ந்து, நாணங்கொண்ட மங்கையென நின்றது. முக்கோணப் பரப்பில் பசேலென்று முழங்கால் உயரம் தோன்றும் உருளைக் கிழங்குச் செடிகள், கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லருக்கு உரியவை. அருகில் முள்ளங்கிக் கிழங்குகள் கொழுத்துப் பருத்து, பூமி வெடிக்க, உள்ளிறுக்கம் தாங்கவில்லை என்று கூறுவன போல் வெளியே தெரிந்தன. கரியமல்லரின் நிலத்தை ஒட்டிய சிறு சதுரம், சிற்றப்பன் லிங்கையா புதியதாக வாங்கிய பூமி. அது ஜோகிக்கு உரியது. அந்தச் சதுரத்தில், இலைக் கோசும் பூக்கோசும் பெரிய பெரிய கைகள் கொண்டு என் குழந்தை என் குழந்தை என்று அணைப்பவை போல் உள்ளிருக்கும் குருத்தை, பூவை, ஆதவனுக்குக் காட்டாமல் மூடிப் பாதுகாத்தன. ஜோகியின் தந்தை, சிற்றப்பன், மண்ணில் வருந்தி உழைக்கும் செல்வர். ஜோகியின் அம்மையோ, பொன்னான கைகளால் பூமி திருத்துவதைப் பேறாக எண்ணுபவள். ஜோகியின் பாட்டி, ஒன்று விதைத்தால் ஒன்பதாய்ப் பெருகும் கைராசி கொண்டவள்.
ரங்கனுக்குப் பூமியைப் பார்த்து அவர்கள் வீட்டையும் எண்ண எண்ண தங்கள் சிறுமை உறுத்தும் முள்ளாக நெஞ்சை வேதனை செய்தது. அவர்கள் குடும்பத்துக்குரிய மண், அந்த நோஞ்சல் எருமை போலவே, சிவப்பு மண்ணாக, செழிப்பின்றி, பசுமையின்றி காட்சியளித்தது. அந்தப் பக்கம் அநேகமாகப் பழுப்பும் சிவப்புமான மண் தான். தெற்கோரம், அருவி வளைந்து செல்லும் இடம். கிருஷ்ணனின் தாத்தாவுக்குச் சொந்தமான பூமி மட்டுமே கரிய வளம் கொண்டது. ஆனால் ஜோகியின் தந்தை, ரங்கனின் சிற்றப்பன், அந்தப் பழுப்பு மண்ணையே வளமிட்டு வளமிட்டுப் பொன் விளையும் மண்ணாக்கி விட்டாரே! இரண்டு பசுக்களும், மூன்று எருமைகளும் உள்ள வீட்டில் வளத்துக்கு ஏது குறை?
ரங்கனின் தந்தை நிலத்தில் வணங்கி வேலை செய்ததுமில்லை; சின்னம்மை பொருந்து உழைத்ததுமில்லை. வீட்டில் பொருந்தி இரண்டு நாட்கள் வேலை செய்தால், எட்டு நாட்கள் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு அண்ணன் வீடான கோத்தைக்குச் சென்று விடுவாள். ரங்கனின் தந்தை சில நாள் ஒத்தைப் பக்கம் எங்கேனும் கூலி வேலைக்குப் போவார். அந்த ஆறணாக் கூலியையும் சாராயத்துக்குக் கொடுத்து விட்டு வருவார்.
பூமியில் வேற்றுமையைக் கண்ட வண்ணம் நின்ற ரங்கனின் உள்ளத்தில் ஆற்றாமை சொல்லொணாமல் பொங்கி வந்தது. ஆத்திரத்துடன், கொழுத்து நின்ற முள்ளங்கிச் செடிகள் நாலைந்தைப் பிடுங்கினான். குழியொன்றில் பாய்ச்சுவதற்காக ஊற்றியிருந்த நீ மிகுந்திருப்பது கண்டு, அதில் கழுவினான். கடித்துச் சுவைத்துக் கொண்டே நடந்தான்.
காவற் பரணருகில் வந்ததும் நின்றான். தூரத்தில் சூழ்ந்து வந்த இருட்டில் புற்சரிவில் எருமை, விழுந்த இடத்தில் படுத்திருந்தது தீப்பந்தம் எரிவதிலிருந்து தெரிந்தது. அதன் அருகில் யாரோ நிற்கிறார், யாரது? சிற்றப்பனாக இருக்குமோ?
சிற்றப்பன் தன்னை ஒரு வேளை கண்டு கொண்டு திரும்புவாரோ என்ற எண்ணத்துடன் காவற் பரணை நிமிர்ந்து பார்த்தான்.
மேட்டிலிருந்து குட்டையான இரு கால்களும், பள்ளத்திலிருந்து உயரமான இரு கால்களும் காவற் பரணைத் தாங்கி நின்றன. குட்டைக் கால்கள் உள்ள பக்கம் பரணுள் ஏற வழியுண்டு.
இரவில், முள்ளம்பன்றிகள் கிழங்குகளைத் தோண்டிப் போடும். மான்கள் தளிர்களைத் தின்று விடும். இரவுக்கு இருவர், காவல்முறையாக ஊதுகுழலும், தீயும் நாயுமாய்த் துணைக் கொண்டு அந்தப் பரணில் இருந்த நட்ட பயிரைப் பாதுகாப்பார்கள்.
இன்று யார் முறையோ?
ரங்கன் கிழங்குகளைத் தின்று தீர்த்துவிட்டு, இருட்டுக்கும் குளிருக்கும், வீடாக வெறுப்புக்கும் அஞ்சி, பரணில் ஏறிக் கொண்டான்; ஒரு மூலையில் சுருண்டு முடங்கினான்.
லிங்கையா வீடு திரும்பியதும், அன்று வழக்கம் போல் சுடுநீரில் உடல் கழுவிக் கொண்டு, பால்மனைக்கு வந்து, மடி ஆடை உடுத்துக் கொண்டான். ஒரே மாதிரியான ஹட்டியின் இல்லங்கள், தாழ்ந்து குறுகிய வாயில்களைக் கொண்டவையாய், இரு முக்கியமான பகுதிகளை உடையனவாய் அமையப் பெற்றவை. முன்புறம் சிறு வராந்தாவைப் போன்ற பகுதியை ஒட்டி, ஒவ்வொரு வீட்டிலும், வெளிமனை என்ற பகுதி உண்டு; அதை அடுத்து, உள்மனை என்ற பகுதியில் வாயிலுக்கு நேர்வளைவான வாயில் சமையற் பகுதியைப் பிரிக்கும் உள்மனையின் வலது ஓரத்தில், பால்மனை அல்லது பூசை அறை, சுவரோடு ஒட்டிய வளைவு வாயிலுடன் இணைந்திருக்கும். உள்மனையின் நடுவே, சமையலறை வாயிலில், சுவர்த்தண்டில், எல்லா இடங்களுக்கும் வெளிச்சம் தெரியும் வண்ணம் தீபமடம் அமைக்கப் பெற்றிருக்கும். மேலே, மூங்கிலால் ஆன சேமிப்புப் பரண்களும் உண்டு.
இரவில் சூரியனின் பிரதிநிதியான விளக்குத் தெய்வத்துக்கு அஞ்சலி செய்துவிட்டு, லிங்கையா பால் கறக்கப் புறப்பட்டு விட்டான். காப்புக் காணாத செய்தியை ஆற்றாமையுடன் கணவனிடம் கூற வந்த ஜோகியின் தாய், அவன், ‘ஹொணே’ சகிதம் பால் கறக்கப் புறப்பட்டு விட்டதை அறிந்து, ஒதுங்கி நின்றாள். குழந்தையின் மடியில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த மைத்துனன் மனைவி, சரேலென்று எழுந்து அடுப்படிக்கு ஒதுங்கினாள்.
பால்கறக்கும் அந்த வேளை, அவர்களுக்குப் புனிதமான வேளை. இறைவனை வழிபடுகையில் கடைப்பிடிக்கும் புனித விதிகள் அனைத்தும், பால் கறக்கும் சடங்கைச் செய்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை. கொட்டிலுக்குச் சென்று மூங்கிற்குழாய் வழிய வழியக் கறந்த பாலைப் பெரிய பானையில் ஊற்றிக் கொண்டு அவன் வரும் போது, பெண்கள் எவரும் குறுக்கே வரமாட்டார்கள்; பேச மாட்டார்கள். பால் மனையாகிய புனித அறைக்குள் அவர்கல் புகவும் மாட்டார்கள்; அப்படிப் புனிதமாகக் கறந்த பாலை, அடுப்பிலிட்டுக் காய்ச்ச மாட்டார்கள்; பேதைப் பருவம் தாண்டிய பெண்கள், அந்நாட்களில் பாலை அருந்தவும் மாட்டார்கள்.
பால்மனையில் பாலை எடுத்துக் கொண்டு வந்து லிங்கையா வைத்ததும், மாதி வெளியே வைத்திருந்த கலத்தில், வீட்டுச் செலவுக்கு வேண்டிய பாலை ஊற்றினான். வேறொரு கலத்தில், தமையன் வீட்டுச் செலவுக்குத் தனியாகப் பாலூற்றி வைத்தான். மீதிப் பாலைப் புரை ஊற்றி வைத்துவிட்டு, மடி ஆடையை மாற்றிக் கொண்டான்.
கையில் அண்ணன் வீட்டுக்கு வேண்டிய பாலுடன் அவன் புறப்பட்டதும் மாதி எதிரே வந்தாள்.
“பால் - அண்ணன் வீட்டுக்கா?”
“ஆமாம். ஏன்?”
“எல்லோரும் சொல்வதைப் போல் நீங்கள் பரிவு காட்டுவதாலேயே உங்கள் அண்ணன் குடும்பம் தழைத்துப் பிழைக்காமல் போகிறது. நீங்கள் முந்தித் தானியமாய் அளக்கிறீர்கள்; பாலாய்ச் சாய்க்கிறீர்கள். அவர்கள் ஏன் வேலை செய்கிறார்கள்?”
அவள் கணவனை ஒரு நாளும் அப்படித் தடுத்ததில்லை. வெகு நாட்களாக இருந்த குடைச்சல் அன்று வெளிவந்து விட்டது.
“இன்று பார்த்து உன் உபதேசத்தைச் செய்கிறாயா நீ?”
“இந்தப் பாலை அண்ணி குடிக்கிறாள்!” மாதியின் குரலில் கடுமையும் கசப்பும் பீறி வந்தன.
“அப்படியானால் பாலைக் கொடுக்காதே என்கிறாயா மாதம்மா? எருமை ஒன்று இருந்தது; அதுவும் காலொடிந்து கிடக்கிறது. ஓர் அப்பனுக்குப் பிறந்து ஒன்றாக ஒட்டியிருந்த கிளை ஒன்று வாட ஒன்று பார்ப்பது கேவலம். அவரவர் பாவம் அவரவர்க்கு. தடுக்காதே.”
இளகிய உணர்ச்சிகளைக் குரலுடன் விழுங்கிக் கொண்டு லிங்கையா எதிர் வீட்டுக்குச் சென்றான்.
வெளிமனையில், தமையன் போதையுடன் விழுந்து கிடந்தான். தீப மாடத்தில் ஒளி இல்லை. எட்டு வயசு ரங்கம்மை மூலையில் உட்கார்ந்து அழுத குரலே கேட்டது.
“ரங்கி, அம்மை இல்லை?”
சிற்றப்பனின் குரல் கேட்டதுமே ரங்கி அழுகையை நிறுத்திவிட்டு, “அம்மை அருவிக்குப் போனாள்” என்றாள்.
“இந்நேரம் கழித்தா? ஏனம்மா விளக்கு வைக்க வில்லை? விளக்கெண்ணெய் இல்லையா?”
உண்மையில் அவள் இருட்டில் விளக்கெண்ணெய்க் கலயத்தை நழுவவிட்டு உடைத்திருந்தால். தாய் திரும்பியதும் அவளுடைய கடுமையைச் சமாளிக்க வேண்டுமே! ரங்கி மறுபடியும் நினைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
“தா, ரங்கம்மா ஏம்மா அழறே?” சிற்றப்பன் பரிவோடு அவள் தலையை நிமிர்த்தித் தூக்கிக் கேட்ட போது, அவள் அழுகை அதிகமாயிற்று. இந்த நிலையில் குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு நஞ்சம்மை திரும்பி விட்டாள்.
“விளக்கேற்றவில்லை? ஏ ரங்கி, யாரது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தவள், வந்தவர் மைத்துனர் என்பதை உணர்ந்தாள்.
“மெள்ள, இருட்டு அண்ணி” என்று லிங்கையா எச்சரிக்கையிலேயே ரங்கி நழுவ விட்டிருந்த விளக்கெண்ணெய் தரையில் அவளுடைய காலுக்கடியில் புகுந்து சறுக்கச் செய்து, தலைக்குடத்தைக் கீழே தள்ளி உடைத்து ஒரு நொடியில் அங்கே ஒரு பிரளயத்தை உண்டாக்கி விட்டது.
“ஈசுவரா!” என்று கத்திக் கொண்டே கீழே சாய்ந்த நஞ்சம்மை பெரிய கூக்குரலிடுமுன், லிங்கையா வீட்டுக்கு ஓடி விளக்கை எடுத்து வந்தான். அவன் பின், மாதி, பாரு, ஜோகி எல்லாருமே வந்தார்கள்.
“எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்தீர்களா? பாழாய்ப் போன பெண்ணே! விளக்கெண்ணெய் கலயத்தை உடைத்து விட்டு ஒப்பாரி வைக்கிறாயே! எருமை போச்சு, வீட்டுப் பயலைக் காணோம், தண்ணீர் குடமும் போச்சு” என்று பிரலாபம் தொடங்கி விட்டாள் அவள்.
“பாலை எடுத்து உள்ளே வை. அட என்னவோ இருட்டில் நடந்து விட்டது. மாதி, எல்லாம் துடைத்து விடு. இதைப் போய்ப் பெரிசு பண்ணாதீர்கள்.”
சமாதானம் செய்துவிட்டு லிங்கையா சென்றான். ரங்கி, அழத் தொடங்கிய குழந்தைத் தம்பியை எடுத்துக் கொண்டு பாரு, ஜோகியுடன் வெளியேறினாள், சமயம் வாய்த்தவளாக.
கணவனின் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவளாக மாதி எல்லாவற்றையும் எடுத்துச் சுத்தம் செய்யும் வரையில் நஞ்சம்மை அழுது புலம்பிய வண்ணம் மடிந்த காலுடன் உட்கார்ந்திருந்தாள். இது போன்ற சம்பவங்கள் மாதிக்குச் சகஜமானவை என்றாலும் வீட்டில் புதுக் குழந்தை ஒன்று வந்து, அதற்காகக் கொண்டாடும் மகிழ்ச்சி விருந்து கலகலப்பற்றுப் போகும்படி சம்பவங்கள் நேர்ந்ததில் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.
லிங்கையா, “அப்பாடா!” என்று ஒரு வழியாக வீட்டுக்குள் வந்து அப்போதுதான் அமர்ந்தான். குழந்தைகள் எல்லோரும் ரங்கம்மை உட்பட, சுற்றி உட்கார்ந்து விட்டனர். அம்மாதிரி அவன் உட்கார்ந்தால், குடும்பத் தலைவன் உணவு கொள்வதற்குரிய பெரிய வட்டிலை வைத்து மனைவி அமுது படைக்க வேண்டும் என்பதே பொருள். அன்று மாதி வட்டிலை வைக்குமுன் மருமகளை, அவன் மடியில் கொண்டு வந்து விட்டாள்.
“அட! தங்கச்சி, எப்போது வந்தாய்? சுகமா?” லிங்கையாவின் விசாரணைக்குக் குழந்தையின் தாய் தலையை நீட்டினாள்.
“சாயங்காலம் வந்தேன். அண்ணனுக்கு வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை” என்றான்.
“அட, தொரியன் வந்தானா?”
“ஆமாம்!”
“கிண்ணத்தில் பால் கொண்டு வா, மாதி!” அவன் சொல்லு முன்னரே இனிக்கும் பாலுடன் கிண்ணம் வந்து விட்டது.
“நல்ல வீட்டில் வாழ்க்கைப்பட்டு, ஒன்று விதைத்தால் ஓராயிரம் பெருக, வீடு நிறைய மக்களுடன் சுகமாக இருக்கட்டும்” என்று அவன் வாழ்த்திக் குழந்தையின் நாவில் பாலை வைத்த பின், “பேரென்ன, அம்மே?” என்றான்.
“கிரிஜை!”
“நல்லபேர்” என்று குழந்தையைத் தாயினிடம் கொடுத்தான் அவன்.
“பாருவின் காப்பு அகப்படவே இல்லை. வந்ததும் ஜோகியைத் தேடிக் கொண்டு ஓடினாள். எங்கே விழுந்ததோ தெரியவில்லை. ரங்கன் ஒருத்தன் தான் அங்கு இவர்கள் வந்த பின் இருந்தானாம். அந்தப் பயலை இன்னமும் காணவில்லை.”
மாதியின் கூற்றில் பொதிந்திருந்த நுட்பமான உலகம் லிங்கையாவுக்கு எட்டாமல் இல்லை.
அயர்ந்து மறந்தால் ‘பலப்பெட்டி’யைத் திறந்து வெல்லமோ, பொரியோ, மாவோ, தேனோ எடுக்கும் சுபாவம் அவனுக்கு உண்டு. அது வளமை இல்லாத வீட்டில் வளரும் குறை. அந்தச் சுபாவம் குறித்து மாதி அவனைப் பற்றிக் கொண்டு வரும் புகார்களை அவன் செவிகளில் போடுக் கொண்டதே இல்லை.
“காப்பு எங்கே விழுந்ததோ? பழியோரிடம் பாவமோரிடம் என்று எதுவும் பேசாதே” என்று மனைவியைக் கடிந்து கொண்டான்.
மாதி வட்டிலைக் கொண்டு வந்து வைத்து சாமைச் சோறும் மணக்க மணக்க நெய்யுமாக அமுது படைத்தாள். மொச்சைப் பருப்பின் புளியில்லாத குழம்பை ஊற்றினாள். சோற்றைக் கலந்து லிங்கையா குழந்தைகளுக்கெல்லாம் கொடுத்தான். அவனுக்கு உணவு இறங்கவில்லை. வீட்டுக்கு வராமல் எங்கோ குளிரில், பசியும் பட்டினியுமாகப் பதுங்கியிருக்கும் ரங்கனின் நினைவு, சோற்றைக் கசக்கச் செய்தது.
மனைவி கொண்டு வந்து வைத்த பாலை மட்டும் வேண்டா வெறுப்பாகக் குடித்து விட்டு, அவன் இரவு காவலுக்குக் கிளம்பி விட்டான்.
கறுப்புக் கம்பளியைத் தலையோடு போர்த்தபடி, சில்லென்ற பூமியில் செருப்பொலிக்க, ஊது குழலும் நெருப்புப் பெட்டியுமாக லிங்கையா காவற்பரணுக்கு நடந்தான். பத்து இருபது நாட்கள் காவல் இருக்க வேண்டும். பின்னர் அறுவடை.
வானில் பிறைச் சந்திரன் தோன்றி, அதற்குள் தேவர் சிகரத்துக்கு ஓடி விட்டான். வானம் நிர்மலமாக, ஆயிரமாயிரம் தாரகைக் குழந்தைகள் விளையாடும் தடாகமாக விளங்கியது. தேவர் சிகரத்துக்கு மேல் தோன்றிய பிறையைக் கண்டதும் லிங்கையாவின் இதழ்கள் அவனையும் அறியாமல் ‘ஹரஹர சிவசிவ பஸ்வேசா’ என்று முணுமுணுத்தன. கால்கள் பழக்கத்தில் இருளில் முட்டுப் பாறையில் அடி வைத்து, தொரியர் வீடுகளின் பக்கம் செல்லும் பாதையில் இறங்கின. சாக்கு, கம்பளி, பந்தம் சகிதம் மல்லன் நின்று கொண்டிருந்தான்.
“மல்லா!...”
“ஆமாங்கைய்யா” என்று குரல் கொடுத்தான் அவன். முன்னே லிங்கையாவும், பின்னே மல்லனுமாக நடந்தனர். எதிரே கானகப் பக்கத்திலிருந்து நரிகளின் தொடர்ந்த ஊளையொலி எழும்பியது. மல்லைன் பின் வந்த நாய் எதிர் ஊளையிட்டுக் கொண்டே முன்னே ஓடியது. “நேத்து நம் கோழியை நரி பிடித்துப் போய்விட்டதுங்க” என்றான் மல்லன். அந்த வார்த்தை லிங்கையாவின் கவனத்தைக் கவரவில்லை. சில்லென்ற முகத்தில் உராய்ந்த தண்மை, அந்த ஆண்டின் முதற்பனியை அறிமுகப்படுத்தியது. சாதாரணமாக அந்தப் பனி, அவனைக் கவலை கொள்ளச் செய்திருக்கும். ஏனெனில், கடும்பனி பெய்யத் தொடங்கு முன் அறுவடை நடந்து விட வேண்டும். எப்போதும் மார்கழிக் கடைசியில் தான் கடும்பனி பெய்யத் துவங்கும். தைப் பொங்கல் பெரிய பண்டிகைக்குள் அறுவடை செய்து விடுவார்கள். பின்னர், மாசி நன்னாளில் இறைவர் கோயிலின் முன் அழல் மிதித்த பிறகு, விதைக்கும் திருநாளைக் கொண்டாடுவர்.
பனியையும் பயிரையும் மீறி அப்போது லிங்கையாவை வாட்டிய கவலை என்ன?
ஒரு கிளை தழைக்க, ஒரு கிளை காய்ந்து விடுவது ஏன்?
அண்ணியோ, “எவர் செய்த வினையோ, எவர் செய்த ஏவலோ?” என்று ஓலமிடுகிறாள். அண்ணனின் பூமி நல்ல விளைவு கொடுத்தாலல்லவோ, வழக்கமாகக் காட்டுக் குறும்பருக்குச் சரியான மானியம் கொடுக்க முடியும்? மந்திர தந்திரங்களில் வல்ல குறும்பரின் வினையை எண்ணி அண்ணி அஞ்சுவதில் வியப்பில்லையே!
அண்ணியை நினைக்கும் போதெல்லாம் சில நாட்களாக லிங்கையாவின் உள்ளத்தில் ஒரு புதுக் கவலை தோன்றிக் கொண்டிருந்தது.
குடும்பத்தில் ஒரு புதுப் பெண் வந்து புகுந்து, தலைவனையும் அவனுக்குரிய பூமியையும் உடைமைகளாகக் கொண்டு உழைத்து, அவனையும் சிறப்பித்து, அந்தக் குடும்பத்தின் வேர் நசித்து விடாதபடி, தளிர்த்துத் தழைக்க வைக்கிறாள். ஏவலைப் போல் உரைத்து, உயர்ந்தவற்றை மக்களுக்கும் கணவனுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மிகுதியாகும் ‘கொரளி’ மாவைக் கூட உண்டு நிறைவெய்தும் படகப் பெண்களின் சிறப்பைச் சொல்லி மாளுமோ; இத்தகைய பெண்களை மாணிக்கங்கள் என்று போற்றிப் பேண வேண்டியது ஆணின் கடமையன்றோ!
தமையனாக, குடும்பத்தின் மூத்தவனாகப் பிறந்தவன் இதை உணர்ந்திராதது, லிங்கையாவின் சீலம் மிகுந்த நெஞ்சிலே அளவு கடந்த வேதனையையும் துயரத்தையும் தோற்றுவித்திருந்தது. அண்ணன் மட்டும் அல்ல; பலரும் அந்த அருமைகளை உணர்ந்திருக்கவில்லை. பொன்னைப் பித்தளை என எண்ணுவது போல், பெண்ணின் சேவைகளைச் சுயநலத்திற்காக உபயோகப் படுத்திக் கொண்டு, குடும்ப வளர்ச்சியின் உயிர் ஊற்றாகிய அன்பைப் பெருக்கிப் பிணைப்பைப் பின்ன மறந்து விடுகின்றனரே! இணைப்பில் உயிரூட்டமில்லாததால் தேய்ந்து பெரியோரின் குற்றங்களினால் விளையும் துன்பங்கள், தீமைகள், எத்தனை சக்தி வாய்ந்தவை ஆகி விடுகின்றன! திருமண பந்தம் என்பது விலக்க முடியாததன்று என்ற அருமையான உரிமையை மிக அவசியமான நிலையில் மட்டுமே உபயோகித்துக் கொள்ளலாம் என்ற அரிய உரிமையை - மலிவான சரக்காக்கி விடுவது, எத்தனை தூரம் சிறுவர்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது!
லிங்கையாவின் தந்தை, தம் நாளில் இரு பெண்களைக் கொண்டார். மூத்தவளின் மகன் தான் அந்த அண்ணன், மாதன். மூத்தவள் பிரிந்து சென்ற பின் அவர் இன்னொருத்தியைக் கொண்டார் - தாயின் அரவணைப்பில் வித்தியாசம் கண்டதாலோ என்னவோ, லிங்கையா அறியான்; ஊகந்தான். அண்ணன் மாதன், குடும்பத்தில் என்றுமே ஒட்டவில்லை. சாப்பாட்டுக்கு எப்படியோ வரும் என்ற நம்பிக்கை அண்ணனுக்கு விழுந்து விட்டது. கவலை இல்லாமல், வருந்தி உழைக்காமல், உல்லாசம் விரும்பும் ஊதாரி என்று பெயரெடுத்து விட்டான் மூத்த மகன்; மூத்தவள் மகனல்லவா?
லிங்கையாவின் தந்தை உயிருடன் இருந்த நாட்களிலேயே மூத்தவனைத் தனியாக வைத்து, நிலமும் பிரித்துக் கொடுத்தார். தம் உடல் சாயுமட்டும், அந்த மகனின் பூமியில் தாமே பாடுபட்டுப் பலன் கண்டார்.
ரங்கனின் தாயின் முகம் லிங்கையாவின் நினைவில் அப்போது தோன்றியது. சந்தனத்தை அரைத்த கலவையின் நிற மேனியாள். அவர்கள் சமூகத்திலேயே, அபூர்வமான அழகான வட்ட முகம் படைத்தவள் அவள். அவள் சிரித்தால் கபடமற்ற குழந்தையின் நினைவே வரும்.
லிங்கையாவின் தந்தை அவளுடைய அழகையும் உடற்கட்டையும் மண்ணில் வேலை செய்யும் பாங்கையும் கண்டே நூறு ரூபாய் கொடுத்து, தம் மூத்த மகனுக்கு அவளைக் கொண்டு வந்தார். ஒரே ஆண்டில் மாய்ந்து விட்டாளே?
அண்ணன் மாதனுக்குத் தேனில் அளைந்த குரல். நடனமாடுவதில் அவனை மிஞ்சுபவர் இல்லை. எங்கே இறைவனுக்குரிய விழா நடந்தாலும், மரணமென்றாலும், கோத்தர் இசைக்கேற்ப நடனமாடுவதற்கு அவர்கள் சமூகத்தில் முதல் அழைப்பு அவனுக்கே உண்டு. இறைவனைப் புகழ்ந்து அவன் தீங்குரலில் இசைக்கத் தொடங்கினால் மெய்மறக்காதவர் இருக்க மாட்டார்கள்.
அன்று - அன்று அவள் வெண்மலர் போல் சோர்ந்து விழுந்த சமயம் கூட அண்ணன் வீட்டில் இல்லை. கோத்தைப் பக்கம் தெய்வத் திருவிழாவுக்காகச் சென்றிருந்தான். எதிர்மனையின் வாசலில் அவசரமாக நிரைச்சல் கட்டினார்கள். சிசுவைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள் போலும்! ஏற்ற கடனைப் பிறர் கையில் ஒப்பித்துவிட்டுச் சில மணிகளில் அவள் மாய்ந்து விட்டாள்.
அந்தக் குழந்தை இப்பிறவியில் அறிந்திழைத்த குற்றம் எதுவுமே இல்லை. தகப்பனின் விதியே மகனைச் சூழுமோ?
தன் மகன் அல்லாத மகனின் மகனை, இளங்குழந்தை என்று பாட்டி எடுத்துச் சீராட்டினாள் என்று கொள்வதை விட சிற்றப்பன் லிங்கையாவே தாயாக இருந்து அந்தக் குழந்தையை வளர்த்தான் என்று கொள்ளலாம். ரங்கனின் தாய் இறந்து ஆறு மாசங்கள் கழிந்ததுமே, நஞ்சம்மைக்கு ஐம்பது வெள்ளி கொடுத்து, அண்ணனுக்குக் கட்டி வைத்தார் அவன் தந்தை.
“எருமையைப் போய்ப் பார்க்க வேண்டும் என்றீர்களே?”
வழி விட்டு எங்கோ சுற்றி வருகிறாரே என்று புரியாதவனாகத் தொரிய மல்லன் குரல் கொடுத்தான்.
“ஓ...” என்று நினைவுக்கு வந்த லிங்கையா, “நீ போய்ப் பார்த்து வா” என்றான்.
மல்லன் பந்தத்தை எடுத்துக் கொண்டு செல்கையில், லிங்கையா பரணில் ஏறினான். உள்ளே ரங்கனின் கால் தட்டுப்பட்டது. திட்டுக்கிட்டுக் கையை எடுத்த அவன் சட்டென்று நெருப்புக் குச்சியைக் கிழித்துப் பார்த்தான். சுருண்டு ரங்கன் படுத்திருந்தான். எருமையை முரட்டுத் தனமாக அடித்து விட்டுச் சின்னம்மைக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறானோ?
தன் மேல் போர்த்திருந்த கம்பளியை எடுத்து ஒரு புறம் அழுத்திப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தான். இருட்டானாலும் சிற்றப்பனின் கனிந்த முகம், வெகு அருகில், அவன் முகத்துக்கு முன் தெரிந்தது.
சிற்றப்பன், கையில் தட்டுப்பட்டது. காப்பென்று உணர்ந்தான். அந்தப் பிள்ளையைப் பார்த்த அவன் கண்களில் வெம்பனி சுரந்தது.
“ரங்கன்!” தொண்டை தழுதழுத்தது. “இப்படிச் செய்யலாமா தம்பி? நீ... வீட்டுக்கு மூத்த பையன், உன்னைத் தோளோடு போட்டுக் கொண்டு நான் வளர்த்தேன். என் உடம்புடன் தேய்ந்து பெரியவனான நீ இப்படிப் போவாய் என்று நான் நினைக்கவில்லையடா தம்பி!”
ரங்கன் குரோதம் பொங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளில் அது லிங்கையாவுக்குத் தெரியவில்லை.
“திருட்டு வேலை இந்தச் சின்ன வயசிலே ஆகுமா ரங்கா?”
“யார் திருடினார்கள்? கீழே கிடந்ததை எடுத்து வைத்துக் கொண்டால் திருட்டா அது?” என்றான் ரங்கன் ஆத்திரத்துடன்.
லிங்கையா சட்டென்று நாவைக் கடித்துக் கொண்டான். அப்படியும் இருக்கலாமே!
“அப்படியானால் கிழேதான் கிடைத்ததா?”
“பின்னே, நான் உங்கள் வீட்டில் வந்து திருடினேனா?”
“இல்லையென்றால், எனக்கு அந்தக் கால் ஒடிந்த எருமை நடந்து வீட்டுக்கு வந்தாற் போல் சந்தோஷமாகிறது, ரங்கா! கீழே கிடந்தது எடுத்துச் செருகிக் கொண்டாய். சரி, மல்லன் வரட்டும். வீட்டுக்கு வந்து, சாப்பிட்ட பின் படுக்கலாம்” என்றான் லிங்கையா.
“நான் ஒன்றும் வீட்டுக்கு வரவில்லை.”
“ஏண்டா தம்பி?”
“வீட்டிலே எனக்கு என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள்? எனக்கு அம்மா இல்லை, அண்ணன் இல்லை, அத்தை இல்லை, மாமன் இல்லை, மகள் இல்லை, என்னை யாரும் கூப்பிடப் போறதில்லை.”
கடைசி வார்த்தைகளைச் சொல்லுகையில் உள்ளத்து ஆற்றாமை அழுகையாக வெளிவந்து விட்டது.
சிற்றப்பன் ஆதரவுடன் அவன் முதுகைத் தடவினான். “அப்படியெல்லாம் சொல்லாதே ரங்கா; நான் இல்லையா உனக்கு? உனக்கு ஏன் அத்தை இல்லை, மாமன் இல்லை? பாரு வந்திருக்கிறாள், பார்க்கவில்லையா நீ?... நான் சொல்வதைக் கேள், சிற்றப்பா வீட்டிலேயே இரு. இதோ மல்லன் வந்து விட்டான். நாம் வீட்டுக்குப் போகலாம், வா.”
திகைப்புடன் நின்ற மல்லனிடம் திரும்பி, “எருமையைப் பார்த்தாயா?” என்றான்.
“பார்த்தேன்... பரணில் ரங்கனா?” என்றான் மல்லன்.
“ஆமாம். நீ இங்கே இரு. நான் வீட்டுக்குப் போய் வருகிறேன்” என்று பரணின் படியிலிருந்து இறங்கி, மல்லனிடமிருந்து தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டான் லிங்கையா.
தன்னைக் கைப்பிடித்து இறக்கி அழைத்துக் கொண்டு தீப்பந்தத்துடன் அவன் மேடேறிச் செல்கையில், ‘இன்று சிற்றப்பன் காவல் இருக்கும் முறை என்று தெரியாமற் போயிற்றே. இவர் பிடித்து விட்டாரே!’ என்று ஆத்திரந்தான் பொங்கி வந்தது. எதிர்த்து வெளியேறத் துடிக்கும் துடிப்புக்கு ஒரு போக்குக் கிடைத்து, அதைச் சிற்றப்பன் சிரங்குக்குக் குளிர்சந்தனம் போட்டு அமுக்குவதைப் போல் அமுக்கி விட வந்ததை அவனால் ஏற்க முடியவில்லை. சிற்றப்பன் வீட்டில் எத்தனை நாளைக்கு ஒளிய முடியும்? அப்போதும் சின்னம்மை ஏசமாட்டாளா? அந்த ஹட்டியும் உறவினரும், மக்களும் தன்னுடைய கட்சியில் இருப்பதாகவே அவனால் எப்போதும் நினைத்திருக்க முடியவில்லையே! அந்த இடத்தை விட்டு ஓடும் எண்ணத்தில் தான் எத்தனை ஆறுதலும் மகிழ்ச்சியும் இருந்தன!
ஆனால் அவன் ஆத்திரத்துக்கு, தன்னைப் பற்றிக் கொண்டு மேடேற்றிச் செல்லும் கையை உதறும் வலிமை வரவில்லை. போதாக்குறைக்குப் பசியும் குளிரும் வேறு. அந்தக் கைச்சூட்டை உதறாதே என்று பொங்கி வரும் ஆத்திரத்தை அமுக்கின.
பையனின் உள்ளத்தை அறியா லிங்கையா, ‘மாதலிங்கேசுவரா, இந்தக் குலக்கொழுந்துக்கு தீமை வராமல் இருக்கட்டும். இந்தக் கை துணையாக, இந்தத் தீப்பந்த ஒளி துணையாக, இருட்டான பள்ளத்திலிருந்து மேலே இவனை அழைத்துச் செல்கிறேன். நல்ல வழியில் செல்லுவதை இந்தப் பந்தமும் இந்தக் கையுமே இன்று காப்பது போல் என்றும் காக்கட்டும்’ என்றெல்லாம் என்ணியவாறு நடந்தான்.
ஹெத்தப்பா கோயிலிலிருக்கும் தீபம் ஒன்றே விடிவிளக்குப் போல் கிராமம் இருக்குமிடம் காட்ட, பெரிய வீட்டின் குழந்தைகள் அனைவரும் உறங்குவது போல ஊர் ஓசை ஓய்ந்திருந்தது. அந்த அமைதியினூடே தேனில் அளைந்த தீங்குரல் ஒன்று இறைவனின் புகழை இசைத்துக் கொண்டிருந்தது.
‘ஆகா! என்ன அற்புதம்? அண்ணன் தானா பாடுகிறான்? அவன் இவ்வுலக மனிதன் தானா? அல்லது யட்சனோ? கின்னரனோ? இரவின் மோனத்திலே எழும் இவ்வொலி, ஊதாரி, பொறுப்பறியாத சோம்பேறி என்று பலரும் கருதும் அண்ணனின் கணத்திலிருந்துதான் வருகிறதா? அவன் சுயநினைவுடன் பாடுகிறானா, அல்லது தெய்வத்தின் ஆவேசம் குடிகொண்டிருக்கிறதா?’
அந்த ஒலியில் அவன் உள்ளம் தன்னை மறந்த லயத்தில் மூழ்கியது. நெஞ்சம் நெக்குருக, வாயிலில் கதவை இடிக்கவும் மறந்தவனாக நின்றான்.
இன்னிசையின் அலைகள் தவழ்ந்து தவழ்ந்து வந்து எங்கோ சென்று கொண்டே இருந்தன. உயர உயர வானுலகின் எல்லையை முட்டி, அந்த முக்கண்ணனை அழைக்கின்றனவோ ஒரு வேளை?
என்ன பாக்கியம் செய்தவன் அண்ணன்! வீடும் மாடும் பூமியும் நிலையுள்ளவையா? இப்படி அந்த இறைவனைக் கூவி அழைக்கும் பேறு அவனுக்கில்லையே?
ரங்கனின் நல்வாழ்வு பற்றி அவன் நினைத்தற் கொப்ப, இந்த அபூர்வமான இன்னிசை ஒலிப்பது நல்லதொரு சூசகம் போலும்! முன்னோர் பழம்பெருமை குலையாமல் தீபமெனச் சுடரும் ஒளியாய் வாழ்ந்து பெருகுவான் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் இசையோ? ரங்கனும் அந்த இசையில் கட்டுண்டவனாகத்தான் சிற்றப்பனை ஏதும் கேட்காமலே நின்று கொண்டிருந்தான்.
வீட்டுக்குள்ளிருந்து குழந்தை அழும் குரல் வந்தது. சுய நினைவுக்கு வந்த ஜோகியின் தந்தை கதவை இடித்தான்.
“மாதி, மாதி!”
தீப மாடத்து அகலைத் தூண்டி எடுத்துக் கொண்டு வந்து மாதி பரபரக்கக் கதவைத் திறந்தாள்.
இரவு அவன் சரியாக உணவு கொள்ளவில்லை. குளிரோ காய்ச்சலோ?
“என்ன?... உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்றாள் பரபரப்புடன் அகலைத் தூக்கிப் பிடித்து.
“ஒன்றும் இல்லை; ரங்கா, உள்ளே வா!”
மாதி அப்போதுதான் ரங்கனைப் பார்த்தாள். வழியில் படுத்திருந்த மைத்துனன் மனைவி சட்டென்று பாயை மடக்கிக் கொண்டு ஒதுங்கினாள்.
மாதி, வியப்புடன் விளக்கை ஏந்திக் கொண்டு சமையற் பகுதிக்கு அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.
“எங்கே இருந்தான் இவன்?”
“ஒன்றும் கேட்காதே!” லிங்கையா ஜாடை செய்தான்.
“சோறு இருக்கிறதா?”
“களி இருக்கிறது! குழம்பு இருக்கிறது.”
லிங்கையா, மனைவி சோறெடுத்து வைப்பதை எதிர்பார்க்கவில்லை. விளக்கை வாங்கித் தண்டில் வைத்துவிட்டு அவனாகவே வெண்கல வட்டிலைக் கழுவி வைத்து, குளிர் நீரில் மிதந்த ராகிக் களி உருண்டையில் ஒன்றை வைத்து, அடுப்பின் மீது பானையில் மூடி வைத்திருந்த குழம்பையும் எடுத்து ஊற்றினான். அவனாகவே கலந்து, “இந்தா ரங்கா...” என்று கையில் வைக்கையில், தந்தையின் குரல் கேட்ட ஜோகி எழுந்து வந்தான்.
“எங்கே எழுந்து வந்தாய்? போடுப் படுடா” என்று தாய் விரட்டினாள்.
“ஏன் விரட்டுகிறாய்? வரட்டுமே! இங்கே உட்கார், ஜோகி” என்றான் தந்தை.
இரவில் எங்கோ ஒளிந்திருந்த ரங்கனை அழைத்து வந்து தந்தை உணவு கொடுப்பது அவனுக்குப் புதுமையாக இருந்தது. தன்னை அறியாமல் அவன் கையும் அந்தக் களிக்கு நீண்டது. லிங்கையா, மகனின் கையிலும் ஒரு கவளம் வைத்தான். தானும் உண்டான்.
“இப்படி ஒரே கலத்தில் உண்பது போல, என்றும் பிரியாமல் பகிர்ந்து உண்டு இருக்க வேண்டும். ஜோகி, ரங்கா இரண்டு பேரும் பிரிந்தால் சங்கடம், துன்பம் தெரியுமா?”
இருவரும் தலையை ஆட்டினார்கள்.
இருவருக்கும் கைகழுவ நீரூற்றிவிட்டு, அவன் கலத்தையும் கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான்.
“சோறு வைத்தேன். உண்ணவில்லை; களியை உண்கிறீர்களே?” என்று மாதி சொல்லிக் கொண்டே முன்னே வந்து நின்றாள்.
“அப்போது இறங்கவில்லை! ரங்கா, ஜோகி இரண்டு பேரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள்!”
இருவரையும் நெருங்கப் படுக்க வைத்துவிட்டுக் கம்பளியால் போர்த்தினான்.
“ஈசுவரரை நினைத்துக் கொண்டு தூங்குங்கள்.”
உள்ளத்தில் நிறைவுடன் அவன் வெளியே நடந்த போது விளக்கை வைத்துக் கொண்டு அவனருகில் நின்ற மாதி கதவைத் தாழ்போட வெளியே வந்தாள்.
“இங்கே வா” என்று அவளை வெளியே அழைத்தான் லிங்கையா. புறமனைக்குள் போய் நின்ற அவனிடம் என்ன சேதியோ என்று அவள் நெருங்கினாள். லிங்கையா ஒன்றுமே சொல்லவில்லை. மடியை அவிழ்த்து, காப்பை அவளிடம் நீட்டினான். “நான் எருமையைப் பார்க்கப் போகையிலே பளிச்சென்று கீழே கிடந்தது. எடுத்து வந்தேன். கீழே நழுவ விட்டுவிட்டு, ஒன்றும் அறியாத குழந்தைகள் மேல் பழியைப் போட்டுவிட்டாயே?”
மாதி ஒன்றுமே பேசாமல் காப்பைக் கையில் வாங்கிக் கொண்டாள். “ரங்கனை இந்நேரத்தில் எங்கே பார்த்தீர்கள்?” என்றாள்.
“சின்னம்மைக்குப் பயந்து கொண்டு பரணியிலே பசியோடு சுருட்டிக் கட்டிக் கொண்டு படுத்திருந்தான். அழைத்து வந்தேன். நீ ஒன்றும் சொல்லாதே. குழந்தைகள் மனசு பால்; பெரியவர்கள் பேச்சுப் புளியாக இருக்கக் கூடாது. மனம் கெட்டு விடும்.”
மாதி ஒன்றும் பேசவில்லை.
“வரட்டுமா? கதவைப் போட்டுக் கொள்!”
கம்பளியை உதறிப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். அண்ணனின் இசை ஓய்ந்து விட்டது. இரவு நிர்மலமாக இல்லை. பனி என்னும் கல்லாத் துகிலால் தன்னை மூடி மறைத்துக் கொண்டிருந்தாள் மலையன்னை. விர்ரென்று இறங்கி வருகையில் அவன் மனசில் நிம்மதி இருந்தது என்று கூறி விட முடியாது. ஏடு படிந்தாற் போன்ற திருப்திதான். வேற்றுமையில்லாமல் மாதி முழு மனதுடன் ரங்கனை மகனாகப் பாவிக்க வேண்டுமே? அன்னை இல்லாத குறை எத்தனை பெரிய குறை! அண்ணனின் இசை, ஓயாத இசையாய், மாயாத அலைகளாய், இனிமையின் மெல்லிய பாகுக்கம்பிகள் போன்ற உருவத்துடன் செவியூடு சென்று இருதயத்தைத் தொட்டு விட்டாற் போல் ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று உடனே.
அவன் தனிப்பிறவி; உலகக் கவலை ஒட்டாமல், இன்பங்களை மட்டும் பற்றிக் கொண்டு வாழும் தனிப்பிறவி. மண் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், இல்லை; மனைவி ஒட்டாத நீராகப் பிரிந்து போனாலும் இல்லை. மகனை மட்டும் எப்படிக் கவனிக்கப் போகிறான்?
ஆனால் அந்த இசையின் கூடுதலால், அவன் தட்டு, ஒன்றுமில்லாமல் உயர்ந்துதான் நின்றது. அத்தனை பொறுப்புகளையும் செல்வங்களையும் சுமந்தும் தன் தட்டு, பாதாளத்தில் கிடப்பது போல் உணர்ந்தான். அவன் குடும்பத்துக்கு ஒரு மகன் வருவது சுமையாகுமா? நல்ல மகனாக ஆக்கிவிட்டால் அவனும் ஒரு செல்வம் அல்லவா?
ஏன், உலகின் கண்களுக்கு மட்டும் பிரிந்து நாடகமாடுவானேன்? பிரிவில் என்ன இருக்கிறது? ஹட்டி நிலங்களுக்கே காவல் ஒத்து முறைபோட்டு, கடமையைப் பகிர்ந்து எல்லோரும் ஆற்றவில்லையா? பணிபுரியும் தொரியன் உடல் நலக்குறைவால் படுத்துவிட்டால், ஆளுக்குக் கொஞ்சம் பங்கிட்டு அவனுக்கு உணவளிக்கவில்லையா? ஒரு குடும்பம் என்று மனசில் கொண்ட பிறகு, மண்ணை மட்டும் ஏன் பிரித்து வேற்றுமை கொண்டாடித் தரிசாகப் போட வேண்டும்?
அண்ணனுக்காக, ரங்கனுக்காக, மற்ற குழந்தைகளுக்காக் அந்த மண்ணிலும் விளைவு பொன்னாகப் பாடுபட வேண்டும். தை பிறந்து பெரிய பண்டிகை கழிந்ததும், முன்பாக, ரங்கனுக்கு முறைப்படு பால் கறக்கும் உரிமையைத் தரும் சடங்கை நிறைவேற்ற வேண்டும். பின்னே, மாசி நன்னாளில் மாதலிங்கர் கோயில் முன் அழல் மிதித்துப் புனிதமான பின், விதைக்கும் திருநாளில், அந்தப் பூமியிலும் விதைத்து விடப் பண்படுத்த வேண்டும்.
இவ்விதமெல்லாம் தனக்குத்தானே தீர்மானம் செய்து கொண்டவனாக ஜோகியின் தந்தை, காவற் பரணை நெருங்கினான்.
பூம்... பூம்... பூம்... என்று ஊதுகுழலெடுத்து ஊதியவனாய்க் கையில் பந்தத்துடன் வந்து கொண்டிருந்தான் மல்லன்.
தன் தீர்மானங்களுக்கு அது வெற்றிச் சங்கு போல் ஒலிப்பதாக எண்ணிக் கொண்ட ஜோகியின் தந்தைக்கு, மகனைப் பெற்ற மகிழ்வில் நிறைவோடு அடங்கிய அன்னையின் மனசைப் போல் நிறைவு உண்டாயிற்று.
காவலுக்கு வந்து அன்று போல் ஜோகியின் தந்தை ஒரு நாளும் கண் அயரவில்லை. கடனும் கவலையும் வஞ்சமும் வறுமையும் வருத்தும் உடலை ஏறிட்டுப் பார்க்காத நித்திரா தேவி, அவனை அன்று பரிபூரண நிம்மதியில் தாலாட்டிக் கண்ணயரச் செய்து விட்டாள். அந்த உறக்கத்தினூடே பின்னிரவில் அவன் ஒரு கனவு கண்டான்; கவலையில் பிறந்த கனவல்ல அது; நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, பொல்லா மனம் சிருஷ்டித்த மாயமல்ல அது. அவனுக்கு அது இறைவன் அருள் கொண்டு கூறிய நற்செய்தியாகத் தோன்றியது.
பெருநெருப்பு ஒன்று கீழ்த்திசையில் தெரிகிறது. செஞ்சோதியாய், சொக்க வைக்கும் ஒளிப்பிழம்பாய், இருளைக் கரைக்கவல்ல அனற் குவையாய்த் தோன்றிய அந்த மண்டலத்தில், முதியவர் ஒருவரின் முகம் தெரிந்தது. கம்பீரமான அகன்ற நெற்றி; வீரத் திருவிழிகள்; உயர்ந்த மூக்கு, சாந்தம் தவழும் புன்னகை இதழ்கள்; செவிகளில் மணிக்குண்டலங்கள் ஒளிர்கின்றன; நெற்றியிலே செஞ்சந்தனம் துலங்குகிறது. அந்த முகத்தை வைத்த கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று தோன்றியது லிங்கையாவுக்கு. அறிவும் ஞானமும் பழுத்த அந்த முகம் தன்னை அழைப்பதாகவும், ஓயாது அழைத்துக் கொண்டே இருப்பதாகவும் தோன்றியது. யார் இவர்? அழற்கடவுளோ? அல்லது அழலேந்தும் பெம்மானின் ஒரு தோற்றமோ?... இல்லை தருமதேவனோ? காலதேவனோ? ஒளித் தெய்வமோ?
அவன் அந்த முகத்தின் காந்தியில் லயித்துக் கிழக்கு நோக்கியே செல்ல ஆரம்பித்தான். சிறி து நேரம் சென்ற பின்னரே, அவனுக்குத் தான் மட்டும் நடக்கவில்லை, கூடச் சிறு பையன் ஒருவனையும் அழைத்து வருகிறோம் என்று புலனாயிற்று. அவன் ரங்கன் என்பது அவன் மனசுக்குத் தெரிந்தது. பையன் சாதாரணமான கச்சையும், மேற்போர்வையும் கம்பளியுமாக இல்லை. உள்ளாடை, மேலாடை இரண்டும் அணிந்திருக்கிறான். தலைமுடியை உச்சியில் முடிந்து கொண்டு நெற்றியில் சந்தனப் பொட்டுடன் விளங்குகிறான். மேலாடை நழுவி நழுவி விழுவதால் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொள்கிறான்.
“வேகமாக வா, ரங்கா!” என்று கூறிய வண்ணம் லிங்கையா திரும்பிப் பார்க்கிறான்.
ஆ! ரங்கன் என்று நினைத்தேனே? சந்தனப் பொட்டணிந்த பால் வடியும் இந்த முகம் ஜோகிக்கு உரியதல்லவோ?
“நீயா வந்தாய்? ஜோகி, நெருப்புச் சுடும். நீ சிறியவன் போ” என்றான் அவன்.
“சுடாது. ஹெத்தே சுவாமியை நானும் பார்த்துக் கும்பிட வருவேன் அப்பா” என்று குதித்து நடக்கிறான் குழந்தை.
“நீ வேண்டாம் ஜோகி, ரங்கன் தான் வேண்டும். ரங்கன் எங்கே? ரங்கா?” கையை உதறிவிட்டு அவன் திரும்புகிறான்.
கீழ்த் திசையில் அடர்ந்த காட்டுச் சோலைகளிடையே புகுந்து அந்த ஒளிக் கதிரோன் உலக பவனிக்குப் புறப்பட்டு விட்டான். மாதன், சுருட்டும் கையுமாக வெயிலில் வந்து குதித்துக் கொண்டிருந்தான்.
முன் இரவின் இன்னிசை நினைவுக்கு வர, லிங்கையா புன்னகையுடன் எதிரே வந்தான்.
“வா தம்பி, காவலுக்குப் போய் வருகிறாயா? ஆமாம் எருமை கால் ஒடிந்து போச்சாமே? அப்பப்பா! என்ன பெண் பிள்ளை தம்பி, வீட்டில் மொலு மொலு வென்று உயிரை எடுக்கிறாள்!” என்றான் கசப்புடன் அண்ணன்.
இந்த வார்த்தைகளை உள்ளிருந்தே கேட்ட நஞ்சம்மை, அம்பாய் பாய்ந்து வந்தாள்.
“நானா உயிரை எடுக்கிறேன்? இந்த வீட்டில் எந்தப் பெண்பிள்ளை இருப்பாள்? ஓர் உப்புக்குக் கூட உதவாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அவர்கள் சிரிக்கிறார்கள். உதவாக்கரைப் பயல், நேற்றுப் போனவன் தலையே நீட்டவில்லை. குழந்தைக்கு வேறு காய்ச்சல். வீட்டில் ஒரு பண்டமில்லை. விளக்குக்கு எண்ணெய் இல்லை...”
அவள் ஓயாமல் நீட்டியதற்கும் அண்ணன் சிரித்தான்.
“மலையிலிருந்து விழும் அருவி கூட நிற்கும் தம்பி, இவள் வாய் நிற்காது. ரங்கன் பயல் எங்கே? நீ கண்டாயா?” என்றான்.
“இரவு பரணியிலே படுத்திருந்தான். வீட்டுக்கு அழைத்து வந்து சோறு போட்டேன். அங்கேதான் தூங்குவான். விளையாட்டுப் பையன். பொறுப்பு வந்துவிட்டால் சரியாய்ப் போய்விடுவான். ஒரு நாள் பார்த்து, அவனுக்கு பால் கறக்கும் உரிமையைத் தரும் சடங்கைச் செய்து விட வேண்டும்” என்றான் லிங்கையா.
உடனே அண்ணன் மனைவி பாய்ந்தாள்.
“தம்பிக்காரர் கிண்டல் செய்கிறார், கேளுங்கள்! நேரே சிரிப்பதைக் காட்டிலும் சிரிக்காமல் சிரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! எனக்கு நாவைப் பிடுங்கிக் கொள்ளத் தோன்றுகிறது. இந்த வீட்டுக்கு ஏன் வந்தோம் என்று இருக்கிறது. எருமை ஒன்றையும் பிள்ளை கீழே தள்ளித் தீர்த்து விட்டான். கையாலாகாத உங்களிடம் சடங்கு செய்யலாம் என்று சொல்கிறாரே!”
“இப்படியெல்லாம் ஏன் தப்பாக நினைக்கிறீர்கள் அண்ணி? நாம் வெவ்வேறு வீடு தானே ஒழிய, வெவ்வேறு குடும்பம் அல்ல. இது வரையிலும் அப்படி நினைத்திருந்தாலும் இனியும் அப்படி நினைக்க வேண்டாம். என்னிடம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். நம்மிடம் இருக்கிறதென்று சொல்லுங்கள். ரங்கன் வேறு, ஜோகி வேறு அல்ல; நம் கொட்டிலில் மாடுகள் இல்லையா?” என்றான் லிங்கையா.
தம்பியின் பேச்சில் அண்ணன் உருகிப் போனான். அவன் தன் பலவீனத்தை அறிவான். ஆனால் அதை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமின்றியே அவன் பலவீனத்துக்கு அடிமையாகி விட்டான்.
“தம்பீ...!” என்று உணர்ச்சியுடன் தம்பியின் கைகளைப் பற்றினான். அவன் கைகள் நடுங்கின. அந்தக் கரடுமுரடான முகத்தில் அவன் கண்டத்திலிருந்து வரும் இசை போல் கண்ணீர் உருகியது.
நஞ்சம்மை இதுவும் நிசமாக இருக்குமோ என்று அதிசயித்து நின்றாள்.
“கூலி வைத்தேனும் எல்லாப் பூமியையும் திருப்புவோம். அண்ணி, நீங்கள் இனிமேல் வீட்டுத் தொல்லையை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நம் வீடு வந்து எடுத்துப் போங்கள்; இல்லையேல் சொல்லி அனுப்புங்கள்!” லிங்கையா இவ்விதம் மொழிந்துவிட்டுத் தன் வீட்டுக்குள் சென்றான். பரபரப்புடன் காலைப் பணிகளில் ஈடுபடலானான்.
காலைப் பணிகளை முடித்து விட்டு அவன் மறுபடி வெளியே கிளம்புமுன் மாதி அவனிடம் வந்தாள். ரங்கனைப் பற்றிப் பேசத்தான்.
“அவர்கள் பையனை இங்கே வைத்துக் கொள்வது சரி; நஞ்சக்கா பேசுவது நன்றாக இல்லை. அவர்கள் பையனை நாம் அபகரித்துக் கொள்கிறோமாம். தண்ணீருக்குப் போன இடத்தில் சத்தம் போடுகிறாள். ஒரு குளம் வறட்சி என்றால் இன்னொரு குளத்துத் தண்ணீரை ஊற்ற முடியுமா? நமக்கு என்ன?”
ஜோகியின் தந்தை, மனைவியை நிமிர்ந்து விழித்துப் பார்த்தான். அவள் அந்தப் பார்வைக்கு அடங்குபவளாக இல்லை.
“பெரியவரே பார்த்து முன்பே அவர்களை வேறாகப் பிரித்திருக்கிறார். இப்போது நீங்கள் ஏன் மாற்ற வேண்டும்; அவர்கள் பூமியில் நீங்கள் பாடுபடவும் வேண்டாம்; அவர்கள் பிள்ளையைச் சொந்தமாக நம் வீட்டில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம்.”
“மாதி!” என்றான் லிங்கையா; “நீ என்ன என்றுமில்லாமல் பேசிக் கொண்டு போகிறாய்? அண்ணியின் பேச்சுக்கு நீ ஏன் வகை வைக்கிறாய்? அண்ணி அந்த வீட்டில் நெடுநாள் இருப்பாள் என்று எண்ணுகிறாயா நீ?”
லிங்கையாவுக்கு வேதனை மண்டிக் குரலில் படிந்தது.
“ஒருநாள் அண்ணி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி விடுதலை வாங்கிப் போய் விடுவாள் என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது மாதி!”
“நாமே பாடுபட்டு எத்தனை நாள் அந்தக் குடும்பத்துக்கு உழைக்க?”
“என்ன செய்வது? காக்கைதான் கூடு கட்டும். குயில் கூட்டு கட்டுவதில்லை. குயில் கூடு கட்டுவதில்லை என்று காக்கை ஒரு குயில் குஞ்சைக் கூட வளர்க்காமல் விடுவதில்லை. மாதி, தொதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மண்ணில் பாடுபடாதவர்கள். அவர்கள் மலையில் நாம் வந்து குடியிருக்கிறோமே என்ற காரணத்துக்காக, நாம் இன்னும் அறுவடைக்கு அறுவடை அவர்களுக்குத் தானியம் கொடுக்கிறோம். சட்டியும் பானையும் அரிவாளும் கொட்டும் ஈட்டியும் செய்து நமக்குத் தந்து, நம் வாழ்வுக்கும் சாவுக்கும் வந்து மேளமும் தாளமும் பாட்டும் அளிக்கும் கோத்தருக்கு நாம் தானியம் கொடுக்கிறோம். காட்டுக் குறும்பரிடம், மந்திரம் மாயம் என்று பயந்து கொண்டு அவர்கள் கேட்பதெல்லாம் கொடுக்கிறோம். மனையில் வாழும் மற்றவரிடமெல்லாம் சகோதர முறை கொண்டு வாழ்கையில், அண்ணன் என்ன தீங்கு செய்தான். அவன் குடும்பத்தைப் பட்டினிப் போட? இந்த வீட்டில் முதலில் பிறந்த அண்ணன் ஐயனுக்குச் சமானம். அவனை நான் பட்டினி போடுவதா? சொல்லு மாதி?”
மாதி வாயடைத்து நின்றாள்.
“சரி, சுடு தண்ணீர் போட்டு வை, நான் மணியக்காரர் வீடு வரையில் போய் வருகிறேன்”என்று லிங்கையா பணித்து விட்டு வெளியேறினான்.
அந்தச் சாரியில் மறு கோடி வீடுதான் கிருஷ்ணனின் தாத்தா கரிய மல்லரின் வீடு. ஊருக்குப் பெரியவர். அவருக்கு வாரிசாக மகன் இல்லை. இரு மனைவிகள் கட்டியும் மூவரும் பெண்மக்களே; மூவரும் மணமாகி கணவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். இளையவளை, அடுத்த மணிக்கல் ஹட்டியில் தான் மணம் செய்து கொடுத்தார். அவளுடைய மகனான கிருஷ்ணன் தான் தாத்தாவின் அருமைப் பேரனாக, சர்ஜ் கோட்டும் தொப்பியும் அணிந்து, கீழ்மலை மிஷன் பள்ளிக் கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஊரில் ஒரு தவறும் முற்றிச் சச்சரவு உண்டாகாதபடி, ஓர் அணைப் போல் இருந்து வந்த அதிகாரி அவர். அவருடைய அணையில், அந்த மரகத மலையும், மணிக்கல் ஹட்டியும், அடுத்துச் சுற்றியுள்ள சின்னக் கொம்பை, கீழ்மலை முதலான குடியிருப்புகளும் அடங்கி, அவர் வாக்குக்கு மதிப்பும் செல்வாக்கும் வைத்திருந்தன. சுற்றியுள்ள அந்த ஐந்தாறு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் பொதுவான கோயில்கள், பொதுவான விழாக்கள் உண்டு. விதைக்கவும், விதைத்த பலனை அநுபவிக்கவும், விழாக்களுக்கு நாள் நிச்சயிக்கவும் கூட்டம் போட்டுத் தீர்மானங்கள் செய்து கொள்வார்கள்.
கரியமல்லரை ஜோகியின் தந்தை காணவந்த போது, அவர் வாசல் வராந்தாவில், தொரியன் கயிற்றுக் கட்டிலுக்குக் கயிறு போடப் பார்த்துக் கொண்டிருந்தார்.
லிங்கையாவைக் கண்டதுமே அவர், “நல்லாயிருக்கிறாயா? வா! எருமை விழுந்து காலொடிந்தது எப்படி இருக்கிறது?” என்று விசாரித்த வண்ணம் புறமனைக்குள் வரவேற்றார்.
“அப்படியேதான் இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு முக்கியமான சேதி சொல்ல ஆலோசிக்க வந்தேன்” என்றான் லிங்கையா.
“அப்படியா? நானுங்கூட ஒரு முக்கிய காரியமாக உனக்குச் சொல்லியனுப்ப நினைத்திருந்தேன். உட்கார்.”
பொதுவாக, பயிரைக் குறித்து விளைவைக் குறித்து, அறுவடையைக் குறித்து அவர்கள் மேலெழுந்தவாரியாகப் பேசிக் கொண்டிருக்கையில், கிருஷ்ணனின் தாய் வந்து லிங்கையாவைக் குசலம் விசாரித்தாள். பருக மோர் கொண்டு வந்து வைத்து உபசரித்தாள்.
“அண்ணன் மணிக்கல் ஹட்டிப் பக்கம் வருவதே இல்லை!” என்று குற்றம் சாட்டினாள்.
“வந்து மாசக் கணக்கில் உட்காருவேன். விருந்தாக்கிப் போடவேண்டும்” என்றான் ஜோகியின் தந்தை நகைத்த வண்ணம்.
“வருஷக் கணக்கில் வந்து உட்கார்ந்தாலும் தங்கை சளைக்க மாட்டாள்” என்று பதிலுக்கு அவள் நகைத்தாள்.
லிங்கையா, பெரியவரைப் பார்த்தவண்ணம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடங்கினான்.
ஏறக்குறைய அவன் வாயெடுக்கும் முன், கரியமல்லரே! “நானே முக்கியமாகௌன்னைப் பார்க்க இருந்தேன், தம்பி. நம்மையன் கோயில் நெருப்பைக் காக்க, அந்தக் கீழ்மலைப் பையன் வந்து ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. அவன் இனிக் கல்யாணம் கட்டிக் கொண்டு வீட்டுக் கொடியைக் காக்க வேண்டும் என்று அவன் மாமன் நேற்று என்னிடம் வந்து அபிப்பிராயப்பட்டான். அடுத்தபடியாக ஐயன் நெருப்பைக் காக்க ஒரு பையன் வரவேண்டுமே! சீலமுள்ளவனாய், பொய் சூது அறியாதவனாய், இறைவர்க்குரிய காணிக்கைகளைத் தனக்கே சொந்தமென்று எண்ணும் பேராசை இல்லாதவனாக, நினைத்த போது உண்ணும் பெருந்தீனிக்காரனாக இல்லாதவனாக நல்ல பையனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! உன் பையன் ஒரு குறிஞ்சி ஆகவில்லை?” என்று கூறி நிறுத்தினார்.
ஜோகியின் தந்தை, கண்ட கனவையும், தன் யோசனையையும் அவற்றை வெளியிடுமுன், பெரியவர் வாயிலே வந்த செய்தியையும் எண்ணி எண்ணி உள மகிழ்ந்தான். எத்தகைய சுப சூசகங்கள்!
ஆனால் ரங்கனுக்குப் பதிலாக பெரியவரும் ஜோகியையே குறிப்பிட்டுக் கேட்டதுதான் மலரிடையே ஒரு சிறு முள்ளென உறுத்தியது அவனுக்கு. “இல்லையே! ரங்கனுக்குத்தான் சரியான பிராயம். நானும் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்” என்று லிங்கையா கனவை விவரிக்கையில், இடையிடையே கரியமல்லர் தம்மை மறந்து தலையை ஆட்டினார். கண்கள் கசிய, கீழ்த்திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்.
லிங்கையா, கனவில் கண்ட ஐயனையும் ஜோதியையும் விவரித்ததுடன், கையில் பிடித்துச் சென்ற பாலகன் ஜோகி என்பதை மாற்றி, ரங்கன் என்று கூறினான்.
கரியமல்லர் கண்களை மூடியவராய் அமர்ந்திருந்தார்.
அந்த மலைப் பிராந்தியத்தில் முதல் முதலாக வந்து ஊன்றிய முன்னோரான ஹெத்தப்பரின் நினைவுக் கோயில் அது. அந்தப் பக்கத்து மலைக்காரர் அனைவரும் அவருடைய வழி வந்தவர்கள் என்பது நம்பிக்கை. இளமையின் விகாரம் தோய்ந்த எண்ணம் முளைக்காத பாலப் பருவத்துப் பையனே, அந்தக் கோயிலின் நெருப்பைக் காக்கும் புனிதமான பணிக்கு உகந்தவனாவான். அந்த நெருப்பே, அந்தக் கோயிலுக்குடைய தெய்வம். ஊரார் காணிக்கையாக அளிக்கும் எருமைகளும், தானியங்களும் தீயைக் காக்கும் பையனுக்கு உரியவைதாம் என்றாலும், அவன் எந்தவிதமான ஆடம்பர சுகபோகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. வீடு சுற்றம் யாவும் மறந்து, அந்தப் புனித நெருப்பைப் போற்றும் பணி ஒன்றே அவனுடையது. ஒரு நாளைக்கு ஒரு முறையே அவன் உண்ணலாம். கட்டில் மெத்தை முதலிய சுகங்களை அவன் மேனி நுகரக் கூடாது. தன் ஒரு வேளை உணவையும் அவன் தானே பொங்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கோயிலையும், தெய்வ மைதானத்தையும் தவிர, அவன் வேறு எந்த இடத்துக்கும் முன் அறிவிப்பின்றிச் செல்லலாகாது. பருவ மங்கையர், அந்தக் கோயிலின் எல்லைக்குள் எக்காரணத்தை முன்னிட்டும் வரமாட்டார்கள். அப்படி வந்து விட்டாலும், ஐயனின் நெருப்பைக் காப்பவன், அவர்களிடம் உரையாடக் கூடாது. இத்தகைய ஒழுக்கங்களுடன் ஒரு சிறுவனைத் தேர்வது எளிதாமோ?
மௌனத்தைக் கலைத்தவராய் கரியமல்லர், “கோயிலுக்கு முன் இன்று மாலை பஞ்சாயத்துக் கூடுவோம். எல்லோருக்கும் செய்தி அனுப்புகிறேன்” என்றார்.
“ஐயனே மொழிந்த அருள் வாக்காக எனக்குத் தோன்றுகிறது” என்றான் லிங்கையா.
“கலந்து ஆலோசிப்போம், கனவென்று சொல்லும் போது எவரும் அதை மறுக்க மாட்டார்கள்.”
“பையன் இன்னும் பால் கறக்கும் உரிமை பெறவில்லை. அடுத்த சோமவாரம் அதையும் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறோம். பெரியவர்களாய் நீங்கள் ஆசி கூறி நடத்தி வைக்க வேண்டும்.”
“செய்யலாம். எல்லாம் இரிய உடைய ஈசுவரனின் செயல். அண்ணன் வீடில் இருக்கிறானா லிங்கா?”
“நான் அவரிடங்கூடக் கனவைச் சொல்லவில்லை. ஐயனின் பணி பையனுக்குக் கிடைக்கும் பாக்கியம் அல்லவா? அண்ணன் என்ன மறுக்கப் போகிறாரா? வீடு இரண்டாக இருந்தாலும் வெவ்வேறாகத் தோன்றினாலும் அண்ணனும் நானும் ஒன்றுதான்.”
“அது எனக்குத் தெரியாதா? நீ கிடைக்காத தம்பி.”
“நான் வரட்டுமா? மாலையில் பார்க்கலாமா?”
“ஆகட்டும். நீயும் பையனைக் கேட்டு, அண்ணனையும் வீட்டில் கேட்டுச் சொல். பிறகு எல்லாம் ஏற்பாடு செய்து விடலாம்” எற்னு கூறி, கரியமல்லர் அவனை உடன் வந்து வாசலில் வழியனுப்பினார்.
லிங்கையா அப்படியே வீடு திரும்பவில்லை. எருமையைப் பார்த்து வரச் சரிவின் பக்கம் நடந்தான்.
அவன் பகலில் வீடு திரும்புவதற்குள், பெண்டிர் வாயிலாக, செய்தி காட்டுத் தீ எனப் பரவி விட்டது. மாதிக்கு இது எதிர்பாராத செய்தியாக இருந்தது. ஒருவிதத்தில் அவளுக்குத் திருப்தியே. ஐந்தாறு ஆண்டுகள் அப்படி ஒரு ஒழுங்கில் இருந்தால், பையன் நல்லவனாகத் தலையெடுப்பான். காணிக்கைகளிலிருந்து, ஏதோ ஒரு பகுதியேனும் அவனுக்கென்று கிடைக்கும். வேலை வெட்டி செய்யாமல் சாப்பிட விரும்பும் குடும்பத்தினருக்கு இது ஒரு நல்ல வாய்ப்புத்தானே?
ரங்கன் உண்டைவில்லும் கையுமாக, அருவிக்கரைப் புதர்களில் நின்று விளையாடிக் கொண்டிருக்கையில், ஜோகியும் பெள்ளியும் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டவராகப் பரபரத்து ஓடி வந்தார்கள்; உரைத்தார்கள். கை அப்படியே நிலைத்தது. கண்களையே அவன் கொட்டவில்லை.
“என்னையா? ஹெத்தப்பா கோயிலுக்கா?”
“ஆமாம்; அப்பனுக்கு நேற்று இரவு இரியர் கனவில் வந்து சொன்னாராம். திங்கட்கிழமை, எருமை கறக்க ‘ஹொணே’ எடுத்து உன்னிடம் கொடுக்கப் போகிறார்கள்” என்றான் ஜோகி.
அதிர்ந்தவனாக நின்ற ரங்கன், “நான் மாட்டேன்” என்றான் சட்டென்று.
“அதெப்படி? ஐயன் கனவில் நீதானே வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம்?” என்றான் ஜோகி.
“ஹம், பொய்; நான் மாட்டேன்” என்றான் ரங்கன்.
“நேற்று நீ கோயிலில் இரியர் இல்லை என்று சொன்னாய். எருமை விழுந்து காலை உடைத்துக் கொண்டது. இப்போது கனவில் ஐயனே வந்து சொல்லி இருக்கையில் நீ மாட்டேனென்று எப்படிச் சொல்வாய்?” என்றான் பெள்ளி.
“நான் மாட்டேனென்றால் என்ன செய்வாராம்?” என்றான் ரங்கன்.
“அபசாரம் கேடு விளையும்” என்று பெள்ளி பயமுறுத்தினான்.
ரங்கன் செய்வதறியாமல் நின்றான்.
அவனுக்கு யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் பொங்கி எழுந்தது; கோயிற்பணியின் கட்டுப்பாடுகளை அவன் ஓரளவு அறிவான். ஒரே முறை அவன் சமைத்து உண்ண வேண்டும். அதுவுங் கூடச் சட்டியை ஒரே ஒரு தரந்தான் கவிழ்க்க வேண்டும். எவ்வளவு விழுகிறதோ இலையில் அதையே உண்ண வேண்டும். கோயிலின் எல்லையைத் தாண்டி செல்லும் சுதந்தரம் கிடையாது.
அவனுள் இந்த நினைவுகள் எழும்பியதும் கிலி படர்ந்து விட்டது. சிற்றப்பா சூழ்ச்சியா செய்துவிட்டார்? அன்பாக உள்ளவர் போல் பேசியதெல்லாம் நடிப்பா? சுற்றியுள்ள கிராமங்களை எல்லாம் விட்டு, எத்தனையோ பையன்களை விட்டு, அவனைத் தேர்ந்தெடுத்தது அநியாயம்.
எத்தனை ஆண்டுகளோ! சிறை, சிறை வாழ்வு, மாட்டேனென்று சொல்லக் கூடாதா?
வெளிக்கு அவன், ‘இரியரும் இல்லை, ஒன்றும் இல்லை’ என்று வீம்புக்குச் சொன்னாலும், அடி மனசில் அச்சப் படபடப்புத் துடித்தது. எருமைக்குக் கேடு வந்தது கிடக்கட்டும்; முதல் நாள் அவன் அப்படிச் சொன்னதால் தான் இரிய உடையார் சிற்றப்பனின் கனவில் வந்து அவனையே கேட்டு, அவனுக்குத் தண்டனை கொடுக்கிறாரோ!
துயரமும் ஏமாற்றமும் கோபமும் அவன் கண்களில் நீரை வருவித்தன. ஆத்திரத்துடன் குத்துச் செடிகளை ஒடித்தெறிந்தான். அழகாகப் பூத்திருந்த மஞ்சள் வாடாமல்லிகை மலர்களைக் கிள்ளி அருவியில் போட்டான். இருளானாலும் பரவாயில்லை என்று முதல் நாள் தப்பி ஓட முயன்றவன் போயிருக்கலாகாதா? காப்பு வேறு கையில் இருந்தது. பொல்லாத வேளை, பரணில் வந்து தான் படுத்தானே! வேறு எவரேனும் காவல் இருந்திருக்கக் கூடாதா? காப்பு, சிற்றப்பன் கையில் சிக்கிவிட்டது. இனி அதுபோல் தப்பிச் செல்லும் சந்தர்ப்பம் வருமா? கையில் ஒரு வெள்ளிப் பணங்கூட இல்லாமல் ஒத்தைக்கு ஓடி விடலாமா? எப்படிச் செல்வது?
ஜோகி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். யோசனை செய்தவன் போல், “உன்னையே பிடித்ததானால் தான் இரிய உடையார் உன்னைத் தேர்ந்திருக்கிறார். ஐயன் நெருப்பைக் காத்தால் தானியமெல்லாம் வரும், பூமி கொத்தாமலே விளையும். உன்னிடமே ஈசுவரனார் கனவில் வந்து பேசுவார்” என்றான்.
ரங்கன் அன்று முழுவதும் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான். அப்போது மாட்டேன் என்று அவன் மறுத்தால் அத்தனை பேரும் ஒரு முகமாக அவனிடம் எதிர்ப்புக் காட்டுவார்கள். அவன் தப்பி ஓடுவதே அசாத்தியமாக ஆனாலும் ஆகிவிடும். பால் கறக்கும் சடங்குக்குக் கூட்டமாக எல்லாரும் வருவார்கள். பால்மனையில் தான் சிற்றப்பா வெள்ளிப் பணங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அவன் அறிவான். அன்று எப்படியேனும் சில வெள்ளிப் பணங்களை எடுத்துக் கொண்டு ஓடி விடலாம்.
மறுநாள் மாலையில், சுற்றுப்புறக் குடியிருப்பின் பிரதிநிதிகளான தலைவர்களும் பெரியவர்களும் கோயில் மைதானத்தில் கூடினார்கள். கோயிலின் முன்னுள்ள மரத்தடியில் மேடையில் தலைவராகக் கரியமல்லர் வீற்றிருந்தார். அப்போது ரங்கன் நீராடி, சுத்தமான உள்ளாடையும் மேலாடையும் தரித்து, தந்தை ஒரு புறமும், சிறிய தந்தை ஒரு புறமுமாக அமர்ந்திருக்க, நடுவில் இருந்தான்.
கரியமல்லர் எழுந்து விஷயத்தை உரைத்தார்; “ஐந்து ஊர்களின் பிரதிநிதிகளாய் வந்திருக்கும் பெரியவர்களே, இரிய உடையார் முன் வணங்கி, இன்று கூட்டத்தைக் கூட்டியிருப்பதற்குக் காரணத்தை விளக்குகிறேன். ஐயன் கோயிலில் புனித நெருப்பைக் காக்க அமர்ந்த பையன் தேவனுக்கு, வரும் மாசம் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அவன் குலமும் குடும்பமும் வளர, அவன் இதுவரை காத்து வந்த இறைபணியை விட்டு, அவனுக்கென்று உள்ள கடமையை மேற்கொள்ள வேண்டும்; இல்லையா?”
“ஆமாம், ஆமாம்” என்று நாற்புறங்களிலிருந்து ஒலிகள் இணைந்தன.
“இறைவரின் நெருப்பைக் காக்கும் பணி சாமானியமானது அல்ல. வாக்கும் மனமும் தூயவையாய், கோயில் எல்லையைப் புனிதமாக்கிக் கொண்டிருக்கும் இப்பணிக்கு, இதுவரையில் இருந்த தேவன், ஒருவிதமான அப்பழுக்குக்கும் இடமில்லாமல் பணி செய்து, நம் கிராமங்களும் பெற்றோரும் பெருமைப்படும்படி நிறைவேற்றி விட்டான். இது போல் அடுத்த பையனை எப்படித் தேர்ந்தெடுப்போம் என்று நமக்கெல்லாம் கவலையாக இருந்து வந்தது. ஆனால், குழந்தைகளாகிய நம்மை, நம்முடைய ஐயன் சோதனை செய்யவில்லை. நேற்றிரவு வழியைக் காட்டிவிட்டார். அவரே பையனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மரகத மலையில், சிவச் செல்வரான தருமலிங்கரை அறியாதவர் உண்டோ?”
“இல்லை” என்ற ஒலி எழுந்தது.
“உண்மையான சிவ பக்தர் அவர். நம்முடைய முந்நூறு பாவங்களில் ஒன்றையும் மனசால் நினையாமல் அரன் திருவடி அடைந்தவர். அவருடைய வழியில் வந்த பையனை, மூத்த குடியின் மூத்த புதல்வனை, ஐயன் தமக்குத் தேர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆணைக்கு மறுப்புக் கூற நாம் யார்?”
“பையன் புனிதப் பணிக்கு வேண்டிய எல்லாவித அம்சங்களையும் கொண்டவனாக இருக்கிறான். ஒரு குறிஞ்சியும் ஓராண்டும் கடந்தவன். நம் மாதண்ணனின் இனிய இசை கேட்டுப் பரவசமடையாதவர் உண்டோ இம்மலையில்? சிற்றப்பன் லிங்கையா தொட்டது பொன்னாகும் கையை உடையவன். நல்ல நிலத்தில் விளைந்த இந்த மணியைப் பற்றி இனி நான் சொல்லவும் வேண்டுமா? இறையவரே தேர்ந்தது, அந்தக் குடும்பத்தின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டு அல்லவா?”
“சந்தேகமில்லாமல், சந்தேகமில்லாமல்!”
“ரங்கா இப்படி வந்து பெரியவர்களை வணங்கு.”
ரங்கன் வணங்கிய போது, “புனித நெருப்பு என்றும் ஒளிரட்டும், சிறுவன் சீலம் விளங்கப் பணிபுரிந்து ஊர்களுக்கெல்லாம் சுபிட்சத்தை அளிக்கட்டும்” என்று பெரியவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.
“வழக்கம் போல், தினத்துக்கு வீட்டுக்கொரு பிடியாக வரும் தானியமும், கோயிலுக்கென்று விடப்பட்ட எருமைகளின் பாலும், இவன் பணிக்கு ஒரு காணிக்கையாக இருக்கட்டும். இதை ஒப்புக் கொண்டு, பையனின் தந்தை முன் வந்து, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தட்டும்!” கம்பீரமான குரலில் கரியமல்லர் இப்படிக் கூறி முடித்த போது ரங்கனின் தந்தை எழுந்து வந்தான்.
சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் கண்கல் பளபளக்க நின்றான்.
ஹர ஹர சிவ சிவ பஸவேசா ஹர ஹர சிவ சிவ பரமேசா
என்று அவன் கண்டத்திலிருந்து எழும்பிய இன்னொலி, அந்த மலைக்காற்றின் அலைகளூடே பரவி, அந்தச் சூழ்நிலையையே புனிதத்தில் முழுக்கியது. கூடியிருந்தவரை, திங்களும் கங்கையும் தரித்த எம்பிரானின் நினைவில் ஒன்றச் செய்தது.
அண்ணனுக்கு வாழ்வே இசையாக விளங்கும் மேன்மையை உன்னி உன்னித் தம்பி கண்ணீர் சொரிந்தான்.
அன்று திங்கட்கிழமை. ரங்கன் பால்மனையில் புகுவதற்கான உரிமைச் சடங்கு அன்று தான் நடைபெற இருந்தது. அதிகாலையிலேயே வீடு மெழுகி சுத்தம் செய்து சுடுநீர் வைத்து அனைவரும் நீராடினர். அண்ணன் தம்பி இருவரின் குடும்பமும் ஒன்று கூடின. கிழங்கும் கீரையும் மொச்சையும் சாமையும் தினையும் அரிசியும் வெல்லமும் அந்தச் சிறிய சமையற்கட்டில் நூறு பேர் விருந்துக்குக் குவிந்தன. முதல் ஈற்றுக் கன்றுடன் மொழு மொழுவென்று நின்ற காரி எருமையைக் குளிப்பாட்டி, மணிகள் கட்டி அலங்கரிப்பதில் ரங்கனின் தந்தை ஈடுபட்டிருந்தான். ஜோகியும் ரங்கம்மையும் ஹட்டிப் பையன்களுடன் குறுக்கும் நெடுக்கும் போவதும், வெல்லமும் பொரியும் வாங்கித் தின்பதும், சிரிப்பதும், விளையாடுவதுமாகக் களித்துக் கொண்டிருந்தனர்.
ரங்கன் மட்டும், புது உள்ளாடை மேலாடை தரித்து, அலங்கரித்த பொம்மை போல் நின்று கொண்டிருந்தான். ஒன்றிலும் அவன் மனம் செல்லவில்லை. தூரத்தில், யானை மந்தை போல் தெரியும் குன்றுக் கூட்டங்களுக்கும் அப்பால் அடர்ந்த கானகங்களுக்கு அப்பால், தொட்டபெட்டா சிகரத்துக்கும் பின்னே மறைந்திருக்கும் ஒத்தை நகரை அவன் ஏக்கச் சிந்தனைகள் வட்டமிட்ட வண்ணம் இருந்தன.
பல வண்ண மக்கள் குழுமும் இடம், குதிரைகளும் வண்டிகளும் வீதிகளில் ஓடும் பட்டணம். கடைகளில் என்னவெல்லாம் பொருள்கள் இருக்குமோ? வெள்ளிக் காசுகளுக்கு அவர்களிடம் பஞ்சமே கிடையாதாம். மேற்கே, ஜான்ஸன் துரையின் எஸ்டேட்டில் தேயிலைச் செடிகளையும், காபிச் செடிகளையும் அவன் ஒரு நாள் போய்ப் பார்த்ததில்லையா? லப்பையின் காசுக்கடை, முறுக்கு, சுண்டல் விற்கும் கிழவி கடை எல்லாம் அங்கே தான் இருக்கின்றன. ஒரு துரையின் தோட்டத்திலேயே எத்தனையோ மனிதர்கள், எத்தனை எத்தனையோ துரைகளும் துரைசானிகளும் உள்ள ஒத்தை நகரில், என்ன என்ன விந்தைகள் உண்டோ? அந்த அற்புத அதிசய நகரத்துக்கு அவன் ஓடியே தீருவான். ஆம், ஹட்டியை விட்டு அவன் போயே தீருவான்!
ஒவ்வொரு நிமிஷமும் நெருங்க நெருங்க அவன் பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்த வாரம், ஹெத்தப்பர் கோயில் புனித நெருப்பை அணைத்து விடுவார்கள். மறுவாரம் வன்னி கடைந்து, புதுத் தீ மூட்டி, அவனைக் கோயில் எல்லையைக் காக்கச் சிறைப் புகுத்தி விடுவார்கள்.
மூக்கு மலையிலிருந்தும், மணிக்கல் ஹட்டியிலிருந்தும் மாமன் மாமிகள், அத்தை முதலிய உறவினர் வந்து கூடினார்கள்.
“நல்லா இருக்கிறீர்களா? நல்லா இருக்கிறீர்களா?” என்ற க்ஷேம விசாரணைகளும், “வாருங்கள், வாருங்கள்” என்ற வரவேற்புக் குரல்களுமாக வீட்டில் கலகலப்பு நிறைந்தது.
மண்டை வெடிக்கும் வெயிலோ, பனியோ அன்று இல்லை. குளிர்காற்று மெல்லத் தவழ்ந்து சென்று உடலைச் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது.
லிங்கையா காலையே நீராடி மடியுடுத்து, பால் மனையைச் சுத்தம் செய்தான். பெண் மக்கள் ஒதுங்கி நிற்க அவன் பாற்கலங்களைத் துலக்கி, சுடுநீரூற்றிக் கழுவி வைத்தான். தனியாக ஒரு மூங்கிற் பாற்குழாய் உண்டு. அது வழி வழி உபயோகித்த பாற்குழாய். சுத்தம் செய்து அந்தப் பாற்குழாயை அம்மையென நின்ற எருமையின் அருகில், ரங்கனைக் கையைப் பிடித்து, லிங்கையா அழைத்து வந்தான். அருகில் நின்ற அண்ணனிடம் பாற்குழாயைத் தந்து, “அண்ணா, நீங்கள் முதலில் பாலைக் கறந்து, பையனிடன் பாற்குழாயைத் தாருங்கள்” என்றான்.
அண்ணன் அதை வாங்கித் தம்பியிடமே திருப்பித் தந்தான்; “இருக்கட்டும் தம்பி; நீதான் மங்களகரமான கைகளை உடையவனாக இருக்கிறாய். உன் கைக்கு அவை மடி சுரப்பதை போல் நான் எங்கும் பார்க்கவில்லை. நீயே அவற்றை பேணுகிறாய். நீயே பாலை முதலில் கறந்து, ஆசி கூறிப் பையனின் கையில் ‘ஹொணே’யைக் கொடு” என்றான்.
தம்பி குழுமியிருக்கும் பெரியவர்களைப் பார்த்தான்; நிசப்தம் நிலவியது. அண்ணன் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பினான் தம்பி.
“நீங்கள் மூத்தவர், அண்ணா, நீங்கள் தருவது சம்பிரதாயம்” என்றான், தொண்டைக் கரகரக்க.
“இருக்கும். மாமா, பெரியவராக நீங்கள் சொல்லுங்கள். மல்லண்ணா நீங்கள் சொல்லுங்கள். குடும்பத்தில் நான் மூத்தவன் என்பது பேருக்குத்தான். என் தலையில் பொறுப்பைச் சுமத்தாதீர்கள். நான் கட்டுக்களில் அகப்பட விரும்பவில்லை. வீட்டுப் ‘பலப்பெட்டி’யை எவன் நிரப்பப் பாடுபடுகிறானோ, இளம் பிள்ளைகளுக்கு வழிவழியான பண்பாட்டையும் உழைப்பையும் எவன் தன்னுடைய நடத்தையால் கற்றுக் கொடுக்கிறானோ, அவனே மூத்தவன், அவனே உரியவன். என் கையால் என் கொட்டில் பெருகவில்லை; நீயே கொடு; தட்டாதே” என்றான் அண்ணன்.
மூக்குமலை மாமனும், கரியமல்லரும், “ஆமாம், அதுவே சரி; நீயே அதைச் செய், லிங்கா. பாற்குழாயை வாங்கிக் கொள்!” என்றனர். லிங்கையா தட்டமுடியாமல் ‘ஹோணே’ என்ற அந்தப் பாற்குழாயை இரு கைகளையும் நீட்டிப் பெற்றுக் கொண்டான். கிழக்கு முகமாக அவன் அமர்ந்து, அந்தப் புனிதமான சடங்கை ஆரம்பித்தான்.
ஜோகிக்கு, தந்தை மாடுகளைக் கறக்கப் பார்க்கையில் கைகளும் விரல்களும் துடிக்கும். மந்திர மாயம் போல் அவன் தந்தை கை வைக்கையிலேயே பாற்குழாயில் வெண்ணுரை எழும்பிப் பால் பொங்கி வருவதைப் போல் நிரம்பி வரும். வரம்பை மீறி அது பொங்கி நிற்கும் சமயம், ஆடாமல் அசையாமல் அவன் பாற்கலத்தில் மெள்ளச் சேர்ப்பான்.
இன்றும் ஜோகி, கண்களில் ஆவல் ஒளிரப் பார்த்துக் கொண்டிருந்தான். கன்றுமுட்டி, எருமை மடி சுரந்ததும், பாற்குழாயை இடுக்கிக் கொண்டு, பால் கறக்கும் விதம் காட்டி, முக்காலும் நிரம்பிய பாத்திரத்தை லிங்கையா ரங்கனிடம் தந்தான்.
ரங்கன் அதை ஏந்திக் கொண்டு, சிறிய தந்தை காட்டியபடி, படபடக்கும் நெஞ்சும் நடுங்கும் விரல்களுமாய், பாலைக் கறக்க முயன்றான். பேருக்கு இரண்டு பீர் தான் கிடைத்தது.
கறந்த பாலை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைகையில், அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர். மாதி, தலைவனுக்கு உரிய உண்கலமாகிய பெரிய வெண்கல வட்டிலையும், வேறு கலங்களையும் கொண்டு வைத்து ஒதுங்கி நின்றாள்.
“முதலில் பெரிய வட்டிலில் பாலை விடு. இன்று முதல் இந்த வீட்டுப் பொறுப்பில் நீ பங்கு கொள்கிறாய். குடும்பத்துக்கு வேண்டுமென்ற பாலைக் கறந்து தா. எனக்கு எல்லாவித நலன்களும் கூடட்டும் என்று நம் ஐயனை, இரிய உடையாரை வேண்டி விடு, ரங்கா!” என்றான் சிற்றப்பன்.
ரங்கனுக்கு எண்ணங்களும் சொற்களும் எழும் கலகலப்பு உள்ளத்தில் இருந்தால் தானே?
மாடு கறந்து கொண்டு, மண்ணை வெட்டித் தானியம் விதைத்துக் கொண்டு ஹட்டிக்குள் அழுந்திக் கிடப்பதுதானா முடிவு?
இல்லை, இல்லவே இல்லை.
இல்லை, இல்லை என்று மனசு தாளம் போட, அவன் உண்கலத்தில் பாலை ஊற்றிய போது, அவன் கை நடுங்கியது. அவன் கை நடுங்குவதைக் கண்ட ஜோகியின் தந்தை உதவியாகக் கைநீட்டிப் பிடித்துக் கொள்ளுமுன், பாற்குழாய் ஆடிப் பால் கீழே சிந்திவிட்டது.
லிங்கையாவுக்கு, நேரக்கூடாதது நேர்ந்து விட்டாற் போல் நெஞ்சு திடுக்கிட்டது. குழுமியிருந்தவர்களின் கசமுச ஒலிகள் எழும்பின. லிங்கையா சட்டென்று அவன் கையைப் பிடித்து மற்றக் கலங்களில் பாலை ஊற்றினான். இது நிகழ்கையிலேயே பெண்டிர் பக்கம் கசமுசவென்ற ஒலி வலுக்கத் தொடங்கியது. புனிதமான சடங்கு நிகழ்கையிலே பெண்களின் பேச்சு எழுவதா? மூக்குமலை மாமன் கோப முகத்தினராய் பெண்கள் பக்கம் நோக்கினார்.
அந்தக் கசமுசப்புக்குக் காரணமும் இதுதான். நஞ்சம்மைக்குச் சடங்கு மைத்துனன் வீட்டில் வைத்துச் செய்வதிலேயே இஷ்டமில்லை. அந்த வீட்டில் பால்மனை இல்லையா, உண்கலம் இல்லையா? அதை அல்லவா முதலில் வைத்துப்பாலை ஊற்றச் செய்ய வேண்டும்? அவனுக்குத் தன்மனைக்கு எதையும் தேடி வரும் பொறுப்புக் கிடையாதா? முதலில் அண்ணன், தம்பியையே செய் என்று கூறியது போல், தம்பி மனைவி தன்னிடமே அந்த உரிமையை விடுவாள் என்று அவள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தாள். மரியாதைக்குக் கூட அல்லவா அவள் அதை மொழியவில்லை? அவர்கள் செய்வன எல்லாம் சூழ்ச்சிகள் இல்லையா? பையனையுங் கூட குடும்பத்துக்குப் பிடுங்கிக் கொள்கிறார்களா?
தன் அதிருப்தியை அவள் வெளியிட்டுவிட்டாள்.
மூக்குமலை மாமி முன் வந்து சமாதானமாக, “அந்த மனைக்குச் சென்று அங்கேயும் பால் ஊற்றட்டும்” என்றான்.
“இருக்கட்டும், இருக்கட்டும்” என்று கையமர்த்திய ஜோகியின் தந்தை, சமையற் பகுதிக்கு வந்து, எல்லாப் பாண்டங்களிலும் பாலைத் தெளிக்கச் செய்தான். பின்னர், எதிர் மனைக்கும் சென்றான். முன்னதாக நஞ்சம்மை சென்று அங்கு உண்கலம் எடுத்து வைக்கவில்லை. மாமியே எடுத்து வைக்க, பாலைத் தெளிக்கச் செய்தான். பிறகு, குழுமியிருந்தவர்களில் தந்தை மீதும், தாயார் மீதும், பெரியவர்கள் மீதும் பாலைத் தெளிக்கச் செய்தான்.
“வற்றாத பால் வழங்க வளம் பெறுவாய்; எருமைகளும் பசுவினங்களும் செழிக்கட்டும்” என்று ஒவ்வொருவரும் ஆசிகள் வழங்கினர். பின்னர் மீதியுள்ள பாலுடன் சிற்றப்பன் அழைத்துச் செல்ல, ரங்கன் பால்மனைக்குச் சென்றான். கைப்பாலை வைத்தான்.
சடங்குகள் இத்துடன் நிறைவேறியதும், “நாளையிலிருந்து நீதான் இந்த எருமையைக் கறக்க வேண்டும், ரங்கா!” என்றார் தந்தை.
ரங்கனின் முகம் கார்கால வானை ஒத்திருந்தது.
“பசி பையனுக்கு, முதலில் அவனுக்கு உணவு வையுங்கள்” என்றார் கரியமல்லர்.
பாலும் வெல்லமும் நெய்யும் சேர்ந்த பொங்கலை மணக்க மணக்கத் தையல் இலையில் (மினிகே இலைகள்) முதியவளான பாட்டி ரங்கனுக்குப் படைத்தாள். ரங்கனின் விரல்கள் இனிய உணவில் அளைந்தன; சோறு ருசிக்கவில்லை. நெஞ்சு அடைத்தது.
“ஏண்டா தம்பி, சாப்பிடு, பசி இல்லையா?” என்றாள் பாட்டி.
“தனியாகச் சாப்பிடக் கஷ்டமாக இருக்கும். இல்லையா ரங்கா!” என்று லிங்கையா அருகில் வந்தான்.
இதற்குள் பெரிய உண்கலங்களையும், தையல் இலைகளையும் கொண்டு வந்து மாதி எல்லோருக்கும் வைத்து அமுது படைக்கலானாள். நாலைந்து பேர்களாய் ஒரு குடும்பமாய்ப் பழகியவர்களாய், ஒவ்வொரு கலத்தைச் சுற்றி அமர்ந்தனர். இனிய களியும் சோறும் குழம்பும் மோருமாய்ப் பெண்டிர் பரிமாற அண்ணன் தம்பி ஒற்றுமையைப் புகழ்ந்த வண்ணம் எல்லோரும் உணவருந்தலாயினர்.
“எருமை நடந்துவிடுமா லிங்கையா?” என்று ஒருவர் சட்டென்று கேட்டார்.
இச்சமயம் இதை ஏன் நினைவுபடுத்துகிறான் என்று நினைத்த லிங்கையா சட்டென்று முந்திக் கொண்டு, “கால் கூடினால் நடந்து விடும். நாலைந்து நாளில் மெள்ளக் கொட்டிலுக்குத் தூக்கி வந்துவிடலாம்” என்றான்.
முதல் நாள் முறைகாவல் இருந்த ராமன், “நேற்று நாய் விடாமல் குரைத்தது. அருவிக்கரைக்கு அப்பால் கொள்ளி போல் கண்கள் தெரிந்தன. எனக்கு என்னவோ சந்தேகமாக இருந்தது. காட்டிலிருந்து ஏதோ மோப்பம் அறிந்து வந்திருக்கிறது. நான் ஈட்டி கொண்டு போகவில்லை. பயமாக இருந்தது” என்று விவரித்தான்.
ஜோகியின் தந்தை திடுக்கிடுகையிலே, “வேட்டைஇருக்கிறதா? இல்லை, நரி ஆட்டுக்கடா எதையானும் பார்த்து விட்டுப் புலி என்கிறாயா?” என்றான் நான்காம் வீட்டு போஜன்.
“அட, அத்தனைக் குருடா நான்? தொரியனைக் கேட்டுப் பார்!” என்றான் ராமன் ரோஷத்துடன்.
லிங்கையாவுக்குக் கவலை மேலிட்டது.
“அப்படியானால் சுற்றுக் கிராமங்களில் தெரிவித்து வேட்டைக்காரர்களை உஷார்படுத்தி அழைத்து வர வேண்டாமா? அருவிக்கரை வரையிலும் வந்ததென்றால் நம் ஆடுமாடுகளுக்கு அபாயமில்லையா?” என்றான்.
“சொல்லி அனுப்புவோம்” என்று கூறியபடியே கரியமல்லர் எழுந்து கை கழுவப் போனார். அனைவரும் உண்டு முடித்துத் தாம்பூலம் தரிப்பதும் புகைபிடிப்பதுமாக வெளிப் புல் திட்டுக்கு வந்து விட்டனர். இளைஞராக இருந்தவர்கள், ஹெத்தப்பா கோயில் முன், மைதான மூலையில் இருந்த உருண்டைக் கல்லைத் தூக்குவது பற்றிய பேச்சுக்களில் உற்சாகமடைந்தவராய் அங்கே சென்றனர். ஜோகியின் தந்தை, உண்டு முடித்ததும் ஏதோ ஓர் உந்தலால் எருமை மேயும் குன்றின் பக்கம் நடந்தான். அவன் முதல் நாள் மாலையில் அதைப் பார்த்ததுதான். ஜோகி தினமும் காலையில் புல்லரிந்து கொண்டு செல்வான். அன்றைக் கோலாகலத்தில் அவன் போட்டானோ இல்லையோ?
முட்டுப் பாறையைக் கடந்து லிங்கையா இறங்குகையிலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் இருவர் ஓடி வந்தனர். அவர்கள் மரகதமலை ஹட்டியைச் சேர்ந்தவரல்லர்.
“புலி புலி! அதா எருமையைக் கடிச்சு, இழுத்திட்டுப் போச்சு!” லிங்கையாவுக்கு அவனுள் ஏதோ ஒரு மாளிகை குலுங்கி விழுந்தாற் போல் அதிர்ச்சி உண்டாயிற்று. உண்ட உணவு குலுங்க, உணர்வு இருள, அவன் ஓடினான்.
புல்லின் சரிவிலே அவன் அமைத்திருந்த சாக்குக் கூடாரத்திலே அவன் கண்ட காட்சியை எப்படிச் சகிப்பான்!
எருமையின் தலை தனியாகப் பிடுங்கப்பட்டு, பாதி சிதைந்து இரத்தமும் களரியுமாக இருந்தது. உடலில் பாதி காணப்படவில்லை. அது வந்து இழுத்துப் போன தடமாக அருவிக்கரை வரையிலும் அப்பாலும் இரத்தம் சொட்டிப் பெருகியிருந்தது.
மண்ணிலும் மந்தையிலும் உயிரை வைத்திருந்த அந்தப் பெருமகனின் கண்களிலே நீர் கோர்த்தது.
இது எதைக் குறிக்கிறது? புனிதச் சடங்கை நிறைவேற்றும் நாளிலே, இந்த அவலம் எந்தத் தீமையைக் குறிக்கிறது? ஐயனே!
அவன் அந்த மண்ணில் பிறந்து, நினைவு தெரிந்து, இப்படி ஒரு படுகளரியைத் தன் கண்களால் கண்டதில்லையே! புலி, புலி என்பார்கள். அஞ்சிக் காபந்துகள் செய்வார்கள். ஒரே ஒரு முறை எப்போதோ மூன்றாம் வீட்டு மல்லனின் தாத்தா, சிறுத்தை ஒன்றை ஈட்டி எறிந்து கொண்டு வந்ததுண்டு. அது தவிர, ஜான்ஸன் எஸ்டேட் துரை கூட, இந்தப் பக்கம் புலி இல்லை என்று சொல்லிக் கொண்டு காடையையும் கவுதாரியையும் முயலையும் அல்லவோ சுட்டுக் கொண்டு போகும் செய்தி கேட்டிருக்கிறான்? அப்படியிருக்க பட்டப்பகலில், புலி தோன்றி இப்படி ஒரு கோரத்தை நிகழ்த்திப் போயிருக்கிறதே! இது புலிதானா? அல்லது மந்திரமா, மாயமா!
ஒரு நினைவு அவனுள் தோன்றி, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் சிலிர்ப்பை ஓட்டியது.
ரங்கன் - ரங்கன் இரிய உடையாருக்கு உகந்தவன் அல்லனோ?
‘மகனே, ஜோகியல்லவா, நான் தேர்ந்தெடுத்த பையன்? நீ ஏமாற்றுகிறாயே! என்று ஐயன் கேட்கும் கேள்வியா? ஈசுவரா, இதென்ன சோதனை?’
கண்கள் ஆறாய்ப் பெருக, அவன் அந்த இடத்திலேயே நின்றான். சற்று நேரத்தில் ஆண், பெண், குஞ்சு குழந்தைகள், ஹட்டி அடங்கலும் அங்கே ஓடி வந்தன.
அப்படி வராதவன், மன ஆறுதலும் மகிழ்ச்சியும் பரபரப்பும் அந்தச் சமயத்தில் உடையவன் ஒருவன் இருந்தான், ரங்கன்!
வானம் சோவென்று கொட்டித் தீர்க்கும் என்ற அளவில் அடைக்கருக்கல் இட்டிருந்தது. ஒரே கணத்தில் பளீரென்று சூரியன் உதயமானால் அந்த மலைப் பிரதேசம் எப்படி ஒளிருமோ, அப்படி ரங்கனின் இருதயத்தில் கவிந்த ஏக்கக் கவலைகள் கரைந்து, அவன் உடலிலும் உள்ளத்திலும் அளவற்ற சுறுசுறுப்பை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி. பத்து நிமிஷ நேரத்துக்குள், தான் பிறந்து வளர்ந்து பழகிய மரகத மலையை விட்டு, கனவு கண்ட ஒத்தை நகரை எண்ணி, எவரும் போகாத பக்கத்திலுள்ள ஒத்தையடிப் பாதையில் அவன் ஓடிக் கொண்டிருந்தான். இடுப்பில் முழுசாக இருந்த இரண்டு வெள்ளி ரூபாய்களும், மூன்றே காலணாச் சில்லரையும் அவனுடைய ஓட்டத்துக்கு உயிரான வேகம் கொடுத்தன. ‘ஐயோ!’ என்று வீட்டார் அப்படி அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிய போது, பால்மனைக்குள் ஒரு கலத்துக்குள் பட்டுப்பை ஒன்றில் சிற்றப்பன் சேமித்து வைத்திருந்த பத்து ரூபாயிலிருந்து எடுத்த வெள்ளி ரூபாய்கள் அவை. கட்டவிழ்ந்ததும் ஓடும் கன்று போல் அவன் திரும்பிப் பாராமலே, வழியை நோக்காமலே தான் ஓடினான். டீ எஸ்டேட்டைக் கடந்ததும், மலை, காடு!
எந்த மலை? எந்தக் காடு?
ரங்கன் அந்தப் பக்கத்தையே இதுவரையில் அறிந்திருக்கவில்லை! கானகத்துள் ஒற்றையடிப் பாதையாகத் தென்பட்ட இடத்தில், இளங்கால்கள் கல்லிலும் முள்ளிலும் குத்த, வேகமாக ஓடினான். ஆங்காங்கே குறும்பரோ கோத்தரோ தென்பட்டால் அவன் அஞ்சிப் பதுங்கிப் பின்பு சென்றான். மலை ஒன்றின் மேல் ஏறி அவன் சுற்றும் முற்றும் பார்த்த போது, சூரியன் இருந்த திசை கொண்டு, மரகத மலை எந்தப் பக்கம் இருக்கிறது, தேவர்பெட்டா எங்கே தெரிகிறது என்பதை அறிய முடிந்ததே தவிர, வண்ண விசித்திர ஒத்தை நகர் வண்ண மயிலைப் போல் அவன் கண்முன் விரிந்து கிடக்கவில்லை.
இருதயம் படபடக்க, அந்த மலையையும் கடந்து, ரங்கன் ஓட்டமாக ஓடினான். சிறு துணியில் அவன் முடிச்சிட்டு வந்திருந்த களியும் பொரி உருண்டையும் வெல்லமும் குலுங்க, பின்னும் ஒரு மலைச்சரிவில் வந்து நின்றான். கீழே ஒரு ஹட்டி இருந்தது. நெஞ்சத் துணிவு மாய்ந்தது. கால்கள் பின்னிக் கொண்டன. எவரேனும் தெரிந்து கொள்வார்களோ? அது என்ன ஹட்டியோ? அவனுக்கு உறவினரோ, சிற்றப்பனுக்குத் தெரிந்தவரோ இருந்துவிட்டால்?
ஹட்டியின் அருகில் செல்லாமலே அவன் மீண்டும் இறங்கிக் கானக வழியில் புகுந்தான். இளம் உள்ளத்தில் கிலியை ஊட்டும் விசித்திரமான ஒலிகள் அவனுக்குக் கேட்டன.
“இரிய உடை ஈசரே, இன்று என்னைப் பத்திரமாகச் சேர்த்து விடுங்கள். என்னை ஒத்தையில் கொண்டு சேர்த்து விடுங்கள்” என்றெல்லாம் ‘இரிய உடையார் இல்லை’ என்று மறுத்த உள்ளம், அந்த இக்கட்டான நிலையில் பாவங்களை மன்னிக்கச் சொல்லி இறைஞ்சியது.
புதர்களிலும் பாறையின் பக்கங்களிலும் புலி ஒளிந்திருக்குமோ என்ற கிலி அவனுக்கு உண்டாயிற்று. வெகுதூரம் பல காடு மலைகளைக் கடந்து அவன் ஓடிய பிறகு, திக்குத் திசை தெரியவில்லை. மரகத மலையோ, தேவர் பெட்டாவோ அவன் கண்களில் படவில்லை. கழுகு மூக்குப் போன்ற பாறையுடன் ஒரு மலைதான் அவனுக்கு முன் இப்போது தெரிந்தது. இளங்கால்கள் நோவ, அந்த வனாந்திரத்தில் நிர்க்கதியாக வந்து நின்ற அவன் கண்களில் நீர் பெருகியது.
“ஐயனே, நான் பொன்னுடன் திரும்பி வந்து உங்கள் கோயிலுக்கு நான்கு எருமைகள் விடுவேன். என்னைக் காப்பாற்றும்!” என்று வாய்விட்டுக் கதறினான். சிறிது தேறி, ஒரு வேளை இரவுக்குள் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ என்ற நினைவுடன், பொரி உருண்டையைத் தின்று கொண்டே நடந்தான்.
பொழுது தேயும் சமயத்தில், அந்தக் குன்றின் உச்சியில் அவன் நின்று பார்க்கையில், அவன் உள்ளத்தில் தெம்பு பிறந்தது. வளைந்து சென்ற குன்றுகளின் நடுவில், பசுமையான புல்வெளி; வளைவான குறுகிய பொந்து போன்ற வாயில்களுடன் ‘கணக்’ புல்லால் வேயப் பெற்ற குடிசைகள்; ஒரு புறம் கல் கட்டிடமான கோபுரம்; இன்னொருபுறம் எருமை மந்தைகள் நிற்கும் கொட்டடி.
தொதவர் மந்து! மனிதவாடை தெரியாத கானகத்திலிருந்து, மக்கள் குடியிருப்பைக் கண்டுவிட்ட தைரியத்தில் அவன் அந்த மந்தையை நோக்கி நடந்தான். புதுக்குளி அணிந்த பூசாரி அருவித் துறைக்குப் போய் வரும் வழியில் அவனைச் சந்தித்தான்; உற்றுப் பார்த்தான். ரங்கனுடனேயே நடந்தான்.
தொதவன் அவன் மொழியில் ரங்கனை ஏதோ விசாரித்தான். ரங்கனின் நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. மறுமொழியின்றி நேராக நடந்தான். குடிசை ஒன்றின் வாசலில் வந்து உட்கார்ந்தான். அந்தக் குடிசை வாசலில் கம்பளி போர்த்த கிழவி ஒருத்தியும் இளைஞனான ஒருவனும் அமர்ந்திருந்தனர். ரங்கனுடன் வந்த பூசாரி அவர்களைப் பார்த்து ஏதோ பேசினான். குடிசைக்குள்ளிருந்து வெண்ணெய் பளபளப்பு மின்னும் திரிக்கப்பட்ட கூந்தலையுடைய அழகி ஒருத்தி வந்தாள். சற்றைக்கெல்லாம் அங்கே கூட்டம் அவனைச் சுற்றிக் கூடிவிட்டது. அவர்களுடைய மொழியில் என்ன என்னவோ கேட்டு அவனைத் திணற அடித்தார்கள்.
ரங்கன் மறுமொழியே பேசவில்லை. ஓடி வந்த களைப்பு. துணி முடிப்பிலிருந்து களியையும் வெல்லத்தையும் எடுத்துத் தின்னத் தொடங்கினான்.
ஒரு கிழவன் அருகில் வந்து அவன் தலையை நிமிர்த்தி.
“ஹட்டியிலிருந்து வருகிறாயா? எங்கே வந்தாய்?” என்று அன்புடன் ரங்கனின் தாய்மொழியில் வினவினான்.
“எனக்கு ஒத்தை. அண்ணனுடன் ஹட்டிக்கு வந்தேன். எனக்கு மணிக்கல்ஹட்டி. அண்ணன் முன்னே போய்விட்டான். நான் ஒரு ஒத்தைக்குப் போக வேண்டும். வழி தவறி விட்டது” என்று பொய்யை நிசமாக நடிக்கையிலே அவனுக்கு அழுகை வந்துவிட்டது.
“வழி தானே தவறியது? போகட்டும், காலையிலே ஒத்தை போகலாம்” என்று கிழவன் ஆதரவாக அவனை சமாதானம் செய்தான்.
அன்றிரவு அவர்களின் இளம் விருந்தாளியாக இருந்து, ரங்கன் சாமைச் சோறும் நெய்யும் உண்டு, அந்த அடக்கமான குடிசையிலே உறங்கிய பிறகு, காலைக் கதிரவனுடன் தன் ஒத்தைப் பிரயாணத்தைத் தொடங்கச் சித்தமானான். உடன் ஒரு தொதவ வாலிபன் துணை வர, கதிரவன் உச்சிக்கு வருமுன்பே ரங்கன் ஒத்தையின் எல்லையை அடைந்தான்.
வளைவாக மலைகளைச் சுற்றியும் குறுக்கே பிளந்தும் ஓடும் சாலைகளின் அழகைச் சொல்ல முடியுமோ? மேட்டிலும் பள்ளத்திலும் எத்தனை எத்தனை கட்டிடங்கள்! சிலுவை உச்சியுடன் தோன்றும் மாதா கோயில் கோபுரத்தைக் கண்டு ரங்கன் அதிசயித்தான். அதுவும் தொதவர் கோயில் போலும்!
தெருக்களில் எத்தனை துரைமார்கள்! பளபளக்கும் டாங்கா வண்டிகள்; நிமிர்ந்து ராஜநடை போடும் குதிரைகள்; தலைப்பாகை அணிந்த மக்கள்; நாய்களைப் பிடித்துக் கொண்டு செல்லும் துரைசானிகளின் ஒய்யாரந்தான் என்ன! முள்ளுப் பழம் போன்ற உதடுகளும், ஒரே வெள்ளைமேனியுமாய் அவர்கள் தெய்வப் பிறவிகள் போலும்!
துணை வந்த தொதவனிடம், “எனக்கு இனிமேல் போகத் தெரியும்” என்றான் ரங்கன்.
“இனி இப்படித் தனியாக வராதே” என்ற பொருள்பட நோக்கிவிட்டு, அவன் பாதையில் இருந்த கடை ஒன்றில் நின்றான்.
ரங்கன் பார்த்தது பார்த்தபடி திறந்த வாயுடன் அதிசயித்து நின்றான். தெருக்களில் சுற்றினான்; ‘பொட்டானிகல்’ நந்தவனத்து ரோஜாச் செடிகளைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். கவர்னர் மாளிகை வாசலில் நின்ற மெய்காப்பாளர்களையும் குதிரைகளையும் எட்ட நின்று அச்சம் தோய எட்டிப் பார்த்தான். பின்னும் நடந்தான். கடைவீதியில் லாலாவிடம் காலணாவுக்கு மிட்டாய் வாங்கி ஆவல் தீர ருசித்துத் தின்றான். இரவு நெருங்கும் வரையில் இவ்விதம் சந்தைக் கடைகளின் அருகில் திரிந்தான்.
இரவு கடும்பனி பெய்யுமே எங்கே முடங்குவது? மேலாடையை இறுகப் போர்த்துக் கொண்டு, ஒரு கடை வாசலில் சுருட்டிக் கொண்டு அன்றிரவு உறங்கினான். மறுநாள் சந்தையில் ஒரு கூடை வாங்கி வைத்துக் கொண்டான். காயும் கறியும் முட்டை மீன் வகைகளும் வாங்க அங்கே வரும் வெள்ளைக்காரச் சீமான் சீமாட்டிகளைச் சுற்றி “கூலி கூலிஸார், கூலி!” என்று கூவிக் கொண்டு வர, அவன் ஒரே நாளில் பழகிவிட்டான்.
முதல்நாளே இரண்டணாச் சம்பாதித்தான். அதனால் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. காசு! ஹட்டியில் காசைக் கண்ணால் பார்க்க முடியுமோ? வெறும் சாமைச் சோறு, களி!
அவன் வெறுப்புடன் உதடுகளை மடித்துக் கொண்டான். கோயம்புத்தூர்ப் பக்கத்திலிருந்து அந்த மலையில் பிழைக்க வந்த மூதாட்டி ஒருத்தி ஆப்பம் சுட்டு விற்றாள். தம்படிக்கு ஒன்று. ஆறு ஆப்பங்கள் காலை வேளையில் அவன் பதிவாகச் சென்று தின்று வரலானான். அவனுடைய சம்பாதனையில் ஹட்டியில் காணாத என்ன என்னவோ தின்பண்டங்களைத் தின்ன முடிந்தது.
அப்போது பனிக்காலமாதலால் உருளைக் கிழங்கும் இலைக்கோசும், பூக்கோசும், களைக்கோசும், முள்ளங்கியும் சந்தையில் வந்து குவிந்திருந்தன. வெள்ளைச் சீமான்கள் வந்து அந்தக் கடைகளைச் சுற்றி வரும்போதெல்லாம் எல்லாக் கடைக்காரர்களும், தங்கள் சரக்குகளின் நயத்தையும் அருமையையும் கூறிக் கூறிக் கூவுவார்கள். வியாபாரம் அவர்களிடந்தான் அநேகமாக ஆகும். கூடை சுமந்து, கூலி வேலை செய்த ரங்கனுக்கு, அந்தச் சந்தையில் சுப்புபிள்ளையின் சிநேகம் கிடைத்தது. கோழி முட்டைகளும், பூக்கோசு, இலைக்கோசுகளும் அவன் கூடையில் வியாபாரத்துக்குக் கொண்டு வருவான். அவசரமாகப் படிக்குப் பாதியாகப் போட்டுவிட்டுப் போய்விடுவான். ஒரு நாள் ரங்கனே அவனுடைய பத்துப் பூக்கோசுகளையும் இருபது முட்டைகளையும் விற்று, அவனிடம் பணத்தைக் கொடுத்தான்.
ரங்கனுக்கு உடல் வணங்கி மண்ணோடு இயைந்து உயிர் வாழும் நாட்டமே இல்லை. வெள்ளிப் பணம் சம்பாதிக்கும் ஆசை அவனுக்கு விழுந்து விட்டது. அவனுக்கு வியாபாரத் திறமையும், காலை முக்காலாக்கிப் பிழைக்கும் சாமார்த்தியமும் இருந்தன. இந்தக் குணத்தைச் சுப்புப் பிள்ளை கண்டு கொண்டான்.
வற்றல் காய்சி எடுபிடிப் பையனாக, மேஜர் துரை பங்களாவில் சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு வந்த சுப்புதான் சுப்புப்பிள்ளையாக, அரண்மனை போன்ற பங்களாவில் குதிரைக்காரர், குசினிக்காரர், நாய்க்காரர், பட்லர், ஆயா முதலிய பணியாளரின் படைக்கே தலைவனாகும் நிர்வாகத் திறமையை அடைந்திருந்தான். துரை வீட்டு நிர்வாகத்திலே அவன் பிழைத்து திண்டுக்கல்லிலுள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்பி, ஒத்தையில் வீடொன்றும் வாங்கிவிட்டானென்றால், அவனுடைய சாமார்த்தியத்துக்கு அத்தாட்சி தேவையில்லை அல்லவா? துரை பங்களாத் தோட்டத்தில் காய்கள் பயிராகும். ஜாதிக் கோழிகளின் பண்ணை ஒன்று இருந்தது. அவற்றை ஒரே கணக்காக வைத்துக் கொண்டு, பெருகுவதை அவ்வப்போது பணமாக்கும் முயற்சியில் அவனுக்கு ரங்கனைப் போல் ஒரு பையன் தேவையாக இருந்தான். நாளொன்றுக்கு ஒரு ரூபாய்க்கு மேல் பையன் சம்பாதித்துத் தந்தால் ஒரு நாளைக்கு அவனுக்கு ஓரணாக் கொடுக்கக் கூடாதா? அந்த ஓரணா இரண்டணாவையும் மிச்சம் பிடிக்க, சுப்புப்பிள்ளை ஒரு வழியைக் கையாண்டான்.
“வண்டுச்சோலையில் தான் என் வீடு இருக்கிறது. நீ மாலையில் வீட்டுக்கு வந்துவிடேன். இரவில் உனக்குச் சாப்பாடு தந்துவிடுகிறேன்” என்றான்.
ரங்கனுக்குக் கசக்குமா? துரை பங்களாவிலிருந்தே அந்தப் பங்கையும் சுப்புப்பிள்ளை பெற்று வந்துவிடுவான். சாமைச் சோற்றுக்குப் பின் ஆப்பமும் மிட்டாயும் புளிக் குழம்பும் அரிசிச் சோறும் ருசித்த ரங்கனுக்கு, துரை பங்களாவில் தயாராகும் புலால் உணவின் ருசியும் பழக்கமாயிற்று.
வாழ்க்கை அவனுக்குப் பிடித்திருந்தது. கையிலே, பையிலே செப்புக் காசுகளும் நிக்கல் காசுகளும் குலுங்கின. வெள்ளிப் பணமாக எத்தனை நாட்கள் செல்லும்!
தன் இனத்தார் எவரேனும் வந்தால் கண்டு கொள்வரோ என்பதால் அவன் தலையில் துணி சுற்றுவதை விட்டான். முழுக்கைச் சட்டை அணிந்து, ஆங்கிலமும் தமிழும் கொச்சையாகப் பேசக் கற்றான். உதகை நகர வாழ்க்கையில் துரிதமாக முன்னேறினான். ஊரின் நினைவே ரங்கனுக்கு எழவில்லை.
ரங்கன் ஹட்டியை விட்டுச் சென்ற பின் இரண்டு பனிக் காலங்கள் வந்து போய், இரண்டாவது வசந்தமும் வந்து விட்டது. கீழ்மலை மாதுலிங்கேசுவரர் கோயிலில் அழல் மிதிக்கும் திருவிழா நிறைவேறி, பூமி திருப்பி, புது விதை விதைக்கும் விழா நடைபெற்று, பயிரும் வளர்ந்தாயிற்று. காய்ச்சலில் கிடந்து புது இரத்தம் ஊறும் உடல் போல, வறண்ட மரங்களிலெல்லாம் புதுத் தளிர்கள் தோன்றின. காய்ந்து கிடந்த புல்தரையெல்லாம், திரை கடலோடித் திரும்பும் தந்தையை வரவேற்கத் துள்ளிவரும் இளம் குழந்தை போல் தளிர்த்துச் சிரித்தது. இத்தனை நாட்களாக எங்கிருந்தனவோ என்று விந்தையுறும் வண்ணம் சின்னஞ்சிறு வண்ண மலர்கள், புல்லிடுக்குகளில் எட்டிப் பார்த்து, அடக்கமான பெண் குழந்தைகளைப் போல இளம் வெயில் கள்ளமிலா நகை புரிந்தன. பற்கள் கிடுகிடுக்கும் தட்பம் தேய்ந்து வர, இதமான வெதுவெதுப்பில், இயற்கையன்னை, தான் பெற்ற மக்களைச் சீராட்டும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தாற் போன்ற கோலம் எங்கே பார்த்தாலும் விளங்கின. காடுகளில் வேட்டைக்காரர், கோஷ்டி கோஷ்டியாகத் தென்படுவார்கள். தேவர் பெட்ட சிகரத்திலும் குமரியாற்றியின் வீழ்ச்சியிலும் மகிழ்வு பெற, வெள்ளை மக்கள் தேடி வரும் காலம் வந்துவிட்டது.
ஊரெல்லாம் இன்பம் கொண்டு வரும் வசந்தகாலம், சென்ற இரண்டு ஆண்டுகளாக ஜோகியின் வீட்டில் இன்பத்தைக் கொண்டு வரவில்லையே! அந்த வீட்டில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன!
அதிகாலையில், புள்ளினங்களின் இன்னொலியும் கோழிகளின் கூவலும் கேட்குமுன்னமே ஜோகியின் உறக்கம் அன்று கலைந்து விட்டது. கூரையை அண்ணாந்து பார்த்த வண்ணமே படுத்திருந்தான். மேலே, மூங்கிலாலான பரண். அந்தப் பரணில் வீட்டுக்கு வேண்டிய தானியங்கள், கிழங்குகள் முதலிய பண்டங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அவனுடைய தந்தையின் உடலுழைப்பாலும், தாயின் ஒத்துழைப்பாலும் தானியங்களும் குறையாமல் எப்போதும் அந்த வீட்டில் நிறைந்திருக்கும். ஜோகியின் சிறு உள்ளத்தில், இதுவரை கவலை குடியிருந்ததே இல்லை.
‘ரங்கனின் வீட்டைப் போன்றதன்று நம் வீடு. எத்தனை பேர் எப்போது வந்தாலும் சோறும் களியும் கொடுக்கத் தானியங்கள் உண்டு’ என்பது அவனுள் சிறு பருவத்திலேயே ஊன்றிய நம்பிக்கையும் பெருமையுமாக இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் கண்டுவிட்டது. ஒரு குறிஞ்சிக்குரிய ஆண்டுகள் முழுவதும் கடந்திராத பருவத்தினான அவனுடைய உள்ளத்தில், குடும்பத்தைப் பற்றிய பொறுப்பும் கவலையும் தாமாகப் புகுந்து விட்டன.
அண்ணாந்து பரணையே பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் கம்பளியை இழுத்து மூடிக் கொண்டு உறங்கும் தந்தையைப் பார்த்தான்.
அவனுடைய தந்தை லிங்கையா இந்நேரம் வரையிலும் தூங்குவாரா? அதற்குள் எழுந்து காலை பிரார்த்தனையுடன் மாடுகளை அவிழ்க்கப் போய் விடுவாரே! அந்த மச்சிலுள்ள தானியம் அடுத்த அறுவடை வரையிலும் போதுமானதாக இருக்கலாம். அதற்குப் பின்?
ஜோகியின் பெரிய தந்தை இப்போதேனும் வேலைக்குச் செல்கிறானா? இல்லையே! மாறுதல்கள், நஷ்டங்கள் எல்லாம் பெரியப்பனின் வீட்டுக்குத்தான் வந்தன. அவர்கள் எருமையைத் தான் புலி கொண்டு போயிற்று; ரங்கன் எங்கோ ஓடிப் போனான்.
ஆனால், பெரிய தந்தை முன் போலவே உணவு கொள்கிறான்; மாலையில் வீடு திரும்புகிறான் தள்ளாடிய வண்ணம். பெரியம்மை முன் போலவே சத்தம் போடுகிறாள்; சாபமிடுகிறாள்; மைத்துனன் வீட்டிலிருந்து தானியமும் பாலும் பெற்றுப் போகிறாள். முன்போலவே ரங்கி அழும் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு தன்னோடொத்த சிறுமிகளுடன் ஓடி விளையாடுகிறாள். அவர்கள் வீட்டில் ஒன்றுமே இல்லை.
ஆனால், ஜோகியின் வீட்டில் மட்டும் என்ன வந்தது?
அன்று ரங்கனைக் காணவில்லை என்று அறிந்ததும் ஜோகியின் தந்தை எப்படி அழுதான்; “இரிய உடைய ஈசா, நான் தப்புச் செய்தேன். நான் உன்னை ஏமாற்றப் பார்த்தேன். நீ என்னை ஏமாற்றி விட்டாயே! நான் பாவி, நான் பாவி!” என்று முட்டிக் கொண்டல்லவா அழுதான்? ரங்கன் மறைந்ததற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?
அவன் அப்படி அழுத போது ஹட்டியே கூடி அவனைத் தேற்றியது. கரியமல்லர் நான்கு கிராமங்களுக்கும் உடனே ஆளனுப்பினார். கோத்தைப் பக்கம் மாமன் வீடு, அத்தை வீடு எங்குமே ரங்கனைக் காணக் கிடைக்கவில்லை.
அப்படியானால் ரங்கன் எங்கே போயிருப்பான்? அவனுக்கு எப்படித் துணிச்சல் வந்திருக்கும்? மணிக்கல்லட்டியிலிருந்து அன்றொரு நாள் வந்த பாருவின் தந்தை ஒத்தையில் கூட விசாரித்துப் பார்த்ததாகவும், காணவில்லை என்றும் தெரிவித்து விட்டார். ஒரு வேளை எருமையைக் கொன்ற புலியே ரங்கனையும் இழுத்துப் போயிருக்குமோ?
புலி நிசமான புலியோ, குறும்பர்களின் ஏவலோ? இரண்டு ஆண்டுகளாகக் குறும்பர்களுக்குப் பெரியப்பன் பங்கில் மானியம் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கோபம் கொண்டு தீங்கிழைக்கின்றனரோ?
இப்படி நினைக்கையில் ஜோகியின் உடல் நடுங்கியது. இம்முறை பயிர் விளைவிக்க முடியாதபடி, அவன் தந்தை நோயில் விழுந்து விட்டானே, அதுவும் குறும்பர்களின் சூழ்ச்சியாக இருக்குமோ?
சில நாட்களாகவே அவன் தந்தைக்கு ஒரு விதக் காய்ச்சல் வருகிறது. அந்தக் காய்ச்சல் வரும் போது உடலைத் தூக்கித் தூக்கிப் போடப் பற்கள் கிடுகிடுக்க, குளிர் நடுங்குகிறது. அம்மை அமுக்கிப் பிடித்துக் கொள்வாள். எல்லா கம்பளிகளையும் போட்டு மூடுவார்கள். பின்னர் அருகில் உட்கார முடியாதபடி உடல் அனல் பறக்கும். கண்களை விழிக்காமல் அவன் பிதற்றுவான். “என் ஐயனே நான் உங்களை ஏமாற்ற நினைத்தேன். பாவி, பாவி!” என்றெல்லாம் அலறுவான். “அட ரங்கா, காப்பை எடுத்து எங்கேயடா ஒளித்து வைத்தாய்? காப்பை எடுத்த மாதிரி, பட்டுப் பைப் பணத்தையும் நீதானே எடுத்திருக்கிறாய்?” என்று அதட்டுவான். ஒவ்வொரு தடவை விழிகள் கொட்டையாக உருண்டு விட, எழுந்து ஓடுவான். ஒரு நாள் இந்தக் காய்ச்சல் அவனை அலைத்து அழிக்கும். மறுநாள் இரவே, குளமாக வேர்த்து, காய்ச்சல் விட்டு விடும். காலையில் சுடுநீரும் கஞ்சியும் அருந்தி, சோபையிழந்தவனாக அவன் மாடுகளைக் கறப்பான். அதற்குள் களைப்பு வந்துவிடும். என்றாலும், பகலில் விளை நிலத்துக்குப் போய் மனசிலுள்ள ஆசையையே சக்தியாய்த் திரட்டிக் கொண்டு உழைப்பான். மறுநாள் பகலுக்கு மறுபடியும் சொல்லி வைத்தாற் போல் அந்தக் குளிரும் காய்ச்சலும் வந்துவிடும்.
அண்டை வீட்டுப் பெள்ளி, அன்று ஜோகியிடம், அம்மாதிரியான ஏவல் காய்ச்சல் அவனுடைய அத்தை மகனுக்கு வந்ததாகவும், குறும்பர் தலைவனிடம் சென்று பேசிக் காணிக்கைகள் வைத்த பிறகு காய்ச்சல் போய்விட்டதாகவும் கூறியிருந்தான். அப்பனுக்கும் அது மாதிரி ஏதும் செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு குடும்பம் எப்படி நடக்கும்? முதல் நாள் முழுவதும் அவனுக்குக் காய்ச்சல்; எழுந்திருக்கவில்லை. அம்மையோ பாவம்! அவன் தந்தை விதைத்திருக்கும் சொற்ப நிலத்தில் அவள் அல்லவோ பாடுபடுகிறாள்! அலுப்பு; சலிப்பு; இன்னமும் உறங்குகிறாள்.
ஜோகி இத்தகைய கவலை பாயும் எண்ணங்களுடன் விழித்துக் கொண்டிருக்கையில் பாட்டி மெள்ள மெள்ளப் பழக்கத்தில் எழுந்து சென்றாள். அவளுக்குக் கண்பார்வை அவ்வளவு தெளிவில்லை. என்றாலும், மகன் படுத்துவிட்ட பிறகு தனக்குப் பொறுப்பு அதிகமாகி விட்டது போல் அதிகாலையிலேயே எழுந்து கொட்டிலில் சாணத்தை வாரி, எருக்குழியை நிரப்புவதைத் தன் பொறுப்பாகக் கொண்டு விட்டாள்.
“அம்மே!... அம்மா...!” தந்தை ஈன சுரத்தில் முனகியது கேட்டு, ஜோகி அருகில் சென்றான். சிறு விழிகளில் பரிதாபமும் கவலையும் தேங்க, “அப்பா!” என்றான்.
“பாட்டி எழுந்தாச்சா? சுடுநீர் - தாகமாயிருக்கிறதே?” என்று சைகை காட்டினான் லிங்கையா.
ஜோகி பாட்டியை அழைக்கவில்லை; அம்மையையும் அழைக்கவில்லை. துள்ளி ஓடினான். சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டு அடுப்பில் தீ மூட்டினான்; பானையிலிருந்து நீரெடுத்துப் பல்லாயை அடுப்பில் வைத்தான்.
அடுப்புச் சுள்ளிகள் வெடித்த சத்தமும், புகையும் மாதியை எழுப்பி விட்டன. மேல் முண்டையும், தலை வட்டையும் சரியாக்கிக் கொண்டு பரபரப்புடன் அடுப்படிக்கு வந்தாள். “ஜோகி! நீயா?”
“அப்பா சுடுநீர் கேட்டாரம்மா; தாகமாக இருக்கிறதாம்.”
“என் கண்ணே!” என்று கூறிய அவள், மைந்தனின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக் கொண்டாள். எத்தனை இதம்! எத்தனை ஆறுதல்! எத்தனை மகிழ்ச்சி!
ஜோகியின் கவலைகள் கண்களில் உருகி வந்தன.
“எத்தனை நாளைக்கம்மா அப்பாவுக்குக் காய்ச்சல் அடிக்கும்? பெரியப்பாவைப் போல் அப்பாவும் வேலை செய்யாவிட்டால் நாம் என்னம்மா செய்வோம்?”
“அந்த ஈசன் என்ன தான் நினைத்திருக்கிறானோ?” என்று கூறிய மாதியின் கண்களில் ஈரம் பசைத்தது.
“அம்மா, பெள்ளி சொல்கிறான், குறும்பர் ஏவர் வைத்து விட்டார்களாம். நிசமாய் இருக்குமாம்மா?”
“மந்திரமோ, மாயமோ, நன்றாக இருந்த கிளைக்கு, இந்த வீட்டுக்குப் பழுது வந்துவிட்டது. ஜோகி, தொரியனுடன் போய்த் தாத்தாவை அழைத்து வருகிறாயா? மணிக்கல்லட்டியிலிருந்து?”
“தாத்தா வந்து ஐயனின் காய்ச்சலை எப்படியம்மா போக்குவார்?”
“மருந்து தருவாரடா குழந்தாய்?”
இந்நிலையில் பல்லாயில் வைத்த நீர் கொதித்தது. முதல் நாள் கொண்டு வந்த தேயிலையைப் போட்டு, அந்த நீரை எடுத்து அவள் ஆற்றிக் கணவனுக்குக் கொண்டு சென்றாள்.
செழுங்கருமை கலந்து உரமேறிய மண்ணின் நிறம் போன்ற மேனி நிறம் பசலை படர்ந்து வெளுத்து விட, கன்னங்களில் எலும்பு முட்ட, அவன் முகத்தைக் கண்டதும் மாதியின் கவலைகள் எத்தனை அடக்கினாலும் அடங்காமல் எழும்பின.
“என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் மாதி?”
“ஒன்றும் இல்லை” என்று அவள் தரையை நோக்கினாள்; “இப்படியே போய்க் கொண்டிருந்தால் எத்தனை நாளைக்கு?”
கண்களில் நீர் சுரப்பதை அறிந்த கணவன், கசிந்தவனாய் அதைத் துடைத்தான். “ஏன் அழுகிறாய்? எனக்கு ஒன்றுமில்லை” என்றான்.
“நான் மணிக்கல்லட்டிக்கு ஐயனுக்குச் சொல்லி அனுப்புகிறேன். பிடிவாதம் செய்யாதீர்கள். நம் எருமைகளை ஓட்டிக் கொண்டு அங்கே போய்விடுவோம். எனக்கு இங்கே இருக்கவே பயமாக இருக்கிறது.”
அவள் மனசில் படர்ந்த யோசனை இதுவே. கொத்தும் முள்ளும் பிடிக்கும் கை நன்றாக இருந்தால் எங்கேதான் பிழைக்க முடியாது? அண்ணன் குடும்பத்தையும் தாங்கும் சுமை கழிய வேண்டுமானால், மரகத மலையை விட்டுப் போகாமல் முடியுமா? ஒரு பையன் இருக்கிறான்; வயசுக்கு வந்து குடும்பத்துக்குப் பொறுப்பாவான் என்றிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையையும் வற்ற அடித்துவிட்டுப் பையன் மாயமாய்ப் போய்விட்டான். இனி, நடக்கப் பயிலும் குழந்தை என்றைக்கு நடவுக்குப் பெரியவனாவான்?
மரகதமலை மண்ணை உதறிவிட்டுப் போகும் வரையில் குடும்பத்துக்கு விடுதலை இல்லை என்றே அவன் நினைத்தாள்.
அவள் எண்ணத்தை அறிந்ததும் ஜோகியின் தந்தை குரலில் உறுதியுடன், “ஒருவரையும் வரச் சொல்ல வேண்டாம். என்னால் இந்த இடத்தை விட்டு வர முடியாது” என்றான்.
“அப்படியானால் உங்கள் அண்ணன் குடும்பத்தை எங்கேயாவது போய்ப் பிழைக்கச் சொல்லுங்க.”
“நீ என்னிடம் இந்தப் பேச்சை எப்படி மாதி எடுத்தாய்?” இருப்பதைப் பகிர்ந்து வாழ்வது நம் கடமை, பயந்து ஓடுவது கோழைத்தனம் அல்லவா?”
“ஒருவர் சுகமாக இருக்க, ஒருவர் சாவதா?”
“நான் இன்னொருத்தியைக் கட்டியிருந்தேனானால் நீ என்ன செய்வாய், மாதி?”
“இன்னொருத்தி பிள்ளைகளைப் பெற்றுத் தருவாள்; பூமியில் வேலை செய்வாள்; வீண் பேச்சுப் பேசிச் சண்டை போட்டு, இருக்கும் பிள்ளையை விரட்ட மாட்டாள்!” என்றாள் காரமாக.
“பிள்ளையை அவள் விரட்டவில்லை. நான் விரட்டினேன் மாதி, நான் விரட்டினேன். இரிய உடையார் ஆணையை நான் சரியாக ஏற்கவில்லை.”
“மனப்பிராந்தியில் நீங்கள் இதையே சொல்லி என்ன பயன்?”
“மாதி, நேற்று புலியுடன் சண்டை செய்வது போல் கனவு கண்டேன். தாவி வந்து மேலே கைகளைப் பிடுங்க வருகிறது. நான் எதிர்த்து எதிர்த்து வீழ்த்துகிறேன். அது பின்னும் பின்னும் சாகாமல் வருகிறது. நானும் சாகாமல் சளைக்காமல் போராடுகிறேன்.”
“அப்புறம்?”
“அப்புறம் முடிவே இல்லை. ஜோகி திரும்பினான். கை சில்லென்று மேலே பட்டது. விழித்துக் கொண்டேன். ஜோகிக்கு அண்ணன் கையைப் போல் தண்ணென்ற கை; சூடாகாத உடம்பு.”
“உங்கள் அண்ணனைக் குழந்தையுடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? காலையில் எழுந்து, என்னை எழுப்பாமல், பாட்டியை அழைக்காமல், தானே சுடுநீர் காய்ச்சினான். கன்றுகளையும் மாடுகளையும் அவிழ்த்து, இப்போது பாட்டிக்கு உதவியாகக் குப்பை கூட்டுகிறான். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவன் உங்கள் மகன்.”
“கனவு, சண்டை முடியாமலே முடிந்து விட்டது. அதற்கு என்ன பொருள் என்று புரிகிறதா உனக்கு?”
“இதற்கெல்லாம் அர்த்தம் உண்டா?”
“நான் வாழ்க்கையெல்லாம் போராடப் போகிறேன். புலியை எதிர்த்து நிற்பது போல் நிற்கப் போகிறேன்! இந்த நோவோடு போராடிப் போராடி சாகாமலே நிற்கப் போகிறேன்.”
இப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று கண்களில் நீர் முத்துக்கள் சிதற, அவன் வாயைப் பொத்தியது அவள் கரம்.
“அழகும் உடற்கட்டும் பார்த்து, நூறு ரூபாய் கொடுத்து உன் அக்காளை மூத்த மகனுக்கு ஐயன் கொண்டு வந்தார். அந்த அழகும் கட்டும் நிலைக்கவில்லை; அழகில்லாமல் மெலிந்த பெண்ணை மாமன் எனக்குத் தந்தார். ஐம்பது வெள்ளி ரூபாய்க்கு, விலை மதிப்பில்லாத தங்கத்தைத் தந்தார். நான் இப்படியே போராடிக் கொண்டிருந்தால், நீ வெறுக்க மாட்டாயே மாதம்மா?”
“என் ஜோகியை விட்டு நான் போவேனா? இதெல்லாம் என்ன பேச்சு? நம் குழந்தையை இன்னோர் அம்மா வந்து பார்க்க நான் விட்டுப் போவேனா? எனக்கு உங்கள் இந்த உயிர் இருக்கும் இடம் கோயில். என் குழந்தைகள் அதில் ஒளிரும் தீபங்கள்.”
மண்ணோடு விளையாடும் அந்தக் கைகள் அவன் கண்ணீரில் நனைந்தன.
சுள்ளென்று வெயில் உறைத்த பின் மெள்ள ஜோகியின் தந்தை எழுந்து வந்தான். பால்மனைக்குச் சென்று மடியுடுத்திக் கொண்டான். மெலிந்த கைகளில் பாற்குவளையுடன் வீட்டுப் பின்புறம் எருமையினிடம் வந்தான். ஜோகி கன்றை அவிழ்த்து விட்ட போது எருமை, அருமை எஜமானனின் கையை நக்கியது.
அளவற்ற பலவீனத்தினால் அன்று ஜோகியின் தந்தையினால் பாற்குழாயைக் கூடச் சரியாகப் பிடிக்க முடியவில்லை. அவன் கைகளுக்குத்தான் மாடுகள் பாலைப் பொழுந்தனவே தவிர, அவன் பலம் ஓய்ந்து விட்டது. ஓர் எருமை கறக்கு முன் அவன் உடலில் இறுக்கம் உண்டாயிற்று. பாத்திரத்தில் பாழை ஊற்றியவன், சோர்ந்து அங்கேயே சாய்ந்து விட்டான்.
மாதி, பார்த்தவள் பதறினாள். அவன் பாற்குவளை ஏந்தி மடியாடை தரித்து வரும் நேரம், எதிர் நிற்கக் கூடத் தயங்கும் அவள், ஓடிச் சென்று சுவருடன் சாய்ந்த நிலையில் தாங்கிக் கொண்டாள்.
“என்ன? ஐயோ! நான் காகையண்ணனை வரச் சொல்லியிருப்பேனே! உடல் சில்லிட்டு வேர்க்கிறதே?” என்று அவள் கண்ணீருடன் மாமியைப் பரபரப்புடன் அழைத்தாள்.
மாட்டுக் கோலுடன் நின்ற ஜோகி ‘கோ’ வென்று கதறியதைக் கண்ட தந்தை மெள்ளக் கண் விழித்து, அவனை உட்காரச் சொல்லிச் சைகை காட்டினான்.
“மாதி” என்றான்.
“என்ன?”
“இன்று திங்கட்கிழமை அல்ல?”
“ஆமாம்.”
“ஜோகிக்குச் சுடுநீர் வைத்து முழுக்காட்டி, நல்ல துணிகள் உடு; வெல்லம் இருக்கிறதில்லையா? நீயும் முழுகி விட்டுச் சீனிப் பொங்கல் வை.”
மாதி விழிக்கடையில் உருண்ட நீரைச் சுண்டி எறிந்தாள். அவனுடைய உள் எண்ணம் புரிய அவளுக்கு நேரமாகவில்லை. அந்தப் பையனுக்கு ஊர் கூட்டி, ‘கூடு, கூடாக’த் தானியம் சமைத்து விருந்து வைத்துச் செய்த வைபவத்தை, இன்று தன் மைந்தனுக்கு ஒரு கோலாகலமுமின்றிச் செய்யப் போகிறான் லிங்கையா. இளஞ் சிறுவன் ஜோகி இப்போதே வீட்டுப் பொறுப்பை ஏற்கப் போகிறானா?
“ஜோகி மிகவும் சின்னப் பையனாயிற்றே!” என்றாள்.
“குறுக்கே பேசாதே. ஜோகிக்கு எருமை கறக்க மிக ஆசை இல்லையா ஜோகி?”
“ஆமாமப்பா, ரங்கனுக்குச் செய்த போதே நானும் கறக்கிறேன் என்றேனே!”
“இன்று நீதான் பால்மனைக்குப் போகப் போகிறாய்; போ, அம்மை சுடுநீர் வைக்கையில் அந்த எருமைக்குத் தண்ணீர் ஊற்று” என்றான் லிங்கையா.
ஜோகி மகிழ்ச்சியுடன் ஓடினான்.
அன்று முற்பகல், வீட்டு வாசலில் ஜோகி குளிப்பாட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த எருமைக்கு அருகில் மெல்ல வந்த தந்தை, ‘ஹொணே’யில் கொஞ்சம் பாலைக் கறந்தான். மைந்தன் கையில் அதைக் கொடுக்கையில், ‘பஸவேசா, இன்று இந்தப் பையன் இந்த உரிமையை ஏற்கட்டும். இவனை ஐயனின் நெருப்பைக் காக்க நான் கட்டாயமாக விடுகிறேன். என்னை மன்னித்துவிடு. இந்தக் குடும்பங்கள் ஒரு குறையுமில்லாமல் தழைக்கட்டும்’ என்று மனம் இறைஞ்சி நின்றது.
ஜோகி இரு கைகளையும் நீட்டிப் பாற்குழாயைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய பிஞ்சு விரல்கள் வெகுநாள் பழக்கப்பட்ட பணியைச் செயவன போல் இயங்கின. குவளையில் பால் வெண்ணுரையாகப் பொங்கி வந்தது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளும் எழில் வடிவில், வளமார் நங்கையாய், வசந்தத்தில் நாணிக் கண் பொத்தி நிற்கும் வனச் செல்வியாய், நீல மோகினியாய், வானவனின் காதலியாய் எழில் நிறைந்து திகழ்ந்தது அந்த மலைப் பிரதேசம். கண்களுக்கெட்டிய தூரமெல்லாம் ஒரே நீல மயம்; திரும்பும் இடமெல்லாம் குறிஞ்சித் தேன் உண்ணவரும் வண்டுகளின் ரீங்காரம்; அருவிக் கலகலப்பின் இனிமையை வர்ணிக்க இயலாது. காலமெல்லாம் கண் கொட்டாது நோக்கி நிற்கும் மலைக் காதலியை வானம் இறங்கி வந்து பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தழுவிப் போகுமோ? உடல் சிலிர்த்த மலை நங்கையின் உடலெல்லாம் பூந்துளிகளாகப் படிந்து மலர்ந்திருக்கும் அழகு, அந்த வானவனின் மேனி நிறமோ? அன்றி, வானவனின் மேனிக் கொப்ப இயற்கையன்னை பன்னிரண்டு ஆண்டுகளாக நூற்று நெய்த நீலப்பூம் பட்டாடையைச் செல்வ மகளுக்கு அணிவித்து மணமகனின் வருகைக்குக் காத்திருக்கிறாளோ? மெல்லிய மேகச் சல்லாத்துகில் கொண்டு மேனியெழிலை மறைத்தும் மறைக்காமலும் கள்ள நகை புரியும் கோலம் கண்டு இளங்கதிரோன் புன்னகை பூப்பது எதற்காக? “மடமகளே, உன் காதலன் நான்; வான்வெளியல்ல; நான் இல்லாத வானவெளியில் உயிர் இல்லை. என்னைப் பார்” என்று தான் நகை பூக்கிறானோ?
படிப்பை முடித்து விட்டுத் தந்தையின் ஊராகிய மணிக்கல்லட்டிக்கு வந்திருந்த கிருஷ்ணன், ஊரின் புறத்தே, கானக நடுவில் குமரியாறு குதித்துக் கீழே விழும் காட்சியைக் கண்ட வண்ணம் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மன ஓட்டத்தில் இந்தக் கற்பனை யூற்றுப் பிரவாகமெடுத்துப் பொங்கி வந்தது. அவன் அவர்கள் இனத்துக்கே, குலத்துக்கே, மண்ணுக்கே பெருமை உண்டாகும் விதத்தில், கீழ் மலையிலும் ஒத்தையிலுமாகப் படித்துப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சென்னைக் கல்லூரியில் பி.ஏ. பரிட்சையும் எழுதி விட்டு, அந்த ஆண்டு மலைக்குத் திரும்பியிருந்தான். மரகத மலையில் தாத்தாவின் வீட்டிலேயே அவன் குழந்தைப் பருவம் முழுவதும் கழிந்திருந்ததால், அங்கே தோன்றாத எண்ணங்களெல்லாம் புதுமையாக இந்த இடத்தில் தோன்றின. மேலும், படிப்பு படிப்பு என்று கல்வியறிவின் புதுப் போதையுடன் புகழேணியில் ஏறிய வண்ணம் வாலிபத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த நாட்களில், மலையின் வனப்புகளை எண்ணும் அமைதி ஏது?
பிற்பட்ட சமூகத்தினர் என்ற வார்த்தையால் அவன் கண்ட வெளியுலகம் குறித்த ஓர் அடையாளம், விடுமுறை தோறும் மரகத மலைக்கு வரும்போதெல்லாம், கல்வி, நாகரிகம் என்று பண்படாத மக்களைக் காணும் போதெல்லாம் - அவன் மனசில் தைத்தது மட்டும் உண்மை. அவன் இப்போது கல்வி என்ற ஏணியில் ஏறிக் குறிப்பிட்டதொரு லட்சியத்துக்கு வந்து விட்டான். ஓய்வாக அம்மை, அப்பன், தம்பி, தங்கை என்று குலவ குடும்பத்தின் இனிய கற்பனைகளும் கனவுகளும் மனசைக் கிளர்த்தும் காலம்; திரும்பும் இடமெல்லாம் இயற்கையின் இளவேனிற் கோலம், தனிமையும் கூடி வந்த போது, கற்பனைகள் பொங்கியதில் அதிசயம் இல்லையே? உண்மையில் அந்த இளங்காலை வேலையில், குமரியருவி வீழும் காட்சியைப் பார்த்துக் கொண்டு மனதைத் தன் போக்கான கற்பனைகளில் படர விடுவதே அவனுக்குக் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது.
மலைக்கு அப்பாலுள்ள மக்களையும், பல வண்ண நாகரிகங்களையும் கிருஷ்ணன் கண்டதும் அவற்றில் மோகம் கொண்டதும் ஓரளவில் உண்மையே. வண்ண வண்ணச் சேலைகள் தரித்துக் கார் குழலில் மல்லிகையும் முல்லையும் சூடி, வெளியுலகில் நடமாடிய பெண்களை முதல் முதலில் எத்தனை வியப்புடன் அவன் கண்டான். நேரான பாதைகள், மாடிக் கட்டிடங்கள், கல்லூரிகள், கடை கண்ணிகள், விரிந்து பரந்த நீலக்கடலைத் தழுவி வரம்போடு அடக்கி வைத்திருக்கும் அழகிய மெரினாக் கடற்கரை எல்லாவற்றையும் புதுமைக் கண்களுடன் கண்டு அதிசயித்திருக்கிறான்.
ஆனால், சொந்த மலையின் கவர்ச்சி என்றும் புதுமை வாய்ந்ததன்றோ? அதன் புதுமை என்றுமே மங்குவதில்லை. பருவங்கள் மாறி மாறி மலைப் பூமியை எவ்வளவு அழகாகக் காத்து வருகின்றன!
ஒருவேளை அழகிய இயற்கையில் ஒன்றிவிட்டதனால்தான், அந்த மலைமக்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லையோ? தங்கள் சமூகம் ஓரளவில் நிறைவு கொண்ட சமுதாயம் என்பதே கிருஷ்ணனின் எண்ணம்.
மண்ணைக் கிளறித் தானியம் விளைப்பதும், தொழுவதும், உண்பதும், பெண்டிரைச் சேர்த்து மக்களைப் பெருக்குவதும் தவிர, வாழ்வில் ஏதுமில்லை, வேண்டாம் என்ற நிறைவு.
இந்த நிறைவு முன்னேற்றத்தைத் தடுக்கிறதென்று கிருஷ்ணன் அப்போது எண்ணவில்லை. முன்னேற்றம் என்ற சொல்லையே அவன் சிந்திக்கவில்லை. ஆனால், வேறு ஏதும் நாம் வாழ்வில் பெற வேண்டும் என்ற தாகம் இல்லாதது, இன்னும் எத்தனை எத்தனை மேன்மைகளையும் இன்பங்களையும் அடையாதவர்களாக ஆக்கி விடுகிறது? எழுத்தறிவும் கல்வியறிவும் எத்தனை எத்தனை இன்பங்கள்! பல கற்றும் பல கேட்டும் சிந்திக்கத் தெரிந்தவன், காலத்தை எவ்வளவு பயனுடையதாக ஆக்கிக் கொள்கிறான்!
மலையை வான அரசனின் காதலியாக எண்ணிப் பார்த்த தன் கற்பனையை உன்னிய போது கிருஷ்ணனுக்குப் பேரானந்தமாக இருந்தது. காதல் என்ற சொல் நினைவில் நிற்கவே, அவன் உடல் சிலிர்க்கக் கண்களை மூடிக் கொண்டான். அவன் தனக்குரிய அழகு மங்கையைத் தான் படித்திருந்த காவியங்களின் நாயகிகளைப் போலவும், தன்னை நாயகனைப் போலவும் பாவித்துக் கொண்டான். மாமன் மகள் என்று கூறிக் கொள்ள அவனுக்கு மாமன் இல்லை. தூர உறவான அத்தை ஒருத்தி தேன் மலையில் இருக்கிறாள். அவளுடைய மகள் ஒருத்திதான் முறைப் பெண் என்று சொல்லக் கூடிய நிலையில் உண்டு. அவளை எப்போதோ நாலைந்து பிராயத்தில் தீமிதித் திருவிழாவில் அவன் பார்த்திருக்கிறான். அவள் இப்போது பருவ மங்கையாக இருக்கக் கூடும். அவள் முகங்கூட அவனுக்கு நினைவில்லை. அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவர்கள் வழக்கப்படி, மார்புக்கு மேல் வெள்ளை முண்டுத்தான் உடுத்திருப்பாள். இளவேய்கள் போல் தோள்கள் தெரியும். உருண்டையான கைகளில் வெள்ளிக் கடகங்களும், தளிர் விரல்களில் மோதிரங்களும் அணிந்திருப்பாள். உச்சந்தலையை மூடி, வெளுப்பாக அவள் கட்டிக் கொண்டிருக்கும் வட்டுக்குக் கீழே, அடங்காத கருங்குழற்கற்றை, வட்டமதியன்ன முகத்தின் அழகுக்கு அழகு செய்யும். அரும்புப் பல் வரிசைகள் தெரிய, பவள இதழ்கள் விலக, அவனை ஓரக்கண்களால் நிமிர்ந்து பார்த்துவிட்டு, அவள் தலையைக் குனியும் போது!... குமரியாற்றின் பேரோசைக்கு மேல் கிண்கிணிச் சிரிப்புக்களும் பேச்சுக்களும் தனித்து ஒலித்து அவனைச் சிரிப்புடன் எழச் செய்தன.
இரு மலைகளுக்கும் இடையில் குமரியாறு குதித்து வீழ்ந்து வட்டமிட்டுச் சுழித்து ஓடும் இடத்துக்கு, மேலிருந்து காடான செடிகளையும் புதர்களையும் விலக்கிக் கொண்டு, இளமங்கையர் கூட்டம் ஒன்று நீராட வந்து கொண்டிருந்தது. இளவேனிற் காலம்; ஒத்த பருவத்தினர்; சிரிப்புக்கும் கலகலப்புக்கும் ஏது பஞ்சம்?
அங்கே மேலே பாறையில் இளங்காளை ஒருவன் அமர்ந்து தங்கள் சிரிப்பையும் கொம்மாளத்தையும் காணக்கூடும் என்ற நினைவே எழுவதற்கில்லாமல் அவர்கள் அந்த நதி மகளுக்கு மேல் அட்டகாசம் செய்தார்கள். இளம் பெண்களைக் கண்டு வானக் கதிரவனுக்கும் உற்சாகம் வந்துவிட்டது போலும்! அவன் மேகத்திரையை உதறிவிட்டு, காட்டிலும் மலையிலும் சிறு சந்துகளிலும் புகுந்து தன் கிரணங்களால் அந்த அருவிப் பெண்ணையும் மலரன்ன மங்கையரையும் தழுவிக் கொண்டிருந்தான். இடையிடையே பாறைகளையும் கற்களையும் முட்டி மோதிக் கொண்டு, பள்ளங்களில் சுழித்துச் சரிவுகளில் பளிங்காகி இந்திரஜாலங்களைப் புரியும் ஆற்றிலே, நடுநடுவே பாறைகளில் கால்களை நீரில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தவரும், நுரைத்து அழுக்குப் போக்கும் ‘வெக்கிச் செடி’ கொண்டு வந்து கல்லில் அரைத்தவரும், கரையில் முன்னேற்பாடாகத் தீமூட்டியவருமாக இருக்கையில், ஒருத்தி மட்டும் துணிச்சலாக இறங்கி முழுகிவிட்டு, மற்றவர் மீது நீரை வாரி இறைத்தாள். தீ எரியாதபடி அவள் இறைத்த நீர் கரையில் வாரி அடித்தது. தீமூட்டியவள் ஓடி வந்து அவளைத் துரத்தினாள். அந்தத் துணிச்சல் காரி, சொட்டச் சொட்ட, அரைத்த இலையைத் தலையில் தேய்த்துக் கொண்டு நீண்டகுழல் கருமேகங்களென நீர்ப்பரப்பில் தெரிய முழுகினாள்.
குளிரவில்லையோ? அல்லது பொறுத்துக் கொள்ளும் சக்தி அதிகமோ? தண்ணீரில் அவள் ஒருத்திதான் அப்படித் துளைந்தாள். மற்றவர்களைக் கேலி செய்து தண்ணீர் சொட்டச் சொட்ட நீரை வாரி இறைத்தாள். மறுபடியும் சருகுகள் சேகரித்துத் தீமூட்டிய நங்கைக்கு, அவள் அட்டகாசம் கோபத்தை வருவித்தது போலும்! அவளைத் துரத்திக் கொண்டே ஓடினாள். துரத்துபவளின் பிடிக்கு எட்டாமல் விலக முயன்ற மங்கை, பின்னால் பாறை சறுக்க, சுனைப் போல் தென்பட்ட இடத்தில் தொப்பென்று விழுந்து விட்டாள்.
பார்வைக்குச் சிற்றருவியாக, பல இடங்களிலும் முழங்கால் நீரே ஓடுவதாகத் தெரிந்தாலும், அணை போல் வட்டமாக இருந்த பாறைகளுக்கு நடுவே சுனைபோல் நிரம்பியிருந்த இடத்தில், நீரின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. ஒரே சுழிப்பு, ஒரே வேகம்; காலை ஊன்றி வரமுடியாத வழுக்குப் பாறைகள். நல்ல ஆழத்தில் சுழன்று சுழன்று அவள் அபாயத்தில் திக்குமுக்காடியதைக் கண்டதும் அவர்கள் சிரிப்பும் கலகலப்பும் ஒரு நொடியில் அடங்கி விட்டன.
“ஐயோ!” என்ற கூக்குரலுடன் அவர்கள் செய்வதறியாமல் கைகளைப் பிசைகையில் அங்கு ஒரு விந்தை நிகழ்ந்தது.
உயரே, நதி விழும் இடத்துக்குச் சமீபத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அருவியோடுதான் விழுந்து வந்தானோ என்ற வேகத்தில் பகலில் ஓடி வந்தான்; சுனையில் குதித்தான். கண்ணீரில் மூழ்கி மூழ்கித் தடுமாறும் மங்கையைத் தோளுக்கு மேல் பூப்பந்து போல் தூக்கிப் பாறைக்கு அப்பால் விடுத்தான். பின்பு கரையோரம் நகர்ந்து, வளைந்திருந்த மரக்கிளையைப் பற்றிக் கொண்டு எதிர்க்கரையில் ஈரம் சொட்டச் சொட்ட ஏறி நின்றான்.
விழுந்து எழுந்து தன்னைக் காப்பாற்றியவன் ஓர் ஆண் மகன் என்பதை அறிந்த மங்கை, ஈரம் சொட்ட எதிர்க்கரையில் நின்றவனை ஒரு முறை நிமிர்ந்து நோக்கினாள். அவனும் அவளைப் போலவே தான், அவளை அப்போதுதான் யார் என்று அறிகிறானோ? அவனையும் அறியாமல் இதழ்களில் இளநகை அரும்பியது.
குறும்புத்தனமெல்லாம் கண்களுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கிவிட்டாற் போன்ற ஓர் ஒளி சிந்த, அவள் தன் ஆடைகளைப் பிழிந்து கொண்டாள்.
“கிருஷ்ணண்ணன்!” என்று ஒருத்தி குறுநகை செய்தாள்.
“இவள் தான் பிடித்துத் தள்ளிவிட்டாள்!” என்று பொய்க்கோபம் கொண்டு புகன்றாள் அவள்.
“பார் பார், வேண்டுமென்றே விழுந்துவிட்டுப் பழியைப் போடுகிறாள்!” என்று சிரித்தாள் தீ மூட்டியவள். பின்னும் சருகு சேர்த்துக் கொண்டு.
“இருக்கும், இருக்கும். இல்லையாடி பாரு? கிருஷ்ணனை மேலே பார்த்துவிட்டுத் தானே தண்ணீரில் விழுந்தாய்” என்றாள் இன்னொருத்தி.
“அப்படித்தான், அப்படித்தான்!” என்று எல்லோரும் குபீரென்று சிரித்துக் கொண்டு, தீயில் சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டார்கள்.
பாருவுக்குக் கன்னம் சிவந்ததென்னவோ உண்மை. கருநீலமாகக் குளிரில் மாறிய அவள் இதழ்கள் தீயின் பக்கலில் வரவே அவசியம் இல்லாதபடி ரோஜாவாக மாறின.
அவர்கள் ஆடைகளை மாற்றிக் கொண்டு வீடு திரும்பு முன் கிருஷ்ணன் வீடு சென்று விட்டான்.
விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய அம்மை, “என்ன ஈரம் இது?” என்றாள்.
அம்மையானாலும் மங்கையொருத்தியை நீர்ச் சுழலிலிருந்து தப்புவித்ததைச் சொல்லிக் கொள்ள அவனுக்கு நாணமாக இருந்தது. “அருவிக்குப் போனேன். சுனையில் ஆழம் கொஞ்சமென்று இறங்கினேன்; நனைந்துவிட்டது” என்று சொல்லி, ஆடைகளை மாற்றிக் கொள்ளப் போனான்.
விரிந்த விழிகளை மாறாமலே அம்மை நோக்கினாள். எவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டான்! மாநிறத்தானென்றாலும் பாட்டனைப் போல நல்ல உயரம்; பெண்மையின் சாயை படிந்த முகம் வெயிலிலும் குளிரிலும் படாமல் பூவாய் வளர்ந்தவன், படிப்பில் தோய்ந்த உள்ளம்.
அன்னை உள்ளம் பெருமையில் பூரித்தது. எத்தனை புத்தகங்கள்! எத்தனை ஆண்டுகள் படித்து விட்டான் அவள் மகன்! அவனுக்கேற்ற பெண் ஒருத்தி வர வேண்டுமே! அவள் மண்ணைக் கிளறி மாயவேண்டாம். அவனுடைய புதுகைக் கண்களுக்கு உகக்க வேண்டுமே! பயிரிலும் விளைவிலுமே கவனத்தை ஊன்றியிருக்கும் கணவனின் கவனத்தை அவள் திருப்ப வேண்டும். அவள் வந்து, முற்றம் நிறைய அவளுடைய மைந்தனின் குழந்தைகள் விளையாட அவள் கண்டு களிக்க வேண்டும்.
தாயின் தீர்மானங்கள் ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் உடைமாற்றிக் கொண்டு, வாசலில் வந்து நின்றான்.
அந்தச் செண்பகப்பூ மேனிக்கு உரியவள் அவனுக்குப் புத்தம் புதியவளாகத் தோன்றினாலும் புதியவள் அல்லள். அத்தனை மங்கையருக்குமிடையே அவள் ஒருத்திதான் வட்டமதி முகத்தினளாக, அரசிளங்குமரி ஒருத்தியைப் போல் தோன்றினாள். சின்னஞ்சிறு வயசிலிருந்தே அவன் கண்டுவரும் பாரு, இத்தனை அழகியாக எப்படி மாறினாள்? காதலைப் பற்றிக் கற்பனை செய்கையிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன் நேர்ந்தது?
உள்ளத்துக் குறுகுறுப்பு உடலெங்கும் பரவியது. அந்தக் குறும்புக்காரி, அவன் நோக்கிய போதே, அவனைப் புத்தம் புதிதாகப் பார்ப்பவளைப் போல் பார்த்தாளே, ஏன்? கல்வி கற்காவிட்டாலும் அறியாமையே மங்கைக்கு ஓர் அழகாக விளங்குமோ?
‘தனிப்பட்டவளாக, கொள்ளை அழகுடன் அண்டையிலே நான் காத்து நிற்பதை மறந்து, எவளோ தேன்மலைப் பெண்ணைத்தானே நினைத்தாய்?’ என்று அவள் பொய் கோபத்துடன் மன அரங்கில் நின்று அவனிடம் கேட்டாள். ‘நீ தேன்மலைக்காரியை நினைத்துக் கொண்டு கற்பனை செய்த பெண் நானே தவிர வேறு எவளும் அல்லள். தெரியுமோ? அப்படி நீ தேடினாலும் அவள் கிடைக்க மாட்டாள்?’ மின்னலைப் போல் பாய்ந்து ஓடினாள்.
கிருஷ்ணன் உள்ளம் இனிக்க, உலகம் மறக்க, சுனையில் முழுகித் தன்னுள் புகுந்து விட்ட அவளுடைய எண்ணங்களிலேயே திளைத்துக் கொண்டிருந்தான்.
அன்று விடியும் நேரத்திலிருந்தே, ‘ஸ்நோடௌன்’ பால் பண்ணையில் கெடுபிடியாக வேலை நடந்து கொண்டிருந்தது. பங்குனி இருபது தேதியாகி விட்டது. கவர்னர் துரையும் சிப்பந்திகளும் உதகை வாசத்துக்கு வரும் காலமாயிற்றே! கவர்னர் மாளிகைக்கு வரும் முதல் ‘ஸ்பெஷல்’ வண்டி முதல் நாளே வந்து விட்டது. கவர்னர் மாளிகைக்குக் குத்தகையாகப் பால் கொடுக்கும் பொறுப்பு ‘ஸ்நோடௌன்’ பால் பண்ணையைச் சேர்ந்ததாயிற்றே! வேளைக்குப் பத்து முதல் பதினைந்து புட்டிகள் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கறக்கும் சீமைப் பசுக்கள் ஐம்பதும், பத்துப் பதினைந்து எருமைகளும் அந்தப் பால் பண்ணையில் இருந்தன. குட்டைக் கொம்புகளும், கறுப்பும் வெளுப்புமாகச் சடை சடையான உடலுடன் தொங்கத் தொங்க மடிகளுமாக ‘ஸ்நோடௌன்’ புல்வெளியில் மனம் போனபடி அந்தப் பசுக்கள் திரியும். சீமையிலிருந்து வந்த வெள்ளைக் கவர்னரின் வீட்டுச் சமையலறை நிர்வாகியாக வந்து மாசம் ஐந்நூறும் அறுநூறும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது துரையின் முதல் தாரத்தின் மகன் தான் ஸ்நோடௌன் பால் பண்ணையின் உரிமையாளனான துரை. கவர்னர் மாளிகைக்குத் தேவையான பால விநியோகத்துக்கென்றே சர்க்கார் உதவி பெற்று இயங்கும் பண்ணை அது. கவர்னர் துரை அவ்வப்போது சென்னைக்குச் சென்றுவிட்டாலும் சீமாட்டி இருப்பாள். அவள் மார்கழி மாசம் கிறிஸ்துமஸுக்கு முதல் வாரந்தான் கீழ்தேசம் செல்வாள். அதுவரையில் அவளுக்காக ஓர் உலகமே மாளிகைக்குள் இயங்கும். ஸ்நோடௌன் பால் பண்ணையில் பாலுக்கு அதுவரையில் கிராக்கிக்குக் குறைவில்லை. மீது இரண்டு மூன்று மாசங்களில் துரை பாலை க்ரீமாக்கி, வெண்ணெயாக்கிச் சென்னைக்கு அனுப்பி விடுவார்.
இந்தப் பால் பண்ணையில், காலையில் வரிசையாகக் கொட்டடியில் மாடுகளைக் கறக்கையில் துரை வந்து பார்வையிடுவார். பிறகு, பால் அறையில், பெரிய பெரிய தொட்டிகளில், பஞ்சில் வடிகட்டுவார்கள். பின்னர், எட்டு அல்லது பன்னிரண்டு புட்டிகல் பிடிக்கும் தூக்குப் புட்டிகளில் ஊற்றி விநியோகம் செய்வார்கள்.
பால் விநியோகத் தலைமைப் பதவியில் நின்ற ரங்கன், அன்று காலையிலேயே ஆட்களை விரட்டிக் கொண்டிருந்தான். துரை இரண்டு நாட்களாக வேட்டைக்குச் சென்றிருந்தார்.
“ம்... ஆகட்டும்! எத்தனை நேரம்? டேய் பெட்டா! இந்தப் புட்டியைத் தனியாக வை. ஸ்மித் துரை பங்களாவுக்கு இது போக வேண்டும். சீக்கிரம் கவர்னர் பங்களாவை முடித்து விட்டு, இதை எடுத்துப் போ” என்று அவசர அவசரமாகப் புட்டிகளில் பாலை நிரப்பிக் கொண்டிருந்தான்.
பத்துப் புட்டிகளுக்கு ஒரு புட்டி நீரென்று முன்னதாகவே விட்டு வைக்கத் தேவையில்லை. அன்று துரை தான் இல்லையே! அவ்வப்போது தாராளமாக ஊற்றிக் கலந்தான். காலை பத்து மணிக்குள் பால் விநியோகம் முழுவதும் முடிந்து விட்டது. நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கணக்கை எழுதினான். படியாத கையெழுத்தில், “கவர்னர் பங்களா 404 புட்டி, ஆஸ்பத்திரி 25 புட்டி, கார்டன் துரை 8 புட்டி, டாக்டர் துரை 10 புட்டி” என்று கூட்டிக் கணக்கிட்டான். இத்தனை புட்டிகளில் பத்துப் பதினைந்து புட்டி தண்ணீர் கலந்தால் தெரியப் போகிறதோ? பத்துப் புட்டிகளின் விலை ஒரு ரூபாய்; ஒரு முழு வெள்ளிப் பணமாயிற்றே? மாசம் கிடைக்கும் ஐம்பது ரூபாய்கள், அவன் துரைக்குத் தெரியாமல் மாளிகைக்கு வெளியே வைத்துக் கொண்டிருந்த வாடிக்கை வீடுகளிலிருந்து வந்தன.
பன்னிரண்டு ஆண்டுகளில், இளமீசையும் தடித்த உதடுகளும், தந்திரத்தில் புரண்டு எழுந்த விழிகளுமாக வளர்ந்து விட்ட ரங்கனைப் பார்ப்பவர்கள், அவனை அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான். சுப்புப்பிள்ளையிடம் திருட்டு மூலத்தில் வியாபாரக் கலை பழகி, திருட்டுக் கிழங்கு வியாபாரம் செய்து, திருட்டுக் கோழிகள் வளர்த்து, ரங்கன் ஓரளவு உலக அநுபவத்தில் புரண்டு எழுந்த நிலையில், சுப்புப்பிள்ளை அவனைக் கத்தரித்துக் கொண்டு விட்டான். பட்டுப் பையில் முடிந்து, பாறை இடுக்கில் வெள்ளிப் பணமாக ஒளித்து வைப்பதை அவன் கண்டுவிட்டான் என்று அறிந்த பிறகு ரங்கனுக்கும் அவனுடன் கூட்டு வைத்துக் கொள்வதில் விருப்பம் இல்லை.
கவர்னர் மாளிகைத் தோட்டத்துத் துரையின் வீட்டில் கோழிகளுக்குத் தீனி போட்டு அவற்றைப் பார்க்கும் பையனாகச் சில ஆண்டுகள் கழித்தான். பின்பு பெரிய தோடத்தில் பூ விற்பனைப் பகுதியில் மாறினான். செண்டுகளும் வளையங்களும் கட்டவும் ஜாடிகளில் பூ வைக்கவும் தெரிந்து கொண்டான். ஆனால் எங்கே மாறினாலும் அவன் பட்டு பையை மறந்துவிடவில்லை. குதிரைப் பந்தய மைதானத்தில் ஒவ்வொரு முறையும் ஐந்து ரூபாய் கட்டி அதிருஷ்டத்தைச் சோதனை செய்வான். நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் ஐந்துக்கு மேல் வைக்க மாட்டன. சென்ற முறை ‘ஸ்வீப்’பில் நான்கு நூறுகள் விழுந்து அவன் அதிருஷ்டத்தை உச்சிக்கு ஏற்றிக் காட்டி விட்டது.
இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில், வண்டுச் சோலைக் குடிசையில் நான்கு உயர்ந்த ரகக் கோழிகள், ஆறு ஆடுகள், இரண்டு சீமைக் கன்றுகள் தவிர, கையில் அறுநூறு ரூபாயும் அவன் வசம் சேர்ந்திருந்தன. அந்தக் குடிசைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் அவன் வந்தபோது வாசலில் ஒரு வால்பேரிக் கன்று கொணர்ந்து நட்டிருந்தான். அது இன்று பூத்துக் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.
பன்னிரண்டு ஆண்டுகளில், இவை தவிர, பிழைக்கப் பல வழிகளையும் தெரிந்து கொண்டவனாக அவன் முதிர்ந்து விட்டானே! பால் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு அவன் இருகைகளிலும் பத்துப் புட்டிப் பாலைச் சுமந்தவனாக, கவர்னர் மாளிகைக்கு வெளியே செல்லும் பாதையில் நடந்தான்.
உள்ளத்தில் உவகை தளும்பியது. ஒரு மழை பெய்து, வெம்மையும் புழுதியும் அடங்கி, இளவேனிலின் பசுமையும் அழகும் கண்ட இடங்களிலெல்லாம் அழகுக் கோலம் செய்திருந்தன. கவர்னர் மாளிகையின் முன்னே நீலவண்ணப் பூக்களாகவே தெரிந்த மரங்கள், வெகு தூரத்தில், பாதையில் செல்லும் போதும் அவன் கண்ணுக்குத் தெரிந்தன. குறிஞ்சிப் பூக்களின் நினைவு வந்தது அவனுக்கு.
ஹட்டியை விட்டு ஓடி வந்து, ஒரு குறிஞ்சியாகி விட்டதே! இந்த ஆண்டில் குறிஞ்சி பூத்து, அவன் ஊர்ப் பக்கமெல்லாம் அழகு கொழிக்குமே!
ஊர்ப்பக்கம் போக வேண்டும் என்ற ஆவல், அவனுள் மலர்ந்தது. அப்போது ஊரின் பக்கம் அவனுக்கு எவரையும் பார்க்கவோ, உறவு கொண்டாடவோ ஆதாரம் இல்லை. வாழ்வில் உண்ணவும் இருக்கவும் பணம் சேகரிக்கவும் நல்ல கோட்டும் தொப்பியும் அணியவும் அவன் சௌகரியங்களைப் பெற்று விட்டான். அடுத்தபடியான அவசியத்தைத் தேடும் காளைப் பருவத்தினனான அவன் ஊர்ப்பக்கம் செல்ல விரும்பியதில் அதிசயமில்லையே?
இத்தனை ஆண்டுகளில் அவன் மட்டுந்தானா வளர்ந்து விட்டான்? உதகை நகரத் தெருக்களில் எத்தனை கோலாகலம்! மூன்று பேர் தள்ளும் வண்டிகளும் துரைகளையும், துரைசானிமார்களையும் தாங்கும் குதிரைகளும், குதிரை வண்டிகளுமே ஓடும் தெருக்களில், காற்றாய்ப் பறக்கும் குதிரையில்லா வண்டிகள் அல்லவா வந்துவிட்டன? சாலையின் ஓரங்களிலே, வடநாட்டாரின் துணிக்கடைகளில், சாமான் கடைகளில் எத்தனை எத்தனை விந்தைப் பொருள்கள்! ராஜாக்களும் வெள்ளைத் துரைகளுமே போகக் கூடிய ‘கிளப்’கள், சிற்றுண்டிச் சாலைகள், விடுதிகள், வரிசையாக விளக்குகள், மேட்டுக்கு மேடு கட்டிடங்கள், பள்ளிக் கூடங்கள், மாதா கோயில்கள், கச்சேரிகள்.
இவை மட்டுமா? நகரம் தெரியாமல் ஹட்டிகளுக்குள் முடங்கியிருந்த அவன் இனத்து மக்கள், கிழங்கு பயிர்ட்டு, உதகை நகர மண்டிகளில் குவித்து வியாபாரம் செய்யக் கற்று விட்டார்கள்; குதிரைப் பந்தயங்களுக்குக் கூட்டங் கூட்டமாக வருகிறார்களே!
ஒரு வேளை மரகதமலை ஹட்டியிலும் வெளியே கொண்டு வந்து வியாபாரம் செய்யும் அளவுக்குச் சிற்றப்பன் கிழங்கு விளைவித்திருக்கலாம்; பணத்தைச் சேர்த்திருக்கலாம். ஜோகி இளைஞனாக இருப்பான். ரங்கம்மை பெரியவளாக வளர்ந்து மணமாகி கணவன் வீடு சென்று விட்டாளோ என்னவோ? மிஷன் பள்ளியில் படித்த கிருஷ்ணன் பயல் என்ன செய்கிறானோ? அப்படிப் படித்து ஒரு வேளை வேதக்காரனாகிப் பாதிரிமார்களுடன் சேர்ந்து விட்டானோ என்னவோ?
பாரு?
மொட்டு மலர்ந்தாற் போல் மலர்ந்து நிற்பாள். அவனுடைய முறைக்காரி, காசும் பணமுமாகப் போய் அவளைக் கொண்டு வரவேண்டியதுதான்.
அதுவரை அவன் நினைத்தவையெல்லாம் சோடையில்லாமல் செயல்களாக நிறைவேறி விட்டன. பாருவை அழைத்து வருவதும் அப்படியே நடக்க வேண்டியதுதானே?
ஒருவேளை, ஜோகிக்கு அவளைக் கட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு அப்போது உதிக்காமல் இல்லை. அருகில் அவன் இருக்கிறான்; போய் வந்து தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால், ஹட்டியில் வேறு பெண்கள் அவனுக்கு மனைவியாகும் தகுதியுடன் இல்லையா? இருக்க மாட்டார்களா?
சந்தேகம் குறுக்கிட்டதும், அவனுக்கு நேராக மணிக்கல்லட்டிக்கே சென்றுவிட வேண்டும் என்ற ஆத்திரம் அதிகமாயிற்று. அந்த ஆத்திரத்தில் காலை விடுவிடென்று எட்டிப் போட்டுப் பால் வாடிக்கை வீடுகளுக்கு ஏறினான். பாலைக் கொடுத்துவிட்டு அவன் கீழே கடைகளுள்ள சாலைக்கு வருகையில், வெயில் வெகு சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. அன்று பகல் குதிரை பந்தயம் நடக்க இருந்ததனால் தெருக்களெல்லாம் கலகலப்பாக இருந்தன. கடைவீதியிலே, நீலக் கம்பளிகளும் சிவப்புக் கம்பளிகளும் போர்த்தவராக, அவன் இனத்தார் எத்தனை பேர்கள்!
பால் புட்டியுடன் சந்தைக் கடைக்குள் நுழைந்தான். கோயம்புத்தூர் ஆப்பக்காரக் கிழவி இப்போது அங்கு இல்லை. பிட்டும் மசால்வடையும் விற்கும் கடை ஒன்றே அங்கிருந்தது. ஓரணாக் கொடுத்து ஆறு மசால் வடைகளை வாங்கிக் கொண்டு ‘சேட் துணிக்கடை’க்குள் நுழைந்தான். வேட்டி மல்லும், சட்டைத் துணியும், ரவிக்கைச் சீட்டிகளும், கம்பளிக் கழுத்துப் பட்டியும் வாங்கிக் கொண்டான். எல்லாவற்றையும் சுமந்தவனாக அவன் கடையை விட்டு திரும்புகையில், வெகு நேரமாக வெளியே நின்று அவனையே கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், அவன் கையைச் சட்டென்று பற்றினான்; “டே ரங்கனில்லை நீ!” என்றான் ஆச்சரியத்துடன்.
ரங்கன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இருவர் கண்களும் ஆச்சரியத்தால் நிலைத்து நின்றன. அவன் பாருவின் அண்ணன் பீமன். ரங்கனின் தோற்றத்தை ஏற இறங்க நோக்கி அளவிட்டு, அவன் ஒரேயடியாக மலைத்துப் போனான். உடலில் நீல ஸர்ஜ் கோர்ட்டு! பால் பண்ணை மேஸ்திரிக்கு உரிய ஆடை; காளையாக வளர்ந்த தோற்றம்; கண்களில் தானாகப் பிழைக்கும் கர்வத்துக்கு உரிய ஒளி.
“எத்தனை வருஷமாச்சு! நீ எங்கோ ஓடிப் போய் விட்டாய் என்று நினைத்திருந்தோமே; எங்கே இருக்கிறாய், ரங்கா?”
பாருவை நினைக்கையிலேயே அண்ணன் கிடைத்து விட்டானே என்ற பேருவகை எய்திவிட்ட ரங்கன், “வண்டுச்சோலையில் இருக்கிறேன்” என்றான்.
இளங்குரல் உடைந்து, ஆண்பிள்ளைத் தொண்டையாக உறுதியும் கனமும் பெற்றுவிட்டதைக் கூடப் பீமன் ஆச்சரியத்துடன் கவனித்தான்; “நானும் இரண்டு மூன்று வருஷமாக ஒத்தைக்கு வந்து போகிறேன். ஐயன் வருகிறார். ஊரில் எத்தனையோ பேர் வருகிறார்கள். உன்னைத் தெரியவில்லையே, ரங்கா! பூமி ஏதாவது வாங்கியிருக்கிறாயா என்ன?”
அவனுடைய தோற்றம், அவன் பசையுடன் நல்வாழ்வு வாழ்வதையே பீமனுக்குத் தெரிவித்தது. நகரத்துக்கு வந்தால் அதிருஷ்டத்தில் எப்படியேனும் முழுகிவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை பீமனுக்கு உண்டு. ஆனால் அந்த நம்பிக்கை அவனுக்கு முயன்றும் வெற்றியே தரவில்லை. உடலுழைத்துக் கூலியாக நாளொன்றுக்கு ஆறணாச் சம்பாதித்தால், இரண்டணாவோ மூன்றணாவோ அவனுக்குச் செலவு போக மீதியாகும். அதைத்தான் வீட்டில் வாங்கிக் கொண்டார்கள். குதிரைப் பந்தயத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்தான். அது அவனையே விழுங்கி விடும் வேகத்தில் அவன் முதலீட்டை விழுங்கி விட்டது.
பணமென்னும் கவர்ச்சியில் தான் அவன் ரங்கனின் தோற்றத்திலேயே மயங்கினான்.
“பூமி வாங்கலாமென்று தான் இருக்கிறேன். ஊரிலே எல்லாரும் சுகந்தானே?”
“சுகந்தான். பாருவுக்குத்தான்...”
“என்ன?” என்றான் ரங்கன் பரபரத்து.
“ஒன்றுமில்லை, நல்ல இடத்தில் பாருவைக் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் ஆசையெல்லாம். முறை மாப்பிள்ளை சரியில்லையே என்று இருந்தோம். உன்னைக் கண்டது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா எனக்கு? வாயேன், போகலாம்.”
“எங்கே மணிக்கல்லட்டிக்கா?”
“ஆமாம்; இனிமேல் உன்னை விடுவேனா? கையோடு அழைத்துப் போக மாட்டேனோ?” என்று பீமன் சிரித்தான்.
சட்டென்று ரங்கன், “ஆமாம், ஜோகி, சிற்றப்பன் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? அப்பன் சுகமா?” என்றான்.
“ஜோகிதான் எட்டு வருஷமாய் இரியர் கோவில் பூசாரியாக இருக்கிறானே! சிற்றப்பன் குறும்பர் ஏவலால் காய்ச்சல் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டார். முன்னைப் போல் செழிப்பே இல்லை. உன் சின்னம்மாவுக்கும் ஐயனுக்கும் பொருந்தாமல் விவகாரம் பஞ்சாயத்துக்கு வந்து பிரிந்து போய் விட்டார்கள்.”
அடேயப்பா! ஒரு குறிஞ்சிக்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டன?
“ரங்கிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?”
“அது தெரியாதா? மேற்கே, ஒஸஹட்டியிலிருந்து ஒருவன் வந்து ரங்கியைக் கட்டியிருக்கிறான், குள்ளன். உங்கையனுக்குக் கடன் இருநூறு ரூபாய் போல் வந்து விட்டது. அவன் வந்து வீட்டோடு இருந்து, நிலத்தில் கூடமாட வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். கிழங்கு போட்டுக் கடனைக் கூட அடைக்கிறானாம்?”
“ஜோகியின் பாட்டி இருக்காங்களா?”
“போன பெரிய பண்டிகைக்கே அவங்க போய் ஒரு வருஷமாச்சே?”
இப்போது, தான் அங்கே செல்வதால் ஆதாயம் ஏதும் வரப் போவதில்லை என்பதை ரங்கன் அறிந்து கொண்டு விட்டான். பழைய நினைவுகள் படலம் படலமாய் அவன் முன் அவிழ்ந்தன.
“நிசத்தில் கோயிலில் என்னைத் தள்ளுவதாகச் சிற்றப்பன் சூழ்ச்சி செய்ததனால் தான் நான் ஓடி வந்தேன். அங்கே இருந்தால் ஒரு வெள்ளி ஏது? சிற்றப்பன் பெரிய தந்திரக்காரர். எங்கள் பூமியிலும் விளைவெடுத்துத் தமக்குச் சேர்த்துக் கொள்ளப் பார்த்தார். கடைசியில் அவருக்கே நல்லது வரவில்லையா? ஜோகியா கோயிலில் இருக்கிறான்?”
“ஆமாம். அவர் நோவில் படுத்துவிட்டார். வேறு வழியில்லை. மூன்று நான்கு வருஷம் கஷ்டப்பட்டார்கள். ஊர்க்காரர் இரங்கி ஒரு போகம் இரண்டு போகம் சாமையும் கொரளியுங் கூடக் கொடுத்தார்கள். எருமை நான்கில் கோயிலுக்கு ஒன்று விட்டார்கள். அப்போது தான் ஜோகி கோயிலுக்குப் போனான். வருஷம் ஏழெட்டு இருக்கும். உனக்குப் பதில் வந்த பையன் நிற்காமல் ஓடிப் போய்விட்டான், திடீரென்று.”
ரங்கன் நெடுமூச்செறிந்தான். கையில் அறுநூறு ரூபாய் இருக்கிறது. பூமி குத்தகை எடுத்து, அவனும் ஏன் கிழங்கு போடக் கூடாது?
அன்று அவன் பீமனை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். தனக்குச் சோறு போடும் அம்மாளிடம் பிரத்தியேகமாக ஒரு கோழிக்குஞ்சு வாங்கித் தந்து சமைக்கச் சொன்னான். இருவரும் உண்டு களித்து மதுவருந்தி அந்த இரவை இன்பமாகக் கழித்தார்கள்.
மறுநாள் பீமன் ரங்கனைப் பற்றிய செய்திகளைச் சுமந்தவனாய், மணிக்கல்லட்டிக்குச் சென்றான்.
வானம் பன்னீர் தெளிப்பதைப் போல் ஆனந்த பாஷ்யம் உதிர்த்துக் கொண்டிருந்தது. கதிரவன் இளந்கை செய்து கொண்டிருந்தான். மென்காற்று மெல்லச் சாமரம் வீசி, சித்திரை மாதம் நெருங்கும் காலம் அல்லவா? இளம் பயிர்களுக்கு எத்தனை மினுமினுப்பு, தளதளப்பு! பொலபொலவென்ற மண்ணைக் கிளறி, பயிரின் வேர்களுக்கு உயிரூட்டமில்லாமல் உறிஞ்சும் களைகளை அப்பால் எறிந்து கொண்டிருந்தான் ஜோகி. கோயிலின் பின்னே, ஒரு சிறிய சதுரம், அவனுடைய கைராசியை எடுத்துக் காட்டியது.
சாதாரணமாக, அதுவரையில் கோயில் காத்த பையன்கள் எவரும் பயிர் செய்வதில் முனைந்ததில்லை. எருமை மாடுகள் உண்டு; எதிரே காடு உண்டு; அங்கேயே திரிவதும் தனியே விளையாடுவதும், எவரேனும் வந்தால் இழுத்து வைத்து ஊர்க்கதைகள் பேசுவதுமாகப் பொழுதை ஓட்டுவார்கள்.
ஜோகி மனசில் நேர்மையுடனும், அளவற்ற நம்பிக்கையுடனும், கட்டுப்பாடுகளுடனும் வளர்ந்த பையன். தந்தையின் நிலையான சீலமும் ஒழுங்கும் அவனுக்குச் செல்வங்களாக வந்திருந்தன. எல்லாவற்றையும் விட, தந்தையிடமிருந்து அவன் பெற்றிருந்த செல்வம், அவ்ன் உயிரோடு உடலோடு ஊறியிருந்த மண் பாசந்தான். தன்னை அறியாமலே அந்தப் பாசத்தால் அவன் கவரப்பட்டான்.
பொழுது விடிகையில் நீராடி, பாலைக் கறந்து காலை வேலைகளை முடிப்பான். தனக்கென்று ஒரு பிடி சோறு பொங்கி விட்டு, அணையா நெருப்புக்கு வேண்டிய இரை சேகரிக்கப் போவான். இறையவர் பணி போக மிகுதியுள்ள நேரத்தில் அவன் விளையாட்டாகத்தான் பின்புறச் சதுரத்தைத் திருப்பினான். விதைத்து அருவியிலிருந்து நீர் கொணர்ந்து ஊற்றினான். சின்னஞ்சிறு முனைகள் எழும்பி, பசுமை பிடித்துச் செழித்து, கதிர் முற்ற முதற்பயிர் வந்த போது அவனுடைய ஆனந்தத்தை வெளியிட முடியுமோ? கதிரோடு, தெய்வத்தை வேண்டிப் படைத்த போது, அவன் உள்ளச் சிலிர்ப்பும், அடைந்த பேரின்பமும் நவிலற்பாலனவோ? தனிமை அவனைப் பயமுறுத்தவில்லை; அவனுக்கு அலுப்பையோ சலிப்பையோ ஊட்டவில்லை; பெற்றவரும் மற்றவரும் தன்னைச் சிறையில் தள்ளிவிட்டார்களே என்று ஏங்கி மாயவில்லை.
அவற்றையெல்லாம் மண்ணாகிய தாய் மாற்றி, செல்வப் புதல்வனென்று கண்டு, அவனிடம் தன் உயிர்ச் சக்தியைக் காட்டி மகிழ்வூட்டி விட்டாள். அடிக்கொரு முறை ஐயனின் நெருப்பைக் கனிய வைக்கும் பணியும், தன் கை விதைத்த பயிரைப் பற்றிய சிந்தனையும் அவனுடைய எண்ணங்களை மாசு அண்டாமல் காத்து வந்த மகிமைதான் என்னே!
இந்தக் குறுகிய உலகத்துள் நம்மைக் குமுற வைத்து விட்டார்களே என்று கொதிக்காமல், அந்தக் குறுகிய உலகத்துள் விரிந்து பரந்த உலக அநுபவத்துள் இழக்கும் சக்திகளை எல்லாம் திரட்டித் தந்துவிட்டாற் போல் அவனுக்கு அந்த அநுபவங்கள் ஈந்த செல்வங்களைச் சொல்ல முடியுமோ? முத்தரும் சித்தரும் முயன்று முஇட்யாத அந்தத் தவவாழ்வு, அவனுடைய நெறிக்கு, வழிவழியான அந்த இறை நம்பிக்கைக்குப் பழகி அடிமையாகி வந்திருந்தது. உண்டி சுருக்கி, உடலின் சுகம் துறந்து, உயரிய நோக்கிலே மனதைச் செலுத்தியிருந்த அவன் முகத்தில் ஒளி மிகுந்திருந்தது. கண்களில் தெளிவான கம்பீரம் இருந்தது. உடல் மெலிந்திருந்தாலும் உரம் குன்றாத வனப்பு இருந்தது.
அவன் களைக்கொட்டை எடுத்துப் போடுகையில் அடிக்கடி அந்த மேலாடை நழுவி விழுந்தது. உயரத் தூக்கி உச்சியில் முடிந்திருந்த தலைமுடியும் நழுவி அவிழ்ந்தது. களைக்கொட்டை கீழே வைத்துவிட்டு, அவன் ஆடைகளையும் தலையையும் நன்கு முடிந்து கொண்டான். முன்புறம் ஓடி வந்து கோயிலுக்குள் புகுந்தான். அருகிலுள்ள சுள்ளிகளை ஒடித்துப் போட்டுவிட்டு மறுபடி வெளியே வந்தான். நிழல் கற்கம்பத்தைத் தாண்டியிருந்தது.
பெரியப்பா ஏன் வரவில்லை?
தினமும் மோர் வேண்டி அவர் வருவார். அவருக்கென்று பல்லாயில் அவன் எடுத்து வைத்த மோர் அப்படியே இருந்தது. கோயிலிலுள்ள ஆறு எருமைகளின் பாலையும் அவன் உபயோகித்துக் கொள்ளலாம். எப்போதும் அணையா விளக்காக எரிவது அந்தப் பாலின் நெய்தான். கொழுக்கு மொழுக்கென்று தாயைப் போலவே குட்டையாக உள்ள ரங்கம்மையின் ஒரு வயசுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெரிய தந்தை ஏன் அன்று வரவில்லை?
அவனுக்கு வெளியுலகத் தொடர்பாகத் தினம் தினம் கோயிலில் வந்து அவனுடன் எவரேனும் பேசுபவர் உண்டென்றால் அது அவர் தாம். ஜோகி கட்டை பிளக்கையிலோ, குச்சி ஒடிக்கையிலோ, பால்பாண்டம் சுத்தம் செய்கையிலோ, பூஞ்செடிக்கு நீரூற்றுகையிலோ பெரியப்பா அந்தக் கோயிலின் சிறிய திண்ணையில் வந்து உட்கார்ந்திருப்பார். அவர் ஏதேனும் பண்டைய நாளைச் செய்தியைப் பேசுவார்; இல்லையேல் ஏதோ எட்டாத உலகின் சிந்தனையில் ஆழ்ந்தவர் போல் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார். அதுவுமில்லாது போனால், அவருடைய கண்டத்திலிருந்து இனிய பாடல்கள் மெல்லிய சுரத்தில் ஜோகியின் நாடி நரம்புகளைச் சிலிர்க்கச் செய்யும் விதத்தில் வந்து கொண்டிருக்கும்.
அந்தக் குரலுக்குத்தானே தந்தை தம்மையே பறி கொடுத்து நின்றிருந்திருக்கிறார் என்று ஜோகி வியப்படைவான்.
அந்தப் பெரியப்பா ஏன் வரவில்லை?
ஜோகி பயிரை விட்டு, கோயிலின் பின்புறம் தள்ளி நின்று பெரிய தந்தை வரும் வழியையே நோக்கிக் கொண்டிருந்தான்.
எத்தனை நேரம் நின்றானோ? அடிவானைத் தொடும் மலையின் எல்லைக் கோடுகள் போன்ற தொடர் வளைவுகள் நீலமும் பசுமையுமாக மின்னிய காட்சியிலே, விரிந்து பரந்த உலகிலே சுதந்திரமாகத் தன்னை மறந்து அவன் நிற்கையிலே தன் உள்ளத்தின் உள்ளிருந்து ஒன்று கட்டவிழ்ந்து மேலே செல்வது போன்ற பரவசம் உண்டாயிற்று ஜோகிக்கு. அத்தகைய உணர்வு அவனுக்குப் புதியதன்று. அவன் இனந்தெரியாப் பருவத்திலிருந்தே அவ்வுணர்வை அனுபவித்திருக்கிறான். புல்மேட்டில் எருமைகளை மேய்த்துக் கொண்டு அவன் படுத்திருக்கையில், அவனை மறந்து அவனுடைய உள்ளத்தினின்று ஒன்று வானை நோக்கிச் சென்று விட்டாற் போன்று தோன்றும் கண்ணை மூடிக் கொண்டு அந்த இன்ப லயத்தில் மூழ்கிக் கிடப்பான்.
அத்தகைய ஓர் இன்பலயத்தில், தன்னைச் சுற்றிய இதமான வெம்மையிலும் தண்மையிலும் மூழ்கியவனாய் அகம் கனிந்து அவன் நிற்கையிலே, அருகிலே கீசுக்கீசென்று குருவிகளின் ஒலி அவனைக் கவர்ந்து இழுத்தது. அவனுக்கு அருகில் ஒரு சிட்டுக்குருவிகள், சிறு அலகால் ஒன்றையொன்று கொத்திக் கொண்டும் கூவிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இரு குருவிகளுக்கும் கழுத்துக்குக் கீழ் மார்பில் கறுப்புத் தடங்கள் இருந்தன. புதுச் சிறகுகளும் நல்ல பஞ்சின் தன்மையொத்த மிருதுவான மேனியும் கூடிய ஆண் குருவிகள். அவை இரண்டும் சண்டை போடும் காரணத்தைத் துழாவ வேண்டிய தேவை இல்லாதபடி அவனுக்கு வலப்புறத்தில் கீசுக்கீசென்று சிறு குருவி ஒன்று வால் சிறகு படபடக்கக் கத்திக் கொண்டிருந்தது. மென்மையும் இளமை அலகிலும் மேனியிலும் தெரியும் பெண் குருவி அது.
சிந்தை கவரப்பெற்ற ஜோகிக்கு, உடலில் சிலிர்ப்பு ஓடியது. அதுவரையிலும் அவன் குருவிகளையும் காட்டு மைனாக்களையும் பார்க்காதவன் அல்லன். ஆனால் அது போன்ற ஒரு காட்சியில் பிரத்தியேகமாக அவன் சிந்தை ஈடுபட்டதில்லை.
இரண்டு ஆண் சிட்டுக்கள், ஒரு பெண்ணுக்காகச் சண்டை போடுகின்றன. பெண் சிட்டு, துடிதுடிப்புடன் கூவுகிறது. அதன் மனசைக் கவர்ந்தது எதுவோ? தன் இனியவன் வென்று தன்னை இன்ப வெளியில் இட்டுச் செல்ல வேண்டுமே என்ற துடிதுடிப்புப் போலும் அதற்கு!
அவன் உள்ளத்தில் அந்தக் காட்சியில் என்றுமிலா ஆவலும் துடிப்பும் உண்டாயின. இரண்டு குருவிகளில் எது வெல்லப் போகிறது?
ஒன்றையொன்று கொத்திக் கொண்டு, சிறகைப் படபடவென்று அடித்துக் கொண்டு, துரத்திக் கொண்டு, இரண்டும் கோயில் மைதான எல்லையைக் கடந்து, காட்டுக்குள் சென்றன. பெண் சிட்டும் கூவிக் கொண்டு சிறிது பறந்து, கற்றூணில் வந்து உட்கார்ந்தது. இப்புறமும் அப்புறமும் கழுத்தை வளைத்துக் கண்ணைச் சாய்த்து அழகு பார்த்துக் கொள்வதும், அலகால் சிறகுகளையும் உடலையும் கோதி விடுவதுமாகக் கவலையின்றி உட்கார்ந்திருக்கிறதே! தன் மனசுக்கு இனியவனின் வலிமையில் அத்தனை நம்பிக்கையா?
ஜோகி, அந்தக் காதற் போரின் முடிவைக் காண உடலெல்லாம் ஆவலின் துடிப்பாகக் காத்து நிற்கையிலே, ஒரு குருவி வெற்றிப் பெருமிதத்துடன் விர்ரென்று பறந்து வந்தது. தன் இனியாளின் அருகே வந்து அமர்ந்தது. அவனுடைய உடல் படபடத்தது, அவற்றைக் காண்கையிலே.
பெண் குருவிக்குத்தான் எத்தனை சாகசம்! கழுத்தைச் சாய்த்துக் கொண்டு நாணப்பார்வை பார்த்ததோ?
ஆண் நெருங்கி நெருங்கி வந்தது. பெண்குருவி பறந்து மறுபுறம் போய் உட்கார்ந்தது. பின்னும் அருகில் வந்தது. பெண் குருவி விர்ரென்று பறந்து கோயில் கூரை முகப்புக்குப் போயிற்று. ஆணும் தொடர்ந்தது.
அவை நீலவானில் பறந்து ஜோடியாகக் கண் பார்வையிலிருந்து மறையும் வரை ஜோகி அவற்றையே பார்த்துக் கொண்டு நின்றான். மனக் கிளர்ச்சி அடங்கவில்லை. சிறு திண்ணையில் அமர்ந்தான். முதல் முதலாக, வாழ்க்கை நிறைவு பெற்றுவிடவில்லை என்ற அதிருப்தி அவனுக்கு உண்டாயிற்று.
ஆம், குறிஞ்சி பூத்துவிட்டது. அவன் ஒரு குறிஞ்சி நிரம்பாத பாலகனாக, கோயில் எல்லைக்கு வந்தான். இதை விட்டுப் போகும் தகுதி பெற்று அவன் நிற்கிறானே!
அந்தக் குருவிகள் இரண்டும் மரப்பொந்துகளிலோ புதர்களிலோ கூடி வாழ்ந்து சந்ததியைப் பெருக்கும். சுள்ளி ஒடுக்கவோ நீரெடுக்கவோ அவன் செல்லுகையில் புதர்களில் குஞ்சுகளின் அச்ச ஒலிகள் கேட்குமே; ‘உணவுக்குப் போயிருக்கும் தாயும் தந்தையும் இல்லை, எங்களுக்குப் பறக்கச் சிறகுகளும் இல்லை’ என்ற அந்தப் பரிதாப ஒலிகள், எதிர்கால நம்பிக்கை என்ற ஆதாரத்தில் தோய்ந்து நிற்பவை அன்றோ? ‘சிறகு வளர்ந்து, நாமும் வாழ்ந்து இனத்தைப் பெருக்க வேண்டும்?’ இந்த எட்டுப் பத்து ஆண்டுகளில், அவன் முன் கல்லாட்டம் ஆடிக் கொண்டிருந்த ரங்கம்மை, கொழுக்கு மொழுக்கென்று ஒரு மதலைக்குத் தாயாகி விட்டாளே!
அன்றொரு நாள் மாமி கிரிஜையைக் குழந்தையாகக் கொண்டு வந்ததும், பாரு அவனைப் புற்சரிவிலிருந்து அழைத்துப் போனதும் சடேரென்று அவன் நினைவுக்கு வந்தன. குழந்தை கிரிஜையை மடியில் விட்டுக் கொண்டு, அவன் எடுக்க வேண்டாம் என்று மொழிந்ததும், கிருஷ்ணனின் தாயும் மற்றவரும் அவனைக் கேலிகள் மொழிந்ததும் அவன் நினைவில் அவிழ்ந்தன.
‘பாப்பா பெரியவளானதும் நம் வீட்டுக்கு வருவாள்; உனக்குச் சோறெடுத்து வைப்பாள்; விதை விதைப்பாள்’ என்றெல்லாம் தாய் கூறிய சொற்கள் புதுப் பொருளுடன் பளிச்சென்று நினைவில் தோன்றின. உடல் புல்லரித்தது.
பாரு இன்னம் கன்னியாக நிற்கிறாள்; ரங்கனுக்குத்தான் பாரு என்று அவன் தந்தை, முன்பு ஒரு நாள் கூறியது உண்டு. ஆனால், ரங்கன் எங்கே சென்றானோ, என்ன ஆனானோ, தெரியவில்லை.
பாருவுக்கு அபூர்வமான வட்ட மதியன்ன முகம், அவள் இப்போது எவ்வளவு அழகாக வளர்ந்து நிற்பாள்!
அவன் கோயிலிருந்து விடுதலை பெற்று வீடு சென்றதும் வீட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விடுவான்.
காய்ச்சல் வந்து அவன் தந்தையை உருக்குலைத்து விட்டது. அவருக்குப் பூரண ஓய்வு கொடுத்து விட்டு, அவன் அவர் பணிகளைச் செய்வான். காலையிலெழுந்து தந்தையைப் போலவே இறைவனைத் தொழுது விட்டு அவன் மாடுகளை அவிழ்க்கையில், அவனுடைய அன்னையைப் போல் பாரு சுடுநீர் வைப்பாள்; கலங்கள் கழுவுவாள்; அவன் நீராட, அருகிலிருந்து நீரூற்றுவாள்; கஞ்சியோ, மோரோ, பரிவுடன் கொண்டு தருவாள். பகலில் வந்த நேரம், பளபளவென்று பெரிய வட்டிலை வைத்துச் சோறும் குழம்புமிடுவாள். அவள் கைப்பட்ட அந்த உணவின் மணந்தான் எப்படி இருக்கும்! மாலையில் அவன் வருமுன், தீபமாடத்தில் அவள் விளக்கு வைத்துவிட்டு, கதவருகில் நின்று கருவிழிகள் ஒளிரச் சிரிப்பாள்.
அப்பப்பா! இந்த நினைப்பிலே என்ன ஆனந்தம்!
அடுத்த ஆண்டில், ரங்கியைப் போல் அவளும் கொழுக்கு மொழுக்கென்று ஒரு பையனைத் தரும் தாயாகி விடுவாள்.
இறையவருக்கு நெடுநாள் பணி செய்த அவனுக்கு விரைவிலேயே ஒரு பையனை, குலக்கொழுந்தை அவர் அருளமாட்டாரா?
குடும்பத்தில் எவ்விதப் பற்றும் இல்லாத பெரியப்பன், ரங்கி குழந்தையை எப்படிச் சுமந்து திரிகிறார்? குழந்தை தரும் ஆனந்தத்துக்குக் குவலயத்தில் ஈடேது, எல்லை ஏது?
பாரு பெற்றுத் தரும் குழந்தையை அவனுடைய அம்மையும் அப்பனும் பெரியப்பனும் மாறி மாறி வைத்துக் கொள்வார்கள். பெரியப்பா அதற்குப் பாட்டுக்கள் பாடவும் கை தட்டவும் ஆடவும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார். அவன் அத்தகைய குடும்பத்துக்கும் தானியம் விதைப்பான். இரவு பகல் காவலிருந்து பயிரைக் காத்துப் பெருக்கி வீட்டுக்குக் கொண்டு வருவான். பாலைப் பெருக்க மாடுகளைப் பேணுவான். ஊரிலிருந்து நண்பர்களும், அத்தை, மாமிமார்களும் வந்தால், வீட்டுக்கு உடையவனாக வணங்கி உபசரிப்பான். பாருவும் உச்சரிப்பில் பங்கு கொள்வாள். மாசம் ஒரு கூட்டு விருந்தும் சந்தோஷமும் வைபவமுமாக அவர்கள் குடும்பம் நடக்கும்.
பரபரத்த அடிச்சத்தம் அவனுடைய இனிய கனவைக் கலைத்தது. வழக்கம் போல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மோர்க் கலயத்துடன் பெரியப்பன் வரவில்லை, விருந்துண்டு களித்த முகத்தினராய், வெற்றிலை சுவைத்தவராய் வந்தார்.
“ஏன் பெரியப்பா, மோருக்குக் கலயம் கொண்டு வரவில்லையே? வீட்டில் ஏதேனும் விசேஷமா? குழந்தையை அழைத்து வரவில்லையா?”
“இன்று விருந்துச் சாப்பாடு, ஜோகி. கிருஷ்ணன் வந்திருக்கிறான் தெரியுமா?”
“ஓ, மணியக்காரர் வீட்டுக் கிருஷ்ணனா?”
“ஆமாம். பட்டணம் போய்ப் பெரிய படிப்பெல்லாம் படித்து வந்திருக்கிறானா? எப்படிப் பேசுகிறான் என்கிறாய்? மிஷன் பள்ளிக்கூடத்தில் எல்லோரையும் வேதத்தில் மாற்றுகிறார்கள் என்று சொன்னார்களே; இல்லாது போனால் உன்னைக் கூடத் தம்பி பள்ளிக்கூடம் அனுப்பியிருப்பான்... இன்னும் யார் யாரோ பள்ளிக்குடம் போனார்கள். ஆனால் ஒரு பயலாவது கிருஷ்ணனைப் போல் படிக்கவில்லை. அவன் என்னவெல்லாம் பேசுகிறான் என்கிறாய்?”
“உம்...”
“அங்கெல்லாம் பெண்பிள்ளைகள் கூடப் பள்ளிக்கூடம் போய் பெரிய படிப்பு படிக்கிறார்களாம். இவன் தான் எத்தனை வருஷம், எத்தனை புத்தகங்கள் படித்து விட்டான்! இந்த மலை இத்தனை அடி, ஆறு இத்தனை நீளம் என்றெல்லாம் சொல்கிறான். நாமெல்லாம் படித்துத்தான் கிராமங்களில் விளைச்சல் பெருக்க வேணுமாம்; நல்ல நல்ல துணி உடுத்த வேணுமாம். அப்புறம்...”
பெரியப்பன் ஒவ்வொன்றாக நினைவுபடுத்திக் கொண்ட விதம் ஜோகிக்கு வேடிக்கையாகவும் புதுமையாகவும் இருந்தது.
“ஒத்தையிலே கவர்னர் பங்களாவிலெல்லாங் கூட, எண்ணெய் திரு இல்லாமல் பகலைப் போல் விளக்கு எரிகிறதாமே! அது போல் விளக்குக்கு என்னவோ ‘பவர்’ எடுக்கிறதாம். அதெல்லாங் கூடச் சொல்கிறான். நமக்கு ஒன்றுமே விளங்கவில்லை. வெள்ளைக்காரத் துரைகள் போகும் வண்டி, பிளஷர் கார்கள் எல்லாம் இங்கேயும் வர வேண்டும். ரோடு போட வேண்டும், பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எல்லோரும் உழைக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறான். போ!”
ஜோகி, தன் உலகத்துக்கு அப்பாலுள்ள இந்தச் செய்திகளை ரசமாகத்தான் கேட்டான்.
கிருஷ்ணன் அவ்வளவு பெரிய படிப்புப் படித்து விட்டானா? யார் கண்டார்கள்? மரகத மலையிலும் அந்த விந்தைகள் வரக் கூடும் ஒரு நாள்?
ஜோகி, மாடில்லாமல் குதிரையில்லாமல் ஓடு வண்டியையும் பார்த்ததில்லை; எண்ணெய் திரி இல்லாத விளக்கையும் பார்த்ததில்லை.
பெரியப்பா அவன் வியந்து நிற்கையிலேயே அடுத்த செய்தியையும் நினைத்துச் சொன்னார்: “அப்புறம், இந்த வெள்ளைக்காரத் துரைமார்கள் இருக்கிறார்களே, இவர்கள் தானே ரெயில் வண்டி கொண்டு வந்திருக்கிறார்கள்? காபி, டீ எல்லாம் மலையில் வைத்திருக்கிறார்கள்? நாம் வரி கட்டுகிறோம். கலெக்டர் துரை, கவர்னர் துரை, பெரியவர்கள் என்றெல்லாம் நினைக்கிறோமோ?”
“ம்...?”
“துரையும் நம்மைப் போல் மனிதன் தான். சொல்லப் போனால், இழிகுலத்தோர் போல் ஆடும் மாடும் தின்பவன்” என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “உண்மையிலே நம்ப ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு அவன் ஆளுகிறான்; நம் பூமியிலே விளைத்துப் பணமெடுக்கிறான்; இவர்கள் எல்லாரும் போய் நமக்குச் சுயராஜ்யம் வரவேணும் என்றெல்லாம் சொல்கிறான். அவன் பேச்சு, அடேயப்பா! நமக்கு நினைப்பிலேயே பிடிபடவில்லை. இந்த ஹட்டிக்கே அவனால் பெருமை வரப்போகிறது, நீ பார்.”
ஜோகி பெரியப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான். “இன்று அங்கேதான் இத்தனை நேரம் இருந்தீர்களா பெரியப்பா?”
“ஆமாம். கரியமல்லண்ணனுக்குப் பெருமை இருக்காதா? விருந்து நடத்தினார். பார் ஜோகி, ஒன்று மறந்தேனே! அங்கேயெல்லாம் புளிப்புச் சேராமல் சாப்பாடே கிடையாதாம். இங்கே புளி போட்டால் உடம்பு ரத்தம் கெட்டுப் போகும் என்கிறோமே! அடேடே! ஒன்று முக்கியமான விஷயம். அதை மறந்து போனேனே!”
ஜோகிக்கு சிரிப்பாய் வந்தது.
“நம்ம பாருவை, கிருஷ்ணனுக்குக் கேட்கப் போகிறார்களாம். கிருஷ்ணனுக்குப் பாருவைக் கட்டிக் கொள்ளவே இஷ்டமாம். அவனே காலையில் சொல்லி விட்டானாம். பாரு அழகான பெண் இல்லையா? அவனுக்கு நல்ல பெண் வேண்டாமா?”
ஜோகியின் கண்டத்தில் அடி நெஞ்சிலிருந்து ஏதோ ஒரு கவாடம் பறந்து வந்து உட்கார்ந்தாற் போல் இருந்தது.
பாருவை, கிருஷ்ணனுக்கு - எங்கெல்லாமோ சென்று படித்துப் பட்டங்கள் வாங்கி வந்திருக்கும் கிருஷ்ணனுக்கு.
சிட்டுக் குருவிகளின் காட்சி சட்டென்று நினைவில் முட்டியது.
ஜோகி, நீரில் முழுகிச் சமாளிப்பவன் போல் குலுங்கிக் கொண்டு பெரியப்பனை நேராகப் பார்க்க முயன்றான்.
கல் இயந்திரம் தேயத் தேய, ராகியை மாவாக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. நான்கு தளிர்க் கைகள் அந்தப் பெரிய கல்திரிகையை இருக்கிக் கொண்டிருந்தன. கிரிஜை, அச்சில் மேலாகக் கை வைத்துக் கொண்டிருந்தாள். கீழ்ப் பகுதியில் கை வைத்துக் கொண்டு அவ்வப்போது தானியத்தை எடுத்து இயந்திரக் குழியில் இட்டுக் கொண்டிருந்தவள், பாரு. வீட்டில் அப்போது யாருமே இல்லை. பாட்டன் தேன் மலைக்குச் சென்றிருந்தார். பெற்றோர் கிழங்குத் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர்.
பாருவின் கைகள் தாம் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தனவே தவிர, மனம் அவள் வசம் இல்லை. களங்கமற்ற படிகத்திலே ஒரு நிழல் விழுந்து விட்டது. அந்த நிழல், கன்னித்தடாகமாக இருந்த உள்ளத்தில் இதுவரை அவள் அறிந்திராத விதமாகச் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.
கிருஷ்ணன் மரகத மலைக்குப் போய்விட்டான் என்று அறிந்ததிலிருந்தே அவள் உள்ளம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அந்த வட்டகைக்கே அவன் ஓர் அரசனைப் போல் உயர்ந்து விட்டவன். எத்தனையோ சீமான்களும் பெரியதனக்காரர்களும் பெண்கள் பெற்றவர்களாக இருக்க மாட்டார்களா? அவர்கள் வீட்டுக்கு எந்தப் பெண் செல்லக் கொடுத்து வைத்திருக்கிறாளோ?
“என்ன அக்கா? ராகியே போடாமல் வெறுமே அரைக்கச் சொல்லுகிறாயே! எவ்வளவு நேரமாச்சு?”
கிரிஜை கேட்டதும் பாருவுக்கு வெட்கம் உண்டாயிற்று. ஒரு பிடி ராகியைப் போட்டாள்.
அவர்கள் வீட்டிலிருந்து கிருஷ்ணனின் தந்தையும் தாயும் அவள் பெற்றோரை வந்து கண்டு அவளைத் தங்கள் மகனுக்குக் கேட்காது போனால்...
சில நாட்களில் மரகதமலை அத்தையும் மாமனும் வருவார்கள். ரங்கனோ இல்லை. ஜோகிக்குத்தான் அவள் என்பது தீர்மானமாயிற்றே வெளி உலகு சென்று வண்ண வண்ணப் புதுமைகளில் முழுகி வந்து அவள் இருதயம் கவர்ந்த அழகன் எங்கே? பத்து ஆண்டுகள் போல் இரிய உடையார் கோயிலின் எல்லையை விட்டு வராத ஜோகி எங்கே?
மாலை, தீபமாடத்தில் விளக்கு வைத்துவிட்டுத் தாயும் தந்தையும் வருவதை எதிர்பார்த்து அவள் நிற்கையிலே அண்ணன் பீமன் அம்மையுடன் பேசிக் கொண்டே வருவதைக் கண்டான்.
அம்மை பின்புறமாக வந்து சுள்ளிக்கட்டைக் கீழே தள்ளிவிட்டு வந்தாள். சாப்பாடு எடுத்துச் செல்லும் புதிய தூக்குப் பாத்திரம் ஒன்றை ஆட்டுக் கொண்டு வந்த பீமனைக் கண்டதும், பாரு ஆவலுடன் அதை அவன் கையிலிருந்து வாங்கினாள்.
திறந்து பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே, “எனக்கு ஒன்றும் வாங்கி வரவில்லையா அண்ணா?” என்றாள்.
பீமன் சிரித்து விட்டுக் கண்ணை சிமிட்டினான். “ஒன்றும் வாங்கி வரவில்லையா? அம்மையிடம் கேள். உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேனென்று சொல்லுவாள்” என்றான்.
ஒத்தைக்குச் செல்லும் அவனிடம், புதிது புதிதாக, மங்கையர் மேலுக்கு அணியும் பட்டு ரவிக்கைத் துணிகள் வந்திருப்பதைச் சொல்லி, தனக்கும் அவ்விதம் புதிய துணிகள் வேண்டுமென்று கேட்டிருந்தாள் அவள். அந்தத் துணிகளை அம்மை தன் முண்டுக்குள் ஒளித்து வைத்திருக்கக் கூடுமோ?
உடனே அவள் அம்மையிடம் ஓடி, “எங்கேயம்மா காட்டு” என்றாள்.
தாயும் சிரித்தாள். அவள் சிரிப்பில் பொதிந்திருந்த பொருளை உணரக் கூடப் பாருவுக்கு பொறுமை இருக்கவில்லை; “எங்கேயம்மா?” என்றாள் சிணுங்கலும் சிடுசிடுப்புமாக.
“என்னிடம் ஏது, அவனல்லவா வேண்டி வந்திருக்கிறான்?... கிரி, சுடுதண்ணீர் கொண்டாம்மா!” என்று தலைவட்டை அவிழ்த்து உதறிக் கொண்டு, தாய் கைகால் கழுவ நின்றாள்.
தாயின் மறுமொழியும் தமையனின் சிரிப்பும் அவளுக்கு அர்த்தமற்ற கோபத்தையே உண்டு பண்ணின. கோபத்துடன் அடுப்படியில் உட்கார்ந்து எரிந்து வெளியே வந்து கொண்டிருந்த விறகை ஆத்திரத்துடன் உள்ளுக்குத் தள்ளினாள்.
கையைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்த தாய், திருதிருவென்று எரிந்த செந்தழல் ஒளியில், மகளின் கோபமுகத்தின் அழகைக் கண்டு உள்ளூறச் சிரித்துக் கொண்டிருந்தாள். கால் கை கழுவி முடிந்ததும் அருகிலே வந்து, மகளைப் பார்த்துக் கொண்டே, “அண்ணனிடம் முதலில் என்ன வாங்கி வந்திருக்கிறான் என்று கேட்டாயா, மகளே?” என்றாள்.
“எத்தனை தரம் கேட்க வேண்டுமாம்? வாங்கி வந்ததைக் கொடுத்தால் கொடுக்கிறார், இல்லாவிட்டால் வேண்டாம்!” என்றாள் பாரு.
அடுப்பின் கீழ் வந்து நின்ற பீமன், “அட அட அட! இந்தாம்மா, முகத்தைக் கொஞ்சம் இப்படிக் காட்டு; என்னைப் பார்த்து நான் கொண்டு வந்த பரிசை இப்போது வேண்டாமென்று சொல்லு!” என்றான்.
கோபத்தோடு முழங்காலில் மோவாயைப் பதித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் காதருகிலே, “ஒத்தைக்குப் போய் அழகான மாப்பிள்ளையைச் சம்பாதித்து வந்திருக்கிறேன். எங்கே வேண்டாமென்று சொல்!” என்று அவள் தலையைத் தூக்கிக் கலகலவென்று நகைத்தான் அவன்.
முகம் சிவக்க, நாணம் கவிந்த கண்களைப் பொய்க் கோபத்திரையால் போர்த்துக் கொண்டவள், ஒரு கணம் தடுமாறினாள்.
ஒத்தைக்குப் போய் மாப்பிள்ளையா? அது யார்? ஒருவேளை கிருஷ்ணன் ஒத்தைக்குப் போயிருக்கக் கூடுமோ?
இருதயத்தில் களி துள்ள, கருவிழிகளில் ஒளி சிந்த, அவள் மௌனம் சாதித்தது கண்டு பீமன் கைகொட்டி நகைத்தான்.
“பார்த்தாயா! இப்போது வேண்டாமென்று சொல்லு!”
“நான் ஒன்றும் அதெல்லாம் கேட்கவில்லை. பட்டு வாங்கி வந்தாயா என்று தானே கேட்டேன்?” என்றாள் அந்தப் பொய்க் கோபம் மாறாமலே.
“பட்டா? பட்டுக்கென்ன தங்கச்சி! உனக்கு எத்தனை பட்டு வேண்டும்? பளபளக்கும் பட்டு, தங்கம், வெள்ளி எல்லாம் வரப்போகின்றன. ஐந்தைப் பத்தாக்கி, பத்தை நூறாக்கி, நூறை ஆயிரமாக்கும் அருமையான மாப்பிள்ளை. உயரம், அளவான பருமன், செவேலென்று நிறம், அழகிய மீசை...”
இந்தக் கட்டத்துக்கு அவன் வந்த போது பாருவுக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது. சரேலென்று அவன் கையைத் தள்ளிவிட்டுப் புறமனையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
அந்த ஆணழகனுக்கு அழகிய மீசையும் இல்லை; தாடியும் இல்லை! நூறை ஆயிரமாக்கும் இந்த அருமை மாப்பிள்ளை யார்?
வெகுநேரம் கழித்து, இருட்டில் அம்மை வந்து அன்பாக அவளை நெருங்கி உட்கார்ந்து, “என்ன பாரு? இதென்ன அசட்டுக் கோபம்?” என்றாள்.
“எனக்கு ஒன்றும் கோபம் இல்லை” என்றாள் அவள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“அப்ப ரங்கன் மீது உனக்கு இஷ்டம் இல்லையா?”
பாருவுக்குத் திக்கென்றது. ரங்கனா?
“யார் பெரிய மாமன் மகனா?”
“ஆமாம். பீமன் அவனைத்தான் ஒத்தையில் பார்த்தானாம். துரைமார்களை அண்டி வெள்ளி வெள்ளியாகச் சம்பாதித்திருக்கிறானாம். விருந்து வைத்தானாம். ஆடு இருக்கிறதாம்; மாடு இருக்கிறதாம். கோட்டும் தொப்பியுமாய் கன சொகுசாய் நடக்கிறானாம்.”
“இத்தனை வருஷங்களாய் அத்தான் ஒத்தையிலா இருந்தார்?”
“ஆமாம்.”
“உனக்கு இஷ்டமாம்மா?” என்று ஏக்கம் நிறைந்த விழிகளுடன் தாயைப் பார்த்தாள் மகள்.
அந்த விழிகள் உணர்த்திய உண்மையைத் தாய் அறிவாள். அருவிச் சுழலில் சிக்கியவளை ஆபத்திலிருந்து ஒருவன் மீட்டதையும், சில நிமிஷங்களில் அங்கு நிகழ்ந்ததோர் காதல் நாடகத்தையும் எதிர்வீட்டுத் தோழி, அவள் காதில் போட்டுத் தான் இருந்தாள். என்றாலும் நமுட்டுச் சிரிப்புடன், “நிறைய வெள்ளிப் பணம் கொண்டு வந்து வைத்து மாமன் காலில் விழுந்து, பெண்ணைத் தாருங்கள் என்று முறைப்பையன் கேட்கையில் மறுக்கலாமா?” என்றாள்.
பாரு மெல்லிய இதழ்களைக் குவித்தாள்; “வேண்டாமம்மா. நான்... நான்” என்று மிழற்றியபடியே தாயின் மேல் கவிழ்ந்து சாய்ந்தாள்.
தாய் வாய்விட்டு மறுபடியும் சிரித்தாள்.
“கிருஷ்ணன் இரண்டு நூறு தருவானா? தங்க மணிச்சரமும் கடகமும் வளையலும் போடுவானா? கேட்டாயா?”
“எனக்கு அதெல்லாம் அவரே கட்டாயமாகப் போடுவாரம்மா.”
“அசட்டுப் பெண்ணே, கரியமல்ல மாமன் வந்து கேட்கட்டும். நாமே வலியச் செல்வது முறையல்ல” என்றாள் தாய்.
இதற்குப் பிறகு, வாயிலில் அடிச் சத்தம் கேட்கும் போதெல்லாம், நிழல் தட்டும் போதெல்லாம் கரியமல்லர் தம் பூண்போட்ட தடியுடன் வருகிறாரோ என்று பாரு கதவருகில் நின்று நெஞ்சுத் துடிப்புடன் நோக்கலானாள்.
பீமனிடம் கூறியபடி ரங்கனால் உடனே கிளம்பி விட இயலவில்லை. கொஞ்சமாகத் தோதவர் மந்துக்கருகில் பூமி குத்தகை எடுத்து உருளைக்கிழங்கு போடப் பூமி திருப்பி ஏற்பாடுகள் செய்தான். கிழங்கு விதைத்து, பதினைந்து நாட்களுக்குள் ஒரு மழையும் பெய்துவிட்டது. அடுத்து, கவர்னர் குதிரைப் பந்தயத்துக்காகத் தங்கினான். பிறகு வண்ணப் பட்டியின் துண்டுகளும், இனிய மிட்டாய் ரொட்டியும் பரிசுகளாக வாங்கிக் கொண்டான். காலை வேலையை முடித்துக் கொண்டு, துரையிடம் இரண்டு நாட்கள் லீவு கேட்டுக் கொண்டு, கிழங்கு விதைத்த பூமியைப் போய்ப் பார்த்து விட்டு வீட்டுக்கு அவன் திரும்பிய போது, துரையின் பட்லர் சாமுவேல் நின்றிருந்தான். துணி மடிப்பில் இடுக்கிக் கொண்டிருந்த உயர்ந்த ரக மதுக்குப்பிகளை அவன் கீழே வைத்தான்.
ரங்கன் அவற்றைக் கவனமாகத் தன் சாமான்களுடன் எடுத்து வைத்துக் கொண்டான். பட்டுப் பையைத் திறந்து இரண்டே கால் ரூபாய் நாணயங்களை எடுத்து அவன் கையில் வைத்தான்.
“என்னங்க மேஸ்திரி, இது நல்ல சரக்கு. புட்டி எட்டுப் பத்து ரூபாயாகும். கூடவே ஒரு வெள்ளி தரக் கூடாதா?” என்று குழைந்தான் சாமுவேல்.
“அட, சரிதானப்பா, எட்டு ரூபாய் நீயா போட்டு வாங்கினாய்?” என்றான் ரங்கன்.
“இருந்தாலும் துரை கண்டு கொள்ளக் கூடாது பாருங்கள். எடுப்பதில் கஷ்டம் உண்டு.”
“அட, எனக்குத் தெரியாததை நீ சொல்ல வந்து விட்டாய்! துரை சுயநினைவு தாண்டி விட்டால் புதுப் புட்டியா உடைத்து விடுவீர்கள்? மேசை கழுவின தண்ணீரைக் கூட ஊத்தமாட்டீர்கள்? கொடுத்தது லாபம் போ!”
சாமுவேலுக்கு இந்த மேஸ்திரியிடம் ஒன்றும் சாயாது என்பது தெரியாதா?
ரங்கன் சுமையைக் கட்டிக் கொண்டான். புதிதாகத் தைத்துக் கொண்ட கோட்டும் தலைப்பாகையும் அணிந்து அவன் கிளம்பி விட்டான்.
மரகத மலைக்குச் செல்லும் எண்ணமே அவனுக்கு இல்லை. தன் செல்வத்தைப் பகிர்ந்து அநுபவிக்க அவன் என்றுமே விரும்பியதில்லையே!
சிற்றப்பன் நல்ல நிலையில் இல்லாத போது, வாடும் பயிருக்குச் சமயத்தில் பெய்யும் மழை என்று அவன் அங்கே செல்வது உசிதமாகுமா? நேராக மணிக்கல்லட்டி சென்று, அங்கேயே வெள்ளிப் பணத்தையும் பரிசுகளையும் மாமனிட்ம தந்து, பாருவைக் கொள்ளும் சடங்கை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூட அவன் நினைத்திருந்தான்.
இரண்டு மைல்கள் போல் நகர எல்லை தாண்டி நடக்கு முன் குளிர் காற்றுப் பலமாக வீசலாயிற்று. மழை பெருத்த ஆர்ப்பாட்டங்களுடன் கொட்டுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளாக ஹட்டிப் பக்கம் செல்ல அவன் நகர எல்லை தாண்டியிருக்கவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் எந்தப் பகுதியில் எந்த எந்த மலைகளையும் காடுகளையும் கடந்து வந்தோமென்ற அடையாளங்கூட அவனுக்கு நினைவில்லை. அப்பப்பா! இவ்வளவு நல்ல நிலைக்கு வரக்கூடுமென்ற நம்பிக்கையில் தான் அவன் ஓடி வந்தான் என்றாலும், அந்தப் பிரயாணத்தில் எத்தனை தாபம், கஷ்டம், அச்சம்!
விருவிருவென்று தூரத்தை விழுங்கியவனாய் அவன் நடக்கையில் படபடவென்று மழை பிடித்துக் கொண்டது. சுழற்றியடித்த காற்றில் அவனுடைய வேட்டி பறந்தது. மூட்டை நனைந்துவிடுமென்று அஞ்சி ஒரு மரத்தடியில் ஒதுங்கினான். பளீரென்று மின்னல் வெட்டிப் பிளக்க, இடி முழங்கியது. அவன் கண் முன் தூரத்தில் ஒரு கோபுர விருட்சம் சரிந்தது, மளமளவென்று.
அஞ்சி நடுநடுங்கி, கிளம்பிய நேரம் சரியில்லையோ என்று அலைபாய்ந்த மனத்துடன் அவன் அந்த மரத்தடியிலேயே காத்து நின்றான். மழை காரணமாகத்தான் போலும், எவரும் பாதையில் இல்லை. மட்டக் குதிரைகளில் ஏறிக் கொண்டு செல்லும் செல்வர்கள் கூட அவன் புறப்பட்டு வந்ததிலிருந்து அவன் கண்களில் படவில்லை. குதிரைகள் தென்பட்டால், வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் ஏறிச் சென்று அரசகுமாரனைப் போல் போய் இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டு.
படபடவென்று அடித்த மழை, ஈரத்தின் மணத்தைக் காற்றில் கலந்து கொண்டு ஓய்ந்து விட்டது. மறுபடியும் அவன் நடக்க ஆரம்பித்தான். மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கி வருகையில் மழை பெய்திராத பகுதிகளும் வந்தன. காய்ந்த சருகுகளும், உலர்ந்த மண்ணுமாகவே மரக்கிளைகள் உராயும் இனிமையான ஓசையைப் பின்னணியாகக் கொண்டு ஓர் இன்குரலொலியின் அலைகள் விரிந்து விரிந்து பரவும் நாதவெள்ளமாக அவன் செவிகளில் பாய்ந்து, அவன் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்தன.
அந்தச் சிலிர்ப்பில், அவன் திடுக்கிட்டவன் போல் நின்றான். எத்தனை எத்தனை நாட்களாகவோ உள்ளத்தில் கனிந்து குவையும் ஏக்கத்தின் அலைகளை இழைத்து இப்படி ஓர் இசையை உருக்குபவர் யார்? அவனுடைய கால், தன்னை அறியாமலே மகுடிக்குக் கட்டுப்படும் நாகமென அந்தப் பக்கம் சென்றது.
மேலெல்லாம் நனைந்து ஒரு பாறையில் சாய்ந்தவராக அவர் அமர்ந்திருந்தார். அரைக்கண் மூடிய நிலை. அருகே நெருங்குகையிலேயே அவர் போதை தரும் பானம் அருந்தியிருந்தது தெரிந்தது. மதுவிலும் இசையிலும் முழுகியிருந்த அவர் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
பன்னிரண்டு ஆண்டுகளில், அவர் உடல் எப்படி வற்றிச் சருகாகி விட்டது! சதைப்பற்றே ஒட்டிக் கன்னத்து எலும்புகள் இன்னும் முன்னுக்கு முட்ட, இனியும் வற்ற இடமின்றி வற்றி விட்டார். தம்பியின் குடும்ப நிலையைப் பறையடிக்கும் தோற்றம்.
பண ஆசை மறைத்தாலும் அணுவின் அணுவான பாசத்தின் உயிர்த் துடிப்பு மறையுமா? அது பீறி வந்தது. கண்கள் கசிய, சுமை கீழே நிலத்தில் இடிக்க, அவன் உட்கார்ந்து அவர் கையைத் தொட்டான்.
“அப்பா!... அப்பா!”
அரைக்கண் ஆச்சரியம் காண மலர்ந்தது. கண்டம் இசையிழை அறுபட நின்றது.
“நீ... நீ... நீயா!”
நம்பவே முடியாத குரல் தடைப்பட்டுத் தடைப்பட்டு வந்தது.
“ஆமாம் அப்பா. நான்... நான் ரங்கன்... நான் ரங்கன் தான்.”
சுருங்கிய தோல் பள்ளங்களிலிருந்த கண்கள் ஒளியை வாரி வீசின. “ரங்கன்... ரங்கன்... நீ... நீதானா? ரங்கா...”
மைந்தனை அந்தக் கரங்கள் வளைந்து தழுவின. முகத்தோடு முகம் நேர்ந்தது. வளர்ந்து, வாலிபத்தின் வாயிலில் நிற்கும் மகன், ரங்கன். ஆமாம், ரங்கனே தான். அதே முகந்தான்; அவரை நினைவு படுத்தும் சாயல் கலந்த முகம். அவர் மகன் ரங்கனே தான்! ஆறாப் பசியுடன் மகனை நோக்கி நோக்கிப் பூரித்தன அந்தக் கண்கள். மறுகணம் அவர் கைகள் வானை நோக்கிக் கும்பிட்டன.
“ஈசா, உன் கருணையே கருணை! நான் சத்தியமாய்ச் சொல்கிறேன் ரங்கா. ஒத்தைக்குத்தான் போய் வருகிறேன். பாதி வழிக்கு மேல் நடக்க முடியவில்லை; காலைப் பார்.”
காலைத் திருப்பித் தந்தை காட்டிய போது ரங்கனின் கண்களில் நீர் முட்டியது. உள்ளங்கால் பாளம் பாளமாக வெடித்திருந்தன. உடம்பிலே நெய்ப்பசை வற்றி, சுக்காகி விட்டனவோ பாதங்கள்?
“நடக்க முடியவில்லை. என்னால் என்ன முடியும்? இங்கேயே உட்கார்ந்து என்னால் முடிந்த வரை ஈசனைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தேன். என் குரல் அந்தத் தேவரின் காதில் பட்டு விட்டது. உன்னையே கொண்டு வந்து விட்டார். உன்னையே கொண்டு வந்து விட்டார்.”
ஆனந்தத்தில் அவர் தம் கால் வேதனையையும் மறந்து எழுந்து நின்று நர்த்தனம் புரிந்தார். கண்கள் மாரி பொழிய மைந்தனை அணைத்து அணைத்து இன்புற்றார்.
“இத்தனை நாளாக எங்கே போயிருந்தாய் ரங்கா? ரங்கன் இருக்கிறான் இருக்கிறான் என்று உன் சிற்றப்பன் சொன்னான். நான் நம்பவில்லை!” மறுபடியும் வானை நோக்கி அவர் கும்பிட்டார்.
“இந்தச் செருப்பைப் போட்டுக் கொண்டு வருகிறீர்களா? வீட்டுக்குப் போவோம்.”
“வேண்டாம் தம்பி, நீ போட்டுக்கொள்; தேவர் என் கூப்பாட்டைக் கேட்டுக் கருணை காட்டினாரே, அதுவே போதும். இனி நான் அறுபது காதமானாலும் நடப்பேனடா.”
இந்தச் சந்திப்பு, அவன் எண்ணாத்தாக, வேண்டாததாக ஒரு புறம் தோன்றிக் கொண்டிருந்தாலும், ரங்கனுக்குத் தன்னை மீறிய, கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தியின் ஆணையாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால் ஓர் அச்சம் படர்ந்தது.
ஒருவரும் வராத பாதையில், சொல்லி வைத்தாற் போல், எங்கே செல்லக்கூடாது, யாரைச் சந்திக்க வேண்டாம் என்றெல்லாம் நினைத்தானோ அவரையே சந்திக்க நேர்ந்து விட்டது!
கண நேரத்தில் ரங்கன் தீர்மானங்களை மாற்றிக் கொண்டு விட்டான். தந்தை, வீட்டுச் செய்திகள், ஊர்ச் செய்திகள் எல்லாவற்றையும் அவனுக்குக் கூறிக் கொண்டே உடன் வர, ரங்கனும் தன் பால் பண்ணை மேஸ்திரிப் பதவியைப் பற்றித் தந்தைக்கு அறிவிக்க, இருவரும் ஹட்டியைச் சமீபித்து விட்டனர்.
மாலைக் கதிரவன் விடைபெற்றது கண்டு, மலையன்னை இருள் போர்வையை விரித்துக் கொண்டிருந்தாள். ஒரு மழையடித்துப் பூமி குளிர்ந்தது கண்டு இன்புற்றவராய் ஜோகியின் தந்தை போர்த்துக் கொண்ட போர்வையுடன் வாயிற்புறம் உட்கார்ந்திருந்தார். லப்பையிடம் கொஞ்சம் கடன் வாங்கி அவர் அவ்வாண்டில் கிழங்கு விதைத்திருந்தார். ஏற்கனவே தாயின் சாவு வைபவத்துக்காக வாங்கியிருந்த கடன் வேறு, வட்டியும் முதலுமாக இருந்தது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலையில் போராட்டம். தீப மாடத்தில் அகல் வைத்து விட்டு மாதி அருகில் வந்து நின்றாள்.
“இந்த வருஷம் *தெய்வ ஹப்பா (* தேவர் பண்டிகை) மாசக் கடைசி என்று தீர்மானிப்பார்களா?” என்றான்.
“ஏன்?”
“அதுவரையில், வீட்டில் தானியம் இருக்காதே! பண்டிகைக்கு முன் நாம் புதுக்கதிர் அறுத்துக் கொண்டு வரலாமா? குறும்பன் வந்தானென்று பணம் கேட்டார்கள். அதற்குக் கூடக் கொறளித்தானே கொடுத்தோம்?”
லிங்கையாவுக்குப் பேச்செழவில்லை. இப்படி அவன் உடல் நலிவில் குன்றி வரும் காலத்தில், தானியத் தட்டும் சோதனைக் காலமும் புதியனவே அல்ல. என்றாலும், தேவரின் சோதனைக்கு முடிவே இல்லையா? மனசில் நிமிர்ந்து நிற்கும் மனிதன் கையேந்தியா உண்பது?
இருள் நன்றாகப் பரவி வந்துவிட்டது. வாசலில் செல்பவர்களின் உருவம் மட்டுமே தெரிந்தது.
“குளிரில் ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? எருமை கறக்க வேண்டாமா?” என்றாள் மெள்ள அருகில் வந்த மனைவி.
தம்பி எழுந்திருக்கு முன் அண்ணன் அம்பெனப் பாய்ந்து வந்தார். தம்பியைக் கட்டிக் கொண்டார்.
“தேவர் கருணை, ரங்கன் வந்துவிட்டான். இதோ பார் தம்பி ரங்கன், பொய்யில்லை!”
உருவம் புரியாத அந்த இருட்டில் ரங்கன் உயரமாக, கோட்டும் தலைப்பாகையுமாக, இடுக்கிய சுமையுடன் நின்றான்.
லிங்கையா நிமிர்ந்து பார்த்தார். சீறிப் புரண்டு வந்த உணர்ச்சிகளை, உதடுகளை துடிதுடிக்கத் தொண்டைக் குழியில் அமுக்கிக் கொண்டு பார்த்தார்.
“தீபம் கொண்டு வாம்மே, தீபம், தீபம்!” என்று ஆரவாரித்தார் தமையனார்.
ஜோகியின் தந்தை அசையவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் தம் தோளிலும் மார்பிலும் போட்டுக் கொண்டு நீரூற்றிப் பால் ஊற்றிச் சீராட்டிய மகன் மலையாக வளர்ந்து வந்து நிற்பதைப் பார்த்தார்.
தந்தையை அண்டுகையில் ரங்கனுக்கு இருந்த தெம்பு இப்போது அவர் தம்பியை அண்டுகையில் இல்லை.
மாதி ஏந்தி நின்ற தீப ஒளியில், அவன் கண்ட அந்த உருவத்தின் பொன் அவன் நெஞ்சின் போலியான பொய்த் திரை உறுதியின்றிப் படபடத்தது. சுயநலமும் கபடமும் நிறைந்த அந்த நெஞ்சைச் சிற்றப்பனின் கண்கள் துளைத்து வேதனையில் வாட்டின.
அணைக்க வேண்டிய கைகள் அவன் கன்னங்களில் பாய்ந்து அறைந்தன.
“ஐயோ!” என்று மாதியும் அண்ணாவும் அலறுகையிலே பழங்களெனச் சிவந்த கண்களுடன் வெறிக்குரலில் லிங்கையா கத்தினார்.
“எங்கேடா வந்தாய்? திருட்டுப் பயலே! போடா; போய் வீடு என் கண்முன் நிற்காதே. நீ இந்த வீட்டுப் பையன் அல்ல! போ, போய்விடு.”
தம்பி மனமதிர்ந்து, மூளை குழம்பி விட்டானோ என்று தோன்றிய எண்ணத்துடன் அண்ணா, “என்ன தம்பி!” என்றார்.
“நீ விடு. டேய் நீ என்ன நினைத்தாய்? திருட்டுப் பயலே. உன்னை இந்தக் கையால் பால் ஊற்றி வளர்த்தேன். என்னை எப்படியடா மோசம் செய்தாய்? துரைமாரின் மேசையா துடைக்கிறாய்? ஆடு மாடு தின்னும் ஹெலையனே! (சண்டாளர்) போ, போடா, போ!”
அழுகையும் ஆவேச வெறியும் மாறி மாறி வர அவர் எழும்பி எழும்பி ரங்கன் முன் பாய்ந்த போது, மாதி கஷ்டப்பட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். அந்த வாயிலில் கூடிய ஊர்க்கூட்டம் மலைத்து நின்றது.
சிற்றப்பனின் வரவேற்பு இப்படி இருக்கும் என்று ரங்கன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. எப்போதோ அவன் செய்த சிறு செயலை இன்னுமா மறக்கவில்லை அவர்? அவன் பணம் காசோடு நல்ல நிலையில் வந்திருப்பதன் பொறாமையோ ஒருவேளை?
ரங்கம்மையின் மகிழ்ச்சிதான் கட்டிப்பிடிக்க முடியவில்லை. அவன் மூட்டையை வீட்டுக்குள் கொண்டு வந்தது தான் தாமதம், அதை அவிழ்த்துக் கடை பரப்பி விட்டாள். பளபளக்கும் கண்ணாடி வளையல்கள், பட்டுத் துணிகள் எல்லாம் அவர்கள் அதற்கு முன் கண்டிராதவை.
பட்டுத் துணியை சட்டென்று குழந்தை மேல் போர்த்து ரங்கம்மை அழகு பார்த்தாள். “இதெல்லாம் ஒத்தையிலே செய்கிறார்களா?” என்று கேட்டு, ரங்கம்மையின் கணவன் இனிய ரொட்டியைப் பிய்த்துத் தின்பதும் குழந்தையின் வாயில் திணிப்பதுமாக அனுபவித்தான்.
ரங்கன் குமுறிக் குமைந்தான். ‘இதுவா வரவேற்பு! ஊரார் அனைவரும் சிற்றப்பன் சீற்றம் கண்டு ஒரே பக்கமாகப் பின்வாங்கி விட்டனரே!’
“என்ன ரங்கி, அண்ணன் வந்ததற்கு விருந்து சமைக்க வேண்டாமா? அரிசிச் சோறும் குழம்பும் வை” என்றார் தந்தை.
வீட்டில் அரிசி ஏது? வாயிலில் அவள் ஓடினாள். கரியமல்லர் வீட்டிலேதான் அவள் கால்கள் நுழைந்தன.
“எங்கள் ரங்கண்ணன் ஒத்தையிலிருந்து வந்து விட்டான். பட்டு, ரொட்டி எல்லாம் வாங்கி வந்திருக்கிறான். பூமி வாங்கிக் கிழங்கு போட்டிருக்கிறானாம். அரிசி கொஞ்சம் தாருங்களேன். அண்ணனுக்கு அரிசி சாப்பிட்டுப் பழக்கம்” என்று படபடத்துப் பெருமை பாடினாள்.
“சிற்றப்பன் சண்டை போட்டாராமே?” என்றாள் கரியமல்லரின் மூத்த மகள்.
“அவருக்கு உடம்பு சரியில்லை” என்று கூறிவிட்டு, படியரிசியை வாங்கிக் கொண்டு அவள் ஓடோடி வந்தாள். அடுப்பு எரிய வைத்துச் சோறும் குழம்பும் ஆக்கினாள்.
தன் வீரப் பிரதாபங்களைக் கேட்க, அந்தக் கிருஷ்ணன் வீட்டிலிருந்து கூட எவரும் வரவில்லை என்பதை அறிந்த ரங்கனுக்கு ஆற்றாமை வெடித்து வந்தது. “கிருஷ்ணன் இங்கு இல்லையா?” என்றான். படித்துப் பட்டம் பெற்ற கிருஷ்ணன் ஊர் திரும்பியதைக் கூறி இருந்தாரே ஒழிய, அவன் பாருவை மணக்க இருப்பதாகத் தந்தை அவனிடம் முன்பு கூறவில்லை.
இந்தச் சமயம் சட்டென்று நினைவுக்கு வந்தாற் போல் ரங்கனின் தந்தை, “கிருஷ்ணன் பாருவைக் கட்டப் போகிறான் ரங்கா, தெரியுமா? நேற்று வரை இங்கேதான் இருந்தான். நேற்றுத்தான் மணிக்கல்லட்டி போகிறான்” என்று எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் கூறி வைத்தார்.
“என்னது! பாருவையா?”
அவன் கொதித்து எழுந்தது போல் கேட்டதையும், விழிகள் உருண்டதையும் கண்டு தந்தை சற்று பரபரப்புடனே, “ஏன்? பாருவுக்கே இஷ்டம் போல் இருக்கிறது. தேவர் பண்டிகை ஆனதும் கல்யாணம் வைத்துக் கொள்வதாகக் கேள்வி” என்றார்.
“அதெப்படி முடியும். முறைக்காரன் இல்லையா? அவன் என்ன பணம் வைப்பான்? அதற்கு மேல் நான் வைக்கிறேன்!”
மகன் கொண்டு வந்த உயர்தர மதுப்புட்டியை உடைத்துத் தந்தை வாயில் ஊற்றிக் கொண்டார்.
“என்ன சொல்றே தம்பி?” என்றார் அசட்டுச் சிரிப்புடன்.
“என்ன சொல்லுவதா? அதெப்படிப் பாருவை வேற்றான் கட்ட முடியும்? ஜோகி திராணியற்றுக் கோயிலில் இருந்தால் நான் இல்லையா? எனக்கு உரிய பெண்ணை அவன் எப்படிக் கட்டலாம்?”
தந்தை விழித்தார், ‘யானை போன்ற கரியமல்லரின் குடும்பத்துக்கே எதிர் நிற்க, இந்தப் பையனின் இளமைத் தைரியம் துணிவு கொடுக்கிறதா, அன்றி அத்தனை செல்வம் சேர்த்து விட்டானா?’
“இதோ பாருங்கள் அப்பா, நான் இப்போதே அல்லது நாளையே மணிக்கல்லட்டி மாமனிடம் போய், பாருவை அழைத்து வரச் சம்மதம் கேட்பேன்” என்றான்.
வெகு காலத்துக்கு முன்பிருந்தே அவன் இளம் உள்ளத்தில் பதிந்திருந்த பொறாமை உணர்வின் பொறி, கரியமல்லர் குடும்பத்தின் மீது புகை கிளப்ப வாய்ப்பு உண்டாகி விட்டது.
“ஏன் தம்பி, பாரு ஒருத்திதானா பெண்? உலகிலே வேறு பெண்ணே இல்லையா உனக்கு?” என்றார் தந்தை மதுவின் காரல் ஏறும் தழுதழுத்த குரலில்.
“என்ன படிப்பு, பிரமாதம் புரட்டி விட்டான்! பன்னிரண்டு வருஷம் முன்பு ஒன்றும் இல்லாமல் ஓடிய நான் இன்று ஊன்றிப் பிழைத்துச் சம்பாதிக்கக் கற்றிருக்கிறேன். இவன் சம்பாதிப்பானா? கரியமல்லராக இருந்தால் என்ன? வேறு எந்தக் கரடியாக இருந்தால் என்ன? ரங்கன் பின்வாங்குவானா!” என்றான் ரோசத்துடன்.
பேசின கையுடன் பட்டுத் துணிகளை நாசமாக்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்துத் துணிகளைப் பறித்துப் பத்திரமாக மடித்தான். ரங்கம்மையின் முகம் குன்றியது.
ரங்கம்மை ஆக்கிய விருந்து, அன்று அவள் கணவனுக்குத்தான் சுவையாக இருந்தது. மதுவின் மயக்கிலேயே நிறைவெய்தி விட்ட தந்தை, சோற்றை ருசிக்கவில்லை. ரங்கனுக்கோ, தோல்வி கண்டுவிட்டாற் போன்ற ஒரு குமைச்சலில் நெஞ்சு எரிந்தது.
பாரு எப்படி அவனைக் கட்டுவாள்? தன்னை விட அந்தக் கிருஷ்ணன் பயல் எந்த விதத்தில் மேம்பட்டிருப்பான்? முறைக்காரனை அவள் அப்படி மறந்து விடுவாளா?
அன்றிரவு முழுவதும் அவன் இந்தக் கேள்விகளோடு புரண்டு புரண்டு படுத்தான். அவன் செல்வத்துக்கு வரவேற்பு இல்லை; புகழ் இல்லை; பெண்ணும் இல்லையா? ஏற்கனவே அவன் பீமனிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்; பீமனும் அதை ஆதரிப்பவனாகப் பேசினானே!
ஒருவேளை வெகுநாட்களாகக் கிருஷ்ணனுக்கும் பாருவுக்கும் தொடர்பு இருந்திருக்கக் கூடுமோ? அப்படி இருந்தால்?
இந்தக் கேள்வியில் வந்து நின்ற அவனால் அமைதியுடன் மறுநாளை மரகத மலையில் கழிக்க முடியவில்லை. பகல் உணவுக்குப் பின் அவன் மணிக்கல்லட்டிக்குக் கிளம்பி விட்டான்.
அவன் ஹட்டியை அடைந்த சமயம், பிற்பகல் கழிந்து மாலையாகிக் கொண்டிருந்தது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கோட்டும் தலைப்பாகையுமாக அவன் அருகில் செல்லும் வரையிலும் ஊர் மக்களுக்கு அவனை இன்னாரென்றே இனம் புரியவில்லை. பெண்களும் குழந்தைகளும் யாரோ என்று விரிந்த விழிகளுடன் அருகில் வந்து நோக்கினார்கள்.
“ஓ! மாதண்ணன் மகனா? ரங்கனா? இத்தனை பெரியவன் ஆகிவிட்டானே? நல்லாயிருக்கிறாயா?” என்பன போன்ற குரல்களுடன், முதியவர்களும் பெண்மணிகளுமாக அவனைச் சூழ்ந்து கொண்டு விசாரித்தார்கள்.
அப்படி விசாரித்தவர்களில் கிருஷ்ணனின் தாயும் இருந்தாள். கிருஷ்ணனும் வாயிலில் கலகலப்புக் கேட்டு வெளியே வந்தான். ஒரு கையில் விரிந்த புத்தகம்; விரல்களில் தங்க மோதிரங்கள்; முழுக்கைச் சட்டை.
ரங்கன் அத்தனை மக்களிடையேயும் இருந்து மீண்டு, கிருஷ்ணனை விழித்துப் பார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் அமைதியே நிறைந்திருந்தது.
“என்ன கிருஷ்ணா? நினைப்பில்லையா? நல்லாயிருக்கிறாயா?” என்று தன் பொறாமை உணர்வை விழுங்கிக் கொண்டு ரங்கன் குசலம் விசாரித்த போது, கிருஷ்ணனின் இதழ்களில் சிறு புன்னகை நெளிந்தது. “ஊர்ப்பக்கம் இப்போதான் நினைவு வந்ததா?” என்றான். இச்சமயத்தில் பாரு கிரிஜை பின் தொடர வாசலுக்கு வந்தாள். ரங்கன் பிரமித்துப் போனான்.
அடேயப்பா! மின்னல் போல அல்லவா கண்ணைப் பறிக்கிறாள்? அங்கங்களில் தான் எத்தனை வாளிப்பு! மேற்போர்வையாக இருந்த முண்டு விலகியிருந்தது. இளவேய்கள் போன்ற தோள்களைச் சட்டென்று நன்றாக மூடிக் கொண்ட அவள் கலகலவென்று ரங்கனைப் பார்த்துச் சிரித்தாள்.
“ஓடிப் போன அண்ணனா? வாருங்கள் ரங்கண்ணா! நல்லா இருக்கிறீர்களா? ஓடிப் போனது போல் சொல்லாமலே ஓடி வந்து விட்டீர்களே!” என்றாள்.
குரலில் கேலி இழையோடியது. ரங்கனின் நெஞ்சில் அது சுருக்கென்று தைத்தது.
“மாமன் மகளிடம் சொல்லிக் கொண்டா வர வேண்டும்? என்ன கிருஷ்ணா?” என்றான் எரிச்சலை விழுங்கிக் கொண்டு.
அவன் பேசிய விதம் கிருஷ்ணனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
நாகரிகம், கல்வி கற்றுத் தேர்ந்த மனிதர்களுடன் பழகி வரவேண்டிய தொன்றாகும். வெறும் பட்லரிடமும் வேலையாட்களிடமும் பழகிய இவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கலாம். மரியாதையுடன் பழகும் முறை எப்படித் தெரிந்திருக்கும்?
“நான் சொல்வது சரிதானே? என்ன கிருஷ்ணா?” என்றான் ரங்கன் மீண்டும்.
“நான் என்ன பேசுவது?” என்றான் கிருஷ்ணன் அலட்சியமாக.
“என்ன பேசுவதா? ஊரே, பி.ஏ. படித்த கிருஷ்ணன் பேசுகிறான் என்று தம்பட்டம் கொட்டுகிறார்களே என்று கேட்டேன்.”
கிருஷ்ணன் மறுமொழியே கூறவில்லை.
“ஒத்தையிலிருந்தா வருகிறாய் தம்பி?” என்றாள் ஒரு கிழவி.
“ஆமாம். கிழங்கு போட்டிருக்கிறேன். ஒரு மழை வந்து முளை வந்தாயிற்று” என்று ரங்கன் கிருஷ்ணனை நிமிர்ந்து பார்த்தான்.
“பாரு, என்ன நிற்கிறாய்? அம்மையும் அப்பனும் தோட்டத்துக்குப் போயிருந்தால், நீ இப்படித்தானா உபசரிப்பது வந்தவரை?” என்றாள் இளம்பெண்.
“முறைக்காரர் வந்து விட்டாரே என்று மலைப்பாக இருக்கும்” என்றாள் ஒரு குறும்புக்காரி.
“பார்த்தாயா கிருஷ்ணா? நான் போட்டிக்கு வந்துவிட்டேன் என்கிறார்கள்!” என்றான் ரங்கன்.
படித்து மரியாதை தெரிந்த கிருஷ்ணனுக்கு அது பரம விகாரமாக இருந்தது. இந்தச் சமயம் தாத்தாவும் மணிக்கல்லட்டி மாமனும் மாமியும் பரபரப்பாக வந்து விட்டார்கள். ரங்கனைச் சுற்றி நின்று விசாரணைகளால் திணற அடித்தார்கள்.
கிருஷ்ணன் நழுவப் பார்த்தான். தாத்தா விடவில்லை. அவனைப் பிடித்து அழைத்துக் கொண்டார். இன்னொரு கையில் ரங்கனையும் பிடித்துக் கொண்டு அவர் வீட்டுக்குள் வந்தார். பாரு உள்ளே போய்விட்டாள்.
“தாத்தா, நேராகவே கேட்கிறேன். நான் பீமனைப் பார்த்தேனே, அவன் செய்தி வந்து சொல்லவில்லையா? முறைக்காரன் இருக்க, மற்றவன் பாருவைக் கொள்வது நியாயமா?” என்றான் ரங்கன் பளிச்சென்று.
“அப்படி யார் தம்பி சொன்னார்கள்? எத்தனை நாளைக்கு முன்னே முடிந்த விஷயம், ஜோகிக்கு கிரிஜா என்றும், பாரு...”
“அம்மா!” என்று பாரு குறுக்கே முகம் சிவக்கப் பாய்ந்து வந்து அழைத்தாள்.
ரங்கனின் முகம் சுருங்கியது; கிருஷ்ணனின் முகம் மலர்ந்தது. தாத்தா இருவர் முகங்களையும் நோக்கினார்; புன்னகை செய்தார்.
கிரிஜை ஒரு கலயத்தில் மோரும், குவளையும் கொண்டு வந்து வைத்தாள்.
“மோர் சாப்பிடுங்கள்” என்று மாமா உபசரித்தார்.
கிருஷ்ணனுக்கு அங்கு ரங்கனுக்குச் சமமாக உட்காரவே பிடிக்கவில்லை. ஒரு பெண்ணைக் கொள்வது வெறும் முறை எந்த பந்தத்தில் மட்டும் நிர்ணயிக்கப்படும் செயலா? அவன் மெருகடைந்த உள்ளத்தில், திருமணப் பந்தம் என்பது அவிழ்க்க முடியாத, விலக முடியாத இறுகிய பிணைப்பாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் இருந்தது.
அவர்கள் சமுதாயத்தில் திருமணத்தைப் பற்றி இருந்த குறிக்கோள் மிக மிக உன்னதமானது என்பதில் ஐயமே இல்லை. மலர்கள் நாரின் பிணைப்பிலிருந்து நழுவி விடக் கூடாது என்பதற்காக, நாரை இறுக்கி மலரைத் துவண்டு விழச் செய்வதாகத் திருமணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி வைத்திருக்கப்படவில்லை. மலர் சரத்தோடு இணைந்து குலுங்க வேண்டும்; மங்கை புகுந்த இடத்தைப் பொலியச் செய்து, அந்தக் குடும்பக் கொடியைத் தழைக்கச் செய்பவளாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம். இந்த உயர் நோக்கத்தினால், கட்டுப்பாடுகளில் ஓரளவு தளர்வதற்கு உரிமையும் உண்டு. அன்பென்னும் ஒட்டுதல் இரண்டு உள்ளங்களிலும் இயற்கையாகக் கூடுகையில், எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை அன்றோ?
இந்த உயர் நோக்கத்தை உணராமல், திருமண வீடுகளில் இருந்த சந்துக்களைச் சுயநலத்துக்கு உபயோகித்துக் கொள்ளும் வழிகள் ஒழிய வேண்டும் என்பது அவன் கருத்தாக இருந்தது. ஒருத்தியைக் கொண்டு, அன்போடு உவந்து வாழ, திருமண விதிகளில் கட்டுப்பாடு வேண்டும் என்று அவன் அப்போது உறுதியாக நினைத்து, அதைச் செயலாற்ற எண்ணம் கொண்டிருந்தான்.
பாருவுக்குத் தன் மீதுள்ள அன்பை அவன் அறிவான். அவ்வன்பு அவனிடமும் நிறைந்துள்ளது. எனவே, ரங்கன் விரும்பத்தகாத முறையில் அல்லவோ நடக்கிறான்?
கிருஷ்ணனின் மன ஓட்டம் இவ்விதம் எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ரங்கன் சுயப்பிரதாபம் பேசிக் கொண்டிருந்தான். தன்னிடம் ஐந்நூறு வெள்ளிப் பரிசம் வைக்கவும் பொருள் உண்டு என்று ஜாடை காட்டினான்.
தாத்தா யோசனையில் ஆழ்ந்தவராகத் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார். ரங்கன் சற்று நிறுத்தியதும், “இங்கே... இப்போது பணத்தைப் பற்றிப் பிரச்சனை இல்லை. நீயும் பணம் கொடுப்பாய். கிருஷ்ணனும் சளைக்க மாட்டான். இப்போது... பணப் போட்டி வேண்டாம். ஒரு பலப் போட்டி நடத்தினால் என்ன என்று பார்க்கிறேன்!” என்றார் கம்பீரமாக.
“அது நல்லது. ஒரு பெண்ணுக்காக இருவர் பலத்தையும் பரிசோதிப்பது போன்ற வேடிக்கை கிடையவே கிடையாது” என்றார் மாமன்.
“அது சரி; அது சரி” என்று மாமி ஆமோதித்தாள்.
இதற்குள் சமையலறை, உள் மனை வழியாக வந்த மாதியின் குரல் ஒலித்தது. “இரண்டு பேரில்லை. மூன்று பேர் என்று சொல்லுங்கள். ஜோகியும் பாருவின் கையைப் பற்றும் முறையுடையவன் அல்லவா அண்ணா?” என்றாள்.
திடுக்கிட்டாற் போல் கிருஷ்ணன் நிமிர்ந்தான். ரங்கனும் விழிகள் நிலைக்க, வாயிற்படியில் நின்ற ஜோகியின் தாயைப் பார்த்தான்.
“அட, நீ எப்போது வந்தாய் தங்கச்சி?” என்றார் அண்ணா.
“நான் வந்தப்போ, நல்லவேளை, ஜோகி இன்னும் பத்து நாளில் கோயிலை விட்டு வருவான். அந்தப் போட்டியில் அவனும் உண்டு” என்றாள் திடமாக.
“இன்று பதினைந்தாம் நாள், திங்கட்கிழமை நம் மரகதமலை ஹெத்தப்பா கோயில் முன் இருக்கும் உருண்டைக் கல்லை யார் தூக்கிக் கொண்டு இரண்டடி நடக்கிறார்களோ, அவரே போட்டியில் வென்றவர்.”
முதியவரின் குரல் அமைதியுடன் ஒலித்தது.
கிருஷ்ணனுக்கு முகத்தில் செம்மை ஓடியது.
ரங்கன் எக்களித்தான். ‘ஹம், பாரு எனக்கே உரியவள். ஜோகிப் பயல் ஒருவேளை உண்டு குச்சியாக இருப்பான்; இந்தக் கிருஷ்ணன் வெறும் ஒல்லிப் பயல், பெண் பிள்ளை போல் முகம் சிவக்கிறது’ என்று எண்ணியவண்ணம், கருவிழிகள் நிலைக்க சங்கடத்துடன் பாட்டனாரையே நோக்கி நின்ற பாருவையே பார்த்தான்.
மறுகணம் அவள் முகம் அதே நோக்குடன் கிருஷ்ணனின் மீது லயித்த போது, ரங்கன் ரோசத்துடன், ‘உன்னை எனக்கு உரியவளாகச் செய்து கொள்ளாமற் போனால் நான் ரங்கனல்ல’ என்று தனக்குள் கறுவிக் கொண்டான்.
ஜோகியினால் வெகு நேரம் வரையிலும் அந்தச் செய்தியை உண்மையாக நம்ப முடியவில்லை. நாம் நினைத்தபடி எதுவும் நடக்காது. அனைத்தும் அவன் செயல் என்பது அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு படியிலும் நிதர்சனம் ஆகிவிடுகிறதே! சற்றும் நினைக்காத விதமாக அவன் பால் கறக்கும் உரிமை பெற்றான்; கோயில் பணிக்கு உரியவனானான். அதுபோல்...
பெரியப்பன் செய்தியைக் கூறிவிட்டுப் போன பின்னும் கூட, அன்று வெகுநேரம் அவன் ஏதோ ஒரு நீண்ட கனவினின்றும் விழித்துக் கொண்டாற்போலவும், பிறகு பளாரென்று வந்த சூரிய ஒளியிலே அவன் கண்ட காட்சி பொய்யாகிவிட்டாற் போலவும் அவனுக்குத் தோன்றியது. பாரு தனக்கு உரியவள் என்ற உணர்வு எப்படியோ அவன் உள்ளத்தில் வேரூன்றியிருந்தது. தன் வாழ்வைப் பற்றி நினைக்கையில், பூத்துக்குலுங்கும் செடிபோல் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த உணர்வை, அந்தப் பூச்செடியை, கிருஷ்ணன் அவளை மணக்க இருக்கிறான் என்ற செய்தியால், கோடரி கொண்டு வீழ்த்துவது போல், பெரியப்பன் வீழ்த்தி விட்டார். என்றாலும் அவன் மனம் நெறியாலும் சீலத்தாலும் பண்பட்ட மனமன்றோ?
எனவே அந்த ஆசைப் பூஞ்செடி வீழ்ந்துவிட்ட போதிலும் அவன் சிறிது நேரந்தான் மருண்டு நின்றான். பிறகு தன்னை வருத்திய சோகத்தைக் களைந்து விலக்க மனதைப் பலவிதங்களில் தேறுதல் செய்து கொள்ள முயன்றான். அவளே கிருஷ்ணனை விரும்பி மணப்பதாக இருந்தால் அவன் தாபம் கொண்டு பயன் என்ன? உண்மையில் கிருஷ்ணன் அவனை விட உயர்ந்தவன் அல்லவோ? செல்வ வளம் பெற்ற இளைஞன்; அவர்கள் மண்ணுக்கே புதுமையாகப் படித்துப் பட்டம் பெற இருப்பவன். அவனுக்கு ஈடாக ஜோகி தன்னை நினைப்பது தகுமோ? அவனுடைய உள்ளத்தில் பாரு அன்புக்கு உரியவளாக இருக்கிறாளென்றால், அவள் நல்ல விதமாக வாழ்ந்து, நல்ல மக்களைப் பெற்று முன்னுக்குக் கொணர்வதில் தானே அவன் சந்தோஷம் கான வேண்டும்.
இத்தகைய எண்ணங்கள் கொண்டு பற்பல விதங்களாகப் பூனைக்குட்டியைப் பழக்குவது போல் மனத்தைச் சமாதானம் செய்து கொண்டு அவன் அடங்கி இருந்த நிலையிலே, ரங்கன் வந்து மணிக்கல்லட்டி சென்ற செய்தியைப் பெரியப்பன் கூறிப் போனான். ஆனால் அவனுடைய தந்தை ரங்கனுக்கு அளித்த வரவேற்பைப் பற்றி மட்டும் கூறவில்லை. மறுநாள் தந்தைக்குக் கடுங் காய்ச்சல் ஏறியதும், பஞ்சாயத்தார் அவசரக் கூட்டம் போட்டு, ஜோகியைக் கோயில் எல்லையிலிருந்து விடுவித்து விட்டார்கள். தீயணைக்கப் பெற்று, ஜோகி விடுதலையாகி வீடு வந்தான். கீழ் மலையிலிருந்து கோயில் எல்லையைக் காக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பையன் அவ்வளவு சீலமுடையவனா என்று கூட எல்லாரும் ஆலோசனை செய்யவில்லை.
பல ஆண்டுகள் தவம் இருந்த குடிலை விட்டு, சின்னஞ் சிறுவனாக அவன் விளையாடி மகிழ்ந்து தரையிலே காலை வைத்த போது நுகர்ந்த இன்பத்தை அளவிட்டுக் கூற முடியுமா? ஹட்டியில் வீட்டுக்கு வீடு மாற்றம் கண்டிருந்தது. ஆனால் அவன் சொந்த மனை, புது மெருகு அழியாமல் அவன் கண்டிருந்த மனை, வெள்ளைப் பூச்சிழந்து தோற்றம் அளித்தது. கொட்டில் எருமைகளில் இரண்டே இரண்டு மிஞ்சியிருந்தன. புறமனையில் ஐயனின் படுக்கை நிரந்தரம் ஆகிவிட்டது. மருந்து அரைக்கும் குழிக்கல் படுக்கையருகிலேயே வந்து விட்டது. தானியம் நிரம்பி வழியும் பெட்டி காலியாகக் கிடந்தது. பால்மனையிலே ஐயன் உடுத்தும் மடி ஆடை, அழுக்குப் பிடித்துத் தொங்கியது. பளிச்சென்று இருக்கும் அடுப்படி, எத்தனை தினங்களாகவோ மெழுகாமல் இருந்தது தெரிந்தது. ஆமணக்கெண்ணெய்க் குடம், மெழுகு பிடித்துத் தூசி படிந்து உதவாத சாமான்களுடன் கிடந்தது.
அவன் உள்ளம் விம்மியது. பன்னிரண்டு ஆண்டுகளில் அந்த வீடு வளமை குன்றி வறட்சியும் கண்டுவிட்டது.
மஞ்சள் படர்ந்த முகத்துடன் சோகையாகிக் கிடந்த தந்தையருகில் ஜோகி வந்து நின்றான். தந்தை மகனை நிமிர்ந்து நோக்கினார். கண்களில் நீர் துளிர்த்து நின்றது.
‘இரிய உடையாருக்கு மகனைப் பணி செய்ய விடுவேன். என் கடன் தீரும்; இந்த வீட்டில் நலம் கொழிக்கும்’ என்று எண்ணினாரே! வீடு செல்வச் செழிப்புடன் விளங்குகிறதா? இல்லை. உழைக்கும் ஆளை நோய்ப் படுக்கையில் தள்ளிவிட்டதே! ஆனால், பையன் வந்துவிட்டான்; ஜோகி வந்து விட்டான். தளையகன்ற பெருமூச்சில் இருதயம் விம்மியது; மூச்சு முட்டியது.
அவருடைய மகனாக ஜோகி நின்றான். மெலிந்தாற் போல் தோன்றினாலும் இரும்பான உடல் வெண்மையில் மண்ணின் செம்மையான சாரமேறிய மேனி, “ஜோகி!” என்று மகனின் கைகளைத் தந்தை பற்றிய போது அவர் கண்கள் பொல பொலவென்று நீரைச் சிந்தின.
“தானம் வாங்கி உண்ணும் நிலைக்கு வந்துவிட்டேனடா மகனே! உழைக்காமல், விதைக்காமல் பிறர் கையேந்தி உண்ணும் நிலைக்கு வந்து விட்டேனடா ஜோகி!” என்று மகனின் கைகளைக் கண்ணீரால் நனைத்து விட்டார்.
நனைந்த கையால் தந்தையின் கண்ணிரைத் தனயன் துடைத்தான்; “நான் வீட்டுக்கு வந்து விட்டேனே அப்பா, வானம் இருக்கிறது; என் கைகள் இருக்கின்றன; மண்ணில் உழைக்க மகனாய் நான் இருக்கிறேன். ஓராயிரம் பேருக்கு நான் உணவளிப்பேன் அப்பா. நான் உங்கள் மகன்; உங்கள் மகன்!”
லிங்கையா ஆனந்தக் கண்ணீர் சொரிய, படுக்கையிலிருந்து எழுந்து மகனை மார்புறத் தழுவிக் கொண்டார். “ஐயனுக்குப் பணி செய்தவன் நீ; உனக்கு ஒரு குறையும் வராது” என்று வாழ்த்தினார்.
அருகில் வந்த தாய், “உருண்டைக்கல் களியுருண்டை போல் பெயர்ந்து வர, பாரு நம் வீட்டுக்கு வர வேண்டும் என்று வாழ்த்துங்கள். நான் அன்று விறகுக்குப் போனவள், வெட்கம் விட்டு மணிக்கல்லட்டி சென்றேன். ‘என் பையனுக்கு உன் பெண்ணைத் தருவதாகப் பேசிய பேச்சின் நாணயம் வெள்ளிப் பணத்தைக் கண்டதும் பறந்து விட்டதா?’ என்று கேட்கப் போனேன். தேனர் கருணை ஐயனின் வாயில் பலப்போட்டி என்று வந்தது. ஜோகியும் பந்தயத்தில் கலந்து கொள்வான். ‘ஹெத்தப்பா கோயில் உருண்டைக் கல்லைத் தூக்க அவனும் வருவான்’ என்று கூறினேன். நீங்கள் வாழ்த்துங்கள்” என்றாள்.
லிங்கையாவுக்குப் பந்தயம் பற்றிய விவரம் தெரியும். ஜோகி கலந்து கொள்ள வேண்டி அவள் பந்தய நாளைக் கூடத் தள்ள முயன்றிருக்கிறாள் என்பதையும் அறிவார். ஆனால் ஜோகி முழுவதும் அறிந்திருக்கவில்லை.
லிங்கையா பதில் சொல்லவில்லை. அவர் முகம் பளபளத்தது. அந்த ரங்கன், மகனைப் போல் வளர்த்த ரங்கன் - நேர்பாதை இல்லாமல் வழி பிறழ்ந்து செல்பவன் - அவனுக்கு நன்மை எப்படி வரும்? பால் கறப்பதைப் புனிதச் சடங்காகவும், பாலைப் புனிதமாகவும் நினைக்கும் குலத்தில் பிறந்த அவன், பால் பண்ணை மேஸ்திரியாக ஒழுங்காகவா பணியாற்றுவான்? திருட்டுப் பால் விற்றுத் தந்திரங்களில் தேர்ந்த பணம் சேகரிக்கும் உண்மையை அந்தக் கண்களே அல்லவோ அவர் மனத்துக்கு உரைத்தன? உண்மையாக அவன் கவடற்று வாழ்ந்தால், சிற்றப்பனிடம் அன்பாக வந்து சமாதானம் கூறியிருக்க மாட்டானா? அந்தப் பையனைக் காணாமல் இருந்தாலே சமாதானமாக இருந்திருப்பாரே! ரங்கனைக் கண்ட பின், பாசம் அலைந்த நெஞ்சில், அவனை நல்வாழ்வுக்குத் திரும்பச் செல்லும் வழிகளைப் பற்றிய எண்ணங்களெல்லாம் ஊசலாடின.
ஜோகி தங்கம்; அவனுக்கு வருகிறவள் எப்படி இருந்தாலும், அவளையும் அவன் தங்கமாக்கி விடுவான். ஆனால் ரங்கனுக்கோ? அவனைப் புடமிட்ட பொன்னாக்க, ஓர் உயர் கன்னியல்லவா துணையாக அமைய வேண்டும்? முதல் முதலாகப் பிறவி எடுத்ததும் அன்பாக நிற்கும் பெண் துணையான அன்னையை அவன் இழந்து விட்டான். அவன் வேண்டி விரும்பி, பாருவை மணக்க வந்திருக்கிறான். இம்முறையும் அவனுக்கு ஏமாற்றம் வேண்டாம். பாரு, இந்த வீட்டுக்கே ரங்கனுக்கு மனைவியாக வரட்டும்; கோணல் வழி திருந்தட்டும். மனவெழுச்சியை அவர் மேற்கூறிய எண்ணங்களுடன் விழுங்கிக் கொண்டு மௌனம் சாதித்தார்.
“ஏன் பேசாமல் மௌனம் சாதிக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நாளும் நம் குடும்பத்துக்கு வாய் திறந்து நன்மை கூறியதில்லை. உங்கள் மகனை வாய் திறந்து வாழ்த்த உங்களுக்கு மனமில்லையே? ஒரு வேளை உண்டு, வெறும் கோணியில் என் மகன் படுத்ததை நினைக்க என் மனம் எத்தனை ஆண்டுகள் எப்படிக் குமுறியது தெரியுமா? அந்தக் குடும்பத்துக்காக, நீங்கள் இந்தக் குடும்ப வளமையை இத்தனை நாட்கள் தியாகம் செய்தது போதும். நான் இம்முறை ஒப்பமாட்டேன்.”
மனம் வெறுக்க ஆற்றாமை பீறிட்ட போது, லிங்கையா குலுங்கிப் போனார். அந்த வீட்டில் அவள் குடிபுகுந்து வேறு எந்த விதச் சுக சௌகரியமும் கேட்கவில்லை. ஒரு வாய்ச்சொல், ஒரு தாயுள்ளம் குளிர வாய்ச்சொல் நல்காத கணவர், அவர் கடமை இதுவுமன்றோ?
மகனின் தலையில் கை வைத்த போது, அவர் கை நடுங்கியது. “பாரு இந்த வீட்டுக்கு வரட்டும். உன் கைக்குக் கல்லுருண்டை கனம் இல்லாமல் வரட்டும்” என்று வாழ்த்தினார்.
விவரங்கள் அனைத்தும் பிறகே ஜோகிக்குப் புரிந்தன.
மாதி அன்று பாலும் நெய்யுமாக விருந்துச் சோறு பொங்கினாள். அது வரையிலும் விருந்துணவு சமைத்து எதிர் வீட்டாரைக் கூட அழைக்காமல் அவர்கள் அதை உண்டதில்லை. அன்று அவர்களை அழைக்கவில்லை. பெரிய கலத்தில் அப்பனும் பிள்ளையுமாக உண்ண, மாதி கண் குளிரப் பார்க்க விரும்பினாள்.
அவள் மனம் நோகக் கூடாதென்று, லிங்கையா உள் மனையில் வந்து அமர்ந்தார். வட்டில் பளபளத்தது. நடுவே பொன்னிறத்தில், சீனி சேர்ந்த பொங்கல், பாலில் வெந்த பொங்கல், பீன்ஸ் காயும், கிழங்கும் போட்ட குழம்பு, கீரைத் துவட்டல்.
லிங்கையாவின் நாவுக்கு ஒன்றுமே ருசிக்கவில்லை. வட்டியிலிருந்து தந்தை எடுத்த ஒரு கவளைத்தைக் கூட விழுங்கவில்லை; தான் உண்ணுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த ஜோகி திடுக்கிட்டான். அன்னை அன்புடன் சமைத்த உணவு, சொல்லொணாத சுவையுடன் இருக்கிறதே!
“அப்பா, நீங்கள் ஒன்றுமே உண்ணவில்லையே!” என்றான்.
“அவர் சரியாக உண்டு ஒரு குறிஞ்சியாயிற்றே? ஜோகி! அவருக்கு உணவு ருசித்தால், உடல் நோய் தீருமே! பாழான குறும்பன் செய்த வினை என்று சொல்லுகிறார்கள். நானும் ஊர்ப் பெரியவர்களிடம் முட்டிக் கொண்டாயிற்று. யார் வீட்டுக்கு வினை செய்ய எண்ணி இந்த வீட்டுக்குச் செய்தானோ?” என்றாள் அம்மை.
ஜோகி எடுத்த உணவை வாயில் போடாமல் நிலைத்தான். முறைக் காய்ச்சல் அவர் ரத்தத்தின் சத்தையே உறிஞ்சி விட்டதே! காட்டுக் குறும்பர் தாம் இந்த வினைக்குக் காரணமா? எவருக்குமே தீமை நினைக்காத தந்தைக்கு, காட்டுக் குறும்பர் எதற்குத் தீவினை செய்ய வேண்டும்? அவர்கள் தேனடையைத் திருடினாரா? அவர்கள் பயிரிட்ட விளைவை விலையின்றி உண்டாரா?
“அம்மா, நம் குறும்பப் பூசாரி வருவதில்லையா?” என்று கேட்டான்.
“பதினைந்து நாட்களுக்கு முன் தேன் கொணர்ந்தான். சாமையும் கிழங்கும் கொஞ்சம் இருந்தன. நீ கோயிலில் விளைவித்துக் கொடுத்தது. அதைத் தந்து, மருந்துக்குத் தேன் வாங்கினேன். அப்போது, ‘பூசை போடுகிறேன், மந்திரம் சபிக்கிறேன்’ என்றான். நான் பெண்பிள்ளை, என்ன செய்வேன்?” என்றாள் தாய்.
ஜோகி மனத்துக்குள் தீர்மானம் செய்து கொண்டான். முதற்கடமை அவனுக்குக் கல்யாணம் அல்ல. வினையை வைத்த அந்தக் குறும்பனிடம் சென்று வினையை எடுக்கச் செய்ய வேண்டும்.
பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, மறைந்திருந்த சூரியன் மெல்லத் தலைநீட்டி இளநகை புரிந்தான். ஜோகி வெளியே செல்லச் சித்தமாக ஆடைகளை மாற்றிக் கொண்டான். அம்மையிடம் கேட்டு ஒரு வெள்ளிப் பணம் பெற்றுக் கொண்டான்.
அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த குறும்பர் குடியிருப்பை அடைய, மணிக்கல்லட்டிக்குக் கீழோடு சென்று காட்டிடையே புகுந்து இறங்க வேண்டும். குறும்பர்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் காட்டிடையே அமைந்திருப்பவைதாம். பள்ளங்களில் ஈரம் தங்கும் இடங்களில் அவர்கள் வசித்தாலும், காய்ச்சல் நோய் அவர்களைப் பிடிப்பதில்லை. காரணம் என்ன?
குறும்பர் குடியிருப்புக்கு அவன் சென்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு அவன் சென்ற போதும், தந்தையின் உடல்நிலைக்குப் பரிகாரம் தேடும் காரணத்தைக் கொண்டு தான் சென்றான்.
காட்டு வழி மாறவில்லை. ஆனால், தரிசாகக் கிடந்த நிலங்களில் வரிவரியாக மலையன்னைக்குப் பாவாடை அணிவித்தாற் போல் உருளைக் கிழங்குச் செடிகள் புதுமையாகத் தோன்றின. இரண்டோர் இடங்களில் புள்ளி குத்தினாற் போல் தேயிலையும் பயிராக்கியிருந்தார்கள். உருளைக் கிழங்கு உணவாகும். தேயிலையோ பணமாகும். உணவு முக்கியமா? பணம் முக்கியமா?
விருவிருவென்று அவன் மணிக்கல்லட்டிக்குக் கீழே குமரியாற்றின் வளைவுக்கு வந்துவிட்டான். மறுபுறுத்து மலை வழி கோத்தைப் பக்கம் இட்டுச் செல்லும். இரு மலைகளுக்கிடையே, குமரித்தாய் நெளிந்து ஒல்கி ஒசிந்து செல்லும் அழகை நாள் முழுதும் பார்த்திருக்கலாம். சரிவுகளெல்லாம் புதரும் முள்ளுமாகக் காடுகள், வேங்கை மரங்களும் சரக்கொன்றை மரங்களும் ஆங்காங்கே பூத்துக் குலுங்கின. எங்குமே நான் இல்லாத இடமில்லை என்பது போல் நீலக் குறிஞ்சி.
ஜோகி, கானகத்தினூடே புகுந்து, ஆற்றின் போக்கோடு சென்ற ஒற்றைத் தடத்தில் நடந்தான். மணிக்கல்லட்டியிலிருந்து, விறகு சேகரிக்க வரும் பெண்களில் ஒரு வேளை பாருவும் வந்திருப்பாளோ என்ற சபலத்துடனேயே அவன் நடந்தான். ஒற்றையடித்தடம் ஆற்றின் போக்கோடு சென்று சட்டென்று பிரிந்தது. அங்கு ஆறு வளைந்து, ஒரு பாறையில் வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே சுனை, கிருஷ்ணனையும், பாருவையும் இணைத்து வைத்த இடம்.
நீர்வீழ்ச்சியை மேலிருந்து பார்க்க விரும்பி அருகில் நடந்த ஜோகி, சட்டென்று தேனி கொட்டிவிட்டாற் போல் மருண்டு நின்றான். பூத்துக் குலுங்கும் சரக் கொன்றை மரத்தின் கீழே, அவன் காணும் காட்சி! அது கனவல்லவே!
ஜோகி கண்களைத் துடைத்துக் கொண்டான். மீண்டும் மீண்டும் கொட்டி வழித்துக் கொண்டே நோக்கினான்.
பத்தடி தூரத்துக் காட்சி அவன் கண்களைப் பொய்யாக்குமா? அவன் பார்த்துக் கொண்டே இருக்கையில் மாலை வெயில் அவர்கள் மீது நகர்ந்தது.
ஜோகி, அவர்களிடமிருந்து பார்வையை அகற்ற, அந்த மரத்தின் மீதே பதித்தான். ‘மினிகே’ இலைக் கொடிகள் அந்த மரத்தைப் பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாமல் தழுவிக் கொண்டிருந்தன.
கிருஷ்ணன் தான் அவன். சந்தேகமே இல்லை. மஞ்சள் வர்ணக் கழுத்துப் பட்டியுடன் கூடிய கம்பளிச் சட்டை, தலையில் பாகை போல் சுற்றிய வெள்ளைத் துணி. எதிரே அவன் முகந்தான் ஜோகிக்குத் தெரிந்தது. அவன் சிரித்தான். பெண்மை தோய்ந்த முகம். அவன் உண்மையில் அழகுள்ளவன்; பாருவுக்கு ஏற்றவன்.
உருண்டைக் கல்லைத் தூக்குவது ஜோகிக்குப் பிரச்சனை அல்ல. கோயில் முன் அந்தக் கல், இளைஞர்கள் விளையாட்டாகப் பலம் பழகிக் கொள்ளவும் பரிசோதித்துக் கொள்ளவும், எத்தனை நாட்களாகவோ உபயோகமாக இருந்திருக்கிறது. சற்றே நீள உருண்டையாக இருக்கும் அந்தக் கல்லை, இரண்டு கைகளையும் சங்கிலிப் போல் இணைத்துக் கொண்டு ஒருவிதமாகப் புரட்டித் தூக்க வேண்டும். அந்த வாகில், ஜோகி எத்தனை நாட்களோ அதைப் புரட்டி, இரண்டு அடி உயரத்துக்குத் தூக்கி இருக்கிறான். மங்கையைப் பெறும் பந்தயம் அத்தனை எளிதில் முடிந்து விடும் என்பதை அவன் தாய் கூறும் வரையில் நினைத்திருக்கவில்லை.
ஆனால், கண்ட காட்சி, மனத்தில் கலக்கத்தை யன்றோ ஏற்படுத்தி விட்டது? இணைந்த உள்ளங்களைப் பிரித்து, பாருவை அவன் அடைவது நலத்தை விளைவிக்கக் கூடியது தானா?
சட்டென்று கிருஷ்ணனின் முகத்தில் துயரச்சாயை கவிழ்ந்தது.
துயரம் இருவர் கண்டங்களையும் அழைத்து விட்டது போலும்! இருவரும் கணம் யுகமாக நிற்கின்றனரா? தானும் அதே நிலையை அடைந்து விட்டாற் போல் ஜோகிக்குத் தோன்றியது.
“பாரு?” என்றான் கிருஷ்ணன்.
“உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையா பாரு? நான் வெல்லுவேன் என்ற நம்பிக்கை இல்லையா உனக்கு?”
பாரு மறுமொழி புகன்றதாகவே அவனுக்குத் தோன்றவில்லை.
“நம்முடைய உண்மையான அன்பு ஒரு நாளும் பொய்யாகாது. பாரு ரங்கனால் கல்லைத் தூக்கவே முடியாது. நீ வேண்டுமானால் பார்.”
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“அவன் உடல் வளைந்து வேலை செய்பவன் அல்லன்.”
“வேலை செய்யாமல் பணம் எப்படி நிறையச் சேர்க்க முடியும்?”
“அவன் கண்கள், அவன் தந்திரத்தில் முழுகி எழுந்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன பாரு. பூமி வேலைக்குக் கூலி வைப்பான்; கூலி கொடுக்க என்ன தந்திரமோ?”
“தந்திரம் அறிந்திருப்பானென்று தான் நான் அஞ்சுகிறேன், அத்தான். ஏதேனும் மந்திர தந்திரம் கொண்டு கல்லைத் தூக்கிவிட்டால்?”
கிருஷ்ணன் வாய்விட்டுச் சிரித்தான்; அது இருதயத்திலிருந்து வந்த சிரிப்பல்ல. பாருவின் கலக்கத்தை விரட்டுவதற்காக, மேகத்தை வாயால் ஊதிக் கலைப்பது போல் கடகடவென்று சிரித்த சிரிப்பு.
“அந்த மந்திர தந்திரமெல்லாம் நீ நம்புகிறாயா பாரு? அதெல்லாம் வெறும் பொய். இடையே வந்தவன் வந்தது போல் தோற்றுப் போவான். நான் நாளையே மரகத மலைக்குப் போகிறேன். இரவெல்லாம் கோயில் திண்ணையில் படுத்தாவது, கல்லைத் தூக்கிப் பழகப் போகிறேன்” என்றான்.
ஜோகியின் உள்ளத்து மூலையில் பொறாமை என்னும் பொறி சுடாமல் இல்லை; ஆனால் ஒரே கணந்தான். அதை வேறு நினைப்பால் வென்று விட்டான். ‘பாரு என் தங்கை; என்றோ இறந்து போன என் தங்கச்சி’ என்று கண்களை ஒத்திக் கொண்டான்.
அவனுடைய அம்மையின் ஆசை, பாரு அந்த வீட்டுக் கலங்களை ஆள விளக்கை ஏற்ற வர வேண்டும் என்பது. அந்த ஆசையில் அவனைப் போட்டியில் சேர்த்து விட்டாள்.
அந்த ஆசையில் அவனும் நனைந்தவனாகத்தான் இருந்தான். ஆனால், அங்கே அவர்களைக் கண்டு, கேட்ட கணம் முதல் அவன் புதியவன் ஆகிவிட்டான். அவளை அடைய வேண்டும் என்ற தாபம் வேறோர் ஆவலினால் நிறைந்து விட்டது.
அவன் விலகிவிடுவான். ஆனால் ரங்கன்? அவனை எப்படி விலக்குவது? ஒருவேளை பாரு அஞ்சுவது போல், மந்திர தந்திரம் கற்று வருவானோ? இரவிலே வந்து கிருஷ்ணன் கல்லைத் தூக்கிப் பழகும் போது, இப்படித்தான் தூக்க வேண்டுமென்று அவன் சொல்லிக் கொடுக்கலாமா?
என்ன விசித்திரம்! போட்டியிடும் அவன், மற்றவனுக்கு வெல்ல உதவுவதா போட்டி?
ஜோகி வந்த சோடு தெரியாமலே ஆற்றைக் கடந்து, அக்கரைக்கு நடந்தான்.
குறும்பப் பூசாரியை, அவன் குடியிருப்புக்குச் செல்லும் முன்னரே வழியில் சந்தித்து விட்டான் ஜோகி.
“அப்பாடா! ஐயன் கோயிலை விட்டு இன்றைக்குத் தானே வந்தீர்கள்? வாருங்கள் வாருங்கள்” என்று அவன் ஜோகியை வரவேற்றான்.
“உங்களைப் பார்க்கலாமென்று தான் வருகிறேன்” என்று ஜோகி, அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.
“சொல்லியனுப்பினால் நான் வரமாட்டேனா? என்ன விசேஷம்?”
“பரவாயில்லை; நீங்களும் உட்காருங்கள். ஐயனின் காய்ச்சலுக்குப் பரிகாரம் நாடியே வந்தேன். கிட்டத்தட்ட ஒரு குறிஞ்சியாகிறதே!” என்றான் ஜோகி.
“அது முறைக் காய்ச்சல்.”
“ஆமாம், உடம்பெல்லாம் மஞ்சளாகிப் போச்சு. ஒரு கவளம் சோறு சாப்பிடுவதில்லை. ஏதேதோ மருந்துகள் அம்மையும் வைத்துக் கொடுக்கிறாள். ஐயன் யாருக்குக் கெடுதல் செய்தார்? தமக்குத் தீங்கு செய்பவர்களுக்கு கூட அவர் தீங்கு நினைக்காதவராயிற்றே! அவர் ருசித்து உண்ணாமலிருக்க உடல் எப்படித் தாங்கும்? இதோ பாருங்கள் நான் வேண்டிக் கொள்கிறேன். ஏவலோ, வினையோ, உங்களுக்கு ஐந்து ‘கூடு’ தினையும் சாமையும் தருகிறேன். அவர் நோயைப் போக்கி விடுங்கள். அவர் இனியும் வலுவிழந்து எத்தனை நாட்கள் இருப்பார்?” என்றான் ஜோகி.
“ஐயோ! நீங்கள் என்ன, இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? ஜடசாமிக் கொப்ப நான் சொல்கிறேன். எங்களில் யாரும் அதெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. அவர் மேல் வினை செய்ய எங்களுக்குப் பைத்தியமா? அப்படியெல்லாம் நினைக்காதீர்கள்.”
“அப்படியானால் இந்த உருக்கும் காய்ச்சல் போவதெப்படி?”
“அம்மை சொன்னார்களென்று அப்போதே உங்கள் சுகத்துக்குத் தனியாகப் பூசைகள் போட்டோம். முறைக் காய்ச்சல்; அப்படித்தான் இருக்கும்.”
“அதென்னவோ, அந்த முறைக்காய்ச்சலுக்கு உங்களிடம் வழி இருக்கிறது. உங்களுக்கு இந்தக் காய்ச்சல் வந்தால் ஏதோ மருந்து செய்யும் முறை தெரியுமாமே; அதையாவது சொல்லுங்கள்.”
பூசாரி குழைந்தான். ஜோகி ஊகமறிந்து வெள்ளிப் பணம் கொடுத்தான்.
“இருங்கள்; வருகிறேன்” என்று கூறி அவன் கானகத்தில் புகுந்து சென்றான். மந்திரத்திலும் தந்திரத்திலும் நம்பிக்கை வைக்காத இளைஞர் சகாப்தம் அப்போது தோன்றியிருக்கவில்லையே!
ஜோகியின் உள்ளத்தில் பல எண்ணங்கள் அலையோடின. நினைத்ததை நிறைவேற்றும் மந்திரமும் தந்திரமும் உடையவர்கள் காட்டுக் குறும்பர்கள் என்பது எத்தனை காலமாக நம்பப்பட்டு வருகிறது? விதைப்பிலும், விளைவின் பலனை எடுப்பதிலும் அவர்களுக்கு முதல் மரியாதையை, அவனுடைய முன்னோர் தெரியாமலா வழங்கியிருப்பர்? அவர்கள் முட்டாள்களா? எனவே, குறும்பரிடம் ஓரளவு சக்தி இருப்பது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைப் பரீட்சித்தால் என்ன?
பளிச்சென்று அவன் தீர்மானம் உருவாகத் தொடங்கியது. பூசாரி சற்றைக்கெல்லாம் துணியில் எதையோ மறைத்துக் கொண்டு வந்தான். ஏதோ வேர்கள் அவை. சிறு கட்டாகக் கட்டிக் கொண்டு வந்தான். பச்சையாகத் தான் பிடுங்கியிருந்தான். ஆனால் அதை இனம் சொல்லுவானா?
“என்ன வேர் இது?”
“அதெல்லாம் கேட்காதீர்கள். மந்திரித்துக் கொண்டு வந்தேன். இதைத் தினம் தினம் கஷாயம் வைத்துக் கொடுங்கள். நாளடைவில் காய்ச்சல் நின்றுவிடும்.”
ஜோகி வேரைப் பத்திரமாக ஆடைக்குள் மறைத்துக் கொண்டான். பிறகு யோசனையுடன் ஆரம்பித்தான். “உங்கள் காதில் பட்டிருக்குமோ என்னவோ? அடுத்த பத்து நாளில் இங்கு ஒரு பலப்போட்டி நடக்கப் போகிறது, தெரியுமா? மரகதமலை ஹெத்தப்பா கோயில் முன் உள்ள உருண்டைக் கல்லை எடுப்பதிலே பந்தயம்” என்று நிறுத்தினான்.
ஜோகி விஷயத்தை விவரிக்கு முன் பூசாரி ஊகித்து விட்டான். “ஆமாம், இப்போதுதான் காலையிலே கேள்விப்பட்டேன். நம் மணிக்கல்லட்டிப் பெண்ணைக் கட்டப் போட்டி என்று சொன்னார்கள். நீங்கள் கூட... சொல்லுங்கள்.”
“உங்களிடம் இன்னும் ஒரு கோரிக்கை வேண்டி நான் நிற்கிறேன்” என்கிறான் ஜோகி.
போட்டியில் நிற்பவன் எதை வேண்டுவான்? போட்டியில் வென்று காத்திருக்கும் கன்னியை அடைய வேண்டும் என்று தானே வேண்டுவான்?
“அதற்கென்ன, நான் உங்களுக்கென்று மந்திரித்த வேரொன்று தருகிறேன். அதைக் கட்டிக் கொள்ளுங்கள் கல் உருண்டை காற்றுக்குடம் போல் கையில் வரும். ஜடசாமி துணையுண்டு” என்றான் குறும்பன்.
ஜோகியின் சங்கடம் அதிகமாயிற்று. தனக்கு இல்லை என்று கூறினால் அவன் என்ன நினைப்பானோ? கிருஷ்ணனே வெல்லும்படி பிரார்த்தனை செய்யச் சொல்லலாமா?
“நீங்கள்... நான் என்ன சொல்கிறேனென்றால், பெண் யாரை விரும்புகிறாளோ...”
அவன் முடிக்கு முன் குறும்பன் குறுக்கிட்டு, “அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். பெண் தானாக உங்களை நாடி வருவாள். பூவிருக்கும் இடம் தேடி வரும் தேனீப்போல் உங்கள் பக்கம் மனசு திரும்பும்” என்றான்.
“நான் அப்படி ஆசைப்படவில்லை. உங்களிடம் இதுதான் வேண்டுகிறேன். பாரு யாரை இஷ்டப் படுகிறதோ மனப்பூர்வமாக, அந்த ஆண்மகனுக்கே அந்தக் கல் எடுக்க வரும்படி நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும். ஒருவனை விரும்பி, ஒருவன் வலிமை வென்றால் கஷ்டம் அல்லவா?” என்றான் ஜோகி.
குறும்பப் பூசாரி ஒரு கணம் அதிசயித்தான். இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா?
“ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்?”
“இல்லை; நீங்கள் இஷ்டப்பட்டால், நான் ஒரு வேர் மந்திரித்துத் தருகிறேன். அதைப் பெண் கையில் வைத்திருந்தால், மனசுக்கேற்ற மாப்பிள்ளை வருவான்.”
“இப்போது தருகிறீர்களா? நீங்கள் நாளை ஹட்டிப் பக்கம் வந்தால் அதற்கும் ஒரு வெள்ளி தருகிறேன்.”
“இப்போதா? அதெப்படி முடியும்?”
“பின் நாளை வருகிறேன். விஷயம் ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்று ஜோகி விடை பெற்றுக் கொண்டான்.
அவன் வீட்டுக்குத் திரும்புகையிலே பிறை நிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்தது. மடியுடுத்து, மாடுகள் கறந்து பிரார்த்தனை முடித்துவிட்டு, அவனாகவே அடுப்படியில் அமர்ந்து கஷாயம் தயாரித்துத் தந்தைக்குக் கொண்டு வந்தான்.
“நம் பூமியைப் பார்த்தாயா ஜோகி? வலப்பக்கம் செம்மண்ணடித்துச் சீரழிந்து போய்விட்டதல்லவா?” என்றார் தந்தை.
“கறுப்ப் மண்ணாக மாற்றி விடலாம், அப்பா. நீங்கள் நோயிலிருந்து மீள்வது ஒன்றே இப்போது என் குறி” என்றான் மகன்.
மறுநாள் சற்று முன்னதாகவே மகன் கோயிலிருந்து கொண்டு வந்த தானியத்தை அளந்து ஒரு சிறிய சுமை கட்டிக் கொண்டு வெளியே கிளம்பியதைக் கண்ட மாதி, “மணிக்கல்லட்டி போகிறாயா மகனே?” என்று கேட்டாள்.
“இல்லையம்மா, குறும்பர் குடியிருப்புக்குப் போகிறேன். இன்னொரு கால் ரூபாய் இருந்தாலும் தாருங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
தானியங்களையும் பணத்தையும் முதல் நாள் சந்தித்த இடத்திலேயே குறும்பப் பூசாரியைச் சந்தித்துக் கொடுத்ததும் அவன் இரண்டங்குல நீளமுள்ள ஒரு வேலைத் தந்தான்.
ஜோகி அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அதை பத்திரமாக வைத்துக் கொண்டு மணிக்கல்லட்டிப் பாதையில் நடக்கலானான். நீர் வீழ்ச்சியின் அருகில், முதல் நாள் அவன் கண்ட இடத்திலேயே, ஜோகியின் நெஞ்சம் குலுங்கினாற் போல் இருந்தது. முதல் நாள் அவன் அவள் முகத்தைக் காணவில்லை! தனியே பாரு... கிருஷ்ணன் மரகதமலைக்கு வந்துவிட, இவள் ஏன் நிற்கிறாள்? யாருக்குக் காத்து நிற்கிறாள்? அவன் வாழ்வைப் பற்றிய கனவுகள் நனவாகும் சந்திப்பாக இருக்க வேண்டிய சந்திப்பு. எத்தனையோ நாட்களுக்குப் பின், மூடிய திரைக்கப்பால் துடிதுடித்து நிற்கும் நெஞ்சங்களின் மலர்ச்சிக்கு வாய்ப்பான சந்திப்பு அது. கிளர்ந்து பொங்கும் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டிய தனிமைச் சந்திப்பு.
விறகு சேகரிக்கும் சாக்கில் வீட்டை விட்டுக் கிளம்பி அங்கே அவனுக்காகக் காத்திருக்கிறாளோ? தோழிகளை விட்டுப் பிரிந்து அந்நேரத்தில் தனியே அவள் அங்கு நிற்கக் காரணமென்ன?
ஒருவேளை எட்டியிருந்தே கண்டுவிட்டாளோ அவனை அவள்? அவன் வருகிறான் என்று அறிந்த பின், அவள் விறகு சேர்த்துக் கட்டுவது போல் வெகு நேரம் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். ஜோகி அங்கேயே நின்றான்.
எத்தனையோ ஆண்டுகளாகக் காணாதிருந்த முறைக்காரன்; காதலனின் எதிரி. அவள் அவனிடம் என்ன சொல்ல விரும்புகிறாள்? வியந்து நோக்கிவிட்டுக் கனிவுடன் எதற்கு நோக்குகிறாள்?
ஒரு விநாடிதான். பிறகு அந்தக் கருவண்டு விழிகளுக்கு அவனை நிமிர்ந்து நோக்கவும் துணிவில்லை.
பாரு!
ஜோகி குரல் கரகரக்க, ‘மினிகே’ இலையில் சுற்றி வைத்திருந்த அந்தப் பொக்கிஷத்தை எடுத்தான்.
“நீ இதை வாங்கிக் கழுத்திலோ, இடுப்பிலோ அணிந்து கொள். உன் மனசுக்கேற்ற மணாளன் வருவான், பாரு.”
தொண்டை தழுதழுக்க அவன் மொழிகள் அவள் செவிகளில் விழுந்ததும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கிருஷ்ணனைப் போல் செல்வச் செழிப்பில் பளபளக்கும் முகமில்லை; பூரித்த கன்னங்களில்லை. ஆனால் இந்த முகத்திலுள்ள ஒளிபோல் அவள் இதுவரையில் எவரிடமும் கண்டதில்லையே? திடுமென்று வந்து அவளைத் திக்குமுக்காடச் செய்யும் இந்த ஒளியுடன் என்ன பேசுகிறான்?
அவள் வியந்து நிற்கையிலே, ஜோதி சலனமற்ற குரலில், “இதை குறும்பரிடம் கேட்டுப் பிரத்தியேகமாக வாங்கி வந்தேன். பாரு நீ என் தங்கை. என் அம்மைக்காக நான் போட்டியில் ஈடுபட்டாலும், என் வலுவை நழுவ விடுவேன். உன் மனம் எவரிடம் இருக்கிறதென்பதை அறிவேன். இதை வாங்கிக் கொள். உன் அன்பனே போட்டியில் வெல்லுவான்.”
அவள் கயல்விழிகள் கசிய, இரு கைகளையும் நீட்டி அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். நெஞ்சுக்கனம் ஆவியாக மாறி அடி வயிற்றுக்குள் இறங்கி விட்டாற் போல் இருந்தது. ஜோகி அதுவரை கண்டறியா வண்ணம் லேசான உள்ளமும் உவகையும் கூடியவனாய், மரகத மலையை நோக்கி நடந்தான்.
மச்ச யந்திரத்தைத் துளைத்துப் பாஞ்சாலிக்கு மணமாலை சூட நினைத்து அன்று பாஞ்சாலத்தின் தலைநகரில் அரச குமாரர்கள் கூடிய போது ஏற்பட்டாற் போன்ற ஒரு கோலாகலம், சிறிய மரகதமலை ஹட்டியிலும் அன்று ஏற்பட்டது. கன்னியொருத்தியின் கையைப் பற்ற வேண்டி மூன்று காளைகள் பலப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற வேடிக்கையைக் காண முதுகிழவர்களான பஞ்சாயத்தார் மட்டுமின்றி, அறிந்தவர் தெரிந்தவர், சுற்றுப்புறங்களில் கேள்விப்பட்டவர், எல்லாருமே கூடி விட்டார்கள். கரியமல்லருக்கு, பேரப்பையனின் உயர் கல்வியையும் பெருமையையும் குறித்துப் புகழ்பாடிப் பூரிக்க அது ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. வந்து குழுமிய விருந்தினருக்கு உணவளிக்கும் பொறுப்பை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
பாருவின் பாட்டனாருக்கு அன்று இளமை திரும்பி விட்டாற் போல் குதூகலம் உண்டாகியிருந்தது. கன்னிப் பெண்களைக் காணும் போதெல்லாம் உற்சாகத்துடன், “என்ன பெண்ணே! ஐம்பது இளைஞர்களை அழைத்து வா; அவர்களுக்குப் போட்டியாக இந்தக் கல்லைத் தூக்கி உன்னைத் தூக்கிப் போகிறேன்!” என்று வம்புக்கு இழுத்தார், ரங்கனின் தந்தை. விருந்தும் கூட்டமும் கண்ட மகிழ்ச்சியில், கிருஷ்ணன், ரங்கன், ஜோகி ஆகிய மூவர் புகழையும் மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார். மூவரும் அவளை அடையத் தகுதி பெற்றவர்களே என்று பொதுவில் பார்ப்பவர்கள் எண்ணும் படியாக, அந்தப் பந்தயத்தைத் தோற்றுவித்த பெரியவர்கள் வித்தியாசமின்றி இளைஞர்களைப் புகழ்ந்தார்கள்.
பந்தயத் தினத்துக்குள் நடுநடுவே இரண்டு மூன்று தடவைகள் ஹட்டிக்கு வந்து போன ரங்கன், திங்கட்கிழமைப் போட்டிக்கு, ஞாயிறன்று காலையிலேயே பெண்ணுக்கு அளிக்கப் பல பரிசுகளுடன் மரகதமலை வந்துவிட்டான். தன் வலிமையில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களாக அவன் சத்துள்ள உணவென்று முட்டையும் மீனும் இறைச்சியும் உண்டு பாரம் தூக்கிப் பழகுவதையே பொழுதாகக் கழித்திருந்தான். அவன் மனசுக்குள், ‘கிருஷ்ணன் வெறும் சாமையும் அரிசியும் தின்பவன்; மரக்கறி உணவால் உடலில் வலு ஏற முடியாது’ என்பது நம்பிக்கை. ஜோகியை அவன் தங்களுக்கு ஈடாக நினைத்திருந்தால் தானே? ஒருவேளை உணவில் உலர்ந்துவிட்ட ஒல்லிப் பயல்; எனவே வெற்றியைப் பற்றி ரங்கன் சந்தேகமே கொள்ளவில்லை. ‘கிளாஸ்கோ’ மல் வேட்டியும் சட்டையும் குல்லாயும் தரித்து, உற்சாகமாக இருந்த அவன், கல்லைத் தூக்கு முன் ஆவேசம் பெற விலையுயர்ந்த மதுவும் அருந்தச் சித்தமாக வைத்திருந்தான். அவன் எத்தனைக் கெத்தனை நம்பிக்கையுடன் இருந்தானோ அத்தனைக்குக் கிருஷ்ணன் குழம்பினான்.
பாருவின் காதல் ஒரு புறம்; ஜோகியைப் பற்றி அவன் கூறியதையும் வேர் தந்ததையும் எண்ணிப் பார்த்ததில் ஏற்பட்ட குழப்பம் ஒரு புறம். உண்மையில் ஜோகி பெருந்தன்மையுடன் நடப்பவன் தானா? அல்லது சூழ்ச்சியாக இருக்குமோ? மந்திர தந்திரங்களில் ரங்கனே ஈடுபடுவான் என்று அவன் நினைத்ததற்கு மாறாக ஜோகியல்லவோ ஈடுபட்டுவிட்டான்? மந்திரம் பலிக்கிறதோ இல்லையோ, அது முக்கியமல்ல, அவன் உள்நோக்கம் நல்லதாகத்தான் இருக்குமா? கல்வி கற்று மெருகடைந்து சிந்திக்கத் தெரிந்த அவன்; எண்ணங்களைக் குழப்பிக் கொண்டதனால் அகன்ற நெற்றியில் அடிக்கடி சுருக்கங்கள் விழுந்து மறைந்தன. நெஞ்சத் தெளிவு இல்லையேல் முகமலர்ச்சி ஏது? துள்ளும் உற்சாகம் ஏது?
பாரு பேதை; குறும்பனின் வேரில் முழு நம்பிக்கை வைத்து தனக்குச் சமமில்லை என்று இறுமாப்புடன் நடந்தாள். அன்று காலையிலேயே அவர்கள் கிராமம் முழுவதும் வேடிக்கை காண அநேகமாக மரகதமலைக்கு வந்துவிட்டதென்று சொல்லலாம்.
அந்த வைபவத்தைக் காண ஆதவனும், இளந்தூற்றலுடன், இதமாக வீசிய காற்றுடன் வானில் உதயமாகிப் பவனி வந்தான். தெய்வ மைதானத்தில் கூடக் கூடாது , காணக் கூடாது என்ற கன்னியர் மட்டுமே அங்கே காணாதவர்.
ஜோகி, தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முன்னிரவு உபவாசம் இருந்து, காலையில் முழுகி, நெற்றியில் நீறும் சந்தனமும் அணிந்து ஒளிக்கீற்றைப் போல் அவையில் நுழைந்தான் அவன். தந்தையும் அந்த வைபவத்தைக் காண முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
குறிப்பிட்ட நேரம் வந்ததும் பாருவின் பாட்டனார் எழுந்தார். “சபையோர்களே கதைகளிலேதான் அரசகுமாரிக்குச் சுயம்வரம் நடத்தப்பட்டதாக நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று ஒரு கன்னிப் பொண்ணுக்காக, இவ்வளவு மக்கள் கூடியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நான் வேடிக்கையாகத்தான் அன்று ‘கல்லைப் புரட்டுகிறவன் பெண்ணுக்கு உரியவன்’ என்றேன். அது உண்மைப் போட்டியாக கோலாகலம் ஆகிவிட்டது. இந்தப் போட்டி விதிகளை நானே கூறிவிடுகிறேன். கல்லைப் புரட்டி கைகளில் தூக்கி நிமிர்ந்து இரண்டடி முன்னால் வரவேண்டும்; பஞ்சாயத்தார் பார்க்க வேண்டும். அதன்றி நடுவில் கீழே வைத்தாலோ, பூமி இடிக்கக் கல்லைத் தூக்கி வந்தாலோ, போட்டியில் தவறியவராகக் கருதப்படுவார்கள். ஒருவராலுமே இந்தச் சாதனையை நிறைவேற்ற முடியவில்லை என்றால் எவன் கல்லை அதிக உயரம் தூக்குகிறானோ அவனே வென்றவனாகக் கருதப்படுவான். இந்த நிபந்தனைகளை நம் இளைஞர்கள் மூவரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
சபையில் ஆரவாரம் எழுந்து ஆமோதிக்கப் பெற்று அடங்கியதும், அவர் முதல் முதலில் ஜோகியை அழைத்தார். எல்லோருடைய விழிகளும் நோயால் நலிந்து உட்கார்ந்திருந்த தந்தைக்கருகில் நின்ற ஜோகியின் மீது பதிந்தன.
ஜோகி முன் வந்து தலைப்பாகையை எடுத்து வைத்து விட்டு, இறைவனையும் சபையினரையும் பஞ்சாயத்தாரையும் வணங்கினான். மனசிலுள்ள எண்ணத்தைப் போலியான வேகத்தாலும் விறைப்பாலும் மறைத்துக் கொண்டான். உண்மையிலேயே கன்னியைக் கைப்பிடிக்க ஆவலுடையவனைப் போல் மைதான மூலையில் பள்ளத்தில் பதிந்தாற் போல் இருந்த கல்லை நோக்கி நடந்தான்.
தெய்வ மைதானத்துப் பக்கம் செல்லக் கூடாத கன்னிப் பெண்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பு; உற்சாகம். சற்று எட்ட நின்றவர், எம்பிப் பார்ப்பவர், ஓடி வந்து அவ்வப்போது மாமன் வீட்டுப் புறமனையில் அமர்ந்திருந்த பாருவைக் கேலி செய்துவிட்டு ஏதேனும் செய்தி கூறிச் செல்பவர் என்று, கலகலப்பையும் சிரிப்பையும் கூட்டிய வண்ணம் இருந்தனர். தனியே பரபரப்பைக் காட்டாதவளாக, பெண்களின் கேலிகளுக்கும் பரிகாசங்களுக்கும் முகம் சிவப்பவளாக, காதலனின் வெற்றியையே நெஞ்சில் கொண்டு அவள் நின்றாள்.
படபடவென்ற கைத்தட்டல், ஆரவாரம் சிரிப்பு, மைதானத்தின் பக்கத்திலிருந்துதான் வந்ததென்று அறிந்த பாருவின் நெஞ்சு படபடத்தது.
“யாரோ? யாரோ?” என்ற பீதி துடிக்க, கவலை படர வாயிலில் எட்டிப் பார்த்த போது, ஒருத்தி கேலிக்குரலுடன் அவளிடம் வந்தாள். “முதலில் ஜோகியண்ணன் தான் போனார்; அவர் எடுத்துவிட்டார்...” என்று சிரித்தாள்.
“ஆ!”
குரல் வெளிவரவில்லை. முகம் கறுத்தது; விழிகள் நிலைத்தன. அதற்குள் இன்னொருத்தி புதுச் செய்தியுடன் பாய்ந்து வந்தாள். “ம்... ஜோகியண்ணன் எடுக்கவில்லை. கிருஷ்ணன் அண்ணன் தான் போகிறார்” என்று அவள் காதில் போட்டுவிட்டுப் பின்னும் வேகமாகப் போனாள்.
அப்பா! ஒரு மலை இறங்கி விட்டது. ஜோகியண்ணன் எடுக்கமாட்டார். கோயிலில் பணி செய்தவர், பொய் கூறுவாரா?
கழுத்தில் அணிந்திருந்த மணிச்சரத்தில் கயிறு கட்டி, அதில் வேரை இணைத்து நெஞ்சுக்கு மேலோடு உடுத்திருந்த முண்டில் செருகியிருந்த அவள், அதை நினைத்து தெய்வத்தை வேண்டிக் கொண்டாள். அவளாக அவன் நடந்து செல்வதையும் எப்போதோ சிறுமியாக அவள் பார்த்திருந்த உருண்டைக் கல்லை மெல்லப் புரட்டுவதையும் கற்பனை செய்து கொண்டாள். ஏற்கனவே, பெண்மை தோய்ந்த மென்மையான தோற்றமுடைய அவனுக்கு முகம் சிவக்கிறது; நெற்றி நரம்பு புடைக்கிறது. கல் அவன் கைகளுக்கு வந்துவிட்டதா என்ன?
படபடவென்ற கைத்தட்டல்களும் கூச்சலுமாக ஆரவாரம் இல்லை; உண்மையில் கைத் தட்டலில்லாத ஆரவாரந்தான் எழுந்தது. வாயில் முற்றத்தில் ஒருத்தி கூட அவளுக்குச் செய்தி கூற நிற்கமாட்டாளா? அவள் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு, வெட்கம் விட்டு வாயிலில் எட்டிப் பார்த்தாள்.
உண்மையில் கிருஷ்ணன் கல்லைத் தூக்கி விட்டானா?
இல்லை, அந்தக் கல் அவன் பலத்தை உண்மையாகவே சோதித்துக் கொண்டிருந்தது. புத்தக ஏட்டைப் புரட்டிய அவனுடைய மென்கரங்களில், பத்து நாட்களில் கல்லைத் தொட்டதும் உறுதி வந்துவிடுமா? அன்றைக்கென்று கைகளில் உரம் எப்படி வரும்? ஆனால், ஜோகியின் உள்ளம் கபடற்றது என்று நிரூபணமாகி நின்ற பின் காதலியின் உறுதியில் தான் அவன் முயன்று கொண்டிருந்தான். முகம் பிழம்பாக, மூச்சுத் திணற, நெற்றியில் முத்தான வேர்வை துளிர்த்துவிட, அவன் இருகைக்குள்ளும் அந்தக் கல்லை அடக்கி விட்டான்.
ஓர் அங்குலம்; ஒரு சாண். ‘பலே பலே, கிருஷ்ணா!’ என்ற உற்சாகத் தூண்டுதல்களும் ஆரவாரமும் கூச்சலும் காதைப் பிளக்கின்றன. கல் உயருகிறது; ஆனால் கல்லைச் சுமந்த இடுப்பு, வளைந்தது வளைந்தபடியே நிற்கிறதே! கால்களை அந்தப் பாரம் நசுக்குகிறதே! மூச்சை இரு கொடுங் கைகள் பிணிக்கின்றனவே!
இதென்ன? காதலா? போட்டியா? சூழ்ச்சியா? உயிரை இறுக்கும் சோதனையா? இந்தச் சோதனையில், படித்து மெருகடைந்த கிருஷ்ணன் உயிரை விடப் போகிறானா? ஐயோ, பேதைமை! இவ்வுலகில் ஒரு கன்னியின் காதல் அத்தனை உயர்வானதா?
‘இல்லை... ம்... அடைந்தே தீருவேன்.’
வளைந்த இடுப்பு, கல்லுடன் நிமிரவில்லை. கை நிமிர்ந்து நழுவவிட்டது கல்லை.
“ஐயோ!” என்று கரியமல்லர் அலறியபடி ஓடி வந்தார். கல் பள்ளத்தில் நழுவிப் பதிந்து விட்டது.
கரியமல்லர், கிருஷ்ணனைத் தன் மீது சாத்திக் கொண்டார். கூட்டம் பதறி அவர்களைச் சூழ்ந்தது. நீரைத் தெளிப்பவரும், என்ன என்ன என்று பதறியவர்களுமாக ஒரே கலகலப்பு.
கிருஷ்ணன், விருக்கென்று எழுந்தான். “எல்லாரும் போங்கள். ஒன்றும் இல்லை தாத்தா” என்று ரோசமும் அவமானமும் அழுத்தும் முகத்தினனாக அப்பால் சென்ற போது, ரங்கன் கடகடவென்று சிரித்த குரல் கேட்டது. ‘பெண் பிள்ளை போல் விழுந்து விட்டான், கையாலாகாதவன்’ என்று இகழ்ச்சிக் குறி தோன்ற அவன் பார்த்த பார்வை, ஜோகிக்கே வெறுப்பை ஊட்டியது.
ஆரவாரத்தை அடக்கி விட்டு பாருவின் பாட்டனார், ரங்கனைக் கடைசியாக அழைத்தார்.
அரங்கில் இன்ன நடந்தது; நடக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் பாருவின் உள்ளம் விளக்குச் சுடராகத் துடித்தது. அத்தனை பேரும் வெட்கமின்றி அவளைத் தனியே விட்டுச் சென்று விட்டார்களே! அவள் இன்னுயிர் அன்பன் வென்றானா? இல்லையா? தோல்வியானாலும் வெற்றியானாலும் அந்நேரம் தெரிந்திருக்குமே! ‘போட்டியும் வேண்டாம், பந்தயமும் வேண்டாம். நான் இசைபவர் அவரே, மற்றவரைப் போகச் சொல்லுங்கள்’ என்று அவள் சொல்லி இருக்கலாகாதா? அவள் விருப்பத்தை வெறுக்கவோ, எதிர்க்கவோ எவருக்கும் தகுந்த காரணமில்லையே! விளையாட்டாகப் பேசிய பேச்சு, அவள் வாழ்வைப் பந்தயப் பொருளாக்கி விட்டதே!
ஆனால், அவள் விருப்பம் பலிக்கும்; குறும்பன் வேர் பொய்க்காது. அப்படித் தோல்வி காண்பதாக இருந்தால், ஜோகியாக ஏன் குறும்பனிடம் பரிகாரம் வேண்டி வேர் பெற்று வரவேண்டும்? எல்லாம் தேவர் நினைப்பில் நடப்பவை.
ஆகா! ஒரே கூச்சல், கரகோஷம். அவள் உள்ளம் துள்ளியது. தோழிகள் ஓடோடி வந்தனர்.
“கல்லைத் தூக்கியவர் கடைசியில் அந்த அண்ணன் தான்.”
“நான் தான் முதலிலேயே சொன்னேனே?”
“எனக்கு அப்போதே தெரியும்.”
விஷயத்தை நேராகச் சொல்லாமல் இன்னும் எதற்கு இவர்கள் மனசைத் துடிக்க வைக்கிறார்கள்?
“பாரு இனிமேல் பணக்காரி” என்றாள் ஒருத்தி.
“பணக்காரி மட்டுமல்ல; ஒத்தைக்குப் போகும் சீமாட்டி” என்றாள் மற்றவள்.
அத்தையும் ஜோகியண்ணனும் ஈயாடாத முகத்துடன் வருகிறார்களே! ஜோகியண்ணன் முகத்தில் கொஞ்சங்கூட மகிழ்ச்சியின் சாயை இல்லையே! பந்தயத்தில் வெற்றி மாலை சூடியவர் யார்?
“யாரடி?” என்றாள் பாரு, நெஞ்சு துடிக்க.
“அந்தப் பெயரைக் காது குளிரச் சொல்லடி!” என்று கலீரென்று சிரித்து, அவள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.
இந்த அமளியில், நீலமும் மஞ்சளுமாக இணைக்கப் பெற்ற மாலை அணிந்து, கண்களில் வெற்றிச் சிரிப்புக் கெக்கலி கொட்ட ரங்கன் அவர்கள் இருந்த வீட்டை நோக்கி ரங்கம்மை, தந்தை முதலியோர் சூழ வந்தான்.
அவளுக்குக் குறும்பன் தந்த வேரோடு நெஞ்சு பகீரெனப் பற்றிக் கொண்டாற் போல் இருந்தது. மோசக்காரப் பாவி, ஜோகி. ரங்கனுக்காகவா சதி செய்தான்? நயவஞ்சகன்.
மணிக்கல்லட்டிக்கு உடனே ஓடி விட வேண்டும் போல் உடல் பறந்தது அவளுக்கு. ஆனால் கால்கள் துவள, அங்கேயே சோர்ந்து உட்காரத்தான் அவளால் முடிந்தது.
குறும்பன் அளித்த வேர், தந்தையின் காய்ச்சலுக்குக் குணமளித்ததே! தந்தையின் முறைக்காய்ச்சல் அந்த வேரில் வீரியம் குன்றி, அவருடைய மெலிந்த உடலைப் பிணைத்த பிடியினின்றும் தளர்ந்து வருவது கண்ட அவன், பாரு, தன் இனியவனுடன் கூடி வாழவே பந்தயம் அநுகூலமாகும் என்றல்லவோ தெம்புடன் இருந்தான்? அது பொய்யாகி விட்டதே!
ரங்கனாலும் பந்தய விதிப்படி கல்லைத் தூக்கி கொண்டு நடந்து பஞ்சாயத்தார் முன்பு வர முடியவில்லை. கிருஷ்ணன் நிமிர்ந்த போது, கல் நழுவி விழ சாய்ந்து விட்டான். ரங்கன் முக்கி முனகி, கல்லைப் பூமியில் படாமல் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றான். அவ்வளவே. பந்தயத்தில் அவன் கெலித்ததாகத் தீர்ப்பாகி விட்டது.
பாவிக் குறும்பன் இப்படிப் பழி செய்தானே? அந்த அன்புப் பூங்காவிலே மலையன்றோ விழுந்து விட்டது. கிருஷ்ணனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பாருவைத்தான் அவன் எப்படிப் பார்ப்பான்? துன்பங்களில் தோய்ந்த சிந்தனையில் சுழன்று சுழன்று வந்த அவனுக்கு, அப்போதுதான் உண்மை தெற்றென விளங்கினாற் போன்று இருந்தது.
அசட்டுத்தனந்தான். காய்ச்சலுக்குக் குறும்பன் தந்த வேர், கசப்பு மூலிகை. அவர்கள் அன்றுவரை அறிந்திராத அந்த மூலிகை இரத்தத்தில் கலந்து நோவைச் சிக்கென அறுத்தது. மந்திரமும் மாயமும் எண்ணி வாங்கும் வேர் மூலிகையாகுமா? அந்த ஞானம் ஏன் அவனுக்கு அப்போதே வரவில்லை! முன் சென்று தைரியமாக பந்தயம் வேண்டாமென்று, பாருவுக்காக அவன் விலகியிருக்கலாமே!
சுற்றியுள்ள கோலாகலத்திலும் வேடிக்கையிலும் கலந்து கொள்ள மனமின்றி, ஜோகி தனியே கொட்டிலின் பக்கம் சென்றான். மாதிக்கு, மகன் தோல்வியடைந்தது கண்டதுமே மற்றவர் வெற்றி காணப் பொறுக்கவில்லை. விளைநிலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டாள்.
எதிர் வீட்டில் ரங்கம்மை பாருவுடன் வந்தவர்களில் பெரும்பாலோரைச் சேர்த்துக் கொண்டு விருந்துச் சோறு சமைப்பதில் மும்முரமாக முனைந்திருந்தாள்.
கைத்தடியை ஊன்றிக் கொண்டு ஜோகியைத் தேடும் விழிகளை உடையவராய் லிங்கையா வந்தார். வீட்டின் புறமனையில் பாருவையும் ஒன்றிரண்டு ஊர்ப் பெண்மணிகளையும் தவிர யாரும் இல்லை. கொட்டிலுக்கு நடந்தார்.
அவர் நினைப்புச் சரியே, சோகம் கப்பிய முகத்தினனாய், ஜோகி அங்கு இருக்கக் கண்டார்.
மங்கை ஒருத்திக்காக மனசை இடிய விடுவதா? அவர், மெல்ல அவன் முகத்தை நிமிர்த்தினார். “ஜோகி!”
“என்ன அப்பா?”
“வருத்தமா ஜோகி?”
“எதற்கு?” என்றான் மகன்.
“உன் முகமே சொல்லுகிறதே! ரங்கன் தானே முதல் முறைக்காரன்?” என்று தந்தை சிரித்தார் மெள்ள.
“ம்... அப்பா முறைக்காரனாக இருந்தாலும், இது பாவம்... நிறுத்தி விட வேண்டும்” என்றான் ஜோகி இதழ்கள் துடிக்க.
அவர் திடுக்கிட்டார். “தேவர் அருளால் நிகழ்ந்திருப்பது மகனே. ஒரு நல்ல பெண் அந்தக் குடும்பத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். பையனும் குடும்ப பொறுப்பு இல்லாமல் மண் ஒட்டாமல் போய்விடக் கூடாது என்று வேண்டினேன். அந்தக் குடும்பம் ஒன்றுக்கும் உதவாத செம்மண் பூமி போல் சீரழியக் கூடாதே என்று கவலைப்பட்டேன். இரிய உடையாரின் அருள், நல்ல பெண், பாரு வருகிறாள். மனசிலே பொறாமையுணர்வுக்கு இடம் கொடுக்கலாமா ஜோகி?” அவர் விரல்கள், அவன் தலைமுடிக்குள் இதமாகப் புரண்டன.
“நீங்கள் உண்மையை அறியவில்லை. அப்பா! நான் பொறாமைப்படவில்லை. இரிய உடையாரின் கருணையால் கல்லும் முள்ளும் களைந்து பயன்படுத்திவிட்ட நிலம் போல் நான் மனசை வைத்துக் கொள்ள எப்போதும் முயலுகிறேன். ஆனால் நீங்கள் இரண்டு ஒத்த உள்ளங்களைப் பிரித்து விட்டீர்கள். கிருஷ்ணனையும் அவளையும் பிரித்து விட்டீர்கள். யானை தேர்ந்து மாலையிட்டவன் அரசுரிமைக்கு உரியவன் பெண் ஒப்பினால் மணாளன் என்ற நம் வழக்கு மொழியைத் திருப்பி, ‘கல்லைப் புரட்டியவன் கன்னிக்கு உரியவன்’ என்றாக்கியது பெரும் தவறு. மனமொப்பாமல் நம் வீட்டில் பிரிவு ஏற்படவில்லையா? மறுபடியும் அவர் மகனுக்கே ஒப்பாத பெண்ணை இணைக்கிறீர்களே!” பையனின் விழிகளில் ஒளிர்ந்த ஒளியைப் பார்த்த தந்தைக்கு உடல் முழுவதும் சிலிர்ப்போடியது.
உண்மை! ஆனால், ஆனால்!
பாரு சிறுமியாக நின்ற நாள் முதலாக அவர் அவளைப் பார்த்திருக்கிறார். அவளிடம் சுயநலமும், சிறுமைக் குணங்களும் இருக்குமென்று அவர் நினைக்கவில்லை. அவள் ரங்கனின் தாயை நினைவுக்குக் கொண்டு வரும் அழகி; ஆனால் ஜோகியின் அன்னையைப் போன்ற அமைதி, அடக்கம் முதலிய அருங்குணப் பண்புகளைக் கொண்டவள். கட்டிய கணவனுக்கு உதவியாக இருந்து, தோழியாகப் பழகி அவனுடைய விளைநிலத்தைச் செம்மைப்படுத்தி குழந்தைகளைப் பெற்றுத் தந்து, தன்னைக் குடும்பத்துக்கு ஈயும் பெண்ணாக அவள் இருப்பாள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். இக்காரணங்களினாலேயே, அவள் ஜோகிக்கு மனைவியாவதை விட, ரங்கனுக்கு மனைவியாவதே இசைவு என்று விரும்பியிருக்கிறார். வளமற்ற பூமியிலே, நல்ல வித்தையன்றோ இடவேண்டும்? அவன் கோணல் வழியிலே செல்ல முடியாதபடி, அவனை மண்ணோடு இணைய வைக்கும் மாண்பு அவளுக்கே உண்டு என்றெல்லாம் அவர் எண்ணியிருக்கிறாரே!
“அப்பா, கிருஷ்ணனும் அவளும் ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு நேசிப்பவர், பிரிப்பது தகாத செயல்” என்றான் ஜோகி உணர்ச்சி துடிதுடிக்க.
“இருக்கலாம் ஜோகி. தன் அன்பையும் ஆசையையும் தியாகம் செய்து, கலங்காமல் வாழ்வை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல பெண்ணையே ரங்கன் மணக்க வேண்டுமென்று நான் எண்ணுகிறேன்” என்ன நெஞ்சுரம்!
“அப்பா!” என்று ஜோகி அலறுவது போல் கத்தினான்.
“கேள், மகனே, பொறுமையாகக் கேள். கல்யாணம் என்பது எதற்கு? நாம் கூடி வாழ்ந்த புமி திருத்தி விளைவிக்க வேண்டும். நிறையக் குழந்தைகள் நம் முற்றங்களில் விளையாட வேண்டும். கன்று காலிகள் பெருக வேண்டும். ஆணும் பெண்ணும் வாழ்வில் இதற்காகத்தான் பங்கு கொள்ள வேண்டும்!”
ஜோகி வாயடைத்து நின்றான். அவர் தொடர்ந்தார். “கிருஷ்ணன் படித்தவன். பசையும் ஒட்டுதலும் நீங்காத குடும்பத்தில் பிறந்தவன். அவன் தன்னைத் திருப்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவளாக இருந்தாலும் குடும்பத்தில் ஒட்ட வைத்துக் கொள்ளும் வசதிகள் அங்கு உண்டு. இங்கே, நிறைவை வேண்டி வருபவளாக இருந்தால் தான் பிரிவு உண்டாகும். பாரு இந்தக் குடும்பத்துக்கு நிறைவை அளிப்பாள்; ரங்கனின் வாழ்வைச் செம்மை செய்ய அவளைப் போன்ற பெண்ணே தேவை. கேட்டாயா ஜோகி? உன் பெரியப்பன் வாழ்விலேயே ஒட்டவில்லை. அவர் எதற்கும் கவலைப்படுவதில்லை. கிடைக்கும் இன்பத்தை அனுபவித்து விட்டுத் தம்மை மறந்து பாடிக் கொண்டிருக்கிறார். அவரைப் போன்ற மனிதர் எவரையும் நான் பார்க்கவில்லை. ஆனால், ரங்கன் அவரைப் போல இல்லை. மண்ணோடு இசைந்து சுதுவாது அறியாது வாழும் வாழ்வை விட்டு விலகி விட்டானென்று அஞ்சுகிறேன். மகனே, அதனால் தான் அவன் பந்தயத்தில் கெலிக்க வேண்டும் என்று வாழ்த்தினேன், ஜோகி.”
ஜோகி அந்நேரம் வரையிலும் இளம் உள்ளத்திலே ஒரு பெண்ணுக்காக குமிழியிடும் ஆசைகளையும் கனவுகளையும் பிரதானமாக எண்ணியிருந்தான். அப்போதுதான் அந்த இளமை ஆசைகளுக்கப்பால் ஒரு பேருண்மை பொதிந்து கிடக்கிறது. வாழ்க்கை இன்பம் அநுபவிப்பதற்கு மட்டும் அன்று. முயற்சியின்றித் தானாகக் கிட்டுவது இன்பம். மண்ணை வெட்டும் போதும், விதையைத் தெளிக்கும் போதும், அது முளைவிட்டுச் செழித்துக் கதிர் சாயும் போதும், அருவியில் முழுகும் போதும், மாடுகள் கறக்கையில் பால் பொங்கி வரும் போதும் இன்பம் நினைத்தா செய்யப்படுகின்றன? இல்லை, நன்மைக்காகச் செய்யும் செயல்களாக அவை பழக்கத்தில் ஊறிவிட்டன. அப்போது இன்பம் வருகிறது. அதுபோலவே ஒரு பெண்ணைக் கொண்டு வந்து, இருவரும் சுயநலமின்றிக் குடும்பத்துக்காக, ஹட்டிக்காக, உலகுக்காகக் கூடி வாழ்கையிலே இன்பம் கிட்டும் போலும்.
அவனுடைய ஐயன் எவ்வளவு அழகாகக் கூறினார். அவனுடைய அம்மை அந்தக் குடும்பத்தில் கண்டதென்ன? ஆனால் அவள் அன்பும் தியாகமும் அல்லவோ உருவாக வந்தவள்? எத்தனை கஷ்டங்கள் வந்தும் அவள் குடும்ப பந்தத்திலிருந்து விலகாதது ஏன்?
“நான் சிறுவனாகச் சொல்லிவிட்டேன், அப்பா. பாருவின் முகம் பார்த்து வருந்தியதால் படபடப்பாகக் கூறிவிட்டேன்” என்றான்.
“இந்த வயசில் அப்படித்தான் சலனம் உண்டாகும். வென்று விடு மகனே!” என்றார் தந்தை.
இருவருமாக வீடு நோக்கி வந்தனர்.
புறமனையில் பாரு மட்டுமே இருந்தாள். அவர்களைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆத்திரம் கண்ணீர்த் துளிகளாகப் பீறி வந்தது.
“பாரு, இதோ பார்; பாரம்மா!” லிங்கையா அன்பும் ஆதரவும் கனியும் குரலுடன் அவள் தலையைத் திருப்பினார்.
மலைகள் சரிந்து கடல்கள் பொங்குவது போன்ற உணர்ச்சிகளை அடக்குபவள் போல் கண்ணீரைச் சமாளித்துக் கொண்டு அவள் பார்த்தாள்.
“வருத்தப்படுகிறாயா பாரு?”
முகம் தாழ்ந்தாள். கண்ணீர் சிந்தியது.
“அசட்டுப் பெண்ணே, ஏன் வருத்தப்படுகிறாய்? இதோ பாரம்மா, பெண் அடுப்புத் தீப்போல, குடும்பத்தை நல்லவிதமாக உருவாக்கும் சக்தி; அவள் புகையலாமா? பாலைக் கூடக் குடிக்காமல் வீட்டுக்காகத் தியாகம் செய்யும் சக்தி ஒளிர, இந்த வீட்டுக்கு நீ வருகிறாயம்மா. மங்களத்துக்கு உரியவளாக, சீர்குலைந்து வரும் ஒரு குடும்பச் செல்வத்தை நிரப்ப, நீ வருகிறாயம்மா. சின்ன எண்ணங்களை விட்டுவிடு. பெரிய பொறுப்பு உன்னைத் தேடி வந்துவிட்டது. அன்பின்றித் தேய்ந்த ஓர் உள்ளத்துக்கு ஆக்கமளித்து, நல்ல குடும்பமாக ஒளிர, ஒளிகூட்ட வருகிறாயம்மா, குழந்தை!”
“மாமா!” என்று தன்னையும் அறியாமல் அவர் கால்களில் பணிந்தாள் பாரு.
ஓர் ஆவணி நன்னாளில், அவள் ரங்கனின் இல்லத்தை ஒளிரச் செய்யும் வைபவம் நிகழ்ந்தது. கோத்தர் இசை முழங்க புத்தாடை அணிந்த ரங்கன், ஜோகி, தந்தை, சிறிய தந்தை முதலியவருடன் பரிசுப் பொருள்களையும் இருநூறு ரூபாய் வெள்ளிப் பணத்தையும் சீரெடுத்து, மணிக்கல்லட்டி சென்று பெண்ணை அழைத்து வந்தான்.
செம்மண் தீட்டிப் புதுப்பித்த மனைவாயிலிலேயே மணப்பெண் வந்து நின்றதும், மாதி வீட்டின் முதியவள், மாமி என்ற ஸ்தானத்தில் நின்று, “குடத்திலிருந்து ஒழுகும் நீர் போல் வழி வழி வரும் இந்தக் குடும்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்வாயாக!” என்று அவளிடம் ஒப்பிப்பதே போல், நீரைக் குடத்தினின்றும் மணப் பெண்ணின் கைகளில் மும்முறை வார்த்தாள். நீர் அவள் கைகளை நனைத்துக் கால்களில் விழுந்து ஓடிய பிறகு தட்டிலிருந்து, பொற்கம்பியில் கோக்கப் பெற்ற மணிமாலையை எடுத்துப் பாருவின் கழுத்தில் போட்டு, அவளை உள்ளே வரவேற்றாள்.
புறமனையில் கம்பள விரிப்பில் புது வட்டில் வைத்து, அண்ணன் மனைவியை ரங்கம்மை அழைத்து உட்கார வைத்தாள். புதுப்பாலுடன் சாமைச் சோற்றை மாதி வட்டித்தாள். பாருவுக்குப் பாலன்னம் இறங்கவில்லை.
பெண்கள் குழுமிக் கேலி செய்தார்கள். ஒருத்தி ரங்கனை முன்பாக அழைத்து வந்து, “எடுத்துக் கொடு, ரங்கண்ணா” என்றாள்.
முகம் சிவக்க பாலும் சோறும் நாவில் பட வைத்த பாரு எழுந்ததும் ரங்கம்மை கைக்கு நீர் வார்த்தாள்.
பின்னர்க் கோத்தர் இசை முழக்கினார். புதுக்குடம் பொற்குடம் போல் சித்திர வேலைப்பாடுகளும் மஞ்சளும் சந்தனமுமாக விளங்கியது.
ரங்கி குடத்தை எடுத்து அண்ணன் மனைவியிடம் கொடுக்க, கன்னிப் பெண்களும் சுமங்கலிகளும் புடைசூழ மணப்பெண் அருவி நீரெடுக்கச் சென்றாள்.
மங்கள இசையோடு அருவி நீர் எடுத்துக் கொண்டு அந்த வீட்டினில் மீண்டும் நுழைகையிலே, பாருவுக்கு மாமனின், சொற்களே நினைவில் பளிச்சிட்டன. ‘இந்த வீடு எனக்கு! இந்த வீட்டின் பொறுப்பு எனக்கு!’ என்று அவள் உள்ளத்திலும் உடலிலும் நிறைந்து நின்ற பெண்மை என்னும் ஆற்றல் பெருமையுடன் நிமிர்ந்தது. சின்னத்தனமான அற்ப உணர்வுகளுக்கே அப்போது அவளுள் இடமில்லை.
மாசி மாதத்தின் இன்பச் சூரியன் விண்ணிலே ஒளிரும் ஒளிமணியாய் தானமெல்லாம் நீலப்பட்டாடை விரிய எழில் நகைபுரியும் இளங்குமரனாய் நீலமலையன்னையைக் காண வந்து விட்டான். மலையன்னைக்குத்தான் ஒளிநாயகனைக் காண்பதில் உள்ள பூரிப்புக் கொஞ்சமா நஞ்சமா? முத்து வடங்களையும் மலர்களையும் சூடி நிற்கும் சுந்தரியாக இரவு முழுவதும் அன்னை அலங்கரித்துக் கொண்டாள் போலும்!
பசும் புல்லாடைகளிலெல்லாம் இரவில் அணிந்த முத்துக்கள் வானவில்லின் ஏழு நிறங்களையும் வாரி வீசிச் சுடரிட, புது வைர இழைகளென முகடுகளிலெல்லாம் அருவிகள் ஒளியிழைகளாய் மின்ன, வண்ண வண்ண மலர்கள் குலுங்கிச் சிரிக்க, அழகை முழுவதும் விள்ளத் தரமாமோ? மாரிக்கள்ளனும் கூதற் கொடியோனும் வருத்திக் குலைத்த துன்பங்களை எல்லாம் வெற்றிக் கண்டு மீண்ட மகிழ்விலே அன்னை கதிரவனை ஆர்வத்துடன் நோக்கும் வேளையல்லவா இந்த மாசி நன்னாள்? உய்யெனச் சுழன்று வெறியாட்டம் ஆடிய காற்று, ஓங்கி வளர்ந்த ஊசியிலைக் கோபுர மரங்களையும் கர்ப்பூர விருட்சங்களையும் தோழனைப் போல் மெல்ல அணைத்து இழைத்து மகிழ்ந்தது.
மனையின் செல்வப் புதல்வர் புதல்விகளாய் வாழும் மக்கள் அனைவரும் கீழ் மலைக்கு வரும் ஒற்றையடிப் பாதைகளிலெல்லாம் வானில் வரிசை வரிசையாகச் செல்லும் வெண்புறாக்களின் கூட்டம் போல் சாரிசாரியாக வந்து கொண்டிருந்தார்கள். தூய வெள்ளை உடைகளிலே மக்களின் கூட்டம் சரிவுகளிலும் பள்ளங்களிலும் இறங்கி ஏறி, எங்கும் விரிந்து கொழித்த பசுமையினிடையே வந்த போது, கவடில்லாத நேர்மையும் வளமும் இன்பமும் இணைந்த கோலாகலமாகவே தோன்றியது.
மண்ணையும் நீரையும் காற்றையும் தந்து வற்றாத வளமைக்கு வழிகாட்டிய இறைவனைக் கொண்டாடி மகிழும் திருநாள் அன்று. கங்கைவார்சடையில் திங்கள் அணிந்த மங்கை பாகனை மனத்திருத்தி ஆண்டு சிறக்க, மண்ணில் இட்ட விதை மண்டிப் பயன் தர, கன்று காலிகள் பல்கிப் பெருக, பாலும் தேனும் பஞ்சமின்றிப் பொங்கிப் பொழிய, செய்யும் முயற்சிகளெல்லாம் கைகூட வேண்டி, அவர்கள் கொண்டாடும் பெருநாள் அன்று, கீழ்மலை மாதலிங்கேசுவரர் சந்நிதிக்கு முன் அழல் வளர்த்து, ஹர ஹர ஹர என்ற கோஷம் மலை முகடுகள் எங்கும் எதிரொலிக்க, அடியவர் இறங்கி நடப்பதைக் கண்டு, சிந்தை உருகிப் பக்திப் பரவசத்தால் பாடி ஆடி மகிழும் புனித நாள் அன்று. மலையுச்சியில் பிறந்து ஆடித் தவழ்ந்து இடிபட்டு இன்னலுற்று ஆழி இறைவனைக் கலக்க ஒரே நோக்குடன் ஓடி வரும் நதிகளென மக்கள் சாரிகள் அனைத்தும் கீழ்மலைச் சோலையிலே விரிந்து பரந்த கூட்டத்திலே சங்கமமாகும் இடம் நெருங்க நெருங்க, பக்திப் பரவசப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், குழல்களை ஊதிக் கொண்டும் மத்தளங்களை முழக்கிக் கொண்டும் வந்தன. புத்தாடை உடுத்திய சிறுவர் சிறுமியர் பட்டுப் பூச்சிகளைப் போல் களிப்புடன் ஓடியாடினர். அழகிய சுருள் முடிகள் முன் நெற்றிகளிலும் காதோரங்களிலும் தெரிய, வெள்ளை வட்டுக் கொண்டு தலையை மூடி மறைத்துப் புது முண்டும் அணிந்த மலைமங்கையர் அருவிகளின் கலகலப்பை ஒத்த கள்ளமற்ற சிரிப்பும் பேச்சுமாக, விழாவுக்குக் கும்பல் கும்பலாக வந்தார்கள். சுற்றிப் பசுங்குன்றுகள் சூழ்ந்த அந்தப் பெருஞ் சோலையிலே இறையவர் கோயிலுக்கு வரும் வழியெல்லாம் பொரியும் பழமும் குன்றாகக் குவிந்திருந்த கடைகள்; சிறுவர் சிறுமியரின் கோஷங்களையும் கூச்சல்களையும் பன்மடங்காகப் பெருகிக் கொண்டு சுழலும் குடை ராட்டினங்கள் வேடிக்கைகள்; விநோதங்கள் பெண்டிர் சூழ வந்திருந்த பாத்திரக் கடைகள்; கட்டுக் கட்டாகக் கருப்பங்கழிகள்; அந்தத் திருநாளில் இறைவனுக்குக் காணிக்கையாக வந்திருக்கும் முதல் ஈற்றுக் கன்றுகளின் பால் பொங்கும் தாழிகள்; மணிகள் குலுங்கச் செல்லும் பசுக்கள்; கன்றுகள்.
இத்தனை ஆரவாரங்களையும் கோலாகலங்களையும் தாண்டி வந்தால், புல்லிலும் பூண்டிலும் உயிர்த் தத்துவமாக விளங்கும் ஐயன், எளிமையில் நிறைவு காணும் அந்த இயற்கையன்னையின் மக்களின் ஐயனாம், நாற்புறமும் குளமும் நடுவே மண்டபமும் எனத் தோன்றும் அழகிய பள்ளத்தின் நடுவே சின்னஞ்சிறிய அகல் விளக்கில் ஒளிரும் பென்னம் பெரிய சோதிச் சுடர் போல், சிறு குடலில் கோயில் கொண்டிருக்கக் காணலாம். வலப்புறத்திலே மூன்றடி அகலம் ஏழடி நீளமுள்ள பள்ளத்திலே சந்தனமும் அகிலும் சேர்ந்து மணம் பரப்புவதைப் போல் சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டு சாம்பிராணிக் கட்டையும் கர்ப்பூரக் கட்டையுமாகத் திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் பள்ளத்தில் இறங்கி வருவதும் குடும்பம் குடும்பமாகச் சிறு குடிலுக்குள் தேங்காய் பழம் பால் காணிக்கைகளுடன் புகுவதும் வழிபடுவதுமாக இறைவனின் சந்நிதியில் மூச்சுத் திணறும் நெருக்கடியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
உடையர் என்ற பிரிவைச் சேர்ந்த குருக்கள் ஐந்தாறு பேர்களும், சந்நிதிக்கு வெளியே நந்தி தேவனின் முன் நின்று, குழுமிய மக்களின் காணிக்கைகளை ஏற்று, தேங்காயை உடைத்து இறைவனை வேண்டிப் பிரார்த்தித்து, அடிதொட்டு வணங்கிய ஆடவரை, பெண்டிரை, குழந்தைகளை இளநீரைத் தெளித்து ஆசிகள் வழங்கினர்.
தீக்குழிக்கு அப்பால், ஒவ்வொரு ஹட்டியையும் சேர்ந்த இளைஞர்கள், அணியணியாய், இயற்கை அரங்கு போல் தோன்றிய இடத்திலேயே, கால்களில் சலங்கைகளும் கைகளிலே கோல்களுமாக ஆடிப் பாடினார்கள். அந்த ஆட்டத்துக்கும் பாட்டுக்கும் முடிவே இருக்கவில்லை. ஒரு கோஷ்டி போனால் இன்னொன்று; இன்னொன்று போனால் வேறொன்று.
மன்றிலாடும் எம்பிரானை மட்டுமின்றி, அவர்களின் பத்தினித் தெய்வமான ‘ஹத்தையம்ம’னின் புகழையும் அவர்கள் பாடிய கீதங்கள், அந்த மலைப் பிராந்தியம் முழுவதும் தவழ்ந்த காற்றோடு இழைந்து ஒலி பரப்பியது. ஒருபுறம், தலையில் பெருத்த பாகையும் செவிகளில் வில்வதளம் போன்ற இருவளையக் காதணிகளுமாக, காலம் முகத்திலே கீற்றுக்களை இட்டு விட்டாலும், பாலப் பருவத்து நெஞ்சங்களைக் கொண்டவர்களான, முதிய தலைமுறையைச் சேர்ந்த கரியமல்லர், பாருவின் பாட்டனார், ரங்கனின் தந்தை மாதன் போன்றவர்கள் கைகளைக் கோத்துக் கொண்டு வட்டாக நின்று கால்கள் மாற்றி மாற்றி நடுவே வைத்து ஹாவ் ஹாவ் எனக் கூவி நடனம் புரிந்தார்கள்.
கதிரோன் உச்சியை நெருங்குகையிலே, மக்கள் கூட்டமும் பக்தி வெறியும் உச்சநிலைக்கு ஏறின. கூட்டத்தின் நடுவே எண்ணற்ற சிறு வண்ணச் சப்பரங்கள், எம்பிரானின் நாம ஒலிக்கும் தாளத்துக்கும் இசைய பக்தி வெறி கொண்டவரின் தோள்களில் ஆடின. ஆவேசக்காரர்கள் தீயில் விழுந்து விடாதபடி இருபுறமும் இரண்டு ஆட்கள் பசுங்கிளைகளைக் கையில் வைத்துக் கொண்டு ஒதுங்கிய வண்ணம் கத்தினார்கள். பெரும் பெரும் கட்டைகள் எரிந்து, தணல், மாணிக்கப் பாளங்களாய் ஜொலித்தது.
இந்தப் பெருங்கூட்டத்தில், மணிக்கல்லட்டி, மரகத மலை முதலிய ஊர்களிலிருந்து வந்த மக்கள் அனைவரும் இருந்தார்கள். மணவாழ்வின் ஒரு குறிஞ்சிக்குள் வாழ்வின் முழு அனுபவத்தையும் பெற்று விட்ட கோலத்தில் பாரு கையில் வண்ணப் பாவாடை அணிந்த மகளை இழுத்துக் கொண்டு தங்கை கிரிஜையைத் தேடித் துருவிக் கொண்டிருந்தாள். பஜனைக்காரர்களின் நடுவே ஜோகியைப் பார்த்துக் கொண்டு ஒரே இடத்தில் நின்றால், அழல் மிதி பார்ப்பது எப்படி?
அத்தை மாதியையும் காணவில்லை.
பாரு கூட்டத்தை எதிர்த்து முண்டிக் கொண்டு, மேட்டில் ஏற முயன்றாள்.
அப்பப்பா, என்ன கூட்டம்!
ஆகா! சேலை உடுத்துச் சிங்கார ரவிக்கை அணிந்து, கொண்டையும் பூவுமாய் வந்திருக்கிறாளே, கிருஷ்ணனின் மனைவி, தேன் மலைக்காரி! நெற்றிப் பச்சைக் குத்துச் சின்னங்களுக்கு நடுவே குங்குமம், மூக்கிலே சுடர்விடும் வைர மூக்குத்தி, காதுகளில் பொன் வளையங்களுக்குப் பதில் மாதுளம் முத்துக்களைப் போல் ஒளிரும் கெம்புக்கல் தோடுகள், கழுத்திலே அட்டிகை, பதக்கம், கைகளில் பொன் வளையல்கள், மணி மணியாகப் பெண்ணொன்றும் ஆணொன்றும் பெற்று விட்டதாய்.
ஒரு காலத்தில் அவள் கனவு கண்ட கிருஷ்ணனின் மனைவி அவள்! கிருஷ்ணன் சட்டம் படித்து ஒத்தையில் தொழில் நடத்தும் சீமான் ஆகிவிட்டான். ஒத்தையிலே வீடு; போக வரப் புதுமையாகக் கார் வேறு வாங்கியிருந்தான். அவன் பெரு முயற்சியினாலேயே மரகத மலையில் அபிவிருத்திகள் செய்யப்பட்டிருந்தன.
எப்போதோ மாசம் ஒரு முறை அவர்கள் வருவதற்கு அடையாளமாக, புதிதாகப் பாம்பு போல் மலை சுற்றி வந்த செம்மண் பாதையில் அவர்களுடைய கறுப்புக் கார் நிற்பதைப் பாரு காண்பாள். கால் சராய் சட்டை தரித்த பையனும், பாவாடை உடுத்து நிற்கும் பெரிய பெண்ணும் வாயிலில் விளையாடுவார்கள். ஹட்டியிலுள்ள குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் முதியவரும் அந்தக் குழந்தைகளையும் காரையும் பார்த்து அதிசயித்து மகிழ்வார்கள். பாரு விளை நிலத்தில் வேலை செய்து திரும்புகையில் அந்தத் தேன் மலைக்காரியையும் ஒவ்வொரு முறை சந்திப்பதுண்டு.
“நல்லாயிருக்கிறீர்களா அக்கா?” என்று அவள் ஒரு புன்சிரிப்புடன் குசலம் விசாரிப்பாள்.
பாருவின் முகத்தில் புன்னகை மலராது. ஆனால், “சௌக்கியமா அக்கா? இப்போதுதான் வந்தாயா?” என்று பதிலுக்குக் கேட்பாள்.
“ஆமாம். ஸ்கூல் லீவு நாளை போவோம்” என்பாள் அவள்.
அவள் குரலில் தொனிக்கும் பெருமிதம் பாருவின் நெஞ்சிலிருந்து ஓர் ஏக்கப் பெரு மூச்சைத் தள்ளிவரும் அந்தப் பழக்கத்தில் தான் தேன்மலைக்காரி அப்போதும் பாருவைத் தடுத்து நிறுத்தி, “நல்லா இருக்கிறீர்களா அக்கா?” என்று விசாரித்தாள்.
ஒரு கணம் பாரு நிலைத்து அவளைப் பார்த்தாள்.
“சௌக்கியமா?” என்று ஒப்புக்குக் கேட்டுவிட்டு மேலே கூட்டத்தில் கண்களைத் துழாவ விட்டாள்.
மேலே டீ எஸ்டேட் துரை துரைசானி இருவரையும் ரங்கன் முன்னுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தான். ஆங்கிலத்தில் பொரிந்து கொண்டு துரைசானியைக் கூட்டத்தில் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற அவன் மட்டும் மதிப்பில், பார்வையில் கிருஷ்ணனுக்குக் குறைந்து விட்டானா! கம்பளிக் கால் சட்டை, கோட்டு, பெரிய தலைப்பாகை, கடிகாரம் எல்லாமாகக் கனவானாகத் தான் தோற்றம் அளித்தான். ஒத்தை நகரை அடுத்து ஏகரா எகராவாகக் குத்தகை எடுத்துக் கிழங்கு போடுவதும் மண்டிகளுக்கு அனுப்புவதுமாக அவன் பெரிய மனிதன் ஆகிவிட்டானே?
ஆனால்...
பாரு தேன்மலைக்காரியைக் கண்டதனால் ஏற்பட்ட நெஞ்சக் கிளர்ச்சியை அடக்கி, மனசை வேறு திசையில் செலுத்த முயன்றான்.
முதியவர் குழுவை விட்டு, ஜோகி முதலிய இளைஞர் கோஷ்டிக்குத் தலைமை வகித்து, ரங்கனின் தந்தை பாட வந்து விட்டான். வயது அறுபதை எட்டிய பின்னும், அந்தக் குரலில் என்ன இழைவு, என்ன கம்பீரம்! அந்த உடல் எப்படியெல்லாம் வளைகிறது. கோல் கொண்ட டிக்கையிலே?
கிருஷ்ணனின் தந்தைக்கு என்றைக்குமே வருபவர்களுக்கு வஞ்சனையின்றி உண்டி கொடுத்து உபசரிப்பதில் பிரியம் அதிகம். பஞ்சாமிருதத்தைப் பெரிய பாத்திரங்களில் கலக்கி வாரி வாரி இலைகளில் பஜனை கோஷ்டிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.
“கோபாலன் உங்கள் மகளோடு, கைகோர்த்து விளையாடுகிறான் பாருங்கள் அக்கா!” என்று தேன் மலைக்காரி சிரித்தாள்.
பாருவின் மூத்த மகளுக்கு வயசு ஏழுதான். இளையவளுக்கு ஐந்து வயசு. வழிய வழிய எண்ணெய் தடவி வாரி, ரோஜ் உல்லன் நூல் முடித்துப் பின்னல் போட்டு, அவளே அலங்காரம் செய்திருந்தாள். மூத்தவள் மாநிறம், விழிகள் தந்தையைப் போல் பெரியவை. இளையவள், பாருவின் அச்சே. கிருஷ்ணனின் மகன் கோபாலன் அந்தக் குழந்தையைத் தான் கை கோத்து ஆடுவதும் விடுவதுமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். பெரியவளும் சிறியவளுமாக இரு பெண்களும் மரத்தடியில் சாய்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
உடை வேண்டுமானால் துரைமார் வீட்டுக் குழந்தைகளைப் போல் புதுமையாக இருக்கலாம். ஆனால் இரு குழந்தைகளும் தாயின் மறு வார்ப்படங்களே; குறுக்கே நீண்ட மண்டை குறுகலான பொட்டுக்கள், சற்றே மேடான நெற்றி.
பாருவுக்கு நான்கைந்து குறைப் பிரசவங்களுக்குப் பிறகு தங்கிய குழந்தைகள் அவர்கள் இருவரும். ஆனால் கிருஷ்ணன் காதலில் தோற்ற பிறகு சட்டம் படிக்க மீண்டும் பட்டணம் சென்று விட்டான். அடுத்த ஆண்டே தேன்மலை அத்தை மகளைக் கட்டினான். அதற்கடுத்த இரண்டாம் ஆண்டு அவன் ஒத்தையில் தொழில் தொடங்கச் செல்கையிலே தேன்மலையாள், எட்டு மாசக் குழந்தையை கையில் எடுத்துச் சென்றாள்.
பாரு பொறாமைக் கனல் கனிய, பார்த்துக் கொண்டே நிற்கையில், கிருஷ்ணன் அங்கு வந்தான். பாருவின் நெஞ்சம் படபடத்து, விம்மித் தணிந்தது.
“என்ன சுகந்தானா?” அசட்டுச் சிரிப்புடன் எத்தனை நாட்களுக்குப் பிறகு கேட்கிறான்?
பாருவுக்குப் பதில் வரவில்லை. ‘நான் ஏமாற்றப்பட்டேன்; பந்தயம் அது இது என்று வஞ்சகர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். இந்த இரண்டை மண்டை ருக்மிணி இரண்டு குழந்தைகளில் இடை பெருத்துப் பார்க்கச் சகியாமல் நிற்பவள். இவள் ஸ்தானத்தில் நான் அல்லவோ இருப்பேன்?’ என்று அவள் நெஞ்சம் அழுதது.
“ரங்கனை எங்கே காணோம்?” என்றான் கிருஷ்ணன் அசட்டுச் சிரிப்புடன்.
“எனக்கென்ன தெரியும்? கூட்டத்திலே இருப்பார்கள்” என்றாள் அவள்.
“இந்த வருஷம் பயிரில் நோவு விழுந்து விட்டதாமே?” என்றான் கிருஷ்ணன் அடுத்தபடியாக.
“அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்.”
“மாமா இந்த வருஷம் ‘கெண்ட’ (நெருப்பு) மிதிக்கிறார் போல் இருக்கிறதே?”
“ஆமாம்.”
“நீ ஒரு நாள் ஜோகி, கிரிஜை எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஒத்தைக்கு வரக்கூடாதா?”
வயிற்றெரிச்சலுடன் பாரு ஒரு நிஷ்டூரச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “ருக்மிணி அக்கா என்னைக் கூப்பிட்டாளா? கார் வருகிறதே; என்னைக் கூப்பிட்டாளா?” என்றாள்.
“தப்புத்தான் அக்கா. இப்போது கூடவே கூப்பிடுகிறேன். வாருங்கள்” என்று தேன்மலை ருக்மிணி, வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரியச் சிரித்தாள்.
இதற்குள் தாள ஒலிகளும் கூச்சல்களும் தீ மிதிக்கும் பெரியோர்களின் வருகையை அறிவித்து விட்டன.
மழிக்கப்பட்டுச் சந்தனம் பூசிய தலைகளுடன் கதம்ப மாலைகளுடனுமாக எழுவர் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வந்தார்கள். கோத்தரின் குழல், கொம்புத் தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்கள் விண் அதிர ஒலித்து முழங்கின. காவடி போன்ற பிரம்பு வில்களைத் தோள்களில் தாங்கிக் கொண்டு அரஹர அரஹர அரஹர என்ற கோஷம் மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்க, அவர்கள் அந்த தீப்பள்ளத்தில் ஏழு முறைகள் குதித்துக் கடந்தார்கள். முதல்வர், தேன் மலையைச் சேர்ந்தவர்கள், இரண்டாமவர், கோத்தைப் பக்கத்திலிருந்து வந்தவர்; மூன்றாமவர் லிங்கையா, நோவிலும் காய்ச்சலிலும் தளர்ந்து, முதுமையிலும் சுருங்கிய உடல் இப்படி ஒளி தருமோ? மூன்று மாசங்களாக விரதமிருந்து, கோணியில் படுத்து, அவர் புனிதம் காத்த நெறியைக் கூற முடியுமோ? பக்தியும் சீலமும் அவர் வழி வரும் செல்வங்கள்.
மும்முறை மலர்மாரி பொழிய, வலம் வந்து அவர்கள் தீயை மிதித்துக் கடந்து விட்டார்கள். கால் பெருவிரல் ரோமங்கள் கூடப் பொசுங்காமல் அவர்கள் அழலில் குதித்து மீண்டதும், “ஜய ஜய மகாதேவ, அரஹர சம்போ!” என்று குரலை எழுப்பி, ரங்கனின் தந்தை தன்னை மறந்து ஆடலானான்.
அந்தக் கோஷத்தில் சுற்றுப்புறமெல்லாம் மறக்கப் பாரு நிற்கையிலே, கிரிஜையும் மாதியும் அவனைத் தேடி வந்தார்கள்.
“ஏயக்கா? இந்தா, உன்னை எங்கெல்லாம் தேடுவது?”
இலையில் அவள் பாருவுக்காகக் கொணர்ந்த பஞ்சாமிருதம் இருந்தது.
“நான் எங்கே ஓடிப் போனேனா? உன்னைத் தான் தேடினேன். ஜோகியண்ணன் குதிப்பதைப் பார்த்துக் கொண்டே நின்று விட்டு என்னைத் தேடினாயோ? மோசக்காரி.”
“போ அக்கா, நேற்றுதான் கட்டி வந்தவளைப் போல் கேலி செய்கிறாய்!” என்று வெட்கத்துடன் கிரிஜை முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“உங்களைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது இல்லையா அத்தை? நீங்கள் சொல்லுங்கள். அண்ணனை எப்போதேனும் இவள் பிரிந்து தனியே விடுகிறாளா?” என்று பார் குறுநகை செய்தாள்.
மாதியின் வதனத்தில் சட்டென்று ஏக்கச் சாயை படர்ந்தது. அவளை ஜோகிக்குக் கட்டி ஏழு தீமிதித் திருவிழாக்கள் முடிந்து விட்டனவே! இறைவருக்குப் பணி செய்த பயனா இது? அவள் வீட்டில் தவழ்ந்து விளையாடி, மழலை ஒலிகளால் நிறைக்க முற்றம் நிறையக் குழந்தைகள் இல்லை என்றாலும், ஒரு குழந்தையைத் தேவர் அருளக் கூடாதா?
பொன், மணி முதலிய செல்வங்களுக்கு மாதி என்றுமே ஆசைப்படவில்லை; குழந்தைச் செல்வத்தை ஏனோ இறைவன் அந்தக் குடும்பத்துக்கு அருளவில்லை?
அன்றிற் பறவைகள் போல் ஒருவரை ஒருவர் பிரியப் பொறுக்காமல் வாழும் அந்தத் தம்பதியை எப்படிப் பிரிப்பது? ஜோகியை மறுமணத்துக்கு இசையச் சொல்லி எப்படிக் கேட்பது?
ஏக்கத்தில் தோய்ந்த துன்ப வரிகள் அவள் முகத்தில் கீற்றிட அவள் நிற்கையிலே கூட்டத்தில் ஒரே பரபரப்பு.
காரணம் தெரியாத படபடப்புடன் “என்ன, என்ன!” என்றாள் ஜோகியின் தாய்.
“லிங்கையா... ஜோகியின் அப்பா...!”
குரல்கள் ஒன்றோடொன்று மோதின; மாதி கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஓடினாள்.
கால் பெருவிரல் ரோமங்கூடப் பொசுங்காமல் தீயை மிதித்து மீண்ட பெரியவர், சந்தனம் பூசிய மேனியுடன் கீழே பொன்னின் மரம் போல் சாய்ந்திருந்தார்.
மாதியின் பின்னே கிரிஜையும் மற்றும் அறிந்தவர் தெரிந்தவர்களும் எல்லோருமாக ஓடினார்கள். பாரு மட்டும் அந்தத் தேன்மலையாளின் பேறுகளை எண்ணி வெதும்பியவளாக, புகைச் சூழலிடை நிற்பது போல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள். தேன்மலையாளின் புன்னகையே அவளைப் பரிகசிப்பது போலத் தோன்றியது.
கோயிலில் இருந்த மரத்தடியிலே, அத்தனை கூட்டமும் திரும்பி விட்டது. தீமிதியில் இதுவரை எத்தகைய ஆகாத சம்பவமும் நேரிட்டதில்லை; அன்று நேரிடவும் இல்லை.
“வயசான பலஹீனந்தான் ஐயனுக்கு, சற்றே தள்ளுங்கள், காற்று வரட்டும்” என்றான் ஜோகி.
“மூன்று முறை வலம் வந்து பாலும் தெளித்தான பிறகு இங்கே வருகையில் தானே மயங்கி விழுந்திருக்கிறார்” என்றான் ரங்கம்மையின் கணவன்.
மாதி துயரமே உருவாகக் கையைப் பிசைந்தாள். தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். கிரிஜை கண்கள் பொழிய அழுது கொண்டு நின்றாள். இதற்குள் ஒருவர் எங்கிருந்தோ சூடான தேநீர் கொண்டு வந்தார். கிருஷ்ணன் அப்பொழுது அவர்களிடையே கோத்தைப் பக்கத்திலிருந்து புதிதாக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இளைஞனை, அவன் அங்கு வந்திருப்பது அறிந்து, தேடிப் பிடித்து அழைத்து வந்தான்.
இளைஞன் அர்ஜுனன், கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தான். பெரியவரின் கையைப் பிடித்து அவன் பார்க்கையிலே, அனைவரும் அவனைப் பயபக்தியுடன் நோக்கி நின்றார்கள்.
இளைஞன் புன்னகை செய்துவிட்டு, “ஒன்றும் பயப்படுவதற்கில்லை” என்றான்.
ஜோகி இனிய தேநீரை வாங்கி, அவர் வாயைத் திறந்து விட முயன்றான்.
இதற்குள், “பஸ்வேசுவரா! நஞ்சுண்டதேவா! உன் கோயிலுக்கு வருவே. என் சகோதரனுக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று மேற்குத் திசை நோக்கிக் கும்பிட்டு, தமையன் மாதன் உள்ளமுருகப் பாட ஆரம்பித்து விட்டான்.
இறைவனின் திருநாம மாலையாகிய அந்த இன்னொலித் தாரை, பெரியவரின் செவிவழிப் பாய்ந்து, உறங்கிய உணர்வைச் சிலிர்க்கச் செய்ததோ? அந்தக் குரலலைகள் பரவின சுருக்கில், லிங்கையாவின் கண்ணிமைகள் அகன்றன. கடும் விரதத்தாலும் உபவாசத்தாலும் முதுமையினாலும் சுருங்கிய முகத்தில் விழிகளும் பள்ளங்களுந்தான் இருந்தன. ஆனால் ஒளியில் உருகி மிதந்தன.
“அப்பா, இந்த டீயைக் கொஞ்சம் குடியுங்கள்” என்றான் ஜோகி.
உலர்ந்த நாவும் உதடுகளும் தேநீரில் நனைந்தன. எல்லோரையும் சுற்றி நோக்கினார். “நான் எங்கிருக்கிறேன்?” என்றார், பேச முடியாத ஈன சுரத்தில்.
தழுதழுத்த அந்தக் குரல் எல்லோருக்கும் அவருடைய குரலாகத் தோன்றவில்லை.
“ஈசுவரர் கோயில் மரத்தின் கீழே; இப்போதுதானே ‘கெண்ட’ மிதித்தீர்கள்?” என்றான் தமையன்.
“மாதம்மா!” என்று அவருடைய அந்தத் தழுதழுக்கும் குரல் அழைத்தது.
கண்ணீரில் மிதக்கும் விழிகளுடன் மாதி அவர் அருகில் நெருங்கினாள்.
“கிரிஜை எங்கே? குழந்தை எங்கே?”
“மாமா!” என்று அழுது கொண்டே கிரிஜை அவர் கால் பக்கம் வந்து நின்றாள்.
“அழாதே மகளே, அடுத்த கெண்ட ஹப்பாவுக்கு முன்பே, கையில் ராஜாவைப் போல் ஒரு பையனை ஏந்துவாய் அம்மா!” என்றார்.
அங்கு ஊசி போட்டால் கேட்கும் சப்தம் நிலவியது. மறுபடியும் லிங்கையா சுற்றும் முற்றும் நோக்கினார். “எல்லோரும் ஏன் நிற்கிறீர்கள்? மாதலிங்கேசுவரர் முன் அழல் மிதித்துப் புனிதமானோம். பஜனை பாடுங்கள்; எனக்குக் களைப்பாக அசதியாக இருக்கிறது; நான் தூங்குகிறேன்” என்றார்.
அவர் அங்ஙனம் கூறி முடிக்கு முன் தமையனார் பாடத் தொடங்கி விட்டார். பஜனைத் தாளங்கள் அவர் நாம ஒலிக்கிசைய முழங்கத் தொடங்கின.
“என்ன இது? அவர் உடம்பு சரியில்லை. ஏதேனும் கார் அகப்பட்டால் தூக்கிப் போட்டு ஒத்தை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகலாம்” என்று கூட்டத்தில் யாரோ கூறின குரல் கேட்டது.
இளைஞன் அர்ஜுனன், “ஆம், அது நல்லது” என்று ஆமோதித்தான். இதற்குள் பல குரல்கள், “ரங்கன் எங்கே, ரங்கன்?” என்று கூட்டத்தைத் துழாவின.
ஜான்ஸன் எஸ்டேட் துரை அவனுக்கு நண்பர். கார் வசதி அவனுக்குக் கிடைக்குமே! ஆனால், திமிதி நடந்தவுடனே, ரங்கன் துரைத் தம்பதியுடன் வன விருந்தில் கலந்து கொள்ளக் கிளம்பி விட்டதை யார் அறிவார்?
ரங்கனுக்குப் பதில் கிருஷ்ணன் தான் அவரைக் கொண்டு செல்லக் காரை எடுத்து வந்தான். வண்டியில் அவரைத் தூக்கிக் கிடத்துகையில், அவருக்கு மீண்டும் நினைவு தப்பிவிட்டது.
தமையனார் பதறினார்; மாதி கையைப் பிசைந்தாள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதா? ஹட்டியில் அதுவரையில் அம்மாதிரி எவரையும் கொண்டு சென்றதில்லையே? ஆஸ்பத்திரியில் அவரை என்ன செய்வார்களோ? மணிக்கல்லட்டியிலிருந்து, ஆஸ்பத்திரிக்கென்று முதுகுச் சிரங்குடன் சென்ற காரியின் தந்தையைக் கத்தியால் அறுத்துக் கொன்று விட்டானாமே, வெள்ளைக்கார டாக்டர்!
வண்டியில் நெருங்கிக் கொண்டு அமர்ந்திருந்த மாதி விம்மி விம்மி அழலானாள். வண்டியை ஓட்டிய கிருஷ்ணன் பதறி விட, அவள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லக் கூடாது என்று பிரலாபித்தாள்.
“வீட்டுக்குத் திரும்பி விடு கிருஷ்ணா வேண்டாம். ஹட்டிக்குப் போகட்டும்” என்று தமையனார் கையைப் பிடித்து மறித்தார்.
கிருஷ்ணன் என்னதான் செய்வான்? மரகத மலைப் பக்கமே வண்டியைத் திருப்பினான். மரகத மலைக்கு அவன் முயற்சியாலேயே நல்ல பாட்டை வந்திருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளில், ஆங்காங்கிருந்த அடர்ந்த சோலைகளில் மளமளவென்று மாபெரும் கர்ப்பூர விருட்சங்கள் முறிந்து விழும் ஓசை கேட்ட வண்ணம் இருக்கிறதே! ஆதவனின் கிரணங்களைக் கூட நுழைய விடாத சோலைகளில் எல்லாம் அந்த வெங்கிரணங்கள் புகுந்து விளையாடின. மரகதமலைக்கு மேற்கே, யானை மந்தைகள் போல் தோன்றும் குன்றுகள் அனைத்தும் குறிஞ்சிப் பூவாடை போர்த்து ஒரே நீலமாகத் தோன்றுமே? இப்போது, ஆங்காங்கே திட்டுத்திட்டாக, முட்டு முட்டாகத் தேயிலைச் செடிகள் மலையில் செழிப்பாக வளர்ந்திருந்தன.
மரகதமலை ஹட்டியில் முட்டுப் பாறைக்கருகில், சிறிய பள்ளிக்கூடம் ஒன்று உருவாகியிருந்தது. முன்பு, வெள்ளைக்காரத் துறையின் எஸ்டேட் பக்கம் மட்டுமே இருந்த சில்லறைக் கடைகளும், தொழிலாளர் குடிசைகளும், இப்போது மரகதமலைப் பாதையிலும் வந்துவிட்டன. சாமையும் ராகியும் கிழங்கும் தவிர, மண்ணில் விளைவித்துப் பணத்தின் ருசி அறிந்திராத ஹட்டி மக்களில் பலரும், தேயிலை போட வேண்டும்; பணம் குவிக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகவே மண்ணில் உழைக்கத் தொடங்கி விட்டனர்.
தேயிலை போடுவதில் முனைந்து, ஒவ்வோர் ஆண்டிலும் அந்த முயற்சியைப் பெருக்கி வந்த கரியமல்லரின் குடும்பத்தில், ‘தன் மண்ணில் தானே பாடுபடுவது’ என்ற வாய்ப்பு அருகி வந்தது. கோவை, பொள்ளாச்சிப் பக்கத்திலிருந்து வந்த தொழிலாளர் சிலர், அந்தக் குடும்ப மண்ணில் உழைத்தார்கள். தேயிலை தந்த பணம், காரைக் கட்டு வீடாக இருந்த கரியமல்லரின் கோடி மனையை, நீளத்திலும் அகலத்திலும் பெரியதாக்கி, சகல வசதிகளும் கொண்ட மாடிமனையாக உருவாக்கி விட்டது.
கிருஷ்ணனின் வண்டி வழக்கம் போல் வீட்டின் புறம் அந்தக் கோடியில் வந்து நிற்காமல், இந்தக் கோடியில் ஜோகியின் மனையண்டையில் நின்றதும், ‘கெண்ட ஹப்பா’வுக்குப் போக முடியாமல் இருந்த இரண்டொரு மக்களும் ஓடோடி வந்து வாசலில் நின்று பார்த்தார்கள்.
புறமனைப் பெஞ்சியிலே அவருக்குப் படுக்கப் பரபரக்க வசதிகள் செய்த மாதி, பொறுமையே உருவாகத் தோன்றினாள்.
வேறு வீடுகளில் ஓரளவு வண்மை கூடியிருந்தாலும் ஜோகியின் வீட்டில் போதும் போதாததுமான அந்தப் பழைய நிலை மாறவில்லை. மண்ணிலே ராகியும் சாமையும் தினையும் விதைத்து அவனும் கிரிஜையுமாகப் பாடுபட்டனர். குடும்பத்தில் அவ்வப்போது பற்றாக்குறை யென்று வாங்கிய கடன் ஏதுமில்லை. கொட்டிலில் இரண்டாக இருந்த எருமைகள் நாலாக மாறியிருந்தன. என்றாலும், வளமையில் நீந்தும் நிலை வரவே இல்லை.
ரங்கன் ஒத்தைப் பக்கம் குத்தகைப் பூமியெடுத்துக் கிழங்கு விதைத்து, ஆயிரம் ஆயிரமாகப் புழங்கும் கனவானாக மாறினாலும் அந்தக் குடும்பத்துக்கு அவனால் ஆதாயமென்று சொல்வதற்கில்லை. கிழங்கு எடுத்து, கைக்குப் பணம் வந்ததும் மைசூருக்கும் பங்களூருக்கும் போய் வருவான். உதகை நகரிலேயே உல்லாசத்துக்கு வாரி இறைப்பான்.
குடும்பமென்னும் கூண்டுக்குள் எப்போதுமே அடைய விரும்பியிராத ரங்கனைக் கணவனாகப் பெற்ற பாருவுக்கு வாழ்வின் ஏமாற்றம் மனதில் கசப்பாக வேரோடி வளர்ந்தது என்றால் மிகை அல்ல. அந்தக் கசப்பு, ஜோகியையோ, ஜோகியின் தந்தையையோ காணும் போது குபுகுபுவென்று பெருகி, வெறுப்பாக நெஞ்சில் முட்டியது. ‘என் வாழ்வைக் குலைத்தவர்கள்’ என்ற எண்ணம் எழுந்தது. ரங்கம்மையின் கணவன் ஒருவனே ஆண்மகனாக அந்தக் குடும்பத்தில் உழைத்தான். ரங்கம்மையோ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரசவம் என்ற கண்டம் தப்பிப் பிழைப்பதும், பிறக்கும் குழந்தைகளுடன் நோயிலும் அயர்விலும் போராடுவதுமாக, வீட்டை விட்டு வெளியே செல்வதற்கில்லாமல் இருந்தாள்.
தன் ஏமாற்றம் அனைத்தையும் ஆத்திரமாகப் பூமித்தாயிடம் காட்டுபவள் போல் பாருவும் மண்ணில் பாடுபட்டாள். இருந்தும் பற்றாக்குறையைச் சரி செய்ய, முன்பு எப்படித் தம்பி அண்ணன் குடும்பத்துக்கு உதவிக் கொண்டிருந்தாரோ, அப்படியே ஜோகி, தன்னையும் அறியாமல் அண்ணன் குடும்பத்துக்கு உதவுபவனாக, அந்தக் குடும்பத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தான்.
கிரிஜையும் ஜோகியும் மற்றவரும் இதற்குள் குறுக்குப் பாதையில் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள். கிரிஜை உள்ளே சென்று அவசரமாக அடுப்புப் பற்ற வைத்துக் காபி தயாரிக்கலானாள். தீயை மிதித்த பாதங்களைப் போர்வையால் மூடிவிட்டு, அருகிலே அமர்ந்திருந்த மாதியின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலை மோதின.
கிரிஜையை ஜோகிக்குக் கட்டி என்ன பயன்? அந்த நஞ்சம்மையின் மகளுக்கு ஐந்து குழந்தைகள் வீடு நிறையப் பிறந்து விட்டார்களே! மூன்று பிள்ளைகள்.
காபி போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வந்த கிரிஜை, ஒரு தம்ளரில் ஊற்றி, வாயிற்புறம் பார்த்து நின்று ஜோகியுடன் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்குக் கொடுக்க வந்தாள்.
“கிருஷ்ணண்ணா, காபி சாப்பிடுங்கள்” என்றாள்.
“அட! இப்ப ஏனம்மா இதெல்லாம்?” என்ற கிருஷ்ணன் அதை வாங்கிக் கொள்கையில், பெரியப்பன் இரகசியமாக மதுப்புட்டியை முண்டுக்குள் ஒளித்து எடுத்துக் கொண்டு லிங்கையாவிடம் வந்தார்.
தாம் மதுவருந்தி மயங்கிக் கிடப்பதை, இறைவருக்கு உகக்காத செயல் என்று தம்பி எத்தனையோ முறை கூறியிருந்த நினைவு அவருக்கு இல்லாமல் இல்லை.
தம்பியின் உடல் நலிவை மாற்றி வலிமை கொடுக்கும் என்றெண்ணி, அவர் எத்தனையோ முறை லிங்கையாவை மதுவருந்தத் தூண்டியிருக்கிறார்.
“அது வேண்டாம், அண்ணா. அது சீலத்தை அழித்து, குப்பையையும் அசுத்தத்தையும் உள்ளத்தில் ஏற்றும்; சிறுமையைச் செய்யும்” என்று திண்ணமாக மறுத்திருக்கிறார் லிங்கையா. அவர் என்ன கூறியும் தமையனுக்கு மதுவின் மீதுள்ள நம்பிக்கையும் பற்றும் அகலவில்லை.
இரகசியமாக எடுத்து வந்து, மயக்க நிலையில் மருந்தாகக் கொடுக்கலாம் என்று நினைத்த அண்ணனின் நோக்கம் நிறைவேறவில்லை. குப்பியை அவர் திறந்ததுமே, தம்பியின் சுவாசத்திலே அதன் நெடி அண்ணன் செய்யும் சூழ்ச்சியை அறிவித்து விட்டது போலும்!
வெட்டென்று அவர் கண்கள் மலர்ந்தன. தமையனையும் கைகுப்பியையுமே அந்த விழிகள் உறுத்து நோக்கின. அண்ணினின் துணிவு கரைந்து போயிற்று. தம்பியின் கை குப்பியைத் தட்டி விடக் கூடும் என்ற அச்சத்துடன், சுவரின் உயர இருந்த தட்டிலே அதை வைத்தார்.
தம்பியின் வறண்ட இதழ்கள் அகன்றன. “இவனிடம் இந்த ஒரு நெறி செல்வமாக இருக்கிறது; அதுவும் எதற்கு என்று பார்க்கிறார் அண்ணன்!” என்றார், மனைவி முகம் பார்த்து.
மாதி மறுமொழி கூறாமல், கிரிஜை தந்த காபியை அவர் வாயில் ஊற்றினாள். அவர் அதை அருந்தியதும், முகத்தைத் துடைத்து விட்டாள்.
பேச்சுக்குரல் கேட்டுக் கிருஷ்ணனும் ஜோகியும் ரங்கம்மையும் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்து விட்டு லிங்கையா புன்னகை செய்தார்; “ரங்கன் எங்கே?” என்று கேட்டார்.
ஜோகி சற்றுத் தயங்கி விட்டு, “மருந்து ஏதேனும் துரை ஆஸ்பத்திரியில் கேட்டு வாங்கி வருகிறேனென்று போனான்” என்றான்.
அவர் மறுபடியும் சிரித்தார். “எனக்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஏன் இங்கு வந்தீர்கள்? போங்கள். வழக்கம் தவறாமல், ஆட்டமோ பாட்டமோ பஜனையோ, கோயில் பக்கம் போங்கள்; சாப்பிடுங்கள். மாதம்மா, நீ சாப்பிட்டாயா?” என்றார்.
மாதி தலையை ஆட்டினாள்.
“போங்கள்; போ கிருஷ்ணா, எனக்கு ஒன்றும் இல்லை. அம்மை மட்டும் இங்கே இருக்கட்டும்; போங்கள்” என்று எல்லாரையும் விரட்டினார் அவர்.
அன்றிரவெல்லாங் கூட இடையறாமல் தீப்பந்தங்களுக்கு நடுவே, கூத்தும் கதையும் புராணங்களும் பஜனைகளும் மாதலிங்கேசுவரர் கோயிலின் முன் நிகழ்வது வழக்கம். காந்த விளக்குகள் இவ்வாண்டு புதிதாக வந்திருந்தன. தோரணங்களும் அலங்காரங்களும் கூத்து மேடையில் விளங்கின. மைசூர் பக்கத்திலிருந்து பிரத்தியேகமாக அரிச்சந்திரன் கூத்தை நிகழ்த்தக் கலைக் கோஷ்டியினர் வந்திருந்தனர். மாதியையும் கிரிஜையையும் ஜோகியையும் தவிர அனைவரும் கீழ்மலைக்குத் திரும்பி விட்டனர் மறுபடியும்.
அந்தத் திருவிளக்கை வணங்கிவிட்டு, மடியுடுத்து, ஜோகி கொட்டிலுக்குச் சென்றிருந்தான். மாதி, அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தமக்கு ஒரு கையும் காலும் தூக்க முடியாமல் கனத்துவிட்டதை லிங்கையா மனைவியிடம் விண்டார்.
“ஐயோ!” அதிர்ந்து விட்ட ஜோகியின் தாய் அவர் கைகளையும் கால்களையும் தூக்கினாள்; தடவினாள். “இதுவும் விதியா?” என்று அழுத அவளை அவர் ஆறுதலாகத் தேற்றினார்.
“நல்லதுதான். மாதி எனக்கு இது ஒருபுறம் சந்தோஷத்தை தருகிறது. தேவர் கருணை...”
“ஐயோ, நீங்கள் நல்ல நினைவுடன் பேசும் பேச்சா? தேவர் தேவர் என்று இருக்கும் நமக்கே எல்லாக் கேடும் வருமா?”
மீண்டும் மீண்டும் அவள் அந்தக் காலையும் கையையும் தொட்டுத் தூக்கினாள். என்ன என்னவோ காட்சிகள் கண் முன் விரிய, பூண்டை அரைத்து வந்து தடவினாள்.
“கவலைப்படாதே மாதி, இது போலத்தான் எங்கையனுக்கு வந்தது; அவர் சாகுமுன் வாய் கூடப் பேசவில்லை.”
“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்; நீங்கள் போன பின் எனக்கு என்ன கதி?”
“நான் போவேனா மாதம்மா. யாருக்கும் இல்லாத செல்வம் நமக்கு இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அவர் நகைத்தார்; “இந்த வீட்டையும் உன்னையும் ஜோகியையும் விட்டுப் போக எனக்கா மனம் வரும்? இந்த மண்ணையே தான் திரும்பத் தேடி வருவேன்; உன் மடியிலேயே விளையாட வருவேன். இரிய உடைய ஐயனுக்கு என் பையன் தொண்டு செய்யவில்லையா? நான் அறிந்து ஒரு தீங்கு எவருக்கேனும் செய்தேனா? எனக்கு மட்டும் ஐயன் ஏன் வஞ்சம் புரிய வேண்டும்? எனக்கு இன்று சந்தோஷமாக இருக்கிறது. இந்த வீட்டில் ஐயன் ஒரு குழந்தையை விளையாடவிடவில்லை. நானே சீக்கிரத்தில் இந்தப் பிறவியை விடுத்துக் குழந்தையாய் வருவேன். மாதி, என் பையன் முகத்திலே எப்போதும் ஒளி இருக்கும். கிரிஜை சிறு பெண்ணாக, எப்போதும் சந்தோஷமாக இந்த வீட்டில் இருப்பாள்; நானே வருவேன். தீயில் குதிக்கையில் நான் இந்தப் பிரார்த்தனை தானே இன்று செய்து கொண்டேன்? சந்தோஷப்பட வேண்டி இருக்க, ஏன் அழுகிறாய், மாதம்மா?”
மாதி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.
மலையழகியை விழுங்க வரும் கரிய பூதங்கள் போலக் கார் காலத்து மேகங்கள் அந்த இரவில் தம் இச்சையாகத் தெருவென்றும் வீடென்றும் குன்றென்றும் பாராமல் வெற்றிக் காற்றின் வேகத்தில் அலைந்து கொண்டிருந்தன. துயரத்தின் வசப்பட்டுப் பொட்டுப் பொட்டென்று மலை மங்கை நிலத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். வானத்தில் வளர்பிறைச் சந்திரன் இத்துயரக் காட்சியைக் காணச் சகியாதவனாக மறைந்தே போனான். பகலிலேயே வெறிச்சோடிக் கிடக்கும் உதகை நகரத் தெருக்களிலே இத்தகைய இரவுகளில் எப்படி நடமாட்டம் இருக்கும்? கதிரவன், கண் திறந்தே ஒரு மாதமாகி விட்டது. இரவும் பகலும் நீண்டு வளரும் இத்தகைய நாட்களில் ரங்கனின் வண்டு சோலை வீடு, அவனுக்கும் அவனை ஒத்தவர்களுக்கும் சூதாடும் மனையாகத் திகழ்வது வழக்கம். அதிலும் மழை அதிகமாகிக் கிழங்குகள் மண்ணுக்குள் கெட்டுவிடும் என்ற சாக்கில், ரங்கன் விதைத்திருந்த முக்கால்வாசிப் பூமியிலும் கிழங்கெடுத்துப் பணமாக்கியிருந்தான். அந்த வாரத்தில், பணப்புழக்கம் இருக்கையில், அந்த மனையில் காசு கலகலக்க வெறியும் மயக்கமும் மனிதனை ஆட்டி வைக்கும் ஆட்டங்கள் நடைபெறாமல் இருக்குமா?
வாயிலில் என்றோ ரங்கன் கொண்டு வைத்த வால்பேரிக் கன்று, கப்பும் கிளையுமாகப் படர்ந்து பரவி அந்த வீட்டைத் தன் கிளைகளுக்கடியில் ஆதரித்து நிற்பது போல் நின்றது. ‘உள்ளே நடப்பவை எனக்குத் தெரியும். ஆனால் என்னை வைத்து வளர்த்தவன் அவன்; நான் நன்றி சொல்ல மாட்டேன்’ என்று கூறுவது போல், அந்த இருளிலே, அந்த வீட்டையே மறைத்து நின்றது அந்த மரம். உள்ளே மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்த ஆட்டம், நள்ளிரவைத் தாண்டியும் நிற்கவில்லை. சுருட்டுப் புகை வெளியே அலையும் கருமேகம் உள் வந்துவிட்டதோ என்று ஐயுறும்படி சூழ்ந்திருந்த அந்தச் சூழலிலே ஓர் ஓரத்திலிருந்த மெழுகுவர்த்தி விளக்கு, அந்த வானத்துச் சந்திரனின் நிலையில் துன்புற்றாற் போல, ஒளியை உமிழ்ந்து புகையுடன் போராடிக் கொண்டிருந்தது. குப்பி மதுவின் நெடியும், பணவெறியும் அங்கு ஆடுபவர்களின் பகுத்தறிவை விழுங்கி, அவர்களையே ஆட்சி புரிந்து கொண்டிருந்தன.
பெஞ்சமின் சீட்டை அடித்துக் கலைத்துக் கொண்டிருந்தான். அவன் தச்சுப் பட்டறையில் ‘பாலிஷ்’ ஏற்றும் தொழிலாளி. அழகிய மரச்சாமான்களையும் தரையையும் பளிங்காக்கும் சாமர்த்தியம் பெற்றிருந்த அவன், மனசைப் பளிங்காக்கும் எண்ணமே அறியாதவன். ராஸ் என்ற இன்னொரு கூட்டாளி ஆங்கிலோ இந்தியன். உள்ளூர்ப் பாண்டு கோஷ்டியில் குழல் ஊதுபவன். கையில் காசு அகப்பட்டால் சூதாடுவது ஒன்றே அவன் குறி. மேசையின் மீது இருந்து குப்பியில் பாதியைக் காலி செய்துவிட்டு, கனத்த சுருட்டை வாயில் வைத்துப் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். ஆட்டத்திலே அவனுக்கு அன்று அமோக வெற்றி. ரங்கனின் கிழங்குக் காசை அவன் விழுங்கி விட்டான்.
ரங்கன் கோட்டுப் பையில் மீதியிருந்த ஒரே நூறு ரூபாய் நோட்டை எடுத்து மேசைமேல் வைத்தான். ‘இன்று மூன்று அதிருஷ்டம் நம் பக்கம் இல்லை. என்ன இழவு மழை, ஓயாமல் மூன்று மாசமாய் ஊற்றுகிறது?’ என்று கூறிக் கொண்டே சீட்டைப் பார்த்தான்.
“இதுதான் கடைசி” அவன் கூறுகையில், பெஞ்சமின் விழிகள் பிதுங்கி வருவனபோல் நோக்கினான்.
ராஸ் புகையேறிய உதடுகள் அகல, கைச் சீட்டைக் கீழே போட்டான். அன்று வெற்றித் திருமகள் ரங்கன் பக்கம் இல்லை. கடைசி ஆட்டத்தில் மொத்தமாக வைத்து இழந்தவற்றைத் திரும்பப் பெறலாம் என்ற நம்பிக்கை படுத்து விட்டது.
மாதா கோயில் மணி இரண்டு அடிக்கையிலே, ரங்கனைத் தனியே விட்டு அவர்கள் இருவரும் சென்று விட்டார்கள். மீதி இருந்த மதுவை விழுங்கி விட்டு அவன் கட்டிலில் விழுந்தான். பாழான மழை!
கிழங்குப் பணம் வந்த சோடு தெரியாமல் கரைந்து விட்டது. கிழங்கு விற்று அடைப்பதற்கான கடன்கள் பூதங்களென வாயைப் பிளந்து கொண்டு காட்சியளித்தன.
சட்! சனியன் பிடித்தவள். அந்தப் பாரு வந்த வேளை, அவன் கையில் முன்போல் காசே தங்குவதில்லை. பணம் என்னவோ ஆயிரக்கணக்கில் வருகிறது; ஆனால் ஆயிரமாகவே போகிறதே!
வெறியும் குழப்பமும் சேர்ந்த அந்த நிலையில், பாருதான் அவன் முன் தோன்றிக் கோப வெறியாக பொறாமை வெறியாக ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குப் போய் அத்தனை கனவு கண்டான்!
அவளைக் கட்டினால் அந்தக் கிருஷ்ணன் பயலின் கர்வம் குலையுமென்று மனப்பால் குடித்தேன்! அவன் மாடி வீட்டில், அதே நேரத்தில் கொக்கரிக்கிறானே! ஹட்டியில் அவனைக் கண்டால் தெய்வத்தைக் கண்டாற் போல் கும்பிடுகிறார்களே! சுயநலத்துக்காகச் செய்வதை எல்லாம் ஊருக்குச் செய்வதாகத் தம்பட்டம் போட்டு ஊரை ஏமாற்றுகிறான்!
பாருவும் நல்லவளா? கல்யாணத்துக்கு முன்பு, அவனுடன் இழைந்து குலவினவள் தானே? அன்று மாதலிங்கேசுவரர் கோயில் தீமிதி விழாவின் போது, அவளருகில் நின்று பேசினான், மரியாதை கெட்டவன். போதாக் குறைக்குக் கார் அனுப்பி, அவளை ஒத்தைக்கு அழைத்து வரச் செய்திருக்கிறானே! படித்தவன் எது வேண்டுமானாலும் செய்து விடலாமோ?
பாரு ஒத்தைக்கு வந்து போன செய்திக்குக் கிழங்கு மண்டியில் மூட்டை சுமக்கும் தொரியன் மகன் அன்று தான் கூறியிருந்தான் ரங்கனிடம். முதல்நாள் காலையில், இத்தனை சூதுகளுள்ள அந்தப் பொய்மகள் அவனை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்று பொருள்பட ஏசினாள். கீழ்மகளை ஒதுக்கி, ஒழித்துக் கட்டிவிட்டு, ஐந்தாறு மாசங்களாக அவன் மனசை ஈர்த்து அவனோடு வாழ விரும்பும் கௌரியைக் கொண்டு வருவது முடியாத செயலா? அவளும் மணிக்கல்லட்டிப் பெண் தான். கன்னியாகவே அவனை வரித்தாளாம் அவள்; அவளைக் கோத்தைப் பக்கம் முதலாக மணம் செய்து கொடுத்திருந்தார்கள்; கணவனுக்கும் அவளுக்கும் ஆரம்பம் முதலே ஒத்து வரவில்லை. போதாக்குறைக்கு அவனே அவளை விலக்கிக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி விட்டான். பிறந்தகம் வந்த கௌரியை வேறு எவரும் கொள்ள வருமுன்பு ரங்கன் முந்திக் கொண்டான்.
தலைக்கேறிய போதையின் வெறியிலே, அவனுள் வெளிவராமல் ஆழ்ந்திருந்த பல உணர்ச்சிகளும் சொற்களாக வெளிவந்தன. கேட்பவர் யார்? புகையேறிய அந்த நாலு சுவர்களுக்குங் கூட, அவனுடைய இரகசியங்கள் புதியன அல்லவே!
போதை தெளிந்து, அவன் நல்ல நினைவில், கண் விழிக்கையில் மறுநாள் பகல் உச்சிக்கு விரைந்து கொண்டிருந்தது. பளிச்சென்று கதிரவன் முகம் காட்டுவதும், உடனே மேகத்திரைக்குல் மறைவதுமாகக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். கையில் காசு இல்லாத நிலை அப்போதுதான் தெளிவாக அவன் உணர்வில் படிந்தது.
ஓர் ஏகராவில் இன்னும் கிழங்கு எடுக்கவில்லை. அது பிந்தி விதைக்கப்பட்டது. செடிகள் வாடி மட்கவில்லை. கிழங்கு கொஞ்சங்கூட முற்றியிருக்காது என்று அதை விட்டு வைத்திருந்தான். ஆனால், காலந்தாழ்த்திக் கொட்டி விட்ட மழை, அதை எப்படி வைத்திருக்கிறதோ? படிக்குப் பாதியேனும் விளைவு தேறுமோ என்னவோ?
கௌரியின் அண்ணனைக் கண்டு, ரூபாய் ஐம்பதேனும் வைத்து அழைத்து வரவேண்டும். பஞ்சாயத்தைக் கூட்டி இந்தக் கள்ளியை விலக்க, முதலில் காலும் கையும் வழிந்து ஐந்து மாசமாகப் படுத்திருக்கும் சிற்றப்பன் இடம் கொடுப்பாரோ?
யோசனை செய்தபடியே எழுந்து முகம் கழுவிக் கொண்டான்! கடைவீதிப் பக்கம் ‘மிலிடேரி’ ஹோட்டலில் நுழைந்து, உண்டியருந்திவிட்டு அவன் வருகையில், ‘ஜான்ஸன் எஸ்டேட்’ வண்டி, சந்தைப் பக்கம் வந்து, திரும்பியதைக் கண்டான். துரை இல்லை. துரைசானி மாத்திரம் வண்டியில் இருந்தாள். நல்ல தருணமென்று ரங்கன் பல்லைக் காட்டி துரைசானிக்கு ஒரு ‘ஸலாம்’ போட்டுவிட்டு, வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.
‘எஸ்டேட்’ பக்கம் இறங்கி, அவன் நேராக நடந்தான். மரகதமலையின் சமீபம் வருகையிலே அவனுக்குச் சடேரென்று அந்நேரம் கௌரியைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று; திடீரென்று வானம் இருண்டு கவிந்தது. இடி முழக்கம் பேரோசையாக ஒலித்தது. விரைந்து அவன் செல்லுகையிலே, புதிதாகத் தேயிலை பயிரிட்ட பகுதியில் ஸில்வர் ஓக் மரத்தடியில், கிருஷ்ணன் நிற்கக் கண்டான்.
“ஓ ரங்கனா? சௌக்கியமா? சிற்றப்பா எப்படி இருக்கிறார்? நான் சற்றுமுன் தான் நேராக வந்தேன்” என்று விசாரித்தான் அவன் ரங்கன் அருகில் வந்து.
தான் ஒரு காலத்தில் காதலித்த மங்கையின் மணாளன் அவன். அவன் நடப்பும் வாழ்வும் சரியில்லை என்று உணர்ந்த கிருஷ்ணன் மனம் நொந்திருந்தான். அவளுக்காக அவனை நெருங்கிச் சீர்திருத்த வேண்டும் என்ற ஆசையும் அவனுள் முளையிட்டிருந்தது. கௌரியுடன் ரங்கன் தொடர்பு கொண்டு, அதன் விளைவாக மணிக்கல்லட்டியிலும் மரகதமலையில் அவன் வீட்டிலும் எழுந்த கசமுசப் பேச்சுக்களை வேறு அவன் அறிந்திருந்தான்.
அவனையும், சரிவுகளில் விரிந்த தேயிலைச் செடிகளில் பசுமையையும் கண்டதனால் ஏற்பட்ட மன எரிச்சல் அடங்காமல் ரங்கனுக்குப் பொங்கியது.
“வக்கீல் ஸாருக்குத் தெரியாமல் எனக்கு எப்படி வீட்டு விஷயம் தெரிய முடியும்?” என்றான் சம்பந்தம் இல்லாமல் ரங்கன் அடித்தொண்டையில்.
“ஓ, இல்லை. எங்கே, மணிக்கல்லட்டிப் பக்கம் போகிறாய் போல் இருக்கிறதே. சிற்றப்பாவுக்கு உடல் நிலை தேவலையா! என்று விசாரித்தேன். எல்லாரும் இங்கே தானே இருக்கிறார்கள்?” என்றான் குறிப்பாக.
“அதுதான் நான் உன்னை விசாரித்தேன். ஏய், எனக்கு ஒன்றும் தெரியாதென்றா நினைத்தாய்? உன் மீது வழக்குத் தொடுத்து பஞ்சாயத்தில் உன் மானம் சந்தி சிரிக்கச் செய்வேன்.”
ரங்கனின் திடீர்க் கோபமும், வலுச் சண்டைக்கு அழைத்த விதமும் கிருஷ்ணனுக்கு அச்சத்தைக் கொடுத்தன. அவன் கோபத்துக்குக் காரணமும் அவனுக்குப் புரியவில்லை.
“என்ன தப்பு நடந்தது ரங்கா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றான்.
“புரியவில்லையா? பார்த்துப் பேசுடா?” என்றான் ரங்கன்.
“என்ன நடந்தது? எனக்குப் புரியவில்லையே! விளையாட்டாகத்தான் பேசுகிறாயா?” என்றான் கிருஷ்ணன் மீண்டும் சமாளித்துக் கொண்டு.
“யாரடா அவன் யானை, பூனையிடம் விளையாட வருகிறான்? கார் அனுப்பிப் பிறன் மனைவியை அழைத்துச் சென்றவன் யாரடா? பதரே!”
விஷயம், இவ்வளவு கீழ்த்தரமாக, ரசாபாசமாக மாறிவிடும் என்பதைக் கிருஷ்ணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஓ! பாரு ஒத்தைக்கு வந்ததைச் சொல்கிறாயா? ருக்மிணி தான் அழைத்து வர வேண்டும் என்று வண்டி அனுப்பினாளாம். நான் கூட மேட்டுப்பாளையம் போயிருந்தேன். நீயா ரங்கா இப்படிப் பேசுகிறாய்? என்னால் நம்ப முடியவில்லையே!”
“ஓகோ! வக்கீல் ஸாரில்லை? புரட்டி புரட்டிப் பேசத் தெரியாதா?”
இப்படி அவன் கீழ்த்தரமான முறையில் வலுச் சண்டைக்கு இழுத்தது. ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும்; மழை பலத்த காற்றுடன் பொழியத் தொடங்கியது.
ரங்கனின் முகத்தைக் கூடப் பாராதவனாகக் கிருஷ்ணன் மணிக்கல்லட்டிப் பக்கமே ஓடலானான். அவன் மணிக்கல்லட்டி வீட்டில் சிற்றப்பன், அத்தை முதலானோரைப் பார்க்கவே அப்போது புறப்பட்டிருந்தான். அலுவல்கள் நிறைந்த அவனுடைய வாழ்விலே தொழில் துறை வெற்றியும், குடும்ப வாழ்வின் பரிபூரண நிறைவும் கூடி, என்றோ உள்ளத்தில் பூத்திருந்த காதல் மறைந்து மேடிட்ட கனவாகி விட்டது உண்மை. ஆனால் எப்போதேனும், ஏமாற்றத்தில் உருவில் வறண்டு தேய்ந்த பாருவைக் காண நேர்ந்தால், அவனுக்குத் துன்பம் எழாமல் இல்லை. அதிருஷ்ட தேவதை, அந்தப் பேதையின் பக்கம் வஞ்சமல்லவோ செய்து விட்டாள்? அவன் வரைக்கும் கனவாகிவிட்ட நினைவை அவள் பக்கம் ஆறவொட்டாமல் தோண்டித் தோண்டிப் புண்ணாக்கிக் கொள்ளும் நிலைக்கல்லவோ ஆக்கிவிட்டாள்?
ருக்மிணியிடம் நினைவு மூட்டி கார் அனுப்பி, அவளையும் குழந்தைகளையும் அவன் ஒத்தைக்கு அழைத்து வரச் சொன்னது உண்மையே. ருக்மிணிக்குத் தன் கணவனுடைய செல்வாக்கையும் வன்மைகளையும், படித்து நாகரிகமடைந்த தன் சினேகிதிகளைப் பற்றிய பெருமைகளையும் கிராமத்தார் வந்து காண்பதில் தனியான பெருமிதமும் மகிழ்ச்சியும் உண்டு. அது தவிர, அவன் உள்ளத்தில் மாசான எண்ணமோ பொறாமையோ ஏதும் இல்லாததும் அவன் பாக்கியந்தான்.
பாருவை அழைத்து வரச் செய்தான். ஆனால் அவள் தன் மனைவியின் பெருமைகளைக் கேட்டுக் கொண்டு உள்ளக் கனலுடன் வேதனைப் படுகிறாள் என்பதை ஒரு நோக்கிலேயே அறிந்து கொண்ட அவன், அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள மனமில்லாதவனாக, வீட்டை விட்டே வெளியே சென்று விட்டான்.
அவள் கிராமம் திரும்பிய மறுநாளே அவன் வெளியூரிலிருந்து திரும்பி வந்தான். இரவு உணவு கொள்ள அவன், அமர்ந்த போதுதான் ருக்மிணி பாருவைப் பற்றிப் பேச்சை எடுத்தாள்.
“பாவம்! பாரு அக்காவின் மனசு சரியாக இல்லை. அக்கா, தங்கை இரண்டு பேருக்குமே ஆண்பிள்ளை இல்லை, ரங்கண்ணன்... தெரியுமா உங்களுக்கு?” என்றாள் புதிர் போடுவது போல்.
“ஏன், வேறு மணம் செய்து கொள்கிறானாமா?” என்றான் கலத்தில் உள்ள சோற்றைப் பிசையாமலே.
“பெரியவர் அந்த வழக்கம் குடும்பத்திலே கூடாது என்று நிச்சயமாக இருப்பதனால் தானே, தன் மகனுக்குக் கூட வேறு கல்யாணம் செய்யவில்லை? நானே சாவேன், என் பையனுக்குக் குழந்தையாக வருவேன் என்று சொல்லிக் கொண்டு, அவரும் கைகால் முடக்கமாய் மாசக்கணக்காய்ப் படுத்திருக்கிறார். பாரு அக்கா வாய்விட்டு எதுவும் சொல்லவில்லை. என்றாலும் மனத்தில் சந்தோஷம் இல்லை. ஏதோ பூமி விளைவு பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தாள்” என்றாள் ருக்மிணி.
பின்னும் நினைத்துக் கொண்டவளாக, “பிடிக்காத இடத்தில் கஷ்டப்படுவதை விடப் பிரிந்து போகலாம் என்று தோன்றுகிறதோ என்று நான் நினைத்தேன். வேறு ஒருத்தர் விஷயம் பேசும் போது, ‘அதிர்ஷ்டம் இல்லை’ என்று முதலிலேயே தீர்ந்து போய்விட்டதே! அதை எத்தனை தரம் பரிட்சை பார்க்க வேண்டும்?” என்றாள்.
நல்ல உரிமைகளை அழகாக அபூர்வமாக உபயோகிக்காமல் தாறுமாறாக இழுத்து சமுதாயத்தின் ஒழுக்கத்தைக் குலைக்கும் வழக்கம் சிலரிடம் இருப்பது உண்மையே. அது ரங்கனிடமா இருக்க வேண்டும்? இத்தகைய இழிவுகள் சமுதாயத்தில் எப்போது விலகும்! பாரு எந்த விதத்திலே ஆறுதல் பெறுவாள்?
வீணாக ஒரு மலரை நுகர்ந்து வீசிவிட்டு வேறு மலர் நாடும் கீழ்மகன், அதற்கு ஒரு காரணமும் காட்டுவது விந்தை? பாருவைப் போன்ற ஒரு மனைவியை அடைந்து, இரண்டு மாணிக்கங்களைப் போல் இரு பெண்களையும் அடைந்தவன், இன்னொருத்தியை வேட்பானா? அந்தக் கார்கால இரவி, அவன் கண்களை இமைக்கச் செய்யாமல், அன்பான உறவினரின் தோழமையில் மகிழ் வெய்த விடாமல் நீண்டு வளர்ந்தது.
மழை சோவென்ற ஓசையுடன் வெள்ளிக் கம்பிகளாக வானிலிருந்து இழைந்து விழுந்து கீழே ஓடிக் கொண்டிருந்தது. குழந்தைகள் மழை நீரில் காலை முக்குவதும் வீட்டுக்குள் ஓடித் தரையெல்லாம் கசமுசவென்று அழுகும் ஈரத்தை அதிகரிக்கச் செய்வதுமாக இருந்தார்கள். மூலைக்கு மூலை கசகசவென்று அழுக்குத் துணிமணிகள், குப்பைக் கூளம், ரங்கம்மை பிரசவித்துப் பதினைந்து நாட்களே ஆகியிருந்தன. துணிச்சுருளில் நெளிந்த அந்தப் பெண் குழந்தை, சற்றைக்கு ஒரு முறை துணிச்சுருளை நனைத்து, மூலையில் குவித்துக் கொண்டிருந்தது. ஈர விறகின் புகை, வீட்டுக்குள் சூழ்ந்து வெளியேற வகையின்றித் திணறிக் கொண்டிருந்தது. வீட்டு வேலையில் பாருவுக்குப் பொறுமையே குறைந்திருந்தது. இப்போது அது வசமாகப் பிடித்துக் கொண்டு விட்டது அவளை. மழை நாளில் அவள் திறந்த வெளியில் நின்று வேலை செய்வதற்கில்லை. மழைதான் ஆகட்டும், ஒரு நாளா இரண்டு நாளா? வானந்தான் பொத்துக் கொண்டதோ?
ஆனி பத்துத் தேதியில் பிடித்த மழை, புரட்டாசி பிறந்தாயிற்று; விடவில்லை. மலை முகடுகளில் கார்மேகங்கள் வந்து தங்குவது உண்டு. தனக்குத் தங்க இடம் தந்த நன்றிக்காக, மேகங்கள் மழையாகப் பொழிந்து, மலையன்னைக்கும் பசும் பட்டாடை போர்த்து மகிழ்விப்பது உண்டு. ஆனால், இந்த ஆண்டு இப்படிக் கொட்டுகிறதே! அவள் நினைவு தெரிந்து இதுபோல் நீண்ட மழை கண்டிருக்கவில்லையே! கதிரவன் எங்கேனும் ஓடி ஒளிந்து விட்டானோ? வெறிக்காற்றுக்கு அஞ்சி தலை நீட்ட மறந்திருக்கிறானோ?
இந்தப் பிரளய மழையில், அவளுடைய இளம் பயிர்கள் எப்படி இருக்கின்றனவோ! அவள் விளை நிலத்தின் பக்கம் சென்று ஒரு மாசம் ஆகிவிட்டது. ரங்கம்மை பிரசவம், வீட்டுவேலை, எதிர் வீட்டில் மாமன் உடல் நலிவு, மழை எல்லாம் கவிழ்ந்து அவளை வீட்டோடு வளைத்து விட்டன. தூற்றலுடன் கிழங்கு வயலில் களை எடுத்து விட்டு வந்தவள் தான். அம்மைக்கு உடம்பு சரியில்லை என்று ரங்கம்மையின் மகள் வந்துதான் அழைத்தாள்.
ஒரு மாசம் கணவன் வீட்டுக்கே வராமல் அவளை மறந்திருந்த நாட்களிலெல்லாங் கூட அவள் இப்படி அமைதி இழந்ததில்லை. அவளுக்கு மண்ணைத் தவிர உலகில் வேறு மகிழ்ச்சி தரக்கூடிய இன்பம் இரண்டு மக்கள் தாமே? மண் உயிர் கொடுக்கிறது; உரம் கொடுக்கிறது; உணவு கொடுக்கிறது. ஒரு நாள் அந்த மண் தான் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறது. வாழ்விலே, மண்ணைப் பற்றிய நினைவு எழாமல், அவள் மனம் பட்டாம்பூச்சி போல் பறந்து திரிந்து வர இளமை மோகத்திலே புதுக்காதலின் கவர்ச்சியிலே கனவு வலை பின்னியதுண்டு. அந்த வலையிலே, தெய்வ மைதானத்து மொட்டைக்கல் விழுந்து சின்னபின்னப்படுத்திய பின், அவள் உள்ளம் மண்ணின் ஆசையில் படிந்தது.
அருமை மக்களைப் போல் அவள் பேணிய பயிர்கள் கருணையற்ற மழையில் எப்படிக் கலங்கிச் சாய்ந்திருக்குமோ? ரங்கம்மையின் கணவன் கோணியை மடித்துத் தலையில் போட்டுக் கொண்டு தினமும் ஒரு நடை போய் வருவான். அவனிடம் தினமும் அவள் கேட்கும் கேள்வி இதுதான்: “பயிர் எப்படி இருக்கிறது அண்ணா?”
“பத்திரமாயிருக்கிறது அண்ணி அண்ணன் ஆயிரம் ஆயிரமாய்க் குத்தகை எடுத்துப் போட்ட கிழங்கு, உன் கிழங்குக்கு ஈடு வராது” என்று அவன் சிரிப்பான்.
அடுத்து, வாயிலில் நிற்கையிலோ, ஜோகி ரங்கியின் பையனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருகையிலோ, அவள் அதையே கேட்பாள். மாமனைப் பற்றிய விசாரணை கூட அடுத்தபடித்தான்.
“அண்ணிக்கு இதே கவலை” என்று ரங்கம்மையின் கணவன் அன்று குறுக்கிட்டு நகைத்தான்.
“ஜோகியண்ணனுக்கும் பயிர் தான் பிள்ளைகள். இந்த அண்ணிக்கும் பயிர்கள் அப்படியே” என்று ரங்கம்மையும் சிரித்தாள்.
ஜோகிக்கு அவள் பேச்சு சற்றே வேதனை அளித்தாலும், விட்டுக் கொடுத்துக் கொள்ளாமல், “ஆமாம், அதற்கென்ன? பயிரைப் பிள்ளைகளாக வைத்துக் கொள்வதில் ஒரு தப்பும் இல்லை. மண் தாய்; பயிர் பிள்ளைகள்” என்றான்.
பிறகு, பாரு கேட்ட கேள்விக்கு, “கால்வாய் கரைந்து தண்ணீர் தேங்கியிருந்தது. மண்ணை வெட்டிப் போட்டேன். மழையும் தண்ணீரும் அதிகந்தான்; என்ன ஆகுமோ?” என்றாள் கவலையுடன்.
கணவனின் லாபநஷ்டம் பாருவை என்றுமே பாதித்ததில்லை. உண்மையாக உழைத்து எல்லாரும் நலம்பெற நிறைவுடன் வாழ விரும்பும் அந்தச் சகோதரனின் கவலை அவளை வேதனை கொள்ளச் செய்தது.
“ஜோகியண்ணா, உங்கள் மூன்று ஏக்கரில் தேயிலை போடக்கூடாதா? மழை எத்தனை பெய்தாலும் பணமாகக் கொடுக்குமே?” என்றாள் ரங்கம்மை.
“தேயிலை வைக்க முதலில் செலவு ஆகும். பிறகு மூன்று நான்கு வருஷங்கள் அது பலன் கொடுக்கும் வரையில் நாம என்ன செய்வோம்? மேலும், தேயிலையும் காபியும் பணந்தானே கொடுக்கும் ரங்கம்மா? ராகியும் கோதுமையும் கிழங்கும் பசிக்கு உணவாகுமே!” என்றான் ஜோகி.
“பணமில்லாமல் இப்போதெல்லாம் முடிகிறதோ? கிருஷ்ணண்ணன் வீடு பெரிய வீடாக ஆனதே டீ போட்டதனால் தானே?” என்றாள் ரங்கம்மை. ஜோகிக்கு அவள் விவாதம் பிடிக்கவில்லை.
“நான் வருகிறேன், அண்ணி” என்று நடந்தான்.
வீட்டிலே அவன் கண்ட காட்சி மெய்தானா? அங்கே அமர்ந்து உளம் கரையத் தந்தையின் முன் கண்ணீர் வடிப்பவன் உண்மையில் ரங்கன் தானா? கோட்டும் வேட்டியும் நனைய, மழையில் அலையக்குலைய எதற்காக ஓடி வந்தான்?
“நான் பண்ணிய பாவத்துக்கெல்லாம் எனக்குத் தண்டனை சிற்றப்பா, தண்டனை. நீங்கள் சொன்ன வார்த்தைகளெல்லாம் மறந்து போனேன். எனக்குத் தண்டனை கிடைத்து விட்டது, சிற்றப்பா ஐயோ? எப்படி இருந்த உடம்பு, எப்படி ஆனீர்கள்! சொந்தப் பையனுக்கு மேல் என்னை நினைத்து, நீங்கள் செய்ததெல்லாம் மறந்து ஓடினேனே! எனக்கு மன்னிப்பு உண்டா சிற்றப்பா, உங்களிடம்?”
ஜோகி அயர்ந்து நின்றான். பின்னே கிரிஜையும் அம்மையுங் கூடச் சிலையாக நின்றனர்.
லிங்கையாவின் கண்களில் நீர் வடிந்தது.
“ரூபாய் இரண்டாயிரம் மண்ணாய்ப் போச்சு. முளைத்திருந்த கிழங்குகளிலெல்லாம் என் மனத்திலுள்ள கறைபோல் கறைபடிந்த நோய் விழுந்திருந்தது. உங்களுடைய நல்ல உபதேசங்களை யெல்லாம் என் நாசபுத்தி கொண்டு போனாற் போல், நல்ல கிழங்குகளை எல்லாம் எலியும் பன்றியும் தோண்டிக் கொண்டு போயின. ‘துரை போல் திரிந்தாயே படு கஷ்டம்!’ என்று தேவர் சோதனை செய்துவிட்டார் சிற்றப்பா.”
ரங்கனின் அழுகை உண்மையிலே அழுகைதானா?
ஜோகியினால், அவனும் அம்மாதிரி அழக்கூடும் என்று எண்ணக்கூட முடியவில்லை. தந்திரங்களில் திளைக்கும் அவன் உண்மையில் கவிழ்ந்து விட்டானா? கையிலே பத்தாயிரம் புரள்வது போல் உடுக்கவும் உல்லாசமாக நடக்கவும் தெரிந்த அவன் உண்மையிலே வீழ்ச்சி அடைந்து விட்டானா?
லிங்கையாவின் உணர்ச்சி செறிந்த தொண்டையிலிருந்து, “ரங்கா!” என்ற குரல் உடைந்தது. அந்தக் கணம் ரங்கன் சிற்றப்பனின் மார்பிலே தலையைச் சாய்த்துக் கொண்டு விம்மினான்.
“அப்பனும் அம்மையுமாய் இருந்தீர்கள் சிற்றப்பா, ஒருநாள், இரவில் பரணில் பட்டினியுடன் படுத்திருக்கையில் அழைத்து வந்து சோறு போட்டீர்களே, புத்தி கூறினீர்களே! சிற்றப்பா, நான் என்ன சொல்வேன்? கடனாளியாக ஓடி வந்தேனே, என்னை மன்னிப்பீர்களா!”
“போனால் போகிறதடா தம்பி, போனால் போகிறது. அந்தக் கிழங்குடன் உன்னைப் பிடித்த நோவெல்லாம் போகட்டும். உண்மையில் கிழங்கு போனதில் எனக்குச் சங்கடம் இல்லை. சந்தோஷம், சந்தோஷம், ரங்கா!”
“சிற்றப்பா, நீங்கள் தெய்வம். ஐயோ, உங்கள் அருமை தெரியாமல் நான் இவ்வளவு நாள் இருந்தேனே!”
“அன்றைக்குப் பணத்துடன் பகட்டான நீ என் முன் வந்தாய். என் மனம் கொதித்தது. நீ நேர்மையும் நியாயமுமாக நடக்கவில்லை என்று எனக்கு உன் கண்களும் பார்வையுமே தெரிவித்தன. ‘இந்தப் பையனைத் தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தேனே’ என்று மனம் பொங்கி வந்தது. உன்னை அடித்தேன். இன்றைக்கு ஏழையாக நீ வந்தாலும், என் மனம் நிறைந்து சந்தோஷப்படுகிறது தம்பி, கையால் உழைத்து நேர்மையாகப் பிழைப்பதுதான் தேவர் விரும்பும் பிழைப்பு. ரங்கா, கட்டிக் கொண்ட பெண் மனம் நோகாமல் இருக்க வாழ்வது தான் வாழ்க்கை.”
ஆவேசம் வந்தாற் போல் அவர் மூச்சு முட்டப் பேசினார்.
“படுபாவிப் பயல், நோட்டீஸைக் கொடுத்து வேறு நெருக்குகிறான். என் மானம் கோர்ட்டுப் படி ஏறுமட்டும் வந்த பின்புதான் எனக்குப் புத்தி வருகிறது. முந்நூறு ரூபாய்க் கடன் அவனுக்கு யார் கொடுப்பார்கள் சிற்றப்பா? எனக்கு யார் இருக்கிறார்கள், சிற்றப்பா? உங்களைத் தவிர யாரிடம் சொல்லி முறையிட எனக்கு முகம் இருக்கிறது?” அவன் அழுகை எல்லோரையுமே உருக்கவல்லதாக இருந்தது.
“அழாதே, ரங்கா, அழாதே! ரங்கன் மனம் மாறி வருவான் என்று தான் நான் இந்த ஆறு மாசமாகப் படுக்கையில் இருந்தும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் நான் ‘வீரராய பணம்’ விழுங்கியிருந்தால் கூடப் பிழைத்திருப்பேன். இனிமேல் நான் நிம்மதியாகத் தேவருலகம் செல்வேன். காசும் பணமும் பெரிதில்லை. கையால் விதைத்து, உறவோடு, விருந்தோடு உண்டு வாழ்வதே வாழ்க்கை. ஜோகி!”
“ஐயா!” என்று ஓரெட்டு முன் நகர்ந்தான் ஜோகி.
“அண்ணன் வீட்டுடன் வந்துவிட்டான்; இனிமேல், ஒரு குறைவும் இல்லை. பால்மனையில் என் பை வைத்திருக்கிறேன், எடுத்து வா” என்றார்.
ஜோகியின் முகத்தை இருள் கவ்வியது.
மாதி இடி விழுந்தவள் போல் ஆனாள்: “என்ன இது நியாயமா இதெல்லாம்?” என்றாள்.
ஓர் அவசரத்துக்காக, அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் அது. இருநூற்றைம்பது ரூபாய் உண்டு. அதையும் பறித்துச் செல்லவா வந்திருக்கிறான்? மாதியினால் ஒப்ப முடியவில்லை.
“குறுக்கே தடுக்காதே மாதி. நல்ல காலம் வரும்போது, கொஞ்சம் செலவு இருக்கும். குறும்பர் மந்திரத்துக்குப் பயந்து கப்பம் போடுவதுபோல, இதுவும் உன் கணவன் மனம் நிம்மதியுடன் போவதை நீ விரும்பவில்லையா?” என்றார் லிங்கையா.
“இப்படிப் பேசிப் பேசித்தானே என்னை அடியோடு அடக்குவீர்கள்?” கண்ணீர் தளும்ப முணுமுணுத்துக் கொண்டு உள் மனைக்கு நகர்ந்தாள். உடனே திரும்பியவள் சட்டென்று, “அவர்கள் பூமியை விற்றோ அடமானம் வைத்தோ வாங்கட்டுமே!” என்றாள்.
லிங்கையாவின் விழிகள் அசைவற்று நின்றன. உள்ளம் படபடத்துப் பலவீனம் முகத்தில் காட்டியது.
“என்ன பேச்சுப் பேசுகிறாய்? குழந்தைகளுடன் ரங்கை சாப்பிடும் பூமியைப் பிடுங்குவதா? ஒரு சதுரம், ஆசையாக, பாரு தாயாக, பிள்ளையாக நினைக்கும் மண்ணைப் பிடுங்கலாமா? இந்தப் புத்தி உனக்கு எப்படி வந்தது?”
ஜோகி பையை எடுத்து வந்தான்.
லிங்கையா ஒவ்வொரு பணமாக எண்ணினார். தலைப்பக்கம் வைத்துவிட்டு, “ரங்கா, இன்று இரு இங்கே; நாளைக்குப் போகலாம் நீ” என்றார். இரவு, “மாதி, என் வட்டிலை எடுத்து வை. என் பையன்களுடன் நான் இன்று உட்கார்ந்து உண்ணப் போகிறேன்” என்றார் அவர்.
மாதியின் மனத்தில் இன்னதென்று விவரிக்க இயலாத பீதி உண்டாயிற்று; “வேண்டாமே?” என்றாள்.
கிரிஜையை அழைத்து பாருவை அழைத்து வரப் பணித்தார். “மகனே இங்கு வா, மகன் வீட்டோடு வந்து விட்டான். இனி உனக்கு ஒரு குறையும் இல்லை” என்று ஆசி மொழிந்தார்.
பாரு அவர் கண்களில் தெரிந்த அசாதாரண ஒளியைக் கண்டு கலங்கி நின்றாள். அந்த நாடகக் காட்சியில், அவரே உயிர்ப் பாத்திரமாக அன்றிரவு பேசினார்.
மறுநாள் காலையில், ரங்கன் பணத்தை எண்ணிப் பெற்றுக் கொண்டான். “பணத்தை விட்டெறிந்து விட்டு வந்து விடுகிறேன், சிற்றப்பா. நான் கோர்ட்டு ஏறாமல் காப்பாற்றிய தெய்வம் நீங்கள்” என்று விடைபெற நின்றான்.
சிற்றப்பனின் கண்கள் ஒளிர்ந்தன; இருதயம் மலர்ந்திருந்தது. ஆசி கூறி அனுப்பினார்.
வானம் கனத்து, மழையுமின்றி வெயிலுமின்றிச் சோகத்திரை விரித்திருந்தது.
மாதியும் கிரிஜையும் ஜோகியும் ரங்கன் செல்வதை வாயிலில் நின்று பார்த்தார்கள். எட்ட எட்ட விலகி, வெள்ளைப் புள்ளியாகப் பாதையில் சென்று, சரிவில் இறங்குகையில், பள்ளத்திலே வடக்கிலிருந்து வந்த மேகப் புகை குவிந்தது, அவனை விழுங்கியது.
ஏதோ கலி புருஷன் தன் கூலியைப் பெற்றுக் கொண்டு செல்வதைப் போன்ற உணர்வுடன், அவர்கள் திரும்பினார்கள்.
ஜோகி, தந்தை கண்ணயர்வதைக் கண்டவனாக, சாக்கைப் போட்டுக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் விளைநிலத்தை நோக்கிக் கிளம்பினான். கிரிஜையும் மாதியும் வீட்டுப் பின்புறம் இருந்தனர்.
சற்றைக்கெல்லாம், “மாதி?” என்ற ஈனசுரம் வந்தாற் போல் மாதிக்குக் கேட்டது.
பரபரப்புடன் அவள் நனைத்த துணியைப் போட்டு விட்டு வருமுன், அந்த மூச்சு நின்று விட்டது.
மாதிக்கு அவர் தன்னிடம் விடைபெற அழைத்த குரல் அது என்பது புரியவில்லை. எப்படிப் புரியும்?
அந்த முகம் பறித்தெடுத்த மலர் போல் நிமிர்ந்திருந்தது. கண்ணிதழ்கள் உறக்கத்தில் ஆழ்ந்தவை போல் மூடியிருந்தன. உதடுகளில் உள்ளடக்கிய புன்னகை வெளியே பீறிட்டு முண்டி நிற்பது போன்ற நிறைந்த அழகு; முகத்திலே என்றும் இல்லாத தெளிவு; அமைதி; சிமிழில் இயங்கிய உயிர்க்காற்றுப் பறந்து செல்ல விடுதலை தந்த நித்திய வடிவமாக உடல் கிடந்தது.
“என்ன, கூப்பிட்டீர்களே? அதற்குள்ளே தூக்கமா? என்னங்க?” என்றவள் வலக்கையைத் தூக்கினாள்; முகத்தை அசைத்தாள் மெல்ல.
தீயைத் தொட்டாற் போலத் திடுக்கிட்டாள். காம்பிலிருந்து ஒடிந்த மலர் போல் முகம் தொய்ந்திருந்தது. பரபரப்புடன் நெஞ்சைத் தொட்டாள்; மூக்கருகில் கை வைத்தாள். கையைக் காலைத் தொட்டுப் பிடித்துப் பார்த்தாள்.
அடிவயிற்றிலிருந்து பெருங்குரல், கக்கலும் கரைசலுமாகப் பீறி வந்தது; “ஜோகி! கிரி! ஐயோ!”
அவளுடைய அலறலில் கிரிஜை முறத்துச் சாமையை வைத்துவிட்டு ஓடி வந்தாள். “அத்தை! என்ன அத்தை!”
பரபரக்க அவர் உள்ளங்காலைத் தேய்த்த மாதி, “கிரி, ஜோகியைக் கூப்பிடு. பெரியப்பனை, எல்லோரையும் கூப்பிடு அம்மா.”
குரல் அழுகைத் தழுதழுப்பில் சோகச் சுமை தாங்காமல் அலைந்தது. பெரியவரின் மூக்கருகில் அவள் பிய்த்து வைத்த நூல் உண்மையில் அவர் மூச்சில் ஆடுகிறதா? அல்லது அவளுடைய பரபரத்த மூச்சில் ஆடுகிறதா? பேதைக்கு ஏதும் புரியவில்லை.
திமுதிமுவென்று செய்தி கேட்டு, அவர் படுத்திருந்த கட்டிலண்டை எல்லோரும் கூடிக் குழுமி விட்டனர்.
“என்ன அம்மே, சட்டென்று ‘வீரராய பணம்’ கொண்டு வாருங்கள்” என்று கூவிக் கொண்டே தமையன் பால்மனைக்குச் சென்று பாலெடுத்து வந்தான். ரங்கம்மாதான் ஓடி, நாலணாப் பெறுமானம் உள்ள அந்தப் பொன் துண்டை, நெய்யில் தோய்த்து எடுத்து வந்தாள். அண்ணனின் கண்கள் தளும்பின.
“உனக்கு இது செய்யவா தம்பி, நான் இருக்கிறேன்?” என்று முட்டிய உணர்ச்சியுடன் அவர் வாயை நீக்கிப் பொன் துண்டை இட்டுப் பாலை ஊற்றினார்.
பொன் துண்டு அந்த நாவில் ஒட்டிப் பாலோடு இறங்கிய காட்சியில், “ஐயோ!” என்று முகத்தை மூடிக் கொண்டு அம்மை அலறினாள். ஜோகி அப்போதுதான் நீரும் சேறுமாய்க் காகை வந்து சொன்ன செய்தியில் ஓடி வந்தான்.
‘ஏதோ மாதிரி இருக்கிறது’ என்ற செய்தி கேட்டுத் தானே அலையக் குலைய ஓடி வந்தான்? ‘வீரராய பணம்’ போட்டுப் பால் ஊற்றும் காட்சியில், “அப்பா” என்று கதறியவனாகப் பாய்ந்தான்.
கண்ணீர் சிந்தப் பெரியப்பன், “அழாதே ஜோகி” என்று கையமர்த்தினார்.
கரியமல்லர் அவனைப் பரிவோடு பற்றி, “அழாதே ஜோகி, உன் ஐயன் நல்ல கதிக்கு, ஈசன் திருவடிக்குத்தான் போயிருக்கிறார்” என்றார் துயரத்தை விழுங்கிக் கொண்டு.
ஆண்களும் பெண்களும் குஞ்சுகளும் குழந்தைகளும் அந்தச் சிறு வாயிலில் நுழைவதும் அருகில் வந்து கண்ணீர் தளும்பக் கால் பக்கம் வந்து நின்று, ‘எப்படி இருந்த மனிதர்! முகத்திலே என்ன களை! என்ன ஒளி! தெய்வம்!’ என்று வணங்கிப் போவதுமாக இருந்தார்கள்.
காலையில் ரங்கன் வந்து பணம் பெற்றுப் போனது வேறு ஊரறிந்த ரகசியமாகக் கொல்லென்று ஆகிவிட்டது.
“தம் சொந்த மகனுக்கு மேல் அவன் மீது வாஞ்சை. கடைசியில் ஒரு வேளை அவனைப் பார்த்துப் பேசி அவனுடன் உண்ணவே உயிர் வைத்திருந்தார் போலும்?” என்றெல்லாம் பல விதங்களில் பேச்செழுந்தன.
பாரு எல்லாவற்றையும் பார்த்தவளாகச் சிலைபோல் மூலையில் நின்றிருந்தாள். ஆயிரத்தில் புரளுவதாக வேஷம் போடும் கணவனுக்கு அந்தப் பெரியவர் பணம் தந்திருக்கிறார் என்ற செய்தியில், இறந்து கிடக்கும் அவர் மீது ஆத்திரந்தான் அவளுக்கு மாளாமல் பொங்கி வந்தது.
அவளுடைய வாழ்வின் இனிமையைக் குலைக்கவே திட்டமிட்டுச் செயல்புரிந்த வினைவடிவமோ? அவளுக்கு என்றேனும் அனுதாபம் காட்டினாரா? அனுதாபம் என்ன இருக்கிறது? அன்று குறும்பனின் வேருக்கு மேல் என்ன வினைகள் புரிந்து அந்த உருண்டைக் கல்லை அந்த மகன் கைகளில் சிக்க வைத்தாரோ? பால் வழிந்த உதடுகள் மூடியிருந்தாலும் பொங்கி நிற்கும் சிரிப்பைப் பார்! ஒரு பேதைப் பெண்ணின் இன்பத்தில் துன்பத்தைப் புகுத்தியது உமக்கு வெற்றியா? அன்று கூட இந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்திருப்பேனே? வெல்லத்தைப் பூசிக் கொடுக்கும் மருந்து உருண்டை போல், சர்க்கரைப் பேச்சில் என்ன என்னவோ திணித்துப் பேசினீரே? என்னை அறிவிலியாக ஆக்கினீரே?
நெஞ்சு எரிய எரிய அவள் உணர்ச்சி அழுகையாகப் பொங்கி வந்தது. அதே அறையில் தான் அவர் அவளுக்கு அன்று உபதேசம் செய்தார். “விரும்பிய பெண்ணை அவன் கைப்பற்றினால், நெறியென்னும் நேர்க்கோட்டில் நடப்பான்; அவனுக்கு ஏமாற்றம் தராதே பெண்ணே, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று கூறி வஞ்சனை புரிந்தார். அவள் நெஞ்சை இளகவைத்து, அதில் அவர் தமக்கு வேண்டிய உருவத்தைச் சமைத்துக் கொண்டார். ஆனால் அது நிலைத்ததா? அவருடைய மைந்தனின் அழகான இல்லத்தில் சூழ்ந்த வெம்மையிலே, அவர் போதனைகளால் மாற்றிய உருவம் அழிந்து நீராயிற்று. அவளுடைய அன்புக்குரிய மக்கள் இரு பெண்களே. அவர்களின் வளர்ச்சிக்கு உழைப்பது ஒன்றே அவள் வாழ்வில் உள்ள குறி.
இத்தனைக்கும் காரணமானவர் யார்? யார்?
ரங்கம்மைக்கு என்ன சிறப்பு உண்டு? ஒரு முள் பிடிக்க வகையில்லை. அவளைக் கண்ணிமையில் மூடிக் காக்கிறான், அந்தக் கணவன்.
கிரிஜை, மெலிந்த சிறு உடல்; கறுப்பு முகம், அவள் காய்க்காமலே நின்றுங்கூட, அந்தக் கணவனின் அன்பணைப்புக்கு ஏது குறைவு? ஏன்? நீர் சாகும் வரையிலும் அந்த மாதம்மா என்ற அன்புக்கு உரியவளின் ஆதரவில் இருக்க வேண்டினீரே? ஓர் இளம் பெண்ணின் மனசைக் குலைத்தீரே?
இப்படியெல்லாம் அவளுடைய மனமாகிய மடையின் கதவு, அவர் முகமண்டலத்தின் நிறைவிலே மோதப்பட்டுத் திறந்து கொள்ளக் கொட்டித் தீர்த்தது.
மழை முழுவதும் நின்று, இருள் கும்மென்று சூழ்ந்து வர, ஈரமண்ணின் வாடையும் குளிர் காற்றுமாக, அந்தத் துயரச் சூழ்நிலைக்கு இசைந்துவிட்டது. விளக்குகளை ஏற்றி விட்டு, வாயிற்புறம் தொரியனை யார் யாருக்கெல்லாம் செய்தி சொல்ல அனுப்ப வேண்டும் என்பதைக் குறித்துப் பெரியப்பன் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் செவ்வாய்க்கிழமை. தகனக்கிரியைகள் செய்வதற்கு அது ஏற்காத நாள். எனவே ஒரு நாள் தள்ளி, புதனன்று சடங்குகளைச் செய்யத் தீர்மானித்தார்கள். அதன்படியே முட்டுக்கோத்தர்களுக்குங் கூடச் செய்தி அனுப்பப்பட்டது. ஒத்தைக்குச் சென்று விட்ட ரங்கனுக்கும் மறுநாள் செய்தி சுமந்து செல்ல, ரங்கம்மையின் கணவன் தயாரானான்.
பெருகி வரும் கும்பலுக்குச் சாப்பாடு வேண்டாமா? ஒரு புறம் சமையல் தடபுடலாக நிகழத் தொடங்கியது. வீட்டுத் தலைவன் மறைய, கீழ்க்கன்றும் அவனுக்கு உரியவளும் இருளில் மூழ்கிக் கிடந்தனர். தானியமும் மற்றொன்றும் யாரை யார் கேட்பது? ரங்கம்மா பணப் பெட்டியைத் திறந்து, இருந்த சேமிப்பில் கொஞ்சம் எடுத்துத் தந்தாள். வேறு எங்கிருந்தெல்லாமோ கிழங்கும் தானியங்களும் வந்து நிறைந்தன. கரியமல்லர் வீட்டிலிருந்து, சத்தம் போட்டுக் கொண்டு எரியும் காந்த விளக்கு வந்து ஒளி பரப்பியது. பெண்கள் கூடிக்கூடி வேலைகளில் ஈடுபட்ட வண்ணம் பேசினார்கள். அந்த அளவிலே அது சாவு நிகழ்ந்த வீடாக இல்லை.
சிற்றப்பனிடம் பணம் பெற்று, ஒத்தை திரும்பிய ரங்கன், மீறி நின்ற கடன்களைச் சில்லறையாகத் தீர்த்தான். மீதியிருந்த பூமியிலும் கிழங்கைத் தோண்டி விட வேண்டும் என்று ஆட்களை அழைக்கச் சென்றவனுடைய கண்களை புதிதாக வந்திருந்த படக்காட்சிக் கொட்டகையில் ஒரு புதுப்பட விளம்பரம் கவர்ந்தது. அன்று செவ்வாய்க்கிழமைச் சந்தை நாள் வேறு. கிழங்கை மறுநாள் தோண்டிக் கொள்ளலாம். வெயிலும் வந்துவிடும் என்ற எண்ணத்தில், சந்தைப் பக்கமும், படக்காட்சிக் கொட்டகையிலும் பொழுதைக் கழித்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குமேல் ரங்கன் வண்டு சோலை வீட்டுக்குத் திரும்பினான்.
வாயிற்கதவை அவன் திறக்குமுன், வால்பேரி மரத்தடியில் இருளனோ, பேயோ என்று இரவில் அஞ்சும் வண்ணம் குட்டையான உருவம் ஒன்று தலையோடு கால் போர்த்துக் கொண்டு நின்றது.
ரங்கன் பேய்க்கும் அஞ்சான்; பிசாசுக்கும் அஞ்சான். “யாரது?” என்றான்.
“நா... நான் தான் ரங்கண்ணா; ரங்கம்மா புருஷன்” என்றான். பூட்டில் நுழைந்த சாவியைத் திருப்பாமலே ரங்கன் சற்று எரிச்சலுடன், “எங்கே வந்தாய்?” என்றான்.
“சிற்றப்பன் ஜோகியின் ஐயன் போய்விட்டார். சாவுச் செலவுக்குக் கையில் பணமில்லை. உன்னைத்தான் நம்பிக்கையோடு அழைத்துவரச் சொன்னாங்க சின்னம்மை” என்றான் ரங்கம்மையின் கணவன்.
காலமெல்லாம் சிறையில் இருந்த பின் கிடைக்கக் கூடிய விடுதலையின் ஆனந்தத்துக்கு வேறு எதை உவமையாகக் கூறுமுடியும்? கனத்த இருளின் துயரப் போர்வையைக் கிழித்துக் கொண்டு தினம் தினம் உலகை இருட் சிறையிலிருந்து விடுதலை செய்ய வரும் இளம்பரிதியைக் காணுந்தோறும் உலகு அடையும் இன்ப மகிழ்ச்சிக்கு எல்லை உண்டோ? கூட்டுச் சிறையிலிருந்து சிறகு முளைத்துப் பறந்து செல்கையில் பறவைக் குஞ்சு பெறும் ஆனந்தத்தை எப்படி விவரிக்க இயலும்? பனிமுகைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் மணம், இதழ்கள் அகன்றதும் இளங்காற்றுச் சேர்த்து இன்ப லயத்துடன் இசைக்கும் மோன கீதங்களின் இனிமையும் நயமும் விள்ளற்குரியதாமோ?
உடலாகிய கூட்டுக்குள் சிறைப்பட்டு, மண்ணுலகில் பிறவி எடுத்து, அந்தப் பிறவிக்குரிய பல்வேறு தளைகளுக்குள் கட்டுண்டு, வாழ்வுடன் போராடி, ஓர் உயிர் பறவை எய்தும் விடுதலை சாதாரண நிகழ்ச்சியாகுமோ? அதுவும் ஜோகியின் தந்தை, காலமெல்லாம் வேறு எந்த உயிருக்கும் தீங்கு நினையாமல், உண்மை வழி நடந்தவர். விடுதலை எய்திய உயிர்ப்புள், எல்லையற்ற பரம்பொருளுடன் ஒன்றறக் கலந்துவிடப் பாதை தேடிப் போவதாக நம்பும் அந்த மக்களுக்குச் சீலமும் ஒழுக்கமுமாக வாழ்ந்த பெரியவர்களின் மரணம், பெருமகிழ்வுக்கு உரிய கோலாகலங்களுடன் கொண்டாடக் கூடிய வைபவமாக வழி வழி வந்ததில் ஏதும் விந்தை உண்டோ?
மனிதன் தன்னை மறந்த ஆனந்தத்தை எப்படிக் காட்டுகிறான்? அவனையும் அறியாமல் இசை பிறக்கிறது. கைகளையும் கால்களையும் அசைத்துத் தன்னை அறியாமலே ஆனந்தத்தை வெளியிடுகிறான். அந்த மலை மக்களின் இயற்கையோடு பொருந்திய வாழ்விலே இசைக்கும் நடனத்துக்கும் நிறைந்த பங்கு உண்டு. வாழ்வில் நேரும் முக்கியமான நிகழ்ச்சியான மரணத்துக்கு, விடுதலை அடைந்த உயிர்ப்பறவை, இருளாம் நரகினைக் கடந்து, பரம்பொருளைச் சேரச் செல்வதான இறுதி யாத்திரையான நிகழ்ச்சிக்கு, இசையும் கூத்தும் இன்றியமையாதவையாக இருந்தது, தொன்று தொட்டு வந்த வழக்கம்.
நீலமலையைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள் பிரிவினர் வெவ்வேறு வகையினராக மண்ணில் சொந்தம் கொண்டாடி ஊன்றி வாழ்ந்தாலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்விலே உதவிக் கொள்ளும் பிரிவினராக மேன்மையுற வாழ்ந்து வந்தது ஒரு சிறப்பாகும். மலையில் வாழும் ஏனைய பிரிவினருக்குத் தம் கைத்திறத்தாலே வாழ்வுக்கு வேண்டிய கலங்கள், ஆயுதங்கள் முதலிய உபகரணங்களைச் செய்து தந்தும், பிரதியாக அவர்களிடமிருந்து தானியங்கள் பெற்றும் வாழும் ‘கோத்தர்’ என்ற பிரிவினர், குழலும் தாரையும் மத்தளமும் தப்பட்டையும் பறையும் கொண்டு, இசையை எழுப்பும் நற்கலையையும் அறிந்தவராவர். படக மக்களுடைய வாழ்வுக்கும் சாவுக்கும், அவர்கள் மங்கல ஓசை முழங்க வருவது இன்றியமையாததாகக் கருதப்பட்டு வந்தது.
எனவே, தொரியமல்லனின் மகன் பெட்டன், அந்தப் பகுதி ஊர்களுக்குப் பொதுவாக இருந்த கோத்தமலைக் கோத்தருக்குச் செய்தி தெரிவித்துவிட்டு வந்தான்.
செவ்வாயன்றே இரவுக்கிரவாக, அந்தப் பெரியவரின் புனித உடலைத் தாங்க, ஏழடுக்குச் சப்பரம் தயாரிக்க, கழிகளும் கம்புகளும் குச்சிகளும் சேகரித்து விட்டார்கள். பெரியவரின் இறுதிச் சடங்குகள் சிறப்பாகச் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், அங்கு எவருக்குமே வேற்றுமை இருக்கவில்லை. முக்கியமாக, ரங்கனுக்குச் செய்தி அனுப்பியவர் பெரியவர் மாதன் தாம். தம் மகனின் குணா குணங்களை அவர் என்றுமே புகுந்து பார்த்தவர் அல்லர். ஏதோ முடைக்கு மகன் சிற்றப்பனிடம் பணம் வாங்கிச் சென்றிருந்தாலும், அவன் சர்வ வல்லமை பொருந்தியவன் என்பது தந்தையின் நம்பிக்கை.
திங்கட்கிழமையன்றே ரங்கம்மையின் புருஷன் மைத்துனனைப் பணத்துடன் அழைத்து வரச் சென்றானே? ஏன் இன்னும் வரவில்லை?
தமையனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நடனமாடுவதில் வல்லவரான அவர் எத்தனையோ வைபவங்களில் பங்கெடுத்திருக்கிறார். அன்று, அவருடன் பிறந்த தம்பி, தமையனின் இசையில் மகுடிக்குக் கட்டுப்படும் நாகமென ஒன்றி நிற்பவர், மண்ணுலக வாழ்வை நீத்திருக்கிறார். தம்மை அறியாமல் கப்பிய சோகத்தையும் மீறி, சிறப்பாக மரண வைபவத்தை நிகழ்த்த வேண்டும் என்ற சம்பிரதாயத்தை நிறைவேற்றும் குறியே அவரை ஊக்கிக் கொண்டிருந்தது. அவர் தம்பி இல்லாமல் குடும்பச் சடங்கு ஒன்றில் என்றாவது உண்மையான வேகத்துடன் இயங்கினாரென்றால், அது அன்றுதான்.
ரங்கன் வரவில்லையே? ஏழடுக்குச் சப்பரத்துக்கு வேண்டிய துணிகள், பட்டுக்கள், முதலியன எல்லாம் வாங்கி வர வேண்டுமே?
ஜோகியின் தந்தை ரங்கனுக்குச் சேமிப்புப் பணத்தைக் கூட உதவியதும், அவன் சமயத்துக்கு கூட வராமல் நிற்பதும், பலர் பலவிதம் பேச வாய்ப்பளித்தன. பாருவின் உள்ளத்தில் அவை தைக்காமல் இல்லை.
அவள் கணவன் என்றாவது குடும்பத்துக்கு உதவியிருந்தால் அல்லவோ அப்போது உதவ? அவள் தன்னிடம் நூற்றைம்பது ரூபாயை வைத்துக் கொண்டு பெரியவர் கடன் பத்திரத்தில் ஒப்புச் செய்து கரியமல்லரிடம் கை நீட்டி வாங்குவதைப் பார்த்திருப்பது முறையா? பாருவிடம் அந்தப் பணம் பல ஆண்டுகளாகச் சேர்த்த உழைப்பின் பயனாகத் தங்கியிருந்தது. பணம் அவள் எதற்குச் சேர்த்தாள்? பொன்னும் வெள்ளியும் வாங்கவோ? இல்லை.
அருவிக்கரை வளைவில், சமவெளிப்போல் பரந்த பள்ளத்தில், நல்ல கறுப்பு மண்ணாக ஓர் ஏக்கர் வாங்க வேண்டும் என்பது அவள் கனவு. மணிக்கல்லட்டிக்கு அந்தப் பள்ளத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவள் ஆசையோடு அந்த மண்ணைக் கையில் எடுத்துப் பார்ப்பாள். அத்தகைய கறுப்பு மண், அன்பு கனியும் தாயைப் போல் மடி நிறையக் கொடுக்கும் இயல்புள்ளது. கிழங்கு ஒன்று தேங்காயளவுக்கு விளையும். அந்த மண்ணின் ஈரத்தில், அந்த இடத்தில் ஓர் ஆரஞ்சு மரம் உண்டு. அது சிறு செடியாக இருந்த காலத்தில் அவள் மரகதமலைக்கு மணப்பெண்ணாக வந்தாள். அது இப்போது பழுத்துக் குலுங்குகிறது. பழத்தின் ருசியைச் சொல்லி முடியுமோ? அவள் அதை ருசித்திருக்கிறாள். தேனின் இனிமை சொட்டும் சுளைகள்! அருவிச் சோதரியும், மண்ணாம் தாயும் அந்த மரத்துப் பூவின் சுகந்தத்தையும் கனியின் இனிப்பையும் எப்படித்தான் உண்டு பண்ணுவார்களோ!
அந்தப் பூமி, கிருஷ்ணனுக்குத்தான் உடமையாக வந்திருந்தது. அவனோ, அவன் மனைவி மக்களோ, அந்தப் பூமியில் விதைத்து உறவாடப் போவதில்லை. அந்தப் பூமியை அவளுக்கு விற்பதில் அவர்களுக்கு நஷ்டமும் வரப்போவதில்லை. ஆனால், அவள் ஆசைப்பட்டுக் கேட்டதை வாங்கித் தரும் கணவனா அவளுடைய கணவன்? எந்த நிமிஷமும் அவன் இன்னொருத்தியைக் கொண்டு வரக் கூடும் என்பதை அவள் அறிந்துதானே இருந்தாள்? கையிலே அதற்குரிய தொகையைச் சேர்த்துக் கொண்டு, கிருஷ்ணனிட்ம நேராகக் கேட்டுவிடலாம் என்று மனப்பால் குடித்திருந்தவளுக்கு, அவன் மனைவி காரனுப்பி அழைத்தது, நல்ல வாய்ப்பாகவே இருந்தது. அவள் ஒத்தைக்குச் சென்றதற்கு நோக்கம் அதுதான்.
ஆனால், கிருஷ்ணன் சகஜமாக வந்து வார்த்தையாடவில்லை. ருக்மிணியின் வாய் ஓயாத பெருமைகளைக் கேட்கவும் காணவுமே சரியாக இருந்த நேரத்தில், அவளுக்குப் பூமி விஷயம் பேசவே நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருக்கவில்லை. எதுவும் கேட்டுப் பழக்கமிருக்காத அவளுக்கு, சட்டென்று அந்தக் கௌரவப்பட்ட ருக்மிணியிடம் நிலத்தைக் கேட்க வாயெழவுமில்லை.
பாரு தன் மனைக்குச் சென்று, தன் படுக்கைத் தலையணைக்குள் பத்திரமாக வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு வந்தாள். பெரிய மாமனை ஓரமாக அழைத்து அவற்றைத் தந்தாள்.
மாதன் வியப்புடன் நோக்கினார் அவளை, “ஏதம்மா, பாரு?”
அவர் கேட்கையில் குரல் தழுதழுத்தது.
பாரு பதில் ஏதும் மொழியாமல் உள்ளே மறைந்தாள்.
புதனன்று விண்மணி உச்சிக்கு ஏறுமுன், மரகத மலையின் மேல் பக்கம் வயலிலே அணியணியாக நிற்கும் நாரைக் கூட்டத்தைப் போல், தூய வெள்ளை உடைகளில் மக்கள் கூடிவிட்டார்கள். ரங்கனும் ரங்கம்மையின் கணவனுமாக உச்சிப் போதில்தான் அங்கு வந்தார்கள். தன்னை எதிர்பார்க்காமலே, சடங்குகள் நிறைவேறிக் கொண்டிருந்தது கண்டு உள்ளூற அவனுக்குச் சமாதானம் உண்டாயிற்று. என்றாலும், சிற்றப்பன் சமீபம் வந்து கண்ணீர் வடித்தான்.
“அப்பனும் அம்மையுமாக இருந்தீர்களே, சித்தப்பா! நேற்று முதல் நாள் பேசி, கிட்ட உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு, இப்படிப் போனீர்களே? நான் என்னவெல்லாம் நினைந்திருந்தேன்? நேற்று நந்தனார் ‘பயாஸ்கோப்’ பார்க்கையிலே, ஐயனை அழைத்து வந்து காண்பிக்க வேண்டும்; கண்ணால் தண்ணீரை வரப் பரவசமாவார் என்று நினைத்தேனே? சித்தப்பாவைப் பேரூர், சிதம்பரம், பவானி எல்லாம் அழைத்துப் போக வேண்டும் என்று கோட்டை கட்டினேனே?” என்றெல்லாம் பலப்பல கூறி அவன் கண்ணீர் விட்டபோது, கண்டவர் உருகினர்.
சற்றைக்கெல்லாம், ஜோகியின் ஐயனை, கட்டிலோடு வாயில்முன் கொண்டு வந்து சடங்குகளை ஆரம்பித்து விட்டார்கள். ரங்கம்மை கண்ணீருடன் தண்ணீரும் ஊற்றி, சிற்றப்பனின் பொன்னுடலைக் குளிப்பாட்டினாள். புது வேட்டியும், சட்டையும், அழகிய கோட்டும், பாகையும் வாங்கி வந்து, தமையன் தம்பியை அலங்கரித்தார். அகன்ற நெற்றியில் இரு வெள்ளி ரூபாய்களை ஒளியிட ஒட்டி வைத்தார். அலங்கரிக்கப் பெற்ற இரதத்தில் அவரைப் படுக்க வைத்தார்கள்.
அவர் காலமெல்லாம் வழக்கமாக முள்ளும் மண்வெட்டியும் வாளும் செய்து தந்த முட்டுக்கோத்தன், அவருடைய தயாள குணங்களைக் கூறி அழுத வண்ணம், இறுதியாக அவருக்கு ஆயுதங்களைக் கொண்டு வைத்தான். மைத்துனன் மனைவியும், மூக்குமலை உறவினர்களும், பணியாரங்கள் சுட்டுக் கூடைகளில் கொண்டு வந்து வைத்தார்கள். வெல்லமும் தினைமாவும், சாமையும் அரிசியும், கடலையும் காஞ்சிப் பொரியும், புகையிலையும் ஒன்று மீதமில்லாமல் தம்பியின் வானுலக யாத்திரைக்கு அண்ணனும் மற்றவரும் சேகரித்து வைத்தார்கள்.
உறவினரும் பழகியவருமாகிய பெண்டிர், அந்தத் தூயவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துபவராக, ரதத்தைச் சுற்றி ஏவலர் போல் நின்றார்கள். தலைப்பக்கம் வந்து மணியடித்துச் சிலர் தம் பணிவன்பை வெளிப்படுத்தினர்.
இச்சமயம், எம்பிரானின் திருவடிக்கே அணிமலரெனப் புறப்பட்டுவிட்ட லிங்கையாவின் உடலைத் தொட்டு வணங்க அருவியென அனைவரும் வந்தார்கள்; சிறியவர்கள் பலரும் அந்த அடிகளைத் தொட்டு வணங்கி, தம் இறுதிக் காணிக்கைகளாக மஞ்சள், சிவப்புக் கோடுகளிட்ட துணிகளைப் போர்வைக்குள் வைத்தார்கள். கரியமல்லர் போன்ற முதியவர்கள், கண்ணீர் துளிக்க, தலைப்பக்கம் நின்று மரியாதை தெரிவித்தார்கள். வாழ்நாளெல்லாம், அவர் மக்களெனப் பழகி, பணிபுரிந்த தொரியர் கால்களைத் தொட்டு வணங்கிக் கண்ணீர் வடித்தார்கள்.
அண்ணன், தம்பியின் உடலைக் கௌரவிக்கப் பட்டும் ஸாடினுமாகப் பளபளத்த பாவாடைகளும் மேலங்கிகளும் தரித்த குழுவுடன், ரதத்தைச் சுற்றி நடனமாட வந்துவிட்டார்கள்.
கோத்தாரின் இசை முழங்கத் தொடங்கியது. வண்ண வண்ணத் துணிகளாலான ஆறு அடுக்குகளும், உச்சியில் கறுப்பு மண்டபம் போன்றதோர் அடுக்குமாக அலங்கரிக்கப் பெற்ற இரதத்தைச் சுற்றி நின்று அவர்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டார்கள். தாளத்துக்கேற்ப, அவர்கள் நடனம் புரியத் தொடங்கியதுமே, ஜோகி, அதுவரையிலும் சோகமென்னும் தனி உலகிலே தன்னை மறந்து, இருள் வடிவினனாகச் செயலற்றுச் சிந்தை மரத்துக் கிடந்தவன், கல் எகிறப் பீறி வந்த ஊற்றைப் போல் ஓடி வந்தான். என்ன நடக்கிறது, தான் செய்வதென்ன என்பவை கூட அவனுக்குப் புரிந்தனவோ இல்லையோ, தெளிவாகத் தெரியவில்லை.
தம் உயிருக்கும் உயிராக, அந்த வீட்டிலே அவனை ஆக்கிய அருமைத் தந்தை மறைந்துவிட்டார். அவனை ஊக்கி உயிர் தந்த ஒளி அவிந்து விட்டது. அந்த வீட்டிலே வாழாமல் வாழ்ந்த மாமணி மறைந்து விட்டது. முற்றத்தை விளங்க வைத்த மாமரம் சாய்ந்து விட்டது.
அந்த நேரத்திலே, கண்களைப் பறிக்கும் ஆடைகள்; குழலும் முழவும் எழுப்பிய ஒலி; பாட்டு; ஆட்டம்!
சோகத்தின் தனி உலகிலிருந்து, பீறிப் பாய்ந்து வந்த அவனுக்கு அந்த வண்ணங்களும் ஆட்டமும், பொங்கும் எரிச்சலை ஊட்டின. சம்பிரதாயம், மரியாதை முதலிய வரையறை, பண்பு எல்லாவற்றையும் அந்த எரிச்சல் விழுங்கி விட்டது. வெறி பிடித்தவன் போல், “நிறுத்துங்கள்!” என்று கூவினான். பிணைந்த கரங்களை ஆவேசத்துடன் பிரித்து எறிந்தான்.
பெரியப்பன் அதிர்ந்தார். பெண்கள் கூட்டம் அதிர்ந்தது; கோத்தர் இசையும் அதிர்ந்து நின்றது.
“எங்கள் ஐயன் சாகவேண்டுமென்று எத்தனை நாள் வேண்டினீர்கள்? போங்கள்! போங்கள்! போய் விடுங்கள்!” என்று இரைந்தான். மருண்டு நின்ற கோத்தர்களிடம் “உங்களை யார் வரச் சொன்னார்கள்? போங்கள் இன்னொரு முறை பறை ஒலித்தால் நான் பிடுங்கி எறிவேன்!” என்று வெளிக் குரலில் கத்தினான்.
இதே சமயத்தில் கிருஷ்ணனும் ஓரெட்டு முன் வந்தான். இறந்த பெரியவருக்கு மரியாதை தெரிவித்து வணங்கி விட்டு ஓரமாக நின்ற அவன், அங்கிருந்தவர்களில் படித்தவன் என்று மரியாதைக்கு உகந்தவனாக நின்ற முறையில், “உண்மைதான். இந்தப் பொருந்தாத சம்பிரதாயங்களை நாம் விடுவதே நல்லது. துக்கம் புகுந்த வீட்டிலே, விருந்தும் ஆட்டமும் பாட்டமும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு வருத்தத்தைக் கொடுப்பவை அல்லவோ?” என்றான்.
அதிர்ச்சியிலிருந்து மீளாதவராகப் பெரியப்பன், “என்ன ஜோகி? என்ன இதெல்லாம்?” என்று அவன் கையைப் பிடித்தார்.
அப்பொழுது ஜோகிக்கு, பெரியப்பனின் பட்டும் பகட்டுமான நடன உடையணிந்த தோற்றமே காணச் சகியாததாக இருந்தது. துயரத்தின் ஆவேசச் சுழற்சியிலே, பற்றி எறிந்த அவன் உணர்ச்சித் தீயின் முன், அந்தப் பெரியப்பன் குடும்பத்தினால் தன் வீட்டில் புகுந்த துன்ப வறுமைகளும், ஐயன் சகிப்புத் தன்மையின் குன்றேறி நின்று அவற்றைத் தாங்கி, மீண்டும் அந்த எதிர்மனையை ஆதரித்த சம்பவங்களும் படலம் படலமாக அவிழ்ந்தன.
“என்னவா? நீங்கள் இதற்காகவே காத்திருந்தீரா? என் ஐயனைக் கொஞ்சங் கொஞ்சமாக அழித்தவர் நீங்கல். இப்போது கொட்டாம், முழக்காம், பட்டாம், பாவாடையாம்; ஆனந்தப்படுகிறீர்கள்! போங்கள் எல்லோரும்; என்னையும் ஐயனையும் அம்மையையும் தனியே விட்டுப் போங்கள்!”
பெண்ணைக் கொடுத்த மாமன் முன் வந்து, “சாந்தமடை ஜோகி, நீயே இப்படி வருத்தத்தில் முழுகிவிட்டால் உன் அம்மையைத் தேற்றுவது யார்? சடங்குகள் நடக்க வேண்டாமா?” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். “இந்தப் பெரியப்பன் குடும்பத்துக்காக, ஐயன் எத்தனை துன்பங்கள் பொறுத்திருக்கிறார்? உங்களுக்குத் தெரியாதா? நேற்றுக் கூடக் கொடுத்தார். இன்று எல்லாவற்றையும் மறந்தார்களே? என் ஐயன் சாய்ந்து கிடக்கையில் இவர் இரகசியமாக மகன் கொண்டு வந்த புட்டி மதுவைக் குடித்து விட்டு ஆடுகிறாரோ? எனக்கு எரிகிறது?” என்றான் ஜோகி ஆத்திரத்துடன்.
“ஆமாம், நாம் இந்த மாதிரி சமயங்களில் ஆடல் பாடல்களை நிறுத்தி விட வேண்டும்.” அன்று லிங்கையாவின் கையைப் பிடித்துப் பார்த்த இளம் மருத்துவன் அர்ஜுனனின் குரல் அது.
“ஆமாம். என்றோ அநாகரிகப் பழக்கங்களைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர். அவை எல்லாம் நமக்குத் தேவையா?”
“காட்டுமிராண்டிகளா நாம்? துயர நிகழ்ச்சியில் பாட்டு எதற்கு?”
“ஆமாம்.”
“ஆமாம், வேண்டாம்.”
அர்ஜுனனின் குரலைத் தொடர்ந்து, பல இளைஞர் குரல்கள் அதை ஆமோதித்தன.
கிருஷ்ணன் இப்பொழுது சமாதானமாகப் பேசினான். பெரியவர்களை நோக்கி, “ஆமாம், பெரியவர்கள் எல்லாரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது. தொதவர்கள் ‘கேடு’ பிடிப்பதையும், குடிப்பதையும் நம்மில் எத்தனை பேர் வெறுக்கிறோம்? காலத்துக்கேற்ப, நாமும் நம் வழக்கங்களில் சிலவற்றை மாற்றிக் கொள்வதே நல்லது. இன்ன நோக்கத்துக்காக இந்த வழக்கங்கள் ஏற்பட்டன என்பதை ஆராய்ந்து சிந்திக்காமல் கண்மூடித்தனமாக வெறும் சம்பிரதாயமென்று பின்பற்றுவது சரியல்ல. பெரியவர்கள் கோபப்படாமல், மனத்தாங்கள் கொள்ளாமல் யோசித்துப் பார்க்க வேண்டும்.”
கிருஷ்ணனின் பேச்சும், கூடியிருந்தவர் அதற்கு மரியாதை கொடுத்துக் கேட்டதும், ரங்கனின் மனசில் பொறாமைக் கனலை ஊதிவிட்டன.
“யார் வீட்டு விஷயத்தில் யார் தலையிடுவது? யாரடா நீ?” என்றான் முன்னே சென்று.
பெரியவர் மாதன் அமைதி இழந்து விட்டார். அவருடைய அருமைத் தம்பிக்கு நடனம் கிடையாதா? கோத்தர் இசையுமா கிடையாது?
எதிலும் தோய்ந்து ஒட்டாத அவருடைய உயிரோடு உடம்போடு ஊறிவந்த பழக்கங்கள் வெகு சிலவே - மது; இசை; நடனம்.
யார் யாருடைய மரண வைபவங்களிலெல்லாமோ அவர் தலைமை தாங்கி அந்த நடனத்தை நடத்தியிருக்கிறாரே? அவருடைய அருமைத் தம்பி லிங்கையாவுக்கு, அவர் உயிரோடு இருந்து, ஒரு உண்மையும் இல்லாமல் சாவுச் சடங்கு நடப்பதா? அவரால் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட இயலவில்லை. அழகாகப் பேசத் தெரியாது அவருக்கு. “என் தம்பியை அநாதை போல் தூக்கி எரிக்கச் சொல்கிறீர்களா? இது நியாயமா கிருஷ்ணா?” என்றார் ஆற்றாமையுடன்.
“நானும் அம்மையும் உலகமே இருண்டு அழுகையில் நீங்கள் ஆடுவது மட்டும் நியாயமா? நீங்கள் உண்மையில் உங்கள் தம்பியிடமும், அந்தத் தம்பி குடும்பத்தவரிடமும் நன்றி உடையவர்களாக இருந்தால் என் ஐயனை அமைதியாக விடுங்கள். மனசில் இருக்கும் கல்லான துக்கம் உருவி வர வழிகாட்டுங்கள், போங்கள்” என்றான் ஜோகி கண்ணீர் பெருக.
இதற்குள் கசமுசவென்று, பள்ளிக்கூடம் சென்று பல மக்களின் நாகரிகம் கண்டுவரும் இளைஞர்கள் ஜோகியின் பக்கம் அனுதாபம் காட்டி, கிருஷ்ணனை இன்னும் எடுத்துச் சொல்லத் தூண்டினார்கள்.
பெரியவர்களோ, “அது என்ன நியாயம்? வழக்கமான சடங்குகளை நிறுத்துவதா? அவர் நல்லவழி போக வேண்டாமா?” என்று தலைக்குத் தலை பேசினார்கள்.
ஜோகி கோத்தர் பக்கம் சென்று, “உங்கள் மானியமான தானியம் குறையுமே என்று எண்ணாதீர்கள். போய்விடுங்கள்” என்றான்.
“இதெல்லாம் என்ன ஜோகி சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது?” என்றார் மூக்குமலை மாமன்.
“ஆமாம், இன்னும் சற்றுப் போனால், ‘எங்கள் ஐயன் சாகவேயில்லை. அவர் பொன்னான உடம்பை எரிக்க நீங்கள் காத்திருந்தீர்களா? போங்கள்!’ என்று பிடித்துத் தள்ளினாலும் தள்ளுவான்!” என்றான் ஒருவித இகழ்ச்சிக் குறியுடன் ரங்கன்.
“நன்றி கெட்டவனே! உன்னைக் கேட்கவில்லை” என்றான் ஜோகி வெறுப்புக் குமிழியிட்டு வெடிக்க.
சிறுபொறி பெருந்தீயாகக் கனிந்து விடக் காற்றும் வீசுகிறதே என்ற கவலையுடன் கிருஷ்ணன் அருகில் சென்று, “இரண்டு பேரும் பொறுமையிழக்க இதுவா சமயம்? ரங்கா, இது நன்றாக இல்லை” என்றான், அவன் முன்னால் தன்னை அபாண்டமாக இகழ்ந்ததை மறந்து.
“வக்கீல் சார் நியாயம் பேச வந்துவிட்டார், நியாயம். யார் வீட்டுச் சாவில் நீ யாரடா வந்து தலையிடுகிறாய்?” என்றான் ரங்கன். தம்முடைய பேரனை மரியாதையின்றி விளித்துப் பேசியதைப் பொறுக்காத கரியமல்லர், “மரியாதையாகப் பேசு, ரங்கா!” என்றார்.
“பணத் திமிரும் பதவித் திமிரும் படிப்புத் திமிரும் உள்ளவர்களிடம் உங்கள் உபதேசத்தைச் செய்யுங்கள்! இது எங்கள் விவகாரம்!” என்று ரங்கன் சூடாகப் பதில் கொடுத்தான்.
“ஜோகி, நீ உள்ளே போ. நடக்க வேண்டியது நடக்கட்டும். அப்பனுக்கு இதெல்லாம் பிடிக்குமா?” என்றாள் ஒரு கிழவி குறுக்கிட்டு.
“அதைத்தான் நானும் கேட்கிறேன். கூத்தும் கோலாகலமும் வேண்டாம். என் அப்பனுக்குக் கடைசியில் என்ன செய்ய வேண்டுமோ, அதை அழுது கரைந்து நான் செய்வேன். சம்பந்தமில்லாதவர்கள் போகட்டும்!”
கிருஷ்ணன் ஆமோதித்து, கோத்தரிடம், “வேண்டாம் அதெல்லாம் போங்க” என்றான் அவர்கள் அருகில் சென்று.
ரங்கன் வெகு நாளைய ஆத்திரத்துடன் பாய்ந்து கிருஷ்ணனைப் பின்னே தள்ளினான். “கட்சியா கட்டுகிறாய்? ம்!” என்று உறுமினான்.
ஏற்கெனவே இரு கூறுகளாகப் பிரிந்து விட்ட கூட்டம், வாய்ச்சண்டை, கையால் தொடுமளவுக்கு வலுத்ததும், நன்றாகவே இரு கட்சிகளாகப் பிரிந்து பலத்து விட்டது. வாதப் பிரதிவாதங்கள் இரு பக்கங்களிலும் எழுந்தன. கோத்தர்கள் வெகுநேரம் காத்துவிட்டுக் கவலையுடன் ஊர் திரும்பலானார்கள்.
அந்தி சாய்ந்துவிட்டது.
கிருஷ்ணனின் கல்வி முன்னேற்றத்திலும் செல்வத்திலும் பொறாமை கொண்டவரும் இருக்கத்தான் இருந்தார்கள். “படித்த கர்வத்தில் நிலைமறந்து பேசுகின்றனர்” என்றார்கள்.
அநாவசியமாகக் கிருஷ்ணனைக் கேவலமாக ரங்கன் ஏசிப் பேசியதைக் கரியமல்லர் பொறுக்கவில்லை. என்ன ஆனாலும், இன்று ஆட்டமும் பாட்டமும் நடப்பதில்லை என்று அவர் கச்சை கட்டினார்.
“போலீசு கூட்டி வருவேன். எப்ப அதை, அந்த இலட்சியத்தை, அவர் தலை சாய்ந்ததுமே அவன் தூளாக்கி விட்டானே? அவன் தானே கலகத்தை ஆரம்பித்தான்?”
தன்னையே அவன் கடிந்து கொண்டான்; நொந்து கொண்டான்; ‘பொறுமையிழந்தேனே’ என்று சபித்துக் கொண்டான்.
பிரிந்த கட்சிகள் போலீசு இடையீட்டுக்குப் பின்பு ஒருவரை ஒருவர் வர்மம் வாங்குவதுபோல் கறுவிக் கொண்டு பின் வாங்கின. தூற்றலும் மழையும் மீண்டும் தொடர, நடனமும் சிறக்கவில்லை. அன்னை மங்கலமிழந்தாள்; வீட்டுக்குள் ஊருக்குள் பகை வெற்றிக் கொடி ஏற்றியது. ஜோகி குமைந்து கருகி விட்டான்.
போட்டியும் பொறாமையும் ஓரளவுக்கு உணவில் கசப்பும் உவர்ப்பும் கூட்டும் நன்மையைச் செய்வதுண்டு; அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சாகுமன்றோ! ரங்கனின் உள்ளத்தில், சம்பிரதாயப்பற்றோ, பழமைப் பற்றோ, ஒரு நாளும் இருந்ததில்லை. ஜோகி மட்டும் முன் வந்து கோத்தர் இசையையும் நடனத்தையும் தடுத்த போது அவன் தீவிரமாக எதிர்க்கவில்லை; ஆனால் கிருஷ்ணன் எப்போது வாயைத் திறந்தானோ, அப்போதே அவன் புற்றிலிருந்து சீறும் நாகமெனச் சீறி வந்துவிட்டான். நெடுநாளாக அவன் உள்ளத்தில் புகைந்து வந்த தீ, அன்று எரிமலையாக வெடித்து விட்டது.
வெளிப்படையாகக் கிருஷ்ணனின் பக்கம் அவன் குரோதத்தைக் காட்டினால் போதுமா? கரியமல்லருக்கு எதிர் நின்று தோள் தட்ட அவனும் சமமான பணபலமும் செல்வாக்கும் ஊரில் பெற வேண்டுமே! ரங்கனுக்கு, ஜோகியினிடம் பகையோ விரோதமோ இல்லை. ஒரு நாளும் அவன் ஜோகியைத் தனக்குச் சமமாக மதித்ததில்லை. எனவே, கிருஷ்ணனுக்குச் சமமானவனாக அவன் முயற்சி செய்ய வேண்டும். தேயிலை பயிரிடும் முயற்சியில் அவன் அதுவரையில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்த முயற்சியில் இறங்கி, வேறு ஒரு குறியுமில்லாமல் உழைப்பான்; ஆம், உழைத்து, நேரெதிர் நின்று, உள்ளூரில் அவன் செல்வாக்கு நசிக்க அவன் காண்பான்.
அவன் மனத்தில் இத்தகைய ஒரு வீறாப்புடன் இருக்கையில், ஜோகி, ஆத்திரப்பட்டு மனவெழுச்சியைக் கொட்டி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தன்னைத் தானே கொத்திக் கொண்டிருந்தான். ஐயனின் பால் சடங்குக்கு மறுநாள் அவன் பெரியப்பனையும் ரங்கனையும் கண்டு பேச வந்தான். சாவுச் செலவுக்குப் பெரியப்பன் கரியமல்லரிடம் கடன் வாங்கி இருப்பாரோ என்ற எண்ணம் ஒரு புறம்; மேலும் அண்ணன் ரங்கனிடம் சண்டை போட்டு அவன் பகைத்துக் கொண்டான் என்றால், ஐயனின் ஆத்மா சாந்தி அடையுமோ? இறந்தவர் பேச்சுக்கு அவன் அந்த நிமிஷத்திலேயே மதிப்பை இறக்கி விட்டானே! பால் சடங்கில் கலந்து கொண்டாலும் அதுவரையிலும் ரங்கன் ஜோகியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
தூற்றலைப் பார்த்துக் கொண்டு, வாயில் சுருட்டுடன் ரங்கன் வாசலில் நின்று கொண்டிருந்தான்.
அருகில் சென்ற ஜோகி, “அண்ணா!” என்றான். அவன் குரல் கரகரத்தது.
ரங்கன் ஏளனப் பார்வையில் மிதக்க, ஜோகியை அலட்சியமாக நோக்கினான். “எனக்கு இருந்த மனவருத்தத்தில், தாங்க முடியாத கஷ்டத்தில் அப்படி ஆத்திரமாகப் பேசினேன். ஐயன் இதை அனுமதிக்கவே மாட்டார் ரங்கண்ணா!” என்றான் ஜோகி.
“என்னவோ, அந்தப் புதுப் பணக்காரன் பக்கம் சேர்ந்து கொண்டு நீ துள்ளினாய். நீங்கள் கட்ட வேண்டிய பெண்ணை நான் கட்டினேன் என்று அன்றையிலிருந்து இருவரும் சேர்ந்து கட்சி கட்டுகிறீர்கள். நான் இங்கில்லை. எனக்குத் தெரியாதென்று, பாருவை அவன் வீட்டுக்கு அனுப்ப, நீயும் உடந்தையாக இருந்தாய் அல்லவா?”
பேச்சு எதிர்பாராத விதமாக விரசமாகப் போகவே ஜோகி துள்ளிப் பதறினான்.
“சிவசிவ! அண்ணா, அண்ணி ஒத்தைக்குப் போனதே, எனக்குத் தெரியாதே? அன்று நான் கிரிஜையை அழைத்துக் கொண்டு மணிக்கல்லட்டி போயிருந்தேனே. இப்படியெல்லாம் மனம் புண்ணாகப் பேசாதீர்கள், அண்ணா.”
“சரிதான் தம்பி, எனக்கு எல்லாம் தெரியும்.”
ஜோகியின் கண்களில் நெருப்பு பறந்தது. “அண்ணா, அப்படிப்பட்டவனாக நான் இருந்தால் மாரியம்மன் என் கண்ணைக் கொண்டு போகட்டும்!” என்றான்.
இந்தக் கூச்சலைக் கேட்டுப் பாரு வெளியே வந்தாள். “உங்களுக்கு வெட்கமாயில்லை? இன்னுமொரு பெண்ணை கட்டி வருவதை இங்கே யாரும் தடுக்கவில்லை. அதற்காக எவர் மீதும் அநியாயப் பழி சுமத்த வேண்டாம். உங்கள் வழியில் நான் ஒரு நாளும் நிற்கவுமில்லை; நிற்கவும் மாட்டேன். நீங்கள் நினைப்பது போன்ற மனமுடையவள் அல்ல, இந்தப் பாரு. பரீட்சை ஒரே தடவைதான். அதில் தோற்ற பிறகு மறு பரீட்சைக்குப் போக நினைக்காதவள் நான்” என்று கூறிவிட்டு, யாரையும் எதிர்நோக்காதவளாக, தூற்றலையும் பொருட்படுத்தாதவளாகப் பயிரைப் பார்க்கக் கிளம்பி விட்டாள். எதிர்பாராத அவளுடைய குறுக்கீட்டில் ரங்கன் ஒரு கணம் அயர்ந்து நின்றான். ஜோகி அந்த விஷயத்துக்கே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினான். “இந்த விவகாரத்துக்கு நான் வரவில்லை. ஐயன் அமைதியாகப் போக வேண்டிய அந்த வேலையில் போலீசு முதல் வந்து கலவரம் நேர்ந்தது. என் மனம் நானே காரணமென்று முள்ளாய்ப் பிடுங்குகிறது. ஐயனுக்காக நான் பிரதிக்ஞை எடுப்பது போலச் சொல்லுகிறேன். இந்த இரண்டு வீடும் ஒரு குடும்பமாக, ஒன்றாக இருக்கவேண்டும் என்பது அவர் ஆசை. இந்த வீட்டில் ‘இல்லை’ என்ற குரல் வந்து, அந்த வீட்டில் சாப்பாடு நடக்கக் கூடாது. அவர் நினைப்பை நான் நிறைவேற்றவே மனத்தில் உறுதி வைத்தேன்” என்றான்.
“நானும் அப்படி நினைக்கவில்லை. நீதான் அந்தப் பயலுடன் சேர்ந்து அண்ணன், பெரியப்பன் என்று நினைக்காமல் விட்டுக் கொடுத்துச் சண்டைப் போட்டாய். அவர்கள் கட்சி கட்டினார்கள். நாலு பச்சை, பணம் துள்ளுகிறார்கள்; எனக்குப் பிரமாதமில்லை என்று காட்டுவேன்!” என்று ரங்கன் ரங்கம்மையையும் அவள் புருஷனையும் அழைத்தான். கைக்குழந்தையைக் கொஞ்சியவர்களாய், ஒரு சச்சரவுக்கும் வராமல் ஒதுங்கியிருந்த தம்பதிகள் அழைத்ததும் வந்தனர்.
“இதோ பாருங்கள், அன்றைக்குக் கட்சி கட்டினவர்கள் எவர் பக்கமேனும் நீங்கள் முகம் கொடுத்துப் பேசுவதாக இருந்தால், குழந்தைகளுடன் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வீடும், பயிரிட்டுத் தின்னப் பூமியும் உங்களுக்குக் கொடுப்பவர் யாரென்பதை நினைவில் வைத்து நடவுங்கள். ஆமாம்.”
“எனக்குத் தெரியாதா அண்ணா? எந்தப் பயலேனும் நம் வழிக்கு வந்தால் நான் அங்கேயே பிளந்து கட்டிவிட மாட்டேன்!” என்றான் ரங்கம்மையின் கணவன்.
அத்துடன் அன்றையப் பேச்சு ஓய்ந்து விட்டது.
பத்தாம் நாள் ‘கொரம்பு’ என்ற இறுதிச் சடங்கு, சொல்லி வைத்தாற் போல் ஊரே ஒதுங்கி விட்டது.
கரியமல்லர் கை பெரிய கை. அவரை எவர் விரோதித்துக் கொள்வார்கள்? ஜோகியும் ரங்கன் பக்கம் சேர்ந்து விட்டான் என்று அறிந்த பின், அண்டை வீட்டுப் பெள்ளியுங் கூட, இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை.
ஜோகி மனம் நைந்தான். பிரிதல் நலந்தானா? எத்தனை நாட்களில் எத்தனை இடைஞ்சலான சமயங்களில் அந்த கரியமல்லர் வந்து கை கொடுத்திருக்கிறார்? ரங்கன் நாளையே ஒத்தை சென்று விடுவான். ஊரில் எல்லோரையும் விரோதித்துக் கொண்டு அவன் எப்படி வாழ்வான்? ஆனால் ரங்கனிடம் பேசுவது யார்?
இறுதிச் சடங்குகள் முடிவு பெற்றதும், ரங்கன் புது முயற்சிக்குப் பண ஆதரவு தேட, ஒத்தை சென்று விட்டான். வீடு வெறிச்சோடிப் போயிற்று. அம்மை, பத்து நாட்களில் முதியவளாய் ஓய்ந்து விட்டாள். அவள் உடலின் உரமாய்த் தெம்பு கொடுத்த மறுபாதி அல்லவோ மறைந்து விட்டது? எவை மூக்குத்தியணிந்து, கங்கணத்தைக் கணவனின் காலடியில் கழற்றி எறிந்துவிட்ட அவளைக் காண்கையில், ஜோகிக்கு பழுத்த இலையுடன் இன்றோ நாளையோ என்று நிற்கும் மரத்தின் நினைவு வந்தது.
அன்று மாலை கதிரவன் மேல்வானில் மறைந்து நேரம் இருட்டி விட்டது. கிரிஜை கலவரமடைந்தவளாய் பால்மனைக்குச் செல்ல இருந்த கணவனைத் தேடி வந்தாள்.
இரண்டு எருமைகளைக் காணவில்லை; கொட்டிலிலும் இல்லை; மேயும் இடத்திலும் காணப்படவில்லை.
முன்பெல்லாம் ஜோகி சிறுவனாக இருந்த காலத்தில், ஒரு குன்று முழுவதுமே மாடுகள் மேய்வதற்காக ஒதுக்கியிருந்தது. இப்போதோ, ஒரு புறச் சரிவு தவிர மீதி இடங்களில் தேயிலையும் காபியும் பயிரடப்பட்டிருந்தன.
“என்ன விளையாடுகிறாய்? மேய்ச்சலுக்குப் போன எருமை எங்கே போகும்? ரங்கி பயல் ராமனைக் கேள்?” என்றான் ஜோகி.
அவள் கண்களில் அச்சம் படர்ந்தது. “நான் தேடப் போனேன். பெள்ளியண்ணன் சொல்கிறார், பெரிய வீட்டு மாடு நம் தோட்டத்தில் நேற்றுப் புகுந்து கோசுச் செடிகளை மேய்ந்து விட்டதாம். ராமனப்பா, மாட்டை அடித்துக் காலை ஒடித்து விட்டாராம். அதற்காக இன்றைக்கு நம் எருமைகளைப் பிடித்துப் பெரிய வீட்டில் அடைத்து விட்டார்களாம் ஆட்கள்.”
கடவுளே! இத்தகைய அற்ப நிகழ்ச்சிகள் அவன் சம்பந்தப்பட்ட வரையில் அன்று வரையிலும் நிகழ்ந்ததில்லையே! சகஜமாக மாடு மேய்ந்தால் விரட்டி விடும் ஊர்க்காரர், பகை என்னும் புகை வளர்க்க வேற்று மக்கள் ஆகிவிட்டனரே!
ஜோகி எருமைகளை அழைத்துச் செல்லப் பட்டிப் பக்கம் சென்றான். தோட்டத்து ஆள் ஒருவன், கரியமல்லருக்குச் சொந்தமான எருமைகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.
“ஏனப்பா வாயில்லாப் பிராணிகள் உன் நிலம் என் நிலம் என்று அறியுமா? அதற்காக எருமைகளை அடைத்து வைப்பது, புது வழக்கமாக இருக்கிறதே!” என்றான் ஜோகி.
“யார் புது வழக்கம் காட்டுவது? கன்றை அடித்துக் காலை உடைத்திருக்கிறான் உன் மைத்துனன். நாங்கள் கட்டித் தீனி போட்டிருக்கிறோம். மரியாதையாக ஒரு ரூபாயை வைத்து விட்டு ஓட்டிச் செல்!” என்றான் உள்ளிருந்து கிருஷ்ணனின் தம்பி அர்ஜுனன்.
ஜோகி திகைத்தான்.
கசிந்த விழிகளுடன் வீட்டுக்குச் சென்று, பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, எருமைகளை ஓட்டிச் சென்றான்.
கரியமல்லரின் தேயிலைத் தோட்டங்கள் பேர் சொல்ல ஆரம்பித்த பிறகே, ஓரளவு ஊர்க்கட்டுப்பாடு குறைந்து விட்டது. முன்போல் முறை போட்டு இரவுக் காவல் புரியவில்லை. தேயிலைத் தோட்டங்களுக்கு அவர் கீழ் கூலி வேலை செய்த ஆட்கள் காவலிருந்தனர். மற்றவர் ஏதோ நாலைந்து பேர் கூடி பூமி விளைவைக் காப்பதற்கும் பெருக்குவதற்கும் பழைய சம்பிரதாயங்களை, வழக்கங்களை விடாமல் கடைப்பிடித்து வந்தனர். எனினும் முன்போல் கூட்டு உணர்ச்சி இல்லை. அந்தப் பிரிவினை, அத்தனை நாட்கள் தெரிந்திருக்கவில்லை. ஐயனின் மரணத்தன்று நடந்த நிகழ்ச்சிகள் பத்தே நாட்களில் பிரிவு உணர்ச்சிகளை, அவற்றின் பலன்களை பளிச்சென்று புலப்படுத்தி விட்டன.
ஒரு ஹட்டி மக்கள் ஒரு குடும்பத்தவர் போல் எத்தனை மேன்மையாக வாழ்ந்தனர்! பாடுபட்டுப் பலன் கண்டு, அவர்கள் ஒருவர் சுகதுக்கங்கள் மற்றவரும் பங்கிட்டு உண்டு வாழ்ந்தனரே! ஒருவர் விதைக்கும் சமயமோ, அறுவடையின் போதே நோய் வாய்ப்பட்டு விட்டால், அன்னார் குடும்பத்துக்கு அனைவரும் பங்கிட்டு உழைப்பை நல்கிக் கண்டுமுதல் அனுப்பும் பண்பல்லவோ அவர்களிடையே இருந்தது? ஜோகி கோயிலில் இருந்த நாட்களில், அவனுடைய தந்தை மாதக்கணக்கில், வருஷக்கணக்கில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்திருக்கிறார். கரியமல்லரின் குடும்பமும் மற்றவரும் புரிந்த பெருந்தன்மையான பண்புகளை விளக்கும் வகையில் அம்மை எத்தனை உருக்கமான நிகழ்ச்சிகளைக் கூறியிருக்கிறாள்!
ஜோகி அன்றிரவெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகளை உன்னி உன்னி வருந்தினான்.
ஒரு நிகழ்ச்சி:
அறுவடைப் பண்டிகை முடிந்த பின்பு தான், புதுக்கதிரைத் தெய்வத்துக்குப் படைத்த பின்புதான், அவர்கள் உண்பது வழக்கம். அந்தத் தெய்வத் திருவிழா, அந்த வட்டகைக் கிராமத்தினர் ஒன்று கூடி ஆலோசித்துத் தேர்ந்தெடுக்கும் நாளிலேயே கொண்டாடப்படும். ஒரு சமயம் ஜோகியின் வீட்டில் தானியம் தட்டிப் போயிற்றாம். பண்டிகைக்குப் பத்து நாட்களே இருந்தனவாம். அதற்கு முன் புதுத் தானியத்தை அறுத்து உண்பதில் குற்றமில்லை. ஆனால் அப்படி உண்டவர், அந்தக் கிராமங்களில் புனிதக் காரியங்களுக்கும், விழாக் கொண்டாடும் உறவினர் வீடுகளுக்கும் சென்று கலந்து கொள்வதைக் கூடாததாகக் கருதுவர். அப்போது, மணிக்கல்லட்டியில், கரியமல்லர் மகள் குடும்பத்திலேயே, பல சிறுவர்களுக்கு, லிங்கம் கொடுக்கும் (சைவலிங்க படகம் வழக்கம்) வைபவம் நிகழ இருந்தது.
ஜோகியின் ஐயன் இரவெல்லாம் மனம் நைந்து வருந்தினார். மறுநாள் விடியற்காலையில், கரியமல்லர், லிங்கையாவை அழைக்க வந்துவிட்டார். அம்மை வெகுநேரம் யோசித்து விட்டு, இருட்டோடு விளைந்த தினைக்கதிரை அறுக்கக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“எங்கேயம்மா கிளம்பிட்டாய் இந்நேரம்?” என்று அவர் சந்தேகத்துடன் நோக்கிய போது அம்மை சோகமும் நாணமும் மீற, உடல்குன்ற உள்ளம் குன்ற நின்றாளாம்.
அவர் உடனே புரிந்து கொண்டார். விடுவிடென்று வீட்டுக்கு நடந்தாராம். சற்றைக்கெல்லாம், ஒரு கூடை நிறையச் சாமையும் கிழங்கும் தொரியன் தலையில் சுமந்து வந்து வீட்டின் முன் வைத்துப் போனானாம். இந்த நிகழ்ச்சியை ஐயன் கூறியிருக்கிறார்; அம்மை கூறியிருக்கிறாள். அப்பேர்ப்பட்டவர்கள் விரோதிகளா!
ஜோகியின் அடி நெஞ்சிலிருந்து, பசி உணர்வு மிஞ்சினாற் போல் எரிச்சல் கண்டது, கண்கள் மூட முடியாமல் குளமாயின.
அருகில், கிரிஜை உறங்கிக் கொண்டிருந்தாள். இருட்டில் அவள் முகம் அவனுக்குக் கண்களுக்குத் தெரியாவிட்டால் கூட, குழந்தை முகத்துக்குரிய அவளது கள்ளமற்ற தன்மை அவன் நினைவில் முட்டியது; பகீரென்றது.
அவனுக்குப் பின்; ஒன்றுமே இல்லை. ஒன்றுமில்லையா?
பகையைத்தானா அவன் வளர்த்திருக்கிறான்? ஆரம்பம் எளிதில் நிகழ்ந்து கொடியேறி விட்டது. அதற்கு முடிவு முடிவு காண முடியப் போகிறதா?
விடிந்ததும், அவன் பொறியிட்ட பகை, பூதாகாரமாக எரிந்து கொண்டிருக்கக் கண்டான்.
“ஜோகி! ஜோகி! யேய்!”
பெரியப்பனின் குரலில் தூக்கிப் போட்டவனாக அவன் மேல்முண்டைச் சரியாகப் போர்த்துக் கொண்டு எழுந்து சென்றான்.
“இப்படி அக்கிரமம் உண்டா? அந்த வீட்டுப் பாவிக் கூலிக்காரன் கோவிந்தன் பயல் என் மருமகனுடைய காலை முறித்து விட்டானே?” என்று பெரியப்பன் கத்தினான்.
இடி விழுந்துவிட்ட நிலையில் ஜோகி வெளியே ஓடினான்.
ரங்கம்மையின் கணவன், உடலெல்லாம் சேற்றில் குளிர்ந்து வெடவெடக்க, காலிலே பெருகிய இரத்தத்துடன் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். ரங்கம்மை, அவளுடைய அம்மையின் குரல் நினைவு வர, கோடி வீட்டைத் திட்டி நொறுக்கிச் சாபங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இரவு காவலுக்காக ரங்கம்மை புருஷன் சென்றிருந்தானாம். நீர் வேண்டாத கிழங்கு விளைந்த பூமியில், பாருவின் சதுரத்தில், மழை நீர் தேங்கி இருந்ததாம். அவன் வெட்டி விட்டானாம். அப்போது அவனைக் கழுத்தைப் பிடித்து எவரோ இழுத்துத் தள்ளினராம். திரும்பிப் பார்த்ததுமே, கரியமல்லரின் தோட்டக்காரன் கோவிந்தன் என்பது புரிய வந்ததாம்.
“ஏண்டா, இரவில் எங்கள் பூமியில் வேண்டாமல் தண்ணீரை விடுகிறாய்? கொன்று விடுவேன்” என்று அவன் வம்புக்கு இழுத்தானாம். அடிதடிச் சண்டை முற்றி, அவன் காலையும் முறித்து விட்டான். ரங்கம்மையின் புருஷன், கோவிந்தனின் துப்பட்டியையும் பிடுங்கிக் கொண்டு வந்து கூக்குரலிட்டான். ஹட்டி கலவரத்துடன் விழித்துக் கொண்டாலும், எவரும் தலையிடாமல் பின் வாங்கி விட்டனர்.
ஜோகி, “என்ன ஆனாலும் தண்ணீரை அவர்கள் பூமிப் பக்கம் பாயத் திருப்பியது தவறல்லவா?” என்று கேட்டான்.
“அவர்கள் நம் எருமையை அடைத்து, ரூபாய் கேட்கலாமா?” என்றான் ரங்கியின் கணவன்.
“ரங்கண்ணா கண்டால் சும்மா விடுவாரா? ஒரு கூலிக்காரன், இப்படி அடிப்பதா? அவர்களிடம் மணியம் இருந்தால், நாம் அஞ்சுவதா?” என்று ரங்கி ஓலமிட்டாள்.
“சரி போகட்டும்” என்று ஜோகி பெருமூச்சுடன், அவர் கால் காயங்களைக் கழுவிக் கட்டுப் போடலானான்.
ஆனால் அது அப்படி எளிதில் போய்விடவில்லை.
ரங்கன் அன்று பகல் ஹட்டிக்கு வந்தான்.
முகம் ஜ்வலித்தது. பெருமை, மகிழ்ச்சி, அகங்காரம், ஆக்ரோஷம் எல்லாமாகச் சேர்த்துக் கனல வைத்த ஒளி. அன்று முதல் நாள், மலைக்கு மலை குதிரைப் பந்தியத்திலே, (Point to Point Race) அவன் பக்கம் அதிருஷ்ட தேவதை இருந்து, ஆயிரத்தைந்நூறு ரூபாய்களுக்கு வெற்றி தேடித் தந்திருந்தாள்.
விஷயத்தைக் கேட்டதும் அவன் அப்போதே விரைந்தான். ஜான்ஸன் எஸ்டேட் பக்கமிருந்த சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டரிடம், ரங்கம்மையின் கணவனைக் குதிரை மேல் ஏற்றிக் கொண்டு போய்க் காட்டி, ஒரு பத்திரம் வாங்கிக் கொண்டான்.
இரவில், கரியமல்லரின் ஆள், நிலத்தின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்த முயன்றதாகவும், ரங்கம்மை புருஷன் தடுத்த போது அடித்துக் கொலை செய்ய முயன்று காலை ஒடித்து விட்டதாகவும், சாட்சிகள் சிலரைத் தேடிப் பிடித்து, வழக்குப் பதிவு செய்துவிட்ட பின்புதான் ரங்கன் மூச்சு விட்டான். செல்வமெல்லாம் பறிபோய் விட்ட நிலையிலே, ஜோகி துயரக் கடலில் மூழ்கினான்.
மலை முகடுகளை விழுங்கி விடுத்து விளையாடும் கார்முகிலோன் மலையன்னையிடம் விடைபெற்றுச் சென்று விட்டான். வெறிக்காற்றும் சாரலும் அவன் சென்ற திசையிலே மடங்கி விட்டான். மலையன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன் “அதற்குள்ளாயிற்றா?” என்று கேட்பவன் போல், கொடுந் தண் கிரணங்கள் கொண்டு பனியோன் வந்துவிட்டான்.
இரக்கமற்ற அவன் தன்மை சொல்லத் தரமாமோ? ஒரே இரவிலே பசுமை மாயக் கருக்கி விடுவான். ஈரம் பாய்ந்த மண்ணுக்குள்ளிருந்து தலைநீட்டும் மென் முளையை நீட்டிய கணமே பொசுக்கிவிடுவான். மரங்களெல்லாம் அவன் கொடுமையிலே தளிரிழந்து, இலை உதிர்ந்துப் பரிதவித்து நிற்கும். கால்நடைச் செல்வங்கள் காய்ந்த புல்லைக் கடித்திழுத்து ஏமாற்றத்துடன் சோர்ந்து பெருமூச்செறியும் கொடுமையைக் காணச் சகிக்குமோ?
இரவெல்லாம் அவன் இழைக்கும் கொடுமையில் வடித்த கண்ணீரும் உறைந்துவிட, மலையாம் அன்னை தன் நாயகனாகிய கதிரவனின் ஸ்பரிசத்துக்காக வானை நோக்கிய சிகரங்களுடன் காத்திருக்கையிலே, செம்பிழம்பாக அவன் முகம் காட்டும் அழகைக் காலமெல்லாம் கண்டிருக்கத் தோன்றும். காத்துக் காத்து ஏங்குகையில் அவன் தோன்றும் அழகு அதிகமாகும் போலும்! அவன் வந்த பிறகு பனிக்கொடியோன் வாலைச் சுருட்டி மடியில் வைத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். அந்தக் கனகமயமான இளம் ஒளிக்கே அவன் நீராய்க் கரைந்து விடுவானே!
“உன் கர்வத்தைக் குலைக்கிறேன், பார்!” என்று ஒளியோன் வெங்கிரணங்களால் அவனை ஒரு கணத்திலே ஆவியாக்கி வென்று விட்டு, மலையன்னையை நோக்கி இங்கிதமாகப் புன்னகை செய்வான்.
செம்பொற் பரிதியின் கிரணங்கள் வந்து விழும் இடமாகப் பார்த்து, மாதி ஓடி வந்து நின்றாள். பள்ளம், சரிவு, கூரை முதலிய எல்லா இடங்களும் கற்கண்டைப் பொடி செய்து தூவி வைத்தாற் போல் இருந்தன. மாதி கால்களில் முரட்டுச் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள் என்றாலும் விரல் நுனிகள் சந்துகளெல்லாம் அந்தக் கொடும் பனியின் துளிகள் பட்டு, கந்தகத் திராவகம் பட்டாற் போன்ற எரிச்சலைத் தந்தன. தேய்ந்து சுருங்கிய கைகளைத் தேய்த்துப் போர்வைக்குள் மூடிக் கொண்டாள். இளஞ்சூரியனின் கிரணங்கள் உறைத்தன.
நாளாக ஆக, அவளுக்கு ஏனோ குளிரே தாங்க முடியவில்லை. கணவன் மறைந்து ஒன்றரை ஆண்டுக் காலத்தில் அவள் ஒன்பது ஆண்டுகள் மூத்து விட்டாற் போல் சுருங்கி ஒடுங்கி விட்டாள். கோயிலின் பக்கமுள்ள மரம், இலைகளை எல்லாம் உதிரித்து மொட்டையாக நின்றது. கோயிலைச் சுற்றி, ஜோகி தீ காத்த நாட்களில், பச்சென்ற விளை நிலமும் பூச்செடிகளும் விளங்கியது. அந்தப் பணியில் அவனைப் போல் உள்ளும் புறமும் ஒன்றாக இருந்து ஆற்றியவர் முன்னுமில்லை; பின்னுமில்லை.
ஜோகி மாட்டுக் கொட்டிலில் சூரியனுக்கு வணக்கம் கூறியபடியே மாடுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தான். கிரிஜை சாணம் சுமந்து எருக்குழிக்குச் சென்றாள். வீட்டு அடுப்பில் அவள் வைத்திருந்த சுள்ளி படபடவென்று எரிந்து நீலநிறமான புகையை வெளியே வரச் செய்தது. மற்றப்படி வீட்டிலே சத்தமில்லை; சந்தடி இல்லை.
பனி கரைந்து விட்டது. மாதி அந்த வெயிலில் குந்திக் கொண்டு உட்கார்ந்தாள்.
அவள் கணவரும் அவளும் அதே போல் உதயத்தில் வேலைகளில் ஈடுபட்டிருக்கையில் கண் மங்கலான கிழவி, குளிரைத் தாங்காமல் அதே இடத்தில் தான் உட்கார்ந்து கொள்வாள். எத்தனை ஆண்டுகள் ஆயின! அதே இடத்தில் அதே காலத்தில், அதே நேரத்தில் வெயில் விழுகிறது; அதே போல் முதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒரு புறம்; கீழ்க்கிளைகள் ஒரு புறம்.
ஆனால், மாதிக்கு அந்த ஒரே வித்தியாசத்தை நினைத்ததும் பெருமூச்சு இழைந்தது. அவளுடைய கணவரைப் பெற்றவள், அவளைப் போல் அப்படி வெற்று ஆளாகவா வெயில் காய்வாள்?
கழுக்கு மொழுக்கென்று ஜோகி அவள் மடியில் அடங்காமல் படுத்து உதைப்பான். அடிக்கொருமுறை மடியிலே அதட்டி அவனை இருத்திக் கொண்டு, நன்றாகத் தரியாத விழிகளைச் சூனியத்தில் லயிக்க விட்டபடி, ஒளியோனின் வெம்மையிலே தன்னை மறந்து மூழ்கியிருப்பாள்.
பெண்ணொருத்தி வாழ்ந்து வாழ்வின் பூரணத்தை அடைந்துவிட்ட வெற்றியின் ரேகைகள் போல் அந்த முகச் சுருக்கங்கள் தோன்றும். மடியிலே அந்த எதிர்கால நம்பிக்கையின் உருவமாக, உயிராக இதமாகச் சூடு தரும் குழந்தை.
கையையும், காலையும் உதைத்துக் கொண்டு அது மூட்டும் இன்பத்திலே, “தே, சும்மா இரு” என்று அவள் அதட்டுவதும் செல்லக் கொஞ்சலாகத் தானே இருக்கும்?
அந்தப் பேறு மாதம்மைக்கு என்று கிடைக்கப் போகிறது! அவளுடைய கனவனின் சொற்களிலே அவளுக்கு நம்பிக்கை இருந்தது. வருவதை முன்பே கனவிலோ, ஓர் அதீத உணர்விலோ அறிந்து சொல்லும் சக்தி அவருக்கு இருந்ததாக அவள் நம்பிக்கை வைத்திருந்தாள்.
நோயாய் அவர் விழுந்த காலத்திலேயே, “இந்தப் பிறவி எடுத்து நானே இவ்வீட்டில் வருவேன்” என்று கூறியிருந்த விஷயத்தை அவள் உள்ளம் ஒரு மூலையில் வைத்துக் காப்பாற்றி நம்பிக்கை என்னும் நீர் வார்த்துக் கொண்டிருந்தது. ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு அறிகுறியையே காணோமே!
ஒருவேளை, பாரு ஜோகிக்கு மனைவியாக அந்த வீட்டில் வந்திருந்தால் புதல்வன் பிறந்திருப்பானோ?
“அத்தை!” என்று கிரிஜை அருகில் வந்து அழைத்தாள்.
மெல்லிய இதழ்கள், பனிக்கும் வெயிலுக்கும் சிவந்து கறுத்திருந்தன. காது மடல்கள் உணர்ச்சிவசப்படுகையில் சிவப்போடுபவை. உடல் கொடி போல் சிறுவாகு.
நம்பிக்கையை அறவே ஒழிக்க நியாயமில்லை.
அத்தை தன்னை ஏற இறங்கப் பார்ப்பதை உணர்ந்த கிரிஜை புது பெண்ணைப் போல் நாணிப் புன்னகை செய்தாள்.
“பல் விளக்கச் சுடுநீர் வைத்திருக்கிறேன், அத்தை. காபி காய்ச்சி வைத்திருக்கிறேன்” என்றாள்.
இதற்குள் கை முள்ளும் கொத்தும் கூடையுமாகப் பாரு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“நல்லாயிருக்கிறீர்களா அத்தை? என்ன பனி, என்ன பனி! பயிர் தாளாத பனி” என்று புன்னகை செய்தாள்.
மாதி தலையை ஆட்டினாள். அசட்டுப் பெண்! மண் மீதும் பயிர் மீதும் உயிரை வைத்துத் தன்னை ஏமாற்றிக் கொள்கிறாளே!
ஒரு கரித்துண்டினால் பல்லைத் துலக்கிவிட்டுச் சுடுநீர் ஊற்றி வாயை அவள் கொப்புளிக்கையிலேயே, பித்தளைக் கிண்ணத்திலே காபித் தூளும் வெல்லமும் வெந்நீரும் ஊற்றிக் காபி தயாரித்து வந்து விட்டாள் மருமகள். கூடவே ஜோகியும் வந்து அமர்ந்தான்.
மாதி குளிருக்கு இதமாக அந்தக் காபியை ருசித்துப் பருகினாள்.
“நேற்று இரவு ரங்கண்ணன் வீடே வரவில்லை. அருவிக்கப்பால் காடு அழித்துப் பற்றி எரிந்தது” என்றான் ஜோகி.
அம்மை விரிந்த விழிகளுடன் நோக்கினாள்.
“தேயிலை போடவா?”
“ஆமாம். சீமை உரம் போடு, இம்மலைக் காட்டைத் தேயிலைத் தோட்டமாக்கிப் பணம் தருகிறேன் என்று பெரிய காலாக எடுத்து வைத்திருக்கிறான்.”
“ஐயன் மறைந்த பின்னரே ரங்கன் மாறி விட்டான். அவர் தெய்வம், அவர் ஆசி என்றும் அவனுக்கு உண்டு. வம்பு வழிக்குப் போனாலும் ஜயிக்கிறான். பந்தயத்துக்குப் போனாலும் பணத்தை நிரப்பிக் கொண்டு வருகிறான்” என்றாள் மாதி ஆற்றாமையுடன்.
“இல்லை அம்மா, இல்லை. நீங்கள் நினைப்பது போல ரங்கண்ணா நிசமாக நல்லவராக மாறவில்லை; வழக்கு அவர்கள் பக்கம் தோற்கவுமில்லை. இங்கு ஜயிக்கவுமில்லை, தள்ளுபடியாகிவிட்டது. பகையை வளர்க்கப் போட்டி போடுவதனால் நல்லவனாக முடியுமா? நான் தான் அம்மா, இதற்கு விதை ஊன்றினேன். போதாத காலம் என் நாவில் தொடர்ந்தது.”
“நீங்கள் உங்களைப் பற்றியே சொல்கிறீர்களே! பெரியவர்களாக அவர்கள் ராஜிக்கு வரக்கூடாதா?” என்றாள், பாத்திரத்தை எடுத்துப் போக வந்த கிரிஜை.
அவள் அதுவரையில் அப்படிப் பேசியதில்லை.
“அவர்களுக்கு ஏன் அப்படியேனும் ராஜிக்கு வரவேண்டும்? ஊரில் முக்காலும் அவர்கள் பக்கம்; போதாதற்கு வெளியூரிலும் செல்வாக்கு” என்றான் ஜோகி.
அப்பொழுது வாயிலில் கார் ஓசை அவர்கள் மூவருடைய கவனத்தையும் திருப்பியது.
அவ்வளவு காலையில், கிருஷ்ணன் காரில் வருகிறானா? என்ன விசேஷம்? வாயிலில் எட்டிப் பார்த்த மாதி, ஜோகி, கிரிஜை மூவருக்கும் ஒரு கணம் பகீரென்றது. நான்கு தினங்களுக்கு முன், நான்கு வீடுகள் தள்ளி போஜன் மனைவிக்குக் காய்ச்சல் அடித்தது. காய்ச்சல் மிக அதிகமாகி இருந்த காரணத்தாலோ என்னவோ, அவளை மெல்லக் குதிரையின் மீது ஏற்றி வைத்து, எஸ்டேட் பக்க ஆஸ்பத்திரிக்கு இட்டுச் சென்றதை அவர்கள் கண்டனர்.
முன்பெல்லாம் துக்கமோ, சுகமோ, எந்தச் சிறு செய்தியானாலும் ஒரு குடும்பத்தவர் போல் கூடிக் கலந்து செய்வார்கள். அதுதான் இல்லையே! தொடர்ந்து போஜனும் அவன் அம்மையுங் கூட ஆஸ்பத்திரிக்குச் சென்று மூன்று நாட்களாயின என்பதை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர்.
என்ன ஆயிற்று?
கிருஷ்ணனின் வண்டியிலிருந்து, கிழவியும் போஜனும் மட்டுமே அழுது கொண்டு, ஊர் கூட இறங்கிச் சென்றனர். மற்ற வீடுகளில் இருந்தவர்கள் அவசரமாக விரைந்தார்கள்.
ரங்கம்மையின் மகன் சற்றைக்கெல்லாம் வந்து, “இறந்து விட்டாள்” என்று கைக்காட்டினான்.
எல்லாருடைய முகங்களிலும் இருளும் கிலியும் படர்ந்திருந்தன. கிருஷ்ணன் உடனே திரும்பி விட்டான். அவ்வளவு தூரம் வந்த சுருக்கில் அவன் திரும்பியதில்லை.
நான்கு குழந்தைகளின் தாய் எப்படி இறந்தாள்?
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோத்தர் வேண்டாம் என்ற தீர்மானத்துடன் குறும்பரையும் தொடர்புகளிலிருந்து நீக்கி விட்டனர் ஊரார். அவனுக்கு அப்போதைக்கப்போது, கொடுப்பதை நிறுத்தி விட்டனர்.
மூன்று நாள் காய்ச்சலில் எப்படி இறந்து போனான்.
ஜோகியின் பெரிய தந்தை அப்போதுதான் செய்தியைக் கொணர்ந்தார்.
“உடலை அங்கேயே எரித்து விட்டார்களாம். பிளேகாம்.”
“ஐயோ!”
ரங்கம்மை தன்னையும் அறியாமல் இந்த ஒலியை எழுப்பினாள். முன்பு எப்போதோ வந்த அந்தக் கொடிய மாமாரியில் தான் அவள் புருஷனின் குடும்பம் முழுவதும் அழிந்ததாகச் சொல்லியிருக்கிறாள்.
“தெய்வங்களுக்குப் பூசை போட வேண்டும். மாரியம்மன் பூசை நடக்கவே இல்லை. பணம் வந்தால் தெய்வம் மறந்து போகிறது” என்றாள் மீண்டும் மாதம்மை.
கரியமல்லர் தாம் வர வேண்டுமா?
‘ஊருக்கு அவர் பெரிய மனிதராக இருந்து தவறியதை நான் செய்வேன்’ என்று கருதுபவனாகச் சமயம் பார்த்திருந்தவன் போல், செவ்வாயன்று சேவல் வாங்கி, பாறையடி மாரியம்மனுக்கு பலிகொடுத்து, குறும்பரை அழைத்துப் பிரார்த்தனைகள் செய்ய அவன் தீர்மானித்து விட்டான். இடையே ரங்கம்மை, சமையற்கட்டில் துடித்து விழுந்த எலிகள் இரண்டை எவருக்கும் அறிவிக்காமல் எருக்குழியில் போட்டு வந்தாள். செவ்வாய்க்கிழமைப் பூசை பற்றி மாதி அண்டை அயலாருக்குத் தகவல் கொடுத்தும், இரண்டொருவர் தவிர, கரியமல்லர் வீட்டுக்கு எதிரான முயற்சி என்று கூடவில்லை.
பூசைச் சாமான்கள் சகிதம், அண்ணன் தம்பி இரு குடும்பத்தினரும் காலையிலேயே கோயில் பக்கம் சென்று விட்டனர். மாதி ஒருத்தியே இரு வீடுகளுக்கும் இடையே வாயிலில் உட்கார்ந்திருந்தாள். அப்பொழுது ஹட்டிக்குள் ‘பிளேக்’ மாரியை எதிர்க்க, கிராமத்தைப் பாதுகாக்க, கிருஷ்ணன் சுகாதார அதிகாரிகள், தடுப்பு ஊசிபோடும் மருத்துவர்கள் சகிதம் வந்திருந்தான். அதிகாரிகள் வந்தார்கள். வீடு வீடாக, ஒருவர் மீதமின்றி ஊசி போட்டார்கள்.
இரு வீடுகளுக்கும் இடையே மாதம்மை உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் ஊசி போட்டுக் கொண்டார்களா என்று கண்காணித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவர்கள் வீட்டையும் மாதம்மையையும் பார்த்த வண்ணம் குறுக்கும் நெடுக்கும் நெஞ்சு குறுகுறுக்க நடந்தான். பாருவுக்கு இரு குழந்தைகள்; ரங்கம்மையும் குழந்தைகளை உடைய தாய். ஊசி போட வேண்டாமா? பெரியவர்கள் வினைக்குக் குழந்தைகள் என்ன செய்வார்கள்? ஆனால் முன் கூட்டியே அவன் முயற்சி தெரிந்து கொண்டே அவர்கள் எல்லாரும் எங்கோ போயிருக்கின்றனரே!
கிருஷ்ணன் பார்த்துவிட்டுப் பேசாமல் சென்றது மாதம்மைக்கு அளவில்லாத வருத்தத்தை ஊட்டியது.
ஒவ்வொரு வீடாகப் போய்ப் போய் அழைத்தவன், வெயில் காயும் கிழவியிடம் ஒரு பேச்சுக் கேட்கக் கூடாதா? அவள் கூடவா விரோதம்? தெய்வத்துக்குச் செய்வதை மறந்து, எவரையோ அழைத்து வந்து ஊசி போட்டால் சரியாகுமா? இந்த அலங்கோலம், தெய்வ நம்பிக்கையிலும் சீலத்திலும் வழி பிறழாத அவள் கணவனின் மறைவிலா தொடங்க வேண்டும்.
மாதியின் முகத்தில் கண்ட கீற்றுக்களெல்லாம் நீரில் முழுகின.
தொடர்ந்து அந்த வாரத்துக்குள் ஹட்டியில் தொரியர் குடிலில் இருவர் பிளேக்குக்குப் பலியானார்கள். வியாழனன்று மாலை ரங்கியின் கைக்குழந்தைக்கு உடல் கதகதத்தது. வெள்ளி, சனி, ஞாயிறுக்குள் மளமளவென்று நோய் அவளுடைய மூன்று குழந்தைகளை விழுங்கி விட்டு, பாருவின் இரு மக்களையும் தொற்றியது.
ஊர் மக்கள் பீதியடைந்தார்கள். வேற்று ஊர்களுக்கு ஓடியவர்கள் சிலர்; வீட்டுச் சாமான்களை எரித்தவர்கள் சிலர்.
கரியமல்லர் குடும்பம் ஒத்தைக்கு நகர்ந்து விட்டது. மகா மாரி அடுத்தடுத்த அந்தப் பக்கத்து ஹட்டிகளை எல்லாம் பீடித்தது. மூக்கு மலை மாமன் வீட்டில் மாமனையும் மகனையும் தவிர, எல்லோரும் நோய்க்கு இரையாயினர். இறையவர் தீ காக்கும் பையன் பலியானான். தீயை அவித்துக் கோயிலை இழுத்து மூடிவிட்டார்கள்.
சிவந்த முகங்களுடன் படுத்திருந்த செல்வங்களைக் கண்டதும் பாருவின் வயிறு பற்றிக் கொண்டது.
“லட்சு என்றும், ஜயா என்றும் ஆசையாகப் பெயரிட்டேனே, அருமை மக்களே, உங்கள் வாழ்விலே தானே நான் மறைந்திருக்க எண்ணினேன்?” என்று துடித்தாள்.
மூன்று குழந்தைகளை அடுக்கடுக்காகப் பறிகொடுத்த ரங்கம்மை, வீட்டில் புகை கூடப் போட விரும்பாதவள் போல் உறங்கிக் கிடந்தாள்.
“அம்மா, அம்மா!” என்று குழந்தைகள் முனகினார்கள்.
பாரு என்ன செய்வாள்? தெய்வத்துக்குப் பூஜை போட்டும் பயனில்லையா? பாழும் நோய் பூவான மேனியிலா பற்ற வேண்டும்? இனி அவளுக்கு என்ன இருக்கிறது? நுனி மரத்துத் தளிரையும் பாழான பனி கருகிச் செல்ல விழுந்து விட்டதே!
அவளுடைய மௌனத் துயரத்தை ரங்கன் நெஞ்சில் உணர்ந்தான். கண்ணீருடன் எஸ்டேட் அருகிலுள்ள ஆஸ்பத்திரி மருத்துவரை அழைத்து வந்தான்.
“புலியையும் சிறுத்தையையும் விடக் கொடியதாயிற்றே; வருமுன் தடுக்க வேண்டும். பார்க்கிறேன்” என்று தான் மருத்துவர் மருந்து தந்தார்.
“என் குழந்தையைத் துடைத்து எடுத்துக் கொண்டு என்னை மட்டும் ஏனம்மா விடுகிறாய்? என்னையும் கொண்டு போ! எனக்கும் வரட்டும்!” என்று தன் குழந்தைகளை அணைத்தவளாகப் பாரு இரவைக் கழித்தாள்.
ஆனால், மாரியம்மை, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை அடக்கிக் கொண்டதும் அந்த வீட்டில் வேலையில்லை என்று போய்விட்டாள்.
பாரு, தன் வாழ்வில் அதை விடக் கொடிய நிகழ்ச்சி நேர்ந்திராத அதிர்ச்சியில் துடிதுடித்துக் கதறினாள்.
ஆறுதல் கூற மாதிக்கு நாவேது?
ஒரு வேளை, அந்த ஊசியைப் போட்டிருந்தால் குழந்தைகள் பிழைத்திருப்பார்களோ? ஒரு பிள்ளைக்காக ஏங்கி விழித்து அவள் காத்திருக்கையில் தெய்வம் இருந்த பூக்களைத் திருகிக் கொண்டு போகுமோ? இரு வீடுகளும் திடலாகப் போக வேண்டுமா?
தேன் போல் பாய்ந்த வெயிலை, கருணையின்றிக் கொளுத்தும் வெயிலாக வெறுத்து மறுத்தாள். நீலவானை நோக்கி அவளுடைய எரிந்த உள்ளம் சாபமிட்டது. “என் பிள்லை என் பிள்ளை என்று கொக்கரிக்கிறாயோ? இந்தச் சூரியன் போய் நீயும் பரிதவிப்பாய், வானமகளே!” என்று கதவைச் சாத்திக் கொண்டு, நாளெல்லாம் பாருவை அணைத்துக் கொண்டு மாதம்மை கதறினாள். ரங்கம்மை மிஞ்சிய குழந்தைகளுடனும் கணவனுடனும், கோத்தைப் பக்கம் உயிர் பிழைக்கப் போய்விட்டாள்.
ஹட்டியே பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சோடிப் போயிற்று. வெளிச்சிட்ட கிராமத்திலே, கடமையைக் கருதி, முதியவனையும் தமக்கையையும் தேற்றுபவளாக, இரு குடும்பத்து ஆண்மக்களுக்கும் உணவு வட்டிப்பவளாக, அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக ஓடி உயிர் கொடுத்துக் கொண்டிருந்தவள், கிரிஜை ஒருத்திதான்.
கடுங் காய்ச்சல் அடித்த பின் நாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்கும் சுரணை வந்து, புது இரத்தம் பிடிக்கும் உடலைப் போல், இயற்கையன்னை, கடும் பனிக்குப் பிறகும், பச்சை பிடிக்கலானாள்.
மிதிக்கும் திருநாள் நடத்திப் பூமி திருப்புவதில் எல்லோரும் முனைந்தார்கள். வெளியேறியிருந்த குடும்பத்தினர் திரும்பி வந்து சுண்ணாம்பும் காரைமட்டு வீடுகளைப் புதுப்பித்தார்கள். ஐயன் கோயிலுக்குப் புதுப் பூசாரி வந்து விட்டான். இம்முறை உள்ளூர் ராமியின் மகனே பூசாரியாக நியமனமானான்.
காலத்தைப் போல் மனப்புண்ணை ஆற்றவல்லவர் எவர் உண்டு? மாதி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டாள். ரங்கம்மை கூட, இறந்த குழந்தைகளை மறந்து விட்டாள். அந்தக் காலதேவரின் அறையின் அதிர்விலே மூளை கலங்கி விட்டாற் போல் ஓய்ந்தவள் பாருதான். சோறில்லாமல், நீரில்லாமல், தலைவாராமல் உட்கார்ந்து ஏக்கப் பெருமூச்சிலே இரவும் பகலும் தெரியாமல் கழித்தாள்.
ரங்கன் தேயிலை பயிரிடத் தொடங்கிய பிறகு, ஒத்தைப் பக்கம் கிழங்கு விளைவிக்கும் பூமி குத்தகை எடுக்கச் செல்லவில்லை. மரம் அறுக்கும் குத்தகை எடுத்திருந்தான். சீமை உரம் வாங்கி, ஜோகியின் விளை நிலங்களில் கிழங்கும் கோசு வகைகளும் கோதுமையும் பயிரிட உதவி புரிந்தான். வீட்டிலே, அவனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர் எவரும் இல்லை.
தந்தைதாம் உறங்கியே ஓய்ந்துவிட்டாரே! முன்போல இசை ஏது? நடனம் ஏது? சடங்கு ஏது? சம்பிரதாயம் ஏது? இரண்டாண்டுக் காலத்திலே சமுதாயமே மாறிவிட்டதே! பெரும்பான்மையான இடங்களில் கோத்தரைச் சேர்ப்பதே அநாகரிகம் என்றல்லவோ, இசையையே ஒதுக்கி விட்டார்கள்.
தந்தை தாம் ஓய்ந்து போனார்.
பாரு! மனைவி, அவனை ஏறெடுத்துப் பார்த்தாளா? அவள் முகத்தில் மலர்ச்சியே மாய்ந்துவிட்டது. தங்க ரேக்கான மேனி நிறம் மங்கிவிட்டது. கண்களைச் சுற்றிக் கருவளையம் விழ, கன்னத்தெலும்பு முட்ட, உதடுகள் வறண்டு வெடிக்க, அவன் கனவு கண்டு மணந்த பாருவா அவள்? வாலிபர்களின் மனத்தில் ஒரு காலத்தில் சலனத்தைத் தோற்றுவித்த பாருவா?
சூதும் போதையுங் கூட மற்ந்து, போட்டி வெறியிலே, பச்சையை விளைவித்துப் பணத்தைப் பெருக்க அவன் திட்டமிட்டிருந்தான். அத்தகையவனுக்கு அன்று பாருவைக் காண்கையிலே இரக்கம் உண்டாயிற்று.
கன்னிப்பருவத்திலே அவள் கருத்தை வைத்தவனிடமிருந்து பிரித்து அவளை மனைவியாக்கிக் கொண்டானே, உண்மையில் காதலோடு, அவனுடன் அவள் இணைந்து வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாட்கள்?
இன்னும் புது மணம் புரிந்த மங்கை போல், குழந்தைக் குறுகுறுப்பும் யௌவனத்தின் மினுமினுப்பும் குன்றாமல், கணவன் தன்னை நோக்கும் போதெல்லாம் நாணித் தாழும் விழிகளை உடையவளாய், சுறுசுறுப்புடன் கிரிஜையை அவன் காணவில்லையா? ஜோகி, அவளைக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்! இருவரும் சேர்ந்து மண்ணில் வேலை செய்கையில், இன்னமும் சிரிக்கவும் கண்கள் பளபளக்க நோக்கவும் அவர்களுக்குப் புதுமை அழியாமல் இருக்கிறதே!
அங்கே வந்து நெருங்கிப் பழக ஆரம்பித்த பின்புதான் அவனுக்கு அதுவரை தோன்றாத எண்ணங்களெல்லாம் தோன்றின. மனைவி பற்றிய ஆற்றாமை புதிதாக உரைத்தது.
கிரிஜையிடமும் ஜோகியிடமும் அவன் கண்ட சிறப்புக்களில் ஓர் அம்சங்கூடப் பாருவிடம் நெருங்கி வாழ்ந்த புதுமண நாட்களில் காணவில்லை. அவள் கண்களில் விள்ள முடியாத இரகசியங்களையோ, சிரிப்பிலே அவனைச் சிலிர்க்க வைக்கக் கூடிய கவர்ச்சியோ ஒருநாள் கூட அவன் காணவில்லை. அவர்களுடைய இல்லற வாழ்வின் பயனாக உதித்த செல்வங்களை, இறைவன் வளர்ந்தும் வளராமலும் எடுத்துக் கொண்டான். ஆனால் பனிக்காலத்தில் பட்ட மரம், வசந்தம் வந்ததும் தளிர்க்கவில்லையா? பூக்கவில்லையா?
“பாரு, ரங்கம்மா இல்லையானால், எனக்குச் சாப்பாடு வைக்கக் கூடாதா? குளித்து முழுகிச் சுத்தமாக இருக்கக் கூடாதா?” என்றான்.
அவன் குரலில் ஆதுரம் இருந்தது.
அவள் சூனியத்தில் லயித்தபடி அவனுக்குச் சோறு படைத்தாள்.
ரங்கம்மையின் மகன் வந்து உட்கார்ந்தான். மூத்தவனான அவனுக்குப் பதினைந்து பிராயம் இருக்கும். கவடில்லாத இளம்பிள்ளை; மாமனுக்கு உதவியாகத் தோட்டத்துக்குப் போய் முண்டனாக உழைக்கக் கற்று வரும் பையன். காரோட்டக் கற்க வேண்டுமென்பது அவனுடைய ஆசை. குடும்பம், கலகலப்பு இரண்டும் அவனுக்கு வேண்டும்.
வட்டிலில் ஒருவருக்குள்ள அளவே பாரு சோறு வைத்திருந்தாள்.
“என்ன ராமா? உட்கார், ஏன் பார்க்கிறாய்?” என்றான் மாமன்.
“இல்லை, மாமி என்னை மறந்துவிட்டார்கள். ஜயாவும் லட்சுமியும் போன பின்பு நான் அவர்களுக்குப் பொருட்டாகத் தோன்றவில்லை. மாமி, நீங்கள் இனிமேல் பெண் பெற்றுத் தந்தாலும் நான் கட்டுவேன். என்னை மறந்து விடாதீர்கள்” என்று சிரித்தான் அவன்.
மாமியிடம் தனியான பிரியம் அவனுக்கு உண்டு. அவளுடைய சோகம் சூழ்ந்த முகத்தை மலர வைக்கும் முயற்சியில், அவன் தினமும் பேசித்தான் பார்க்கிறான். ஆனால் அவள் அவற்றுக்கெல்லாம் அப்பால் இருந்தாள். தன் எல்லை வரையிலும் வருவதற்கு எவர்க்கும் சக்தி இல்லை என்பதுபோல், தான் வகுத்துக் கொண்ட கோட்டைத் தாண்டியே வருவதில்லை.
“என்ன மாமி, பேசாமல் இருக்கிறீர்களே? உங்கள் பூமியில், மாமன் கால் வைக்கக் கூட நான் சம்மதிக்கவில்லை. நீங்கள் இப்போது எனக்குச் சோறு வைக்க மறந்தது இருக்கட்டும். பூமியை மறந்து விட்டீர்களே! முள்ளுச் செடிகள் முளைத்து விட்டன. இத்தனை வருஷத்துக்குப் பிறகு, பாவம் அவையும் முளைக்கட்டும் என்று விட்டீர்களா?” என்றான் பையன்.
குழம்பை ஊற்ற வந்தவளுக்கு, மண் என்ற பேச்சைக் கேட்டதும் திடுக்கிட்டாற் போல் கை அதிர்ந்தது.
ஆம் அவள் சோகத்தில் உயிருக்கு உயிரான மண்ணைக் கூட மறந்தாளே! காற்றும் நீரும் போல் அவள் வாழ்விலே கலந்திருந்த மண்ணை மூன்று நான்கு மாத காலமாக மறந்து விட்டாளே? சென்ற தடவை, ஒன்றுக்கு ஒன்பதல்லவா அவளுக்கு அந்த மண் வாரி வழங்கியிருந்தது?
ஏதோ ஒரு மயக்க நிலையிலிருந்து அவள் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டாற் போல் பரபரத்தாள். அப்போதே கைப்பாத்திரத்தை நழுவவிட்டு ஓட வேண்டும் போல் மனசில் பதற்றமும் உண்டாயிற்று.
“பார்த்தீர்களா மாமா? மண் என்றதும் மாமிக்குப் பரபரப்பு வருகிறது. கவலைப்படாதீர்கள் மாமி, நான் முள்ளுச் செடிகளை வெட்டி, முள் போட்டுத் திருப்பியிருக்கிறேன். மாமி, அதில் ஓர் ஆரஞ்சு மரம் வையுங்கள் உங்கள் கையால்” என்றான் மருமகன்.
பாருவுக்கு உடனே அந்தக் கருப்பு மண்ணின் நினைவு ஓடியது. உடனே, “நல்ல கன்றாகக் கொண்டு வைக்க வேண்டும். எனக்கு நிசமாகவே ஆரஞ்சு வைக்கும் ஆசை வெகுநாட்களாக” என்றாள்.
உடனே ரங்கன், “ஒன்றென்ன, பத்துப் பதினைந்தே வைப்போம். நல்ல சீனி போல் இனிக்கும் ஒட்டுக்கன்று நான் வாங்கி வருகிறேன்” என்றான்.
“ஒன்று போதும்” என்றாள் பாரு.
“அந்தப் பழத்தை உங்கள் மகள் எனக்கு உரித்துக் கொடுப்பாள்; இல்லையா மாமி” என்று சிரித்துக் கொண்டே ராமன் கைகழுவச் சென்றான்.
ரங்கன் மலர்ந்து சிரிக்கையில் பாரு, “என் மகளல்ல, உன் மாமன் மகள்” என்றாள் சிரிக்காமலே.
ரங்கன் உண்டு புகை குடித்துச் சிறிது நேரம் வெளிப்பக்கம் சென்றிருந்தான். பின்பு புறமனைக்கு வந்தான்.
ரங்கம்மை, குழந்தைகள், புருஷன், எல்லாரும் உள்மனையில் படுத்து உறங்கி விட்டனர். ராமன் நடு வழியில் கட்டை போல் குறட்டை விட்டான். கவடில்லாத பையன். கூச்சமின்றி மாமியிடம் கேலி மொழிந்தான்.
அவள் உன் மாமன் மகள் என்றாளே! என்ன பொருள் அதற்கு? அவளுக்கு மனைவியாக நடந்து கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா? இல்லையா? மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்த ரங்கம்மை அதை மறந்தே போய்க் கணவனுடன் நெருங்கிச் சிரித்துப் பேசி மகிழ்கிறாள். குழந்தைகளே பெறாத கிரிஜை, அலுத்துக் கொள்ளவில்லை.
அவள் என்ன நினைக்கிறாள்?
பலவிதமான போதைகளுக்கும் பழக்கமான அவன் உள்ளம் நினைத்த மாத்திரத்தில் சீறி சினந்தது.
எழுந்து படுத்தவர்களைத் தாண்டிப் பின்புறம் வந்தான். அடுப்படியில் சாக்கு விரித்திருந்தது. தடித்த கம்பளி ஒன்று இருந்தது.
பாரு படுக்கவில்லை. உட்கார்ந்திருந்தாள்.
இருளில் அவள் முகம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், வாழ்விலே ஏமாற்றம் கண்ட தனி உருவமோ? சோகத்தின் தனிச் சிலையோ?
சினந்து சீறி வந்தவனின் உடலில் சிலிர்ப்பு ஓடியது.
முதல் முறையாக அவன், தான் அவளுக்குத் தீங்கிழைத்து விட்டானோ என்று நினைத்தான். முரட்டுத்தனமாக பூவான அவளைக் கசக்கி விட்டானோ என்ற எண்ணத்துக்கு முதல் முதலாக அவன் நெஞ்சம் இடம் கொடுத்தது.
இந்த எண்ணம் தோன்றியவுடன் பல உண்மைகள் அவனுள் முட்டின. அதே வீட்டில், அவனுடைய சிற்றன்னை தந்தையிடமிருந்து பிரிந்து போய்விடவில்லையா? அவன் நட்புக் கொண்டிருக்கும் கௌரி கணவனிடமிருந்து பிரிந்து வந்திருக்கவில்லையா? பாரு ஏன் அவ்விதம் நடக்கவில்லை? அந்த வீட்டை விட்டு அவள் பிரிந்து போகும் விருப்பத்தைக் கூடக் காட்டவில்லையே! கிரிஜையேனும் ஜோகியுடன் அடிக்கடி மணிக்கல்லட்டிப் பிறந்தகத்துக்குச் செல்வாள். இவள் ஏன் செல்வதில்லை?
பாரு, சாதாரணமாக அவன் பார்க்கும் பெண்களைப் போன்றவள் அல்லள். மனைவியிடம் நிறைவு காணாதவனாக வேறு மங்கையை நாடிச் செல்லும் அவனைப் போன்றவளும் அல்ல அவள். பின்?
அபாண்டமாகத்தானே அவன் கிருஷ்ணனின் மீது விரசமாகப் பழி சுமத்தினான்! அவன் நெஞ்சுக்குத் தெரியும், பாருவின் தூய்மை குறித்து.
பாருவை எப்படி நினைத்தாலும் அவனால் அவள் மீது நெஞ்சாரக் களங்கம் நினைக்கும் துணிவில்லை. வழிகள் இருந்தும் அவள் நெறி நிற்பவளே.
ஆனால், ரங்கன் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, அடிமேல் அடி வைத்து, அவளருகில் சென்று அமர்ந்தான்.
தலையில் வட்டில்லை. அரை முண்டும் போர்வையுமாக குந்தியிருந்தவளுக்குத் திடுக்கிட்டாற் போலத் தூக்கி வாரிப் போட்டது. இருளிலே வஞ்சகமாக எவரேனும் வந்திருப்பாரோ என்ற அதிர்வோ?
மெல்ல அவள் காதருகில் குனிந்து, “நான் தான் பாரு. நீ இப்படி எதற்காக வருத்தம் காக்கிறாய்? இதோ பார், பாரு” என்று அவள் கையை மெல்லப் பற்றினான்.
“வேண்டாம்” என்றாள் அவள். அவன் பிடியில் இருந்த கையின் அசைவு கண்டு, அவள் உடல் அதிர்ந்து குலுங்கியது அவனுக்கு புரிந்தது.
“என்ன வேண்டாம் பாரு? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவே. மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்த ரங்கம்மை மறக்கவில்லையா?” என்றான். அவனுக்கே குரல் தழுதழுத்தது.
அவள் அவன் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறவில்லை. எங்கோ நோக்குபவளாக, “நீங்கள் கௌரியைக் கட்டிக் கொள்ளுங்கள்” என்றாள்.
“பாரு!”
“உண்மைதான். அடுத்த மாதத்துக்குள் அவளை அழைத்து வந்துவிடுங்கள்.”
“இதெல்லாம் என்ன பாரு?”
“நீங்கள் கௌரியை நாடிப் போவது நிசந்தானே?”
அவன் தயங்கினான்; தடுமாறினான்; பிறகு ஒப்புக் கொண்டான்.
“பாரு? உனக்கு அதனால் கோபமா? உனக்கு இந்த வீட்டிலிருக்க விருப்பமில்லையா பாரு?”
“நான் அப்படியா சொன்னேன்?”
“பின், எனக்கு விளங்கவில்லையே?”
“எனக்கு அந்த மண் போதும் வாழ்வுக்கு.”
“நான் கௌரியை விலக்க வேண்டுமென்றாலும் விலக்கி விடுகிறேன். நீ ஏன் இப்படிப் பேசுகிறாய் பாரு? என்னை உன் முன்பு இன்று குற்றவாளியாக உணருகிறேன், பாரு.”
“இல்லை, நான் தான் குற்றவாளி. பிறர் எருமைகள் நிறையப் பால் தந்தால், பிறர் பூமி பசுமையாக விளைந்தால், பொறாமைக் கண்களுடன் காண்பது பாவம் என்று நம் பெரியோர் சொல்வார்கள். நான் பிறர் வாழ்வைக் கண்டு பொறாமைப் பட்டேன். பிறர் மக்களைக் கண்டு பொறாமைப்பட்டேன். என் குழந்தைகளை மாரித்தாய் எடுத்துக் கொண்டாள். நான் இனியும் குழந்தை வேண்டுமென்ரு ஆசைப்பட்டால், பொறாமையும் வரும். என் ஆசை மீறிப் போகும் போதெல்லாம் தெய்வம் அடித்து விடுகிறது. எனக்கு இனி ஒன்றும் வேண்டாம். கௌரியைக் கூட்டி வாருங்கள்.”
“பாரு!”
அவனுக்கே அவன் குரல் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.
“நான்... நான் அறியாமல் உன் மனசைக் கசக்கி எறிந்து விட்டேன். நீ இவ்வளவு மென்மையுள்ளவளாக இருப்பாய் என்று அறியாத முரடனாக இருந்து விட்டேன். என்னை வெறுக்கிறாயா பாரு? இவனால் என் வாழ்வு கெட்டது என்று வெறுக்கிறாயா பாரு?”
அவன் மனசின் ஒரு மூலையிலும் மென்மை இல்லை என்பது பொய். அவனாலும் ஒரு கணமேனும் தன்னை வெல்லும் கீழ்த்தர உணர்வுகளை ஒதுக்கிப் பேச முடியும் என்பதைப் புரிந்து கொண்ட அவள் பார்வை ஒளி வெள்ளமாகத் திகழ்ந்தது.
“நான் உங்களை ஏன் வெறுக்கிறேன்? நீங்கள் முறையில்லாமல் என்னைக் கட்டினீர்களா? பல பேர் அறியப் பந்தயத்தில் வென்றீர்கள்; என்னை உரிமையாக்கிக் கொண்டீர்கள்.”
“ஆனால் பந்தயம் என்னால் ஏற்பட்டதுதானே?”
“கடந்து போனதை ஏன் நினைக்கிறீர்கள்? தலைவிதி என்று ஒன்றில்லை?” அவளுடைய கைகள் இரண்டையும் அவன் சேர்த்துக் கொண்டான். ஆத்திரமா, கோபமா, பச்சாத்தாபமா என்பது அவனுக்கே புரியாமல் படபடப்பு உண்டாயிற்று.
“பாரு, என்னை விரும்பி ஒருநாள் கூட நீ சந்தோஷமாக இருந்ததில்லையே?” தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் துடித்த இருதயத்தின் குரல் அது. கிருஷ்ணனை வெற்றி கண்டதாக அவன் அதுவரை தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தானா? அவள் காதலோடு தன்னிடம் வாழவில்லை என்பது ஒன்றே போதாதா? ஒரு வேளை இதை உணர்ந்துதான் அந்தக் கிருஷ்ணன் வெற்றியுடன் எக்களிக்கிறானோ?
பொறாமையின் ஆதிக்கத்திலுள்ள மனத்துக்கு, இன்ன வழியில் தான் சிந்தை செல்வது என்ற தெளிவு ஏது?
“இதையெல்லாம் இப்போது ஏன் கேட்கிறீர்கள்? நாம் நேற்றுத்தான் மணம் புரிந்து கொண்டோமா?” என்றாள் பாரு.
“நான் கேட்டதற்குப் பதில் சொல். இவனோடு வாழ்ந்தது போதும் என்று நீ விலக விரும்புகிறாயா? எனக்கு மனைவியாக வந்தும் என்னை ஏமாற்றி விட்டாய். கடனே என்று இந்த வீட்டிலே நீ பாசமின்றி வாழ்வாய். அப்படித்தானே?”
அவன் குரலில் வெறியின் சூடு ஏறியது.
கண்கள் நீரைச் சிந்த, “என்னை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? தெரிந்து கொண்டு ஏன் குத்துகிறீர்கள் நெஞ்சை?” என்றாள் பாரு.
“பழிகாரி!” என்று அவள் கைகளை உதறிவிட்டு அவன் எழுந்தான். புறமனையில் வந்து படுத்த அவனுக்கு ஆத்திரமும் கொந்தளிப்பும் அடங்கவில்லை.
அவன் கெஞ்சியும் கரைந்தும் கூட, அவனுடைய பொறாமை வசப்பட்ட உள்ளம் சற்றேனும் பொய்யாறுதல் கொள்ளக் கூட, அவள் இதமாகப் பேசவில்லை. கல் நெஞ்சுக்காரி!
துடிதுடித்த நெஞ்சுடன் நெருப்பைக் கிழித்துக் கொண்டு தானியப் பெட்டியைத் தேடிப் போனான்; பெட்டிக்குள் புதைத்து வைத்திருந்த மதுப்புட்டியை எடுத்தான். தோல்வியை மறக்க மதுவருந்திய அவன், மறுநாளே கௌரியை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டான்.
மறுநாள் காலையின் உதயத்தை, பாரு அந்த வீட்டுக்குள்ளிருந்து வரவேற்கவில்லை. குளிர்ந்த மண்ணின் ஸ்பரிசம் கால்களின் வழியே பாய்ந்து உடலைச் சிலிர்க்கச் செய்ய, கீழ்த்திசையில் பொங்கி வந்த கதிர்ச் செல்வனைக் கண்டாள்.
புது நம்பிக்கை; புதிய ஒளி; புது வாழ்வு!
தன்னை மறந்து விளைநிலத்தில் நின்றவள் இரு கைகளாலும் மண்ணை வாரினாள்.
இதுவே என் உயிரின் சாரம்; வாழ்வின் இன்பம்; மண், என் அம்மை, என் குழந்தை, எல்லாம் இதுவே. என்னை இது வஞ்சகம் செய்யாது! தீயும் நோயும் இதை என்னிடமிருந்து பிரிக்க முடியாது; பிடுங்கி விட முடியாது; என் மண்.
ஆக்கி அழித்துப் பல திருவிளையாடல்களைப் புரிந்து கொண்டு செல்லும் காலதேவனுக்கு அலுப்போ சலிப்போ ஏது? உருண்டு உருண்டு பருவங்களாகிய சக்கரங்களில் மாறி மாறிச் சுழன்று செல்லுபவன், சென்ற தடத்தையும் திரும்பி நோக்குபவன் அல்லவே? மாதியின் தலைமுடி வெள்ளி இழைகள் ஆகிவிட்டன. கைகளும் கால்களும் சுள்ளிகளாகக் காய, தோலிலே எண்ணற்ற சுருக்கங்கள் விழுந்துவிட்டன. எதிர்மனையில் ரங்கம்மை மகன் இராமன் இளங்காளையாகி விட்டான். தேயிலை வைத்த ரங்கன், பச்சையைப் பணமாய்க் காணத் தொடங்கி விட்டான். சரக்கேற்றிச் செல்ல, ஆறாயிரத்துக்கு லாரி வாங்கியாயிற்று. வீட்டை இடித்து, நீட்டி, வசதியாகக் கட்டி விட்டான். கௌரி, அந்த வீட்டுக்கு வந்ததுமே மணிமணியாக இரு பிள்ளைகளைப் பெற்று விட்டாள். சில ஆண்டுகளில் எத்தனை மாறுதல்கள்!
தெய்வம் வஞ்சித்தது என்று மாதி நினைத்தாளே! கவடறியாத மகன் ஜோகியை, அப்பனுமா வஞ்சிக்கிறான்? எதிர்மனையிலே, அந்த மகனுக்குப் பிள்ளையாகி விட்டனா? ஒருவேளை அவன், அவர் மகனோ? அவள் மகன் அவர் மகனோ?
முதுமையும் ஏமாற்றமும் நெஞ்சை நையச் செய்து விட்டனவே! இந்த ஏமாற்றத்துடனேயே இவள் மட்கி மடிய வேண்டியவள்தானோ? ஐந்து குறிஞ்சிகளைக் கண்ட அவள் அந்த வீட்டிலே மழலை ஒலி தரும் எதிர்கால நம்பிக்கையைக் காணப் போவதே இல்லையா?
சகலாத்திப் பண்டிகை வந்து விட்டது. ஹட்டி வீடுகளெல்லாம் மெழுகிப் புதுப்பிக்கப்பட்டு விட்டன. மாலை அழகழகான கோலங்களை, வீட்டு முற்றம் முழுவதும் பெண்கள் வரைந்தார்கள்.
மாதி இளம் மருமகளாக இருந்த காலத்தில் வெண்மையான சாம்பலைத்தான் கோலமிட உபயோகித்திருக்கிறாள். முற்காலத்துப் பெண்களா கௌரியும் மற்றவர்களும்? ஹட்டிப் பெண்களில் எத்தனை பேர் சேலை உடுத்துச் சொகுசுக்காரிகளாக மாறிவிட்டனர்? ஒத்தைக்கு அணியணியாக ஹட்டிப் பெண்கள் கிளம்பி விடுகிறார்களே, பந்தயம் பார்க்கவும், என்ன என்னவோ ஆட்டங்கள் பார்க்கவும்?
எதிர் வீட்டுக் கௌரி, மருமகன் ராமன் லாரி ஓட்டிப் போக, ஒரு செவ்வாய்க்கிழமை மீது இல்லாமல் ஒத்தை செல்கிறாளே! ஆனால், அவள் வீட்டில் என்ன உண்டு? அதே சாமை, அதே கோதுமை, அதே உழைப்பு. அவள் மகன், மருமகள் இருவருக்கும் வாழ்வு அலுக்கவே இல்லையே!
கோதுமைத் தோசை சுட்டு அடுக்கி வைத்து, சோறும் வெண்ணையும் நடுவே வைத்து, ஆமணக்கு நெய்யில் முக்கிய மூன்று திரிகள் அதில் பொறுத்தி எரிய, குழந்தைகளை உட்கார்த்தி வைத்து, சுற்றித் திருஷ்டி கழிப்பார்கள் சகலாத்தியன்று. பிறகு அந்தத் தோசையை விளைநிலத்தில் வீசி விட்டு வந்து, இறைவனைத் துதிப்பார்கள்.
குழந்தைகள் இல்லாத வீட்டிலே பண்டிகைக்கும் பருவத்துக்கும் ஏது மவுசு?
ஜோகி ஒரு வழிபாட்டையும் குறைப்பவனல்ல. மாலை, நிலத்தில் கோதுமை தோசையை வீசி விட்டு வந்த பின் தீபத்தின் கீழ் உட்கார்ந்து இறைவனைத் துதிக்கலானான்.
கண்களை மூடியவளாக, மாதி புறமனையில் படுத்திருந்தாள். அவனுடைய பிரார்த்தனையில் ரஞ்சகமான ஒலி, அவளுடைய செவிகளில் இனிமையாக விழுந்து கொண்டிருந்தது. அன்னையின் மடி இதம் போல், அது அவள் ஓய்ந்த நரம்புகளைத் தாலாட்டினாற் போல் இருந்தது. மெல்ல மெல்ல அவள் தன் நினைவு மறந்து உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாளா? அதை உறக்கமென்றும் சொல்வதற்கில்லை.
எங்கேயோ மக்கள் போய்க் கொண்டிருந்தார்கள். படை திரண்டு போகிறதோ? இல்லை. மங்கையர் பட்டாளமா என்ன? வட்டும் முண்டும் அணிந்தவர்கள் அல்ல, வண்ண வண்ணத் துகில்கள்; கைகளிலே கங்கணங்கள், நெற்றியில் மங்கலப் பொட்டுக்கள். ஓடி ஓடி ஓடி ஒரு மங்கை நல்லாள் முன்னே கொற்றவை போல வருகிறாள். பின்னே, அவர்களைத் தொடர்ந்து குதிரைகளில் கத்தி ஏந்திய சிப்பாய்களின் பட்டாளமல்லவோ துரத்துகிறது.
முன்னே ஆற்றைத் தாண்டி மாதரசி, தொலைவில் தெரிந்த கோபுரத்தை நோக்குகிறாள். கரமலர் குவிய, கண்ணிதழ் நனைய இதயம் உருக, “ஆலமுண்ட அரனே, அம்மையே, எங்களைக் காப்பாற்றுங்கள்; நஞ்சுண்ட நாயகனே, நாயகியே, நதி தாண்டி அவர்கள் வராமலிருக்கச் செய்யுங்கள்; கண்டம் கறுத்த பிரானே, கயவர்களுக்கு உதவுவீரோ?” என்று புலம்பித் துதிக்கிறாள், துடிக்கிறாள்.
என்ன அதிசயம், ஆற்றிலே அரசன் சடையிலிருந்து பொங்கு வரும் கங்கையைப் போல அல்லவோ வெள்ளம் புரண்டு அலைமோதி வருகிறது! சீறிப் புரண்டு பொங்கி நுரைத்து வருவது புது வெள்ளமோ? அன்றி, ஏறுடைய பெம்மானின் அருள் வெள்ளந்தானோ?
காற்றாய்க் கடுகி வந்த அசுவங்கள், அடித்துப் புடைத்து வரும் வெள்ளம் கண்டு மருண்டு நிற்கின்றன. மங்கையரின் கண்கள் நன்றியால் பளபளக்க, அந்தப் பஸவேசனை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். கணகணவென்று மணிகள் ஒலிக்கின்றன; தூபம் கமழ்கிறது.
மாதி சட்டென்று இந்தக் கட்டத்தில் விழித்துக் கொண்டாள். மணி ஒலியும், பிரார்த்தனை ஒலியும்! ஜோகி விளக்கின் முன், அரனுக்குச் செய்யும் பிரார்த்தனை என்று அவளுக்குத் தெரிவாயிற்று.
பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். உள்ளத்தின் பேரின்ப உணர்வைச் சொல்லத் தரமில்லை.
‘ஹா நஞ்சுண்டேசுவரா! உன் கருணையே கருணை! ‘ஏன் கலங்குகிறாய்! நான் இருக்கிறேன். என்னை மறந்தாயோ?’ என்று காட்டவோ, எனக்குக் கனவு போல் அந்தக் காட்சியைக் காட்டினாய்? உன் குலத்தோரின் தெய்வம் நானென்று, மறந்து போன இந்த அஞ்ஞானிக்கும் நீ நினைவு மூட்டினாயே! உன் கருணையை எப்படிப் புகழ்வேன்?’ என்று வியந்து கண்களில் நீர் பெருக, ஓடி வந்த அம்மை, விளக்கின் முன் விழுந்து பணிந்தாள்.
“ஜோகி, ஈசுவரன் அருள் செய்தான். நஞ்சுண்டேசுவரரின் கோயிலுக்கு வருவோம் என்று வேண்டி, வெள்ளிப் பணம் முடிந்து வையுங்கள். கிரிஜை, விழுந்து கும்பிடம்மா” என்றாள்.
ஜோகி வியப்புடன் அம்மையை நோக்கினான். “அம்மா!”
“ஆமாம், மகனே. கனவு போல்க் காட்சி கண்டேன். ஆறு தாண்டி அம்மை வரவும் ஆற்றிலே தண்ணீர் பொங்கி வர, சிப்பாயும் குதிரையும் மடங்கிச் சென்றதையும் கண்டேன். ஆலமுண்ட ஐயனை நாம் மறந்துவிட்டு, பையன் இல்லையே என்று வருந்தினோம். ஈசுவரர் நினைவு மூட்டினார்” என்றாள் பரவசமாக.
ஜோகியும் கிரிஜையும் நஞ்சுண்ட ஈசுவரன் கோயில் உள்ள திசை நோக்கி வணங்கி, வெள்ளிப் பணம் முடிந்து வைத்தார்கள்.
நம்பினோர் கெடுவதில்லை அல்லவா? மண வாழ்வின் பல ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பூவை பிள்ளைக்கனியொன்றை ஈன்றெடுக்கும் சின்னங்களைப் பெற்றாள். முதியவளின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை ஏது? ஜோகியின் ஆனந்தத்துக்கு வரம்பு ஏது? குழந்தைக்குக் குறுகுறுப்புடன் ஓடியாடும் கிரிஜையின் முகத்தில் தனித்த ஒரு சோபை உண்டாயிற்று. சொல்லுக்கு அடங்காத நாணமும் நிறைவும் வதனத்தில் குடி கொண்டன. பாருவும் இந்த மாறுதலைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாள். பிரிவு காரணமாகப் பேசாமல் ஒதுங்கிய பெண்கள் கூட, அதிசயம் போல், புதுப்பெண்ணைச் சூழ்வது போல், கிரிஜையைச் சூழ்ந்து கொண்டு, கேலி செய்து மகிழ்ந்தார்கள்.
ஆனந்த மிகுதியிலே மாதி, பெண்ணை அழைத்துப் பாயாசமும் சோறும் சமைத்துப் பல நாட்களுக்குப் பின்பு விருந்திட்டு மகிழ்ந்தார்கள்.
சாதாரணமாக ‘கண்ணிகட்டும்’ வைபவமும், முதல் முறை பெண் சூலியாக இருக்கும் போதே நிகழ்த்துவது அந்த நாளைய வழக்கம். ஆனால், லிங்கையா, தம் மகனின் மனைவியின் போதே அந்த மாறுதலைப் புகுத்தி விட்டார். அன்று கிரிஜை மணப்பெண்ணாக மங்கல நீர் கொண்டு அந்த இல்லம் புகுந்த அன்றே மங்கல சூத்திரத்தை ஜோகி அவள் கழுத்தில் முடிந்து விட்டான். எனவே விருந்துடன் களிப்பைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அந்த வீட்டில் எந்த வைபவம் என்றாலும், முதலில் வரும் கரியமல்லர் குடும்பம் மட்டும், அன்று ஹட்டியிலேயே இருக்கவில்லை.
திங்கள் பத்தும் சென்றன.
கார்காலத் துவக்கத்தில் வானடைத்துக் கொட்டிக் கொண்டிருந்த நாள் ஒன்றில் கிரிஜைக்கு நோவு கண்டது.
மணிக்கல்லட்டியிலிருந்து அம்மை பறந்து வந்தால். முதிய பெண்டிரும் இளைய பெண்களும் ஆவலே உருவாக அவர்கள் மனையின் முன் குழுமி விட்டனர்.
வான் அடைத்துக் கொண்டிருந்தது. இரவு பகலாக பகல் இரவாக நீண்டது. துவண்ட கொடியாக, தாய்மையின் வேதனையை, தலையாய நோவை அனுபவித்த பேதைக்குப் போது விடிவதாகவே இல்லை. ஜோகியின் உள்ளம் ஆவல், நம்பிக்கை என்ற அந்தரக் கயிறுகளில் ஊசலாடித் தவித்தது.
நாட்கள் நான்காயின. ரங்கன் எஸ்டேட் பக்கம் சென்று, மருத்துவரைப் பார்க்கத் தேடினான். அங்கே அவனுக்கு, கத்தோலிக்க வெள்ளைக் கிழவி, ‘வுட்’ கிடைத்தாள். மதத்தின் பேரிலே மனிதகுலத்துக்குச் சேவை புரியப் பல்லாயிரக் கணக்கான மைல்கள் தாண்டி வந்திருந்த கிழவி அவசியமான பொருட்களுடன் வண்டியில் ஏறிக் கொண்டு ரங்கனுடன் வந்தாள்.
ஹட்டியில், அந்தக் கொட்டும் மழையிலே, ‘வேதத்தில் எல்லோரையும் சேர்க்கும் வெள்ளைக்காரக் கிழவி’ என்று அனைவரும் மருண்ட கிழவி வந்ததும், மாதி உட்பட எல்லாரும் எதிர்த்தனர். ரங்கன் ஒரே அதட்டலில் அவர்களை அடக்கினான். வெள்ளைக்காரி, நிலைமை தேர்ச்சி பெற்ற மருத்துவருக்கும் சமாளிக்கக் கடினமான நிலைக்குப் போயிருப்பதை உணர்ந்தாள்.
சிறிய உயிர் போனாலும் பெரிய உயிர் நின்றால் போதும் என்ற எண்ணத்துடன் ‘வுட்’ கிழவி அவளை ஒத்தை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போகலாம் என்று ரங்கனிடம் மொழிந்ததும், ஜோகி வெலவெலத்து நின்றான். ரங்கன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ததும், ஜோகி மேற்குத் திசை நோக்கி, “ஈசனே, நீ அளிக்கும் பிச்சை, மோசம் செய்துவிடாதே!” என்று கைகுவித்தான்.
மாதி அலைபாயும் நெஞ்சத்துடன் மறுகினாள். போஜன் மனைவி ஆஸ்பத்திரி சென்று, அதுபோல...
ஆனால், கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்காரரை அழைத்து வந்து ஊசிகள் போட்டான். ஊராருக்கு, ஊசிகள் போடாத பாருவின் மக்களைத் தெய்வம் கொண்டு போயிற்றே! தன் நினைவற்ற கிரிஜை, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
அறைக்கதவு மூடியிருக்க, வெளியே தவித்த அத்தனை நெஞ்சங்களுக்கும், நான்கு மணி நேரத்துக்குப் பின்பு, மழையொலியின் நடுவே தேன் பீறல்களாகக் குழந்தையின் ஒலி கேட்டது.
கதவு படாரென்று திறந்தது. வெள்ளையுடைத் தாதியின் முகம் தெரியும் முன் மாதி ஆவலே உருவாக உள்ளே பாயத் தாவினாள்.
“ஆண் குழந்தை...” என்று கூறிவிட்டுத் தாதி மறுபடியும் கதவைப் படாரென்று போட்டு விட்டாள்.
ஜோகி ஆவலே வடிவாக நின்றான்.
குழந்தை ஏன் இன்னும் கத்தி விறைக்கிறதே! அந்த இளங்குரலின் இன்பப் போதையில் முழுகிய மாதி, கனி ஈன்ற செழுங்கொடியை மறந்து விட்டாள். கனி காணத் துடித்தாள். அதன் மலர் போன்ற முகத்தை இடுங்கிய கண்களால் கண்டு, சுருக்கம் கண்ட முகத்தோடு இணையத் தூக்கக் கைகள் பரபரத்தன.
எப்போது காணப் போகிறோம் என்று தவங்கிடந்து வந்த செல்வனை ஏன் இன்னும் வெள்ளைக் கவுன்காரி அழ விடுகிறாள்? கடவுளே இவர்களுக்கு நெஞ்சில்லையா? மாதி, பொறுமை இழந்து கதவை இடித்த போது உள்ளிருந்து கதவைத் திறந்த தாதி அதட்டினாள். கதவை நன்றாகத் திறக்காமலே, “போ கிழவி” என்று அவளைத் தள்ளிவிட்டு, “அந்த பொண்ணு புருஷன் யாரு?” என்றாள்.
ஜோகி பதறி ஓடினான். மீண்டும் கதவு அடைப்பட்டது.
“அடிப்பாவி!” என்று மாதி நின்றாள்.
ஜோகி உள்ளே சென்று பார்த்தான். மழையில் அடிபட்டுச் சோர்ந்த தாழ்வாரை மலர் போல் அவள் கிடந்தாள். கையிலே ஏதோ ரப்பர்க் குழாயைக் கட்டியிருந்தார்கள். மூக்கில் ஏதோ வைத்திருந்தார்கள். வெள்ளை டாக்டரம்மாள், கிரிஜையின் ஒரு கையைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கிரிஜா!” என்றான் அவன், அலறும் குரலில்.
அவள் அவனை மலர நோக்கி, இதழ்களைக் கூட்டி சொன்னவே, அவன் ஒருவனுக்கே புரிந்தன.
“குழந்தையைக் கொண்டு வந்து காட்டுங்கள்” என்று துடுத்தான் ஜோகி.
தாதி அழும் குழந்தையைக் கையிலேந்தி வந்து காட்டினாள்.
கிரிஜை பார்த்தாள். அவள் விழிகள் மலர்ந்தன. இதழ்களில் புன்னகை அரும்பியது.
“ஆண்பிள்ளை, கிரிஜா ஈசனின் அருள்.”
கிரிஜை சிரித்துக் கொண்டே இருந்தாள். கண்கள் மலர்ந்த படி இருந்தன.
டாக்டர் உதடுகளைப் பிதுங்கி விட்டு போனாள்.
வெள்ளையுடைத் தாதியின் கருவிழிகள் அகன்று செவ்விதழ்கள் குவிந்தன. “ஓ... காட்! கான்!” என்று அவள் ஒலியை அடுத்து, “கிரிஜா!” என்ற பீறி வந்த ஜோகியின் அலறல் ஒலி அந்தக் கட்டிடத்தையே அதிரச் செய்தது. குழந்தை கத்தி விறைக்கலாயிற்று.
மழை விடாமல் கொட்டியது.
குன்றுக்குக் கீழே கப்பி போட்ட சாலையில் பளபளத்த கறுப்புக் கார் வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்து மணி கணகணவென்று ஒலித்து விட்டது. அந்த மணி அடித்தவுடன் குழந்தைகளுக்குத்தான் எத்தனை கொண்டாட்டம்! கணகண கணகண வென்ற அந்த ஒலியிலே, ‘உங்களையெல்லாம் விட்டாயிற்று’ என்ற விடுதலையும் மகிழ்ச்சியும் இணைந்துதானே இருக்கின்றன? கூண்டிலிருந்து பறவைகள் வெளிப்பட்டு வந்தாற் போல் எத்தனை குழந்தைகள்! மரகதமலை ஹட்டியிலே இத்தனை சிறுவர்களா இருக்கின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் மாடுகளை மேய்த்துக் கொண்டு சரிவிலே படுத்திருந்த சிறுவர்களை அந்தக் காலத்தில் பாரு அறியாளா? காடாக இருந்த இடங்களெல்லாம் இப்போது நாடாகி விட்டன. மலைகளெல்லாம் பச்சை கொழிக்கும் தேயிலை!
குறுஞ்சிமயமாக, நீலமயமாக மலை முழுவதும் தோன்றுமே? குறிஞ்சிப் பூத்ததே தெரியவில்லையே! முன்பு, லிங்கையா மாமன் கடைசி முறையாகத் தீ மிதித்த வருஷம் குறிஞ்சி பூத்திருந்தது. அதற்குப் பிறகு என்ன என்னவோ நிகழ்ந்து விட்டன. நஞ்சன் பிறந்தே ஒரு குறிஞ்சிப் பருவம் ஆகியிருந்தது.
பள்ளிக்கூடப் பிள்ளைகள் அத்தனை பேர்களும் ஹட்டிப் பிள்ளைகள் என்று சொல்வதற்கில்லை. தேயிலைத் தோட்டங்களில் மலையாளச் சீமையிலிருந்தும், கொங்குச் சீமையிலிருந்தும் வேலை செய்ய வந்த மக்கள் பலர். புதிது புதிதாக மேட்டிலும் பள்ளத்திலும் வீடுகள் முளைத்து விட்டன; தேயிலைத் தொழிற்சாலைகள் புகைக்க இடம் பெற்றுவிட்டன. மரகதமலை ஹட்டியில் வீட்டுக்கு ஒரு பெண்ணும் ஆணும் குறையாமல் பூமி திருத்திப் பாடுபட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றிய நாள் மலையேறி விட்டது. வீட்டுக்கு ஓர் ஆனும் உழைக்கச் சோம்பரானான். சட்டையும் உடுப்பும் போட்டுக் கொண்டு கீழ்மலைப் பக்கம் குன்னூர் செல்லப் பஸ் வசதி வந்ததை நினைத்துக் கொண்டு டவுனுக்குப் போகும் காலம் வந்து விட்டதே! ஒத்தைக்குப் போவதுதான் இருக்கவே இருக்கிறது!
குதிரைப் பந்தயங்கள், காபி ஹோட்டல்கள், சினிமாக் காட்சிகள் என்று எத்தனையோ பொழுது போக்குகள். போண்டாவும் பஜ்ஜியும் மசாலா தோசையும் ருசி கண்ட நாவுக்கு, கொறளியும் சாமையும் பிடிக்குமா?
மரகதமலை ஹட்டியில் பண ஆசை பற்றாத மனிதர் இல்லை. பணத்துக்குப் படிப்பு ஒரு மூலாதாரம் அல்லவா? முன்னமே நாமும் படிக்காது போனோமே என்ற ஆத்திரத்துடன் பிள்ளைகளை எல்லாப் பெற்றோரும் பள்ளிக்கும் அனுப்பினார்கள். பெண்கள் விதவிதமான துணிகள், சேலைகளை விரும்பினார்கள்; கிடைக்காது போன பொருள்களைக் கேட்க ஆசைப்பட்டார்கள். மரகதமலை ஹட்டி மட்டுமா? அநேகமாக மலை வாழ்விலேயே புரட்சி வந்துவிட்டது.
“ஹோய், ஹோய்!” என்று கத்திக் கொண்டே சிறுவர்களின் கூட்டம் பாதையில் வரும் கிருஷ்ணனின் காரைத் தொடர்ந்து ஓடி வந்தது.
பளபளக்கும் புதுக்கார், முன்புறம் முகப்பில் பறவை இறகு விரித்தாற் போல் ஒரு பொம்மை.
விளைநிலத்திலிருந்து வீடு திரும்பி வந்த பாரு, காரிலிருந்து தேன்மலை ருக்மிணியும் குழந்தைகளும் இறங்கியதைப் பார்த்தாள்.
சந்தனப் பட்டுப் புடவை அணிந்து, தன் கையில் மகளை அழைத்துச் செல்கிறாள். காதில் வைர லோலாக்குத் தொங்குகிறது; கழுத்தில் சுடரிடும் மாலைகள்; கையில் குலுங்கும் தங்க வளையல்கள். பெண் இரட்டை மண்டையும் குட்டையுமாக இருந்ததனால் என்ன குறை வந்துவிட்டது? அன்று லிங்கையா மாமன் கைப்பிடித்துப் பார்த்த இளம் மருத்துவன் அர்ஜுனன் தான் கிருஷ்ணனின் மருமகப் பையன். ஒத்தையிலே கல்யாணம் முடித்து, மருமகனை வீட்டோடு தொழில் செய்ய வைத்துக் கொண்டு விட்டான்.
கல்யாணமான சுருக்கில், அழகிய பெண் குழந்தை, அம்மையைப் போலவோ பாட்டியைப் போலவோ குழந்தை இல்லை. தகப்பனைப் போலச் சிவந்த நிரம். கார் ஓட்டி வந்தவன், காரை விட்டு இறங்கி நின்றான். பாரு இளந்தூற்றலையும் மறந்து, களைக் கொட்டும் கையுமாகப் பார்த்துக் கொண்டே சென்றாள். ‘உன் பெண்ணும் என் பையனும் சிநேகமாகி விட்டார்கள்’ என்று முன்பு ஒரு நாள் மாதலிங்கேசுவரர் அழல் மிதி வைபவத்தின் போது, உட்பொருளுடன் அந்தத் தேன்மலையாள் கூறிய சொல் பாருவுக்கு நினைவில் வந்தது. பெண்ணும் இல்லை. இரு குடும்பங்களையும் போட்டி வெறி பிடித்து ஆட்டி வைக்கும் கொடுமையில், அவள் மகள் கல்யாணங் கூட அழைப்பின்றி நிகழ்ந்து விட்டது. “நல்லாயிருக்கிறீர்களா அக்கா?” என்று அவள் கேட்டுச் சென்ற காலங்கூடப் போய்விட்டதே! அவர்கள் குடும்பத் தொடர்பு, இரண்டு தலைமுறையிலும் இணையச் சந்தர்ப்பம் இல்லை.
“அம்மா, எனக்கு ஸ்கூலில் பிரைஸ் கொடுக்கப் போறாங்க” என்று ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் நஞ்சன். சிவந்த மேனி; சுருண்ட கேசம். தாயை நினைவுறுத்தும் கருமை பாயாத மணி விழிகள். தந்தையின் சாயல் தெரியும் வதனங்கள். பெண்ணைப் போல் அடிக்கு ஒரு முறை முகம் சிவந்து புன்னகை தெரியும் சுபாவம்.
பாரு தன் கழுத்தைக் கட்டிய மகனை அன்போடு நோக்கி, “ரே, என்ன பிரைஸ்?” என்றாள்.
“அதெல்லாம் உங்களுக்குப் புரியுமா? நான் இப்போது எந்தக் கிளாஸ் தெரியுமா? எட்டாவது? மூன்றாம் படிவம்.”
“பாரு சிரித்தாள். “ஏயப்பா!” என்று அதிசயித்தாள்.
“பஸ்ட் பிரைஸ்” பாஸ் பண்ணினதற்கு, யாருக்குத் தெரியுமா?
“யாருக்கு?”
“சொல்லுங்கள் பார்க்கலாம்?”
“சீநிப் பாயாசம் முண்ட முண்டக் குடிக்கும் சாப்பாட்டு நஞ்சனுக்கா?”
“போங்கம்மா!” என்று நஞ்சன் சிணுங்கிக் கொண்டு புத்தகத்துடன் உள்ளே ஓடினான்.
பாரு தன்னை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டே கைகால் கழுவக் கூடப் போகாமல் நின்றாள். புத்தகத்தை வைத்துவிட்டு, வாசலுக்கு விளையாட ஓடியே போய்விட்டான். நடை, ஓட்டம் இரண்டுங்கூட கிரிஜையின் அச்சுத்தான். எதிர்மனையில் கௌரியின் மூன்று பையன்களும் ஒரு பெண்ணும் அவளிடம் ஒட்டவில்லை. நஞ்சனுக்கு அம்மையாக அவள் தானாக ஒரு ஸ்தானத்தை நிலைநிறுத்திக் கொண்டு, மெள்ள ஜோகியின் மனையிலேயே பிரிந்து விட்டாள். மாதி இறந்ததுமே ரங்கம்மையின் மூத்த மகன் ராமனுங் கூட மணம் முடித்துக் கொண்டு குடும்பமென்று ஏற்றதும், ஜோகியின் விருப்பப்படி, அவன் மனைக்கு மாறிவிட்டது. ஆனால் பாருவுக்கு எவை எப்படி மாறினாலும், மாற்றம் இல்லை. அவளுடைய பாலைவன வாழ்விலே நீரூற்றென, ஒரு சிறுவன் வந்து விட்டான். நஞ்சுண்டர் அருளால் வந்த அவள் மகன், கிரிஜை அவளுக்கென்று பெற்றுத் தந்த சொந்த மகன்,வீட்டில் ரங்கம்மை, ராமன், அவன் மனைவி அனைவருக்குமே அவன் செல்லப்பிள்ளைத்தான்.
ஒரு குறிஞ்சி வயதில், என்ன புத்தி! என்ன சூடிகை! அவன் ஆங்கிலப் பாடத்தை உரத்துப் படிக்கையிலும், தமிழ்ச் செய்யுட்களை நீட்டி முழக்கிக் கொண்டு இராகம் போடுகையிலும், தன்னை மறந்து அவள் நின்று பெருமையில் பூரிப்பாள். அவளுடைய துண்டு மண்ணில் கிழங்கு விதைத்து, பணம் கண்டு அவள் ஜோகியண்ணனிடம் கொடுத்து, நஞ்சனுக்கு உடுப்பாகவும் தின்பண்டங்களாகவும் வாங்கி வரச் செய்தாள்.
ரங்கனுக்கும் கௌரிக்குங் கூட அந்த விஷயத்தில் கொஞ்சம் பொறாமைதான். கௌரியின் மகன் ஒருவன் கூட ஒழுங்காகப் படிக்கவில்லை. மூத்தவன் ஆறாம் வகுப்பிலேயே சிங்கியடித்து விட்டுச் சிகரெட்டும் சினிமாவுமாக ஒத்தையிலே காசைக் கரைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். இரண்டாமவன் நஞ்சனை விடப் பெரியவன். மூன்றாம் வகுப்பே முடிக்கவில்லை. அடுத்த பையனையும் பெண்ணையும் ரங்கன் அடித்து உதைத்துப் பள்ளிக்கு விரட்டிக் கொண்டிருந்தான்.
தேயிலைத் தோட்டம் வருமானத்தைத் தந்து கொண்டிருந்தது. ரங்கன் கிருஷ்ணன் என்ன செய்கிறானோ அதற்குப் போட்டியாக எதையேனும் செய்வது என்று தீவிரமாக முனைந்திருந்தான். அவன் பள்ளிக்கூடம் என்று முயற்சி செய்தால் ரங்கன் பஸ் விட வேண்டும் என்று முனைந்தான். அவன் காபியும் ஏலமும் பயிரிட்டால், தானும் அதையே பயிரிட்டான். ஆனால் என்னதான் சளைத்ததாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், கிருஷ்ணனுக்குச் சமமாக ஓங்க முடிந்ததா?
கிருஷ்ணனின் புகழ், மரகத மலையிலிருந்து ஒத்தை வட்டத்தை விட்டு மாவட்டத்துக்கே ஒருவனாக அல்லவோ ஏறிவிட்டது? அந்த மாவட்டத்துக்கே தலைவன் போல், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியில் பங்கெடுத்த முதல் வீரனாகத் திகழ்ந்தான். அவனுடைய தலைமையிலே இருபது முப்பது வீரர்கள், ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் ஜான்ஸன் எஸ்டேட் பக்கம் கிளர்ச்சி செய்தார்கள். அவன் பங்களாவையும் தோட்டத்தையும் வெளி உலகையும் பிணைத்த ஆற்றுப் பாலத்தைக் கிருஷ்ணன் கோஷ்டி தகர்த்த போது, அவனையும் சகாக்களையும் வெள்ளை அரசாங்கம் கைது செய்தது.
துரை மக்களுடன் அந்நியோந்நியமாகப் பழகிய ரங்கனுக்கு, கிருஷ்ணன் கைதானது அப்போதைக்குச் சந்தோஷமாக இருந்த போதிலும், அவன் முன்னை விட அதிகப் புகழுக்கு உரியவனாக விடுதலை பெற்று வந்ததும், நாடு சுதந்திரம் பெற்று அவன் கௌரவ மனிதனாக மக்களால் போற்றப்படுவதும் ரங்கனின் பொறாமைத் தீக்கு எண்ணெயூற்றுவதாக அல்லவோ இருக்கின்றன?
ஆனால், அண்ணன் பொறாமைத் தீயை வளர்க்கும் செயல்களில் மனசுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருந்தாலும், ஜோகி மாறவே இல்லை. மனைவி இறந்து, அந்தக் குழந்தையும் பாருவின் பொறுப்பில் வளரத் தொடங்கியதும், அவன் தன் நிலம் உண்டு, தான் உண்டு என்று ஆசைகளை வென்று, கடமையைச் செய்து காலம் தள்ளும் கர்மயோகிக்கு ஒப்பானவன் ஆகிவிட்டான்.
முன்போல ஒன்பது வயசில் பாற் குழாயேந்தி வீட்டுப் பொறுப்பை ஏற்கும் கடமையே பையன்களுக்கு இல்லை. காலம் மூன்று குறிஞ்சிகளில் முற்றும் மாறிவிட்டது. ரங்கம்மை குடும்பம் அவன் நிலத்திலும் பிழைத்தது. ராமன் ரங்க மாமனுக்குச் சரக்கு லாரி ஓட்டி, நாற்பது ரூபாய்ச் சம்பளம் பெற்று வந்தான்.
வெளியே ஓடிய நஞ்ச்ன, எதையோ நினைத்துக் கொண்டவன் போல் பாருவிடம் மீண்டும் ஓடி வந்தான்.
“எங்க ஹெட்மாஸ்டர் உங்களைப் பார்க்க வருகிறாராம், அம்மா!”
“யாரு எட்மாஷ்டரு?”
“அவளையா? தலை நரைத்துச் சுருக்கம் விழுந்து கிழடான ஒரு ஹட்டிப் பெண்ணைத் தேடி, எதற்கு அவர் வருகிறார்?”
“ஆமாம், அம்மா, உங்களைப் பார்க்க வேணுமாம். என்னிடம் பகலே சொல்லச் சொன்னார். உங்களைத் தான் பார்க்க வேணுமாம்!”
சே, அவர், அவர்கள் வகுப்பாரும் அல்லவே! தமிழ்மொழி பேசும் அவர் அந்நியராயிற்றே!
பரபரப்புடன் அவள் வாயில் பக்கம் வருகையிலேயே ரங்கம்மை முற்றத்துச் சுள்ளிகளை அப்புறப்படுத்திய வண்ணமே, “எட்மாஷ்டரும் ஸ்கோல்காரங்களும் வராங்கலாம். ஜோகியண்ணன் காபி வைக்கச் சொல்லிப் போனார்” என்றாள்.
“எதற்காம்?”
ரங்கம்மைக்குச் செய்தி தெரியும். ஆனால் அவள், “தெரியாதே!” என்றாள். புறமனையைக் கூட்டிச் சுத்தம் செய்தனர். குழந்தைகளை ஒருபுறம் ஒதுக்கி அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, பெஞ்சியில் சாக்கை விரித்து, தட்டிலே வெற்றிலை பாக்கும் வாங்கி வைத்தனர். அடுப்பிலே காபிக்குப் பானையிலே நீர் கொதித்துக் கொண்டிருந்தது.
ஜோகி முன் வர, ஹட்டிக்குள் நுழைந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஊர்க் குழந்தைகள் அனைவரும் புடைசூழ, அவர்கள் வீட்டின் குறுகிய வாயிற்படியில் குனிந்து நுழைந்தார்.
“வாங்க, வாங்க” என்று ஜோகி வரவேற்று அவரை உள்ளே உட்கார வைத்து உபசரித்தான்.
“பெரியவர்கள், நீங்கள் உட்காருங்கள்” என்று கூறி இளையவராக இருந்த தலைமை ஆசிரியர் உட்கார்ந்தார். நஞ்சன், அம்மை தந்த காபியையும் தம்ளர்களையும் கொண்டு வந்து வைத்தான்.
“எதற்கு இப்போது காபி?”
“நாங்கள் வேறு எதைத் தருவோம்? பிள்ளைகளுக்குப் படிப்பைச் சொல்லித் தருபவர் நீங்கள்” என்று சொல்லி ஜோகி உட்புறம் நோக்கி, “ரங்கம்மா, ஐயாவுக்கு நல்ல மோர் கொண்டு வந்து கொடு” என்றான்.
“உங்கள் வீடுகளில் வந்தால் குளிர்ச்சியும் சூடுமாகப் பானங்கள் தந்து வயிறு நிறைய உபசரிப்பீர்கள். நான் உங்களிடம் ஒரு பெரிய உதவியை நாடி வந்தேன். நஞ்சனிடம் கூடச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்குமே!” என்று நிறுத்தினார் தலைமை ஆசிரியர்.
“கேள்விப்பட்டேன்” என்றான் ஜோகி. அவன் முகம் துயரச் சாயை படியத் தாழ்ந்தது.
“அந்தப் பக்கம் உள்ள ஐந்து ஏக்கர் பூமியையும் கிருஷ்ணகௌடர் பள்ளிக் கட்டிடத்துக்கு நன்கொடையாகத் தந்துவிட்டார். நீங்களே பார்க்கிறீர்களே! அடுத்த வருஷம் ஒன்பது பத்து என்று வகுப்புகள் மேலே போக வேண்டும். உயர்தரப் பள்ளியாக ஆகவே போகிறது. கட்டிடம் போதாது.”
“ஆமாம்.”
“உங்கள் துண்டு நிலத்தையும் சேர்த்துக் கொண்டால் சௌகரியமாக இருக்கும்.”
தமிழில் அவர் கூறிய மொழிகளின் பொருள் வார்த்தைக்கு வார்த்தை பாருவுக்கு உள்ளே விளங்கவில்லை என்றாலும் பொருள் துலங்காமல் இல்லை. பகீரென்றது அவள் நெஞ்சு. அவளிடமுள்ள அந்த உடைமையையா பறிக்க வருகிறார்கள்.
“எனக்கு மேலிடத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் என்றால், நீங்கள் அதற்குக் கண்டிப்பாகத் தடையே கூற மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் ஆசிரியர்.
பாரு வாயிற்படியில் வந்து நின்றாள். ஜோகி பதிலே பேசவில்லை.
“ஹைஸ்கூல் வகுப்பு வருவதானால், ஸயன்ஸ், இன்ஜினியரிங் வகுப்புக்களெல்லாம் நடத்தத் தனி அறைகள் வேண்டும். இப்போதே இருநூறுக்கு மேல் குழந்தைகள் படிக்கிறார்கள். இனியும் அதிகமாகுமே தவிரக் குறையாது. எல்லாரும் படிக்க ஆசைப்பட்டு நிறைய வருவார்கள். நீங்கள்...” என்றார் மீண்டும் தலைமை ஆசிரியர்.
ஜோகி பாருவின் முகத்தைப் பார்த்துவிட்டுப் பேசினான்.
“எங்களுக்குக் கொடுப்பது பற்றி ஆட்சேபம் இல்லை; ஆனால் அந்தத் துண்டு பூமியை எங்கள் அண்ணி சொந்தப் பையனைப் போல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நஞ்சனை வளர்ப்பவர் அவர்கள் தாம்.
“ஜில்லா போர்டில் நிலத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஈடாகப் பணம் கொடுப்பார்கள்” என்று ஆசை காட்டினார் ஆசிரியர்.
அந்நியர் என்ற தடையையும் மறந்து, பாரு வெளியே வந்தாள்; “பணம் மண்ணைப் போல் ஆகுமா?” என்றாள்.
மொழி புரியாத ஆசிரியர், “அம்மா என்ன சொல்கிறார்கள்?” என்றார்.
“அவர்களுக்கு வாழ்வே பூமிதான். கிருஷ்ண கௌடரின் நிலமும் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அது பணத்துக்காகக் கூலிகளைக் கொண்டு பயிரிட்ட தோட்டம். நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் ஐந்து ஏக்கரா பொருட்டில்லை அவர்களுக்கு. ஆனால் எங்கள் நிலம் வழி வழியாக வந்த நிலம். என் ஐயன் பண்படுத்தினார். எங்கள் அண்ணி தமக்கென்று வைத்துக் கொண்டிருக்கும் சொத்து; அதைக் கொடுக்கவே அவர்கள் சகிக்கமாட்டார்களே!”
தலைமை ஆசிரியர் சங்கடத்துடன் நோக்கினார்.
“இது எங்கள் சொந்தத்துக்கா? நீங்களே எண்ணிப் பாருங்கள், கௌடரே. உங்கள் குழந்தைகள் படிக்க, உங்கள் மக்கள் முன்னேற, நீங்கள் செய்யும் எல்லா நற்செயல்களையும் விட மிகமிக உயர்ந்தது, கல்வி பெருகச் செய்யும் உதவி. குழந்தைகள் கல்வியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்.”
“எங்களுடைய மனசுச் சங்கடம் உங்களுக்கு எப்படி ஐயா புரியும்? அது வெறும் மண்ணா? உயிரின் சாரம் அல்லவோ?” என்றாள் பாரு, கண்களில் நீர் தளும்ப.
கடைசியாகத் தலைமை ஆசிரியர், குளிர்ந்த மோரைப் பருகிவிட்டுச் சாந்தமாக, “உங்கள் குழந்தைகள் முன்னேற, உங்கள் குழந்தைகள் படிக்க, ஒரு நல்ல சந்தர்ப்பம், யோசித்துப் பாருங்கள். நான் வருகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.
கூனூர் சென்றிருந்த ரங்கன் இரவு வீடு திரும்பியதும் செய்தி கேள்விப்பட்டு பாருவைத் தேடி விரைந்து வந்தான்.
“பாரு, பாரு!”
உள்மனைக்குள் பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்த பாரு எழுந்திருக்கவே இல்லை. ரங்கம்மைதான் முன்னே வந்தாள்.
“பூமியை கொடுக்கச் சம்மதித்தாயா?” என்றான் பாருவிடம் வந்து.
பாரு மறுமொழியே கூறாமல், இல்லை என்று மட்டும் தலையை ஆட்டினாள்.
“அதுதானே? இப்போது என்ன ஆனாலும் விடுவதில்லை. அவர்களுக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; ஒரு கை பார்ப்போம்” என்று கறுவிக் கொண்டு திரும்பினான். இது தன் மீதுள்ள அநுதாபத்தின் விளைவன்று; கிருஷ்ணன் மீதுள்ள ஆங்காகாரத்தின் விளைவு என்பதை அறியாளா?
பாரு அன்றிரவு உறங்கவேயில்லை. அந்தத் தலைமை ஆசிரியரின் சொற்கள் அவளுடைய செவிகளில் ஒழித்துக் கொண்டே இருந்தன.
“உங்கள் குழந்தைகள் முன்னேற; உங்கள் பிள்ளைகள் படிக்க...”
நஞ்சன் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டுமானால் பள்ளிக்கூடம் அவசியந்தானே? கிருஷ்ணன் ஒத்தையில் இருக்கிறான். அவன் மக்கள் அங்கே படித்து விட்டார்கள். மரகதமலையில் பள்ளிக் கூடம் பெரிதாகி அவனுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு நலமும் கூட்டப் போவதில்லை. ஆனாலும் அவன் பூமி தந்து பல முயற்சிகள் செய்கிறான். கிருஷ்ணனுடைய மக்கள் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டாலும், தம்பி அஜ்ஜன் மக்கள், ஏனைய குழந்தைகள் நஞ்சனுங்கூடத் தான் அங்கே படிப்பார்கள். அவளால் அந்த முயற்சி தடைபடுவது நல்லதாகுமோ?
ஆனால் அந்த மண்ணைக் கொடுத்துவிட்டு அவள் என்ன செய்வாள்? முன்பெல்லாமானாலும் தரிசு நிலம் ஆங்காங்கு இருந்தன. இப்போது எங்கே திரும்பினாலும் தோட்டங்கள், குடிசைகள், வீடுகள், இரண்டொரு கடைகள் மட்டுமே தெரியும் வளைந்த பாதை, கடைத் தெருவாகவே நீண்டு விட்டது. அவளுக்கு எப்படி எங்கே பூமி கிடைக்கப் போகிறது?
இந்த நினைவுத் தொடர் நீண்டதும், மனத்தின் அடித்தளத்தில் மறைந்து கிடந்த ஆசை இழை, மெல்ல மெல்ல மேலுக்குத் தெரிந்தது. அந்தக் கறுப்பு மண்ணும், ஆரஞ்சு மரமும் அங்கே இருக்கின்றன. காபியும் ஏலமும் அங்கே பயிராகின்றன. இந்தப் பூமிக்குப் பதிலாக அது கிடைக்குமா? கிருஷ்ண கௌடர் கொடுப்பாரா? வெகு காலத்துக்கு முன்பு அந்த ஆசையில் அவள் ஒரு நாள் போய்விட்டே வந்தாள். இப்போது...?
ஆனால், அப்போது நிலவிய உறவு இப்போது இருக்கிறதா? எத்தனை வம்புகள், வழக்குகள்! பொறாமையில் ஊன்றினவனுக்கு ஒரு வேளையேனும் வெற்றி கிடைக்க வேண்டுமே!
முன்செலவும் பின்செலவும் செய்து கரியமல்லர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களைப் பேணினார்; பிறகு கிருஷ்ணனின் தம்பி அஜ்ஜன் ஊரில் வந்திருந்து அந்த வகையில் பேணுகிறான். தொழிலாளர் வாழ ஒழுங்கில்லாத ஓலைக் குடிசைகள், நோவு வந்தால் ஓய்வு என்பன போன்ற சலுகைகளையும் அளித்திருக்கின்றனர். பாடுபட்டுப் பலனும் காண்கின்றனர்.
ஆனால் ரங்கனின் பூமி முக்கால் விகிதமும் குத்தகைக்குப் பயிர் செய்யும் பூமியே. சொற்பமான சொந்தத் தேயிலைத் தோட்டங்களிலும் செடிகள் உரமின்றி மங்கலம் இழந்தாற்போல் வெறிச்சிட்டுக் காணப்படுகின்றன.
ஆறணாக் கூலிக்கு உழைக்க வரும் மக்களுக்குப் படுக்க நல்ல குடிசைகளும் இல்லை. மழை நாட்களில், அந்த ஓலைக் குடிசைகளில், பற்றும் பற்றாத துணிமணிகளுடன் சேற்றில் உழலும் புழுக்களைப் போல் அந்த மக்கள் நெளியும் காட்சிகள் காணச் சகிப்பவையா?
திடீரென்று ஒன்று சேர்ந்து கொண்டு தேயிலை கிள்ளப் பெண்கள் வரமாட்டார்கள்; ஆண்கள் முள்ளெடுக்க மறுப்பார்கள். ரங்கன் ‘எதிர்க்கட்சியான் தூண்டுதல்’ என்று ஏசுவான். அவன் ஆட்களை இவன் அடிக்கடி ஏற்பாடு செய்வதும், அதன் நிமித்தம் சண்டை பெரிதாக விளைவதும், கோர்ட்டுப்படி ஏறுவதும் கொஞ்சமா நஞ்சமா?
இந்த நிலையிலா அவள் கிருஷ்ணனின் வீடு தேடிப் போவாள்? ஜன்ம வைரியாகி விட்ட அவன் வீடு தேடி அவள் போகச் சும்மா விடுவார்களா, அவள் கணவன் வீட்டார்?
போராட்டத்துக்கு முடிவையே அவள் காணவில்லை; பொழுதுதான் முற்றுப்புள்ளி வைத்தது.
மறுநாள் காலையில் நஞ்சன் பள்ளிக்குச் செல்லுமுன் அம்மையிடம், “அம்மா, நம் பூமியை ஸ்கூலுக்கு எடுக்கிறாங்களா?” என்று கேட்டான்.
‘நம் பூமி’ என்று அவன் கூறியதும், பாரு உணர்ச்சி மிகுதியால் பையனைத் தழுவிக் கொண்டாள். “ஆமாம் மகனே; நீ படித்துக் கிருஷ்ண கௌடரை விடப் பெரியவனாக வந்து, பெரிய தேயிலைத் தோட்டம், கார் எல்லாம் வாங்குவாயோ?”
“அம்மா, நான் என்ன படிக்கப் போறேன் தெரியுமா?”
“சொல்லுடா குழந்தாய்!”
“நான் ஃபோர்த் பார்மில் ‘இன்ஜினீயரிங்’ பகுதியில் சேரப் போகிறேன். கோயம்புத்தூர் காலேஜில் படிப்பேன், அம்மா.”
“கிருஷ்ண கௌடர் படித்திருக்கும் படிப்பா?” என்றாள் பாரு. பேதை வேறு எதைப் பற்றி அறிவாள்?
“இல்லை அம்மா; வந்து நம் ஸ்கூல் கட்ட, பாலம் கட்ட, என்ன என்னவோ எல்லாம் கட்ட” என்றான் நஞ்சன்.
பையனை முகத்தோடு முகம் சேர்த்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் அவள். நஞ்சுண்டர் அருளால் உதித்த அவள் மைந்தன், அறிவும் கூர்மையும் ஒளியிடும் செல்வன் படிக்க வேண்டாமா?
“எட்மாஷ்டர் ஸாரை வரச்சொல்கிறாயா குழந்தை?” என்று சொல்லி அனுப்பினாள்.
அன்றிரவு ஏழு மணி இருக்கும். தலைமை ஆசிரியர் எதிர்மனை வந்ததையும், பாரு தன் பூமியைக் கொடுக்க உடன்பட்டுச் சம்மதம் தெரிவித்ததையும் கேள்வியுற்ற ரங்கன் புயலாக நுழைந்தான்.
“பாரு, பாரு!”
“என்ன?” என்றாள் அவள் சாவதானமாக.
நஞ்சன் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“என்ன சொன்னாய், ஸ்கோல் ஹெட்மாஸ்டரிடம்?”
பாரு மறுமொழியின்றி நின்றாள். ஜோகி அங்கு நிற்கவே விரும்பாமல் வெளியே சென்றான்.
“என்ன சொன்னாய்? யாரைக் கேட்டுக் கொடுக்கிறாய்?”
“ஏன்? எனக்கென்று மாமன் தந்த பூமி. அது என்னுடைய சொந்தம். நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன?”
“என்னது? உனக்கு அவ்வளவு துணிவு வந்து விட்டதா?”
பாரு ஏளனமாக நகைத்தாள்; “நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? உங்களுக்கும் எனக்கும் என்றோ உறவு விட்டு விட்டது. உங்கள் வழி எதிலேனும் நான் குறுக்கிடுகிறேனா?”
“அதிகப் பிரசங்கி! பூமியை என்ன வேண்டுமானாலும் செய்யவா உன்னிடம் சிற்றப்பன் சொன்னார்?”
“ஏன் கத்துகிறீர்கள்? ஒருவர் மீது அநாவசியமாகப் பொறாமைப்பட்டுப் பயன் என்ன? அந்தப் பள்ளிக்கூடத்தில் நம் குழந்தைகள் படிப்பார்கள்; என் பையன் படிப்பான்” என்று கூறி முடித்து விட்டு பாரு நகர்ந்து விட்டாள்.
“ஜோகி!” என்று திரும்பினால், ஜோகியும் இல்லை.
ரங்கனுடைய ஆத்திரத்துக்கும் சீற்றத்துக்கும் இலக்கு கிடைக்கவில்லை. பொறாமை உணர்வுக்கும் போட்டி வெறிக்கும் உணவு கிடைக்கவில்லை. வருஷக் கணக்காக அவனும் அகலக்கால் வைத்து உழலுகிறான். அந்தப் பக்கத்தில் கிருஷ்ணனுக்கு மேலாகத் தன் புகழ்ச் செல்வம் ஓங்க வேண்டுமென்று அவனும் செல்லாத திசை இல்லை; தோல்வி, ஒவ்வொன்றிலும் தோல்வி!
ஜில்லா போர்டில் ஒருவன்; கவர்னர் மாளிகை விருந்து வைபவத்தில் அழைப்பு. எங்கு நோக்கினும் கிருஷ்ண கௌடர் புகழ்!
மரகத மலைப் பள்ளியைத் திறந்து வைக்கும் பிரமுகனான அவனும் வருவான். அவன் நன்கொடைகளையும் நல்ல முயற்சிகளையும் குறித்து, எல்லோரும் வானளாவப் புகழுவார்கள்; காரிலிருந்து இறங்குகையிலேயே கைதட்டுவார்கள்; ரோஜா மாலை போடுவார்கள்.
ரங்கனுக்கு என்ன உண்டு; ஆழ்ந்து பார்த்தால், கடனும் முதலும் சரிக்குச் சரி இருக்கும்.
தடதடவென்று அவன் வீட்டுக்குள் சென்றான். விளக்கடியில் பையனும் பெண்ணும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மூத்த பையன் புகைப்பிடித்த வண்ணம் வேறிரண்டு பையன்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தான். வந்த ஆத்திரத்தில் சண்டை போட்ட இருவர் முதுகுகளிலும் அடி வைத்து விலக்கினான். அதற்குள் கௌரி உள்ளிருந்து வந்தாள்; உடல் சதை போட்டு எத்தனை விகாரம் ஆகிவிட்டாள்!
“ஏன் அடிக்கிறீர்கள் குழந்தைகளை?”
“ஒருவர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் தொல்லை தானோ?”
“பின்னே, குழந்தைகள் சத்தம் போடமாட்டார்களா?” என்ற கௌரி, “காபி குடிக்கிறீர்களா?” என்றாள்.
“ஒரு மண்ணும் வேண்டாம்” என்று அவன் மாடிக்கு ஏறினான்.
கௌரி ‘ஸ்வஸ்திக் மாலை’யைப் பற்றி அவன் செவிகளில் போட எண்ணியிருந்தாள். சமயம் சரியில்லை.
கிருஷ்ணனின் மனைவி என்ன என்ன நகை புதிதாக வாங்கியிருக்கிறாள் என்பவை போன்ற செய்திகளெல்லாம் அவள் ஊர்ப் பெண்களின் வம்புப் பேச்சுக்களிலிருந்து அறிவதையே குறியாகக் கொண்டிருந்தாள். தனக்கு இன்ன இன்ன அணி மணிகள் வேண்டும் என்று அவள் நேரடியாக ரங்கனிடம் கேட்பதை விட, ‘கிருஷ்ணனின் மனைவி வாங்கினாளாம்’ என்று கூறினால் போதும்; ரங்கன் கோவைக்குச் சென்றேனும் வாங்கி வந்து விடுவான்.
இந்த அம்சம் காரணமாக, அவள் கணவனிடம் பரிபூரண நிறைவைக் கண்டாள். தன் வாழ்வு யாருக்கும் கிடைக்காதது என்று அவள் இறுமாந்ததும் அதே காரணத்தினால் தான். நிலத்தையும் நீரையும் இன்னொன்றையும் பற்றி அவளுக்கு என்ன கவலை?
பாரு, கணவன் வந்து கலக்கியதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவள் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்த பூமி போய்விடுமுன், அவள் பற்றிக் கொள்ள வேறு மண் வேண்டுமே!
முன்போல, இன்னொரு முறை கிருஷ்ணனின் வீட்டுக்கு அவள் ஏன் செல்லக்கூடாது? அவன் என்றுமே அவளுக்குத் தீமை நினைப்பவனல்ல; பகைக்குக் காரணமாக இருப்பவன் ரங்கனே என்பது அவள் உள்மனம் அறிந்த உண்மை. தேன்மலை ருக்மணி மட்டும் என்ன, அவளுக்கு விரோதியா? “நல்லாயிருக்கிறீர்களா அக்கா?” என்று கவடில்லாமல் கேட்பவள் தானே அவள்? பகையாளியின் மனைவி என்று வேற்றுமை பாராட்டுகிறாளோ என்னவோ? உண்மையில் ரங்கனுடன் அவளுக்கு என்ன உறவு மிஞ்சியிருக்கிறது. அவள் மனம் வைத்து அந்தக் கறுப்பு மண் அவளுக்குச் சொந்தமாகி விட்டால், அவள் பிறந்த மணிக் கல்லட்டிக்கே சென்று விடலாம். விரோதத்தையும் வேற்றுமையையும் பார்த்துக் கொண்டு அவள் திண்டாட வேண்டாம்.
ஆனால் நஞ்சன்? மணிக்கல்லட்டியிலிருந்து தினமும் பள்ளிக்கு வரமாட்டானா? காலையில் காபியும் தோசையும் வைத்துத் தர வேண்டுமாம். அழகான சோற்றுப் பாத்திரம் ஒன்று வாங்கிச் சாப்பாடு போட்டுக் கொடுக்கலாம். அவன் அடுக்கில் சாப்பாடு கொண்டு வந்து அந்தப் பூமியில் வேலை செய்கையில் வைத்துக் கொண்டிருப்பாள். பகலில் அந்த ஆரஞ்சு மரத்தடியில் பையன் வந்து உண்டு கொள்வான்...
இத்தகைய கற்பனைகளுக்கு முடிவே இருக்கவில்லை.
அன்று காலையில் எழுந்ததுமே அவள் எவரும் அறியாமல் கிருஷ்ணன் வீட்டுக்குச் செல்வதாகத் தீர்மானம் செய்து கொண்டாள். காலையில் நஞ்சன் பள்ளி சென்றதுமே, அவள் வெளுத்த முண்டெடுத்து உடுத்திக் கொண்டாள். வெகு நாட்களாக மடித்து வைத்திருந்த ரவிக்கை ஒன்றை அணிந்து மேல் முண்டுக்கு மேல் சால்வையும் போர்த்துக் கொண்டாள்.
விடுவிடென்று கீழ்மலைப் பக்கம் இறங்கினாள். ரங்கம்மை விறகு சேகரிக்கச் சென்றிருந்தாள். ராமன் மனைவி அடுப்படியில் வேலையாக இருந்தாள். அவள் செல்வதைப் பார்க்கக் கூட எவரும் குறுக்கே தென்படவில்லை.
கீழ்மலையிலிருந்து கூனூர் பஸ் செல்வதை அவள் அறிவாள். அங்கிருந்து ஒத்தை சென்றாலும் செல்லலாம், இல்லையேல் குறுக்கே நடந்து, மனிதர் செல்லும் தடமறிந்து ஒத்தை செல்ல வேண்டும்.
எப்படிச் செல்வதென்ற முடிவுக்கு இன்னும் வராதவளாகவே அவள் நடந்தாள். பஸ் நிற்கும் இடம், தவிர பாதைக்கப்பால் இன்னும் ஆங்காங்கே குத்துச் செடிகளும் மரங்களுமாகக் காடுகளின் துண்டு துணுக்குகள் இருந்தன. ஆற்றுப் பாலத்தடியில் இருந்த பழைய துரை பங்களா அடைத்துக் கிடந்தது. பஸ் வந்ததற்கு அடையாளமாக அங்கு இரண்டு டீக்கடைகள் முளைத்திருந்தன. மலையாளம் பேசும் நாயர் கடையில் கிராமபோன் ஒன்று மூக்கால் பாடிக் கொண்டிருந்தது. பாதைக்கப்பால் மேலே தொலைவில் பெரிய மரம் ஒன்றை இருவர் அறுத்துக் கொண்டிருந்தனர்.
“பஸ் எப்போது வரும்?” என்று அவள் தன் மொழியில் கேட்ட போது, டீக்கடை நாயர் புரிந்து கொண்டு, “பன்னிரண்டு மணிக்கு” என்று அறிவித்தார்.
நிற்கலாமா, நடக்கலாமா என்று அவள் யோசனையில் இருந்த சமயம், அந்தப் பளபளக்கும் கறுப்புக் கார் சிறிது தூரத்தில் வந்தது பாருவுக்கு ஒரு கணம் இருதயம் துடிக்க மறந்து விட்டாற் போல் இருந்தது. அந்தக் கறுப்புக் கார்?
கிருஷ்ணன் வருகிறானோ? இல்லை, அவளும் மகளுமோ?
அவள் அசைவற்று நிற்கையிலே கார் வளைந்து திரும்பி அவளைக் கடந்து சென்றது. கிருஷ்ணன் முன்பக்கம் அமர்ந்திருந்ததை அவள் கண்டாள். கார் முன்னே சென்றதும் பாருவும் பின்னே வேகமாக நடந்தாள்.
பாதையில் பாருவை எதிர்பாராத விதமாகக் கண்டதில் கிருஷ்ண கௌடருக்கும் திகைப்புத்தான். உண்மையில் அவர் யாருக்காக அங்கு வருகிறார்?
எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, அவர் உள்ளத்தில் ஒருத்தி புகுந்து கொண்டு நினைவைச் சிலிர்க்கச் செய்தாள்; கனவுகளில் எல்லாம் நிறைந்து நின்றாள். அவள் இருந்த இடம், அவர் உள்ளத்தில் தழும்பாக மேடிட்டுக் காய்ந்து விட்டது. ஆனால் அந்த நினைவு மாறாத வடுவாயிற்றே அது!
பள்ளிக்கட்டிடம் தள்ளி வருவதில் அவள் உழைக்கும் பூமி சேருகிறதென்பது அவருக்கு முதலில் தெரியவில்லை. அத்தனை ஆண்டுகளில், கிருஷ்ணன் பாருவை அந்த மண்ணில் வேலை செய்பவளாகத்தான் கண்டிருக்கிறார். அந்த ஒரு நிலையிலேயே, பாரு ஏமாற்றத்தின் உருவாக, வாழ்வில் கண்ட தோல்வியின் வடிவாக, அவருக்குத் தோன்றியிருக்கிறாள். அது கற்பனையோ, அன்றி அவருக்குப் பிரமையோ?
எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் குதிரையேறி அவர் ஹட்டிக்குள் வந்த போது, அவர் கண்ட கனவுகள், ஒரு பக்கம் பலித்திருக்கின்றன. இரண்டு குறிஞ்சிக் காலத்தில், இருளில் கிடந்த அவர்கள் சமுதாயம் கல்வியறிவாகிய ஒளியைப் பெற்று விழிப்பெய்தியிருக்கிறது. படித்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த மலைச் சமூகத்தில், எத்தனை எத்தனை பேர் ஊரை விளக்க, பெருமையை நிலை நாட்ட எழுந்து விட்டார்கள்!
ஆனால், அவரைப் பொறுத்தமட்டிலும், கனவுகள் ஓரளவு பலித்திருந்தாலும் சோபித்திருக்கின்றனவா!
மாரிக்காலத்திலும் கதிரவன் உதயமாகிறான்; தினம் போல் உச்சிக்கு ஏறி மேற்கே சாய்கிறான். ஆனால் மாரியின் கருக்கலில் சோபிக்கிறதில்லையே!
மலைமக்களின் வாழ்வில் ஊறிய பண்டைப் பெருமைகள், புதிய கல்வி ஒளியிலே துலங்கி விகசிக்கின்றனவா? இல்லையே! இருநூறு முந்நூறு மக்கள் கொண்ட ஹட்டிகள் இரு பிளவுகள் பட்டு நிற்கின்றன. பிளவு மனப்பான்மை ஹட்டிக்கு ஹட்டி, கொடிய தொத்து நோய் போல் பற்றி விட்டது. தலைக்குத் தலை கட்சி, பகை, பொறாமை, போட்டி, வம்பு, வழக்கு.
ரங்கனுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணன் உள்ளூற ஆசைப்பட்டு, எத்தனை முறைகளோ முயன்றதுண்டு. தாத்தா கரியமல்லர், ஊருக்கே ஒரு தூண் போல் விளங்கியவர். அந்த லிங்கையா குடும்பத்துடன் இணைந்திருந்தவர் இறந்த போது, அந்தக் குடும்பமே நன்றி கொன்றதை அவரால் நினைக்க முடியவில்லை. ஜோகி மூன்று நாட்கள் ஊரிலேயே இருக்கவில்லை. அதை நினைத்தால், அவருக்குப் பகையுணர்வு மேலுக்குத்தான் எழும்பி வந்தது.
என்றாலும், ரங்கனுக்கு எதிராகச் சிறுமைக் குணம் காட்டுவது, அவர் மனச்சான்றுக்கு உகந்ததாகப் படவில்லை. ஒவ்வொரு முறை ஹட்டிக்கு வரும் போதும், பகை தீர ஏதேனும் வழி பிறக்காதா என்ற நைப்பாசையே அவருள் தோன்றிக் கொண்டிருந்தது. பாருவின் நிலத்தை வியாஜமாகக் கொண்ட ஏதேனும் சமரசம் பேச வாய்ப்பு ஏற்படுமா என்ற ஆவலும் அவருக்கு இல்லாமல் இல்லை.
“பாரு அக்கா இல்லை அது?” என்றாள் ருக்மிணி வண்டியில் செல்கையில் அவளைக் கண்டதும்.
“ம்... ஆமாம்” என்றார் கிருஷ்ணன், மெல்லிய பெருமூச்சு இழைய.
“எங்கே போறாங்க?” என்றாள் அவள்.
கிருஷ்ணன் பதில் கூறவில்லை.
ஹட்டியில் அவர் எப்போது வந்தாலும், ஊர்க்காரர் பல பல வியாஜங்களைக் கொண்டு அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். வீட்டின் முன் ஆமணக்குக் கொட்டையும், கோதுமை நெல்லுமாகக் காய்ந்து கொண்டிருந்தன. முற்காலத்து வீடா அது? அகல அகலமான கூடங்கள், சாமான் அறைகள், கிழங்குக் கிடங்குகள், உயரமான வாயில்கள், உட்காரப் பெஞ்சி, நாற்காலிகள், அலமாரிகள் என்று மாளிகைபோல் உட்புறம் விரிந்திருந்தது.
அவள் உள்ளே வந்து உட்கார்ந்ததும் அக்கம் பக்கப் பெண்மணிகளையும் ஆடவர்களையும் யார் அங்கு அழைத்து வந்தது. அவர் ஒருவரால் எத்தனை பேருக்கு எத்தனை காரியங்கள் ஆக வேண்டும்! காரியின் பேரன் தோட்டத்திலே வேலை செய்ய மறுக்கிறான். எட்டாம் வகுப்பில் இரண்டு வருஷம் நின்று விட்டான். கிருஷ்ண மாமன் தான் வழி செய்ய வேண்டும்.
மூன்றாம் வீட்டு ராமி அக்காளின் மருமகன், கிருஷ்ண அண்ணனிடம் தன் மகள் லிங்கம்மாவைப் படித்த பையனுக்குக் கட்ட வேண்டிய யோசனை கேட்கிறாள்.
எதிர்வீட்டு உச்சன், கைக்குழந்தையின் இளம்பிள்ளை வாதத்துக்குக் கோயம்புத்தூர் டாக்டரிடம் சிகிச்சை வேண்டும் யோசனையுடன் சிபாரிசும் சலுகையும் கோரி வந்திருக்கிறான்.
இப்படி, ஒவ்வொருவரும் வந்தது, அன்று கிருஷ்ணனுக்கு ஏன் தலைவலியைக் கொடுக்க வேண்டும்? அவருடன் பேசுவதே பெருமை என்று வந்த முதியோரைக் கண்டாலே அவருக்கு ஏன் வெறுப்பு முட்டி வந்தது?
மாலை வரை பொறுத்திருந்த அவர் கைத்தடியை எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடையாகக் கிளம்பிவிட்டார். அவர் வெளியே விளைநிலத்தின் பக்கம் வந்ததுமே, பம்பரம் ஆடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஓடி வந்தான்.
‘யார்? யார் பையன்?’ அவன் முகத்திலே யார் சாயலோ இருந்தது. நடையிலே அவருக்கு அறிமுகமானவர் எவர் நினைவோ வந்தது. தேயிலைத் தோட்டத்தில் இலை கிள்ளிக் கொண்டிருந்த இரு பெண்கள், பையன் அவரைச் சந்திப்பதை நிமிர்ந்து பார்த்தனர்.
பையன் சற்று நேரம் அவரைத் தயங்கி நின்று பார்த்தான்.
“யார் பையா நீ?” என்றான் கிருஷ்ணன்.
“நான்... நான் வந்து... நீங்க கொஞ்சம் வரீங்களா?”
பையன் அருவிக்கரைப் பக்கம் கையைக் காட்டினான். பெரிய மனிதராகிய கிருஷ்ண கௌடரை, ‘அங்கே வரீங்களா?’ என்று கைகாட்டி அழைக்கும் பையன் யார்?
அவன் முகத்திலே கண்டது யாருடைய சாயல் என்பது பளீரென்று அவருக்கு நினைவில் வந்தது.
“உன் பேர் என்ன?”
“என் பெயர் நஞ்சன்; ஜோகி கௌடர் மகன்” என்றான் பையன்.
“ஓ, நீ படிக்கிறாயில்லை?”
“ஆமாம்; மூன்றாவது பாரம்.”
“சரி, நீ போ? நான் வருகிறேன்.”
பையன் பம்பரக் கயிற்றுடன் சிட்டாகப் பறந்து போனான். கிருஷ்ணன் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றார். சில விநாடிகள் சென்ற பின்னரே கனவினின்றும் தெளிந்தாற் போல் மூச்சு விட்டார்.
யார் கூப்பிட்டார்கள்? எங்கே கூப்பிட்டார்கள்? எதற்காக? அவர் விவரங் கூடக் கேட்காமல் வருகிறேன் என்றார்!
‘பகைமை தீர வந்த அழைப்போ இது, ஒரு வேளை? பையன் வந்தது உண்மைதானோ? ஜோகி உண்மையில் பகை விரும்புவானோ? சீலமும் தூய்மையுமே உருவான அவன் பகைக்கு மனசில் இடம் கொடுத்திருப்பானா!’
இராது, உள்ளும் புறமும் ஒன்றான, சண்டை விரும்பாத மானி அவன். ரங்கனை வெறுப்பவன். அவன் தன்மைக்கு அஞ்சியே தாத்தா கரியமல்லர் இறந்த போது ஊரில் இல்லாமல் ஒளிந்து சென்றான். தமையனுடன் விரோதம் பாராட்டாமல் இருப்பதற்காக, தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, நிர்ப்பந்தமாகக் கரியமல்லர் குடும்பத்துடன் விரோதம் பாராட்ட நேர்ந்திருக்கிறது. ஜோகிதான் அழைத்திருப்பான்.
வைகாசிக் கடைசி நாட்களில் வானம் எப்போது கொட்டும் என்று சொல்வதற்கில்லை. கையில் குடை கூட இல்லாமல் அவர் சரிவில் வேகமாக இறங்கினார். எல்லாம் தேயிலைத் தோட்டங்கள். குத்துக்குத்தான தேயிலைச் செடிகளுக்கு நடுவே ‘ஸில்வர் ஓக்’ மரங்கள் நல்ல கண்காணிப்பும் உர வளமும், ஒவ்வொரு செடியையும் விம்மிப் படர்ந்து பூர்த்துத் தளிர்க்கச் செய்திருந்தன. பள்ளிக்கூடப் பக்கம் தள்ளி மட்டப்பரப்பான இடத்தில், பணக்காரர் கும்பலிடை ஒண்டி நிற்கும் ஏழையைப் போலவும், மாளிகையின் பின் உள்ள எளிய குடிசை போலவும் பாருவின் துண்டு நிலம் அவர் கண்ணில் பட்டது. ஆரஞ்சு மரம் ஒன்று பூத்துக் குலுங்கி நின்றது. அருகில் சென்ற அவருக்கு, அதன் மணம் என்ன என்ன நினைவுகளையெல்லாம் எழுப்பியது!
அவள் வறண்ட உள்ளத்திலே மடிந்து போன ஆசை மணங்கள் தாம் அப்படி வெளியேறி அந்த மலர்களில் வீசுகின்றனவோ! ஆரஞ்சு, பூத்துக் குலுங்குகையில் அவர் எத்தனையோ முறை கண்டிருக்கிறார். இத்தனை மணம் உண்டோ? பாரு கையால் நட்டு வளர்த்த மரம், பள்ளிக்கூடம் வந்து விட்டால் வெட்டி எறிவார்கள். தாயொருத்தியின் ஒற்றை மகனை விட அவளுக்கு அருமையாக இருக்குமோ அந்த மரம்?
கிருஷ்ணன் சுற்று முற்றும் பார்த்தார். முன்பு, அந்த எதிர்மட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் ஜோகியுடன் கதை பேசிக் கொண்டு படுத்திருந்த நாட்கள் நினைவில் வந்தன. முட்செடிகளில் பவளம்போல் சிவந்த பழங்களைப் பறித்துத் தின்பார்கள். மாலை வேளைகளில் சரிவெங்கும் வெண்மலர்கள் (Butter Cubs) கிண்ணம் போல் பூத்திருக்கும்.
கிருஷ்ணன் திரும்பி அருவிக்கரைப் பக்கம் நடந்தார். தேயிலைத் தோட்டங்கள் முடிந்து, காய்கறித் தோட்டங்கள்; அதற்கும் அப்பால் கல்வியறிவில்லாத மனத்தைப் போல் பண்படுத்தப்படாத பூமி; அருவிக்கரையோரம் இன்னும் சில இடங்களில் இருமருங்கிலும் புதர்கள் மண்டியிருந்தன. அருவியோடு மணிக்கல்லட்டிக்கு எத்தனை முறைகள் சிறுவனாக நடந்திருக்கிறார்! அருவி வளைந்து குமரியாறு வந்து வீழ்ந்து சுனையாகும் இடத்தில் கலந்துவிடும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் கிருஷ்ணன் இளைஞனாக அந்த ஆற்றின் நடுவே பாதையிலே உட்கார்ந்திருக்கிறான். கன்னிப் பெண் ஒருத்தியைத் தீண்டுவது போன்ற அநுபவத்தை அந்த ஆற்றின் சுழல் அவனுக்குத் தந்தது.
அருவிக்கரையோடு நடக்கையில், மஞ்சள் பூங்கொத்துக்களுடன் வேங்கை மரம் ஒன்று அவர் கவனத்தைக் கவர்ந்தது. முருகனின் அம்சமான தெய்வ மலரல்லவா? அதுபோல் ஒரு வேங்கை மரத்தடியில் கிருஷ்ணனும் பாருவும் சந்தித்துப் பேசிய நாட்கள் மறந்து விட வேண்டிய நினைவுகள் ஆகிவிட்டனவே!
அவர் ஏன் நின்று விட்டார்? நிசந்தானா? அதிசயமில்லையே! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கனவா?
இல்லை. பாருதான். வெள்ளை முண்டும், போர்வையுமாக, பாரு பாருதான்; அவரைத் தொடர்ந்து, துரத்திக் கொண்டு வந்திருக்கிறாள்.
மாலை மங்கிக் கையெழுத்து மறையும் நேரமானாலும், பாருவை அவருக்குத் தெரியாதா என்ன?
“பாரு!”
பரபரத்த, பேதைமை தோய்ந்த பார்வையால் அவரைப் பார்த்தாள் அவள்.
“பையனிடம் அங்கேயே சொல்லியனுப்பினேன். வெகுதூரம் ஓடி வந்தேன்.”
“நீதான் சொல்லியனுப்பினாயா பாரு?” உறுதி மாறாத அவர் குரலும் நடுங்கியது.
“ஆமாம், என் பூமியைப் பறித்துக் கொள்கிறார்கலே! நான் என்ன செய்வேன்?” படபடப்பான குரல் தழுதழுத்தது.
“எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது, பாரு. உன் பூமியைப் பார்த்ததும் அதை நான் நினைத்துக் கொண்டேன். நீ அதைப் பிரிய மாட்டாயே என்று நினைத்தேன்.”
அவள் நெஞ்சு பாலாய் பொங்கியது. அத்தனை ஆரவாரமான கோலாகலமான அந்த வாழ்விலும், அவளைப் பற்றிய அநுதாபம் தோய்ந்த எண்ணங்களுக்கு இடம் உண்டா?
“நஞ்சன் ஸ்கூல் போகிறான்; என் மகன், பார்த்தீர்களா?”
“உன் மகனா?”
“ஆமாம். கிரிஜை பெற்று எனக்குத் தந்துவிட்டுப் போனாள். என் மகன் நன்றாக இல்லை? அவன், ‘ஸ்கோலில்’ முதலாகப் படிக்கிறான். உங்களைப் போல் கெட்டிக்காரன்.”
“நன்றாக இருக்கட்டும். உனக்குச் சந்தோஷமென்றால் எனக்கும் ஆறுதல் பாரு. நஞ்சன் நன்றாகப் படிக்கட்டும்.”
“நான் என் பூமியை ‘ஸ்கோலுக்’குக் கொடுத்து விடுகிறேன். அதற்குப் பதிலாக எனக்கு...”
“என்ன வேண்டும் பாரு? பூமியே வேண்டுமென்றாலும், எங்கே வேண்டும் என்று கேள்” என்றார் அவர் பதற்றமாக.
“காபி போட்டிருக்கிறீர்களே, கறுப்பு மண்; அருவி வளைவுக்கு மேலே. அதைக் கேட்கத்தான் முன்பு கூட நான் ஒத்தைக்கு வந்தேன்.”
அவள் சொல்லி முடிக்கவில்லை. புதர் மறைவிலிருந்து யாரோ வெளிப்பட்டாற் போல் இருந்தது கிருஷ்ணனுக்கு. ஒரு விநாடிக்குள் இருவர் மீதும் தபதபவென்று அடிகள் விழுந்தன குச்சிகளால்.
கிருஷ்ணன் புரிந்து சமாளிக்கு முன், பாரு அதிர்ந்து சுருண்டு விழுந்தாள்.
“நிறுத்துங்களடா, பேடிப் பயல்களா? யாரடா அது?”
தம் கைக்கம்பைச் சுற்றிக் கொண்ட கிருஷ்ணன் நாற்புறமும் இருபது வயது இளைஞனைப் போல் பாய்ந்தார்.
தபதபவென்று ஆட்கள் புதர்களினின்றும் வெளிப்பட்டாற் போல் ஓடினார்கள்.
“பாரு அடிப்பட்டதா? போக்கற்ற பயல்கள்! பெண் பிள்ளையை அடிக்கிறார்களே! இந்த மரகதமலைக் கிராமம் இவ்வளவு கேவலமாகவா ஆக வேண்டும்? பாரு!”
ஆதரவுடன் அவர் குனிந்து அவளை எழுப்பு முன், டார்ச் அடித்துக் கொண்டு ஓர் உருவம் அங்கு வந்தது. டார்ச் ஒளியை, அவர் மீது அடித்து, அந்த உருவம் சிரித்த போது அவர் திகைத்து நின்றார்.
“ஓகோ! ஊருக்குப் பெரிய கிருஷ்ண கௌடர் தானா?”
அந்த ஏளனச் சிரிப்பு, பாருவின் செவிகளில் நாராசமாகப் பாய்ந்தது. ரங்கனின் மூத்தமகன், லிங்கன் அவன்.
“பெரிய மனிதர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து பார்க்கக் கூடாது. இருந்தாலும் விறகுக்குப் போய்வரும் பெண் பிள்ளையை மடக்கிப் பயமுறுத்தி...”
பாரு பாய்ந்து திரும்பினாள், “லிங்கா! என்ன இது?”
“என்னவா? பெரியம்மா, உங்களுக்கு இது அவமானம் இல்லை? ஏளனம் இல்லை? பெரிய மனிதனாம்! ஒரு பெண் பிள்ளையை ஆள் வைத்து அடித்து நிர்ப்பந்தப்படுத்தி நிலத்தைப் பறித்துக் கொள்ள முயல்வது; நாங்கள் அப்பன், பாட்டன், சிற்றப்பன், பிள்ளைகள் அத்தனை பேரும் சும்மா இருப்பதா? இவன் வரும்போதே எனக்குச் சந்தேகம் தட்டி நான் ஒளிந்து வந்தேன். நான் வராமல் போனால் என்ன ஆகியிருக்குமோ? வாருங்கள், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?”
பாருவின் கையைப் பிடித்து லிங்கன் விசுக்கென்று இழுத்தான். அவனுடைய முரட்டுத்தனமுள்ள கரங்களுக்குள், வாழ்வின் பசுமை எல்லாம் வற்றிய அவள் கை சிக்கியது.
“இல்லை லிங்கா; அடிக்க வந்தது யார் என்று தெரியவில்லை.”
“யாராக இருக்க முடியும்? செல்வாக்கின் திமிரில் நம்மை விரட்டிப் பார்க்கிறான். இவ்வளவு பெரிய மலையில் பள்ளிக்கூடம் கட்ட இடமா இல்லை? என்ன நயவஞ்சகமாக உங்களை அங்கே நிற்க வைத்து, ஆட்களை ஏவி அடிக்கச் சொல்லியிருக்கிறான்?”
பாருவுக்குப் பொறி கலங்கிவிட்டாற் போல் குழப்பம் உண்டாயிற்று. நச்சுப் பாம்பில்லாத மரகதமலையிலே அவள் புருஷன் ஒரு நச்சுப் பாம்பு போல இருப்பதை அவள் அறிவாள். நச்சுப் பாம்பின் குட்டியா இந்த லிங்கன்? கிருஷ்ணன் எங்கே? இந்த நேற்றுப் பயல் எங்கே? அங்கு நின்றால், இனி ரசாபாசமன்றோ?
லிங்கனின் வாய் அந்தக் கிருஷ்ணனை, அவரைச் சேர்ந்தாரை, அவர் குடும்பத்தாரை, ஏசி இகழ்ந்து பொலபொலத்துக் கொட்டியது.
கடவுளே! நீயே உண்மையை அறிவாய்! கிருஷ்ணன் நன்மையல்லவோ செய்ய வந்தார்? அவன் மகன் படிக்கப் பள்ளிக்கூடம்; அவளுக்குப் பொன் விளையும் கறுப்பு மண். கணவன் என்ற தொடர்பை அவள் எப்போதோ விட்டு விலக்கி விட்டாளே!
லிங்கன் கையைப் பிடித்து அவளை இழுத்துக் கொண்டு ஹட்டிக்குள் நுழையுமுன் அவன் நா மொழிந்த வசை மொழிகள் எல்லோரையும் வாயிலுக்குத் தள்ளி வந்துவிட்டன. பாரு குன்றிக் குறுகி, கடுகிலும் கடுகாய்ச் சிறுத்துவிட்டாள்.
“யார்? பெரிய வீட்டிலா? அடித்தானா? பாரு அக்காளா?” என்பன போன்ற கிசுகிசுத்த குரல்கள். நெஞ்சில் உள்ளதை உதட்டுக்குக் கொணர அஞ்சும் நிலை அந்த ஹட்டியிலே நிலவி வெகு நாட்கள் ஆகிவிட்டனவே!
ரங்கன் பாய்ந்து வந்தான்; “ஏரா, லிங்கா?”
துடிதுடித்த விளக்குச் சுடர்போல் பாருவின் நெஞ்சு படபடத்தது. அக்கிரமத்துக்கு ஓர் எல்லையே இல்லையோ? நஞ்சன் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.
ரங்கன், மகன் தூண்டிய ஆத்திரத்தில், ஆவேசம் வந்தவனாக ஆடினான்.
“இந்த அநியாயத்தைப் பார்த்து விட்டுச் சும்மா இருப்பதா? செய்யும் அக்கிரமத்தையும் செய்துவிட்டுப் பள்ளிக்கூடமாம், நன்கொடையாம்!”
“இதை அப்படியே விடலாமா அப்பா?” என்றான் மகன்.
“ஏன் விட வேண்டும்? டாக்டரிடம் காயமென்று சர்ட்டிபிகேட் வாங்கி, கோர்ட்டில் போடுவேன், அவன் மானம் கப்பலேறச் செய்வேன்?” என்றான் ரங்கன்.
“பாழாய்ப்போன கோட்டுப் பற்றி எரியட்டும்!” என்றாள் பாரு.
“கட்டிய கணவன் வீட்டுக்குத் துரோகம் நினைப்பவளே!” என்று சீறினான் ரங்கன்.
“அப்பா பெரியம்மா அவன் வஞ்சத்தை அறியாமல் பேசுகிறார்கள்” என்றான் லிங்கன்.
“வெட்கக் கேடு! என் வீட்டில் இருந்து கொண்டு நீ துரோகியாகிறாய். போய்விடுவதுதானே?” என்று கத்திய ரங்கன், “ஜோகி ஜோகி” என்று அழைத்தான்.
ஜோகி அங்கு இருந்தால் தானே?
பாரு ஒரு விநாடி அமைதிக்குப் பிறகு, “போகிறேன்; என் பிள்ளையை அழைத்துக் கொண்டு இந்த மண்ணை உதறிவிட்டுப் போகிறேன்” என்றாள் கண்கள் துளும்ப. அட்டகாசமாகச் சிரித்தான் அவள் கணவன்.
“ஓ! பிள்ளையா? யார் பிள்ளை? இந்த வீட்டுப் பிள்ளை, இந்தக் குடும்பத்தை விட்டுப் போகிறவளுடன் வருவானா?”
அவள் ஈட்டி பாய்ந்து தடுத்தாற் போல் அமைந்து நின்றாள்.
நஞ்சன் அந்தக் குடும்பத்துப் பிள்ளை. அவள் பிள்ளையா அவன்? கிரிஜை பெற்றாலும், பிரிந்து செல்பவர்களுக்குத் தன் மக்களே சொந்தம் இல்லையே! நஞ்சன் அவள் மகன் அல்லன். அந்த வீட்டுக்குச் சொந்தம். அந்த வீட்டைச் சொந்தமாக அவள் நினைத்தால் தான் நஞ்சன் அவளுக்குச் சொந்தமாக முடியும். அந்த வீட்டைச் சொந்தமாக அவள் நினைக்க வேண்டுமானால், அவள் தன் முன் நிற்கும் கணவனைச் சொந்தமாக நினைக்க வேண்டும்.
“ஏன் வாய் அடைத்து விட்டாய்? நீ இந்த வீட்டில் இருப்பதனால், என் சொற்படி கேட்க வேண்டும். அந்தத் துரோகிப் பயலுக்கு உடந்தையாக இருப்பதானால், போய் விடு!”
பாரு என்ன பேசுவாள்? எதைச் சொல்வாள்?
“இன்று பெண்பிள்ளையை ஆள் வைத்து அடித்தான். நாளை பிள்ளையையே கடத்திச் செல்வான்!”
இந்தச் சொற்களைக் கேட்டதும் அவள் உள்ளம் சில்லிட்டது. பாம்பின் கால் பாம்பு அறியும். குற்றங்களைச் செய்பவனுக்கே எதிரி அதைச் செய்வானோ என்று தோன்றும்.
கிருஷ்ணனின் ஆட்கள் அவளை அடிக்க வந்திருக்க மாட்டார்கள்; அது முழு உண்மை. ஆனால் என்ன? அவள் கணவனே ஆட்களை ஏவி அதைச் செய்வான். பொய்ச் சாட்சிகள் ஜோடிப்பான். அவள் அவன் சொல்லுக்கு மீறினால், அவள் கண்ணான பையனுக்கு ஏதேனும் தீங்கு செய்தாலோ?
பையன் அவள் கணவனுக்குச் சொந்தமா? ஜோகியண்ணனின் மீது கூடத்தான் அவனுக்குப் பொறாமை உண்டு. அதையும் சேர்த்துப் பழி வாங்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?
அவள் விதிர்விதிர்த்துப் போனாள். கைகள் அவளையும் அறியாமல் நஞ்சனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.
“என்ன பேசாமல் நிற்கிறாய்? போய் விடுகிறாயா வீட்டை விட்டு?”
அச்சத்தால் முகம் வெளிற, அவள் ஓய்ந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். ரங்கன் இன்னும் விட்டுவிடவில்லை.
“அவன் பக்கம் உடந்தையாக இருப்பதில்லை என்று இப்போது மாரியம்மன் சாட்சியாக அடித்துச் சொல்.”
பாருவின் கண்களில் நீர் பெருகிற்று. பையனின் பால் வடியும் முகத்தைப் பார்த்துக் கொண்டு, அந்த உயிரின் உயிருக்கு ஒரு கேடும் வரக்கூடாது என்ற அச்சத்தில் மூழ்கியவளாக அவள் அவனிடம், “மாரியப்பன் சாட்சியாகக் கிருஷ்ணன் பக்கம் உடந்தை அல்ல” என்றாள்.
“அப்படியானால், இப்போது அவன் ஆள் வைத்து, உன்னை வஞ்சகமாக அழைத்து வரச் செய்து, பயமுறுத்தி நிர்ப்பந்தமாகப் பூமியைக் கேட்டான்; உன்னை அடித்தான்.”
“ஈசுவரா! பொய் வழக்குக்கு ஒப்பவில்லை என்றால் அவள் உடந்தையா?”
பாரு சடேரென்று அவன் கால்களில் விழுந்தாள். “உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஒரு காலத்தில் மண்ணோடு மண்ணாகிவிட்ட காலத்திலே அவனை நான் மணக்க நினைத்தது உண்மைதான். ஆனால், இப்போது அது எரிந்து சாம்பலாகிவிட்ட நினைவு. அந்தச் சாம்பல் கூடக் கண்ணில் பெருகிவரும் நீரில் கரைந்து விட்டது. என்னை விட்டு விடுங்கள். அவனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்தப் பிள்ளையைத் தவிர, இந்த உலகில் வேறு யாருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. என்னை வம்புக்கும் வழக்குக்கும் இழுக்காதீர்கள்.”
வாயிற்புறம் நின்ற ஜோகி, நெஞ்சைப் பிடித்த வண்ணம் அந்தக் காட்சியைக் கண்டார். எங்கோ சென்றவர், மேலே பாதையிலுள்ள நாயர் கடையில் ஏதேதோ பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். எப்பேர்ப்பட்ட ரணத்துக்கும் சீழுக்கும் மருந்து வந்து விட்ட மகிமையை நாயர் பேசிக் கொண்டிருந்தார். மேலை நாட்டினர் உலகில் கண்டுபிடித்துச் சாதித்தவற்றுக்கெல்லாம் காரணம், அவர்கள் உண்ணும் புலாலுணவே என்று உச்சன் விவாதித்துக் கொண்டிருந்தான். ஹட்டிக்குள் லிங்கன் சத்தமிட்டுக் கொண்டே பாருவை அழைத்து வந்த கலவரம் அங்கு எட்டியிருக்கவில்லை. உள்ளே நுழைந்திருந்த ஜோகி, கண்ட காட்சி!
முன்னேற்றம் வந்திராத நிலையிலே அவர்கள் ஹட்டியிலே என்ன மேன்மை குறைந்திருந்தது? உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் இருந்ததா? உன் நிலம் என் நிலம் என்று காய்ந்தார்களா? ஒருவர் பட்டினி கிடக்க ஒருவர் கொழித்ததுண்டா; ஒரு வீட்டில் வாழ்வோ தாழ்வோ வந்தால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுண்டா? அத்தனை மேன்மைகளையும் அழித்தது எது? சாமையும் தினையும் கொறளியும் பாலும் போதா என்ற காலம் வந்தல்லவோ எல்லாவற்றையும் அழித்தது? கிழங்கும் தேயிலையும் கொண்டு வந்த பணமல்லவோ அழித்தது? சட்டையும் சராயும் புகுந்த நாகரிகமல்லவோ அழித்தது? பொன்னும் பட்டும் புகுத்திய மோகமல்லவோ அழித்தது?
இவை எல்லாவற்றுக்கும் மரகதமலை ஹட்டியிலே முன்னோடியானவர் யார்? கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டுமா? ரங்கனுங்கூடத்தான். இருவரும் சேர்ந்து, ஹட்டியை உறிஞ்சும் விஷப் பூச்சிகள் போல் ஆகிவிட்டனர்.
படிக்கும் பையன்கள் இன்னும் பணமாகக் குவிப்பார்கள். ‘கோர்ட்’டென்றும், வழக்கென்றும் அந்தப் பணத்திமிரால் பகையை வளர்ப்பார்கள்.
பாரு, பண்பும் அன்பும் பணிவும் உருவாகத் திகழும் அண்ணி, அசூயை உருவான அவன் காலில் விழுந்தாள். அசூயையை எப்படி வெல்வது?
கண்களில் நீர் துளும்ப, ஜோகி அந்தக் காட்சியைப் பார்ப்பவராக நின்றார்.
தன்னை அப்படி வெற்றி காண முயலும் அவளை அப்போது என்ன செய்வதென்று ரங்கனுக்குப் புரியவில்லை.
“ஏன் இப்படி அழுது மாய்கிறாய்?”
“வம்பும் வழக்கும் வேண்டாம்; என்னை விட்டு விடுங்கள்.”
“சனியன் பிடித்தவளே!”
ரங்கன் உதைத்து விட்டு, ஜோகியையும் பாராமல் வெளியேறினான். பாரு உள்ளே பையனை அணைத்தவளாய், விம்மலை அடக்கும் முயற்சியில் சாய்ந்திருந்தாள்.
ரங்கம்மையும் மருமகளும் குழந்தைகளும் கலவரத்தைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை; படுத்து முடங்கி விட்டார்கள்; தீபமாடத்தில் ஒளி இல்லை. ராமன் லாரி ஓட்டிக் கொண்டு சென்றிருந்தான். அண்ணன் தம்பி ஒற்றுமை பகைமைக்குத்தானா?
வெகுநேரம் சென்ற பின்னரே, படுக்க ஏதேனும் கம்பளி எடுக்க உள்ளே சென்றார் ஜோகி. இருளில் சிலை போல் பாரு தென்பட்டாள். அவள் உறங்கவில்லை. வாழ்விலே விதி என்னும் வல்லோன் குறுக்கிட்டு எப்படியெல்லாம் புகுந்து புறப்பட்டும் பிரித்தும் கூட்டியும் கொடுத்தும் பிடுங்கியும் விளையாடுகிறான்!
“அண்ணி!”
ஆண்டாண்டுகளாய் இன்பம் துன்பம் பட்டு முதிர்ந்தாலும் அந்த ஆதரவுக் குரலிலே அவள் பேதையாகி விட்டாள்.
“ஜோகியண்ணா!”
விம்மல் உடைத்து துயரம் கரை காணாமல் பெருகியது.
“குழந்தை நஞ்சனுக்கு ஒன்றும் வராதே, ஜோகியண்ணே?”
“மனசு தளராதீர்கள். பாலும் தேனுமாகி வாழ்ந்த நாளிலே இந்த மலைமண் எனக்கு இனித்தது. புளிப்பேறிவிட்ட இந்த நாளிலே மலைமண் கரிக்கிறது; கசக்கிறது.”
அவர் அப்படிப் பேசப் பேச, அவள் குலுங்கிக் குலுங்கிக் கண்ணீர் விட்டாள்.
மறுநாள் காலையில், நிறைசூலிப் பெண்ணைப் போல் மேகங்கள் மலைமுகடுகளில் வேதனைப்பட குவிந்து விட்டன. எங்கிருந்தோ மருத்துவனாகக் காற்றும் கடுகி வந்து விட்டது.
ஜோகி, அன்று நிலத்தையும் நீரையும் மறந்தார். காலையில் எழுந்து எருமை கறக்கவும் இல்லை; ஒளியாம் தெய்வத்தை வெளியே நின்று வணங்கவும் இல்லை. இரவெல்லாம் யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டவர் போல், தானியப் பெட்டிக்குள் வைத்திருந்த சிறுபெட்டியைத் திறந்தார் உள்ளே ஒரு துணி முடிப்பில், அவர் அவசரத்துக்கென்று சேமித்திருந்த பணம் முந்நூறு ரூபாய்கள் போல் இருந்தன. பழைய காலமானால் முந்நூறு ரூபாய் மூவாயிரம் பெறும். பணத்தை எல்லோரும் விரும்பிப் பேராசைப்படப் போக, அது மதிப்பையே இழந்து விட்டதே!
பணத்தைப் பையுடன் எடுத்துக் கொண்டார். கம்பளிப் போர்வையால் போர்த்துக் கொண்டார். அவர் கிளம்பிய சமயம் ரங்கம்மை வந்து, “மாடு கறக்கவில்லையா? காபி வைக்க வேண்டாமா?” என்றாள். மாடுகளைக் கறந்துவிட்டுக் கிளம்பலாம் என்று அவருக்குத் தோன்றியது. உடனே கை கால்களைக் கழுவிக் கொண்டார். பால்மனைக்குச் சென்று உடை மாறி பாற்குழாயைக் கழுவிக் கொண்டு கொட்டிலுக்குச் சென்றார். பால் கறந்து வைத்துவிட்டு, காலைப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டார். ரங்கம்மையின் மருமகள் தந்த காபியை அருந்தினார். பாரு பையனைக் குளிப்பாட்டிச் சட்டை போட்டுப் பள்ளிக்கு அனுப்புவதில் ஈடுபட்டிருக்கையில் அவர் வெளியேறினார்.
பகைமைக்கு இடம் கொடுத்த வெறி மண்ணை விட்டு விடுவிடென்று அவர் கீழ்மலைப் பக்கம் இறங்கினார். காற்று விசிறி அடித்தது. காற்று அப்படி அடிக்கையில் சாரல் ஊசிகளெனப் பாயும். ஆனால் அவை அமுத தாரைகள். எங்கு நோக்கினும் பச்சை கொழிக்கச் செய்பவை அன்றோ?
கீழ்மலையைச் சுற்றிக் கடந்து, அவர் மூக்குமலைப் பக்கம் நடந்தார். தொலை தூரங்களிலே, கிழங்கும் காய்களும் கோதுமையும் விளைவிப்பவர், நிலங்களைக் கொத்த வந்திருந்ததைக் கண்டார். கழுத்தைச் சுற்றிச் சாக்கு, கம்பளி அணிந்து, காற்றையும் சாரலையும் பொருட்படுத்தாமல் ஈரமண்ணைக் கிளறுபவர்கள், பூமியின் சொந்தக்காரர்கள் தாம். தேயிலையும் காபியும் போட்டுவிட்டு, ஆட்களை ஏவிவிடுபவர்கள், மண்ணை மதியாதவர்கள். ஒத்தை, கோயம்புத்தூர் நகரங்களில் உல்லாசம் அனுபவிக்கப் பணம் பண்ணுபவர்கள். ஆங்காங்கு, ஆடுமாடுகள் பச்சைப் புல் தேடி நின்றதை அவர் கண்டார். கால்நடைகளுக்கென்று குன்று குன்றாகப் புற்சரிவுகள் விட்டு வைத்த காலம் மலையேறி விட்டதே! எங்கும் தேயிலை!
அது மட்டுமா? வெளி நாகரிகம் என்னவெல்லாம் கற்றுத் தந்துவிட்டது? புலால் உண்பவரைக் கடையர் என்று கருதிய பெரியோரே, பிள்ளைகள் புலால் உணவு கொள்வதைப் பெருமையான நாகரிகமாகக் கருதும் தாழ்வன்றோ வந்து விட்டது.
மூக்குமலை ஏறும் சரிவில் பெரிய டீ பாக்டரி ஒன்று புகையை எழுப்பிக் கொண்டிருந்தது. பச்சை இலையைப் பரிமளிக்கும் காய்ந்த இலையாக வறுக்க, மூலைக்கு மூலை தொழிற்சாலைகள். கிருஷ்ணன் கூட, மரகதமலைப் பக்கமே ஒரு தொழிற்சாலை நவீன இயந்திரங்களுடன் ஏற்படுத்தப் போவதாக அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அது வேறு எத்தனை கலகங்களை எழுப்புமோ?
மூக்குமலை ஹட்டிப்பக்கம் சூரியன் நகை செய்வது போல் ஒளி தருவதும், உடனே காற்றால் அலைக்கப்படும் மேகத்திரையில் ஒளிவதுமாகத் தெரிந்தான். ஈரம் கண்ட மகிழ்ச்சியில் மக்கள் ஆங்காங்கே பூமி திருத்திக் கொண்டிருந்தனர். காபி தேயிலை அதிகம் பற்றாத மலை. மக்களைப் பண ஆசை பற்றவில்லை போலும்!
சில இடங்களில் கிழங்குச் செடிகள் மிக வாளிப்பாக வளர்ந்திருந்தன. சீமை உரத்தின் வீரியம் - மண்ணில் இருக்கும் உயிர்ச்சத்து அனைத்தையும் ஒரேயடியாக உருட்டித் திரட்டித் தரும் வீரியம்! ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பாக இருக்கையிலே, ஒரு புறம் முதுகிழவர் ஒருவர், வெற்றிலைச் சருகையும் புகையிலையையும் மெல்லுவதும், கைமுள்ளை ஒரு தரம் பூமியில் பதிப்பதுமாக, அயர்ந்து அயர்ந்து, பாடுபட்டுக் கொண்டிருந்தார். கிழவரின் நாடி நரம்புகளெல்லாம் தொய்ந்து தளர்ந்து விட்டன. கருமை உரம் பாய்ந்து குளிரிலும் பனியிலும் காய்ந்து சிவந்த தேகம். காதுகளிலே இரட்டைப் பொன்வளை அணி குலுங்கியது. தலைப்பாகை ஆடியது. ஏழு குறிஞ்சி கண்டிருப்பாரா கிழவர்?
ஜோகி அருகில் ஓடினார். “மாமா, மாமா!” என்றார். கிழவர் கண்களைச் சுருக்கிக் கொண்டு நோக்கினார்.
“ஜோகி, ஜோகியா?”
“ஆமாம், மாமா.”
ஜோகிக்கு மாமனைக் கண்டதே நெஞ்சு தழுதழுத்து விடக் காரணமாயிற்று. முதுகிழவர், முள்ளைப் பிடித்து மண் திருப்புகிறாரே!
மகன் இல்லையா? மகன் ஒருவன் மிஞ்சி இருக்கிறான். ஆனால் முதுமைக்கு உதவாத மகன்!
“நல்லாயிருக்கிறாயா? நல்லாயிருக்கிறீர்களா?”
“ம். மாமா, நீங்களேயா இந்த மண்ணைத் திருப்புகிறீர்கள்?”
“ஆமாம், படித்த மகன் சம்பாதிக்கப் பறந்து போனான். கிழவனுக்குப் பூமி. அந்தக் கட்சியிலும் சுந்தானே எல்லோரும்?”
பகையை மறக்க எண்ணி வந்தவர் காதுகளில் கட்சி என்ற சொல்லோ நெஞ்சில் வேலைப் பாய்ச்சினாற் போல் இருந்தது.
கிழவர் உட்கார்ந்து கனத்த சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.
“சித்தன் இங்கே வந்து எத்தனை நாளாயிற்று மாமா?”
“ஹ்ம். அவனுக்கு இந்தக் கிராமத்தில் என்ன வேலை? உத்தியோகப் படிப்பு அவனை ஊரைவிட்டுத் துடைத்துப் போயிற்று; மற்றவர்களைப் பிளேக் மாரி துடைத்துப் போயிற்று. வீட்டில் கட்சி கட்ட ஆளில்லை. மண் இருக்கிறது; மானம் இருக்கிறது; குடிசை இருக்கிறது; குந்திக் கிடக்கிறேன். எங்கே வந்தாய்? பூமி திருப்பி விதை விதைத்தாயிற்றா? நேற்றுக் கூட ஏதோ கலவரமாமே?”
ஜோகியின் மனம் பொறுக்கவொண்ணாத வேதனையில் வெதும்பியது.
“மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா, நான் அந்தக் கட்சி, சண்டை, விரோதம் எல்லாவற்றையும் மறக்க வேண்டுமென்று வந்தேன். அதைப் பற்றிப் பேசாதீர்கள். எல்லோரும் ஒத்து ஒன்று கூடி நமக்குத் தந்த பிறப்பை நாசமாக்காதவர்களாக இருப்போம் என்று சொன்ன ஐயன் தலை சாய்ந்ததுமே சண்டை வந்தது. நானே அதற்கு வித்திட்டேன் என்ற நினைப்பே என்னை அங்கு உருக்குகிறது மாமா. இந்த தள்ளாத வயசில் இந்த மண்ணில், நீங்கள் யாரை நம்பி முள்போட்டுத் திருப்பி, விதை போடுகிறீர்கள்?” என்றார் ஜோகி.
“ஈசுவரன் கொடுத்த தேகத்தில் இன்னும் கொஞ்சம் தெம்பு இருக்கிறது. யாரை நம்புவது என்ன? உழைக்கப் பிள்ளைகள் இல்லையென்றாலும், உண்ணப் பிள்ளைகளா இல்லை?”
கிழவர் நகைத்தார்.
“நான் முள்ளுப் போடுகிறேன், மாமா” என்று ஜோகி அவர் கைமுள்ளை வாங்கினார்.
“நீயா?”
“ஆமாம். சித்தன் மண்ணில் ஒட்டாமல் ஓடிவிட்டானென்று வருத்தப்பட்டீர்கள். என்னை ஒரு சித்தனாக வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் கட்சி வேற்றுமை பற்றிப் பேசாதீர்கள். உங்கள் மண்ணில் உழைப்பதற்குப் பெரிய நன்மையாக நான் பெற்றுக் கொள்வேன்.”
“ஜோகி!” என்று அழைத்தார் கிழவர், கண்கள் கசிய.
“இரியவுடையர் கோயிலில் எட்டு வருஷங்கள் இருந்தவன் அல்லவா நீ? மண் இருக்கிறது; உழைக்க மனிதன் இல்லை. வெறும் கிழம் இருக்கிறேன், கிழம்.”
“மாமா, உங்களைத் தந்தையாக நினைத்துவிட்டேன், முள்ளைக் கொடுங்கள். மரகதமலை மண் கசந்துவிட்டது எனக்கு. இந்த மூக்குமலை மண் எனக்குச் சொந்தமான மண்.”
“கடவுளே!” என்று கிழவர் வானை நோக்கினார்.
“வயசுக் காலத்தில் பையனும் மருமகளும் விட்டுப் போனார்களே; மகன் இருந்து என்ன பிரயோசனம் என்று காலையிலே கண்ணீர் விட்டேன். முன்பெல்லாம் ஒருவருக்கு முடியாவிட்டால் இன்னொருவர் உதவுவோம். ஜோகி, இன்னமும் பருவத்துக்குக் காற்றடித்து, மழை பெய்து பனியடிப்பதெல்லாம் உன் போல் இருப்பவர்களுக்காகத்தான்” என்றார்.
“நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதைப் பகை உணர்வு ஒன்றில் தான் அண்ணன் எதிர்பார்க்கிறான். உங்களிடம் அடைக்கலமாக வருகிறேன். மாமா, என்னிடம் முந்நூறு ரூபாய் இருக்கிறது; பூமிக்குக் குத்தகையாக வாங்கிக் கொண்டாலும் சரி; உங்களுக்கு ஆதரவாக என்னை வைத்துக் கொண்டாலும் சரி; வந்து விட்டேன்.”
“முதுமையின் சுமையைத் தாங்க வந்த நீதான் என் மகன்!”
கிழவர் ஜோகியைக் கட்டிக் கொண்டார். மழைத் தூற்றல் வலுத்தும், அந்தச் சில்லிப்புக் கூடத் தெரியாமல் ஒருவருக்கு ஒருவர் உள்ளன்பின் சூட்டில் கட்டுண்டவர்களாக நின்றார்கள்.
மழையோடு மழையாக பகைமைக்கும் குரோதத்துக்கும் அப்பால் அடைக்கலம் கண்டுவிட்ட ஆனந்தத்திலே ஜோகி வீடு திரும்பி வந்த போது, பாரு, கம்பளிக் கிழிசல் ஒன்றைத் தைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மழை பெய்வது கண்டு, “குடை எடுத்துப் போகாமால் போயிருக்கிறானே நஞ்சன்?” என்று கூறிய வண்ணமே நிமிர்ந்து பார்த்தாள்.
ஜோகி அதற்கு மறுமொழியின்றி, வீட்டுக்குள் சுற்று முற்றும் பார்த்தார். முதலில் பணத்துடன் செல்கையில் மரகதமலை திரும்பி வரும் உத்தேசம் இருக்கவில்லை. ஆனால், ‘பிறந்து, வளர்ந்து, உயிரோடு, ஊனோடு தேய்ந்த குடிலை விட்டுப் போகிறோம்; ஒவ்வோர் இடமும், ஒவ்வொரு சிறு பொருளும், கதவும் சுவரும் நினைவுகளை வாய்விட்டுச் சொல்வது போல் தோன்றும் இவ்விடத்தை விட்டு வேற்றிடம் போகிறோம்’ என்று நினைவுகள் எழ, கடைசியாக விடைபெறாமல் வந்துவிட்டதாக அவருக்குத் தோன்றியது. பிறகு, பாரு அண்ணி! நஞ்சனை வளர்க்கும் தாய்! விடைபெற வேண்டாமா அவளிடம்?
“அண்ணி ஒரு சமாசாரம்!” என்றார்.
குரலில் இருந்த கனம் அவளுக்குச் சாதாரணமான சமாசாரம் அல்ல என்பதை உணர்த்தியது.
“என்ன?”
“ரங்கம்மை எங்கே?”
உட்புறம் கல்திரிகையில் தானியம் அரைத்துக் கொண்டிருந்த ரங்கம்மை அங்கு வந்தாள்.
“நான் மூக்குமலை போய்விடுவதாகத் தீர்மானம் செய்து விட்டேன்.”
பாருவின் கை ஊசி நழுவியது. ரங்கம்மை திகைத்து நின்றாள்.
“இந்த விரோதப் புகையில் மனம் வெந்து குமைய முடியவில்லை. இருக்கும் பூமியை நீங்களும் பிள்ளைகளும் பயிர் செய்யுங்கள். நான் போகிறேன்.”
“நீங்கள் போன பிறகு? ஜோகியண்ணா, இந்த மலையில் எனக்கும் புளித்துத்தான் போயிற்று. என் பிள்ளைகளுக்குக் கதி?” என்றாள் ரங்கம்மை.
“கவலைப்படாதே ரங்கம்மா. ஐயனுக்கு, அவர் பூமியில் உன் குடும்பம் பாடுபட்டுப் பிழைப்பது திருப்தியாக இருக்கும். முள்ளின் மேல் இருப்பது போல், ரம்பத்து முனையில் நடப்பது போல், மனச்சாட்சியையும், அண்ணன் தம்பி உறவையும் நினைத்து இங்கே என்னால் நடக்க முடியவில்லை. நான் போகிறேன். போகும் இடத்துக்குப் பையனையும் அழைத்துப் போக நினைக்கிறேன். இந்தப் பகை அவனுக்கு வேண்டுமா?” என்றார் ஜோகி.
“பையனை அழைத்துப் போகிறீர்களா? நீங்களுமா என்னை மோசம் செய்கிறீர்கள்? ஜோகியண்ணா, நஞ்சனை என்னிடமிருந்து பிரிக்கிறீர்களா?”
இந்தக் காய்ச்சலும் புகையும் அவனுக்கு வேண்டுமா? பகை தலைமுறை தலைமுறையாக வளர, அவன் நெஞ்சிலும் புகை சூழ வேண்டுமா?
“என் பையனைப் பிரிக்கிறீர்களே! நியாயமா?” - பாரு கண்ணீர் பொங்கக் கேட்டாள்.
ஜோகி நிலத்தைப் பார்த்தபடியே, “நியாயமல்லாததை நான் பேசவில்லை அண்ணி. உங்களுக்குச் சம்மதமானால், நஞ்சனுக்காக நீங்களும் வரலாம். மூக்குமலை மாமன் நம் மூவருக்குமே அடைக்கலம் தருவார்.”
பாரு அன்றே புறப்படச் சித்தமானாள்.
புரட்டாசி மாதத்து இளவெயில் உடலுக்கு இன்பத்தேனாக இருந்தது, மூக்குமலைக் கிழவருக்கு. வெறித்துக் கிடந்த வீட்டில், உழைக்க ஓர் ஆளும் ஒரு பெண்ணும் வந்த தெம்பில், கிழவர் பத்து வருஷம் இளையவர் ஆகி விட்டாற் போல் தோன்றினார்.
ஒருபுறம் சாமையும் கோதுமையும் பயிர்களாய் பச்சை பிடித்துக் கண்ணுக்குக் குளுமையூட்டின. இன்னொருபுறம் கிழங்கெடுக்கத் தயாராகப் பழுத்துக் காய்ந்த செடிகள் மனத்தில் நிறைவைக் கூட்டின. ஜோகி ஓட்டி வந்த எருமை, சினைப்பட்டுக் காத்திருந்தது. அவருக்குத்தான் முதிய காலத்திலும் எவ்வளவு அதிருஷ்டம்! இருவரும் மண்ணின் செல்வமக்கள்; தொட்டது பொன்னாகும் என்று நிரூபித்து விட்டனரே?
ஜோகி காலையிலேயே விளைநிலத்தைப் பார்க்கப் போய் விட்டான். பாரு, நஞ்சனுக்கு உணவளித்துப் பள்ளிக்கும் கையில் கட்டிக் கொடுத்து அனுப்ப வேண்டுமே? வீட்டு வேலைகள் முடிந்து அவள் நடுப் பகலுக்குத்தான் விளைநிலத்தைப் பார்க்க வர முடியும். நஞ்சன் மரகத மலைப் படிப்பை முடித்து விட்டு, ஒத்தைக்கே சென்று கொண்டிருந்தான். கல்விப் பசியைத் தீர்த்துக் கொள்ள, எட்டு மைல்கள், மேடு பள்ளம், காடு மலை என்று பாராமல் நடந்து சென்று கொண்டிருந்தான். அவள் பெறாமல் பெற்ற மகன், மழைக்கும் குளிருக்கும் தாங்கக் கோட்டும் காலுக்கு ஜோடும் அணிந்து, புத்தகப் பையும் சாப்பாட்டுப் பாத்திரமுமாகப் பையன் நடந்து செல்கையில், பாருவுக்கு ஒவ்வொரு நாள், வேதனை கண்களில் தேங்கி நிற்கும். பையன் கீழ்ச் சரிவில் இறங்கிச் செல்லும் வரை, அவள் வாயிலில் நின்று பார்ப்பாள்.
அவளுடைய நஞ்சன் வளர்ந்து வளர்ந்து பெரியவனாகி, என்ன லட்சியத்தை சாதிக்கக் கனவு காண்பாளோ! கிழவர் அதை மனத்தில் காண்பவர் போல் நினைத்துக் கொண்டு, புன்னகையுடன் அன்று கேட்டார்: “பையன் ஸ்கோல் போய் விட்டானா?”
“போய்விட்டானே? வீட்டில் ஒரு நாள் கூட அவன் தங்க மாட்டான். எத்தனை தூரம் நடக்கிறான்!”
“இப்படிப் படித்து என்ன செய்யப் போகிறான் உன் மகன்?”
“ஏன் மாமா அப்படிக் கேட்டீர்கள்? எங்கள் நஞ்சன், இந்த மலையிலேயே உயர்ந்தவனாகப் படித்து வருவானே!”
“உயர்வாக வந்து உனக்கென்ன லாபம், அசட்டுப் பெண்ணே?”
“என்ன லாபமா? நான் வளர்த்த மகன் உயர்வாக வந்தால் எனக்கு எத்தனை பெருமை மாமா!”
கிழவர் அவள் அறியாமையை உணர்ந்து நகைப்பவராகச் சிரித்தார்; “உனக்கு என்ன பெருமை? எனக்குப் புரியவில்லையே?”
“அதை உங்களுக்கு எப்படி நான் புரியவைப்பேன்? எத்தனை எத்தனையோ புத்தகங்கள் படித்து, நல்ல நல்ல செயல்களைச் செய்வான். காரில் போவான். நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன்.”
“அசட்டுப் பெண்ணே, பையன் அப்படியெல்லாம் உயர்ந்தால் உன்னையா கவனிக்கப் போகிறான்? வாலிபமும், படிப்பும் நாகரிகமும் கூடினால் உன்னை உறவென்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவான்!”
“மாமா!” ஆத்திரத்தில் பாருவின் முகம் சிவந்தது. “உங்கள் பையனைப் போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று நினையாதீர்கள்!”
“உண்மையைச் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகிறது?” கிழவர் மறுபடியும் சிரித்தார்.
“அவ்வளவு படிப்புப் படிப்பவன், இந்த ஹட்டியில் வந்து என்ன செய்வான்? அதை யோசித்தாயா?”
“ஒத்தையிலே வேலை பார்ப்பான்; கார் வாங்கிக் கொண்டு போய் வருவான்!” - கிருஷ்ணனின் செல்வாக்கு கௌரவம் முதலியவை தவிர அவள் மனக்கண்ணில் வேறு காட்சிகள் எப்படித் தெரியும்?
“இந்த மண்ணிலே சாகும் வரை நீ உழை. சம்பாதிக்கும் பணம் எனக்குப் பற்றவில்லை. கூடத் தா என்று கேட்பான். மண்ணை மறந்து தாயையும் தகப்பனையும் மதியாதவன் ஆவான். இளமையும் படிப்பும், ஏற்ற பெண்ணை நாடிச் செல்லும். அவள் சொல்லைக் கேட்கும்.”
“என் பையன் படிக்கக் கூடாது என்பதிலே உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை?” என்று பாரு கத்தினாள்.
“நீ வயசுக்காலத்தில் இந்தக் கிழவனைப் போல் ஏமாறக் கூடாதம்மா. எத்தனையோ ஏமாற்றங்களை சிறுவயசிலேயே பார்த்து விட்டாய். என் மகளென்றே சொல்கிறேன்.”
பாரு மறுமொழி கூறவில்லை. நஞ்சன் நிசமாக அப்படியா மோசம் செய்வான்? மாட்டான், மாட்டான்.
கோயம்புத்தூரிலிருந்து மாசம் ஒரு முறை கிழவருக்கு மகன் கடிதம் எழுதுவான். அதை நஞ்சன் படித்துக் கூறுகையில் அவள் உள்ளம் எப்படிப் பொங்கிப் பூரிக்கும்? ‘மாட்டான், என் மகன் என்னை உதாசீனம் செய்ய மாட்டான்’ என்றெல்லாம் அவள் பேதையாய் தேறுதல் செய்து கொண்டாள்.
ஊரிலும் உலகிலும் எவ்வளவோ மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், பகை மறக்குமோ?
பகை பாம்பின் படமாய் இரு குடும்பங்களுக்கும் இடையே தலைவிரித்தாடக் காரணமாக இருந்த பள்ளிக் கூடப் பிரச்னை தீவிர முயற்சியின்றிப் படுத்தே கிடந்தது. பாரு வாய்விட்டு வேறு பூமி கேட்ட விஷயம் மட்டும், கிருஷ்ணனின் நெஞ்சில் குத்திட்டு முள்போல் பதிந்திருந்தது. ஜோகி மூக்குமலைக்கு வந்ததையும், நஞ்சன் எட்டு மைல்கள் நடந்து ஒத்தைக்குப் படிக்க வருவதையும் அவர் அறியமாட்டாரா? மகன் கோபாலன், ஆசிரியப் பயிற்சி முடிந்து, அவ்வாண்டு அந்தப் பள்ளியில் தானே பணிபுரியத் தொடங்கியிருக்கிறான்? ஜோகி, பகை மறக்க, வேறிடம் பெயர்ந்து வந்திருந்தால் என்ன? அவர் அந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமோ? தலைமுறை தலைமுறையாகப் பிளவும் பகையும் வளருவது அழகா? பகைக்குக் காரணம் என்ன எப்படி மாற்றுவது? கிருஷ்ணனின் சிந்தையை இத்தகைய கேள்விகள் புகுந்து, அமைதி இழக்கச் செய்து கொண்டிருந்தன.
அன்று மாலை ஐந்து மணிக்கு மேல் அவர் வண்டியை எடுத்துக் கொண்டு ஹட்டிக்குச் செல்வதாகப் புறப்பட்டது ருக்மிணிக்குப் பிடிக்கவில்லை. கட்சி கூட்டும் பகைவர் அதிகமாக அதிகமாக அவளுக்கு அடிமனத்தில் அச்சம் விளைந்தது இயல்புதானே?
‘ஊரில் பள்ளிக்கூடம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, எவரேனும் காரை மடக்கி, தீங்கு விளைவித்தால்?’ ருக்மிணி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கையிலே அவர் கீழ்மலைப் பக்கம் காரை நிறுத்திவிட்டு, அந்த முன்னிருட்டு வேலையில் மூக்குமலைக்கு நடந்து கொண்டிருந்தார். முதல்நாள் மழை பெய்திருந்ததனால், ஒற்றையடிப் பாதை வழுக்கியது.
ஜோகி, அன்று அப்போதுதான் பக்கத்து ‘எஸ்டேட் கடையில் உப்பும் தீப்பெட்டியும் குப்பியில் கடலை எண்ணெயும் வாங்கிக் கொண்டு மேலே ஏறிக் கொண்டிருந்தார். அந்நாட்களில் ஆமணக்கெண்ணெய், கலயங்கள் வழிய இருக்கும். இரவில், மாடத்துத் தீபம் முத்துச் சுடராய் ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும். நஞ்சன் இரவு ஏழு மணிக்குத் திரும்பினாலும் வீட்டில் படிக்க அந்தத் தீபம் இருந்தாலும் ஆமணக்கெண்னெய் போதாதே! குப்பியில் அதற்குத்தான் கடலை எண்ணெய்.
மரகத மலை ஹட்டிக்கு நல்ல பாதை இருந்தது. அங்கு ஏறுவதும் இறங்குவதும் சிரமமாகவே தெரியாது. ஆனால் மூக்குமலையில் கிருஷ்ணனைப் போல் முன்னேறியவரும் இல்லை. போட்டி பொறாமையும் இல்லை.
பிரிந்து வந்த நாட்களில், ‘ஏன் பிரிந்தாய்’ என்று ரங்கன் அநாவசியச் சண்டைக்கு வருவானோ என்ற அச்சம் ஜோகிக்கு இருந்தது உண்மை. நாட்கள் செல்லச் செல்ல அது விலகி விட்டது. மூக்குமலையில் நகரச் செய்திகளையோ நாட்டுச் செய்திகளையோ அவருக்குக் கொண்டு தருபவர் இல்லை. இந்த மாதிரியான ஓர் உலகம் போதுமே! அதிக ஆசையும் வேண்டாம்; நஷ்டமும் வேண்டாமே!
தலையிலே நான்கு படி உப்பு, வெல்லம் எல்லாச் சாமான்களுடனும் அவருக்கு மேலே ஏறுவது பளுவாக இருந்தது. மூச்சு விட்டு விட்டு இரைக்க, அவர் ஏறுகையிலே, முன்னே கைத்தடி ஊன்றி, உயரமாக ஓர் உருவம் சென்று கொண்டிருந்தது. கால் சராய், கோட்டு, ஜோடு, தலையிலே பாகை. அத்தகை உடை பூண்ட உருவத்துக்கு உரியவர், எளிய மூக்குமலை ஊட்டியில் எவரும் இல்லையே!
தம்மை அறியாமலே ஜோகிக்கு ஆத்திரம் வந்தது. நாவைக் கடித்துக் கொண்டார்; முன் சென்ற உருவத்தை எட்டிப் பிடிக்க வேகமாக அடிகளை வைத்தார். பின்னே தொடர்பவரைக் கவனியாமல் முன் சென்ற உருவம் வெகுவேகமாக மேலே போய்க் கொண்டிருந்தது.
ஜோகிக்கு இன்னாரென்று புரிந்து விட்டது. மூக்குமலையில் அவனுக்குச் சொந்தக்காரர் இல்லை; அவன் சமமாக மதித்து உறவு கொண்டாட, படித்த மனிதர் எவரும் இல்லை. என்ன வேலை? அமைதியாக அவர் வாழும் இடத்திலும் பகைக் கொடியை நாட்ட வருவானேன்? ஜோகிக்கு உஷ்ணப் பெருமூச்சு எழும்பியது.
அவர் பகையும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி வந்த பின், ஒத்தையில் இருந்தவன் உறவு கொண்டாடுவது தெரிந்தால், ரங்கன் வாளாயிருப்பானா? மறுநாளே மாற்றானை அழைத்து, ‘நீ ஏனடா உறவு கொண்டாடினாய்?’ என்று சீறி வரமாட்டானா?
அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளட்டும்; மிரட்டிக் கொள்ளட்டும்; அவரை ஏன் இழுக்க வேண்டும்?
எத்தனை விரைவாக நடையைப் போட்டாலும், வீட்டின் அருகில் வருமுன்பு தான் கிருஷ்ணனை அவரால் முந்த முடிந்தது.
பாரு அடுப்படியில் இருந்தாள். கிழவர் விளக்கருகில் பிரார்த்தனை கூறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்த நஞ்சன், அடுப்படியில் அம்மையிடம் பள்ளிச் செய்திகள் சொல்லிக் கொண்டிருந்தான்.
நுழைந்ததுமே மூட்டையைக் கீழே வைத்த ஜோகி, பரபரப்புடன் தீப மாடத்து விளக்கை எடுத்துக் கொண்டு சென்ற போது, கிழவர், ‘நரி ஏதேனும் வந்திருக்குமோ?’ என்று எண்ணிக் கொண்டார்.
“நில்! நில்லடா அங்கே!” - காலமெல்லாம் அடக்கிக் கொண்டிருந்த உணர்ச்சித் தீ தான் சொல்லாக வந்ததோ? பாருவின் கையில் பிடித்த தேநீர்ப் பாத்திரம் நழுவி விட்டது. வாயிலுக்கு ஓடி வந்தாள்.
கையில் தீபத்துடன் ஜோகி, நடுங்கும் உடலுடன், துடிதுடிக்கும் உதடுகளுடன் எதிரே, அவள் காண்பவர்? கனவா, நினைவா?
“சண்டைக்கும் சச்சரவுக்கும் அப்பால் எட்டி வந்தேனே! இங்கும் அமைதியைக் குலைக்க வந்தாயா? போ! போய் விடு!”
ஜோகியண்ணணா கத்துகிறார்?
“ஜோகி, இந்த விரோதம் முடிவில்லாமல் வளர வேண்டுமா? வேண்டாம். விரோதத்தை தீர்த்துக் கொள்ள, மனச்சுமையைக் குறைத்துக் கொள்ள, நான் வந்தேன்” கிருஷ்ணனின் குரல் தழுதழுத்தது.
“நீ இங்கே வந்து உறவு கொண்டாடினால் இப்போது பகையும் விரோதமும் தீருமா? அந்த எண்ணம் முன்பே உனக்கு ஏனடா இல்லை? எங்களை விரோதிகளாகவே பாவித்து, விரோதத்தை வளர்க்கவே நீ எதிர்க்கட்சி கட்டவில்லை? உன் ஆட்களும் உறவும் ஊரும் வீம்புடன் எங்கள் மீது வருமம் காட்டவில்லை? ஊருக்கெல்லாம் பிளேகு ஊசி போட்டாய். ஆபத்தில் கூட எங்கள் மீது நீ பகை காட்டவில்லை? அம்மை காலமெல்லாம் சொல்லி அழுதார்களடா, காலமெல்லாம் சொல்லி அழுதார்கள். உன் பணமும் பதவியும் மதிப்பும் எங்களுக்கு வேண்டாம். போய் விடு. எங்கள் அமைதியை, இன்பத்தைக் குலைக்க நீ வராதே. உங்கள் பகையை வளர்க்க, நான் உறவு வேண்டவில்லை. போ! போ!”
ஆயிரம் பதினாயிரம் கூரிய கற்களை வீசி அடித்திருந்தால் கூட, கிருஷ்ணனின் நெஞ்சில், அந்தச் சொற்களைப் போல் அவை குத்திக் கிழித்திருக்க மாட்டா.
ஜோகியின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு ‘போ! போ!’ என்ற ஒலியும், ஆயிரம் பதினாயிரம் வேல்களாகத் தாக்க, அவற்றைச் சகியாதவராய், இருளில் தனித்த உருவமாகக் கிருஷ்ணன் நடந்து சென்றதைப் பார்த்தாள் பாரு.
வெறியின் உச்சத்திலிருந்து தணிந்தவராய், ஜோகி இரைக்க இரைக்க, தீபத்தை மாடத்தில் வைத்துவிட்டுக் கீழே அமர்ந்தார்.
யாருமே பேசவில்லை.
கோபாலனுக்கு அன்று அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டிய முறையன்று. ஆனால், அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டிய சமூக இயல் ஆசிரியர் அன்று வரவில்லை. எனவே நஞ்சனின் வகுப்புக்கு அன்று ஓய்வு வேளையில் அவன் பாடம் எடுக்க வந்திருந்தான். அம்மாதிரி ஓய்வு நேர வகுப்புகளில், கோபாலன் மாணவர்களுடன் இஷ்டம்போல் சகஜமாகப் பேசி உற்சாகம் எழும்பும் வகையில் அரட்டையில் காலத்தைத் தள்ளி விட்டுப் போவான்.
தலைக்குத் தலை மாணவர்கள் பேசினார்கள். சிரித்தார்கள்; பாடவும் தொடங்கினார்கள்.
“உஷ்!” என்று மேசையைத் தட்டிய கோபாலன், “என்ன சத்தம் போடுகிறீர்கள்” என்றான்.
“சுதந்தரமாக இருக்கிறோம், ஸார்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்தானே, ஸார்?” என்றான் ஒரு பையன். அண்மையில் குடியரசுத் தின வைபவம் வர இருந்ததை நினைவுப்படுத்திக் கொண்டு,
“ஓகோ! இப்போது ஒரு கேள்வி போடட்டுமா?” என்று சிரித்த கோபாலன், “நாமெல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று முதலாக முழக்கியவர் யார் தெரியுமா?” என்று கேட்டான்.
சில விநாடிகளுக்கு அமைதி நிலவியது.
“ம், எங்கே பீமா, சொல்லேன் நீதான்!”
பீமன் என்ற பையன் எழுந்து நின்றான்.
“தெரியாதா? எங்கே நீ... நீ... நீ...” என்று ஒவ்வொருவராக ஆசிரியர் கைகாட்ட ஒவ்வொருவராக எழுந்து நின்றனர். வீச்சுள்ளி போலிருந்த பயல் ஒருவன் விறைப்பாக நின்று, “ஸினிமா ஸ்டார் பிரேம்குமார் ஸார்” என்றான்.
ஆசிரியருடன், விஷயம் புரிந்தவர், புரியாதவர் எல்லோரும் சிரித்தார்கள்.
“பிரேம்குமார் முழக்கினாரா? எத்தனை தடவைகள் வாழ்க்கைத் திரை பார்த்தாய்?”
“ஐந்து தடவைகள் ஸார்” என்றான் பையன்.
மறுபடியும் சிரிப்புக் குபீரென்று அடுத்த வகுப்புக்குப் பரவ ஒலித்தது.
அப்போதுதான் கோபாலனின் பார்வை சாய்வு மேசையில் தலையைச் சாய்த்துக் கொண்டு கூச்சலிலும் ஆரவாரச் சிரிப்பிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த நஞ்சனின் மீது விழுந்தது.
கோபாலன் மேசையைத் தட்டிவிட்டு, “கிடக்கட்டும்; நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற துணிவில், சுதந்தரமாக ஒருவர் ஆனந்த நித்திரை செய்து கொண்டிருக்கிறார்; அவரைக் கேட்டுப் பார்க்கலாம். அவருக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்” என்றான்.
“அனைவரின் கவனமும் நஞ்சன் மீது திரும்ப, சிரிப்பொலி கூரையைப் பொத்துக் கொண்டு போக எழும்பியது.
நஞ்சன் திடுக்கிட்டவனாகத் தலை தூக்கிப் பார்த்தான்.
“அடாடா! என்ன செய்வது? சுகமாக வெயில் ஜன்னல் வழியே விழுகிறது. பகல் சாப்பாடு கழிந்து வந்திருக்கிறார். வகுப்பிலே தூங்குவதற்குக் கூட உரிமை இல்லையா என்ன?” ஆசிரியர் கிண்டல் பேச்சில் இறங்கிய போது, நஞ்சன் சுற்றும் முற்றும் பார்த்தான். மறுபடியும் சிரிப்பு.
“எல்லோரும் எதற்குச் சிரிக்கிறீர்கள்? கப்சிப். அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டாரா! பார்ப்போம்” என்றார் ஆசிரியர்.
“எனக்கு ஒரே தலைவலி ஸார்” என்றான் நஞ்சன்.
வகுப்பில் அவன் ஒருநாள் கூட அவ்விதம் கவனக் குறைவாக இருந்து சிரிப்புக்கும் கிண்டலுக்கும் ஆளானதில்லை. தன்னந் தனியாக மூக்குமலை ஹட்டியிலிருந்து, ஏழைமையின் உருவமாகப் படிக்க வரும் நஞ்சன், வகுப்பிலும் தனியானவனே. வகுப்பில் அநேகமாக அவனே முதல்வனாக இருப்பான். எல்லோரும் தன்னைத் தாழ்வாகப் பார்ப்பது போன்ற பிரமை அவனுள் ஒத்தைக்கு வரத் தொடங்கிய நாளிலிருந்தே வளர்ந்திருந்தது. பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய படித்த தந்தையோ, மாமனோ அவனுக்கு இல்லை. பெரிய தந்தை ரங்கன் கூடப் படிக்காதவர்; அவனைச் சேர்ந்தவர்கள் யாருமே கல்வியறிவில் மிக்கவர் அல்லர். ‘அந்தக் குடும்பத்திலே அவன் பேர் சொல்ல வேண்டும். படிக்க வேண்டும்’ என்ற ஒரே குறியுடன் அவன் படிக்க வந்து கொண்டிருந்தான். அவனை அறியாமல், கோபாலனைப் பார்க்கையில், அவர்கள் குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே இருந்த பகை, பொறாமை, லேசான மூட்டமாக, அன்று அவன் உள்ளத்திலும் பரவியது.
“தலைவலி என்றால் வகுப்பில் படுத்துத் தூங்குவதா?”
“அப்படியானால் வெளியே போகிறேன் ஸார்!”
மறுபேச்சே இல்லாமல் நஞ்சன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான்.
எவருமே அப்படி அவன் துடுக்காக, துணிச்சலாக வெளியேறுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. நஞ்சன் அப்படியே நடக்கும் மாணவன் அல்லன்.
ஏன் அவ்விதம் நடந்தான்?
பசி. ஆம், அன்று காலையிலிருந்து அவன் ஏதும் சாப்பிட்டிருக்கவில்லை.
கிழவர் ஆதரவாக அளித்த பூமியில் அம்முறை விளைவு சரியாக இல்லை. கிழவரின் மகன் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பி நால்வர் உண்டு, நஞ்சனின் படிப்புச் செலவுக்கும் கண்டு மீறப் பணம் பற்றவில்லை. கைநீட்டி வாங்கியறியாத பாரு, ஒரு வேளை பட்டினி கிடந்தாள். மகனுக்கும் கிழவருக்கும் மட்டுமே காபி வைத்துத் தந்தாள். ‘இல்லாமை’ என்ற விஷயத்தை மகனிடம் மறைத்தாள்; அரைப் பட்டினி ஜோகியையும் தொற்றியது.
அன்று காலை, இரண்டே இரண்டு ராகி அடை சுட்டு, அவனுக்கு ஒன்றும் கிழவருக்கு ஒன்றுமாக அவள் வைத்திருந்தாள். நஞ்சன் அடுப்படியைப் பார்த்துவிட்டு, “அப்பாவுக்கு? உங்களுக்கு?” என்று கேட்டான்.
பாரு வெண்ணையை வழித்து அவன் அடைமேல் வைத்தபடி, “இருக்கிறது; நீ சாப்பிடு” என்றாள்.
“எங்கே? காட்டுங்கள்.”
உண்மையில் பாரு அடுப்புச் சுள்ளிகளை இழுத்து அணைத்திருந்தாள்.
கிழவருக்கு வயசான காலத்தில் வாய்க்கினிய பண்டங்கள் வேண்டியிருந்தன. நஞ்சனிடம் அவர் சில்லறை கொடுத்து, பள்ளி முடித்து ஒத்தையிலிருந்து வருகையிலே பஜ்ஜியோ, போண்டாவோ, லட்டோ வாங்கி வரச் சொல்வார். தொடக்கத்தில் மகனாக நினைத்து ஆதரவு தந்த முதியவர், பூமியைத் தந்தோம் என்ற நினைப்பில், அவர்களை அதிகாரம் செய்யும் முதலாளி ஆகிவிட்டாரோ என்று கூட நஞ்சனின் மனம் கொதித்தது உண்டு. கிழவரும் மகனும் மருமகளும் மலைப்பக்கம் வருவதில்லை. பெண்ணெடுத்த வீட்டுக்குத்தான் மகன் செல்வான். அவர்களுக்கு அந்த விளைவிலிருந்தும் பணம் மட்டுமே வேண்டும். அந்த வீடு, பூமி எதுவும் தேவையில்லை. இரண்டொரு மணி நேரம் வந்தாலும், மகன் தங்கள் உடைமைகளைத் தருமமாக அவர்களுக்கு வழங்கிவிட்டாற் போல் நடந்து கொண்டார்கள்.
நஞ்சனுக்கு இதெல்லாம் புரிய வயசாகவில்லையா? அன்றுங்கூடக் கிழவர், அவனிடம் இனிப்பும் காரசாரமான பொட்டலுமும் வாங்கிவரச் சொல்லி நாலணாத் தந்திருந்தார். பையன் வாங்கி வருகிறானே என்று, ஒருநாள் அவர் அவனுக்கு முழுசாக நாலணாக் கொடுத்தது உண்டா? பசி கவ்வும் வயிற்றுடன் குலுங்க குலுங்க அவன் எட்டு மைல் வந்து அவரிடம் தின்பண்டங்களைக் கொடுத்துவிட்டு, அம்மை பாடுபட்டு அன்புடன் தரும் தேநீருக்கு அடுப்படிக்குப் போவான்.
உண்மையில் தங்களுக்கு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்று அறிந்ததும் அவனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்து விட்டது.
“இந்த வீட்டில் நான் மட்டும் பகாசுரனா? உங்களுக்கும் ஐயனுக்கும் ஒன்றுமில்லாமல், நான் இந்த அடையையும் காபியையும் தொடமாட்டேன்” என்றான்.
“இப்படியெல்லாம் எங்கள் மனத்தைக் கஷ்டப்படுத்தலாமா நஞ்சா? கோதுமை இருக்கிறது. ஆட்டிக் களி செய்யப் போகிறேன். எட்டும் எட்டும் பதினாறு மைல் நடந்து படிக்கும் பிள்ளையில்லையா நீ? இந்த வயசுக்கு இது போதுமா? சொன்னதைக் கேள்” என்று கண்ணீர் மல்க வேண்டினாள் பாரு.
“மாட்டேன். இதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஏற்க மாட்டேன். நீங்கள் தினமும் இதையே செய்து என்னைப் பாவியாக்குகிறீர்களில்லை?” என்று நஞ்சன் இரைந்தான்.
மாட்டை அவிழ்த்து விட்டு உள்ளே வந்து ஜோகி நஞ்சனின் கோபத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு விட்டார். அத்தகைய வறுமை பாரு வந்த பிறகு அவர்கள் அநுபவித்திருக்கவில்லை. மரகதமலை ஹட்டியில் அவர் இளைஞராக இருந்த காலத்தில் கூட வறுமை இல்லாமலில்லை. ஆனால் அப்போது எல்லாவற்றுக்கும் மேலான ஒற்றுமை மாய்ந்திருக்கவில்லை. வண்மையும் செல்வமும் தனியாகப் பிரிந்திருக்கவில்லை. பசியும் தெரிந்திருக்கவில்லை.
‘பாரெல்லாம் பச்சை விரிந்தும் மனத்தில் பசை இல்லாத நாட்கள் வந்து விட்டனவே! சொந்த மண்ணை விட்டு வந்ததற்கு இதுவோ தண்டனை!’ என்று ஜோகியின் மனம் விண்டது.
துயரை விழுங்கிக் கொண்டு, கடைந்த மோரில் ஒரு குவளை குடித்து விட்டு அவர் வெளியே சென்றார். கிழவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாதவராகப் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.
நஞ்சனுக்கு மனம் பற்றி எரிந்தது. யார் மீதென்று தெரியாமல் கோபமும் ஆத்திரமும் வந்தன. அவற்றை அம்மையின் மீது காட்டுபவனாக எரிந்து விழுந்து விட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்து விட்டான்.
முதல் மணியிலேயே வயிறு வழக்கப்படி கூவியது. கணக்கில் அவன் கவனத்தைச் செலுத்தினான்.
இரண்டாம் மணியில் பொறுமை இழந்த வயிறு, ‘மறந்து விட்டாயா அப்பனே?’ என்று அவனிடம் கூவிப் பார்த்தது. அக்கினியை நெஞ்சுக்கு அனுப்பியது. நஞ்சன் சொல்லிலக்கணத்தில் ஊன்றியிருந்தான்.
இடைவேளை மணி அடித்ததும் பையன்கள் எல்லோரும் சாப்பாட்டுக்குச் சென்றார்கள். நஞ்சன் வெளியே வந்தான். பள்ளிக்கூட மேட்டிலிருந்து கீழே இறங்கினால், சந்தைக் கடை; சினிமாக் கொட்டகைப் பக்கம் சிற்றுண்டி, தேநீர்க் கடைகள்; நாவில் நீரூறச் செய்யும் கார மசாலாவின் மணம்.
வயிற்றுக்குள் கிடந்த அசுரன் நிலை தெரியாமல் எழும்பி எழும்பிக் குதித்தான். நஞ்சன் பல்லைக் கடித்துக் கொண்டு, பள்ளி மேட்டுக்கே திரும்பினான். குழாய்த் தண்ணீரைப் பருகிவிட்டு, எவரையும் பார்க்க இஷ்டப்படாதவனாகப் புல்லுத் தரையில் உட்கார்ந்து ஆங்கிலப் பாடப் புத்தகத்தைப் பிரித்தான். ‘அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே தெய்வம் இருக்கிறது’ என்ற தலைப்புடைய டால்ஸ்டாயின் சிறுகதை அன்று நடந்து முடிந்த ஆங்கிலப் பாடம். ஆப்பிள் திருடிய சிறுவனையும் கிழவியையும் பற்றி படிக்கையிலே, ஆப்பிளின் நினைவில் நாவில் நீர் ஊறியது, கன்னம் வலித்தது. புத்தகத்தை மூடிவிட்டுப் புல்லுத்தரையில் சாய்ந்தான். கணகணவென்று மணி ஒலித்ததும், தள்ளாடியவனாக வகுப்பறைக்குள் சென்றான் அவ்வளவே தெரியும்.
திரும்பி வருகையில், கோபாலனின் சிரிப்பில், அவன் முழுவதும் அறிந்தும் அறியாமலும் உணர்ந்திருந்த பகைமையுணர்வு பசித் தீயைப் போல் பொங்கி வந்தது. வெளியே ஹோட்டல் ரேடியோ, “அம்மா பசிக்குதே...” என்ற பாட்டை அலறியது.
அந்தக் கார்த்திகை மாசக் கடைசியில், மழை ஓய்ந்து அடித்த வெயிலிலே உதகை பூங்காவைப் போல் காட்சியளித்தது. தன் நினைவின்றித் தோட்டச் சாலையில் நடந்து சென்ற அவனுக்குச் சட்டென்று, காலையில் கிழவர் தந்திருந்த நாலணாக்காசு நினைவுக்கு வந்தது. தோட்ட வழியில் தென்பட்ட ‘ஊட்டி பவனில்’ நுழைந்தான். இரண்டு தோசையும் டீயும் வாங்கிச் சாப்பிட்டான். ஓரணாவுக்கு ஒரு காரச் சாமான் பொட்டலம் வாங்கிப் பைக்குள் வைத்துக் கொண்டான்.
சூடான தேயிலையும் தோசையுங் கூட அவனுடைய தலைவலியை மாற்றவில்லை. முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, ‘பொடானிகல்’ தோட்டத்துப் பக்கம் நடந்தான். பசும் புல்லுத் தரையும் மலர்களும் அவன் மனத்துக்குச் சாந்தியை அளித்தன.
புல்லுச் சரிவில் ஐரோப்பியக் கான்வென்ட் பள்ளிச் சிறுமிகள், பூச்செண்டுகள் போல் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான நீல உடைகள்; இரட்டைப் பின்னல்கள். செழுமையின் சின்னமாக, ரோஜாக் கன்னங்கள்; பவள இதழ்கள்; மகிழ்ச்சியின் ஒலிகள் காற்றில் இன்ப லயத்தோடு கலந்து வந்தன. வெள்ளைக்கார ஆசிரியை ஒருத்தி பெஞ்சில் அமர்ந்து, கம்பளி நீலநிற ரிப்பன் ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடிய அந்தச் சிறுமி...
நஞ்சன் கூர்ந்து பார்த்தான். ஐரோப்பிய கான்வென்டிலே, பெரிய சீமான் வீட்டுச் செல்வியர், துரைமார்களின் புதல்விகளுக்கு நடுவே, அந்தப் பெண் டாக்டர் அர்ஜுனனின் மகள்; கிருஷ்ண கௌடரின் பேரப்பெண்! மரகதமலை ஹட்டிக்கு அவள் அதே ‘யூனிபாரம்’ உடையுடன் வந்து சென்றதை அவன் கண்டிருக்கிறானே!
அந்தக் குடும்பத்தில் பெண்களுங்கூட உயிர் கல்வி கற்கிறார்கள்! அவன்... அவன்...? ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் அவன் அங்கே நின்றான்.
சற்றைக்கெல்லாம் சிறுமிகள் புடைசூழ ஆசிரியை அங்கிருந்து கிளம்பிவிட்டாள். நேரம் சாயத் தொடங்கிவிட்டது என்ற உண்மை நஞ்சனுக்கு அப்போதுதான் நினைவில் படிந்தது. புத்தகங்களைப் பற்றியவாறு அவன் வீடு செல்ல நடக்கையில், கால் செருப்பில் ஏதோ மாட்டிக் கொண்டது.
அந்த நீல நிறப் பட்டு நாடா, அந்தப் பெண் தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அதை எடுத்து மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்ட அவன், ‘எத்தனை துன்பங்கள் வந்த போதிலும், உயர் கல்வி பயின்று, அந்தக் குடும்பத்துக்குச் சமமாக, பேர் சொல்ல முயல்வேன்!’ என்ற பிரதிக்கினையுடன் நடந்தான்.
நஞ்சன் தொடாத அடையும் வெண்ணெயும் தட்டில் அப்படியே இருந்தன. அடுப்புச் சுற்றி சூடேறி, சாம்பல் பூத்து அவிந்து போயிற்று. பாருவின் கன்னங்களில் கண்ணீரும் காய்ந்தது.
பையன் உள்ளம் நொந்து பசியோடு சென்றானே! பசியோடு அவனை அனுப்பிவிட்டாளே பாவி! பெறாதவளுக்கு அருமை இல்லையா? அவன் பசியோடு செல்லப் பார்த்துக் கொண்டு கல்நெஞ்சாக அவளும் இருந்து விட்டாளே! ஓடிப்போய் அழைத்து வரத் தெரியாதவளாக இருந்து விட்டாளே! எட்டு மைல் நடந்து செல்பவன், வெறும் வயிற்றுடன், டீத் தண்ணீர் கூடக் குடிக்காமல்... அவன் கோபத்தை எப்படியோ கிளப்பி விட்டாளே!
அடுப்படியிலே பிரமை பிடித்தவளாக அவள் உட்கார்ந்திருக்கையில் கிழவர் வந்தார். “ஏனம்மா தண்ணிக்குப் போகவில்லை? ஏன் உட்கார்ந்திட்டே” என்றார்.
பிள்ளை பசியோடு சென்றதைக் கழுகுக் கண்களுடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டுக் கேள்வி கேட்கிறாரே!
“நஞ்சன் ஒன்றும் சாப்பிடாமல் ஸ்கூல் போய் விட்டான், மாமா!” என்றாள் பாரு, கண்களில் மறுபடி நீர் பெருக.
கிழவர் சிரித்தார். புகையேறிக் கறுத்த அந்தச் சிரிப்பு, அவளுக்கு நெருப்பாக இருந்தது. “பெரியவனாகிப் போகிறானே? இனிமேல் உன்னையும் என்னையுமா அவன் லட்சியம் செய்வான்?”
“நீங்கள் இரக்கமில்லாமல் பேசுகிறீர்கள், மாமா?”
“உனக்கு இரக்கப்பட்டுத்தான் சொல்கிறேன். உயிரைக் கொடுத்து என்ன படிப்பு? உனக்கு அது உதவப் போகிறதா? புத்தியில்லாத பெண்ணே, பிழைக்கும் வழியைப் பார்!”
பாரு மறுமொழி என்ன சொல்வாள்? குழம்பிக் குழம்பி, உறுதிக்கு வந்தவளாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டாள். புருஷனிடமிருந்து அவள் விலகிவிட்டாளா? இல்லையே! ரங்கம்மை குடும்பத்துக்கு ஜோகியண்ணன் பயிரிட்ட நிலம் தானமா? விளைவில் சிறு பங்கேனும் அவர்கள் ஏன் கொடுக்கக் கூடாது? நஞ்சன் ஒத்தையில் படிப்பை முடித்துவிட்டுக் கோயம்புத்தூருக்குப் படிக்கச் சென்றால், இன்னும் அதிகப் பணம் தேவையாக இருக்குமே!
தம்பி அண்ணன் குடும்பத்துக்கு எத்தனை நாட்கள் உதவியிருக்கவில்லை? இப்போது, அண்ணன் அந்த நன்றி கொண்டேனும் தம்பி மகனின் படிப்புச் செலவுக்கு உதவலாகாதா?
ஜோகியிடம் மரகதமலைக்குச் சென்று உதவி கோரப் போவதை வெளியிட்டால், அவர் ஆமோதிக்கமாட்டாரோ என்ற சந்தேகம் அவளுக்கு உண்டு. ஆனால், எது எப்படியானாலும் அன்று மாலை, நஞ்சன் பசியுடன் சோர்ந்து வீடு திரும்பும் வரையில் அவள் கண்ணீர் விட்டுக் கொண்டு உட்கார்ந்திராமல் வேறு வழி தேட வேண்டுமே!
அவசியமான வேலைகளை முடித்துவிட்டு, அவள் விளைநிலத்தின் பக்கம் செல்லுபவளைப் போல், மரகத மலைக்கு நடக்கலானாள்.
இருட்டுக் கருக்கலுடன் அந்த மலையைவிட்டு அவள் இறங்கி அருவிக்கரை தாண்டி வந்த பின், அந்த ஹட்டிப் பக்கம் செல்லவே இல்லை. குமரியாற்றுக்கு அப்பால், என்ன என்ன மாறுதல் நிகழ்ந்திருக்கின்றன என்பதை யெல்லாம் கவனியாதவளாக, பொழுது சாய்வதற்குள் போய் வெற்றியுடன் திரும்பிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் நடந்தாள்.
மரகதமலைப் பள்ளிக்கட்டிடம், தகராறுகள் தீர்ந்து, அப்போதுதான் ஒருவாறாக ஆரம்பமாகியிருந்தது. ரங்கனே கட்டிடக் குத்தகை எடுத்திருக்கிறான் போலும்! மரம் அறுப்பவர்களும் கொத்துக்காரர்களும் சிற்றாள்களும் சூழ நடுவே நீல ஸர்ஜ் கோட்டும் தலைப்பாகையுமாக ரங்கன் தான் அதிகாரம் செய்து கொண்டு நின்றான்.
பாரு அங்கே மேலே ஏறாமலே சுற்றி வீட்டின் பக்கம் வந்தாள். லாரி நின்றது, ஒரு புறத்தில். ராமன் வீட்டில் சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருந்தான் போலும்! சாப்பிட்டுக் கைகழுவ வெளியே வந்த அவன் தான் முதலில் அவளைக் கண்டவன்.
“நல்லாயிருக்கிறீர்களா மாமி? நான் இப்போதெல்லாம் தினமும் உங்களை நினைக்கிறேன். ஆரஞ்சு மரத்தை நேற்று வெட்டினார்கள். அங்கே இப்போதுதான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டேன். எங்களை விட்டுப் போன பின் திரும்பியே இங்கு வராமல் இருந்து விட்டீர்களே!”
“எங்கே நான் போய் விட்டேன்? நல்லா இருக்கிறீர்களா” என்றெல்லாம் பாரு விசாரித்தவளாக, சூழ்ந்த குழந்தைகளுக்கு, வழியில் வாங்கி வந்த ஓரணாப் பொரி கடலையைக் கொடுத்தாள்.
தங்கச் சங்கிலியும் அரும்பு மீசையும் லுங்கியுமாக லிங்கன் வந்தான்.
“எங்கே வந்தீர்கள் பெரியம்மா?” என்று விசாரித்தான்.
ரங்கம்மை, கௌரி எல்லோருமே வந்து விசாரித்தார்கள். அவள் ஒட்டிப் பழகாமல் விட்டுப் போயுங் கூட, ஒரு மனை மக்கள் என்ற உறவில் சூழ்ந்து கொண்டு பேசிய போது எத்தனை ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் அவளுக்கு இருந்தது!
ரங்கம்மை உபசாரங்களால் அவளைத் திணற அடித்தாள். ராமன் மேற்பரணியில் ஏறி, கூடையில் அவளுக்குக் கொண்டு வரத் தெரியாமல் வைத்திருந்த ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான். பழங்களைக் கண்டதும் பாருவுக்குக் கண்களில் நீர் கசிந்தது. அவள் குழந்தையைப் போல் வளர்த்த மரம்.
‘தாயே எங்களம்மை போய்விட்டாள்’ என்று கூடைப் பழங்களும் தன்னை நோக்கிக் கூவினாற் போன்ற ஒரு பிரமை உண்டாயிற்று அவளுக்கு.
சுற்றி நின்ற குழந்தைகளிடமெல்லாம் ஆளுக்கு ஒரு பழம் தந்தாள்.
“என்ன அண்ணி? இவர்கள் நிறையத் தின்றிருக்கிறார்கள். ராமா, மூலையில் எடுத்து வை. நஞ்சனுக்கும் ஜோகியண்ணனுக்கும் கொண்டு போட்டும்” என்று கூறிய ரங்கம்மை, “நஞ்சன் நல்லா இருக்கிறானா?” என்று விசாரித்தாள்.
பாரு பெருமையும் சோகமும் இழையோடும் குரலில், அவன் நன்ராய்ப் படித்துப் புத்தகங்களாகவே பரிசுகள் வாங்கி வருவதையும், எட்டும் எட்டும் பதினாறு கல் ஏறி இறங்கி நடப்பதையும் கூறிக் கொண்டாள்.
“நான் சந்தைப் பக்கம் லாரி கொண்டு போகையில் ஒத்தையில் பார்ப்பேன். மாமி, இந்தாருங்கள், நான் ஒரு பழம் உரித்துத் தருகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள். என்ன ராமி, நின்று விட்டாயே? அவர்களுக்குச் சாப்பாடு கொண்டு வா” என்று மனைவியையும் கையோடு விரட்டினான். இதற்குள் ரங்கம்மையே வட்டிலில் சோறும் கீரைக் குழம்பும் கோசும் வைத்து எடுத்து வந்தாள்.
“நீயும் வாம்மே, நீயும், நீயும்” என்று பாரு சுற்றி நின்றவர்களை எல்லாம் அந்த விருந்துக்கு அழைத்தாள். வாயிற்படிக்கு அப்பால் நின்ற கௌரியும் வந்து ஒரு கவளம் எடுத்து உண்டாள்.
எத்தனை நாட்களாயின, இப்படி உறவோடு கலந்து உண்டு!
“லிங்கனப்பா எப்போது வீடு வருவாங்க?” என்று பாரு, கௌரியிடம் விசாரித்தாள்.
“டீ குடிக்க வருவார்” என்று கூறியபடியே, கௌரி கைவளையல்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டுக் கொண்டாள்.
பொன் வளையல்கள் செலவழிக்கும் அவள் கணவன், நஞ்சனின் படிப்புச் செலவுக்கு மாசம் பதினைந்து ரூபாய் கொடுக்க மாட்டானா? தானே அவனைத் தேடி எப்படி அந்த மனைக்குச் செல்வது என்று அவள் தயங்கித் தடுமாற வேண்டியிருக்கவில்லை. ரங்கனே தம்பி மனைக்கு வந்தான்.
“நல்லாயிருக்கியா? நஞ்சன் படிக்கிறானா?” நல்ல சூசகமாக வரும் விசாரணை.
“இருக்கிறான்... நான்... நான்...” சட்டென்று அவளால் ஏதும் கேட்கக் கூட நா எழவில்லை. கட்டிய கணவனென்று, அந்த வீட்டில் மனைவி என்ற உறவுடன் இருந்த நாட்களில் கூட அவள் ஒன்றும் கேட்டதில்லையே?
“என்ன பாரு? மாமா நல்லாயிருக்கிறாரா?”
“நான்... எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டுமே. அதற்குத்தான் வந்தேன்” என்றாள் பாரு தலை நிமிராமலே.
அவன் மறுமொழியே இல்லாமல் கோட்டுப் பைக்குள் கைவிட்டான். ஒரு பத்து ரூபாய் நோட்டை அவளிடம் எடுத்துத் தந்தான். நன்றி பளபளக்க, “மாமன் ஸித்தனுக்குப் பணம் அனுப்புகிறார். விளைவு சாப்பாட்டுக்கு போதும். நஞ்சன் பெரிய கிளாஸ் போகிறான். நோட்டுப் புத்தகம் துணி வாங்கப் பத்தவில்லை. எனக்கு மாசாமாசம் இது போல் கொடுத்தால்...” என்று நிறுத்தினாள் பாரு.
“எனக்கு நினைவிருக்காது. வந்து கேள். இல்லையானால் நஞ்சனை அனுப்பு. ரங்கம்மா, அண்ணி சாப்பிட்டாங்களா? காபி வைத்துக் கொடுத்தாயா?” என்றெல்லாம் விசாரித்தான்.
பாரு தலையை ஆட்டியவண்ணம் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.
“இப்போதே போகிறாயா?”
“ஆமாம், ஜோகியண்ணனிடங் கூடச் சொல்லாமல் வந்தேன்.”
“ராமா, கீழ்மலை வரை லாரியிலே கொண்டு போய் விடு” என்று பணித்துவிட்டு, ரங்கன் சென்றான்.
இரண்டு படிபோல் கோதுமை, கிழங்கு, ஆரஞ்சு கொண்ட சாக்கு மூட்டை இவற்றுடன் ராமன் அவளை அருகில் வைத்துக் கொண்டு லாரியை ஓட்டினான். நல்ல சாலை இல்லாத இடங்களில் அந்தச் சாமான் வண்டி குலுங்கிய போது பாருவுக்குத் தன்னையும் அறியாமல் சந்தோஷம் உண்டாயிற்று.
அவள் கணவன் நல்லவன்; கௌரி, ரங்கம்மை, லிங்கன் எல்லாருமே நல்லவர்கள். ராமனுக்குத்தான் அவளிடம் எத்தனை பிரியம்! சொந்த மண், சொந்த ஜனங்கள், அந்த ஆனந்த நெகிழ்ச்சியில் அவளை அறியாமல் பேச்சும் வந்தது. “தேவகி ‘ஸ்கோல்’ போகிறாளா ராமா?”
“ஓ! எனக்குத்தான் பெண் தருகிறேனென்று ஏமாற்றினீர்கள், நான் மறந்து விடுவேனா? நஞ்சன் பெரிய படிப்புப் படித்து வரும்போ, நான் பெண்ணை மட்டியாக வைத்துக் கொள்வேனா?” என்றான் ராமன்.
அவள் மகிழ்ச்சியில் கண்களை மூடிக் கொண்டாள்.
‘ஆறேழு வருஷங்கள் வண்டியில் செல்வது போல் ஓடி விட வேண்டும். அப்போது... அப்போது...’ அந்த மனநிலையை அவள் தாங்க முடியாமல் உள்ளம் பூரித்துப் பொங்கியது.
அந்தத் தேன்மலைக்காரியின் மகளைப் போலவே, காதுகளிலே தோடு, லோலாக்கு இழைய இழையப் பளபளக்கும் புடவை எல்லாம் அணிந்த தேவகியை, அவள் வளர்ந்து நின்ற நஞ்சனின் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தாள். அந்த நாள் விரைந்து வரவேண்டும்!
வண்டி நின்று விட்டது.
பாரு கோதுமைச் சுமையைத் தலையில் வைத்துக் கொண்டாள். லாரியில் வந்த கூலியாள் ஒருவன் கிழங்கு மூட்டையைச் சுமந்து கொண்டான்.
“அவசரமாய் இப்போது போகிறேன். மாமனிடம் சொல்லுங்கள் - நான் அப்புறம் வருகிறேன்” என்றான் ராமன்.
சுமையுடன் கூலியாளுக்குச் சமமாக அவள் விரைந்து மூக்குமலைமேல் ஏறினாள். மரகதமலைப் பாதைப் போல் செம்மைப் படாத பாதை. நஞ்சன் பசியோடு திரும்பியிருப்பானோ என்ற ஒரே நினைவுதான் அவள் உள்ளம் முழுவதும் வியாபித்து நின்றது. அவன் பட்டினி கிடக்கும் நினைவில் ரங்கம்மை வைத்த சோறு அவளுக்கு நாவில் வைக்கக் கூடப் பிடிக்கவில்லையே!
மேலே அவள் ஏறி வருகையில், ஹட்டிப்பக்கம் வெள்ளை உடுப்புக்கள் அணிந்தவர்கள் ஐந்தாறு பேர்கள், தலையில் வெள்ளைக்காரர் தொப்பியணிந்த சீமான்கள் சென்றதை அவள் கவனித்தாள். ஜோகியண்ணனும் அவர்களுடன் சென்றதையும் அவள் கவனித்தாள்.
யாரோ? காபியும் டீயும் வந்த பிறகு, அத்தகைய ஆபீசர்கள் வருவது சகஜமாகத்தானே இருக்கிறது?
சட்டென்று, நாளை நஞ்சனும் அப்படி உடுப்புகளும் தொப்பியும் அணிந்து வருவான் என்ற எண்ணம், குபீரென்று மலர் போல் அடித்தளத்திலிருந்து எழும்பி மலர்ந்தது.
வீட்டுக்குள் சென்றவள், கிழங்கை வேக வைத்து விட்டுக் கோதுமையைக் குற்றிக் கல் திரிகையில் இட்டு உடைத்தாள்.
நேரம் மங்குமுன் தண்ணீர் கொணர்ந்து கிழவருக்குத் தேநீர் வைத்துக் கொடுத்தாள். கோதுமைச் சோறும் குழம்பும் ஆக்கிட்டு, மாடத்தில் விளக்கும் வைத்துவிட்டாள்.
ஒவ்வொரு வீட்டிலும் வேலைக்குச் சென்ற ஆண்கள் திரும்பி வந்து விட்டார்கள். மாடுகள் கொட்டிலுக்குத் திரும்பி விட்டன. பெண்கள் சுள்ளிகள் சடபடவென்று வெடிக்க அடுப்புத் தீயை மூட்டிவிட்டார்கள். பாரு வாயிலில் வந்து வந்து பார்த்தாள்.
காலையில் சென்ற பையன் இன்னும் வரவில்லையே! வழக்கமாக அவன் வரும் நேரம் தாண்டவில்லை, என்றாலும் அன்று வழக்கம் போல் அவன் சென்றிருக்கவில்லையே! கானகப் பாதையில் எங்கேனும் மயங்கி விழுந்திருப்பானோ? ஏன் வரவில்லை?
ஜோகியண்ணனும் கூட வரவில்லையே! ஒரு வேளை அவர்கள் வேட்டைக்கு வந்த கறுப்புத் துரைமார்களோ? ஜோகியண்ணனுக்கும் வேட்டைக்கும் வெகுதூரம் ஆயிற்றே!
நேரம் செல்லச் செல்ல அவள் துடிப்பு உச்சத்துக்கு ஏறியது.
பனிப் போர்வையை விரித்து, மலையன்னை உறங்கச் சித்தமாகி விட்டாள்.
ஜோகி, “அண்ணி!” என்று அழைத்துக் கொண்டு வந்தார். அவர் குரலில் என்றுமில்லாத உற்சாகம் இருந்தது.
“நஞ்சன் இன்னும் வரவில்லையே?” என்றாள் அவள் அவர் எதிர்பட்டதுமே.
“தினம் வரும் நேரமாகவில்லையே?” என்ற ஜோகி, “கேட்டாயாம்மே? சின்ன வயசில், நான், அண்ணன், கிருஷ்ணன் எல்லோரும் மாடு மேய்த்துக் கொண்டு படுத்திருப்போமே, உனக்குக் கூட நினைவிருக்கிறதா? காப்புக்கூட ஒருநாள் தொலைந்து போச்சே! அப்போது...”
“இந்தப் பேச்சுக்கெல்லாம் இப்போது என்ன அவசரம்?” என்று பதறிய பாரு, “பையன் காலையில் எதுவும் சாப்பிடவில்லையே அண்ணா?” என்றாள் குறுக்கே புகுந்து.
“கவலைப்படாதே அம்மே. அவன் என்ன பச்சைப் பிள்ளையா? ஏதேனும் சாப்பிட்டிருப்பான்” என்று கூறிவிட்டுப் பழைய வேகத்துடன், “இதைக் கேளும்மே; ஒரு நாள், இந்த மலை முழுவதும் பெரிய பெரிய விளக்குகள் போட என்ன செய்யலாம் என்று நான், அண்ணன், பெள்ளி - பெள்ளி கூடத்தான் எல்லாரும் சர்ச்சை பண்ணினோம். அப்போது கிருஷ்ணன் தான், ‘ஆற்றுத் தண்ணீரை மந்திரம் போட்டு எண்ணெயாக்குவோம். முட்டுக் கோத்தரைப் பெரிய பானை வனைந்து தரச் சொல்வோம்’ என்றெல்லாம் சொன்னான். நிசமாகவே, குமரியாற்றுத் தண்ணீரைக் கொண்டு, ஊர் மலை எல்லாம் விளக்கெரிக்கும் காலம் வருகிறதாம் அண்ணி!”
பகைவன் என்று அவன் பேரைக் கூட உச்சரிக்கக் கூசும் ஜோகி, தம்மை மறந்த உற்சாகத்தில், இருள் மறைந்து ஒளி பரவப் போகிறது என்ற மகிழ்வில் பேசிக் கொண்டு போனார்.
பாருவுக்கு அவர் பேச்சு அப்போது கொஞ்சமும் பிடிக்கவில்லை.
“மத்தியான்னம் எல்லா ஆபீசர்மார்களும் இங்கெல்லாம் சுற்றினார்கள். காடு மலை எல்லாம் சுற்றி, ஆறு மழைத் தண்ணீர் எல்லாம் கணக்கெடுக்கிறார்கள். நானும் அவர்களுடன் சந்தனச் சோலை வரையில் போனேன். அங்கே கூடாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன என்னவோ கருவிகள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே ஆச்சரியமாக இருக்கிறது.”
அவர் பேச்சைப் புரிந்து கொள்ளுமுன், அவள் இருதயம் அந்த ஏங்கிக் கிடந்த அடிச்சத்தத்தைப் புரிந்து கொண்டு விட்டது. ஆவல் துள்ள, அவன் வாயிற்படிக்கு வருகையிலேயே அவனைச் சந்தித்து விட்டாள். அந்நேரம் வரை பசியால் வாடி, மெலிந்து சோர்ந்து விழுபவனாக அவன் வரவில்லை. அவன் நடையில், பார்வையில், புதியதோர் உறுதியைக் கண்டாள் அவள்.
“நஞ்சா!”
நஞ்சன் பதிலே பேசவில்லை. அவன் வந்ததை அறிந்து கிழவர் புறமனைப் பெஞ்சியிலிருந்து எழுந்து வந்தார்.
“உங்கள் நாலணா, கீழே விழுந்துவிட்டது தாத்தா” என்று அவர் வாயைத் திறக்குமுன் கூறிய நஞ்சன், உள்ளே சென்றான். கைகால் முகம் கழுவிக் கொண்டு அடுப்படியில் வந்து அமர்ந்தான்.
அடுப்பில் நெருப்புத் தகதகவென்று ஒளிர்ந்தது. மேலே ஒரு சட்டியில் கிழங்குக் குழம்பு. இன்னொன்றைத் திறந்து பார்த்தான்; உடைத்த கோதுமைக் களி.
அருகில் நின்ற பாரு, அவன் கையில் ஓர் ஆரஞ்சை வைத்து, “அப்பனும் நீயும் சாப்பிடலாமா நஞ்சா?” என்றாள்.
“ஏதம்மா ஆரஞ்சு? ஏதம்மா கோதுமை?”
“நம் மரத்து ஆரஞ்சி. மரம் வெட்டினாராம் பெரியப்பன். ராமன் கொண்டு வந்தான். காலையில் அப்படிப் போனாயே; என் மனசு எப்படி இருக்குமடா குழந்தை நீ பட்டினியானால்?”
நஞ்சன் அந்த அன்பின் ஒலியிலே மனம் நெகிழ்ந்தான். அந்தக் கண்களில் பெருகிய நீரைத் துடைத்தான்.
“அம்மா, அம்மா! நீங்கள் கண்ணீர் விடக் கூடாது. அசட்டுத்தனமாய்க் கோபித்துக் கொண்டு போனேன்” என்றெல்லாம் அம்மையைத் தேற்றினான். உடனே சட்டையிலிருந்த ஓரணாப் பொட்டலத்தை எடுத்தான்.
“வாயைக் காட்டுங்கள் அம்மா.”
ஜோகி அப்போதுதான் அங்கு வந்தார். அவர் கைச்சாமானை வெடுக்கென்று பிடுங்கினார்.
“உயிர் போனாலும் இந்த ஈன புத்தி வரலாமா நஞ்சா?”
பாரு வெலவெலத்து நின்றாள்.
“தினம் தினம் நம்மைப் பட்டினி போட்டு நம் உழைப்பில் அவர் உண்ணலாமா அப்பா?” என்றான் நஞ்சன்.
“எனக்கு வேண்டும் என்று தாத்தாவைக் கேட்கலாம். இந்த ஈன புத்தி உனக்கு வரக்கூடாது நஞ்சா; கூடாது, கூடவே கூடாது. காசு தொலைந்து விட்டதென்று பொய் சொல்லலாமா நீ? உண்மை உயிரையும் விடப் பெரியதாயிற்றே! உன்னிடம் எவ்வளவு கொடுத்தார்? நீ படித்தது இதற்காகவா தம்பி?”
“நாலணா.”
பையன் அந்நேரம் பட்டினி கிடந்திருக்கவில்லை என்ற ஆறுதலுடன், பாரு, “ஜோகியண்ணா, பசியுடன் போன பையன் இனிச் செய்ய மாட்டான். மாமனுக்கு நான் நாலணாத் தருவேன், விடுங்கள்” என்றாள்.
ஆனால் ஜோகி கேட்கவில்லை. அந்தப் பொட்டலத்தைக் கிழவரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.
நஞ்சனுக்கு, வேதனை படிந்த தந்தையின் முகம் தன் உள்ளத்தை அறுப்பது போல் தோன்றியது.
“கோபாலா!”
“ஏன் ஸார்?”
“எங்கே போறே?”
“ஓட்டுப் போட.”
“எந்தப் பெட்டி?”
“ரோஜாப் பெட்டி!”
“ராணியின் கூந்தலில்?”
“ரோஜாப் பூ!”
“அழகிற் சிறந்தது?”
“ரோஜாப் பூ!”
“மணம் தருவது?”
“ரோஜாப் பூ!”
“மக்கள் விரும்புவது?”
“ரோஜாப் பூ!”
“மலையில் வளர்ந்து, மணத்தில் சிறந்து, மக்களைக் கவர்வது?”
“ரோஜாப் பூ!”
“முள்ளும் இலையுமாக உள்ள செடியில் அழகாக மலர்ந்து நிற்கும் ரோஜாவைப் பாருங்கள். படிப்பும் பகட்டும், அகந்தையும் ஆணவமும், மமதையும் மாடி வீடும், உல்லாசமும் ஒய்யாரமும் இந்த ரோஜாவுக்கு உண்டா?”
“கிடையாது!”
“பின் என்ன உண்டு?”
“அறிவைத் துலக்கும் அழகுண்டு; அன்பு நினைக்கும் அகமுண்டு; எளிமையிலே ஏர்வை உண்டு; ஒளிகூட்டும் ஊக்கமுண்டு; அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று மமதையுடன் மார்தட்டுபவரிடையே மங்காமல், மாழ்காமல், மலர்ந்து நின்று மதி விளக்கும் ரோஜாப் பூ!”
“ரோஜாப் பெட்டிக்கே!”
“ஓட்டுப் போடுங்கள்!”
“எந்தப் பெட்டி?”
“ரோஜாப் பெட்டி!”
தேர்தல் களேபரம் மலைமக்களை விட்டுவிடுமா? ரங்கனின் சின்னமான ரோஜாப் பூ, மூலை முடுக்குகள், மேடு பள்ளங்கள் எங்குமே இரையலாயிற்று. ஒவ்வொரு நாளும் கூடை கூடையாக ரோஜா மலர்கள் தேர்தல் கூட்டங்களில் மக்களின் கால்களில் மிதிபட்டன. மஞ்சள் ரோஜா, காட்டு ரோஜா, வெள்ளை ரோஜா, வீட்டு ரோஜா என்று எல்லா விதமான ரோஜாக்களும் ரங்கனின் புகழ்பாடக் கொய்து குவிக்கப்பட்டன.
ரங்கனின் ஆட்கள் ரோஜாச் செருகிய கோட்டணிந்து, ரோஜாவின் புகழ் பாடினர். லாரிகள், வண்டிகள் முதலிய பிரசார சாதனங்களெல்லாம், ரோஜா மாலையணிந்து, ரங்கனின் உருவப்படங்களை ரோஜாப் பீடங்களில் தாங்கி மலைப் பாதைகளை வலம் வந்தன. வெற்றி தனக்கேதான் என்ற உறுதியுடன், ரங்கன், பணத்தைப் பதவிக்காகக் கண்மண் தெரியாமல் ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணன் போட்டிக்கு நின்றிருந்தாரானால், அவன் வெற்றியை அவ்வளவு நிச்சயமாக நினைத்திருக்க முடியாது. மக்கள் கட்சியின் சார்பில், கிருஷ்ணன் முதலில் நிற்பதாகத்தான் இருந்தார். ஆனால் ரங்கன் நிற்பதாக அறிந்ததும், அவர் தீர்மானத்தைக் கைவிட்டார்.
ரங்கன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னோர் அபேட்சகர், கோத்தைப் பக்கத்தைச் சேர்ந்த பிரமுகர்; மற்றவர், மக்கள் கட்சியின் சார்பில் நிறுத்தப் பட்டவர்; மலை நாட்டைச் சேர்ந்தவர் அல்லர்.
கிருஷ்ணன் பின்வாங்கி விடப் போகிறார் என்று ரங்கன் அறிந்திருந்தால் அந்த வம்புக்கே கிளம்பியிருக்க மாட்டான். கடைசி நிமிஷத்தில், முன் வைத்த காலைப் பின் வைக்க வழியில்லாமல் ஆகிவிட்டது.
பழைய விரோதமும் கட்சிப் பிளவும் தேர்தல் போட்டியில் தலையெடுத்து ஆடாமலில்லை. சொல்லப் போனால், அதுவே பிரசாரங்களில் முக்கிய அங்கம் வகித்தது எனலாம்.
“நாம் முன்னேறுவோம். அநாகரிகமான சம்பிரதாயங்களை ஒழித்து, எதிர்காலத்தை நோக்குவோம்” என்று குறிப்பாக, அன்று ரங்கனுக்கு எதிராக நின்றவர்கள் தாமாகவே பிளவுபட்ட எதிர்க்கட்சிக்குச் சேர்ந்தார்கள்.
கௌரிக்குத் தலை கழுத்திலேயே நிற்கவில்லை! சாமானியமா? அவள் புருஷன் பெரிய பெரிய பதவிகளை வகிக்கப் போகிறான்; எங்கு நோக்கினாலும் அவன் படம்; எங்கே திரும்பினாலும் ரோஜாவுடன் ரங்கே கௌடரின் புகழ், கணவனின் பெருமை மட்டுமா? லிங்கனைப் போல் பேச்சில் வல்லவர் எவருண்டு? ஒவ்வொரு ஹட்டியிலும் மேடையில் நின்று, ரோஜா மாலை போட்டுக் கொண்டு ரோஜாப்பூச் சொற்பொழி வல்லவோ ஆற்றினான்? தேன்மலையாளின் பிள்ளைக்குப் படித்தும் பட்டம் இருக்கலாம்; பேசத் தெரியுமா அப்படி? வயசு முதிர்ந்த மாதனும் கூட, தம் கனவுலகை விட்டு, மைந்தனின் மகத்தான தேர்தல் விழாவில் பங்கு கொண்டார். கூட்டத்தைக் கூட்டுவதற்காக அவர் ரோஜா மாலைகளணிந்து வெகுநாட்களாகப் பாடாமலிருந்த பாடல்களைப் பாடினார்; ஆடினார். மந்துகளுக்கெல்லாம் சென்று, இரகசியமாக, மகனுக்கு ஓட்டுப் போட்டால், அரசாங்கம் ஒழித்துவிட்ட போதைச் சரக்குகளை மீண்டும் சுலபமாகப் பெற வழிவகை செய்வான் என்று உற்சாகத்துடன் பிரசாரம் செய்தார். உண்மையில் அந்தக் கிழவருக்கு மகனின் முயற்சியிலே அந்த ஓர் அம்சம் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தரவல்லதாக இருந்தது என்பதைக் கூற வேண்டுமா?
தமையனின் இந்தத் தேர்தல் வைபவத்தில் சலனமற்று இருந்தவர் ஜோகி. புற உலகில் நிகழ்ந்த கிளர்ச்சிகளும் கலவரங்களும் கூச்சல்களும் அவரைப் பாதித்துவிடவில்லை. பாருவையும் நஞ்சனையுங் கூடப் பாதிக்கவில்லை.
ஆனால் நஞ்சனுக்கு, மாசம் பத்து ரூபாய்க் காசுக்காகப் பெரிய தந்தையிடம் பிச்சை கேட்க நிற்கும் போதுதான் மனம் கூனிக் குறுகியது. உதகையிலேயே கிழங்கு மண்டிப் பக்கம் சென்றால், பெரியப்பனுக்காக மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டி வரும்.
“என்னடா?” என்பார் பெரியப்பா, தெரிந்தும் தெரியாதவராக.
“பணம் தருகிறேனென்று, இங்கு வரச் சொன்னீர்களே?” என்பான் நஞ்சன் கூனிக் குறுகி.
“ஓ! படித்துப் புரட்டப் போகிறாய். படித்தவன் தோட்டத்திலே முள்ளெடுக்கிறானா?” என்று காரசாரமாக மண்டிக் கவுண்டரிடம் ஒரு பிரசங்கம் புரிய ஆரம்பித்து விடுவார்.
“படிக்காத உங்கள் பையன்கள் தோட்டத்தில் முள்ளெடுக்கிறார்களா?” என்று கேட்க நஞ்சனுக்கு நாத் துடிக்கும். சிரமப்பட்டு அடக்கிக் கொள்வான்.
“சரி, இங்கே இப்போது ஐந்து ரூபாய் இருக்கிறது. வைத்துக் கொள். அப்புறம் வீட்டுப் பக்கம் வாயேன்” என்பார்.
பத்து ரூபாய்க்குப் பத்து நடைகள் வீட்டுக்கும் ஒத்தை மண்டிக்குமாக நஞ்சன் போக வேண்டி வரும்.
அம்மையிடம் அவன் இந்தச் சிறுமைகளைச் சொல்லிக் கொள்வதில்லை. அவள் மனம் நோவாள். அவனுடைய அருமை அம்மைக்கு மனநோவைக் கொடுக்க அவன் விரும்பவில்லை.
நாளாக நாளாக, அவன் பெரியவன் அல்லவா?
தேர்தல் முழக்கம் மும்முரமாக நிகழ்ந்த காலத்திலே நஞ்சனுக்கு, பள்ளி முடிவுப் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. சாதாரண நாள்களிலேயே பார்க்க முடியாத பெரியப்பனாயிற்றே! மண்டிக்குப் போனால் இல்லை; வீட்டுக்கோ, அவருக்குத் தலை நீட்டவே போதில்லை. கௌரிக்குப் பையன் பணம் கேட்க வருவான் என்பது தெரியும். ஆனால், வாய்விட்டுக் கேட்கட்டுமே! பெரியதனம் என்ன வேண்டிக் கிடக்கிறதாம்?
ஆனால், நஞ்சனோ அவளாகக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் கேட்கவே கூசினான். அன்று மரகதமலை ஹட்டிக்குச் சென்று, பெரியப்பனைக் காணாமல், மனம் நொந்து தான் திரும்பிக் கொண்டிருந்தான். பதினைந்து ரூபாய்க்கு, தட்டும் நிலையிலே, அவனுக்குக் கோயம்புத்தூர் ஏது, கல்லூரி ஏது? பத்தாவதை முடித்துவிட்டு எங்கேனும் வேலை தேட வேண்டியதுதான்.
பணம் கட்ட வேண்டும் என்ற விஷயத்தையே அவனுடைய அம்மை அறியாள். ஐயனுக்குத்தான் இவ்வுலக சிந்தனை ஏது? அவனை அறியாமல் உள்ளம் விண்டாற் போல் பெருமூச்சு எழுந்தது.
கதிரவன் அந்த கார்த்திகை மாசத்திலே மண்டை வெடிக்கக் காய்ந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டில் மழையே இல்லை. பூமி வறண்டு, பசும் புல்லெல்லாம் காய்ந்து விட மாடுகள் ஆங்காங்கே காய்ந்த வேரைக் கடிப்பதும் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து பார்ப்பதுமாக இருந்தன. கார்த்திகை மாதத்தில் பூமி வறண்டிருக்குமோ? பாறைகளெல்லாம் அருவிக் குழந்தைகளை இழந்து, கார்த்திகை மாதத்திலே நெஞ்சு வெடிக்க நிற்குமோ?
நஞ்சன் கீழ்மலைப் பக்கம் வருகையிலே, மூக்குமலைப் பாறையிலே, சுண்ணாம்பால் ரோஜாப்பூச் சித்திரம் ஒன்று தீட்டியிருந்ததைக் கண்ணுற்றான். பாறை, சுண்ணாம்பை வழிய விட்டுக் கொண்டு, அரக்கன் முகம் போல் காட்சியளித்தது.
குமரியாற்றில் நீர் வற்றி சலசலவென்று கற்கள் உருள, அருவியிலும் சிற்றருவியாக இழைந்து சென்றது. நாயர் கடைக்கெதிரில், ராமன் ஓட்டும் லாரி நின்றது.
லாரியின் இருபுறங்களிலும், இரு பெரிய ரோஜாக்களுக்கு நடுவே, பெரியப்பன் கைகுவித்து நிற்பதைப் போன்ற சித்திரத் தட்டிகள் வைத்திருந்தன. அதை வேடிக்கை பார்க்க, அங்கு ஒரு கும்பல் இருந்தது.
ஒருவேளை பெரியப்பன் வண்டிக்குள் இருப்பாரோ என்று நஞ்சன் அங்கே நின்றான். ஆனால் அவன் அங்கு நிற்கையிலே, நாயர் கடைக்குள்ளிருந்து காக்கிச் சட்டை நிஜாரும், கம்பளி மப்ளருமாக ராமனே வெளியே வந்தான். நஞ்சனைக் கண்டதும் கண்கள் அகல அருகில் வந்தான்.
“நஞ்சனா? ஹட்டிக்குப் போய் வருகிறாயா? வா, டீ குடிக்கலாம்.”
நஞ்சனைத் தோளைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவன் மீண்டும் கடைக்குள் நுழைந்தான்.
“எலெக்ஷன் வேலை அத்தானுக்கு மும்முரமாக இருக்கிறது” என்று நஞ்சன் சிரித்தான்.
ராமன் நஞ்சனைக் கண்டு பேசியே எத்தனையோ நாட்கள் ஆகியிருந்தன. பதினாறு பிராயத்தில் பாலப் பருவம் நீங்கி, மடமடவென்று அவன் வளர்ந்து கொண்டிருந்தான். குரல், உடைந்து அவன் வளர்ச்சியைத் தெரிவித்தது.
“ஸ்கூல் லீவா?”
“ஆமாம், ஸெலக்ஷன் பரீட்சை” என்றான் நஞ்சன்.
“அடுத்த வருஷம் கோயம்புத்தூர் போய்விடுவாய்.” சிரித்துக் கொண்டே இரண்டு போண்டா இலையை அவன் பக்கம் நகர்த்தினான் ராமன்.
“உங்களுக்கு?”
“இப்போதுதான் நான் சாப்பிட்டேன். எங்கே வந்தாய் ஹட்டிப் பக்கம்? பெரியப்பாவைப் பார்க்கவா?”
நஞ்சனின் முகம் ஒரு கணத்தில் இருள் அடைந்தது.
“நஞ்சா, என்ன?”
“ஒன்றுமில்லை அத்தான். கோயம்புத்தூர் போய் நான் எங்கே படிக்கப் போகிறேன்? ஸெலக்ஷன் பரீட்சைக்கே பணமில்லை.”
ராமன் ஒரு கணம் அதிர்ந்தாற் போல் நின்றான்.
“இதற்கா நீ வருத்தப்படுகிறாய்? அசட்டுப் பையா! எவ்வளவு பணம் வேண்டும்?”
“பதினைந்து ரூபாய்.”
ராமனிடம் அப்போது தேர்தல் கல்யாணப் பணம் புரண்டு கொண்டிருந்தது. அந்தத் தேர்தல் கோலாகலத்துக்குப் பலியாகி விடுமோ என்று அவன் அஞ்சிக் கொண்டிருந்தான்.
மாமனை அண்டி, நாற்பதும் ஐம்பதும் கூலி பெற்று உழைப்பவனாயிற்றே அவன்? பணம் சம்பாதிப்பதும் கரைப்பதும் மாமனுக்குத் தண்ணீர் பட்டபாடு. ஆனால் அவன்?
சட்டென்று சட்டைப் பையில் கைவிட்டு இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து நஞ்சனிடம் கொடுத்தான் ராமன்.
“இதற்கு ஏன் வருத்தப்படுகிறாய்! ஆயிரக்கணக்கிலே பணத்தை எவன் எவனோ சாப்பிடுகிறான். என்னிடம் கேள். மாமி நல்லாயிருக்கிறார்களா? மாமன் நல்லாயிருக்கிறாரா?”
நஞ்சன் நன்றி பளபளக்கத் தலையாட்டிய வண்ணம் ரூபாய் நோட்டை மடித்து வைத்துக் கொண்டான்.
“நான் இதை மறக்கவே மாட்டேன். அம்மையிடம் பணம் கிடைக்கவில்லை என்று எப்படிச் சொல்வதென்று நான் பேசவே இல்லை.”
“நல்ல வேலை செய்தாய். மாமன் வீட்டிலே அண்டி, அவர்கள் நிலத்து விளைவை உண்பவர்கள் நாங்கள். நீ நல்ல பையனாகப் படித்துப் பேர் சொல்ல வேண்டும் என்பது என் ஆசை. எப்போது பணம் வேண்டுமோ, என்னை வந்து கேள், நஞ்சா” என்று ராமன் ஆதரவுடன் விடை கொடுத்தான் அன்று.
இரவு பகலாக நஞ்சன் பரீட்சைக்குப் படித்தான். இரவு பகலாகக் காந்த விளக்குகள் எரிய, தேர்தல் பிரசாரங்களும் வாய்ச் சண்டை கைச்சண்டைகளும் அந்த அமைதியான மலைப் பிரதேசத்தைக் கலக்கின.
நஞ்சன் ‘ஸெலக்க்ஷன்’ பரீட்சை முடிவு அறிந்து பணம் கட்டச் சென்ற தினத்தில், உதகை நகரிலே தேர்தல் முடிவுக்காக மக்கள் கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் ஆவல் ஜுரம் ஏறத் துடித்துக் கொண்டிருந்தது.
ஓட்டுக்களின் எண்ணிக்கை, ரங்கே கௌடரின் பக்கம் அதிகம் போகின்றன என்பதை அறிந்து, ரோஜாப்பூ வண்டிகளில் ஊர்வலத்துக்குத் தயாராக வந்த பூக்களுடன் அவன் கட்சி மக்கள் கோஷம் செய்தார்கள். மதுப் புட்டிகள் ரோஜாக் குவியல்களுக்கிடையே ஏராளமாகப் பெருவிழாவுக்காகப் பதுங்கியிருந்தன.
மலைவாசியல்லாத மக்கள் கட்சியாரின் சாரிபில் வோட்டுக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
கோத்தைப் பிரமுகர் பக்கம், யானைச் சின்னப் பெட்டியின் வாக்குப் பதிவுகள் தாம் தெரிய வேண்டும்.
நஞ்சன் பள்ளியில் காத்திருந்து பணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்த போது, நகரிலே ஜய கோஷங்கள் செவிகளைத் துளைத்தன. லாரிகளில் பாடிக் கொண்டு, உற்சாகமடைந்த மக்கள் நகரின் தெருக்களை ஊர்வலம் வரும் கோலாகல ஒலிகள், மலைக்கு மலை வண்ணக் கம்பளிகள், தலைப்பாகை அணிந்த கூட்டம்.
வென்றவர் யார்?
விடுவிடென்று நஞ்சன் சரிவில் இறங்கி வருகையிலே, போலீசு லாரி ஒன்று கலகமும் குழப்பமும் விளைவித்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. குடி மயக்கத்தில் இளைஞன் ஒருவன் தள்ளாடிக் கொண்டு, “ரோஜாப் பூவுக்கு ஜே! ரோஜா, ராஜா, ராணி” என்று பிதற்றிய வண்ணம் கையைத் தூக்கினான்.
அதைக் கண்டு துண்டு நோட்டீசை வாரி இறைத்துச் சென்ற லாரியிலுள்ள கூட்டம் குலுங்கச் சிரித்தது.
துண்டு நோட்டீசு நஞ்சனின் மீதும் பறந்து வந்தது.
“வெற்றி, வெற்றி, வெற்றி! யானையின் சக்திக்கு மகத்தான ஆதரவு தந்த மக்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி!”
அப்படியானால், ரோஜாப் பூ வீழ்ந்ததா? பெரியப்பனுக்குத் தோல்வியா?
நஞ்சனுக்கு அந்தத் தோல்வியில் குரூரமான ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று. இந்தச் செய்தியைத் தானே அம்மையிடம் கூற வேண்டும் என்ற ஓர் ஆவல் உந்த, நஞ்சன் வீட்டை எண்ணி வேகமாக நடந்தான்.
எப்போதும் போலவே மலையழகியைக் காண அந்த ஆண்டும் வசந்தன் வந்தான். பூத்துக் குலுங்குபவளாய் பசிய மேனியுடன் புன்னகை புரிபவளாய் வசந்தனை வரவேற்கும் மலையழகி ஏனோ உருமாறிப் போனாள்?
பசுமையும் பூரிப்பும் எங்கே? சலசலத்து ஓடிவரும் அருவிகள் எங்கே? இளங்காற்றில் மெல்ல அசையும் இளமரக் கிளைகள் எப்படிக் காய்ந்தன? காயும் கதிரவன் மாயவே மாட்டானா?
காடுகள் அழிய, மொட்டை மொட்டையாகத் தொலை தூரம் வரை தெரியும் குன்றுகளெல்லாம், வரிவரியான கிழங்குப் பயிர்களுடன் கண்ணுக்கினிய காட்சிகள் தருமே! மண்ணில் ஈரமே இல்லை. கிழங்கை விதைத்துவிட்டு மக்கள் வானவனைப் பார்த்து இறைஞ்சி நின்றனர். பூமித்தாய் மக்களின் கண்ணீர் கண்டு, வெய்துயிர்த்தாள்.
ஜோகி அவ்வாண்டு நிலம் முழுவதுமே கிழங்கு விதைத்திருந்தார். மாமனாகிய முதுகிழவர், வானை நோக்குவதும், மாசு மறுவில்லாத நிலம் கண்டு மறுகுவதுமாகத் தவித்தார்.
“பையன் கோயம்புத்தூர் சென்று படிக்க வேண்டும்; குத்தகைப் பூமி எடுத்துக் கிழங்கு போடுவோம் என்று போட்டோமே; வானவனே, உனக்குக் கருணை இல்லையா?” என்று பாரு பரிதவித்தாள்.
வானவனின் கருணை வேண்டி, “எங்கள் எதிர்காலம் அந்த மண்ணிலே கருவிருக்கும் கிழங்குகளில் தொங்கியிருக்கின்றன; எங்கள் தாய், அம்மை, பூமி, வானவனே, வஞ்சிக்காதே!” என்று ஜோகி மட்டுமா கண்ணீர் விட்டார்?
லட்சக் கணக்கிலே கிழங்கு விதைத்த சீமான்கள், தெய்வ நம்பிக்கையை ஒதுக்கிய முன்னேற்றக்காரர்கள் எல்லோருமே தனித்தனியே மழை வேண்டித் தவமிருந்தனர். பல வேறு நம்பிக்கைகளுடையவரும் அவரவர் வழி கார்மேகத்தை அழைக்கப் பூசைகள், வழிபாடுகள், ஆட்ட பாட்டங்கள் நிகழ்த்தினார்கள். பணத்தைப் பந்தயமென்றும் களியாட்டங்களென்றும் தண்ணீராக ஓட விட வந்தவர், உதகை நகரம் நெஞ்சம் உலர்ந்த நகரமானது கண்டு அதிசயப்பட்டவர்கள்; கூட்டங்கள் போட்டார்கள்; பேச்சுக்கள் பேசினார்கள். பத்திரிகைக்காரர்கள் தண்ணீருக்குத் தவிக்கும் மக்களின் சங்கடங்களைப் படங்களெடுத்து போட்டார்கள்; பக்கம் பக்கமாக எழுதினார்கள்.
வானம் கருணை பொழியவில்லை.
கிழங்கு விதைத்து இருபது நாட்கள் ஆகிவிட்டன.
பதின்மூன்று நாட்களுக்குள் வானம் கறுத்துப் பொழியுமே? வழக்கமாக வந்து தங்கும் மலைமுகடுகளை விட்டு, அந்தக் கருமேனிப் பெண்கள் எங்கொழிந்து சென்றனர்? நன்றியற்ற மக்களாயினரோ?
லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, அரும்பெரும் பதவியைப் பெற ரங்கன் பாடுபட்டான். லட்சாதிபதியாக வாழ்ந்தவன், தோட்டங்கள், மாடுகள், செல்வாக்கு அனைத்தையும் ஒரே அலையில் இழந்து, ஓட்டாண்டியாக ஆனான். அவனை அண்டி வந்த கருப்பையா, கிழக்கு மண்டிச் சொந்தக்காரனானான். சின்னுப்பிள்ளை தேயிலைத் தோட்டங்களைச் சுவீகரித்துக் கொண்டான். மிஞ்சியதெல்லாம் மூதாதையர் பூமி மட்டுமே. அதிலும் பாடுபட ஆளில்லை; பணமில்லை. ராமன் கருப்பையா மண்டியிலே சரக்கு லாரி ஓட்டலானான். நகைகள் போயின என்ற கத்தலும் கூச்சலுமாக ரகளை செய்த மனைவி, உபயோகமற்ற பிள்ளைகள், வந்தவரிடமெல்லாம் கைநீட்டிய முதுகிழவரான தந்தை ஆகிய குடும்பத்தையும், அவமானத்தையும், தோல்விக்குக் காரணம் கிருஷ்ண கௌடரின் எதிர்க்கட்சி ஆதரவு என்ற எண்ணத்தில் கனன்ற பகையுணர்வையும் நினைவுக்கப்பால் அகற்றிக் கொள்ள, போதைப் பொருள்களின் உதவியையே ரங்கன் நாடியிருந்தான். அந்தப் பொருள்களின் உற்பத்தியில் கவனமும் செலுத்தியிருந்தான்.
இவையெல்லாம், ஜோகியின் உள்ளத்தில் கலக்கத்தை உண்டுபண்ணவில்லை. அவர் பிறந்து வளர்ந்த நாட்களாக, எவரெவரெல்லாமோ எப்படி எப்படியெல்லாமோ மாறியும் வானம் ஒரு போதும் இப்படி வஞ்சித்திருக்கவில்லை. வானமும் வஞ்சித்துவிட்டால் அவர் என்ன செய்வார்? நெஞ்சமே நொறுங்கி அடி வயிற்றில் விழுந்தாற் போலிருந்தது ஜோகிக்கு. இருபத்திரண்டாம் நாள், நட்ட விதையைத் தோண்டி, உயிர்க்கும் ஈரம் இருக்கிறதா என்று பார்க்க அவருக்குத் தெம்பில்லை. ஒரு தூற்றல் கூட விழவில்லையே!
கோடை விடுமுறையாக இருந்துங்கூட நஞ்சன் உதகைப் பக்கம் போகாமல் இருப்பதில்லை. மண்ணையும் வானையும் பற்றி அவன் சிந்தை சுழலவில்லை. பெரியப்பனும் வறண்டு உதவி செய்பவரும் இல்லாமல் அவன் கல்லூரிக் கனவு கண்டு பயன் என்ன? பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதனால், சில சலுகைகளுடன் அவன் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ஆனாலும், மற்ற செலவுகளை ஏற்பவர் யார்? கடன் வாங்கி அவனைத் தந்தை படிக்க வைப்பாரா? எப்படி, எதை வைத்துக் கடன் வாங்குவார்?
வீட்டிலே அம்மையின் முகத்தையும் ஏக்கம் பிடித்த தந்தையின் முகத்தையும் பார்த்துக் கொண்டு சுற்றி வர விருப்பம் இன்றியே அவன் ஒரு நாளின் முக்கால் பொழுதையும் வெளியே கழித்தான்.
மண்ணை நம்பிக் கனவுகளைச் சமைத்திருந்த பாரு என்ன செய்வாள்? அவள் தன் ஆசைக் கனவுகள் எத்தனையோ சிதைந்துவிழச் சமாளித்தாள். எல்லாம் போன பின் எஞ்சி நிற்கும் ஒரே உயிர்க்கனவு நஞ்சன் படிக்க வேண்டும் என்ற கனவு. மண்ணைச் சார்ந்து வளர வேண்டிய கனவு, அதுவும் இடிந்து விழ, அவள் எப்படித் தாங்குவாள்?
ஜோகியின் முகம் பார்க்க அவள் அஞ்சினாள். தேநீரையும் புகையிலையையுங் கூட மறந்து வானை நோக்கும் கிழவரின் கண்ணீர் கண்களில் பட்டு உறுதிகள் நீராகிவிடுமோ என்று ஒளிந்தாள்.
இருபத்தைந்தாம் நாள் காலையில் வானில் மூட்டம் காணப்படவில்லை. ஓர் ஓரம், கிழங்குப் பயிர்களை, இரகசியமாகத் தோண்டிப் பார்த்தாள், பாரு.
ஈசுவரா! இதுதானா உன் உள்ளம்? உயிர்க்கும் ஈரமே இன்றி, வெறும் கூடாக, தோலாக, அவள் நட்டிருந்த விதைகள் சாவியாக இருந்தன.
அவள் நெஞ்சு விண்டது.
மண்ணின் சூட்டிலே அவள் துடித்து விழுந்தாள், கதறினாள். அவள் எப்படித் தலையெடுப்பாள்? அவள் நெஞ்சுத் துயரம் எப்படி ஆறும்? அந்த ஆசைப் பயிர், ஒரு நாளைய, இரண்டு நாளைய பயிரா? சூடான புழுதி மண்ணில், பொழுது சாய்ந்து கருணையற்ற குளிர் படியலாயிற்று. அப்போதுங்கூட, பாருவின் உள்ளத் துயரின் வெம்மை ஆறவில்லை.
“மாமி, மாமி? என்னங்க மாமி இது?” ராமன் திடுக்கிட்டவனாக அவளைப் பிடித்து உலுக்கினான்.
“மாமி?”
தன் மீதே தன் மாளிகைகள் இடிந்து நொறுங்கிக் கிடந்தாற் போன்ற ஒரு பிரமையில் அவள் மெல்லக் கண்களை மலர்த்தி அவனைப் பார்த்தாள்.
“இருட்டி வருகிறது. மயக்கமா மாமி?”
“மயக்கமா?” கண்கள் மடை வெள்ளமாய்ப் பெருகின; பேச்சு எழவில்லை.
“ஏன் வருத்தப்படுகிறீர்கள், மாமி? ஈசுவரன் சித்தம், அவ்வளவு பெரிய இடியாய்ப் பெரிய இடியாய்ப் பெரிய மாமன் கை சளைத்தது. அதைக் கூடச் சமாளித்தீர்களே!”
“ராமா, தெய்வங்களெல்லாம் நம் மீது கோபப்பட்டு விட்டார்கள். உன் மாமனின் பேராசையும் பொறாமையும் குடும்பத்து நன்மைக்கே தீங்காக முடிந்துவிட்டன. பகையை இரு மாமனும் வளர்த்தார்கள். சிநேகம் விரும்பி வீடு தேடி வந்த கிருஷ்ண அண்ணனை, உன் ஜோகி மாமன் விரட்டினார். ராமா, நான் நஞ்சன் முகத்தை எப்படிப் பார்ப்பேன்? பரீட்சையில் ஜயித்து, கோயம்புத்தூர் போகாமல் இங்கே என்ன செய்வான்? என் வாழ்வைப் போல் இந்தக் கிழங்கு உயிர்க்காமல் சாவியாய்ப் போச்சு. பாழும் விதி என்னைச் சதி செய்தாற் போல வானம் சதி செய்தது” என்றெல்லாம் அவள் புலம்பினாள்; அரற்றினாள்.
ராமன் தேற்றினான்; “ஏதோ ஒரு கிழங்கு அப்படி இருக்கும். எழுந்திருங்கள் மாமி. நஞ்சன் படிப்புப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன்; எழுந்திருங்கள்.”
என்ன? அவள் கேட்பது உண்மையா? நினைவா?
“நீயா?”
“ஆமாம் மாமி. ராமன், மாமன் மண்ணிலே உயிர் வாழ்பவன் என்பதை மறப்பானா? உங்கள் மனசு, என்றும் அன்பாக, தங்கமாக இருக்க வேண்டாமா? எழுந்திருங்கள். நஞ்சன் நிச்சயமாக மேலே படிக்கப் போகிறான். நம் வீட்டில் எரியும் நல்ல விளக்கு ஒன்றை எப்பாடு பட்டேனும் எண்ணெயூற்றி நான் காப்பேன், எழுந்திருங்கள்.”
“ராமா, நிசந்தானா ராமா?”
“இந்த மண்ணில் மேல் ஆணையிடட்டுமா மாமி?”
“தம்பி, ராமா, நீ எப்படி அத்தனை பெரிய பொறுப்பை ஏற்பாய்?”
“என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா மாமி? இந்த ஒரு வேளாண்மையுடன் நாமும் போய் விடுவதா? உங்கள் ஒருவருக்கா இது நஷ்டம்? லட்சக் கணக்கான ரூபாய்களைக் கடன் வாங்கிக் கிழங்கு போட்டவர்கள் இருக்கிறார்கள்.” அவன் குரலில் வந்த கனிவும் ஆறுதலும் கொஞ்சமல்ல. அவன் தந்த ஊன்று கோலில் அவள் உடைந்த உள்ளம் சாய்ந்து நிமிர்ந்தது.
குட்டையாக, அப்பனைப் போலவே கவடின்றிப் பேசிச் சிரிக்கும் ரங்கம்மை பையன், நல்லதே நினைப்பவன்.
“ஈசா, எங்களை நீ நிறைய நிறையச் சோதிக்கிறாய், இந்த மக்களுக்கும் கஷ்டம் கொடுக்காதே!” தாயுள்ளம் வாழ்த்தியது.
இட்ட வித்தெல்லாம் பெரும்பாலும் மண்ணோடு மண்ணான பிறகு, ஒரு மாசத்துக்குப் பின்னர் ஓரிரவு, இடி இடித்து, பெரு மின்னல் பச்சை மரங்களை இரு கூறுகளாகப் பிளந்து எரிக்க, பெருமழை பெய்தது.
பத்துக்கு ஒன்று கூட ஜோகிக்குக் கிழங்கு முளைக்கவில்லை. ஆனால், பாரு, ஈரம் கண்டவுடனே, புது நம்பிக்கையுடன் விளைநிலத்தை மீண்டும் திருப்ப விரைந்தாள்.
ஆம்; அவள் நஞ்சன் நிச்சயமாக, கிருஷ்ணனை விட உயர்வாகப் படித்துப் பெருமைக்கு உரியவனாவான். ராமன் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறான். அவன் நல்ல பையன்; நிறைவேற்றுவான். ஈசனின் அருளுக்கும் ஆற்றலுக்கும் அழிவேது? இடையிடையே சஞ்சலங்கள் வந்தால், அதனால் குன்றிவிடலாமோ?
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில், மலைக்கு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்து நிற்க வேண்டியதுதான் தாமதம். உதகை செல்லும் முதல் வகுப்புப் பஸ்ஸைப் பிடிக்க ஓட்டமாக ஓடும் பிரயாணிகளைப் பார்க்கலாம். “போர்ட்டர், போர்ட்டர்!” என்ற கூவல் விளிகளைச் சட்டை செய்யாமல், நஞ்சன் கைப்பெட்டியுடன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்தான். அப்படி ஓடாமற் போனால், ரெயிலடியில் காத்து நிற்கும் அந்தப் பஸ்ஸுக்கு இடம் கிடைப்பது துர்லபம். அவன் உத்தியோகம் ஏற்கு முன்சென்னைக்குப் பேட்டிக்குச் சென்று திரும்புகிறான்.
நஞ்சன் விரைகையில், அவன் பெட்டிக்கு முன் இருந்த உயர்வகுப்புப் பெட்டியிலிருந்து, இரட்டைப் பின்னலும் கிரேப் தாவணியும், வெல்வெட்டுச் செருப்புமாக நங்கையொருத்தி குதித்து விரைவு நடை போட்டாள். ஆள் ஒருவன் முன்னே, ஒரு சிறிய தோல் பெட்டியைச் சுமந்து ஓடினான்.
சிறு கூண்டு வண்டி போன்ற அந்தப் பஸ்ஸுக்கு முதல் வகுப்புப் பஸ் என்ற திருநாமம் உண்டு. ரெயில் வண்டியில் முதல் வகுப்பில் வரும் சீமான் சீமாட்டிகளைச் சுமந்து, மலையேறும் ரெயிலுக்கு முன்பாக மலையுச்சியை அடையும் பெருமை அந்தப் பஸ்ஸுக்கு உண்டு. ‘ஸீஸன்’ நாட்களில், அந்தப் பஸ் ஆசனங்களுக்கு, உதகை நகர பங்களாக்களின் கிராக்கி வந்து விடும். பத்து விரல்களிலும் நவரத்தின மோதிரங்கள் ஒளிர, குதிரைப் பந்தயத்துக்கு வரும் கோடீசுவரரானாலும், விலைமதிப்பற்ற காகிதங்களடங்கிய தோல் பைகளுடன் வலம் வரும் வியாபாரிகளானாலும், “இடமில்லை ஸார்!” என்று கையைக் காட்டிவிட்டு, அலட்சிய மிடுக்கோடு செல்லும் பெருமிதம், அந்தப் பஸ்ஸின் கண்டக்டருக்கே உரித்தானது. எனவே நஞ்சன் அந்த ஆரணங்குக்குப் போட்டியாக ஓடியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அவன் நினைத்தாற் போலவே, அதற்குள் இருபது ஆசனங்களுக்கு மேலில்லாத அந்தப் பஸ்ஸுக்கு, உள்ளிருந்து வெளியே ரெயிலடியைத் தொட்டுக் கொண்டு, ஒரு ‘க்யூ’ டிக்கெட்டுக்கு நின்றது. நஞ்சன் இடித்துப் புடைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள்ளே ஏறினான்.
“ஸார், க்யூவிலே போங்க. க்யூவிலே நில்லுங்கள்” என்று கண்டக்டர் கத்திய குரல் அவன் செவிகளிலும் விழவில்லை; அவனைத் தொடர்ந்து வந்த கூட்டத்தினரின் செவிகளிலும் விழவில்லை.
“கூனூர், ஒன்று” என்று கையை உயர்த்திக் கொண்டு இரண்டு ரூபாய் நோட்டை எல்லாக் கைகளுக்கும் மேல் தூக்கிப் பிடித்த நஞ்சனுக்கு ஒரு வழியாக டிக்கெட் கிடைத்து விட்டது.
ஓர் ஆசனத்தில் தன் கைக்குட்டையைப் போட்டு, செய்தித் தாளை வைத்து, ‘ரிஸர்வ்’ செய்துவிட்டு, நஞ்சன் காபி குடித்து விட்டு வர இறங்கிச் சென்றான். மனம் கட்டுக்கு அடங்காத ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது. நாடி நரம்புகளிலெல்லாம் விடுதலை கண்ட இன்பத் துடிப்பு.
அவன் கண்ட கனவு நிறைவேறி விட்டது. அம்மையின் அபிலாஷை பூர்த்தியாகி விட்டது. ஆறு ஆண்டுகள், அவன் படிப்புக்கு ஐம்பதும் நூறுமாக வழங்கி, ராமன், மாமிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டான்! கட்டிட இயற்கலையில் பட்டம் பெற்ற இளைஞனாகி விட்டான் நஞ்சன். நற்கல்வி பெற்றுவிட்ட நஞ்சன், நாட்டுப் பணியிலே ஈடுபட வரும் இளைஞர் சமுதாயத்தில் பிரதிநிதியாகிவிட்டான். எத்தனை எத்தனை ஆண்டுகளாகவோ பின் தங்கி இருந்த மலை மக்களின் சமுதாயம் ஓர் அற்புதமான வருங்காலத்தை ஆக்க விழிப்புக் கொண்டு துடிதுடிக்கும் இளைஞர் உலகைப் படைத்து விட்டது என்பதன் பிரத்தியட்ச நிரூபணமாகி விட்டான் நஞ்சன். நீலமலையிலே, அவன் பிறந்து வளர்ந்த மரகதமலைப் பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான சாதனையில் பங்கு பெறும் பேறு பெற்ற பொறியியல் வல்லுநரின் இளம் படையிலே அவனும் ஒரு வீரனாகி விட்டான்.
வாழ்நாளில் இதை விட ஓர் ஆனந்தம் கிடைக்க இருக்குமா? உகந்த கல்வி, உகந்த வேலை; தானாக நூற்றுக் கணக்காக அவன் சம்பாதித்து, அம்மையிடம் கொடுத்து மகிழ்விக்கப் போகிறான். இட்டிலியையும் காபியையும் முடித்துக் கொண்டு பஸ்ஸுக்கு அவன் ஆனந்த நடைபோடுகையிலே, பஸ் கிளம்பத் தயாராகி விட்டது.
வண்டியோட்டி, இருக்கையில் அமர்ந்து, குழலை அமுக்கிக் குரல் கொடுத்தான். உள்ளே ஏறிய நஞ்சன் திகைத்தான்.
அவன் கைக்குட்டையைப் போட்டு, தன் ஆசனம் என்று ஒதுக்கியிருந்த ஒற்றை ஆசனத்தில், அந்தக் கிரேப் சுந்தரி, நகத்தைக் கடித்துக் கொண்டு அலட்சியமாக ஏதோ ஒரு பொம்மைப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தாள்!
நஞ்சனுக்கு இயல்பாகவே பெண்களின் முன் நிற்கவும் பேசவும் சங்கோசம் உண்டு. ஆனால், சுற்றுமுற்றும் அவன் உட்கார இடமே இல்லாமல் நிறைந்திருந்ததையும் கண்ட பிறகு, அவளைக் கிளப்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவன் உணர்ந்தான்.
ஆமாம், அந்தக் கைக்குட்டையையும் தினத்தாளையும் கீழே தள்ளி விட்டு அதில் உட்கார, அவளுக்குத்தான் எத்தனை துணிச்சல்!
“எக்ஸ்க்யூஸ் மீ. அது, என் இடம்” என்றான் நஞ்சன் கூட்டிக் குழப்பிக் கொண்டு.
அவள், அவனொருவன் நிற்கிறான் என்பதைக் கவனிப்பவளாகவே இல்லை. தலை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
“கண்டக்டர், அது என் இடம்?” என்று வேறு வழியில்லாமல் குரலை எழுப்பினான் நஞ்சன்.
கணக்கைப் பார்த்துக் கொண்டே, ‘ரைட்’ சொல்ல வாயெடுத்த ‘கண்டக்டர்’ நஞ்சனை நிமிர்ந்து பார்த்தான். அலட்சியமாக, “இடமில்லை ஸார்! இறங்கி விடுங்கள்!” என்றான்.
“நான் டிக்கெட் வாங்கிவிட்டேன். முதலிலேயே இந்த இடத்தில் நான் என் சாமானை வைத்து ‘ரிஸர்வ்’ செய்து விட்டுப் போனேன். கீழே தள்ளி இருக்கிறார்கள்!” என்றான் நஞ்சன், ஆத்திரத்துடன் டிக்கெட்டைக் கையில் எடுத்துக் காட்டிய வண்ணம்.
“அட” கவனியாமல் கண்டக்டர் இந்தத் தகராறுக்கு உள்ளாகிவிட்டதை உணர்ந்தான். “இப்போது என்ன ஸார் செய்வது? நீங்கள் ஏன் இறங்கிப் போனீர்கள்? இறங்குங்கள். நம் பஸ் ஒன்று இதோ பின்னே வருகிறது” என்றான் சமாதானமாக.
நஞ்சனுக்கு முகம் சிவந்தது.
“இது என்ன ஐயா அக்கிரமம்? நான் இடம் போட்டு விட்டுப் போயிருக்கிறேன்” என்று குரோதத்துடன் நஞ்சன் ‘அவளை’ விழித்துப் பார்த்தான். அவள் ஜாடை அப்போது அவனுக்கு நெஞ்சில் சட்டென்று உறைத்தது; திடுக்கிட்டான்.
“அட, போட்டுவிட்டுப் போனாலென்ன? ‘லேடீஸ்’ என்று நீங்கள் தான் ஒதுங்கிப் போக வேண்டும். ஸ்டாண்டுக்கு வந்ததும் இறங்கி வேறு பஸ்ஸில் போங்கள். கூனூர்தானே?” என்றான் மீண்டும் கண்டக்டர்.
நஞ்சனின் ஆத்திரம் அடங்கி விடவில்லை. “பெண் பிள்ளைகளா இருந்தால் நியாயமில்லாமல் நடக்கலாமோ? அடுத்த பஸ் ஒரு மணி தாமதமாகப் போகும். என் இடத்தைக் காலி பண்ணச் சொல்லுங்கள்” என்றான் இளைஞனுக்கு உரிய ரோசத்துடன்.
அவள் விடுக்கென்று எழுந்து ஓரமாக ஒதுங்கினாள். “நீங்கள் உட்காரலாம், உங்கள் இடத்தில்” என்றாள் ஆங்கிலத்தில்.
வண்டிக்குள் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சற்று திகைத்த நஞ்சனுக்கு முகம் கறுத்து விட்டது. என்றாலும் ரோசத்துடன் ஆசனத்தில் அமர்ந்தவன், பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு நேராகப் பிடித்துக் கொண்டான். காரணமில்லாமலே அவனுக்குப் படபடப்பு உண்டாயிற்று.
கண்டக்டர் தருமசங்கட நிலையில் தவித்தான்.
வண்டிக்குள் கசமுசவென்ற கலகலப்பு வேறு.
“என்ன ஸார் இது?” என்று கண்டக்டர் முணுமுணுத்து விட்டு, இரட்டை ஆசனங்களில் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பெண்மணி ஒருத்தியை, “மடியிலே ஒரு குழந்தையைக் கொஞ்சம் வைக்கிறீங்களா அம்மா!” என்றான்.
அந்தப் பெண்மணிக்கு அதில் இஷ்டமில்லை.
இதற்குள் பின்புற ஆசனத்தில் இருந்த ஒருவர் எழுந்தார். “நீங்கள் உட்காருங்கள்” என்று கூறிவிட்டுக் கைப் பையுடன் கீழிறங்கி அடுத்த பஸ்ஸுக்குப் போனார்.
அவள் அந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள்.
நஞ்சனுக்கு யாரோ முகத்தில் அடித்தாற் போல் இருந்தது.
பஸ் கிளம்பிச் செல்கையிலே அவனுக்கு அத்தனை பேரும் தன்னையே பார்த்தாற் போல் இருந்தது. ஒரு பெண்ணுக்கு மரியாதை அளிக்கத் தவறி ஆத்திரமாக நடந்து கொண்டு விட்டதாக அவனுள் உறுத்தல் ஏற்பட்டது. ‘சந்தோஷமாகப் பிரயாணம் தொடர வேண்டிய சமயத்தில் உறுத்தலுக்கு இடமுண்டாகும்படி நடந்தேனே!’ என்று வருந்தினான். எவர் முகத்தையுமே பார்க்கப் பிடிக்காதவனாக, அவன் கூனூர் வரும் வரை வெளியே நோக்கிய வண்ணம் இருந்தான்.
கசமுசவென்று சத்தமும் இரைச்சலும் குழம்பிய கூனூர் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது.
நஞ்சன் கீழிறங்கி வருகையிலே, “என்ன அம்மா விஜயா, பரீட்சை நன்றாக எழுதியிருக்கிறாயா?” என்று குரல் கேட்டுத் திரும்பினான்.
அவனுக்கு அங்கு நிற்கவே மனம் கூசியது; ஆனால் அவனுடைய சிறிய கைப்பெட்டி மேலே இருந்ததே!
கிருஷ்ண கௌடர், கைத்தடியும் பாகையுமாக அருகில் வந்ததும், கிரேப் தாவணிக்காரி சிரிப்பும் குறுகுறுப்புமாகக் கீழே குதித்தாள். முன்புறம் விழுந்த தலைமயிர் ஒதுக்கிக் கொண்டு, “ஓ, நன்றாய் எழுதினேன் தாத்தா. நீங்கள் எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்று இருந்தேன்” என்றாள்.
“வராமல் இருப்பேனா? நேற்றே நீ வருகிறாய் என்று டிரைவரிடம் சொல்லி அனுப்பினேனே! இவ்வளவு தூரம் வந்த பெண்ணுக்கு ஊட்டி வரை வரவா தைரியம் இல்லை? இடம் சௌகரியமாக இருந்ததா?”
அவளுடைய நோக்கி, சற்று எட்ட மேலே பெட்டியைப் பார்ப்பவனாக நின்று கொண்டிருந்த நஞ்சன் மீது விழுந்தது. தாத்தாவும் நஞ்சனைத் திரும்பிப் பார்க்கத் தவறவில்லை.
“ஓ! நஞ்சன் இந்த வண்டியில்தான் வருகிறானா? ஏம்மா தெரியுமா நஞ்சனை உனக்கு?” என்று கேட்ட வண்ணம், அவர் அவன் பக்கம் திரும்பினார்.
அவள் முகத்தில் குறுநகை மிளிர்ந்தது. மரியாதை தெரியாத அவனுடைய பட்டிக்காட்டுத்தனத்தை எண்ணிக் குறுநகை செய்கிறாளோ? குடும்ப வைரியாகிய அவருக்கு அவனிடம் என்ன பேச்சோ? நஞ்சன் திரும்பிப் பார்க்கவில்லை.
“இப்போதான் ‘இன்டர்வ்யூ’ முடிந்து வருகிறாயா நஞ்சா?”
நஞ்சன் சற்றுக் காரம் நிறைந்த குரலில், “ஆமாம்” என்றான்.
“குமரியாற்றுத் திட்டத்தில் தானே அப்பாயின்ட்டுமென்ட்?”
“ஆமாம்.”
“விஜயா! நம் ஊர் ஜோகி கௌடர் மகன். தெரிந்து கொள். ரொம்பப் பெருமை நஞ்சா, உன்னால் நம் ஊருக்கே!” என்றார், விஜயாவையும் அவனையும் நோக்கியவராக.
காரணமில்லாமல் அவள் கலுக்கென்று சிரித்தாள். பட்டுக் குட்டையால் பவள இதழ்களை மூடிக் கொண்டாள்.
நஞ்சனுக்கோ, ஒரு சிரிப்புக் கூட எழும்பாத புழுக்கமாக இருந்தது. பெட்டி வந்துவிட்டது.
“வருகிறேன்” என்று முணுமுணுத்துவிட்டு அவன் திரும்பினான்.
ராமன் குமரியாற்றுத் திட்டத்தில் ஜீப் ஓட்டும் ‘டிரைவராக’ இருந்தான். முடிந்தால் கூனூரில் சந்திக்கிறேன் என்று அவன் புறப்படுகையிலேயே கூறியிருந்தான். ஆனால் கூட்டத்தில் அவனைக் காணவில்லை. அவன் குமரியாற்று அணைப்பக்கம் போகும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கையில் பெரிய நீலநிற வண்டி ஒன்று, கிருஷ்ண கௌடரையும் விஜயாவையும் கொண்டு சென்றது.
நஞ்சனுக்கு இன்னும் கிருஷ்ண கௌடர், கோவைக் கல்லூரியில் படிக்கும் பேரப் பெண்ணுடன் வலிய வந்து தன்னிடம் பேசிச் சென்ற விந்தை அதிர்ச்சி தீரவில்லை.
அவள் அவரிடம் அவனைப் பற்றி என்ன என்ன கூறி நகைப்பாளோ! எப்போதோ, ஐரோப்பியக் கான்வென்டின் நீல யூனிபாரத்திலே, அவளை அவன் பார்த்தான். எத்தனை உயரமாக வளர்ந்திருக்கிறாள்! அவர் எதற்காக அவனை அறிமுகம் செய்து வைத்தார்?
குமரியாற்றுப் பக்கம் போகும் சிறிய பஸ் முக்கி முனகிக் கொண்டு வந்து நின்றது. முண்டியடித்துக் கொண்டு அதில் ஏற, எத்தனை பேர்? அவன் பிறந்த மரகதமலை ஹட்டிப் பக்கம் இத்தனை மக்களா? அணைத் திட்டத்தை நிறைவேற்ற, பாரத தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் பல வண்ண மக்களல்லவோ அந்த மூலையைத் தேடி வந்திருக்கிறார்கள்?
நஞ்சன் ஓரத்து ஆசனம் ஒன்றுக்குத் தாவி ஏறினான்.
“எங்கே நஞ்சா?” மரகதமலை ஹட்டியில் அவனுடன் படித்த சின்னையன், கண்டக்டர், கேலியாகக் கேட்டான்.
நஞ்சன் சிரித்துக் கொண்டே, “கீழ்மலை” என்றான்.
வண்டி, நன்றாகச் செப்பனிடப்படாத புதுச்சாலையில் நகர்ந்த போது, நீலமலைக்குப் புதிதாக வரும் குடும்பத்தினரின் அறிமுகமும் அவர்களின் பேச்சுக்களும் அவனுக்குக் கலகலப்பையும் சிரிப்பையும் ஊட்டின.
“அவ்வளவும் டீ ஸார், டீ. அதோ பார்த்தாயா, மீனு? அதுதான் காபி போல் இருக்கிறது” என்று நடுத்தர வயசில், சட்டை, கோட்டு, கம்பளி, மப்ளர் முதலியவற்றால் மூடிக் கொண்டு பிரயாணம் செய்த குடும்பத் தலைவர் இடையிடையே துள்ளிக் குதித்தார்.
“மீனு, மீனு, என்ன?” என்று இடையிடையே மனைவியையும் அவர் விசாரித்தார்.
மனைவியாகிய அந்தப் பெண்மணி, காஞ்சீபுரம் பட்டுச் சேலையை இழுத்துப் போர்த்துக் கொண்டு, “எனக்குக் குளிரே தாங்கவில்லை. என்ன ஊர் இது?” என்று முணுமுணுத்தாள்.
சுட்டிப் பயல் ஒருவன், “ஏம்பா? அங்கே ரோட்டில் எல்லாம் புலி, சிறுத்தை வருமில்லையா?” என்று ஆவலுடன் விசாரித்தான்.
“ராத்திரியானால் கதவு திறக்கக் கூடாது. ரோட்டில் அப்போது வரும்” என்றார் தந்தை.
நஞ்சன் சிரிப்பை அடக்கிக் கொண்டான், சிரமப்பட்டு. அவர் உடனே அவனைப் பார்த்து, “ஏன் ஸார்? நீங்கள் ‘பிராஜக்ட்’ இடத்துக்குத்தானே போகிறீர்கள்?” என்று விசாரித்தான்.
நஞ்சனுக்கு முதல் முதலாகத் தானும் ஓர் இளம் இஞ்சினியர் என்று சொல்லிக் கொள்ள நேர்ந்த சந்தர்ப்பம் அது.
இந்த வருஷந்தான் படிப்பு முடித்தேன். இன்டர்வ்யூவுக்குப் போய்த் திரும்புகிறேன்” என்றான் மகிழ்ச்சியுடன்.
“ஓ, அப்போது நீங்களும் புதிதுதான் இந்த மலைக்கு, ஏன் ஸார்? இப்போதே இப்படிக் குளிருகிறதே; டிசம்பர் மாசத்தில் குழாய் ஜலம் ஐஸாகிவிடுமாமே! எப்படி இருப்பது?” என்றார்.
நஞ்சன் சிரிக்காமலே, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் இந்த மலையில் பிறந்து வளர்ந்தவன்” என்றான்.
அவர் கண்கள் அகன்றது; “ஓ! அப்படியா? நிசமாகவா ஸார்? நீங்கள் ஊட்டியிலே ‘ஸெட்டிலா’னவர்களா?”
“இல்லை, நான் மரகதமலை ஹட்டியிலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த மலைவாசியே. தாய் தகப்பன் இப்பொழுதும் கீழ் மலைப்பக்கம் இருக்கிறார்கள்” என்றான் குறுநகையுடன்.
“நிஜமாக, அப்படியா ஸார்? எனக்கு உங்களைப் பார்த்துப் பேசுவதே ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது ஸார். பிராஜக்டில் அக்கௌண்டென்டாக நான் வருகிறேன். பஞ்சாமிர்தம் என் பெயர். நான் ரொம்பப் பயந்து கொண்டு இருந்தேன் ஸார். கீழ்த் தேசத்துக் குளிரையே இவள் தாங்க மாட்டாள்” என்று ஆரம்பித்து, அவர் நஞ்சன் அறிந்திராத விவரங்களை எல்லாம் அவனிடம் கேட்டுத் திணற அடித்தார்.
“ஏன் ஸார், இங்கே இந்த வருஷம் குறிஞ்சிப்பூப் பூக்குமாமே, பூத்துவிட்டதா? எது குறிஞ்சிப் பூ?” என்றார்.
“எனக்குங்கூடத் தெரியாது, ஸார். நான் பிறந்து நினைவு தெரிந்து அந்தப் பூவைப் பார்த்ததில்லை.”
“அட! வருஷத்தைக் கூட உங்களவர்கள் குறிஞ்சியில் கணக்குப் பண்ணுவார்களாமே?”
“ஆமாம், அதெல்லாம் பெரியவர்களைக் கேட்டால் தெரியும். ‘கட்டேகிட’ என்று எங்கள் பாஷையில் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்” என்றான் நஞ்சன்.
கீழ்மலையில் பஸ் நிற்கும் இடம் வருவதற்குள் மிக நெருங்கியவராகப் பழகிய அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நஞ்சன் இறங்கினான்.
பஸ் நிற்கும் இடம் முன்போல் காட்டுப் பாதையாகவா இருந்தது? வழியெல்லாம் பிளவுபட்டுப் பாளம் பாளமாகப் பெயர்ந்த பாறைகள். பாளம் பாளமாகப் பெயர்ந்த பாறைகளை உடைக்கும் வளைக்கரங்கள் ஒன்றா, இரண்டா? காட்டுச் சோலைக்குள்ளே, பல்லாயிரக்கணக்கான மனித சக்திகள் இயங்கும் ஆரவாரம் அவனுள்ளத்திலே புதுச் சிலிர்ப்பை உண்டு பண்ணியது.
பஸ்ஸிலிருந்து நஞ்சன் இறங்கியதுமே, டீக்கடையின் அருகிலிருந்து சிரித்த முகத்துடன் ராமன் அவனை நோக்கி வந்தான். அவனை ஆதரவாக விசாரித்துப் பெட்டியைக் கையில் வாங்கிக் கொண்டான். ஐயன் எங்கே? கல்லூரி விட்டு வரும்போதெல்லாங் கூட, பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்பாரே!
அவன் கண்கள் ஐயனைத் தேடுமுன், மூக்கு மலை ஹட்டிக்குச் செல்லும் பாதையிலே அம்மை நிற்பதைக் கண்டு விட்டான். அவன் அம்மையின் பக்கம் நடையை எட்டிப் போட்டான்.
பாருவுக்குப் பேச்சு எழவில்லை. பனித்த பார்வையில், அவள் நஞ்சன், அவள் பையன், அவள் வாழ்வு, உயர்ந்து வளர்ந்தவனாக, ஒளி தவழும் கண்களை உடையவனாக கனவின் நிறைவாக நின்றான்!
நீண்ட காலக் கனவொன்றை நனவாக்கியவனாய் வந்த நஞ்சனை வரவேற்க, ஐயன் ஏனோ வரவில்லை! ஒரு வேளை உடல் நலம் இல்லையோ?
“ஐயன் சுகந்தானே அம்மா?” என்று அவன் கேட்டான்.
“சுகந்தான். வருகிறேன் என்றார். நேற்றே மரகத மலை ஹட்டிக்குப் போனார். இதோ வந்து விட்டார் பார்!”
நஞ்சன் தந்தை வந்ததைப் பார்த்தான். முகத்தில் ஒளி எங்கே? “இன்னும் ஆறே மாதத்தில் நஞ்சன் இன்ஜினீயராகி வருவான்!” என்று ஆவல் துள்ளும் முகத்துடன் பெருமையாக அக்கம் பக்கங்களில் சொல்லிக் கொண்டிருந்த ஐயன் ஏன் கறுத்து வேதனையில் தோய்ந்தவராகக் காணப்படுகிறார்?
“வெயிலா அப்பா? உடம்பு சரியில்லையா?” என்றான் துணுக்குற்று.
“வெயிலும் மழையும் படாத சீமானா உன் ஐயன்?” என்றார் ஜோகி. அந்தக் குரலில் தோய்ந்திருந்த விரக்தி நஞ்சனைத் துணுக்குறச் செய்தது. ஒரு தடவை கூட அது போல அவர் பேசி அவன் கேட்டிருக்கவில்லையே! ஐம்பதும் நூறுமாக எடுத்துக் கொடுத்த அலுப்போ?
ராமன் எப்படி தன் படிப்புச் செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றியிருப்பான்? பெரியப்பா தம் செல்வத்தை மட்டுமா அந்தத் தேர்தலுக்கு இரையாக்கினார்? எதிர்கால நம்பிக்கையையும் இழந்து அல்லவோ போதைப் பொருளில் கசப்பை மறைத்துக் கொண்டு இருந்தார்? லிங்கன், அணைக்காலனிக்குப் பால் விநியோகக் குத்தகை எடுத்துப் பெருகிவரும் மக்களுக்குப் பால் வழங்கும் வியாபாரத்தில் இறங்கியிருந்தான். அடுத்தவன் தருமன், அணைத் திட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்தான். மூன்றாமவன் மரகதமலை ஹட்டியில் புதிதாக எழுப்பியுள்ள ‘டூரிங்’ சினிமாவில் படம் காட்டப் படித்திருந்தான்.
நஞ்சன் அந்தக் குடும்ப நிலை முழுவதையும் அறிவான். அங்கிருந்து உதவி வரவே இடம் இல்லை. இங்கும், மாமன் இறந்தும், ஸித்தனுக்குப் பணம் அனுப்பி வருகிறார் அவன் தந்தை. எனவே, ஐயன் நிறையக் கடன் வாங்கியிருப்பாரோ? பூமியை ஈடுகாட்டியிருப்பாரோ? படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் சிந்தித்தே பார்க்கவில்லையே!
ஒற்றையடித் தடம் மாறி, மூக்குமலை வளைந்து, வண்டிப் பாதை வந்திருந்ததை அப்போதுதான் நஞ்சன் கவனித்தான்.
“ஆமாம், ஜீப் போகுமே; நம் மலைக்கு அடியில் குகை போகுமாம் தண்ணீர் போக!” என்றான் ராமன்.
“என்னைக் கூடக் குகைக்குடையும் பகுதியில் தான் போடுவார்களாம் அம்மா. நம் வீட்டில் கூட விளக்குப் போடலாம். பித்தானைத் தட்டினால் விளக்கு வரும். தண்ணீரை அணைக்கட்டித் தேக்கி, குகை வழியாகக் கொண்டு வந்து, பெரிய பெரிய குழாய்களில் பாய்ச்சி, பெரிய இயந்திரங்களைச் செய்யவும், சமைக்கவும், குளிர் காயவும் அந்தச் சக்தி நமக்கு உதவும். நிறைய நிறையப் பேருக்கு வேலை கிடைக்கும்; சாப்பாடும் துணியும் கிடைக்கும்.”
அம்மையிடம் தன்னை மீறிய உற்சாகத்துடன் நஞ்சன் விளக்கிக் கொண்டே போனான். என்றுமே, தான் கண்ட, கேட்ட புதுமைகள் நாகரிகங்கள் எல்லாவற்றையும் அவளிடம் வந்து சொல்ல அவன் தவறியதே இல்லை.
ஆனால் பாரு அவன் கூறியவற்றை எல்லாம் ரசித்தாளா? அந்த மலையில் வந்துள்ள மாபெரும் புரட்சியில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருந்ததா?
அதைத் தனித்துக் கூற முடியாது. அவளுடைய உலகின் ஆனந்தப் புரட்சி நஞ்சன். நாளை அந்த மலையிலே அவன் கூறிய செல்வங்களெல்லாம் பெருகினால், அவளைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா, அவளுடைய மகன். அவனுடைய குரலில் ஆனந்த ஒளியில் அவன் இருதயம் நிறைந்து குளிர்ந்து விட்ட அவன் எது பேசினாலும் அவளுக்கு உகந்ததே.
ஆனால் ஜோகியின் நெஞ்சிலிருந்து வெடித்து வந்தாற் போல் சொற்கள் வந்தன. “நிறைய நிறையப் பேருக்குச் சாப்பாடும் துணியும் கிடைக்குமா? இருக்கிறவர்கள் சாப்பாட்டில் மண்ணைப் போடுவதும், உங்கள் படிப்பு உங்களைப் போல் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க, இம்மாதிரி கல்லையும் மண்ணையும் துளைத்து, பூமித்தாயை மானபங்கம் செய்கிறார்கள். பணம் பணம் என்று மக்கள் பேயாய் அலைகிறார்கள். பணமும் மண்ணும் ஒன்றாகுமா?”
நஞ்சன் அதிர்ந்தவனாக நின்றான்.
“இந்த மலையெல்லாம் ஒளி விளக்குகள் திகழும். நான் சிறு பையனாக இருக்கையிலே கனவு கண்டேன்” என்று தம்மை மறந்து பேசிய ஐயனா இதைச் சொல்கிறார்? அவர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?
“அப்பா!” என்றான் பதற்றமாக.
பாரு எந்தப் பேச்சையும் கவனிக்கவில்லை. அவற்றைச் செவி வாங்க, இனம் பிரிக்க, அவள் புலன்கள் வசத்தில் இல்லை.
ஜோகி உடனே சமாளித்தவர் போல், “ஒன்றும் இல்லை? வந்ததும் வராததுமாக உன்னிடம் பேசியது சரியில்லை” என்றார்.
அந்த மூக்குமலை ஹட்டியே, படித்துவிட்டு அங்கேயே உத்தியோகம் ஏற்க வரும் நஞ்சனை வரவேற்கக் கூடிவிட்டது.
பாருவுக்கு, அன்றொரு நாள் கிருஷ்ணன் குதிரை மேலேறி மணிக்கல்லட்டி வந்ததும், ஊரே திரண்டு அவனைக் காண நின்றதும் நினைவுக்கு வந்தன. அன்று வெள்ளி முண்டணிந்த பெண்கள். இன்றோ, வண்ணச் சேலைகளும் தாவணிகளும் அணிந்த பெண்கள். “நல்லாயிருக்கிறாயா நஞ்சா? இங்கே தான் வேலையா?” என்றெல்லாம் அன்பு விசாரணைகள்.
நஞ்சன் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கையிலே, வண்ணத் தாவணி அணிந்த பெண் உள்ளே ஓடுவது தெரிந்தது. அவன் உடனே புரிந்து கொண்டு விட்டான்.
“அம்மா, சொல்லவில்லையே நீங்கள்? தேவகி என்ன என்னைக் கண்டு விட்டு ஓடுகிறாய்?” என்று சிரித்துக் கொண்டே அவன் பெட்டியைக் கீழே வைத்தான்.
தேவகி நாணம் கவிந்த புன்னகையுடன் தலைகுனிய வந்து நின்றாள். கருகருவென்று அடர்ந்த தலைமயிர்! தந்தையைப் போல் தேவகியும் குட்டை, உடலுங்கூட, செழுமையான வளர்ச்சியைக் காட்டும் கட்டு வாய்ந்தது. பூப்போட்ட பாவாடை; வாயல் தாவணி; முழங்கை வரையிலும் நீலச்சோளி; கழுத்தில் கருகமணி மாலை; கருஞ்சிவப்பு நிறம்; பெரிய கண்கள்.
“ரே தேவகி, என்ன கணக்குப் பரீட்சை எப்படி இருந்தது? பேசமாட்டேன் என்கிறாய், திடீரென்று!” என்று அவன் அவளை வம்புக்கு இழுத்தான்.
நாணம் கவ்வ, அவள் உள்ளே ஓடிய போது அவனுக்கு அன்றைக் காலை நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அவள் தாத்தாவிடம் அவன் தன்மையைக் குறித்துப் பரிகசிப்பாளோ?
பாரு அவன் நின்றது கண்டு சிரித்தாள்.
“இரு, ராமா, நஞ்சா, காபி சாப்பிடலாம்” என்று சொல்லி, உள்ளே சென்று தயாராக அடுப்பில் கொதித்த நீரில் காபி போட்டு எடுத்து வந்தாள்.
“தேவகி மட்டுந்தான் வந்திருக்கிறாளா? அத்தை, யாரும் வரவில்லை?” என்றான்.
“தேவகியைத்தான் வரச்சொன்னேன், பத்தாவது பரீட்சை எழுதி விட்டாள் நஞ்சா, தேவகி!” என்றாள் பாரு பெருமை பொங்க.
“அதுதான் கணக்குப் பரீட்சை எப்படி என்று கேட்டேன். அத்தான், நம் தேவகிக்கு இனி ஒரு எம்.ஏ. மாப்பிள்ளை தேடவேண்டியதுதான்!” என்றான் நஞ்சன் உற்சாகமாக.
ராமன் பதிலே பேசாமல் முறுவல் பூக்கையில், பாரு உள்ளிருந்து ஓடி வந்தாள்.
“அதென்ன நஞ்சா, அப்படிச் சொல்லிவிட்டாய்? தேவகி உனக்காகத்தான் படித்தாள். படித்த அத்தானுக்கு அவள் படிக்காத முட்டாளாக வரக்கூடாதே!”
நஞ்சன் விழிகள் நிலைக்க அம்மையை நோக்கினான். உடலை ஊடுருவ, ஒரு சிலிர்ப்பு ஓடியது. ராமன் சிரத்தை கொண்டு அவன் படிப்பை ஏற்றது இதற்குத்தானா?
“என்ன அம்மா, நீங்களே முடிவு கட்டிவிட்டீர்கள்? படித்த பெண், அண்ணனைப் போல் வீட்டில் பழகிய ஆளையா கட்டுவாள்?”
நஞ்சன் சிரித்த வண்ணந்தான் அதை மொழிந்தான். ஆனால் பாருவுக்கு அது உகந்ததாகப் படவில்லை.
“நீதானே முறைப் பையன்? அன்றிலிருந்து ராமன் நினைத்த மாப்பிள்ளை; இல்லையா ராமா?”
நஞ்சனுக்குப் பேச்சை நீட்ட அப்போது விருப்பம் இல்லை; “அது சரி” என்று முடித்து விட்டான்.
சற்றைக்கெல்லாம் சாப்பிட்ட பிறகு, ஜோகியும் ராமனும் வெளியேறி விட்டனர்.
நஞ்சன் சற்றே படுத்தா. படுக்கை கொள்ளவில்லை. ஏதோ நினைத்துக் கொண்டவனாக, அந்தப்புர மனை அறையில் தன் புத்தகப் பெட்டியை, துணிமணிகள் வைத்துள்ள பெட்டியைத் திறந்து குடையலானான்.
கல்லூரியில் அவன் படித்த ஒவ்வோர் ஆண்டிலும் சக மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தமிழ் மன்றப் பாரதி பாடல் போட்டியில் பெற்ற பரிசுப் புத்தகம், அயலூர் மாணவ நண்பர் ஒருவன் அன்பளிப்பாகத் தந்த பேனா எல்லாவற்றையும் அவன் அந்த அந்தச் சம்பவங்களுக்கு உரிய நினைவுகளோடு அனுபவித்துப் பார்த்துக் கீழே கடை பரப்பினான். கடைசியில் பெட்டிக்கு அடியில் இருந்த பழுப்பு நிறக் காகிதத்தை எடுத்துத் தட்டினான். அடியில், மடிந்த நீலநிற ‘ஸாடின்’ ரிப்பன். அது அப்படியே இருந்தது.
எத்தனை நாட்களாக அந்த நாடா அதனுள் இருந்திருக்கிறது! கையில், அவன் அன்றொரு நாள் தோட்டத்தில் செய்து கொண்ட உறுதியை நினைத்துப் பார்த்தவனாக எடுத்தான்.
அவன் உறுதியை நிறைவேற்றிக் கொண்டு விட்டான். அந்த நாடாவுக்குச் சொந்தக்காரி எத்தனை அழகிய பூங்கொடியாக வளர்ந்து விட்டாள்! மரியாதை தெரியாத அவன், ‘அது என் இடம்’ என்றானே அழுத்தம் திருத்தமாக? அசட்டுத்தனம்! நாகரிகம் அறியாத ஹட்டியில் வளர்ந்தவன் தானே அவன்? முரட்டு வேலைகளுக்குரிய கல்வியைக் கற்றிருக்கிறான்; ஐரோப்பிய நாகரிகத்தில் தோய்ந்து பிறரிடம் மரியாதையுடன் பேசவும் நடக்கவும் கற்றவன் மட்டும் அல்லன், அவள் அதையே பழக்கமாகக் கொண்டவள். உண்மையில் அந்தக் கண்டக்டர் கைக்குட்டையைக் கீழே தள்ளிவிட்டு, அவளுக்கு இடம் கொடுத்திருப்பான்; முட்டாள். அவனுடைய முட்டாள்தனந்தான் நஞ்சனை அநாகரிகமாக நடக்க வழி காட்டிவிட்டது. அவன் அநாகரிகமாக என் இடம் என்று வழக்குக் கூறிய போது அவள் எழுந்து நின்றாள்.
சே! அந்தக் கணமே நஞ்சனுக்கு அவளிடம் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு, தன் நாகரிகப் பண்பை அவளுக்குத் தெரிவித்துக் கொள்ளாது போனால் மனம் அமைதி கொள்ளாது போல் பரபரப்பு உண்டாயிற்று.
ஆம், ஒரு நாளும் பேசாத பரம விரோதியான கிருஷ்ண கௌடர், அன்று அவனிடம் நெடுநாள் பழகின சகஜபாவத்துடன் எதற்கு விசாரித்தார்? ‘ஜோகி கௌடர் மகன்’ என்று அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த காரணம் என்ன? விரோதக்காரர் என்று சற்றே பொறாமையுடன் இருந்து வந்த அவனுக்கு அப்போது ஏன் ஆத்திரம் உண்டாகவில்லை?
ஏற்கெனவே மனநிலை சரியாக இல்லாத வேளையில், அது ஐயனுக்குத் தெரிந்தால்?
ஐயனை வருத்தும் வேதனை என்ன என்பது அவனுக்குத் தெரியவில்லையே! இரண்டாயிரம் மூவாயிரம் என்று கடன் பட்டிருந்தால் தான் என்ன? அவன் மாசம் மாசம் கடனடைக்கத் தகுதி பெற்று விட்டானே! அம்மையிடம் இரகசியமாக விவரம் அறிய வேண்டும் என்று நினைக்கையிலே, நஞ்சன் முன் பாருவே, வேர்க் கடலை வறுத்து வெல்லம் கூட்டிச் செய்த உருண்டையுடன் வந்தாள். அவன் கையிலுள்ள பட்டு நாடாவைக் கண்டாள்.
“ரே நஞ்சா? நாடா தேவகிக்கு வாங்கி வந்தாயா? என்னிடம் அண்ணன், தம்பி என்று சொன்னதெல்லாம் விளையாட்டுத் தானே?” என்றாள் கண்களில் ஒளி துள்ள.
நஞ்சன் குளத்தில் முழுகி எழுந்தாற் போல் சமாளித்துக் கொண்டான். “இது புது நாடா என்றா நினைக்கிறீர்கள்! பல வருஷத்துப் பழைய நாடா! இதோ பாருங்கள் அம்மா, இது யாருடையதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்றான் விளையாட்டாகக் கேட்பவனாக.
நஞ்சன் துடிக்கும் நெஞ்சுடன் அந்த இரகசியத்தை விண்டு விட இருந்தான். பாரு, அவன் வாயிலிருந்து இன்னதுதான் வரப்போகிறதென்பதை அறியாமலே சிரித்தாள்.
“யாருடையது? உன் தங்கைகளுடையதா? பெரியப்பன் வீட்டில் எடுத்தாயா?”
“இல்லையம்மா, இல்லை!”
“பின்னே? ஓ! தேவகி வைத்துப் பின்னியிருந்தாளோ?” அவள் கண்களில் குறும்பும் கேலியும் மின்னின.
“இல்லவே இல்லை, அம்மா. நீங்கள் மட்டும் இதை சொல்லிவிட்டால், உங்களுக்கு எது வேண்டுமானாலும் பரிசு கொடுப்பேன்.”
பாரு இதற்கும் வாய்விட்டுச் சிரித்தாள்.
“நீயே எனக்குப் பெரிய பரிசாக இருக்கிறாயே! இனி எனக்கு வேறு என்ன பரிசு வேண்டும் நஞ்சா?”
“வேறு ஒன்றுமே வேண்டாம்?”
“நஞ்சன் தேவகியைக் கல்யாணம் கட்டிக் கொள்ள வேண்டும். அம்மை மடியிலே...”
அவனுடைய கண்களில் இருந்த ஒளி திடீரென்று நிழலுள் மறைந்தது; “இப்போதே என்ன அம்மா கல்யாணம்? அம்மா, ஐயன் என் படிப்புக்காக எத்தனை ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்? யாரிடம் வாங்கியிருக்கிறார்?”
“கடனா? கடன் ஏதும் இல்லை, நஞ்சா. உன்னை ராமன் படிக்க வைக்கிறேன் என்றான். உன் அம்மைக்காக ஏற்றுக் கொண்டான். அவன் மகளை நீ கட்டிக் கொள்வாய். இந்த நாடா, எனக்குத் தெரியும், தேவகியினுடையது தானே?”
அவள் ஆசையில் மண்ணைத் தள்ளும் துணிவு நஞ்சனுக்கு வரவில்லை. ராமன் உதவுவதாகச் சொன்னதற்கு இப்போது புதுப் பொருள் அவன் கண்டான்.
அவன் நெஞ்சிலிருந்து நெடுமூச்சு வந்தது. தலையை வெறுமே அசைத்து விட்டுக் கடலை உருண்டையில் கவனம் செலுத்த லானான்.
வேனிற்காலத்தின் வருகையை அறிவித்த அந்த இளங்காற்று பகல் முழுவதும் நின்ற குகையை விட்டு வெளியே வந்த நஞ்சனுக்கு மிகுந்த சுகமாக இருந்தது. அவன் வேலையை ஒப்புக் கொண்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. குதிரை லாட வடிவில், மலைப்பாறையில் குடையப் பெற்றிருந்த குகையை அவன் வெளியே நின்று பார்த்தான். உண்மையிலே, அந்த மாபெரும் சாதனையைச் செய்யும் பாறைகளை வெளியே கொண்டு வருபவராய், சுமந்து கொண்டு வெளியே கொட்டுபவராய், சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இரவு முறைக்காரர்கள். பகல் முறைத் தொழிலாளிகள் மாலை ஐந்து மணிக்கே போய்விடுவார்கள். சடபட சடபட சடபடவென்று பாறையைத் துளைக்கும் யந்திரங்களும், கல்லைப் பொடித்துக் குடைந்து செல்லும் யந்திரங்களும், சில நூறு அடிகள் சென்றிருந்த அந்தக் குகைக் கால்வாயில், நாடி நரம்புகளை எல்லாம் அதிர வைக்கும் பேரிரைச்சல் செய்து கொண்டிருந்தன. நாளின் எட்டு மணி நேரம் நிற்க, நஞ்சனுக்கு முதல் இரண்டு நாட்கள் அதிர்ச்சியைக் கொடுப்பனவாக இருந்தன.
கண்களுக்கு இனம் தெரியாமல் முகமூடியணிந்த தொழிலாளிகளும், பேச்சுப் புரியாத பயங்கர ஓசையும் அவன் திண்மையைச் சோதிக்கப் புகுந்துவிட்டாற் போன்ற சலனத்தை ஏற்படுத்தின. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பழக்கமாகிவிட்டது. வெளியே வந்து நின்றவன், கீழே சுற்றிலும் தெரிந்த குன்றுகளையும், வீடுகளையும், வாரி இறைத்தாற் போல் பலநூறு ஆயிரங்களாகப் பெருகியிருந்த விளங்குகளையும், கறுத்த மேனியாய்ப் பளபளப்புடன் வெகு தூரத்தில் நெளிந்து ஓடிய அருவியையும் பார்த்தான். ஆங்காங்கு இன்னும் மீதியுள்ள சரிவுகளில் கர்ச்சுக் கூர்ச்சான், ஸில்வர் ஓக் மரங்கள், தேயிலைச் செடிகள், புகைச்சிம்னி தெரியும் தேயிலைத் தொழிற்சாலை எல்லாவற்றையும் பார்க்க, ஒரு புது உலகமே கவினுற விரிந்து கிடந்தாற் போல் தோன்றியது அவனுக்கு.
பெருகி வரும் மனித இனம் எத்தனை பாடுபட்டு வாழ வேண்டி இருக்கிறது! மனிதன் ஆற்றலினும் அறிவிலும் எவ்வளவு வல்லவன் ஆகிவிட்டான்! மலையைக் கரைத்து, மடுவைச் சமைத்து, ஆற்றைத் தேக்கி, இயற்கையின் சக்தியைத் தன் ஆளுகைக்கு உள்ளாக்கிக் கொண்டு மனிதன் முன்னேறுகிறான்!
சிலிர்ப்போடிய உடலை அவன் குலுக்கிக் கொண்டான். அவனைப் போல் இளைஞனான இரவு முறைக்காரன் வந்து விட்டான். பகலில் துளையிட்ட பாறைகளில், இரவில் வத்திகளையும் வெடிகளையும் செருகி இன்னும் பிளப்பார்கள். பிளந்த பாறைகளை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் குடைவார்கள்.
முறைக்காரன் வந்ததும், நஞ்சனையும் அவன் அதிகாரியையும் சுமந்து ஜீப் வண்டி, மரகதமலை ஹட்டிச் சரிவிலிருந்து, விரிந்து பரந்திருந்த அணைக்கட்டுக் காலனியில் அலுவலகத்துக்கு முன் கொண்டு விட்டது.
நஞ்சன் தேநீர் அருந்த ‘கான்டீனு’க்கு வருகையில்...
அங்கே நின்றவன் ஐயன் அல்லனோ? அலுவலகத்தின் முன் அவர் எதற்கு வந்து நிற்கிறார்? அவனைக் காணவோ? புருவங்கள் நெருங்க, நஞ்சன் அவர் பின்னே சென்று, அவர் தோளைத் தொட்டான். “அப்பா எங்கே வந்தீர்கள்?”
ஜோகி திரும்பிப் பார்த்தார். நஞ்சன் அவரைக் கண்டு எழும்பிய வேதனையை அடக்கிக் கொண்டான்.
அவர் முகம் கறுத்து, மாறிவிடக் காரணம் என்ன? படித்த மகன் தன்னை அலட்சியம் செய்கிறான் என்று நினைக்கிறாரோ? அவர் கையில் நீண்டதொரு பழுப்பு நிறக் காகித உறை இருந்தது. அவர் நின்ற இடம் அணைத் திட்டத்திற்கான உதவிக் கலெக்டரின் அலுவலகம் என்பதையும் அவன் உணர்ந்தான். அவன் மனத்தில் மின்னல் போல் உண்மை பளிச்சிட்டது.
“எங்கேயப்பா வந்தீர்கள்? யாரைப் பார்க்க வந்தீர்கள்?”
“நீ போ, நான் கலெக்டரைப் பார்க்க வந்தேன்” என்று அவர் குரலில் அளவிட இயலாத சோகம் மண்டியிருந்தது.
“நான் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லுகிறேனே! என்னிடம் விவரம் சொல்லக் கூடாதா அப்பா?”
அப்போது ‘டவாலி’ச் சேவகன் ஒருவன் ஜோகியிடம் வந்தான். “என்ன பெரியவரே? கலெக்டர் இன்று யாரையும் பார்க்க மாட்டார் என்று எத்தனை தடவை சொல்வது? நாளைக்கு வாருங்கள்; போங்கள்” என்றான்.
தந்தையின் விழிக்கடையில் நீர் மல்குவதை நஞ்சன் கண்டான். அவர் ஏதும் பேசவில்லை. நேராக மூக்குமலைப் பக்கம் நடக்கலானார். பொதுச் சாலையில் பேச விரும்பாத நஞ்சனும், பல பல எண்ணங்களுடன் அவர் பின் நடந்தான்.
வீட்டில் பாரு மா அரைத்துக் கொண்டிருந்தாள், ஆட்டுரலில். வெளியே சென்று பலவிதமான பண்டங்கள் உண்டு பழகிய மகனுக்கு, அவள் காலைப் பலகாரத்துக்கு இட்டிலி செய்யக் கற்றிருந்தாள். குட்டைக் கல்லில் அவள் உளுந்தரைத்த ஓசையில் அவள் உற்சாகமும் பொங்கி வந்தது. தந்தையை வாட்டும் சோகம் தாய்க்குத் தெரிந்திராது என்று எண்ணினான் நஞ்சன்.
ஜோட்டையும் உடுப்புகளையும் மாற்றிக் கொண்ட அவன் கைகால் முகம் கழுவிக் கொண்டு, இடிந்து போய், மூலையுடன் அமர்ந்திருந்த தந்தையின் முன் வந்தான்.
“அப்பா, உங்கள் பூமி அணைத்திட்டத்தில் போகிறதா?” என்றான். ஜோகி நிமிர்ந்தார்.
‘எவ்வளவு சாதாரணமாகக் கேட்கிறான்? உங்கள் பூமி! மண்ணை மறந்த துரோகி! பணத்துக்கு மனத்தைப் பறிகொடுத்தவனே! உணர்ச்சியே இல்லாமல் கேட்கிறாயேடா; இந்த மண் தான் இத்தனை நாட்கள், காலம் காலமாய்ச் சோறு போடுவதென்று தெரியுமாடா உனக்கு?’
அவருடைய கொதித்த இருதயத்திலிருந்து அந்த வாக்கியங்கல் வெடித்து வந்தன. ஆனால் அவர் நெஞ்சுக்கு அழுந்தத் தாழ் போடுபவராக, அந்தப் பழுப்பு நிற உறையை அவனிடம் தூக்கி எறிந்தார்.
நஞ்சன் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பாரு தேநீரும் மலைப் பழங்களும் கொண்டு வந்தாள். அவனையும் ஜோகியையும் மாறி மாறி, புருவங்கள் நெருங்க, கேள்விக் குறியுடன் நோக்கினாள்.
அணைக்குள் முழுகும் பகுதிகளுக்கு உட்பட்டதல்ல, ஜோகி பயிரிட்டு வந்த மாமனின் பூமி; ஆனால், அந்தப் பக்கம் அணையைச் சுற்றிப் பெரிய சாலை வர இருக்கிறது; அணைத்திட்டத்தின் சில முக்கியமான பிராந்தியத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுகிறது என்று ஜோகியின் விளைநிலங்களும் அதில் உட்படுகின்றன என்றும் சில நாட்களுக்கு முன்பே வந்த கடிதம் அது.
இதற்கு ஏன் தந்தை துயரப்பட வேண்டும்?
“பூமி போனால் என்னப்பா? சர்க்கார் நம் நிலங்களை வெறுமே எடுத்துக் கொள்ள மாட்டார்களே? கணிசமான பணம் கொடுத்துத்தானே எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?” என்றான் நஞ்சன்.
பாருவுக்கு விஷயம் ஒருவாறு புரிய, இடி விழுந்தாற் போல, “நம் பூமியா?” என்றாள்.
“ஆமாம், நம் சோற்றைப் பிடுங்கிக் கொண்டு பணம் தருகிறார்களாம். இந்தப் பணம் யாருக்கு வேண்டும்?” என்றார். “மரகத மலையிலுள்ள மண்ணையும் காலனி கட்டப் பறித்துக் கொண்டார்கள். ரங்கம்மையின் குடும்பம் தவிக்கிறது. நம் சோற்றிலே கைவைக்க, பாம்பாக இங்கேயும் வருகிறார்களே! இதை எப்படிப் பொறுப்போம்? இந்த அணைக்கட்டும் விளக்கும் யாருக்கு வேண்டும்? நம் சாப்பாட்டைப் பறித்து எவர் எவருக்கெல்லாமோ கொடுக்க, கவர்னராம், கலெக்டராம்!”
மண்ணைத் தவிர வேறு ஒன்றையும் அறிந்திராத முதியவரின் உள்ளத்திலிருந்து, சொல்லொணாத ஆற்றாமை பீறி வந்தது.
“நஞ்சா, நீ சொல்லு, அந்தக் கலெக்டர் துரையிடம்? பூமியில்லாமல் நாம் என்ன செய்வோம்? விளைவு தரும் மண்ணை எப்படிக் கொடுப்போம்? என்றாள் அம்மையான பேதை.
நஞ்சனுக்கு இரண்டொரு நிமிஷங்கள் ஏதும் தோன்றவில்லை. மலையைக் குடைந்து கால்வாய்கள் உண்டாக்கலாம். மண்ணோடு ஒன்றிப் போன மனங்களைப் பிரிக்க முடியாது என்பதை அப்போதுதான் உணர்ந்தாற் போல் அவன் செயலற்று நின்றான்.
“அந்தப் படுபாவிப் பயல் கிருஷ்ணன் இதிலும் சூழ்ச்சி செய்திருப்பான். அவன் மண்ணில் நான்கு ஏக்கர் கூட முழுசாகப் போகவில்லை. எங்கிருந்தோ எங்கோ நான் ஓடி வந்தேன். மலைவிட்டு மலை தாவி, என் மண்ணையும் பிடுங்குகிறார்களே!”
சாந்தத்தின் உருவாக அத்தனை நாட்கள் காட்சி தந்த நஞ்சனின் தந்தை, வெறிபிடித்தவர் ஆகிவிட்டாரா என்ன? ஆத்திரக்காரர் ஆகி, அறிவு கலங்கியவர் ஆகிவிட்டாரா?
“அப்பா!” என்று நஞ்சன் பதறினான்.
“அண்ணன் வாழ வேண்டும், மக்கள், மனிதர் வாழ வேண்டும், ஊர் வாழ வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்ட நீங்களா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? ஊரும் உலகும் நன்மை அடைய, நீங்கள் விலைபெற்றுக் கொண்டுதானே பூமியைக் கொடுக்கப் போகிறீர்கள்? கோடி கோடியாய்ப் பணம் செலவழித்து மக்கள் சக்தியைத் திரட்டிச் செய்யும் இது, பெரிய சாதனை. அறியாத்தனமாகப் பேசாதீர்கள் அப்பா!”
“அறியாத்தனம்! நேற்றுப் பிறந்த நீ, என்னை அறியாத்தனம் என்று இகழ்கிறாய். ஏய்! அந்தப் படிப்புச் சொல்லித் தந்த புத்தியாடா இது? சோறும் துணியும் தந்த மண்ணடா. இந்த உடம்பின் இரத்தமெல்லாம் இந்த மண்ணால் ஆனதடா. பெற்ற தாய்! உனக்குத் தெரியுமாடா பெற்ற தாயின் அருமை? பாவிப் பயலே! என் நெஞ்சு எரிகிறது! எரிமலையாய்ப் பொங்குகிறது! அந்தப் படிப்புப் படித்ததுமே பூமியைப் பணத்துக்குக் கொடு என்று சொல்கிறாயே! காகித நோட்டும் அம்மையும் ஒன்றாகி விட முடியுமாடா? அம்மைக்கு விலையா?”
உடல் துடிக்க, உதடுகள் துடிக்க, பொங்கிச் சீறி வந்த அந்த மண் பாசத்தை உணர்ந்த நஞ்சன் அரண்டு நின்றான். காலமெல்லாம் ஊறிய தொடர்பை, கற்றை நோட்டுக்கள் கொண்டு கத்தரிக்க முடியுமோ?
“உனக்குத் தெரியுமாடா பெற்ற தாயின் அருமை?” என்று அவர் புகன்ற சொல், பாருவின் நெஞ்சில் ஈட்டு எனப் பாய்ந்து விட்டது. பெற்றவள் இல்லை என்பதை, ஒரே வாக்கியத்தில் பழுக்கக் காய்ச்சிய வேலெனப் பாய்ச்சி விட்டாரே! என் மகனை இரவல் கொடுத்தேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே!
துடிதுடித்தது பாருவின் உள்ளம். “நஞ்சனை இப்படியெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்? அவனுக்கு அம்மை நான் இல்லையா!” என்றாள்.
மண் இல்லை என்ற பெருந்துயர்க் கடலில் மூழ்கி விட்ட ஜோகியின் உள்ளத்திலே, அப்பொழுது தோன்றக் கூடாத எண்ணங்களெல்லாம் தோன்றின. அவர் தம் நிலையையே மறந்துவிட்டார்.
“அவனுக்கு உண்மையான அம்மையாக நீ இருந்திருந்தால், இப்படிப் பெற்ற தாய்க்குத் துரோகம் நினைக்கும் படிப்பை படிக்க வைத்திருக்க மாட்டாய். உயிரைக் கொடுத்து, இந்த மண்ணின் விளைவில் பணம் கண்டு, போதாமல் அவனையும் இவனையும் கெஞ்சிப் படிக்க வைத்தாயே! படித்தால் நம்மை விட்டு வெகுதூரம் போய்விடுவான் என்று நான் அன்றே நினைத்தேன் படித்தவன் எவன் ஒழுங்காக இருக்கிறான்? நீ நிசமான அம்மையாக இருக்கவில்லை. அப்பனோடு ஒட்டாமல் மகனை எந்த அம்மையும் வளர்க்க மாட்டாள். இந்தப் பயல் ஒரு நாளேனும், என்னிடம் ஸ்கூல் பற்றி, காலேஜ் பற்றிப் பேசினானா? என்னை மதித்தானா?” அந்த ஆவேச மாரியில் நஞ்சன் குறுக்கே பொறுமை இழந்து பாய்ந்தான்.
“என்னப்பா, நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?”
பாருவின் கண்கள் முத்துக்களை உதிர்த்தன; “நீங்கள் பேசுவது, மண் பறிபோவதைவிடக் கொடுமை. நஞ்சா நான் தான் உன் அம்மை. நீயும் மறுக்காதே. மண் பறிபோகும் வருத்தத்தில் அண்ணன் இப்படியெல்லாம் பேசுகிறார். நீ போய், அந்தக் கலெக்டர் துரையிடமோ கவர்னர் துரையிடமோ சொல்லி, நம் பூமியை மீட்டுவிடு. முன்பே நாம் பள்ளிக்கூடத்துக்கு வேறு பூமி தந்திருக்கிறோம். மரகத மலையிலும் நமக்குப் பூமி இல்லை. இதுவும் போனால் நாம் எப்படி வாழ முடியும்?” என்றாள்.
நஞ்சன் பொறுத்துச் சமாதானமாக, “கலெக்டரும் கவர்னரும் ஒன்றும் செய்ய முடியாதம்மா. உங்களுக்கும் ஐயனுக்கும் வயசாகவில்லையா? இனியும் மண்ணில் உழைக்க முடியுமா? நினைத்துப் பாருங்கள்; எனக்கு இன்னும் மேலே பெரிய இன்ஜினீயராக வேலை உயரும். உங்களுக்கு ஒன்றும் கஷ்டமே கிடையாது. நல்ல வீட்டில் வயசான காலத்தில் சுகமாக வாழலாம். கிருஷ்ண கௌடர் குடும்பம் பற்றி நீங்களே எவ்வளவு பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்?” என்று அந்தப் பேச்சை எடுத்தானோ இல்லையோ? உடனே பேச்சுக் குமுறிக் கொண்டு வந்தது.
“அந்த துரோகியின் பேச்சை எடுக்காதே. என் வாழ்வில் என்றைக்கோ மண்ணைப் போட்ட வஞ்சகன். அவன் பூமி நாலு ஏக்கர் கூடப் போகவில்லை; நூறு நூறு ஏக்கராய் இருக்கிறதடா. சூழ்ச்சிக்காரப் பயல், படித்து விட்ட மமதையில் ஊரில் விரோதம் கொண்டு வந்தான்; கட்சி கட்டினான்; சண்டையும் பூசலுமாய், என் அண்ணனைக் கோர்ட்டுக்கு இழுத்தவன் அவன் தான். எங்கள் குடும்பத்தை நாசமாக்கிய சதிகாரன் அவன். ரங்கன், பூனையாய் ஒடுங்கி விட்டான். ஏண்டா? நைச்சியமாய் நல்ல பேர் வாங்க, கோத்தகிரியானைத் தூண்டி ஓட்டுக்கு நிற்க வைத்து வஞ்சகமாய் வேலை செய்தான். இப்போது எல்லோரையும் தூண்டிவிட்டு நான் பயிரிட்ட மண்ணைப் பிரிக்க வத்தி வைத்து விட்டான். இந்த ஜோகி ஒரு நாளும் பொன்னான பூமியைக் கொடுக்க மாட்டான். உயிரே போனாலும் போகட்டும்!”
நஞ்சனுக்குப் பேச வாயேது?
பூமி திரும்பி வரப் போவதில்லை. ஆனால், அவனுடைய ஐயனின் சித்தம் அப்படியே இருந்தால், கலங்கிவிடுமோ என்ற அச்சம் அவனுள் விறைத்து எழுந்தது. அன்றிரவெல்லாம் அவன் தூங்கவே இல்லை. மூளை குழம்ப யோசனைகள் செய்தான்.
காலையில் பணி இடத்துக்குச் செல்கையில் அவனுக்கு உற்சாகமே இல்லை. அவனைப் பாதையில் கண்டதுமே, அலுவலகத்துக்கு முன் ஜீப் வண்டியில் இருந்த ராமன் விரைந்து வந்தான்.
“நஞ்சா, சாயங்காலம் உன்னிடம் சாவகாசமாகச் சில சங்கதிகள் சொல்ல வேண்டும்! பார்க்கலாமா தனியே!” என்றான்.
நிஜார்ப் பைக்குள் கைவிட்டு நின்ற நஞ்சன், எத்தனையோ எண்ணக் கதிர்கள் மனத்திரையில் ஓட, அவனையே பார்த்தான்; “என்ன விசேஷம்?”
“உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும். தப்பாகச் செய்து விட்டேனோ என்று மனசு அறுக்கிறது. சாவகாசமாக வா.”
ராமனுக்கு நிற்க நேரம் இல்லை. பெரிய அதிகாரி வண்டியில் வந்து ஏறிவிட்டார். நஞ்சன் பார்த்துக் கொண்டே நின்றான். ஜீப் வண்டி வளைந்து வளைந்து தூரத்தில் புள்ளிபோல் சென்று மறைந்து விட்டது.
உதகை ஆனந்தகிரியில் உள்ள ‘ஹில்வ்யூ’ மாளிகையிலே அன்று விசேஷ விருந்தும் கோலாகலமுமாக இருந்தன. வாசலிலே பளபளக்கும் கார்கள் நின்றன. வண்ணப் பட்டுச் சேலை அணிந்த பெண்களும், அழகிய கம்பளிச் சட்டைகளும் சோடுகளுமாய்ச் சிறுவர் சிறுமியரும் வாசல் தோட்டத்திலேயே மாளிகையின் உள்மகிழ்ச்சிக்குக் கட்டியம் கூறினார்கள்.
கோபாலனின் மனைவி, கிருஷ்ண கௌடரின் மருமகள் ஆண்குழந்தை ஒன்றுக்குத் தாயாகி, மருத்தவமனையிலிருந்து அன்று திரும்பியிருந்தாள். ‘பசுஞ் சோலை’த் தேயிலைத் தோட்டங்களுக்கும் தொழிற் சாலைக்கும் சொந்தக்காரரான பெட்டே கௌடரின் மகள் அவள். அவள் வீட்டைச் சேர்ந்தவர் அனைவரும் வந்திருந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கொடி போல் இருந்த விஜயாவின் தாய், அடுத்தடுத்த பிரசவங்களில் உடல் பருத்து சுறுசுறுப்பும் நடமாட்டமும் குறைய, வீட்டின் ஒரு புறம் அமர்ந்து அதிகாரம் செய்யும் எஜமானியாகி விட்டாள். மாளிகையின் கீழ்த்தளத்திலே, அந்த வீட்டில் குழந்தைகளின் கலகலப்பும், உறவினரின் உரையாடலும் நண்பர்களின் மகிழ்வொலியும் கேட்காத நாளே இராது செல்வமும் செல்வாக்கும் பெருகிவிட்டால் நண்பருக்கும் உறவினருக்கும் குறைவு ஏது?
மாளிகையின் வலப்பக்கத்தில், ‘ஆனந்தா நர்ஸிங் ஹோம்’ கம்பீரமாகக் காட்சி அளித்தது. மேல்நாடு சென்று விசேஷப் படிப்பில் தேர்ந்து திரும்பிய டாக்டர் அர்ஜுனனிடம், இரண்டு இளைஞர்கள் பயின்று கொண்டிருந்தார்கள். மருமகனின் கவனம் ஒருபோதும் குடும்பக் கவலைகளிலோ, வேறு சச்சரவுகளிலோ திரும்பாமல் இருந்ததில் கிருஷ்ண கௌடருக்குத் தனிப் பெருமையும் நிம்மதியும் உண்டு.
விருந்து முடிந்து, பிற்பகல் ஓய்வாக விஜயாவின் தாய், பாட்டி முதலியோருடன் கோபலனின் மனைவி ஜயா, அவள் தாய் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்று காலையிலிருந்து, ஜயாவின் தாயின் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தவள் விஜயாதான். நிலவைக் குழைத்து வடித்த மேனியுடன், தோள்களிலே இரு நாகங்களெனப் புரளும் பின்னல்களுடன் அவள் ஓடி ஓடி விருந்தினரை உபசரிப்பதும், கலகலப்பாகப் பேசுவதுமாகத் திகழ்ந்தால். மகனுக்கு அவளை மணமகளாகக் கேட்க வேண்டும் என்பது, கோபாலனுக்குப் பெண் கொடுத்த மாமி மாமனின் விருப்பமாக ஊன்றிவிட்டது. எனவே, அவள் பேச்சைத் துவக்கினாள்; “விஜயாவுக்கு, இந்த வருஷம் கல்யாணம் இல்லையா?”
பாட்டி ருக்மிணி, விஜயாவை நோக்கிச் சிரித்துக் கொண்டே, “அவள் அப்பா, அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்” என்றாள்.
“ஓகோ! மகளும் தம்முடன் இருக்க வேண்டும், மருமகனும் டாக்டராகவே அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ?”
“ஆமாம். ஆனால் தாத்தா கல்யாணம் முடித்து விட வேண்டும் என்று தான் இருக்கிறார். இரண்டு மூன்று பேர் கேட்டு விட்டார்கள்” என்றாள் பாட்டி.
“விஜயாவுக்கு என்ன விருப்பமோ?” என்று ஜயா நகைத்தாள். அதுகாறும் அந்தப் பேச்சுக்களைக் கவனியாதவளாக, ஏதோ ஒரு பத்திரிகை இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த விஜயாவின் நிலவு முகத்தில் செம்மை படர்ந்தது.
“விஜயா என்ன சொல்வாள்? இப்போதைக்கு அப்பாவின் இஷ்டப்படி ‘மெடிகல் காலேஜ்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்கிறாள் தாய்.
“வந்து கேட்டவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லையாக்கும், அப்படியானால்?”
“ஒருத்தன் ஈடு போதாது, குட்டை. இன்னொரு பையனுக்கு நட்சத்திரம் சரியில்லை. இந்த நாளில் படித்த பையன்கள் நிறைய இருக்கிறார்களே; இன்னும் பார்க்கலாமே!” என்றாள் பாட்டி.
“விஜயாவை எங்கள் நடராஜனுக்குக் கொடுத்து விடுங்களேன். அமெரிக்கா போகுமுன் கல்யாணம் முடித்து விட வேண்டும்; பிறகு அவளையும் அழைத்துப் போனாலும் போகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சொல்வது போல் படித்த பையன்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏர்வையாகப் படித்த பெண்கள் அதிகம் பேர் இல்லையே!” என்று சிரித்தவள், “என்னம்மா விஜயா? எங்கள் வீட்டு மருமகளா வந்துவிடு” என்றாள், முடிவாக.
உடனே நினைவு வந்தாற்போல் தொடர்ந்து, “சாயங்காலம் ‘டென்னிஸ் மாட்ச்’ முடிந்து இங்கே வருகிறேன்” என்றாள் பெருமிதம் தொனிக்க.
விஜயா நடராஜனை ‘ஹில்வ்யூ’ மாளிகையிலே ஐந்தாறு முறை கண்டிருக்கிறாள். ‘டெக்ஸ்டைல்’ பி.எஸ்.ஸி படித்துத் தேர்ந்திருந்தான் அவன். நல்ல பருமனும் உயரமுமாக நடுத்தர வயசினனைப் போல் இருப்பான். குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த அவள் சரேலென்று எழுந்து வெளியே சென்றாள்.
பாட்டி ருக்மிணிக்கு, சம்பந்தி அம்மாளின் விருப்பம் அளவற்ற மகிழ்வை ஊட்டியது. லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கொடுக்கும் எஸ்டேட்கள்; கல்வி கற்றவன், ஏர்வையான வயசுடையவன். உண்மையில் அவர்களாக வந்து கேட்க வேண்டுமே என்றல்லவோ அவள் விரும்பியிருந்தாள்?
“என்ன விஜயா வெளியே போய்விட்டாளே!” என்றாள் விஜயாவின் தாய்.
“கல்யாணப் பேச்சுப் பேசும் போது, எந்தப் பெண் தான் வெட்கப்பட மாட்டாள்?” என்றாள் பாட்டி.
மாலை ‘டென்னிஸ் மாட்ச்’ முடிந்து நடராஜன் ‘ஹில்வ்யூ’ மாளிகைக்கு வந்த போது, விஜயா வீட்டில் இல்லை. ‘ஸீஸ’னுக்கு வந்திருந்த கல்லூரித் தோழி ஒருத்தியுடன் படக்காட்சிக்குச் சென்று விட்டாள். பாட்டிக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு புகை பிடித்துக் கொண்டு மாடியில் சாவகாசமாய் உட்கார்ந்திருந்த கணவரைச் சந்திக்க, ருக்மிணி மாடிக்கு ஏறினாள். வயசான காரணத்தால் மாடி ஏறுவதே அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. படி ஏறுகையில், யாரோ உள்ளே பேசிய குரல் அவள் செவிக்கு எட்டியது. வாசற்புறம் உள்ள படிக்கட்டு வழியாக மாடிப் பகுதிகளுக்கு வரச் சௌகரியம் இருப்பதால், அங்கு எவர் வருகிறார்கள் என்பதே அநேகமாகப் பெண்களுக்குத் தெரிவதில்லை. வழக்கறிஞரையும் மருத்துவரையும் தேடி வருபவர்கள் எத்தனை எத்தனையோ பேர்!
குரல் ஏதோ எப்போதோ பரிச்சயமானது போல் அவளுக்குத் தோன்றியது. மெருகடையாதா, அவர்கள் சொந்த மொழி. போகலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டே அவள் மாடிக் கூடத்துக்கு வந்து விட்டாள். சாம்பல் நிற அறைச் சுவர்கள், சோபாக்கள், தரை விரிப்புக்கள், எல்லாம் புது மெருகழியாத தோற்றம் தந்தன. மின் கணப்பு இதமான கதகதப்புக்காக மூலையில் எரிந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணன் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கையில், எதிரே சரிசமமாக உட்காரத் தகுதியில்லாதவன் நான் என்று ஒப்புக் கொண்டு, நிர்ப்பந்தத்துக்காக அமர்ந்திருப்பவன் போல் கூனிக் குறுகி, சோபா நுனியில் அமர்ந்திருந்தான் ராமன்.
அவன் யார்? ஹட்டியிலிருந்து வந்திருக்கிறானோ? எங்கோ எப்போதோ பார்த்த நினைவு ருக்மிணிக்கு வந்தது. அவளைக் கண்டதும் ராமன் பேச்சை நிறுத்தி விட்டுச் சட்டென்று எழுந்து நின்றான்.
வணங்கி விட்டு, “நல்லா இருக்கிறீர்களா அத்தை?” என்று விசாரித்தான்.
“நீ யார் தம்பி? தெரியவில்லையே! ஹட்டிப் பக்கம் வருவதே இல்லை, இப்போதெல்லாம்; வந்தாலும் இந்தக் குழந்தைகளுடன் சரியாய்ப் போய்விடுகிறது, கவனம். மரகதமலையா?” என்றாள் ருக்மிணி.
“ஆமாம் அத்தை. நான் ரங்கம்மாக்கா மகன், ஜோகி மாமன் இல்லையா? மூக்குமலை ஹட்டியில்...” என்று விவரம் கூறினான் ராமன்.
ருக்மிணி ஒரு கணம் அயர்ந்து சிலையாக நின்றாள். பரம வைரிகளான குடும்பத்தைச் சேர்ந்தவனா? இரகசியமாக எதற்கு வந்திருக்கிறான்? என்ன விசேஷம்?
“ரங்கம்மா மகனா?” என்றாள் மலைத்தவளாக.
“ஆமாம் அத்தை. ஜோகி மாமன் வீட்டிலேதானே இருக்கிறோம்?” என்றான் ராமன்.
உருண்டையாக மிகுந்த உணர்ச்சியை விழுங்கிக் கொண்ட அவள், “ரங்கம்மா நல்லா இருக்கிறாளா? உனக்கு பெண் கட்டியது எங்கே?” என்றாள்.
“மஞ்சக் கொம்பையிலே. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் இருக்கிறார்கள். பெரிய பெண் மரகத மலை ஸ்கூலில் தான் பத்தாவது படித்துப் பரீட்சை எழுதியிருக்கிறாள்” என்றான் ராமன்.
‘ஓ! அவ்வளவு முன்னேற்றமா?’ என்று எண்ணியவள் போல் ருக்மிணி, “அப்படியா! ரொம்ப சந்தோஷம், என்னமோ, உன் மாமன்மார்களெல்லாம் காணாமலே எரியும் போது, நீ பிரியமாக வந்தாயே; ரொம்ப சந்தோஷம். காபி சாப்பிடவில்லையே?” என்று திரும்பினாள்.
“இருக்கட்டும் அத்தை. நான் சாப்பிட்டுவிட்டுதான் வருகிறேன்.”
“நன்றாயிருக்கிறது! நீ வந்தது எனக்கு முன்பே தெரியாமல் போயிற்று. பகை ஒழிய வேண்டுமென்று நான் தேவரைக் கும்பிடாத நாள் இல்லை. உன் தாத்தா காலத்தில் இரு குடும்பங்களும் ஒன்றாக இருந்த குடும்பங்கள். ஏதோ பகை தீரச் சூசகமாக நீ வந்தாயே! நீ... தோட்டந்தான் பார்க்கிறாயா?”
“மாமனின் பூமிதான்; அதுவும் குமரியாற்றுக் காலனிக்குப் போய்விட்டது. நான் அங்கேதான் ஜீப் டிரைவராக இருக்கிறேன்.”
“ஏதோ இருக்கட்டும்; இரு, காபி கொண்டு வருகிறேன்” என்று ருக்மிணி கீழிறங்கிச் சென்றாள்.
“உட்கார் ராமா; ஏன் நிற்கிறாய்?” என்றார் கிருஷ்ணன். ராமன் மீண்டும் கூசியவாறே உட்கார்ந்தான்.
“பகை இந்தத் தலைமுறையுடன் ஒழிந்து விட வேண்டுமென்று தான் நான் இந்தச் சம்பந்தம் வேண்டுகிறேன். ராமா, ஜோகி என்னைத் தவறாக எண்ணுவது தான் எனக்குப் பொறுக்கவில்லை. அந்தக் காலங்களில், பெரிய பெரிய அரசர்கள், இந்த முறையில் தான் சிநேகமாக இருந்திருக்கிறார்கள். ஜோகி மாமனிடம் நீ இதைச் சொல். ரங்கனின் மகன் படித்து, விஜயாவுக்கு ஈடாக இருந்தால், நான் நிச்சயமாக அந்தச் சம்பந்தத்தை வேண்டுவேன். ஜோகி எங்கள் வீட்டில் பெண் விரும்பி வரும் நாளை நான் எதிர்பார்க்கிறேன் என்று சொல். பாருவிடமும் சொல். நஞ்சன் படிக்க வலிய உன் மூலம் நான் வந்து உதவியது, இம்மாதிரி சுயநல எண்ணத்துக்கு என்று நீ நினைத்தாலும் சரி, கட்சிகள் கூட வேண்டும்; பிளவு நீங்க வேண்டும்.”
ராமனுக்கு அதிகமாகச் சிந்திக்கத் தெரியாது; அழகாகப் பேசத் தெரியாது என்றாலும் கைக்குக் கிட்டிய பொருள் நழுவிச் சென்றது போன்ற ஓர் ஏமாற்ற உணர்வில் நெஞ்சம் குன்றியது. எத்தனை நம்பிக்கையும் ஆசையுமாக அவன் தன் மகளை நஞ்சனுக்கு என்று வளர்த்துப் படிக்க வைத்திருக்கிறான்! இவர்கள் மக்களுக்கு நிறையச் சீதனங்கள் கொடுப்பார்கள். வேறு பல தோட்டச் சீமான்கள் பெண் கேட்டு வருவார்கள். அவன் மகளை போயும் போயும் பெரிய மாமன் மகன், தொண்டை கிழியப் பேசும் லிங்கன், மாலையிட விரும்பி வருவான்! முரடன்.
“ஏன் ராமா உனக்குச் சம்மதம் இல்லையா?”
“சந்தோஷம் இல்லாமல் என்ன? மாமனிடம் சொல்கிறேன். ஆனால், ஆனால், எனக்கும் மகள் இருக்கிறாள். நஞ்சனுக்காகவே அவளை வளர்ப்பதாக எண்ணிப் பெருமையுடன் எல்லோரும் ஒப்பியிருந்தோம்.”
கிருஷ்ணன் நிமிர்ந்தார்; புருவங்களைச் சுளித்தார்; “அப்படியா? அப்படியா?”
பழைய நினைவுகள் அவருள் படலம் படலமாக அவிழ்ந்தன. ஒத்துப் போன இரண்டு உள்ளங்களைப் பிரிப்பதாக அவர் முயற்சி வினையை விளைத்துவிடுமோ? விஜயாவும் நஞ்சனும் அன்று ஒரே வண்டியில் வந்ததும், அவன் பேச்சை எடுக்கையில் அவள் முகம் சிவந்து தனிமையில் நாணியதையும் நினைத்து, எண்ணம் நிறைவேறும் என்றல்லவோ இருந்தார்?
இருவரும் தத்தம் மனங்களுடன் வெவ்வேறு விதமாகச் சமாதானம் செய்து கொள்ள முயன்றிருக்கையில் ருக்மிணி காபியும் வடையும் லட்டும் கொண்டு வந்தாள்.
ராமன் வஞ்சகம் அறியாமல் குடும்பம் பிழைத்தது. நஞ்சனுக்கு டாக்டர் மகள் ஏற்றவள் தான். அந்த மாமன் குடும்பத்துக்கு நல்லது வரட்டும். ஏழையான அவனால், நஞ்சனுக்குத்தான் என்ன செய்ய முடியும்? மனசுக்குத் தேறுதல் கூறிக் கொண்டவனாக, “நான் ஜோகி மாமனிடம் சொல்கிறேன்” என்றான்!
சட்டென்று தளையிலிருந்து விடுபட்டவராகக் கிருஷ்ணன் எழுந்தார்.
“அப்படியா? நஞ்சன் மனசுக்குக் கஷ்டமாக இருக்காதே?”
“ஒரே வீட்டிலிருந்து அண்ணன் போல் பழகிய ஆளையா படித்த பெண் கட்டுவாள்?” என்று நஞ்சன் அன்று கேட்ட கேள்வி, ராமனுக்கு நினைவில் வந்தது. அவன் அப்படி நினைத்திருக்கவில்லையோ என்னவோ?
“பெரியவர்கள் எண்ணந்தான். அவன் மனசு தெரியாது” என்றான்.
ஆம், நஞ்சனுக்குச் செல்வாக்கான இடத்திலிருந்து நல்ல பெண் வரட்டும்; அவன் தடுக்கக் கூடாது.
“ராமா, அப்படி இருந்தால் உன் மகளுக்கு, எங்கள் வீட்டில் தம்பி அஜ்ஜனுக்குப் பையன்கள் இருக்கிறார்கள். நல்ல பையன்களைப் பார்த்து நான் கட்டுகிறேன். ஜோகி மாமனிடம் சொல்லு; பகை ஒழிந்து ஒன்று கூட வேண்டும்; பிளவு அழிய வேண்டும்.”
ராமன் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. உயரமாக அவர் எதிரே நிற்கிறார். எத்தனை உயரம்! எத்தனை உயரமான மாடி! எத்தனை விசாலமான வீடு! இந்த வீட்டின் விசாலத்தைப் போல் மனசு!
“நான் வருகிறேன்.”
வணங்கி விடைபெற்றுக் கொண்டு அவன் இறங்கினான். முன் வராந்தாவுக்குச் சென்று, அவன் கீழே இறங்கி மறையும் வரை அவர் பார்த்துக் கொண்டு நின்றார்.
ருக்மிணி, காச்மீரச் சால்வை இழைய அருகில் வந்து நின்றாள்.
“இவ்வளவு நாட்கள் கழித்து, ஓய்ந்தது என்று நினைக்கையில் எங்கே வந்தான் இவன்? பின்னும் வம்பா?”
“வம்பில்லை, நம் பகை தீரும் நாள் வந்து விட்டது.”
“இப்படித்தான் முன்பு சொன்னீர்கள். வீடு தேடிப் போய்விட்டுத் திரும்பி வந்தீர்கள். அது கிடக்கட்டும். நான் ஒரு நல்ல சமாசாரம் சொல்ல வந்தேனே!” என்றாள் ருக்மிணி.
“என்ன சமாசாரம்?”
“விஜயா படித்தது போதும். அவள் அப்பா இஷ்டம் என்று இனிப் படிக்க வைக்க வேண்டாம்.”
“இதுதானா நல்ல சமாசாரம்?”
“இல்லை, ஜயாவின் அம்மா இன்று வாய்விட்டுக் கேட்டாள், நடராஜனுக்கே விஜயாவைக் கொடுங்களென்று. டீ பாக்டரி ஒன்றே போதும். புது மிஷின், ரோலர் எல்லாம் ஐந்து லட்சத்துக்குத் தருவித்து வைத்திருக்கிறார்கள். பையன் சிறு வயசு; அமெரிக்கா போகிறானாம்.”
அவள் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் வாயே திறக்கவில்லை.
“என்ன பேசாமல் இருக்கிறீர்கள்?”
“நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விஜயாவை நான் மேலே படிக்க வைக்க இஷ்டப்படவில்லை. அவளுக்கு எட்டு வருஷத்துக்கு முன்பே மாப்பிள்ளை நிச்சயித்து வைத்திருக்கிறேன், தெரியுமா?”
ருக்மிணி ஏதோ கனவு காண்பது போன்ற பிரமையுடன் அவர் முகத்தை நோக்கினாள்.
“பையனின் படிப்புச் செலவை யாரும் அறியாமல் நானே ஏற்றுக் கொண்டேன். நம் விஜயாவுக்கு ஏற்ற பையன், அவளுக்கும் தெரியும். குமரியாற்று அணையில் இஞ்ஜினீயராக இருக்கிறான்.”
ருக்மிணி திடுக்கிட்டாற்போல், “யார், ஜோகி மகனையா சொல்கிறீர்கள்?” என்றாள்.
“ஆம். நம் பகை தீர அது ஒன்றே வழி. தேவர் அருளால் நடக்க வேண்டும். நானே ராமனை அதற்குத்தான் வரச் சொன்னேன்” என்று உறுதியுடன் மொழிந்தார் கிருஷ்ணன்.
மாலை ஐந்தரை மணிக்கு, ‘கான்டீன்’ வாசலில் நஞ்சன் ராமனை எதிர்நோக்கி நின்றிருந்தான்.
‘அவர் என்ன செய்தியைச் சொல்வார்! படிப்புக்காக வாங்கின கடனைப் பற்றியே பேசுவார். மகளைக் கட்டுவதைப் பற்றி அவர் அத்தகையதொரு நெருக்கடியான சந்தர்ப்பத்திலா பேசுவார்? கடன் அவன் எதிர்பார்த்தது தானே? சாவகாசமாகத் தனித்துப் பேச என்ன இருக்கிறது? ஒருவேளை, அவன் தேவகியை மணக்கும் விஷயத்தில் ஆவலும் விருப்பமும் காட்டவில்லை என்பதை அறிவாரோ?’
சில்லென்று குளிர்ந்த காற்று வந்தது. ராமன் படியில் இறங்கி வேகமாக வந்தான்.
“காபி குடித்தாயிற்றா?”
“இல்லை அத்தான்.”
இருவருமாக உள்ளே சென்று காபி குடித்தார்கள்.
“வீட்டுக்குப் போகலாமா அத்தான்?” என்றான் நஞ்சன்.
“வேண்டாம், வண்டி நிற்கிறது. அணைப்பக்கம் கொண்டு போக வேண்டும். வா பேசிக் கொண்டே போகலாம்” என்றான் ராமன்.
இருவரும் வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.
“மாமன் எப்படி இருக்கிறார்?” என்றான் ராமன் எடுத்த எடுப்பில்.
“மண், மண் என்று அவருக்குச் சித்தம் உருகிவிடும் போல் இருக்கிறது. எனக்கு வேதனையாக இருக்கிறது. எங்கேயாவது எப்பாடுபட்டாவது ஓர் ஏக்கர் நிலம் அவருக்கென்று வாங்கினால் தான், அவர் பூமியில் சாலை வேலை நடக்கலாம்.”
“மாமி?”
“அவுங்க, ஐயனை விட மோசமாய் இருக்கிறாங்க. விவரம் சொன்னால் புரிந்து கொள்ள வேண்டாமா? கல்லைப் பிளக்கலாம்; மலையைக் கரைக்கலாம்; அவர்கள் மனசை மாற்ற முடியாது போல் இருக்கிறது. அது இருக்கட்டும், என்னிடம் சாவகாசமாகப் பேச வந்த விஷயம் புரியவில்லையே!”
“மாமனுக்கு நாங்கள் என்றைக்கும் கடமைப்பட்டவர்கள். மாமிக்கு என்னிடம் எப்போதும் தனியாக பிரியம் உண்டு. அவர்களைக் கேட்காமல், நல்லதென்று நினைத்து, நான் ஒரு செயல் செய்துவிட்டேன். நஞ்சா, வீட்டில் இவ்வளவு பேர் இருக்கையில், என் வருவாயில் உனக்கு எப்படிப் பணம் அனுப்ப முடிந்ததென்று என்றைக்கேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?”
“எனக்கு அதை அறியக் கூட வயசாகவில்லையா அத்தான்? நான் இப்போது கூட அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எங்கே கடன் வாங்கியிருந்தாலும், எவ்வளவு வாங்கியிருந்தாலும், நான் இனி அடைத்து விடுவேன். அதைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்.”
“நான் கடனாக வாங்கவில்லை. நஞ்சா, நாள்பட்ட காய்ச்சல் தீர, எவரேனும் மருந்து கொடுத்தால் வேண்டாமென்று சொல்வது சரியா? அந்த வருஷம் மழையில்லாமல் நட்ட கிழங்கெல்லாம் மண்ணாகி, நஷ்டம் வந்ததும், மாமி மனம் உடைந்து ஓய்ந்ததும், மாமன் பித்துப் பிடித்தவர் போல் ஆனதும், நீ வீட்டுக்கே வராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததும் நினைவு இருக்கிறதா?”
நஞ்சன் ஏதும் பேசவில்லை.
“எங்கள் குடும்பம் வாழ வழி செய்தார். நான் அவர் கஷ்டம் பார்ப்பது சரியல்ல என்று நினைத்தேன்; மாமிக்கு வாக்குக் கொடுத்தேன். ஆனால், பெரிய மாமன் அகலக் கால் வைத்துக் குப்புற விழுந்து விட்டார்; நான் என்ன செய்வேன்! கடன் கிடைக்குமோ என்று எங்கெல்லாமோ விசாரித்தேன். கிழங்கு மண்டிக் கவுண்டரைத்தான் நம்பி அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள்...” ராமனுக்கு தொண்டை கரகரத்தது.
நஞ்சன் அவன் கொண்டையூசி வளைவில் வண்டியைத் திருப்புவதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“கிருஷ்ண கௌடர் மண்டி வாசலிலேயே என்னைக் கண்டு தனியே அழைத்தார். நான் என்ன செய்யலாம் சொல், நஞ்சா?”
நஞ்சனுக்கு உண்மை துலங்கியது.
“அவர் தாம் இத்தனை வருஷச் செலவையும் கொடுத்தாரா?”
“ஆமாம். என்னை அழைத்து இரகசியமாக, என்னிடம் தாம் உதவி செய்வதாகவும் எவரிடமும் கூற வேண்டாமென்றும் கூறினார். அந்த நிமிஷமே இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைத் தந்தார், நஞ்சா. அவர் உண்மையிலே மலை போல் உயர்ந்த மனிதர். ஜோகி மாமன் வீட்டுக்கு வராதே என்று வெருட்டினார்; இன்னொரு மாமன் ஆள் கூலி பேசி அடிக்கச் சொன்னார். அநியாயம் செய்தவர் நாம். அநியாயக்காரருக்கு நன்மை நினைக்க வேண்டுமென்றால் அவர் மனசை எப்படி உயர்த்திச் சொல்வது?”
“அம்மையிடங் கூட நீங்கள் சொல்லவில்லையா அத்தான்?”
“தப்பான எண்ணம் விழுந்து, அந்தப் பார்வையுடன் அவர்கள் பேசும் போது எப்படி வெளியிடுவேன் நான்? அது எப்படியெல்லாம் ஆகியிருக்குமோ? ஜோகி மாமனுக்குத் தெரிந்தே படிப்பே வேண்டாம் என்று தடுத்துவிட்டால்? நான் சொல்லவில்லை.”
நஞ்சன் அப்போது அவர் பஸ் நிறுத்தத்தில் கண்டு பேசியதைத் தெரிவித்தான்.
“தேவர் கருணையினால் உனக்கு அதிருஷ்டம் கூடி வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. என்னை மறுபடி நேற்று முன் தினம் கூப்பிட்டு அனுப்பினார். அரண்மனை போல் வீடு. நான் இதுவரை உள்ளே வீட்டில் தெரிந்து சென்றதில்லை. அத்தையையும் நேற்றே கண்டேன். இத்தனை நாட்கள் செய்த உதவிக்குப் பிரதிபோல ஒன்று கேட்டார். இல்லை; அவர் உதவி என்றும், பிரதி என்றும் கேட்கவில்லை. உனக்கு இன்னும் பெரிய செல்வத்தைத் தருகிறேன் என்றார். முறைப்படி தலைமுறையாகப் பகைக்கு இரை போடக்கூடாது. அது அழிய வேண்டும் என்று கேட்டார். அவர் மகளுடைய மகளை உனக்கு...”
ராமன் முடிக்காமலே மறுபடியும் வண்டியைத் திருப்புவதில் ஈடுபட்டிருந்தான்.
இது நினைவுதானா? கூடை மலர்களை அத்தான் ராமன் அவன் மீது கவிழ்த்தாரா? தேவகியுடன் திருமணம் என்று அம்மை புகன்ற போது, தலைநீட்டத் தைரியமில்லாத உணர்வு, குபீரென்று எழும்பி அவனைப் பூரிக்கச் செய்தது.
திட்டமிட்டு அவனை ஆளாக்கியவர், திட்டமிட்டுத்தான் அந்தச் சுந்தரியையும் அதே பஸ்ஸில் வரச் செய்தாரோ? அத்தனை நாகரிகத்தில் முழுகியவர், வயசு வந்த அவரிடம் கேட்காமலே மணப் பேச்சுப் பேசுவாரோ? அப்படியானால் அவள், அந்த அழகி அவனை மணக்க இசைந்திருக்கிறாள்; மணக்க இசைந்திருக்கிறாள்!
நஞ்சனுக்கு அந்த மகிழ்வைத் தாங்க முடியாது போல் இருந்தது. அவனைத் திரும்பி ஒரு கணம் பாராமல் நோக்கிய ராமனுக்கு மனசில் வாட்டம் உண்டாயிற்று.
படிப்பு! படிப்போடு, நஞ்சன் ஒரு நாளும் அழுக்குச் சட்டையுடன் ஆடும் மாடும் மேய்க்கப் போகவில்லை. நகத்தில் அழுக்கு ஒட்டாமல் அவனைத் தனியாக வளர்த்தவள் அவன் மாமி. தேவகியை, நஞ்சன் நிச்சயமாக விரும்பவே இல்லை. ஆனால்...
கிருஷ்ண கௌடர் மலையிலும் உயர்ந்தவர்! அவர் முயற்சி பலிக்கட்டும். அவர் வாக்குப்படி, தேவகியை அவர் தம்பி மகனுக்கே கேட்டாலும் கேட்பார்.
நஞ்சன் தன் உள்ளத்தை மறைத்துக் கொண்டு பேசினான்; “எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது அத்தான். நிலம் போயிற்றென்று ஐயன் இடிந்து போயிருக்கிறார். பகையாளி பணம் தந்து படித்தேன். இன்னும் அவர் பெண்ணை எனக்குத் தர முன் வருகிறார்கள். பெண் கேட்கப் போங்கள் என்று நான் விரட்டலாமா?”
“பொறு, உனக்கு விருப்பந்தானே? நான் செய்தது தப்பா? நான் மனசோடு காப்பாற்றி வந்த இரகசியத்தை விண்டு விட்டேன். நீ நன்றாக, சுகமாக இருக்க வேண்டும், நஞ்சா!”
“உங்கள் அன்புக்கும் துணிவுக்கும் நான் எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை அத்தான்.”
சங்கடமும் சந்தோஷமும் வேதனையும் மகிழ்வும் உள்ளத்தில் அலைமோத, நஞ்சனுக்கு மேலே பேச்சு எழவில்லை.
அவன் மூக்குமலை ஏறி வீடு வருகையில், பொழுது இருட்டி, வானத்துத் தாரகைகளுக்குச் சமமாக மேட்டிலும் பள்ளத்திலும் ஆயிரக்கணக்கான விளக்குகள் பூத்து விட்டன. வீடு சூனியக்களை கொண்டாடி அழுது வழியும் என்று அவன் எதிர்பார்த்தபடி இல்லை. கலகலத்த பேச்சுக் குரல் அவன் செவிகளில் படியேறு முன்னே விழுந்தது தந்தைக்கு உரியதல்ல. கலகலத்த குரல் என்று மகிழ்ச்சிக்கு உரிய ஒலியும் அல்ல, நெஞ்சு எரியும் பெரிய தந்தையின் குரல்!
உள்ளே நுழைந்த நஞ்சன் கோட்டை அவிழ்த்த வண்ணம் அமைதியான குரலில், “நல்லா இருக்கிறீர்களா பெரியப்பா? தாத்தா நல்லா இருக்கிறாரா? அன்று நான் வந்தேன். நீங்கள் வீட்டில் இல்லை” என்றான்.
“ஆமாம், மணிக்கல்லட்டி போயிருந்தேன். இதை விடுவதில்லை. ஆமாம், நம் வயிற்றில் மண்ணடித்து விட்டு, எவருக்கோ அள்ளிக் கொடுப்பது துரோகம் இல்லையா? ஒண்ட வந்தவன், அண்ட வந்தவன், நம்மை ஆண்டியாக்கிச் சுரண்டுகிறார்கள். நியாயமா? நஞ்சா, சொல்கிறேன். நீ இந்த அணைத்திட்டத்தில் வேலை செய்யக் கூடாது! ஆமாம்!”
தூக்கிவாரிப் போட்டது நஞ்சனுக்கு. பேசாமல் உடுப்பு மாற்றிக் கொள்ளச் சென்றான்.
ஜோகி அண்ணன் முகத்தைப் பார்த்தார். பாரு, அவருக்கு மேலான நம்பிக்கையுடன் கணவனை நோக்கினாள்.
“அத்தனை பேரும் சேர்ந்து எதிர்த்தால் யார் என்ன செய்ய முடியும்? இங்கே நிலம் போனவர் அத்தனை பேரையும் நான் ஒன்று திரட்டி எதிர்ப்பேன். இந்த ரங்கன் முன் நின்றால் பின் வாங்க மாட்டான். ஜோகி, உனக்குத் தெரியுமா? வெள்ளைக்காரன் ஊரை விட்டு எப்படிப் போனான்? அத்தனை பேரும் எதிர்த்துச் சத்தியாக்கிரகம் செய்தார்கள்? அதை நாமும் செய்வோம். இந்த மலை நம்முடையது; பூமி போய் இந்த விளக்குகள் நமக்கு வேண்டாம், சூழ்ச்சி!”
“இன்னொன்று பார்த்தாயா? இங்கே ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பளம் வாங்குபவர்கள் நம்மவர் அல்லர், அந்நியர்கள். எனக்குப் பற்றி எரிகிறது. ஜோகி மண்டுகிறது. நிலத்துக்கு உரிய கிரயத்தையேனும் முன்பு தந்தார்களா?”
நஞ்சன் ஆத்திரத்துடன் சீறிக் கொண்டு வந்தான். “பெரியப்பா! விஷயம் தெரியாமல் ஏன் பேசுகிறீர்கள்? நம்மவர்களுக்கு அப்படி வாங்கத் தகுந்த திறமை இருக்கிறதா? இப்போதுதான் படிக்கிறார்கள்! பல தொழிற் கலைகள் பயில்கிறார்கள்; இனி அவ்வித மேன்மைகளுக்கு உரியவர்கள் ஆவார்கள். நியாயமானதைக் கேளுங்கள்; வரும். நியாயமல்லாத வழியில் போக ஏனப்பா நினைக்கிறீர்கள்? உங்கள் நிலத்துக்கு உரிய கிரயம் எங்கும் போகாது? பிற நாடுகளில் எல்லாம் இயற்கையின் சக்திகளை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா, பெரியப்பா? நாம் மட்டும் இந்த மண்ணிலேயே அழுந்திக் கிடப்பதா? முன்னேற வேண்டாமா? இங்கு அணை கட்டி எடுக்கப் போகும் மின்சாரம் எத்தனை எத்தனை தொழிற்சாலைகளுக்கு உயிரளிக்கப் போகிறது, தெரியுமா? இனிப் பிறக்கும் எத்தனை மக்களுக்கு உணவளிக்கப் போகிறது தெரியுமா? நீங்கள் மனம் மாறத்தான் வேண்டும். கிராமங்கள் வேறு, பட்டணங்கள் வேறு என்பதில்லை. நம் ஹட்டிகளிலெல்லாம் எல்லாவித வசதிகளும் வரும்; வர வேண்டும். நாம் எத்தனை அடிகளோ முன் சென்றிருக்கிறோம். நீங்கள் எண்ணிப் பாருங்கள். உங்கள் காலத்தில் மரகதமலை ஹட்டியிலிருந்து நகரத்துக்குப் போக நல்ல தார்ப் பாதை உண்டா? உங்கள் பெண்களும் பையன்களும் நல்ல கல்வி பயில நல்ல பள்ளிக்கூடம் உண்டா? ஏன் தேயிலை போட்டு மண் வளம் கொண்டு பொருளாதார வசதிகள் பெருக்க, வெளி உலகத் தொடர்பு இல்லாமல் முடிந்ததா. பெரியப்பா, நீங்களே சொல்லியிருக்கிறீர்கள், பன்னிரண்டாம் வயசிலே ஒத்தைக்கு ஓடினதாக. இன்றைய ஹட்டியை ஒப்பிடுங்கள். ஏன்? நான் ஒத்தைக்கு நடந்து சென்று படித்தேன். அஸ்தமித்தால் கீழ் மலையிலிருந்து இங்கே வர முடியுமா? இப்போது ஒளி வெள்ளமாய் விளக்குகள், மூலைக்கு மூலை ரேடியோ, கண்காட்சிகள், எல்லாம் நன்றாக இல்லையா? முன்னேறியவர்களைக் கண்டு நாம் பொறாமைப் படுவதில் ஒன்றும் பயன் இல்லை. அவர்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை அறிந்து நேரமாய் வாழ வேண்டும். நீங்கள் மக்களின் நன்மைக்காக, இனிவரும் உலகுக்காக, உங்கள் மண் பாசத்தைக் கொஞ்சம் தியாகம் செய்யத்தான் வேண்டும்.”
கிருஷ்ண கௌடரை மனத்தில் நினைத்துக் கொண்டு அவன் அவர்கள் மனத்தைக் கரைக்க, தன் சக்தியையெல்லாம் பிரயோகிப்பது போல் பேசினானே? ஓர் இம்மியளவேனும் பயன் இருந்ததா?
மெழுகுவர்த்தி ஜ்வாலையானால் கையை வீசி அணைத்து விடலாம்; காலமெல்லாம் கனிந்து ஒளிரும் பொறாமைத் தீயன்றோ ரங்கனின் நெஞ்சத்திலே குடியிருந்தது? ஜோகிக்கோ, உயிரோடு வளர்ந்த மண் பாசம். இரண்டும் அந்தக் கை வீச்சுக்கு இன்னும் கனிந்து ஒளிர்ந்தனவே தவிர அவியவில்லை.
ரங்கன் இடி இடியென்று சிரித்தான்; “நேற்று முளைத்த பயல், இவன் நமக்கு புத்தி சொல்ல வருகிறான் பார்த்தாயா? முன்னேறியவனைக் கண்டு நாம் பொறாமைப்படுகிறோமாம். தம்பி, இவன் யார் பக்கம் சேர்ந்து கொண்டு துரோக எண்ணத்துடன் பேசுகிறான் என்று உனக்குத் தெரியுமா? சொன்னால் நீ தப்பாக நினைப்பாய், பாருவின் மனம் சங்கடப்படும் என்று நான் பேசாமல் இருந்தேன். இந்தப் பயல், அன்றைக்குக் கூனூரில், பஸ் நிற்கும் இடத்தில், நம் குடும்ப வைரியுடன் குலாவினானா இல்லையா, கேள்.”
நஞ்சனின் பெரிய தந்தையின் விழிகள் வஞ்சகம் கனிந்த பழங்களென ஒளிர்ந்தன.
ஆ! ஜோகிக்கு என்ன நேர்ந்ததென்று புரியவில்லை. சிலையானார் அவர். இளவட்டம் ரோசத்துடன் எழும்பியது.
“மரியாதை தெரிந்தவர்கள், பேசினால் பதில் பேசாமல் போக மாட்டார்கள். இதில் பொய் என்ன வந்திருக்கிறது? கிருஷ்ண கௌடர் என்னிடம் வந்து பேசினார். நான் பேசினேன். நீங்கள் பகை பாராட்டினால், அதை நான் ஏன் கொண்டாட வேண்டும்?”
“பார்த்தாயா, பார்த்தாயா தம்பி? டேய் துரோகிப் பயலே! உன்னை வளர்த்தவளை ஆள் வைத்து அடிக்கச் செய்தான்! உங்கள் குடும்பத்துக்கு நாசத்தைக் கொண்டு வந்தான்!” என்று கத்தினார் பெரியப்பா.
“பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டால், பச்சையாகவே எல்லாம் தெரியும். தெரியுமா பெரியப்பா?”
குத்தப்பட்ட ஆணவம் குத்தப்பட்ட நாகம் போல் சீறியது; “டேய்? என்னடா சொன்னாய்?”
ரங்கன் பாய்ந்து எழுந்த போது பாரு அலறினாள்; “வேண்டாம், வேண்டாம் நஞ்சா!”
“ஷ், உள்ளதைச் சொன்னால் ரோசம் வருகிறதோ? உங்களால் தான் எங்கள் குடும்பம் சீர்ப்படாமல் போயிற்று. பகையை வளர்த்தவர் நீங்கள்!” என்றான் நஞ்சன் அடங்காமல்.
“நஞ்சா! பெரியப்பன், மரியாதை தவறாதே!”
ஜோகி நெஞ்சை முட்டிய உணர்வை விழுங்கிக் கொண்டார். நஞ்சன் அறிந்து மொழிந்தானோ அறியாமல் புகன்றானோ, ஆனால் அதில் உண்மையும் உண்டே!
“மரியாதை தெரியாதவரிடம், மரியாதை தவறத்தான் நேரிடுகிறது. உங்கள் பார்வைக் கோளாறு; மனத்தின் கோளாறு. நீங்களாக இருந்தால் பகைவன் பிச்சை எடுத்தால் கண்டு களிப்பீர்கள். ஐம்பதும் நூறுமாய் அவிழ்த்துக் கொடுத்துப் பகைவன் மகனைப் படிக்க வைப்பீர்களா? பகைவன் துவேஷக் கொடியேற்றி நிற்கையில், செல்வத்தில் உயர்வாய் வளர்த்த உங்கள் அருமை மகளை, அந்தப் பகைவன் மகனுக்கு மணமுடிக்க முன் வருவீர்களா?”
ஒரு நிமிஷம் அங்கு அண்ட சராசரமே அசைவற்று நின்றாற் போன்ற அமைதி நிலவியது. அந்த ஒரு நிமிஷப் பயங்கர அமைதியை, ரங்கனின் வெறிச் சிரிப்புத்தான் குலைத்தது.
“ஓகே! இளவட்டம் துள்ளுவதற்குக் காரணம் இப்போது தான் புரிகிறது, தம்பி! அவன் சூழ்ச்சி செய்து, இந்தப் பயலை கைவசப்படுத்திய சதியைக் கேள்!” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.
உண்மையை எப்படியோ நஞ்சன் வெளிப்படுத்தி விட்டான். வெறும் வாயை மெல்லுபவரான பெரியப்பாவுக்கு, இனிப் பேசக் கேட்க வேண்டுமா?
“நம்மிடையே இருந்த சகல சொத்துக்களும் தொலைய அவன் சதி செய்தான். இப்போது மகனையும் பறித்துக் கொள்கிறான். பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து, அவன் நம்மைக் கௌரவமாய் மேன்மைப்படுத்தவா வருகிறான்?”
மறுபடியும் அந்த வெறிச் சிரிப்பு.
பாருவுக்கு அவன் சொல் ஒவ்வொன்றும் நெஞ்சில் பழுக்கக் காய்ச்சிய மழுவாயுதத்தின் அழுத்தத்துடன் உண்மையைப் பதித்தது.
“வெள்ளைக்காரர்களைப் போல் பழகிய துரை மகள், இங்கு உனக்குக் காபி வைத்துத் தருவாளா? மாவு ஆட்டுவாளா? எருமைக்குத் தண்ணீர் காட்டுவாளா? இந்த வீட்டில் கார் ஏது? இந்த ஹட்டியில் நினைத்தபடி வெளியே செல்ல, சினிமாவும் உல்லாசமும் ஏது? உன் பையனை அங்கே வைத்துக் கொள்வார்கள். காரில் வேலைக்கு அனுப்புவார்கள். உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? நேற்று மாமன் மகன் சித்தன், படித்துவிட்டு என்ன செய்தான்? ஏன் கிருஷ்ண கௌடர் மகள் கோத்தகிரியார் வீட்டுக்கா போனாள்? டாக்டர் அர்ஜுனன் தானே கிருஷ்ண கௌடர் வீட்டுக்கு வந்தான்? ஆனந்தகிரிப் பங்களாப் பெண்கள் ஹட்டிக்கு வரமாட்டார்கள்; மருமகன்மார்தான் பெண்களைத் தேடிப் போகவேண்டும்.”
“போதும், போதும்” என்று குலுங்கினாள் பாரு.
அவளுடைய ஆசை மாளிகையில் ஒவ்வொரு புறத்திலும் அவள் கணவனின் வார்த்தைகள் பாய்ந்து தகர்த்தன.
மாமன் அநுபவத்துடன் கூறிய உண்மை; அவள் அநுபவமாகி விடுமா? அவளுடைய நஞ்சன் அவளை உதறி விட்டா போவான்?
“நிறுத்துங்கள் நான் ஒன்றும் அப்படிப்பட்ட பையன் அல்லன்” என்று அவனுடைய நஞ்சன் பாய்ந்து முன் வருவான். சற்று முன் கிருஷ்ணனைப் பற்றி அவர்கள் பேசியதைப் பொறுக்காமல் ஆவேசத்துடன் பாய்ந்து வந்தாற் போல் வருவான்.
அவளுடைய உடலின் ஒவ்வொரு நாடியின் துடிப்பும் அவன் உள்ளத்திலிருந்து ஆவேசம் பாய்ந்து உதடுகளின் துடிப்புடன் வெளியாவதை எதிர்பார்த்துக் குவிந்தது.
இல்லை, அவன் பேசவில்லை. நஞ்சன் பேசவே இல்லை. “நஞ்சா, ஏன் நிலையாக நிற்கிறாய்? நான் மாட்டேன் என்று சொல்லடா! உனக்காக உயிர் வாழும் அம்மையடா, பாரு!”
“என்றைக்கேனும் உனக்கு மகனைப் பார்க்க வேண்டுமானால் வேட்டை நாய் கட்டிய வாசலில் தவம் கிடக்க வேண்டும். காரில் பையன் வந்து இறங்கி அலட்சியமாக நடந்து செல்வதைக் கண்டு வரவேண்டும். உன் அழுக்கு முண்டும் வட்டுமாக, அவர்கள் பங்களாவுக்குள் செல்வதையே அகௌரவமாக நினைப்பார்கள். ‘உங்கள் அம்மையை ஏன் இப்படிச் சும்மா வரச் சொல்கிறீர்கள்? பெற்றவளா இவள்? மாசம் பத்து இருபது வேண்டுமானால் கொடுங்கள்’ என்று அவள் சொன்னால் இவன் கேட்பான்.”
“ஐயோ!” என்று பாரு அலறினாள் அப்போது.
தாயுள்ளத்தில் கொடூரமாகப் படர்ந்திருக்கும் அந்தப் பாசத்தின் வலிமையை அவன் எப்படி அறிவான்? நஞ்சன் எங்ஙனம் அறிவான்?
“இன்னும் என்ன என்ன பேச வேண்டுமோ, பேசுங்களேன்? ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்றான்.
“ஏண்டா? உள்ளதைச் சொன்னால் ரோசம் வருகிறதா?”
“ரோசமா? நீங்கள் உண்மையில் எங்களுக்கு நன்மை நினைக்கிறீர்களா? உங்கள் பொறாமை, நான் முன்னுக்கு வருவதையும் காணப் பொறுக்கவில்லை. நான் வேலையை விட வேண்டும்; நல்ல இடத்துப் பெண் வந்தால் கல்யாணம் கூடாது. பத்து ரூபாய்க் காசுக்கு என்னைப் பழியாய் நடக்க வைத்தவர் நீங்கள்! பலரும் அறிய, எங்கள் வறுமையைக் கண்டு நகைத்தவர், நீங்கள்! பகைக்கு மட்டும் ஒற்றுமை கொண்டாடி, எங்களை நாசம் செய்தீர்கள்!”
அத்தனை வார்த்தைகளில் ஒரு சொல்லேனும் அவளுடைய சிதையும் உள்ளத்துக்கு நம்பிக்கைத் தர எழக்கூடாதா?
“நஞ்சா!” என்று மின்னல் ஒலி வெட்டியது. கல்லாய், மரமாய் இருந்த ஜோகியின் நாவினின்றும் புறப்பட்ட ஒலி; நஞ்சன் அதிர்ந்தாற் போல் தந்தையை நோக்கினான்.
“நீ இங்கேயே எதிர்க்கட்சி ஆடுகிறாயாடா? இதற்கா படித்தாய்? போடா போ!”
நஞ்சன் வெளிமனையில் வந்து வீழ்ந்தான். அவனுடைய கண் முன், பெற்றோரின் அறியாமையே மாளாத இருளாய்க் கவிந்து மறைந்தாற் போல் இருந்தது.
வெறும் அறியாமை அல்ல; தந்தையின் உயரிய பண்புகளைக் கூட விழுங்கி விட்ட குருட்டுப் பாசத்துடன் துணை கொண்ட மடமை இருட்டு. ஆயிரம் பதினாயிரம் கிலோ வாட் சக்தி மின்சாரம் ஒளிர்ந்தால் கூட அந்த மடமை இருட்டைக் கரைக்க முடியாது. அந்த அறியாமை இன்னும் என்னவெல்லாம் தீமைகளை விளைவிக்கப் போகிறதோ? நிலத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்வதாமே? அதை நினைக்கையிலேயே அவமானம் அவனுள் ஊசியாய்ப் பிடுங்கியது. தந்தையின் மனத்தை எப்படியேனும் மாற்றலாம் என்றால் கூட இடமே காண வழியில்லாதபடி, பெரியப்பா சேர்ந்து விட்டாரே!
இளமை வேகம் கொந்தளிக்கும் அவன் மனத்தில், அவன் விஜயாவை மணப்பதனால், அம்மையை அது எப்படிப் பாதிக்கக் கூடும் என்பதையெல்லாம் விளக்கும் வகையில் பெரிய தந்தை பேசிய பேச்சுக்கள் உறைக்கவில்லை.
விஜயாவை மணந்தால், காலனி வீடுகளில் ஒன்று இவன் இல்லமாகத் திகழும். அலுத்து ஓய்ந்து, பேரிரைச்சல்களிலிருந்து விடுபட்டு அவன் வீட்டின் இனிய பொழுதை நோக்கித் திரும்புகையிலே, அவள் அவனை எதிர்நோக்கி நிற்பாள். அந்த முகத்தைக் காண்கையிலேயே அவனுடைய அலுப்பும் சோர்வும் பஞ்சாய்ப் பறந்து போய்விடும். அந்தியிலே, அந்த வளைந்த பாதைகளில் அவளுடன் நடந்து செல்வது எத்தனை இன்பமாக இருக்கும்! குமரியாறு விழும் காட்சியை அவளோடு காலமெல்லாம் சேர்ந்து கண்டு கொண்டிருக்கலாமே!
புயலடித்த அந்தச் சூழ்நிலையில், அவன் உள்ளத்துக்கு இத்தகைய எண்ணங்களே ஆறுதல் அளிக்கக் கூடியனவாக இருந்தன.
மூக்குமலை ஹட்டிக்கு மின்விசை வந்தாயிற்று. ஆனால் அவர்கள் வீட்டுக்கு அது இன்னும் வரவில்லை. இருளிலேயே மனம் போன எண்ணங்களிலே குருடாக அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான், அண்ணனும் தம்பியும் உண்டார்களா, உறங்கினார்களா, வெளியேறினார்களா என்று கூட அவன் கவனிக்க விரும்பவில்லை.
வெகு நேரத்துக்குப் பின், பாரு ஒரு கையில் விளக்கும் இன்னொரு கையில் கிண்ணமும் தட்டுமாக வந்தாள்.
அலுமினியம் கிண்ணத்திலே சோறு; தட்டிலே இனிப்புத் தோசை. இனிப்புத் தோசை என்றால் அவளுடைய மகனுக்கு உயிரான பண்டம். அலுவல் ஸ்தலத்திலிருந்து, கற்பொடி படிந்த உடுப்புடன் சோர்ந்து வரும் மகனுக்குக் கொடுக்க, பாரு மாலையிலேயே அதைத் தயாரித்து வைத்திருந்தாள்.
“நஞ்சா!” என்று அவள் அழைத்த அன்பு ஒலி எந்த உலகத்திலிருந்தோ அவனுக்குக் கேட்டது. கண் விழித்துப் பாராமலே அவனுக்கு அந்த அன்பின் ஒலிக்கு உரிய உருவம் அறியாமையின் உருவமாகக் காட்சியளித்தது. அது துலக்கினால் கரையாதா? விலக்கினால் நீங்காதா? விலக்கவே வேண்டாம் என்று பிடித்துக் கொள்வார்களா?
“நீ சாப்பிடவில்லையே நஞ்சா; உனக்காக இனிப்புத் தோசை செய்தேன் நஞ்சா.”
பையன் திரும்பியே பார்க்கவில்லை.
“எனக்கு ஒன்றுமே வேண்டாம் அம்மா!”
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானா? வரப்போகும் அந்தக் கட்டழகி, அம்மையை வெறுக்க இப்போதே சொல்லிக் கொடுத்து விட்டாளா? அவர் உயிரோடு ஒட்டிய உயிரைப் பிரித்துச் செல்ல, இப்போதே முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டாளா? நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு, பாரு, “நஞ்சா!” என்றாள் கல்லும் கனிந்து உருகும் குரலில். நஞ்சன் மறுமொழி தரவில்லை.
‘இளமையும் படிப்பும் வரப்போகும் பெண் சொல்லைக் கேட்கும்’ என்று சொன்ன கிழவர், எங்கிருந்தோ குரூரச் சிரிப்பு சிரிப்பது போல் அவளுக்குப் பிரமை உண்டாயிற்று.
தன் வாழ்வின் தோல்விகள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எல்லாவற்றுக்கும் ஈடாக, அவள் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பற்று; அவன். அவனை எப்படி அவள் நழுவ விடுவாள்?
“நஞ்சா என் சொல்லைக் கேட்க மாட்டாயா? நான் அம்மை அல்லவா, நஞ்சா?”
குருட்டுப் பிடிவாதமும் கண்ணீரும் அவனுக்கு அப்போது எரிச்சலைத்தான் தரக்கூடியனவையாக இருந்தன.
“நீங்கள் இன்னும் என்ன சொல்வது? என்னை நீங்கள் படிக்கவும் வைத்திருக்க வேண்டாம். இப்படி அவமானங்களுக்கு உள்ளாக்கவும் வேண்டாம். உலகம் ஒப்பிச் செய்யும் ஒரு முயற்சியில் நாம் குறுக்கிடுவது நியாயமா? நீங்கள் விதை விதைத்து, உண்ணத் தானியம் விளைவிக்கையிலே எலி புகுந்தால் ஒரு பொருட்டாகவா நினைப்பீர்கள்? எலியைக் கொன்று பயிரைக் காத்து விளைவு எடுப்பீர்கள். அதுபோல் ஓர் எலியின் நிலையில், இந்த அணைத்திட்டத்தில் குறுக்கிடலாம் என்று பொறாமைக்காகப் பெரியப்பா சொல்கிறார். நீங்கள் கேட்கிறீர்கள் அப்படித்தானே? உங்களால் எனக்குத்தான் அவமானம் போதுமா?”
அவனுடைய கடுமை, அவளை எப்படி வருத்தியது என்பதை அவனால் உணரவே முடியாது.
“நிலம் போனால் போகட்டும் நஞ்சா, உன்னிடம் நான் ஒன்று கேட்பேன் எனக்குச் சத்தியமாக, ஒரு வாக்குக் கொடு.”
“என்ன?”
அந்தத் தாய் தழுதழுக்கும் குரலில் வேண்டினாள்; “உன்னைக் கிரிஜை பெற்ற பிள்ளை என்று நான் நினைக்கவில்லை. ஜோகியண்ணன் மகன் என்று எண்ணவில்லை. என் உயிரின் உயிராக உணர்ந்து, ஒவ்வொரு நாளும் நீ பெரியவனாவதை நல்லபடி வாழ்வதை நினைத்துக் கனவு கண்டிருக்கிறேன். பெற்ற அம்மை ஒருத்தி அப்படிச் சாதாரணமாகக் கனவு காணலாம். நான் உன்னை உயிராக நினைத்திருக்கிறேன்; உனக்காக உயிர் வாழ்ந்திருக்கிறேன். என்னை - என்னை யாருக்காகவும் நீ வெறுக்க மாட்டாயே, நஞ்சா?”
“இதெல்லாம் என்ன அம்மா பைத்தியக்காரத்தனமான பேச்சு? நீங்கள் கொஞ்சம் உலக ஒப்ப நடவுங்கள் என்று சொன்னால், வெறுப்பதாக எண்ணமா?”
“நிசமாக என்னை நீ வெறுக்கவில்லையே?”
“உங்களை எதற்காக நான் வெறுக்கிறேன்?”
“அம்மை, உன்னிடம் ஒரே ஒரு வாக்குறுதி கேட்கிறாள். பிறவி எடுத்து அவள் ஒன்றே ஒன்றைத்தான் பற்றி நிற்கிறாள். அந்த வாக்குறுதியைத் தருவாயா நஞ்சா?”
“என்ன அம்மா அது?”
“கிருஷ்ண கௌடர் குடும்பப் பெண்ணே நமக்கு வேண்டாம். தேவகியை உனக்குப் பிடிக்காமல் போனால் வேறு நல்ல பெண் எங்கிருந்தேனும் நான் தேடி வருகிறேன்.” நஞ்சனின் விழிகள் நிலைத்தன. அவன் பேச்சற்றவனானான்.
துடிக்கும் இதயத்துடன் பாரு, “சரியென்று சொல்லடா மகனே” என்றாள்.
“ஏனம்மா! பகை தீராமலே நீளட்டும் என்கிறீர்களா? ஒன்றும் அறியாத அந்தப் பெண் உங்களுக்கு என்ன தீங்கு செய்தாள்?”
“அவளிடம் எனக்கு ஒரு வர்மமும் இல்லை. நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?”
“வர்மம் இல்லை என்றால், ஏனம்மா வாக்குறுதி? நான் அங்கேயே போய்விடுவேன் என்று அஞ்சுகிறீர்களா அம்மா? அப்படிப் போக, என் வேலை இடம் கொடுக்குமா? டாக்டர் மருமகன் வீட்டோடு தொழில் செய்தால், நானும் அப்படிப் போவேனா? என்ன அம்மா அசட்டுத்தனம் உங்களுக்கு?”
“வேண்டாம் நஞ்சா, அந்தக் குடும்பத்துடன் சம்பந்தப் பேச்சு. இரண்டு தலைமுறைகளிலும் தட்டிய விஷயம். நல்லது நடக்கவில்லை. போதும், நமக்குப் பகையும் வேண்டாம், உறவும் வேண்டாம்.”
“என்னை நன்றி கொன்றவனாக்குகிறீர்களே?”
“உன் படிப்புச் செலவை, நாம் கேட்காமல், நமக்குத் தெரியாமல், ராமனைக் கொண்டு எதற்காக கிருஷ்ண கௌடர் கொடுக்க வேண்டும்? அதுவே தப்பான எண்ணம் அல்லவா?”
“ஈசுவரா! நல்லதெல்லாம் உங்கள் கண்ணுக்கு நாசமாகத் தெரிகிறதே! இதை எங்கே போய்ச் சொல்ல?”
“போகட்டும், பூமியைச் சர்க்கார் எடுத்துக் கொண்டால், பதிலுக்குப் பணம் வராதா? கிருஷ்ண கௌடர் கடனுக்குக் கட்டி விடுவோம். அந்தப் பெண் வேண்டாம்.”
“ம்!” பெருமூச்சு உள்ள எரிச்சலைச் சுமந்து வந்தது.
“ஒப்புக் கொண்டாயா நஞ்சா?”
“சரி அம்மா.”
“எழுந்திருந்து தோசையைச் சாப்பிடு, நஞ்சா.”
“எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னைச் சும்மா விடுங்கள் அம்மா. அதுவே போதும்.”
“என் மனதை வருத்துவதில் உனக்கு ஏனடா நஞ்சா இத்தனை சந்தோஷம்?”
“நான் உங்களை வருத்தினேனா? அதுதான் சரி என்றேனே! எனக்கு மட்டும் மனசென்று ஒன்று இல்லையா, அம்மா?”
அவன் குரலிலிருந்த ஒரு பொறி பாருவின் உள்ளத்தில் சுடராய்த் தெறித்தது. திடுக்கிட்டவள் போல், “நஞ்சா, நீ... நீ அவளைப் பார்த்திருக்கிறாயா? பேசியிருக்கிறாயா?” என்றாள்.
“அம்மா, என்னை நிம்மதியாக விடமாட்டீர்களா? இதோ, ஒரு வாய் தோசை போதும் எனக்கு போங்கள்” என்றான் அவள் மைந்தன். வேண்டா வெறுப்பாக, அவளை விரட்டுவதற்காக ஒரு தோசைத் துண்டைச் சுவைத்து விழுங்கினான்.
பாரு என்ன செய்வாள்? தலைக்கு மேல் வளர்ந்து, அவள் மைந்தன், சட்டெனப் பெரியவன் ஆகிவிட்டான். அந்த நினைவிலேயே அம்மையாகிய அவள் வேற்றாள் ஆகிவிட்டாள்.
எத்தனை நாளைப் பழக்கமோ? அன்று ஒரு நீல நாடாவைக் காட்டினானே!
மனமாகிய கடல் ஓயாமல் அலைந்து விழுந்தது.
அண்ணனும் தம்பியும் வெளியே சென்று வந்து ஒருபுறம் உறங்கினார்கள். பின் கட்டில், அடுப்படியில் பாரு உறங்கவில்லை; நஞ்சனும் உறங்கவில்லை.
உள்ளூற மனம் தன்னை மறந்த லயத்தில் ஒன்றினாலும், நஞ்சன் தாய்க்காக வேண்டி, வேண்டாம் என்று ஒதுங்கக் கூடிய எதிர்பாராத சந்திப்பு மறுநாள் நேர்ந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
நஞ்சன் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தான் அணைப்பக்கம் சென்றான். அணைக்கட்டு எழும்ப இருக்கும் இடத்திலே நிகழ்ந்து கொண்டிருந்த பூர்வாங்க வேலைகளைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மணலும் கல்லும் சுமந்த லாரிகளுக்கிடையே அழகிய பச்சை வண்டி ஒன்று பாதையில் வந்து நின்றதையும், அதிலிருந்து உயரமாகப் பச்சை பட்டுச் சேலைத் தலைப்புப் பறக்க ஒரு நங்கை இறங்கியதையும் அவன் கண்டான்.
அவள்... என்ன ஆச்சரியம்! அவன் நின்ற இடத்துக்கே, அவனை நோக்கியே வந்தாள்.
அவள்... அவள், விஜயா!
அவன் நெஞ்சம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது.
“நல்ல வேளை, முதல் முதலாக நீங்களே எங்கள் பார்வையில் பட்டு விட்டீர்கள். நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளை யெல்லாம் பார்க்க வந்தோம். எங்கள் காலேஜ் புரொபஸரும் லெக்சரரும் வந்திருக்கிறார்கள்” என்றாள் அவள்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பருமனாக ஓர் அம்மாளும், வற்றல் காய்ச்சிபோல் ஒரு பெண்மணியும் அவள் பின் இறங்கி வந்தார்கள்.
“இவர் மிஸ் உமாதேவி; இவர் மிஸ் சந்திரா” என்று அறிமுகம் செய்து வைத்த அவள், “நான் எங்கே போய் யாரைத் தேட வேண்டுமோ என்று நினைத்தேன். இவர் இங்கேதான் புதிதாக வந்திருக்கிறார். எங்கள் ஊர் மிஸ்டர் நஞ்சன்” என்று தெரிவித்தாள்.
“நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளையெல்லாம் பார்க்க விரும்புகிறோம், மிஸ்டர் நஞ்சன். அழைத்துப் போக முடியுமா?” என்றாள். பருமனான உமாதேவி, கீச்சுக் குரலில்.
“மகிழ்ச்சியுடன் காண்பிக்கிறேன்” என்று விருப்பம் தெரிவித்த அவன், அங்கேயே அணை விவரங்கள் எல்லாம் கூறலானான். அணை ஸ்தலம் முடித்த பிறகு, இங்கிருந்து குகைக் கால்வாய் செல்லும் வழியையும், குகை அடையும் இடங்களையும் அவர்களுடன் சென்று விவரித்தான். பின்னர், நீர்க்குழாய்கள் செல்லும் சரிவையும், மின்நிலைய அடித்தள நிர்மாணத்தையும் அழைத்துச் சென்று விவரித்தான். ஒருபுறம், ‘விஜயாவினிடம் தனியே அன்றைய பண்பற்ற நடத்தைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது’ என்று அவனை உள்ளம் குடைந்து கொண்டிருந்தது.
மின்நிலையப் பகுதியைக் கண்டு முடிந்ததும் விஜயா, “ஆயிற்றா? இவ்வளவுதானா வேண்டியவை இருக்கும்” என்றாள்.
“இப்போதே களைத்து விட்டது. இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு இந்த நடையே முடியவில்லை. விஜயா, எங்கோ நீர்வீழ்ச்சி இருக்கிறதென்றாரே உன் தாத்தா? மறந்துவிடப் போகிறாய்!” என்றாள் உமாதேவி.
“நம் ‘லஞ்ச்’ அங்கேதான். மிஸ்டர் நஞ்சன், நீங்களும் வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றாள் சந்திரா.
“வருவார். பின்னர், இவ்வளவு நேரம் சுற்ற வைத்து விட்டு, அவரை விட்டு விட்டுச் சாப்பிடுவோமா? குமரியாறு விழும் இடம் இங்கிருந்து ரொம்பத் தூரம் இல்லையே! அங்கே போய்ச் சாப்பிடலாம் அல்லவா?” என்றாள் விஜயா.
நஞ்சன் திகைத்தாற் போல் நின்றான்; “அங்கே ஆறு விழுவதைப் பார்த்துக் கொண்டு சாப்பிட வசதியாகப் பாதை, இடம் ஒன்றும் இல்லையே! மேலே உட்காரலாம். அதற்குங்கூட நீங்கள் போக வழியில்லை. சாலையில் நின்று ஆறு விழும் அழகைப் பார்க்கலாம்” என்றான்.
“ஏன்? தாத்தா இறங்கலாம் என்று கூறினாரே!” என்றாள் விஜயா.
“உங்களால் இறங்க முடியாது என்று தானே கூறினேன்?” என்று முறுவல் செய்தான் நஞ்சன்.
“உங்களால் என்றால்?”
“பெண்களால் என்று பொருள்” என்று சிரித்தாள் சந்திரா.
விஜயா முகம் சிவக்க, “பெண்கள் அவ்வளவு மோசமானவர்களா உங்கள் எண்ணத்தில்?” என்றாள்.
“வலுச்சண்டைக்கு வருகிறீர்களே! நீங்கள் வந்து பாருங்கள். சரிவு செங்குத்தாக இருக்கும். சாலையிலிருந்து, இரண்டு மலைக்கிடையில் நூறு அடிப் பள்ளத்தில் ஆறு விழுந்து ஓடுகிறது. இரண்டு பக்கங்களிலும் போக வழியில்லாத புதர்கள், காபித் தோட்டங்கள்” என்று நஞ்சன் விவரித்தான்.
“தண்ணீர் விழுவதைப் பார்த்துக் கொண்டு, பாறையில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடலாமென்று நினைத்தோமே!” என்றாள் உமாதேவி.
“நீங்கள் எங்களால் முடியாதென்று சொல்லி விட்டீர்கள் அல்லவா? வீம்புக்காகவேனும் உருண்டு வருவோம் கீழே!” என்று விஜயா சிரித்தாள்.
“ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். என் மீது பழிவரும்” என்று நஞ்சனும் சிரித்தபடியே வண்டியில் ஏறினான்.
வண்டி செல்கையில், சந்திரா விஜயாவிடம், “உங்கள் ஊர் என்கிறாய்; நீ வந்ததில்லையா இங்கே” என்றாள்.
“ஹ்ம், எப்போதோ ஹட்டிக்கு வருவோம். உடனே திரும்பி விடுவோம். மிஸ்டர் நஞ்சன் அடிக்கடி வந்திருக்கலாம்” என்றாள் அவள்.
வண்டி நின்றது. நஞ்சன் முதலில் இறங்கி நீர் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டினான். குத்தான சரிவுகளுக்கிடையில் மலை முகட்டில் உருண்டு விழுந்து, பள்ளத்தில் குறுகி நெளிந்து, பாறையடியில் செல்லும் பாம்புபோல் கீழே கீழே ஓடிக் கொண்டிருந்தது, ஆறு. காபித் தோட்டங்கள் சரிவு முழுவதும் காணப்பட்டன. கீழே, ஆற்றின் இருமருங்கிலும் அடர்ந்த புதர்கள். அங்கு மனித நடமாட்டமே இல்லாதைக் காட்டின. மேலே சாலையிலிருந்து பார்க்க அழகாக இருந்தாலும், புதர்களும் சரிவும் காலை வைத்துத் துணிந்து செல்ல, நகரத்தில் பழகிய அவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது.
இதற்குள் வண்டிக்குள் இருந்த சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு வண்டியோட்டி வந்த சுப்பையா, “கீழே போகலாமா அம்மா?” என்றான்.
“இத்தனை அழகான இடம், நல்ல பொழுதுபோக்கு ஸ்தலமாயிற்றே? ஏன் நன்றாகக் கட்டக் கூடாது? மிதமான உயரம் வீழ்ச்சி, இரு புறங்களிலும் இழையாக ஒழுகுகிறது; குளிர்காலம்” என்றாள் சந்திரா.
“இங்கே சாலைகள் போட்டு இத்தனை முன்னேற்றம் செய்திருக்கிறார்களே; நீர் வீழ்ச்சியின் பக்கம் போக புதர்களை வெட்டிப் பாறைகளை வழியாக ஒழுங்கு செய்யக் கூடாதா?” என்று விஜயா கேட்டாள்.
“இந்த யோசனையைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆனால், நீங்கள் இப்போது கீழே இறங்கி வரவில்லை என்கிறீர்களா?” என்றான் நஞ்சன்.
“யார் சொன்னார்கள்?” என்று விஜயா காபித் தோட்டத்தில் புகுந்து விடுவிடென்று இறங்கினாள்.
“சரிதான், விஜயா வீம்பைச் செயலில் காட்டுகிறாள், என்னால் நடப்பது சாத்தியம் இல்லை” என்று உமாதேவி, அங்கு இரண்டடி உயரம் விட்டு அறுக்கப்பட்டிருந்த ஒரு ஸைப்பிரஸ் மரத்தை ஆசனமாகக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். சந்திராவோ, சாலையோரப் புல்லுத்தரையில் காலை நீட்டிக் கொண்டு ஓய்ந்து விட்டாள் முன்பாகவே.
விஜயா மட்டும் பச்சைக் காபிச் செடிகளுக்கு மத்தியிலே பசுங்கொடி போல் நீள இறங்கிக் கொண்டிருந்தாள்.
நஞ்சன் இன்னொரு வழியில் இறங்கி, சாப்பாட்டுக் கூடையுடன் ஆற்றின் பக்கம் சென்றுவிட்ட ஆலைக் கூப்பிட விரைந்தான். விஜயா ஒரு பர்லாங்குத் தூரத்தில் திரும்பி, நஞ்சன் ஆளைக் கூப்பிடுவது கண்டு அவனருகில் வந்தாள்.
“அவர்கள் இறங்கவில்லை. அவனை இங்கு வரச் சொல்லுங்கள், மிஸ் விஜயா நான் தவறுதலாக ஏதேனும் கூறியிருந்தால் ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்” என்றான் நஞ்சன் கேலியாக.
“ஏ சுப்பையா! வா, வா” என்று அவள் சைகை காட்டினாள்; கூவினாள். ஆறு விழும் இரைச்சலில், பேச்சுப் புரியுமா?
சுப்பையா மருள மருள விழித்துக் கொண்டு திரும்பலானான்.
“இவ்வளவு துன்பங்களையும் கடந்து அங்கே சென்றால், அத்தனை அழகாக இருக்கும்! நான் போய்விடுவேன். அவர்கள் இருவரும் நடக்க மாட்டார்கள்.”
முன் நெற்றிச் சுரிகுழல் அசைய, அவள் பேசுகையில் நஞ்சன் மிகமிக அருகில் இருந்தான்.
“உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும், விஜயா!” மெதுவான குரல், இதயம் திறந்து அவளுக்குக் கேட்கக் கூடிய குரல் அது.
“நீங்கள் எங்களுக்கு ஜன்ம விரோதிகள்” என்றாள் அவள். விழிகளில் குறும்பு சொட்ட, நேருக்கு நேர் அவனை ஒரு கணம் நோக்கிவிட்டு.
“ஜன்ம விரோதிகளின் பகை, எப்படி முடியவேண்டும் என்று தாத்தா விரும்புகிறாராம் தெரியுமோ?” என்றான் அவனும்.
“நல்ல வேளை! அன்று பஸ்ஸில் நீங்கள் போட்ட சத்தத்தில், நான் ஜன்ம விரோதியானதனால் தான் சண்டைக்கு இழுக்கிறார் என்று அறியாமல் ஒதுங்கினேன். தெரிந்திருந்தால், கோர்ட்டு வரைக்கும் இழுக்கடித்திருப்பேன்!”
“ஓகோ! அந்தப் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி! தாத்தா எனக்கு ஒரு செய்தி சொல்லிவிட்டிருக்கிறார். அது... உன் சம்மதத்துடன் வந்ததா என்பதை நான் அறியலாமா?”
“என்ன செய்தி?”
“நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா விஜயா?”
“ஜன்ம விரோதிகளுக்குள் எத்தனை எத்தனையோ இருக்கும். நான் எப்படி அறிவேன்?”
அவள் உதடுகளில் தான் அப்படிப் பேச்சு வந்தது; கண்களோ, தெரியும் தெரியும் என்று தமுக்கடிக்கும் வகையில் கொஞ்சலாகக் கீழே தாழ்ந்தன.
“உனக்குத் தெரியும். விஜயா, உண்மையில்...”
முகம் சிவந்து ஒளிர, அவள் திரும்பி ஓட்டமாக மேலேறினாள். மேலே, சுப்பையா வந்ததே காரணம்.
“ஓ, விஜயா! எங்கே அங்கே போய் உங்களை விட்டு விட்டு மூவரும் ஊர்க்கதைகள் பேசிக் கொண்டு கூடையைக் காலி செய்ய ஆரம்பித்து விடுவீர்களோ என்று சந்திரா பயந்து விட்டாள்!” என்று சிரித்த உமாதேவி, “மிஸ்டர் நஞ்சன், உங்களுக்கும் விஜயாவுக்கும் ஒரே ஊர் மட்டுமா, உறவும் உண்டா?” என்று விசாரித்தாள்.
நஞ்சன் சிரித்துக் கொண்டே, “எங்கள் தாத்தா நாளில் நல்ல உறவு இருந்தது. அப்புறம் சண்டை வந்துவிட்டது” என்றான்.
“அடாடா!... அப்ப... இப்போது?” என்றாள் சந்திரா.
“சண்டையும் சமாதானமும்” என்றாள் மீண்டும் சிரித்துக் கொண்டே விஜயா செம்மை படர்ந்த முகத்தினளாய், உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கலானாள்.
வானவெளியில் பறக்கும் வானம்பாடியின் நிலையிலே அன்று பிற்பகல் நஞ்சன் வீடு திரும்பி வந்த போது, பாரு, கவலை படிந்த முகத்துடன் அவனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
“இத்தனை நேரம் ஆயிற்றா, நஞ்சா? சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டதே!”
“எனக்குச் சாப்பாடு வேண்டாம் அம்மா!” அவன் வெளியே சென்று வருகையிலே, அவளுக்கு இல்லாத சந்தேகமெல்லாம் தோன்றியது.
“ஆ! எங்கே சாப்பிட்டாய்?”
சில மணிகளின் இன்ப நினைவுகளுக்கு உயிரூட்டி, மௌனத்திலே அசைபோட முடியாமல் செய்யக் கண்ணீரும் கடுமையுமாக அவள் கேட்டது அவனுக்கு எரிச்சலையே மூட்டியது.
“நஞ்சா, நீ என்னை ஏமாற்றுகிறாய், அவளைப் பார்த்து விட்டு வருகிறாய்!” என்றாள் அவள், கண்ணீர் வெடிக்க.
“அட, என்னம்மா! பெரிய ரோதணையாய் விட்டீர்கள்! மனிதனை நிம்மதியாக விடமாட்டீர்களா?”
எரிந்து விழுந்து விட்டு அவன் மீண்டும் வெளியே சென்றான். உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டாற் போல் இருந்தது. பாருவுக்கு, பையன் அவளை விட்டு ஏற்கனவே பிரிந்து விட்டான்!
அவள் அருமையாகக் காத்து நின்ற ஒரே பாசம், அவளை விட்டு அகல அவள் எப்படிப் பார்ப்பாள்? எப்படிப் பொறுப்பாள்?
படித்த பையன்களில் நஞ்சன் தானா அகப்பட்டான், அந்த கிருஷ்ணனுக்கு? எத்தனை எத்தனை சீமான் வீட்டுச் செல்ல மக்கள் இல்லை? அவள் குமுறலுக்கு ஆறுதலே கிடைக்கவில்லை.
ஜோகியோ, நிலம் இல்லை, வேலை இல்லை என்று ரங்கனுடன் அவனை ஒத்த அவன் தலைமுறையைச் சேர்ந்த மக்களிடம் சென்று, ஆற்றாமையைக் கொட்டுவதும், திட்டங்கள் வகுப்பதுமாக நெஞ்சுத் தீயை விசிறி விட்டுக் கொண்டிருந்தார்.
அவர்களுடைய விளைநிலங்களில் தகரக் கொட்டகைச் சாமான் கிடங்குகள் வந்தன; அலுவலகங்கள் முளைத்தன. சாலை வேலைக்காகப் பாறையைப் பிளக்கும் ஒலிகள், மலை முகடுகளை எல்லாம் முட்டி எதிரொலித்தன. அந்த ஒலியைக் கேட்கையிலே ஜோகி நெஞ்சைப் பிடித்துக் கொள்வார். பாருவுக்கோ, பூமித்தாய் அதிர்ந்து துடிக்கும் ஒலியாக அது துன்ப அதிர்வைத் தரும். உன்மத்தம் பிடித்தவளைப் போல் சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவள் உடல் குலுங்கும்.
நஞ்சன் சம்பளம் வாங்கி ஒரு பகுதியைப் பாருவிடம் கொடுப்பதும், பெரும்போது வெளியில் கழிப்பதுமாகக் குடும்பத்தை விட்டே விலகிப் போய்க் கொண்டிருந்தான். இரவு வேலையன்று வீடு வருவதை நிறுத்தினான்; பின்னர் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாலையில் மட்டும் வந்து கொண்டிருந்தான்; மெல்ல மெல்ல அதுவும் நின்றது. அணைக்காலனியில் அவன் தங்க வீடும், ஒத்த சகாக்களும் அவனை இரவிலும் இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டனர். என்றோ ஒரு நாள் ஒப்புக்கு வீடு வருவது வழக்கமாயிற்று.
நஞ்சனுக்கு அன்று இரவு வேலை.
முழங்கால் வரை மறைக்கும் ஜோடும், காதுகளை மறைக்கும் மப்ளருமாக அவன் சுரங்கக் குகைக்குள் நுழைந்த போது, எட்டு மணி, ‘ஷிப்ட்’ முடிந்துவிட்டதன் அடையாளமாகச் சடபட சடபட யந்திரச் சத்தம் மழை பெய்து ஓய்ந்தாற் போல் நின்று விட்டது. கீழெல்லாம் ஊற்றுக்களிலிருந்து கசிந்த தண்ணீர் தேங்கியிருந்தது. நடுவே, பாளம் பாளமாக கற்பாறைகள் கொண்ட தள்ளுவண்டியைத் தண்டவாளத்தில் பேய்போல் ஒருவன் தள்ளிக் கொண்டு ஓடினான். உள்ளே செல்லச் செல்ல வெடிமருந்தின் வேகம்; கற்பொடியின் புகை.
‘ஹெல்மெட்’ தொப்பியணிந்த தருமன் ‘ஷிப்ட்’ முடிந்து நஞ்சனைத் தாண்டி வந்தான். பெரியப்பனின் இரண்டாவது மகன், தருமன்.
தருமன் அங்கு வேலை செய்கிறான் என்பதை நஞ்சன் அறிவான். ஆனால் அந்தப் பகுதிக்கு வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
“ஓ! இன்ஜினீர் ஸாரா?” என்ற தருமன், பல்லிடுக்கில் பீடியை வைத்துக் கொண்டு எகத்தாளமாகக் கேட்டான்.
நஞ்சன் திடுக்கிட்டாற்போல் அவனை ஏற இறங்க நோக்கிவிட்டு, “தருமன் தானே? எப்போது இங்கே வந்தாய்?” என்றான்.
“இன்று தான் இங்கே போட்டார்கள். புது இன்ஜினியரிடம் வந்ததில் சந்தோஷம்” என்றவன் முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றான். வளைந்த குகைவாயில் வரை அவன் சென்று வெளியே மறையும் வரையில் நஞ்சன் ஸ்தம்பித்தாற் போல் நின்றான்.
எகத்தாளம், அலட்சியம்! தருமன் திடீரென்று வேற்றுமை பாராட்டுபவனாக, மரியாதை இல்லாதவனாக எப்படி ஆனான்? பெரியவன் தொண்டை கிழிய, துவேஷப் பேச்சுக்கள் பேசத் தெரிந்தவன்; தருமன் அமைதியான அடக்கமான தம்பி என்றல்லவோ எண்ணியிருந்தான். தந்தையின் கொள்கைப்படி அவன் அணைத்திட்டத்தில் வேலைக்கே வந்திருக்கக் கூடாதே!
‘ஷிப்ட்’ முடிந்து காலையிலே குகையை விட்டு வெளியேறி வருகையில் தான் நஞ்சன் பளிச்சென்று உண்மையைத் தெளிய உணர்ந்தான்.
பாறைகள், வளைவுகள், ஆங்காங்கு வந்து கிடக்கும் பிரம்மாண்டமான குழாய்கள் முதலிய எல்லா இடங்களிலும் காணப்பட்ட அறிக்கைத் தாள்கள், அவனுக்குப் பல செய்திகளைக் கூறின.
மாபெரும் தொழிலாளரின் வேலை நிறுத்தம்!
‘நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தினரின் ஆணவத்தை வெற்றி காண, தொழிலாளத் தோழரே, புறப்படுங்கள், அறப் போருக்கு.’
அதிகார வர்க்கம், தொழிலாளத் தோழர்! தொழிலாளத் தோழர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே மாபெரும் பிளவு இருந்ததை, நஞ்சன் வேலையில் சேர்ந்து சில தினங்களுக்குள்ளேயே அநுபவபூர்வமாகக் கண்டிருந்தான்.
அவன், குட்டி அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவன் அல்லனோ? அதனால்தானோ தருமனின் பேச்சில் துவேஷமும் அலட்சியமும் எகத்தாளமும் மிதந்தன?
அந்தப் புதுப் பிளவு ஏற்றத் தாழ்வுகளை இணைக்கும் உறவை முறித்து விட்டது. உறவல்லாதவரை இணைத்து புதுவிதமான சாதியைக் கற்பித்துவிட்டது.
நஞ்சனுக்கு, இரவெல்லாம் கண்விழித்து, காற்றோட்டம் இல்லாத சுரங்கத்துள் நடமாடிய அலுப்புடன் சோர்வுடனுங்கூட, வேதனையும் கூடியது.
காலனியில் உள்ள வீட்டுக்கு வந்தவன், முகம் கழுவிக் கொண்டு வேலையாள், ‘கான்டீ’னிலிருந்து வாங்கி வந்த காபியை அருந்திவிட்டுப் படுக்கையில் விழுந்தான். அவன் கண்ணிமைகள் படுத்த மாத்திரத்தில் அழுந்திவிட்டன.
வெளியே பனிவெளியில் மிகவும் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்தது. நஞ்சனைப் போன்றவர் நான்கு பேர்கள் வசிக்கும் அந்த இடத்திலேயே, பகல் வேலை செய்யும் சகாக்கள் சிரிப்பும் அரட்டையுமாகத் தடதடவென்று ஜோடுகள் ஒலிக்க வந்தார்கள். வேலைக்காரப் பையன்கள் கொண்டு வைத்திருந்த எடுப்புச் சோற்றை உண்டுவிட்டுச் சென்றார்கள். வேலைக்காரப் பையன்கள் மீதிச் சோற்றை எடுத்துப் பாத்திரங்களைக் கழுவியும் கழுவாமலும் அப்புறப்படுத்தி விட்டு, வெளியறையில் அட்டகாசமாகச் சீட்டாடிக் கொண்டிருந்தனர்.
நஞ்சன் எதையுமே அறியான்.
பொழுது சாய்ந்து தேநீர் குடிக்கும் வேளை ஆகிவிட்டது. வேலைக்காரப் பையன்கள் சீட்டுக் கச்சேரியை முடித்துவிட்டுச் சீவிச் சிங்காரித்துக் கொண்டு வெளியே சென்றனர். வீடு திறந்த வாயிலுடன் வெறிச்சிட்டிருந்தது.
ராமனிடம் செய்தி அனுப்பி ஆறு மாதங்கள் ஓடி விட்டன.
கல்லூரியும் இல்லாத நிலையில், விஜயா, வீட்டுடன் வளைய வருபவளாய், பழைய உற்சாகமும் கலகலப்பும் இழந்தவளாய்ப் பொழுதைத் தள்ளி வந்தாள். நடராஜன் அமெரிக்கா செல்லவில்லை. படித்த பெண்ணாயிற்றே என்று அவன் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் ஹில்வ்யூ மாளிகைக்கு வந்து தைரியமாக அவளை நெருங்க முயற்சிகள் செய்தான். விஜயாவோ, வெளிப்படையாக வெறுப்பைக் காட்டினாள்.
“பெண் கேட்கும் பெரிய இடங்களை எல்லாம் தள்ளிவிட்டு உட்கார்ந்திருந்தால், உங்கள் ஜோகி கௌடர் வருவார் என்பது என்ன நிச்சயம்? அந்தப் பையன் வீட்டுக்கே செல்வதில்லையாம்!” என்று ஹட்டியிலிருந்து எவரோ கொண்டு வந்த செய்தியை வேறு ருக்மிணி கிருஷ்ண கௌடரின் செவிகளில் போட்டு அவரை உசுப்பி விட்டாள்.
அவர் நோட்டம் அறிவது போலவே அன்று மரகத மலைப் பக்கம் கிளம்பினார். கூடவே விஜயாவும் வந்து அமர்ந்தாள்.
விஜயாவை மரகத மலையில் விட்டுவிட்டு, அவர் வண்டியைத் திருப்பிக் கொண்டு காலனிப் பக்கம் வருகையிலே, ராமன் எதிரே கண்டுவிட்டான். வண்டி நின்றது.
“என்ன ராமா? வெகு நாளாயிற்றே!” என்றார் கிருஷ்ணன்.
“ஆமாம். எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா?”
“சுகந்தான். மாமனிடம் நீ ஒன்றும் கூறவில்லையா?”
அவன் முகம் இருண்டது.
“ஜோகி மாமன், பூமி போகிறதென்று பித்தாகி விட்டார். பெரிய மாமனுடன் சேர்ந்து கொண்டு என்ன என்னவோ திட்டம் போட்டிருக்கிறாராம். ஹட்டிப் பக்கம் பேச்சுத் தெரிந்திருக்குமே உங்களுக்கு?”
“ஆமாம். என்னவோ தொழிலாளர் வேலை நிறுத்தத்துடன் அவர்களும் சேர்ந்து எதிர்ப்பு இயக்கம் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பாவம்! மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.”
“வீட்டிலே என்ன சண்டை நடந்ததென்று புரியவில்லை. நஞ்சன் வீட்டுக்கே செல்லக் காணோம். என்ன செய்வது?”
“நஞ்சன் வீடு எங்கே?”
“இங்கே தான்; வாருங்கள் போகலாம். நேற்று இரவு வேலை போல் இருக்கிறது. காலையில் வரும் போது கண்டேன்” என்று ராமன் அவரை அழைத்துச் சென்றான்.
“நஞ்சா!”
சடபட சடபடவென்ற பேரிரைச்சலில், முகமூடியணிந்த உருவங்களிடையே மூச்சுத் திணறுவதுபோல் திண்டாடிக் கொண்டிருந்த நஞ்சன் பட்டென்று கண்களை விழித்தான். கனவா, நினைவா என்று ஒரு கணம் அவனுக்குப் புரியவில்லை.
“நைட் ட்யூட்டியா? உடம்பு சுகம் இல்லையா?” என்று கேட்ட வண்ணம் கிருஷ்ண கௌடர், அங்கே கிடந்த நாற்காலி ஒன்றை இழுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
கண்களைத் துடைத்துக் கொண்டு, தெளிவுடன் நஞ்சன் எழுந்து உட்கார்ந்தான்.
“அத்தான், பையன்கள் இல்லை? மணி என்ன ஆச்சு?” என்றான் பரபரப்புடன்.
“மணி நாலேகால். சாப்பிட்டாயா? காபி வாங்கி வரட்டுமா?”
“அட! இத்தனை நேரமா தூங்கி விட்டேன்? ஒருத்தனும் எழுப்பாமல் போய் விட்டானா?” என்றவன் எழுந்தான். பையன்கள் எவரும் இல்லை என்பதை உணர்ந்தான்.
“தொடர்ந்து நைட் டியூட்டியா?”
“இல்லை, ஒவ்வொரு வாரம் முறை வரும்.”
“பகலுக்கு மாற முடியாதா?”
“எல்லோரும் அப்படித்தானே நினைப்பார்கள்?” என்று சிரித்த நஞ்சன், “உட்காருங்கள், இதோ வருகிறேன். பசி கூடத் தெரியாமல் தூங்கியிருக்கிறேன்” என்று முகம் கழுவிக் கொள்ளச் சென்றான்.
ராமன் வெளியே சென்று, கெட்டிலில் சூடான காபியும் தோசையும் போண்டாவும் வாங்கி வந்தான்.
“முதல் முதலில் பகை தீர வருகிறார். இனிப்புப் பண்டம் ஒன்றும் வாங்கி வரவில்லையா அத்தான்?” என்று கூறிக் கொண்டே நஞ்சன் அவரை உபசரிக்கலானான்.
“பரவாயில்லை, நஞ்சா; நீ சாப்பிடு. உன் ஐயன் என்னுடன் பேசினால் அல்லவோ பகை தீரும்? ராமன் எல்லாம் சொல்லியிருப்பானே!”
“உங்கள் பெருந்தன்மைக்கு நாங்கள் தகுந்தவர் அல்லர்” என்றான் நஞ்சன்.
“ஏன் இப்படிப் பேசுகிறாய் நஞ்சா? அம்மை இஷ்டப்படவில்லையா? ஜோகி விரும்பவில்லையா? இல்லை... உனக்கே...” என்று நிறுத்தி அவனையே பார்த்தார் கிருஷ்ணன்.
“அவர்கள் மனம் மாறுவது நடக்காதது. அணைக் கட்ட வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்கிறார்கள். சாத்தியமா?”
“அப்படியானால், நீ என்ன சொல்கிறாய்?”
“நான் என்ன சொல்வது? ஒன்றும் பிடிக்கவில்லை. இப்போது தூங்கினேனே, அதுவுங்கூட வெறுப்பில் வந்த தூக்கம். எழுந்து நினைவுக்கு வரவே பிடிக்கவில்லை.”
அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
திடீரென்று நினைவுக்கு வந்தாற்போல் நஞ்சன், “அத்தான், நீங்கள் ஸ்டிரைக்கில் சேருபவர் தானே?” என்று கேட்டான்.
ராமன் சிரித்தான்.
“நான் அந்தச் சமயம் பார்த்துப் பழனிக்குப் போகலாம் என்று இருக்கிறேன். இங்கே இருந்து நான் ஊர்வல கோஷங்களில் கலந்து கொள்ளாமற் போனால், லிங்கனும் தருமனுமாக என் காலை உடைத்து விடுவார்கள்.”
“பகையாளியிடம் நட்புக் கொண்டு பழகிய நீங்கள் கருங்காலி வேலை செய்பவர் தானே?” என்று நஞ்சனும் சேர்ந்து சிரித்தான்.
உடனே, “பழனிக்குப் போவதானால் நானும் வருகிறேன், அத்தான். இந்தச் சூழ்நிலையை விட்டு எனக்கும் இரண்டு நாள் போய் வந்தால் தேவலை என்று தோன்றுகிறது!” என்றான்.
கிருஷ்ண கௌடர் முறுவல் பூத்தார்.
“நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?”
நஞ்சன் கேட்கும் பாவனையில் அவரை நோக்கினான்.
“பெரிய வண்டியை எடுத்துக் கொண்டு, விஜயாவையும் எங்கள் வீட்டாரையும் அழைத்து வருகிறேன். பழனியாண்டவர் சந்நிதியில், கல்யாணத்தை முடித்து விடுவோம்” என்றார்.
“அதுவும் சரிதான். திங்கட்கிழமை ஸ்டிரைக். செவ்வாய்கிழமை இல்லை; புதன்கிழமை நல்ல நாளா என்று பாருங்கள். இல்லை, திங்கட்கிழமையே உகந்ததானால் மிக்க நலம். ஞாயிற்றுக்கிழமையன்று, கிளம்பி விடுவோம்” என்றான் ராமன், தமாஷாகப் பேசுவது போல.
நஞ்சனுக்கு இன்ப அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது அந்தப் பேச்சு.
“அதுவும் சரிதான். சாயங்காலம் காரிலேயே கிளம்பினால் இரவே பழனிக்குப் போய்விடலாம். நான்கு நாட்கள் சேர்ந்தாற் போல் லீவு போடு. கல்யாண அதிர்ச்சி, முதியவர்களின் மனசைத் திருப்பிவிடும்” என்றார் அவர் மீண்டும்.
“சதி செய்கிறீர்களே!” என்றான் நஞ்சன், நாணம் கலந்த புன்னகையுடன்.
“சதியில் உனக்கு விருப்பந்தானே? மனப்பூர்வமாகச் சொல் நஞ்சா; நான் விளையாடவில்லை. விஜயாவுக்கும் வேறு எத்தனையோ பேர்கள் வந்து கேட்டும் மனம் பிடிக்கவில்லை. உன் பேரைச் சொன்னால் தான் அவள் வாயிலிருந்து எதிர்ப்பு வரவில்லை.”
நஞ்சன் தலை குனிந்திருந்தான்.
“ஜோகியை நான் போய் இன்று பார்க்கட்டுமா? அம்மையைக் கண்டு நான் கேட்கட்டுமா?” என்றார் அவர்!
நஞ்சன் பரபரப்பாக, “வேண்டாம், வேண்டாம். கசப்பான அநுபவங்கள் ஏற்படும்” என்றான்.
“எனக்குப் புதிதல்லவே?”
“அதை விடக் கசப்பாக இருக்கலாம். அப்போது ஐயன் தனியாக இருந்தார். இப்போது, பெரியப்பனுடைய பொறாமை நெருப்பும், அவருடைய ஏமாற்றத்தில் கனிந்த கசப்பும் கலந்து எப்படி உருவெடுக்குமோ? வேண்டாம்.”
“அம்மை?”
“அம்மையின் உலகம் மிக மிகக் குறுகியது. அவர்களுக்கெல்லாம் தெரிவித்து, சம்மதப்பட்டு நீங்கள் மணமுடிக்க வேண்டுமென்றால் அது இந்தப் பிறவியில் இல்லை.”
“அப்படியானால்... நீ... நான் உன்னைக் கட்டாயப்படுத்த முடியாது. நீ வேறு பெண்ணை மனசில் வைத்து மணப்பதாக இருந்தால், நான் உன்னை என் சுயநலத்துக்காகக் கட்டாயப்படுத்த முடியாது. நஞ்சா உன் நலனிலும் விஜயாவின் மகிழ்ச்சியிலும் சொந்தமாக விருப்பம் கொண்டு கேட்கிறேன். எப்போதும் எவருக்கும் கெடுதல் விளைய வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை. சமய சந்தர்ப்பங்கள் என்னைச் சதி செய்திருக்கலாம். நான் கோழை.”
பழைய எண்ணங்களில் அவர் தொண்டை கரகரத்தது.
வளர்த்தேன் என்ற முறையில் அம்மையின் குறுகிய, கழுத்தைப் பிடிக்கும் பாசம் எங்கே? இவருடைய மனம் எங்கே? இந்த நல்ல மனிதரின் சம்பந்தத்தால் ஒரு நாளும் தீமை விளைய முடியாது.
“நஞ்சா!”
“விஜயாவுக்கும் விருப்பமுண்டானால், நான் அதிர்ஷ்டசாலி” என்றான் தலைகுனிந்தபடியே.
கிருஷ்ணன் எதிர்கால நம்பிக்கையின் நல்லொளி காணப்பெற்றவராக, அங்கிருந்து அகன்றார். மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு முன்னேற்பாடான வேலைகள் எப்படித் துரிதமாக நிறைவேறினவோ, அப்படி நஞ்சனின் திருமண ஏற்பாடுகளும் வெளிக்குத் தெரியாமல் நிறைவேறின. புதனன்று திருமணநாள் குறிப்பிட்டு அவர் செய்தி அனுப்பி விட்டார்.
ஆனால், ஞாயிறு இரவு, நஞ்சனுக்குத் தட்ட முடியாமல் வேலை வந்தது. அன்று முறை பார்க்கும் இளைஞன், ஊரிலிருந்து அவசரச் செய்தி வந்ததனால் அன்று மெயிலில் சென்னை கிளம்பிச் சென்றான்.
‘ஷிப்ட்’ முடிந்து அதிகாலையில் கிளம்பி வருவதாக அவசரமாக கிருஷ்ண கௌடருக்குச் செய்தி கூறிவிட்டு, சனி இரவு அவன் பணியிடம் சென்றான். திரும்பி வருகையிலே, தொழிலாளர் கூட்டத்துக்கான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி விட்டதன் அறிகுறிகளைக் கண்டான். வீட்டிலே ராமனை எதிர்பார்த்து, அவன் பரபரப்பாக முன் அறைக் கதவைத் திறந்து செல்கையிலே... பாரு, அவனுடைய அம்மை, ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.
பாருவுக்குச் சதியை உடைத்தவன் ராமன் தான் ராமன், மாமிக்கும் நஞ்சனுக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தையையோ மனஸ்தாபத்தையோ அறியான். ஆனால், தான் தெரிவித்த செய்திகளை முன்பே அவன் மாமிக்குக் கூறியிருப்பான் என்று மட்டும் நினைத்தான். ஆனால், அவன் மீது உயிரையே வைத்திருக்கும் அம்மைக்கும் தெரிவிக்காமலா நஞ்சன் மணம் புரிந்து கொள்வது? நஞ்சனின் தீர்மானம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அது குறித்து அவன் நஞ்சனிடம் பேசவும் விரும்பவில்லை.
அவளுக்குச் செய்தி தெரிவிப்பது தன் கடமை என்று எண்ணியே, ஞாயிறன்று பிற்பகல் ராமன் மாமியைத் தேடிச் சென்றான். முன்வாயில் வெயிலில் அவள் உட்கார்ந்திருந்தாள். முன்பெல்லாம் வீட்டுக்கு எவரேனும் வந்தாலே, கண்கள் ஒளிர, அவள் முகம் மலரும்.
அந்த ஒளியும் மலர்ச்சியும் அவள் முகத்தில் இப்போது தோன்றவில்லை. ஏற்கெனவே எண்ணற்ற சுருக்கக் கீற்றுகளை உடைமையாக்கிக் கொண்டிருந்த அவள் முகம், பனி வெயிலுக்கு இன்னும் வற்றி, எலும்புகள் முட்ட, உலர்ந்து சுக்காக இருந்தது.
“ராமனா?” என்றாள், “நல்லா இருக்கிறாயா?” என்று சம்பிரதாயக் கேள்விகளுக்குக் கூட அவள் வாழ்வில் பசை வற்றி விட்டது.
“நல்லா இருக்கிறீர்களா மாமி?”
நல்லா இருக்கிறீர்களா! எப்படி இருக்க முடியும்? ஏக்கப் பெருமூச்சு ஒன்று அவள் மார்புக் கூட்டைப் பிளந்து வந்தாற் போல வந்தது. தலையை மட்டும் ஆட்டினாள்.
“மாமன் எங்கே?”
“மாமன் எங்கோ போகிறார்; எப்போதோ வருகிறார். அவன் போனதிலிருந்து அவரும் வீட்டுக்குச் சரியாக வருவதில்லை.”
ராமனின் நெஞ்சு கசிந்தது.
“பையன் இருந்தான். ஜோகியண்ணனுக்கு இங்கு உறவு இருந்தது. அவன் போனான். அவரும் போகிறார். வீட்டில் நான் தான் இருக்கிறேன்.”
“நஞ்சன் வருவதே இல்லையா, இங்கே?”
“எப்போதோ வருவான். அவனுக்கு இனி அம்மை எதற்கு?”
அதைக் கூறுகையிலே அவள் கண்கள் குளமாகிவிட்டன.
“மாமி!... ஒரு... ஒரு... சமாசாரம் சொல்ல நான் இங்கு வந்தேன்.”
“என்னது?”
“நஞ்சனுக்கு நாளைப் புதனன்று கல்யாணம்.”
“என்னது?”
அவள் செவிகளில் பூமியைத் துளைக்கும் பேரிடி விழுந்ததா? உடல் குலுங்கி அதிர்ந்தது. ராமன் பொருட்படுத்தாமல் பேசினான்; “கிருஷ்ண கௌடர் வீட்டுப் பெண் தான். நஞ்சன் அதிருஷ்டக்காரன். அவனைக் கட்டுகிறவளும் அப்படித்தான். பழனிமலை வேலன் சந்நிதியில் கல்யாணம்.”
நெஞ்சைச் சுருக்கிட்டுப் பிடிப்பது போல் பந்தாக அடைத்தது அவளுக்கு.
“அவன் சூழ்ச்சி, அவன் வீட்டுப் பெண் தானே? சதிகாரி, என் மகனை உயிரோடு இழுத்துக் கொண்டாளே!”
ராமன் திடுக்கிட்டான். “மாமி! பதற்றமாகப் பேசாதீர்கள்.”
“ராமா, எப்படியாவது நீ அந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்த மாட்டாயா? அந்தப் பாவி, என் மகனை உயிரோடு இழுத்துக் கொள்கிறான். என் வீட்டில் பச்சை இல்லை; உயிர் இல்லை. சூனியமாய்ப் போய்விட்டது.”
“அழாதீர்கள் மாமி, நஞ்சனின் சந்தோஷம் உங்கள் சந்தோஷம் இல்லையா? அவன் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறான். நீங்கள் சந்தோஷப்பட வேண்டி இருக்க மனசு கொதிக்கலாமா? எங்களுடன் வாருங்கள். பழனி மலைக்குப் போவோம். சந்தோஷமாக மணம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”
ஆனால் அந்த இதமான மொழிகளெல்லாம் அவள் செவிகளில் விழுந்தால் தானே?
“நீ... நீதானே என்னை ஏமாற்றிச் சதி செய்தாய்? படிக்க வைக்க நான் பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்தப் பாவியினிடம் பல்லைக் காட்டி, என் மகனை அவர்கள் விரித்த வலைக்கு இழுத்து விட்டவன் நீ... நீ!”
ராமன் அவள் கத்தலைக் கேட்டுப் பதறினான். “மாமி, என்ன பேச்சு நீங்கள் பேசுகிறீர்கள்?”
“நஞ்சன் படிக்காமலே இருந்திருந்தால் நன்றாக இருக்கும். மண்ணில் பாடுபட்டு வேலை செய்வான். அப்போது மண்ணும் போயிருக்காது. அவர்கள் வலையிலும் விழ வேண்டாம். என்னை விட்டு என் பையன் போக மாட்டான். ஐயோ!”
உடல் குலுங்கும் அவள் விம்மல்களை அவனால் காணக் கேட்கத் தாளவில்லை. ஏன் வந்தோம் என்ற நோவுடன் திரும்பிவிட்டான்.
அவன் சென்ற பின்புதான் பாரு, தன்னையே மறந்த வெறியுடன் அணைக்காலனிப் பக்கம் நடந்து சென்றாள்.
ஒரு வீட்டு வாயிலில் நின்ற பெண்ணிடம் பாரு கூனிக்குறுகி, “இஞ்ஜினீர் நஞ்சன் வீடு எது?” என்று தாய்மொழியில் கேட்டாள்.
“ஓ! மேலே, நாலாவது வீடு, பாருங்கள்” என்று அவள் காண்பித்தாள்.
அவள் காட்டிய வீட்டில் முன் வாயிலில் வேலைக்காரப் பையன்கள் இருவர் கோலி ஆடிக் கொண்டிருந்தனர். அவள் படபடப்புடன் வாயிலில் நின்றாள்.
“யாரம்மா நீங்கள்!” என்றான் ஒரு பையன்.
“இன்ஜினீர் நஞ்சன்...”
“ஓ, அவர் நைட் ஷிப்ட். இப்போதுதான் போனார். மணி அஞ்சரை ஆகிறதே! இனிமேல் காலையில் தான் அவர் வருவார்.”
பகல் வேலைக்குப் போனவர்கள் அணியணியாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். புரிந்தும் புரியாமலும் கூசிக் கொண்டு அவள் நஞ்சன் வருகிறானோ என்று நின்றாள்.
“காலையில் வருவார் அம்மா, போங்கள்” என்று இன்னொருவன் அவளுக்குப் புரிய விளக்கினான்.
இரவை அவள் எப்படிக் கழித்தாள் என்று சொல்வதற்கில்லை. அதிகாலை நேரத்திலேயே அவள் மூக்குமலையை விட்டுக் கிளம்பி, காலனி வீட்டுக்கு வந்து விட்டாள். சாத்தியிருந்த கதவை அவள் இடித்த போது, அவளுக்குப் பரிச்சயம் இல்லாத நஞ்சனின் சகபாடி தான் வந்து கதவைத் திறந்தான்.
அவள் ஏதும் பேசுமுன்னரே, “வாங்க, நஞ்சனைத் தேடி வந்தீர்களா? உள்ளே வாங்கம்மா, நஞ்சன் வரும் நேரந்தான்” என்று அவளை முன்னறையில் அழைத்து உட்கார வைத்து விட்டுச் சென்றான். வேலைக்காரப் பையன் சூடாகக் காபி கொண்டு வந்து அவள் முன் வைத்தான். உள்ளம் பெருமிதம் அடைந்து தளும்ப வேண்டிய அந்த நிமிஷத்திலே அவள் வாயிற்புறமே இரு விழிகளை ஊன்றியவளாகக் கணம் யுகமாக நின்றாள்.
அவன் வந்தான்; அலங்கோலமான தலை; கற்புழுதி படிந்த உடுப்புகள்; சிவந்த கண்கள். படியேறி அவன் வந்ததும் முதல் முதலாக நிமிர்ந்து அவளைத்தான் பார்த்திருக்க வேண்டும்.
பிடிவாதமும் முட்டாள்தனமும் பாசமும் அன்பும் கூட்டிக் கலந்து வார்த்தாற் போன்ற வடிவினளாக அங்கே தோன்றிய அம்மையைக் கண்டதும், ஆத்திரப்படுவதா, இரக்கப்படுவதா என்று புரியாதவன் போல் அவன் நின்றான்.
“எங்கே அம்மா வந்தீர்கள்?” என்றான், அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டவனாக.
“உனக்கே நன்றாக இருக்கிறதா, நஞ்சா? நீ... நீ வீட்டுக்கு வராமல் வீடே சூனியமாய்ப் போச்சு!”
பேச்சு அதற்கு மேல் எழும்பவில்லை. கண்ணீர் முட்டிப் பேச்சைக் கரைத்தது, உருவாகுமுன்.
அவனுடைய சகபாடிகள் இருவரும் அந்த அழுகைக் குரல் கேட்டு எட்டிப் பார்த்தனர். அவனுடைய வாலிப உள்ளத்துக்கு, அம்மை அங்கு வந்து தனக்கு அவமானத்தைத் தேடித் தந்தாற் போல் தோன்றியது.
“சரி நான் வீட்டுக்கு வருகிறேனே! சொல்லி அனுப்பினால் போதாதா? நீங்கள் எதற்கு வந்தீர்கள்” என்றான்.
“இப்போது வருகிறாயா?” என்றாள் அவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
“மனிதனை உயிருடன் கொன்று விடுவீர்கள்!” என்று எரிந்து விழுந்தான் அவன்.
“இப்படியெல்லாம் பேசாதே, நஞ்சா. நான் அன்று சொன்ன வாக்கை மீறி நீ கல்யாணம் செய்வது சரியாகுமா? அம்மை உனக்குக் கெடுதலா சொல்வேன்? என்றைக்கேனும் நான் உனக்குக் கேடு நினைத்திருக்கிறேனா? நீ எட்டு மைல் நடந்து படிக்கப் போகையிலே, நான் பட்ட பாட்டை அறிவாயா? ஒருநாள் நீ பட்டினியுடன் ஸ்கூல் போன போது, நானும் பட்டினியாய்ப் பிச்சை கேட்கப் போனது தெரியுமா? உன் அம்மையை விட்டுப் போகிறாயே நஞ்சா!”
அந்த அழுகைப் பிரளயத்தை ஏற்க, அவனுக்கு அப்போது பொறுமை இல்லை.
“அந்தப் புராணத்தை இப்போது ஏன் அவிழ்க்கிறீர்கள்? படித்து, எல்லாம் ஆயிற்றே! அப்பப்பா! நீங்கள் என்னைப் படிக்கவே வைத்திருக்க வேண்டாம்” என்று முணுமுணுத்தவனாகத் தலையைக் குனிந்த வண்ணம் அவன் உள்ளே சென்று விட்டான்.
தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்த அவனுக்கு உலகமே சுற்றினாற் போல் இருந்தது. கடந்த காலம், சீர் இல்லாத பெற்றோரின் தொடர்பு இரண்டுமே அந்தச் சுழற்சியில் மறக்கலாகாதா? இல்லை, சீராகக் கூடாதா?
கல்யாணச் செய்தியை அவளுக்கு யார் கூறியிருக்கக் கூடும்? கிருஷ்ண கௌடர் போயிருப்பாரோ?
அவனுடைய நண்பர்கள் காலை வேலைக்குக் கிளம்பிவிட்டார்கள். வேலைக்காரன் அவளுக்குக் காபி பலகாரம் கொண்டு வந்து வைத்தான். இரண்டு மணி நேரம் சென்ற பின்னர் அவள் எட்டிப் பார்த்தாள். அவனுக்காகவே அவள் நின்றாள்.
நாளை மறுநாள் மணக்கோலத்தில் இருக்க வேண்டியவன் அவன். கீழ்மலைப் பக்கம், கிருஷ்ண கௌடரைச் சேர்ந்தவர்கள், ராமனுடைய வண்டியை வைத்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருப்பார்கள்! என்ன செய்வான்?
“அம்மா, நீங்கள் நல்ல தாயாக இருந்தால், சந்தோஷமாகக் கல்யாணத்துக்கு என்னுடன் வாருங்கள். வீணான பிடிவாதம் செய்யாதீர்கள். இதே போல் வீட்டில், நீங்கள் மருமகளுடன் சந்தோஷமாக இருக்கலாம் அம்மா!”
“உன்னை அவர்கள் விட மாட்டார்கள்.”
“அம்மா, உங்களுக்குச் சத்தியவாக்குக் கொடுக்கிறேன். நான் அப்படி ஒருநாளும் கட்டினவள் வீட்டுடன் உங்களைப் புறக்கணித்துச் செல்லமாட்டேன். இப்போதே நீங்களும் கிளம்பி வாருங்கள். உங்களையும் அநாவசியமாக வருத்திக் கொண்டு என்னையும் துன்புறுத்தாதீர்கள். இப்படியா அம்மா உங்கள் மகன் கல்யாணம் நடக்க வேண்டும்? ஐயனும் சந்தோஷமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”
“நிச்சயமாக நீ கல்யாணமானதும் என்னை விட்டுவிட மாட்டாயே?”
“சத்தியம், சத்தியம், சத்தியம்! நான் சொல்வதை நம்புங்கள். உங்களைப் புறக்கணித்துப் போகும் கீழ்மகன் அல்ல அம்மா, நான்.”
அவனையே அவள் உற்றுப் பார்த்தாள். சத்தியத்தைப் பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு நம்பலாமா?
“கல்யாணம் செய்து கொண்டு, இதே வீட்டில் இருப்போம், உங்களுடன், ஐயனுடன். ஐயன் நினைப்பது போல் கிருஷ்ண கௌடர் நம்மைக் கெடுப்பவர் அல்லர். அப்படி நினைப்பது பாவம், அம்மா! சுயமாக ஐயன் நினைக்கவில்லை. பெரியப்பா நினைத்து, அவரை ஆட்டி வைக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள், அம்மா!”
“நான்... நான்... உன்னுடன் வரட்டுமா?”
“எத்தனை மகிழ்ச்சி தரும் செய்தி அம்மா எனக்கு! இதோ குளித்து விட்டு உடை மாற்றி வருகிறேன். கீழ்மலையில் நமக்கு வண்டி காத்திருக்கும்.”
பாரு மாறி மாறி வரும் உணர்ச்சிகளுடன் இன்னமும் அங்கே நின்றாள்.
சற்றைக்கெல்லாம் வேலைக்காரனிடம் அவன் சொல்லி விட்டு, அம்மை உடன் வர, கைப்பையுடன் கிளம்பினான். விஜயாவுக்கென்று அவன் ஒரு சிறு பரிசு கூட, வாங்கவில்லை.
இருவருமாகச் சாலைக்கு ஏறி வருகையிலே, மலைமுகடுகளில் பட்டு எதிரொலிக்கும் கோஷங்கள் செவிகளை அடைத்தன.
செங்கொடியைத் தாங்கிய மக்கள் சாரிசாரியாகத் தகரக் கொட்டகைத் தலைமை அலுவலகத்தின் முன் எங்கிருந்து வருகிறார்கள்?
“அழிக! அதிகாரிகள் அக்கிரமம் அழிக! நியாயமான எங்கள் உரிமைகளை மறுக்கும் அதிகார வர்க்கம் அழிக!” என்ற பலப்பல கோஷங்கள்!
பாரு அஞ்சினாள்; அவள் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் பற்றி அறியாள். நிலம் தரமாட்டோம் என்று கிளர்ச்சி செய்பவர்களா அனைவரும்?
நஞ்சனுடன் அவளால் ஓட முடியாது போல் இருந்தது. அலுவலகங்களின் முன், கடலாகப் பெருகிய அலை மோதிய கூட்டத்தைக் கடந்து, குறுக்குப் பாதையில் நஞ்சன் கீழே இறங்கினான்.
அப்பப்பா! சாலையில், கீழ்மலைப்பக்கம், கொஞ்சமான கூட்டமா? ஜீப்புகளும் போலீசு வண்டிகளும் தவிர, வேறு ஒரு வண்டி செல்ல இடமில்லை. காக்கி உடை தரித்த விசேஷப் போலீசார், நீல உடை தரித்த சாதாரணப் போலீசார் நூற்றுக்கணக்கில் வந்திருப்பாரோ!
நஞ்சனுக்கு உள்ளூற ஆத்திரம் பொங்கியது. அந்தக் கூட்டங்களையும் கலவரங்களையும் கடந்து, அவன் ராமனை எப்படிப் பார்ப்பான்? கடைத் தெருக்கள், சந்து பொந்துகள் எங்குமே பிதுங்கும் கூட்டத்தை எப்படிக் கடப்பான்?
அவனை அறியாமலே, ஏதோ விபரீதம் ஏற்படும் என்ற உள்ளுணர்வு, குளிர்போல் சிலிர்ப்போடியது. அம்மையின் கையைப் பிடித்துக் கொண்டு விரைவாக மறுபடி கீழ்மலைக்குச் செல்ல முயன்றான்.
“இத்தனை பேருக்குமா நிலம் போய்விட்டது நஞ்சா?”
“இல்லை. இங்கே அவரவர் ஊரை விட்டு நெடுந்தூரம் வேலை செய்ய வந்திருப்பவர்கள் எல்லோரும். சம்பளம் அதிகம் வேண்டுமாம்!”
“ஆ! இத்தனை பேர்களுமா ஊரை விட்டு வந்தவர்கள்?”
“ஆமாம். வெயில் காயும் ஊர்களிலிருந்து, பழக்கமில்லாத குளிரையும் பொறுத்து, பிழைப்பை நாடி வந்தவர்கள். அவரவர்கள் ஊர்களில் தண்ணீர் இல்லை. வேலை இல்லை. சோறு இல்லை. இத்தனை பேரும் இந்த அணையால் சோறு உண்கிறார்கள்.”
டுமீல்! டுமீல்!
நஞ்சன் அதிர்ந்து திரும்பினான்; பாரு இருதயம் நின்று விட்டாற் போன்ற பீதியுடன் நஞ்சனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
எங்கே? எங்கே?
சமாளிக்க முடியாத குழப்பம், போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொண்டு விட்டதை அவன் அறிந்து கொண்டான்.
நெஞ்சு பதைபதைக்க, முன்னும் திரும்ப முடியாமல், பின்னும் திரும்ப முடியாமல் அவன் ஓரமாக நின்றான்.
கூட்டத்தில் பரபரப்பு; குழப்பம்.
தீப்பந்தம் கண்ட தேனடை போல், அலுவலகத்துக்கு முன் கூடிய கூட்டம் சிதறியது. வண்டிகள் பாய்ந்து புகுந்தன. போலீசார் புகுந்து சுழன்றனர்.
நஞ்சன் அம்மையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குறுக்குப் பாதையில் விடுவிடென்று இறங்கினான்.
“புரட்சி ஓங்குக... புரட்சி...!” சிதறிய கூட்டத்தின் சின்னாபின்னமான ஒலிகள்.
கீழ்மலைப் பஸ் நிறுத்தத்தில் - ராமன் எங்கே?
அங்கே கிருஷ்ண கௌடரின் வண்டியும் இல்லை; ராமனையும் காணவில்லை.
அவன் கண்கள் அங்கே கசமுசத்த கும்பலைத் தேடித் துருவுகையிலே, எதிரே கணக்கர் ‘பஞ்சாமிர்தம்’ அவன் கண்ணில் தென்பட்டார். அவர் பாதையைக் கடக்கு முன் ஆம்புலன்ஸ்களும் நாலைந்து ஜீப்புகளுமாகப் பாதையிலே வரிசையாகச் சென்றன.
“என்ன ஸார்? ஷூட்டிங் செய்து விட்டார்களாமே? அநியாயம்!” என்று கேட்டுக் கொண்டே அவர் வந்தார்.
“புரியவில்லை” என்றான் நஞ்சன் இன்னும் கூட்டத்தைத் துழாவிய வண்ணம்.
“நான் லீவு போட்டுவிட்டு, பஸ்ஸில் ஊட்டிக்குப் போகலாம் என்று வந்தேன் ஸார். முட்டாள் பயல்கள்! அணை எதிர்ப்பாம், பூமியைப் பறித்துக் கொண்டதற்கு இன்றைக்குப் பார்த்து இவர்களுடன் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டார்களாம். குண்டுபட்டவனைத் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் போகிறது, பார்த்தீர்களோ இல்லயோ?”
“குண்டு பட்டதா? ஓ!”
ஐயனும் அந்த ‘முட்டாள் மனிதர்’களில் ஒருவராக எங்கே நின்றாரோ?
அப்படி நினைக்கையிலே உடலில் சிலிர்ப்பு ஓடியது நஞ்சனுக்கு.
“அம்மா, ராமன் இல்லை. நாம் எப்படியேனும் ஹட்டிக்கு நடந்து போய்விடுவோம். கலாட்டா அதிகம்” என்று அவன் கூறி, இரண்டு அடிகள் பாதையில் எடுத்து வைக்கு முன்னே வண்டி ஒன்று அவர்களைக் கடந்து, பறந்து சென்றது. அழுகுரலும் காற்றுடன் தேய்ந்து சென்றது.
“ரங்கே கௌடர் சம்சாரம் போறாங்க போல் இருக்கிறது. பாவம்! ரங்கே கௌடருக்குத்தான் குண்டு வயிற்றிலே பாய்ந்து முதுகிலே வந்திருக்கிறதாம்!”
நஞ்சனின் மண்டையில் ஓங்கி யாரோ அறைந்தாற் போல் இருந்தது.
ரங்கே கௌடர்...
கண்கள் ஒரு கணம் இருண்டன. செவிகள் குப்பென்று மூடிக் கொண்டன. அவன் அம்மையை இழுத்துக் கொண்டு அப்போது கிளம்ப இருந்த பஸ் ஒன்றில் தாவி ஏறினான்.
பாருவுக்கு விஷயம் புரியவில்லை; புரிந்து விட்டாற் போல் கேட்கவும் நா எழவில்லை. நஞ்சன் ஏன் அவள் முகத்தைப் பார்க்கவில்லை.
கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பையனா அவன்? இது கல்யாண யாத்திரையா?
பஸ் வெறி பிடித்தாற் போல் அவர்களை எங்கோ சுமந்து செல்கிறது; எங்கே? எப்படிக் கேட்பது?
பாருவுக்கு வயிற்றைப் புரட்டியது; கலங்கியது. நஞ்சன் அவளைத் தோளோடு சாத்திக் கொண்டான். அப்போதுங் கூட அவன், “ஏனம்மா, உடம்புக்கு என்ன?” என்று கேட்கவில்லை. ஏனோ கேட்கவில்லை.
பஸ்ஸை விட்டு இறங்கியதோ, மகன் அவளை டாக்ஸியில் ஏற்றியதோ அவளுக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால் ஆஸ்பத்திரி வாயிலில் அவள் கண்களை விழித்தாள்.
அன்று நஞ்சனுடைய அம்மை கிரிஜை வண்டியை விட்டு இறக்கப்பட்டதும், மறுபடி எல்லோரும் அலறிக் கொண்டு வண்டியில் ஏறியதும் நினைவுக்கு வந்தன.
யார் யார்? அவள் தான் இறந்து விட்டாளா? ஆவி உருவத்தில் நடக்கிறாளா? அவளைச் சுற்றி எல்லோரும் அழுவானேன்?
“நான் தான் மாபாவி, நான் தான் தூண்டி விட்டேன்” என்று ஜோகியண்ணன் அழுகிறாரே?
என்ன ஆயிற்று?
“வேண்டாம், வேண்டாம் என்றேன், கேட்டாரா?” என்று கௌரி அழுகிறாளே?
போலீசு தடதடவென்று போயிற்று.
கிருஷ்ணன்... கிருஷ்ணன், இவன் எங்கே வந்தான்? அவள் சாவுக்கு அவனும் வந்திருக்கிறானா? உண்மையில் அவள் இறந்து போனாளா?
இல்லை, இறந்து போனால் தெளிவாகப் பார்க்க முடியுமா? அவளை ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார்கள்; கூடி அழுகிறார்கள்!
“அண்ணி! என் வெறியில் அண்ணனின் பொறாமை வெறியும் கூடி அவனைப் பொசுக்கி விட்டது அண்ணி. அண்ணன், ரங்கண்ணன் போய்விட்டான்.”
ஆ! அண்ணன் போய்விட்டான்! அண்ணன், அவள் கணவன் - ரங்கன்!
இடியாய், பாறையாய் நெஞ்சில் ஏதோ உட்கார்ந்து விட்டாற் போல் அவள் நிலைத்து விட்டாள்.
“ஜோகி, மனசு தளர விடக் கூடாது. என்ன செய்வோம்? என் இரத்தத்தைக் கொடுத்து ரங்கன் உயிரை மீட்பதாக இருந்தாலேனும் நான் பாக்கியவான் என்று முன்னே சென்றேன். பயனே இல்ல. நம்முடைய பகை உயிர்ப்பலியுடன் தீரட்டும், ஜோகி!” - கிருஷ்ணனின் சொற்கள் அடைப்பட்ட சோகக் குரலில் வந்தன.
“நான் பாவி, நான் பாவம் செய்தேன்; அடங்கியிருந்த பொறாமைத் தீயை நான் தூண்டி விட்டேன். கிருஷ்ணா, நானும் பொறாமைப் பட்டேன். உன் நிலம் போகவில்லை என்று பொறாமைப்பட்டேன்.”
“வேண்டாம், வேண்டாம்.”
நெடுங்கைகள், பகை மறந்த நிலையில் அன்று மரணத்தின் சந்நிதியில் பிணைந்தன.
புதன்கிழமையன்று அதிகாலையிலே, பனி மூட்டத்தைப் பிளந்து கொண்டு கனகமயமான கதிர்கள் மரகதமலை ஹட்டியைத் தழுவின.
மரகதமலையே கூட்டம் தாங்காமல் அமுங்கி விடுமோ என்று ஐயுறும் வண்ணம், ஒரே கட்சியாய் மக்கள் ரங்கே கௌடரின் அந்திய யாத்திரையைக் காணக் கூடினார்கள். லிங்கையாவின் மரண நிகழ்ச்சிக்குப் பிறகு, மக்களிடையே கட்சிப் பிளவைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த அந்தச் சாவுக்குப் பிறகு, மலைமக்களிடையே நிகழ்ந்த எந்த ஒரு மரணச் சடங்குக்கும் இப்படிக் கூட்டம் கூடியதில்லை என்று சொல்லும்படி மக்கள் கூடினார்கள்.
அந்தச் சாவுச் சடங்குகளில், போலியான கண்ணீரும் விருந்தும் களிப்பும் சிரிப்புமில்லை. இறுதியான மரியாதைகளை இறந்தவனுக்கு ஒவ்வொருவரும் அவரவர்க்கு உரிய முறையில் செலுத்தச் சாரிசாரியாக வந்தனர்.
பழுத்த பழமாக உண்டி சுருங்கி, உடல் சுருங்கி, நாட்கணக்கென்று, அறையோடு கிடந்த முதியவர் மாதனை, கண்களில் நீர் பெருகக் கிருஷ்ணன் அழைத்து வந்தார்.
கிழவர் அறையோடு அடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பேச்சுக் குழற, நினைவு மறக்க, இந்த ஒரு சம்பவத்துக்காகவே உயிர் வாழ்ந்தாரோ அவர்!
நாற்காலியில் அமர்ந்தபடி, கூட்டத்தையும், எதிரே சப்பரத்தில் கிடந்த மைந்தனின் கோலத்தையும் கண்டார். அளிந்த பழமெனத் தோன்றிய அவர் முகத்தில், முதிர்ந்த விதைகளைப் போன்ற கண்கள் நீரில் மிதந்தன.
அருகில் இருந்த கிருஷ்ணனைத் தொட்டார்; ஜோகியைப் பற்றினார்.
இருவரும் அவர் குறிப்பை அறிந்தாற் போல் அவரைத் தாங்கி எழுப்பினர். முதியவரின் கண்களில் ஒளி தனியாகப் பொங்கி பெருகி வந்ததோ என நீர் வழிந்தது.
தள்ளாடும் கால்களுடன், வானை நோக்கி, ‘ஹாவ், ஹாவ்’ என்று கூறிய வாய் குழறியது.
அடி தப்பாமல் பெரியவர், இருவரையும் பற்றி, பிண ரதத்தை வலமாக வருகையில் இன்னும் பலரும் சேர்ந்து கொண்டனர்.
அது நடனமாக இல்லை.
மைந்தனின் உயிர்ப்பறவை, ஆசாபாச வெறிகளுக்கு இருப்பிடமாக உடற்கூட்டை விட்டு வானவெளியில் பறந்து சென்றதை அவர் கண்டாரோ? அந்த மனக் கிளர்ச்சியில் பிறந்த அங்க அசைவுகளோ? அன்றி, தாம் வாழ்நாளில் இழந்து விட்டதை, இறுதிக் காலத்துக்குள் ஒருமுறை பெற நேரம் வந்துவிட்டது குறித்து அவர் அடைந்த ஆனந்தமோ? இந்த ஒரு நிகழ்ச்சிக்கே காத்திருக்கும் தம் உயிரும் விடுதலை அடையும் நேரம் நெருங்கி விட்டது என்ற நிறைவில் எழுந்த பெருமகிழ்வோ?
அதை வரையறுத்துக் கூற முடியாது.
சடங்குகளில் ஒவ்வொன்றும், அன்று வெறும் சடங்காக நிறைவேற்றப்படவில்லை. மனைவியர் உட்பட இறுதி மரியாதைகளை நிறைவேற்றிய பின்னர், மயானத்தில், பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டும் இறுதிப் பிரார்த்தனை ஒன்றைப் படிப்பது, படக மக்களின் மரணச் சடங்குகளில் முக்கியமான நிகழ்ச்சியாகும். லிங்கையாவின் மரணச் சடங்கில் அது ஒப்புக்குத்தான் சண்டை சச்சரவுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. ஏன்? பாவமன்னிப்புக்கான அந்தப் பாடல் வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும், அத்தனை உருக்கமாகப் பாடப்பட்டிருக்கவில்லை என்று தோன்றும் வகையில், ஜோகியே அதைப் பாடினார்;
முன்னோர் செய்த பாவம்,
மூத்தோர் செய்த பாவம்,
தான் செய்த பாவம்,
தமியர் செய்த பாவம்,
எல்லாம் விலகட்டும்!
எல்லைக் கற்கள் விலக்கிய பாவம்,
எண்ணற்ற பொய்களின் பாவம்,
ஏழையின் துயர் தீர்க்காத பாவம்,
எளியோரை வாட்டிய பாவம்,
பிறர் பூமி செழிக்கப் பொறுக்காத பாவம்,
பிறர் மாடு கறந்திடப் பொறுக்காத பாவம்,
அயல்வாழ்வு சிறந்திடத் தாளாத பாவம்,
அசூயைக் கிடந்தந்த ஆகாத பாவம்,
பச்சை மரங்களை வெட்டிய பாவம்,
பசுவைப் பாம்பைக் கொன்ற பாவம்,
கோள்மூட்டிப் பகை செய்த பாவம்,
குளிரில் விறைத்தோரை விரட்டிய பாவம்,
தண்ணீரைப் பிழைத்திட்ட பாவம்,
தாயாருக்கிழைத்திட்ட பாவம்,
உண்ணீரைக் கலக்கிட்ட பாவம்,
ஊருக்குப் பிழை செய்த பாவம்,
என்றெல்லாம் ஜோகி ஒவ்வொரு பாவமாக,
முந்நூற்றுக்கு மேற்பட்ட பாவங்களைச் சொல்லி, அண்ணனின் ஆன்மாவின் தூய்மையை வேண்டுகையிலே, அந்த ஓர் உயிர் மட்டுமா கழுவப் பெற்றது? அங்கே குழுமியிருந்த அனைவரும், தங்கள் தங்கள் கண்ணீர் கொண்டே, தாம் தாம் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை எல்லாம் கழுவுபவராயினர்.
ஜோகி தாமே மன்னிப்பு வேண்டுபவராய், ஒவ்வொரு பிழையாகப் பொறுக்க வேண்டினார்.
சற்றைக்கெல்லாம் லிங்கன் வைத்த நெருப்பு, ரங்கே கௌடரின் உடலைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
கூட்டமெல்லாம் போன பின்பும், இருவர் அந்தச் சிதைப் பற்றி எரிந்து மண்ணோடு கலக்கையிலே அங்கு நின்றனர்.
ஒருத்தி பாரு, மற்றவர் ஜோகி.
அந்த மலைமண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்வென்ற படுகளத்தில் போராடி, வென்று, தோல்வியுற்று, இறுதியில் அக்கினியின் வசமான அந்த உடலுக்கு உரியவனோடு பிணைந்த அவர் வாழ்வுகள், இருவரின் சிந்தையிலும் படங்களாக வந்து கொண்டிருந்தன.
ரங்கன் நினைவாகி விட்டான்.
மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.
மாசி அழல்மிதி விழா நடைபெற்ற மறுநாளான அன்று, மரகத மலைப்பகுதி, மாமலை காணாத பெரு விழாக் கோலம் கொண்டிருந்தது. நீல மலையின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் சாரிசாரியான வண்ணக் கோலங்களாகப் புறப்பட்ட மக்கள் பெருமகிழ்வின் ஒலியை எழுப்பும் கடலாக மரகத மலைப்பகுதியெல்லாம் கூடிக் கொண்டிருந்தனர்.
ஐந்து குறிஞ்சிகளைக் கண்ட ஜோகிக் கிழவர், புல்மேட்டில் அமர்ந்து கோலாகலங்களைப் பார்த்த வண்ணம் இருந்தார். முழு வாழ்வின் நிறைவைக் கண்டுவிட்ட அவருடைய குடும்பத்தில், அவருடைய தலைமுறையைச் சேர்ந்த யாருமே அப்போது இல்லை. பிஞ்சுப் பருவ ஏமாற்றத்தில் விளைந்த பகையும் வெறியுமே வெற்றி கொண்ட அண்ணன் ரங்கன் அந்த ஹட்டி மண்ணோடு மண்ணான பிறகு பாரு அதிக காலம் உயிருடன் இருக்கவில்லை. ஆனால், அவள் வாழ்விலே ஒரு குறையும் நிரம்பப் பெறாதவளாக மறையவில்லை. நஞ்சனும் விஜயாவும் அவளுடைய செல்வ மக்களாக இணைந்து, இனிதே வாழக் கண்டாள். பெரிய வீட்டின் மருமகளாக, ஏழைப் பெண் தேவகி, கிருஷ்ணனின் தம்பி மகனுக்கு வாழ்க்கைப்பட்ட வைபவம் கண்டாள். லிங்கனும் தருமனும், தந்தையின் மரணத்துக்குப் பின் விசாரணைகள் நடத்தவும் வேறு கிளர்ச்சிகளுக்கு முயலவும் முனைந்ததும், ஏதும் பெரிதாகக் கலவரம் அவர்களுக்கிடையே விளையவில்லை. அன்பின் கைக்கொண்டு, கிருஷ்ணன், இரு குடும்பங்களும் எப்படியும் பிரிய முடியாத வகையில், அவர்களையும் திருமணப் பந்தங்களால் இணைத்து விட்டார். பாரு எல்லாவற்றையும் வாழ்நாளில் கண்டாள்.
கிருஷ்ணனுக்குச் சொந்தமாக இருந்த கறுப்பு மண்ணில் கிழங்குப் பயிருக்குக் களை எடுத்துக் கொண்டிருக்கையிலேதான் அவள் சுவாசம் நிறைவுடன் அடங்கியது. மண்ணின் பெருமகளான அவளை, பூமித்தாய், பெருங் கருணையுடன், எந்த ஒரு வேதனையுமின்றித் தன் மடியில் இருத்திக் கொண்டாள்.
ஜோகி, தன் நினைவு தெரிந்து இப்படி ஒரு விழாக் கூட்டம் மலையில் கூடக் கண்டிருக்கவில்லையே!
இனி இருள் இல்லை என்ற பெருங்களிப்பா? மருள் அகன்றது என்ற பெருமகிழ்வா? புது விழிப்பெய்தி முன்னேற்றப் பாதையில் நடைபோடும் நவயௌவன சமுதாயத்தில் செயல் வெற்றியில் எழும் கோஷங்களா? நவபாரதத்தில், இனி விழிப்படையாத சமுதாயம் இல்லை என்ற வகையிலே புதுமலர்ச்சி பெற்றதை நிரூபித்துவிட்ட மலைமக்களின் வெற்றிக் கொண்டாட்டமா? இனி மலையின் மடியில் பிறக்கும் மக்களின் மகத்தான ஓர் எதிர்காலத்தை வரையறுத்துவிட்ட செயல் வீரர்களைப் பாராட்டக் கூடியுள்ள பெருவிழாவா?
ஜயஸ்தம்பத்தின் மேலே, பட்டொளி வீசி மூவர்ணக் கொடி பறந்தது. மாலை குறுகி வந்த அந்தப் புனித வேளையில், மக்கள் அனைவரும் கண்டுகளிக்க, குமரியாற்றின் அணை திறக்கப் பெற்றது.
கணகணவென்று மணிகள் ஒலிக்க, மடை திறந்து நீர் பாய்ந்து யந்திரங்கள் சுழலும் நல்லோசை செவிகளில் தேனைப் பாய்ச்ச மலை முழுவதும் மின்னொளியின் சுடர் திகழும் மணி விளக்குகள் குப்பென்று பூத்தன.
ஜோகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது.
உள்ளம் எம்பிரானின் புகழை இசைத்தது;
ஹரஹர சிவசிவ பரமேசா!
ஹரஹர சிவசிவ பஸவேசா!