kurumbu

குறும்பு

வகுப்புக்குள் தவளை வந்துவிட்டதென்று எச்சரிக்கின்றனர் மாணவர்கள். அது ஆசிரியரின் உணவைத் தின்கிறதாம். அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறதாம். ஆனால், மாணவர்களின் குறும்புக்கு இன்று ஏமாறப்போவதில்லை என்று ஆசிரியர் முடிவெடுத்துவிட்டார். அப்புறம்?

- Priya Muthukumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தொப் தொப் டொப்! தொப் தொப் டொப்! தொப் தொப் டொப்! பள்ளிக்கூரையின் மேல் மழைத்துளிகள் தொப் தொப்பென விழுந்து கொண்டிருந்தன. “வணக்கம் ஐயா!” மாணவர்கள் ராகம் பாடினர்.

“வணக்கம், வணக்கம்” என்று ஆசிரியரும் பெருமையுடன் கூறினார்.

கரும்பலகையில் எழுத ஆசிரியர் கொஞ்சம் திரும்பியபோது—  கொர்ர்!

யாரோ ஜன்னல் வழியாக உள்ளே குதித்தார்கள்.

குழந்தைகள் அனைவரும் அலறினார்கள். “திரும்பிப் பாருங்கள் ஐயா. வகுப்பறையில் தவளை!”

“ஓ, அப்படியா?” ஆசிரியர் ஆச்சரியப்பட்டது போல நடித்தார். “பார்க்க எப்படி இருக்கிறது உங்களுடைய தவளை?”

“பெரிதாக குண்டாக இருக்கிறது” என்றான் அகீஃப். “பச்சையாக புள்ளிபுள்ளியாக இருக்கிறது” என்றாள் ராணி. “ஈரமாக வழவழவென்று இருக்கிறது” என்றாள் முன்னி.

கொர்ர்!

ஆங்கில வகுப்பில், “எல்லாரும் பதின்மூன்றாம் பக்கத்தை எடுங்கள்” என்றார் ஆசிரியர். “திரும்பிப் பாருங்கள், ஐயா. அந்தத் தவளை உங்கள் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறது” என்றாள் ஃபரா. “அருமை! நல்ல வசதியான இடம்தான்.”

கொர்ர்!

கணக்கு வகுப்பின் போது, “எங்கே என் கண்ணாடி?” என்று தேடினார் ஆசிரியர்.“திரும்பிப் பாருங்கள், ஐயா” என்றான் பிஷால். “அந்த தவளைதான் உங்கள் கண்ணாடியைப் போட்டிருக்கிறது.” “பரவாயில்லை! கண்ணாடி இல்லாமலே எல்லாம் நன்றாகத் தெரிகிறது.”

கொர்ர்!

அறிவியல் பாடம் ஆரம்பிக்கும்போது, “இதில் பாருங்கள், வவ்வால் ஒன்று மரத்திலிருந்து தலைகீழாகத் தொங்குகிறது!” என்றார் ஆசிரியர்.

“மேலே பாருங்கள் ஐயா! அந்தத் தவளை மின்விசிறியிலிருந்து தலைகீழாகத் தொங்குகிறது”என்றான் அகீஃப். “அட! அதுவும் தன்னை ஒரு வவ்வால் என்று நினைத்துக் கொண்டிருக்கும்!”

கொர்ர்!

மதிய உணவு இடைவேளையில், “எங்கே என் உருளைக்கிழங்கு சப்பாத்திகள்? மூன்று குறைவது போலத் தெரிகிறதே?” என்று கேட்டார் ஆசிரியர். “திரும்பிப் பாருங்கள், ஐயா. உங்கள் சப்பாத்திகளை அந்தத் தவளை காலி செய்துகொண்டிருக்கிறது!” “சரி விடுங்கள்! தவளைக்காவது என் சமையல் பிடித்திருக்கிறதே.”

கொர்ர்!

விளையாட்டு நேரத்தில், “கால்பந்து எங்கே?” என்று கேட்டார் ஆசிரியர். “திரும்பிப் பாருங்கள் ஐயா. அந்தத் தவளை கோல் அடித்துவிட்டது.” “பிரமாதம்! அந்தத் தவளையை நம் அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.”

கொர்ர்!

மணி அடித்தது. ஆசிரியர் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்து விட்டு, தன்னுடைய மிதிவண்டியில் கிளம்பினார். “பின்னால் பாருங்கள், ஐயா. அந்தத் தவளை உங்கள் பையில் இருக்கிறது” என்று கூச்சலிட்டனர்.“நல்லது! பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்டது.”

“அப்பாடா! இன்று நான் எந்தக் குறும்புக்கும் ஏமாறவில்லை!”

கொர்ர்!