kurumbu panri lalitha

குறும்புப்பன்றி லலிதா

லலிதா, பானை செய்யும் கலைஞரான மினி சிங்கின் செல்லப்பன்றி. அவள் நிறையக் குறும்பு செய்வாள். ஆகவே, எப்போதும் வம்பில் மாட்டிக் கொள்வாள். ஒருநாள், மினி சிங்கின் அழகிய பானைகளெல்லாம் உடைந்து கிடந்தன. லலிதாதான் அவற்றை உடைத்துவிட்டாள் என்று அவர் நினைத்தார். அதன் பிறகு என்ன ஆனது? இந்தக் கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்! லலிதா கற்பனைக் கதாபாத்திரம் அல்ல. பூனாவில் ஒரு பானை செய்யும் கலைஞருடன் வசிக்கிற நிஜமான பன்றி!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மண்பாண்டங்கள் செய்யும் குயவரான மினி சிங்கின் செல்லப்பன்றி லலிதா. லலிதா ஒரு குறும்புக்காரப் பன்றி. எப்பொழுதும் ஏதாவது ஒரு வம்பில் மாட்டிக்கொள்வாள்.

ஹரும்ப்... ஹரும்ப்... லலிதா, கற்களை உருட்டி சுத்தமான பாதைகளில் இறைக்கிறாள்.

ஹர்ர்ர்… ஹர்ர்ர்... ஹர்ர்ர்! அவள் சத்தமிட்டபடி தோட்டத்தில் அங்குமிங்கும் தோண்டுகிறாள்.

க்ர்ர்ர்ர்ர்... க்ர்ர்ர்ர்ர்… க்ர்ர்ர்ர்ர்! லலிதா செய்தித்தாள்களைக் கிழிக்கிறாள்! மினி இன்னும் வாசிக்காத செய்தித்தாளையும் கிழிக்கிறாள்!

ஃபுர்ர்ர்ர்ர்...ஃபுர்ர்ர்ர்ர்...ஃபுர்ர்ர்ர்ர்! அவள் தன்னுடைய தண்ணீர்க் கிண்ணத்துக்குள் ஊதி காற்றுக் குமிழிகளை எழுப்பி, சுற்றிலும் தண்ணீரைச் சிந்துகிறாள்!

சபக்! ஜபக்! செடிகளையெல்லாம் லலிதா தின்றுவிடுகிறாள்; குட்டையிலிருக்கும் மீன்களைப் பயமுறுத்துகிறாள்.

‘‘அவளைப் பூட்டி வை” என்கிறார் மினியின் தாய். ‘‘அவளைக் கட்டிப்போடு” என்கிறார் மினியின் அக்கா. ‘‘முடியவே முடியாது! அவள் என்னுடைய பானைகளையோ, கூஜாக்களையோ எதுவும் செய்வதில்லை” என்கிறார் மினி.

ஒருநாள், மினி அதிகாலையிலேயே உற்சாகமாக வேலைக்கு வந்தார். லலிதாவைப் பார்த்து மகிழ்ச்சியோடு சீழ்க்கையடித்தார்.

‘‘ஹுர்ரா, ஹுர்ரா” என்று லலிதாவும் பதிலுக்கு உறுமினாள்.

மறுகணம், மினியின் மகிழ்ச்சி காணாமல் போனது. எங்கு பார்த்தாலும் உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய கூஜாக்கள், விரிசல்விட்ட கோப்பைகள், தூள்தூளான தேநீர்ப் பாத்திரங்கள்!

மினியின் கோபம் விறுவிறுவென்று தலைக்கு ஏறியது!

அவர் ஒரு போகன்வில்லா செடியின் நிழலில் லலிதாவைக் கட்டிப்போட்டார்.

மினி தன்னை ஏன் கட்டிப்போட்டிருக்கிறார் என்று லலிதாவுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் ஊளையிட்டாள்; சிணுங்கினாள்; பின்னர் அழுதாள்; தேம்பினாள். ஆனால், மிகுந்த கோபத்தில் இருந்த மினி அவளைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

நாள் முழுவதும் கோபத்துடனே வேலை பார்த்தார் மினி. லலிதாவைக் கட்டியே போட்டிருந்தார். திடீரென்று, மினி ஒரு சப்தத்தைக் கேட்டார். அது ஹுர்ராவோ, ஹர்ர்ர்ரோ அல்ல. அது க்ர்ர்ரோ, ஃபுர்ர்ர்ர்ரோ அல்ல. அது சபக்கும் அல்ல, ஜபக்கும் அல்ல!

மியா...வ்..! டமால்! மியா...வ்..! தடால்!

அது ஒரு பெரிய, ஆரஞ்சு நிறப் பூனையின் சப்தம்! கூஜாக்களையும் பானைகளையும் தள்ளிவிட்டு உடைத்தது அந்தப் பெரிய, ஆரஞ்சுப் பூனைதான்!

மினி லலிதாவை அவிழ்த்துவிட்டார். ‘ஹுர்ரா, ஹுர்ரா’ என்று அவள் உறுமினாள். லலிதா பூனையைத் துரத்தினாள். ஓடஓட விரட்டி அதனை மண்பாண்டச்சாலையின் வெளியே துரத்தி விட்டாள்!

பிறகு, லலிதா மீண்டும் குறும்பு செய்ய ஆரம்பித்துவிட்டாள். பன்றிகளின் வேலையே செல்லக் குறும்புகளைச் செய்வதுதானே!