"பாலு அண்ணா, நான் என்ன கண்டு பிடிச்சிருக்கேன்னு பாரேன்" மகிழ்ச்சியில் கத்தினாள் பிரியா. "ஒரு பழைய பம்பரம்!"
அந்தப் பம்பரம் தன்னுடைய காதுகளை கூர்தீட்டிக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பல வருடங்களாக பெட்டிக்குள் அடைந்து கிடந்ததால் அதற்கு போரடித்திருந்தது. ‘ஒருவழியாக, யாரோ என்னைக் கண்டுபிடித்துவிட்டார்கள்!’என நினைத்தது. பாலா அதன்மேல் படிந்திருந்த தூசை ஒரு துணியால் துடைத்துக்கொண்டே, ‘இந்தப் பம்பரம் ஒரு காலத்தில் மிகவும் அழகாக இருந்திருக்கும்!’ என நினைத்துக்கொண்டான். பம்பரத்தின் மீது பூசப்பட்டிருந்த பச்சை மற்றும் நீலப் பட்டைகள் காலப்போக்கில் நிறம் மங்கியிருந்தன. குழந்தைகள் அந்தப் பம்பரத்தை மணி சித்தப்பாவிடம் கொண்டு சென்றார்கள். பம்பரத்தை பார்த்த அவர் மிகவும் மகிழ்ந்தார். மணி சித்தப்பாவின் சிறுவயதில் அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டுப் பொம்மை அது.
"எனக்கு ஒரு கயிறு கொண்டு வா" என்றார் மணி சித்தப்பா.
மணி சித்தப்பா, சுற்றிக்கொண்டிருந்த பம்பரத்தைத் தன்னுடைய உள்ளங்கைகளில் எடுத்தார். "பிரியா, உன் கையைக்காட்டு" என்றார். மெதுவாகச் சுற்றிக்கொண்டிருந்த பம்பரத்தை அவளுடைய உள்ளங்கையின் நடுவே விட்டார்.
"ஹிஹிஹி!" என்று சிரித்தாள் பிரியா.
"இது கிச்சுகிச்சு மூட்டுகிறது!" என்றாள்.
பம்பரம் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தது. "இன்றைக்கு நான் குதூகலத்தோடு சுற்றப்போகிறேன். நான் இனி எப்போதும் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருப்பேன்!" என்று தீர்மானித்துக்கொண்டது.
பம்பரம் பிரியா கையிலிருந்து பாலாவுடைய கைக்கு மாறியது. "ஹாஹாஹா!" என்று பலமாகச் சிரித்தான் பாலா. "இது நிஜமாகவே கிச்சுகிச்சு மூட்டுகிறது!" என்றான். பம்பரம் மெதுவாக அவனுடைய கைகளில் ஏறி, அவனுடைய தோள்களில் ஏறி, தொடர்ந்து சுற்றியது. அடுத்து, அந்த பம்பரம் என்ன செய்யும்?
திடீரென எகிறிக் குதித்து, பம்பரம் தரையில் சுழலத்தொடங்கியது.
பம்பரத்தைப் பார்த்து மகிழ்ந்த பிரியா தன்னையும் ஒரு பம்பரமாக நினைத்துக்கொண்டாள். கைகளை நன்கு அகல நீட்டியபடி சுழல ஆரம்பித்தாள். அவளுடைய ஜடை காற்றில் பறந்தது. பாவாடை பூப்போல விரிந்தது. அப்படியே தலை சுற்றும்வரை தொடர்ந்து சுற்றினாள்!
"பம்பரம் எங்கே போகிறது?" என்று கத்தினான் பாலா.
பம்பரம் அவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது போல் வேகமாகச் சுற்றிக்கொண்டே வீட்டுக்குள் ஓடியது. இப்போது, பம்பரம் எங்கே? மேஜைக்குக் கீழே!
பாலா மேஜைக்கு அடியில் பம்பரத்தைத் தேடிப் பிடிக்க முயன்றான். ஆனால், பம்பரம் கணநேரத்தில மறைந்து போனது, இப்போது, பம்பரம் எங்கே?
பெரிய கடிகாரத்தின் மேலே!
பிரியா ஒரு நாற்காலியில் ஏறி அதைப் பிடிக்க முயன்றாள். ஆனால், பம்பரம் மீண்டும் குதித்து மறைந்துவிட்டது.
இப்போது, பம்பரம் எங்கே?
சர்ர்ர்ர்ர்ர்... பம்பரம் சமையலறைக்குள் நுழைந்தது. இப்போது, பம்பரம் எங்கே? பம்பரம் இப்போது மாவரைக்கும் இயந்திரத்தின் விளிம்பில் சுற்றிக்கொண்டிருந்தது. சித்ரா பாட்டி அதைப் பிடிக்க முயன்றார். ஆனால், பம்பரம் வேகமாக அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டது.
இப்போது, பம்பரம் எங்கே? கப் போர்டுக்கு மேலே!
கிரிஜா ஒரு துடைப்பத்தைக்கொண்டு பம்பரத்தைத் தள்ள முயன்றார். ஆனால், பம்பரத்துக்கு பதிலாக மாவுப்பாத்திரத்தைத் தள்ளிவிட்டார்.பம்பரம் வேகமாக சமையலறையில் இருந்து
வெளியேறி வீட்டுக்குப் பின்பக்கம் சென்றது.இப்போது, பம்பரம் என்ன செய்துகொண்டிருக்கிறது? பம்பரம் இப்போது சேற்றில் பரபரவென்று சுழன்று கொண்டிருந்தது.
பாலாவும் பிரியாவும் பம்பரத்தைப் பிடிக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்கள் மீது சேறு அடித்ததுதான் மிச்சம்.
இப்போது, பம்பரம் என்ன செய்து கொண்டிருக்கிறது? சித்ரா பாட்டி வளர்க்கும் கோழிகளுக்கு நடுவே பம்பரம் அங்கும் இங்கும் ஓடியது. பம்பரத்தை அதுவரை கோழிகள் பார்த்தது இல்லை, அவை ஆச்சரியத்துடன் ”கொக்! கொக்! கொக்!” என்று சத்தமிட்டன.
பறவைகளின் குழப்பத்துக்கு நடுவே, பம்பரம் முன் வாசலைக்கடந்து ஓடி, தெருவுக்குச் சென்றுவிட்டது.
இப்போது, பம்பரம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
அந்தக் கிராமத்தின் தபால்காரரான புகாரியின் சைக்கிளுக்குக் குறுக்கே ஓடியது பம்பரம்.
புகாரி பம்பரத்தின் மீது சைக்கிளை ஏற்றிவிடக்கூடாதென்று எவ்வளவோ முயற்சி செய்தார். அவரால் சமாளிக்கமுடியவில்லை, தடுமாறி விழுந்தார்.
இப்போது, பம்பரம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
அந்தத் தெருவின் முனையில் இருந்த தபால் பெட்டிக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தார் முத்து. பம்பரம் அவரை நோக்கி ஓடியது. அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் வேகமாக ஓடி அங்கிருந்த சிவப்பு பெயின்ட் கேனுக்குள் பொத்தென்று விழுந்தது.
பம்பரம் சோர்ந்துவிட்டது!
அப்படியே சிவப்பு பெயின்டில் கிடந்தது. பாலாவும் பிரியாவும் இதைப் பார்த்துச் சிரித்தார்கள். அவர்கள் பம்பரம் காயும்வரை காத்திருந்தார்கள். முத்து அதன்மீது பிரஷ்ஷால் கருப்புக் கோடுகளை அழகாக வரைந்து கொடுத்தார்.
அந்தக் குறும்புகாரப் பம்பரம், இப்போது புத்தம் புதியது போலாகிவிட்டது. இந்தப் புதிய சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பட்டைகள் அதற்கு மிகவும் பிடித்திருக்கிறது!