kutti kadalodi fathima

குட்டி கடலோடி பாத்திமா

லட்சத்தீவுகளின் அழகிய தீவு ஒன்றில் நிலாவின் கவனிப்பில் வளர்கிறாள் பாத்திமா. வண்ணமயமான பவளப்பாறைகள், மனங்கவரும் மீன்கள், பிரமிக்க வைக்கும் கொம்புத் திருக்கை மீன்கள், வயதான ஆமைகள், நடனமாடும் டால்பின்கள் அனைத்தின் மீதும் அவள் காதல் கொள்கிறாள். ஒருநாள் பயங்கரமான புயலில் சிக்கிக் கடலில் தொலைந்து போகிறாள். தொலைதூரத் தீவுகளில் வியப்பான கடல் உயிரினங்களுடன் பாத்திமா புரியும் சாகசங்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

- Nivedha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பாத்திமாவின் அறிமுகம்

பிறந்து சில நொடிகளே ஆகியிருந்த குழந்தை பாத்திமாவைக் கண்டு புன்னகைத்தாள் நிலா. அச்சிறு குழந்தையின் சந்திப்பில் முழுமதியின் முகம் மலர்ந்தது. நிலவின் குளிர்ந்த ஒளி அத்தீவில் நிறைந்திருந்த தென்னைமரக் கீற்றுகளின் இடையே ஊடுருவி மரகதம் போன்றிருந்த கடற்காயலில் பிரதிபலித்தது.

எல்லையின்றிப் பரந்திருந்த நீலக் கடலின் நடுவில் ஒரு புள்ளியைப் போன்றிருந்தது அந்தக் குட்டித் தீவு. அதைச் சுற்றி சில நூறு மைல்களுக்குக் கடல் நீரைத் தவிர வேறொன்றுமில்லை. தீவின் வாண்டுகள் அரை நாளில் ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிடலாம். ஏன், ஒரு குட்டி ஆமைகூட அரை மணிநேரத்தில் நீந்திவிடலாம். அவ்வளவு சிறியது! வரைபடத்தில் தொலைந்து போகுமளவிற்கு, உலகம் மறந்து போகுமளவிற்கு!

கடற்கரை வெண்மணல் பரப்பின் மேல் ஆடிய தொட்டிலில் உப்புக்காற்றின் வாசம்பிடித்தே வளர்ந்தாள் பாத்திமா. அவளின் வலது பக்கம் அமைதியான காயல், இடதுபக்கமோ ஆர்ப்பரிக்கும் கடல்.

நிலாவைச் சந்தித்தாள் பாத்திமா

பாத்திமா நிலாவை அடையாளம் கண்டுகொள்ளக் கொஞ்சம் காலம் எடுத்தது. கடல்நீரும் மணலும் அதில் படரும் ஒளியும்தான் பாத்திமாவின் முதல் அறிமுகம். யாரோ தெருக்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிச்சத்தைச் சேகரித்துக் கொண்டுவந்து கடல்நீரில் தூவிவிட்டதாகத்தான் பாத்திமா நினைத்திருந்தாள்.

ஒருநாள் வானத்தைப் பார்த்தபோதுதான் அங்கு விரிந்த புன்னைகையுடன் வீற்றிருந்த நிலாவைக் கண்டாள். ”அப்பாடா! இப்போதாவது என்னை கண்டுபிடித்தாயே” எனக் கேட்பது போல் இருந்தது அப்புன்சிரிப்பு.

இப்போது வானையும் கடலையும் பார்த்த பாத்திமாவிற்கு நிலா வெகு எளிதாக நீரில் நீந்துவது கண்டு ஒரே ஆச்சரியம். நீந்தும் நிலாவை அவளுக்கு மிகவும் பிடித்தது. அப்போது நீரில் பட்டுச் சிதறும் நிலவொளியையும் பிடித்தது. தண்ணிரில் அலையும் நிலாவைத் துரத்திப் பிடித்துக் கைகளில் ஏந்தி வீட்டிற்குக் கொண்டுபோக ஆசைப்பட்டாள். அவள் மணலில் நுழைத்த கால்விரல்களைச் சிற்றலைகள் மோதி நனைத்தன. நீருக்குள் மத்தாப்புபோல் மின்னிய கடற்பாசிகள் அவளது பாதங்களில் ஒட்டிக்கொண்டன. மணலில் அவள் நடக்கையில் உயிருள்ள பச்சைநிற ஒளிப்புள்ளிகளாய் அவளது கால்தடங்களை அவை அலங்கரித்தன.

தண்ணீருக்குள் விழுந்த பாத்திமா

பெரும்பாலும் படகுகளிலேயே பொழுதைக் கழித்தாள் பாத்திமா. படகுகள் என்றால் அவளுக்கு உயிர். அமைதியான இரவில் காயல் பகுதியில் மீன் பிடிக்கப் போகும் குட்டிப் படகு, அதன் துடுப்புகளின் ஓசை, நண்பகல் வெய்யிலில் பொங்கும் அலைகளின் நடுவே உறுமியபடியே சீறிச்செல்லும் பெரிய மீன்பிடி படகு எல்லாம் அவளுக்குப் பிடிக்கும்.

ஒரு நாள் காயலில் மீன் பிடிக்க அவளையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார் அவளது அப்பா. பாத்திமாவால் இதை நம்பவே முடியவில்லை. அப்பா பாத்திமாவைப் படகில் ஏற்றிவிட்டு பையன்களுடன் படகில் ஏறிக்கொண்டு மெல்ல துடுப்புப் போட்டு நீருக்குள் சென்றார்.

மெல்ல வலைகளை விரித்து சூரை மீனுக்குத் தூண்டில் போட்டுக் காத்திருந்தனர். ஒரு வலை மெல்ல அசைய இவர்கள் அதை இழுக்க, நிலைதவறிய படகு ஒரு பக்கமாகச் சாய்ந்தது. இதை கவனிப்பதற்குள் நொடி நேரத்தில் நீருக்குள் விழுந்துவிட்டிருந்தாள் பாத்திமா.

அப்பா அவரது ஆட்களிடம் சத்தம் போட்டது அவளுக்கு பின்னர் நினைவுக்கு வந்தது. ஆனால் அதைவிட நீரில் நீந்திய ஒளி இன்னும் ஆழமாக மனதில் பதிந்துவிட்டது. நீருக்குள் இருந்த புதுமையான வியப்பான காட்சிகளை அவ்வொளி பிரதிபலித்தது.

ரொம்ப நேரம் ஆனது போல் அவளுக்குத் தோன்றினாலும் சில நொடிகளில் அவளை யாரோ நீருக்குள்ளிருந்து தூக்கி படகில் சேர்த்துவிட்டார்கள். ஆனால் நிலாவுடன் சேர்ந்து இந்த புதிய உலகை அறிந்துகொள்ள அவள் மீண்டும் வரவேண்டும் என்று நினைத்தாள்.

பவளங்களின் நடுவே உயிரோவியம்

பாத்திமா நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவரது அம்மா. அப்பாவிற்குக் கொஞ்சம் யோசனையாக இருந்தபோதும் அம்மா வலியுறுத்தினார். அவள் கொஞ்சம் நன்றாக நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டதும் அப்பா அவளுக்கு ஒரு முகக்கவசத்தையும், சுவாசத்திற்குக் காற்று வழங்கும் குழாய் ஒன்றையும், கால்களில் மாட்டிக்கொள்ளும் நீச்சல் துடுப்புகளையும் வாங்கிக் கொடுத்தார். கரையின் அருகிலும் அலைகளுடன் சேர்ந்து முன்னும் பின்னும் அசைந்த கடற்புற்களின் நடுவிலும் அவள் நீச்சல் பழகினாள்.

ஒருநாள் காயல் பகுதிக்கு படகை ஓட்டிச்சென்ற அப்பா அவளை நீருக்குள் இறக்கிவிட்டார். தனது முகக்கவசத்தைச் சரியாகப் பொருத்திக்கொண்டு கீழே பார்த்தாள் பாத்திமா. அந்த உலகம் பச்சை, நீலம், ஊதா, சிவப்பு எனப் பல நிறங்களால் நிரம்பியிருந்தது. விரல் போல் நீண்டிருந்த பவளத்தின் கிளைகள், பெரிய கற்பாறையைப் போன்றிருந்த பவளப்பாறை, குடைப்பவளம், மூளை போன்றிருந்த பவளம் அனைத்தையும் அவள் கண்டாள்.

வண்ணங்களின் சங்கமத்தில், வடிவங்களின் எண்ணிக்கையில் மூச்சு விடவும் மறந்திருந்தாள். தனது நுரையீரல்களில் மீதமிருந்த கொஞ்சம் காற்றை ஊதித் தள்ளிக் குழாயில் இருந்த நீரை வெளியேற்றிப் பெரிய மூச்சை இழுத்துக்கொண்டாள்.

நீருக்குள் பார்த்தபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்த அவளுக்கு மேலே உள்ள உலகமே மறந்து போயிருந்தது.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவுடனோ பிற படகோட்டிகளுடனோ காயலுக்குச் செல்வாள் பாத்திமா. தண்ணீருக்குள் காலம் நேரம் இல்லாமல் பவளப்பாறைகளைப் பார்த்தபடி, ஆமைகளையும் மீன்களையும் பின்தொடர்ந்தபடி இருப்பாள்.

அந்த மீன்களில்தான் எத்தனை வகைகள். பெரிதும் சிறிதுமாய், ஒல்லியும் குண்டுமாய், குட்டையும் நெட்டையுமாய், வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் மீன்கள், வானவில்லே உடலாக சில மீன்கள்.

வண்ணங்கள் ஏந்திய டேம்சல்கள், வண்ணாத்தி மீன்கள், பகுமானமாக வலம்வந்த தேவதை மீன்கள், நிதானமான கத்திவால், கொண்டல் மீன்கள், முயல் மீன்கள், கிளி மீன்கள், தண்ணீரும் காற்றும் குடித்து உப்பிய பேத்தை மீன்கள், கூடவே இரையைப் பிடிக்க பதுங்கியிருக்கும் களவா மீன்கள்.

தனக்குத் தெரிந்தவர்களையும் மீன்களையும் ஒப்பிட பாத்திமாவுக்குப் பிடிக்கும். டீ பிஸ்கட் சாப்பிட வீட்டிற்கு வரும் அவளது மாமா தான் உர்ரென்று இருக்கும் களவா. அடுத்த தெருவில் பெரிய கடை வைத்திருக்கும் அப்பாவின் நண்பர் பெருமை காட்டும் பேத்தை. ஆனால் அம்மா அழகான பட்டாம்பூச்சி மீன். அவளது தங்கையோ எழிலான தேவதை மீன்.

சொல்லாமலே தெரியவேண்டாமா பெரிய மீன்களிடம் சிக்காமல் துடிப்பான நீச்சல் போடும் பளிச்சென்ற மஞ்சளும் கருப்பும் கலந்த மதன மீன்தான் பாத்திமா என்று.

ஓர் இரவு பவளத்திட்டின் அருகே நீந்திக்கொண்டிருக்கும்போது மறக்கமுடியாத ஒரு காட்சியைக் கண்டாள் பாத்திமா. அப்பா மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அருகில் ஒரு மின்கல விளக்குடன் நீருக்குள் குதித்தாள் பாத்திமா. அங்கே பவளப்பாறைகள் இனப்பெருக்கத்திற்காக வெளியிடும் வெள்ளை, இளஞ்சிவப்பு நிறப் பாலணுக்கள் துகள் மேகமெனப் படர்ந்திருந்தன. நீருக்குள் ஒரு பனிச்சுழலுக்குள் நுழைந்தது போல் உணர்ந்தாள் பாத்திமா.

மீன்பிடிக்கப் போன பாத்திமா

மீன்களை மட்டுமல்ல மீன் பிடிப்பதும் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். முதலில் படகுத்துறையிலிருந்து மீன்பிடிக்கக் கற்றாள். தூண்டில் போட்டுச் சிறிய வெள்ளி நிற மீன்களைப் பிடித்தாள்.

சிலநேரம் அப்பாவுடன் மீன்பிடிக்கச் செல்வாள். உயிருள்ள மீன்களைத் தூண்டில் இரையாக ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு சூரை மீன் கூட்டங்களைத் தேடிச்செல்வார்கள். அப்படி ஒரு கூட்டத்தைக் கண்டுபிடித்ததும் படகைக் கவனமாக அம்மீன்களுக்கு நடுவே செலுத்துவார் அப்பா. மேல்மட்ட நீரைக் கலக்கி இரையைக் கடலில் தூவுவார்.

உணவைக் கண்ட வேகத்தில் சூரை மீன்கள் வெள்ளிநிறத்தில் மின்னும் எல்லாவற்றையும் இரை என்றெண்ணி தூண்டில் முள்ளையும் கவ்விக்கொள்ளும். அவளது அப்பாவும் அவரது ஆட்களும் தூண்டிலை மேலிழுத்து வீசும் வாகில் தூண்டில் முள்ளில் சிக்கியிருக்கும் மீன்கள் விடுபட்டுப் படகில் வீழும்.

படகின் பின்னே வரும் கிறிச்சடை(பூங்குழலி) மீன்களைப் பிடிப்பது பாத்திமாவுக்குப் பிடிக்கும். பிடித்திருக்கும் தூண்டில் கயிற்றின் ஆட்டத்தையும் மீன்களை இழுக்கையில் அவற்றின் கனத்தையும் கைகளில் உணர்வதை அவள் ரசித்தாள். மீனைப் பிடித்துக்கொண்டிருக்கும்போதே அம்மா குழம்பு வைக்க என்னென்ன மசாலாப் பொருட்களை அரைப்பார் என யோசிக்கத் தொடங்கிவிடுவாள்.

சில சமயம் பையன்கள் படகிலேயே மீனை வெட்டிச் சுத்தம் செய்து சமைப்பார்கள். மீனில் உப்பு தடவி சிறிய துண்டுகளாக வெட்டி கறிப் பொடிகளுடன் கொதிக்கும் அரிசி உலையில் போட்டுவிடுவார்கள். சொர்க்கத்தையே கண்முன் கொண்டுவரும் சுவையான மீன் பிரியாணி அதுதான்.

ஒருநாள் பாத்திமா நீந்திக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய பச்சை ஆமையைக் கண்டாள். நீண்ட வால் இருந்த ஆண் ஆமை அது. காயலில் அந்த ஆமையைப் பலமுறை பார்த்திருக்கிறாள். ஆனால் இம்முறை அதைத் தொடர முடிவு செய்தாள். மெல்ல நீந்திய அந்த வயதான ஆமையின் ஓடுகளில் கசடு படிந்திருந்தது, ஒரு துடுப்பின் பாதியைக் காணவில்லை. எந்தச் சுறா மீன் இந்த ராட்சத ஆமையைக் கடித்திருக்கும் என்று வியந்தாள்.

காயலில் முன்பு நூற்றுக்கணக்கான பச்சை ஆமைகள் இருந்தனவாம். இப்போது சில ஆமைகள் மட்டுமே உள்ளன. இந்த ஆமைகள் இங்கிருந்த கடற்புற்களை எல்லாம் தின்றுவிட்டு அடுத்த தீவிற்கு போய்விட்டன என்று அவள் அப்பா சொன்னார். பயிர்களை அழிக்கும் பூச்சிகள் போன்று இவை ஆபத்தானவை என்றார். காயலில் வளரும் எல்லா புற்களையும் இவை தின்றுவிடுவதால் மீன்கள் ஒளியவும் ஓய்வெடுக்கவும் குஞ்சுபொரிக்கவும் இடமில்லாமல் போய்விடுகிறது என்றார். ஆனால் அந்த முதிய ஆமை தளர்வுடன் நீரில் நீந்தும் காட்சிகளை நினைத்துப்பார்த்த பாத்திமாவால் அதன் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.

இந்தப் பரந்த கடலில் அந்த ஆமை எங்கு சென்றிருக்கும்? பல ஆயிரம் மைல்கள் கடந்திருக்குமோ! தானும் அதுபோல இந்த விரிந்த கடலில் பயணித்து, போகும் வழியில் அற்புதமான கடல் உயிரினங்களைச் சந்திக்க வேண்டுமென ஆசைப்பட்டாள் பாத்திமா.

திடீர்ப் புயல்

பாத்திமாவுக்கு ஒன்பது வயதானபோது அப்பாவின் படகைத் தானே எடுத்துக்கொண்டு காயலுக்குச் செல்வாள். சுவாசத்திற்கான குழாயுடன் நீருக்குள் இறங்குவாள். சிலசமயம் மீனும் பிடிப்பாள். ஒரு நாள் எந்த அறிவிப்பும் இல்லாமல் புயல் வந்தது. அடர்ந்த கருப்பு மேகங்கள், முரசு போன்று ஒலித்த இடி, வானைக் கிழிக்கும் மின்னல், சாரை சாரையாக ஊற்றிய மழைநீர். பாத்திமாவிற்கு பயம் வந்துவிட்டது. காயலில் இருந்தும் தீவு அவள் கண்ணில் படவில்லை.

பாத்திமா படகில் பதுங்கியிருந்தாள். படகில் சேரும் நீரை வாரி வெளியே ஊற்றியபடி புயல் கடக்கக் காத்திருந்தாள். ஒரு மணிநேரம் ஆகியும் புயல் கடக்கவில்லை. இரண்டு மணிநேரமாகியும் மழைக் கொட்டிக்கொண்டே இருந்தது. மூன்று மணிநேரம் கடந்தபோது தெரிந்துவிட்டது, இது வானம் பிளந்துகொண்டு பெய்யும் மழை என்று.

அலைகள் பெரிதாகிக் கொண்டேயிருந்தன. கடல் கொதித்துப் பொங்குவதைப் போன்றிருந்தது. கடலின் ஆழத்திலிருந்து எழுவதைப் போல நீர்க்குமிழ்கள் தோன்றிப்  படகை வானுக்கும் கடலுக்கும் தூக்கி வீசின.

பல மணிநேரம் படகைப் பேரலைகள் சுற்றியடித்தன. தான் கடலுக்குள் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டிருப்பதைப் பாத்திமா உணர்ந்தாள்.

படகிலிருந்து ஒரு பொம்மை போல் தூக்கி எறியப்பட்டாள் பாத்திமா. ஒரு மரப்பலகையைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தாள். படகில் நீர் நிரம்பியபோதும் தீவிரமாக அதை வாரி வெளியே இறைத்தாள். ஆனால் கடல் அமைதி கொள்ளவே இல்லை. தன் அப்பா சூரை மீன் படகில் வந்து தன்னைக் காப்பாற்றிவிடுவார் என்று அதுவரையிலும் கூட நம்பிக்கொண்டிருந்தாள்.

பிறகுதான் படகு தெற்குப்பக்கமாகக் கடலுக்குள் வெகுதூரம் இழுத்துச்செல்லப்பட்டிருப்பதை உணர்ந்தாள். கடலாமைகள் தங்களது நீண்ட பயணத்தில் இவ்விடத்தைக் கடக்கும். இங்கிருந்துதான் சூரை மீன்கள் வரும். திமிங்கலங்களும் டால்பின்களும் குதிக்கும். ஆனால் தான் ஒரு ஆமையோ திமிங்கலமோ டால்பினோ இல்லை என்று அவளுக்குத் தெரியும் - கிட்டத்தட்ட நம்பிக்கையைக் கைவிட்டிருந்தாள்.

தண்ணீர் நிரம்பிய படகில் துளியும் ஆற்றல் இல்லாமல் அமர்ந்திருந்த பாத்திமா தன் மேல் ஒரு பார்வை படருவதை உணர்ந்தாள். மேலே அவளது பழைய தோழி நிலா மேகத் திரைகளை விலக்கிகொண்டு அவளிடம் ஏதோ செய்தி கூற முயற்சித்தாள். நிலாவைக் கண்ட பாத்திமாவின் மனம் நம்பிக்கையால் நிறைந்தது. நிலா இதமாகப் புன்னகைத்தாள்.

பின்னர் நீரில் நடனமாடினாள், பொங்கும் அலைகளை முத்தமிட்டாள், தன் கனிவான பார்வையை சீறும் அலைகளின் மீது படரவிட்டு ஆர்ப்பரிக்கும் கடலை ஆற்றுப்படுத்தினாள். அதன் சீற்றம் ஆபத்தற்ற உறுமலாக மாறும் வரை.

பாத்திமா சுற்றுமுற்றும் பார்த்தாள், கடல் அமைதிகொண்டிருந்த அந்த இடைவெளியில் நிலவொளியில் ஒரு சிறிய புள்ளியைப் போலிருந்தத் தீவு ஒன்றைக் கண்டாள்.

படகில் தேங்கிய நீரை வெளியேற்றி வேகமாகத் துடுப்பு வலித்துக் காயலுக்குள் நுழைந்தாள். அவள் வந்த காயலைவிடவும் இது சிறியதாக இருந்தது. தீவின் கரையை அடைந்த பின்னர் படகையும் கரை சேர்த்தாள்.

டால்பின்களுடன் ஆட்டம்

நல்ல வானிலையின்போது மீனவர்கள் வருகை தரும் குட்டித் தீவு சுஹேலியைக் வந்தடைந்திருக்கிறாள் பாத்திமா. இப்போது அங்கு யாரும் இல்லை. சில கொட்டகைகளும் மீனவர்கள் விட்டுச்சென்ற உணவுப் பொருட்களும் மட்டும் இருந்தன.

நல்வாய்ப்பாக, பாத்திமாவுக்கு மீன்பிடிக்கத் தெரியும். தினமும் காலையில் காயலுக்குச் சென்று தூண்டில் போடுவாள்.

கொட்டகையில் இருந்த பொருட்களைக் கொண்டு தேநீர் தயாரிப்பாள். உப்பும் மிளகாய்த்தூளும் தடவிய மீனை வாட்டி உண்பாள். தினசரி சமையல் இதுதான். நல்ல வேளை மீன்களாவது ஒவ்வொரு நாளுக்கும் வேறு வேறாக இருந்தது.

காயலின் முனையில் டால்பின்கள் விளையாடுவதைப் பார்ப்பாள். சிலசமயம் அவற்றுடன் நீந்தவும் செய்வாள். டால்பின்களுக்கும் பாத்திமாவைப் பிடித்துவிட்டதால் அவளை கொஞ்சம் வேடிக்கையான உறவுக்காரப் பெண் என்றே ஏற்றுக்கொண்டன. அவை தினமும் வருவதில்லை, ஆனால் வரும்போதெல்லாம் பாத்திமாவுடன் துள்ளி விளையாடின.

அதிலும் பாத்திமாவின் மீது அதிக வாஞ்சை கொண்ட குட்டி டால்பின் ஒன்று அவளை மூக்கால் இடித்து விளையாடும். டால்பின்கள் மனிதர்களுக்கு உதவிய கதைகளை பாத்திமா கேட்டிருக்கிறாள். சில புத்தகங்களில் பார்த்ததுபோலவே தன்னையும் அவை சவாரி ஏற்றிக்கொண்டு வீடுகொண்டு சேர்க்குமா என்று எண்ணிப்பார்த்தாள். ஆனால் பெரிய டால்பின்கள் அந்த அளவிற்கு அவளை நெருங்கவிட்டதில்லை. அவை அன்பாகப் பழகியபோதும் பாத்திமாவிற்கு அவற்றின் மேல் சிறிது அச்சம் இருந்தது.

நீருக்குள் அதிசயம்

ஒரு நாள் படகோட்டிக்கொண்டு பவளத்திட்டிற்குச் சென்றாள். கடலுடன் இணையும் சிறிய வழியைக் கண்டாள். கடல் ஒரு கண்ணாடி விரிப்பினைப் போல அசைவற்று இருந்தது. ஆர்வம் தாங்காத பாத்திமா இன்னும் கொஞ்ச தூரம் படகைச் செலுத்தினாள். இருபது அடி கீழே இருக்கும் பவளங்கள் தெரியுமளவிற்கு நீலக் கடல் தெளிந்திருந்தது. படகின் பலகைக்கு அடியில் வைத்திருந்த தன்னுடைய முகக்கவசத்தையும் நீச்சல் குழாயையும் எடுத்து மாட்டிக்கொண்டு தண்ணீருக்குள் குதித்தாள்.

இப்போதெல்லாம் பாத்திமா மூச்சை அடக்கியபடி பல மீட்டர் ஆழத்துக்கு முங்கு நீச்சல் அடிக்கிறாள். தனக்கு நன்கு அறிமுகமான ஒரண்டை, மூரிஷ் சிலை, தேவதை மீன்களின் வடிவங்களை நீருக்குள் கண்டாள். தூரத்தில் பவளப்பாறைகளைச் சுற்றிப் பெருந்திரளை மீன்களும் கொண்டை கிளிஞ்சான் கூட்டமும், ராட்சதப் பாறை மீன்களும் நீருக்குள் வட்டமிடுவதைக் கண்டாள்.

திடீரென்று தொலைவிலிருந்து ஒரு ஆனைத் திருக்கை அவளை நோக்கி வருவதைப் பார்த்தாள். அறிவியல் புனைகதைகளில் வரும் மாயமாகும் ஜெட் ஒன்றினைப் போல் துடுப்புகளை விரித்து நீரில் மிதந்து போனது அந்தத் திருக்கை. அப்படியே மெலெழும்பி அவளைக் கடந்து பவளத்திட்டை நோக்கிப் பாய்ந்து சென்றது. அதன் அழகிலும் நேர்த்தியிலும் மூச்சுவிடவே மறந்துவிட்டாள் பாத்திமா.

இந்த அழகிய உலகை கவனிக்கவும், அதைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். அதற்காக தன் வாழ்க்கை முழுவதையும் கடலிலேயே கழிக்க வேண்டுமென அக்கணம் உணர்ந்தாள்.

தீவின் ராணி

சுஹேலி அமைதியின் வடிவாக இருந்தது. ஆனால் சீக்கிரமே இத்தீவை விட்டு வெளியேற வேண்டுமென பாத்திமா அறிந்திருந்தாள். அவள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்துக்குச் செல்ல, உலகைச் சுற்றிவர, மீண்டும் சுஹேலிக்கு வர இப்போது அவள் கிளம்பவேண்டும்.

பாத்திமாவின் நற்பேறு, இது மழைக்காலம் முடியும் நேரம். சில தினங்கள் கழித்து முதல் மீனவர் கூட்டம் வந்தடைந்தது. நெருங்க நெருங்க ஒரு பெரிய காயலின் நடுவே இரண்டு அழகிய தீவுகள் அமைந்திருப்பதை அவர்கள் கண்டனர். மனித வாழ்வின் சுவடே இல்லாத, பனைசூழ்ந்த அவ்விரண்டு மணல் தீவுகளை அந்த நீலப்பச்சைக் கடல்நீர் தாலாட்டியபடி இருப்பதைக் கண்டனர்.

மெல்ல முனகியபடி காயலைப் படகு கடந்துகொண்டிருந்தபோது மீனவர்கள் ​மரங்களின் பிண்ணனியில் ​கடற்கரையின் வெள்ளிக் கீற்றைக் கண்டனர். கரையை நோக்கி அவர்கள் சென்றபோது, நிலவைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு சிறுமியைக் கண்டனர். அவள் தான் அந்தத் தீவின் இராணி, பெரும் நிறைவுடன், இடுப்பில் கை வைத்தபடி, வீட்டிற்கு திரும்ப ஆயத்தமாக நின்றிருந்தாள்.

அமைப்பின் அறிமுகம்:

இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் மேலாண்மையையும் ஆதரிப்பதும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தக்‌ஷின் அமைப்பின் நோக்கம். நிலையான வாழ்வாதாரம், சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நீதி ஆகியவற்றிற்காகவும் நாங்கள் பணிபுரிகிறோம். பல்துறை நோக்கு கொண்ட எங்கள் ஆய்வு மற்றும் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளின் வழியே கடல், கடலோரப் பகுதிகள், மலைகளின் சூழல்சார் தொகுதிகளின் பாதுகாப்புக்கும் மேலாண்மைக்கும் சமூக, சூழலியல் பொருத்தப்பாடு உடைய அணுகுமுறைகளைச் செயல்படுத்துகிறோம்.

மின்னஞ்சல்: [email protected]

பாத்திமாவிற்கு முன்மாதிரியாக இருக்கும் கடல் உயிரியலாளர்கள் ஆன்னி, மகிமா, ருச்சா ஆகியோருக்கு.