kutty aattukku oru tholzi

குட்டி ஆட்டுக்கு ஒரு தோழி

குட்டி ஆட்டுக்கு உண்மையில் பள்ளிக்குப் போவது பிடிக்கவில்லை. பள்ளி மிகப் பெரியதாக இருந்தது. குட்டி ஆடோ மிகச் சிறியவனாக இருந்தான். ஆனால், நண்பர்கள் இருந்தால் பள்ளிக்கூடம் ஒரு மகிழ்ச்சியான இடம் என்பதை அவன் புரிந்துகொள்வான்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குட்டி ஆடு பள்ளிக்குச் செல்லத் தயார். அவன் மேல்சட்டை நன்றாகவும் பளபளப்பாகவும் இருந்தது. தலைமுடி எண்ணெய் தடவி, நேர்த்தியாக வாரப்பட்டு இருந்தது.

பள்ளியை அடைந்ததும், அப்பா ஆட்டின் கைகளை அவன் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

“பள்ளி மிகவும் பெரியது! நான் எப்போதும் தொலைந்து விடுகிறேன்”, என்று அப்பா ஆட்டிடம் கிசுகிசுப்பாய்ச் சொன்னான்.

“கவலைப்படாதே! இங்கே உன்னைப் போன்ற பல ஆடுகள் இருக்கின்றன. உனக்கு ஜாலியாக இருக்கும்” என்றார் அப்பா ஆடு.

ஆனால் குட்டி ஆடு சுருண்ட கொம்புகளுடன் இருந்த பெரிய ஆடுகளை நினைத்துக் கவலைப்பட்டது.

பயந்து கொண்டே அவன் தனது வகுப்பிற்குச் சென்றான். ஆசிரியை பில்லு எல்லோரையும் வரிசையாக நின்று ஆட்டுப்பாடலைப் பாடச் சொன்னார்.

“மா மா மாங்கோ

பா பா பாம்பூபூ

பா பா பாப்பாயா

நீ நீ நீம்பூ”

குட்டி ஆட்டுக்கு உண்மையில் அந்தப் பாடல் பிடிக்கும். ஆனால் அவனுக்கு எல்லா வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது. எனவே அவன் சொந்தமாக வார்த்தைகளைப் போட்டுப் பாடுகிறான்.

“மா மா மாம்மா பா பா பாம்ப்ப்ப்பூ பா பா பாப்பாயா நீ நீ நேர்த்தி மற்றும் சுத்தம்”

குட்டி ஆடு சத்தமாகவும் தெளிவாகவும் பாடுவான். மற்றவர்கள் நிறுத்திவிட்டாலும் கூட அவன் தொடர்ந்து பாடுவான்.

“இல்லை இல்லை! நீ சொந்த வார்த்தைகளைப் போட்டுப் பாடக்கூடாது! பாட்டை நிறுத்து!” என்று ஆசிரியை பில்லு, குட்டி ஆட்டைத் திட்டினார்.

அவர் அவனை மூலையில் போய் நிற்கச் சொன்னார்.

“ஹா! ஹா!” மற்ற ஆடுகள் அவனைப் பார்த்துச் சிரித்தன.

சிறிது நேரம் கழித்து, விளையாட்டு வகுப்பு நேரம். விளையாட்டு ஆசிரியை ஹாப்பி எல்லோரையும் பார்த்து, “குதியுங்கள்!” என்றார்.

குட்டி ஆடு, வரிசையாகச் செல்லும் எறும்புகளைப் பார்த்தான்.‘அவர்கள் எங்கே போகிறார்கள்?’ அவன் எறும்புகளுக்கு பின்னால் ஊர்ந்து சென்றான்.

“ஊர்ந்து செல்லக்கூடாது!” என்று ஆசிரியை ஹாப்பி அதட்டினார்.

“ஹா!ஹா!” மற்ற ஆடுகள் அவனைப் பார்த்து சிரித்தன.

குட்டி ஆடு சோகமாக இருந்தான். உணவுவேளையில், யாரும் அவனருகில் உட்காருவதில்லை. அவனிடம் பேசுவதும் இல்லை.

பிளாப் ப்ளாப்! புதிதாக வெட்டப்பட்டப் பச்சைப் புல் இருந்த மதிய உணவில் அவனது கண்ணீர்த்துளிகள் விழுந்து அதை உப்புக் கரிக்கச் செய்தது.

அன்று மாலையில், குட்டி ஆடு தன் அம்மாவிடம், ஆட்டுப்பாடலைப் பற்றியும் விளையாட்டு வகுப்பு பற்றியும் சொன்னான்.

“நீ மிக நன்றாகப் பாட்டு கட்டினாய்! நீ மிக அமைதியாக தவழ்ந்து சென்றுள்ளாய்!” என்று அம்மா ஆறுதல் சொன்னார்.

அவனை அணைத்துக்கொண்டு அவன் தூங்கும் முன் கூடுதலாக ஒரு முத்தம் கொடுத்தார்.

அடுத்த நாள், குட்டி ஆடு ஆட்டுப்பாடலை சரியாகப் பாடுவதில் கவனமாக இருந்தான்.

விளையாட்டு வகுப்பிலும், மறக்காமல் அவன் குதித்துச் சென்றான். ஊர்ந்து செல்லவில்லை.

பின்னர், ஓவிய வகுப்பு. “நேர் கோடுகள் மற்றும் அலைஅலையான கோடுகளை வரையுங்கள்!” என்று ஆசிரியை டாட்டி சொல்கிறார்.

கறுப்பு, சிவப்பு கோடுகள் மற்றும் புள்ளிகள் கொண்ட இறக்கைகளோடு ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சியை குட்டி ஆடு பார்த்தான். அவன் பட்டாம்பூச்சியை வரைந்தான்.

ஆசிரியை டாட்டிக்கு இது மகிழ்ச்சியைத் தரவில்லை. “குட்டி ஆடே! நான் நேர்கோடுகள் மற்றும் அலைஅலையான கோடுகளை வரையச் சொன்னேன்! நீ ஏன் பட்டாம்பூச்சியை வரைந்துள்ளாய்?” என்று அதட்டினார்.

“ஹா! ஹா!” மற்ற ஆடுகள் அவனைப் பார்த்து சிரித்தன.

மதிய உணவு நேரத்தில், குட்டி ஆடு அன்றைக்கும் தனியாக உட்கார்ந்து, கொண்டு வந்திருந்த வெள்ளரித்துண்டுகளைச் சாப்பிட்டான்.

அப்போது, திடீரென்று ஒரு சிறிய குரல் அவன் அருகில் பேசியது. “ஒரு படகு எப்படி வரைய வேண்டும் என்று நீ எனக்கு சொல்லித் தருவாயா?”

அது பன்றி வகுப்பில் படிக்கும் பிக்கி பிக்லெட் ஆகும். குட்டி ஆட்டை விட அவள் இன்னும் சிறியவள்.

“படகு எப்படி வரைய வேண்டும் என்று எனக்குத் தெரியாது” என்றான் குட்டி ஆடு.

“ஓ, ஆனால் எல்லோரும் வகுப்பில் நீ படகு வரைந்ததாகச் சொன்னார்கள்” என்றாள் பிக்கி.

“அது ஒரு பட்டாம்பூச்சி” என்று குட்டி ஆடு அவளிடம் சொன்னான்.

கண்களை மிகப் பெரியதாக விரித்து பிக்கி அவனைப் பார்த்தாள். உடனே, குட்டி ஆடு கீழே இருந்த தூசியிலேயே படம் வரையத் தொடங்கினான்.

சீக்கிரமே குட்டி ஆடு ஒரு பட்டாம்பூச்சி, ஒரு படகு மற்றும் ஒரு மரத்தை வரைந்தான். சில விழுந்த இலைகள் மற்றும் மலர்களை சேகரித்து அவற்றைப் படத்தில் சேர்த்தாள் பிக்கி.

“நாம் ஒரு தோட்டத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வோம்” என்று பிக்கி சொன்னாள்.

“எனக்கு ஒரு புதிய பாட்டு தெரியும்!” என்று குட்டி ஆடு உற்சாகமாகச் சொன்னான். அவர்கள் சுற்றிக் குதித்து, ஒரு ஆட்டுப்பாடல் மற்றும் பன்றிப்பாடல் பாடினார்கள்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின், குட்டி ஆடு தனது புதிய தோழியைப் பற்றி அம்மாவுக்குச் சொன்னான்.

‘'நாளைக்கு பிக்கிக்குக் கொடுக்க மேலும் சில மொறுமொறுப்பான ஆப்பிள் தோல்களை நீங்கள் தருகிறீர்களா?'’ என்று குட்டி ஆடு கேட்டான்.

“நிச்சயமாக!” என்று அம்மா வாக்குறுதி கொடுத்தார்.

அன்று இரவு, குட்டி ஆடு சீக்கிரமாகவே தூங்கிப்போனான். அவனது கனவில், பிக்கியும் மற்றும் சுருண்ட கொம்புகளைக் கொண்ட சில பெரிய ஆடுகளும் ஒரு தோட்டத்தில் நடனம் ஆடுவதைப் பார்த்தான்.

“குதி, தாவு, தாண்டு, உதை!எல்லோரும் உரத்த குரலில் சொல்லுவோம் ‘மாஆஆ!’ குதி, தாவு, தாண்டு, உதை!எல்லோரும் மென்மையான குரலில் சொல்வோம் ‘பாஆஆ!’ குதி, தாவு, தாண்டு...”

இந்த புதிய நடனத்தின் முன்வரிசையில், தலைவனாக அவன் இருப்பது தெரிந்தது. பெருமூச்சு விட்டு, மகிழ்ச்சியோடு மேலும் தொடர்ந்து கனவு கண்டான் குட்டி ஆடு.