kuwombavin pathattam

குவோம்பாவின் பதட்டம்

குவோம்பாவுக்கு ஆயிரம் இனிப்புகளைச் செய்யும் வேலை ஒன்று கிடைத்திருந்தது. அவள் மகிழ்ச்சியாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவளோ மிகவும் கவலையாக இருந்தாள். அவளால் ஆயிரம் இனிப்புகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியுமா?

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மேகபுரத்திலேயே மகிழ்ச்சியான மேகம் குவோம்பாதான். அவள் தனது இனிப்புக்கடையையும், இனிப்புகள் செய்வதையும் மிகவும் நேசித்தாள். ஒருநாள் அவளை ஒரு விருந்துக்காக ஆயிரம் இனிப்புகள் செய்து தரக் கேட்டார்கள். முதலில், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். விருந்தில் எல்லா மேகங்களும் அவளது இனிப்புகளை உண்டு ரசிப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்.

அப்புறம், அவள் கவலைப்படத் தொடங்கினாள். ஒருவேளை அவளால் ஆயிரம் இனிப்புகளைச் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது? ஒருவேளை அவளது இனிப்புகள் யாருக்கும் பிடிக்காவிட்டால் என்ன செய்வது? இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது? அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது? குவோம்பாவுக்கு தூக்கமே வரவில்லை. ஆயிரம் இனிப்புகளைப் பற்றியும், ‘ஏதாவது ஆகிவிட்டால்’ என்பதையுமே யோசித்துக் கொண்டிருந்தாள். அவளால் சாப்பிடக்கூட முடியவில்லை. கைகள் வேர்த்துக் கொட்டின. அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

குவோம்பா கடினமாக உழைத்தாள். ஆனாலும், கவலை இருந்துகொண்டே இருந்தது.

“எல்லாம் தவறாகிவிட்டால் என்ன செய்வது? என்னால் செய்யமுடியாவிட்டால்? யாருக்கும் என் இனிப்புகள் பிடிக்காமல் போய்விட்டால்?” அவள் யோசித்துக்கொண்டே இருந்தாள்.

அவள் மிகவும் சிறியதாகவும் சாம்பல் நிறமாகவும் மாறினாள். அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. இதயம் வேகமாகத் துடித்தது. அவளால் சரியாக மூச்சுவிடக் கூட முடியவில்லை.

ஒருநாள் குவோம்பாவால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவள் பரிதாபமான நிலையில் இருந்தாள். இன்னமும் நிறைய இனிப்புகள் செய்ய வேண்டியிருந்தது. குவோம்பா என்ன செய்யப் போகிறாள்?

குவோம்பாவின் மூத்த அக்கா ஆபிக், அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். குவோம்பா அழத்தொடங்கினாள். அக்காவிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். ஆச்சரியமாக, அவளுக்கு இப்போது ஆறுதலாக இருந்தது.

“சரி, நாம் இருவரும் சேர்ந்து முதலில் ஆழமாக மூச்சு விடலாம்” என ஆபிக் சொன்னாள்.

அவர்கள் இருவரும் மெதுவாக பத்துமுறை மூச்சை ஆழமாக இழுத்து வெளிவிட்டனர். குவோம்பா இன்னும் ஆறுதலாக உணர்ந்தாள்.

“இப்போது நாம் சிறிதுநேரம் மிதந்துவிட்டு வரலாம்” என ஆபிக் சொன்னாள்.

அவர்கள் இருவரும் பெரிய, அமைதியான மேகங்களுக்கிடையே மிதந்தனர். குவோம்பா திரண்ட மேகங்களையும், அழகான வண்ணங்களையும் பார்த்தாள். அவளது இதயத்துடிப்பு சீராகத் தொடங்கியது. அவள் கைகள் வேர்க்கவேயில்லை.

“நாம் இருவரும் சேர்ந்து இனிப்புகளைச் செய்யலாம், ஒருவேளை நம்மால் முடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை!” என ஆபிக் சொன்னாள்.

“என்ன சொல்கிறாய்?” என்று குவோம்பா கேட்டாள்.

“நம்மால் முடிந்தவரை முயற்சி செய்யலாம்” என்று ஆபிக் சொன்னாள். இருவரும் சேர்ந்து செய்யும்போது வேலை எளிதாக இருந்தது.

குவோம்பா கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்தாள். ’ஒருவேளை முடியாவிட்டால்?’ எனத் தோன்றும் போதெல்லாம் சிறந்த இனிப்புகளைச் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கினாள்.

அவ்வப்போது ஆழமாக மூச்சுவிட்டுக் கொண்டும் அக்காவுடன் பேசிக்கொண்டும் இருந்தாள். அது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

விருந்து நாளில் குவோம்பாவிடம் 700 இனிப்புகள் மட்டுமே இருந்தன. அவளுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. அவள் கொஞ்சநேரம் மிதந்துவிட்டு வரச் சென்றாள். மெதுவாகவும் ஆழமாகவும் மூச்சுவிட்டாள்.

அவளுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளுக்குத் தெரியும், அவளால் முடிந்தவரை சிறப்பாகச் செய்துவிட்டாள்.

விருந்தில் அனைவருக்கும் இனிப்புகள் மிகவும் பிடித்திருந்தன. கேட்டு வாங்கி சாப்பிட்டனர். குவோம்பாவிடம் மேலும் பலரும் இனிப்புகள் செய்துதரச் சொல்லிக் கேட்டனர்!

“அடுத்த முறை நான் இனிப்புகள் செய்யும்போது கண்டிப்பாக உதவி கேட்பேன்” குவோம்பா சிரித்துக்கொண்டே சொன்னாள். வெகுநாட்களுக்கு பிறகு இப்போதுதான் அவள் இவ்வளவு சிரிக்கிறாள். மறுபடியும், குவோம்பா மேகபுரத்திலேயே மகிழ்ச்சியான மேகமானாள்.