ராஜு நகரத்தில் வசித்து வந்தான். ஆனால் கோடைக்காலத்தில், பள்ளி விடுமுறையின் போது, அவனுடைய தாத்தா வசிக்கும் கிராமத்திற்குச் சென்றுவிடுவான்.
கோடையில் ஒரு நாள் காலை, இனிமையான இசைநயத்துடன் கூடிய ஓர் ஒலி, ராஜுவை எழுப்பியது.
கூ.. .. கூ.. .. கூ.. ..அருகிலுள்ள மாமரத்திலிருந்து குயில் கூவும் ஒலி அது.
ராஜு இதைப்போல இனிமையான ஒலியை இதுவரை கேட்டதில்லை.
ஆனால் குயில் எங்கே என்று தெரியவில்லை.
ராஜு குயிலை எல்லா இடங்களிலும் தேடினான். கடைசியில் மாமரத்தின் கிளை ஒன்றில் அதனைக் கண்டான்.
குயிலும் ராஜுவைப் பார்த்து, “குஹூ.. .. குஹூ.. .. ராஜூ... ..” என்றது.
ராஜுவுக்கு சந்தோஷம் பொங்கியது. “குயிலே!.. என் பெயர் உனக்குத் தெரிகிறதே!” என்று கூவினான்.
“சொல்லப்போனால் உன்னைப்பற்றி எல்லாமும் எனக்குத் தெரியும்!” என்ற குயில், “சரி! என் பாட்டு எப்படியிருந்தது?” என்று கேட்டது.
“ஓ! ரொம்ப அருமையாக இருந்தது. நான் இதுவரைக்கும் கேட்டதிலேயே உன்னுடையதுதான் மிக இனிமையான குரல்” என்றான் ராஜு.
“உனக்குப் பிடித்திருந்ததைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது” என்ற குயில், “வசந்த காலத்தில், மாமரங்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும் பொழுது, குயில்களாகிய எங்களுக்கு உற்சாகம் பொங்கும். அதனால் நாள் முழுவதும் குஹ..குஹ..என்று பாடுவோம்” குயில் தொடர்ந்து சொன்னது.
ராஜுவுக்கும் ரொம்ப சந்தோஷம். “குயிலே! நீயும் என் கூடவே நகரத்துக்கு வந்துவிடேன், அங்கே எல்லோரும் நீ பாடுவதைக் கேட்க ரொம்ப ஆசைப்படுவாங்க” என்று அவன் சொன்னான்.
“நானா! நகரத்திற்கா? எதற்கு?” என்று குயில் ஆச்சரியத்துடன் கேட்டது.
“என்னுடைய பெரும்பாலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கேதானே இருக்காங்க” குயில் சொன்னது.
“அப்படியா!” இப்பொழுது குயிலைப்போலவே ராஜுவும் ஆச்சரியப்பட்டான்.
“அப்படியானால், ஏன் நகரத்தில் யாருமே உங்கள்பாட்டைக் கேட்க முடிவதில்லை?” என்று கேட்டான் ராஜு.
குயில், “வசந்த காலத்தில், மரங்கள் எல்லாம் பூத்துக்குலுங்கும்போது, எங்கள் குயில்கள் இனம் நகரத்தில் கூட சந்தோஷமாகப் பாடும். ஆனால் நகரத்தில் இரைச்சல் அதிகமாக இருக்கும். நாள் முழுவதும், சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்து, வானத்தில் பறக்கும் விமானங்களின் சத்தம். இந்தக் கூச்சலில் எங்கள் பாடலின் ஒலி முழுவதுமாக அமுங்கிப் போய்விடுகிறது” என்றது வருத்தத்துடன்.
குயில் சொல்வது சரிதான் என ராஜுவுக்குத் தோன்றியது. இப்பொழுது அவனுக்கும் வருத்தம் உண்டானது. அப்பொழுது அவன் மனதில் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது.
“ஆனால்.. ..ஆனால்.. ..இவ்வளவு இரைச்சல் இல்லாமல், நகரம் நிசப்தமாக, அமைதியாக இருந்தால், நீ எனக்காக அங்கு வந்து பாடுவாயா?” என்று குயிலைக் கேட்டான் ராஜு.
“நிச்சயமாக” என்று கூறிய குயில், “அப்பொழுது மற்ற குயில்கள் பாடுவது கூட உனக்குக் கேட்கும்” என்றும் சொன்னது. ராஜுவுக்கு சந்தோஷம்.
அப்பொழுது வீட்டிலிருந்து வெளியே வந்த தாத்தா, “ராஜூ..” என அழைத்து, “என்ன! குயில் பாடுவதைக் கேட்கிறாயா?” என்றார்.
“ஆமாம் தாத்தா! எவ்வளவு இனிமையாக பாடுகிறது குயில்!” என்றான் ராஜு.
“நன்றாகத்தான் பாடுகிறது, ராஜு” என்று ஒப்புக்கொண்ட தாத்தா, “அதன் கதை உனக்கு வேண்டுமா?” என்று கேட்டார்.
“ஆமாம்! வேணும்” என்று சந்தோஷத்தில் குதித்தான் ராஜு. தாத்தாவின் இயற்கை பற்றிய பாடங்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
“குயில்கள் இனிமையாகப் பாடுகின்றன, ஆனால் அவை எல்லாம் சோம்பேறிகள்” என ஆரம்பித்த தாத்தா, “அம்மா குயிலுக்குத் தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளக்கூடப் பொறுமையில்லை.”
அதனால் காக்கையின் கூட்டில் தன் முட்டைகளை இடுகிறாள்.
“காக்கைதான் தாய் போல, தன் முட்டைகளோடு, குயில் முட்டைகளையும் அடை காக்கிறது.” தொடர்ந்தார் தாத்தா.
“குஞ்சாக மாறிய பின்னாலும், குயில் குஞ்சும் கறுப்பாக இருப்பதால் காக்கை வித்தியாசம் தெரியாமல், அவைகளுக்கும் இரை ஊட்டி வளர்க்கும்” எனக் கூறினார்.
குயில் குஞ்சு வளர்ந்து, கூவத் தொடங்கும் பொழுதுதான், தாய் காக்கைக்குத் தான் ஏமாந்த விஷயம் தெரியும்.
அப்போது அது கோபத்தில், குயில் குஞ்சை கூட்டைவிட்டு வெளியே துரத்தும். இதற்குப் பின் தன்னைத்தானே பார்த்துக் கொள்வது குயில் குஞ்சின் வேலை” எனத் தாத்தா சொன்னார்.
ராஜுவுக்கு இந்தக் கதையைக் கேட்க உருக்கமாக இருந்தது. “பாவம்! என்ன விசித்திரமான வாழ்க்கை” என்று பரிதாபப்பட்டான்.
தாத்தா தலையாட்டினார். “ஆமாம் ராஜு! மிருகங்களின் உலகத்தில் இது போன்ற வினோதமான கதைகள் ஏராளம்” என்று சொன்னார்.
“குஹ .. குஹ. குஹ.” என்று கூவி, குயில் இதை ஆமோதித்தது. பிறகு, இன்னொரு மரத்திற்குப் பறந்து சென்று, அங்கு அமர்ந்து இனிமையாகப் பாடத்தொடங்கியது.
உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.
உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.